/* up Facebook

Nov 8, 2011

இரா.தமிழரசியின் "மரக்கலம் திரும்பும் பறவை" - நூல் மதிப்புரை -முனைவர் ஏ.இராஜலட்சுமி


தமிழ்ச்சூழலில் கவிதை எழுதுதல்,கவிதை வாசிப்பு ஆகிய இரண்டுமே அதன் தளத்திலிருந்து சற்று விலகி நடப்பதைக் காணமுடிகிறது.கவிதை எழுதுதல் என்பது மிக இலகுவான செயல்பாடாக எண்ணிக் கவிதை செய்யப் பலர் முன்வந்துள்ளனர்.

அக்கவிதைகள் உயிர்ப்பற்று வெற்றுடலாக, சொற்களின் கோவையாக நின்று போவதையும் அதையும் விடாமல் தூக்கிப்பிடிக்க எத்தனிக்கும் கூட்டத்தையும் வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

இந்நிலையிலிருந்து விலகி தனக்கான பாடுபொருளோடும், மொழியாடலோடும் தன் இரண்டாவது கவிதைத் தொகுப்பான மரக்கலம் திரும்பும் பறவையினைக் கொண்டுவந்துள்ளார் கவிஞர் தமிழரசி.

அருவியாய் நம்மைக் குளிர்வித்தும்,நீர்ச்சுழியாய் உள்ளிழுத்தும்,அலையாய் கால் நனைத்தும்,தூறலாய் உற்சாகப்படுத்தியும் திளைக்கின்றன இக்கவிதைகள்.

நவீன உலகில் பெண் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்,குடும்ப உறவுகளின் ஊடான அன்பு,,அன்பின் போதாமை,ஆர்ப்பரிக்கும் மன உலைச்சல்கள்,பெண்,ஆண் நட்பு, சமூக அவலங்கள் என்று பெரும் மன அவசங்களை நேர்த்தியாகப் படைப்பாக்கியுள்ளார் இக்கவிஞர்.

பேசுகிறோம்
உனக்கான காயங்களை
உன் வாழ்க்கையின் யதார்த்தங்களை
என் கவிதையின் நியாயங்களை,…
இருப்பினும் இருக்கிறது
நாம் ஒளிந்துகொள்ள
பரந்துபட்ட இடம் நம் மொழியில்,..

மொழித்தடம் என்ற தலைப்பிலான இக்கவிதை மொழியினூடாகப் பதுங்கிக்கொள்ளும் மனித உறவுகளின் கோரத்தை நுட்பமாகப் பேசுகிறது.மனித உறவுகள் மொழியாடலின் ஊடாகவே உறவின் இருப்பைத் தக்கவைக்கவும்,முரண்படவும் செய்கின்றன. மொழி மனித உறவுகளை குலைத்துப் போடும் சாத்தியமும்,சாதுர்யமும் நிறைந்தது.அத்தகைய மொழியின் உள்ளீட்டினை இக்கவிதை முன்னிறுத்திச் செல்கிறது.

குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை அதன் வீரியம் குன்றாமல் கவிதையாக்கியுள்ளார் கவிஞர் தமிழரசி.

உனக்கான கடித தேக்கத்தில்
சந்தேகமுள்ளை விழுங்கியதில்லை
விழிக்கயல்கள்,..
உன் உரையாடலின் பொதும்

கூர்தீட்டிக் கொண்டதில்லை காதுகள், என்று தொடங்கும் இக்கவிதை இறுதியாக இப்படியாக முடிகிறது.

நீதிமன்றங்களில் நிலுவையில்
தேங்கிக் கிடக்கின்றன
விவாகரத்து வழக்குகள்
இழுத்துப் பிடியுங்கள் நம்பிக்கை நூலை
எத்தனை உயரப் பறந்தாலும்
கைகடவாமல் இறங்கி வரும் பட்டங்கள்
நாங்கள்.

கணவன்,மனைவி உறவுக்குள் நேரும் அதிகார செயல்பாடுகள் குறிப்பாக மனைவியைத் தெடர்ந்து கண்காணிக்கும் அவலம் இக்கவிதையில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. உறவுகளின் நம்பிக்கையின்மை குலைத்துப் போடும் வாழ்க்கையை இக்கவிதையில் முன்னிறுத்தியுள்ளார்.எனினும் இக்கவிதையினுள் செயல்படும் மரபான சிந்தனையையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறான நிலைப்பாட்டை மிகச்சில கவிதைகளில் காணப்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் யதார்த்த வாழ்க்கையை முன்னிறுத்துவன.அதனாலேயே வாசகர் மனதில் இடம்பிடித்து விடக்கூடிய வல்லமை பெற்றுள்ளன.குறிப்பாக பௌர்ணமிக் கடல் என்ற தலைப்பிலான கவிதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மிக செறிவான கவிதை.பெண்,ஆண் உறவு மிகச் சரியான புரிதலோடு தொடரும் நிலையில் அவ்வுறவின் வலிமை சாதிக்கும் சாத்தியங்களையும்,அதன் மேன்மையினையும்,தனித்ன்மையினையும்,அவ்வுறவின் ஊடாடலையும்,உச்சநிலையில் கவிதையாக்கியுள்ளார்.

எட்டிய தொலைவு பறந்தும்
இளைப்பாற இடமின்றி
மரக்கலம் திரும்பிய பறவையாய்
அலைகழிப்புக்கு உள்ளான
மனம் கேட்டது கேள்வி,..
அவன் யார்
நான் சொன்னேன்
கருப்பையின் கதகதப்பை
மார்புச்சூட்டில் தந்தவன் அவன்,..
,…மறைப்பும் பாசாங்குமின்றிக்
குற்றவுணர்வுகளைக் குடைந்து
திளைத்து விளையாடும் இளைஞன்
அவன்,..
கால் நழுவும் பூமிக்கும்
தலைதேடும் ஆகாயத்திற்கும்
இடைப்பட்டு விரிந்திருக்கும்
எனக்கான வெளி அவன்.

நேர்த்தியான சொற்பயன்பாட்டினைக் கொண்ட அழகான கவிதையாக இக்கவிதையை வடித்துள்ளார்.

கவிஞர் தமிழரசி அவர்களின் எடுத்துரைப்பு முறையில் காணும் தனித்தன்மை முக்கியமானது.அவருக்கான மொழியாடலையும் புதிது புதிதான சொற்கட்டமைப்பையும் பயன்படுத்தியுள்ளார். இதனாலேயே இக்கவிதைகளில் உற்சாகமாக பயணிக்க முடிகிறது.

’கால் தூக்கியபடி எனை வெல்லும்
தந்திரங்களில்லை உன்னிடம்
தீண்டாத நாள்களிவையெனும்
விலகல்களில்லை என்னிடம்,..’’
‘’பகல்முழுவதும் பணிகளில் மூழ்கி
பெருமழை நின்ற பின்னிரவிலும்
சளைக்காது பேசினோம்
மழைக்காலத் தவளைகளாய்,…’’’

இவ்வாறு பல கவிதைகளை எடுத்துக்காட்டலாம்.

இருப்பினும் படைப்பாக்கக் கூர்மை தேய்ந்த ஒருசில கவிதைகள்,கூடுதல் சொற்பயன்பாடு,வாசிக்கும்போது உறுத்தும் எழுத்துரு ஆகியவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

இன்றைக்கான உலகியல் வாழ்க்கை,மனிதநேயமற்ற மனித செயல்பாடுகள்,மன விகாரங்கள்,இயற்கை மீதான தீராத காதல்,பெண்கள் எதிர்கொள்ளும் அதிகார இடர்கள், தீவிரவாதம், கணினி உலகம் என்று பல புள்ளிகளை மையமிட்டு இக்கவிதைகள் இயங்குகின்றன. எனினும் இவை அனைத்தும் மனித உணர்வு என்ற மையப்புள்ளியை முன்வைத்தே செயல்படுகின்றன.தமிழ்ச்சூழலில் மிகுந்த நம்பிக்கைக்குரிய கவிஞராகத் தன் இரண்டாவது கவிதைத் தொகுப்பின் மூலமாகவும் நிறுவியுள்ளார் கவிஞர் தமிழரசி.

நூல் பெயர் - மரக்கலம் திரும்பும் பறவை
ஆசிரியர் - முனைவர் தமிழரசி
பதிப்பகம் - ஆர்த்தி வெளியீடு
விழுப்புரம்
வெளியான ஆண்டு - 2010
விலை - ரூ. 50

நன்றி - தடாகம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்