/* up Facebook

Aug 26, 2011

தொடரும் தவிப்பு! ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை - சாந்தி ரமேஷ் வவுனியன்

'தொடரும் தவிப்பு" -  பூங்குழலி

'தொடரும் தவிப்பு" தூக்குமர நிழலில் நிற்கும் ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை. இல்லை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலையாகாமல் தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்படாமல் சிறையிருக்கும் பேரறிவாளனின் கதை இந்த தொடரும் தவிப்பு. உண்மையை உள்ளபடி ஆவணப்பதிவாக்கியவர் ப.ழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி. 2004யூன் மாதம் வெளிவந்த இந்நூல் பற்றி எழுத வேண்டும் என எண்ணிய கணங்கள் ஒவ்வொன்றும் எதை எழுத என்று குழம்பிவிட்ட தருணங்கள் பல...

நூலைக் கையிலெடுத்து வாசித்து முடியும் வரையும் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை தவிர்க்க முடியாதபடி சிறைக்கம்பிகளும் சித்திரவதைகளுமாக துயரை அப்பிவிட்ட 'தொடரும் தவிப்பு" பேரறிவாளனின் அம்மா போல என்னுள்ளும். 19வயதில் சிறை சென்ற மகன் இன்று வருவான் நாளை வருவான் தங்களது இறுதிக்காலங்களை மகனோடு கழிக்கலாம் என்ற கனவோடிருக்கும் அறிவு அம்மாவின் அழுகையும் அறிவு அப்பாவின் துயரமும் மட்டுமல்ல மரண தண்டனை விதிக்கப்பட்ட 26பேரும் அனுபவித்த கொடுமைகள் யாவும் பதிவாகியிருக்கிறது இந்நூலில். இதுவொரு கதையில்லை ஒரு கொடுமைகளின் ஆவணம்.

உலகத்தில் மனிதவுரிமை பேசியபடி மனிதர்களை வதைக்கும் பட்டியலில் இலங்கையும் இந்தியாவும் அதிகம். சிறைக்கைதிகள் என்றால் அவர்கள் மானிட உலகுக்கே பயனற்றவர்கள் என்ற கணிப்பு இலங்கை இந்தியச் சிறைகளிலும் அங்கு பணியாற்றும் பணியாளர்களின் எண்ணமாகிறது. அந்த வகைக்குள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26பேரும் மனிதப்பிறவிகள் என்ற நினைப்பையே மறந்து வதைத்த அந்த வதைகாரரின் கதை கண்ணுக்குள் ஒரு மாரிகாலத்தை இறக்கிவிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளின் நிறைவில் மகனும் மற்றவர்களும் சிறைமுடிந்து வெளிவருகிறார்கள் என போன அறிவு அம்மாவிற்கு அவன் தூக்குத்தண்டனை மேடையிலிருந்து வரமாட்டானென்ற முடிவுடன் ஆரம்பமாகும் கதை....பேரறிவாளனைத்தேடி சோலையார்பேட்டைக்குள் நுளைந்த பொலிஸ் வாகனம் பேரறிவாளின் வீட்டு வாசலில் 10.06.1991இல் நின்றதும் அதன் பின்னான அற்புதம் அம்மாவின் அலைக்கழிவு என நீழும் கதையில் யுகங்களையும் தாண்டிய துயர் நெஞ்சை அறுக்கிறது.

விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளை. நடுநிசி 12மணிக்கு விசாரணையென்று வந்த பொலிசார். 'நளினி எங்கே ? " சொன்னால் அறிவு வருவான் என்ற போலீசின் வார்த்தையில் ஆவிகலங்கிய அறிவின் அப்பா குயில்தாசனும் அற்புதம் அம்மாவும் அந்தரித்த அந்தரிப்பு ஒரு பிள்ளையின் மீதான கொடுமையான தீர்ப்பை ஏற்க மறுக்காத ஒவ்வொரு பெற்றோரையும் நினைவில் கொண்டுவரும் மனிதர்களாகின்றனர்.

19வயதில் சிறை சென்ற அறிவு இதுவரையும் தூக்குமேடைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படாமல் முருகன் , சாந்தன் ஆகியோருடன் கருணை அடிப்படையில் ஆயுள்தண்டனை பெற்ற நளினியின் நிலை தொடரும் தவிப்பில் கண்களில் இருந்து கண்ணீரையில்லை இரத்தம் வடிய வைக்கும்படியான துயர். கற்பிணியாக சிறை சென்ற நளினியை உலகில் எந்தவொரு சிறைக்கூடமும் செய்திராத வதைகள் அந்தச் சிறையில் செய்யப்பட்டுள்ளன. அந்த வதையாவும் அற்புதம் அம்மாவின் மொழியாகி உயிரை உலுப்பும் உதிரத்தை உறைய வைக்கும் கொடுமைகள் அவை. அந்தப்பக்கங்களை படிக்கப் படிக்க பாரத தேசத்தின் மனிதாபினம் எத்தகையது என்பதை விளக்குகிறது.

சிறையில் சித்திரவதைகள் அனுபவித்து பெற்ற மகளை கடல்கடந்து அனுப்பிவிட்டு அந்தத்தாய் துடிக்கும் துடிப்பு அதுவும் ஒரு இந்திய மகளின் மகளுக்கு இந்தியா செல்லவே இழுபறி ஏற்பட்டதை எங்கே போய் சொல்லியழ ? அகிம்சையும் மனிதமும் போதிக்கப்பட்ட மண்ணில் ஒரு இந்தியப்பிரஜையின் மகளான அரித்திரா இப்போ 15வயதுப்பிள்ளையாகிவிட்ட பின்னும் பெற்றோரின் அரவணைப்போ அன்போ அறியாமல் அரித்திராவின் முகம் நெஞ்சுக்குள்ளும் கண்ணுக்குள்ளும் கனக்கிறது.

யாரால்தான் முடியும் ? தான் பெற்ற பிள்ளையைப் பார்க்கவே வீசா மறுப்பையும் அகிம்சை போதித்த மண்ணில் ஒரு அன்னையின் உணர்வுகள் புரியப்படாமல் போகின்றமையும் ? இதுதான் இந்திய தேசத்தின் இயங்கியல் வளமையோ ?

ராஜீவ் காந்தி என்ற பெரிய மனிதரின் ஆணையில் ஈழம் என்ற சிறிய தேசத்து மனிதர்கள் கொன்றும் கொடுமைப்படுத்தப்பட்டும் டாங்கிகளில் நெரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்ட கொடுமையை மறந்துவிட முடியவில்லை. ஒரு பிரதமரின் உயிருக்கு இத்தனை பெறுமதியா ?

ஒவ்வொரு கைதியும் அந்தச் இசறைக்கம்பிகளுக்குள் பட்ட வேதனைகள்,பொய்ச்சாட்டுதல்களையும் பொறுக்க முடியாத புனைவுகளும் செய்து எத்தனை கீழ் நிலையில் இழிவு செய்யலாமோ அத்தகையதொரு கொடுமை செய்யப்பட்டுள்ளது. இந்திய இலங்கையர்களின் இழிநிலை ஆயுதம் ஒரு தனிமனிதரின் நடத்தையை எவ்வளவு கீழாக கொச்சைப்படுத்தலாமோ அவ்வளவுக்கு கொச்சைப்படுத்தல் நடைபெறும். அதேபோல அந்தச் சிறையிலும் கைதானவர்கள் பற்றி அவர்களது மனைவிமார் கணவன்மார் உறவுகள் என எல்லாருக்கும் பாலியல் ரீதியான பொய்கள் கூட சொல்லப்பட்டு இம்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய இழிவு நடவடிக்கை நளினி பற்றி முருகனுக்கும் முருகன் பற்றி நளினிக்கும் மட்டுமில்லை அனைத்து கைதிகளும் மிகவும் மோசமான முறையில் பாலியல் சாட்டுதல்கள் பொய்களையெல்லாம் சொல்லியிருப்பது கதையின் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

இறுதியாய் 'இனத்துக்காகவும் , மொழிக்காகவும் வாழ்ந்து வாழும் அற்புதம் அம்மா குயில்தாசன் ஐயா இருவரும் தங்களது இறுதிக்காலத்திலாவது மங்கள் மகனுடன் வாழுவோம் என்ற எதிர்பார்ப்பும் அது போல் நளினி முருகன் தங்கள் மகளுடன் சேர்ந்து வாழும் கருணையை இந்திய மத்திய அரசு வழங்குமா ? அம்மா அப்பாவின் மடியில் உறங்க ஆசையோடு காத்திருக்கும் அரித்திராவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசின் மௌனம் உடையுமா ?

காலக்கரைதலில் மாற்றங்களும் மன்னிப்புக்களும் தேவையே. குற்றம் இன்றி சந்தேகத்தின் பெயரில் மரணக்கயிற்றில் நிற்கும் நளினி , முருகன் , பேரறிவாளன், சாந்தன் ஆகியோரும் மன்னிக்கப்பட்டு வெளிவர வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் தொடரும் தவிப்பாகவே தொடர்கிறது. பூங்குழலி சொன்னது போல 'காத்திருப்பு நீழ்கிறது....தவிப்பு தொடர்கிறது.....தொடரும் தவிப்பு ஒரு இலக்கியமல்ல உயிருடன் வதைபடும் உண்மை மனிதர்களின் வாக்குமூலப்பதிவு.

- நிலவரம் - சுவிஸ் -

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்