/* up Facebook

Sep 5, 2011

பெண்களின் சொத்துரிமை சுதந்திரமானதுதானா? - வெண்மணி அரிநரன்


நகர்ப்புறம், கிராமப்புறம் ஆகிய இரண்டு பகுதிகளிலுமே ஆண்களை விட பெண்களுக்கு சொத்து என்று பெரும்பாலும் எதுவும் இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் அது குறித்து முடிவெடுப்பதில் அவர்களது கருத்து கேட்கப்படுவதில்லை.

இந்தியப் பெண்கள் எந்த அளவுக்கு சுதந்திரமானவர்கள்? அவர்கள் எதை எதைச் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க முடியும்? அவர்களுக்கென்று உண்மையில் சொந்தமாக இருப்பதென்ன? சொத்தாகத் தாங்கள் எதை வாங்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறதா? அப்படி அவர்கள் எதையாவது அடைந்தார்களானால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று முடிவெடுக்க அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறதா?

ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களுக்காக இக்கேள்விகள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாகும். பலமுறை பேசப்பட்டுள்ள, ஒருதலைப்பட்சமான பாலியல் விகிதம் குறித்த முடிவுறாத விவாதம், எப்போதும் பெண்கள் எவ்விதம் மதிப்பிடப்படுகிறார்கள் என்பதில் அல்லது பெண்குழந்தை பிறந்து விடக் கூடாது என்று மக்கள் நினைக்குமளவுக்கு ஏன் அவர்கள் இந்த நாட்டில் அற்பமாக மதிப்பிடப்படுகிறார்கள் என்பதில் வந்து மையம் கொள்கிறது. ஏற்றுக்கொள்ளப்பட முடியாத இந்த நிலைமைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு பல ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் பெண்கள் தங்களுக்கென்று நிதிச் சொத்துக்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அடங்கும். இது அவர்களது குடும்பத்திலும் சமுதாயத்திலும் அவர்களது தகுதியை அதிகரிக்கும். ஆனால் பெண்கள் சொத்துக்களை அடைவதற்கும் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் சுதந்திரம் பெறுவதற்கு உதவும் வகையில் சட்டங்களை இயற்றுவது மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்துமா?

ஆர்வத்தைத் தூணடும் ஆய்வு

பெங்களூரு இந்திய மேலாண்மைக் கல்விக்கழகத்தைச் சார்ந்த ஹேமா சுவாமிநாதன், ஜெ.ஒய்.சுசித்ரா ஆகியோர் செய்து முடித்திருந்த புதுமையான ஆய்வுகளில் கண்டுபிடித்த சிலவற்றை முன்வைத்தபோது இக்கேள்விகள் அடிநாதமாக இருந்தன. கர்நாடகா குடும்பச் சொத்து மதிப்பு ஆய்வு (KHAS) 201-2011 அந்த மாநிலத்தின் விவசாயச் சூழல் நிலவும் அனைத்து நான்கு மண்டலங்களிலும் உள்ள எட்டு மாவட்டங்களிலும் 4110 வீடுகளில் ஆய்வு நடத்தியது. இது பாலின சொத்து இடைவெளியை அளவிட மேற்கொள்ளப்பட்ட மூன்று நாடுகள் ஆய்வின் பகுதியாகும்.

முதன்மையாக இது பிற ஆய்வுகளிலிருந்து மாறுபட்டதாகும், ஏனெனில் அது பாலின சொத்து இடைவெளியை அளவிடுவதற்கு அல்லது பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடமைகளில் உள்ள வேறுபாட்டை அளவிடுவதற்கு ஒரு வழியைக் கண்டறிந்திருந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே நபருடன் மட்டும் பேசுவது, குறிப்பாகக் குடும்பத்தின் தலைவராகக் கருதப்பட்ட ஒருவரிடம் மட்டும் பேசுவது என்ற நிலையான அணுகுமுறையிலிருந்து விலகிச் சென்று ஆய்வு செய்யப்பட்டது.

அதற்குப் பதிலாக ஆய்வாளர்கள் ஒரு புதுமையான அணுகுமுறையைப் பயன்படுத்தினார்கள். சொத்து உரிமை குறித்து சிறப்பான தகவல் தெரிந்தவர் யார் என்பதை அந்தக் குடும்பத்தினரிடம் விசாரித்து அறிந்து அந்த நபரை அடையாளம் கண்டு அவரிடம் முதன்மையாக விசாரித்துள்ளனர். மேலும் கூடுதலாக, அவர்கள் துணைவரை அல்லது வேறு ஒருவரை இரண்டாவதாக விசாரித்துள்ளனர். இந்த வழியில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோரின் கருத்தைப் பெற முடிந்துள்ளது.

ஆய்வை மேற்கொண்டவர்கள் ஒரு குடும்பத்தின் சொத்துக்களை அளவிடும் ஆய்வுகள் பாலின ஏற்றத்தாழ்வுகளை மூடிமறைக்கின்றன என்று வாதிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, செல்வந்தக் குடும்பங்களில் பெண்களும் சிறப்பாக இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் அப்படி இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை, அவர்களுக்கு ஓரளவு முடிவு எடுக்கும் உரிமைகள் இருக்கலாம், ஆனால் அது மிகவும் சொற்பமே. கிராமப்புறக் குடும்பங்களில் மிகுந்த சொத்து படைத்தவற்றில் பெண்கள் 16லிருந்து 20 விழுக்காடு வரை மட்டுமே உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள் என்று அந்த ஆய்வு கண்டறிந்தது. திருமணமுறிவுகள் நடந்தால், இந்தப் பெண்கள் பெரும்பாலும் சொத்து ஏதுமின்றி விடப்படுகிறார்கள்.

இன்னொருபுறம், கிராமப்புறங்களில் மிகுந்த ஏழைக்குடும்பங்களில் 20 விழுக்காட்டில் 51 விழுக்காடு சொத்து பெண்களுக்கு உரிமையாக இருந்தது. ஆனால் பணக்காரக் குடும்பங்களுடன் ஒப்பிடும்போது ஏழைக் குடும்பங்களில் பாலின சமத்துவம் மிகுதியாக இருந்தது என்று இதற்குப் பொருளல்ல. இது ஏன் நிகழ்கிறது என்றால் ஏறத்தாழ சொத்து அற்ற குடும்பங்களில் பெரும்பாலும் பெண்கள் தனியாகவோ அல்லது விதவைகளாகவோ இருந்தனர்.அவர்களுடைய இதர சொத்துக்களுடன் ஒப்பிடும்போது அவைகளுடைய சொந்த நகைகளே மிகவும் மதிப்புடையவையாக இருந்தன.

நில உரிமையிலும் வீட்டுமனை இடங்களின் உரிமையிலும் தான் உண்மையான பெரும் வேறுபாடு நிலவுகிறது. கிராமப்புறங்களில் 71 விழுக்காடு வீட்டு மனைகள் ஆண்களின் உரிமையாக இருந்தன. 14 விழுக்காடு மட்டுமே பெண்களின் உரிமையாக இருந்தன. மேலும் பெண்களின் உரிமையாக இருந்தவை மிகவும் குறைந்த மதிப்பு கொண்டவையே. பெரும்பாலும் விளிம்பு நிலையில் தான் இருந்தன. நகர்ப்புறங்களில் இந்த வேறுபாடு விளிம்புநிலையளவுக்கே குறைவாக இருந்தது.

ஒரு விதிவிலக்கு

பெண்கள் விஞ்சியிருந்த ஒரே சொத்துரிமை நகைகளில் தான். கிராமம் அல்லது நகரம் எதிலாக இருந்தாலும் பெண்களுக்கு இதுவே முதன்மையான சொத்தாக இருந்தது. இவ்விதமாக பொதுவாக ஆண்கள் நிலத்தை, வீடுகளை, வீட்டுமனைகளை உடமையாகக் கொண்டிருந்தபோது, பெண்கள் நகைகளை உடமைகளாகக் கொண்டிருந்தார்கள். நிலமோ, வீடுகளோ பெண்களுக்கு உரிமையாக இருந்தால், அவை வழக்கமாக தங்கள் துணைவர்களின் இறப்பு காரணமாக வாரிசுரிமையாக வந்தவையாக இருந்தன.

ஒரு பெண் தனது வீட்டிலிருந்து புகுந்தவீட்டுக்குக் கொண்டுவந்தவையாக இருந்ததால், அல்லது திருமணத்தின் போக்கில் பரிசாக வந்ததவையாக இருந்ததால் மட்டுமே நகைகளைத் தனது தனிப்பட்ட உரிமையாக கூறிக்கொள்ள முடிந்தது. ஆனால் ஒரு அவசர நிதித் தேவைக்காக அவற்றை விற்க அந்தக் குடும்பம் விரும்பினால் அந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே கருத்துக் கூறும் உரிமை இருந்ததா? அத்தகைய முடிவுகளை எடுப்பதில் பெண்களுக்கு இருந்த உரிமை, எண்ணிக்கை அடிப்படையில் கூறப்படுவது கடினம். ஆனால் ஆய்வின் ஒரு பகுதியாக அமைந்த பண்பு அடிப்படையிலான ஆய்வில் ஒரு குடும்பத்திற்குள் பெண்களுக்குள்ள முடிவு எடுக்கும் உரிமை பற்றிய உண்மை நிலையைக் கோடிட்டுக் கட்டுகிறது.

சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், ஒரு குழு விவாதத்தில், எடுத்துக்காட்டாக, “தனது கணவர் சொத்தை விற்பதற்கு மனைவி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும்?” என்று அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கேட்டார். அதற்கு ஒரு பெண் அளித்த பதில், “அவர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை, அவர்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள்”. பெல்லாரி மாவட்டத்தில் இன்னொரு கலந்துரையாடலில், வீட்டுக்காக எதையாவது வாங்குவது பற்றி யார் முடிவு எடுக்கிறார்கள் என்று பெண்களிடம் கேட்கப்பட்டது. கணவர், மனைவி இருவருமே என்று ஒரு பங்கேற்பாளர் பதிலளித்தார். இன்னொருவர் ஆண்கள் தாம் என்றார். பெண்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால்? “பெண்கள் சொல்வதை ஆண்கள் காதில் போட்டுக் கொள்வதில்லை, அவர்கள் எப்படியும் செய்துவிடுகிறார்கள்.” என்றார் ஒருவர். அப்படியானால் யாருடைய முடிவு இறுதியானது? “ஆண்களின் முடிவு தான் இறுதியானது?”.

பண்பு ரீதியான ஆய்வின் இந்தச் சிறிய விவரிப்பிலிருந்து உண்மைநிலைமையின் சித்திரத்தைக் காணமுடிகிறது. பெண்களுக்கு உடைமையாக இருப்பது என்னவானாலும் அல்லது எவ்வளவு இருந்தாலும் அந்த சொத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் அல்லது அதிகாரம் பெரும்பாலான நேர்வுகளில் இல்லை. திருமணமான பெண்கள் சொத்து கணவருக்கு உரிமையாக இருந்தாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்; ஆனால் நெருக்கடியான நேரம் வரும்போது அவர்கள் சொல்வது கேட்டுக்கொள்ளப்படுவதில்லை.

அந்த ஆய்வு பல அம்சங்களில் செறிவான தரவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இவை மேலும் ஆய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்ப்படும் போது அவை இந்தப் பிரச்சனையில் பல ஆர்வமூட்டும் அம்சங்களை வெளிப்படுத்தும். இவற்றில் ஒரு புள்ளி விவரம் சிறப்பாக எடுத்துக்காட்டப்படுகிறது. அதாவது, அது ஆய்வின் முதன்மையான கவனத்துக்குரியதாக இல்லாவிட்டாலும் கூட, கிராமப்புற குடும்பங்களில் தங்கள் முக்கிய சமையல் எரிபொருளுக்காக விறகைச் சார்ந்திருப்பது வியப்புக்குரிய அளவில் இருக்கிறது, அதாவது 93 விழுக்காடு ஆக இருக்கிறது. தனது ஆற்றல் தேவைகளுக்காக எந்த வகை ஒப்பந்தத்தையும் செய்துகொள்ள விரும்பும் ஒருநாட்டில், இந்த மிகவும் அடிப்படையான ஆற்றல் தேவைகளுக்கு, அதாவது சமையல் எரிபொருள் தேவைகளுக்கு, முதனமையாகப் பெண்கள் தாங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெரும் துன்பத்தைக குறைப்பதற்கு எதுவும் செய்யவில்லை. இந்தச் சுமைக்குக் கூடுதலான வகையில், துப்புரவு வசதி கிராமப்புறங்களில் 23 விழுக்காடு குடும்பகளுக்கு மட்டுமே இருக்கிறது. குடிநீரோ 17 விழுக்காடு குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. தூய்மையான சமையல் எரிபொருள், துப்புரவு வசதி, குடிநீர் ஆகியவை மறுக்கப்பட்டிருக்கும் போது, பல லட்சக்ணக்கான பெண்களுக்கு சொத்துரிமை என்பதைப் பொருத்தவரை எந்தப்பொருளும் இல்லை.

சட்டங்கள் குறித்த அறியாமை

கர்நாடகா போன்ற ஒரு மாநிலத்தில், குடும்பச் சொத்தை விற்பதில் பெண்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் உரிமையை வழங்கும் சட்டம் இருக்கிறது என்பது பற்றி பெரும்பாலான பெண்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பது அந்த ஆய்வின் இன்னொரு ஆர்வத்துக்குரிய துணை முடிவாகும். சட்டப்பூர்வ அறிவைத் தராமல் வெறுமனே சட்டங்களை மட்டுமே இயற்றுவதில் எந்தப் பயனுமில்லை. பெண்களை மையமாகக் கொண்ட அனைத்துச் சட்டங்களிலும் குறிப்பாக இந்தச் சட்ட அறிவு தரப்படாமலேயே இருந்து வருகிறது.

அப்படியானால் இந்த அமைப்பு போன்றவை தரும் தரவுகள் எவ்விதம் உதவுகின்றன? ஆண்களை விட பெண்களுக்கு உடமைகள் குறைவு தான் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். பொதுவாகவே முடிவுகள் எடுப்பதில் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். இருப்பினும், இது எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. இன்னும் பல்வேறு மாநிலங்களில் இது போன்று செய்யப்படும் ஆய்வுகள் இந்திய அளவிலான சித்திரத்தை உருவாக்கும். நீண்ட காலப்போக்கில், இந்த ஏற்றத்தாழ்வான நிலையைச் சரிசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்த கொள்கை அல்லது சட்டமும் பாலின் சொத்துரிமை இடைவெளி போன்ற பிரச்சனைகளின் தனித்துவமான இயல்பைப் புரிந்து கொள்கிறபோது மட்டுமே நடைமுறைக்கு வரமுடியும்.

கல்பனா சர்மா (தி இந்து 07.08.2011)

தமிழில்: வெண்மணி அரிநரன்

நன்றி - கீற்று 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்