/* up Facebook

Nov 14, 2011

பெண்களுக்கு எதிரான கொடுமைகள்


பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலொன்று அண்மையில் வெளியிடப்பட்டது. பெண்கள் உரிமைகளுக்கான சட்ட உதவி வழங்கும் "தோம்சன் ராய்ட்டர்ஸ் டிரஸ்ட் லோ வுமன்' என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும் கொங்கோ, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 2, 3 ஆம் இடங்களையும் இந்தியா 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படாத போதும் இதற்குள் எமது நாட்டையும் உள்ளடக்கக் கூடிய அத்தனை நிகழ்வுகளும் கொடுமைகளும் அண்மைய சில நாட்களாக அதிகரித்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

5 கண்டங்களைச் சேர்ந்த பெண்கள் உரிமைகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட 213 நிபுணர்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் பெண்கள் வாழத் தகுதியில்லாத, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு, பாலியல் தொந்தரவு, கலாசாரம் என்ற ரீதியில் கொடுமை, மத ரீதியான துன்புறுத்தல், பொருளாதாரத்தடை மற்றும் ஆட்கடத்தல்கள் என்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டே இந்த நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானிலும் கொங்கோவிலும் உள்நாட்டுப் போர் நடக்கின்றது. பாலியல் வல்லுறவு அதிலொரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் அசிட்வீச்சு, கௌரவக்கொலை, வரதட்சணைக் கொலை என்பதாலும் இந்தியாவில் பெண் சிசுக்கொலை, கட்டாயத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, விபசாரம், கொத்தடிமை என பெண்கள் பாதிக்கப்படுவதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் "மர்ம மனிதர்கள்', "கிறீஸ் பூதங்கள்' என்ற போர்வையில் பெண்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள், கொடுமைகள், அச்சுறுத்தல்களைப் பார்க்கும் போது இலங்கையும் மிக விரைவில் பெண்கள் வாழத் தகுதியற்ற, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து விடுமென்று எண்ணத் தோன்றுகிறது. குடும்ப வன்முறைகள், சீதனக் கொடுமைகள், அடிமைத்தனம், கலாசார கட்டுப்பாடுகளை விட தற்போது வடக்கு,கிழக்கில் வாழும் பெண்கள் மர்ம மனிதர்கள் என்னும் சிலரின் நச்சுத்தனமான நடவடிக்கைகளினாலேயே மிக மோசமாக உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டுப் போயுள்ளனர்.

முதலில் மலையகப் பிரதேசங்களில் பெண்களை இலக்கு வைத்து ஆரம்பமான இந்த மர்ம மனிதர்களின் நடவடிக்கைகள் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு தற்போது வடக்கு மாகாணத்தில் யாழ்.குடாநாட்டில் மையம் கொண்டு நிற்கின்றது. ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற மர்ம மனிதர்களின் நடவடிக்கைகளை விடவும் யாழ்.குடாநாட்டில் மிக மோசமாகவே இடம்பெறுவதைக் காணமுடிகின்றது. இதற்கு யாழ்.குடாநாட்டில் ஆண் துணையற்ற குடும்பங்களும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகளும் இருப்பது கூட ஒரு காரணமாகவுள்ளது. இந்த மர்ம மனிதர்களின் இலக்கு தனியாக வசிக்கும் பெண்களாகவே இருப்பதனால் இப்படிப்பட்ட குடும்பங்களையும் பெண்களையுமே தாக்குகின்றனர், மிரட்டுகின்றனர்.

யாழ்.குடாநாட்டைப் பொறுத்தவரையில் மாலை 6 மணிக்குப் பின்னர் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர். இரவில் மர்ம மனிதர்கள் வந்து விடுவார்கள் என்ற பீதியுடனேயே நித்திரையின்றி நாட்களை கழிப்பதனால் பல பெண்களும் சிறுவர்களும் பாரிய உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமன்றி பெண்கள் பகல் வேளைகளில் கூட வெளியே நடமாடுவதைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே அடைந்துகொள்கின்றனர். இதனால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் கூட பாதிக்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிந்துவிட்டது, வடக்கு,கிழக்கு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என அரசு கூறிக் கொண்டிருந்தாலும் மர்ம மனிதர்கள் என்ற போர்வையிலான உளவியல் யுத்தத்தினால் வடக்கு,கிழக்கில் பெண்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ முடியாததொரு சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தமக்குரிய உரிமைகள், பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலைக் கொண்ட நாட்டையே ஜனநாயக ஆட்சி நிலவும் நாடென்று குறிப்பிட முடியும்!

1 comments:

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்