/* up Facebook

Aug 3, 2011

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஆளுமைகளின் சேர்க்கை - லதா


தீர்க்கமான சிந்தனை, ஆழ்ந்த அறிவு, சமூகம் சார்ந்த உண்மையான அக்கறையோடு தற்காலத்தில் வாழ்ந்த மிகச் சில உலகத் தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவர் ஜூலை 6ஆம் தேதி புதன்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. 1932ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவத்தம்பி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்தின் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. 17 ஆண்டு காலம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிவத்தம்பி, கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறையில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள பேராசிரியர் கா.சிவதம்பி தமிழ்மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திறனாய்வாளர், சமூக வியலாளர், அரசியல் சிந்தனையாளர், பல்துறை புலமை கொண்டவர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இக்கட்டுரை.

சிங்கப்பூரில் 1992ஆம் நடைபெற்ற முதல் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் அறிஞர் சிவதம்பியின் உரையை முதன் முதலாகக் கேட்டபோது, அசாதாரணமான அறிவாற்றல் பெற்ற, சமூக அக்கறையுள்ள பேரறிஞர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்பது புரிந்தது. அப்போதுதான் செய்தியாளாராகப் பணி தொடங்கியிருந்த எனக்கு தமிழ்த்துறை சார்ந்த அறிஞர்கள் பற்றியோ, தமிழியலின் விரிந்த பரப்பு குறித்தோ ஆழ்ந்த அறிவு இருக்கவில்லை. எனினும் அவரிடம் பேச வேண்டும் என்ற அவா வெகுவாக ஏற்பட்டிருந்தது. எழுத்தாளர்களும் சினிமாத்துறை சார்ந்தவர்களும் “என்னைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் என்னை எப்படி நீ பேட்டி காண வரலாம்” என பயமுறுத்தி இருந்ததால் மிகுந்த தயக்கதோடு, அவரிடம் சென்று பேட்டி கேட்டேன். உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும் என்று கேள்வியே அவர் எண்ணத்தில்கூட எழவில்லை. மிகுந்த பணிவோடும் அன்போடும், “1 மணிக்கு வாம்மா பேசலாம்” என்றார். பலபேர் அவருடன் பேசிக் கொண்டிருந்த போதும், நேரம் கொடுத்ததை மறக்காமல், “சொல்லம்மா உனக்கு என்ன தெரிய வேண்டும்,” என்று ஆரம்பித்தார்.

தமிழ்க் கல்வி, குறிப்பாக இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்றுக் கொடுப்போருக்குத் தேவையான ஆற்றல், சிக்கல், சவால்கள் என ஆரம்பித்து தமிழ் மொழி, இலக்கியம் என பல தளங்களிலும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர் அளித்த மிக ஆழமான பேட்டி ஒலிநாடாவில் பதிவாகவில்லை. எனினும் மனதிலும் குறிப்பேட்டிலும் பதிந்து கொண்டவற்றை உள்வாங்கி, செய்திதாள் வாசகர்களுக்கு ஏற்ப செய்தி எழுதி விட்டாலும் மிகவும் பதட்டமாகவே இருந்தது. என்றாலும் மீண்டும் அவரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தே இருந்தது. எழுதியதில் ஏதாவது தவறு கண்டுபிடித்து விடுவோரோ என்ற பயத்தோடும், என்னைச் சந்திக்க அவர் மீண்டும் நேரம் ஒதுக்குவாரோ என்ற கவலையோடும் அவரை எப்படிச் சந்திப்பது என்று யோசித்தேன். அப்பொது தமிழ் முரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அமரர் வை.திருநாவுக்கரசுவிடம், பேராசிரியர் சிவத்தம்பியைச் சந்திப்பீர்களா எனக் கேட்டேன். “இலங்கையைச் சேர்ந்த பேரறிஞர்களில் ஒருவர் அவர். நிச்சயம் சந்திக்க வேண்டும்,” என்றார். பேராசிரியரைச் சந்திக்க மீண்டும் வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் மறுநாள் காலையிலேயே அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பத்திரிகை ஆசிரியருடன் அவரைச் சென்று பார்த்தேன். அனுபவத்திலும் வயதிலும் அறிவிலும் பன்மடங்கு பெரியவரான வை.திருநாவுக்கரசுடன் எவ்வளவு மரியாதையுடன் பேசினாரோ, அதே அன்போடு என்னிடமும் உரையாடினார்.

அவர்தான் பேராசிரியர் சிவத்தம்பி.

எந்தவிதமான பேதங்களும் இன்றி, எல்லா மனிதர்களுடனும் ஒரே மாதிரியான அன்போடும் கனிவோடும் பேசும் அவரைப் போன்ற அறிஞர்களைச் சந்திப்பது மிக மிக அரிது.

எத்தனை பட்டங்கள், பெருமைகள், சிறப்புகள், மகுடங்களைப் பெற்றிருந்தபோதும் மனிதரைக் காட்டிலும் பெரிது எதுவுமில்லை என்றே இறுதி வரை வாழ்ந்தவர்.

“எந்த மனிதனும் தான் சந்தித்த - உறவாடிய மனிதர்கள் எல்லாரினதும் தாக்கங்களினாலும் செல்வாக்கினாலும் உருவாக்கப்பட்ட ஓர் ஆளுமைச் சேர்க்கைதான்,” என்பார் பேராசிரியர்.

தமிழ்ச் சமூகத்தின் காத்திரமான பல ஆளுமைகளின் ஒரு தனிச் சேர்க்கை அவர்.

ஈழத்தவர்கள் பெரும்பாலும் பேராசிரியர் என விளிப்பது அவரை மட்டும்தான். உண்மையிலேயே ஓரு பேராசானாக வாழ்ந்த அவர், சந்திப்பவர்கள் அனைவரிடத்திலும் நெருக்கமும் ஈர்ப்பும் ஏற்படுத்தும் அசாதாரணமான மனிதர்.

இலக்கியம், அரசியலில் இருந்து சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் வரை வரலாற்றுப் பின்னணியோடு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பல சொல்லாக்கங்களைச் செய்வார். ஆழகான, அர்த்தமுள்ள தமிழ்ச் சொற்கள் அருவியாக அவர் பேச்சில் சொரியும். அதுவரை எங்கும் படித்தோ, கேட்டோ இராத கருத்தாக்கங்கள் வியக்க வைக்கும். இடையிடையே அவர் எழுப்பும் கேள்விகள் அறிவுநிலை தாண்டியும் சிந்திக்க வைக்கும்.

ஒருமுறை அங் மோ கியோ நூல் நிலையத்தில் உரை நிகழ்ச்சி முடிந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, நாகரிகம் என்பதும் பண்பாடு என்பது எப்படி வேறுபடுகிறது என்று விளக்கினார். நாகரிகம் என்பது காலம் சார்ந்தது. பண்பாடு என்பது எப்போதும் நம்முடனேயே இருப்பது என்று கூறிய அவர், கலாசாரம் என்ற வட சொல்லைவிட, பண்பாடு என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய அர்த்தச் செறிவையும் எடுத்துக்கூறினார்.

பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றிப் பேசியபோது, உலக சினிமாவில் அவர் ஒரு முக்கியமான கலைஞர் என்பதையும், அவரது நடிப்பு சினிமா படிப்பில் ஒரு பாடமாக வைக்கப்பட வேண்டியதன் கட்டாயத்தையும் எடுத்துக்கூறினார். ஜெர்மானிய நாடகக் கலைஞரான பெர்தோல்ட் பிராஃக்டின் (Bertholt Brecht) பல நாடகவியல் சிந்தாந்தங்களை அவர் உருவாக்குவதற்கு முன்னரே, அவற்றைச் செயல்படுத்திக் காட்டியவர் சிவாஜி. அவரின் நடிப்பை அந்தக் காலகட்டத்தின் கண்ணோட்டத்தில், தமிழ் மரபின் பார்வையில் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

“தமிழ்ச் சமூகத்தைத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினூடகப் புரிந்துகொள்வது முக்கியம். மேற்கத்தியக் கல்வியாலும் சிந்தனைகளாலும் தமிழ்ச் சமூகத்தையோ சிந்தனையையோ விளங்கிக்கொள்ள முடியாது,” என்று குறிப்பிட்டவர், மேற்கத்திய தத்துவ நூல்கள் பலவற்றின் முன்னோடியாகத் திருக்குறள் திகழ்கிறது என்றார். “திருக்குறள் முறையாக உலக அரங்கில் முன்னெடுக்கப்படவில்லை” என்றதுபோலவே, மாணிக்கவாசகரும் இருட்டடிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்பட்டார். தேவாரத் திருவாசகங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பியும் அன்றைய அரசின் சிந்தனைப் போக்கும், முற்போக்கான சிந்தனை பெற்றிருந்த மாணிக்கவாசகருக்கு அதிக இடம் கொடுக்கப் பயந்துள்ளது என்றார்.

இப்படி, ஆய்தறிந்த அவரது கருத்துகளும் விவாதங்களும் எவரது சிந்தனையையும் அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் கருத்தாழம் பெற்றவை.

தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் ஆழமான புலமை பெற்றிருந்த பேராசிரியர், தமிழ் மொழி, இலக்கியம், கலைகள், சமூகம், பண்பாடு, மதம், இனம், அரசியல் என பல தளங்களிலும் மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் 70 மேற்பட்ட நூல்களையும் பலநூறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

தமிழ் விமர்சனத் துறையை முன்னெடுத்தவர்கள் எனக் கூறப்படுபவர்கள் கா.சிவத்தம்பியும், அவரது ஆசிரியரான கைலாசபதியும். தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு மதிப்பையும் தகுதியையும் ஏற்படுத்தித் தந்தவை இவர்களின் எழுத்துகள்.

“இலக்கிய விமர்சகனின் அடிப்படையான பணி வெறுமனே அபிப்பிராயம் மட்டும் சொல்வதில்லை,” என்று விமர்கனின் பணி குறித்து பேராசிரியர் கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்று. படைப்பாளிகள் சார்ந்தல்லாமல், படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு உவப்பு வெறுப்பில்லாமல் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வந்தவர் பேராசிரியர்.

தமிழ் நாடகத்தில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதை, தமிழ் சினிமா, கணினி வழித் தமிழ் மக்கள் தொடர்பாடல் சார்ந்த அனைத்துத் துறைகள் வரையிலும் தொடர்ந்து ஆழமான தேடலும் சிந்தனையும் கொண்டிருந்த அவர், அவற்றின் சமூகவியல் தன்மைகள் குறித்து ஆராய்வதிலும் அயராது உழைத்தார்.

மார்க்சிய சிந்தனையாளரான பேராசிரியர், அதனையும் விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே அணுகி வந்துள்ளார்.

“மார்க்சியம் காலத்திற்கேற்றபடி வளர்க்கப்படவேண்டும். மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகளை, சுரண்டல் முறைகளை ஒழிக்க முடியாது. ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் பயன்படுத்தி வளரும் நிறுவனங்கள், மார்க்சிய சிந்தனையை ஊக்குவிக்கப் போவதுமில்லை. ஆனால் மார்க்சியம் ஒரு முக்கியமான இண்டலெக்சுவல் இயக்கமாக இருக்கும். அதனைப் புதிய சூழலுக்கு ஏற்ப, புதிய முறையில் சிந்திக்க வேண்டும். மார்க்சியம் தொடர்ந்து மனித விமோசனத்திற்கான இலக்குகளைக் காட்டுகிற அளவு, தத்துவமாக நீடிக்கும்,” என்ற நம்பிக்கையைக் கொண்ட அவர், தமிழ்ச் சமூகத்தின் தன்மைக்கேற்ப மார்க்சிய தத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தையுடையவர்.

அதனாலேயே ஆன்மீகம் குறித்தும் பண்பாடு குறித்தும் தமிழ் தேசியம் குறித்தும் அவரால் ஆழமாகப் பேச முடிந்துள்ளது. எனினும் அவரின் இந்தச் சிந்தனைப் போக்கே, அவரை முரண்பட்ட கருத்துகள் உள்ளவராக ஒருசிலர் குறைகூறவும் காரணமாக அமைந்தது.

தமிழ் தேசியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாக உணர்ந்தறிந்தவர் பேராசிரியர். அதேநேரத்தில் அதில் பேணப்பட வேண்டிய சமத்துவம் குறித்து அவருக்கு விமர்சனங்கள் இருந்தன.

அவர் தம்மை ஈழத்தமிழன் என்று சொல்லாமல் ‘இலங்கையர்’ என்று சொல்வது தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என அவர் விரும்பிய சம உரிமையின் அடிப்படையில்தான். “இலங்கை நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சியில் பெரும் பங்கை ஆற்றி வந்துள்ள தமிழர்கள், அந்நாட்டில் சம அதிகாரமும் அந்தஸ்தும் பெற்றிருக்க வேண்டும். அதற்கான முழு உரிமையும் தமிழ் மக்களுக்கு உள்ளது,” என்று உறுதிபடக் கூறியவர் அவர்.

“இலங்கை மக்களுக்கிடையே புரிந்துணர்வு இல்லாமல் போனதற்கு நாட்டின் மொழிக் கொள்கையே முக்கிய காரணம். தமிழர்கள் சிங்களமும் சிங்களவர்கள் தமிழும் படிக்க வேண்டும்,” என்ற கூறிய அதேநேரத்தில், ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்.

“ஆங்கிலத்தில் தொடக்கக் கல்வியில் கற்பிப்பதன் மூலம் பிள்ளைகளுக்கு பெரிய அறிவு வருவதாக சொல்வதற்கு என்ன சாத்தியப்பாடு இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பிள்ளையினுடைய பண்பாட்டுச் சூழலில் இல்லாத விடயங்களாக அங்கு பேசப்படுகின்றன. வீட்டில் அந்தச் சூழல் இல்லையென்றால் அந்தப் பிள்ளைக்கு அந்த மொழி வராது. தமிழன் என்கிற முறையில் சொல்கிறேன், தொடக்க நிலைக் கல்வி தாய்மொழியில் தான் இருத்தல் வேண்டும்,” எனப் பலமுறை அவர் வலியுறுத்தியுள்ளார்.

90களின் கடைசியில் வெளிநாடுகளில் இரண்டாம் மொழியாகத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் பாடநூலாக்கத்திற்காக சில நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்து பணிபுரிந்தபோது, அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பாடநூலாக்கம் தொடர்பாகவும் வேறுதுறைகள் சார்ந்தும் அவர் பலருடனும் உரையாடிக்கொண்டே இருப்பார். இரவு 3, 4 மணி வரை அவரது விவாதங்கள் தொடரும். எழுத்தில் காண முடியாத காரசாரமான விவாதங்களையும் கருத்துகளையும் அவரது நேரிடி பேச்சில் காணலாம். எத்தனை ஆழமாக பேசுபவர் செல்கிறாரோ, அதைவிட ஆழத்திற்குச் சென்று அதுவரை அறிந்திராத கோணத்தில் சிந்திக்க வைப்பார். விவாதங்களையும் எதிர்க்கருத்துகளையும் விரும்பி வரவேற்பவர் பேராசிரியர்.

சங்க இலக்கியம் முதல் சினிமாப் பாடல்கள் வரை அறிந்து வைத்திருந்த பேராசிரியர், பழையானவற்றைக் கழிந்து, புதியவற்றைப் புகுத்துவதில் முனைப்பானவர். வாழும் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப தமிழ்ப் பாடம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவார். தமிழ்ப் புலவராக, ஆசிரியராக, ஆர்வலராக இருந்த அதேவேளையில், மாணவர்களின் உளவியலையும் கற்றல் திறன்களையும் அறிந்தவராக இருந்தார். அதனால் மாணவர்களுக்கு அறிவூட்டுவதில் மொழியையும் தாண்டி, அவர்களது உளத்தேவைகளையும், பண்பாட்டு உருவாக்கத் தேவைகளையும் அவரால் உணர முடிந்தது. அதற்கேற்ப பாடங்களை உருவாக்க முடிந்தது.

இலக்கிய, மொழித் துறைகளில் ஈடுபாட்டு காட்டிய அளவுக்கு பொதுத்துறையிலும் ஈடுபாட்டுடன் பங்களித்துள்ளார் பேராசிரியர். அவரின் சமூக ஈடுபாடும் முயற்சிகள் - முன்னெடுப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுக் குறிப்புகள்.

பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் விளங்கிய பேராசிரியர் சிவத்தம்பி, பொதுவுடைமை இயக்கவாதி. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பித்த அவரது பொதுவுடைமை இயக்கம் பல்வேறு தளங்களிலும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் சாதிக் கொடுமைகளுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் வரலாறு அறிந்தது. தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தும் படைப்புக்களை ஊக்குவித்தவர் அவர். கல்வித் துறையிலும் இலக்கியத் துறையிலும் அவரது ஆதிக்கம் - சார்புநிலைகள் குறித்து எஸ்.பொ. போன்றவர்கள் விமர்சனங்களை எழுப்பினாலும், எஸ்.போ உட்பட பலருக்கும் அவர்களது எழுத்துகளுக்கும் ஆக்கபூர்வமான விமர்சன ஆதரவை வழங்கியிருப்பவர் பேராசிரியர்.

ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பேராசிரியர் ஆற்றியிருக்கும் பங்கு முக்கியமானது.

ஈழத்தில் போர் நடைபெற்ற காலங்களில் தமிழ் குடிமக்கள் குழு ஒன்றியத்தின் தலைவராகவும்; 2005 வரை அகதிகள் மறுவாழ்வு நிறுவனத் தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார் பேராசிரியர். 80களில் இலங்கை அரசு - தமிழ்ப் போராளிகளுக்கிடையிலான போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்த இரு தமிழர்களில் பேராசிரியரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைந்த தமிழப் பகுதிக்கு முதலமைச்சராக, அவர் பரிந்துரைக்கப்பட்டவர்.

பல அச்சுறுத்தல்களுக்கிடையிலும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடனும் அரசாங்கத்துடனும் பல நிலைகளில் இறுதிக் காலம் வரையில் தொடர்ந்து எழுதி, பேசி, விவாதித்து வந்துள்ளார் பேராசிரியர்.

2007க்குப் பின்னரான போர்க் காலங்களில் இலங்கையின் தினக்குரல் பத்திரிகையில் புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதினார்.

போர்க் காலங்களில் போர் நிலவரம் குறித்த உண்மையான தகவல்களையும் நிலைப்பாடுகளையும் தெரிந்துகொள்ள அவரை அடிக்கடி தொடர்புகொள்வேன். பல காரணங்களுக்காக பல கருத்துகளை அவர் வெளிப்படையாகச் சொல்வதில்லை. அதாவது எழுதுவதோ பேசுவதோ இல்லை.

ஆனால் குறிப்பிட்ட தரப்பினரிடம் நேரடியாகவும் துணிச்சலாகவும் அவர் பேசியுள்ளார். அவர் கூறிய செய்திகளும் செயல்களுக்கான விளக்கங்களும், செய்திகளை தார்மீக நியாயத்தோடும் பக்கச் சார்பற்றும் பார்க்கவும் எழுதவும் எனக்கு மிகவும் உதவின.

அவரது நியாயமான, துணிந்த கருத்துகளால் அவருக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஆபத்துகள் ஏற்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தினர் ஒழிக்கக் கருதிய தமிழ் அறிஞர்கள் பட்டியலில் பேராசிரியர் பெயரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஒரு காலத்தில் புலிகள் அவரை எதிரியாக நினைத்தனர். பின்னர் அவரின் கருத்துகளின் உண்மையைப் புரிந்துகொண்டு அவரது ஆலோசனைகளைக் கேட்டனர். இலங்கை அரசாங்கமும் ஒரு கட்டத்தில் அவரைப் புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி சிரமங்களைக் கொடுத்தது. தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குச் சென்ற அவர் அதே விமானத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வானில் கடத்தப்பட்ட அவருடைய மைத்துனருக்கு என்ன ஆனதென இன்றுவரை தெரியவில்லை.

ஆனால் தம்மைக் குறை சொல்பவர்கள், விமர்சிப்பவர்கள், களங்கப்படுத்தியவர்கள், கொல்ல நினைத்தவர்களையெல்லாம் அவர் மன்னித்தார். தம்மை எதிர்த்தவர்களையும் நேசித்த உயர் தமிழ்ப் பண்பாளர் பேராசிரியர்.

செம்மொழி மாநாட்டுக்கு முதலில் செல்ல மறுத்த அவர், பின்னர் ஆய்வுக் கட்டுரை தேர்வுக் குழுவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் மாநாட்டில் பங்கேற்று பேசியதற்கு பலரும் விமர்சனங்கள் பல எழுப்பினர். ஆனால் அவர் அப்படிச் செய்ததற்கு காரணம் பற்றி விமர்சித்தவர்கள் சிந்திக்கவில்லை.

அவர் செம்மொழி மாநாட்டுக்குச் சென்றாலும் தமது கருத்துநிலையில் உறுதியாக இருந்துள்ளார் என்பதற்கு, பேராசிரியர் கா. சிவத்தம்பியின் மறைவுக்கு பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதிய செய்தி ஓர் அத்தாட்சி.

“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது அன்றைய முதல்வரை அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில் சந்திக்கப் போயிருந்தபோதுதான் நாங்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டோம். சிவத்தம்பி மாறவே இல்லை. முதல்வருக்கு உவப்பளிக்காத ஆனால் சொல்லியே ஆகவேண்டிய பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டே போனார்.முதல்வரிடம் பேசியபோது சிவத்தம்பியின் ஆளுமை எப்படி வெளிப்பட்டது என்பது இப்போதும் என் நினைவில் இருக்கிறது.”

எத்தகைய ஆபத்துகள் பேராசிரியரைச் சூழ்ந்திருந்திருந்தும், அவற்றையும் மீறி அவர் எவ்வாறு செயல்பட்டு வந்தார் என்பதையெல்லாம் புரிந்துகொள்வது; அரசியல் மற்றும் சமூகவியலின் பேராசிரியர் காட்டிவந்த தன்னலமற்ற ஈடுபாட்டையும் அறிந்துகொள்ள உதவும்.

தமது கருத்துகளிலும் செயல்பாடுகளிலும் தவறோ பிழையோ இருந்தால், எவரிடமும் அதை ஒப்புக்கொள்ளச் சிறிதும் தயங்கியவரல்ல பேராசிரியர். ஆரம்பகாலத்தில் மார்க்சிஸ்டுகள் தமிழ் தேசியவாதத்தைக் கையில் எடுக்காதது தவறு என்பதை ஒப்புக்கொண்டவர் அவர்.

சிங்களம் நன்கு அறிந்த அவருக்கு பல துறைகளிலும் சிங்கள நண்பர்கள் இருந்தனர். அரசியல் தலைவர்களும் அவரிடம் நேரிடியாக கருத்துப் பரிமாறுவார்கள்.

எல்லாத் தரப்பினரிடத்திலும் ஆளுமையுடனிருந்த பேராசிரியர், தமிழ் தேசியம் தொடர்பான சில கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம், சில காரியங்களை முன்னெடுத்திருக்கலாம் என்ற வருத்தம் பலருக்கு உண்டு.

அவர் அப்படிச் செய்யாதற்கு தனிப்பட்ட காரணம் மட்டுமே இருக்கும் என நான் கருதவில்லை. ஏனெனில் காத்திரமான அவரின் கருத்துகளை நான் நேரில் கேட்டுள்ளேன். அவற்றை வெளிப்படையாக எழுதவோ, பேட்டிகளில் குறிப்பிடவோ வேண்டாம் என அவர் மறுத்து வந்ததற்கு, அதனால் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் ஏற்படும் என அவர் நினைத்திருக்கலாம். அவற்றைப் புரிந்துகொள்ளக்கூடிய சூழலோ பக்குவமோ ஏற்படவில்லை என்றும் அவர் கருதியிருக்கலாம்.

எனினும், சம்பந்தப்பட்டவர்களிடம் எவ்வித சமரசமோ பயமோ இன்றி தமது கருத்துகளையும் வாதங்களையும் கடைசி வரை முன்வைத்தவர் என்பது பேராசிரியரை அறிந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மை.

இலங்கை - இலங்கைத் தமிழர் வரலாற்றையும், தமிழ் தேசிய, விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்றையும் புதிய ஆய்வுகள் - ஆதாரங்களுடன் எழுதும் பணியை வரலாற்று அறிஞர்களுடன் இணைந்து பேராசிரியர் துவக்கி வைத்திருக்கலாம். அத்தகைய காத்திரமான பணியை மேற்கொள்வதற்கான ஆளுமையுடையவர் பேராசிரியர்.

மிக நுட்பமான அறிவையும் சிந்தனையையும் பெற்றதற்கும் ஆக்கபூர்வமான பல காரியங்களை ஆற்ற முடிந்ததற்கும், நல்ல குருவும் மனைவியும் அமைந்தது காரணம் என்று பல இடங்களில் பேராசிரியர் தெரிவித்துள்ளது, மனப்பூர்வமான கருத்து. பேராசிரியருக்குச் சிந்தனைத் தெளிவை ஏற்படுத்த அவரது ஆசான்களும், கல்வி, சமூகம், அரசியல் உட்பட பலதுறைகளில் அவர் தம்மை முழுமையாக அர்பணித்துக்கொள்ள முழுமையான ஆதரவையும் ஊக்கத்தையும் இறுதிக்காலம் வரை வழங்கி வந்த அவரது துணைவியார் திருவாட்டி ரூபவதியும் சமூகத்துக்கு அளப்பரிய சேவை புரிந்துள்ளனர். உடல் கோளாறுகளோ, குடும்பப் பொறுப்புகளோ தாக்காவண்ணம் அவர் தமது பணியைத் தொடர ஏறக்குறைய 50 ஆண்டுகள் உடனிருந்து உதவியுள்ளார் அவரது மனைவி.

நீரிழிவு நோயும் பார்வைக் கோளாறும் மிகவும் துன்புறுத்தியபோதும் வாசிப்பதையும் எழுதுவதையும் கடைசிவரை பேராசிரியர் தொடர முடிந்தமைக்கு அவரது துணைவியார் ஒரு முக்கிய உந்துசக்தி.

பல லட்சம் பேர்களில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய அரிதான பார்வைக் குறைபாடு பேராசிரியருக்கு பல காலம் முன்னரே ஏற்பட்டது. சரிசெய்ய முடியாத அக்குறைப்பாட்டினால் அவர் மிகவும் சிரமப்பட்டார். அதிக வெளிச்சத்தைப் பார்க்க முடியாது, படிக்க முடியாது. அவருக்குப் படித்துக் காட்டவும் எழுதவும் மற்றவரின் உதவி தேவைப்பட்டது என்றாலும், தமது கைப்பட கடிதங்களையும் சில செய்திகளையும் எழுதுவார்.

அவரின் புத்தகங்கள் வெளிவரும் போதெல்லாம், எனக்கு ஒரு நூலை கையெழுத்துப் போட்டு எவரிடமாவது கொடுத்து விடுவார். பல சமயங்களில் அந்தப் புத்தகங்கள் கைக்கு வந்து கிடைக்காவிட்டாலும், அவர் வருத்தப்படக்கூடாது என்பதற்காக அவரிடம் பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்வேன். “படித்து விட்டுக் கருத்துச் சொல்லம்மா,” என்று சிறு குழந்தையின் ஆவவோடு சொல்வார். அதேபோல் அவரைப் பற்றி எழுதுபவைகளையும் மறக்காமல் தமக்கு அனுப்பி வைக்கச் சொல்வார்.

வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அறிவாற்றலும் ஆளுமையும் அன்பும் நிறைந்த மகத்தான மனிதரை என் வாழ்நாளில் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு பெரும் பேறாகவே கருதுகிறேன்.

வாழ்க்கையில் தனி மனிதரிலும் பார்க்க குடும்பமும் சமூகமும் முக்கியமான அலகுகள் என்பது பேராசிரியரின் பட்டறிவு. தமது 4 தங்கைகள், தம்பி, தமது மனைவியின் நான்கு தங்கைகள், இரு தம்பிகள், தமது மூன்று பிள்ளைகளுடன் ஏராளமான மாணவர்களுக்கும் வழிகாட்டியிருப்பவர் பேராசிரியர்.

“என்னை வளர்த்தவர்கள், நான் வளர்த்தவர்கள், எனது உறவுகள், நட்புகள் எல்லாரையும் நான் எனக்குள் காண்கிறேன். காணவேண்டும். அது ஒரு சமூகவியல்நியதி,” என்று சொல்வார் பேராசிரியர்.

அதேபோன்று தமிழ்ச் சமூகத்தின் பல பரிமாணங்களிலும் பேராசிரியர் சிவத்தம்பியைக் காணமுடியும். தமிழ் இனம், மொழி சார்ந்த எந்தவொரு ஆய்விலும் பதிவிலும் பேராசிரியரின் தாக்கம் நிச்சயமிருக்கும். தமிழ் மொழி, கலை, இலக்கியம், சமூகவியல் துறைகளின் முக்கிய கோட்பாட்டு நூல்களாக பேராசிரியரின் நூல்கள் என்றென்றும் இடம்பெற்றிருக்கும்.

பதிவு செய்யப்படாமல் இருக்கும் இன்னும் ஏராளமான பேராசிரியரின் பேச்சுகள், உரைகள், கட்டுரைகள், பேட்டிகள் போன்றவையெல்லாம் தொகுத்து ஆவணப் படுத்துவதே இனிமேல் தமது முழுநேரப் பணியெனக் கூறினார் திருவாட்டி ரூபவதி. பேராசிரியரின் மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்கள் அவரை ஆவணப்படுத்துவதிலும் அவரது சிந்தனைகளையும் கருத்துகளையும் பரவலாக்குவதிலும் முயற்சி எடுக்க வேண்டும்.

பேராசிரியரைத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், படித்தவர்கள் அனைவரிலும் அவரைக் காண முடியும். காரணம் அழிவற்றது அறிவு; எல்லைகள் கடந்தது ஞானம்; என்றென்றும் நிலையானது மனிதநேயம்!
நன்றி - வல்லினம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்