/* up Facebook

Oct 6, 2011

ஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் - கொற்றவை


ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 1000 திரைப்படங்கள் எடுக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கென்று விசேடமாக இந்தியத் திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் திரைத் துறை உலகளாவிய நிறுவனமாக மாறியது. பல பன்நாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்வதும் சமீபகாலங்களில் நடக்கிறது. 2010ன் முடிவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி திரைப்பட தயாரிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, சைனாவையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்தியத் திரைப்படங்கள் 90 நாடுகளுக்கு மேல் வெளியாகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக விற்பனை செய்யப்படும் ‘மென் தட்டானது’ (DVD) 2000ம் ஆண்டு கணக்கெடுப்புப் படி 1.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது. இந்திய இசைத் துறை முக்கிய வருவாய் ஈட்டும் துறையாக உள்ளது. தமிழ் திரைப்படத் துறையானது இந்திய திரைத் துறையில் இரண்டாம் நிலையில் உள்ளது.

திரைப்படமானது மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாகி விட்டதை மறுப்பதற்கில்ல. செலுலாய்ட் ஊடகம் பயன்படுத்தப்படுவதற்கு முன்பாக மேடை நாடகங்கள், தெருக் கூத்து போன்ற வடிவங்களில் மக்கள் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது என்பதை நாம் அறிவோம். வரலாற்றுக்கு முந்தையக் காலக்கட்டத்திலிருந்தே தொலைத் தொடர்புகள் நிகழ்ந்துள்ளன. 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குறியீடுகள் வாயிலாகத் தொடங்கிய இத்தொடர்பு பின்பு 20 லட்சம் வருடங்களுக்கு முன்பு ஒலி வடிவம் பெற்றது, எழுத்து வடிவமானது 7000 ஆண்டுகளுக்கு முன் பரிணமித்துள்ளது. குகை ஓவியங்கள் (cave paintings), கற்பாரை செதுக்குதல் (petroglyphs), உருவ விளக்கப்படம் (pictogram), படவெழுத்து (ideogram) பின்பு எழுத்து என்று தொடர்பு முறையானது பரிணாமம் பெற்றது. ஆதியில் தாங்கள் எதிர் நோக்கும் ஆபத்தான மிருகங்கள், சவால்கள் ஆகியவற்றை மற்றவருக்கு சுட்டிக்காட்டி எச்சரிப்பதற்காக, பின்பு சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்காக என்று படிப்படியாக வளர்ந்து 17 – 18 நூற்றாண்டு வாக்கில் மின்னாற்றல் வழியாக தகவல்களை பரிமாற்றம் செய்யும் மின்னியல் தொழில் நுட்பத்திற்கு முன்னேறியது. 1895 லூமியர் சகோதரர்கள் “சலனப் படம்” (motion picture) கண்டுபிடித்தது உலகளாவிய அளவில் ஒரு புதிய அலையை உருவாக்கியது. மும்பையில் ஒரு திரைப்படத்தை திரையிட்ட பின்னர் இந்தியாவிலும் அத் தொழில் நுட்பம் ஒரு வீச்சை ஏற்படுத்தியது. இன்று உலக வரிசையில் இந்திய சினிமா முன்னணியில் உள்ளது.

புராணக் கதைகள், வரலாற்று சம்பவங்கள், பின்பு குடும்பக் கதைகள் என்று பல்வேறு படைப்பு வகைகள் (genre) உருவாகின. இரண்டாம் உலக் போருக்கு பிந்தையக் காலக் கட்டத்தில் “மசாலா” சினிமா என்ற ஒரு பேச்சு வழக்கில் “வியாபார நோக்கோடு” எடுக்கப்படும் திரைப்படங்கள் குறிக்கப்பெற்றன. ’கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சந்தன மரம்’ அதாவது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கண்ணடம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் ’மசாலா’ வகையிலேயே இருப்பதை சமீபகாலமாகக் காணமுடிகிறது. (ஓரளவுக்கு மலையாளம், வங்காளம், ஒரியா, போஜ்புரி போன்ற மொழித் திரைப்படங்கள் சமூக அவலங்களப் பேசினால் கலைப் படங்கள் (art film) என்று வகுக்கப்பட்டு விருதுகள் கொடுத்து ஓரங்கட்டப்படும்). ‘மசாலா’ என்பதற்கு, ஒரு குறிப்பிட்ட படைப்பு வகையில் இல்லாமல் ”சண்டை, நகைச்சுவை, காதல், மிகைச் சோகம், நாடகம்’ என்று எல்லா உணர்வுகளையும் கலந்தது என்று விளக்கம் சொல்லப்படுகிறது. இது தென்னிந்திய மற்றும் ஹிந்தி திரைப்படங்களுக்கே பெரும்பாலும் பொருந்தும் ஒரு அடையாளமாக காணமுடிகிறது.

தகவல் பரிமாற்றம், வரலாற்றுப் பரப்புரை, சமூக விழிப்புணர்வு எனும் பயன்பாடு நலிந்து ஊடகம், குறிப்பாகத் திரைப்படம் பொழுதுபோக்கிற்காக எனும் கருத்தாக்கம் உருவக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்பாட்டிற்கு இல்லாதவருக்கு பொழுதைப் போக்க நேரம் ஏது? அது ஒருபுறம் இருக்கட்டும். வேலைகளுக்கூடே களைப்பு தெரியாமல் இருக்க பாடல்கள் பாடி வேலை செய்வது, சமூகக் கூடல்கள், வேளான் சடங்குகள் (கும்மிப் பாட்டு) ஆகியவற்றின் போது எல்லோரும் தகுதி பேதமின்றி களிப்பில், வேண்டுதலில் பங்கு பெற்ற நிலை மாறி ஒரு சிலர் களிப்பூட்ட, போதிக்க அதில் மற்றவர் பார்வையாளராய் பங்கு பெரும் நிலை உருவானபோது ‘தகுதி’, ‘ஞானம்’, ‘கலை’, ‘மேன்மை’, ‘தூய்மை’, ‘உன்னதம்’ போன்ற விதிகள் ‘களிப்பு’, ‘தொடர்பு சாதனங்கள்’ இவற்றை ஒரு சிலரது கட்டுப்பாட்டுக்குள் அடக்கியது. மக்கள் கலையாக இருக்கும் தாய் வழிச் சமூக கலைகள் ‘நாட்டுபுறக் கலைகள்’ (folk art) என்றும், தந்தை வழிச் சமூகமான பார்ப்பனியம் திரித்த, திணித்த, அபகரித்த சமத்துவமற்ற ‘கலை’ யானது ‘செம்மைக் கலை’ யாகவும் (Classical Art) வகுக்கப்படுகிறது. குறிப்பாக கி.மு 200 முதல் கி.பி. 200 க்குள் இயற்றப்பட்ட ‘பரத சாஸ்திரம்’ அல்லது ‘நாட்டிய சாஸ்திரம்’ எனும் நூல் கலைக்கென (இசை, நாட்டியம், நாடகம், இலக்கியம் அணைத்திற்கும்) ஒரு கோட்பாட்டை உருவாக்கியது. இக்கோட்பாட்டுக்குள் அடங்கும் கலையானது ’கவின் கலை’ (aesthetic art) என்று உயர்த்திப் பிடிக்கப்பட்டது, அந்நிலை இன்றும் தொடர்கிறது. பண்டைய காந்தர்வ வேதத்தின் அடிப்படையில் சாம வேதத்தின் பின் இணைப்பாக நாட்டிய சாஸ்திரம் 6000 ஸ்லோகங்கள் கொண்டதாக இருக்கிறது. இதில் குறிக்கப்பெரும் சமஸ்கிருத ’சொல்லியலை’ வைத்தே நாம் எளிதாக இவ்வதிகாரம் எவரின் கையில் இருந்தது, இது எவருடையக் கலையைத் தூக்கிப் பிடிக்கிறது என்று எளிதில் சொல்லி விடலாம்.

இப்படி சிறிது சிறிதாக அன்னியப் படுத்தபட்டக் கலையானது இந்தியச் சூழலில் மன்னராட்சிக் காலத்தில் பார்ப்பனிய அதிகார வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது என்று சொன்னால் அதில் தவறில்லை. கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் என்பவையேக் கலையென்றாகி, தெருக்கூத்து போன்றவை மதிப்பிழந்து ஆங்கிலேய ஆட்சியில் பார்ப்பனிய சாதுர்யத்தால் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. ராஜ ராஜன் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட அல்லது வளர்த்து விடப்பட்ட தேவதாசி மரபு ஆங்கிலேய ஆட்சியில் ‘பார்ப்பனியக் கலை வளர்ப்பிற்கு’ பெரிதும் உதவியது என்றும் சொல்லலாம்.

’கவின் கலை’யில் இத்தகையச் சூழல் என்றால் திரைத் துறையிலும் ஒரு காலக் கட்டம் வரை பார்ப்பனிய, ‘உயர் சாதி’ ஆதிக்கம் இருந்ததை மறுப்பதற்கில்லை. கலைஞர்கள் பார்ப்பனியர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் கையாண்ட கதையம்சங்களும் பார்ப்பனியப் புராணக் கதைகள், ‘ஒழுக்கச் சித்திரங்கள்’, பெண்ணடிமை பரப்புரைகளே. கலாச்சாரம், குடும்ப அறம், சமூக அறம் என்று திரைப்படங்கள் முன் வைப்பது பெரும்பாலும் அவர்களது கற்பிதங்களே.

நிமாய் கோஷ், சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்னன், ஜான் அப்பிரஹாம், மீரா நாயர், தீபா மேத்தா, சாய் பரஞ்பயின என்று வெகு சிலரது படங்கள் சர்வதேசிய அங்கிகாரம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ‘பசி’ துரை, பாலு மகந்திரா, பாரதிராஜா போன்றோர் 70 களின் இறுதியில் விளிம்பு நிலை மக்கள், மாற்றுக் கதாப்பாத்திரங்கள், சமூக அவலங்கள் ஆகியவற்றைத் தொட்டிருந்தாலும், பெண் கதாப்பாத்திரச் சித்தரிப்பில் அவர்களும் எந்த மாற்றங்களையும் பெரிதாக செய்துவிடவில்லை. ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’, பாரதிராஜாவின் ’புதுமைப் பெண்’, ‘கருத்தம்மா’, சீமானின் ‘பசும்பொன்’, ஆர். சி. சக்தியின் பத்தினி, , சில வி. சேகர் திரைப்படங்கள் பெண் மைய்ய கதாப்பாத்திரங்களைக் கொண்டு எடுக்கப்பட்டதாக உள்ளது, அதுதவிர மற்றவை எல்லாம் ஆணாதிக்க பெண் கதாப்பாத்திரங்களே. விசு, பாலசந்தர் போன்றவர்களின் பெண் கதாப்பாத்திரங்கள் ‘அரை குறை’ பெண் விடுதலைச் சிந்தனை மற்றும் முற்போக்கு குழப்பவாத கதாப்பாத்திரங்கள் என்று தான் சொல்ல முடியும். பாடல்களில் ஆடை அவிழ்ப்பு செய்துவிட்டு ‘கற்புக்கரசியாக’ தீச்சட்டி ஏந்தி ஆடவைப்பார்கள் ’பண்பாட்டுக் காவலர்கள்’ அத்தோடு வாய்கிழிய பெண்ணுக்கான ’கற்பு’ அறம் பற்றி வகுப்பெடுப்பார்கள்.

இப்படி ‘குடும்ப’ பொருப்புள்ள பெண்கள் ஒரு புறம் இருக்க, இளைஞர்களுக்கான காதல் திரைப்படம் என்றால் ‘கவர்ச்சி’க் கதாநாயகி, கொண்டாட்டக் குத்தாட்டப் பாடல்கள் என்று ஒரு காலக் கட்டத்தில் ‘வளர்ச்சிப்’ பெற்ற ‘நவீன’ திரைப்படப் போக்கானது, பெரும் முதலாளிகள், பன்னாட்டு முதலீட்டாளர்கள், பன்னாட்டுக் குழுமங்கள், அரசியல் அதிகார வர்க்க ஊடக முதலாளிகள் இவர்களின் நுழைவுக்குப் பின்பு ‘குரங்கினால் பங்கு போடப்பட்ட அப்பம்’ போன்றானது.

கலைக்கு அங்கிகாரம் என்பது ரசனை சார்ந்தது எனும் ஒரு வழக்கு உள்ளது. ’மசாலாத்’ திரைப்படங்களைப் பொறுத்தவரை அதன் தேவையாக மக்களின் ரசனையேக் காரணமாக சொல்லப்படுகிறது. ’ரசனை’ என்ற ஒன்று எவ்வாறு தோன்றியது. சந்தைப் படுத்தப்படும் ஒரு பொருளில் இருந்து தானே ரசனை அல்லது தேர்வு உருவாகிறது. சந்தைப் படுத்தும் முதலாளியே ‘ரசனை’ என்பதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறான். சினிமா என்பது வியாபாரம், அதற்கு பொழுதுபோக்கு வரிதானே உள்ளது கல்வி வரி, சேவை வரியா உள்ளது என்றெல்லாம் எள்ளலாக பேசுவோர் உண்டு. இங்கு தான் ஒரு கேள்வி எழுகிறது இன்னாருக்கு இது தான் ‘பொழுது போக்கு’ என்று தீர்மானிக்கும் அதிகாரம் அரசுக்கோ அல்லது அத்துறையினருக்கோ யார் கொடுத்தது. எங்களையே குறை சொல்கிறீர்களே நாங்கள் விஷத்தைக் கொடுத்தால் வாங்கி குடித்து விடுவீர்களோ என்று மடக்க நிணைக்கும் ‘அறிவு ஜீவிகள்’ ஒன்றை தெளிவு படுத்தவேண்டும், நீங்கள் கொடுப்பது விஷம் என்று அறிவித்து விட்டா கொடுக்கிறீர்கள், தேன் என்றல்வா சொல்கிறீர்கள். நாங்கள் எங்கள் திரைப்படங்களைப் பார்க்கச் சொல்லிக் யாரையும் கட்டாயப் படுத்தவில்லையே என்று அடுத்த முட்டாள்தனமான ஒரு விவாதமும் வைக்கப்படுகிறது. எவரும் பார்க்க வேண்டியதில்லை என்றால் சந்தைப் படுத்தவே தேவையில்லையே. ஆக நீங்கள் செய்வது முன் கூட்டியே திட்டமிட்டு செய்யும் துரோகம், பண்பாட்டுச் சிதைவு.

பண்பாடு என்பதற்குள் என்றும் சுருக்கப்படுவது பெண்ணின் நடத்தையே, அதனால் தான் பெண்கள் சற்று சுதந்திரமாக செயல்பட்டால் உடனே பண்பாடு கெட்டுவிட்டது எனும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. பண்பாட்டுச் சிதைவு பற்றிக் கவலையுற்று போர் கொடி தூக்கும் பிரிவினர் நாட்டின் ‘சமதர்மத்தை’க் குலைக்கும் பலவேறு சீர்கேடுகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உதாரணமாக குஷ்பு ‘கற்பு’ பற்றி பேசியதற்கும், காலணியுடன் ‘கடவுள்’ முன் அமர்ந்ததர்கும் வழக்கு போட்டு ‘போராடி’யவர்கள், திரைத் துறையில் பெண்களை பாலியல் பண்டமாக பயன்படுத்தி, வெட்ட வெளிச்சமாக ‘ஆடை அவிழ்ப்பு’ செய்வது பற்றி ஏன் கவலைக் கொள்வதில்லை. ‘தமிழ்’ பண்பாட்டின் படி ஒரு பெண் முழுக்கப் போர்த்தியவளாகவல்லவா இருக்க வேண்டும், மார்புக்கு ஓர் அங்குலமும், யோனிக்கொரு அங்குலமும் மட்டுமே உடையாக கொடுத்து பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கும் முதலாளிகளை எதிர்த்து இவ்வமைபுகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன.

பெண்கள் தங்கள் உடல்ழகை வெளிக்காட்டத் தயாராய் இருக்கிறார்கள் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் எனும் ஒரு விளக்கம் வரலாம். இதிற்கு நேரடியாக பதில் சொல்வதை விட வெகுஜனத் திரைப்படங்களில் பெண்களுக்கான் பாத்திரம் என்னவாக இருக்கிறது என்று நோக்குவோமானால் ‘காதலி’ ‘சகோதரி’ ‘மனைவி’ இன்னபிற குடும்ப உறவுகள். இதில் அவள் காதலியாக இருக்கும் வரை ’வீரம்’ நிறைந்த கதாநாயக ஆணின் பின்னால் அலைவது, அல்லது அவனை இவள் பின்னால் அலைய விடுவது, கணவுகள் காண்பது அல்லது ‘வில்லனின்’ கணவில் தோன்றி நடனமாடுவது, ‘பணத்திற்காக ஆடும் நடன மாது’ வாக இடையை முன்னுக்குத் தூக்கி தூக்கி உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் அசைவுகளை காமிராவின் நுணியில், அதாவது பார்ப்பவரின் முகத்துக்கு நேரே காண்பித்து ஆடுவது என்ற அளவில் தான் இருக்கிறது. கதாநாயகியாக நடிப்பதற்கு நடிப்புத் திறமையை விட உடல் வனப்பு, நிறம், எந்தளவுக்கு சதைக் கண்காட்சிக்கு ஒத்துழைப்பார் என்ற அடிப்படையில் தான் ஒரு பெண்ணுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அல்லாதவர் சிறு வேடங்களில், அல்லது நடனப் பெண்ணாக வேண்டியது தான். இச்சூழலில் உடல் மட்டுமே ஒரு பெண்ணுக்கான முதலீடாக்கப்படுகிறது. அடித்துப் பிடித்து ஒரு வாய்ப்பு தேடி நடித்த பின்னர் அதுவும் கவர்ச்சி காட்டி நடித்த பின்னர் (அதற்குள் அவள் எவ்வகையில் எல்லாம் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகியிருப்பாள் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை) அப்பெண்ணுக்கு அடுத்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை, ஆழ்ந்த கதாப்பாத்திரங்கள் பெண்களுக்காக இல்லாத நிலையில் ‘பார்பி’ பொம்மை போன்று நடமாட மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். (ஓரிரண்டு விதிவிலக்கு உண்டு) ஆணாதிக்க கண்ணோட்டமும், மனோபாவமும் நிறைந்திருக்கும் சினிமாவில், புது புது முகங்களை மன்னிக்கவும் உடல்களைத் தேடி இயக்குனர்கள் செல்கையில், ஒரு முறை ‘சேற்றில்’ விழுந்து விட்ட பெண்ணுக்கு வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது பெரும் சவாலாக அமைகிறது. இளமை போவதற்குள் அவள் தன்னை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் எனும் நெருக்கடி நிலை. குடும்ப உறவுகளையே பண்டமாக மாற்றும் சக்தி பெற்ற பணமானது இங்கேயும் வென்றுவிடுகிறது. போட்டவனுக்கு முதலை எடுக்க வேண்டும், நடிக்கும் ‘ஆண் மகனுக்கு’ தனது படம் எப்படியாது ஓட வேண்டும், ‘பெண்ணைத்’ தவிர இவர்களை காகும் சக்தியுள்ள கருவி ஏதாவது இருக்கிறதா என்ன?

பணம், புகழ், கை சொடுக்குக்கு வேலையாள், உயர்தர வாழ்க்கை என்று கிடைக்கப்பெறும் ஒரு துரையாக சினிமா இருப்பதால், மனித மனம் அதில் எளிதில் விலை போகிறது. குறிப்பாக பெண் ஒரு முறை நடிகையாகி விட்டால் ஆணாதிக்க மனோபாவம் அவளை தினம் தினம் கற்பனையில் வல்லுறவு செய்துவிடுகிறது. பொது இடத்தில் பார்த்தால் கூட அவளை ஒரு பாலியல் பண்டமாகவே கருதி, இரட்டை அர்த்த ஏளனங்கள், பாலியல் தொல்லைகள் கொடுத்து அச்சுறுத்துகிறது. நடிகர் நடிகைகளைக் கொண்டாடும் ‘பொது’ மனநிலையானது, அவர்கள் தெருவில் வருவதை விசித்திரமாகப் பார்த்து மொய்த்து விடுகின்றது, பெண் என்றால் கண்டிப்பாக பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றது (நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்). பணம், ஆசை, ‘கலைத் தாகம்’ இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக நடிக்க வந்து விட்ட பெண் அடுத்து அதை உதறிவிட்டு மற்ற பெண்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமுதாயம் விடுவதில்லை. ‘பொது தொல்லைகளில்’ இருந்து தப்பிக்க இப்பெண்கள் ’சீருந்து’ போன்ற சில வசதிகளை கொள்ளுதல் அவசியமாகிறது. இவ்வசதிகளைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு நடிகை ‘சில சமரசங்களை, அர்ப்பணிப்புகளை’ செய்வதென்பது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகிறது. தன் உடலுக்கு மட்டுமே சந்தை என்று புரிந்து கொள்ளும் அவளுக்கு மாற்று வழி இருப்பதில்லை.

ஏதாவது வேலைக்குச் சென்றாலும் பாலியல் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது. வேலைக்குச் செல்பவர் ஒரு நிறுவனம் பிடிக்கவில்லையென்றால் வேறொரு நிறுவனத்திற்கு செல்லும் சுதந்திரம் இருப்பது போல், நடிகர் நடிகைகளுக்கு அச்சுதந்திரம் வாய்க்கிறதா என்பது சந்தேகமே. ஓரளவுக்கு பிரபலமான ஒரு நடிகை அத்துரை பிடிக்கவில்லை என்று வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தால் அவள் எத்தகைய விமர்சனங்களையும் எள்ளல்களையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது விவாதிக்க வேண்டிய ஒன்று.

நடிகர்களுக்கும் இந்நெருக்கடிகள் இருந்தாலும் அவனது உடல் பண்டமாக்கப்படுவதில்லை, ஆணாய் அவன் பாலியல் சார்ந்த தொல்லைகள், அவமானங்களை சந்திக்க வேண்டியதில்லை. ஆனால் வாய்ப்பின்றி குடித்து, குடித்து தற்கொலை செய்யும் அவலங்கள் நடந்தேறியுள்ளன.

இன்று பெரும்பாலான பத்திரிகைகள் பெண்களின் கவர்ச்சிப் படங்களை நம்பித்தான் நடக்கின்றன. இப்புத்தகங்களை எதிர்த்து ‘கலாச்சார காவலர்கள்’ கோஷங்களை எழுப்புவதில்லை, ஆனால் ஒரு பெண் கவிஞர் உடல் மொழி சார்ந்து எழுதிவிட்டால் போதும் கிளம்பிவிடுகிறார்கள். இது போன்று எண்ணற்றப் பத்திரிகைகள் மொழி பேதமில்லாமல் உலகளாவிய அளவில் பெண் உடலை வைத்து பிழைப்பு நடத்துகின்றன. இப்படி ஒவ்வொரு செயலும் பெண் ஆணுக்கு ‘இன்றியமையாதவளாய்’ இருக்கிறாள் என்பதையே வலியுறுத்துகிறது.

திரைபடங்களின் தரம், அதன் முரண்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுதப்படவேண்டும். திரை நாயக நாயகிகள் ஒரு விஷயத்தை அல்லது கதையை பரப்புரை செய்வதற்கான ஒரு ஊடகம் அவ்வளவுதான் எனும் புரிதலை வளர்க்க வேண்டும். ஒருவர் கூலி வேலை செய்வது போல், அலுவலக பணி செய்வது போல் திரைத் துறையினரும் ஓர் பணி செய்கிறார்கள், அவர்களைக் கொண்டாடுவதற்கும், வழிபடுவதற்கும், அதிசய பிறவி போல் மெச்சுவதற்கான மனநிலை எவ்வாறு உருவாகிறது, அவர்களால் சமுதாயத்தில் என்ன பயன் இருந்திருக்கிறது, என்ன வகையான மாற்றங்களை இவர்கள் சமூகத்தில் விதைத்திருக்கிறார்கள் என்ற உரையாடல்கள் மக்கள் மத்தியில் எழுப்பப் படவேண்டும். திரைப்படங்களில் எண்ணற்ற புரட்சி செய்யும் இவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் அரசுக்கு ‘காக்கா’ பிடிப்பவர்களாகவே இருக்கின்றனர், ‘கற்பு’, தமிழ் பண்பாடு என்று வகுப்பெடுக்கும் இவர்கள் ஏன் சக நடிகையின் உடலை எந்த தார்மீக அறமுமின்றி கையாள்கிறார்கள் என்று மக்கள் இவர்களை நோக்கி கேள்விகள் எழுப்ப வேண்டும்.

மனித மனமானது உணர்ச்சி மிகுந்த புலன்களால் ஆனது என்று சொல்லவும் தேவையில்லை, அது ஒவ்வொரு புலன்களின் வாயிலாக கற்கிறது, உணர்கிறது, செயல்படுகிறது. ஒலி ஒளி என்பது மிகுந்த சக்தி வாய்ந்த ஓர் ஊடகம் அதன் வாயிலாக ஏற்றிவைக்கப்படும் கருத்துக்கள் விளைவுகள் கொண்டவை என்பதற்கு மாற்று கருத்து இருந்துவிட முடியாது. ஆண்மை பெண்மை பற்றி இவர்கள் பரப்பும் கருத்துரைகள் சமூக முன்னேற்றத்தில், சிந்தனை வளர்ச்சிப் பாதையில் முடக்காக இருக்கிறது. பெண் விடுதலைப் பாதையில் பெருத்த முட்டுக்கட்டையாக இருப்பது திரைப்படங்களே, பெண்களைப் பாலியல் பண்டமாய் பயன்படுத்தி மேலும் மேலும் பாலியல் வக்கிரங்களை விதைக்கொண்டேயிருக்கிறார்கள், அது பெண்களுக்கெதிரான வன்முறையாய் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டேயிருக்கிறது.

திரைப்பட, காட்சி ஊடக மாயையிலிருந்து மக்களை மீட்பதே சமூக சிந்தனையாளர்களுக்கு, சீர்திருத்தவாதிகளுக்கு இருக்கும் முதனமை சவாலாக கருதுகிறேன். உலகமயமாக்கலின் விளைவால், இச்சவால் மிக கடுமையானதாக நீண்டுகொண்டேயிருக்கிறது.

சமீபத்தில் காயல்பட்டினம் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு பார்க்க நேர்ந்தது. இசுலாமியப் பெரும்பான்மை நிறைந்த இவ்வூரில் பல அசாத்திய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. முக்கியமாக இவ்வூரில் திரையரங்குகள் இல்லை. விளையாட்டுக்கு மட்டுமே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள், இளைஞர்கள் என்று எல்லோரும் எச்ச நேரங்களை கால்பந்து விளையாட்டில் கழிக்கிறார்கள், கூடி உண்கிறார்கள், கூட்டுத் திருமணங்கள் பொது சமூகக் கூடத்தில்தான் நடக்கிறது. காயல்பட்டினம் கால் பந்து போட்டி உலகப் புகழ் வாய்ந்தது. அத்தோடு அவ்வூரில் காவல் நிலையம் இல்லை. இசுலாமிய மார்கத்தின் படி ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்வதோடு, ஆண்களே புகுந்த வீட்டிற்கு செல்கின்றனர். இதற்கு காரணமாய் இருக்கும் நிகழ்ச்சி வருந்தத்தக்கதாயினும், அதனைத் தொடர்ந்து அவர்கள் எடுத்திருக்கும் முடிவானது, தாய் வழிச் சமூகத்தின் சாயலைக் கொண்டிருக்கிறது. ஒரு முறை கர்பிணிப் பெண் ஒருவர் மாமியாரால் நிறைமாதமாக இருக்க்ம் பொழுது தண்ணீர் துறைக்கு சென்று நீர் எடுத்துவர விரட்டப்படுகிறார். அவர் கணவர் வீட்டில் தான் இருந்திருக்கிறார், இருந்தாலும் மாமியார் அவரை அனுப்பவில்லை. தண்ணீர் எடுத்து வரும் வழியில் அப்பெண் மயங்கி விழுந்து இருக்கிறார் (அவர் இறந்து விட்டாரா என்பது சரியாக நிணைவில் இல்லை). இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாமியார் வீட்டில் ஒரு பெண் இருக்கப்போய் தானே இத்தகையக் கொடுமைகளை அனுபவிக்கின்றாள் அம்மா வீட்டில் இருந்தாள் அவளுக்கு பாதுகாபு என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஊர் பராமரிப்பு, முன்னேற்றம் ஆகியவை இவர்களது தொடர் சிந்தனைகளாக இருப்பதற்கு இவ்வூரில் பொழுதைத் தின்னகூடிய திரையரங்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

‘புறக்கணிப்பு’ ஒன்றே நமது ஆயுதம். அவ்வாயுதம் அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தக்கூடியது. மக்கள் சக்தியின் மகத்துவத்தை வலியுறுத்தக் கூடியது. புறக்கணிப்பு சிந்தனைகளை, அவசியத்தை மக்களிடம் கொண்டு சென்று சுயமரியாதையை வளர்ப்பது நம்முன் இருக்கும் தலையாயக் கடமை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்