/* up Facebook

Jan 23, 2012

"வாசிப்புத்தான் என்னை எழுத்துலகில் நிலைக்க வைத்திருக்கின்றது" :எச். எப். ரிஸ்னா

எச். எப். ரிஸ்னா

பதுளை மாவட்டத்தின் தியத்தலாவையைந் சேர்ந்த படைப்பாளி எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன்- நுஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாடு காட்டிவரும் இவர் 'குறிஞ்சி நிலா' என்ற புனைப்பெயரிலும் எழுதுவதுண்டு. சமீபகாலமாக தனியார் நிறுவனமொன்றில் பகுதி நேர கணனி வடிவமைப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார்.

'பெஸ்ட் குயின் பவுண்டெஷன்' என்ற இலக்கிய அமைப்பின் உப தலைவராகவும், 'பூங்காவனம்' சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்துவருமிவர் 'முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை' 'இலங்கை முஸ்லிம் கலைஞர் முன்னணி' ஆகிய இலக்கிய இயக்கங்களிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

சுமார் 250 கவிதைகள், 40 சிறுகதைகள், 30 விமர்சனங்கள் என்று படைப்புக்களை எழுதிக் குவித்திருக்கும் படைப்பாளி எச். எப். ரிஸ்னா. 2004 இல் எழுத்துலகில் கால் பதிக்கின்றார். மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'காத்திருப்பு' என்ற தலைப்பிலான தனது முதல் கவிதை பிரசுரக் களம் கண்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் முன்னோடிப் பத்திரிகைகளிலும் இலங்கை, இந்தியா சஞ்சிகைகளிலும் இவரது படைப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் எழுத்துத்துறைக்குள் வருவதற்கான காரணம் என்ன?

நான் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில் அதிக நாட்டம் காட்டி வந்திருக்கின்றேன். தரம் மூன்றில் நான் கல்வி கற்கும் போதே 'பூங்கா' என்ற சிறுவர் சஞ்சிகையில் கட்டுரைகள் எழுதியிருந்தேன். 'பிஞ்சு' தினமுரசில் வெளிவரும் 'பாப்பா முரசு' அதே போல் இன்னும் பல சிறுவர் கதைப் புத்தகங்களை என் பெற்றோர் வாங்கித் தருவார்கள். விளையாடுவதிலும் பார்க்க வாசிப்பதில்தான் என்னுடைய சிறு வயது காலம் கழிந்தது. தரம் எட்டில் கல்விபயிலும் போது சிறு சிறு கவிதைகளை எழுதத் துவங்கினேன்.

இக்காலப் பகுதியில் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இன்னும் பலரினதும் நூல்களை வாசிகசாலையில் பெற்று வாசித்திருக்கிறேன்.

உயர்தர தமிழ்ப்பாடத்திலும் கூட செய்யுள் இலக்கியத்தைத்தான் அதிக ஆர்வம்கொண்டு வாசிப்பேன். இவ்வாறு வாசிப்பதிலேயே என் வாழ்வு கழிந்ததால் எனக்குள்ளும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுக்கொண்டிருந்தது. எனினும் கல்வி நடவடிக்கைகளில் மூழ்கியிருந்ததால் அந்த எண்ணம் உயர்தரம் படித்து முடித்த பின்னர்தான் ஈடேறியது.

உங்கள் சிறுகதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களில் எதை இலக்காகக் கொள்கின்றீர்கள்?

உண்மையில் நான் ஆரம்ப காலங்களில் எழுதிய பல சிறுகதைகள் அக நிலை சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. தொடர் வாசிப்பினால் பல சிறுகதை முன்னோடிகளின் கதையாடல்களில் என்ன கருவை எடுத்தாள்கின்றார்கள் என்று புரிந்தது. பின் வந்த நாட்களில் நான் எழுதிய 'கனவுகள் உயிர் பெறும் நேரம்', 'கண்ணீர் தீயாகிறது', மேதின விடுமுறை', 'முடிவிலிப் பயணங்கள்' போன்ற சிறுகதைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பிரதிபலிப்பனவாக எழுத்தப்பட்டன.

மூத்த சிறுகதை ஆசிரியர்கள் அவற்றை சிலாகித்துப் பேசினார்கள். மேற்குறிப்பிட்ட என் சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சினைகளின் கருவானது என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறு வடிவம் என்றும் கூறலாம். ஆகவே, அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால் அந்த பின்னணியைத்தான் என் படைப்பினூடாக நான் ஏற்படுத்தும் மாற்றமாகக் கருதுகிறேன். அந்த ஆரோக்கியமான மாற்றம்தான் என் இலக்காகக் காணப்படுகிறது.

விமர்சனங்களை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?

விமர்சனங்கள் என்பது படைப்பாளிக்கான ஊன்றுகோல் என்றுதான் கூறுவேன். என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர்களின் படைப்புகள் விமர்சனம் செய்யப்படாமல் இருக்குமேயானால் அவர்களது படைப்பை வாசகர்கள் படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். விமர்சனமானது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விமர்சனம், எதிர்மறை விமர்சனம் என இரண்டு வகையாகப் பிரித்து நோக்கப்படுகிறது.

இதில் ஊக்குவிக்கும் விமர்சனங்களைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஒரு எழுத்தாளனுக்கு 'என் படைப்பு தரமாக இருப்பதால்தான் விமர்சனம் செய்யப்படுகிறது' என்ற தலைக்கனம் வந்துவிட்டால் அவன் எழுதும் மற்றப் படைப்புக்கள் தரமற்றதாகிவிடக் கூடும். அதேபோல் எதிர்மறையான விமர்சனங்களைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், அவை எம்மைப் புடம் போட்டுக் கொள்ளவும;, சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளை சீர் செய்து எமது படைப்புகளை செம்மைப்படுத்தி செறிவாக்கிக் கொள்ளவும் வழி கோலும். இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால், காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களை நாம் கண்டு கொள்ளக் கூடாது என்பதுதான்.

இலங்கையின் நாவல் படைப்பு பற்றி என்ன கூறலாம்?

நாவல் என்ற அடிப்படையில் நோக்கும் போது இன்று நாவல்களை எழுதுவதிலும் பார்க்க சிறுகதைகளை எழுதுவது இலகுவானது என்ற கருத்து நிலவுகிறது. நேரமின்மை பிரச்சினையால் அவதிப்படும் பலருக்கு அவ்வப்போது ஒரு சிறு கதையையோ, கவிதையையோ வாசிப்பது பெரும் சிரமமாக இருக்காது.

நாவல்களில் சில அத்தியாயங்களை எழுதி வைத்து விட்டுமற்ற அத்தியாயத்தைத் தொடங்குகையில் அது சம்பந்தமான விபரங்களை சேகரிக்க வேண்டியிருக்கும். ஒரு சமூகப் பிரச்சினையை சிறுகதையில் சொல்ல முடிந்தால் அது பாராட்டுக்குரியதாகிறது. ஆனால், நாவலில் ஒரே விடயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டால் வாசிக்க கஷ்டமாகிறது.

குறிப்பிட்ட சிலர் எழுதும் நாவல்களை வாசிக்கும் போது இடையில் அந்த நாவலை மூடிவைத்துவிட்டு வேறு அலுவல்களைப் பார்க்க மனம் வராது. அந்தளவுக்கு சுவாரஷ்யமாக விடயங்களை உள்ளடக்கியிருப்பார்கள். அலுப்புத் தட்டாத முறையில் எழுதி வாசகனை திருப்திப்படுத்துகிற நுணுக்கங்களைக் கொண்டு அவர்களின் எளிய சொல்லாடலில் நாவல் முழுவதும் ரசித்து வாசிக்கக் கூடிய மனப்பான்மை தோன்றும்.

இந்திய எழுத்தாளர்களின் புனைவுகள் பற்றிய உங்கள் பார்வையும், பதிவும் எப்படி?
இந்திய சஞ்சிகைகள் பலதை நான் வாசித்திருக்கிறேன். இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் ஒரே விடயத்தை மறைமுகப்படுத்தி கதையை வளர்த்துச் செல்வதாக அமைந்திருக்காது. சொல்ல வந்த கருத்தை பிரசாரங்கள் போலன்றி நேரடியாகவே சொல்லிவிடுவார்கள். அந்தப் படைப்பு ஜனரஞ்சகமான முறையில் எழுதப்பட்டிருக்கும்.

அவர்களின் எழுத்து நடை இரசனைக்குரியது. வித்தியாசமான, அழகான சொற்களைப் பிரயோகித்திருப்பார்கள். சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகளைப் போல் நான் வேறு படைப்புகளைப் படித்தது கிடையாது. அதுபோல பட்டுக்கோட்டை பிரபாகரின் துப்பறியும் நாவல்களும், எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் நான் பல நுணுக்கங்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

சந்திப்பு:

எம். எம். எம். நூறுல்ஹக்

சாய்ந்தமருது - 05

நன்றி: http://thinakaran.lk/vaaramanjari/2011/05/01/?fn=s1105012

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்