/* up Facebook

Sep 30, 2011

"Le Havre" - ஒன்றுபட்டால் வெல்லமுடியும்! - தேவா (ஜேர்மன்)


தற்போது ஜெர்மன் சினிமாத்திரைகளில், Le Havre (துறைமுகம); படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பின்லாந்து, பிரான்ச்,ஜெர்மன் நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு இது. இச்சினிமாப்படம் ஒரு சிறந்த- சினிமாக் கலைஞரும் பின்லாந்துக்காரருமான Aki Kaurismäki யின் இயக்கத்தில் உருவாயிருக்கிறது. 1990இருந்தே இவரின் பல குறும்படங்களும், பெரும் திரைப்படங்களும் சர்வதேசதிசைப்பட விழாக்களில் பரிசுபெற்றிருக்கின்றன. பரிசுக்கு தேர்வானவையும்கூட. Cannes ல் நடைபெற்ற 64வது சர்வதேசவ திரைப்படவிழாவிலே இப்படத்துக்கு FIBPRESCI பரிசு கிடைத்தது. மேலும் இவரது மற்றொரு திரைப்படமான The man without a past, ஐரோப்பாவிலும், ஆர்ஐன்டீனாவிலும் நடைபெற்ற திரைப்படவிழாக்களிலே சிறந்த இயக்குனர், கதை, சிறந்த கமராவுக்காக 2002ல் பல பரிசுகள் பெற்றது. சில படைப்புக்கள் Oscar க்கும் தெரிவானவைகள்.

பொதுவாகவே இவரின் படைப்புக்களிலே கலைத்தன்மையோடு மனிதநேயம், நேர்மை, சோகங்கள் கலந்திருக்கும். பாத்திரங்கள் போராட்ட குணமுடையவர்களாய்; இருப்பார்கள். அவர்களது வெளிப்பாடு திரையில் கவித்துவமாய் வெளிப்பட்டிருக்கும். இதயத்தை நெருடிச்செல்லும் தன்மை கொண்டவை.மென்மையான மாந்தர்கள் அங்கு படைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கொள்கைபிடிப்பில் தீவிரமாய் இருப்பார்கள். அகி கருசிமாகி படம் பார்ப்போரை மிகவும் நெருங்கிவிடுவார்.

இந்தக் கலைஞனின் கைவண்ணத்தில் உருவான ,, துறைமுகம்,, கதை1950லே பிரான்சின் துறைமுககிராமம்; ஒன்றில்(Calais க்குஅண்மியது) நிகழ்கிறது. சமுககட்டுபாட்டை- அரசுஅதிகாரத்தை மீறுகிற ஒரு எழுத்தாளன்-மார்சல் (நடிகர்:Andre Wilms) வறுமையான இந்த துறைமுககிராமத்திலே குடியேறி சப்பாத்துதுடைக்கும் தொழிலாளியாக-இந்த வருமானத்தில் தன் மனைவியோடு வாழ்க்கை நடாத்துகின்றான். மனைவி (நடிகை:Kati Outinen )மிக சிறந்த இல்லாள் ஆகவும் நல்லவளாயும், தன் கடுமையான நோயை கணவனுக்கு காட்டிக்கொள்ளாமலும், அவனுக்கு சமைத்து, பணம் சேமித்து,அவனை; ஒரு குழந்தையாக நேசித்து ( இந்த பாத்திரம் தமிழ்பண்பாடு கோசம் போடுவோருக்கு ரொம்ப பிடிக்குமே!) வாழ்பவள். நோய் முற்றி இவள் வைத்தியசாலைக்கு கொண்டுபோகப்படுகின்றாள். இதேசமயம் இட்ரிசா எனப்படும் ஆபிரிக்க அகதிச்சிறுவன், மார்சலிடம் தஞ்சம் பெறுகின்றான். இவன் தாய் இங்கிலாந்தில் அகதியாய் வாழ்கிறாள். தாயிடம் போய்ச்சேரவேண்டி முயற்சித்த இவனின் கப்பல்-கொண்டெயினர் பயணம் (பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கு கடல்வழியாய் போவது) பிரான்சின் எல்லைத்துறைமுகத்தில் உடைகிறது. பிரான்சின் எல்லைகாவலரிடமிருந்து தப்பிவருபவனுக்கு மார்சல் உணவு தந்து, தன்வீட்டில் மறைத்துவைக்கின்றான். அகதிச்சிறுவனை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒரு உயர்அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. மார்சலின் வறுமையை தெரிந்த அவனின் எல்லா நண்பர்களுமே அவனுக்கு, அகதிச்சிறுவன் விடயத்திலே எல்லாவிதமான உதவிகளையும் செய்கின்றனர். இட்ரிசாவை இங்கிலாந்திலே வாழும் அவன் தாயிடம் சட்டரீதியற்ற முறையில் அனுப்புவதற்கு பணம் தேவைப்படுகிறது. இசைக்கச்சேரிமூலம் நிதிதிரட்ட மார்சலின் அனைத்து நட்புகளும் கைகொடுக்கின்றன. ஒருதடவை பணம் சேகரித்தபின்னரும், மார்சலின் வீட்டில் உயர்அதிகாரியின்(நடிகர்:Jean-Pierre Darroussin) சோதனை நடைபெறுகின்றது. அந்த உயர் அதிகாரிக்கு வீட்டில் சிறுவன் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை தெரிந்தும் தெரியாதமாதிரி நடந்துகொள்கின்றான். இறுதியிலே, மார்சலினதும், நண்பர்களினதும் பெரும் முயற்சியால் இட்ரிசா ஒரு மீன்பிடிபடகில் இரகசியமாக இங்கிலாந்துக்கு அனுப்பபடுகின்றான். இந்தசமயத்திலும் சிறுவன் காவல்அதிகாரிகளிடம் பிடிபடக்கூடிய சாத்தியநிலைமைகள் இருந்தும், அவன் உயர்அதிகாரியின் கருணையால் பிடிபடாமல்தப்பி ( இப்படித்தான் படத்தின் இறுதிக்கட்டம் அமைந்திருக்கின்றது) இங்கிலாந்துக்கான பயணத்தோடு படம் முடிகின்றது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக இந்த அகதிக்கதையை இச்சினிமா கூறினாலும், இன்றும் அகதி சோகம் எவ்வளவு துயரங்களோடும்,மரணங்களோடும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதே உண்மை. மனிதர்கள் தம் நிலங்களில் வாழ்வதற்கான உரிமைகள் எல்லா புறங்களிலுமிருந்து மறுக்கப்படும்போது, அங்கிருந்து துரத்தப்படும்போது, உயிரையும் பணயம் வைத்து இடம்பெயர்கின்றனர் அல்ல. பெயர வைக்கப்படுகின்றனர். இங்கே சிறுவர்கள் என்ன.சிறுகுழந்தைகள் என்ன. அகதிகளாக்கப்படும்போது உயிர்கள் வெறுக்கப்படுகின்றன. நாடெல்லைகளில், அகதிகள் ஆக்கிரமிப்பாளர்களாய் அரசுகளால்; தீர்மானிக்கப்படுகின்றனர். கைது,சிறைவாசம் குற்றம் செய்தால்தான் அரசுநீதிமன்றங்களால் கொடுக்கப்படுமா என்ன.எல்லை கடந்தாலும்,சிறியவர்,பெரியவர் பேதமின்றி சிறைக்குள் அடைக்கப்படுவர்.அகதியாகப்பட்டவன் இன,மத,அரசியல்ரீதியான் குற்றங்களை தனக்குமேல் பலாத்காரமாய் சுமத்தப்படவைத்து, ஒரு ஆயுள்தண்டனை குற்றவாளியாய் ஆக்கப்படுகின்றான்.

Le Havre திரைப்படத்திலே சிறுவன் இட்ரிகாவின் அகதிக்கதை மையம்பெறுகிறது.அவனுக்காக- அவனை தப்பவைப்பதற்காக மார்சலின் அனைத்துநண்பர்களுமே, அரசு சட்டங்களை மீறி கைக்கொள்ளும் தந்திரம் ஒரு கூட்டுணர்வின் உன்னதவெளிப்பாடு. மனிதங்களின் வாய்மை. ஒரு மௌனபுரட்சியாக வெற்றியடைகிறது.

நகர்மனிதர்களின் காற்றுபடாத வெளி அந்த கிராமம். கிராமத்து மனிதர்களின் அன்னியோந்நியம். ஓரு சிறுபிள்ளைக்கு உதவுவதில் முனைந்து செயலாற்றுகின்றன.;அன்பான மனிதர்கள் திரைக்கதையில் நடமாடுகின்றனர். ஆயினும் இவர்கள் ஒரு அகதி சிறுவனின் நன்மை கருதி சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிகாரத்தை தூக்கியெறிந்து மனிதத்தை உறுதியாய் நம்புகிறார்கள். தங்களுக்கென்று ஒரு தர்மத்தை;  கடைப்பிடிக்கின்றனர்.

பசி என்று நம்மை யாராவது இரந்தால் ஒன்று காசை தந்துவிட்டு நகர்ந்துவிடுவோம் அல்லது உணவை கொடுத்து நம்மால் முடிந்தது இவ்வளவுதான் என்று திருப்திபட்டு:க்கொள்வோம். அத்தோடு தற்போதய பிரச்சினை இரு பக்கத்திலும் தற்போதைக்கான முடிவாக இருக்கும். பசி மறுபடியும் வரும். நாமில்லாவிட்டால... வேறு யாராவது தற்போதைக்கான பிரச்சினையை தீர்க்கலாம். அல்லது அது தீர்ககமுடியாத பிரச்சினையாகி; உயிர்கூட போகலாம். ஓருவருடைய வாழ்வாதார பிரச்சினைகளை இன்னொருவர்-கள்; முகம்கொடுத்து முடிந்தளவு கைகொடுக்கும்போது;(அது சிந்தனையோடு மட்டும் நில்லாது)மனிதங்கள் வாழும். வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை கூறுகிறது இச்சினிமா.

படத்தின் சில கட்டங்களிலே காட்சி மெதுவாய் நகர்கின்றது. இது விவரணப்படம் பார்க்கிறோமா என நினைக்கவைக்கிறது. கதை நடந்துகொண்டிருக்கும் காலத்தை அனுமானிக்கும்போது, நம் சிந்தனை வேகத்தை மட்டுப்படுத்திகொள்ளலாம்.

அகி கருசிமாகியின் இக்கதை ஒரு நயமான, நம்பமுடியாத,கற்பனைக்கதை எனவும் இத்திரைப்படம் பற்றி சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இந்த இயக்குனர் ஒரு நேர்த்தியான கதைசொல்லி. அதனாலேயே இவருடைய படைப்பு கனமானதொரு கருவை கொண்டு ஆழமான சிந்தனையை தூண்டிவிடுகின்றது. என்னதான் அரசஇயந்திரங்கள் தம் அதிகாரத்தை முடுக்கிவிட்டாலும், மக்கள் ஒன்றுபட்டால்-அது எந்தவழிமுறையாய் இருந்தாலும் வெல்லமுடியும் என்பதை இவரின் படைப்பு நம்முன்னே உறுதியாய் கூறுகிறது.
...மேலும்

எது வன்முறை? - குட்டி ரேவதிஎது வன்முறை?


அல்லது

நாங்கள் ஜான் பாண்டியனை ஆதரிக்கிறோம். தமிழக அரசின் நிலைப்பாட்டினை எதிர்க்கிறோம்!


அல்லது

மீண்டும் ஒரு தாமிரபரணிச் சம்பவம்!

அல்லது

எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே எப்போதும் துப்பாக்கிச் சூடு!

அல்லது

இது ஓர் இனக்கலவரம்! - அரசு அதிகாரத்தின் அரசபயங்காரவாத இனமும் x தாழ்த்தப்பட்ட இனமும்!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனைக்காகப் போராடுதல், கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்துப் போராடுதல் இவை இரண்டையும் விட இக்காலக்கட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, பரமக்குடி கலவரத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்பதும், இக்கலவரத்தில் கொல்லப்பட்ட உயிர்களுக்காக நாம் என்னவிதமான நிலைப்பாட்டினை எடுக்கிறோம், நாம் யாருக்காக நிற்கிறோம், குரல் கொடுக்கிறோம் என்பதும்!

தமிழக அரசியலில் ஊழல் புரிந்தவர்கள் ரவுடித்தனம் செய்பவர்கள், ஆதிக்கச்சாதி வன்முறையைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள் ஆகியோர் அனைவரையும் நம்முடைய மனசாட்சியால் எந்த வித வேறுபாடுமின்றி, ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் தலைவராக வரும்போது, அவர் அமைதியானவராகவும், வன்முறை செய்யாதவராகவும் தன்னுடைய சாதியைக் காட்டிக்கொள்ளாதவராகவும், எல்லோருக்கும் அடங்கிப்போகக் கூடியவராகவும் இருக்க விரும்புகிறோம்.

தோழர் ஜான்பாண்டியன், எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவே இருந்து வந்திருக்கிறார். ஆனால், சமூகம் அவரை, ஒரு தலைவராக ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அமைச்சர்களும், முதல் அமைச்சர்களும், செய்யாத காரியத்தை ஒன்றும் இவர் செய்யவில்லை. ஆனாலும், இவர் மட்டுமே தொடர்ந்து வன்முறையாளராக சித்திரிக்கப்படுகிறார். தமிழக அரசியல் வரலாற்றில், ஆதிக்கச் சாதியை எதிர்த்து நேரடியாகக் குரல்கொடுக்கும் தலைவர்களில் முக்கியமானவர், இவர்!. சமூகநீதியையும், சம உரிமையையும் யாருக்கும் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதை அவருடைய மொழியிலேயே அவர் விளக்கும்போது, அவர் வன்முறையாளராகச் சித்திரிக்கப்படுகிறார்.

1980 – களில், போடிக்கலவரத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திலும், அவர் பேசியதால் கலவரம் உண்டாயிற்று என்று அரசும் பொது மக்களும் உலகுக்கு தங்கள் வாதங்களை முன்வைத்தனர். ஆனால், ஜான் பாண்டியன் இரு சாதி சமூகங்களுக்கு இடையில் திருமண ஒப்பந்தங்களும், கொடுக்கலும் வாங்கலும் இருக்கவேண்டும் என்பதை தன்னுடைய மொழியில் கூறினார். ஆனால், இதை சமூகத்தின் எந்த ஒரு பகுதியினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பெருங்கலவரங்களுக்குக் காரணம், தோழர் ஜான் பாண்டியனே என்று கோஷமிட்டனர். இந்தப் பின்னணியிலேயே, செப்டம்பர் 11,2011, பரமக்குடியில் நிகழ்ந்த கலவரத்தையும் பார்க்கவேண்டும்.

1. பசும்பொன் கிராமத்தில் அரசு அதிகாரத்தின் ஆதரவுடன் தேவர் ஜெயந்தி நடைபெறும் போது, மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எண்ணற்ற வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன. அன்றைய நாள் முழுதுமே, பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழமுடியாதத் தன்மை ஏற்படுகிறது. நாம், ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றும். கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். பாதசாரிகள், மரண பீதியில் வலம் வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு வருடமும் இப்படி நடைபெறும் வன்முறைச் செயல்களுக்கு எந்த அரசும் பொறுப்பேற்பதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் எதுவும் பேசுவதில்லை. காவல் துறையினர் எல்லா வெறிச் செயல்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் எந்த ஒரு தலைவரும் வழிமறிக்கப்படுவதில்லை., கைது செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் வன்முறைகள் நிறைந்திருக்கவே அந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதையெல்லாம் நாம் புரிந்து, உணர்ந்து கொண்டால் தான் பரமக்குடிக் கலவரத்திலும் நம்முடைய நிலைப்பாட்டினை எடுக்கமுடியும்!

2. 50 – களில், நடந்த முதுகுளத்தூர் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கம், தன்னிலும் மிக வயது குறைந்த இம்மானுவேல் சேகரனைத் தனக்குச் சமமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவரான பேரையூர் பெருமாள் பீட்டர், தன்னை விட வயதில் மிகக் குறைந்த இம்மானுவேல் சேகரனை, தன்னுடைய தலைவன் என்று அறிவித்தார். இதிலிருந்து அறுபது வருடமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன இனக்கலவரங்கள். பின்பு, சமூக நீதி பற்றியும், சம உரிமை பற்றியும், தீண்டாமைக் கொடுமைகள் பற்றியும் மாபெரும் அரசியல் போராட்டங்களை முன் எடுத்த இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். அன்றிலிருந்து ஆதிக்க சாதித் தலைவரை நேரடியாக எதிர்த்தவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. எனவே, நீண்ட காலமாக, அ.தி.மு.க.வின் பின்னணியில் இருக்கும், ஆதிக்க சாதி அணிவகுப்புகள், இம்மானுவேல் சேகரன் விழாவைக் கொண்டாடுவதை எப்போதுமே விரும்பியதில்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளவர்கள், இம்மானுவேல் சேகரனுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதுமே எடுத்திருக்கிறார்கள்!

3. தற்பொழுது பரமக்குடியில் நடைபெற்ற கலவரங்களுமே, இதன் தொடர்ச்சி தாம்! எந்த வித வன்முறையும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்திருக்கவேண்டிய, இம்மானுவேல் சேகரன் விழாவை அரசே வன்முறையாக மாற்றிவிட்டது. தோழர் ஜான் பாண்டியனைக் கைது செய்யவேண்டிய அவசியமே இல்லை. அவர் பாட்டுக்கு வந்து அவர் பாட்டுக்கு மரியாதை செய்து திரும்பியிருப்பார். அவர் வந்தால் கலவரம் ஏற்படும் என்றால் அந்தக் கலவரத்தைச் செய்பவர்கள் யார்? நிச்சயமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை.

ஆதிக்கச் சாதியினரே கலவரத்தை உண்டுபண்ணுவார்கள் என்று அரசு நினைக்கிறது. அதனால் தான் ஜான் பாண்டியனைக் கைது செய்கிறார்கள். ஆனால், கலவரத்தை உண்டுபண்ணக்கூடிய ஆதிக்கச் சாதியினரைத்தானே கைது செய்யவேண்டும்!

தேவையற்ற கைதினாலேயே, கலவரம் மூண்டது! அதற்கு, இரண்டாயிரம் வருடங்கள் பின்னணி உள்ளது. எந்த நியாயமும் இன்றி, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதற்கும் இரண்டாயிரம் வருடம் பின்னணி உள்ளது!

இன்று, அதிகாரப்பூர்வமாக ஆறு பேர் கொல்லப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஏழாகியுள்ளது. அரசு காட்டும், உயிரிழந்தோர் எண்ணிக்கை நிச்சயம் உண்மையில்லை. நமக்குத் தெரியவேண்டியவை, இந்தக் கலவரத்துக்குப் பின்னால் உள்ள காவல் துறை அதிகாரிகளின் சாதி குறித்த விவரங்களும், உண்மையான நீதியுமே! ஓய்வு பெற்ற நீதிபதிகளின் விசாரணைக் கமிஷன்கள் மூலம் நமக்கு, ஓய்வு பெற்ற நீதியே கிடைக்கும்!

...மேலும்

Sep 29, 2011

’’அந்த நாள் ஞாபகம் வந்ததே...’’ - எம்.ஏ.சுசீலா


கள்ளமற்ற இளமையையும்,கழிவிரங்கும் முதுமையும் எதிரெதிர் இருமைகளாக முன் வைத்துத் தீட்டியிருக்கும் இப் புறப் பாடல்
தன்னுள் பொதிந்து கிடக்கும் மகத்தான வாழ்வியல் சாரத்தால் காலம் கடந்தும் நம் உள்ளங்களில் கல்வெட்டாய்ப் பதிகிறது.

முதுமையின் ஒரு சுகம்......கழிந்து போன பழைய நாட்களை...,தனது இளமைக் கால அனுபவங்களை எண்ணி எண்ணி இளைப்பாறுதல் கொள்வது...
தனது அந்தக் கால நினைவுகளை அசை போட்டுக் களிப்பது.
அதில் ஆற்றாமையும் ஏக்கமும் கலக்காத வரையில் அதுவும் ஒரு இனிமையான அனுபவப் பகிர்வுதான்,..!


சங்கப் புறப் பாடல் ஒன்றில் தனது வாலிபப் பருவத்தை நினைவு கூரும் வயோதிகர் ஒருவரது சித்திரத்தைக் காட்சிப்படுத்துகிறார் ஒரு புலவர்.

ஏதோ ஒரு ஆற்றங்கரை அல்லது குளக்கரை.
நெஞ்சில் துளிக்கூடக் கள்ளம் கபடமில்லாதவர்களாய் சிறுவரும் சிறுமியரும் - ஒன்று சேர்ந்து அங்கேவிளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மணலால் செய்த பொம்மையை வைத்துக் கொண்டு அங்குள்ள மலர்களைப் பறித்து அவற்றுக்குச் சூட்டிக் குளிர்ந்த நீரில் களியாட்டம் போடும் சிறுமிகளோடு கை கோர்த்தபடி அவர்கள் எப்படி அசையச் சொல்கிறார்களோ அப்படி அசைந்து,அவர்கள் எப்படித் தழுவிக் கொள்கிறார்களோ அப்படித் தழுவிக் கொண்டு விளையாடும் அந்தச் சிறுவர்களின் உள்ளத்தில் விகல்பமான - மறைவான - தவறான சிந்தனைகள் சற்றுமில்லை.
‘’மறையெனல் அறியா மாயமில் ஆயம்’’
-ஒளிவு மறைவு என்பது கொஞ்சமும் இல்லாத வஞ்சனையற்ற நண்பர் கூட்டம் அது என்கிறான் சங்கக் கவிஞன்.

உல்லாசமான கேளிக்கை மனநிலையில் இருக்கும் தன் தோழியர் மத்தியில் சற்றே சாகசம் செய்து காட்டும் ஆவல் அந்தப் பையன்களிடம் கிளர்ந்தெழுகிறது; தண்ணீர்த் துறைக்கருகில் ஒரு மருதமரம் கிளை பரப்பி நிற்கிறது.அதன் கிளைகளில் ஒன்று நீர்ப்பரப்பை உரசியபடி தாழ்ந்து கிடக்க அதைப் பற்றிக் கொண்டு மேலேறும் சிறுவர்கள் ,மரத்தின் உச்சி வரை சென்று...கரையிலே நிற்பவர்கள் வியந்து போகும் வண்ணம் அந்த நெடுநீர்க் குட்டைக்குள் திடுமென..- சரேரெனப் பாய்கிறார்கள்; சுற்றிலும் நீர்த் திவலைகள் பீறிட்டு அடிக்கின்றன.அத்தோடு நில்லாமல் மடுவின் ஆழம் வரை தாங்கள் மூழ்கி எழுந்ததற்குச் சாட்சியாக நீர்நிலையின் ஆழத்திலிருக்கும் மென்மணலையும் அவர்கள் கையில் அள்ளி எடுத்து வருகிறார்கள்.
அந்தக் கல்லா இளமையை - உலகின் சூது வாதுகள் மனதில் படிந்திருக்காத பரிசுத்தமான கபடற்ற பாலிய பருவத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறார் ஒரு பெரியவர்.
இப்போது அவர் தண்டூன்றித் தளர்ந்து போய்விட்டவர்.
கை கால் நடுங்காமல் அவரது இயக்கம் இல்லை.
அவர் பேசும்போது ஏதோ..சொற்களுக்கிடையே சற்று இருமல் வந்து போகிறது என்பது கூட இல்லை..
இருமலுக்கு நடுவிலேதான் சொற்களையே அவரால் உச்சரிக்க முடிகிறது.
அதுவும் ஏதோ கொஞ்சம்தான் பேச முடிகிறது.
‘’இருமிடை மிடைந்த சில சொல்’’
என்கிறது பாடல்.
இருமல் கலந்த சொல் அது...இருமலால் மட்டுமே தொடுக்கப்பட்ட பேச்சு அது.

பூண்போட்ட கைத் தடியை ஊன்றியபடி கை கால் நடுங்க இருமிக் கொண்டே எதையோ பேசும் இந்த நிலையில்
‘’தொடித்தலை விழுத் தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சில சொல்
பெருமூதாளர்’’ஆக...கிழவராக ஆகி விட்ட இந்த நிலையில் தனது பழைய பொன்னாட்களை நினைத்துப் பார்க்கையில் அப்படி
‘’நெடு நீர்க் குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து
குளித்து மணல் கொண்ட ‘’
தன் ‘’கல்லா இளமை’’
எங்கே போய்த் தொலைந்தது என அவர் வியக்கிறார்..
அதை எண்ணி ஆற்றாமை கொண்டு கழிவிரக்கமும் கொள்கிறார்.


கள்ளமற்ற இளமையையும்,கழிவிரங்கும் முதுமையும் எதிரெதிர் இருமைகளாக முன் வைத்துத் தீட்டியிருக்கும் இப் புறப் பாடல்
தன்னுள் பொதிந்து கிடக்கும் மகத்தான வாழ்வியல் சாரத்தால் காலம் கடந்தும் நம் உள்ளங்களில் கல்வெட்டாய்ப் பதிகிறது.

‘தொடித்தலை விழுத் தண்டு’என்னும் சிறப்பான தொடரை உரிய இடத்தில் பொருத்தமாகக் கையாண்டதன் காரணமாகவே தன் இயற்பெயர் இன்னதென்பதே அறியப்படாதவராய்த் தொடித்தலை விழுத் தண்டினார் என்னும் பெயர் பெற்றார் இப் பாடலின் புலவர்.

பாடல் முழுவதும்...
‘’இனி நினைந்து இரக்கமாயின்று திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇத்
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து
தழுவு வழித் தழீஇத் தூங்கு வழித் தூங்கி
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து
நீர் நணிப் படி கோடு ஏறிச் சீர் மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடு நீர்க் குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல் ஓர்
தொடித்தலை விழுத் தண்டு ஊன்று நடுக்குற்று
இருமிடை மிடைந்த சில சொல்
பெருரு மூதாதாளரேம் ஆகிய எமக்கே’’
-புறநானூறு-243,தொடித்தலை விழுத் தண்டினார்

[நினைக்குந்தோறும் மனம் அதை எண்ணிக் கழிவிரக்கம் கொள்கிறதே..! மணலைக் கெட்டிப்படுத்திச் செய்த வண்டல் பாவைக்குப் பூப் பறித்துச் சூட்டிவிடும் சிறுமியரோடு ஒன்றிணைந்து கை கோர்த்து நடனமாடிக் களித்துக் கொண்டிருக்கும் களங்கமில்லாத மனம் படைத்த சிறுவர்கள்.! அவர்கள் உயரமான கிளைகளைக் கொண்ட மருத மரத்தின் தாழ்வான ஒரு கிளையில் ஏறி அந்த நீர் நிலைக்குள் ‘தொபுகடீர்’ என்று குதித்து அந்தச் சிறுமியருக்கு வித்தை காட்டுவதோடு தண்ணீருக்குள் மூழ்கியபடி ஆழ்மான அடிப்பரப்பிலிருந்து கையில் மென்மணலையும் அள்ளி வந்து காட்டுகிறார்கள்.அவர்களில் ஒருவனாக நானும் இருந்தேனே..அந்தக் கல்லா இளமைக் காலம்..இப்போது எங்கே சென்று மறைந்ததோ? நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்தபடி இளமைப் பாய்ச்சல் காட்டிய காலங்கள் தொலைந்துபோய்ப் பூண் போட்ட கைத்தடியைப் பிடித்தபடி -கை கால் நடுக்கத்துடன் - இருமலுக்கிடையே ஒரு சில வார்த்தை பேசும் நாளும் வந்துற்றதே..! அத்தகைய மூப்புற்ற கிழவனாகி விட்ட எனக்கு அந்த நாள் நினைவுகள் வந்து கழிவிரக்கம் கொள்ளச் செய்கின்றனவே...!]

...மேலும்

Sep 28, 2011

பரமக்குடி படுகொலைகண்டன அறிக்கைகள், வெளிநடப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,
இவையெல்லாம் அடையாளங்களாய் மட்டுமே மிஞ்சுவதற்கு
அதிக காலமில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் மற்றொன்றை நோக்கி ஓடத்தொடங்கிவிடுவார்கள்.

மீண்டும் துப்பாக்கிக் குண்டுகள் தாழ்த்தப்பட்டோரின்
உயிர்குடிக்கும்....

பரமக்குடியில் ஆதிக்க சாதிவெறியை அரசே அரங்கேற்றி முடித்திருக்கிறது. அரசின் பயங்கரவாதம் என்பதால் கண்டிக்கிற சிலர் இதே வன்முறையை ஆதிக்கசாதிகள் நிகழ்த்தியிருந்தால்
சாதிக்கலவரம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்றும், தமிழர் ஒற்றுமை காப்போம் என்றும் அறிக்கை விட்டிருப்பார்கள்.
ஆதிக்க சாதிவெறியர்களை கண்டிப்பதை விட அரசைக் கண்டிப்பது இங்கேயுள்ள அரசியல்வாதிகள் பலருக்கு எளிது.


ஒரு அரசு அதன் குடிமக்களை காக்கை குருவிபோல் சுட்டுக்கொன்றுவிட்டு எந்தச் சலனமுமின்றி நீடிக்கமுடியும் என்றால் அதற்கான காரணம் என்ன?
குறிப்பாக தற்போது நிகழ்ந்த படுகொலையின் வேர் எங்கிருந்து தொடங்குகிறது.

மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில், வலிமையுள்ள அரசியல் கட்சிகள் என்றால், அதிமுக, திமுக, காங்கிரஸ், வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இதில் காங்கிரஸ் மட்டும்தான் தன் வலிமையை இழந்திருக்கிறது.

அதிமுகவின் செயலாளர் மொக்கசாமி தேவர், திமுகவின் செயலாளர் அவரது மாமா சிவனாண்டித்தேவர், காங்கிரஸ் செயலாளர் அவரது பங்காளி தவசித்தேவர், பொதுவுடைக்கட்சி செயலாளர் அய்யாவு. அதாவது தவசித்தேவரின் சித்தப்பா.
இதுதான் அங்கிருக்கும் கட்சிகளின் அமைப்பு முறை. (பெயர்கள் உதாரணத்திற்காகவே)

இது இன்று நேற்று தொடங்கியதல்ல அந்தக் கட்சிகள் தோன்றியதிலிருந்து காலங்காலமாய் நீடிக்கும் முறை.
ஊர் என்கிற சாதியமைப்பிற்கு சற்றும் குறையாத வண்ணம்
இந்த கட்சியமைப்புமுறை அந்த மாவட்டங்களில் இன்றும் நீடிக்கிறது.

முத்துராமலிங்கதேவர் ஜெயந்திக்கு கட்சியின் மிகப்பெரிய தலைவர்கள் போவது ஒருபுறமிருக்கட்டும், அந்த ஊர்வலத்தில் மேற்சொன்ன அனைத்து கட்சியினரும் சாதி என்கிற ஒரேஅடிப்படையில் திரண்டுசெல்வதை பார்க்கமுடியும்.

தாழ்த்தப்பட்டோர் தொடக்கத்தில் இந்தக் கட்சிகளின் அணியாக மட்டுமே இருந்தனர். காலப்போக்கில் தங்களுக்கான அங்கீகாரத்தை இந்த அமைப்புகளுக்குள் பெறமுடியாமல்
தனித்துத் திரண்டனர்.

அதில் அரசியல் வழியிலான திரட்சி என்பதை உருவாக்கியதில்
அப்பகுதியில், தியாகி இம்மானுவேல் பேரவைக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், அருந்ததியர் விடுதலை முன்னணிக்கும்
பெரும் பங்குண்டு.

முதன்முதலாக ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கர் பிறந்தநாளன்று
சிறுத்தைகள் அணிவகுப்பு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் அறிமுகம் செய்தனர். (ஒவ்வொரு தேவர் ஜெயந்திக்கும் கடைகள் அடைக்கப்படுவதும், அடைக்கப்பட்ட கடைகளையும் கல்வீசி தாக்குவதையும் வழக்கமாய் கொண்டிருந்தனர் முக்குலத்தோர்)

சிறுத்தைகள் அணிவகுப்பின் போது, போலீசே கடைகளை அடைக்கச்சொன்னது, ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப்போவதைப்போன்ற பீதியை திட்டமிட்டு விதைத்தது அரசு.

அரசு மட்டுமா? மக்கள் ஒற்றுமை காப்போம், மதுரை வீதிகளில் சிறுத்தைகள் அணிவகுப்பாம், காட்டுக்குள் இருக்கிற மிருகங்கள் நாட்டுக்குள் வரலாமா? என்று சுவரொட்டி அடித்தார்கள் அய்யாவுத்தேவரின் பொதுவுடைமை வாதிகள்.

அதே வேளையில் மறுபுறத்தில், ஆதிக்க சாதிவெறிக்கெதிராய் தன்னுயிர்தந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் மக்களை மட்டுமன்றி பல்வேறு முற்போக்காளர்களையும் பார்த்திபனூரில் திரட்டுகிற பணியினை மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில், இம்மானுவேல் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், அருந்ததியர் விடுதலை முன்னணி இவற்றிற்கிடையிலான ஒற்றுமையும் பலப்பட்டது. சில உடன்பாடுகளோடு தொடர்ந்து இயங்கி காலப்போக்கில்
மேலும் சில அமைப்புகளை உள்வாங்கிக்கொண்டு (அரங்க குணசேகரனின் தமிழக மனித உரிமை கழகம், தலித் பண்பாட்டுப்பேரவை) தமிழக தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணியாய் பரிணமித்தது.

இதே காலத்தில்தான் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு பெயர்களிலும், அ.மார்க்ஸ் தலைமையிலான நுண் அரசியலாளர்களும் தாழ்த்தப்பட்டோர் சிக்கலில் தலைகொடுக்கத் தொடங்கினர். தமிழகமெங்கும் இரட்டை வாக்குரிமைக்கான நூறு மாநாடுகள் என்று தொடங்கி அதுதான் முதற்பணி என்றும் தங்கள் அரசியலை முன்வைத்தார்கள்.


தொண்டுநிறுவனங்களோ தாழ்த்தப்பட்டோரின் உள்முரண்களை பயன்படுத்தி இயக்கங்களுக்கு இடையே உருவான அந்த ஒற்றுமையை குலைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டன. நுண் அரசிலாளர்களை தங்களின் அரசியல் வடிவங்களாக முன்நிறுத்தினர். ஒற்றுமையை குலைப்பதில் முன்நின்று வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாதிரியார் அந்தோணி ராஜ்.(ஐடியாஸ், ஐகப்) இதில் மதுரை இறையியல் கல்லூரியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.


இதுதான் தருணம் என்று காத்திருந்ததுபோல், தாழ்த்தப்பட்டோரின் அரசியல் சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய இயக்கங்களை தேர்தல் பாதையில் சீரழிப்பதற்கான வேலையையும் நுண்அரசியலாளர்கள் தொடங்கி நடத்தி முடித்தனர்.

மேலும், தமிழர் ஒற்றுமை, தமிழ் தேசியம், பாட்டாளி வர்க்க ஒற்றுமை, எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும், மேலும் அப்படியொரு தமிழ்தேசிய ஒற்றுமையோ எழுச்சியோ பாட்டாளிவர்க்க புரட்சிக் கனலோ இங்கில்லை, இந்நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு இடையிலான ஒன்றுபட்ட அரசியல் உருவாக்கமே, பரமக்குடி கொடுமைக்கு எதிராய் உறுதியாய் போராடும் வல்லமை கொண்டது. அதுவே ஆதிக்க சாதிவெறியை எதிர்த்து சமரசமின்றி போராடும் தன்மை கொண்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தொண்டு நிறுவன அரசியலால் காவுவாங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களுக்கு இடையிலான தேவை மீண்டும் உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தில் இதில் முன்னின்ற இம்மானுவேல் பேரவை தேர்தல் பாதையிலும் செல்லாமல், இதை மீண்டும் கட்டியெழுப்பும் முன்முனைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும் களத்தில் நின்று அடக்குமுறைக்கிடையே பணியாற்றுகிறார்கள். இந்தப் பணி வெற்றியடையவும், மீண்டும் தாழ்த்தப்பட்டோர் அந்த மாவட்டங்களில் அரசியல் சக்தியாய் உருவெடுப்பதுமே ஆதிக்கசாதிவெறி வன்முறைகளுக்கு சரியான மாற்றாக இருக்கமுடியும்.

இதை விடுத்து, ஈழத்திற்காக மட்டும்தான் தசை துடிக்குமா என்று நையாண்டி செய்வதோ. தமிழ்தேசியத்தை பழிப்பதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்வதோ எதையும் இங்கே புடுங்கிவிடப்போவதில்லை.

...மேலும்

Sep 27, 2011

பரமக்குடி: உண்மை அறியும் குழு அறிக்கை


பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி:
உண்மை அறியும் குழு அறிக்கை
21.09.2011
மதுரை

கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்
 1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
 2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
 3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO – தமிழ்நாடு
 4. வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை
 5. பேரா. ஜி.கே.ராமசாமி மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா
 6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி (NDF), ஆந்திர மாநிலம்
 7. ரெனி அய்லின், தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO, கேரளம்
 8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்
 9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு
 10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி
 11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்
 12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர்
 13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை
 14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்
 15. கு.பழனிச்சாமி – PUHR, மதுரை
 16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் – NCHRO,கர்நாடகம்
 17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி – தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி
 18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம்


இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.
பின்னணி
பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ‘தெய்வத்திருமகனார்’ என அவர் வழிபடப்படுகிறார்.

இப்பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தேவேந்திரர்கள் வசிக்கின்றனர். கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும் நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.

கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. ‘புதிய தமிழகம்’ கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர்.

இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ‘குருபூஜை’ என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) “குருபூஜைக்கு அணி திரள்வீர்” என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து ‘மறத்தமிழர் சேனை’ என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர்.

இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது. பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென காவல்துறை மிரட்டியது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.


செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்

1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை:
(அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர் இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.
(ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம் இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.

2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது.

3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, “சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள்” என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார்.

4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர்.

5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது.

6. காவல் துறையின் ‘வஜ்ரா’ வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

பரமக்குடி
7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார்.

8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது.

9. துப்பாக்கிச் சூட்டில் பல்லவராயனேந்தல் கணேசன் ( 55), வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50), மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19), கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25), காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25), காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.

10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப் பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும் ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. “வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்” என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்...

1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.

2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.

3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.

4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

1. சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது. இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.

2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.

5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.

6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக, கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சாலை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும்.

11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது.

12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.

13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.

தொடர்பு முகவரி:
பேரா. அ.மார்க்ஸ்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்
அடையாறு, சென்னை - 600 020. செல்: 94441 20582

வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுப்
142, வடக்கு வெளி வீதி, 2வது மாடி, யானைக்கல்
மதுரை - 625 001. செல்: 94898 71185

நன்றி - அ.மார்க்ஸ்
...மேலும்

Sep 26, 2011

வசூலிப்பு - தர்மினி


வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும்.

அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அவரது கவலையெல்லாம் மகளுடைய சாமத்தியச்சடங்கை ஒரு கொண்டாட்டமாகத் தாங்கள் செய்யாமல் விட்டால் , மற்றவர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது.அடுத்த வருடத்திலாவது அக் கொண்டாட்டத்தை நடத்தியே தீருவது என்பதே அவர் பேச்சாயிருந்தது.

எதற்கு அந்த அநாவசிய வேலை?அது உடலில் இயற்கையாக நடக்கும் ஒரு செயற்பாடு.அப்படியான சடங்கொன்றைச் செய்ய ஏன் கஷ்ரப்பட வேண்டும்? எங்கள் பழக்கவழக்கம் , கலாச்சாரம் எனும் சாட்டுப்போக்குகள் நமக்கு இப்போது என்ன அவசியத்துக்கு? என்று நான் அவருடன் கதைத்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அது எப்பிடிச் செய்யாமல் இருக்கிறது?” என்பது தான் அவரது அழுத்தமான கேள்வி.

அது பற்றி மகளுக்குத் தெளிவு ஏற்படுத்துவதும் பயப்பிட எதுவுமில்லை என்று உரையாடவதும் தானே தாய் செய்ய வேண்டியது.அசெளகரியமாக உணர்ந்து கொள்ளும் மகளை ஆதரவாக அரவணைப்பதும் அது பற்றிப் பேசுவதுமல்லவா செய்ய வேண்டியது.ஆனால் பெற்றோர் உடனடியாக பெரும் எடுப்பில் ஒரு கொண்டாட்டம் செய்வது தான் பிரதான வேலை என்று ஓடித்திரிவார்கள்.

பலரும் இந்த நீராட்டுவிழா பற்றிப் பேசிவிட்டார்கள்.ஆனாலும் வெகுசனம் மத்தியில் அது மாற்றப்படாத எண்ணம் தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் சனி ,ஞாயிறு என்றால் கிலி கொள்கிறார்கள்.அவை ஓய்வெடுக்க வேண்டி விடுமுறை நாட்களாயிருந்தாலும் எம் மக்கள் ஏதாவதொரு சாட்டுச் சொல்லிக் கொண்டாட்டங்களைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். நல்ல குளிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் சற்று ஓய்ந்திருக்கும்.ஒரே நாளில் இரண்டு மூன்று விழாக்களுக்குச் சுற்றிச் சுழன்றோடுபவர்களெல்லாம் இருக்கிறார்கள்.

நேரம் விரயமாவது ஒருபுறமெனில் அதற்கான ஆடை ,அணிகலன்கள் வாங்குவது , அன்பளிப்புச் செய்யப் பணம் ஒதுக்குவது என்று சிரமங்களை அடைகிறார்கள். கோபிப்பார்கள், குறைநினைப்பார்கள் என்று எல்லாக் கொண்டாட்டத்திலும் தலைகாட்டுவதே கடமை எனப் பலர் துன்புறுகின்றனர். ஆயினும் நெருக்கமானவர்களின் வைபவங்களில் உளமாரப் பங்கெடுப்பதென்பது வேறு.ஆனால் புறுபுறுத்துக் கொண்டே சென்று வருபவர்கள் தான் பலரும்.ஆனாலும் அதே துயரத்தை விரைவில் மற்றவர்களுக்கும் அவர்கள் வழங்கத் தயாராகிவிடுவர்.ஒரு மகிழ்ச்சி தரும் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதை இனிய அனுபவமாக உணராமல் அதுவொரு துன்பமாக மற்றவர்களால் நினைக்கப்படுகிறது. அதற்குக் காரணங்கள் அவை வெறும் பணச்சடங்குகளாகப் இருக்கின்றன. அவரவர் பவிசும் பவரும் காட்ட இக்கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர்.

வருடாவருடம் வந்து கொண்டிருக்கும் பிறந்த நாளை மண்டபம் வாடகைக்கு எடுத்துச் செய்கின்றனர்.அதுவும் நாற்பது ,ஐம்பது ,அறுபது, வயதான கொண்டாட்டங்கள் நடாத்தப்படுவதும் நடக்கின்றது.கத்தோலிக்கரென்றால் ஞானஸ்நானம், முதல்நன்மை என்று இன்னும் நீள்கிறது.திருமணங்கள் போட்டி போட்டுப் பெரும் எடுப்புகளுடன் கடன்பட்டு நடத்தப்படுகின்றன.

தங்கள் பெண்பிள்ளைகள் பருவமடைந்தால் அது ஒன்றிரண்டு வருடங்களாகத் திட்டம் போடப்பட்டு நடத்தும் விழாவாகிவிடுகிறது.தற்போதைய உணவுகளால் பெண்கள் சிறுவயதிலேயே தம் முதல்மாதவிடாயை அடைந்துவிடுகின்றனர்.பத்துப் பதினொரு வயதுச் சிறுமிகள் இச்சடங்கிற்கான காரணம் என்ன என்ற கேள்வியையே யோசிக்க முடியாமல் இருக்கின்றனர்.அவர்கள் சிறுவயதிலிருந்து சென்று வரும் விழாக்கள் அது வழமை தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.தமது உறவுச் சிறுமிகள், தமிழ் நண்பிகள் அலங்கரிக்கப்பட்டு அந்நிகழ்வின் கதாநாயகியாக நிற்பது கவர்ந்திருக்கலாம்.விதம் விதமாகப் போட்டோவும் வீடியோவும் எடுப்பது பிடித்திருக்கலாம்.பெற்றோர் செய்வது சரியென்று நம்பலாம்.ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர் எல்லாம் அறிந்தும் அக்கொண்டாட்டத்தைச் செய்கின்றனர்.பல ஆண்டுகளாக உறவினர்களதும் நண்பர்களதும் விழாக்களுக்குச் சென்று அன்பளிப்பாகக் கொடுத்ததை வசூலிக்க இது ஒரு வாய்ப்பென்று கணக்குப் போடுகின்றனர்..பல மாதங்களாக மண்டபம் தேடி அலைகின்றனர். அழைப்பிதழ்களை அச்சடிக்கின்றனர். தமது பெண் குழந்தையை சில நூறு பேர் முன்னிலையில அலங்கரித்து க் காட்சிக்கு நிறுத்துகின்றனர்.இவை போதாதென்று பார்ப்பனனை அழைத்து விளங்காத மந்திரங்களைச் சொல்ல வைத்து காசும் கொடுத்துவிடுகின்றனர்.அச்சிறுமியை மண்டபத்தின் நடுவில் நிறுத்தி தமக்கான வரவுகளை வசூலித்துக் கொள்கின்றனர்.இதைத் தவிர வேறென்ன உண்டு?

பலரும் சொல்லும் காரணம் இது தான், ‘உறவுகள், ஊரவர்கள் ஒன்று சேர்வது’.நண்பர்களை உறவுகளைச் சந்திக்க ஒன்றாக உணவருந்திக் களிக்க ஒரு நாளைத் தீர்மானித்து ஒன்று சேரலாமே.அவ்வாறான உறவுகளும் நட்புகளும் மகிழ்ச்சியாக ஒன்று சேரத் தயாராவதில்லை.அவரவர்கள் தாம் கொடுத்த பணத்தை வாங்குவதற்குக் கணக்குப் போட்டபடியே தான் காசை மடித்து என்பலப்பில் வைக்கிறார்கள்.சனங்கள் தமக்குள் அப்படித் தான் கதைத்துக் கொள்கிறார்கள். இத்தனை வருடங்களாகக் கஸ்ரப்பட்டு உழைத்துக் கொண்டு போய்க் கொடுத்த காசை திரும்ப வாங்க வேண்டுமென்கிறார்கள்.

இன்னும் அதிக வேதனையைத் தருவது தமது பெண்குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் காசை வசூலிப்பது தான்.புலம்பெயர்ந்து வந்த பின்னர் கூட தேவையற்ற இச்சடங்கை ஏன் செய்ய வேண்டுமென்று பிள்ளைகளே சிந்திக்க முடியாதளவு இதெல்லாம் நம் கலாச்சாரம் என்று சொல்லிச் சொல்லி அவர்களைச் சுயமாகச் சிந்திக்க முடியாதவாறு தான் வளர்த்து வருகின்றனர்.

இங்கு கொண்டாட்டங்கள் என்பது வெறும் கொடுக்கல் வாங்கல்களை வைத்துச் செய்யப்படும் வியாபாரங்களாகி விட்டன.தமது பகட்டைக்காட்டும் அளவு கோல்களாக்குகின்றனர்.

நன்றி / தூமை 
...மேலும்

Sep 25, 2011

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!


வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று தந்தை குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இடையில் கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சிறுமி ராஜேஸ்வரி என்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் அந்தச்சிறுமியின் குடியிருப்புப் பகுதியருகே விசாரணை செய்திருக்கின்றனர். மேலும் பள்ளி அருகேயும் விசாரணை செய்திருக்கின்றனர். பள்ளி அருகே மூன்று கட்டிடங்கள் தாண்டி குமார குருக்கள் எனும் 46 வயது ஆஞ்நேயர் கோயிலின் பார்ப்பனப் புரோகிதர் குடியிருக்கிறான். இவன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே இது போன்ற புகாரில் சிக்கி கைதாயிருக்கிறான். வீட்டு முகப்பில் அப்பாவி போன்று அமைதியாக இருந்த இந்த குருக்களை பிடித்து விசாரித்த போது உண்மை வெளியே வந்திருக்கிறது.

பள்ளி வாசலில் நின்றிருந்த சிறுமியை சாக்லெட் கொடுத்து கடத்தி சென்ற கடவுளுக்கு பூசை செய்யும் இந்த குருக்கள் அவளை பலமுறை வன்புணர்ச்சி செய்து அதன் போக்கிலேயே அந்த சிறுமி மூச்சுத் திணறி செத்துப் போயிருக்கிறாள். பிறகு எதுவும் நடக்காதது போன்று அந்தச் சிறுமியின் பிணத்தை கிணற்றில் வீசியிருக்கிறான்.

இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த கயவனது தொழிலைக் குறிப்பிட்டு போட்டிருக்கிறோம்.

அடுத்து இத்தகைய கொடிய பாதகங்களை சமூகத்தில் பலரும், பல தொழில் செய்பவர்களும் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் இங்கே தனது சாதி மற்றும் தொழிலின் அடிப்படையில் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் சார்பாக கடவுளுக்கு பய பக்தியோடு பூஜை செய்யும் ஒருவன் செய்திருக்கிறான், எனவே மற்ற குற்றவாளிகளைப் போல இவனையும் ஒரு குற்றவாளி என்று ஒதுக்கிவிட முடியாது.

ஐந்துவயது சிறுமியை பல முறை வன்புணர்ச்சி செய்து மூச்சுத்திணற வைத்து கொல்லுமளவுக்கு வெறி கொண்ட இந்த கயவன் எத்தகைய கொடிய பண்புடன் வாழ்ந்திருக்கிறான்? கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா? கோரமாட்டார்கள்.

ஜெயேந்திரன், தேவநாதன், தீட்சிதன் பொறுக்கிகள் வரிசையில் குமார குருக்களும் சேர்ந்திருக்கிறான். இனி கடவுளுக்கு பூசை செய்யும் குருக்கள் அத்தனை பேரையும் போலீஸ், உளவுத்துறையைப் போட்டு கண்காணிக்க வேண்டும். அவர்களை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுமாறு பணிக்க வேண்டும். பொது சந்திப்பில் எல்லா குருக்களது போட்டோவை போட்டு இவர்கள் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால் உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இல்லையேல் நாம் இன்னும் பல சிறுமிகளை இழக்க வேண்டியிருக்கும்.
நன்றி / வினவு 
...மேலும்

Sep 24, 2011

தமிழ்த்தேசியமும் சர்வதேசியமும் - அமரந்தா


“அழிக்கவே முடியாத பயங்கரவாத அமைப்பு என்று கருதப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்தொழித்த ராஜபக்சே நமது பாராட்டுக்கு உரியவர். இத்தகைய பயங்கரவாத அமைப்புக்களால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணம்”

லிபியாவில் கடந்த 4.9.09 அன்று ராஜபட்சேயுடன் கைகுலுக்கி இவ்வாறு கூறியிருப்பவர் யார் தெரியுமா? பொலிவாரிய குடியரசான வெனிசுவேலாவின் தலைவரும், 21ஆம் நூற்றாண்டு லத்தீன் அமெரிக்காவைக் கட்டியெழுப்பும் பணியில் பல மைல் கற்களைக் கடந்து வந்து மூன்றாமுலக ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்றவருமான ஹூகோ சாவேஸ்! லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைவுக்கான அவரது முன்முயற்சிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் மறுபுறமோ, சோசலிச சர்வதேசியத்திற்கு முற்றிலும் முரணாக, இலங்கைத் தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமைக்கு எதிராக இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்குத் துணைபோகின்றன. இந்தச் சீரழிவு நிலைமைக்கான காரணத்தை நாம் ஆராய வேண்டும். லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்திற்கு அந்தக் கடமை இருக்கிறது.

கியூபா எதற்காக இந்தியாவின் அல்லது இலங்கை அரசின் பரப்புரைக்குச் செவிசாய்த்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைபாடு எடுக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு பலவித பதில்கள் இருக்கக்கூடும். அதில் முதலாவது, சீனாவின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் வட அமெரிக்கா நுழையாமல் தடுப்பது. காரணம் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் வர்த்தக/பண்டமாற்று ஒப்பந்தங்களின் மூலம் சீனா உறவு கொண்டிருக்கிறது.

இரண்டாவதாக, ‘விடுதலைப்புலிக்கு எதிரான போரில்’ வட அமெரிக்கா “இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பதால்” எழும் ஐயப்பாடு. முன்பு கியூபாவிலும் நிகராகுவாவிலும் புரட்சிகர அரசுகள் ஆட்சிக்கு வந்தபோது மனித உரிமை மீறல் என்ற குற்றஞ்சாட்டித்தான் பல அத்துமீறல்களைச் செய்தது வட அமெரிக்கா.

மூன்றாவதாக, மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைக்கு முயலும் இயக்கங்களுக்கு ஆதரவளித்து அரசை பலவீனமாக்கி பிளவுபடுத்தும் வட அமெரிக்க சதியாக இலங்கைத் தமிழர் ஆதரவைப் புரிந்து கொண்டது.

இத்தகைய ஐயங்களுக்குக் காரணமில்லாமல் இல்லை. அறுபதுகளில் காங்கோவில் லுமூம்பா தலைமையிலான முற்போக்கு அரசை பலவீனப்படுத்தி வீழ்த்த சி.ஐ.ஏ. அந்நாட்டின் ‘கத்தங்கா’ என்ற பிரிவினைவாத இயக்கத்திற்கும் ஆதரவளித்தது. இறுதியில் லுமூம்பா படுகொலை செய்யப்பட்ட நிகழ்வானது, பிரிவினைவாத இயக்கங்கள் குறித்து கியூபாவின் கண்ணோட்டத்தை மாற்றியது. இன்று வெனிசுவேலாவின் எண்ணெய் வளமிக்க மாகாணங்களையும் பொலிவியாவின் இயற்கை எரிவாயுவும் பிற கனிமங்களும் விளையும் மாகாணங்களையும் பிரிக்க முயலும் அரசுக்கு எதிரான பெருமுதலாளிகளுக்கு வட அமெரிக்காவின் கூலிப்படைகள் உதவி வருகின்றன.

நான்காவதாக, கடந்த 50 ஆண்டுகளாக வட அமெரிக்க வர்த்தகத் தடையின் கீழ் திணறிக் கொண்டிருக்கும் கியூபா, ஐ.நா. சபை போன்ற சர்வதேச அரங்குகளில் முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்காக, இயன்றவரை மூன்றாமுலக நாடுகளுடன் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள முயல்வது. நட்பு நாடுகள் தனது சொந்த மக்களையே ஒடுக்கும் போது விமர்சிக்காமல் விட்டுவிடுவதான் இதில் வேதனை. சர்வதேச சமூகம் கியூபாவுக்கு ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவதற்குக் காரணம் அதன் போற்றத்தக்க அயலுறவுக் கொள்கை தான். கியூபா அங்கோலாவுக்கு அளித்த ஆயுத உதவி தான் தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசை வீழ்த்தியது. உலகின் பல நாடுகளின் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க மருத்துவக் குழுக்களை கியூபா அனுப்புகிறது. இயற்கைச் சீற்றங்களால் பேரழிவுகளைச் சந்திக்கும் நாடுகளுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து(வட அமெரிக்க மாணவர்களுக்கும் கூட) வரும் ஏழை மாணவர்களுக்கு 5 ஆண்டுகால மருத்துவப் பட்டப்படிப்பை இலவசமாக வழங்குகிறது.

போற்றத்தக்க இந்த மனிதாபிமான சர்வதேசக் கொள்கை “மனித உரிமைப் பாதுகாப்பு” என்ற பெயரில் இலங்கைவாழ் தமிழ் இன அழிப்பிற்கு துணைபோனது தான் கியூபா வரலாற்றின் ஒரு சறுக்கல் - தமிழ் இனத்தின் மிகப்பெரும் சோகம்.

தமிழர் என்ற இன உணர்வின் அடிப்படையிலும், சோசலிச நிலைமாற்றத்தில் நம்பிக்கை உடையவர்கள் என்ற முறையிலும், இன்று வட அமெரிக்காவிற்கான பொலிவேரிய மாற்றினையும் ‘தெற்கு வங்கி’யையும் நாம் வரவேற்கிறோம். இவை ஏழை லத்தீன் அமெரிக்க நாடுகளை விட அமெரிக்காவின் கீழியங்கும் ராணுவ சர்வாதிகாரி களிடமிருந்து மீட்கின்றன் உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் ஆகியற்றின் அடிமைகள் ஆகாமல் காப்பாற்றுகின்றன. வெறும் அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்லாமல், ஜனநாயகம் என்பது சமூக மாற்றத்திற்கான அனைத்து திட்டங்களிலும் நேரடியாக பங்கேற்க மக்களுக்கு அதிகாரமளிப்பது என்று நிறுவுகின்றன.

பொலிவார் கனவுகண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டிணைவைச் சாதிக்கின்றன. லத்தீன் அமெரிக்காவிற்கு மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளுக்கும் லத்தீன் அமெரிக்காவின் சோசலிச மாற்றங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலை தரக்கூடிய அரசியல் நடவடிக்கைகள் இக்கண்டத்தில்தான் முன்னெடுக்கப் படுகின்றன. இயற்கை வளங்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. காடுகள் வளர்க்கப்படுகின்றன. நீராதாரங்களை விட்டு அந்நிய முதலாளிகள் விரட்டப்பட்டுள்ளனர். கல்வி, உணவு, மருத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகள் உழைக்கும் மக்களுக்கு சலுகை விலையில் விநியோகிக்கப்படுகின்றன. தேசிய வளங்களும் ஆற்றலும் பெருமிதமும் மீட்கப்பட்டு வருகின்றன. எனவே சர்வதேசிய ஒருங்கிணைவை விரும்பும் நாம், 21ஆம் நூற்றாண்டின் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், லத்தீன் அமெரிக்காவுடனான ஒருமைப் பாட்டை உருவாக்கிக் கொள்ளும் தேவையிருக்கிறது.

பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் இயற்கை வளமிக்க மாகாணங்களில் வட அமெரிக்காவின் தூண்டுதலால் அதிகார வர்க்கத்தினர் நடத்தும் அரசுக்கு எதிரான போராட்டங்களையும், இலங்கையின் சிறுபான்மைத் தமிழினம் நடத்தும் தன்னாட்சி உரிமைக்கான போராட்டங்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டன கியூபா, பொலிவியா, நிகரகுவா, வெனிசுவேலா ஆகிய நாடுகள். 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சோசலிச நாடுகளல்லவா ஆதரிக்க வேண்டும்? தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்காமல் சோசலிச சர்வதேசியம் உருவாக வாய்ப்பே இல்லை. சோசலிச சர்வதேசியத்தை உருவாக்குவதில் முதன்மையான பங்களிப்பைச் செய்தவர் சேகுவேரா.

“மனித குலத்தின்பால் சகோதரத்துவ உணர்வை உண்டாக்கும் மனநிலை மாற்றம் நிகழாதபோது, சோசலிசம் நிலைபெற முடியாது. அத்தகைய உணர்வுநிலை சோசலிசம் உருவாகிவிட்ட அல்லது உருவாகிவரும் நாடுகளிலுள்ள மக்கள்மீது மட்டுமின்றி, உலகளவில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட அனைத்து நாடுகளின் மக்கள் மீதும் உருவாக வேண்டும்” - என மிகத் தெளிவாக தனது கருத்தைக் கூறிச் சென்றிருக்கிறார் அவர்.

இன்று கியூபாவில் சீன வளர்ச்சி மாதிரியை ஏற்றுக் கொண்டு பின்பற்றும் போக்கு நிலவுகிறது. சீனாவின் சந்தை சோசலிசம் கியூபாவை மீண்டும் முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்தும் அபாயமிருக்கிறது. இத்தகைய போக்கிற்கு எதிராக மீண்டுமொரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. ஐந்து ஆண்டுகள் தொழில்துறை அமைச்சராக இருந்து சேகுவேரா செயல்படுத்திய சோசலிச பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் கியூபாவில் நடைமுறைக்கு வரவேண்டும். அதுபோல, இன்று சேவின் கருத்துக்களின் அடிப்படையில் சமூக மாற்றங்களைச் செயல்படுத்தி வரும் வெனிசுவேலா, சர்வதேச ஒருங்கிணைவுக்கான சரியான வழிமுறைகளை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.

மக்களை அதிகாரப்படுத்துதல் என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களிலிருந்து நாம் நமக்குத் தேவையான பாடங்களைக் கற்க வேண்டும். அதே வேளையில் அந்நாடுகளின் செயல்பாடுகளை விமர்சன ரீதியாக ஹிμமீ வேண்டும்.

பெரும்பாலான லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடதுசாரி அறிவுஜீவிகளுக்கும் ஈழத்தமிழர் போராட்டம் குறித்த தகவல்கள் தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக, “வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை” Socialism of the 21st Century by Michael Lebovitz என்ற நூலை எழுதியவரும், கடந்த சில ஆண்டுகளாக வெனிசுவேலாவில் தங்கியிருந்து அந்நாட்டின் சோசலிச மாற்றங்களை திட்டமிடும் மார்க்சிய அறிஞர் குழுவில் இடம்பெற்றவருமான மைக்கேல் லெபோவிட்ஸ் கூறியிருப்பதைப் பார்க்கலாம்.

மேற்குலக இடதுசாரிகள் பலரைப் போலவே இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்குமிடையே நடைபெறும் போர் குறித்து எந்த விவரமும் தனக்குத் தெரியாமல் இருந்தது என்றும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிற்குச் சென்றபோது தமிழர்களின் நிலையை அவர்களே சொன்னதையும், தமிழர் ஆதரவாளரான சிங்கள மருத்துவர் ப்ரியன் செனவிரத்ன சொன்னதையும் கேட்டுத்தான் இது இலங்கை அரசின் தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கை; காசாவிலும் (பொதுவாக பாலஸ்தீனத்திலும்) இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஒப்பானது என்று அறிந்து கொண்டதாகவும் லெபோவிட்ஸ் கூறுகிறார். இந்த அறியாமையே இலங்கைத் தமிழர் அவலம் வெளித் தெரியாமல், வெறும் தமிழ்ப் புலிகளின் மீதான எதிர்ப்பு என்று கூறப்பட்டதை நம்பக் காரணமாயிற்று என்கிறார். இந்தப் பின்னணியில் தான் ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கியூபா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததையும் நான் புரிந்து கொள்கிறேன்; எனவே ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் உண்மை நிலவரத்தை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அவர் கோரியுள்ளார்.

ஈழப்போராளிகளும், ஈழ ஆதரவாளர்களும் மக்கள் உரிமை «பீμம் கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தை அவர்களுக்குத் தெரியச் செய்ய வேண்டும். ஈழத்தமிழரின் தேசிய இனப் போராட்டத்திற்கு லத்தீன் அமெரிக்க அரசுகளின் ஆதரவைப் பெற தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அது இன்று சிறுமைப்படுத்தப்பட்டு, வதைக்கப் பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்க உதவும். அதுதான் ‘வடக்கின் வசந்தம்’ போன்ற இந்திய - இலங்கை அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிக்க உதவும்.

நன்றி - கீற்று
...மேலும்

Sep 23, 2011

வெள்ளை மேகங்களை நோக்கித் திரும்பிவிட்டவர் - அ.மங்கை

அ.மங்கை

சூசன் ஓமன், (அய்யப்ப பணிக்கரின் மாணவி)
அவர் அமைதியையும் நிம்மதியையும் நாடினார், அவர் பிறந்த குட்டநாடு, காவாலம் மண்ணில் அவரது பூதவுடல் புதைக்கப்பட்டது. 2005இல் அய்யப்ப பணிக்கருடைய கிருதிக்கள் (1990-1999) 4ஆவது தொகுப்பிற்காக சரஸ்வதி சம்மான் விருது; 1997இல் இந்திரா காந்தி நினைவு விருது; 1984இல் விமரிசனத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருது; 1975இல் கவிதைக்கான கேரள சாதித்ய அகாதமி விருது.... எனப் பலப்பல. தலை தலைமுறையாக மலையாளிகளுக்கு அவர் “பணிக்கர் சார்”. அய்யப்ப பணிக்கர் மதிக்கத்தக்க, மறுதலிக்க முடியாத அறிவுஜீவி. ஜி.சங்கர பிள்ளை, காவாலம் நாராயண பணிக்கர் ஆகிய ஒத்த நோக்குடையவர்களோடு இணைந்து கேரளத்திற்கு நவீனத்தைக் கொண்டு வந்தவர்.

1960இல் வெளிவந்த அவரது “குருஷேத்ரம்” கவிதை அணுகுமுறையை முழுதுமாக மாற்றியது. புவிப்பரப்பு என்பது மனம்; மனிதம் அதன் முதல் கரு. போர்க்களங்கள் புவியியல், வரலாற்றுப் பரப்பிகருந்து நழுவி, மிக எளிதாக நாம் நமது வாழ்வில் காணக்கூடிய பரப்புகளில் தென்படுகின்றன. குருஷேத்திரத்தில் கவிஞர் காண்பது, வாழ்வின் அற்புதத்தை மறைத்துப் படரும் சின்னத்தனங்கள், கொடுமைகள், தன்னலம் ஆகியவையே. எள்ளல், அங்கதம், துக்கஞ்செறிந்த நகைச்சுவை ஆகியவை அவரது கவிதைகளின் பண்புநலன்கள். அவரது கவிதை வாசிப்பு பிரபலமானது. உணர்வு செறிந்த அவரது குரல், மரபையும் சமகாலத்தை உள்வாங்கிக் கொண்ட மீள் கட்டமைப்பு செய்ய முனையும் மனங்களில் எதிரொலித்தது. நான்கு பகுதிகளில் வெளிவந்த அய்யப்ப பணிக்கரின் கிருதிக்கள் ஐம்பது ஆண்டு காலத்தில் வந்த கவிதைத் தொகுதிகள்; அவற்றோடு 1989இல் வெளிவந்த கோத்ராயணம் இணைந்து மலையாளக் கவிதை உலகில் முன்னணியில் நிற்கின்றன.

பணிக்கரது சிந்தனை மற்றும் கருத்தாக்கத் தளம் கண்டங்கள் கடந்தது. அவரது பதின் பருவத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களின் இயங்கியல் பொருள்முதல் வாத மாலை வகுப்புகளில் தொடங்கிய கருத்தாடல்கள். அவை குறித்த கடும் விவாதங்கள் பின்னரும் தொடர்ந்தன. ராபர்ட் லோவெல் மற்றும் செஸ்லா மிலோஸ் ஆகியோருடன் அவர் நடத்திய உரையாடல்கள் இதற்கு சாட்சி. அவரது சமகாலத்தவர் போலவே அவரும் தனி வாழ்வை அரசியலாகவும், அரசியலைத் தனி வாழ்வாகவும் வாசித்தார். படுவேகமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதன் மூலம், தீவிர மலையாள வாசகர்களுக்குப் பனுவல்களின் விரிந்த உலகை அடையாளம் காட்டினார். 1989இல் குருநானக்கின் கிரந்தம் மொழிபெயர்ப்பு டி.சி. பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கியூபக கவிதைகள், பூனையும் ஷேக்ஸ்பியரும், ஷேக்ஸ்பியர் கவிதைகள் ஆகியவை அவரது மொழிபெயர்ப்புகளில் முக்கியமானவை.

ஆசிரியர்களில் அவர் தலைமையானவர். அவரது புலமைச் செறிவும், தீர்க்கமான அறிவும் அவரது மாணவர்களுக்கான பரிவை அகலப்படுத்தின. அவர் எங்கும் கற்றார்; எங்கும் கற்பித்தார் - கோட்டயம், யேல், ஹார்வர்ட், திருவனந்தபுரம், இந்தியானா, ஹைதராபாத்.... கறாரான எசமானராக இருந்து, மாணவர்கள் அடிப்படைகளைக் கற்பதை உறுதிப்படுத்தினார். அவரது வகுப்புகளில் கூர்மையான பனுவல் சார்ந்த கல்வி முதல் கொள்கையாகத் திகழ்ந்தது. ஒதெல்லோ நாடகத்தில் உள்ள “சைப்ரஸ் வரவேற்கிறது - ஆடுகளை, குரங்குகளை” என்ற சாலைப் பலகையை கவனிக்காவிட்டால் அந்த நாடகத்தை நாம் இழந்துவிடுவோம் என்பது அவரது வாதம். கடினமான விமரிசனக் கோட்பாட்டுத் துறையின் கதவுகளைத் திறப்பதற்கான திறவுகோலைத் தந்தார்; ஆனால் வாசகர் பனுவலைத் தனது நிலைபாட்டில் இருந்து அணுகக் கற்றபின்னரே கோட்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அவர் நம்மோடு அவரது கதைகள், ஞானம், நூல்கள், நண்பர்கள், நகைச்சுவை அனைத்தையும் பகிர்ந்துகொண்டு யாத்திரையில் சகபயணிகளாக அங்கீகரித்தார். அவரது பெருந்தன்மைக்கு வரம்பில்லை; மாணவர் குறித்த அவரது கர்வம் அதிசயிக்கத்தக்கது.

அய்யப்பப் பணிக்கர் கேள்விகள் எழுப்பினார்; அழகியலை மறுவாசிப்பு செய்தார்; பலவகைப்பட்ட ஊடகங்களோடு உறவாடினார். அவரது விமரிசன எழுத்துக்கள் வாசகனைப் பல வகையில் அசைத்தன. புதிய சிந்தனைத் தளத்தை நோக்கி உந்தின. அவரது ஷேக்ஸ்பியர் எதற்கு? (2000), அகவயமாக்கல் (2000), இந்தியத் தத்துவ இயல் (1999) போன்றவை முக்கிய புள்ளிகளாகத் திகழ்கின்றன. சிந்தனை அவருக்கு அதிமுக்கியமானது. அதுதான் மனிதகுல மொழியை உணர வைக்கும்; அடக்குமுறையின் இலக்கணத்தைக் கட்டுடைக்க உதவும்; எதிர்ப்பதற்கான வலுவைக் கொடுக்கும். விட்மன் மற்றும் கின்ஸ்பர்க்கில் அவர் பெரிதும் இரசித்த “திறந்த பாதையை”க் காணும் விடுதலையைத் தரும். கயர் அரசன் தொடுத்த பதில் தர முடியாத இலட்சியக் கேள்வியைப் பணிக்கர் கேட்கிறார் என்று நான் கருதுகிறேன்:

நான் யார் என்பதை யார் எனக்குச் சொல்வது?

இதில்தான் மொழி, பண்பாடு, அடையாளம், மண், நினைவு, கதையாடல் சார்ந்த கேள்விகள் பின்னிப் பிணைந்துள்ளன.

நான் இந்த ஜூலையில் பணிக்கர் சாரைப் பார்த்தேன். கைகூப்பினேன். கூப்பிய கரங்களைப் பற்றியவாறே அவர் எனக்கு நன்றி சொன்னார். உண்மையான பொருளில் அவர் குரு. அவரது கரங்கள் பட்டு நான் உருவானது எனது பெருமை. அவர் கடப்பதை நான் உணர்ந்தேன். அவர் வெள்ளை மேகங்களை நோக்கித் திரும்பிவிட்டார். அவர் ஜூலையில் எழுதிய கவிதை இது. அவரது கடைசிக் கவிதை.

வெள்ளை மேகங்கள் மழை மொழியாதாம்.
அவை வானத்தில் அலைந்து திரிகின்றனவாம்.
கருத்த மேகம் மழை மொழிந்து மண்ணுக்கு ஈரம் தருகின்றது.
இடிவெட்டி பூமிக்குப் புளகம் தருகிறது.
மின்னல் கீற்றாய் வீசி வானை ஒளிர்விக்கிறது.
கருத்த மேகங்களைக் கடல் கைகூப்பித் தொழுகிறது.
இருந்தாலும், அந்த வெண்பஞ்சுப் பொதிகள்
நீலவானின் ஊடே ஊர்ந்து நகரும்போது
என்ன ஒரு அழகு கண்ணில் விரிகிறது!
பார்த்து அப்படியே மலைத்து நிற்கிறேன்.
அந்த வெண்மையின் அழகை வேறெங்கு காண்பேன்?

மொழிபெயர்ப்பு: அ. மங்கை
நன்றி -கீற்று 

...மேலும்

Sep 22, 2011

சந்தர்ப்பவாதமும் சர்வதேசியமும் - அமரந்தா


தோழர்களே!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்’ வெனிசுவேலாவின் பொலிவாரிய குடியரசுத் தலைவர் ஹூகோ சாவேஸ் கடந்த 04.09.2009 அன்று லிபியாவில் வெளியிட்ட அறிக்கைக்கு இக்கடிதம் மூலம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. அந்த அறிக்கையில் அவர்,

“அழிக்கவே முடியாத பயங்கரவாத அமைப்பு என்று கருதப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்தொழித்த ராஜபக்சே நமது பாராட்டுக்கு உரியவர். இத்தகைய பயங்கரவாத அமைப்புகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணம்” என்று கூறியிருக்கிறார்.

ஏகாதிபத்திய ஊடகங்களை நம்பி, ராஜபக்சே இலங்கைத் தீவின் தமிழ் மக்களுக்கு இழைத்திருக்கும் வரலாறு காணாத கொடுந்துரோகத்தினை சாவேஸ் அலட்சியம் செய்துள்ளார்; புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி பல்லாயிரம் தமிழ் மக்களைக் சர்வதேசியமும் சந்தர்ப்பவாதமும் கொன்று குவித்து, இன்று மீதமுள்ள மூன்றரை லட்சம் தமிழர்களையும் முள்கம்பி வேலியிட்ட கூரையில்லா சித்திரவதை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதையும், அங்கு மின்சாரம், குடிதண்ணீர், உணவு, மருந்துகள், கழிப்பறை வசதி போன்றவை ஏதுமில்லாமல் கொடூரமான உளவியல் பாதிப்புகளுடன் தமிழர்கள் குற்றுயிராய்க் கிடப்பதையும் கண்டும் காணாததுபோல் இருக்கிறார்.

அது மட்டுமல்ல் அவர் தன் வாயால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என அழைக்க வேண்டுமானால், பதவிக்கு வருமுன் தான் கடந்து வந்த பாதையை சாவேஸ் மறந்துவிட்டார் என்று தான் பொருள்.

இந்நிலை எங்களிடையே அபாய அறிவிப்பாக ஒலிக்கிறது; நாடுகள் மட்டுமின்றி, பிற மூன்றாமுலக நாடுகளின் விடுதலைக்குமான சர்வதேச முனைப்புகளில் சாவேசின் பங்களிப்பு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். ‘ஆல்பா’(லத்தீன் அமெரிக்காவிற்கான பொலிவாரிய பொருளாதாரத் திட்டம்), “தெற்கு வங்கி” போன்ற வலிமை வாய்ந்த ஆயுதங்களால் ‘வடக்கிலுள்ள பூதத்தை’ எதிர்க்க லத்தீன் அமெரிக்க ஒருங்கிணைவை ஏற்படுத்த விழையும் தலைவர்கள் கீழ்க்காμம் தகவல்களை அறியாமல் இருப்பது அபாயகரமானது:

(1). ஞாயமான தங்களது உரிமைகளுக்காக அறுபதாண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் ஈழத்தமிழர்கள், அனைத்து ஜனநாயக வழிமுறைகளிலும் முயன்று தோற்றுப் போயினர். சிங்களப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கில் அவர்களைக் கொன்று போராட்டங்களை ஒடுக்கியது. இறுதியில் போராட்டத்திற்கு தலைமையேற்ற விடுதலைப்புலிகள் இயக்கம் வேறுவழியின்றி ஆயுதப் போராட்டத்தில் இறங்க வேண்டியதாயிற்று.

அதாவது, ஞாயமான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இலங்கையில் தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு முற்றிலும் மாறாக வெனிசுவேலாவில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியுற்ற பின்பு சாவேஸ் தேர்தல் மூலமாக ஆட்சியைப் பிடித்தார்.

(2). விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறி கடைசி கட்டப் போரில் மட்டும் இலங்கை அரசு ஒரு லட்சம் தமிழர்களைக் கொன் றொழித்துள்ளது.

(3). ஏறக்குறைய பத்து லட்சம் தமிழ் மக்கள் உலகெங்கிலும் அகதிகளாக வாழ்கிறார்கள்.

(4). போர் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட போதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் முள்கம்பி வேலிக்குள் ஆடுமாடுகளைவிடக் கேவலமான நிலையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் முகாம்களுக்கு பத்திரிக்கையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக தமிழ் இனப் படுகொலையை சாட்சியமின்றி இலங்கை அரசு அரங்கேற்றியுள்ளது.

(5). போர் நடந்த பகுதிகளையோ, தமிழ் மக்களின் முகாம்களையோ காண ஐ.நா. அமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது (அண்மையில் யுனிசெப் பணியாளர் ஒருவர் தொடர்ச்சியான கொலை மிரட்டல்களுக்குப் பின் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டது அனைத்து உலக ஊடகங்களிலும் அறிவிக்கப்பட்டது).

(6). முகாமில் தங்கியிருப்போரில் இளம் பெண்களும் ஆண்களும் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கும் சித்திரவதைக்கும் பலியாவதும், குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதும், கணவன் மனைவி வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்படுவதும், தற்போது தப்பிப் பிழைத்து வந்த சாட்சிகள் வாயிலாக அம்பலப் படுத்தப்பட்டு விட்டன.

எந்த லாப நோக்கம் கருதி சாவேஸ் இலங்கை அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இலங்கையைப் போல் சொந்த நாட்டு மக்களை ஒடுக்கும் அரச பயங்கவாதத்திற்கு ஆதரவளிப்பதை உள்ள்ள்ள்ள்ளடக்கியதாக இருக்குமானால், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் இலக்கு விளிம்புநிலை மனிதர்களை அதிகாரப்படுத்துவதாக இருக்க வாய்ப்பில்லை. ஏதுமறியா அப்பாவி மக்களை பலியிடும் தன்னலத்திற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று பெயரிட முடியாது. ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பெயரில் தமிழினத்தைத் துடைத்தழித்த ராஜபக்சேவுக்கு ஆதரவளிப்பது 21ஆம் நூற்றாண்டு சோசலிசத்தை கட்டியெழுப்பும் சாவேஸின் நோக்கத்திற்கு முற்றிலும் முரணானது.

அரசுக்கு எதிரான இராணுவக் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்திய சாவேஸ், ஏகாதிபத்திய ஊடகங்கள் அடையாளப் படுத்துவதைப் போல பயங்கரவாதி என்றும் சர்வாதிகாரி என்றும் வரலாற்றில் இடம்பெறுவதை விரும்பமாட்டார் என்பதில் ஐயமில்லை. அப்படியானால், ‘பயங்கரவாதத்தை துடைத்தழிப்பது’ பாராட்டுக்குரியது என்று அவர் கூறுவது எப்படி ஞாயமாகும்?

இலத்தீன் அமெரிக்க நாடுகளின் நண்பர்களாகிய எங்களுக்கு, இந்த முற்போக்கு அரசுகளும் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பது மிகுந்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. இந்நாடுகளின் இடதுசாரி அறிவுஜீவிகளும், இடதுசாரி அரசியல் கட்சிகளும் இலங்கை அரசின் தமிழ் இன அழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? இலத்தீன் அமெரிக்காவின் இடதுசாரிக் கட்சிகள் கட்டமைத்து வரும் 21ஆம் நூற்றாண்டு சோசலிசத்தில் தமிழர்களுக்கு இடமில்லையா?

ஏகாதிபத்திய ஊடகங்களின் சித்தரிப்பைப் புறக்கணித்து உண்மை வரலாற்றை சீர்தூக்கிப் பார்க்கும் நாங்கள், மேற்குலகில் சாவேசின் பணியை மதிக்கிறோம். பொலிவாரின் கனவை நனவாக்குவதும், ஹொசே மார்த்தியும் சே குவேராவும் எழுப்பிய தார்மீகமான அடித்தளத்தின் மீது சர்வதேச ஒருங்கிணைவை உறுதிப் படுத்துவதுமான வரலாற்றுக் கடமை சாவேசுக்கு இருப்பதையும் நாங்கள் அறிவோம்.

எனவே, சேகுவேராவின் சர்வதேசியத்துடன் தம்மை இணைத்துக் கொள்ளும் வண்ணம் ஃபிதெல், சாவேஸ், ஈவா மொரேலஸ், இன்னபிற லத்தீன் அமெரிக்க இடதுசாரி அறிவுஜீவிகள் யாவரும் கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வரும் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்; இஸ்ரேல் விசயத்தில் செய்தது போல் ஸ்ரீலங்காவுடனான அரசாங்க ராஜ்ய உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

அமரந்த்தா,

இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்.

நன்றி - கீற்று 
...மேலும்

Sep 21, 2011

இரண்டாம் ஜாமங்களின் கதை (2004) - மு.நஜ்மா


ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதி சமூக சமூகத்தின் மீதான எதிர்வினையாக தன்னைப் பிரதிபலித்துக் கொள்கின்றது. அந்த வகையில் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் சமூகம் குறித்த பிரதிகள் எவ்வாறு அடையாளம் காணப்படுகின்றன என்பது அவசியம். இஸ்லாமியப் புனைகதை வரலாற்றில் பெண்களின் உலகை மிக நீண்ட உரையாடலாகப் பதிவு செய்த நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைப் பற்றியது இந்நாவல். எந்த ஒரு இலக்கையும் நோக்கித் தன்னைத் துரிதப்படுத்திக்கொள்ளாமல் மிக ஆசுவாசமாகவும் நேர்த்தியாகவும் கதை நகர்த்தப்பட்டுள்ளது.

பூப்படைவதற்கு முன்பு / திருமணத்திற்கு முன்பு பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கின்றது. சமூகம் தன்னைப் பெண்ணாக உணர வைப்பதில் எத்தனை முனைப்பாகச் செயல்படுகிறது என்பதை ராபியா என்கிற சிறுமி வழியாகவும் திருமணக்கனவுகள், ஏக்கங்கள் திருமணத்திற்குப் பின்பு பாழாக்கப்படுவதை வஹிதா மூலமும் மண முறிவுக்குப் பின்பு பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களை மைமூன், பிர்தவ்ஸ் மூலமும் திருமணமே ஆகாமல் மனைவியாக / வைப்பாட்டியாக வாழும் வாழ்வை சமூகமே, ஏன் மனைவியே அங்கீகரிப்பதான சூழலை மார்யாயி மூலமும் விளக்குகிறார்.

பெண்களின் எல்லா அசைவுகளையும் கட்டுப்படுத்தும் ஆண்களை இயக்கமற்ற / கூர் மழுங்கிய மாந்தர்களாகப் படைத்துப் பெண்களைச் சுதந்திரமாக (மனரீதியில்) உலவவிடும் இந்நாவல் ஆணாதிக்கச் சமூகத்தைப் பழிவாங்கும் பிரதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆண் உலகின் மீதான எரிச்சலையும் அறுவெறுப்புகளையும் ஏக்கங்களையும் பேசும் இந்நாவல், ஆண்களை (உடல் ரீதியாக) கேலிக்குள்ளாக்கிக் கிண்டல் செய்வதன் மூலம் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்கின்றது. பெண்களின் பாலியல் சிந்தனைகளை மிக வெளிப்படையாக, பெண் மொழியில் பேசுகின்றது.

இஸ்லாமியக் கலாச்சார நிகழ்வுகளையும் அதையொட்டிய சடங்குகளையும் பெண்களின் அந்தரங்க உணர்வுகளோடும் எதார்த்த வாழ்க்கையோடும் பின்னிக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள் இவை, இவற்றை மீறினால் இத்தகைய விளைவு ஏற்படும் என்ற தொனியில் இல்லாமல் அச்சமூகத்திற்குள் நாங்கள் இவ்வாறு இருக்கிறோம் என்பதைப் பதிவு செய்வதாக உள்ளது. சட்டங்கள் வரையறுப்பதோ அவற்றை மீறுவதோ குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சுருங்கக் கூறினால் இஸ்லாமியப் பெண்களின் இயல்பு வாழ்க்கை மிக எதார்த்தமாகவும் மிக விரிவாகவும் எவ்வித தணிக்கையும் இன்றிப் பேசப்பட்டுள்ளது.

நன்றி - கீற்று 
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்