/* up Facebook

Aug 17, 2011

காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி


சங்கீத வித்வத் சபை:

அது சாதாரணமாக சங்கீத வித்துவான்கள் தமது திறமையை எடுத்துக்காட்டும் சபாமட்டுமல்ல! அது பாடகனின் குரல்வளம், இனிமை, கனிவு, ஞானம், கற்பனை, ராகவிஸ்தாரம், லயவிவகாரம் போன்ற சகல அம்சங்களையும் மிக நயமாகவும் வெகுநுட்பமாகவும் மதிப்பிடும் பெரும் மேதைகள், விற்பன்னர்கள், இசைச் சிம்மங்கள் நிறைந்துள்ள மாபெரும் இசை மண்டலம்.

அத்தகைய சங்கீத வித்வ சபையிலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட சங்கீத ரத்னாகரம் அரியக்குட்டி ராமானுஜ ஐயங்கார் பாட வேண்டிய நேரம் அது; தென்னாட்டின் உன்னதமான கர்நாடக இசைச் சிம்மமாக விளங்கிய ஐயங்கார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ஒரு நிலை; எனவே நிகழ்ச்சியில் தொய்வு ஏற்பாடாமல் இருப்பதற்காக அவ்வித்வத் சபையின் முன்னாள் செயலாளர் ஈ.கிருஷ்ணய்யரின் சிபார்சின் பேரில், மதுரை வீணை சண்முகவடிவு என்பவரின் மகளான, இளம் பாடகி குமாரி எம்.எஸ். சுப்புலட்சுமியை அன்றைய கச்சேரிக்கு ஒழுங்கு செய்திருந்தனர். ரசிகர்களும், இசை விமர்சகர்களும் வித்வான்களும் இசை மேதைகளும் நிறைந்த சபையில், அனுபவமில்லாத இளம் பாடகி, முகம் தெரிந்த ஒரு சில இசைஞானம் மிக்க மேதைகள் மத்தியில் தாய் சண்முகவடிவு தம்பூரா மீட்ட பாட ஆரம்பித்தார். தன்னை மறந்து இசை உலக சஞ்சாரத்துள் சபையையே இழுத்துச் சென்றுவிட்ட பாடகியின் இசை அற்புதத்தை என்னவென்பது!

போதிய அனுபவமோ, பயிற்சியோ இல்லாத 16 வயதேயான இளம் பாடகி அதுவும் இந்நாள்வரை ஆண்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்த இந்தச் சங்கீத மேடையில் "இளம் யுவதி' என்ன பாடப் போகிறாளென அயர்ச்சியுற்றிருந்த சபை, மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் இனிய கானம் காதில் இசைக்கவும், மூக்கின் மேல் விரல் வைத்து, ஆர்வத்துடன் இவரின் இசையமுதைப் பருக, இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, உசாராகியது. தன் இனிய தெய்வீக கானத்தால் சபையை மூன்று மணி நேரத்திற்கு அப்படியே பிரமித்துப்போய் இசைத் தேனில் மூழ்க வைத்துவிட்டார் அந்த இளம் பாடகி.

சபையிலே இருந்த காயன கந்தர்வ சங்கீத சாம்ராட் மகா வித்வான் செம்மை வைத்தியநாத பாகவதர், கச்சேரியைப் புகழ்ந்து "பேஷ் பேஷ் சபாஷ்!! ' எனப் பாராட்டியபடி முன்னே வந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தமையும், டைகர் வரதாச்சாரியார், ஹரிகேச நல்லூர் முத்தையாபாகவதர், வீணை வித்வான் சாம்பசிவ ஐயர் போன்ற சங்கீத மேதைகளில் மெய் சிலிர்த்த ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் அவரை மென் மேலும் இத்துறையில் உழைக்க ஊக்கம் கொடுத்தன. இசை மாமேதைகள் பிரமிப்படையும் வண்ணம் இவ் இளம் வயதில் தன் இனிய தேவகானத்தால் கட்டிப் போட்டு விட்ட குமாரி எம். எஸ். சுப்புலட்சுமி, வீணை வித்வான்கள் பலரால் பாராட்டப்பட்ட இசைப்பாரம்பரியம் மிக்க வீணை வித்துவாட்டி சண்முகவடிவின் மகளாக 1916 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி மதுரை மேல அநுமந்தராயன் வீதியிலிருந்த வீட்டில் பிறந்தார்.

இவரது தந்தையார் வழக்கறிஞரும் இசையிலே லயிப்புற்ற கலா ரசிகருமான திரு சுப்பிரமணிய ஐயராவார். வீணை சண்டமுகவடிவின் தாயார் அக்கம்மாள் பிடில் வாசிப்பதில் திறமையுள்ளவராகவும் தந்தையார் சுவாமிநாதன் மிகச் சிறந்த இசை ரசிகராகவும் பரம்பரை பரம்பரையாகவே இசையை ஆராதித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இளமையிலே எம்.எஸ். அவர்களை குஞ்சம்மா என்றே அழைத்தனர். குஞ்சம்மாவுக்கு சக்திவேல் என்றொரு அண்ணனும் வடிவாம்பாள் என்றொரு தங்கையும் உடன் பிறந்தவர்கள். தாய் சண்முகவடிவிடமே வீணை கற்ற குஞ்சம்மாள் தாயாரின் குருவான வீணை தனம்மாளின் அறிவுரைப்படி மதுரை ஸ்ரீநிவாச ஐயங்காரிடம் முறையாக வாய்ப்பாட்டு இசையைக் கற்கத் தொடங்கி மிகத் திறமையாகக் கற்று வந்தாள்.

கும்பகோணத்திலே மகாமகத் திருவிழா வெகு கோலாகலமாக இடம்பெற்றபோது, இதற்கு முன் நடைபெற்ற எந்த நிகழ்ச்சிகளுக்குமே இல்லாத வரவேற்புக் கிடைத்தது. இரு தடவைகள் (Once more) திரும்பவும் பாடும்படி மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து ரசித்த சிறப்பும் இடம்பெற்றது. தனது மதுரகானத்தால் மக்களை ஆகர்ஷித்து மனதில் இசை எழுச்சியை ஏற்படுத்திய பெருமை இந்தியாவின் இசைப் பொக்கிஷமாகத் திகழ்ந்த செல்வி குஞ்சம்மா என்ற எம்.எம். சுப்புலட்சுமியையே சாரும். மக்கள் பெரு வெள்ளமாகத் திரண்டிருந்த இம் மகாமகத் திருவிழாவிலே காந்தீயவாதியான டி. சதாசிவமென்பவர் கதர்த் துணி விற்பனையில் அமோகமாக ஈடுட்டிருந்தார். இவரும் சினிமா இயக்குநரான கே. சுப்பிரமணியம் என்பவரும் அப் பெண்மணியின் இசையில் பெரிதும் மயங்கி இத்தகைய இனிய கீதத்தை சகல மக்களும் ரசிக்கும் வகையில் சினிமா மூலம் வெளிக்கொணர வேண்டுமெனப் பெரிதும் முயன்றனர். எம்.எஸ்.சின் இசையால் சினிமா உலகமே பெரும் உந்து சக்தி பெற்று கம்பீரநடை போடுகின்ற இவர்களின் கணக்கெடுப்பு சிறிது பிசிறும் இன்றி வெற்றிவாகை சூடியது.

பிரேம்சந்த் என்ற புனை பெயரைத் தாங்கிய தன்பத்ராய் என்பவர் முதலில் உருதுவில் எழுதிப் பின் இந்தியில் மொழி பெயர்த்த சேவாசதன்' என்ற நாவலை எஸ். அம்புஜம்மாள் என்ற சமூக சேவகி தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். இரண்டாம் தாரமாக மணம் முடித்து வாழ்வில் சிக்கலுற்றுத் தேச சேவைக்கே தன்னை அர்ப்பணிக்கும் பெண்ணை மையமாகக் கொண்ட இந் நாவலை இயக்குநர் சுப்பிரமணியம் சினிமாத்திரையில் ஏற்றியபோது, அதன் கதாநாயகியாக எம்.எஸ். அவர்களே தோன்றிப், பாடியும், நடித்தும் பெரும் புகழ் ஈட்டிக் கலைவானில், ஒளிவிடும் நட்சத்திரமாக பிரகாசிக்கத் தொடங்கினார்.

இவரின் வரவால் சினிமாத்துறை "ஓகோ' எனக்களைகட்டவே பலருடைய வற்புறுத்தலின் பேரிலும் சதாசிவத்தின் தயாரிப்பின் பேரிலும் பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் ஜி.என்.பி. துஷ்யந்தனாக நடிக்க இவர் சகுந்தலையின் பாத்திரமேற்று நடித்து தன்னுடைய கலைத்திறனுக்கெல்லாம் முத்திரை பதித்துக் கொண்டார். தொடர்ந்து சத்தியவான் சாவித்திரி படத்தில் நாரதராகவும் மீரா படத்தில் பக்த மீராவாகவும் பாத்திரமேற்று மக்கள் மனதைத் தன் நடிப்பாலும் இசையாலும் கிறங்கடித்து மயங்க வைத்தார். இத்தனை திறமைகளும், மிகச் சாதாரண கீழ்மட்ட மக்கள் மத்தியில் தேவதாசிக் குலத்திலிருந்து வந்த பெண்ணிடம், பொதிந்து கிடந்ததே என எண்ணியெண்ணி மக்கள் வியந்தனர். வானளாவிய புகழும் பெருமையும் கீர்த்தியும் அவரைச் சூழ்ந்து படையெடுத்தாலும் எம்.எஸ். அவர்கள் மிக எளிமையாகவும், பொறுமையாகவும், அமைதியாகவும், வெகு அடக்கமாகவும், இசையோடு இணங்கும் போதெல்லாம் வெகு உருக்கமாகவும் அன்பாகவுமே தோற்றமளித்தார். கானத்தின் இனிமையால் இவர் தெய்வீகப் பொலிவு நிறைந்து விளங்கினார்.

இசையுலகில் பெரும் கவனிப்பை ஈர்த்துவிட்ட எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பம்பாயில் ஒரு இசை நிழ்ச்சி காத்திருந்த வேளையில் இவருக்கு வயலின் வாசிக்க உடன்பட்டிருந்த கலைஞர், ஒரு பெண்ணுக்கு தான் வயலின் வாசிப்பதா என மறுத்து விட்டார். பக்கவாத்தியம் இல்லாமல் எப்படி நிகழ்ச்சியை நடத்துவதென யோசித்துத் துயருற்றிருந்த வேளையில் பத்திரிகையாளரும் தேச பக்தருமான சதாசிவம் அவர்களே இவருக்கு துணையாக பம்பாய் சென்றதோடு, பெண் பாடகிக்கு வயலின் வாசிப்பதை மரியாதைக் குறைவானது எனக் கச்சேரியையே ஒதுக்கி வைத்த, கோவிந்தராஜபிள்ளை என்பவருக்கு பதிலாக, பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோவின் இசையமைப்பாளராகவும் முன்னாளில் பம்பாய் சினிமா ஸ்டூடியோவின் வயலின் கலைஞராகவுமிருந்த பரூர் எஸ். அனந்தராமய்யரே, பின்னணி இசைக்க வைத்தார். கச்சேரி திறம்பட நடைபெற்றது. தனது உழைப்பாலும், இறைவன் அருளிய இசைக் கொடையாலும், உலகப் புகழ்பெற்ற இசைமேதையாகப் பலராலும் பாராட்டப்பட்டாலும் கூட இவர்களுடைய வாழ்வு மலர்ப்படுக்கையாக இருக்கவில்லை. கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையாயிருந்ததென்பதையும் நாம் மனங்கொள்ளவேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜ ஐயர் மங்களம்மா தம்பதியின் மூன்றாவது மகனான சதாசிவத்தை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்ட இசை அரசி தன் வாழ்வு முழுவதையுமே அவரிடம் அர்ப்பணித்துத் தன் இசை வளர்ச்சிக்குத் துணை தேடிக் கொண்டார். திரு. சதாசிவத்திற்கு முதல் மனைவி மூலம் ராதா, விஜயா என இரு பெண்கள் உளர். இவர்களும் இசை வல்லுனர்களாக இருந்தபோதும் ராதாவே அம்மாவுடன் பிற்காலத்தில் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இசையரசி நடித்த சேவாசதனம் சகுந்தலை என்ற திரைபடங்களால் கிடைத்த பணத்தைக் கொண்டே கல்கி சஞ்சிகை கம்பனி தொடங்கப் பெற்று மலர்ச்சி பெற்றது. அநாதை நிலையங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், கட்டிடங்களுக்கான நிதிகள், நினைவு மண்டபங்கள், நினைவு சிலைகள், ராம கிருஷ்ணமிஷன், சங்கீத வித்வச் சபை, கஸ்தூரிபா காந்தி நிலையம், அமெரிக்காவின் உள்ள பிற்ஸ்பர்க் ஆலயம் உட்பட பல்வேறுபட்ட ஆலய நிதிகளுக்காக என பல கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற நிதிக் கச்சேரிகளை நடத்தி இந்திய சமுதாயத்திற்கே பெரும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார். அவருடைய திறமையையும் மேதைமையையும் ஒழுங்காகத் திட்டமிட்டு வழி நடத்தி இத்தகைய பெருந்தொகையான பண வருவாயையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் ஒழுங்கான முறையில் அவற்றிற்கு கணக்கு வைத்துச் சரியாக அவற்றைப் பயன்படுத்த அவரது துணைவர் செய்த சேவையும் அர்ப்பணிப்பும் தியாகமும் கூட இச் சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூரத் தக்கது.

தன் குரலிலே வீணை இசையைக் குடியிருத்தியுள்ளாள் என இசை மேதை சாம்பசிவ ஐயரால் பாராட்டுப் பெற்ற இம் மேதை ஐம்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்து யாழ். விவேகானந்தா வித்தியாலய கட்டிட நிதிக்காக இசைக் கச்சேரி செய்த போது "இராம நந்து புரோவா' என்ற தோடி ராக வர்ணத்தை உருக்கமாக இசைத்தார். இவர் பாடிய காற்றினிலே வரும் கீதம், கிரிதர கோபாலா, நித்திரையில் வந்து என்ற பாடல்களையெல்லாம் பட்டிதொட்டியெல்லாம் கேட்க முடிந்தது. பாபநாச சிவம் இயற்றிய ""கதிர் காமக் கந்தன் கழலினைப் பணிமனமே'' என்ற காம்போதிராகப் பாடலும் இவருடைய தெய்வீகக் குரலில் மக்களை மகேசனருகே அழைத்துச் சென்றது. பத்மபூஷன், ""பாரதரத்னா'' எனப் பல உயர் பட்டங்களுக்கும் பெருமை தேடிக் கொடுத்த இந்த இசை மேதை 1962 இல் ஐக்கிய நாடுகள் சங்கத்தில் ராஜாஜி இயற்றிய ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடி பெரும் கரகோஷத்தைப் பெற்றார்.

சங்கீத அக்கடமி, ரவீந்திரநாதரின் பாரதி பல்கலைக்கழகம், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், டொல்கி பல்கலைக்கழகம் ஆகியன இவருக்கு டாக்டர் பட்டத்தைக் கொடுத்துக் கௌரவித்துள்ளன. ஏராளமான பட்டங்களையும் கௌரவங்களையும் பணமுடிச்சுகளையும் பெற்றுக் கொண்ட இவர், சிறிதும் சலனமின்றி அவற்றையெல்லாம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்குமேயான உடைமைகளென ஆக்கிக் கொண்டார்.1974 இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான மக்காசாய் விருதை பெரும் பண முடிப்போடு பெற்றுக்கொண்ட இவருக்கு இன்னும் பல நாடுகளிலிருந்து விருதுகளும் கௌரவங்களும் தேடி வந்தன. 1982 இல் லண்டனில் பரதக்கலை விழாவை றோயல் ஆர்ட் மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படியே 77 இல் பிட்ன்பர்க்கிற்கும் 87 இல் மாஸ்கோவிற்கும் இசைப் பயணம் சென்று வந்தார். கெய்ரோவில் இவரது இசையைப் கேட்டு மயங்கிய உம்குல்தூம் என்ற புகழ் பெற்ற பிரபல பாடகி இவரை கட்டித் தழுவி, தன் பாராட்டைக் கைப்படவே எழுதி வழங்கினார். இப்படிப்பட்ட மாமேதை இன்று நம்மிடையே இல்லையே என்ற ஏக்கம் என்றும் எம்மை வருத்திக் கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமேயில்லை.

நன்றி - காலைகேசரி

1 comments:

DrPKandaswamyPhD said...

நல்ல விவரங்கள். கலைத்துறையில் முடி சூடா ராணியாக வலம் வந்த எம்.எஸ், அம்மா ஒரு சகாப்தம்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்