/* up Facebook

Jan 10, 2012

இருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த போலீஸ் வெறிநாய்கள்!


போலீசு ராஜ்ஜியத்தை எதிராக களத்திலே நின்று போராடினால்தான் அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியும். உரிமைகளை வென்று எடுக்க முடியம். நீதிமன்றம் கூட இடை விடாத மக்கள் போராட்டத்திற்கு அஞ்சிதான் குற்றவாளி போலீசை பல வழக்குகளில் தண்டித்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலுள்ள தி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் காசி என்பவரை விசாரிக்க சென்ற போது அவர் மட்டும் அல்லாது ஐந்து பெண்கள் உட்பட உறவினர்கள் அனைவரையும் இரவில் வேனில் திருக்கோவிலூர் போலீசார் ஏற்றி சென்று ஆண்களை காவல் நிலையத்தில் அடைத்துவிட்டு 4 பெண்களை இரவு 12 மணியளவில் அருகில் உள்ள தைலத்தோப்பில் காவல்துறையினர் பாலியல் வன்முறை செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட போலீசார் 5 பேரை சஸ்பெண்ட் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா லட்சம் இழப்பீடு வழங்கி தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டிலிருந்து அவர்களின் சொத்தான 10 பவுன் நகை, பணம் ரூபாய் 2000, 4 செல்போன் அதன் சார்ஜர் என அனைத்தையும் திருடியுள்ளனர். இரவில் பெண்களை கைது செய்ய கூடாது, பெண்களை விசாரிக்கும் போதும் கைது செய்யும் போதும் பெண் போலீசார் கூட இருக்க வேண்டும் போன்ற நீதிமன்ற உத்திரவுகளை எல்லாம் மயிருக்கு சமமாக கூட போலீசார் மதிப்பதில்லை. எங்கு திருட்டு நடந்தாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க வக்கற்ற போலீஸ் இருளர்கள் மீது பொய் வழக்கு போடுவதையே தொழிலாக கொண்டுள்ளது. சில காவல்துறையினர் அதிகார திமிரோடு இருளர் பெண்கள் பெரிய அழகியா? பாலியல் வன்முறை நடக்க வாய்பில்லை என வக்கிரமாக பேசுகின்றனர். நடக்காத குற்றத்திற்கா தமிழக முதல்வர் 5 லட்சம் இழப்பீடு கொடுத்தார்?

பழங்குடியின இருளர்களின் வாழ்க்கை கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் கருகுவது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்? கரும்பு வெட்ட அழைத்து சென்று குறைந்த கூலி கொடுத்து இடை தரகர்கள், இருளர்களின் உழைப்பை அட்டையாக உறிஞ்சுவதும், வாழும் இடங்களில் விலங்குகளுக்குள்ள சமத்துவம் கூட இல்லாமல் ஆற்றோரத்திலும், ஒதுக்கு புறத்திலும் மாட்டு கொட்டகைக்கும் கீழாக வீடு கட்டி வாழும் இருளர் இன மக்களை இன்றும் குற்றப் பரம்பரையாக கருதி போலீசார் வேட்டையாடுவதை நாம் அனுமதிக்க முடியுமா?

வீரப்பனை பிடிக்கிறேன் என்று தேவாரம் தலைமையிலான அதிரடி படை போலீசார் மலைவாழ் மக்களை வேட்டையாடியதும் பெண்களை பாலியல் வன்முறை செய்ததும் நீதிபதி சதாசிவம் கமிஷன் முன்பு வாக்குமூலங்களாக நிருபிக்கப்பட்ட பிறகும் எத்தனை போலீசார் தண்டிக்கப்பட்டார்கள்? அவர்களுக்கு பதவி உயர்வுகளையும் பணம் வீட்டுமனை என மக்கள் வரிபணத்தை சன் மானங்களாக வாரி வழங்கியவர்தான் ஜெயா. 1992-ல் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்துறை அனைரும் சேர்ந்து காட்டு மிராண்டி தனமாக பெற்ற தாய்மார்கள் கண் முன்பாகவே 13 வயது பள்ளி சிறுமி உட்பட 18 இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்தார்கள். ஆடு, மாடு, கோழிகள் உட்பட இவர்களின் உடமைகளை கொள்ளையடித்ததோடு உணவு தானியங்களை தீ வைத்து கொளுத்தியும், குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெயை கொட்டியும் நாசப்படுத்தினர். 15 நாட்களுக்கு பிறகே இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்தது. 19 ஆண்டுகள் இழுத்தடித்துஅனைவரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டனர்.

சிதம்பரம் பத்மினி வழக்காகட்டும், அந்தியூர் விஜயா வழக்காகட்டும், திண்டிவனம் ரீட்டாமேரி வழக்காகட்டும், போலீசோ, அரசோ நீதிமான்களாக நின்று விசாரணை செய்து குற்றவாளி போலீசாரை தண்டிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள், பழங்குடியின பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி கட்சிகள், புரட்சிகர அமைப்புகள் என அனைவரும் இறங்கி போராடியதுடன், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தின் படிகட்டுகளில் ஏறி, இறங்கியதால் பெற்ற தீர்ப்புகள். இவை அனைத்திலும் ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் குற்றவாளி போலீசாரை பாதுகாக்கவே செய்தனர்.

பரமக்குடியில் தலித்துகள் மீதான போலீசு துப்பாக்கி சூடு படுகொலையை ஜெயா சட்டமன்றத்தில் ஆதரித்து பேசினார். சி.பி.ஐ. விசாரிக் வேண்டும், இழப்பீடு தரவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் 1 லட்சம் வழங்கிய ஜெயா இன்று 4 லட்சம், இறந்தவர் வீட்டில் ஒருவருக்கு வேலை என அறிவித்துள்ளார். படுகொலைக்கு காரணமான போலீசார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மண்டபம் பகுதி இருளர் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறைக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி போலீசார் ஒருவரின் பெயர் கூட இல்லை. கைது செய்யப்படவும் இல்லை. உயர் அதிகாரியிடம் முறையிட வந்த பாதிக்கபட்ட பெண்களை இரவு முழுவதும் பெண் போலீசை வைத்து தூங்க விடாமல் உளவியல் சித்ரவதை செய்து, நடந்த சம்பவத்தை இல்லை என சொல்ல கட்டாய படுத்தியுள்ளனர். பழங்குடியின இருளர்கள்தானே, ஒருவேலை சோத்துக்கு அலையும் ஏழைகள் தானே என்ன செய்யமுடியும்? என்ற ஆதிக்க மனோபாவம்.

போலீசின் அத்துமீறல்கள் எங்கு நடந்தாலும் அரசுக்கு எதிராக ஓட்டு கட்சிகள் தயவின்றி பல்வேறு அமைப்புகள் போராடுவதுடன் நீதிமன்றத்தின் எந்த படிக்கட்டுக்கும் சென்று போலீசுக்கு எதிராக வழக்கு நடத்தி தண்டணை வாங்கித்தருகிற இந்த காலத்தில், திருக்கோவிலூர் போலீசார் இரவு12 மணிக்கு தைல மரத்தோப்பில் வீட்டு ஆண்களை லாக்கப்பில் போட்டு விட்டு 3 மாத கர்ப்பிணி உட்பட 4 பெண்களை கும்பலாக பாலியல் வன்முறை செய்து விட்டு அதிகாலை அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள் என்றால் திடீரென எதிர்பாராமல் போலீசு செய்யவில்லை. கிரிமினல் மயமான போலீசு துறையின் வெளிபட்ட சீழ்கட்டிகள்தான் மண்டபம் பாலியல் வன்முறை.

போலீசு சட்ட பூர்வ கிரிமினல் கும்பல் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார். பத்திரிக்கையாளர்கள், அனைத்து போலீசையும் எப்படி கூறமுடியும் என கேட்டதற்கு ஒரு கூடை அழுகிய மீன்களில் ஒரு நல்ல மீனை தேடும் முட்டாளல்ல நான் என பதிலளித்தார். ஏட்டு முதல் எஸ்.பி. வரை சிவகாசி ஜெயலட்சுமியை வைத்திருந்தார்கள் அதுபோல் காவல் துறையில் வேறுபாடு இல்லாமல் லஞ்ச ஊழல் முறைகேடுகள் அழுகி நாறுவது அனைவரும் அறிந்ததே கூலிப்படையுடன் கூட்டு வைத்து கொலை செய்வது வழிபறி கொள்ளையில் ஈடுபடுவது, பொய் வழக்கு போடுவதற்கு ஒருரேட்டு, வழக்கு போடாமல் இருப்பதற்கு தனி ரேட்டு, குற்ற வாளிகளை கைது செய்வதற்கு, கைது செய்யாமல் இருப்பதற்கு, ஒரு ரேட்டு இவை அனைத்தும் போலீஸ் ஸ்டேசன் வாசலிலேயே ஊரறிய நடக்கிறது. உரிமைக்காக போராடும் மக்களை கண்காணிக்க எண்ணற்ற உளவுப்போலீசார். இதை கண்காணிக்க மறுப்பதேன்?

கிரிமினல் மயமான போலீசை வைத்துதான் தலித்துக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொல்ல முடியும். விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்கவும், சிறையில் அடைக்கவும் முடியும். எதிர்ப்பு குரல் கொடுக்கும் வேலையிழந்த மக்கள் நலப்பணியாளரை ஒடுக்கமுடியும். விசாரணை என்ற பெயரில் சாதாரண மக்களை, லாக்-அப் கொலை செய்து ஏனைய மக்களை அச்சுறுத்த முடியும். சட்டம், நியாயம், நீதி, என்று பாராமல் கடி என்றால் கடிப்பதற்கும் பிடி என்றால் பிடிப்பதற்கும், குற்றவாளி போலீசாரை பாதுகாப்பதும், கிரிமினல் மயமான போலீசும்தான் ஜெயாவுக்கு அவசியம்.

போலீசு ராஜ்ஜியத்தை எதிராக களத்திலே நின்று போராடினால்தான் அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியும். உரிமைகளை வென்று எடுக்க முடியம். நீதிமன்றம் கூட இடை விடாத மக்கள் போராட்டத்திற்கு அஞ்சிதான் குற்றவாளி போலீசை பல வழக்குகளில் தண்டித்திருக்கிறது.

குற்றபரம்பரையாக கருதி இருளர் இன மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் போலீசின் அடக்கு முறையை முறியடிப்போம். 5 லட்சம் அல்ல 50 லட்சம் கொடுத்தாலும் நம் வீட்டு பெண்களுக்கு இப்படி ஒரு பாலியல் வன் கொடுமை நடந்தால் நாம் என்ன செய்ய நினைப்போமோ அதை செய்வோம் வாரீர்.

தமிழக அரசே !

பாலியல் வன்முறைக்கு காரணமான குற்றவாளி போலீசாரை கைது செய்.

வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிடு!

பழங்குடியின மக்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய் !

_____________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம் – கடலூர், திருவண்ணாமலை மாவட்டம் – வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரம்.

_____________________________________________________________

ஆர்ப்பாட்டம்!

திருக்கோவிலூர் மண்டபம் பகுதியை சார்ந்த இருளர் பெண்களை பாலியல் வன்முறை செய்த கிரிமினல் காவல் துறை போலீசை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5.12.2011 மாலை 4.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் தலைமை தாங்கினார். இருளர் இன மக்கள் உழைத்தும் எளிமையாக வாழ்கின்றார்கள். அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சந்தேகத்தின் பேரில் ஆண்களை மட்டும் அல்லாமல் 5 பெண்களையும் இரவில் வேனில் அழைத்து சென்றுள்ளனர். திருக்கோவிலூர் போலீசாரின் இச்செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது. அப்பாவி பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்த போலீசை கைது செய்ய கோரி கண்டித்து பேசினார். மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைவர் சுப்புரமணி மத்திய, மாநில போலிசார் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்டது என்றும் மணிப்பூரில் மலை வாழ் மக்களையும் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்றும் கண்டித்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் செந்தில், செல்வகுமார், குணசேகரன், திருவண்ணாலை மாவட்டத்தை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் சுப்புரமணி, விழுப்புர மாவட்டத்தை சேர்ந்த பு.மா.இ.மு. தோழர். செல்வகுமார். வி.வி.மு. தங்கராஜ், ஆகியோர் பேசினார்கள்.

பாதிக்கப்பட்ட இருளர் இன பெண்கள் 4 பேரையும் பெண் போலீசு இன்றி கைது செய்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய போலீசு மீது புகார் கொடுக்க சென்ற, மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் 12 பெண் போலிசார் மிரட்டி பயமுற செய்து 18 மணி நேரம் இரவு முழுவதும் தூங்க விடாமல் மன சிதைவு ஏற்பட செய்து தங்களுடைய ஆண்களை திருட்டு வழக்கில் இருந்து காப்பாற்றத்தான் அவ்வாறு கூறினோம் என்று பொய் வாக்கு மூலம் பெற்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவில்லை. குற்றவாளி போலிசார்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பணி நீக்கம் செய்து தமிழக அரசு தற்போது வழங்கிய 5 லட்சம் இழப்பீட்டு தொகையை போலீசாரின் சொத்துகளை பறிமுதல் செய்து அளிக்க வேண்டும். போலீசு துறையே கிரிமினல் மயமாகி விட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் பாலியல் வன்முறை, சிறை கொட்டடிச்சாவு, பரமக்குடி துப்பாக்கி சூடு படுகொலை, போலி என்கௌண்டர் கொலைகளை செய்யும், போலீசு ராஜ்ஜியத்தை உடனடியாக தடுத்து நிறுத்திட ஜனநாயக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து மக்கள் அணி திரள வேண்டும். மேலும் சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி மலைவாழ் மக்கள், அந்தியூர் விஜயா, திண்டிவனம் ரீட்டாமேரி, ஆகிய வழக்குகளில் மக்கள் போராடியதால் தான் குற்றவாளி போலீசாருக்கு தண்டனை கிடைத்தது. எங்கும் திருட்டு நடந்தாலும் இருளர் மக்கள் மீது பாயும் போலீசார் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி அமைச்சர்கள் இல்லையா? குற்றவாளி IAS, IPS அதிகாரிகள் இல்லையா? குற்றவாளி வருவாய் துறை அதிகாரிகள் இல்லையா? பொது சொத்துகளை கொள்ளையடிக்கும் குற்றவாளி முதலாளிகள் இல்லையா? அவர்கள் மீது போலீசு வழக்கு போட்டு கைது செய்ய வேண்டியதுதானே. எங்களிடம் 10 நாள் விஜிலன்ஸ் துறையை எங்களிடம் கொடுத்தால் மாவட்டத்தில் பாதி போலீசாரை சிறைக்கு அனுப்பி விடுவோம். பொது இடத்தில் ஒருவர் பெண்ணிடம் தகாதமுறையில் நடந்தால் அனைவரும் சேர்ந்து அடிக்கிறோம். அது போல் இருளர் பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்த போலீசாரை கட்டி வைத்து உதைத்தால் தான் கிரிமினல் போலீசின் அத்துமீறல்களை தடுக்க முடியும். என்று மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு விரிவான கண்டன உரையை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் திரளாக 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பார்வையாளராக 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன உரைக்கு ஆதரவு அளித்தனர்.


தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்