/* up Facebook

Dec 8, 2011

சமூக அசைவாக்கமே எனது திரைப்படத்தின் நோக்கம்: சபிகா சுமர்

உங்களது முதலாவது கதைப்பாங்கான திரைப்படமான ஹமோஸ்பானியின் உருவாக்கம் பற்றி...

ஆவணத் திரைப்படத்திலிருந்து கதைப்பாங்கான திரைப்பட உருவாக்கத்திற்குள் நுழைவது என்பது சற்றுக் கடினமான ஒரு முயற்சியென்றே கூற வேண்டும். ஒரு வகையில் இதனையொரு பாய்ச்சலாகவே கொள்ளலாம். உண்மையில் ஹமோஸ்பானியினை ஒரு ஆவணத் திரைப்படமாக எடுக்கவே நான் முதலில் எண்ணியிருந்தேன்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தின்போது பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது சட்டசபை விவாதங்கள் பலவற்றை நான் படிக்க நேர்ந்தது. அதன்போது குறிப்பாக மீட்பு சட்டத்தின் (Recovery-Act) மீது என் கவனம் படிந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையினைப் பிரதிபலிக்கும் சட்டம் இதுவாகும்.எல்லைப்புறத்தின் இரு பக்கங்களிலுமே கடத்தப்பட்ட சம்பவங்கள் முறைப்பாடுகளில் பதிவாகியிருந்ததையடுத்து இந்த விவகாரங்களைக் கையாளுவதில் இந்தியாவில் மிராத்துல்ல சாராபாய் என்றழைக்கப்படும் பெண் ஈடுபட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்களுக்கு உள்ளாக நேர்ந்த பெண்களை மீட்டு, அவர்களை அவர்களது முன்னைய மூலக் குடும்பங்களிடம் ஒப்படைப்பதே இச்சட்டத்தின் நோக்கமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டளவில் கொண்டுவரப்பட்ட இச் சட்டம் நீண்டகாலம் அமுலில் இருந்தது. இத்தகைய துன்ப துயரங்களுக்கு இலக்கான பெண்கள் திருமணமாகிப் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை, இச்சட்டம் கணக்கிலெடுக்கத் தவறியிருந்தது மிகவும் துர்ப்பாக்கியமானது. இது அவர்கள் மீது வில்லங்கமாக நிர்ப்பந்திக்கப்பட்ட, திணிக்கப்பட்ட ஒன்றென்று எவருக்கும் விளங்கும்.

எல்லைப்புறத்தின் இரு பக்கங்களிலுமே இவ்வாறான சம்பவங்கள் நேர்ந்துள்ளன. இப்பெண்களை நிர்ப்பந்தமாக அவர்களது மூலக் குடும்பங்களுக்கு அனுப்பி வைத்ததுடன் கதை முடிந்துவிடவில்லை. இவ்வாறாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெரும்பாலான பெண்களை அங்கு மூலக்குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். முஸ்லிம் ஆண்களுடன் குடும்பம் நடத்திவிட்டுத் திரும்பி வருகிறார்கள் என்பதே இதற்காகக் கூறப்பட்ட காரணமாகும். அங்குமில்லாமல், இங்குமில்லாமல் வீடற்றவர்களாக, குடும்பமற்றவர்களாக நிர்க்கதியாக விடப்பட்ட எத்தனையோ பெண்கள் இறுதியில் பைத்தியமானார்கள். வரலாற்றில் மிகக் கொடிதான துன்பம் இதுவெனவே நான் நினைக்கிறேன். இத்தகைய மொத்தத் துயர அனுபவங்களின் சிறுதுளியே ஹமோஸ்பானி உருவாகக் காரணமாக இருந்தது.

திரைப்படம் பாகிஸ்தான் பற்றி மாறுபாடான தன்மையினை வெளிப்படுத்துவதாக சிலர் விமர்சிக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

அவ்வாறான விமர்சனம் எதனையும் நான் கேள்விப்படவில்லை. ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து திரைப்படம் தொடர்பாக பாராட்டி எழுதப்பட்ட கடிதமொன்றினையும் நான் பெற்றிருந்தேன். திரைப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் திரைப்படம் என்னத்தைக் கூற விரும்புகிறது என்பது குறித்துத் தெரியாது போகாது. சிறுபான்மையினரான ஒரு தொகையினரை மத்தியில் அதிகாரத்தைச் செலுத்த அனுமதியளித்தால் நடப்பது என்ன? அதுவே ஜெனரல் ஸியா ஆட்சியின் போது நடந்தது. மௌலவிகள் எமது வாழ்க்கையுடன் இணைந்துள்ளனர். உலகில் எல்லாப் பகுதிகளிலுமே தீவிர போக்குடையோர் இருக்கின்றனர். பிரிட்டனில் தேசிய முன்னணியினர். ஜேர்மனியில் நவ – நாஸிகள். ஆமெரிக்காவில் கு-குக்ஸ் கிலான். இந்தியாவில் இந்துத்துவா... ஆனால் ஓரங்களிலிருக்கும் இச்சக்திகளுக்கு எவரும் மத்தியைக் கையளித்து அதிகாரம் செலுத்த அனுமதிக்கவில்லை, ஆனால் இதைத்தான் ஸியா – உல் - ஹக் எமக்குச் செய்தார். ஆனால், திரைப்படம் கதைவடிவில் ஒரு குறிப்பிட்டதைத்தான் எமக்குரியதைத்தான் கூறுகின்றது எனக் குறுக்கி மட்டுப்படுத்தி சினிமாவின் அசாத்திய ஆற்றலை, அதன் சக்தியினை நாம் குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது. ஏனெனில், சினிமாவின் இயங்குதளம் மிக விரிந்த பரப்பிலமைந்த ஒன்றாகும்.

லொக்கானாவில் 7000 பேர்களை உள்ளடக்கிய பார்வையாளர்களுக்கு திரைப்படத்தைக் காண்பித்தபோது அவர்களால் திரைப்படத்துடன் எத்தகைய அந்நியப்பாடுமின்றி ஒன்றிக்க முடிந்தது. திரைப்பட முடிவில் அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி தமது பாராட்டை வெளிப்படுத்தினர். பெண்களில் சிலர் தமது மகன்மார்கள் நவநாஜிகளாக உருமாறி தம்மிலிருந்து அந்நியப்பட்டுப் போவதையொத்த வேதனை மிக்க அனுபவத்திற்கு ஆளானதாகத் தெரிவித்தனர். சிறுகுழுவினரின் அடிப்படைவாதம் எத்தகைய கேள்வியுமின்றி கட்டற்ற நிலையில் வளரவிடப்படும் பேராபத்தானதொரு அனுபவத்தை அவர்களிடமும் தொற்றவைக்க முடிந்தது.

பாகிஸ்தானின் பல பாகங்களுக்கும் திரைப்படத்தை ஒரு யாத்திரை போன்று எடுத்துச் சென்று பொதுமக்களுக்குக் காண்பித்தது பற்றி...

பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமி மிகுந்த ஆர்வத்துடன் திரைப்படத்தைப் பார்த்தார்கள். நிலத்திலும் கூரைகளிலுமிருந்து அவர்கள் திரைப்படத்தைப் பார்த்தார்கள். திறந்த வெளி அரங்குகளில் மிகக் கூடுதலான மக்கள் பார்க்கக் கூடியவாறு ஏற்பாடுகளைச் செய்தோம். சிந்து. பஞ்சாப் மற்றும் பலோஸிஸ்தான் ஈறாக எல்லாமாக 41 கிராமங்களிலும் மற்றும் நகரங்களிலும் இவ்வாறாகக் காண்பித்தோம்.

இதன்போது ஏதேனும் இடையூறுகள் அல்லது தடைகள் உங்களுக்கு ஏற்பட்டனவா?

சிந்தில் உள்ள கிராமமொன்றில் திரையிடுகையின் பொருட்டு மக்கள் குழுமியிருந்த இடமொன்றிற்கு சதாரண உடைகளில் வந்த பொலிஸ்காரர்கள் சிலர் திரைப்படம் இஸ்லாத்துக்கும். பாகிஸ்தானுக்கும் விரோதமானது எனக் கூறி திரையிட அனுமதிக்க முடியாது எனத் தடுக்க முற்பட்டபோது கூட்டத்திலிருந்தோர் குறிப்பாகப் பெண்கள் அதனை ஆட்சேபித்ததுடன், திரைப்படம் ஒரு நேர்மையான முயற்சியென்று வாதாடியதுடன் அவர்களைக் கலைந்து செல்லுமாறும் செய்தனர். பஞ்சாப்பில் யாங்குக்கு அருகில் இன்னொரு இடத்தில் மௌலவிகள் குழுவினர் சூழ்ந்து கொண்டு தாங்கள் முதலில் பார்த்து அனுமதித்தாலே கூட்டத்தினர் பார்க்க முடியுமெனக் கூறித் தடுத்தனர். நாங்கள் அத்தகையதொரு தணிக்கைக்கு உடன்பட முடியாதெனக் கூறி வேறொரு கிராமத்திற்குச் சென்று திரையிட்டோம்.

பெஷாவரில் ஒரு இடத்தில் ஆண்களும் பெண்களுமாகக் குழுமியிருந்தபோது, ஆண்களில் சிலர் தமக்கு முதலில் காண்பிக்குமாறும் அதன் பின்னர் பெண்களுக்குத் தனியாகக் காண்பிக்குமாறும் வற்புறுத்தினர். இதற்கு நாங்களும், கூடியிருந்த பெண்களும் உடன்படவில்லை. எனவே வேறு வழியின்றி ஆண்கள் பெண்களின் வரிசைக்கு அருகாக வேறொரு பக்கத்திலிருந்து பார்க்க நேர்ந்தது.

“Who will cast the first stone?” என்ற ஆவணத் திரைப்படத்துடன் உங்களது திரைப்படப் பிரவேசம் ஆரம்பமானது. இதனை எடுப்பதற்கு நீங்கள் ஆர்வம் கொண்டது எவ்வாறு நிகழ்ந்தது?

சாரா லோறன்ஸ் கல்லூரியில் திரைப்படத்துறை மற்றும் அரசியல் விஞ்ஞானம் போன்றவை குறித்துக் கற்றேன். கேம்பிரிட்ஜில் எனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் கராச்சி திரும்பி சில ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். சிறைகளில் இருக்கும் பெண்கள் குறித்த ஆய்வுகளில் சட்டத்தரணியான நண்பர் நொஷீன் அகமட் என்பவருடன் இணைந்து ஈடுபட்டேன். அக்கால கட்டத்தில் ஜெனரல் ஸியா – உல் - ஹக் பயன்படுத்திய இஸ்லாமிய குற்றவியல் தண்டனை சட்டங்களுக்கு எதிராகப் பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி ஏந்தின. இத்தகைய சட்டங்களால் பாதிப்படைந்த பெண்கள், அவை அப்பெண்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய சிக்கல்கள் மற்றும் குறிப்பாக பாகிஸ்தானிய சமுகத்தில் உருவாகிய அவலங்கள் போன்றன பற்றிய சரியான கணக்கெடுப்போ அல்லது புள்ளிவிபர ஆய்வுகளெதுவுமோ இருக்கவில்லை.

இந்த நிலையில், கராச்சி சென்ரல் ஜெயிலில் சிறியளவிலான ஆய்வொன்றினை நடத்தி விபச்சார தண்டனைச் சட்டம் குறித்ததான சகல விபரங்களையும் சேகரித்துக் கொண்டோம். பெரும்பாலும் பெண்கள் திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவுகளில் ஈடுபட்டமைக்காகவும் தாங்கள் விரும்பித் தெரிவு செய்தவர்களையே திருமணம் செய்தமைக்காகவும் சிறைகளில் இருந்தார்கள். பல பெண்கள் தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்களென்பதை முறையிடச் சென்ற போது சிறையிலடைக்கப்பட்டவர்கள். இதன் பின்னர் இத்தகைய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவில் குற்றமிழைத்தவர்களாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். எனவே, பாலியல் வல்லுறவுக்குள்ளானது குறித்த வழக்கு எடுக்கப்படும்வரை. இப்பெண்கள் சிறையில் நலிவடைய வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தார்கள்.

அச்சமயத்தில், அதாவது 80களின் பிற்கூறுகளில் 69 பெண்கள் சிறையிலிருந்தனர். அவர்களுள் 68 பெண்கள் விபச்சாரத் தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் வருபவர்கள். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சில நண்பர்கள் ஒன்றிணைந்து குழுவொன்றினை ஏற்படுத்தியதுடன் நான்கு பிரதான பத்திரிகைகளினூடாக இஸ்லாமியக் குற்றவியல் தண்டனைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்துப் பிரச்சார இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டோம். இந்தக் காலப் பகுதியில்தான் “Who will cast the first stone?” என்ற ஆவணப்படத்தை எடுப்பதற்கான எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இவ்வாறானதொரு திட்டம் குறித்து நான் ஆலோசித்துக் கொண்டிருக்கையில் பிரிட்டிஷ் கொம்பனியான 'றீரேக்' என்ற கொம்பனியினை நடத்தும் எனது நண்பரான அலாவுடீன் ஜமால் என்பவர் தொடர்பு கொண்டு திரைப்படம் ஒன்றை எடுப்பதற்குக் குறிப்பாகச் சிறையிலிருக்கும் பெண்கள் தொடர்பில் ஆவணம் எதனையும் தர முடியுமா என என்னை விசாரித்தார். இத்தகையதொரு பின்னணியின் அடிப்படையில் நான் எடுக்க இருந்த திரைப்படத்திற்கு அவர் தயாரிப்பாளரானார். நான் நெறியாளரானேன். இதன் பின்னர் திரைப்படத்தைப் பூர்த்தி செய்து நான் லண்டனுக்கு எடுத்துச் சென்று தொகுப்பு வேலைகளைச் செய்த பின்னர் 'சனல் 4' ஊடாக அதனைக் காண்பித்தோம்.

இந்தத் திரைப்படத்தின் தாக்கம் என்ன?

பெனாஸிர் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு இஸ்லாமியக் குற்றவியல் தண்டனைச் சட்டங்களுக்கு எதிரான எமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கையெழுத்திட்டார். பெனாஸிர் அதிகாரத்திற்கு வந்ததும் நாங்கள் ஏற்கெனவே எமது கையெழுத்து இயக்கம் மூலமும், திரைப்படம் மூலமும் தோற்றுவித்து வைத்திருந்த ஆதரவுத் தளத்தை அனுகூலமான வழியில் பயன்படுத்துவாரென எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எமது எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, பெனாஸிர் ஆரசாங்கம் “Who will cast the first stone?” திரைப்படத்தை பாகிஸ்தானில் திரையிட அனுமதி மறுத்தது. இதனையடுத்து P.T.V.யின் தலைவராக பணியாற்றிய அஸ்லாம் அஸ்கர் என்பவரிடம் திரைப்படத்தை கொண்டு சென்றேன். அவரும் அனுமதி மறுத்தார். 'முல்லாக்கள் எம்முடன் மல்லுக் கட்டுவார்கள். எனவே எம்மால் முடியாது' என அவர் ஒரேடியாக மறுத்து விட்டார். இந்த நிலைமை முற்றிலும் அபத்தமானது என்றே கூற வேண்டும். ஏனெனில், பெனாஸிரின் காலகட்டத்தில் முல்லாக்களின் தலையீடும் ஆதிக்கமும் மிகக் குறைந்தளவிலேயே இருந்து வந்தது. பெனாஸிர் மக்கள் ஆதரவுப் பலத்தின் மூலமே பதவிக்கு வந்தார். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச ரீதியாகப் பெரியளவில் கவனத்தை ஈர்த்தது.

முதலாவது திரைப்படத்திற்கும் ஹமோஸ்பானிக்குமான இடைக் காலத்தில் என்ன செய்தீர்கள்?

நான் வேறு எத்தனையோ ஆவணப்படங்களை எடுத்திருந்தேன். ஆனால், பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அவற்றை பார்ப்பதிலோ அல்லது திரையிடுவதிலோ எவருக்கும் ஆர்வம் இல்லை. நான் "Where Peacocks Dance?" என்ற படத்தை எடுத்திருந்தேன். சிந்தில் நிலவிய கலாசார தேசியம் பற்றி இது கூறுகிறது. மொஹஞ்சதாரோ பின்னணியில் அமைந்தது. பாகிஸ்தானில் நாம் எமது பாரம்பரியத்தை மறுத்து வருகிறோம். மொஹஞ்சதாரோ உண்மையில் எமக்குச் சொந்தமானதல்ல எனவும் ஏனெனில் அது இஸ்லாமிய காலகட்டத்திற்கு முற்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும் எமது வரலாறு 711 AD யில் மாத்திரம் இஸ்லாமிய வருகையுடன் ஆரம்பிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. எமது பாரம்பரியத்தை நாம் மறுக்கும் ஆபத்துக்கள் பற்றி இத்திரைப்படம் சுட்டிக் காட்டுகின்றது. சிந்திலுள்ள மக்கள் மொஹஞ்சதாரோ பற்றி அது தமது பாரம்பரிய சொத்தெனக் கூறும்போது, அவர்களுக்கு அவர்களுடைய பாகிஸ்தானிய அடையாளத்தை உங்களால் மறுக்க முடியுமா?

"Where Peacocks Dance?" ஒரு ஆவணத் திரைப்படமாகும். 1993இல் றொற்றர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் அது காட்டப்பட்டது. அதே வருடத்தில் சனல் 4 இல் காண்பிக்கப்பட்டது. பாகிஸ்தானில் மிகப் பரவலாக சினிமா யாத்திரை என்ற எமது செயற்திட்டத்தின் மூலமாக பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு காண்பிக்கப்பட்டது.

அடுத்த திட்டம் என்னவாக இருந்தது?

அதற்கு அடுத்ததாக, மீண்டும் சனல் 4 க்காக Karachi in Crisis எடுக்கப்பட்டது. மொஹாஜிர் சிந்தி தகராறு பற்றியது அது. பின்னர் Suicide Warriors என்ற ஆவணத் திரைப்படத்தினை எடுத்தேன். அது இலங்கையின் தமிழ்ப் போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியது. இலங்கையின் கிழக்குப் பிராந்தியமான மட்டக்களப்பில் யுத்தப் பகுதிகளான சில வனங்களிலும் அவற்றைச் சுற்றிய பகுதிகளிலும் எடுக்கப்பட்டது.

இந்த ஆவணத்திரைப்படத்தில் ஈடுபாடு கோண்டதற்கான பின்னணி என்ன?

யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் குறித்த படிமங்கள் மீது, அவை குறித்த அலசல்களின் மீது நாட்டம் ஏற்பட்டது. இப்பெண்கள் தொடர்பில் உருவாகியிருக்கும் படிமங்கள் மிக முரண்பட்டனவாய், கறாரானதாய் எனக்குத் தோன்றின. வெளியுலகில் அவர்கள் அதீத தன்மை கொண்ட பேய் அணங்குகளாக உருப்பெற்றிருந்தனர். ஒரு விதத்தில் உண்மைத் தேடல் முயற்சியே தற்கொலைப் போராளிகளான பெண்கள் தொடர்பான இந்த ஆவணப் படம். இதன்போது மிக நெகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்பட்டன. அழகான இப்பெண்கள் குறுகிய சில நாட்களுக்குள்ளேயே எனக்கு நெருக்கமான தோழிகளானார்கள். அவர்கள் சில நாட்களுக்குள்ளேயோ, வாரங்களுக்குள்ளேயோ இறப்பதற்கு நிச்சயிக்கப்பட்ட தற்கொலைப் போராளிகள் தான் என்பது என் மனதை வருத்துவதாக, என் பிரக்ஞையில் தீராத வலியினை ஏற்படுத்துவதாயிருந்தது. இப்பெண்களில் ஒருவரான சார்ளி என்பவருடன் திரைப்படத்திற்கான நேர்கர்ணலைப் பதிவாக்கிக்கியிருந்தேன். இதன் பிறகு அவர் இறந்து விட்டார். இப்பெண் தோழிகளை விட்டுப் பிரிவது எனக்கு மாத்திரமல்ல என் குழுவில் அடங்கியிருந்த எல்லோருக்குமே மனக் கசிவினை ஏற்படுத்தியது. பலர் வாய்விட்டு அழுதார்கள். 16 இலிருந்து 20 வயதிற்குட்பட்ட இப்பெண்களது நினைவுகளையும் கனவுகளையும் நெருக்கமாயிருந்து அனுபவித்த எமக்கு அவர்கள் சொற்ப நாட்களுக்குள் இறந்து விடுவார்கள் என்பது மனப் பதைபதைப்பினை ஏற்படுத்துவதாயிருந்தது. ஆனால், இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளான அவர்களது யுத்தப் பிரதேசத்தில் அவர்களின் சாவு என்பது தற்கொலைப் போராளிகளற்ற நிலையிலும் கூட ஏற்கெனவேயே நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதானென்பதே எமது மனப் பதைபதைப்பினைப் போக்க அவர்கள் கூறும் ஆறுதலாகும். மேலும், தற்கொலைப் போராளிகளாக மிகவும் கௌரவமான மரணத்தையே தாம் தழுவுவதாக அவர்கள் புன்னகை புரிந்து திருப்தி தெரிவித்தனர்.

எங்கு இப்படம் காண்பிக்கப்பட்டது?

சனல் 4க்கான திரைப்படமே இதுவாகும். இலங்கை அரசாங்கம் இதற்குத் தடை விதித்தது. எவருக்குமே கிலியினையும் பீதியினையும் ஏற்படுத்தும் இப் பெண்கள் ஆடலிலும் பாடலிலும் ஈடுபாடு கொண்ட சராசரிப் பெண்களைப் போன்று சித்திரிக்கப்பட்டிருந்தமையே தடைக்கான காரணம் என இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இதன் பிறகு என்ன?

இலங்கை தொடர்பில் வேறு சில ஆவணப்படங்களையும் எடுத்தேன். பின்னர் Don’t ask why என்ற ஆவணப்படம். கராச்சியைச் சேர்ந்த 17 வயதுப் பெண்ணே இதன் கதாநாயகி. இப்பெண் உண்மையாகவே எழுதிய நாட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டே இது எடுக்கப்பட்டது. ஐரோப்பா முழுவதும் இது காண்பிக்கப்பட்டது. இதுவரையில் கடைசியாக நான் எடுத்த ஆவணத் திரைப்படம் A place under the Heaven என்பதாகும். இது இஸ்லாமிய மயப்படுத்தல் குறித்து ஆழமானதொரு பார்வையைச் செலுத்துகிறது. இதன் முற்பகுதி நான் பிறப்பதற்கு முன்பிருந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. பாகிஸ்தான் 50களிலும் மற்றும் 60களிலும் எப்படி இருந்தது என்பது குறித்து எனக்கு எனது தந்தையாரும். தாயாரும் கூறியவற்றை அடிப்படையாகக் கொண்ட சித்தரிப்பு, சுதந்திரம், பால்ரூம், காபரே நடனங்கள் போன்றவற்றின் காலகட்டம். எங்கிருந்து இந்த மாற்றத்தின் கூறுகள் தோற்றம் பெறுகின்றன என்பது குறித்த ஆழமான விசாரணைகள். அரசியல் யாப்பு, இறைமை, மக்கள் ஆணை போன்றவை குறித்த அலசல்கள். பல்வேறு தளங்களிலும் இவற்றின் தாக்கங்கள் உருவாக்கியிருக்கும் விவாதங்கள், சர்ச்சைகள் என்பன ஆராயப்படுகின்றன.

உங்களுடைய ஆய்வுகள், ஈடுபாடுகள், படைப்புகள் மற்றும் போராட்டங்கள், செயற்பாடுகள் போன்றவற்றின் பின்னணியை நோக்கினால் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக, உந்துசக்தியாக ஆழமானதொரு சமூக அக்கறை உங்களுக்கு இருப்பது வெளிப்படை. இவ்வாறானதொரு ஆளுமையினை எங்கிருந்து பெற்றீர்கள்?

வளமான, அறிவார்ந்த தளத்தில் இயங்குகின்ற குடும்பச் சூழலில் சிறுவயதிலிருந்தே நான் வளர்க்கப்பட்டேன். குறிப்பாக எனது தந்தையார் - குவாலிஸ், சூபி கதைகள் மற்றும் பேர்ஸியக் கவிதைகள் போன்றவற்றை எப்போதும் கூறிக் கொண்டிருப்பார். சிறுபராயத்திலிருந்தே நானும் எனது சகோதர, சகோதரிகளும் அவற்றை அர்த்த பூர்வமாக கேட்டு வளரும் பாக்கியம் பெற்றிருந்தோம். நாங்கள் எல்லாமாக எட்டுப்பேர். எங்களுக்கிடையே வயதெல்லைகள் பலவாறாக இருந்தன. எனவே, அபிப்பிராய பேதங்கள் நன்றாக வெளிப்படும். அரசியலிலிருந்து பல முக்கிய விடயங்களை விவாதிப்போம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு கட்டத்தில் பழமையான, பிற்போக்கான சமூகப் பெறுமதிகளிலிருந்து நீங்கி புதிய மாற்றங்களுக்கு உடன்படும் மனப்பான்மையின் தேவையினை எமது தந்தையார் வலியுறுத்தியதும் நாம் எல்லோரும் அவருடன் உடன்படுவோம்.

எனது தந்தையார் தாராள மனதுள்ளவர். பெற்றோர்கள் இருவரும் என்று கூறலாம். ஏனெனில் தாயாரும் அத்தகைய குணநலன்கள் நிரம்பியவரே. பம்பாயிலிருந்த போது மிகவும் கஸ்டப்பட்டார்கள். எனவே, பணத்தின் தேவையினை நன்குணர்ந்திருந்ததன் காரணமாக, அவற்றைக் கொடுக்கும் நிலையினை எய்தியவர்கள். இல்லையென்று கூறாது, எவருக்கும் உதவும் இயல்பு அவர்களுக்கிருந்தது.

- நன்றி: சரிநிகர் (மே-ஜூன் 2007)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்