/* up Facebook

Sep 29, 2011

’’அந்த நாள் ஞாபகம் வந்ததே...’’ - எம்.ஏ.சுசீலா


கள்ளமற்ற இளமையையும்,கழிவிரங்கும் முதுமையும் எதிரெதிர் இருமைகளாக முன் வைத்துத் தீட்டியிருக்கும் இப் புறப் பாடல்
தன்னுள் பொதிந்து கிடக்கும் மகத்தான வாழ்வியல் சாரத்தால் காலம் கடந்தும் நம் உள்ளங்களில் கல்வெட்டாய்ப் பதிகிறது.

முதுமையின் ஒரு சுகம்......கழிந்து போன பழைய நாட்களை...,தனது இளமைக் கால அனுபவங்களை எண்ணி எண்ணி இளைப்பாறுதல் கொள்வது...
தனது அந்தக் கால நினைவுகளை அசை போட்டுக் களிப்பது.
அதில் ஆற்றாமையும் ஏக்கமும் கலக்காத வரையில் அதுவும் ஒரு இனிமையான அனுபவப் பகிர்வுதான்,..!


சங்கப் புறப் பாடல் ஒன்றில் தனது வாலிபப் பருவத்தை நினைவு கூரும் வயோதிகர் ஒருவரது சித்திரத்தைக் காட்சிப்படுத்துகிறார் ஒரு புலவர்.

ஏதோ ஒரு ஆற்றங்கரை அல்லது குளக்கரை.
நெஞ்சில் துளிக்கூடக் கள்ளம் கபடமில்லாதவர்களாய் சிறுவரும் சிறுமியரும் - ஒன்று சேர்ந்து அங்கேவிளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மணலால் செய்த பொம்மையை வைத்துக் கொண்டு அங்குள்ள மலர்களைப் பறித்து அவற்றுக்குச் சூட்டிக் குளிர்ந்த நீரில் களியாட்டம் போடும் சிறுமிகளோடு கை கோர்த்தபடி அவர்கள் எப்படி அசையச் சொல்கிறார்களோ அப்படி அசைந்து,அவர்கள் எப்படித் தழுவிக் கொள்கிறார்களோ அப்படித் தழுவிக் கொண்டு விளையாடும் அந்தச் சிறுவர்களின் உள்ளத்தில் விகல்பமான - மறைவான - தவறான சிந்தனைகள் சற்றுமில்லை.
‘’மறையெனல் அறியா மாயமில் ஆயம்’’
-ஒளிவு மறைவு என்பது கொஞ்சமும் இல்லாத வஞ்சனையற்ற நண்பர் கூட்டம் அது என்கிறான் சங்கக் கவிஞன்.

உல்லாசமான கேளிக்கை மனநிலையில் இருக்கும் தன் தோழியர் மத்தியில் சற்றே சாகசம் செய்து காட்டும் ஆவல் அந்தப் பையன்களிடம் கிளர்ந்தெழுகிறது; தண்ணீர்த் துறைக்கருகில் ஒரு மருதமரம் கிளை பரப்பி நிற்கிறது.அதன் கிளைகளில் ஒன்று நீர்ப்பரப்பை உரசியபடி தாழ்ந்து கிடக்க அதைப் பற்றிக் கொண்டு மேலேறும் சிறுவர்கள் ,மரத்தின் உச்சி வரை சென்று...கரையிலே நிற்பவர்கள் வியந்து போகும் வண்ணம் அந்த நெடுநீர்க் குட்டைக்குள் திடுமென..- சரேரெனப் பாய்கிறார்கள்; சுற்றிலும் நீர்த் திவலைகள் பீறிட்டு அடிக்கின்றன.அத்தோடு நில்லாமல் மடுவின் ஆழம் வரை தாங்கள் மூழ்கி எழுந்ததற்குச் சாட்சியாக நீர்நிலையின் ஆழத்திலிருக்கும் மென்மணலையும் அவர்கள் கையில் அள்ளி எடுத்து வருகிறார்கள்.
அந்தக் கல்லா இளமையை - உலகின் சூது வாதுகள் மனதில் படிந்திருக்காத பரிசுத்தமான கபடற்ற பாலிய பருவத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறார் ஒரு பெரியவர்.
இப்போது அவர் தண்டூன்றித் தளர்ந்து போய்விட்டவர்.
கை கால் நடுங்காமல் அவரது இயக்கம் இல்லை.
அவர் பேசும்போது ஏதோ..சொற்களுக்கிடையே சற்று இருமல் வந்து போகிறது என்பது கூட இல்லை..
இருமலுக்கு நடுவிலேதான் சொற்களையே அவரால் உச்சரிக்க முடிகிறது.
அதுவும் ஏதோ கொஞ்சம்தான் பேச முடிகிறது.
‘’இருமிடை மிடைந்த சில சொல்’’
என்கிறது பாடல்.
இருமல் கலந்த சொல் அது...இருமலால் மட்டுமே தொடுக்கப்பட்ட பேச்சு அது.

பூண்போட்ட கைத் தடியை ஊன்றியபடி கை கால் நடுங்க இருமிக் கொண்டே எதையோ பேசும் இந்த நிலையில்
‘’தொடித்தலை விழுத் தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சில சொல்
பெருமூதாளர்’’ஆக...கிழவராக ஆகி விட்ட இந்த நிலையில் தனது பழைய பொன்னாட்களை நினைத்துப் பார்க்கையில் அப்படி
‘’நெடு நீர்க் குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து
குளித்து மணல் கொண்ட ‘’
தன் ‘’கல்லா இளமை’’
எங்கே போய்த் தொலைந்தது என அவர் வியக்கிறார்..
அதை எண்ணி ஆற்றாமை கொண்டு கழிவிரக்கமும் கொள்கிறார்.


கள்ளமற்ற இளமையையும்,கழிவிரங்கும் முதுமையும் எதிரெதிர் இருமைகளாக முன் வைத்துத் தீட்டியிருக்கும் இப் புறப் பாடல்
தன்னுள் பொதிந்து கிடக்கும் மகத்தான வாழ்வியல் சாரத்தால் காலம் கடந்தும் நம் உள்ளங்களில் கல்வெட்டாய்ப் பதிகிறது.

‘தொடித்தலை விழுத் தண்டு’என்னும் சிறப்பான தொடரை உரிய இடத்தில் பொருத்தமாகக் கையாண்டதன் காரணமாகவே தன் இயற்பெயர் இன்னதென்பதே அறியப்படாதவராய்த் தொடித்தலை விழுத் தண்டினார் என்னும் பெயர் பெற்றார் இப் பாடலின் புலவர்.

பாடல் முழுவதும்...
‘’இனி நினைந்து இரக்கமாயின்று திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇத்
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து
தழுவு வழித் தழீஇத் தூங்கு வழித் தூங்கி
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து
நீர் நணிப் படி கோடு ஏறிச் சீர் மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடு நீர்க் குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல் ஓர்
தொடித்தலை விழுத் தண்டு ஊன்று நடுக்குற்று
இருமிடை மிடைந்த சில சொல்
பெருரு மூதாதாளரேம் ஆகிய எமக்கே’’
-புறநானூறு-243,தொடித்தலை விழுத் தண்டினார்

[நினைக்குந்தோறும் மனம் அதை எண்ணிக் கழிவிரக்கம் கொள்கிறதே..! மணலைக் கெட்டிப்படுத்திச் செய்த வண்டல் பாவைக்குப் பூப் பறித்துச் சூட்டிவிடும் சிறுமியரோடு ஒன்றிணைந்து கை கோர்த்து நடனமாடிக் களித்துக் கொண்டிருக்கும் களங்கமில்லாத மனம் படைத்த சிறுவர்கள்.! அவர்கள் உயரமான கிளைகளைக் கொண்ட மருத மரத்தின் தாழ்வான ஒரு கிளையில் ஏறி அந்த நீர் நிலைக்குள் ‘தொபுகடீர்’ என்று குதித்து அந்தச் சிறுமியருக்கு வித்தை காட்டுவதோடு தண்ணீருக்குள் மூழ்கியபடி ஆழ்மான அடிப்பரப்பிலிருந்து கையில் மென்மணலையும் அள்ளி வந்து காட்டுகிறார்கள்.அவர்களில் ஒருவனாக நானும் இருந்தேனே..அந்தக் கல்லா இளமைக் காலம்..இப்போது எங்கே சென்று மறைந்ததோ? நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்தபடி இளமைப் பாய்ச்சல் காட்டிய காலங்கள் தொலைந்துபோய்ப் பூண் போட்ட கைத்தடியைப் பிடித்தபடி -கை கால் நடுக்கத்துடன் - இருமலுக்கிடையே ஒரு சில வார்த்தை பேசும் நாளும் வந்துற்றதே..! அத்தகைய மூப்புற்ற கிழவனாகி விட்ட எனக்கு அந்த நாள் நினைவுகள் வந்து கழிவிரக்கம் கொள்ளச் செய்கின்றனவே...!]

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்