/* up Facebook

Oct 16, 2011

வீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்


வீட்டை சுத்தம் செய்யும் இயந்திரத்தின் (Vacuum Cleaner)உறுமல், குழந்தைகளின் அழுகை, குளியலறையின் சத்தம், சமயலறையில் பொரிக்கும் ஓசை: இந்த ஒலிகள் யாவும் அரசியல் தன்மை மற்றும் தார்மீகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய மிக முக்கிய பணிகளாகும். வர்க்கப் போராட்டத்தை நாளாந்தம் வெளிப்படுத்தப்படும் ஓரிடம் வீடாகும். இந்த வாதத்தையே ‘வீட்டுவேலைக்கு ஊதியத்திற்கான இயக்கம்’ (Wage For Housework Campaign)மற்றும் ‘உலகப் பெண்களின் வேலைநிறுத்த இயக்கம்’(Global Women’s Strike Campaign) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர் சல்மா ஜேம்ஸ் (Selma James) முன் வைக்கிறார். பெண்களின் உழைப்பானது, பாத்திரங்களை கழுவுதல், நிலத்தை சுத்தப்படுத்துவது, பிள்ளைகளை தயார்படுத்தி அனுப்புதல், கூப்பன் அட்டைகளை வெட்டுதல், அடுத்த வேலையை ஆரம்பிக்கும் முன் அவசர அவசரமாக ஒரு கப் கோப்பியை அருந்துவது போன்ற விதத்தில் அமைகிறது. நாள் முழுவதும் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் வேலைகளை, திருப்பத் திரும்ப செய்தபடியே பெண்களின் நாட்கள் கழிகின்றன. கோடிக்கணக்கான பெண்களின் நாளாந்த வாழ்க்கை இவ்வாறாகவே அமைந்துவிடுகிறது. இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இதனை நாம் பெரும்பாலும்“ இல்லாள்”என்றோ“இல்லத்துணை”என்ற சொற்பதங்களுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்கிறோம். ஆனால் இவர்களை நாங்கள் “தொழிலாளர்” என கணிப்பிடுவதில்லை. பற்பல சந்தர்ப்பங்களில் வீட்டில் செய்யப்படும் வேலை சமூக ரீதியில் முக்கியமானவை என்பதையோ, இது உழைக்கும் மக்களின் வாழ்வுடனும், போராட்டங்களுடனும் நேரடியாக தொடர்புடையது என்பதையோ நாம் காணத் தவறி விடுகிறோம்.

பெண்களின் உரிமை பற்றி உரையாடும் சிந்தனையாளர்கள் பலர் தமது வாதங்களிலும், முன்வைக்கும் தீர்வுகளிலும் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் விலைமதிப்பிட முடியாதவை என்பதை குறிப்பிடத் தவறிவிடுகின்றனர். இது எண்ணிலடங்கா சந்ததிகளாக குடும்பங்களை ஒன்றிணைக்க வைத்துள்ளது என்பது மட்டுமல்ல, ஒரு பிரத்தியேக வகையான குடும்பங்களை இணைத்து வைத்துள்ளது. பெண்களின் தியாகங்களானது தொழிலாளர் குடும்பங்களை இணைக்கும் கருவியாக அமைந்துள்ளது. பல பழமைவாதிகள் செய்வது போல வெறும் புகழ்ச்சி வார்த்தைகளுடன் நின்று விடாது, பெண்களின் உழைப்பிற்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று சல்மா ஜேம்ஸ் வலியுறுத்துகிறார். நாம் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமானால், வாழ்வதற்கு தகுந்த ஊதியம் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது வாதமாகும். இங்கு இவர் தொழில்ரீதியான பிள்ளை பராமரிப்பாளர்கள் மற்றும் வீட்டுப்பணிப்பெண்கள் போன்றவர்களை குறிப்பிடவில்லை. (இவர்களும் தமது உரிமைகளுக்காகவும் தமது மேம்பாட்டிற்காகவும் போராட வேண்டிய கடமையைக் கொண்டிருந்த போதிலும் இவர்களைப் பற்றி இந்த சந்தர்ப்பத்தில் அவர் பேசவில்லை.) இவர் வீட்டில் உதவியாளர்களாக அல்லது இல்லத்துணைவர்களாக,வீட்டு வேலை செய்யும் பெண்களின் போராட்டங்களையும், வேலைதலங்களில் பணிபுரியும் பெண்களதும் போராட்டங்களையும் தொடர்புபடுத்த விரும்புகிறார்.

இடது மற்றும் வலது ஆகிய இரண்டு தரப்பு அரசியல்வாதிகளுக்கு மாறாக, பல கோடிக்கணக்கான பெண்கள் செய்யும் பராமரிப்பு மற்றும் தார்மீகம் சார்ந்த இந்த வேலைகளானவை, தொழிலாளிவர்க்க அல்லது மத்தியதர வர்க்க ஆண்களும் பெண்களும் தமது வேலைத்தளங்களில் செய்யும் “மிக முக்கியமான வேலைகளை”விட ஒன்றும் இரண்டாம் பட்சமானதல்ல எனும் கருத்தை சல்மா வலியுறுத்துகிறார். வகுப்பறையில் பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதற்காக ஆசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களை ஊதியமாக வழங்கிறோம், ஆனால் பிள்ளைகளுக்கு முதன்முதலாக வாசிக்க கற்றுக் கொடுப்பவர்கள், நன்னெறிகளைப் போதிக்கும் இறையியலாளர்கள் மற்றும் சமூகவியல் ஆசிரியர்களும் தாய்மார்களே. இதுவரை சமூகமானது கல்வி தொடர்பாக வீட்டில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தக்கதும் மற்றும் சிரமமான ஊதியமற்ற வேலையை கண்டுகொள்ளத் தவறியுள்ளது.

பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் விலை மதிப்பிட முடியாதவை: இவை சமூகத்திற்கு இன்றியமையாதவையாகவும், சமூகத்தை தாங்கிப்பிடிப்பவையாகவும் இருக்கின்றன. இந்த அடிப்படையிலேயே சல்மா ஜேம்ஸ் உடன் இணைந்து ‘பெண்களின் வீட்டுவேலைகளுக்கு ஊதிய இயக்கம்’ அமைப்பு மற்றும் ‘சர்வதேச பெண்களது வேலைநிறுத்த இயக்கம்’ ஆகியன மேற்சொன்ன கோரிக்கைகளை முன்வைக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இல்லத்துணைவிகள் என்ன பாத்திரத்தை வகித்தனர்? இந்த முதலாளித்துவ உழைப்பு முறைக்கு எதிரான பெண்களின் எழுச்சியை எவ்வாறு கருத்தாக்கம் செய்யலாம்? உழைப்பு சக்திக்கு ஊதியம் வழங்குவது பெண்களின் விடுதலைக்கு ஒரு முன்னேற்றமான படியாக இருக்குமா? பெண்களுக்கு இடையிலான, குறிப்பாக இல்லத் துணைவிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருமைப்பாடுஎவ்வாறு செயற்படுகிறது?

வீட்டில் ஊதியமின்றி வேலை செய்யும் பெண்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் நுட்பமான பார்வையையும், பல சகாப்தகால ஈடுபாட்டையும் நாம் சல்மாவினுடைய எழுத்துக்களில் காணலாம். இவருடைய எழுத்துக்களை பகுப்பாய்வு செய்யும் போது இந்த பிரச்சனைக்கான பதில்களைப் பெறக்கூடியதாக இருப்பதுடன், வீட்டு வேலைக்கு ஊதியம் வழங்குவது தொடர்பான இயக்கத்திற்கு அவை எவ்வாறு உயிரூட்டுகின்றன என்பதையும் காணலாம். முக்கியமாக, சல்மாவினுடைய ஆய்வானது பெண்களின் விடுதலை பற்றிய விரிவான பார்வையை அளிக்கிறது. அத்துடன் பொதுவாக உழைக்கும் வர்க்கத்திற்கு, ஒரு நிறவெறிக்கு எதிரானதும், சுய-நிர்வாகத்துடன் கூடிய (Self Management)பரந்த பார்வையை வழங்குவதன் மூலமாக தொழிலாளர்களின் தலைமையானது, தனியே வீட்டுக்கு வெளியே வேலை செய்யும் ஒரு குறிப்பிட்டவகையிலான “நவீன” பெண்களை மாத்திரம் உள்ளடக்கியதாக அல்லாமல், உலகெங்கும் பரந்துவாழும் பெண்களின் போராட்டங்களையும் அநுபவங்களையும் கருத்திற் கொள்வனவாக இவை அமைகின்றன. சல்மாவின் எழுத்துக்கள் வீட்டுவேலைகளுக்கான ஊதியம் எனும் விவாத்தை மட்டுமல்லாமல் இன்னும் அதிகமான விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. மார்க்சியம் அல்லது தொழிற்சங்கங்கள் பற்றி இவரது கருத்துக்கள் அதிகளவு காணப்பட்டாலும் கூட இந்தக் கட்டுரையில் எடுத்துக் கொண்ட விடயம் தொடர்பான கருத்துக்கள் பற்றி மட்டுமே இங்கு கவனத்தில் கொள்ளப் படுகிறது. (மேலதிக விபரங்களுக்கு பார்க்க:The Power of Women and the Subversion of the Community).

கடந்தகால சுமைகள்: உழைப்பு மற்றும் பெண்ணியம் தொடர்பாக மரபார்ந்த கருத்தாக்கங்களை நாம் கடந்து செல்லவேண்டியது ஏன்? “...யதார்த்தத்தில் தொழிலாளர் வர்க்கம் என்பது வெள்ளையின, முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களை கருதுவதாகவே உள்ளது...”

தொழிலாளர்களை அமைப்பாகுவது தொடர்பான மரபார்ந்த வரையறைகளானவை, முதலாளித்து சமூக உறவுகளுக்கு எதிரான அல்லது அவற்றை சீர்படுத்தும் போராட்டத்தில், வீட்டில் வேலை செய்யும் பெண்களை இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக கருதி, இவற்றில் ஈடுபடுவதிலிருந்து பெண்களை முற்றிலும் விலக்கி வைத்துள்ளது. முதலாளித்து உற்பத்தி உறவு தொடர்பான பெண்களின் அநுபவங்களானவை, தொழிற்சாலை, சுரங்கங்கள் மற்றும் வேலை தலங்களில் பணிபுரியும் தொழிலாளரது அநுபவங்களை ஒத்தவையே. ‘பெண்கள், தொழிற்சங்கங்கள், வேலை’என்ற படைப்பில், “முழுநேரமும் வேலை செய்யும் எமது உழைப்பு சூறையாடப்பட்டுள்ளது. தொழிற்சங்களுக்கு நாம் இருப்பதாகவே தெரியாது. முதலாளிகள் கணவர்மாருக்கு ஊதியத்தை வழங்கும் போது இவர்கள் இரு தொழிலாளர்களின் உழைப்பைப் பெறுகின்றனர் ஒருவருடையதை மட்டுமல்ல”என்று சல்மா குறிப்பிடுகிறார்.

இங்கு நிலைநாட்டப்பட வேண்டியிருப்பது முதலாளித்து சமூகத்தில் பெண்களின் வீட்டு வேலைகள் என்ற ஒன்றிணைக்கப்பட்ட கருத்தாக்கம் மட்டுமல்ல, பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே முழுபெறுமதி மிக்கவர்களாக வர்க்கப்போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற கூற்றுமே. காலதிகாலமாக இருந்து வந்த முற்போக்கு சிந்தனைகளுக்கு முரணாக சல்மா ஜேம்ஸ், வேலை மற்றும் வீட்டுவேலை என்பவை என்ன?, மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ன? எனும் வினாக்களை எழுப்புகிறார், “ஆண்களின் ஒவ்வொரு வேலைநிறுத்தமும் எவ்வளவு தூரம் பெண்களின் ஆதரவில் தங்கியிருந்தது என்பதை யாராவது சுட்டிக்காட்டியுள்ளார்களா?” தமது மூலோபாயங்களையும், கோரிக்கைகளையும் அவற்றிற்கே உரிய சரியான பின்புலத்தில், அர்த்தமுள்ள விதத்தில் வைப்பதற்காக சல்மாவும் அவரை ஒத்த சிந்தனையாளர்களும் பல தப்பெண்ணங்களுக்கு (Prejudice)எதிராக போராட வேண்டியிருந்தது.

‘பெண்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் வேலை’, ‘பெண்களது ஆற்றலும் சமூக கிளர்ச்சியும்’, ‘பால், இனம், மற்றும் வர்க்கம் (Women, The Union and Work; The Power of Women and the Subversion of the Community, Sex, Race and Class) போன்ற படைப்புகளில் சல்மா அவர்கள் இடது சாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கிறார். இவற்றில், வீட்டு வேலைகள் மற்றும் பிள்ளைகளை வளர்ப்பது போன்றவை சமூகரீதியிலும், அறநெறி ரீதியிலும் பெறுமதிமிக்கவை எனும் ஒரு பர்வையை முன்வைக்கின்றார். சல்மாவும் இவரது தோழர்களும், இந்த கருத்தினை இடதுசாரித்துவ மற்றும் பல்வேறுபட்ட பெண்ணிய நோக்குகளின் பின்னணியில் முன்வைக்கின்றனர். ‘பெண்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் தொழில்’ என்ற படைப்பின் முதல் பக்கங்களில், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் எவ்வாறு இடதுசாரிகள் பெண்கள் போராட்டத்தை மட்டுப்படுத்தியுள்ளனர் என விபரித்துள்ளார்:

“நாம் உழைக்கும் வர்க்க பெண்களிடம் செல்வதாயின் ஒன்றில் அவர்கள் மூலமாகவோ, அல்லது எங்கும் நீக்கமற நிறைந்துள்ள, வர்க்கம் பற்றிய அவர்களின் விளக்கம், அவர்களுடைய மரபுகள் மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகள் மூலமாகவே செல்ல வேண்டும் என இவர்கள் எம்மில் பலரை நம்ப வைத்துள்ளனர். இது ஒரு திறந்திருக்கும் பாதையை அடைத்து நிற்பது போன்றதாகும். இவர்கள் சுயாதீன பெண்கள் அமைப்பின் நியாயமான தன்மையை நேரடியாகவோ அல்லது - பெண்களை வர்க்கத்தின் குறிப்பாக சுரண்டப்பட்ட, விளிம்புநிலை பிரிவாக நடத்துவதன் மூலமாக — மறைமுகமாகவோ கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.. இவர்களைப் பொறுத்த வரையில் 'உண்மையான' தொழிலாளர் வர்க்கம் என்பது வெள்ளையின முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களையே குறிக்கிறது. இங்கு இனவாதம், ஆணாதிக்கம் மற்றும் வயது ஆதிக்கம் ஆகியன ஒரு பொது மரபைக் கொண்டுள்ளன.

தொழிற்சங்கங்கள் தொடர்பாக நீண்ட மனக்குறைகளின் பட்டியலை சல்மா முன்வைக்கிறார். இவர்கள் “தனிப்பட்ட பெண்களின் (மற்றும் சில ஆண்களதும்) தொடர்ந்த கடுமையான போராட்டங்களின் பின்னும் சமமற்ற ஊதிய விகிதங்களைத் தொடர்ந்து பேணுவதற்கு துணைபோயுள்ளனர்”.மேலும் “தொழிற்சங்கங்களானவை வேலைகளின் வகைப்படுத்தல்களை (ஆண்களுக்குரியவை மற்றும் பெண்களுக்குரியவை இவை இவைதாம் என்று பால்ரீதியான வேலைப் பாகுபாடுகளை, மற்றும் அதன் அடிப்படையிலான ஊதிய பாகுபாடுகளை மொ-ர்) அப்படியே ஏற்றுக்கொள்வதன் மூலமாக பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதை தொடர்ந்து பேணுகிறது”எனவும் இது “சமவேலைக்கு சமசம்பளம் என்ற உடன்பாடுகளின் பின்பும் கூட தொடர்கிறது” எனவும் கூறுகிறார். இதனைவிட பெண்களுக்கான சமசம்பளமானது, வெவ்வேறு தரத்திலுள்ள ஆண்களுக்கிடையே காணப்படும் சம்பள வேறுபாடுகளின் தரப்படுத்தலில் “குழப்பத்தை” ஏற்படுத்தலாம் என இவர்கள் கவலை கொள்கின்றனர் எனவும், அத்துடன் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளானவை, அமைப்பு ரீதியில் மூலதனம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறையை அப்படியே தொடர்வதாக, ஒருவித பிளவுண்ட வர்க்கங்களாக , ஊதியமுடையவர்கள் மற்றும் ஊதியம் பெறாதவர்கள் என்ற வேறுபாடுகளை தாமும் பலப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக விமர்சிக்கிறார். வேலை இல்லாதோர், வயோதிபர், நோயுற்றோர், சிறார்கள் போன்றவர்களை தொழிற்சங்கங்கள் அலட்சியப்படுத்துவதுடன், இவர்களை ஊதியம் பெறுபவர்களிடமிருந்தும், போராட்டத்திலிருந்தும் பிரிக்கின்றன எனக் குறிப்பிடுகிறார்.

சல்மா ஜேம்ஸூம், மரியரோசா டலா கோஸ்ரா(Mariarosa Dalla Costa) வும் இணைந்து எழுதிய ‘பெண்களது பலமும், சமூக கிளர்ச்சியும்’எனும் நூலில் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களுடன் உரையாடலில் ஈடுபடுகின்றனர். இவர்களுடைய தலைமுறையைச் சார்ந்த பெண்ணியலாளர்களுடனும், வீட்டிலிருக்கும் பெண்களுடனும் உரையாடுகையில், தமக்கிடையே வர்க்கம் தொடர்பான வரையறைகளில் மாத்திரமன்றி, பெண்ணியம் தொடர்பான அர்த்தப்படுத்தல்களிலும் முரண்பாடுகள் காணப்படுவதை உணர்கின்றனர். பெண்ணியம் தொடர்பான அக்கறைகளுடன் முதலாளித்துவத்தை அணுகுவதிலும் வேறுபட்ட போக்குகளைக் காண்கின்றனர். இங்கு பெண்களது விடுதலை என்பது, சமத்துவமான சம்பளம் மற்றும் இன்னும் சற்று கூடியளவு நியாயமானதும், திறமையானதுமான சமூகநல அரசு(Welfare State)என்றளவில் மரபார்ந்த பார்வையானது குறுக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றனர். இந்தப் பெண்களுக்கு மூலதனம் தன்னளவிலேயே ஒரு பிரதான எதிரியாக காணப்படவில்லை மாறாக அதன் பின்தங்கிய தன்மைகளே இந்த பகைமைக்கு காரணமாக அமைகிறது. இவர்கள் முதலாளித்துவ சமூக உறவுகளை அழிப்பதை நோக்காக கொள்ளவில்லை, மாறாக, இதனை மேலும் அறிவுபூர்வமான வழியில் ஒழுங்கமைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார்கள்.

பெண்ணுரிமை அமைப்புக்களில் வெவ்வேறுபட்ட எதிரெதிரான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன என்பதை சல்மா உணர்கிறார். பெண்களது அமைப்புவடிவம் மற்றும் பெண்விடுதலை தொடர்பான வாதங்கள் ஆகியவற்றிலுள்ள இந்த பலதரப்பட்ட வேறுபாடுகளானவை, பல்வேறு பிரிவினரும் கொண்டுள்ள கலாச்சார வேறுபாடுகள் பற்றிய உணர்வுத்தரம், பெண்களது சுய-ஆட்சிக்கான ஆற்றல் பற்றிய புரிதல்கள், மற்றும் பெண்களின் விடுதலைக்கான இலக்குகள் என்பதில் காணப்படும் வேறுபாடுகள் என்பவற்றின் விளைவாக தோன்றுபவையாகும். ‘பெண்களது ஆற்றலும் சமூகத்திற்கு எதிரான கிளர்ச்சியும்’ எழுதப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்க பெண்ணியவாதிகள் என்ன கூறியிருந்தார்கள்? யார் “இந்தப் பெண்கள”? என்ற கேள்வியை எழுப்பினர். பெண்கள் அமைப்பினுள், தனித்துவமான, வெளிப்படையாக தெரியக்கூடிய இரண்டு அரசியல் போக்குகள் தோன்றியுள்ளன. இவை அரசியல்ரீதியில் முற்றிலும் எதிரெதிரான முனைகளில் இருப்பவையாகும். இவற்றில் உள்ள தாராளவாத போக்கு பற்றி சல்மா விபரிக்கையில்:

இந்த அரசியலின் எதிர்கால போக்குகள் பலவேறுபட்டனவாக இருக்கலாம். பெண்களின் எந்த சமூகப்பிரிவானது இந்த கருத்தின் ஆளுமைக்கு உள்ளாகிறார்களோ என்பதில் இது தங்கியுள்ளது. இதன் செல்வாக்குக்கு உட்படும் ஒரு மேட்டுக்குடி சங்கமானது தனிமைப்படுத்தப்பட்ட, தமக்குள் மாத்திரம் தமது செயற்பாடுகளை முடக்கிக் கொள்ளும் ஒரு அமைப்பாக முடியலாம். இவர்கள் பொதுவில் பெண்ணியக்கத்திற்கு அவப்பெயரை பெற்றுக் கொடுப்பது என்பதற்கு மேலாக நடப்பு ஒழுங்கமைப்பிற்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்த மாட்டாதவர்களாக இருப்பார்கள். அல்லாவிட்டால், இவர்கள் அதிகாரத்திலுள்ள ஒரு ஆளும் வர்க்கத் தட்டைச் சேர்ந்த பெண்களால் உள்வாங்கப்படலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் இது கிளர்ச்சி செய்யும் பெண்களை மாத்திரமன்றி ஆண்களையும் கட்டுப்படுத்தும் பணிக்கு துணையாகலாம்.

தாராளவாத பெண்ணியவாதத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி சல்மா கவலை கொண்டிருந்தார். Financial Timesபத்திரிகையில் ஒரு கட்டுரைக்கான மேலதிக விளக்க குறிப்பில், “பல முதலாளிகள் நிர்வாகத்தில் தலைமைப்பதவிகளில் பெண்களை “பயன்படுத்தவதற்கான” வாய்ப்புக்களை இழக்கின்றனர். நன்றிமிக்க இந்த வெளியாட்களான பெண்கள், ஊதிய கட்டமைப்பை கீழ்நோக்கி நகர்த்துவதற்கு உதவியாக அமைவார்கள்” என்று இவர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

பெண்விடுதலை அமைப்பின் நோக்கம் தொடர்பான சல்மாவினது பார்வைக்கும் தாரளவாத பெண்ணியவாதிகளது கருத்துக்களுக்கும் இடையில் கூர்மையான முரண்பாடுகள் இருந்தன. பெண் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பதானது இந்த தாராளவாத பெண்ணியவாதிகளை, ஆண்கள் மற்றும் சமூகம் தொடர்பாக பெண்ணியவாதிகள் முன்வைக்கும் அனைத்து விமர்சனங்களிலிருந்தும் விலக்குப் பெறச் செய்துவிடும் என இவர் நம்பவில்லை.

“பெண்கள் இயக்கமானது உருவாக்கிய உத்வேகத்தை – தமக்கென ஒதுக்கப்பட்ட பாராம்பரிய இடத்தை பல இலட்சக்கணக்கான பெண்கள் நிராகரித்ததை – மூலதனமானது பற்றிக் கொண்டது. பெண்களை உள்வாங்குவதன் மூலமாக உழைப்பாளர் படையை மீள ஒழுங்கமைத்தது. இப்படிப்பட்ட மூலதனத்தின் செயற்பாட்டை எதிர்த்துச் செயற்படுவதன் மூலமாகத்தான் இப்போது பெண்கள் இயக்கமானது வளர முடியும். உழைப்பாளர் படையில் இணைவதன் மூலமாக பெண்கள் விடுதலை பெறலாம் என்ற ஐதீகத்தை தீவிரமாக எதிர்த்து செயற்படுவதன் மூலமாகவே பெண்கள் அமைப்பானது உருவாகவும், போராடவும் முடியும்.”

‘பெண்களுக்கான தேசிய அமைப்பின்(National Organization of Women – NOW)கொள்கைத் திட்டத்துடன் ஒப்பிடுவதானது “அங்கீகரிக்கப்பட்ட”, “பண்பான”(Polite)பெண்ணியத்தின் வரம்புகளை அம்பலப்படுத்திவிடுகிறது. “அமெரிக்க சமூகத்தின் பிரதான போக்கிற்குள் (Main Stream)பெண்களை உடனடியாகவும் முழுமையாகவும் பங்குபற்றச் செய்வதே இந்த அமைப்பின் (NOW) நோக்கமாகும். இதன் மூலமாக ஆண்களுக்கு இருக்கும் அத்தனை சலுகைகளையும், பொறுப்புக்களையும் பெண்களும் பெற்றுக் கொள்வதை இது குறிக்கிறது”.

பெண்களுக்கான வீட்டு வேலைகள் பற்றி எப்படிப்பட்ட கண்ணோட்டத்தை NOWஅமைப்பு கொண்டுள்ளது? நிபுணத்துவ துறையில் பணியாற்றும் பெண்கள் பதவி உயர்வு பெறுவதை வீட்டு வேலைகள் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை மட்டுமே இவர்கள் கருத்திற் கொள்கிறார்கள். “குழந்தை பெறுவது, பராமரிப்பது போன்றன, பெண்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் பெறும் செயற்பாடுகள், பெண்களது பொருளாதார பங்குபற்றல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு எதிரான தடைகளாக நியாயப்படுத்தப்படுகிறது”. இந்த வாதமானது, NOW அமைப்பின் கொள்கை விளக்கத்தில் வெளிப்படும் சித்தாந்தம் மற்றும் வேலைத்திட்டம் ஆகியவற்றுடன் நெருங்கியதாகவே இருக்கிறது. இந்த அமைப்பினது கோரிக்கைகள், மற்றும் அவை அணிதிரட்ட முனையும் மக்கள்திரள் ஆகியவற்றில் இருந்து மிகவும் வேறுபட்டனவாக சல்மா ஜேம்சுடைய கரிசனைகள் இருக்கின்றன. NOW அமைப்பானது மத்தியதர பெண்களை இலக்காக கொண்டுள்ளது. சல்மாவுடைய ஒருமைப்பாடானது தொழிலாளர் வர்க்கத்துடனானது. “தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த வீட்டிலிருக்கும் பெண்கள் முதலாளித்துவ உற்பத்தியில் மிகவும் முக்கியமான பாத்திரத்தை ஆற்றுவதாக நம்புகிறோம்: ஆனால் இவர்களது நிலைமையானது ஏனைய எல்லாப் பெண்களுக்கும் பாதகமானதாக அமைகிறது”.ஆனால் அதேவேளை NOWஅமைப்பின் கவலையானது “சமூகத்தைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் பெற்ற துறைகள் அனைத்திலும், தொழிற்துறை மற்றும் அரசாங்கத்தின் உயர்பதவிகளிலும் பெண்கள் பின்தங்கிப்போக நேர்கிறது” எனக் கவலை கொள்கிறது.

NOWஅமைப்பின் ஸ்தாபகர்களில் பெற்றி பிரைடன் (Betty Friedan) என்பவரும் ஒருவர் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. தனது ஆய்வில், The Feminine Mystique (பெண் தொடர்பான புனைவுகள்) வீட்டு வேலைகள் தொடர்பாக பெண்கள் “எல்லாமே இவ்வளவுதானா?” (“Is this all?”) என்ற கேள்வி எழுப்புகிறார்கள். பிரைடன் தனது நூலின் முதலாவது அத்தியாயத்திற்கு ‘பெயரில்லாத பிரச்சனை’என்று தலைப்பிட்டு தொடங்குகிறார்.“எனக்கு கணவன், குழந்தைகள், வீடு என்பவற்றிற்கும் மேலாக இன்னும் சிலவிடயங்கள் தேவைப்படுகின்றன”என்று பிரச்சனைக்கான பெயரை இடுகிறார். பிரைடனுடைய கருத்துடன் சல்மா முற்றுமுழுதாக முரண்படாவிட்டாலுங்கூட, பிரைடனுடைய தீர்வானது வீட்டுவேலைகள் தொடர்பாக நிலவும் தாழ்ந்த அப்பிப்பிராயத்தின் வெளிப்பாடாக அமைவதுடன், பெண்களுக்கு பிரைடன் நிபுணத்துவம் சார்ந்த வேலைகளை முன்மொழிவதில் போய்முடிகிறார்.

பிரைடன் மற்றும்NOWவினதும் தாராளவாத உணர்வுகள் அலுவலகத்தில் அல்லது கல்விசார்ந்த தொழில்களில், அல்லது கலைத்துறையில் “சொர்க்கத்தைக்”காண்பதாக தென்படுகிறது. இதன்மூலமான இவர்கள் வர்க்க போராட்டம் மற்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றிற்கு அப்பாலான ஒரு உலகில் தமது சுதந்திரத்தை காணமுனைகிறார்கள். இன்னொரு புறத்தில், தீவிர பெண்ணியவாதிகளோ புரட்சிக்கான தமது பயணத்தில் வர்க்க போராட்டம் மற்றும் நிறவெறிக்கு எதிரான போரட்டங்கள் என்பவற்றுடன் நேரெதிராகவே முட்டிமோதுவதன் மூலமாக தமது சொர்க்கத்தை காண்கிறார்கள். சோசலிச பெண்ணியவாதிகள் என தங்களை அழைத்துக்கொள்ள விரும்புபவதுகளுங்கூட, ‘பெண்கள் பிரச்சனைக்கு’முகம்கொடுப்பதையோ, அவற்றிற்கான தீர்வுகளை முன்மொழிவதலிருந்தோ தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

Radical America வில் ஷீலா றோபோதன் (Siela Rowbothan) எழுதிய The Carrot, The Stick, And the Movementஆக்கமானது, வீட்டில் பெண்களின் அதிகாரம் தொடர்பான சல்மாவின் பல கூற்றுக்களை கேள்விக்குள்ளாக்குகிறது. “பெண்கள் தாம் வேலை செய்யும் இடங்களிலேயே அமைப்பாக வேண்டும் என்று கூறினால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பெண்கள் எவ்வாறு ஏனைய தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவார்கள்? வேலைநிறுத்தத்தின் போது வேலைநிறுத்த நிதியை எவ்வாறு பெறலாம்?” றோபோதன், மூலோபாயரீதியிலான கேள்வியை எழுப்புவதன் மூலமாக, இயக்கத்தின் நடவடிக்கைகளின்போது இலகுவில் விலக்கிவிட முடியாத விதத்தில் பிரச்சனையை முன்வைக்கிறார். வேலைக்கு போவதற்குப் பதிலாக வீட்டில் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் இரகசியமாக ஆதரவு வழங்கப்படுகிறதா? சல்மாவின் அணுகுமுறையானது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக றோபோதன் வாதிடுகிறார். “உழைப்புச் சக்தியானது அதன் உற்பத்தித் தளத்தில் ஒழுங்கமைக்கப்படுவதை விலையாகக் கொடுத்து, அதன் மறுஉற்பத்தி செய்யப்படும் இடத்தில் ஒழுங்கமைக்கப்படுகிறது”என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இந்த வாதமானது சல்மாவின் கருத்துக்களை, அதன் பின்புலத்திலிருந்து பிரித்தெடுத்து அணுகுவதிலிருந்து உருவாவதாகும். அவர் சமையலறையையோ, படுக்கையறையோ அல்லது பண்ணையையோ பெண்ணுக்குரிய இடமாக கருதவில்லை. உண்மையில் அவர் செய்ய விரும்புவதெல்லாம், தொழிற்சாலை, சுரங்கம், பண்ணைகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற உற்பத்தி மையங்களில் நடைபெறும் போராட்டங்களை, வீட்டில் மறுஉற்பத்தி நடைபெறும் இடத்தில் நடக்கும் போராட்டத்துடன் இணைப்பதுதான்.

றோபோதனுடைய கட்டுரையில் பிரதான குறைபாடு யாதெனில், அவர் உற்பத்தியில் வீடு ஒரு முக்கிய பகுதியாக அமைவதை கவனிக்கத் தவறுவதாகும். றோபோதன் தனது விமர்சனத்தில், “வீட்டு வேலைகளை செய்வதற்கு ஊதியம் வழங்குவது தொடர்பான கோரிக்கையை முன்வைப்பது நல்லதல்ல எனவும், இது வீட்டு வேலைகளை சமூகமயமாக்காது, மாறாக, வீட்டில் வேலை செய்பவர்களை மேலும் பெண்ணுடைய அல்லது ஆணுடைய குறுகிய கருக்குடும்ப வட்டத்திற்குள் தனிமைப்படுத்துகிறது: அத்துடன் இந்த ஏற்பாடானது உழைப்புச் சக்தியை வீட்டில் மறுஉற்பத்தி செய்பவர்களையும், பண்ட உற்பத்தியில் கூலிக்காக வேலை செய்பவர்களையும் இணைக்க மாட்டாது”, என்று குறிப்பிடுகிறார்.

சில காலத்தின் பின்,The Politics of Houseworkஎனும் நூலுக்கான அறிமுகத்தில் எலன் மாலோஸ் (Ellen Mallos) வீட்டு வேலைகளுக்காக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படக் கூடாது என்பதற்கான மூன்று காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்: 1) இது வீட்டு வேலைகள் பெண்களுக்கானவை என்ற தந்தைவழி சமூக அநுமானங்களை பேணுகிறது.2) வீட்டு வேலைகளினால் ஏற்படுத்தப்படும் தனிமைப்படுத்தலை நிறுத்தவில்லை; 3) எந்த ஒரு சமூகமும்,அது சோசலிச சமூகமாகவோ அல்லது முதலாளித்துவ சமூகமாகவோ இருந்தாலுங்கூட, வீட்டு வேலைக்கு சரியான சம்பளத்தை வழங்க கூடியதல்ல. இந்த விமர்சனங்கள் எதனை பொதுவாக கொண்டுள்ளன என் பார்த்தால் இவர்கள்,வீட்டு வேலைக்கான ஊதியம் தொடர்பான போராட்டத்தை, ஒரு சமூகஜனநாயகத்தின் சமூகநலம் சார்ந்த திட்டமாகப் (social democratic welfare framework) பார்க்கிறார்கள் என்பதாகும். இந்தக் கோரிக்கையானது பெண்கள் சிறு தொகையை ஊதியமாக பெறுவதை சாத்தியமாக்கும். ஆனால் இதற்கும் மேலாக இவர்களது கோட்பாட்டு அக்கறையானது, பெண்களது தற்போதைய நிலைமை என்பதை மையமாகவைத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்கறை கொள்கிறதேயொழிய, பெண்கள் எதிர்காலத்தில் அடைய விரும்பும் இலக்கு தொடர்பாக கவலை கொள்வதாக இல்லை.

சல்மா ஒரு கடினமான கேள்வியைக் கையாள முனைகிறார். இலட்சக்கணக்கான பெண்கள் தினமும் எவ்வித ஊதியத்தையும் பெறாமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தொழிற்சாலையில் வேலைக்கு செல்லும்போது, முதலாளித்துவத்தின் இயல்பானது, (அதிகரித்த தொழிலாளரின்சேமப்படைகாரணமாக) ஊதியத்தை குறைத்து ஏற்கனவே தொழிற்சாலைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியவர்களுக்கு எதிராக இந்த புதிதாக வேலைதேடிவரும் பெண்களை நிறுத்தும். தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக தொடர்ச்சியாக பாடுபடும் சல்மா அவர்கள், பெண்களது சுயமான செயற்பாட்டை இதற்கு முதன்மையானதாக கருதுகிறார். இதன்மூலமாக முதலாளித்துவத்தை அனைத்து உழைக்கும் மக்களதும் தெளிவான இலக்காக திட்டவட்டமாக குறித்துக் காட்டுகிறார்.

சல்மாவின் நிகழ்ச்சித்திட்டமானது முதலாளித்துவத்திற்கான தீர்வாக தெரியவில்லை: மாறாக, வேலைத்தளத்திலும், வீட்டிலும் நிகழும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும், கூலி உழைப்பு ஆகியவற்றை இல்லாமற் செய்வது என்ற இலக்கின் இடைக்கால வேலைத்திட்டமாக இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். பெண்களது யதார்த்த வாழ்க்கை எங்கே இருக்கிறதோ, அதனை தொடக்க புள்ளியாகக் கொண்டு தனது அரசியல் மற்றும் மூலோபாயம் என்பவற்றிற்கான கோட்பாட்டாக்கம் செய்வதன் மூலமாக ஒரு துணிச்சலான செயற்பாட்டை செய்கிறார். பெருந்தொகையான பெண்களின் உற்பத்தி நிலையம் ஒரு கார் தொழிற்சாலையோ அன்றி அலுவலகமோ அன்றி, வீடுதான் என்ற உண்மையை எத்தனைதான் கோட்பாடுகள் வந்தாலும், என்னதான் தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டாலுங்கூட, இந்த உண்மையை மாற்றிவிடமுடியாது. யாராவது ஒருவர் மாணவர்களைப் பார்த்து ஒரு வேலை தேடிக் கொள்ளுங்கள் என்றோ, விவசாயிகளை நீங்கள் தொழிலாளர் வர்க்கமாகுங்கள் என்றோ, தொழிலாளர்களை நீங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முன் புரட்சியாளர்களாக ஆகுங்கள் என்று கூறுவதில்லை. ஏன் இது வீட்டில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டும் மாறுபட்டதாக அமைய வேண்டும்?

முதலாளித்துவ சமூகமானது உழைக்கும் மக்களின் உழைப்பு சக்தியை சுரண்டுவதற்கான பல வழிகளை கொண்டுள்ளது. இதில் ஒன்றுதான் ஊதியம் வழங்கப்படாத பெண்களின் உழைப்பாகும். உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த குடும்பங்கள் முறையாக தொழிற்படுவதற்கு, பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் மிகவும் முக்கியமானவை. இவ்வளவு காலமும், அது அங்கீகரிக்கப்படாததாகவும் மற்றும் முதலாளிகளுக்கு எந்தவித செலவும் அற்றதாகவும் இருந்து வந்துள்ளது. வீட்டில் செய்யப்படும் வேலைகளின் பெறுமதியை அங்கீகரிக்காது விடுவதன் மூலமாக முதலாளித்துவமானது மிகப்பாரிய அளவிலான நன்மைகளைப் பெற்றுள்ளது. இந்த ‘இலவச இணைப்பை’முடிவுக்கு கொண்டுவர சல்மா விரும்புகிறார். இது முதலாளித்துவம் இன்னும் அதிகளவில் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது என்பதற்காக அல்ல: மாறாக, வீட்டில் உள்ள பெண்களதும், பொதுவில் தொழிலாளர் வர்க்கத்தினதும் மூலோபாயரீதியான தேவைகளுக்காக செய்யப்படுகிறது.

கேள்வி எழுப்பப்பட வேண்டிய இன்னும்பல விடயங்களும் உள்ளன. சல்மா இலக்காக கொள்ளும் ஊதியமற்ற உலகத்திற்கு செல்வதற்கான இடைக்கால நிகழ்வாக, பெண்களின் வீட்டு வேலைகளுக்கான ஊதியம் வழங்குவது என்பது எவ்வாறு திகழும்? வீட்டு வேலைகளுக்கான ஊதியத்தை அரசாங்கம் வழங்குவதானது, உழைக்கும் வர்க்கப் பெண்கள் அரசில் மேலும் தங்கியிருக்க வேண்டிய நிலைமையை உருவாக்காதா? இது எவ்வாறு பொதுவில் தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மையாக அமையும்? வீட்டில் வேலை செய்யும் பெண்களதும், தொழிலாளர் வர்க்கத்தினதும் தேவைகளை எப்படிப்பட்ட அமைப்பானது கையாளும்? எந்த அடிப்படையில் இவர்கள் அனைவரும் இணைந்து செயற்படுவர்?

தொழிலாளர் சேமப்படையானது, தொழிலாளர்களது கேந்திரரீதியான எதிரியென்று கருதும், ஒரு கோட்பாட்டின் வெளிச்சத்திலும், வர்க்க போராட்டத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் மனைவியர் தொழிலாளர்களது முதன்மையான பங்காளர்கள் என்பது பற்றி எதுவுமே குறிப்பிடாதவர்களுமான மரபார்ந்த தொழிற்சங்கவாதிகளது நிலைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது, சல்மாவுடைய இந்த நிலைப்பாடானது பகைமையானதாக தோன்றக்கூடும். யதார்த்தத்தில் இந்தவிதமான சிந்தனைச் சட்டகத்தை உடைப்பதற்காகத்தான் சல்மா அவர்கள் முயல்கிறார். தொழிலாளர் வர்க்கத்தை உற்பத்தியின் தளத்தில் மாத்திரம் தேடாமல், மூலதனமும், தொழிலாளர் வர்க்கமும் செயற்பட அத்தியாவசியமான ஏனைய தளங்களிலும் தேடவேண்டும் என்கிறார். “வீட்டு வேலைக்கான ஊதியத்தை பெறுவதற்கான போராட்டத்தில் எந்தளவிற்கு நாம் வெற்றி பெறுகிறோமோ, அந்தளவிற்கு நாம் ஊதியமற்ற தொழிலாளர் சேமப்படையாக இருந்துகொண்டு, தொழிற்சாலைக்குள் வேலை நேரத்தை குறைப்பதற்காகவும், ஊதியத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு (மற்றும் ஆண்களுக்கும்) அச்சமூட்டுபவர்களாக இருப்பதை மறுதலிக்கமுடியும்”. உற்பத்திச் செயற்பாடு நடைபெறும் கணத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மாத்திரம், தனித்து தமது போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்று சல்மா நம்புகிறார். வேலையற்றவர்கள் இந்த வேலைநிறுத்தங்களை முறியடிப்பதில் வகிக்கும் பாத்திரத்தை சல்மா ஏற்றுக் கொள்கிறார். வீட்டு வேலைக்கான ஊதியத்திற்கான கோரிக்கையானது, பெண்களுக்கு போதிய பலத்தைக் கொடுக்கிறது. இதனால் இவர்கள் தாம் தொழிற்சாலைக்குச் சென்று, தொழிலாளர்களது பேரம்பேசும் ஆற்றலை முறியடிப்பதற்கான தூண்டுதலை எதிர்த்துப் போராடமுடிகிறது.

வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களை தனிமைப்படுத்தும் நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை. உண்மையில் இந்த கட்டுரையில் முன்பகுதியில் குறிப்பிட்டது போல, வீட்டு வேலைகள் முதலாளித்துவ சமூகத்தில் முக்கியமானதொரு சமூக செயற்பாட்டைக் கொண்டுள்ளதாக இவர் பார்க்கிறார். வீட்டுவேலைகள் மூலமாக பெண்கள் அமைப்பாவதும், இந்த அமைப்பாதல் மூலமாக சமூக ஊடாட்டத்தில் பங்குபற்றுவதும் சாத்தியமாகும் என்கிறார். பெண்கள் தாம் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு ஊதியம் பெறுவதற்காக அணிதிரளலாம். “நாம் பெண்களுக்கு வேறு ஒரு வேலை வழங்குவதைவிட, சமூகத்தில் செயல்படுவதற்கான ஒரு நிலைமையை ஏற்படுத்தலாம். அமைப்பின் பலத்தையும், போராட்டத்தையுமே இவர்களுக்கு நாம் வழங்கலாம்”.

ஆழமான பரிசீலனை

சல்மா ஜேம்ஸ் உடைய வாதங்கள் புரிந்து கொள்வதற்கு சிக்கலானதும், மிகவும் நுட்பமானதுமாகும். இவரது கண்ணோட்டங்களை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு, நாம் இவர் ஒரு பகுதியாக இருந்த அரசியல் இயக்கத்தின் அசைவியக்கத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். குறிப்பாக, இவருடைய வழிகாட்டியும், இணை சிந்தனையாளருமான சி.எல்.ஆர். ஜேம்ஸின் (CLR James) கண்ணோட்டம் மற்றும் அவரது முன்மொழிவுகள் போன்றவற்றுடன் இணைத்து பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். சி.எல்.ஆர். ஜேம்ஸ் உடன் சல்மா ஜேம்ஸ் இணைந்து American Civilization உடைய 1956ஆண்டு பதிப்பை வெளியிட்டார்கள். இன்னும் சி.எல்.ஆர் உடைய ஊக்குவிப்புடன் சல்மா ஜேம்ஸ் ‘ஒரு பெண்ணின் இடம்’ ( A Woman’s Place) எனும் ஒரு சிறிய கையேடு ஓன்றையும் வெளியிட்டிருந்தார். இது 1953இல் வெளிவந்தது. சி.எல்.ஆர் அவர்கள் ‘ஒவ்வொரு சமையற்காரரும் ஆட்சி செய்யக்கூடியவரே’(Every Cook Can Govern) எனும் தலையங்கமுடைய கையேட்டினை வெளியிட்டார். இது இவருடைய தத்துவத்திற்கு அடிப்படையாகவும் இருந்தது. இது நிபுணர்கள் மற்றும் அதிகாரவர்க்க சமூகம் ஆகியவற்றிற்கு எதிரான வலிமை மிக்க அறிக்கையாக அமைந்தது. அத்துடன் நேரடியான ஜனநாயகம் எனும் கொள்கை மூலம் நிர்வகிக்கும் ஒரு உலகத்திற்கு அழைப்பு விடுத்தது. புராதனகால ஏதென்சின் உதாரணங்களைப் பயன்படுத்தி, நேரடியான ஜனநாயகம் என்பது ஒருவித நிர்வாக வடிவம் என்பதையும், இங்கு சகல சமூக, பொருளாதார மற்றும் நீதி தொடர்பான விடயங்கள் யாவும் சமூக அங்கத்தவர்கள் அனைவரின் பங்கு பற்றுதல்களினாலும், மற்றும் அவர்களால் நடாத்தப்படும் ஆலோசனை சபைகளினாலும் மற்றும் செயற்குழுக்களினாலும் தீர்மானிக்கப்பட்டன என்றும் விளக்குகிறார். அதிகாரவர்க்கம் அல்லது மேட்டுக்குடியினர் சமூகத்தை நிர்வகிக்க வேண்டியதாக இருக்க வேண்டியதில்லை என சி.எல்.ஆர் வாதிடுகிறார்.

அப்படியானால், சி.எல்.ஆரின் ‘ஒவ்வொரு சமையற்காரரும் ஆட்சி செய்யலாம்’ என்ற பிரசுரத்திற்கும் சல்மா ஜேம்ஸ் அவர்களின் வீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கத்திற்கும் என்ன உறவு? சி.எல்.ஆரின் நேரடியான ஜனநாயகம் எனும் தத்துவம், சல்மா ஜேம்ஸின் பல கருத்துக்களை மிக நுட்பமாக தெளிவு படுத்துகின்றன. உழைக்கும் பெண்களும் மற்றும் வீட்டில் பணிபுரியும் பெண்களும் எதிர்நோக்கும் போராட்டங்களை முனைப்பாக பார்க்கும்போது, இந்த பெண்கள் இப்போதே சுய-ஆட்சியாளர்களாக (Self-governing) ஆகலாம். இதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று சல்மா கூறுகிறார். வீட்டில் பணிபுரியும் பெண்களை “முன்னேற்றம்”அல்லது விடுதலைக்கு நோக்கி வழிநடத்திச் செல்லப்பட வேண்டும் என அவர் வாதிடவில்லை. மாறாக, இவர்கள் ஏற்கனவே தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான பலமான நிலையிலேயே உள்ளனர் என்ற கருத்தை முன் வைக்கிறார். சுய-ஆட்சியாளர்கள் என்றவகையில், பெண்களது உள்ளார்ந்த உணர்வுகள் வெளிப்படுவதை நிரூபிக்கும் ஆதாரங்களை பெருமளவில் சல்மா முன்வைக்கிறார். இப்படியான சந்தர்ப்பங்களில், பெண்கள் தம்மை இரண்டாம்தர பிரசைகளாக்க எடுக்கப்படும் செயற்பாடுகளை பல்வேறுவிதங்களிலும் ஏற்கனவே முறியடித்துள்ளார்கள்: வீட்டில் கணவனுடனான உறவிலாகட்டும், வீட்டிற்கு வெளியே முதலாளிகள், தொழிற்சங்க தலைமைகளுடன், மற்றும் சமுதாயத்தில் அதிகாரவர்க்கத்துடனான உறவிலாகட்டும் இது ஏற்கனவே நடந்துகொண்டேதான் இருக்கிறது.

‘பெண்கள், தொழிற்சங்கம், வேலை’என்ற படைப்பில், பெரிய பிரித்தானியாவில் நடைபெற்ற ஒரு சுரங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தின்போது, வேலை நிறுத்தத்தின் அர்த்தம் என்ன? என்பது தொடர்பாக கூறும் போது சல்மா ஜேம்சின்எழுத்துக்களில், நாம் சி.எல்.ஆரின் செல்வாக்கினை காணக் கூடியதாக இருக்கிறது. “இங்கு சுரங்க தொழிலாளர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்னவெனில், இவர்கள் தமது தொழிற்சங்கங்களில் தங்கியிருக்கவில்லை. மாறாக, இவர்கள் தமது சுய-அமைப்புக்கள் மற்றும் தமது சுயமான போராட்ட வழிமுறைகளில் தங்கியிருந்தனர். வேலைநிறுத்த காலத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள், தொழிற்சங்கமானது போராட்டத்தின் எல்லைகளை நிர்ணயிக்க முனைந்தது. உதாரணமாக தொழிற்சங்கமானது தொழிலாளர்களை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுமாறு கேட்டபோது, அல்லது முனைப்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை உற்சாகப்படுத்தாது இருக்க முயற்சித்தபோது, அல்லது பெண்கள் சுயமாக அமைப்பாக்கம் செய்வதை தடுக்க முனைந்தபோது, சுரங்க தொழிலாளர் சமூகமானது தமது சொந்த சுயாதீனமான வழிமுறைகளைக் கையாண்டது”.

நேரடி ஜனநாயகம் எனும் சி.எல்.ஆர் உடைய கருத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, சல்மாவின் செயல் திட்டங்கள் இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, வீட்டு வேலைகளுக்கான ஊதியம் எனும் இயக்கமானது, வெறுமனே சீர்திருத்திற்கான இயக்கமல்ல. இது ஆண்களிடமிருந்தும், மூலதனத்திலிருந்தும் பெண்களது சுயாதீனத்தை அதிகரிப்பதற்கான போராட்டமாக அமைகிறது. “நாம் எந்தளவிற்கு எமது கோரிக்கையான வீட்டுவேலைக்கு ஊதியம் என்பதை வலியுறுத்தி, எமது வலிமையையும் வெளிப்படுத்துகிறோமோ, அந்தளவிற்கு, முதல்தடவையாக, நாம் எமது கோரிக்கைகளுக்கு ஆண்களது ஆதரவை பெருமளவில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்”. இன்னொரு சந்தர்ப்பத்தில், “நாம் வீட்டில், அவர்களில் தங்கியிருந்து ஊதியமற்று பணியாற்றுவதால்தான் ஆண்கள் தாம் ஊதியம் பெறும் வேலையில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுகிறார்கள்”, என்று குறிப்பிடுகிறார்.

மேலே உள்ள பந்தியில் சல்மா அவர்கள் பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் பன்முகப்பட்ட தளங்களை எடுத்துக் காட்டுகின்றார்: ஆணாதிக்கத்திற்கும், மூலதனத்திற்கும் எதிரான போராட்டம். முதலாவது பகுதியில், ஆண்கள் கட்டாயம் ஆதரித்தாக வேண்டிய வகையில் தனது நிகழ்ச்சிநிரலை முன்வைக்கிறார். இரண்டாவது பகுதியில், வீட்டுவேலைக்கு ஊதியம் என்ற குறிப்பான கோரிக்கையை, வர்க்க போராட்டம் என்ற விரிவான பின்புலத்தில் வைக்கிறார். ஒருவரே ஊதியம் பெறுபவராக இருப்பது, தொழிலாளர் வர்க்கத்திற்கு சிக்கலானதாக இருப்பதை இனம்காணும் சல்மா, ஒரு குடும்பத்தில் இருவர் ஊதியம் பெறுபவர்களாக இருப்பதானது, மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதை காண்கிறார்.

இதனால் கிடைக்கும் நன்மைகள் சல்மாவிற்கு தெளிவாக தெரிகின்றன. “நாம் எந்தளவிற்கு எமது பலத்தை அணிதிரட்டுகிறோமோ, அந்தளவிற்கு நாம் எமக்கு எதிராக ஆணாதிக்க சித்தாந்தத்தை உருவாக்கும், மற்றும் அதற்கு ஆண்களை கீழ்ப்படியவைக்கும் அதிகார உறவுகளை பலவீனப்படுத்துகிறோம்”. பெண்கள் ஊதியத்தை கோரும்போது, அவர்கள் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தமது உடலை மீட்டெடுப்பதற்காக போராடுகிறார்கள். இந்த செயற்பாடானது, பெண்கள் தொழிலாளர் சேமப்படையில் அங்கத்தவர்களாக இருப்பதில் இருந்தும் அவர்களை விடுவிக்கிறது, என்று சல்மா விளக்குகிறார்.

இரண்டாவது, இவர் “கிராம”மற்றும் “நகர”பெண்களின் பொதுவான அநுபவங்களை இணைப்பதுடன், பெண்களின் சுயாதீனத்தன்மை தொடர்பான மூலோபாயத்தில் காணப்படும், “நவீன”முதலாம் உலக நாடுகள், மற்றும் “பின்தங்கிய” மூன்றாம் உலக நாடுகள் ஆகியவற்றுக்கிடையிலான பிளவுகளையும் தகர்க்கிறார். “நாம் மூன்றாம் உலக நாடுகளது குறைவிருத்திக்கும், மைய நாடுகளது, குறிப்பாக அவற்றின் சமையலறைகளின், குறைவிருத்திக்கும், இடையிலான வேற்றுமைகளில் ஒற்றுமையை காணவேண்டும்”. வீட்டு வேலைக்கான ஊதிய இயக்கமானது, இவற்றிடையே ஒருமைப்பாட்டை உருவாக்கும் தனித்துவமான அம்சமாகும்: ஆதலால் இது இன்னமும் விரிவாக ஆராயப்படத்தக்கது. இந்த அம்சமானது, சிறிய கிராம பெண்களது அநுபவங்களை, பெரும் நகரங்களில் வசிக்கும் பெண்களது அநுபவங்களில் இருந்து வேறுபடுத்த மறுக்கிறது. அத்தோடு முதலாம் உலக நாடுகளில் வசிக்கும் “விடுதலை பெற்ற” பெண்களது நிலைமையை, மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் “பின்தங்கிய” பெண்களின் நிலைமைகளில் இருந்து பெரியளவில் வேறுபடுத்திப் பார்க்க மறுக்கிறது. இது பெண்களது ஒருமைப்பாட்டிற்கான புதுமையான அணுகுமுறையாக அமைகிறது.

நகரமும் கிராமமும், முன்னேற்றம், நவீனத்துவம், மற்றும் நாகரீகம் போன்றவற்றில் வேறுபாடுகளையே பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன: மேலும் இவை வாழ்க்கையின் இரு எதிரெதிரான வாழ்க்கை முறைகளை சுட்டிக்காட்டுவனவாக இருக்கின்றனவாகவும், பொதுவான விடயங்களைச் சிறிதளவே கொண்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இந்த கண்ணோட்டமானது இவற்றிற்கிடையே, அதாவது நவீன மற்றும் வரலாற்றுரீதியாக “பின்தங்கிய” வற்றிற்கிடையே, காணப்படும் ஒருமைப்பாடுகளைப் பார்க்க மறுக்கிறது. இந்த சார்பளவில் முற்போக்கானது எனும் ஒப்பீடானது பல முற்போக்கு மற்றும் தீவிர பெண்ணிய அமைப்புக்களினாலும் பயன்படுத்தப்படுகிறது: இந்த ஒப்பீடானது பெண்ணொடுக்குமுறை தொடர்பாக ஒரு முழுமையான, நிறவெறி எதிர்ப்பையும் (anti-racist) உள்ளடக்கிய ஒரு புரிதலை உருவாக்குவதில் முரண்பாடுகளை தோற்றவிக்கிறது. இந்த கண்ணோட்டமானது, மூன்றாம் உலக நாடுகளில் வாழும் வெள்ளையினத்தவரல்லாத (colour) பெண்கள், தம்மை விடுவித்துக் கொள்வதற்காக, முதலாம் உலகநாடுகளில் வாழும் “விடுதலை” பெற்ற தமது சகோதரிகளது வாழ்க்கைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தும் அபத்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகளிலுள்ள வெள்ளையின மத்தியதர வர்க்க பெண்ணியவாதிகளது இவ்வாறான “கற்றுக்கொடுக்கும்” நடவடிக்கைகள், இவர்களை கொலனித்துவ காலத்து மிசனரிகள் பின்தங்கிய நாட்டு மக்களது மீட்சிக்காக செயற்பட்டது போன்றதொரு பாத்திரத்தை வகிக்குமாறு ஆக்கிவிடுகிறது. இறுதியில் இவர்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களை விடுவிப்பதற்காகவே சென்றதாக ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் ஜோர்ஜ் புஷ் போன்ற பிற்போக்கான நிறவெறி பிடித்த ஆணாதிக்கவாதிகளது கரங்களில் கருவிகளாக செயற்பட வைத்துவிடுகிறது.

மக்கள் கற்பனை செய்வது போல நகர்புற மற்றும் கிராமப்புற பெண்கள் சுதந்திரமாக இல்லை என வீட்டுவேலைக்கான ஊதியத்திற்காக போராடும் இயக்கம் வாதிடுகிறது. சூட்சுமப்படுத்தப்பட்டதும், முன்னேற்றகரமானதும், விடுதலை பெற்றதுமான பட்டினத்து பெண்களுக்கும், பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கும் இடையில் இருப்பதாக கூறப்படும் போலியான வேறுபாடுகளைக் கடப்பதற்கு இந்த இயக்கமானது முயல்கிறது. இவற்றை தெளிவாக காணும் சல்மா அவர்கள், முதலாளித்துவம் வழங்கும் போலியான அபிவிருத்தி பற்றிய சிந்தனைகளை அப்பலப்படுத்த தயங்குவதில்லை.

“மூன்றாம் உலக நாடுகளை ‘அபிவிருத்தி’ செய்வதற்கான முன்மொழிவுகளை முதலாளித்துவ திட்டமிடலாளர்கள் வைக்கிறார்கள். அந்த நாடுகள் தற்போது முகம்கொடுக்கும் வேதனைகளுடன், தொழில்துறை எதிர்-புரட்சியின் வேதனைகளையும் சேர்த்து அது அநுபவித்தாக வேண்டியிருக்கிறது. மேற்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இதேவிதமான ‘உதவிகளையே’ வழங்குகிறார்கள். ஆனால் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியே வேலைக்கு வந்துவிட்ட பெண்களாகிய நாம் ஏனைய பெண்களை எச்சரிக்கிறோம்: பணவீக்கமானது எம்மை இந்த அலுவலக காரியதரிசி வேலையிலும், தொழிற்சாலை அசெம்பிளி லைனிலும் இறுக்கமாக பிணைத்துவிட்டுள்ளது. ஆனால் இங்கு எந்தவிதமான விமோசனமும் உங்களுக்காக காத்திருக்கவில்லை”.

முதலாளித்துவ அல்லது நிலபிரபுத்துவ வேலை உறவுகளோ – அது வீட்டிலோ, தொழிற்சாலையிலோ, அலுவலகத்திலோ – பெண்களது விடுதலைக்கான வழியாகாது. “உழைக்கும் பெண்கள் வீட்டிற்கு திரும்பி தனிமைப்பட்டுப் போகாமல் இருப்பதே (திங்கட்கிழமை காலையில் அது நல்லதொரு மாற்றாக தோன்றினாலுங்கூட) ஒரு போராட்டம்தான்! அவ்வாறேதான், வீட்டுவேலைகளை செய்யும் ஒரு பெண், வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கு மாற்றாக அலுவலக மேசைகள் மற்றும் இயந்திரங்களுடன் மாரடிப்பதற்கு செல்லாமல் இருப்பதும் ஒரு போராட்டம்தான்”!

கிராமப்புறம் மற்றும் நகர்புறம் என்பவற்றிற்கிடையிலான பிரிவு பற்றி நாம் விவாதிக்கும் போது கலாச்சாரம், மதம் மற்றும் இனத்துவ அம்சங்களும் சேர்ந்து எது முன்னோற்றமானது, எது பிற்போக்கானது என்பதை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கின்றன. சில அறிவிப்புப்பலகைகள், முன்னேற்றம் மற்றும் பெண்விடுதலைக்கான சாத்தியப்பாடு பற்றி குறிப்பிடுகின்றன. இன்னும் சில அறிவிப்புப்பலகைகள் குறிப்பிட்ட ஒரு சமுதாயம், குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டங்களை அடையும் வரையில் காத்திருக்குமாறு குறிப்பிடுகின்றன. நவீனத்துவம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை எட்டியள்ள நகரங்களே அபிவிருத்தியின் தரத்தை நிர்ணயம் செய்வதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நகர்ப்புற சமூகத்தில் தொழிற்சங்கம், நிர்வாகம், வர்க்கம் போன்ற அனைத்தும் பெண்ணின் விடுதலைக்காக இணைந்து செயற்பட முடியும் என்று கருதப்படுகிறது. முற்போக்குவாதிகள் கூட நவீனத்துவத்தை பெண்விடுதலையை சாத்தியப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக காண்கின்றனர். சல்மா அவர்கள் இதற்கு எதிர்நிலையில் வாதிடுகிறார். ஏனைய பெண்ணியவாதிகள் இந்த பிரச்சனையை எவ்வாறு கையாண்டு உள்ளார்கள்? இவர்கள் பற்றிய ஒரு மேலெழுந்தவாரியான பார்வையானது, நகரம் மற்றும் கிராமம் ஆகியவற்றிற் கிடையில் உள்ள பிளவுகளை தகர்ப்பதில் சல்மாவின் முயற்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் காட்டவல்லது.

பெண்களின் விடுதலை எங்கே சாத்தியமாகலாம் என்பது தொடர்பாக ஜூலியற் மிஷேல் (Juliet Mitchell) கருத்து தெரிவிக்கையில்: “அநேகமாக நன்கு விருத்தியடைந்த மேற்கிலுள்ள சமுகங்களிலேயே, இன்று ஒரு உண்மையான பெண்களின் விடுதலை குறித்து சிந்திக்க கூடியதாக இருக்கிறது” என்று கூறுகிறார். தனியே மிஷேல் மட்டும் இக்கருத்தைக் கொண்டிருக்கவில்லை. 1968இல் ‘பாலியல் அரசியல்’ (Sexual Politics) என்ற கட்டுரையில்; கேற் மிலேற்(Kate Millet) சர்வதேச அளவில் நடக்கும் பெண்கள் மீதான அடக்குமுறைகளை வகைப்படுத்துகிறார். இந்த முயற்சியானது பிராந்திய எல்லைகளைக் கடந்ததாக, மத்திய கிழக்கையும் உள்ளடக்கியதாக அமைகிறது. “...இஸ்லாத்தின் முகத்திரையானது (அல்லது பலவீனப்படுத்தப்பட்ட மனித ஆத்மாவானது, தனது வாழ்க்கையின் பாதியை துணியால் ஆன சாக்கினால் மூடியிருக்குமாறு தண்டிக்கப்பட்டுள்ளது)”. பழைய சீனாவில் நடைமுறையில் இருந்த பெண்களது கால்களை கட்டிவைக்கும் பழக்கம், மற்றும் பழங்குடி சமூகங்கள் பற்றிய ஆய்வுகள் காட்டும் ஏனைய இப்படிப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றால் ஆன, பெண்கள்மீதான கொடுங்கோன்மை குறித்து ஒரு விரிவான பட்டியலை இவர் முன்வைக்கிறார்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் பற்றிய இந்த பிளவை கடந்து வராதவரையில், பெண்விடுதலையானது அதனால் விமர்சிக்கப்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஆண்கள் முன்னெடுக்கும் ‘போலிப்பெருந்தன்மை’ (Patronalism)நடைமுறையிலேயே சிக்கியிருக்கும். குறைவிருத்தியடைந்த நாடுகளையும், நவீனமான நாடுகளையும் சேர்ந்த பெண்களை ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் இணைப்பதற்கான இழையை சல்மா இங்கு காண்கிறார்.

பெண்களது அமைப்புரீதியான செயற்பாடுகள் எவை?, மற்றும் அவர்களுடைய சாத்தியமான கோரிக்கைகள் எவையாக அமையலாம்? என்பவை பற்றி சல்மா சில ஆரம்ப வரைபுகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் எவற்றை பெண்கள் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்? இந்த கோள்வியை நாம் இரண்டு கண்ணோட்டங்களில் இருந்து நாம் பார்க்கலாம்: அமைப்புரீதியானது ஒன்று, அரசியலரீதியாது மற்றயது. சல்மாவின் கருத்துப்படி, “பெண்கள் இயக்கத்திற்கு இன்று இருக்கும் சவாலானது சரியான போராட்ட வழிமுறையை கண்டுபிடிப்பதாகவும்: இந்த வழிமுறையானது பெண்களை வீட்டில் இருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும்: அதே வேலை ஒரு புறம் இரட்டை அடிமைத்தனத்தை தவிர்ப்பதாகவும் இருக்க வேண்டும்: மறுபுறமாக, முதலாளித்துவத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் அதன் கெடுபிடிகளுக்குள் (Regimentation)சிக்க வைக்காததாகவும் இருக்கவேண்டும்”.தொழிலாளர் வர்க்க நிறுவனங்கள் தொடர்பாக நிலவும் கடந்தகால கருத்துக்ளை தகர்த்தெறியக் கூடிய புதிய அமைப்பு வடிவங்களை உருவாக்கிக் கொள்வதற்கான ஆற்றல் பெண்களிடம் இருப்பதாக சல்மா நம்புகிறார். அவர் தற்போதறை அமைப்பு வளர்ச்சிநிலையை மதிப்பிடுகிறார், “பெண்களது தற்போதய அமைப்புரீதியான வளர்ச்சியானது மிகவும் குறைவானதாக இருக்கிறது...” என்கிறார்.

தொழிற்சங்கங்களில் தங்கியிருப்பதற்கு பதிலாக, மரபுடன் முறித்துக்கொள்ளும் புதிய அமைப்புக்களை சல்மா மாற்றாக கருத்தாக்கம் செய்கிறார். அவர் இந்த அமைப்புக்களை சுதந்திரமான - நடப்பிலுள்ள எல்லா அதிகார அமைப்புகளில் இருந்தும் சுதந்திரமான - அமைப்புக்கள் என்று விபரிக்கிறார். வாசகர்களுக்கு இதனை சரிவர புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருக்கும் என்பதை சல்மா ஏற்றுக்கொள்கிறார். “ஆயிரக்கணக்கான பெண்கள் அமைப்புக்களில் இயங்காமல் இருக்கும்போது, இதனை உருவாக்குவது மாத்திரம் அல்ல, கருதிப்பார்ப்பது என்பதுகூட கடினமாகத்தான் இருக்கும்”. சல்மாவின் கருத்துப்படி, இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் தோற்றமானது பெண்கள் வேலைத்தளத்திற்கு போகாமல் மட்டம்போடுவதில் (absenteeism) அடங்கியிருக்கிறது. பெண்கள் வேலைக்கு மட்டம்போடுவது என்பது வேலைத்தளத்தில் உள்ள உறவுகளின் சிக்கலான பிரச்சனையின் குறியீடாக அமைகிறது: இந்த பிரச்சனைக்கு எதிராக பெண்கள் எப்போதும் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்டமானது, இந்த தனிப்பட்ட கலகத்தை அமைப்புரீதியாக ஒருங்கிணைப்பதில் தங்கியிருக்கிறது.

‘பெண்கள், தொழிற்சங்கம், வேலை’எனும் படைப்பில் சல்மா அவர்கள், பெண்கள் எவ்வாறான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தியுள்ளார். அவர் பின்வரும் கோரிக்கைகளை பட்டியல் இட்டுள்ளார்:

1. குறைந்தளவு வேலைநேரம்.
2. வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வருமான உத்தரவாதம்.
3. இதன் அடிப்படையில் எமது உடல்மீதான கட்டுப்பாடு.
4. அனைவருக்கும் சமமான சம்பளம்.
5. விலை அதிகரிப்புக்களை நிறுத்தல்.
6. சமூக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலவச சிறுவர் பராமரிப்பகங்கள் மற்றும் மழலையர் கல்வி கூடங்கள் (nurseries and child care)

இந்த அரசியல் அடிப்படையிலேதான் சல்மா வீட்டிலும் மற்றும் தொழில்சாலைகளிலும் வேலை செய்யும் பெண்களை ஒன்றிணைக்க விரும்புகிறார். இந்த கோரிக்கைகள் தொழிலாளர் வர்க்க பெண்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவை - உண்மையிலே இங்கு தான் பெண்களின் விடுதலையை தெளிவாக வரையறுக்கலாம் எனக் இவர் கருதுகிறார்.

அரசியல் திட்டம் மற்றும் அமைப்பு கோட்பாடு ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலமாக இவர் பெண்களின் விடுதலைக்கு தடையாக உள்ள அம்சங்களை தகர்த்துக்கொண்டு வெளியேவர முயல்கிறார். இதன்மூலமாக ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி முன்வைக்கிறார். “நாம் பெண்களை எல்லா இடங்களிலும் அமைப்பாக்கம் செய்யலாம்: அவர்கள் ஊதியத்திற்கு பணியாற்றும் இடமாக இருக்கட்டும், அவர்கள் செல்லும் இடங்களாக இருக்கட்டும், எங்கே வாழ்ந்து, உழைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் அமைப்பாக்கம் செய்வோம். பல தொழிற்பேட்டைகளில் வாழும் பெண்கள் தமது வேலைத்தளங்களுக்கு அருகிலேயே கடைகளுக்கு வருகிறார்கள். அங்கேதான் அவர்கள் தமது இரவு உணவுக்கான நேரத்தில் பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள். இவற்றிற்கு அருகிலேயே இவர்கள் வாழ்கிறார்கள். நாம் இந்த இடங்கள் எல்லாவற்றிலும் துண்டுப்பிரசுரங்களை வழங்கலாம். மிகவும் அழுத்தம் தரும் பிரச்சனைகளை இலக்காகக் கொண்டு அணிதிரட்டலைச் செய்யலாம்”. எந்தவொரு எதிர்கால அமைப்பிலும் பெண்கள், ஆண்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வரை காத்திருக்க தேவையில்லை. மாறாக, பெண்கள் செய்வதற்கு ஆதரவாக ஆண்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி நாம் அவர்களைக் கேட்கலாம்என்கிறார் சல்மா.

தற்போதைய நிகழ்வுகளுக்கு: பெண்களின் விடுதலை மேலிருந்தா அல்லது கீழிருந்தா?

ஒரு பக்கத்தில், சல்மா ஜேம்ஸ் பெண்களின் சுயாதீனம், சுயமான செயற்பாடு மற்றும் சமூக ரீதியான அதிகாரம் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகிறார். ஆனால் அதேவேளை இங்கு சுவாரசியமான முரண்உண்மையொன்று உருவாகிறது. அண்மையில் வெனிசுவேலா அரசாங்கத்திற்கு ஆதரவான இவரது இயக்கத்தின் குறிப்புக்களை பார்க்கும்போது இது ஏற்படுகிறது. ‘கார்டியன்’பத்திரிகையில் சல்மா இவ்வாறு எழுகிறார். “வெனிசுவேலாவின் ஜனநாயகமானது பங்குபற்றுதலுடன் கூடியது, இது கீழிலிருந்து மேல் நோக்கியதாக அமைந்துள்ளது. வாக்குச்சீட்டு என்பது ஓர் முதல்படி மட்டுமே”. இவருடைய இறுதி சொற்கள் வெனிசுவேலாவின் புரட்சியானது எதை நோக்கிச் செல்கிறது என்பது பற்றி விளக்குவதாக அமைகிறது. இந்த “முதல்படி”என்பது ஜனநாயகம் மற்றும் பெண்களின் சுயாதீனத்தை பரப்புவதை உள்ளடக்கியதாகும். தேர்தல்கள் நடைபெறும் போது மக்கள் வெளிப்படுத்தும் நம்பிக்கையீனமான மனப்பான்மையைப் பார்க்கும் போது, தமக்கான முடிவுகளை எடுப்பதற்காக யாராவது ஒருவரை தெரிவு செய்வது என்பது உண்மையான அரசியல் அதிகாரத்தை வழங்காது என்பதை உள்ளூர உணர்வதை காட்டுகிறது. இந்த நம்பிக்கையீனமும், அதற்கான காரணங்களும், சாவேஸ் அதிகாரத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த கடந்த கால யதார்த்தத்துடன் தொடர்புடையதாக அமைந்திருப்பதாக சல்மா கூறுகிறார்.

இவர் சாவேஸினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகநல திட்டங்களை பராட்டுகின்றார். ஆனால் உண்மையிலேயே சாவேஸ் அரசியல் நம்பிக்கையீனங்களுக்கான காரணங்களை சாதாரண மக்களிடையே இல்லாதொழித்து விட்டாரா?, தமது பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக வெனிசுவேலா மக்கள் சுயமாக முடிவுகளை எடுப்பதற்கு முடியாதவர்களாக இருப்பார்களாயின், தாம் நிர்வகிக்காத ஒரு திட்டத்திற்கு – அவரது திட்டத்திற்கு – கீழ்ப்படிவாக மக்கள் நடந்துகொள்ளும் வரையில், மக்களை பாதுகாப்பவர் போல காட்டிக்கொள்ளும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் சாவேசும் என்று மக்கள் உணரும்போது, இந்த நம்பிக்கையீனம் மீண்டும் தோன்றமாட்டாது என்பது எமக்கு எப்படி தெரியும்?

சல்மாவின் முன்னைய எழுத்துக்களுடன் இந்த ஆய்வைப் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதில் திடீரென தந்திரோபாய மாற்றம் ஒன்று ஏற்படுவது போல தென்படுகிறது. இது தொடர்பாக வேறு பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆரவந என்ற சஞ்சிகைக்காக லோரா சல்லிவன் (Laura Sullivan)என்பவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு கேட்கிறார்.

“... மக்கள்திரள் அரசியலை மீள்உயிர்ப்பிப்பதை வலியுறுத்தும், பெண்களது பாத்திரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சல்மா அவர்கள், மேலிருந்து கீழ்நோக்கிய அதிகார முறைமையை கொண்டுள்ள ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எவ்வாறு சமரசம் செய்யப் போகிறார்? வேறு விதமாக கூறுவதானால், வெனிசுவேலாவில் பெண்கள் புரட்சிகர போக்கின் நெம்புகோல்களாக இருப்பதாக அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால் எந்த இலக்கிற்காக? தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காக முயல்வதுடன் மட்டுமல்லாமல், அதிகரித்த அளவில் நவ-தாராண்மைவாதத்துடன் சமரசம் செய்து கொள்ள முனையும் (இராணுவ சதிப்புரட்சியின் பின்பு அவர் காட்டிய சலுகைகள்) சாவேஸினுடைய இலக்கும், சல்மாவின் இலக்கும் ஒன்றிற்கொன்று நேரெதிரானவை அல்லவா? மக்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளவர் என்ற வகையில் சாவேஸ் அவர்கள் ஒரு தனித்துவமான தலைவர் என்பதில் ஐயமில்லைதான். பெண்களது முன்னேற்றத்திற்கு மாத்திரமன்றி, ஏனைய எல்லா ஒடுக்கப்பட்ட மக்களது முன்னேற்றத்திற்கும் சாவேஸ் பதவியில் இருப்பது மிகவும் அத்தியாவசியமானதும்தான். ஆயினும், ஒரு அதிகாரப்படிநிலை அமைப்பில் வசீகரமான தலைவராக சாவேஸ் இருப்பது என்பதற்கும், அதிகாரப்படிநிலை அமைப்புமுறையையே தகர்த்துவிடும் ‘வீட்டு வேலைக்கான ஊதிய அமைப்பின்’ இலக்குகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறதல்லவா?”.

வெனிசுவேலாவின் சமூகஅமைப்புக்கள் மீதான சல்மாவின் ஆய்வுகளில், சாவேஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரத்திற்கும், பெண்களின் சுயமான-செயற்பாட்டிற்கும் இடையில் விநோதமான இணக்கம் இருக்கிறதா என்ன? முதலாளித்துவ உறவுகள் என்பவை இயல்பிலேயே சுரண்டலும், காட்டுமிராண்டித்தனமும் மிக்கதாக புரிந்து கொள்ளமால், முதலாளித்துவத்தில் முற்போக்கானதும், பின்தங்கியதுமான இரண்டு வகைகள் இருப்பதாக நம்பும் ஏனைய பெண்ணியவாதிகளை விமர்சிக்கும் சல்மா, அரசில் இதேபோன்ற முற்போக்கானதும், பின்தங்கியதுமான போக்குகள் இருப்பதாக கருதுகிறாரா? சாவேஸ் உழைக்கும் வர்க்க பெண்களுக்கு முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா?

வேனிசுவேலாவின் அரசியல் அமைப்புச்சட்டத்தின் 88வது சரத்தை அமுல் படுத்த சாவேஷ் முனைந்தபோதுதான் இவ்வாறான பல கரிசனைகளும், கேள்விகளும் முன்வருகின்றன. 88வது சரத்தானது, ஊதியமற்ற வீட்டு வேலைகளை பொருளாதாரரீதியில் பயன்மிக்கதாக ஏற்றுக் கொள்கிறது. எண்ணை மூலமாக நாட்டினுள் பெருந்தொகையான பணம் வந்து குவிவதால், சல்மாவின் நீண்டகால கனவான இத்திட்டத்தை அமுல் படுத்துவதற்கான பொருளாதார பலத்தை சாவேஷ்கொண்டிருக்கிறார். சல்மாவின் நீண்டகால ஆய்வுகளில் இருந்து நாம் சாவேசின் இப்புதிய முன்முயற்சி பற்றி என்ன முடிவுக்கு வரலாம்? புதிய சமுதாயமானது அரசுகள் மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் அமைக்கப்பட வேண்டுமா? இந்த இயக்கத்தாரின் இலக்காகிய அதிகாரப்படிநிலையற்ற சமுதாயம் பற்றிய சிந்தனையானது, எவ்வாறு இந்த அதிகாரப்படிநிலை அரசுடன் ஒத்துழைப்பது என்பதுடன் இணங்கிப் போகிறது? வீட்டு வேலைக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது? அரசானது கொடுக்கப் போகிறதா? நவீன சமுதாயத்தின் அடிப்படையான நெருக்கடிகளுடன் ஈடுகொடுப்பதற்கு ஆற்றல் இல்லாத நலன்புரி அரசைவிட (welfare state) இது எவ்விதத்தில் வேறுபட்டதாக இருக்கும்?

சரத்து 88இன் வெற்றியை அளவிடுதல் அல்லது வீட்டு வேலைகளுக்கான ஊதியம் என்பன தனியே அமுல் படுத்துவதில் மட்டுமல்ல, அதனை உருவாக்கும் அரசியல் பின்புலத்திலும் தங்கியுள்ளது. இதில் எப்போதும் உள்ள ஆபத்து என்னவென்றால், சமூகநல அரசு மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகளை நியாயப்படுத்துவதில் இந்த திட்டங்கள் போய்முடியலாம் என்பதுதான். இதனால்தான் இந்த இயக்கத்திற்கான சல்மாவின் நுண்நோக்கு மற்றும் மூலோபாயம் போன்றவை முக்கியமானவையாக அமைகின்றன. வர்க்க உணர்வை உயர்த்தி, கூர்மைப்படுத்தி விடுதலைக்கான திசையில் இட்டுச் செல்வது என்றவகையில் இந்த இயக்கமானது பெண்களுக்கும், ஆண்களுக்கும் வேலைத்தளத்திலும், வீட்டிலும் அதிக சுயாதீனத்தை பெறுவதை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாக அமைகிறது. இந்த விடயமானது மனதில் இருத்தப்படவில்லையானால், இந்த திட்டமானது அன்பான, மிதமான முதலாளித்துவத்திற்கான போராட்டமாக குறுகிவிடும். இப்படிப்பட்ட சீர்திருத்த மூலோபாயம் பற்றி மிகவும் கடுமையான விமர்சனங்களை சல்மாவின் சொந்த எழுத்துக்களிலேயே நாம் காணமுடியும். “மூலதனம் அல்ல, முதலாளிகளே தவறானவர்கள் என்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்திமுறை அல்ல, நாம் எதனை உற்பத்தி செய்கிறோம் என்பதே பிரச்சனை என்கிறார்கள். வர்க்கம் அல்ல தனிநபர்கள் என்கிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் அரசியல் அல்ல தார்மீக போராட்டம் என்கிறார்கள். ஆயுதம் தாங்கிய புரட்சி அல்ல, தார்மீகரீதியான மீள் ஒழுங்குபடுத்தல் என்கிறார்கள். நல்ல, அதிகம் திருப்தியான அடிமைகளது கூட்டத்தை உருவாக்குவதற்கான சிறந்த திட்டமிடுவது என்றாகிறது”.

சாவேஸ் அமுல் செய்த சரத்து 88இன் வெற்றியை எவ்வாறு அளவிடுவது என்பது தொடர்பாக சல்மா எழுத்துக்களிலேயே கராறான அளவுகோல்களை தந்துள்ளார். சாவேஸ் மற்றும் வெனிசுவேலாவின் சமூக இயக்கம் பற்றி சல்மாவின் கூற்றுக்கள் எப்படிப்பட்டனவாக இருப்பினும், இவை பற்றிய மதிப்பீடானது ‘பெண்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் வேலைகள்’, ‘பெண்களின் ஆற்றலும், சமூக கிளர்ச்சியும்’, ‘பால், இனம், வர்க்கம்’ ஆகிய படைப்புக்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டியனவாகும்.

முடிவான எண்ணங்கள்

பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆகியன எதிர்நோக்கும் கடினமான பிரச்சனைகள் தொடர்பாக சில இலகுவான பதில்களை முன்வைக்கும் ஒரு அற்புதமான சிந்தனையாளர் சல்மா ஜேம்ஸ் அவர்களாவர். ஒருமைப்பாடு, சுயமான செயற்பாடு மற்றும் சர்வதேசியம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளைப் பேணிக்கொண்டே ஒரு புதிய மூலோபாயத்தை உருவாக்க இவர் முனைகிறார். பழைய மற்றும் புதுமையான சிந்தனைகளை கையால்வதில் இவரிடம் காணப்படும் மரபைமீறிய திறமையானது முதலாளிகளை மாத்திரம் அச்சுறுத்தவில்லை. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பது தொடர்பாக மிகவும் இறுக்கமான சிந்தனைகளை உடையவர்களுக்கும் இவர் அச்சுறுத்தலாகத்தான் விளங்குகிறார்.

உழைக்கும் வர்க்கம் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவினரதும் விடுதலைக்கான மூலோபாயங்கள் பிரிக்கப்பட முடியாதனவாகும். கூலி அடிமைத்தனம் மற்றும் ஏனைய எல்லாவிதமான அடக்குமுறைகளையும் ஒழிப்பதில் நலன்களைக் கொண்டுள்ள அனைவரையும் உள்ளடக்கியதாக வர்க்க போராட்டத்திற்கான மூலோபாய, சித்தாந்த சாதனங்களை சல்மா ஜேம்ஸ் தந்துள்ளார். வேதனமற்ற உழைப்பின் கேந்திரமானதும், தார்மீகரீதியானதும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலமாக, வேலை செய்பவர்களும், வீட்டிலிருப்பவர்களும் இணைந்து போராடுவதற்கான வழிமுறைகளை சல்மா சுட்டிக் காட்டுகிறார்.இந்த இயக்கமானது பெரிய அளவில் வெற்றி பெறமுடியுமா என்பது தெளிவற்றதாகவே உள்ளது. எனினும் சல்மாவின் கருத்துப்படி நாம் இதனை முயன்று பார்த்தால்தானே.

நன்றி - வியூகம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்