/* up Facebook

Nov 17, 2011

புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகின்றன?-குட்டி ரேவதிபுத்தகங்கள் நம்முடன் வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால், அவை நம் இளம்பருவத்திலேயே நம்மைத் தொற்றிக் கொள்கின்றன என்று தான் நினைக்கிறேன். சாருண்ணிகளைப் போல நம்முடனேயே வாழ்வதில் அவை கொள்ளும் அதே களிப்பைத் தான் நானும் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். புத்தகங்கள், அறிவுஜீவித்தனம் மிக்க உயிரிகள். இன்னும் சொல்லப்போனால், மனித அறிவுஜீவிகளைப்போல் அல்லாமல் தான் எத்தகையதொரு வாக்குமூலங்களை சொல்கின்றனவோ அதிலிருந்து நழுவாமல், சமரசம் கொள்ளாமல் எப்பொழுதும் தம் நிலைப்பாட்டில் ஒற்றைக் காலில் நிற்கக்கூடியன.

என்னுடைய வாழ்க்கையிலும், எல்லோருக்கும் போலவே, அழுக்கடைந்த தெருநாய்க் குட்டிகளைப் போலவோ, அல்லது எவரோ நழுவ விட்ட காதல் கடிதத்தைப் போலவோ என்னை வந்து சேர்ந்திருக்கின்றன சில புத்தகங்கள். ஆனால், அவை வந்து சேரும் போதே ஓர் உறவின் அடித்தளத்தை என்னுள் அமைக்கும் அத்தனை ஏற்பாடுகளுடனும் தான் வந்து சேர்ந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர் உங்களிடம் ஒரு புத்தகத்தைப் பற்றி விசாரிக்கலாம்! நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் உங்களுக்கு ஒரு நூலைப் பரிசளிக்கலாம்! அல்லது, நீங்கள் நீண்ட நாளாக படிக்க விரும்பி, வாங்கும் வழியின்றி தவித்த நூல் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க நீங்கள் திருடியெடுத்து, உங்கள் பைக்குள் திணிக்க, அந்தக் குட்டிநாய்க் கத்தி குரல் காட்டிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் அள்ளிவரலாம்! முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படித்தப் பின்னும், அதை உங்கள் கைப்பையிலிருந்து இறக்கமுடியாமல், பிரிய முடியாமல் ஒரு காமத்தை உங்கள் சுவாசத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கலாம்! எந்த ஒரு நூலுமே வாழ்க்கைக்குள் நுழையும் போது, ஓர் உறவின் சீரிய தொடக்கத்தை நிகழ்த்தவே வருகின்றன என்பதை உணர, இன்றைய என் வயதொத்த ஆயுள் பிடித்திருக்கிறது!

நட்பில் பெருத்த நம்பிக்கை இன்று வரை ஏற்படவில்லை. காரணம், எதனுடனான தன் ஒப்பந்தத்தையும் எளிய சமரசங்களால் நண்பர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடிக் கலைத்துவிடுவது தான்! தன் சமரசமின்மையால், நம் நெஞ்சுக்குள், தம் உறவின் வழியாக நெருப்பில் தகிக்கும் ஓர் இரும்புக்கம்பியை, ஆழமாகப் பாய்ச்சும் தகுதி உள்ளவர்கள் தாம் நண்பர்கள் என்பது என் இலக்கணம்! ஆனால், புத்தகங்கள் கூட்டி வரும் மனிதர்கள், நம் மன இடுக்குகளில் ஓர் ஆலமரத்தின் விதையை எச்சமாய் இட்டுச்செல்கிறார்கள். பின் நீங்கள், அவர்கள் கொண்டு வந்த சாபமூறிய அந்தப் புத்தகங்கள் விரும்பிய ஆலமரத்தை உங்களுக்குள் சுமந்தபடி வளர்ப்பதற்குத் தயாராகிவிடுகிறீர்கள்!

நானும் என் நண்பரும், சென்னை வந்து இது வரை பத்து வீடுகளுக்கு மேல் எங்கள் புத்தகங்களைச் சுமந்து இடம்மாறியிருக்கிறோம்! ஒவ்வொரு முறை, வீடு மாறும்போது, அந்தப் புத்தகங்கள் மலைப்பையும் திகைப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன! எங்களின் ’எட்டுத் திக்கிலும் மதர்த்து எழுந்து நின்று’ (தேவதேவனின் வரி), அவை அமானுஷ்யமாய் எழுந்து நிற்கும் அந்தத் தருணங்களில், வீடுமுழுக்க அவை இறைந்து கிடக்கையில் மனம் கொள்ளும் பேதலிப்பு எந்த இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை!

என் நண்பருக்கு, ஓர் அசாதாராண திறன் இருக்கிறது. எல்லா நூல்களையும் வகைப்படுத்தி அடுக்கி வைப்பதுடன், அவர் வெளியூர் சென்றிருக்கும் நாட்களிலோ அல்லது, வீட்டிற்கு வெளியே இருக்கும்போதோ ஒரு நூல் அவசரமாகத் தேவைப்பட்டால், எந்த அடுக்கில், எந்த வரிசையில் எந்த நிற அட்டையுடன், என்ன தன்மையான அட்டையுடன் அது இருக்கிறது என்பது வரை அவரால் சொல்லிவிடமுடியும்! நாங்கள் விரும்பிப் படித்த நூல்கள் மட்டுமே எங்கள் அறைகளில் நிறைந்திருக்கும்! அல்லாத நூல்களை, உடனே குப்பைத் தொட்டிகளில் போட அவரோ நானோ தயங்கியதே இல்லை! இது கூட, அவரின் நினைவுத்திறனுக்கு ஒரு காரணம்! அம்மாதிரியாக அடுக்கப்பட்ட நூல்களில், நீங்கள் தேடும் நூலை விரும்பும் போது உருவி எடுத்துப் படித்து, மகிழும் சுகம் போல் வேறேதும் இல்லை! இல்லையென்றால், இந்த சென்னை வாழ்க்கையில் என்னால் நிச்சயமாக இவ்வளவு கூட எழுதியிருக்க முடியாது என்பதே என் அபிப்ராயம்.

நல்ல புத்தகங்கள் என் வாழ்க்கையில் காதலைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. புதிய உறவுக் கண்ணிகளை ஏற்படுத்துவதில் மூர்க்கமாய் பிடிவாதமாய் இருந்திருக்கின்றன. நூல்கள் பற்றிய கவிதைகள் என் தொகுப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயும் இருக்கின்றன! அவை, மழை நாள்களில் என் நூல்கள் கொள்ளும் குளிரையும் விறைப்பையும் குறித்த கவலையாகவே பெரும்பாலும் இருக்கும்! சென்னை போன்றதொரு நகரத்தில், நூலைப் பாதுகாக்கும் கவலை நம் எல்லாவிதமான இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. புத்தகங்களின் மீதான கையாட்சியை, உடைமை அதிகாரத்தைப் பேணுவதே ஒரு மனநோய் தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!

ஒவ்வொரு நூலும் அடர்த்தியான சிந்தனையின் எழுச்சியை மூச்சாய்க் கொண்டு அவ்விடம் உறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நூலும், அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது இயக்கம் சார்ந்த சிந்தனைகளில் தீவிரமாய் உழலும்போது, அந்தக் குறிப்பிட்ட சிந்தனையை வலுவூட்டி மேற்கொண்டு நான் கயிறு பிடித்து ஏறும்படியான துணிவைத் தந்த நூல்கள் ஏராளம். இன்றும் அவற்றை, என் காதலனை நேசிப்பது போலவே நேசிக்கிறேன். இன்று தனிமனிதராய்க் கடந்து வந்த தூரத்தையும், ஏறிவந்த துயரமான மலைகளையும் திரும்பிப் பார்க்கையில் புத்தகங்கள் தாம் அவற்றைக் கடக்கக் கைப்பிடித்துக் கூட்டி வந்திருக்கின்றன என்பதை இப்போது உணரமுடிகிறது.

இந்தப் புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகின்றன என்ற ஆவலுடனும் புதிர்த்தன்மை நிறைந்த எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன். வேறு எந்தத் திசையில் சென்றிருந்தாலும், நான் விரும்பாத என்னை அது உருவாக்கியிருக்கலாம்! அப்படி நூல்களிலிருந்து விலகிச் சென்றோர் அடைந்த திசைகள் அவர்களைக் கொடுமையான தனிமைக்கும், வாழ்க்கையின் சிறைக்கும் பழிவாங்கலின் வன்மத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தேவையானதொரு நூல் கிடைத்திருப்பின் அவர்கள் இந்தக் கொடுஞ்சிறைகளிலிருந்தெல்லாம் வெளியே வந்திருக்கமுடியும் இல்லையா? ஒரு நண்பனை விட, உற்ற உறவாய் நூல்கள் ஆற்றுகின்ற பணியை வேறெவரும் செய்வதில்லை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்