/* up Facebook

Oct 24, 2011

நாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா!’”இப்ப நீ சாப்பிடாட்டி கொண்டு போய் சிறிலங்கால விட்டிட்டு வந்திடுவேன், தெரியும் தானே அங்க ஆமி புடிசுக்கொண்டு போயிடும்”

என்று பயங்காட்டி பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்தவர்களை அல்லது தன் பிள்ளையிடம் வேறுவிடயங்களைச் சாதிப்பதற்காக தமது பிள்ளைகளுக்கு இந்த விதத்தில் பூச்சாண்டி காட்டியவர்களை நான் அறிவேன். என்னுடைய மகனுக்கும் எனக்கும் சாப்பாட்டு விடயத்தில் எப்போதும் போர்க்களம்தான் என்றாலும் இப்படிப்பட்ட பயங்காட்டி ஆயுதங்களை வைத்து நான் அவனை வெல்ல என்றும் முயற்சித்ததில்லை.

என் மகனுக்கு இப்பொழுது ஆறு வயதுத் தொடக்கப்பகுதி. நான் அவனுக்கு எப்பவும் இலங்கையில் உள்ள நல்ல விடயங்களைப் பற்றி சொல்வதில் ஆர்வமாயிருப்பேன். அவனும் என்னைப் பல குறுக்குக் கேள்விகள் கேட்டு தனது தாய்நாட்டைப் பற்றிய பல விடயங்களை கணிசமாக அறிந்து வைத்திருந்தான். இலங்கையைப் பற்றி பேச்சு வரும் போது நான் எதைப்பற்றிப் பேசினாலும் அவன் முக்கியமாகக் கேட்கும் கேள்வி எனது அப்பாவைப் பற்றியதாகவே இருக்கும். அனேகமாக அவன் நோர்வேஜிய மொழியிலேயே கேள்விகளைக் கேட்பான். நான் முயற்சித்து தமிழில் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வருவேன்.

- சிறிலங்கால சண்டை நடந்தது என்ன?
- ம்
- உங்களுடைய அப்பா இறந்திட்டார் என்ன?
- ம். தாத்தா என்று சொல்ல வேணும்.
- தாத்தா துவக்கால சுட்டெல்லா செத்தவர். இல்லை குண்டு வைச்சவையா
- இரண்டில் ஒன்று நடந்திருக்க வேணும்.
- நீங்க பார்த்தநீங்களா? கப்பல்லையா போனவர்?
- ம்… இந்தியா போகும் போது கடல்ல வைச்சு சுட்டது. ஆதால ஒருத்தரும் அவரைப் பார்க்கவில்லை.
- அவர் கடலில் விழுந்திருப்பாரா? யார் சுட்டது…?

இப்படியாக அவனது கேள்விகள் அனைத்தும் அப்பாவின் மரணத்தைப்பற்றியே சுற்றும். இலங்கை இந்தியா போக வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் வளர்ந்து கொண்டே வந்தது. அவனது ஆறாவது வயதில் அந்த சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. மிகுந்த ஆவலுடன் இந்த பயணத்தைத் மேற்கொண்டோம். அவனை எனது நாட்டிற்குக் கூட்டிப்போவதில் மிகுந்த ஆர்வம் எனக்கு.

மிக நீண்டதொரு விமானப் பயணம் முடிந்தது என்ற நிலையில் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கினோம். ஆகாயத்தில் அந்திரத்தில் தொங்கிக் கொண்டு பறப்பதைவிட அதிகமான பயம் கட்டுநாயக்க விமானநிலையத்துள் வந்ததும் எனக்கு இருந்தது உண்மைதான். எங்காவது யாராவது குண்டு வைத்திருப்பார்களோ என்ற மனநிலையை எனக்குத் தவிர்க்க முடியவில்லை. பயணிகளுக்கான சோதனைகள் முடிந்து வெளியில் களைப்புடன் வரும் போது மகன் கேட்டான்.

- அம்மா! இது யாருடைய வீடு?
- இது வீடில்லை. கொழும்பு விமான நிலையம்
- இல்லை இது அந்த சிவப்பு துணி போட்டிருக்கிற மாமாவின் வீடு
- யார்?
- அவர்ர படம்தான் இந்த வீடுமுழுதும் மாட்டி வைச்சிருக்கினம்.
- அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி ராஜபக்ஷ அதான் அவர் படம் எல்லா இடமும் இங்க மாட்டி இருக்கினம்
- நான் நினைச்சேன் அவர்ட வீடு என்று
- ம்

எங்களை அழைத்துப் போக யாiரும் விமானநிலையம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்ததால் இனி வாடகைக்கு ஓரு வாகனம் பிடிக்க வேணும். விமான நிலையத்தின் முன் ஆயிரக்கணக்கானவர்களுடன் நாங்களும் நின்று கொண்டிருந்தோம். மாலை ஆறு மணியிருக்கும். வெயில் மங்கத்தொடங்கியிருந்தலும் தோல் பிசுபிசுக்க ஆரம்பித்திருந்தது. காற்று ஒரு விதமாய் சூடாக கனமாக இருந்தது. சிங்களமும் தமிழும் காதுக்குள் இரண்டுபக்கமும் குடைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நின்ற ஒருவன் ஏதோ சிங்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு ஒன்றும் புரியாததால் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன். உடல் களைத்துப் போயிருந்தது. கட்டிடத்தின் முன் நின்ற தென்னையையும் பச்சை மரங்களும் எனக்கு தெம்பூட்டிக்கொண்ருந்தன.

மகனை இந்த கூட்டத்திற்குள் தவற விட்டுவிடுவேனோ என்ற பயத்திலும் வாகன நெரிசல் காரணமாகவும் அவனை என் கைபிடியில் இறுக்கி வைத்திருந்தேன். ஒரு வகையாக ஒரு வாடகைவண்டியில் பொதிகளை ஏற்றி நாங்களும் ஏறிக் கொண்டோம். கொழும்பு வாகன நெரிசலில். நோர்வேயில் இருந்து இலங்கை வந்ததைவிட விமானநிலையத்தில் இருந்து கொட்டஹேனா மிக நீண்ட தூரத்தில் இருப்பது போல் பயணக்களைப்பு அதிகமாக்கிக் கொண்டிருந்தது. கொழும்பு வழி நெடுக, பாதைகளின் ஓரமாய் சம்மணம் போட்டு அமர்ந்தும், நின்றும், சில இடங்களில் படுத்தும் பெரிய பெரிய தோற்றங்களில் பளிச்சென்ற நிறத்தில் தன் இருப்பைக் காட்டிக்கொண்டிருந்தார் புத்தர். எனக்குப் பிடித்த மனிதர் ஆகையால் பாவமாக இருந்தது அவரைப்பார்க்க.- அம்மா இப்பவும் இங்க சண்டை நடக்குதா
- இல்லை. இப்ப இல்ல. எல்லாம் முடிஞ்சு போச்சு
- அப்ப ஏன் இவை இப்படி இராணுவ உடுப்போட துவக்கு வைச்சிருக்கினம்
- பாதுகாப்புக்காம்
- இவர் தமிழா?
- இல்லை சிங்கள இராணுவம்
- போரில் யார் அம்மா வென்றது?
- சிங்கள ஆட்கள்
- நாங்கள் ஆர்?
- ஏன் கேட்குறீங்க. உங்களுக்கு தெரியும்தானே நாங்கள் தமிழ் என்று.
- அப்ப நாங்களா தோத்தது?
- ஓம்
- அம்மா!! இல்லை அம்மா. நான் தோற்கேல்லை. நான் நோர்வேல இருந்தனான் அப்ப.
- இருந்தாலும் நீங்களும் தமிழ்தானே
- ஓம். ஆனா நான் சண்டைபிடிகேல்லைத் தானே அப்ப நான் தோற்கேல்லை அம்மா!
- ஒகே நீங்க களைப்பா இருக்கிறீங்க. அப்படி படுங்கோ

இனி எதும் சொன்னால் அவன் சினம் தலைக்கேறும் என்று தெரிந்ததால் பேசாமல் அடக்கியே நான் வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு மாதிரி அவனை கொஞ்சம் வாய் மூடி படுக்க வைத்தாயிற்று.

இப்படித்தான் ஒருநாள் கொட்டஹேனாவிலிருந்து ஒரு ஆட்டோவில் தெகிவளை போய்க் கொண்டிருந்தோம். அதே வகன நெரிசல். அதே இராணுவ உடையில் இளைஞர்கள் ஒரு கிலோமீட்டருக்கு ஒருவர் படி ஆயுதத்துடன் நின்றார்கள். மகனும் அவர்களைப் பார்ப்பதும் சிரிப்பவர்களுக்கு திரும்பிச்சிரிப்பதா என்ற சிந்தனையில் என்னை ஒவ்வொரு முறையும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சதூரம் போனதும் எங்கள் முச்சக்கரவண்டி சோதனை சாவடியில் ஆயுதம் தரித்த ஒரு இராணுவ இளைஞனால் நிறுத்தப்பட்டது. அவர்கள் எப்போதும் ஒரே பாணியில்தான் நிற்பார்கள். கையில் துவக்கை இரு கைகளிலும் எந்தியிருப்பர்கள். துவக்கின் துளைப்பக்கம் சரிவாக தரையை நோக்கிய படி இருக்கும். கால்களை அகட்டி கொஞ்சம் பின் பக்கமாக சரிந்து நிற்பார்கள். முகம் எந்த சலனமும் இல்லாமல் விறைத்தபடி இருக்கும். சிலர் சிரிப்பார்கள். பல முகங்கள் அடிக்கடி பார்த்து பழகிய முகமாகிவிட்டிருந்தது.

பெட்டா தாண்டி கோல்ப்பேஸ் கடற்கரையோரமாக இருந்த ஒரு சோதனைச்சாவடியில் எங்கள் முச்சக்கரவண்டி ஒரு இரணுவ சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டது. கடவுச்சீட்டு எல்லாம் கையில் இருந்தபடியால் ஒரு விறைத்த தலையசைவுடன் எங்களை வழியனுபினர். எங்களுடைய வாகனச்சாரதியும் ஏதோ சிங்களத்தில் அவர்களுடன் குளைந்துவிட்டு மீண்டும் முச்சக்கரவண்டியை முடுக்கிவிட்டார்.

- அம்மா
- ம்
- உங்களிடம் துவக்கு இருக்கா
- இல்லை. ஏன்? துவக்கெல்லாம் வைசிருக்கக்கூடாது.
- இதில துவக்கோட நிக்கிறவை சிங்கள ஆட்கள்தானே
- ம்
- அப்ப இவை எங்கட எதிரிதானே
- ம். ஒருவிதத்தில
- அப்ப நாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும்
- ஏன்?
- இவை எங்கள எப்பவும் சுடலாம். அதால நாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும் அம்மா.

இதற்குமேல் பதில் சொல்ல முடியாமல் இவனோடு இனி நான் வன்முறையில் இறங்கவேண்டி வரும் அபாயம் அறிந்து வழமைபோல நான் பேச்சைமாற்றத் தொடங்கினேன்.
நன்றி - என் கவிதை 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்