/* up Facebook

Dec 13, 2011

இந்தியாவின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டமும் காந்தியப்போராளி இரோம் சர்மிளாவும் - காயத்திரி நளினகாந்தன்;.


அண்மையில் இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களும் இந்தியாவின் மணிப்பூர் பிரதேசத்திற்கு விஐயம் செய்து அங்கு நீதிமன்ற கட்டடத்தொகுதியை திறந்து வைத்தார்கள் என்ற செய்தியை கேட்ட எனக்கு அங்கு நீதிக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கும் காந்தியப்போராளியான இரோம் சர்மிளாவை பற்றி எழுதாது இருக்கமுடியவில்லை. யார் இந்த இரோம் சர்மிளா என்பதை அறியும் முன்பு பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டால் நல்லது.

1949-ல் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த சிறு சிறு அரசர்கள் ஆண்ட தன்னாட்சி பகுதிகளை அப்பகுதி மக்களின் விருப்பு வெறுப்புகளை மதிக்காமல் இந்தியாவுடன் சேர்க்கும் பொழுது அந்தப்பகுதி மக்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.அதுவே அப்பகுதிகளில் மக்களிடையே தனித்தனியே தனிநாடு கிளர்ச்சிக்கு வித்திட்டது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நாகா கிளர்ச்சி இந்தியாவின் விடுதலை காலத்திற்கும் முற்பட்டது என்றாலும் விடுதலைக்குப் பின் தனிநாடு கோரும் நாகா கிளர்ச்சி பிற வடகிழக்கு மாகாணங்களான மிசோரம் மணிப்பூர், திரிபுரா, அசாம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளில் தொற்றுநோய் போல் பரவியது.அது பெருவியாதியாக வளர்ந்து 1980களில் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றிம் தனித்தனி கிளர்ச்சியாக உருவாகியது.

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 25 மில்லியன் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள்.அவர்களில் மித்திஸ் பன்கல்ஸ் நாகா குக்கீஸ் போன்ற பழங்குடி இனமக்கள் முக்கியமானவர்கள்.பிரிட்டிஷ் காலனி ஆதிக்க முடிவில் நாடு விடுதலை அடைந்தபோது தொந்தரவு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட அருணாச்சலப்பிரதேசம் அசாம் மேகாலயா மணிப்பூர் மிசோரம் நாகாலாந்து மற்றும் திரபுரா மாநிலங்களில் இந்தியஅரசு ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.இந்தச்சட்டம் பின்வரும் சிறப்பு அதிகாரத்தினை ஆயுதப்படைக்கு வழங்கியது.

1.சட்டத்திற்குப் புறம்பாகச்; செயல்படுபவர்களுக்கு எதிராக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள கூட்டத்திற்கு எதிராக உயிரைப் பறிக்கும் ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி சூடு படையினரால் நடத்தலாம் இதில் உயிர்கள் பலி ஆகலாம்.

2.வாரண்ட் இல்லாமல் சந்தேகப்படுபவரை, ஆயுதம் வைத்திருப்போரைக் கைது செய்யலாம்

3.எந்த இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தலாம்

இதனைவிடக்கொடுமையான சரத்து என்னவென்றால் ராணுவ ஆத்துமீறலுக்காக ராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவியலாத வகையில் இந்த சட்டத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது.இந்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுஉள்ளார்கள.

இரோம் சர்மியா சானு எனும் காந்தியவாதி மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இரோம் நந்த சிங் என்ற தந்தைக்கும் இரோம் சக்;தி தேவி என்ற தாய்க்கும் 9 வது பிள்ளையாக 1972-ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் பத்திரிகைத்துறை,மனித உரிமை போன்ற துறைகளில் பட்டம் பெற்றவார்.

2000 ஆண்டு நவம்பர் 1 திகதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மலோம் என்னுமிடத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர்.இந்தியா அரசின் பாரா மிலிட்டரியின் ஒரு படைப்பிரிவான அசாம் ரைபிள்ஸ் தங்களது வாகனத்தில் வந்து இறங்கி பேருந்துக்காக மக்கள் காத்திருந்த மக்கள் மீது எந்த வித எச்சரிக்கையும் எந்தக்காரணமும் சொல்லமால் கண்மூடித்தனமாக சுட்டார்கள் அந்த துப்பாக்கிச் சூட்டில் 10 நபர்கள் பலியானார்கள் இந்திய அரசின் இராணுவப்படையின் இந்தஅட்டூழியத்தை; கேள்விப்பட்ட மணிப்பூர் மக்கள் அன்றே தெருவுக்கு வந்து நடந்த நிகழ்வின் மீது நீதிவிசாரணை வேண்டுமென்று போராடினார்கள்.ஆனால் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம் 1958 னைப் பயன்படுத்தி அரசாங்கமும் ராணுவமும் விசாணை கமிஷன் அமைப்பதில் இருந்து தப்பித்துக் கொண்டன.

மலோம் நிகழ்வால் மனம் புழுங்கிய இரோம் சர்மிளா தனது 28 வது வயதில் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தனது தாயினை வணங்கி அவரது வாழ்த்துடன் மணிப்பூர் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவத்தின் அடக்கு முறைக்கு மூலகாரணமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம் 1958 னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை மகாத்மா காந்தி வழியில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார்.இவருடைய போராட்டத்தை முதலில் சிலர் கிணடலும் கேலியும் செய்தனர்.ஆனால் அதற்கெல்லாம் அசராமல் தனது உண்ணாநிலையினைத்தொடர்ந்தார் சர்மிளா அவர் உண்ணாநிலை தொடங்கி மூன்று நாட்கள் கழித்து அதாவது நவம்பர் 6 ஆம் நாள் இந்திய தண்டனைச்சட்டம் ஐPஊ பிரிவு 309 யின் படி சர்மிளா தற்கொலை செய்ய முயன்றாதாக கைது செய்யப்பட்டு பின்பு நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார் காவலில் இருக்கும் போது அவர் இறந்து விடக்கூடாதே எனும் பயத்தில் விட்டமின் போன்ற சத்துப்பொருட்களை மூக்கு வழியாக ஒரு குழாயைப்பயன்படுத்தி அவரது விருப்பத்துக்குமாறாக ஊற்றி அவரது உயிரைப்பிடித்து வைத்தார்கள்.அவர் நடத்திய போராட்டத்திற்காக மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் செயல்வீரர்கள் ஆகியோர்கள்; அவருக்கு ஆதரவாகத் திரண்டெழுந்தனர்.

இவரின் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை சார்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான திருமதி இபடி என்பவர் இவரைச்சந்தித்து தனது ஆதரவை வழங்கினார் அவர் மேலும் கூறுகையில் சர்மிளா இறந்துவிட்டல் நாடாளுமன்றம் நீதிமன்றம் ராணுவம் குடியரசு தலைவர் ஒவ்வொரு பத்திரிகையாளரும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததால் அவரது இறப்புக்கு காரணமானவர்களாகக்கூடும் எனவும் தெரிவித்தார்.சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டமானது 11வது ஆண்டாக தொடர்கின்றது.உணவின்றி இவ்வளவு காலமும் உயிர் வாழ்வது என்பது மருத்துவ அற்புதமாகவே அவரின் மனஉறுதியின் வெளிப்பாடாகவும் வைத்தியார்கள் பார்க்கின்றார்கள்.நோபல்பரிசுக்காக 2005,2010களில் பரிந்துரை செய்யப்பட்டபோதும் 2007 ஆம் ஆண்டு தென்கொரிய நாட்டு கெசஞ்சு மனித உரிமை பரிசே அவருக்கு கிடைக்கப்பெற்றது.

இலங்கையின் பயங்கரவாதச்சட்டத்திற்கு ஒப்பான சட்டமாகவே இந்தியா இராணுவசிறப்பு அதிகாரச்சட்டம் அமைந்துள்ளது என்பதை யாரலும் மறுக்க முடியாது எமது மண்ணிலும் பல போராளிகள் இரோம் சர்மிளாவைப்போல் காந்தியப்போரட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்து உள்ளார்கள் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

மேலும் அண்மையில் நோபாளில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் மணிப்பூரில் இருந்து கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.இவரின் கருத்துப்படி சர்மிளாவின் போராட்டம் இன்னும் பரந்து விரிவடையாது இருப்பதற்கு காரணிங்களில் ஒன்று பெண் என்ற காரணமும் மற்றையது மணிப்பூரின் பெரும்பான்மையானவர்கள் பழங்குடி மக்கள் என்பன அவரின் போரட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றன எனவும் சார்மிளவின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் போரட்டம் ஆரம்பித்து நாள் அதாவது நவம்பர் 4 திகதி எமது பிரதேத்தில் உள்ள மக்கள் நாள் முழுவதுவும் உணவைத்தவிர்த்து அவரின் போரட்டத்திற்கு தமது ஆதரவைத்தெரிவித்துக்கொள்றோம் என உருக்கத்துடன் கூறினார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்பாக சர்வதேச ரீதியாகவும் பிராந்தியரீதியாகவும் பல பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு இயங்கும் இவ்வேளையிலும் கூட சர்மிளாவின் போரட்டத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.மனித உரிமைகள் தினம் சர்வதேசரீதியில் அனுஸ்டிக்கப்படும் இத்தருணத்திலாவது அவரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அகிம்சைத்கான தேவதையை காந்தியதேசம் காப்பாற்றுமாக இருந்தால் காந்திய கொள்கையும் சோனியா காந்தியால் திறந்து வைக்கப்படும் நீதிமன்றத்தின் நீதிதேவதையும் காப்பாற்றப்படும்.இல்லையேல் ஐனநாயகமும் காந்தியமும் காந்தியதேசத்தால் குழிதோண்டிப்புதைக்கப்படுவதே நிதர்சனமாக மாறிவிடும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்