/* up Facebook

Nov 20, 2011

கிருஷ்ணவேணி தாக்கப்பட்டதற்கு காவல் துறையே காரணம்


நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி, சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து – தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் 6.9.2011 அன்று, சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தியது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தலித் மக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

பேரணியின்போது அய்ந்து முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: கிருஷ்ணவேணியின் மீது படுகொலைத் தாக்குதலை நடத்திய, தூண்டிவிட்ட சாதி வெறியர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும்; தலித்துகளுக்குரிய பஞ்சாயத்துகளில் துணைத் தலைவர் பதவியையும் தலித்துகளுக்கே ஒதுக்க வேண்டும்; போபால் பிரகடனத்தில் பரிந்துரைத்தபடி தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்; வன்கொடுமைத் தாக்குதலில் ஈடுபட்ட சாதியினருக்கு அந்தந்த பகுதியளவில் கூட்டு அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு அந்தந்த பகுதியளவில் இட ஒதுக்கீடு பலன்கள் மறுக்கப்பட வேண்டும்; தாக்குதலுக்கு உள்ளான கிருஷ்ணவேணிக்கு முறையான சிகிச்சையையும், உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

பேரணியின் முடிவில், இச்சங்கத்தின் தலைவர் மதிவண்ணன் உரை நிகழ்த்தினார்: “2006 ஆம் ஆண்டு தாழையூத்து பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணவேணி, 17 இடங்களில் வெட்டுப்பட்டு கிடக்கிறார். இதற்கு முன்னால் நக்கலமுத்தன் பட்டியில் ஜக்கன் என்ற அருந்ததியர் பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாயுடு சாதியை சேர்ந்தவர். ஆதிக்க சாதியை சேர்ந்த இவர், ஜக்கனை உடனடியாக ராஜினாமா செய்து விடு என மிரட்டினார். மிரட்டலுக்கு அஞ்சாமல் தம் பணியை ஜக்கன் செய்து வந்ததால், ஒரு நாள் வெறி நாயை சாலையில் அடித்துக் கொல்வது போல் அவரை அடித்தே கொன்றனர்.

“கிருஷ்ணவேணியின் விஷயத்தில் துணைத் தலைவராக இருந்தவர் ஒரு முஸ்லிம். இவர்தான் சாதி இந்துக்களோடு சேர்ந்து கிருஷ்ணவேணியின் மீது வன்தாக்குதலை நடத்தியுள்ளார். இந்திய அளவிலும் தமிழ்நாட்டு அளவிலும் முஸ்லிம்கள் ஒடுக்கப்படும்போதும், அவர்களை அரசு வேட்டையாடும் போதும், பெண்களை வன்முறைகளுக்கு ஆட்படுத்தும் போதும் நம் ஆதரவு என்றும் முஸ்லிம்களுக்குதான். என்றாலும், இங்கு ஒரு அருந்ததிய பஞ்சாயத்து தலைவியை வன்கொடுமை செய்தது ஒரு முஸ்லிம் என்ற உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்.

“மீரான் மைதீன் என்ற அவர் கிருஷ்ணவேணி மீது ஒரு முறையல்ல, இரண்டு முறை யல்ல, தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்துள்ளார். அலுவலகத்திலேயே "உன்னை கற்பழிப்பேன்' என்றும், அனைவரின் முன்னிலையிலும் ஆண் குறியை காட்டியும் கிருஷ்ணவேணியை ஒரு பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்துவதும் அசிங்கப்படுத்துவதுமாகவே மீரானின் அட்டகாசம் தொடர்ந்தது. இதற்காக எத்தனை முறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் போலிசார் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை. சென்ற ஆண்டு சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டத்தில் கிருஷ்ணவேணியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். காவல் துறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அப்போதே காவல் துறை உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால், கிருஷ்ணவேணியின் மீது இப்படி ஒரு கொலை வெறி தாக்குதல் நடந்திருக்காது.

“இப்போது கூட அருந்ததியருக்காக ஒதுக்கீடு தேவையில்லை என புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, குடியரசுக் கட்சி செ.கு.தமிழரசன் ஆகியோர் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த மோசமான சூழ்நிலையை எதிர்க்க அருந்ததிய உறுப்பினர்கள் அங்கு இல்லை. த.மு.மு.க.வின் ஜவாகிருல்லா மற்றும் சி.பி.எம்.இன் டில்லிபாபு ஆகியோர்தான் அவர்களின் பேச்சுக்கு எதிர் குரல் கொடுத்துள்ளனர். இவை எல்லாம் இரவல் குரல்கள்தான். அங்கே நாம் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய குரல் ஓங்கி ஒலிக்கும் .''

1 comments:

சூனிய விகடன் said...

தீண்டாமை வன்கொடுமைக்கு தூக்குதண்டனையே தந்து விடலாம்....நீங்க சொன்னா நடக்காமயா போயிடும்...

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்