/* up Facebook

Oct 31, 2011

"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்" பாடல்கள்


மரண தண்டனைக்கெதிரான தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக ஆர்பாட்டம்-
நாள்-29.10.2011...மேலும்

Oct 30, 2011

இந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்படம், செங்கடல்


வணக்கம். 2011 ம் ஆண்டிற்கான இந்தியன் பனோரமாவிற்கு, செங்கடல் திரைப்படம் ஒரே தகுதி பெற்ற தமிழ்ப்படமாகத் தேர்வாகியுள்ளது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில்(ந்வம்பர் 23 - டிசம்பர் 3) பெருமையுடன் பங்குபெறும் செங்கடல் தமிழ் மீனவர்களின் வாழ்க்கையை மக்களின் பங்களிப்பைக் கொண்டே உருவாக்கப்பட்ட திரைப்படம். 2011 ஆண்டு முழுவதும் உலகமெங்கிலும் நடைபெறும் முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இந்தியன் பனோரமாவின் சார்பாக பங்குபெறும் வாய்ப்பையும் செங்கடல் இதன் மூலம் பெறுகிறது.

பல மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்ஸார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின் இந்த வெற்றி கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. மத்திய தணிக்கைக் குழு செங்கடலை, அதன் அரசியல் விமர்சனுங்களுக்காக பொது இடங்களில் திரையிட தடை விதித்திருந்தது. பலமாதகால சட்டப் போராட்டத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் 'A ' சான்றிதழை ஜூலை 20-ல் பெற்றது. அதன் பிறகு 32ஆவது டர்பன் (தென் ஆஃபிரிக்கா) சர்வதேச திரைப் பட விழாவிலும், 35ஆவது மாண்ட்ரியல் (கனடா) உலகத் திரைப்பட விழாவிலும், 13 வது சர்வதேச மும்பை திரைப்பட விழாவிலும் சர்வதேசப் போட்டிப் பிரிவில் தேர்வு பெற்று பங்கேற்றது. இந்த மாதம் டோக்கியோவில், சிறந்த ஆசியப் பெண் திரைப்படமாக NAWFF விருது பெற்றுள்ளது . டர்பன் திரைப்படவிழாவில் செங்கடல் படத்தை பார்த்த ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமிகு. நவி பிள்ளை ”ராமேஸ்வரம் , தனுஷ்கோடி ஆகிய கடலோர எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறலுக்கான ஒரு சாட்சியமாக ,சமரசமற்ற குரலாக செங்கடல் ஒலிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகள் மீதான ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையோடு இந்திய மீனவர்களின் படுகொலை மீதான தலையீட்டிற்கும் ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.

தனுஷ்கோடி மீனவர்களையும், மண்டபம் அகதிகளையும் நடிகர்களாக கொண்டே செங்கடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை எல்லைக் கிராமமான, எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் தனுஷ்கோடியை, இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்பட்ட அதன் எளிய மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக கையாளுகிறது இத்திரைப்படம் . தோல்பாவை தியேட்டர்ஸ் தயாரிப்பான செங்கடல்,அமெரிக்காவின் க்ளோபல் பிலிம் இனிஷியேடிவின் (GFI) 2010 - ஆம் ஆண்டிற்கான தயாரிப்பு ஊக்குவிப்பு வெகுமதியையும் பெற்றுள்ளது.
--

நன்றி

செங்கடல் திரைப்படக் குழு
...மேலும்

Oct 29, 2011

தங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை


6000 வருடங்களுக்கு முன்பாக மனிதன் கண்டெடுத்த முதல் உலோகமானது தங்கம் என்று வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன. இரும்புத்தாதுவும், தாமிரமும் (செம்பு) மனித இனத்திற்கு மாபெரும் பயனை அளித்ததாக சொல்லப்பட்டாலும், அதற்கும் முன்னறே கண்டுபிடக்கப்பட்ட உலோகம் தங்கம். அவ்வுலோகத்தின் தன்மையும், மஞ்சள் நிறமும், அதன் மீது ஏற்றிவைக்கப்பட்ட மதிப்பும் காலம் காலமாக அதன் மீது மாபெரும் நாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு மன்னராட்சி முறை ஏற்பட்ட பின்பு தங்கம் மற்றும் இதர இரத்தினங்கள் ‘அரச’ மரியாதை பெற்று பின்பு மதங்களின் ஊடுருவலால் (இந்தியச் சூழலில் பார்ப்பனிய ஊடுருவலால்) ‘புனிதத் தன்மை’ ஏற்றிவைக்கப்பட்டது. அரச நாணையம் உள்ளிட்ட வடிவங்களில் புழங்கி வந்த தங்கமானது ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு வேறு உலோகங்களிற்கு மாற்றம் பெற்றது. மூன்று தலைமுறைக்கு முன்னர் 60 ரூபாய்க்கு பவுன் வாங்க முடிந்தக் காலம் போய் ஒரு கிராம் 500 ரூபாய் என்ற அளவை 7 அல்லது 8 வருடங்களுக்கு முன்னர் எட்டியது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பன்மடங்காக உயர்ந்து 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 2,120 ஐ எட்டியுள்ளது. ஏன் இந்த திடீர் விலையேற்றம்?

டாலருக்கு நிகரான இருப்பு மதிப்பை விட தங்கத்தின் இருப்பு பற்றாக்குறையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது டாலரின் மதிப்பு குறையும் பொழுது தங்கத்தின் விலை ஏறுவதும், டாலரின் மதிப்பு ஏறும் பொழுது தங்கத்தின் விலை குறைவதுமான ஒரு பொருளாதார சூழல். பொருளியல் வல்லுனர்களே அது குறித்த சிறந்த விளக்கங்களை அளிக்கவல்லர். இத்தகையச் சூழலில் ஏழை நாடான இந்தியாவில் தங்கம் வாங்கும் திறன் குறையாமல் இருக்கிறது.

2010ல் 963 டன்னாக இருந்த தங்கத்தின் நுகர்வளவு, 2011ல் 1000 மெட்ரிக் டன்னை எட்டும் என்றும், உலகிலேயே இந்தியா தங்கத்தைப் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது என்றும் புள்ளியியல் விபரங்கள் தெரிவிக்கின்றன. அணிகலனாக பார்க்கப்பட்டத் தங்கம் இப்போது ஒரு முதலீடாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிராமப் புரங்க்ளில், விவசாயிகளின் மத்தியில் வங்கிகளின் மீது நம்பிக்கையற்றத் தன்மையினால் தங்கத்தை பொற்கட்டிகளாக கொள்முதல் செய்கின்றனர். 70% தங்கம், வைரம் விவசாயிகளால் வாங்கப்படுவதாக அல்பெனியன் மினரல்ஸ் எனும் நிறுவனம் தெரிவிக்கிறது.
1848ல் கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது தங்கச் சந்தையில் பெறும் மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது எனலாம். தங்கச் சந்தையில் நிலவும் சூதாட்டம் புரியாத புதிராகவே இருந்தாலும், ஒன்று மட்டும் உறுதியாக சொல்லலாம் அமெரிக்காவும், ஐரோப்பாவும் தங்கம், வைரம் என்று விலையுயர்ந்த வளங்களை கொண்டுள்ள ஆப்ரிக்க நாட்டை இன்னும் ஏழையாகவே வைத்திருப்பதற்கான காரணமாக இருப்பதோடு இவர்களே உலகம் முழுதும் உள்ள தங்கச் சந்தையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக தங்க மன்றம் (world Gold Council) எனும் அமைப்பு ’தங்க வியாபிர்களின் நலன்’ காப்பதற்காக செயல்படுகிறது. இதற்கு உலகெங்கிலும் இணைப்புகள், கிளைகள் உள்ளது. தங்க நகைகள் விற்கும் பெரும் முதலாளிகளுடன் இணைந்து தங்கம் பற்றிய பல்வேறு கருத்தாக்கங்களை, மதிப்பீடுகளை பரப்புவதில் அவ்வமைப்புக்கும் பங்கு உள்ளது. குறிப்பாக சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் ‘அக்‌ஷய த்ரிதியை’ எனும் வெறியாட்டத்திற்கு நிகரான ஓர் வெறி அலை உருவாக்கப்பட்டது ஒரு சான்று. அது போன்று ‘வெள்ளைத் தங்கம்’ என்று உலக ப்ளாட்டினம் மன்றமும், ‘தூய இரத்தினன்’ என்று வைரத்தை உலக வைர மன்றமும் விளம்பரம் செய்கின்றன. வெண்மை, தூய்மை, பரிசுத்தம், அன்பின் வெளிப்பாடு, காதலின் வெளிப்படு, காதலர் தினம், அன்னையர் தினம் என்று பல்வேறு யூகங்களில் அவை சந்தைப் படுத்தப்படுகின்றன. . நாடுக்கு நாடு போட்டிப் போட்டுக் கொண்டு தங்கச் சுரங்கங்களை கண்டுபிடிக்கும் போக்குகளும், தோண்டி எடுக்கப்படும் தங்கத்தின் அளவு ஏற்றம் இறக்கமாகவும் இருந்திருக்கின்றன.
தங்கத்தின்பால் நிலவும் கவர்ச்சியும், பொருளாதார மதிப்பீடும் ஆணாதிக்க முதலாளித்துவம் மற்றும் ஆணாதிக்க தந்தைவழி சமூகம் தோற்றுவித்த ‘கருத்தாக்கங்களின்’ மற்றுமொரு சித்து விளையாட்டு. மன்னராட்சிக் காலம் வரை இருபாலாரும் பல வகையான அணிகலன்களை சரி நிகராக அணிந்து வந்திருக்கின்றனர். பின்னர் அது வழக்கொழிந்து தங்கம் புனிதத் தன்மையூட்டப்பட்டு, நகைகள் பெண்மைகுரியவையாக மாற்றம் பெருகின்றன. இலக்கியங்களில், புராணங்களில் தங்கம் (மற்றும் அணிகலன்கள் என்று சேர்த்துக் கொள்ளவும்) பெண்களுக்கு பொலிவு சேர்ப்பது, தங்கத்தை விட அவளது மேனி மின்னியது என்பன போன்ற விவரிப்புகள் இருந்தாலும், ஆண்களும் அணிகலங்கள் அணிந்து வந்திருக்கின்றனர் என்பது உண்மை. 18ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் நவீன மாற்றங்களினால், “ஆண்மை”க்குறிய இலக்கணங்கள் மாற்றம் பெருகின்றன. உடை முதற்கொண்டு பெறும் மாற்றத்திற்கு உள்ளாகிய சூழலில் தங்கம் என்பது பெண்மைக்குரிய அடையாளமாய் நின்றுவிட்டது.
தங்கத்தின் பயன்பாட்டில் திருமணங்களோடும், மதச் சடங்குகளோடும் தொடர்பு படுத்தப்பட்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தாய்வழிச் சமூகத்தின் வேளான் பொருளாதார காலகட்டத்தில் இனக்குழு மக்கள் பெண் வேண்டி ஆணின் இனக் குழுவிற்கு ஆடு, மாடுகள், விளை பொருட்களைக் கொடுத்து பெண் எடுத்தக் காலம் மறைந்து பெண்கள் ‘சவரன்’ கணக்கில் நகைகள் போட்டு, வரதட்சனைக் கொடுத்து, திருமணச் செலவையும் ஏற்று ஆணின் வீட்டிற்கு அடிமையாக செல்ல தன்னை ஒப்புவிக்கும் சூழல் உருவாகியது. இன்றும் தாய்வழிச் சமூகத்தின் அடையாளமாக இருக்கும் குறவர் சமூகத்தில் (ஆதி வேட்டுவர்கள்) ஆண் தான் பெண் வேண்டி பணம் தந்து பெண் எடுக்க வேண்டும். முதலாளித்துவ வாழ்க்கைக்கு அடிபணிந்துவிட்ட அல்லது அடிமையாக்கப்பட்ட மற்ற சமூகங்களில் பெண் வீட்டாருக்கு ’மதிப்பு’ தங்கம் போடுவதை வைத்துத்தான். வரதட்சனையாக தங்கத்தை சொன்ன அளவுக்கு செய்யமுடியாமல் எத்தனையோ ஆயிரம் பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட வரலாற்றுப் பெருமை இந்திய மண்ணுக்குண்டு.
பல்வேறு முனைகளில் இருந்து ஏற்றிவைக்கப்படும் கருத்தாக்கங்களும், சமூக மதிப்பீடுகளுமே இக்கொடுமைகளுக்கு காரணமாய் இருக்கிறது. எனினும் மனித மனம் அப்பேராசைகளிலிருந்து விடுபட்டுவிடா வண்ணம் முதலாளிகளால் கையாளப்படுகிறது. ’மண், பெண், பொன்’ இவைகளின் மீதான ஆசைகளே மனித அழிவிற்கு காரணமாய் சொல்லி ‘துறவை’ பரிந்துரைக்கும் நாட்டில்தான் அவற்றின் மீதான நாட்டமும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.
அது எவ்வாறு நடந்தது? ஏன் நடந்தது என்பதற்குள் செல்லாமல் அதன் கவர்ச்சியிலிருந்து மீள்வது குறித்தான உரையாடலும், அதைத் தொடர்ந்த சில தீர்மானங்களும் அவசியமாகிறது. தங்கத்தின் அளவு குறைந்து வருவதாக சொன்னாலும், சரக்கிறிப்பு குறைந்ததாகத் தெரியவில்லை, வாங்கும் திறனும் குறைந்ததாகத் தெரியவில்லை. திறக்கப்படும் புதிய நகைக் கடைகளின் அளவும் குறையவில்லை. உயிரைப் பறிக்கும் அளவுக்கு ‘ஆபத்து’ நிறைந்ததாக இருந்தும் பெண்கள் தங்கம் அணிவதை விடுவதில்லை. எந்த குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதானாலும் முதலில் திட்டமிடப்படுவது நகைகள் குறித்துத்தான். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைச் சூழலில் தங்கத்திற்கும், அணிகலன்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது அவசியமா என்ற கேள்வியை பெண்கள் எழுப்பும் காலம் நெருங்கிவிட்டது.
தங்கத்தில் முதலீடானது பெரும் லாபங்களை ஈட்டுத் தருவதோடு, அவசரத்திற்கு அடகு வைத்து பணம் பிரட்டவும் உதவியாக இருக்கிறது என்பது இருக்கட்டும் ஆனால் அதைவிட அதிகமாக அது ‘ஆபத்தையும்’ வட்டியுடன் தருகின்றது. குறைந்த வட்டியாக இருந்தாலும் வங்கிகளில் சேமித்து வைப்பதில் குறைந்த பட்ச பாதுகாப்பாவது எஞ்சியுள்ளது. சமூக பாதுகாப்பு ஒருபுறமிருக்க, மனம் சார்ந்த, உறவு சார்ந்த சிதைவுகளில் இருந்து மீள்வது அவசியமில்லையா?
அன்பால் பிணைக்கபப்டவேண்டிய உறவுகளில் இத்தங்கமானது எத்தகைய சிதைவுகளை தோற்றுவிக்கிறது என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். திருமணம் மூலம் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக தங்கத்தின் அளவானது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது? பெண்ணானவள் திருமணத்தின் போது சவரன் கணக்கில் தங்கம் போட்டுக் கொண்டு வந்தாள் என்றால் அவளுக்கு மாமியாரிடம், புகுந்த வீட்டாரிடம் கிடைக்கும் ‘மதிப்பு’ வேறாக இருக்கிறது. அதையும் மீறி சில காலங்களுக்குப் பிறகு மேற்கொண்டு நகையோ, பணமோ கேட்டு கொடுமை படுத்தி, அடித்துக் கொல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
வரதட்சனைக் கொடுமை நம் மண்ணைத் தாண்டி இந்தியர்கள் வாழும் அயல் நாடுகளிலும் அதிதீவிரமாக செயல்படுகிறது. மிக சமீபத்திய கொடூர நிகழ்வு ஒன்று நிணைவுக்கு வருகிறது. 2008ல் ஜெனிதா என்ற திருச்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. திருமணமாகி அமெரிக்கா குடிசென்ற அப்பெண் வரதட்சனைக் கொடுமையால் பல சித்திரவதைகளுக்கு ஆளானார். உச்சகட்டமாக 3 மாத காலம் கர்ப்பமாக இருந்தபோது காரிலிருந்து தள்ளப்படு கோமா நிலைக்கு சென்றார். உடல் முழுக்க காயங்களோடு அவர் இந்தியா கொண்டு வந்து பெரும் போராட்டங்களுக்குப் பிறகு காப்பாற்றப் பட்டார். இருந்தும் இடது தாடை செயலிழந்து பேச முடியாமல் பேசி தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். அவரது பெற்றோர்களுக்கு வெறும் கார் விபத்து என்று தான் தகவல் சொல்லப்பட்டது. திருமணத்தின் போது செய்த சீருக்கும் (2 லட்சம் ரொக்கம், 62 சவரன் நகை) மேலாக 100 சவரன் ’தங்கமும்’ , ரொக்கமும் கேட்டு கொடுமைகள் நடந்துள்ளன. இது போன்று எண்ணற்ற கதைகள் உள்ளன.
அ.மங்கை இது பற்றி அளித்த பேட்டி ஒன்றில். ‘‘பொதுவாவே கல்யாணம் ஆகி இங்க இருந்து வெளிநாடு போற பெண்களுக்கு ‘ஸ்பவுஸ் விசா’னு ஒண்ணுதான் கொடுப் பாங்க. ‘நான் இன்னாருடைய மனைவி. இவரை சார்ந்தது இருப்பவள்’ங்கறதுதான் அந்த விசாவோட அடையாளமே! அதனால அங்க ஒரு டாக்டரைக் கூட அவளால தனியா போய் பார்க்க முடியாது. கணவனோட தான் போகணும். இப்படி ஒரு பிரச்னை இருக்கும்போது ஒரு மோசமான கணவன் அவனோட மனைவியை சித்ரவதை செஞ்சா, அதை எதிர்க்குற துணிச்சல் அந்தப் பொண்ணுக்கு வராமலே போயிடலாம்’’ என்றவர், நமது குடும்ப உறவுகள் அங்கு பாதிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டினார்.
’பெண்மைக்குரியவை’ என்று முன்னிறுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொன்றையும் பெண்கள் கேள்வி கேட்கும், சந்தேகிக்கும், புறக்கணிக்கும் விழிப்புணர்வு பிரசாரங்கள் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன. சாதி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கல்வி உரிமை, சம-உரிமை, அரசியலில் இட ஒதுக்கீடு ஆகிய போராட்டங்களோடு, பெண்களை பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து, குறிப்பாக ‘விலையுயர்ந்த அந்த அடிமைச் சங்கிலியை’ விரும்பி அணியும் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும் விழிப்புணர்வு பிரசாரங்கள், போராட்டங்கள் அவசியமாகிறது. பெரியார் அவர்கள் இது குறித்து எவ்வளவோ பேசியிருக்கிறார். பெண்களை நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார். சுயமரியாதை இயக்கப் பெண்கள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தத்துவத்தில் நம்பிக்கைக் கொண்ட பெண்கள் நகைகளை, அலங்காரங்களை புறக்கணிப்பது குறித்து ஆங்காங்கே எடுத்துரைத்தாலும், இது குறித்த முழுவீச்சான பிரசாரங்களை வெகுஜன ஊடகங்கள் வழியாக எடுத்தச் செல்ல இயலாததால், இம்முயற்சி நத்தையின் வேகத்திலேயே செல்கிறது.
இப்பின்னடைவுக்கு இரு தரப்பினர் பங்களிக்கின்றனர் ஒருவர் ஊடகத்துறையினர், மற்றொருவர் மேல்தட்டு வர்க்கப் பெண்கள். பெண்களுக்கான இதழ்கள், பெண்களுக்கான நிகழ்ச்சிகள், போட்டிகள் என்று எல்லாமே ஆணாதிக்கம் முன்மொழியும் “பெண்மை சார் விசயங்களும், திறமைகளையுமே’ மையப்படுத்துகின்றன. வெகுஜன பெண்கள் இதழ்கள் கோலம், சமையல், உடையலங்காரம், அணிகலங்கள், பிள்ளைப் பேறு இவற்றையே அரைத்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகள், வானொலிகளும் தொலைபேசிகளில் பெண்களிடம் நடத்தும் உரையாடல் ‘பெண்மை’ சார்ந்ததாகவே இருக்கிறது. “பெண்கள் நேரம்” என்பதில் கையாளப்படும் தலைப்புகள் பெரும்பாலும் சமையல், அழகுக் குறிப்பு, ஷாப்பிங், அவ்வப்போது உடல் நலம். பகுத்தறிவு விவாத நிகழ்ச்சிகளும் ஆணாதிக்க சிந்தனையோடு ‘தற்காலத்தியப் பெண்கள் இருக்கிறார்களே’ என்கிற அளவில்தான் நடத்தப்படுகிறது. நாகரீக மாற்றத்தையும், சுதந்திரத்தையும் குழப்பிக்கொண்டு பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை குறித்தான தவறான புரிதலை மட்டுமே இந்நிகச்சிகள் ஏற்படுத்துகின்றன.
ஊடகம் எனும் சக்திவாய்ந்த ஒரு தொடர்பு சாதனத்தில் தோன்றும் அத்தனை மேல்தட்டுப் பெண்களும் அலங்காரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக “புகழ் பெற்றவர்” என்றழைக்கப்படும் “செலிபிரிட்டீஸ்” தங்களது பீரோக்களை திறந்து காட்டி நான் இவ்வளவு புடவைகள், நகைகள், நவீன செருப்புகள் வைத்திருக்கிறேனாக்கும் என்று தங்களது ‘ரசனையை’ பறைசாற்றும் ஆபாசம் சில காலங்களுக்கு முன் பெண்கள் பத்திரிகை வாயிலாக அரங்கேறியது. அப்பெண்களிடன் கேட்கப்படும் பகுத்தறிவு சாயல் பூசப்பட்டக் கேள்விகள் ஆணாதிக்க நலனுக்கேயன்றி, பெண் விடுதலைக் கேள்விகள் அல்ல.
தற்போது தங்க விற்பனையில் “பாரம்பரியம், பண்பாடு, நாட்டுப் பற்று” என்று முத்திரைகள் பூசி விளம்பரம் செய்யப்படுகிறது, அதிலும் “தொல்பழம் நகை” என்று சொல்லக்கூடிய “ஆண்டிக் ஜுவெல்லரி” என்பதன் மேல் மேல்தட்டுப் பெண்கள், மத்திய வர்க்க பெண்கள் மத்தியில் மிக மோசமான பித்து ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. நகைகளை வடிவமைப்பதற்கென்றே சிறப்பு படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அத்தகைய வடிவமைப்பாளர்களை வைத்து போட்டி போட்டுக் கொண்டு வியாபார நோக்கோடு நகைகளை வடிவமைத்து அதற்கென்று கதைகள் சொல்லி சந்தை படுத்தப்படுகின்றன. தங்கத்தைப் பொறுத்தவரை (இதர உலோகங்கள், இரத்தினங்கள் எல்லாமும் தான்) விற்பனையாளர்கள் சொல்வதைதான் நம்பவேண்டியுள்ளது.
ஒரு காலத்தில் தங்கத்தின் விலை போக 20%, 23% சேதாரம் இது தவிர செய்கூலி என்று வசூலித்து வந்தனர். தற்போது தங்கத்தின் விலையேறியதும் செய்கூலி முற்றிலுமாக விலக்கப்பட்டு, சேதாரம் 10% முதல் 20% போடப்படுகிறது. சில நகைகளுக்கு 24% வரை செல்கிறது. பேரம் பேசினால் 2% தள்ளுபடி செய்கிறார்கள். அப்படியென்றால் முன்பு ஏன் செய்கூலி வாங்கப்பட்டது, இப்பொழுது ஏன் அது விலக்கப்பட்டிருக்கிறது? தங்கத்தின் விலை சந்தை நிர்ணயிப்பதாய் இருந்தால், ஒவ்வொருவர் அதிலும் விலை குறைப்பு செய்வதும், சலுகைகள் தருவதும் எவ்வாறு சாத்தியமாகிறது? தங்கம் சர்வதேசிய மதிப்பு பெற்ற ஒரு பொருளாக இருந்தாலும், விலைக் குறைத்து விற்கப்படும் ஒரு குறிப்பிட்டக் கடையின் தங்கம் சான்று முத்திரை இருந்தாலும் மற்ற வியாபாரிகளால் மறுத்தலிக்கப்படுவது ஏன்? இது என்ன விதமான சூதாட்டம் என்பது புரியவில்லை?
அதிகார வர்க்கமும் அது தோற்றுவித்த மதமும், அதற்கு ஆதரவாக செயல்படும் சில வரலாற்றாசிரியர்களும், முதலாளித்துவமும் நிணைத்தால் ஒன்றை புனிதமாக்கவும், தீட்டாகவும், தோஷமாகவும் முத்திரைக் குத்த முடியும். தங்கம் என்பதனுடன் நெருங்கியத் தொடர்புடையது திருமணமும், தாலியும். தற்போதைய நடைமுறையில் உள்ள தாலி கட்டும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் முன்னர் இருந்த முறைதானா என்று நோக்கினால் வியப்பும், ஏமாற்றுமுமே மிஞ்சுகிறது. ‘சங்க காலம் முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்தமைக்குச் சான்றில்லை என்கிறார் மா. இராசமாணிக்கனார். பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய, தமிழர் வகுப்புகளிலும், ஏனைய திராவிட வகுப்புகளிலும் தாலிகட்டும் பழக்கம் இருந்து வந்ததா? தாலியெனும் சொல்லுக்குப் பொருள் யாது? என்று பல கேள்விகளுக்கு ”தமிழர் பண்பாட்டு வரலாறு” எனும் நூலில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அகநானூற்றுச் செய்யுளில் திருமணம் பற்றி வரும் இரண்டு இடங்களில் நீராட்டு, விருந்து முதலியவற்றைக் கூறும் புலவர் – தாலி கட்டும் சடங்கை குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார். ‘கற்புச் சின்னம்’ கண்ணகியின் திருமணத்தில் அகநானூற்றுத் திருமணத்தில் குறிக்கப்படாத ‘மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டலும், தீவலம் வருதலும்’ எனும் பாடலின் மூலம் கைபற்றி தீவலம் வரும் (பாணிக்கிரகணம்) எனும் சடங்கு குறிப்பிடப்படுகிறது. ”அகலுள்ள மங்கல அணி எழுந்தது” எனும் பாடல் வரிக்கு உரையாசிரியர்களின் உரைகளில் முன்னுக்குப் பின் உள்ள முரண்களை ஆய்ந்து கண்டறிந்து அப்பாடல் வரிக்கு இளங்கோக்களளாகிய பெருங்குடி வணிகர் திருமண மரபுகளை விளக்குவதோடு, தமிழ் சமூகத்தில் ‘வீடு சொல்லுதல்’ எனும் சடங்கை விவரிக்கிறார். உறவினர் வீட்டிற்குச் சென்று மணநேரத்தை நினைவூட்டி அழைத்தல். இம்மங்கலச் செய்தியைக் கூறுவோர் ஒருவர்பின் ஒருவராக முறையாக (அணியாக)ச் சென்று மீள்தல் அன்றி அரும்பதவுரையாசிரியர் கூறியது போல் ”மங்கலிய சூத்திரம்” என்று பொருள் வாராது என்கிறார்.
கண்ணகி தன் கணவனை இழந்த பின்பு “பொற்றொடி தகர்த்தாள்’ என்பது கவனிக்கத்தக்கது. அவள் ‘தாலியை கழட்டியதாக எங்கும் குறிப்பில்லை’. தொடி என்றால் வளையல், தம் கைம்மை நிலைக்கு அறிகுறியாக தொடியைக் களைதல் மரபு. அதேபோல் இழை களைதல் எனும் மரபு புறநானூற்றுப் பாடலில் உள்ளது. “ஈகை அரிய இழை மட்டும் எஞ்சி நின்றது” - கொடுத்தற்கரிய நகை எனும் பொருள் குறிக்கும் இம்மரபோடு அருகலம் முதலாகிய அணி எனும் விளக்கத்தின் வாயிலாக திருமணத்தின் போது ‘அரிய நகை’ (precious ornament) எனும் அருங்கல / அரிய நகையை ஆண் பெண்ணுக்கும் கொடுத்து மணம் முடிக்கும் வழக்கமும், கணவன் இறந்த பின்பு இழை களைதல் எனும் அருங்கலத்தை களைதல் எனும் வழக்கமும் குறிக்கப்படுகிறது. அதுவல்லாது இழை என்பதற்கு மாங்கலிய சூத்திரம் எனும் பொருள் கூறுவது பொருந்தாது. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதற்குப் பொருள் உரைத்த நம்பியப் பெருமாள் ‘அருங்கலம் அணிதல்’ என்பதற்கு ‘பொன் அணிதல்’ என்று எழுதியதிலிருந்து ‘பொன்’ அணியும் பழக்கம் அக்காலத்தில் தோன்றியிருக்கலாம் என்றோ அல்லது உரையாசிரியர் தாம் பயின்ற அறிவைக் கொண்டு அவ்வாறு உரைத்தார் எனவும் நோக்கலாம்.
சங்க நூல்களில் குறிப்பிடப்படும் தாலி என்பதற்கு காலத்திற்கு தகுந்த பொருளும், உரையாசிரியர்களின் அறிவுக்குகந்த பொருளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐம்படைத்தாலி, மாணிக்கத்தாலி, புலிப் பற்தாலி (குறவன் புலியை வேட்டையாடி வென்றதன் அடையாளமாக அவனும், அவனது மனைவி மக்களுக்கும் அழகு செய்த நூலில் அணிவிப்பது. இப்பொழுதும் தாலி புலிப்பல் வடிவிலேயே இருப்பதை பொருத்திப் பார்க்கவும்), ஆமைத் தாலி பின் தாலி என்று பலவகை தாலிகளும், அதனோடு தொடர்புடைய சடங்குகளும், மரபுகளும் உரையாசிரியர்களின் முரண்களோடும், மரபுகளோடும், வரலாற்று நிகழ்வுகளோடும் விளக்கியுள்ள ம. இராசமாணிக்கனார் தாலி – சொற்பொருள் ஆராய்ச்சி எனும் தலைப்பில் கூறுவது:

” ‘தால்’ எனும் சொல் நாவைக் குறிக்கும். ‘தாலி’ என்பது தாலத்தை அதாவது நாவை (வாய்) உடையது எனப் பொருள்படும். எனவே ‘தாலி என்பது புலியின் அங்காந்த வாய் வடிவில் செய்த ஆபரணத்தைக் குறிப்பதாயிற்று”.
மேலும் அவர் கூறுவது: தமிழ் இலக்கணத்தில் எழுத்துப்போலி என்பது உண்டு, எழுத்து மாறினாலும் பொருள் மாறாமல் வரும். உ.ம் ஞண்டு – நண்டு, ஞாய் – நாய், அரைசன் – அரசன்...இவ்வாறாக ஞாய் - தாய் எனத் திரிவதுபோலவே, ஞால் என்பது தால் எனத் திரிதல் கூடும். உலகத்தைக் குறிக்கும் ‘ஞாலம்’ என்ற சொல் ‘தாலம்’ எனத் திரிந்தது. ஞால் – தொங்குதல் என்று பொருள்படும். ஞால் என்பதன் திரிபாகிய ‘தால்’ தொங்குதல் என்ற அப்பொருளையே உணர்த்துவதாகல் வேண்டும். தால்+இ = தாலி – தொங்கு தலையுடையது. எனவே ‘தாலி’ என்பது கழுத்தில் அணியும் கயிற்றில் தொங்கு நகையைக் குறிப்பதாகும். (பெருங்கதையில் வரும் உதயணன் ஏறிய குதிரை கூட ‘தாலி’ எனும் ஒருவகை நகையை அணிந்திருந்தது எனும் குறிப்பைக் காண முடிகிறது).
’தாலி’ என்பது பனைக்கு ஒரு பெயர். இது பெரியாழ்வார் பாசுரத்தால் அறியப்படும். தாலிக் கொழுந்து – பனங்கொழுந்து என்று உரைகாரரும் கூறியிருக்கின்றனர். இக்காலத்தும் பனையோலைக் கொழுந்தைப் பதக்கம்போல அழகுறப் பின்னி அதனைக் கயிற்றிலோ, அவ்வோலைக் கிழிப்பிலோ கோத்துத் தொங்கவிட்டுக் கழுத்தில் அணிந்து மகிழ்தல் சில சிற்றூர்ச் சிறாரிடம் காணலாம். பனையைக் குறிக்கும் ‘தாலி’ என்னும் இச்சொல், நானூறு ஆண்டுகட்குமுன் ‘தாளி’ என மருவின்மை மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டால் அறியப்படும். பனையோலைக் கொழுந்தால் செய்யப்பட்ட அணி ‘தாலி’ எனப் பண்டை மக்களால் குறிக்கப்பட்டது எனக் கொள்ளினும் தவறாகாது. பண்டை மக்களுக்கு ஒரு காலத்தில் பனையோலையே காதணியாக இருந்தது. அதனால் காதணி ‘ஓலை’ என்ற பெயரால் வழங்கப்பெற்றது. ‘தோடு’ என்பதும் பனையோலையைக் குறிப்பதே. பின்னர் அது பொன்னால் செய்து அணியப்படும் அணிக்கும் ‘தோடு’ என்று வழங்கப்பட்டது. இவை போலவே பனங்குருத்து (தாலி) கொண்டு செய்யப்பட்ட அணியைக் குறித்த ‘தாலி’ எனும் சொல், பிற்றை நாட்களில் பொன்னால் செய்து கழுத்தில் அணியப்பட்ட நகையைக் குறிக்கலாயிற்று எனக் கோடலே இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகளால் ஏற்புடையதாகும்.

தாலி பற்றிய இந்த நீண்ட விளக்கமானது இனி தாலிக் கட்டத் தேவையில்லை என்று பரிந்துரைப்பதற்காக அல்ல. தாலி என்பது ஒரு அடையாளமாக, வெற்றிச் சின்னமாக இருந்திருக்கிறதே ஒழிய அது எவ்வித ‘புனிதங்களும்’ நிறைந்ததாக இருக்கவில்லை. குறிப்பாக ‘மஞ்சள் கயிறு’ கொண்டு தங்கத்தில் கோர்த்துக் கட்டப்பட்டதாக எங்கும் இருக்கவில்லை. காலமாற்றத்தில், பார்ப்பனியம் புகுத்திய பல கருத்தாங்களில் ஒன்று தான் அந்த ‘மஞ்சள் மகிமை’ என்பதை புரிந்து கொண்டால் அது நம் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுவதிலிருந்தும், அப்புனிதம் கெட்டுப்போகாமல் இருக்க கடன் வாங்கி ’தங்கக் கடமையை’ நிறைவேற்றுவதும் அவசியமிருக்காது. ஒரு அலுவலகத்தில் பணி புரிவதற்கே அடையாள அட்டையை அணிந்து செல்ல வேண்டியுள்ளது. வாழ்நாள் முழுதும் அமைத்துக் கொள்ளப் போகும் ஒரு உறவு முறையை ஊராருக்கு அறிவிக்கவோ அல்லது சம்பந்தப்பட்ட இருவர் உறுதி செய்து கொள்ளவோ ஏதோ ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்வது வரவேற்கத்தக்கதே. ஆனால் அது தங்கத்தால் செய்யப்பட்டும், மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்டும்தான் இருக்க வேண்டும், அப்படி ஒரு கயிற்றைக் கட்டிய பின்னர் அப்பெண் அடிமையாக மாறிவிடவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்று பகுத்தறிய வேண்டியே மேற்கூறிய ஆய்வு விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டது. அவரவர் வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப அடையாளங்களை வைத்துக்கொள்வதில் என்ன குறை இருந்துவிடப்போகிறது. அல்லது அப்படி ஒரு அடையாளம் தேவையில்லை என்று சம்பந்தபட்ட இரு துணைகளும் முடிவெடுப்பதில் என்ன புனிதம் கெட்டுவிடப்போகிறது. நெற்கதிர்கள் விளைய, நிலம் வளமாக இருக்க சூரியனின் சக்தி இன்றியமையாதது. அதுபோல் பெண்ணின் தூமையும் (மாதவிடாய் இரத்தம்) பல மருத்துவ குணங்கள் கொண்டதாக, உற்பத்தியின் சின்னமாக கருதப்பட்டது. விளைநிலங்களில் மாதவிடாய் இரத்தம் தூவப்பட்டதாக பழங்காலப் பாடல் குறிப்புகள் உள்ளன. தற்போது முதலாளித்துவ விஞ்ஞானமானது ‘மாதவிடாய் இரத்தத்தின்’ மருத்துவ குணத்தை ஆராய்ந்து, பெண்களின் எல்லா பாகங்களையும் உறுஞ்சியது போதாதென்று, அதையும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ‘மாதவிடாய் இரத்த சேமிப்பு வங்கி’ (menstrual blood stem cell banking) என்ற ஒன்றை துவங்கியுள்ளது. பல்வேறு நோய்களுக்கு மாதவிடாய் நேரத்தில் எடுக்கப்பட்ட இரத்திலிருந்து மூல உயிரணுக்களை விளைவித்து சிகிச்சை அளிக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘செழுமையை’, ‘உற்பத்தியை’ குறிக்கும் நிறங்களாக மஞ்சளும், சிவப்பும் கருதப்பட்டதே ஒழிய, அதாவது ’மங்கலமாக’ கருதப்பட்டதே ஒழிய பார்ப்பனிய ‘புனிதத் தன்மை’ என்பது பின்னர் ஏற்றிவைக்கப்பட்ட ஒன்று என்று கவனத்தில் கொள்ளுதல் சிறப்பாகும்.
மதங்கள் பரப்பும் கருத்தாக்கங்கள் ஒருபுறம் என்றால் முதலாளித்துவம் அரங்கேற்றும் புனித நாடகம் அதற்கிணையாக செயல்படுகிறது. அது மத நம்பிக்கைகளை தனக்கு சாதகமாக, தேவைப்படும் நேரங்களில் எதிராக திறமையுடன் கையாள்கிறது. ‘ஆடி’ மாதம் என்பது ‘விளங்காத’ மாதமாக (தமிழ் சமூகத்தின் காரணம் வேறு, பார்ப்பனியம் கூறும் காரணங்கள் வேறு) இருந்த நம்பிக்கையை ”ஆடித் தள்ளுபடி, ஆடிக் கொண்டாட்டம்” என்று முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. சமீப காலங்களில் ஆடி மாதம் தான் வியாபாரிகளுக்கு ‘மங்கலகரமான’ மாதமாக இருப்பதை கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தைக் காணும்போது அறியமுடிகிறது. அதே போல் ‘அக்‌ஷயத் த்ருதியை’ எனும் ஒரு ‘பார்ப்பனிய நம்பிக்கையூட்டப்பட்ட தினம்’ கடன் வாங்கியாவது சிறிய அளவு தங்கத்தை வாங்கும் மனநிலையை விதைத்துள்ளனர். குறிப்பாக அடித்தட்டு மக்கள் இதில் முற்றிலும் மூளை சலவைச் செய்யப்பட்டு அவதியுறுவதைக் காணமுடிகிறது.
தங்கம், தாலி என்பதன் பின்னணியில் சூது உள்ளதோ, வரலாற்று புரட்டு உள்ளதோ இல்லையோ ஆனால் அதை வைத்து பல கொடுமைகள், மன நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், பாதுகாப்பின்மை நிகழ்வது மறுக்க முடியாத ஒன்று. பெண்கள் தங்கத்தின் பின்னும், அழகு, அலங்காரம், வீடு, வாகனம், வசதி, உறவுகளுக்கு மத்தியில் பெரும் மதிப்பு கோரி உலவுதல் என்று தங்கள் கவனத்தை சிதறவிடுவதன் காரணமாக கணவனாகிய ஆண்கள் கை மீறிப் போய்விடுகிறார்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டியுள்ளது. சேமிப்பு, வசதி வாய்ப்புகள், பிள்ளைகளை ‘பெரிய’ பள்ளிக்கூடங்களில் மட்டுமே சேர்க்க வேண்டி கொடுக்கப்படும் நெருக்கடிகள் தொழில் முறையில், பணியிடங்களில் ஆண்கள் பல சமரசங்களையும், குறுக்கு வழிகளையும் மேற்கொள்ள வழிவகுக்கிறது. இது அறியாமையின் வெளிப்படு என்பதில் ஐயமில்லை, இன்னும் எத்தனைக் காலங்களுக்கு “பெண்மையின்’ பெருமைகளை, கடமைகளை மட்டுமே பேசிக் கொண்டு கிணற்றுத் தவளையாக இருக்கப் போகிறோம். பகுத்தறிவு, முற்போக்கு, பெண்ணியம், மார்க்சியம் ஆகிய சிந்தனைகளைப் பாவச் சொல்லாகவும், பெண்மைக்கெதிராகவும், வெறும் பாலியல் சுதந்திரத்திற்க்காக மட்டுமே என்று ஆணாதிக்கப் பார்வையுடன் தட்டையாகப் புரிந்து கொண்டு அவை முன் வைக்கும் சமூக விடுதலை, சமதர்ம வழிகாட்டுதல்களை புறந்தள்ளப் போகிறோம்.
“பெண்ணாசை, பேராசை” என்று சாடை பேசிவிட்டு ஆண்கள் இதிலிருந்து நழுவிவிட முடியாது. நீங்கள் விரித்த வலையில் நீங்களே விழுந்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களை வீட்டுகுள்ளேயே முடக்கி வைக்க அவளுக்கு ’கையூட்டாக’ நீங்கள் கொடுத்த பொருள்களும், அந்தஸ்தும், அவளுக்கென்று நீங்கள் ஒதுக்கிய கடமைகளும் இன்று தலைக்கு மேல் எழுந்த வெள்ளமாகிவிட்டது. உங்களால் கட்டுக்குள் வைக்கப்பட்ட காலம் எனும் அரக்கன் அதை முழுமையாக உட்செறித்து பெண்களுக்கு சிந்திக்கும், பகுத்தறியும் தன்மையை இல்லாமல் செய்துவிட்டான். வாழ்வை அர்த்தப் படுத்திக் கொள்வது பற்றி உங்கள் துணையுடன் உரையாடுவது ‘சமூக அடையாளம்’ எனும் நெருக்கடியிலிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ள உதவும். உங்களுடன் பணி புரியும் பெண்களிடம் நீங்கள் பேசும் முற்போக்கு சிந்தனைகளை, சுதந்திர உணர்வுகளை உங்கள் மனைவிகளிடமும் பேசுங்கள். வீட்டு உணவு ருசியாக இருந்தால், ஆண் ஏன் வெளியில் உணவு தேடப்போகிறான் என்பது பெண்களுக்கும் பொருந்தும் தானே. ’ருசி’ என்பது எதில் இருக்கிறது என்பதை சம்பந்தபட்ட இரு துணைகளும் சுவைத்து, உரையாடி கண்டறிய வேண்டிய ஒன்று, எவரோ சுவைத்து விட்டு சென்ற எச்சில் இலையிலிருந்து சுவைத்ததை வைத்து ருசி எனப்தை உணர்வது பொருத்தமாக இருக்காது.
கேள்விகளை அனுமதியுங்கள். கேள்வி கேட்பதனால் மட்டுமே ’கடைமைகளை’ பெண்கள் மீறப்போகிறார்கள் என்று அவசரகதியில் புரிந்துக் கொள்ளாமல் என்ன விதமான விடுதலையை நோக்கி அக்கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பதில் சற்று கவனம் செலுத்துங்கள். ஊடகம், திரைப்படம், புராணம், இலக்கியம், முதலாளியம் இன்னும் இதர அணைத்துக் குப்பைகளும் சொல்லியுள்ளவற்றை புறந்தள்ளி, துணைகளாகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது, எவ்வகையான மதிப்பீடுகளுக்கு, அங்கீகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்று உங்களுக்குள் உரையாடி முடிவெடுப்பது உறவுகளைப் பலப்படுத்தும், போலிகளை, சுயநலவாதிகளை விரட்டியடிக்க உதவும். உங்களுடைய தலைமுறையில் அது சாத்தியமில்லாமல் போயிருக்கலாம், குறைந்தபட்சம் உங்கள் பிள்ளைகளின் தலைமுறையினருக்கு இத்தகைய ‘மாயை’ ‘பொருளாதார மதிப்பீடுகள்’ அவசியமா என்று கேள்வியெழுப்புங்கள். நீங்கள் செல்லமாக வளர்த்த மகள் ‘அற்ப’ தங்கத்திற்காகவும், பணத்திற்காகவும், ஏற்றிவைக்கப்பட்ட ‘புனிதங்களுக்காகவும்’ கொடுமைப் படுத்தப்படுவதை இன்னமும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்த்தலே இதற்கு விடிவாய் அமையும். உங்கள் மகளை தங்க நகைக் கடை பொம்மை போல் அலங்கரித்து திருமணம் செய்து வைப்பதன் மூலம், அவள் மனதில் “கடனை உடனைப் பெற்று என் பெற்றோர் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் என்னை திருமணம் செய்து வைத்தார், அதனால் நானும் என் புகுந்த வீட்டில் என் கணவனின் பொருளாதாரத்தின் மீதே அதிக கவனம் செலுத்துவேன், உறவுகளுக்கென்று ஒரு பைசா தரவிடமாட்டேன் என்று குடும்பத்தை ஒரு வங்கி போல் நடத்தும் எண்ணத்திற்கு வழிவகுக்கவேண் டாம்.
மகனைப் பெற்ற ’பெருமக்கள்’ தங்கத்தை வைத்து வரும் மருமகளை தராசில் வைத்துப் பார்க்கும் அவர்கள், மகனுக்கு உறவை அமைத்துக் கொடுக்கிறார்களா இல்லை ஒரு வங்கிக் கணக்கை தொடங்கித் தருகிறார்களா என்பது கேள்வியாக எழுகிறது. வங்கிக் கணக்குத் தான் என்றால், அதற்கு வட்டியும், முதலுமாக ஒரு பெண் தன் கணவனின் அத்துணை கவனத்தையும் ஈர்த்து, அதிகாரத்தையும், தன் மூதலீடு திவாலாகாமல் இருக்க பாதுகாப்பையும் கோரி உங்களை ஒதுக்குவதில் தவறில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இறுதியாக, நகைக் கிடங்குகளாக இருக்கும் கோயில்களில் இருக்கும் நகைகளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் எத்தனை ஆயிரம் கோடிகளாய் இருக்கின்றன. சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மனாபசாமிக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாள அறையிலிருந்து எடுக்கப்பட்ட நகைகள், புதையல்களின் மதிப்பு 5 லட்சம் கோடியைத் தாண்டும் என்று அறியப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டில் ”எட்டரை யோகம்” எனப்படும் 8 1/2க் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வந்த அக்கோயிலில் பார்ப்பனர்களின் ஒரு பிரிவினரான பூட்டி என்பவர்கள் 8 பேருக்கு 8 வோட்டும் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு வெறும் ½ ஓட்டும் எஞ்சியிருந்த நிலையில், திருவாங்கூர் சமஸ்தானம் 8 மாகாணங்களாக 8 நாயர் குடும்பங்களின் தலைமையில் பிரிக்கப்பட்டது. அவர்கள் (நிலப்பிரபுக்கள்) பெரும் கொடுங்கோன்மைகளை செய்ததோடு, அரசரை விட அதிகாரத்தில் உயர்ந்திருந்தனர். திருவாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவை கொல்லவும் திட்டமிட்டனர். அவ்வெட்டு பேரையும் கொன்று மார்த்தாண்ட வர்மா அரசவையைக் கைப்பற்றிய பின்னர் இது போன்ற உள்ளூர் சக்திகள், அந்நிய சக்திகளின் தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்க தன்னை ’பத்மனாப தாசா’ என்று அறிவித்துக் கொண்டு, தன் சொத்து முழுவதையும் கோவிலுக்கு என்று அறிவித்தான் (அதுவும் வரியாக வசூலித்தது தான்). கோயிலின் மூலஸ்தானத்தின் கீழ் பெருத்த கிடங்குகளைக் கட்டினான்.

அந்தக் காலத்தில் பாப்பனியத்தால் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து பல்வேறு வகையான அநியாய வரிகள் வசூலிக்கப்பட்டது. திருமணம், குழுந்தைப் பேறு ஏன் இறப்புக்கு கூட வரி வசூலிக்கப்பட்டது. நாட்டுப் படகுகள், ஏர், மாட்டு வண்டி, குடை, தலைத் தாவணி என்று எல்லாவற்றிகும் வரி. சொல்லகூசும் அளவுக்கு மீசைக்கு கூட வரி வசூலிக்கப்பட்டது. அதை எல்லாம் விடக் கொடுமையான வரி ”முலாக்காரம்” (முலை வரி). குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் வரியைக் கட்டி விட வேண்டும். ‘தாழ்த்தப்பட்ட’ இனமான சேர்த்தலா கபுந்தலாக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண்ணொருத்தி அதையும் மீறி பால் கொடுத்ததால், சினம் கொண்ட உள்ளூர் நிலப்பிரபு அவள் வீட்டுக்குச் செல்ல பயம் கொளாத அப்பெண் உள் சென்று தன் இரு முலைகளையும் வெட்டி தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள். அதைக் கண்டு அங்கேயே மயங்கி விழுந்து இறந்து போனான் அந்நிலப்பிரபு. இப்படி மீசைக்கும், முலைக்கும், போரில் தோற்றால் அதற்கும் வரி போட்டு ஏழைகளின், உழைப்பாளிகளின் ரத்தத்தையும், வியர்வைவையும் உறிஞ்சி வசூலிக்கப்பட்ட வரிதான் திருவாங்கூர் சமஸ்தானம் உரிமைக் கோரும் ’புதையல்’. மக்களின் பணத்தைக் கடவுள் பணம், கோயில் பணம் என்று ஏமாற்றி சுரண்டுவதற்கு அரசும் துணை செல்கிறது அதனால்தான் முதல்வர் உம்மண் சாண்டி, அக்கோயிலைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு மண்டலம் அமைக்க ரூபாய் 1 கோடி ஒதுக்கியுள்ளார்.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, அதை மக்களுக்கு பகிர்ந்தளிக்காமல் இருக்க மக்களின் வரிப் பணத்திலேயே 1 கோடி ஒதுக்கீடு. பத்மனாபசாமி திருக்கோயில் மட்டுமல்லாமல், திருப்பதி கோவில், தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள பல கோவில்கள், மடங்கள், சாமியார்களின் ஆசிரமங்கள் என எல்லா இடத்திலும் கோடிக் கணக்கில் பணம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டேயிருக்கிறது. எந்தக் கடவுளும் வந்து அவர்களை ‘சம்ஹாரம்’ செய்து அவற்றைப் பிடுங்கி இல்லாத வரியவர்களுக்கு பகிந்தளிப்பதாகத் தெரியவில்லை. (“தெய்வம் மனுஷ்ய ரூபேணா” என்று ஒரு சப்பைக் கட்டு வேறு, அந்த மனுஷாக்கள் தானே மத்தவாள கோயிலுக்குள்ள வரப்டாதுங்கறா ஊர அடிச்சி உலையில போடுறா). மக்களும் ஏன் கடவுள் வரமறுக்கிறார் என்று கேட்பதாகவும் தெரியவில்லை. அத்தனை திடமாக பாவ புண்ணிய, முன் ஜென்ம கருத்தாக்கங்களை ஏற்றி வைத்திருக்கிறது அக்கும்பல். கடவுள் தான் கைவிட்டுவிட்டார் என்றால் மாநில அரசோ, மத்திய அரசோ கோயிலில் உள்ள அத்தனை சொத்துக்களும் பொது நிதிக்கே சேரும் என்று எந்தத் தீர்மானமும் நிறைவேற்றுவதாயில்லை.

ஏழைகள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு கால் காணி தங்கம் கூட போட முடியாமல் அவதிப்பட கடவுளுக்கு பிரம்மாண்ட ‘திருக்கல்யாணங்கள்’ நடத்தப்படுகின்றன. அதுதவிர ஆடி, ஆவணி, ஐப்பசி, மார்கழி என்று பல்வேறு முகூர்த்தங்கள், பூசைகள். யாருடைய வரிப் பணத்திலும், உழைத்துக் கொட்டும் பணத்திலும் இதெல்லாம் நடக்கிறது. 2001 அரசாங்க புள்ளிவிவரப்படி 2 மில்லியன் மக்கள் வீடில்லாமல் இருக்கிறார்கள், ஆனால் 2003ல் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்தக் கணக்கின் படி 78 மில்லியன் மக்கள் வீடில்லாமல் நடைபாதையில் வசிக்கின்றனர். இத்தனை சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் நிலையில் தங்கத்தின் நுகர்வு சதவிகிதம் நம் மனங்களின் மனிதாபமற்ற, சுரணையற்ற, பொறுப்பற்ற, சுயநலத் தன்மையின் அளவுகோலாகத்தான் கருதத்தோன்றுகிறது.

எவரோ சிலர் பணக்காரர்களாக நிலைத்திருப்பதற்கு ரத்தமும் வேர்வையையும் சிந்தி நாம் சம்பாதிக்கும் பணத்தினை கைதுடைக்க வேண்டுமா. அடிப்படை மருத்துவ வசதி, கல்வி வசதி கூட இல்லாத ஒரு நாட்டில் தங்கம் வாங்கும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது வெட்கப்படவேண்டிய விசயமாக இருக்கிறது. வயிற்ப்பாட்டிற்கே வழியில்லாத மக்கள் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து அதுவும் நிலைத்திருக்காமல், கடனையும் அடைக்க முடியாமல் அவதியுற்று சிதைந்து போவதை எவ்வளவு காலங்களுக்கு பார்த்துக் கொண்டிருப்பது. படித்தப் பெண்களே இம்மாயையிலிருந்து விடுபடாமல் இருக்கும் பொழுது கல்வியறிவற்ற பெண்களிடம் இது குறித்த விழிப்புணர்வை எங்கிருந்து துவங்குவது. தொலைக்காட்சி முன் தங்களை இழந்து நிற்கும் பெண்கள் அத்தொடர்களில் வரும் பெண்களின் துன்பங்களைக் கண்டு வருந்துவதும், தொலைபேசி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கும் தொடர்பு கொண்டு கொஞ்சுவதும் எத்தகையப் பயன்களை சமுதாயத்திற்கு அளிக்கபோகிறது என்பது தெரியவில்லை.

பல்வேறு முனைகளிலிருந்து மக்கள் அறிவுநிலைகள் மேல் தொடுக்கப்படும் அத்துமீறலானது அபாய நிலையை எட்டியுள்ளது, கட்டுக்கடங்காமல் ஊடகங்களின் வாயிலாக விசக் கிருமி போல் பரவுகிறது. எத்தகைய கொள்கைகளோடு தொடங்கப்படும் ஊடகங்களாய் இருந்தாலும் “பெண்கள்”, “பெண்மை”, “மதம்” பற்றிய அவர்களது மதிப்பீடுகள் ஆணாதிக்கமும் வழிமொழிந்தப் பாடங்களைச் சார்ந்தே உள்ளன. பெண்ணிய சிந்தனை தனக்கென ஒரு காட்சி ஊடகத்தை நிறுவ வேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. அது பாலியல் சுததிரம், ஆணுக்கு நிகரான நாகரீக சுதந்திரம் பேசும் ஊடகமாக இல்லாமல் வறுமைக்கோட்டிற்கு கீழே உழலும், சாதியத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட்ரிஉக்கும் ஒடுக்கபப்ட்ட இனப் பெண்களின் விடுதலையை மையப்படுத்தி அமைதல் என்பது அவசியமாகிறது. உழைக்கும் மக்களோடு கைகோர்க்காத எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் ‘மேட்டுக் குடி’ நலனை மட்டுமே வளர்த்தெடுத்திருக்கிறது என்பதை வரலாற்றில் காணமுடிகிறது. அந்நலன் முதலாளித்துவம் வகுப்பெடுக்கும் தேவைகளாகவும், நலன்களாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை ஒவ்வொரு நிகழ்வும் உறுதிசெய்கிறது.

...மேலும்

Oct 28, 2011

சினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது !


ஒரு வறிய மகாராஷ்டிர கிராமப்புறத்தில் வாழும் கௌரி, கிருஷ்னே என்ற இளம் சகோதரிகளின் வாழ்க்கைதான் இப்படத்தில் மையக்கரு. மூத்தவளான கௌரியின் திருமணத்திற்கு முந்தைய இரு நாட்களிலிருந்து படம் துவங்குகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் கம்பெனிகள், விதைக் கம்பெனிகளின் படையெடுப்பின் விளைவாகவும், அவர்களது காலை நக்கி விவசாயிகளின் கழுத்தறுக்க துணை நின்ற அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் துரோகத்தின் விளைவாகவும், மென்னி முறிக்கும் கந்துவட்டிக் கொடுமையின் விளைவாகவும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஆதாரபூர்வமாக அக்கட்டுரைகளில் நாம் காண முடியும்.

கடன் வாங்கிய பணத்தில் மகளின் கல்யாணம், அதே நாளில் மருந்தைக் குடித்துச் செத்த தகப்பனின் கருமாதி, ஊரைவிட்டு வெளியேறி பெயர் தெரியாத ஊரில் அநாதைகளாக மருந்தைக் குடித்துச் செத்துப் போன குடும்பங்கள், தங்கள் உடல்களைக் கூட தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டாமென கடிதம் எழுதி வைத்துவிட்டு செத்துப் போன விவசாயிகள்…. எத்தனைக் காட்சிகள்?

சிந்தித்துப் பாருங்கள். ஷில்பா ஷெட்டியின் விளம்பர அதிகாரிகளைப் போல அவ்விவசாயிகளுக்கு யாருமில்லை. அதனால் புள்ளி விவரங்களாய் மட்டும் செய்தி ஊடகங்களைக் கடந்து, மறைந்து போய்விட்டனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருப்பார்கள்? குடும்பத்தின் தலைவன் போன பின்னால், அரசின் பிச்சைத் தொகை அவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது? அவர்களது வாழ்க்கை தலைகீழாக ஏன் மாறியது என்றாவது அவர்களுக்குத் தெரியுமா? அவர்களை விளிம்பிற்கு நெட்டித் தள்ளும் வாழ்க்கையில் அதிர்ச்சியோ, மனப்போராட்டமோ, கண்ணீரோ, கதையோ இல்லையா? பின்னர் ஏன் இந்த நாட்டின் சிறுகதைகளில், நாவல்களில், செய்திக் கட்டுரைகளில், திரைப்படங்களில் அவர்கள் இல்லை?

பொறுக்கி வீரர்களின் பொறுக்கித்தனங்களிலும், மல்லாக் கொட்டைகளிலும் மாய்ந்தெழுந்து, கிராமப்புறங்களின் “யதார்த்த’ வாழ்வைச் சொல்லும் சினிமாக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் படைப்புலக பிரம்மாக்களின் கலை உணர்ச்சி, இந்த யதார்த்தமான, கவர்ச்சியற்ற, தேய்ந்தழியும் உண்மையான கிராம வாழ்க்கையை ஏன் கதைக் கருவாக ஏற்க மறுக்கிறது? அவர்களுக்கு, இயல்பான சோகம் “போர்’ அடிக்கிறது.

அத்தகைய “போர்’ அடிக்கும் திரைப்படமொன்றை நான் சமீபத்தில் பார்த்தேன். 1995இல் சுமித்ரா பாவே என்பவரால் உருவாக்கப்பட்ட தோகீ (இரு பெண்கள்) எனும் அந்த மராத்தியத் திரைப்படம், 1996இல் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படமாக தேசிய விருது கொடுத்து முடக்கப்பட்டு விட்டது. “அவார்டு’ படம் என்றான பின்னால் அது மக்கள் பார்க்கத்தகாதது என்பது இந்தியச் சினிமாவின் அடிப்படை விதிகளில் ஒன்று. உண்மையில் இத்திரைப்படம் வழக்கமான “அவார்டு’ படங்களுக்கு நேர் எதிரான முறையில் உரக்கப் பேசும் கதாபாத்திரங்கள், பாடல்களுடைய படமே.

_________________________________________________

ஒரு வறிய மகாராஷ்டிர கிராமப்புறத்தில் வாழும் கௌரி, கிருஷ்னே என்ற இளம் சகோதரிகளின் வாழ்க்கைதான் இப்படத்தில் மையக்கரு. மூத்தவளான கௌரியின் திருமணத்திற்கு முந்தைய இரு நாட்களிலிருந்து படம் துவங்குகிறது. உறவினர்கள் சூழ திருமண மகிழ்ச்சியில் குடும்பமே திளைக்கிறது. அதனைக் குலையறுக்கும் விதமாக மணமகன் வீட்டார் மொத்தமும் வரும் வழியில் விபத்தில் இறந்து விட்ட செய்தி வந்திறங்குகிறது. அதிர்ச்சியில் தகப்பனுக்கு வாதம் வந்து விடுகிறது. குடும்பம் இடிந்து போகிறது.

அதிர்ஷ்டம் கெட்ட சனியனாக கௌரி ஊரால் பழிக்கப்படுகிறாள். வாதத்தினால் படுக்கையில் கிடக்கும் கணவனையும், இரு மகள்களையும், சிறுவனான மகனையும், மூழ்கடிக்கும் கடன்களையும் சுமக்க வழியின்றி கௌரியின் தாய் திணறுகிறாள். நிலங்களையும், மாடுகளையும், எஞ்சியிருக்கும் நகைகளையும் விற்று உயிர் வாழப் போராடுகிறாள். கடன்காரர்கள் சுற்றி நெருக்குகிறார்கள். நாட்பட நாட்பட கௌரி பித்துப் பிடித்தவள் போல நிலை வெறித்துக் கிடக்கிறாள். ஊர் அவளை சூனியக்காரி என ஏசுகிறது.

செய்வதறியாமல் விசும்பும் தாய், பம்பாயில் மில்லில் வேலை செய்யும் தனது தம்பிக்குக் கடிதம் எழுதி வரவழைக்கிறாள். கௌரி இங்கே ஊராரிடம் வதைபடுவதிலிருந்தும், அவளால் அவளது தங்கை, தம்பி வாழ்க்கையும் பாதிக்கப்படுவதிலிருந்தும், சோத்துக்கே வழியற்றுக் கிடக்கும் நிலையிலிருந்தும் விடுபட, அவளை பம்பாய்க்கு அழைத்துச் சென்று ஏதேனும் வேலைக்குச் சேர்த்து விடும்படிக் கூறுகிறாள். சிந்திக்கும் தம்பி “சரி அழைத்துச் செல்கிறேன், ஆனால் என்ன வேலை எனக் கேட்கக் கூடாது, மணியார்டர் மட்டும் மாதாமாதம் வந்து விடும்’ என்கிறான். அதிர்ந்து போகிறாள் தாய். வேதனையில் குமுறியவாறு, இறந்து போன மாப்பிள்ளை வீட்டாரோடு மகள் திரும்பிப் போகும்பொழுது இறந்ததாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான் என்கிறாள்.

இரவு முழுவதும் தூங்காமலிருக்கும் தாய், அதிகாலையில் தம்பியை எழுப்பி கௌரியை அழைத்துச் செல்லும்படி கூறுகிறாள். இவையெதுவும் அறியாத கௌரி, ஏதோ வேலைக்குச் செல்வதாகக் கருதி மாமனோடு ஊரிலிருந்து மௌனமாக வெளியேறுகிறாள். பரிதவிப்போடு கிருஷ்னேயும், அவளது தம்பியும் அவளைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி வைக்கிறார்கள்.

மாதா மாதம் மணியார்டர் வருகிறது. மணியார்டர் பணத்தை வாங்கும் நாளில் தாய்க்கும் கிருஷ்னேக்கும் இடையே ஒரு இறுக்கமான மௌனம் நிலவுகிறது. தன்னுடைய அக்காள் எங்கேயோ உடல் வருந்த உழைத்து பணம் அனுப்புகிறாள் என வருந்தும் கிருஷ்னே, மணியார்டர் துண்டுக் காகிதத்தைக் கூட சேர்த்து வைக்கிறாள். ஒரு கனத்த மௌனத்தினூடாகக் காலம் உருண்டோடுகிறது.

பம்பாயிலிருந்து மாமன் வீட்டிற்கு வருகிறான். இரவில் தாய் அவனிடம் கௌரி குறித்து வினவுகிறாள். அவன் தான் அங்கே போவதில்லை என்கிறான். தானும் முன்பெல்லாம் அங்கே சென்று கொண்டிருந்ததாகவும், இப்பொழுது அங்கே செல்ல மனம் வரவில்லை எனவும் கூறுகிறான். தான் ஒரு பெரும் பாவம் செய்து விட்டதாகவும், உணவும், உறக்கமும் கூட அற்றுப் போய் விட்டதாகவும் வருந்துகிறான்.

கிருஷ்னேக்கு மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாதா மாதம் வரும் மணியார்டரோடு இம்முறை முதல் முறையாக கௌரியிடமிருந்து கடிதம் வருகிறது. திருமணம் குறித்து அறிந்து கொண்டதாகவும், புடவைகள், பட்சணங்களோடு தான் வருவதாகவும் அக்கா கூறுகிறாள். வெம்மை படர ஊரை விட்டுச் சென்ற கௌரி, ஒரு அதிகாலைப் பொழுதில் வந்து சேர்கிறாள்.

அக்காவினுடைய பகட்டான சேலையையும், முகத்தில் தோன்றும் அந்நியப்பட்ட தன்மையையும் கண்டு கிருஷ்னே துணுக்குறுகிறாள். தனது கல்யாணத்தோடு அவளும் கல்யாணம் செய்து கொண்டாலென்ன எனக் கேட்கிறாள். தனக்கு நிறையவே கல்யாணங்கள் நடந்து முடிந்து விட்டதாகவும், இனி தனக்குக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லையெனவும் கௌரி கூறுகிறாள். புரியாத கிருஷ்னே, “நீ ரொம்பவும் மாறிப் போய்விட்டாய் அக்கா’ என்கிறாள். குளித்துக் கொண்டிருக்கும் கௌரிக்கு நீரூற்றச் செல்லும் தாய், அவளது முதுகிலுள்ள தீக்காயத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்.

உறவினர்கள் வருகின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் சடங்குகள் நடக்கின்றன. பெண்களோடு இணைந்து இனிப்புகள் பரிமாறத் தட்டெடுக்கும் கௌரியை, தாய் முறைக்கிறாள். நீ ஏன் குறுக்கே வருகிறாய் எனக் கடிந்து கொள்கிறாள். கௌரி மௌனமாக வெளியேற, ஆத்திரம் கொள்ளும் கிருஷ்னே, “”கௌரி வேண்டாம், ஆனால் கௌரி கொடுக்கும் காசு மட்டும் உனக்கு வேண்டுமா?” என வாதிடுகிறாள். பதில் பேச முடியாமல் தாய் அறையை விட்டு வெளியேறுகிறாள். கௌரியைப் பின் தொடரும் கிருஷ்னே, வேண்டுதல் துணி முடியும் மரத்தினடியில் அவளைக் காண்கிறாள். அவளருகில் மௌனமாகச் சென்றமர்கிறாள்.

அந்தப் பக்கமாய், மாப்பிள்ளையும், அவனது நண்பர்களும் உலவ வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் குமுறியெழும் கிருஷ்னே, அவர்களை நோக்கிக் கத்துகிறாள். “”இங்கே பாருங்கள், இவள்தான் என்னுடைய அக்கா, இவள் என்னை விட நன்றாகப் பாடுவாள். என்னை விட்டு விடுங்கள். இவளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். சமூக மாற்றத்திற்காகப் போராடுகிறீர்களே, இதோ என்னுடைய அக்காக எங்களுக்காக உழைத்து உழைத்து தேய்ந்து நிற்கிறாள். இவளுக்கு வாழ்க்கை கொடுங்கள்!” எனக் கதறும் கிருஷ்னேயை, கௌரி இழுத்துச் செல்கிறாள். மாப்பிள்ளையும், நண்பர்களும் புரியாமல் நிற்கின்றனர்.

திருமணம் நடக்கிறது. ஒதுங்கி நிற்கும் அக்காவை நொடிக்கொரு முறை கிருஷ்னே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறாள். அவள் பார்வையின் திசை வழியே எல்லோரும் கௌரியைப் பார்த்து சங்கடமான மௌனத்தில் ஆழ்கிறார்கள். கௌரி மெல்ல விலகி மறைகிறாள். தாலி கட்டும் நேரத்தில் எழுந்து வெளியேறும் கிருஷ்னே, அக்காவைத் தேடியோடுகிறாள். அனைவரும் அதிர்ச்சியுறுகின்றனர். ஊரை விட்டு வெளியேற நடந்து செல்லும் கௌரியை, கிருஷ்னே வந்து பிடித்துக் கொள்கிறாள். அவள் பம்பாய்க்குப் போக வேண்டாமென்றும், எப்படியாவது இங்கேயே கஷ்டப்பட்டு தலை நிமிர்த்தி முன்னேறுவோம், அவமானமும், சார்ந்திருக்கும் அவலமும் வேண்டாம் எனக் கூறுகிறாள்.

மாமனும் வந்து சேர்கிறான். கௌரி ஊரை விட்டுப் போக வேண்டாமென்றும், தாங்கள் அனைவரும் செய்து விட்ட பாவத்தை மன்னிக்கும்படியும் வேண்டுகிறான். கௌரியை திருமண வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரும் கிருஷ்னே, காத்திருக்கும் எல்லோருக்கும் முன்பாக அம்மாவிடம் கௌரி திரும்ப வந்திருப்பதைக் கூறுகிறாள். கௌரியை கட்டித் தழுவிக் கொள்ளும் தாய், இனி அவள் பம்பாய் போக வேண்டாமென்றும் பட்டினி கிடந்து செத்தாலும் சரி, இங்கேயே இருக்குமாறும் வேண்டியழுகிறாள். படம் முடிவடைகிறது.

_________________________________________

இக்கதை விவசாயிகளின் பிரச்சினையை, அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் உண்மையான சக்திகளை நேரடியாகச் சொல்லவில்லை. வாதத்தில் விழுந்த கௌரியின் தந்தை வாதத்தில் விழுந்த விவசாயத்தின் உருவகம் என்றும் கொள்ளலாம். ஒருவேளை மணமகனின் குடும்பம் விபத்தில் சாகாமல் இருந்திருந்தால், விவசாயி வாதத்தில் விழாமல் இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்?

மான்சாண்டோ விதைகளைப் பயிரிட்டு மகசூலுக்காகக் காத்திருந்து, பின்னர் பொய்த்துப் போன பருத்திப் பயிர்களைக் கண்டு மனமொடிந்து செத்த விவசாயிகளைப் போல, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார். குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாமென முடிவு செய்யாத பட்சத்தில், கதையில் நிகழ்ந்ததைப் போலவே கௌரி மும்பைக்கு ரயிலேறியிருப்பாள். உடலால் தற்கொலை செய்து கொள்வது அல்லது உள்ளத்தால் தற்கொலை செய்து கொள்வது இரண்டிலொன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு சமூகம் அவர்களைத் தள்ளுவதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

ஒரு விவசாயியைப் பொறுத்தவரை தான் கொண்டிருக்கும் அறம் சார்ந்த விழுமியங்களிலிருந்து வழுவுவதென்பது ஒரு வகை மரணம்தான். உண்மையான மரணத்தை எதிர்கொள்வதற்கு அதிகம் தடுமாற்றம் காட்டாத தாய், மகளை பம்பாய்க்கு அனுப்பும் முடிவில் லேசாகத் தடுமாறுகிறாள். பம்பாயில் என்ன வேலை என்று மாமன் உடைத்துச் சொல்லவில்லை. சொல்லாத போதிலும் விளங்கிக் கொள்கிறாள் தாய். பசி அறத்தைத் தின்னுகிறது.

இப்படித்தான் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளின் வீதிகளில் ஒவ்வொரு நாளும் கெளிரிகள் வந்திறங்குகிறார்கள். கௌரிகளுடைய நிலங்களையும், வயல்களையும், பன்னாட்டுக் கம்பெனிகள் துகிலுரிய வழிவகுத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன், பொறுக்கி வரை அனைவரும் அவர்களைத் துகிலுரிகிறார்கள்.

இன்று சிங்கூரிலிருந்தும், நந்திகிராமத்திலிருந்தும் விரட்டியடிக்கப்படும் விவசாயிகள் நாளை கல்கத்தாவில் அத்துக் கூலிகளாய் வந்து வீழ்வார்கள். ரத்தன் டாடாவும், மார்க்சிஸ்டுகளும் கோடிகளையும், நிலங்களையும் பண்டம் மாற்றிக் கொண்டு படுத்துறங்கும் வேளையில் கௌரிகளும், கிருஷ்னேகளும் சோனாகஞ்சியில் துகிலுரியப்படுவார்கள்… வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தப் புண்ணிய தேசத்தின், இந்த வளர்ந்து வரும் வல்லரசின் சாதனைகளில் ஒன்று என்ன?

மொழி, இன, சாதி எல்லைகளைக் கடந்து உ.பி.யிலிருந்தும், பீகாரிலிருந்தும், மகாராட்டிரத்திலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் “நூறு ரூபாய்க்கு கூட பெறுமானமில்லாத’ மூஞ்சிகளைப் பெற்ற (உபயம்: பருத்திவீரன்) விவசாய வர்க்கப் பெண்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் காமாட்டிப்புராவில், சோனாகாஞ்சியில் கைகாட்டி நிற்கிறார்கள். நேபாளப் பெண்கள் மும்பை விபச்சார சந்தையில் 3,4 ஆண்டுகள் தம்மை விற்று தமது திருமணத்திற்கான தொகையைச் சேமித்துக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள். மாதாமாதம் வீட்டுக்கு மணியார்டர் போகிறது.

இப்படத்தில் வரும் கௌரியின் மாமன் மன உறுத்தலால் விபச்சார விடுதிக்குப் போவதையே விட்டு விடுகிறான். கன்னட பிரசாத் எனும் விபச்சாரத் தரகனைப் பற்றி செய்தியெழுதும் போர்வையில் அவனது ஆல்பத்திலுள்ள நடிகைகளின் பெயர்களை மயிர் பிளக்கத் துப்பு துலக்கி, பின்னடித்த புத்தகங்களை மிஞ்சும் வகையில் சர்வ அவசியத் தகவல்களோடு, வாசகனின் சபலத்தைத் தூண்டும் மஞ்சள் பத்திரிக்கைகளின் புரோக்கர் கண்ணோட்டத்தையும், அதனையே ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் சொல்லும் இத்திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

விவசாயிகளுடைய வாழ்க்கைச் சித்திரத்தின் மையக் கோடுகளைத் தொட்டு விரிந்து, விமரிசனப் பார்வையோடு இப்படம் மிளிரவில்லை என்பது உண்மைதான். ஆனால், உலகமயமாக்கம் வழங்கும் கோலாகலமான, செயற்கை உலகத்தில், விமரிசனமில்லாத இந்த யதார்த்தம் கூட மதிக்கத்தக்க மாற்றாகத்தான் இருக்கிறது.

பெண் பார்க்கும் நிகழ்வில் பாடச் சொல்லும் பொழுது, தொலைதூரத்தில் வருந்த உழைக்கும் தனது அக்காளின் நினைவாகவே வாழும் கிருஷ்னே அத்தருணத்தில் கூடத் தங்களது கையறு நிலையை மறக்கவியலாது பாடுகிறாள்.

“”நிலம் பாளங்களாக
வெடித்துக் கிடக்கிறது.
துளிநீர் கூட கண்ணில்
தட்டுப்படவில்லை.
என் பாடல் துயரம் மிக்கது,
என் பாடல் துயரம் மிக்கது.”

__________________________
· பால்ராஜ்
நன்றி - வினவு
...மேலும்

Oct 27, 2011

90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்


கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் அதிர்ச்சியளித்த செய்தி ஒரு நடிகைக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 90 கசையடிகளும் என்பதே. இந்த நடிகை ஈரானைச் சேர்ந்த Marzieh Vafamehr ஆவார். இவர் அவுஸ்திரேலிய தயாரிப்பில் உருவான My Tehran for Sale(எனது தெஹரான் விற்பனைக்கு) என்ற படத்தில் நடித்தமைக்காகவே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊடகங்களும் கலாச்சாரமும் என்ற அரச சட்டத் திணைக்களத்தினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கணவரும் திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான கருத்துத் தெரிவித்த போது “விசாரணை இத் திணைக்களத்திற்கு வெளியே நடைபெறுகின்றது. விசாரிப்பவர்களுக்கு கலை பற்றிய எந்தவித ஆழமான அறிவற்றவாகள். இவர்களால் எவ்வாறு ஒரு நீதியான விசாரணையைக் மேற்கொள்வார்கள் “ எனத் தெரிவித்தார். Marzieh Vafamehr இப் படத்தில் (My Tehran for Sale) ஆபாசமாக நடித்தமைக்காகவே கைது செய்யப்பட்டார். ஆபாசம் என்றவுடன் ஹொலி-கொலிவ+ட் படங்களே ஞாபகத்துக்கு வரும். ஈரானிய படங்களில் அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இவர் இப் படத்தில் முக்காடு போடாமைக்கும் தலைமயிரை கழுத்தளவிற்கு; வெட்டி நடித்தமைக்குமே இத் தண்டனை.
1979 இஸ்லாமிய புரட்சியின் பின்னரும் சரி அதற்கு முன்பாகவும், ஈரானில் பெண்கள் சினிமாவில் நடிப்பதற்கு பல தடைகள் இருந்தன. ஆண் நடிகர், பெண் நடிகரை தொட்டு நடிக்கக் கூடாது, அதே போல் பெண் நடிகை ஆண் நடிகரை தொடமுடியாது. பேண்கள் முக்காடுடன் கண்கள் மட்டுமே தெரியும் அளவிற்கு உடைகள் அணிய வேண்டும். போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. இதனால் பெண்கள் நடிப்பதற் முன் வரவில்லை. Sheida என்ற படத்தில் பெண் தாதி, காயம் பட்ட நோயாளியை தொட்டுத் தூக்கிய காட்சிக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டது. இவ்வாறன காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. 1930ல் தயாரிக்கப்பட்ட முதல் மௌனப்படத்தில் நடிக்க பெண்கள் எவரும் முன் வரவில்லை. Sedighe Saminejad Mehranghiz முதல் பெண் நடிகையானார். இவர் வீதியில் சென்ற பொழுது, மக்கள் கற்களால் எறிந்தனர். Tahmineh Milani என்ற ஈரானிய பெண் இயக்குனரின் “இரு பெண்கள்” என்ற படம் மிக முக்கியமானது. இவர் இந்தப் படம் தயாரிப்புக்கான அனுமதிக்கு எட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. The Fifth Reaction என்ற Milani ன் படத்துக்கு ஈரானிய “இஸ்லாமிய கலாச்சார வழிகாட்டி”( Ministry of Culture and Islamic Guidance) அமைச்சு அனுமதி கொடுத்த பின்னரே படம் தயாரிக்கப்பட்டது. படம் வெளியான பின்னர் எழுந்த எதிர்ப்பால் இவரை சிறையில் தள்ளிவிட்டார்கள். Hidden Half என்ற இவரது மற்றொரு படத்தின் பின்னரும் இவர் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்த வருடம் வேறு பல இயக்குனர்களையும் திரைப் படைப்பாளிகளையும் கைது செய்துள்ளார்கள். பி.பி.சியில் வெளியான பார்சிய மொழி விவரணத்திரைப் படத்திற்கான படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களையும் விசாரித்துள்ளது ஈரானிய அரசு. இதைத் தவிர நடிகை Pegah Ahangarani (Women’s Prison) என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்காக வெளிப்படையாக பிரச்சாரம் செய்தார். உலக பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக இவர் கைது செய்யப்பட்டார். பெண்கள் உதைபந்தாட்ட அரங்கினுள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்ட Maryam Majd என்ற புகைப்பட பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டார். இவர்களைத் தவிர Mahnaz Mohammadi (இயக்குனர்)யும் கைது செய்துள்ளது. நிழல்களின்றி பெண்கள் (Women with out Shadows) என்ற விவரணத் திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார்.Mohammad Rasoulof ,Jafar Panahiasser Saffarian, Hadi Afariden, Shahnama Bazdar தயாரிப்பாளர் முயவயலழரn ளூயாயடிi போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ,Jafar Panahiasser க்கு திரைப்படங்கள் தயாரிக்க 20 வருட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.This is not a Film என்ற படத்தின் இணை இயக்குனர் Mojtaba Mirtahmasb ம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இப் படத்தினை ஒரு USB தடியில் பதிவு செய்து கேக் ஒன்றினுள் வைத்தே கான்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்ட இயக்குனர்களின் படங்களை கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிட்டதை ஈரான் கண்டித்துள்ளது.
2.
My Tehran for Sale (எனது தெஹரான் விற்பனைக்கு)
நான் சிறுமியாக இருந்த பொழுது வண்ண உடைகள் உடுப்பதற்கு தடைசெய்யப்பட்டிருந்தது. ஜீன்ஸ் அணியக் கூடாது. வெள்ளை நிற சொக்ஸ், ளநெயமநசள தடைசெய்யப்பட்டிருந்தது. பாடசாலையில் சிரித்தால் கூட குறை கூறுவார்கள். அது இஸ்லாமிய புரட்சிக் காலம். எப்பொழுதும் துக்கத்துடனேயே இருக்க வேண்டும். கேள்விகள் கேட்கக் கூடாது. எழுதப்படாத விதிகள் பல. இவற்றையும் சட்டங்களை நாங்கள் கடைப்பிடிக்கவேண்டும். இந்த நடைமுறை பாடசாலை, பல்கலைக் கழகம் வேலைத்தளம் என தொடர்கின்றது. எனது கதையே இப் படம் என்கின்றார் இயக்குனர் Granaz Moussavi இவரும் ஒரு பெண் இயக்குனர். 1974ல் பிறந்த இவரது தந்தை தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒரு ஒலிப்பொறியியலாளர். இவர் 17வது வயதில் தனது முதலாவது இலக்கிய விமர்சனத்தை வெளியிட்டார். இவர் ஒரு கவிஞருமாவார். நாடகங்களிலும் நடித்துள்ளார். 1997ல் அவுஸ்திரெலியாவிற்கு குடி பெயர்ந்து அங்கு திரைப்பட இயக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளார்.
“நான் ஈரானுக்கு திரும்பி வந்த பொழுது Marzieh Vafamehr ஐ சந்தித்தேன். அவர் தன்னை ஒரு நடிகையாக நிலைநாட்ட பல கடினமான படிகளைச் சந்தித்தார். நெறி, ஒழுக்க முறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கூடாக தன்னை நடிகையாக நிலையாக்க கடினமாக உழைத்தார். பல சவால்களைச் சந்தித்தார். எங்களது கதையைக் கூற வேண்டும் என விரும்பினேன்” என இயக்குனர் Granaz Moussavi இப் படம் பற்றி கூறியுள்ளார்.
Marzieh ஒரு நடிகை ஒரு Fashion Designer. தெஹரானில் வாழ்ந்து வருகின்றார். ஈரானின் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் தன்னை நிலை நிறுத்த முடியாமல் திண்டாடுகின்றார். கலைத் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் இவர் underground வாழ்விற்கு தள்ளப்படுகின்றார். அங்கு வெளிநாட்டில் உள்ளவரை திருமணம் செய்வதன் மூலமே நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற கருத்து வெளிப்படுகின்றது. அவ்வாறான ஒரு இரவு விருந்தில் சமனைச் சந்திக்கின்றார். இருவரது நட்பும் நெருக்கமாகின்றது. ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். திருமணம் செய்ய நினைக்கின்றனர்.இவர் அவுஸ்திரேலிய ஈரானியன்;. சமன் Marzieh ஐ அவுஸ்திரெலியா வருமாறு அழைப்பு விடுக்கின்றார். அழைப்பை ஏற்று அவுஸ்திரெலியா செல்கின்றார். அங்கு அவருக்கு புதிய சவால்களை; காத்திருக்கின்றன. ஈரானில் செய்ய முடியாதவற்றை அவுஸ்திரெலியாவில் சாதித்தாரா? முதலில் Marzieh விசா மறுக்கப்படுகின்றது. பின்னர் அகதி கோரிக்கையும் நிராகரிக்கப்படுகின்றது.
இப் படம் ஈரானின் இறுக்கமான உள் கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் இளைஞர்கள் படும் உளவியல் ரீதியான பிரச்சினைகள வெளிப்படுத்துகின்றது. வெளி உலகத்திற்கு தெரியும் ஈரான் நிஜமானதல்ல. அதனுள் ஒரு Underground உலகமே உள்ளது. சட்டங்களுக்கும் விதிகளுக்கும் எதிராக அனைத்துச் செயற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதனைக் கண்டித்து கடுமையான தண்டனைகளும் உள்ளன. அப்படி இருந்தும் அதனை மீறவே விரும்புகின்றனர். பெண்கள் தங்களது சுதந்திரங்களை இவ் நிழல் உலகத்தில் அனுபவிக்கின்றனர். இது ஈரானில் மட்டுமல்ல ஆங்காங்கே பல நாடுகளில் காணப்படுகின்றன. அண்மையில் கனடாவில் மொன்றியல் நகருக்கருகாமையில் Lev Tahor என்ற ய+த கிராமம் இவ்வாறான கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரு உலகத்தில் இருந்து மற்ற உலகத்திற்கு சுதந்திரத்துக்காக செல்லும் போது பல சவால்களைச் சந்திக்கநேருகின்றது. அவுஸ்திரெலியா அகதியாக வருபவர்களை மிகவும் கடுமையாக நடாத்துகின்றது. இது உலகறிந்த விடயம். ஒரு சில காட்சிகள் மூலமே இதனை இவ் எதிர்வினையை இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார். இப் படம் 2009 ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. வேறு பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளன. இப் படத்தில் வழமையான ஈரானிய திரைப்படங்களில் காணப்பட முடியாத நெருக்கமான காட்சிகள் சில உள்ளன. இப் படம் முழுக்க முழுக்க ஈரானில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புக்கு பின்னான கோர்வைகள் அனைத்தும் அவுஸ்திரெலியாவில் செய்யப்பட்டுள்ளன. இப் படத்தை தயாரிப்பாளருக்கு ஈரானில் திரையிடும் எண்ணமிருக்கவில்லை.
ஈரானின் பெண்கள் சந்திக்கும் துயரங்களைப் பற்றி பல படங்கள் வெளிவந்துள்ளன. Underground உலகமும் பல படங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிடும் பொழுது இப் படம் ஒரு படி பின்னாலேயே உள்ளது. ஆனால் ஈரான் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இப் படத்தை பலரை பார்க்கச் செய்வதுடன், மீண்டும் ஒரு தடவை ஈரானின் பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான சட்டங்களுக்கு எதிரான குரலை வலுப்படுத்தியுள்ளது.
இறுதியாக கைது செய்யப்பட்ட நடிகை தனது முக நூலில் எழுதிய வாசகம் இது. இது அவரது வலியை வெளிப்படுத்தியுள்ளது. “சுதந்திரத்துக்கு சுவர்கள் இல்லை. கனவியல் கோட்பாட்டாளர்கள் இக் கருத்தை நிராகரிப்பார்கள். ஞாபகத்தில் வைத்திருங்கள் மெய்க்கோல் என்பது சுதந்திரம், உண்மை மற்றும் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாகும். அதன் பின்னர் நீங்கள் என்ன எந்த இயலையும் கூறலாம்”
இயக்குனர் Granaz Moussavi; செவ்வியை கேட்க பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்
http://blog.globalfilm.org/?p=706

நன்றி - http://inioru.com/?p=23797
...மேலும்

Oct 26, 2011

முபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாWednesday, November 2 · 6:00pm - 9:00pm

ICSA, புரோகிராம் வளாகம்,
ஜீவன் ஜோதி பில்டிங், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-2

...மேலும்

Oct 25, 2011

ஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்டி ரேவதி


(சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு எழுதிய அணிந்துரை)

நேரடியாகத் தமிழகத்தின் ‘பெண் எழுத்து’ அரசியலுக்குள் செல்லலாம். பின்பு, சிவகாமியின் கவிதைகளுக்குள்ளும் அவை பேசும் அரசியலுக்குள்ளும்!

இலக்கியத்தின் முந்தைய தலைமுறை பெண் படைப்பாளிகளால், பெண் என்ற ஒற்றைப் பரிமாண அரசியலையே உருவாக்கமுடிந்தது! அது, அவர்கள் ‘பெண் என்ற தனித்த அடையாளம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று தங்களுக்குத் தாங்களே வலியுறுத்திய போதும், அப்பொழுதும் எப்பொழுதும் பரவலாக எழுதி வரும் ஆண் படைப்பாளிகளின் படைப்பியக்க அடையாளங்களுடன் தம்மைப் பொருத்தி இணைத்துக் கொண்ட போதும்!

‘பெண்’ என்ற ஒற்றை அரியணை போதும்!’ என்ற ஏற்றத்தாழ்வின்றி, எல்லா பெண்களும் அந்த ஒற்றைப் பரிமாண பெண்ணிய அரசியலை முன்மொழிந்த போது கல்வி, சமூக, மதிப்பீடுகளில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்த சமூகத்தின் பிற பெண்களுக்கான சிறந்த இடங்களை மறுத்துள்ளனர். ஆனால், இந்த இடைப்பட்டக் காலத்திற்குள், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் தன்னையே வருத்திக் கொண்ட, அழுத்தமான, நீண்ட, போராட்டங்களினால் எழுத்தை நோக்கி தம்மைத் தாமே உந்தித்தள்ளிக்கொண்டனர். எழுத்து என்னும் சமூகத்தின் வலிமையான குரலெடுப்பை, அதன் பரவசத்தை முதன்முறையாக உணர்ந்த முதல் தலைமுறைப் பெண்களின் உள்ளார்ந்த வல்லமை கண்கூசும் ஒளியுடன் எழுத்தில் பரிணமித்தது. இன்று, அவர்கள் முன்வைக்கும், ‘அறிவார்ந்த சிந்தனை’களுக்கு முன், சென்ற காலத்தின் கற்பனைகளும், இலக்கிய ஜோடனைகளும் தம் ஒளிமங்கிப் போனது தவிர்க்கமுடியாததும் ஆனது.

ஏனெனில், இவர்கள் மட்டுமே உடலின் மொழியை எழுத்தாக்கினர். இன்று வரை மொழி என்பது, இவர்களுக்குத் தம் உடலுக்குள், குமைந்து கிடந்த கண்ணீரின் துளிகளாகவோ, கனன்று கொண்டிருந்த கனல் துண்டங்களாகவோ, இசைக்க மறந்திருந்த பாடலாகவோ இருந்திருக்கவேண்டும். அல்லது, வாய்மொழிக் கதையாடல்களாய் இருந்திருக்கவேண்டும்! எழுத்தின் வெளிப்பாட்டால் உணர்ந்த பரவசநிலை, மண்ணோடு மண்ணாக அழுத்திப் புதைக்கப்பட்ட தம், ‘சுய வரலாறு’களின் படிமங்களைத் தேர்ந்தெடுத்த கவிதைச் சொற்றொடராக்கத் தூண்டியது. ‘உடலின் மொழி’ என்றால், அது பாவனைகளைக் குறிப்பிடுவது அல்ல என்ற புரிதலுடன் நாம் முன்நகரலாம்!

அதற்கு முன்பு வரை எழுதிக்கொண்டிருந்த ஆதிக்க சாதிப் பெண்களின் உணர்நரம்புகள் தொட்டாற் சிணுங்கிகளைப் போல் உள்ளிழுத்துக் கொண்டன. அல்லது புதியதாக எழுதப்பட்ட சொற்களின் அர்த்தம் புரியாததைப் போல மலங்க மலங்க விழித்தன அல்லது இயல்பாகவே, இவ்வெழுத்தின் மீது உருவான தம் வெறுப்பை, ‘நாகரிகம்’ என்ற பெயரில் மறைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, சமூகத்தில் இதை விட முக்கியம் வேறெது என்று தேடும் பாவனையில் தம் உருப்பெருக்கிக் கண்ணாடிகளை அங்கும் இங்கும் திருப்பி நோக்கின! வேறேதும் கிட்டவே இல்லை!

எப்பொழுதுமே பெண் எழுத்தின் வாயில், ஆதிக்கச் சிந்தனைப் பெண் எழுத்தின் வழியாகவே திறக்கப்படுவதால், அதிலும் ஆண்டாள் போன்ற பெயர்கள் அலுக்கும் வரை உரத்தக் குரலில் உச்சரிக்கப்படுவது எமக்குச் சலித்துப் போய்விட்டதால், அடுத்த வீட்டு வாசல் வழியாக எம் வீட்டிற்குள் நுழையாமல், இங்கு நேரடியாகவே சிவகாமியின் கவிதைகளுக்குள் செல்லும் படி அழைக்கிறேன்! ஏனெனில், ஆதிக்கச் சிந்தனையின் பின்னிருக்கும் இறைஞ்சுதல் தொனி, பக்தியாக அடையாளப்பட்டுப் போயிருக்கிறது! அதிகாரத்தைப் பிச்சையெடுத்தேனும் வாங்கிச் சுகிக்கும் அடிமை மனோநிலை தானே அது?

எது கவிதை? என்று அறியப்படாமலேயே, தமிழகத்தின் வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கேள்வி, சிந்தனையின் வெளியில் பல பிளவுகளையும் சேதங்களையும் நிகழ்த்திவிடும் என்பதலாயே, அக்கேள்வி, வசதியாய்ப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அது, நவீன அரசியல் காலக்கட்டத்தில், ‘சுயம்’ பற்றிய தத்துவ விளக்கத்தையும் கோரும் என்பதே அதற்கு முதன்மையான காரணம். ’சுயம்’ என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல கவிதையில் அன்றி வேறெந்த இலக்கிய வடிவிலும் துலங்குவதில்லை. அதிலும், நவீனத்தின் உரத்த குரலாயிருக்கும் கவிதை மொழி, ஒரு சிந்தனையாக, விவாதவெளியாக இன்னும் விரிக்கப்படாமலேயே அதன் அதிர்வுகள் செரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றைய படைப்பாளியின், ‘சுயம்’ ரசிக்கத் தக்கதாயில்லை!

ஒரு தனித்த படைப்பாளியின் கிரீடங்கள் மண்ணில் உருண்டு, பரிகாசங்களின் வாய் பொத்திய மொழிகள் ரகசியங்களாக உலா வருவதும், அத்தகைய படைப்பாளிகள், மன நோயாளிகளைப் போல திறந்த வெளியில் திரிவது கண்டுப் பரிவுடன் அவர்களை விட்டு விலகுவதும் வழக்கமாயிற்று. பழகிப்போயிற்று. இன்று ஒரு படைப்பாளி, தன் படைப்புகளின் வழியாக, தன் சுயத்தின் பொலிவுடன் சமூகத்தின் எந்தெந்த மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறான் என்பதும், சிந்தனையின் தீரா இயக்கத்தை எவ்வளவு துணிவுடன் தொடர்ந்து இயக்குகிறான் என்பதும் மிக மிக முக்கியமாகிறது. இது இயலாது, தன் சுயம் கண்டு மிரண்டு போனவர்கள், தனி மனிதச் சுமைகளுடனும், அதன் கிரீடங்களுடனும் அடையாளம் பெறும் நிலையிலிருந்து, ‘சிந்தனைப் பருவம்’, நகர்ந்து வந்துவிட்டது. ஏனெனில், அத்தகைய கிரீடங்கள், அதிகாரம் செய்து பழகியவர்களுக்கும், ஆதிக்கச் சிந்தனையை எழுத்தாக்கியவர்களுக்கும் தாம் தேவைப்பட்டது. அவர்களின், சிந்தனை, நடை, ஊக்கம் தளர்ந்ததை இன்று நாம் கண்ணெதிரேயே காணமுடிகிறது.

கதவடைப்பு

தமிழில் இயல்பாகவே, தம் சாதி, மதம், பால் அழுத்தங்களைப் புறக்கணித்தவர்கள் உடலின் மீதான, அவற்றின் அழுத்தங்களைப் பேசாமல் இல்லை. விட்டு விடுதலையாகிய உணர்வை உடலுக்கு ஊட்டிய சிட்டுக்குருவிகளாக இருந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியை இலக்கியத்தின் வேறு வேறு முகங்களாய் எங்கெங்கும் நாம் கண்டுணரமுடியும். பகுத்தறிவுச் சிந்தனையின் ஊற்று, உடலில் தான் பிறக்கிறது! புத்தன் அதை செம்மையாகத் திருந்தச் செய்து வைத்தான்! காலந்தோறும் யாரேனும் அதைத் தன் உடலுக்குள் ஊதிப் பெரிதாக்கி, அதன் வெக்கையை வெளியிலும், பரப்பினர். இவ்வாறு தன் உடலைப் பகுத்தறிவுச் சிந்தனையின் உலையாக்கியவர் சிவகாமி.

மேற்குறிப்பிட்ட, சமூகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தான், சிவகாமியின், ‘கதவடைப்பு’ என்னும் கவிதை நூலை அணுக வேண்டும். அவர் எழுத்துக்குப் புதியவர் அல்ல. ‘இந்தியாவின் முதல் தலித் இலக்கியம்’ என்று வரையறை செய்தாலும், ‘இந்தியாவில் பெண் உடலின் சிந்தனை எழுச்சிகளை முதன் முதலாகப் பதிவு செய்தவர்’ என்று ஆராய்ந்து பார்த்தாலும், சிவகாமியின் எழுத்தனுபவமும் முதன்மையும் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. என்றாலும், அவர் எழுத்தின் முதல் புள்ளியிலேயே நின்றுவிடவில்லை. அங்கிருந்து, விடுதலை, வேட்கை, நீதி போன்ற உணர்வுகளின் திசைகளை நோக்கி அயராது ஓடியவர். அத்திசைகள், அவருக்கானவையாக மட்டுமே இருந்தவை என்று எவரும் தவறாக நினைத்துவிடவேண்டாம். அதில், அவர் பின்னால், எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும், பிற பெண்களும் கூட ஓடிவர முடியும் என்று அவர்களுக்காகவும் சிந்தித்தவர். சமீபத்தில் ஒரு சமூக இயக்கத்தின் தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘பிற சமூகத்திலிருந்து, தீண்டாமைக்காகவும் சமூகத்திற்காகவும் ஒருவர் உழைத்தால், அது கொண்டாடப்படுகிறது. ஆனால், தீண்டப்படாத நிலைக்குத் தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து ஒருவர் தன் சமூகத்தின் மீது படிந்து கிடக்கும் கருமையான போர்வையைக் களைய வந்தால், அவரை அழித்தொழிக்கும் திட்டம் தீட்டப்படுகிறது!’ என்று. இதுவும் தீண்டாமையைச் செயல்படுத்தும் ஒரு சமூகத்தின் ஆதிக்க உத்தி தான்! இலக்கியத்திலும் அது தான் நிகழ்ந்திருக்கிறது.

நவீன இலக்கியத்தின் நெடுஞ்சாலை, சென்று சேரும் ஊர் இன்றி ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், இரண்டு முக்கியமான சிந்தனைத் தெறிப்புகளை முன் வைக்கிறார், சிவகாமி. ஒன்று, ‘பெரியார், ஒடுக்கப்பட்ட மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இல்லை!’ என்பதும் ‘தாழ்த்தப்பட்டவர்களால் படைக்கப்படுவது மட்டுமே, தலித் இலக்கியம்!’” என்பதும்! இரண்டுமே, பெரிய அதிர்வுகளையும், மடைமாற்றங்களையும் கவனக்குவிப்புகளையும் நிகழ்த்தின என்பதாலேயே, மேற்குறிப்பிட்டது போல், நவீன இலக்கியமுகாமில், இலக்கியத்தின் புதிய சிந்தனை முறைகள் விவாதிக்கப்படாமலேயே காலங்கள் கழிந்தன. இவ்விரண்டு, கூக்குரல்களும் எழுப்பப்படவில்லையென்றால், இன்று இலக்கியத்தின் திசை கண்டிப்பாக, தறிகெட்டுப் போயிருக்கும், அல்லது இலக்கியத்தின் இன்றைய நவீனத்துவம் சாத்தியப்பட்டிருக்காது!

சிவகாமியின் கவிதைகளுக்குள் வருவோம்! தன் தேசத்தை, தாய் நாடு என்று போற்றும் மக்களிடையே தன் உடலை ஒரு தேசத்தின் நிலப்பரப்புடன் விரித்துப் புரிந்து கொள்ளும் முழு வேகத்தையும் வேட்கையையும் அவர் இங்கு பதிவு செய்துள்ளார்! தோலின் வார்களால் இழுத்து, இறுக்கிக் கட்டப்பட்ட உடல் மட்டுமே அன்று, இந்த உடல்!’ என்பது ஒவ்வொரு சொற்றொடரின் பின்னாலும் கூக்குரலிடுவது, கேட்கிறது. இது ஓர் அசாதாரண நிலை. தன் உடலையும் சிந்தனையையும் தானே உந்தி உந்தி ஓடும், அகால நிலை.

புத்தனும் அப்படித்தான் உடலை இயக்கச் சொல்கிறான். பகுத்தறிவுச் சிந்தனை வேரூன்றிய நம் மண்ணில், நம் உடலும் அதில் வேர்விட்டிருக்கும் சிந்தனைகளும் எப்படி, தனிமைப்பட்டுப் போயின. அன்னியப்பட்டுப் போயின, எப்படி விதையெழும்பாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன என்று தொடர்ந்து அவன் உடலும் தீயாகக் கனன்றது. அப்படியாகக் கனலும் உடலின் பெருவெளியை, சிந்தனையின் உற்பத்தியிடமாக ஆக்கித் தந்திருக்கிறார், சிவகாமி.

எளிமையான சொற்களுடனும், அதிகார இயங்குமுறைகளைப் புதிய சொற்கோர்வைகளாக்கிய எழுச்சியுடனும் அவர் மொழியும் சிந்தனைகளும் கவிதைகளாகியிருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களாக, இம்மண்ணில் தன்னை உயிர் தக்கவைத்துக் கொள்ளப்போராடும் சிந்தனையின் கருவாய், சிவகாமியின் சிந்தனை உயிர் நீர்ப் பாய்க்கிறது. அதே சமயம், அது சுணையாகவும் இருக்கிறது! புற வடிவில் தன்னைச் சுருக்கிக் கொண்டு, தன் அந்தரங்கத்தின் மறைவிடங்களில் ரகசியமாய் நீங்கள் வருடுகையில் அது உங்கள் சதைகளில் ஏறி சுணையைப் போலவே கடுக்கும்! நினைவுக்குள் பழுக்கச் செய்யும்! பிடுங்கியெறிய நீங்கள் போராட வேண்டியிருக்கும்! நினைவுகளுக்கு ஒருபொழுதும் சுகமளிக்காது! புண்ணுக்குச் சொறிந்து கொடுக்கும் சுகம் போல இருக்கவே இருக்காது!

கதவடைப்பு என்பது, ஒரு குறியீடாக இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மனத்தையும் குறிப்பிடுகிறது. அறைக்குள், காகிதத்தின் குறுகிய பக்கங்களுக்குள் அடைந்து கிடக்காது, சமூகத்தின் திறந்த வெளிகளில், சேரிகளில், நெடுஞ்சாலைகளில் ஒற்றையடிப்பாதைகளில் மனிதர்களை நோக்கிய அவரது பிடிவாதமான பயணங்கள் கொண்டு சேர்த்த உண்மைகள் இன்னும் அவர் ஒரு நூறு புத்தகங்கள் எழுதினாலும், தீராது என்பதை நான் அறிவேன். தமிழகத்தில், கடந்த காலத்தின் ஐம்பது வருடங்களில் அவரளவிற்கு மக்களை நோக்கிப் பயணம் செய்தவர் யாரும் இருக்கமுடியாது என்பது இலக்கியவாதிகள் மறைத்து வைக்கும் உண்மை.

இருந்தாலும், இத்தனிமனித விடயத்திலிருந்து புதிய குரல் தொனிக்கும் இலக்கியத்தின் தளத்தில் சிவகாமி அவர்கள் சொல்லவந்ததன் பொருளும், குரலும் இன்றைய இலக்கியத்தின் எந்தெந்தக் கதவுகளை உடைத்துத் தள்ளுகிறது என்று பார்க்கலாம்.

விடாது மழையிலும்
அடாது தொடர்வோம்
நாம் பேசிக்கொண்டிருந்ததையே
ஏனெனில்
வேலியின்றி விரிந்திருக்கிறது
நிலம்

தனிமனிதர்கள் அழிந்து போய்விடுகின்றனர். எழுத்தாளர் என்னும் முத்திரை நம்மைச் சுற்றிச்சுற்றி வரும் ஒரு நூறு பேருக்கு முக்கியமாகப் படலாம். அதுவே நமக்கும் முக்கியமாகப் படலாம். அல்லது, ‘காலம் தாண்டி என் எழுத்தும், என் பெயரும் நிற்கும்’, என்ற நம்பிக்கையில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எழுதும் போதே சமூகத்திற்கும், சக மனிதனுக்கும், தனக்கும் உற்ற துணையாகி வெளிச்சத்தைக் காட்டாத எழுத்தினால் பயனென்ன?

சூல் எழுத்து என்ற கவிதையில்,
சூல் பதரென நல்லுழவன்
பிரித்தறிவானெனினும்
தற்காலிகமாகவேனும் தன்னை
நிலைநாட்டிக்கொண்டே உளது பதர்

……. ………. ………………… ………….
நனைத்து முகம்புதைக்கும்
காலத்தாவரங்களின் உணர்கொம்பு
வெறுப்பு குமிழ்கள் உடைய
ஒளிப்பூக்களென நெற்றி வருடும்
அவ்வெழுத்தின் கரங்களை
வாருங்கள் முத்தமிடுவோம்

களவு போன நீல ஆடைகளும், கானகமும் கவிதையின் உள்ளே முதிர்ந்த இந்திய அரசியலின் குறியீடுகள் காட்சி பெறுகின்றன. சிறிய சிறிய சொற்களால் அரசியலைக் கவிதைகளில் சொல்வதென்பது சாதாரணமான விஷயமில்லை. எழுதி எழுதிப் பார்த்துப் பல கவிதைகளுக்குப் பின் தான், ஆயிரம் சொற்களை இறைத்து விரயமாக்கியப் பின் தான் ஓர் அரசியல் நுணுக்கத்தைச் சொல்லில் ஆளும் திறனை அடையும் நவீன தமிழ்க் கவிதைக்கு மத்தியில், சிவகாமியின் கவிதை நேரடியாக ஒரு சொல்லையும் அதன் பின்னால் காலங்காலமாகப் புதைந்து கிடக்கும் நிழல் வரலாறுகளையும் அரசியல்களையும் உடைகளாகக் கவர்ந்து வரும் வீரியத்தைக் கொண்டிருக்கிறது.

அரசியல் கொட்டடிகளில்
பூந்தேக நரம்புகள் துடிதுடிக்க
செலுத்தப்படுகின்றன அபின் ஊசிகள்
போதையின் முதுமையில்
அழிகின்றது கானகத்து பசுமை

கவிதையோடு படிக்கும்போது, ‘போதையின் முதுமையில் அழிகின்றது கானகத்து பசுமை’ என்பதன் வரிகளில் அடங்கியிருக்கும் இழப்பின் திடமும் உருவமும் கனமானது! சிவகாமி தன் வரிகளில் சொல்லும் அதே அழுத்தத்துடன் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எனக்குத் தலைதூக்குகிறது.

கவிதையின் கூக்குரல் தனிமையானது தான்! தனிமையின் தீனமான குரல் அவருடைய எல்லா கவிதைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தன் இருப்பின், தனது சாத்தியப்பாடுகளின் முழுமையைக் கண்டுணரும் முயற்சியில் உருவாகும் மோனமே தனிமையாகிறது! அவர் சொல்ல வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் காலாதீதத்தை, தன் சொற்களுக்குள் பொதிந்து கொடுக்க, இவர் விரிக்கும் தனிமை பெரிதும் உதவுகிறது. இந்த தனிமை பொதுவாகவே, பெண்கள் மீது திணிக்கப்பட்ட சாபம் என்றாலும், அத்தனிமையின் வேர்களையும் கிளைகளையும் கண்டுணர்ந்தவர்களுக்கு அது சாபமில்லை. தன் வாழ்வின் மீதான போதம், அது! அதை ஒளி குன்றாமல் வைத்துக் கொள்ளும் போராட்டத்தில் சிவகாமியின் எழுத்து கவிதை வழியாகவே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது! ’ஆம் என்றொரு உரையாடல்’, அவர் வாழ்க்கையின் அன்றாடத் தனிமையைச் சொல்லும் ஒரு கவிதை. அகத்தனிமையைப் பாதுகாக்கவும், புறத் தனிமையைச் சுட்டெரிக்கவும் செய்கிறது! அகத் தனிமையை அவரின் ‘விதையின் பிரசவம்’ கவிதைக்குள் உணரலாம். ‘விதையெழுப்புதல்’ பலரால் பலமுறை எழுதி சலித்துப் போன நிலையில், புதிய அர்த்தங்களுடன் உருப்பெற்றிருக்கும் இக்கவிதை, இத்தொகுப்பிற்கு விளக்காய் இருக்கிறது!

சதை திரட்சி விலகி கனி உலர்ந்தது
நிர்வாணத்தின் கரை தொலைவிலில்லை
மலரசம் காய்ந்த விதை
உலர்தலின் வருத்தமின்றி உதிர்கிறது
இறந்தவரின் தடயத்தை உரக்குழியாக்கி
விதைப்பையிலிருந்தும் விலகி
திடமான உதிரக்கட்டி உருள்கிறது
முளைத்தலில் பரவசம் ஆட்கொள்ள
உந்தி சுழன்று நிகழ்கிறது உற்சவம்
பிறவியின் துயர நடனம்
சூளுரை எதுவுமின்றி
தடித்த தடுப்பின் மறைவில்
கிளர்ச்சி கொந்தளிப்புடன்
வினையுடன் எழுகிறது உயிர்
மாமிச இரவு விழிப்புடன் அரவணைக்கிறது
மண் இளகி வழிவிட
ஆகாயம் ஈரத்துடன் விசிறிக்கொடுக்க
பெருமுளைப்பு நிகழ்ந்தது
பச்சைக்கனவு பலிதமென
சுற்றுச் சூழல் வாழ்த்த
நிர்வாணத்தின் கரை தொட்ட களிப்பில்
படர்கிறது நிழல் தரும் கிளை
மரம் வளர்த்த பேருவகையில்
கசிகின்றேன் நான்

அவ்வாறே இவரது இலக்கிய ஆக்கத்திற்கான கற்பனைகள், கற்பிதங்கள் காற்றாக அடைக்கப்பட்ட பலூன்களோ அல்லது நினைவுகளின் வெற்றிடங்களில் எழும்பி, கண் முன் அலையும் குமிழிகளோ அல்ல. தீராத வேட்கையினால் அயராது ஓடுகையில் இவர் முன்னே விரியும் காட்சிகளும், முற்றி முதிர்ந்த பயிர்களுமே அவை! அக்கற்பனைகளைக் கடந்து போகும் நிர்ப்பந்தத்தையும் பந்தயத்தையும் தனக்குத் தானே வழங்கிக்கொள்கிறார்! இவர் பந்தயம், தன்னுடன் யாரும் ஓடிவருகிறார்களா என்று கடைக்கண்ணால் நோக்கும் வன்மமும், பின்னால் யார் யார் ஓடிவருகிறார்கள் என்று புறக்கண்களால் அளக்கும் அவநம்பிக்கையும் அற்றது. தூய கற்பனைகளும் தரிசனங்களுமே இவர் ஓட்டத்தின் கால்களுக்கு ஊக்கமருந்துகள்!

ககனப்பறவை
தமிழ் எழுத்தில் பல பெண் உடல்கள் பிறந்திருக்கின்றன. ஆண் படைப்பு மனோ நிலை ரசித்த, காமம் தோய்ந்த கண்களுடன் கண்டுணரப்படும் பெண் உடல்கள், பெண் படைப்பாளிகள் தம் உடலைக் கொண்டாட்டமாகவும் அதிகார ஆற்றலாகவும் மாற்றிக் கொள்ளத் துடித்த பெண் உடல்கள், கொண்டாட்டத்திற்கான வியப்பை நோக்கிக் காத்திருந்த பெண் உடல்கள், ஆண் அனுபவித்துக்கொண்டிருந்த அதிகாரக் கொண்டாட்டத்தையும், வன்ம மொழிகளையும் தம் உடலுக்கும் வரிந்து கொண்ட பெண் உடல்கள், போலியான, கற்பனையான ஆற்றல்களை உடுத்திக் கொண்ட பெண் உடல்கள், படிமங்களாகிப் போன, உயிரிழந்த பெண் உடல்களைத் தோண்டித் துருவி எடுத்து தற்காலப் பெயரைத் தனக்குச் சூட்டி மகிழும் பெண் உடல்கள் இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புதிய வலிமையான உடல்களை, தன் நுட்பமான சிந்தனையின் வடிவமைப்பினால், சிவகாமி, தன் ‘கதவடைப்பில்’ உருவாகியிருக்கிறார்.

சக மனிதனின் உடலிலிருந்து அதிகாரத்தின் கயிற்றால் தொடர்ந்து உழைப்பை இறைக்கும் உடல்களாக, இயல்பூக்கம் நிறைந்த உடல்களாக, வன்மங்களைச் செய்து பயிலும் உடல்களை அடையாளம் காட்டும் உடல்களாக… என உடலின் மாண்பை முற்றிலும் எதிர்த்திசையில் சொல்கிறது. உடலை வெளிச்சப்படுத்தும் சரியான தருணத்திற்கு எழுத்தைக் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறார்! வெளிச்சம் விழவேண்டிய உடல்கள் இங்கு, இவர் வரிகளில் அணிவகுத்து நிற்கின்றன!

அடையாள நெடுங்கதவுகள்
……… ……… ………….
தனக்கான சாயலற்ற அடையாளம் கேட்டு
பூட்டியிருக்கும் அதிகாரக் கதவுகளை
பிறந்த குழந்தையின்
தலை முட்டிக் கொண்டேயிருக்கிறதுஇன்றைய விடுதலை உணர்வின் அடிப்படையான கேவல் தான் இது! ‘அடையாள அரசியல்’ காயடிக்கப்பட்டு, பதராகிப் போனதொரு இன்று, இந்த வரிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.

கருணை

………………… ………….. …….
விந்துக்களின் தடயமின்றி
துப்புரவாய் கழுவப்பட்டுள்ளது
கர்ப்பவாசலும் கருவறையும்
அசாதாரணமாக
விரிய திறந்திருக்கும்
அவ்வாசல் வழி
வந்து சென்றவர் யாரென
துப்பேதும் கிடைக்கவில்லை

கோயில் வடிவமைப்புகள், சாதி அதிகார வடிவமைப்புகளை நேரடியாகக் குறிப்பிடுவன. ’கருணை’ கவிதையில் அவர் சொல்வதும், பெண் உடலின் மீது செலுத்தப்படும் அதிகார வன்முறையை கோயில் வடிவமைப்பிலேயே சொல்லியிருக்கிறார். கோயிலை, பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண் உடலாக ஆக்கியிருக்கிறார்.

பெண்கள்
உடலின் ஒரு பகுதிக்கு
தீ மூட்டிக் கொண்டாள் அவள்
இதயத்திலிருந்து கொங்கைக்கு மாற
எரிந்தது மதுரை வானவர் வாழ்த்து
பின் வந்து சேர்ந்தது

உடல் துறக்கிறாள் வேறொருத்தி
உதயணன் விசை தவறி
பசிப்பிணி சாக்காடறுக்க
கரம் சேர்கிறது ஆபுத்திரனின்
அமுத சுரபி

சுட்ட பழத்தை ஊதி பசியாறி
அறநெறி அரசனுக்குக் கற்பித்து
உப்புக்கும் பருப்புக்கும் பாடிய
மக்கள் கவிக்கு பரிசு
அதியமான் கனி

அன்பே
அந்தியின் சோபையற்ற கண்களால்
குப்புறப்படுத்து வானம் பார்க்க விழையும்
உன் அசைவுகள் கவனித்தும்
மேலும் எரிந்து கொண்டு தான் உளது
இச்சிறு மெழுகுவர்த்தி

இதில் சிறு மெழுகுவர்த்தி தன்னிடம் தக்கவைத்திருக்கும் தீயை, மீண்டும் முதல் வரிக்கும் சென்று, அங்கு அவர் குறிப்பிட்டிருப்பது போல, ’உடலின் ஒரு பகுதிக்குத் தீ மூட்டிக்கொள்ளும், அது பின் அவள் கொங்கைக்கு மாறும். பின் அது விசை தவறி வேறிடம் பாயும். அது அதியமானிடம் கனியாகும்!’ இதுவே அவர் தன்னிடம் காத்து வைத்திருக்கும் தீயாகச் சொல்வதும்! அது ஒரு பொதுவான தீ தான்! குப்புறப்படுத்து வானம் பார்க்க விழைபவர்கள் சுரணை கொள்ளும் போது, இச்சிறு மெழுகுவர்த்தியிலும் இருந்து தீ, பரவும்!’

அதிகாரத்தின் அசைவுகள்
பீறிட்டெழும்
விலங்குணர்ச்சிகளால் ஆனவை
அதிகாரத்தின் அசைவுகள்

----- ------ -------
உருவிக்கொள்ள இயலாதவாறு
ஊசிகளின் காதுகளில்
நுழைக்கப்பட்டு விட்டோம்
பொருந்தாத போட்டிகளில்
விதிக்கப்பட்ட வரிசைகளில் இருந்து
இலக்கற்ற இலக்கணத்துடன்
வாட்களை உருவுகின்றோம்
அஹிம்சை இம்சை
வேறுபாடின்றி

-------- --------- -------
அதிகாரத்தின் விதிகளையும் அது இயங்கும் முறைகளையும் மொழிப்படுத்த இப்படிக் கவிதைகளில் ஆக்கிவைத்தால் தான் அது நிரந்தரத்தன்மையை அடையும் போலும்! கட்டுரைகளிலும் புனைவுகளிலும் எழுதி எழுதி வாசித்துப் புரிந்து கொள்ளாத மரத்துப் போன ஆதிக்க மண்டைகளிடம், ‘ஊசிகளின் காதுகளில் நுழைக்கப்பட்டுவிட்டோம், உருவிக்கொள்ள இயலாதவாறு!’ என்ற வரியாவது புரிதலை ஏற்படுத்தி, அவர்களின் நினைவுச் சடவுகளின் கணங்களிலேனும் பொறி தட்டிக் கலங்கச் செய்யட்டும்!


எனதாயிராத உடல்

எனதாயிராத என்னுடலை
விக்கிரமாதித்தனென சுமப்பதில்
மரங்களிலிருந்து மலர்கள் உதிர்கின்றன
எப்போதும் கத்தியில் நடப்பது போல்
கவனமாய் வகைபிரிக்க இயலாமையால்
வார்த்தைகளின் தடுமாற்றங்களில்
உடைகிறது இவ்வூன் குடம்

செப்பனிடும் வசதி குறைவினால்
மிருகத்தின் பிளிறல் மிக அருகில் கேட்டு
பதறுகிறது பிறப்பித்த உடல்
என் பேச்சு கேட்குமாறு என்னுடலை
எவ்வளவு வற்புறுத்தியும் அது
எனக்கெதிராகத் திரும்பியிருப்பதை
அறிவிக்கிறது கொம்பு முளைத்த தலை

முழுதும் என் படைப்பல்லாத உடலை
நான் மட்டுமே சுமக்கும் படி
சபிக்கப்பட்டிருப்பது கண்டு
வியந்து தான் போகின்றேன்


இத்தொகுப்பின் நிறைவுக் கவிதை, இது! ‘முழுதும் என் படைப்பல்லாத உடலை, நான் மட்டுமே சுமக்கும் படி..’ என்ற வரிகள் போதும், சிவகாமி அவர்கள் எம்மாதிரியான உடலைப் படைப்பு உடலாக ஆக்க முயல்கிறார் என்பதற்கு!

ஏனெனில், பெண் பாலியல் சுரப்பிகள் வற்றிப் போகும் அளவிற்கு அதற்கு பாலுக்கம் தந்த எழுத்துக்களையும், இன்றைய பெண்படைப்பாளிகள் தன் பாலின உறுப்புகளுக்கு மொழியின் வழி கட்டுக்கடங்கா இன்பத்தைத் தானே கொடுத்துக்கண்ட எழுத்துக்களையும், ஊசி போன்ற இவரின் கூர்மையான எழுத்து முனை, போலியான உடலரசியலையும், செயற்கையாகச் செய்யப்பட்ட உடலரசியலையும் ஓர் அறுவை மருத்துவரின் கத்தியைப்போல அம்பலப்படுத்துகிறது.

உடலரசியலின், புதிய பாதையென இக்கவிதைகளைத் தெரிவுசெய்ய கொள்ளவேண்டும்! முள் மண்டி அடைத்துக் கொண்டிருக்கும் தற்கால உடலரசியலின் பாதையை, செம்மைப்படுத்துகிறது, இவரது பார்வை! பெண்ணியம் இந்தியாவில் ஒரு பெரும் இயக்கமாக மலராததற்குக் காரணம், இப்பார்வை இன்மை என்பது எந்தத் தருணத்திலும், படைப்பாளிகளின், இயக்கவாதிகளின் அனுமானமாகக் கூட இருந்ததில்லை! இந்நிலையில், சிவகாமியின் இக்கூக்குரல், தமிழகத்தின் பெண் உடலரசியலை முற்றிலும் நேர்மாறாக்குகிறது! சிவகாமியிலிருந்து திரும்பி பின்புறமாகப் போகலாம்! அல்லது, பெயர் பட்டியலை தலைகீழாக்கலாம்! இதை ஒரு தரமாணியாக வைத்துக் கொள்ளலாம்! அல்லது, இங்கிருந்து தொடங்கலாம்!

கவிதைகளுக்கு மத்தியில், ஆங்காங்கே சிந்திக் கிடக்கும், பொட்டுப் பொட்டாய் மலர்ந்து நெஞ்சின் வெளியில் துடிக்கும் காதல் கவிதைகள், அன்பைக் கடலாக்கி அதன் மத்தியில் நம்மை இருத்துகின்றன! உலகின் ஒட்டுமொத்த தனிமைச் சாகரத்தில் தீங்காதலினும் சிறந்த தோணி எது என்பதை அதன் ஒட்டுமொத்த அழகும் குலையாமல் வழங்குகின்றன!

இத்தொகுப்பில் சிவகாமி, ஒரு ககனப்பறவையென தன் குரலை எழுப்பியிருக்கிறார். அடர்த்தியான அதன் அதிர்வுகள் மனித மனங்களை ஊதலென ஊடுருவி, ககனத்தின் எதையும் பொருட்படுத்தாமல் பேரலையென எல்லாவற்றையும் சரித்து, தன்னந்தனியே நீந்துகிறது! அதன் மெளனமான குரல், இதயத்தை வாளாய் அறுக்கிறது! ஊர்க்குருவிகளோ கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன!

...மேலும்

Oct 24, 2011

நாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா!’”இப்ப நீ சாப்பிடாட்டி கொண்டு போய் சிறிலங்கால விட்டிட்டு வந்திடுவேன், தெரியும் தானே அங்க ஆமி புடிசுக்கொண்டு போயிடும்”

என்று பயங்காட்டி பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்தவர்களை அல்லது தன் பிள்ளையிடம் வேறுவிடயங்களைச் சாதிப்பதற்காக தமது பிள்ளைகளுக்கு இந்த விதத்தில் பூச்சாண்டி காட்டியவர்களை நான் அறிவேன். என்னுடைய மகனுக்கும் எனக்கும் சாப்பாட்டு விடயத்தில் எப்போதும் போர்க்களம்தான் என்றாலும் இப்படிப்பட்ட பயங்காட்டி ஆயுதங்களை வைத்து நான் அவனை வெல்ல என்றும் முயற்சித்ததில்லை.

என் மகனுக்கு இப்பொழுது ஆறு வயதுத் தொடக்கப்பகுதி. நான் அவனுக்கு எப்பவும் இலங்கையில் உள்ள நல்ல விடயங்களைப் பற்றி சொல்வதில் ஆர்வமாயிருப்பேன். அவனும் என்னைப் பல குறுக்குக் கேள்விகள் கேட்டு தனது தாய்நாட்டைப் பற்றிய பல விடயங்களை கணிசமாக அறிந்து வைத்திருந்தான். இலங்கையைப் பற்றி பேச்சு வரும் போது நான் எதைப்பற்றிப் பேசினாலும் அவன் முக்கியமாகக் கேட்கும் கேள்வி எனது அப்பாவைப் பற்றியதாகவே இருக்கும். அனேகமாக அவன் நோர்வேஜிய மொழியிலேயே கேள்விகளைக் கேட்பான். நான் முயற்சித்து தமிழில் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வருவேன்.

- சிறிலங்கால சண்டை நடந்தது என்ன?
- ம்
- உங்களுடைய அப்பா இறந்திட்டார் என்ன?
- ம். தாத்தா என்று சொல்ல வேணும்.
- தாத்தா துவக்கால சுட்டெல்லா செத்தவர். இல்லை குண்டு வைச்சவையா
- இரண்டில் ஒன்று நடந்திருக்க வேணும்.
- நீங்க பார்த்தநீங்களா? கப்பல்லையா போனவர்?
- ம்… இந்தியா போகும் போது கடல்ல வைச்சு சுட்டது. ஆதால ஒருத்தரும் அவரைப் பார்க்கவில்லை.
- அவர் கடலில் விழுந்திருப்பாரா? யார் சுட்டது…?

இப்படியாக அவனது கேள்விகள் அனைத்தும் அப்பாவின் மரணத்தைப்பற்றியே சுற்றும். இலங்கை இந்தியா போக வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் வளர்ந்து கொண்டே வந்தது. அவனது ஆறாவது வயதில் அந்த சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. மிகுந்த ஆவலுடன் இந்த பயணத்தைத் மேற்கொண்டோம். அவனை எனது நாட்டிற்குக் கூட்டிப்போவதில் மிகுந்த ஆர்வம் எனக்கு.

மிக நீண்டதொரு விமானப் பயணம் முடிந்தது என்ற நிலையில் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கினோம். ஆகாயத்தில் அந்திரத்தில் தொங்கிக் கொண்டு பறப்பதைவிட அதிகமான பயம் கட்டுநாயக்க விமானநிலையத்துள் வந்ததும் எனக்கு இருந்தது உண்மைதான். எங்காவது யாராவது குண்டு வைத்திருப்பார்களோ என்ற மனநிலையை எனக்குத் தவிர்க்க முடியவில்லை. பயணிகளுக்கான சோதனைகள் முடிந்து வெளியில் களைப்புடன் வரும் போது மகன் கேட்டான்.

- அம்மா! இது யாருடைய வீடு?
- இது வீடில்லை. கொழும்பு விமான நிலையம்
- இல்லை இது அந்த சிவப்பு துணி போட்டிருக்கிற மாமாவின் வீடு
- யார்?
- அவர்ர படம்தான் இந்த வீடுமுழுதும் மாட்டி வைச்சிருக்கினம்.
- அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி ராஜபக்ஷ அதான் அவர் படம் எல்லா இடமும் இங்க மாட்டி இருக்கினம்
- நான் நினைச்சேன் அவர்ட வீடு என்று
- ம்

எங்களை அழைத்துப் போக யாiரும் விமானநிலையம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்ததால் இனி வாடகைக்கு ஓரு வாகனம் பிடிக்க வேணும். விமான நிலையத்தின் முன் ஆயிரக்கணக்கானவர்களுடன் நாங்களும் நின்று கொண்டிருந்தோம். மாலை ஆறு மணியிருக்கும். வெயில் மங்கத்தொடங்கியிருந்தலும் தோல் பிசுபிசுக்க ஆரம்பித்திருந்தது. காற்று ஒரு விதமாய் சூடாக கனமாக இருந்தது. சிங்களமும் தமிழும் காதுக்குள் இரண்டுபக்கமும் குடைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நின்ற ஒருவன் ஏதோ சிங்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு ஒன்றும் புரியாததால் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன். உடல் களைத்துப் போயிருந்தது. கட்டிடத்தின் முன் நின்ற தென்னையையும் பச்சை மரங்களும் எனக்கு தெம்பூட்டிக்கொண்ருந்தன.

மகனை இந்த கூட்டத்திற்குள் தவற விட்டுவிடுவேனோ என்ற பயத்திலும் வாகன நெரிசல் காரணமாகவும் அவனை என் கைபிடியில் இறுக்கி வைத்திருந்தேன். ஒரு வகையாக ஒரு வாடகைவண்டியில் பொதிகளை ஏற்றி நாங்களும் ஏறிக் கொண்டோம். கொழும்பு வாகன நெரிசலில். நோர்வேயில் இருந்து இலங்கை வந்ததைவிட விமானநிலையத்தில் இருந்து கொட்டஹேனா மிக நீண்ட தூரத்தில் இருப்பது போல் பயணக்களைப்பு அதிகமாக்கிக் கொண்டிருந்தது. கொழும்பு வழி நெடுக, பாதைகளின் ஓரமாய் சம்மணம் போட்டு அமர்ந்தும், நின்றும், சில இடங்களில் படுத்தும் பெரிய பெரிய தோற்றங்களில் பளிச்சென்ற நிறத்தில் தன் இருப்பைக் காட்டிக்கொண்டிருந்தார் புத்தர். எனக்குப் பிடித்த மனிதர் ஆகையால் பாவமாக இருந்தது அவரைப்பார்க்க.- அம்மா இப்பவும் இங்க சண்டை நடக்குதா
- இல்லை. இப்ப இல்ல. எல்லாம் முடிஞ்சு போச்சு
- அப்ப ஏன் இவை இப்படி இராணுவ உடுப்போட துவக்கு வைச்சிருக்கினம்
- பாதுகாப்புக்காம்
- இவர் தமிழா?
- இல்லை சிங்கள இராணுவம்
- போரில் யார் அம்மா வென்றது?
- சிங்கள ஆட்கள்
- நாங்கள் ஆர்?
- ஏன் கேட்குறீங்க. உங்களுக்கு தெரியும்தானே நாங்கள் தமிழ் என்று.
- அப்ப நாங்களா தோத்தது?
- ஓம்
- அம்மா!! இல்லை அம்மா. நான் தோற்கேல்லை. நான் நோர்வேல இருந்தனான் அப்ப.
- இருந்தாலும் நீங்களும் தமிழ்தானே
- ஓம். ஆனா நான் சண்டைபிடிகேல்லைத் தானே அப்ப நான் தோற்கேல்லை அம்மா!
- ஒகே நீங்க களைப்பா இருக்கிறீங்க. அப்படி படுங்கோ

இனி எதும் சொன்னால் அவன் சினம் தலைக்கேறும் என்று தெரிந்ததால் பேசாமல் அடக்கியே நான் வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு மாதிரி அவனை கொஞ்சம் வாய் மூடி படுக்க வைத்தாயிற்று.

இப்படித்தான் ஒருநாள் கொட்டஹேனாவிலிருந்து ஒரு ஆட்டோவில் தெகிவளை போய்க் கொண்டிருந்தோம். அதே வகன நெரிசல். அதே இராணுவ உடையில் இளைஞர்கள் ஒரு கிலோமீட்டருக்கு ஒருவர் படி ஆயுதத்துடன் நின்றார்கள். மகனும் அவர்களைப் பார்ப்பதும் சிரிப்பவர்களுக்கு திரும்பிச்சிரிப்பதா என்ற சிந்தனையில் என்னை ஒவ்வொரு முறையும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சதூரம் போனதும் எங்கள் முச்சக்கரவண்டி சோதனை சாவடியில் ஆயுதம் தரித்த ஒரு இராணுவ இளைஞனால் நிறுத்தப்பட்டது. அவர்கள் எப்போதும் ஒரே பாணியில்தான் நிற்பார்கள். கையில் துவக்கை இரு கைகளிலும் எந்தியிருப்பர்கள். துவக்கின் துளைப்பக்கம் சரிவாக தரையை நோக்கிய படி இருக்கும். கால்களை அகட்டி கொஞ்சம் பின் பக்கமாக சரிந்து நிற்பார்கள். முகம் எந்த சலனமும் இல்லாமல் விறைத்தபடி இருக்கும். சிலர் சிரிப்பார்கள். பல முகங்கள் அடிக்கடி பார்த்து பழகிய முகமாகிவிட்டிருந்தது.

பெட்டா தாண்டி கோல்ப்பேஸ் கடற்கரையோரமாக இருந்த ஒரு சோதனைச்சாவடியில் எங்கள் முச்சக்கரவண்டி ஒரு இரணுவ சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டது. கடவுச்சீட்டு எல்லாம் கையில் இருந்தபடியால் ஒரு விறைத்த தலையசைவுடன் எங்களை வழியனுபினர். எங்களுடைய வாகனச்சாரதியும் ஏதோ சிங்களத்தில் அவர்களுடன் குளைந்துவிட்டு மீண்டும் முச்சக்கரவண்டியை முடுக்கிவிட்டார்.

- அம்மா
- ம்
- உங்களிடம் துவக்கு இருக்கா
- இல்லை. ஏன்? துவக்கெல்லாம் வைசிருக்கக்கூடாது.
- இதில துவக்கோட நிக்கிறவை சிங்கள ஆட்கள்தானே
- ம்
- அப்ப இவை எங்கட எதிரிதானே
- ம். ஒருவிதத்தில
- அப்ப நாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும்
- ஏன்?
- இவை எங்கள எப்பவும் சுடலாம். அதால நாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும் அம்மா.

இதற்குமேல் பதில் சொல்ல முடியாமல் இவனோடு இனி நான் வன்முறையில் இறங்கவேண்டி வரும் அபாயம் அறிந்து வழமைபோல நான் பேச்சைமாற்றத் தொடங்கினேன்.
நன்றி - என் கவிதை 
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்