/* up Facebook

Sep 19, 2011

அறம் கற்பித்த தமிழகம் - மு.நஜ்மா


திண்ணைப் பள்ளி - புலன்களின் ஒழுங்கு – சிந்தை நெறிப்பாடு

அச்சு வடிவிலான பாட நூல்கள், கரும்பலகைகள்,சுண்ணக் கட்டிகள் முதலியவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் குழந்தைகள் அற இலக்கியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நீதிப்பாடல்களைத் திண்ணைப் பள்ளிகளின் வாயிலாகக் கற்றனர். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திண்ணைப் பள்ளிகள் குறித்துக் கிறித்தவத்தொண்டு நிறுவனங்களும் காலனிய அதிகாரிகளும் பதிவு செய்துள்ளனர். இப்பள்ளிகள் வீட்டுக்கூடங்கள் அல்லது திண்ணைகளில் நடைபெற்றதால் ‘திண்ணைப்பள்ளிக் கூடம்’ என்று அழைத்தனர். திண்ணைப் பள்ளிகளின் தோற்றம் குறித்துத் தெளிவாக அறிய முடியவில்லை எனினும் தமிழகம்,வங்காளத்தில் தொல்ஸ், மற்றும் பாதஷாலாஸ் (பாட சாலைகள்), மக்தப்ஸ், தெலுங்கு மற்றும் ஜாஃப்னா பீடபூமியில்கூடக் காணப்பட்ட கூடப்பள்ளிகள் முதலியவை திண்ணைப் பள்ளிகளின் பரவலாக்கத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றன2. தட்சணை கொடுக்கும் அளவிற்கு வசதியுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் ஆதிக்கச்சாதி மற்றும் இடைநிலைச் சாதியினரின் பிள்ளைகளுக்கும் கோயிற் பெண்களுக்கும் ஒற்றை ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்பட்டது. தொழில் அல்லது வேலை கற்றுக் கொள்வதற்கு முன்பாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் செயல் முறைக் கற்றல் வாயிலாகத் திண்ணைப் பள்ளிகளில் மாணவர்கள் பயின்றனர். இதன் மூலம், பயிற்சிப்பணிக்கு மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கருதப்பட்டது.

திண்ணைப் பள்ளிகள் அறம் புகட்டுவதற்கான முதன்மையான இடங்களாக விளங்கின. இப்பள்ளியின் பன்முகப்பட்ட பாடத் திட்டத்தில் ஒளவையாரின் நீதிப் பாடல்கள் அதிலும் குறிப்பாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகியவை முக்கிய இடம் வகித்தன. பலவகையான கலைச் சொற்களை அறிமுகப்படுத்து வதற்கும் கணித அறிவை மேம்படுத்துவதற்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மேலும் ஒழுக்கம், நேர்மை தொடர்பான அறத்தைக் கற்பிப்பதற்கு ஏதுவாகவும் ஒளவையின் பாடல்கள் விளங்கின3. வெவ்வேறு பாடல்கள் ஒருபுறம் கற்பிக்கப் பட்டாலும் ஒளவையின் பாடல்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கற்பிக்கப்பட்டன. ஒளவையின் பாடல்கள் கடவுளைப் பற்றியோ வழிபாட்டு முறைமை பற்றியோ அமைந்திருக்கவில்லை4. அவை அன்றாட வாழ்க்கை மீதான கேள்விகளைப் பற்றியவை: ஒருவன் எப்படி வாழ வேண்டும், பிறருடன் எப்படிப் பழக வேண்டும் (ஒப்புரவொழுகல்) என்பதான தன்மைகளைப் பற்றியவை. மேலும் செய்யுளைப் புரிந்து கொள்ளவும் பல சமயங்கள், ஒரே சமயத்திற்குள் பல பிரிவுகள் நிலவும் சூழலில் பொது அறம் கற்பித்தலுக்கும் ஒளவையின் பாடல்கள் பயன்பட்டன.

திண்ணைக் கல்வி முறையை மறு கட்டமைப்பு செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆங்கிலேயக் கல்வி முறை திண்ணைக் கல்வியில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. மனனம் செய்யும் முறையைக் காலனியக் கல்வி மனநிறைவின்றித் தொடர்ந்து அனுமதித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நீதி கற்பித்தலுக்குத் திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்ட ஒளவை பாடல்களையே நவீனப் பள்ளிகளில் தமிழ் இலக்கியமாக மாணவர்களுக்குக் கற்பித்தனர். திண்ணைப்பள்ளிக் கல்வி மனனம் செய்யும்முறையை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிட்ட மொழியை எழுதியும் வாசித்தும் பார்க்கிற காலனியக் கல்வி முறைக்கு இது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. திண்ணைப்பள்ளிக் கல்வியின் இப்பயிற்சிமுறைதான் அறம் எவ்வாறு, எத்தகைய சூழலில் கற்பிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது5. இம்மனனப் பயிற்சி என்பது பாடங்களை வெறுமனே மனப்பாடம் செய்வது, மொழியை, இலக்கியப் பண்பாட்டை அல்லது இலக்கியத் திறனை அறிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டதல்ல. பாடங்களை மனத்தில் நிறுத்துவது என்பதைவிட அறிவை விசாலப்படுத்தத் தூண்டுவது என்பதையே நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. நினைவாற்றலை மேம்படுத்துவது, அதன் மூலம் அறம் கற்பிப்பது என்கிற கல்வி முறையில் ஒளவையின் பாடல்கள் உலகைப் புரிந்து கொள்ள உதவும் என்று கருதப்பட்டது. ஒளவையின் பாடல்களை மனதளவில் பாடமாகத் தக்க வைத்தல், சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது, நற்செயல்களைச் செய்வது என்னும் செயல் முறைகள் வழியாக அறம் போதிக்கப்பட்டது. எனவே அறம் போதிக்கும் முறை என்பது செயல் முறைக் கற்றலாக இருந்தது.

திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போன்ற பாடல்கள் இச்சமூகத்தின் அறப்பண்பாட்டை விளங்கிக்கொள்ள உதவுகின்றன. அற இலக்கியங்கள் எவ்வாறு நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்பட்டன என்பதற்கு உரை மரபுகளை ஆய்வாளர்கள் முதன்மை ஆதாரமாகக் கொள்ளுகின்றனர்6. 1800க்கு முற்பட்ட காலங்களில் பன்மொழியாளர்5 அவைகளின் (Polyglot Courts) அரசியல் மற்றும் அறச் சிந்தனைகள் குறித்த ஆய்வுகள், உரை மரபுகளின் வாயிலாகவே மீட்டெடுக்கப்படுகின்றன7. வழிபாட்டுத் தலங்கள், அரசவைகள், மடாலயங்கள் ஆகிய வற்றில் உள்ள பண்டிதர்கள், உரையாசிரியர்கள் ஆகியோர் அரசியல் மற்றும் அறவாழ்க்கை குறித்த கோட்பாடுகளையும் அறிவார்ந்த விளக்கங்களையும் ஓலைச்சுவடிகளாக வடித்து வைத்திருந்தனர். மொழி பெயர்த்தல் மற்றும் சூழல் சார்ந்த நடத்தைகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட ஆய்வாளர்களுக்கு உரையாசிரியர் வழங்கிய பார்வைகளும் அற விளக்கங்களும் அதன் வாயிலாக உணர்த்தப்பட்ட நீதிகளும் விளக்கமளிப்பதாக இருந்தன.

பாடல்களுடைய புரிதலுக்குப் பாடல் அமைப்பு தான் முக்கியமே தவிர உரைகள் இல்லை. பாடல்களின் உருவாக்கச் சூழல், அது பேசும் பொருண்மையைக் காட்டிலும் சமகாலச் சூழலில் அறம் போதிப்பதற்கு ஏற்ப அப்பாடல்கள் திண்ணைப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. திண்ணைக் கல்வி முறை ஆரம்ப காலக் கிராமப் பள்ளிகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்த புரிதலை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் திண்ணைப் பள்ளிமுறை வெகுசனத்திற்கான கல்வி நிறுவனமாகவோ அறம் போதிக்கும் இடமாகவோ இருக்கவில்லை.

பெரும்பாலான திண்ணைப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் போன்ற தொழில் செய்பவர்களாகவும் கோயில் மற்றும் மடாலயங்களில் புரவலர்களாகவும் அரசியலில் / அதிகாரத்தில் மதிப்புமிக்க அங்கத்தினர்களாகவும் விளங்கினர். சாதாரண கூலிகளாகவோ பணியாட்களாகவோ இவர்கள் விளங்கவில்லை. எனவே, திண்ணைக் கல்வி, சமூகப் படிநிலைகளை நிலைநிறுத்துகிற அமைப்பாகச் செயல்பட்டது என்று கருதமுடிகிறது. திண்ணைப் பள்ளிகள் அதிகாரக் கட்டமைப்பில், உயர்குடி வட்டத்தில் இருப்பவர்கள் எவ்வகையான அரசவைப் பழக்கங்களை / மேட்டிமைப் பண்புகளைப் பின்பற்ற வேண்டும், எத்தகைய அறத்தைப் பேண வேண்டும் என்று கற்பிக்கின்ற இடமாக விளங்கின.

திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட அறம் என்பது பொதுவான எல்லா மக்களுக்கும் உரிய அறம் பற்றியதாக இல்லை. அடக்குமுறை சார்ந்த சமூகப் படி நிலைகளை எதிர்ப்பதாக அல்லாமல் உலகக் கட்டமைப்பை ஒழுங்கமைத்தலுக்கான அறமே போதிக்கப்பட்டது. அறம் பற்றிக் கூறும் ராஜ்கௌதமன், தமிழ் அற இலக்கியங்கள் அல்லது நீதி இலக்கியங்கள் போதிக்கும் அறமானது தமிழ் பேசும் மக்களிடையே என்றும் மாறாத விழுமியங்களை உருவாக்கிவிட்டன. வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுடைய மனம், மொழி, நடத்தையைத் தீர்மானிக்கும் சக்தியாக அவை விளங்குகின்றன8. அறம் பேணுதலுக்கும் அதிகார நடைமுறைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அறம் என்பது அதிகாரம் என்றும் ராஜ்கௌதமன் குறிப்பிடுகின்றார். ராஜ்கௌதமனின் கருத்தை நோக்கும் போது அறம் எவ்வாறு போதிக்கப்பட்டது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.

இந்த அடிப்படையில் திண்ணைக் கல்வியை மதிப்பீடு செய்தோமானால் திண்ணைப் பள்ளி, மாணவர்களைப் புறவயமாகப் பாடநூல்களை மனனம் செய்ய வைக்கும் வேலையைச் செய்யவில்லை என்றும் மனப் பயிற்சி மூலம் அறத்தை அகவயமாகக் கற்பிக்கின்ற வேலையைச் செய்துள்ளது என்றும் புரிந்து கொள்ளலாம்9.

நன்னடத்தை அல்லது அறம் பேணுதல் என்பது உடல் ஒழுக்கம் சார்ந்ததாகவும் உள்ளது என்று தென் ஆசியாவில் குறிப்பாக இஸ்லாமிய அதபில் (adab) ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்10. அற ஒழுக்கங்கள் எவ்வாறு பல்வகையான உடல் சார்ந்த பயிற்சியின்மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அண்மைக்கால ஆய்வுகளையும் நாம் இதனோடு இணைத்துக் காணலாம்.11 இதே கண்ணோட்டத்தில் திண்ணைக் கல்வியில் உடல் சார்ந்த பயிற்சிகள் கற்பிக்கப் பட்டுள்ளதையும் புரிந்து கொள்ளலாம். திண்ணைப் பள்ளிகள் மேற்கொண்ட வாய்வழி மற்றும் செவிவழிப் பயிற்சி, படியெடுத்தல், மனனப் பயிற்சி ஆகியவை பாட நூல்களை வாசித்தல் மூலம் பயிலும் முறையைத் தடுத்தாலும் மேற்கூறப்பட்ட பயிற்சிகள் புலன்களை ஒழுங்கு செய்தல் மற்றும் மனதை நெறிப்படுத்தலுக்கு ஏற்ற கல்வி முறையாக விளங்கின.

மன ஒழுங்கிற்கான உடல் சார்ந்த பயிற்சியை அறப்பாடல்கள் அளிக்கின்றன. ‘வாய்ப்பாடம்’ என்னும் பயிற்சி எல்லாத் திண்ணைப் பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது. வாய்ப்பாடம் என்பது இன்று கணித வாய் பாடுகளையும் மனப்பாடத்திற்கான நீண்ட பட்டியல்களையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகின்றது. வாய்ப்பாடம் என்னும் சொல்லுக்கு நாப்பயிற்சி அல்லது நாவைப் பழக்கப் படுத்துதல் என்று பொருள்.11 அறத்தைப் பயிற்றுவித்தல் மற்றும் ஒலி ஒழுங்கமைந்த அறப்பாடல்களை மனனம் செய்தல் ஆகிய இரண்டு செயல்களும் வாய்ப்பயிற்சி மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டது. திண்ணைப் பள்ளியில் சுவாசப் பயிற்சி, காது மற்றும் நாப்பயிற்சி வழியாக கற்பிக்கப்படும் போது அறம் சார்ந்த விழுமியங்களுக்கு ஏற்ப உடல் பழக்கப்படுத்தப்படுகிறது13 பேணூவதற்குப் பயிற்றுவித்தது.14 மனதை ஒழுங்கமைத்தலுக்கும் திண்ணைப்பள்ளிகள் இவ்வாறு மாணவர்களை அகவயமாக நல்லொழுக்கங்களைப் பேணுவதற்கும் மனனப் பயிற்சியே அடிப்படைத் தூண்டுகோலாக இருந்தது. இந்தப் பின்புலத்தில் ஆத்தி சூடி போன்ற நீதிப் பாடல்களைத் திண்ணைப் பள்ளிகளில் பயில்வது என்பது தமிழ் மொழியை அல்லது அறக்கொள்கைகளை மனனம் செய்வது என்றில்லாமல் அறத்தை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்று கற்பதாகும். இத்தகைய கல்விப் பயிற்சி மனதை நெறிப்படுத்துதல் அல்லது பண்படுத்தலுக்கு வழிவகுக்கிறது. திண்ணைப் பள்ளிகளில் இத்தகைய பாடல்கள் கற்பிக்கப்படும் சூழலைக் காணும் போது, ஒரு பாடலின் அமைப்பு, பொருண்மை, சூழல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைக் கற்பதன் மூலம் மாணாக்கர் அறத்தைக் கற்கின்றனர் என்று அறியமுடிகிறது. அறம் என்பது உடல் மற்றும் ஒழுக்கப் பயிற்சிகளின் மூலம் தொடர்ந்து நிலை நாட்டப்படுகின்றது.

திண்ணைப் பள்ளி கற்பித்த அறம்

இருக்கைகள், கரும்பலகைகள், மாக்கட்டி அல்லது பள்ளி அறைகள் கூட இல்லாத போது திண்ணைக் கல்வி அமைப்பு பிரம்பு வாத்தியார், அவருடைய மூத்த மாணவர் (சட்டாம்பிள்ளை) ஆகியோரை நம்பியும் மனனம் செய்வதை வலியுறுத்தியும் இயங்கியது. மாணவர்கள் குழுவாகத் தரையில் உட்காருவர். இளைய மாணவர்கள் மணலில் எழுதுவர்; மூத்த மாணவர்கள் சொந்தமாக ஓலைச் சுவடிகளைக் கொண்டு வந்து அதில் எழுதிப் பாடங்களாகத் தொகுத்துக் கொள்வர். ஒவ்வொரு புதிய பாடத்தையும் ஒரு ஓலையில் எழுதிச் சுவடித் தூக்கில் இணைத்துக் கொள்வர். சுவடித் தூக்கு என்பது ஓலைச் சுவடிகளைக் கத்தையாகக் கட்டி வைத்திருக்கும் கயிற்றைத் தாங்கும் ஊக்கு ஆகும். சுவடித் தூக்கு பரணில் தொங்கவிடப்பட்டிருக்கும். மாணவர்கள் மீண்டும் மீண்டும் தாம் கற்ற பாடங்களைப் படிக்கின்றனர். ஆசிரியர் பாடங்களை மீண்டும் மீண்டும் சொல்லிப் பயிற்றுவிக்கின்றார். மாணவர்களைக் கவனப்படுத்தவும் நேரத்தைக் கடைப் பிடிக்கவும் ஆசிரியர் பிரம்பைப் பயன்படுத்துகிறார்.15

திண்ணைக் கல்வி சாதி, பால் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டது.16 திண்ணைப் பள்ளிகள் அந்தந்தச் சமூக (சாதி, சமயம்) வட்டத்திற்குள்ளாகவே அமைக்கப்பட்டுத் தெரிந்த அல்லது உறவுடைய குடும்பங்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பகாலக் காலனிய அரசின் கணக்கெடுப்புகள், திண்ணைக் பள்ளிகள் பெரும்பாலும் சாதி இந்துக்களின் குடியிருப்புகள் அல்லது ஊர்ப்பகுதியில்17 நடத்தப் பட்டன என்றும் அவற்றில் உழைக்கும் சாதியைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பயிலவில்லை என்றும் குறிப்பிடுகின்றன.18 ஊர்ப் பகுதியைச் சேர்ந்தவர்க்கும் பிராமணக் குடியிருப்பான அக்கிரகாரத்தைச் சேர்ந்தவர்க்கும் மட்டுமே திண்ணைப் பள்ளிகள் இடமளித்தன. இத்தகைய சமூகக் கட்டமைப்பு திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட அறப் பாடல்களிலும் எதிரொலித்தன. தமிழ் அறப் பாடல்கள் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பிரிவினைகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அவை நன்னடத்தைகளை வலியுறுத்துபவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒளவையின் நீதிப் பாடல்களில் ஒன்று சாதி அடிப்படையிலான சமூக ஏற்றத் தாழ்வுகளை விமர்சித்து உயர்வு தாழ்வு என்பது பிறப்பால் இல்லை என்றும் அது நன்னடத்தையில் உள்ளது என்றும் விளக்குகின்றது.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி19

(நல்வழி : 2)

நீர் பாய்ச்சி, உழுது பண்படுத்தப்பட்ட நிலம் மிகுந்த அறுவடையைக் கொடுக்கின்றது; இரசவாதத்தின் மூலம் மண்ணையும் பொன்னாக்க முடியும்.20 இது பொது இயல்பாக இருப்பினும் அதற்குரிய வாய்ப்புகள் அமையும்போதுதான் அனைத்தும் சாத்தியமாகின்றது. அற நூல்கள் தன்னிலை மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றாலும் அது திண்ணைப்பள்ளி என்னும் அமைப்பிற்குள் இயங்கும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகின்றது. ஒளவையின் பாடல்கள் பொதுப் புழக்கத்தில் ஒருவகையான புரிதல்களுடன் இருந்து வந்தாலும் திண்ணைப் பள்ளியிலேயே இவை ஒழுங்கியல் பயிற்சிக்கான பாட நூல்களாக விளங்கி வந்தன. திண்ணைப் பள்ளி ஒழுங்கைக் கற்பிப்பதோடு உயர்குடி மக்கள் என்னும் அங்கீகாரத்தை வழங்கும் இடமாக உள்ளது. எனவே, திண்ணைப் பள்ளியும் அதன் பாடத் திட்டங்களும் சமூகப் படிநிலைகளோடு பின்னிப் பிணைந்துள்ளன.

உழைக்கும் வர்க்கத்தை மேலாண்மை செய்வோருக்குரிய ஒழுக்கக் கல்வியைத் திண்ணைப்பள்ளி வழங்கியது. திண்ணைப் பள்ளியில் கல்வி கற்கத் தொடங்கும்போது செய்யப்படும் முதல் சடங்கே நிலக்கிழார்களுக்கான அறம் சார்ந்த உடல் ஒழுக்கத்தை ஆழமாகப் பதியவைப்பதாகவும் செய்யப்படுகின்றது. ஆசிரியர் தேனில் விரலைத் தொட்டுக் குழந்தையின் நாக்கில் எழுத்துக்களை எழுதுவார். பின்பு தட்டில் பரப்பப்பட்டுள்ள அரிசியின் மீது குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ என்னும் முதல் எழுத்தை எழுதுவார்.21 தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் பொருளின் மீதே குழந்தை முதலில் எழுத வேண்டும். எனவே பெற்றோர்கள் இத்தகைய சடங்கிற்குத் தங்களுடைய வீட்டிலிருந்து அரிசியைக் கொடுத்து அனுப்புவர். இது திண்ணைப்பள்ளி ஆசிரியருக்குத் தட்சணையாகக் கொடுக்கப்படுகிறது. கல்வி கற்பதற்குரிய புலன்களாக விளங்கும் நாக்கு மற்றும் விரல்கள் குறித்த அறிவையும் அவற்றின் ஒழுக்கத்தையும் அதே சமயம் மாணவனுடைய உடைமை (பொருள்) மற்றும் கொடை வழங்கும் அளவிலமைந்த செல்வம் குறித்த உணர்வையும் இச்சடங்கு ஏற்படுத்துகின்றது.

ஆத்திசூடி நூற்பாக்களும் மேற்கூறப்பட்ட விழுமியங்களைப் பிரதிபலிப்பவையாக இருந்தன. பெருந்தன்மையுடன் கொடுப்பது, நேர்மையான பரிமாற்றம் (அஃகம் சுருக்கேல் - விளைபொருள் மதிப்பைச் சரியாக நிர்ணயித்தல்), தேசத்தோடு ஒத்து வாழ், பொருள்தனைப் போற்றி வாழ், ஏற்பது இகழ்ச்சி முதலிய பண்புகளை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றது. நோன்பு, விழிப்புணர்வு, சரியான உறக்கம், பசியை அடக்குதல் முதலிய உடல் சார்ந்த ஒழுக்கத்தையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் (ஆறுவது சினம்), நற்சொல் பேணுதல் (கடிவது மற) என்று பலவற்றை வலியுறுத்துகின்றன. செல்வத்தை / வளத்தைப் பேணுவோருக்கான நல்வாழ்வுக்குரிய விதிகளாக இவற்றைக் கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட ஆத்திசூடியின் சில கட்டளைகள் நடத்தை அல்லது பயிற்சி சார்ந்த பலவகைப்பட்ட விதிகளைக் குறிப்பிடுகின்றன. காட்டாக, ‘நெற்பயிர் விளை’ என்பது வேளாண் வழிபாட்டைக் குறிப்பிட்டாலும் நெற்பயிர் விளைவிப்பதில் உள்ள கடுமுயற்சி, வேளாண் சார்ந்த அறத்தை நிலை நிறுத்துதல் அதாவது உழவை வழிபடுவதன் மூலம் தன்னைப் பேணுதல் என்பதைக் கற்பிக்கின்றது22. திண்ணைப் பள்ளி குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வாய்ப்பளித்ததன் மூலம் பாகுபடுத்தப்பட்ட சாதி வழக்கத்தை உருவாக்கியது என்பதை உணரமுடிகிறது. நிலக்கிழார் மற்றும் வணிகர்களின் குழந்தைகளுக்கான ஒழுக்கங்களை உடல் மற்றும் புலன் சார்ந்து கற்பித்தது. அது, தன்னைப் பேணுவதாகவும் செல்வத்தை / வளத்தை ஆளுமை செய்வதற்கான கற்பிதமாகவும் இருந்தது23.

நினைவாற்றல் வழி அற மேம்பாடு

திண்ணைப் பள்ளி ஆசிரியர் முதலில் படிப்பதைக் கேட்டு மாணவர்கள் சத்தமாகத் திருப்பிக் கூறுகின்றனர். நூலைக் கூடப் பார்க்காமல் ஆசிரியர் கூறுவதைக் காதால் கேட்டு அப்படியே திருப்பிக் கூறுகின்றனர் என்று திண்ணைப் பள்ளி குறித்து எழுதியுள்ளனர்.24 செவிவழிக் கேட்டு மனனம் செய்வதன் மூலம் கற்பிக்கும் திண்ணைப் பள்ளியின் கல்வி முறை பாட நூல்களின் பொருளை விளங்கிக் கொள்ளும் அறிவையும் பாடல்களைப் பார்த்துப் படிக்கும் அறிவையும் முன்னதாகவே அளிப்பதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்பாலான அரசு அறிக்கைகள் இக்கல்வி முறையை மடத்தனமான, மோசமான, கண்டிக்கத்தக்க கல்வி முறையாக விமர்சித்துள்ளது. ஏனெனில், இலக்கணத்திற்கான அல்லது அறத்திற்கான அடிப்படைக் கூறுகளை மனனம் செய்வதன் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியாது. பெல்லாரி என்னும் இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியராக இருந்த எ.டி. சாம்பெல் 1823ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் இடங்களில் இருந்த, இது போன்ற பள்ளிகளைக் குறித்துக் கூறும்போது, “ஒவ்வொரு மாணவனும் நிறையச் செய்யுளை சொல்லுக்குச் சொல் மாறாமல் ஒப்பிக்கின்றனர். அவற்றின் பொருளைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல உள்ளது. இத்தகைய கல்வி முறையில் பயின்ற மாணவர்களால் எழுத்துப்பிழையோ இலக்கணப் பிழையோ இன்றி ஒரு கடிதம் கூட எழுத முடிவதில்லை”25.

பதினெட்டாம் நூற்றாண்டு இறுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் திண்ணைக் கல்வி முறை மடத்தனமானது என்று கருதப்பட்ட சூழலில், வட்டாரம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் பரவலாகத் தோன்றின. இது காலனிய விதிகளை உள்ளடக்கிச் செயல்பட்டது. வளர்ந்து வரும் காலனியச் சூழலில் அவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்குத் தேவைப்பட்ட எழுத்துப்பணி, அலுவலகக் குறிப்புகளைப் பேணுதல் போன்ற பணிகளுக்கு ஏற்ப அக்கல்வி முறை அமைந்திருந்தது. திண்ணைப் பள்ளி கொடுத்த பயிற்சிக்கு முற்றிலும் மாறான பயிற்சி இங்குக் கொடுக்கப்பட்டது. திண்ணைக் கல்வியின் செயலற்ற திறனை நாம் வேறு வகையில் காண வேண்டும்.

பலஐதிகம் என்னும் தொகுப்பிலுள்ள விகடம் என்னும் பகுதி பள்ளிக் கூடத்தில் நிகழும் நகைச்சுவை குறித்த ஒன்று. பதினெட்டாம் நூற்றாண்டு இறுதியில் தஞ்சைப் பகுதியில் நகைச்சுவை அரங்கம் நிகழ்த்தப்பட்டது. உடல் சார்ந்த பயிற்சியாகவும் மனப் பயிற்சியாகவும் அறம் சார்ந்த கல்வி இருந்ததா என இது விளக்குகின்றது.

உச்சியிலே சுவடி தூக்கு உசிதமாய் மாட்டிக் கொண்டு

கச்சியாய்ப் படிப்பு எல்லாம் கனமாக முறைகளைச் சொல்லி

நிச்சியம் தெரிய வேண்டும் நீதிகள் படித்துக் கொண்டு

கொச்சைகள் திக்கு வாய்களுந் தீர வேணும்.26

நீதிப் பாடல்களை நினைவு வைத்துக் கொள்வதற்கேற்ப மனனம் செய்து கற்பது அவசியம். அது நல்ல பேச்சிற்கும் மனத்திறனை வளர்ப்பதற்கும் உதவும். உ.வே. சாமிநாத ஐயர் ‘முறை சொல்லுதல்’ என்பதைப் திண்ணைப் பள்ளியில் மனனம் செய்வதன் மூலம் பெறும் நினைவாற்றலாக விளக்குகிறார்.27 முறை என்பது உறவு, பொருத்தம் என்பதையும் குறிக்கும். மனனம் செய்தல் மற்றும் மீண்டும் மீணடும் சொல்லுதல் ஆகியவை மனதின் விரைவூக்கத்திற்கு உதவுபவை. எனவே மனப்பாட முறை என்பது வெறுமனே போலச் செய்தலோ, தகவல்களைத் தேக்கி வைத்தலோ இல்லை.

மத்திய ஐரோப்பாப் பகுதியில் காணப்படும் நினைவாற்றலைப் பேணுங்கலையினை ஆய்வு செய்த மேரி கரூத்தர் என்பவர், நல்ல நினைவாற்றல் உள்ள மனிதன் நல்ல புத்தி கூர்மை உள்ளவனாகவும் விளங்குகிறான் என்று குறிப்பிட்டுள்ளார்.28 மீண்டும் மீண்டும் சொல்லி நெட்டுரு செய்வதன் மூலம் நினைவாற்றலைப் பேணுங் கலையானது பாட நூல்களை மனனம் செய்வதற்கு உறுதுணையாக உள்ளது. இது மனதைப் பண்படுத்துவதற்கான முறை என்பதை விட எழுத்துக்களின் அமைப்பு, கருத்து, வடிவம் ஆகியவற்றை மனதில் தேக்கி வைப்பற்கான முறையாக இருந்தது. இடைக் காலத்தில் இம்முறை, நினைவாற்றலைப் பெருக்குவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.29 வரலாற்று நிலை, சமூக அல்லது சுய வாழ்க்கை சார்ந்த நினைவு என்பது வேறு; மேற்கூறப்பட்ட ‘நினைவாற்றல்’ என்பது வேறு. நினைவாற்றல் என்பது கல்விக்கான சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் நினைவைத் தேக்கிவைப்பது மட்டும் சிறந்த கல்வியாகாது என்கிறார் கரூத்தர்.

தமிழ் நீதி இலக்கியங்கள் இவை குறித்துப் பேசியுள்ளன.

கான மயிலாடக் கண்திறந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி

(மூதுரை, பாடல் :14)

என்கிற பாடலை எடுத்துக்கொள்வோம். இங்கு,ஒளவையின் மூதுரையில், கற்ற என்பது கல்லாதான் என்பதன் எதிர்ப்பதம். எனவே கல்லாதான் கற்ற கல்வி போன்றது என்பதைக் குறிக்கின்றது. கான முயல்போல ஆட முயற்சித்துத் தோற்கும் வான்கோழியின் செயல், எல்லாவற்றையும் மனதில் தேக்கி வைத்திருக்கும் அறிவு கல்விக்கான அறிவல்ல என்பதைக் குறிக்கும். கல்வி என்பது அதையும் தாண்டிய ஒன்று என்பதை விளக்குகின்றது. எனில், கற்றார் என்பவர் யார்? இன்னொரு பாடல்,

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள், இவை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவநல் மரம்

(மூதுரை : 13)

என்கிறது. அறிவுடையோன் என்பான் ஓலையில் உள்ள பாடங்களை வெறுமனே மனனம் செய்பவன் அல்ல; மாறாக, அவற்றைச் சரியான முறையில் உள்வாங்கி அதன் பொருளை விளக்கவல்லவன் ஆவான். நல்ல நினைவாற்றல் என்பது பாடலைப் புரிந்து விளக்கும் வகையில் மீள நினைப்பது, அதாவது தான்கற்றுக் கொண்ட பாடங்களை, அதன் பொருளை ஏற்கத்தக்க அளவிற்கு மெய்ப்பித்துக் காட்ட வல்ல திறன் கொண்டது.30 மனமானது சொல்விளக்கத் தொகுதி (Concordance) போன்று வேலை செய்கிறது. தேவையானவற்றை நினைவு கூர்வதற்கேற்ப அறிவார்ந்தும் துரிதமாகவும் கணிதத்திறன் கொண்டதாகவும் மனம் செயல்பட வேண்டும்.31 இம்மன விரைவு என்பது ஒரு வகையான கலைநுட்பம் ஆகும். இது போன்ற நுட்பமான கலையறிவை மேம்படுத்துவதும் இங்கு அவசியமாகின்றது.

ஃபிலிப் லுட் ஜென்டார்ஃப் என்பவர் வட இந்தியாவில் துளசிதாஸின் ராமசரிதமனஸைக் கற்பது என்பது ஆன்மீகப் பயிற்சியில் மாறுதலான அனுபவத்தைத் தரக்கூடியது என்கிறார். மீண்டும் மீண்டும் அவற்றைச் சொல்வதன் மூலம் மனதை அகவயப்படுத்துகின்றனர் என்று கருதுகின்றார். இடைக்கால கிறித்தவ மடாலயங்களில் “லெக்டியோ வழிபாட்டில்” அவர்கள் வேதவசனங்களை மனனம் செய்வதோடு நிற்பதில்லை. அதன் மொழி, அமைப்பு, வடிவம் ஆகியவற்றை மனதில் உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கை அனுவத்தோடு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒப்பு நோக்கினர்.32

திண்ணைக் கல்வி முறையில் அற நூல்கள் ஒரு குறிப்பிட்ட வரிசை முறைப்படி கற்பிக்கப்பட்டதும் மனனம் செய்வதன் வழி அவற்றை வாழ்க்கையில் பழக்குதல் என்பதையும் நோக்கமாகக் கொண்டது என உணர முடிகிறது. பார்த்து வாசித்தல் என்றில்லாமல் அகரவரிசையாக ஒழுங்குபடுத்தப்பட்ட, வகை செய்யப்பட்ட ஒலிகளைக் கற்றல், நாவினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் (ஒலி சார்ந்து) புலன்களை நெறிப்படுத்தும் கல்வியாகத் திண்ணைக் கல்வி விளங்கியது. இது போன்ற பயிற்சி முறைகள் உடல் சார்ந்த நுட்பக் கல்வியாகவும் ஒழுக்கக் கல்வியாகவும் கற்பிக்கப்பட்டது.

எழுத்துவகைமையும் புலன் ஒழுக்கமும்

திண்ணைப் பள்ளிகளில் மாணவர்கள் எழுத்துக்களைப் படிக்கின்றனர். ஆனால் எழுத்துக்களையோ அல்லது கணக்குகளையோ எழுதிப் படிக்கவில்லை என்பது அவற்றைக் கற்பித்துள்ள முறையினைக் காணும்போது தெளிவாகத் தெரிகின்றது. தமிழ்க் கணிதத்தில் தமிழ் எழுத்துக்கள் அலகுகளாகப் பயன்படுத்தப்பட்டன. எழுத்துக்களைக் கற்றல் அதன் வரிசை முறை ஒழுங்கினைக் கற்றல் ஆகியவை நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான அடிப்படை அறிவாக விளங்கியது. அகரவரிசையைக் கற்பதன் மூலம் எவ்வாறு புலன் ஒழுங்குமுறையைக் கற்க முடியும் என்பதற்குத் தமிழ் அரிச்சுவடி சிறந்த உதாரணமாகும். அரிச்சுவடி என்பது ஒரு வாய்ப்பாடு, வாய்க்கான பாடம் அல்லது வாய்பயிற்சி. திண்ணைக் கல்வி வாய்பாடு, கணக்கீடு, கணிதம் மற்றும் அளவையியல் சார்ந்த அடிப்படைக் கூறுகளையும் உள்ளடக்கியவை.33

திண்ணைக் கல்வி முறை குறித்த விளக்கங்களைக் காணும் போது அரிச்சுவடியை மீண்டும் மீண்டும் கூறுதல், கணித்து ஆய்தல், பார்த்து அறிதல் ஆகியவற்றை உட்கூறாகக் கொண்டு அதனைப் பயின்றுள்ளனர் என்று கருத முடிகிறது. வகை தொகை முறையை இன்றியமையாத கூறாகக் கற்பித்துள்ளனர்.

ஒவ்வொரு எழுத்துக்களையும் மணல் மீது எழுதிப் பார்ப்பதன் மூலம் அதன் வடிவங்களை நினைவில் வைத்துக் கொள்கின்றனர். எழுத்துக்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த் துள்ளனர். மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்துள்ளனர். இவ்வாறு மாணவர்கள் எழுத்துக்களின் அமைப்பைக் கற்றுக் கொண்டனர். பள்ளி மாணவர்கள் மணலில் எழுத்துக்களின் வடிவங்களை எழுதிப் பார்க்கும் பயிற்சிக்கு ‘நிலவெழுத்து’ என்று பெயர். தமிழ் எழுத்துக்களின் வகைதொகை அமைப்பான நெடுங்கணக்கு (‘கணக்கு’ என்பது பின்னொட்டாகச் சேர்க்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது) உடல் சார்ந்து குறிப்பாக நாவை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. வாயில் நா தொடும் இடம் மற்றும் ஒலிப்பின் நீளம் ஆகியவற்றைக் கொண்டு தமிழ் எழுத்துக்களின் வரிசை குறிப்பாக உயிரெழுத்துக்கள் வகை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்தும் ஒரு பிரிவின் கீழ் வகுக்கப்பட்டுள்ளது. மென்மையான ஒலிகள் மெல்லெழுத்து என்றும் வன்மையான ஒலிகள் வல்லெழுத்து என்றும் உயிர் எழுத்துக்களின் ஐந்து குறில்கள் ஆண்பாலெழுத்து என்றும் அழைக்கப்பட்டன. நினைவாற்றலைப் பேணுவதற்கு நெடுங்கணக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

திண்ணைப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியில் தமிழின் அடிப்படை ஒலியன்களான எழுத்துக்களை அரிச்சுவடியாகக் கற்கின்றனர். அரிச்சுவடி கற்றபின்பு ஒளவையினுடைய சிறந்த பாடல்களான ஆத்திசூடி மற்றும் கொன்றை வேந்தனைக் கற்கின்றனர். அவை வர்க்க அடிப்படையில் (நெடுங்ணக்கு முறைப்படி) வரிசைப்படுத்தப்பட்ட பாடல்களைக் கொண்டவை. இப்பாடல்களில் முதல் எழுத்துக்கள் தமிழ் அகர வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன. ஆத்திச்சூடியில் கடவுள் வாழ்த்துக்குப் பின்பு,

அறம் செய்ய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

என்று அ, ஆ, இ, ஈ என்று அகரவரிசையில் முதல் எழுத்துக்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மற்றும் கொன்றை வேந்தன் ஆகிய இரண்டும் தமிழ் நெடுங்கணக்கு வரிசைப்படி அமைந்த பாடல்களைக் கொண்டவை.34 கவிதை வடிவில் உள்ள இவ்விரண்டு நூல்களும் கல்வியியலை உள்நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை.

அறப்பாடல்களை உள்ளடக்கிய ஆத்திசூடி வகை தொகை செய்யப்பட்ட ஒலி ஒழுங்கு முறையில் அமைந்திருப்பது மாணவர்களுக்கு மனதில் நிலைப்படுத்தவும் நினைவூட்டிக் கொள்ளவும் ஏதுவாக இருந்தது. ஆத்திசூடி அகரவரிசையையும் பயனுள்ள செய்திகளையும் மனதில் பதிய வைக்கின்றது என்று மிஷனரி உரையாசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.35 வர்க்க முறையைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கற்றல் என்பது மனதை நெறிப்படுத்தும் கருவியாக மட்டுமன்றிக் கணித அறிவு சார்ந்த அடிப்படை அலகுகளாகவும் இவை விளங்குகின்றன. இதுவே ‘முறை சொல்லுதல்’ எனப்பட்டது. இவ்வாறு ‘அ’ என்பதை அறத்தோடும் அறம் என்பதை ‘அ’வோடும் இணைத்து ஆசிரியர்கள் கற்பித்தனர்.

தமிழ்க் கவிதையியலில் கணித மற்றும் மனன முறைகள்

தமிழ்க் கவிதையியல் உவமை போன்ற அணிகளைப் புலன் சார்ந்த அறிவுடன் மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றன என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.36 மேலும், தமிழ்க் கவிதையியல் என்பது வகை தொகை அமைப்பு, கணக்கீடு, கணித அறிவு முதலியவற்றாலும் அமைக்கப்பட்டுள்ளது என்று அவற்றை அடையாளம் காணலாம். காட்டாக, தமிழ் அகர வரிசையை உயிர் எழுத்து (மூச்சு/காற்று) என்றும் மெய் எழுத்து (உடல்) என்றும் இருவகை ஒலிவரிசை முறையினைக் கொண்டு கற்பிக்கின்றனர். பன்னிரு உயிரும் பதினெட்டு மெய்யும் சேர்ந்து தமிழ் எழுத்துக்களின் கணம் உருவாகியுள்ளது.

தமிழ் மொழி மற்றும் கவிதையியலின் கணக்கீட்டுப் பண்பும் இணைப் பண்பும் ஏ.கே. இராமானுஜத்தின் கருத்தோடு ஒன்றிப் போகின்றது. கவிதை என்பது அணி நலன்கள், சூழலின் தலைமைத்துவம் மற்றும் வகைதொகை முறை ஆகியவற்றைக் காட்டும் அமைப்பு குறித்து ஏ.கே.இராமானுஜம் விவாதித்துள்ளார்.37 கவிதை என்பது நினைவாற்றலுக்கான கருவியாகவும் உள்ளது. கொன்றைவேந்தனிலிருந்து ஒரு பாடலை எடுத்துக் கொள்வோம்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். (பாடல் : 7)

இங்குக் கண்கள் என்பவை எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகிய இரண்டின் மதிப்பிற்குச் சிறந்த உவமையாக உள்ளன.

இரண்டு என்னும் எண் இப்பாடலில் மறைவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களைப் போன்றவை எனத் தொடர்புபடுத்தப்படுகிறது. கணக்கீடாகச் சொல்லும் இம்முறை, எண்கள் மற்றும் எழுத்துக்கள் பற்றிய அறிவை முன்வைக்கின்றன. கணித அறிவு அல்லது ஒலியனியல் கூறுகளை மனதில் பதியவைப்பதன் மூலம் புலன் (கண்கள் / பார்வை) மற்றும் அறிவு ஆகியவற்றுக் கிடையேயான உறவை உணர்த்துவது, ஒழுங்குபடுத்துவது என்னும் வேலைகளைச் செய்கின்றது. எனவே கவிதையின் அமைப்பு என்பது பாடலுக்கான சூழலையும் வடிவத்தையும் அதனோடு தொடர்புடையவற்றையும் சேர்த்து வழங்குகின்றது.38

ஒரு மனிதனுடைய பண்பு என்பது கணக்கீட்டின் மூலம் அறியப்படுவதாகத் தமிழ் அறமரபுகள் குறிப்பிடுகின்றன. தமிழில் ஒன்பது சுவைகளும் 32 அறங்களும் நினைவில் நிற்பவையாகவும் மேற்கோளாட்சி முறைக்கு ஏதுவாகவும் உள்ளன. இது சமஸ்கிருத மரபிலும் செய்யுள் வடிவில் உள்ளது. அறம் என்பதை ‘அ’ என்னும் எழுத்தோடு தொடர்புறுத்துவதோடு 32 அறம் உள்ளது என்பதை நினைவுறுத்துவதாகவும் உள்ளது.

திண்ணைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்ட பாடல்கள் ஒன்று மற்றதோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டன என்பதைக் காணும் போது அவை நினைவாற்றல் பண்பை எவ்வாறு மேம்படுத்தின என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பதினெட்டாம் நூற்றாண்டில் திண்ணைப் பள்ளிகள் பற்றிய குறிப்புகளில் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன. திண்ணைப் பள்ளிகளில் மாணவர்கள் நீண்ட மலர்ப்பட்டியல் அல்லது நறுமணப் பொருட்களின் பட்டியலை மனனம் செய்து ஒவ்வொரு நாள் இறுதியிலும் வீட்டிற்குச் செல்லும் முன்பு ஆசிரியரிடம் அதனை ஒப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட முக்கியமான பாட நூல்களில் பெரும் பான்மையானவை பொருள் தொடர்பானவை. ஆத்திசூடி என்னும் நூல் ஆத்தி என்னும் மலரோடு தொடர் புடையது. கொன்றை வேந்தன், கொன்றை மலரோடு தொடர்புடையது. திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலியாகிய) மூன்று கடுகத்தோடு தொடர்புடையது. திண்ணை மாணவர்கள் இது போன்ற பட்டியலை மனனம் செய்து ஒப்பிப்பதன் மூலம் அதனோடு தொடர்புடைய பாடல்களை நினைவு வைத்துக் கொள்கின்றனர். மாணவர்களின் மனதை வலிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு திண்ணைப் பாடங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. ஒளவையாரின் ஆத்திசூடியில் உள்ள வருக்க அமைப்பு, வகைதொகை முறையையும் ஒலி ஒழுங்கையும் கற்பிப்பதன் மூலம் மூச்சுப் பயிற்சி, நாப் பயிற்சி மற்றும் விரல் பயிற்சி ஆகியவற்றைக் கொடுத்தது. இது ஒருபுறம் இருக்க உண்மையில் அப்பாடல்கள் எவை பற்றியவை என்பதும் கருதத்தக்கது.

அறப் பாடல்கள் மற்றும் நினைவாற்றல்

திண்ணைப் பள்ளியின் பாட நூல் வரிசைமுறை என்பது அரிச்சுவடியில் தொடங்கி ஆத்திசூடி அதைத் தொடர்ந்து கொன்றைவேந்தன் அதன்பின்பே மூதுரை எனக் கற்பிக்கப்பட்டது. பாடல் அமைப்புகளைக் காணும்போது மாணவர்கள் முதலில் அசை எழுத்துக்களின் வகை தொகைகளைக் அரிச்சுவடி கற்றுக் கொள்கின்றனர். அதன்பின்பு எளிமையான சொற்களாலான ஓரடிப் பாடல்கள், ஈரடிப்பாடல்களைக் கற்கின்றனர். கடைசியாக நான்கு அடியாலான வெண்பா யாப்பிலமைந்த மூதுரையைப் படிக்கும் திறனைக் கற்றுக்கொள்கின்றனர். ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்னும் பழமொழி இதனை விளக்குகின்றது. ஆலங்குச்சியும் வேலங் குச்சியும் பல்லுக்கு உறுதி கொடுப்பவை. அதைப் போல நான்கு அடி வெண்பாவும் இரண்டடி குறளும் அறிவை ஆழப்படுத்துகின்றன.39 தமிழ் பேசும் பெரும்பாலான மக்களுக்கு வெண்பா என்று கூறும் போது நாலடியாரும் குறள் என்று கூறும் போது திருக்குறளும் நினைவுக்கு வரும். எனவே திண்ணைப் பள்ளிகளில் மனனப் பயிற்சி இரண்டடி குறள் அல்லது நான்கடி வெண்பா மூலம் மேற் கொள்ளப்பட்டது.

இரண்டடி குறளும் நான்கடி வெண்பாவும் அறிவை ஆழப்படுத்த முடியும் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது. இந்த இரண்டு வடிவங்களும் நினைவாற்றலை மேம்படுத்த எத்தகைய பங்கு வகித்தன என்று முதலில் காணவேண்டும். திண்ணைக் கல்வியில் இடம்பெற்ற நீதிப் பாடல்கள் சீரான ஒலி அமைப்பு கொண்டவையாகவும் சூழலுக்கு ஏற்ப எளிதில் பகுத்துக் காணக்கூடியவையாகவும் விளங்கின. குறள், வெண்பா போன்ற மூல வடிவங்களைக் கற்பிப்பதன் வாயிலாக அசைச் சொற்களின் ஒத்திசைவு அதாவது எவ்வாறு எழுத்துக்கள் இணைந்து சொற்கள் தோன்றுகின்றன, எதைத் தொடர்ந்து எந்த எழுத்து இடம் பெறுகிறது என்கிற விதிகளைச் சொல்லிக் கொடுப்பதோடு செம்மையான வடிவம் மற்றும் பொருள் ஆகியவற்றைப் புலனறிவு சார்ந்து வழங்குகின்றது.

அடிப்படை அலகுகளைக் கொண்டு எவ்வாறு தமிழ்ச் செய்யுட்கள் உருவாக்கப்படுகின்றன என்பது கருதத்தக்கது. இத்தகைய உருவாக்கத்தை யாப்பு என்பர். எழுத்து, அசை, சீர், அடி ஆகிய அடிப்படை அலகுகளைக் கொண்டு செய்யுள் யாக்கப்படுகின்றது (கட்டப்படுகின்றது). அடிப்படை அலகுகளை எவ்வாறு யாக்க வேண்டும் என்னும் விதிகளை யாப்பும் செய்யுளை எவ்வாறு மதிப்படுவது என்பதைத் தூக்கும்40 விளக்குகின்றன. தூக்கு என்பது இலக்கணப்படி பகுத்தல், அளவிடுதல், ஆய்தலைக் குறிக்கும். தங்கம் மற்றும் வெள்ளியை அளவிடுதல் எவ்வாறு துல்லியமாகச் செய்யப்படுகின்றதோ அதைப் போலத்தான் செய்யுளை மதிப்பிடும் “தூக்கு” செய்யுளை மிகச் சிறிய உட்கூறு வரை பகுத்து அறியும் போது அதில் மறைந்து கிடக்கும் பலவகையான ஓசை வெளிப்படுகிறது. குறள் மற்றும் வெண்பா யாப்பிலமைந்த பாடல்கள் செப்பல் ஓசை கொண்டவையாக உள்ளன.

செப்பு என்பது வலியுறுத்தல், அறிவித்தல் என்னும் பொருளுடையது.41 செப்பல் ஓசை என்பது மென்மையான இன்னிசையாக அன்றி வன்மையான ஓசை மிக்கதாக இருக்கும். திண்ணைப் பள்ளியில் பல ஆண்டுகள் பயின்ற ஆய்வாளர்களே (மாணவர்கள்) யாப்பு மற்றும் தூக்கின் நுட்பங்களைக் கற்கின்றனர். திண்ணைப் பள்ளியின் ஆரம்பகால மாணவர்கள் குறள் மற்றும் வெண்பாவின் அமைப்பையும் ஓசையையும் முதலில் தெரிந்து கொள்கின்றனர். அறிதல், மனனம் செய்தல், செயல்படுதல் ஆகிய மூன்றனுக்கும் இது அடிப்படையாக அமைகிறது. ஒளவையின் ஆத்திசூடி எப்போதும் ஆணை இடுவதாக உள்ளது.

அறம் செய விரும்பு

ஆத்தி சூடியில் காணப்படும் கட்டளைகள், குறிப்பிட்ட எழுத்துக்களின் மூலம் சுட்டப்படுகின்றன. அதாவது, வினைச் சொற்கள் ‘உ’ என்று முடியுமாயின் அவற்றைச் செய்ய வேண்டும், ‘ஏல்’ என்று முடியுமாயின் அவற்றைச் செய்யாது ஒழிய வேண்டும் என்கிற அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.

அறம் செய விரும்பு - உ

ஓதுவது ஒழியேல் - ஏல்

கட்டளை வடிவம் மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்வதற்கு ஏற்ற வடிவமாக விளங்கியது. திண்ணைக் கல்வி வலியுறுத்தும் கற்றல் கற்பித்தல் முறை என்பது மீண்டும் மீண்டும் சொல்லிப் பயிலுதல் என்று கொள்ளலாம். மேலும், கட்டளை வடிவம் வினா விடையாகக் கற்பித்தலுக்கு உகந்த வடிவமாக உள்ளது. எனவே வெண்பா மற்றும் குறள் வடிவம் மனன முறை கல்விப் பயிற்சிக்கு ஏற்ற வடிவங்களாக விளங்கின.

புலன் (நா மற்றும் காது) ஒழுங்கு

தமிழ்ப் பாட நூல்களின் பயிற்சி மற்றும் பாட நூல் கல்வி குறித்து ஆராய்ந்த ஆய்வாளர்கள் ‘நா’வின் முக்கியத்துவம் குறித்துப் பேசியுள்ளனர்.42 பிரபலமான குறள் ஒன்று நாவின் முக்கியத்துவம் பற்றிப் பாடுகின்றது. பேச்சு, நல்ல பேச்சு என்று அறம் சார்ந்து நாவானது சொல்லப்படுகிறது.

நாநலம் என்னும் நலனுடைமை அந்நாளாம்

நானிலந்து உள்ளும் அன்று

பெரும்பாலான தமிழ்ப் பாடல்கள் மனதையும் நா மற்றும் வாய்ப் பயிற்சியையும் தொடர்புபடுத்திப் பாடியுள்ளன. அகத்தியர் சித்தர் மரபைச் சார்ந்த பிற்காலப் பாடல் ஒன்று மனம், வழிபாடு, உடற்பயிற்சி ஆகிய மூன்றையும் தொடர்புபடுத்திப் பாடுகின்றது. புலன்களை ஒழுங்குபடுத்தல், மனதை நெறிப்படுத்தல் என்பது திடீரென வருவதல்ல. புலவர்கள் இதனை ‘பழக்கம்’ என்பதோடு தொடர்புபடுத்துகின்றனர். இப்பயிற்சி மீண்டும் மீண்டும் செய்யப்படுவதன் மூலம் வரும் அகவயமான பழக்கமாகிறது. ஒளவையின் தனிப்பாடல் ஒன்று

சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும்

நாப்பழக்கம்

வைத்தவொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்

நடையும் நடைப்பழக்கம், நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்43.

என்கிறது.

பயிற்சி மூலமே நுட்பமான திறனைப் பெறமுடியும். பயிற்சிக்கும் திறனுக்குமான தொடர்பு என்பது மாற்றம் / மாறுதல்களோடு தொடர்புடையது. உதாரணமாக உடற்பயிற்சி என்பது மனதை நெறிப்படுத்த வல்ல மாறுதலைச் செய்யக்கூடியது. அறப்பாடல்களின் பயன் குறித்த முக்கியமான பார்வையை இங்கு நம்மால் பெற முடிகிறது. ஆத்திசூடி மற்றும் கொன்றைவேந்தன் ஆகிய இரண்டும் நடத்தை சார்ந்த பனுவல்கள். திண்ணைப் பள்ளிக் கல்வி உடல் ஒழுக்கம் சார்ந்ததாகவும் இருந்தது. நல்ல பழக்கங்களையும் அறம் சார்ந்த நடத்தைகளையும் சேர்த்து வலியுறுத்துவதன் மூலம் மனம் மற்றும் புலன்களுக்கிடையே உறவை ஏற்படுத்தினர். மனமானது செயல்படுவதாகவும் செயல்படுத்துவதாகவும் விளங்கியது. சரியாக மதிப்பீடு செய்வது, நல்லவற்றை எடுத்துக் கொள்வது, அறத்தை நிலைநாட்டுவது, மற்றவர்களின் நற்பண்புகளைப் பாராட்டுவது ஆகியவற்றைப் பண்பட்ட மனித மனத்தால் செய்ய முடியும்.

இப்பாடல் மானுட ஒழுக்கம் பற்றி மட்டுமன்றிப் பொருள்களின் பண்புகளையும் நுட்பமான உவமைகள் மூலம் விளக்குகின்றது.

நல்லார் ஒருவர்க்குச் செய்து உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே, -அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்

நீர்மேல் எழுத்துக்கு நேர்.

(மூதுரை : பாடல் ;2)

மேற்காணும் மூதுரைப் பாடல் பிறரிடம் நல்ல முறையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் நடத்தை மனித மனதைப் பண்படுத்தும் என்பதையும் விளக்குகிறது. பிறருக்கு நன்மை செய்வது என்பதைக் கல்வெட்டில் எழுதுவது அதாவது மற்றவர் மனதில் எழுதுவது பதியவைப்பது என்பதோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மூதுரையின் மற்றொரு பாடல் பிறருக்கு நன்மை செய்பவன் நேர்மையும் பொறுமையும் உடையவன், உழைப்பின் பலனைக் காலத்தில் உணர்ந்தவன், செல்வத்தோடு தொடர்புடையவன், பண்பட்ட பழக்கமுடையவன் என்று நல்லொழுக்கமுடைய மனிதனைப் பற்றிக் கூறுகின்றது. மேற்கூறப்பட்ட பாடலில் (பாடல் : 2) மனம் என்பது நெஞ்சு என்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட மனம் என்பது நிலத்தின் தன்மை கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

‘நெகிழ்வுத்தன்மை கொண்ட மனம்’ என்னும் கருத்து பாடங்களை மனதில் கொள்ளுதல் அல்லது மனப்பாடம் செய்தல் என்னும் தன்மைக்கான ஒன்றாக உள்ளது. ஆனால், மனப்பாடம் செய்தல் என்பது வெறுமனே மனதில் தேக்கிவைத்தல் என்று பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. திண்ணைக்கல்வியில் வாய்ப்பாடம் மற்றும் மீண்டும் மீண்டும் சொல்லுதல் ஆகியவற்றின் மூலம் வாய்க்கான ஒழுங்கு கற்பிக்கப் பட்டுள்ளது. அதுவே மனப்பாடமாகிறது. மீண்டும் மீண்டும் சொல்லுதல் என்பது மனதை ஒழுங்குபடுத்துவதோடு மனதிற்குள் அறத்தையும் நிலைநாட்டுகிறது. பாடல்களை மனதில் உள்வாங்கிக் கொண்டு அவற்றை ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப மீள நினைக்கும் போது ஆழமான அர்த்தத்தையும் புதிய புதிய விளக்கங்களையும் வெளிக்கொணர்கிறது.

இறுதியாக,

அடக்கம் உடையார் அறிவிலார் என்றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தளவில்

ஓடுமின் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு (மூதுரை, பாடல் :16)

உடல் ஒழுக்கம் என்பது மனதைப் பண்படுத்து கின்றது. அதுவே, அறிவுக் கூர்மைக்கு வழிவகுக்கின்றது. சுயஒழுக்கத்தை அறிவோடு தொடர்புபடுத்தும் ஒளவையின் பாடல்கள் இதனை நன்கு விளக்குகின்றன. அறம் கற்பித்தல் என்பது உடல் மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் மூலம் பயிற்றுவிக்கப்பட்டது என்பதை இக்கட்டுரை விளக்கமுற்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியை முறையாகப் பெற்ற திண்ணைப் பள்ளி மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பெற முடியாதவர்களிடமிருந்து தனித்து அடையாளம் காணப்பட்டனர். திண்ணைக் கல்வியில் இடம்பெற்ற அறப்பாடல்கள் புதிய விளக்கங்களைப் பெற்றன. திண்ணைக் கல்வியில் எழுத்தாக்கம் அல்லது அச்சாக்கம் குறித்த கருத்துக்களைவிட அறப்பாடல்களின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளே கற்பிக்கப்பட்டது. வளர்ந்து வந்த பல்பிரிவு (சாதி, சமயம் சார்ந்த) சூழலில் அறம் சார்ந்த பாடல்கள் வடிவம் மற்றும் பொருண்மை சார்ந்து விளக்கப்பட்டது. காலனிய மற்றும் மிஷனரி பள்ளிகளின் வருகைக்கு முன்பு இத்தகைய திண்ணைப்பள்ளிகள் பரவலாகக் காணப்பட்டன.

பவானி ராமன்

மொழியாக்கம்: மு.நஜ்மா

நன்றி - கீற்று 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்