/* up Facebook

Dec 17, 2011

பாலியல் வன்கொடுமை (678 - Egypt Film)


ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

  • நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா?
  • நான் எந்த உடையினை அணிய வேண்டும்?
  • அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா?
  • அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா?
  • எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்?
  • நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா?


இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
(நன்றி - விக்கிபீடியா)

கதைச்சுருக்கம்:
எகிப்து நாட்டுப்பெண்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்கிற பாலியல் தொல்லைகளையும், அவர்கள் ஏன் அதனை வெளியே சொல்ல முற்படுவதில்லை என்பதனையும், முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கினையும் செபா, பாய்சா மற்றும் நில்லி ஆகிய மூன்று பெண்களின் வாழ்க்கை வழியாக விவரிக்கிறது இப்படம்.

திரைக்கதை:

செபா ஆபரண வடிவமைப்பாளராக இருக்கிறாள். அவள் தன்னுடைய கணவனுடன் கால்பந்தாட்ட போட்டியொன்றினை காணச்செல்கிறாள். அங்கே விளையாட்டு முடிகிற தருவாயில், அவள் பெரும் கூட்டத்தின் நடுவே தனியாக மாட்டிக்கொள்கிறாள். தனியாக இருப்பதைப் பயன்படுத்தி அவளைச் சுற்றிவளைத்துக்கொண்டு ஒரு கூட்டமே பாலியல் தொல்லை கொடுக்கிறது. அதில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறாள். அந்நிகழ்வுக்குப்பிறகு அவளுடைய கணவன் வீட்டுக்கு வருவதே இல்லை. ஒரு நாள் அவனுடைய அலுவலகத்திற்கே சென்று பார்க்கிறாள்.
செபா : "நீ வீட்டுக்கு வாயேன்"

கணவன் : "உன்னை பாக்கும்போதெல்லாம் அவங்க உன்னை என்னவெல்லாம் செஞ்சாங்களோ அதான் என்னோட ஞாபகத்துக்கு வருது. எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்"

செபா : "அவகாசமா?"

கணவன் : "என்னோட மனசு படுற வேதனைய உன்னால கற்பனை செஞ்சிகூட பாக்கமுடியாது"

செபா : "நீ என்னோட நிலைமையை ஒரு நிமிடம் கூட நெனச்சி பாக்க மாட்றியேங்குறதுதான் எனக்கு புரியமாட்டேங்குது"

கணவன் : "நான் அதையெல்லாம் புரிஞ்சிக்க விரும்பல... நீ போ...."
ஒருபுறம் அவளுக்கு நேர்ந்த கொடுமை, மறுபுறம் இதில் எந்தத் தவறும் செய்யாத அவளை தன்னுடைய கணவனே வெறுக்கிறான் என்கிற துயரம். ஆகிய இரண்டும் அவளை நிலைகுலையச்செய்கிறது.

கணவனை விட்டு பிரிந்து, பெண்களுக்கான தற்காப்பு யுத்திகளை பயிற்றுவிக்கும் நிறுவனத்தை துவங்குகிறாள் செபா.

பாய்சா ஒரு அரசு ஊழியை. அவள் தினந்தோறும் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்று வரும் பேருந்தின் எண் 678. அதுதான் இப்படத்தின் தலைப்பு. அப்பேருந்து எப்போதும் கூட்டமாகவே இருக்குமென்பதால், தினமும் அருவெறுப்பான உரசலுக்காளாகிறாள். ஒரு நாள் டாக்சியில் சென்றும் பார்க்கிறாள். டாக்சி ஓட்டுபவனும் சாடை மாடையாக பாட்டுப்போட்டு, அவளை முழுங்கிவிடுவதுபோன்றே பார்க்கிறான். பயணமென்பது அவளுக்கு பயமுறுத்தலாகவே இருக்கிறது. இதனிடையே செபா துவங்கியிருக்கும் தற்காப்பு வகுப்பு பற்றி கேள்விப்பட்டு அங்கே செல்கிறாள்.
அங்கு வந்திருப்பவர்களிடம் பேசுகிறாள் செபா....

"உங்களை பாதுகாத்துக்கொள்ள நீங்கள் எவ்வித ஆயுதங்களையும் எடுக்கத்தேவையில்லை. ஆயுதங்களை கையில் வைத்திருக்கும் பெண்களால்கூட பலநேரங்களில் அவர்களை தற்காத்துக்கொள்ளமுடிவதில்லை. ஆத்திரத்துடன் அவனுடயை கண்ணைப்பாருங்கள். அவன் நிச்சயமா உங்களைப்பார்த்து பயப்படுவான். ஏனென்றால் அவன் பலவீனமான பெண்களை மட்டும் தேடித்தான் வேலையைக்காட்டுவான். தான் என்ன செய்தாலும் எந்தப்பெண் பயந்து எதுவும் சொல்லாமலிருக்கிறாளோ, அவளைத்தான் தேடித்தொல்லை கொடுப்பான்." என்கிறாள் செபா.

பங்கெடுத்த அனைவரிடமும் வகுப்பினிறுதியில் ஒரு வெள்ளைத்தாளை கொடுத்து, மூன்று கேள்விகளுக்கு பதிலெழுதச்சொல்கிறாள் செபா.
"1.இதுவரை நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறீர்களா?"

"2.எத்தனை முறை?"

"3.அப்போது நீங்கள் என்ன எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள்?"
அவ்வெள்ளைத்தாளில் எல்லோரும் மிக ஒற்றுமையாக "இல்லை" என்கிற ஒற்றை பதிலையே எழுதிக்கொடுத்துவிட்டு கிளம்புகிறார்கள்.
செபாவால் இதனைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லக்கூட யாரும் முன்வருவதில்லையே என்று வருந்தி அங்கு வந்திருக்கிற பாய்சாவிடம் கேட்கிறாள்,
"நீ இதோட அஞ்சாவது முறை இங்க வர்றியே, எதுக்கு இங்க வந்த? என்னை பார்க்கவா? புரிஞ்சிக்க பாய்சா.. டாக்டர் கிட்ட போயிட்டு, உனக்கு வயிறு வலிக்கிதுன்னு சொல்ல கூச்சப்பட்டீனா அவரால எப்படி உனக்கு உதவ முடியும்? வருத்தப்படவேண்டியதும் வெக்கப்படவேண்டியதும் நீ இல்ல; உன்கிட்ட அசிங்கமா நடந்துகிட்டானே, அந்த மிருகந்தான்.."
அப்போதும் பாய்சா "இல்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறாள்.

ஒருநாள் பாய்சா சாலையில் நடந்து கொண்டிருக்கையில் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். கூடுமான வரையில் கோபத்தை கட்டுப்படுத்திப்பார்க்கிறாள். அவன் எல்லை தாண்ட முயற்சிக்கிறபோது, அவள் தன்னுடைய கைப்பையிலிருந்து கூர்மையான பொருளொன்றை எடுத்து அவனது 'குறி'நோக்கி தாக்கிவிடுகிறாள். பயத்தில் என்ன செய்வதென்றே புரியாமல், நேராக செபா வீட்டிற்கு செல்கிறாள். அவளுடைய உதவியுடன் ஆடையை மாற்றிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள்.

மற்றொருநாள் வழக்கம்போல அவளது 678 எண் பேருந்தில் பயணம் செய்கிறபோது, ஒருவன் அவளை உரசத் துவங்குகிறான். மீண்டும் கூர்மையான அதே பொருளினால் அவனது குறியின்மீதும் தாக்கிவிட்டு யாரும் கண்டுபிடிப்பதற்குமுன்னர் அப்பேருந்திலிருந்து இறங்கி தப்பிக்கிறாள்.

மூன்றாவது முறையும் அதே போன்று அவளிடம் தவறாக நடக்க முயன்ற வேறொருவனையும் தாக்கிவிட்டு யாருமறியாவண்ணம் ஓடிவிடுகிறாள். பேருந்தில் எப்போதும் கூட்டம் மிக அதிகமாகவே இருப்பதால், அவளை யாரும் கண்டுபிடித்துவிடவில்லை.

எகிப்து முழுவதும் இச்செய்தி பரவுகிறது. குற்றவாளியினைக் கண்டுபிடிக்க சிறப்பு காவல் அதிகாரியொருவரை அரசு நியமிக்கிறது. அவரும் காயம்பட்டவர்களை தனித்தனியே விசாரித்து, குற்றப்பின்னனியினைக் கண்டுபிடிக்கிறார். பெண்களுக்கு தற்காப்பு வித்தைகள் சொல்லித்தரும் செபாவை கண்காணித்து, அதன்மூலம் பாய்சாதான் குற்றவாளியெனக் கண்டறிகிறார். அந்நேரத்தில்தான் அவருக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வர, 'இனி இதுபோன்று செய்யாதீர்கள்' என்று சொல்லி எவ்வித வழக்கும் போடாமல் அவர்களை அனுப்பிவிடுகிறார் காவலதிகாரி.

நில்லி ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு கடனட்டை வாங்கவைக்கிற வேலையினை செய்கிறாள். ஒரு நாள், வாடிக்கையாளர் ஒருவருக்கு அழைக்கிறபோது,
நில்லி : "சார் நான் சர்க்கிள் டிஸ்கவுன்ட் சொல்யூசன்ல இருந்து நில்லி பேசுறேன். ஒரு அஞ்சு நிமிடம் ஒதுக்குனீங்கன்னா, எங்க நிறுவனத்தின் கடன் அட்டையோட சலுகைகளை நான் விளக்கமுடியும்"

வாடிக்கையாளர் : "நில்லியா? நீங்க சாராவோட தோழியா?"

நில்லி : "இல்ல சார். அது யாருன்னு எனக்கு தெரியாது சார். நான் சொல்லவந்தது என்னன்னா....."

வாடிக்கையாளர் : "ஆனா உங்க குரல் எங்கயோ கேட்டமாதிரி இருக்குதே! நீங்க எந்த ஏரியாவுல இருந்து கால் பண்றீங்க?"

நில்லி : "என்ன நம்புங்க சார்... எனக்கு தெரியாதுசார் உங்கள... நான் சொல்லவந்தது...."

வாடிக்கையாளர் : "இல்ல.. நீங்க சொல்லுங்க எந்த ஏரியாவுல இருக்கீங்கன்னு"

நில்லி : "நாசிர் ஏரியா சார்"

வாடிக்கையாளர் : "ஓகே. நானும் பக்கத்துலதான் இருக்கேன். என்கிட்ட கார் இருக்கு... நான் அங்க வந்து உங்கள பாக்குறேன்..."
பயத்தில் நடுநடுங்கி, அழைப்பைத்துண்டிக்கிறாள் நில்லி. உடனே உயரதிகாரி நில்லி அருகே வந்து,
"வாடிக்கையாளரிடம் அன்பாக பேச கத்துக்கோ. உன்னை என்ன அவன் கூடவா போக சொன்னேன். அன்பா பேசி, அழகா அவனையே அழைப்பை துண்டிக்க வைக்கணும். அதுதான் திறமை..."
என்று கடுமையாக திட்டித்தீர்க்கிறார் நில்லியை. எதுவும் பேசமுடியாமல், அமைதியாகிறாள் நில்லி.

கோபமும் சோகமும் கலந்ததொரு மனநிலையோடு, வீட்டிற்கு செல்லப்புறப்படுகிறாள். வீட்டை நெருங்கி சாலையைக்கடக்கிற வேளையில், மிதமான வேகத்தில் வண்டியொன்று அவளருகே செல்கிறது. அதனை ஓட்டிவந்தவன், நில்லியின் மார்பினைத்தொடநினைத்து அவளது சட்டையைப் பிடித்துக்கொள்கிறான். அவளது சட்டையை விடாமல் அவன் வண்டியை தொடர்ந்து ஓட்டுகிறான். அவளும் வண்டியுடனே ஓடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். சிறிதுதூரம் சென்றதும் நிலைதடுமாறி கீழேவிழுகிறாள் நில்லி. அலுவலகத்தில் அனுதினமும் அவளுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவமும், அதனைத்தொடர்ந்து சாலையில் நிகழ்ந்த கொடுமையும், அவளுக்கு ஒரு வேகத்தை கொடுக்கிறது. அடுத்த வினாடியே சாலையிலிருந்து எழுந்து, அவ்வண்டியைப் பின்தொடர்ந்து ஓடுகிறாள். சற்று தொலைவில் சிக்னலில் மாட்டிக்கொள்கிறது வண்டி. அவளை துன்புறுத்தியவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தும் அவளது வருங்கால கணவனும் செய்தியறிந்து காவல்நிலையத்திற்கு வருகிறான்.

அங்கே காவல் அதிகாரி, இதனை பாலியல் வன்கொடுமைச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார். கடுமையாக வாதிட்டுப் பார்க்கிறார்கள் நில்லியும் அவளது வருங்காலக்கணவனும். அதற்கு மேலதிகாரியின் ஒப்புதல் வேண்டுமென்றும், வேறொரு காவல் நிலையத்திற்கு செல்லவேண்டுமென்றும் அலைக்கழிக்கிறார் அக்காவல் அதிகாரி. அவளும் விடாமல், உயர் காவல் நிலையத்திற்கு சென்று ஒருவழியாக பாலியல் வன்கொடுமை வழக்காக பதிவு செய்கிறாள். இதுதான் எகிப்து நாட்டிலேயே முதன்முதலாக பதிவுசெய்யப்பட்ட முதல் பாலியல் வன்கொடுமை வழக்கு என்பது அவளுக்கு அப்போது தெரியாது.

அதன் காரணமாக நேயர்கள் தொடர்பு கொண்டு நேரடியாக கேள்வி கேட்கிற ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்க நில்லிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. போத்தைனா என்கிற பெயரில் ஒரு பெண் நேயர் அழைக்கிறார்.
போத்தைனா : "நில்லி! உங்கள மாதிரி ஆகறதுக்கு நாங்கெல்லாம் ஆசைப்படதான் முடியாது. ஆனா ஆகமுடியாது"

நில்லி : "நான் ஒன்னும் வித்யாசமா பெருசா எதையும் செஞ்சிரல... அந்த நேரத்துல என்ன செய்யணுமோ அதைத்தான் செஞ்சேன்"

போத்தைனா : "அது உண்மையிலேயே கடினமான ஒன்றுதான் நில்லி. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? என்னோட பேரு போத்தைனா கூட இல்ல..."

என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுகிறாள் போத்தைனா என்கிற பெயரில் அழைத்த பாய்சா.

அடுத்ததாக, அகமத் என்பவர் அழைக்கிறார்.

அகமத் : "பாலியல் தொல்லைகள் எல்லா இடத்திலேயுமா நடக்குது? எல்லோருக்குமா நடக்குது? எனக்கும் தங்கச்சிங்க இருக்காங்க, எங்க வீட்லயும் பெண்கள் இருக்காங்க... ஆனா யாருக்கும் இதுமாதிரி நடக்குறதில்ல... நீ ஏதாவது மோசமான ஆடைகள் போட்டுட்டு இருந்திருப்ப... அதான் அப்படி ஆயிருக்கு..."

நில்லி உடனே எழுந்து நின்று சொல்கிறாள், "நான் இப்ப போட்டிருக்கேனே, அதே உடைகள்தான் அன்னைக்கும் போட்டிருந்தேன். இது என்ன மோசமாவா இருக்கு?"

அகமத் : "இல்ல"

நில்லி : "உங்க வீட்ல உங்க தங்கச்சிங்களுக்கு எதுவும் நடக்குரதில்லன்னு சொல்றீங்களே... அப்படியில்ல அது... அவங்களுக்கும் இதுமாதிரி நடக்கத்தான் செய்யுது... ஆனா அவங்க வெளிய சொல்றதில்ல, நான் சொல்லிருக்கேன்... அவ்வளவுதான் வித்யாசம்... உடனே எங்கிட்ட கேட்ட கேள்வியையே உங்க தங்கச்சிங்ககிட்டயும் கேட்டுராதீங்க...."

நில்லியின் குடும்பத்தாரும், அவளது வருங்காலக் கணவனின் குடும்பத்தாரும் வழக்கை திரும்பப்பெறுமாறு அவளை வற்புறுத்துகிறார்கள். அவளது வருங்காலக்கணவனும் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லி அதையே வழிமொழிகிறான். நில்லி அதனை மறுத்துவிடுகிறாள். அவன் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் நில்லிக்கும் வாய்ப்பு பெற்றுத்தருகிறான் அவன். அதிலே, நில்லி சற்று நகைச்சுவை கலந்து தனக்கு நேர்ந்த கொடுமையினையே தொகுத்துப் பேசுகிறாள். அவள், தற்போது தனது காதலன்கூட துணைக்கு இல்லை என்றும் சொல்லிமுடிக்கிறாள் அந்நிகழ்ச்சியினை.

ஒரு நாள் வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. 'வழக்கை திரும்பப்பெற்றுக்கொள்கிறாயா' என்று நீதிபதிகள் நில்லியைப்பார்த்து கேட்கிறார்கள். அவள் தன்னுடைய குடும்பத்தைப்பார்க்கிறாள். எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். நீதிமன்றமே அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறது. சட்டென அவளது காதலன் எழுந்து நின்று, "அவள் வழக்கை திரும்பப் பெறமாட்டாள்" என்கிறான்.

அவளும் மகிழ்ச்சிபொங்க, "ஆமாம். நான் வழக்கை திரும்பப்பெறமாட்டேன்"
என்கிறாள். நீதிமன்றத்தில் குவிந்திருக்கும் ஒட்டுமொத்த மக்களும் கைதட்டி வரவேற்கிறார்கள் அவளது முடிவை.

நில்லியின் வழக்கில் அவளை பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவனுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கிறது. அதன்பிறகு ஓராண்டு கழித்து, எகிப்தில் பாலியில் வன்கொடுமைக்கென தனியாக சட்டங்கள் இயற்றப்படுகிறது. ஆனாலும் இன்றளவும் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன என்கிற வாசகத்தோடு படம் நிறைவுபெறுகிறது.


நன்றி - மாற்று 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்