/* up Facebook

Dec 1, 2011

பாலை - எளியோரின் வரலாறு - ப்ரியாதம்பி


இனக்குழுக்களுக்குள் நடக்கும் மோதல் குறித்து எத்தனையோ படங்களை பார்த்திருப்போம். நம் நிலம் சார்ந்து, நம் வாழ்க்கை சார்ந்து இதற்கு முன்பு இப்படி ஒரு திரைப்படம் வந்ததாய் நினைவில்லை. காயாம்பூ என்கிற பெண் ஓலைச்சுவடியில் தங்கள் வரலாற்றை எழுதி வைப்பதாய் தொடங்குகிறது படம்.. ஒரு பெண்ணின் பார்வையில் வரலாற்றை சொல்லும் படமும் மிக அரிதாகவே வந்திருக்கும் என நினைக்கிறேன்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்... வளமான முல்லை நிலத்தின் ஆயக்குடி மக்கள் வேற்றினத்தவரால் அங்கிருந்து வறண்ட நிலத்துக்கு துரத்தப்படுகிறார்கள்.. வந்தேறிகள் கூடாரம் அமைத்து முல்லை நிலத்தில் வசிக்க, பாலையிலும் வீடமைத்து முல்லைக்குடியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் ஆயக்குடி மக்கள். எப்போதாவது பெய்யும் மழை மட்டுமே அவர்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. வரப்போகும் பாலையை நினைத்து அந்த மனிதர்கள் அஞ்சுகிறார்கள். அதற்கு முன்பு பாலையை பார்த்துள்ள முதுவன் பாலை குறித்து வர்ணிக்கும்போது, ‘’ஆறு, குளம் எல்லாம் வறண்டு போகும்.. சாப்பிட ஒன்றுமே இருக்காது. என் மனைவியின் முலை கூட வற்றிப்போனது. வறண்ட முலையை சப்பிச்சப்பி என் மகன் இறந்து போனான்.” என பாலையின் வெம்மையை விவரிக்கும்போது சிலிர்க்கிறது.

இந்த பாலையில் இருந்து தப்பிக்க, ஆயக்குடியை மீட்பது மட்டுமே சரியென்பது முதுவன் மற்றும் இளைஞர்களின் வாதமாக இருக்க, அதன் சாத்தியங்கள் குறித்து யோசித்து அமைதி காக்கிறார் தலைவர் விருத்திரன். முல்லைக்கொடி வழியாக சென்ற வணிகர் ஒருவரை இளைஞர்கள் கொலை செய்துவிட, அந்த உடலை நேர்மையாக எடுத்துச்சென்று ஆயக்குடி வந்தேறி மக்களிடம் ஒப்படைக்கிறார் விசித்திரன். ஆனால் நேர்மை ஒருபோதும் பயன் தராது என கிளம்பும்போதே எச்சரிக்கிறார் முதுவன். அவர் எச்சரித்தபடியே, அவர்கள் சூழ்ச்சி செய்து முல்லைக்கொடி இளைஞன் ஒருவனை கொலை செய்து விட்டு, காயாம்பூவின் கணவன் வலனை அடிமையாக வைத்திருக்கிறார்கள். வலனையும், தங்கள் ஆயக்குடியையும் மீட்க அந்த முல்லைக்குடி மக்கள் போரைத் தொடங்குகிறார்கள்.

வரலாறு என்றாலே மன்னர்களின் வாழ்க்கை மட்டுமே இதுவரை படமாக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து விலகி, முதல்முறையாக எளியவர்களின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறார்கள். முதுவன் ‘மழைக்குறி” பார்க்கச் செல்வது, அவர் குறிப்பிட்டபடியே 48 மணிநேரத்தில் மழை வருவது, காலடி ஓசையை வைத்தே வரும் வாகனங்கள், வாகனம் வரும் நோக்கம், அதில் பயணம் செய்பவர்கள் என அத்தனையையும் சரியாக யூகிப்பது என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்க்கை வியக்க வைக்கிறது.

33 சதவீத இடஒதுக்கீட்டுக்கே இன்னமும் போராடிக் கொண்டிருக்க, முல்லைக்குடியின் எல்லா ஆலோசனைக் கூட்டங்களிலும் பெண்கள் பிரதானமாய் இருக்கிறார்கள். காதலும், கல்யாணமும், காமமும் இயல்பாய் இருக்கிறது. ’’ஆமா இது உடன்போக்கு தான்”” என காயாம்பூ இயம்பாக சொல்வதும், வரப்போகும் பாலை குறித்து அஞ்சும் வலனோடு அவள் விரும்பி உறவு கொள்வதும் என பெண்ணை பிரதானப்படுத்தும் சமூகமாய் நம் சமூகம் இருந்திருக்கிறது என்பதை பாலை உணர வைக்கிறது.

இருபுறமும் யானைப்படையும், குதிரைப்படையும் தயாராய் நின்றிருக்க, ஒருவர் மீது ஒருவர் அம்பையும், ஈட்டியையும் வீசும் போர்க்காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். காடுகளுக்குள் பதுங்கிக் கொண்டு நெருப்பு, கவண்கல் என எல்லாவற்றையும் ஆயுதமாக்கி எளிய மனிதர்களின் இயல்பான போர்க்காட்சிகள் இப்போதுதான் படமாக்கப்பட்டுள்ளது. தன் வாழ்விடத்தை காப்பாற்றுவதற்காக பெண்களும், குழந்தைகளும் பயிற்சி எடுத்து போர் புரிகிறார்கள்.. இருக்கவே இடமின்றி விரட்டப்பட்டு, எந்நேரமும் ஆபத்து சூழ்ந்திருக்கும் ஒரு சூழ்நிலையில் குழந்தைகள் மட்டும் நிம்மதியாக இருந்துவிட முடியுமா என்ன? குழ்ந்தைப் போராளிகள் பற்றி ஓயாமல் பேசுகிறவர்கள் இந்தப் படத்தை அவசியம் பார்க்கலாம்..

’’ஆயுதங்கள் எதற்காக?”

தற்காத்துக் கொள்வதற்காக!

’’இல்லை தாக்குவதற்காக”

’’போரில் வெற்றி பெற என்ன தேவை?”

’’வீரம்”

’’இல்லை சூது!” - இது போர் குறித்து முதுவனுக்கும் விருத்திரனுக்கும் நடைபெறும் உரையாடல்..

’’சிங்கம் கூட்டமாகத் தான் செல்லும்.. புலி தனியாகச் செல்லும்.. சிங்கம் வேறு நாட்டில் இருந்து வந்தது, புலி தான் நம் நாட்டு விலங்கு. புலிதான் பசிதாங்கும்..” , ‘’போரில் தலைவன் எங்கே, எங்கே என்று தேடாதே.. எந்நேரமும் விழிப்போடு இரு.. எதிரிகளைத் திருப்பித் தாக்கு” - என விருத்திரன் தன் வீரர்களுடன் நடத்தும் உரையாடல் என வசனங்களாலும் பாலை நம்மை ஈர்க்கிறது.

இறந்து கிடக்கும் பெண்ணின் உடலையும் விட்டு வைக்காத போர் வீரர்கள்.. என பல காட்சிகளும், வசனங்களும் உறுத்தாமல், திணிக்கப்படாமல் ஈழத்தை நினைவுபடுத்துகின்றன.

காதல், கல்யாணம், பெண் வாழ்வு எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என நாம் கனவு காண்கிறோமோ, அவை எல்லாமே, நம்மிடம் ஒரு காலத்தில் இயல்பாக இருந்தவை தான் என்பதை ’பாலை’ நினைவுபடுத்திச் செல்கிறது. மிகக்குறைந்த செலவில், இயல்பான ஒளியில், ஒப்பனைகளே இல்லாமல் ஒரு நலல் படத்தை தரமுடியும் என்பதை பாலை படக்குழு நிரூபித்திருக்கிறது..

அடிமையாக இருந்த வலனையும், ஆயக்குடியை மீட்டெடுத்த பின், போரில் தோற்றவர்களிடம் முதுவன் சொல்கிறார்...‘’முல்லைக்குடிக்கு அடிமைகள் தேவையில்லை... முல்லைக்குடி இனி யாருக்கும் அடிமையில்லை.. .

சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல படம்.. வாய்ப்பிருந்தால் தவறாமல் பாருங்கள்..

பாலை இயக்கம் : செந்தமிழன், ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம், இசை : வேதஷங்கர்

நன்றி - ப்ரியாதம்பி முகநூல் 

1 comments:

ganesan said...

பிடித்திருக்கிறது

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்