/* up Facebook

Sep 11, 2011

அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை

இரோம் ஷர்மிளா
அன்னாவின் உண்ணாவிரதம் குறுகிய காலத்தில் முடிந்து போனது. ஆனால் நான் ராணுவத்தின் கொடுமைகளை எதிர்த்து கடந்த 11 வருடமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். எனவே என்னையும் மதித்து எனது கோரிக்கைகளையும் பிரதமரும், மத்திய அரசும் கேட்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் மணிப்பூரைச் சேர்ந்த வீரப் பெண்மணி இரோம் ஷர்மிளா.
சிலரது போராட்டங்கள் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுடன் பெரிதாக பேசப்படும். ஆனால் சிலருடைய வீரமான போராட்டங்கள் சத்தமே இல்லாமல் மங்கிப் போய் மறைந்தும் போய்விடும். இதில் 2வது வகையைச் சேர்ந்தவர் ஷர்மிளா.

மணிப்பூரைச் சேர்ந்த இந்த வீரப் பெண்ணின் போராட்டம், அவரது மன உறுதி யாரையும் வியப்படைய வைக்கும். கடந்த 11 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஷர்மிளா.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் சிறப்பு ராணுவச் சட்டத்தை நீக்கக் கோரித்தான் இந்த உயிர்ப் போராட்டம். இந்த சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ராணுவம் நிகழ்த்தி வரும் கொடுமைகள், கற்பழிப்புகள், காரணமே இல்லாத கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகளை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.

இரோம் ஷர்மிளாவுக்காக

11 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதையடுத்து அவரை கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்தனர்.அங்கும் அவர் சாப்பிடவில்லை. இதையடுத்து வலுக் கட்டாயமாக திரவ உணவுகளை டியூப் மூலம் ஏற்றினார்கள். அப்படியும் போராட்டத்தை விடவில்லை ஷர்மிளா. அவரை விடுதலை செய்த பிறகும் கூட உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அவரை இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு அறையில் சேர்த்து அங்கு டியூப் மூலமாக திரவ உணவுகளை கொடுத்து வருகிறார்கள்.

இவரது இந்த வீரப் போராட்டத்திற்கு மீடியாக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி யாருமே சரியான வெளிச்சத்தைக் காட்டவில்லை. அன்னாவுக்குக் கிடைத்த அபரிமிதமான விளம்பரம் இந்த துரதிர்ஷ்ட பெண்மணிக்குக் கிடைக்காமல் போய் விட்டது.

தனது மாநில பெண்களின் நலனுக்காகவும், ராணுவக் கொடுமைகளுக்கு எதிராகவும் அன்னா போராட வர வேண்டும் என்று ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அன்னாவிடமிருந்தோ அவரது குழுவினரிடமிருந்தோ இதுவரை பதில் ஏதும் இல்லை.

இந்த நிலையில் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஷர்மிளா கூறியுள்ளதாவது...

என்னை தயவு செய்து அன்னாவைப் போல பாருங்கள் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். தனது மனோபாவத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் அன்னாவின் போராட்டத்தை மதிக்கிறேன். ஆனால் அதை நான் குறைத்து மதிப்பிட்டுக் கூறியதைப் போல சிலர் கருத்து பரப்பி வருகின்றனர்.

அவரது போராட்டம் செயற்கையானது என்று நான் கூறியதற்கு அர்த்தம் வேறு. என்னையும், அவரையும் ஒப்பிட்டுச் சொல்வதற்காக நான் பயன்படுத்திய வார்த்தை அது. அவருடைய போராட்டம் மிக மிக குறுகிய காலத்தையுடையது. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் எனது போராட்டம் எப்போது தொடங்கியது, ஏன் தொடங்கியது, ஏன் நான் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இரோம் ஷர்மிளா
எல்லோரையும் போலவே நானும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவே நினைக்கிறேன். ஆனால் எனது லட்சியங்கள், எனது போராட்டம் முடிந்தால்தான் அது சாத்தியமாகும். அதுவரை அதை நான் நினைத்துக் கூட பார்க்கப் போவதில்லை.

மத்திய அரசுதான் எனது போராட்டம் இத்தனை காலத்திற்கு நீடிக்க காரணம். மக்கள் இல்லை. இந்த அரசு என்னையும், எனது போராட்டத்தையும் அன்னாவுக்குக் கொடுத்தது போல மதிக்கத் தவறி விட்டது.

என்னால் அன்னாவைப் போல வெளியில் போய் போராட முடியாது. டெல்லி சென்று போராட முடியாது. காரணம், நான் சிறையில் அடைபட்டுள்ளேன். எனக்குச் சுதந்திரம் கிடையாது.

என்னால் எம்.பிக்களை நம்ப முடியாது. உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் வெறும் வார்த்தையி்ல சொன்னால் என்னால் அதைக் கேட்க முடியாது. செயலில் காட்ட அவர்கள் உறுதி தந்தால் மட்டுமே என்னால் எனது போராட்டத்தை நிறுத்த முடியும் என்றார் ஷர்மிளா.

ஷர்மிளாவின் இந்தப் போராட்டம் இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப் போகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த அரசு பாராமுகமாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்