/* up Facebook

Aug 31, 2011

ஆப்பிரிக்காவில் பெண்களுக்கு விருத்த சேதனம்

அறியாமை கலந்த கொடுமை.


ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்கின்ற பாரம்பரியம் மிக நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இவர்களின் இப்பாரம்பரியம் மிகவும் கொடூரமானது. பயங்கரமானது. சுமார் 200 மில்லியன் சிறுமிகள் கத்தியின் வலியை தாங்குகின்றனர். 150 மில்லியன் வரையான சிறுமிகள் பிறப்புறுப்புச் சிதைவு என்கிற நோய்க்கு ஆளாகின்றனர். விருத்த சேதனம் செய்கின்றபோது ஆபிரிக்க நாடுகளில் மயக்க மருந்துகள், வலி நிவாரணிகள் சிறுமிகளுக்கு வழங்கப்படுகின்றமை கிடையாது.


விருத்த சேதனம் செய்கின்றமைக்கு அதி நவீன கருவியாக சாதாரண சவர அலகுதான் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. சோமாலியாவில் ஒரு பாரம்பரியம் இருந்து வருகின்றது. பிறப்பு உறுப்பின் மன்மதபீடம் மற்றும் இதழ்கள் ஆகியன நீக்கப்படாத பெண்கள் இங்கு திருமணம் செய்ய முடியாது. மாறாக பாவப்பட்டவர்களாக, அசுத்தமானவர்களாக நடத்தப்படுவார்கள். சிறுமிகள் வரிசையாக படுக்கப்பட்டு விருத்த சேதனம் செய்யப்படுவர். இது ஒரு பெரிய சடங்காகவே நடக்கும்.


சோமாலியாவில் நாடோடிக் குடும்பங்களைப் பொறுத்த வரை சிறுமிகளுக்கு விருத்த சேதனம் செய்கின்றமை என்பது மிகவும் செலவானது. ஆனால் இச்செலவை சிறந்த மூலதனமாகவே நாடோடிக் குடும்பங்கள் கொள்கின்றன. ஏனெனில் இச்சடங்கை செய்யாவிட்டால் வருங்காலத்தில் திருமணம் செய்து கொடுக்க முடியாது. சிறுமிகளுக்கு தாய்மார் சடங்கின் முக்கியத்துவம் குறித்து உபதேசம் செய்வார்கள் . ஆனால் இச்சடங்கின் கொடூரத்தை உண்மையில் சொல்ல மாட்டார்கள். எனவே சிறுமிகள் எப்போது இச்சடங்கு இடம்பெறும்? என்று ஆவலோடு காத்திருப்பார்கள்.

அநுபவிக்கின்றபோதுதான் கொடூரம் புரியும். உகண்டாவில் இச்சடங்கு டிசம்பர் மாதம் நடத்தப்படுகின்றது. இதனால் டிசம்பர் மாதத்தை பேரழிவு மாதம் என்று விபரம் தெரிந்த பெண்கள் இங்கு பேசிக் கொள்வார்கள். இச்சடங்கை இரத்தக் களரி என்று படித்த பெண்கள் சொல்லிக் கொள்வார்கள். அநுபவப்பட்டவர்கள் அதிபயங்கரமான வேதனை என்று வர்ணிப்பார்கள். குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு இச்சடங்கு மகிழ்ச்சியானதுதான். கூடிக் கொண்டாடுகின்றனர். மன்மத பீடம், இதழ்கள் ஆகியவற்றை அறுக்கின்றனர். யோனியின் மேற்பகுதியை நூலால் தைத்து விடுகின்றனர். சிறிய ஒரு துவாரத்தை மாத்திரம் விட்டு வைக்கின்றனர்.

உகண்டாவில் இச்செயற்பாடுகளுக்காக சவர அலகுகளை விட கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் உட்பட வேறு ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பாலியல் பரவச நிலையை பெண் உணரக் கூடாது என்பதற்காகவே ஆபிரிக்க நாடுகளில் இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. பாலியல் பரவச நிலையை உணர முடியாத பட்சத்தில் கணவனுக்கு பெண் விசுவாசமாக இருப்பாள் என்று நம்புகின்றனர்.

ஆனால் கிருமி நீக்கப்படாத கருவிகளைப் பயன்படுத்தி இச்சடங்கை செய்கின்றமையால் டெடனஸ், யோனி வீக்கம், சூதக வலி, ஒவ்வொரு திராட்சைப் பழம் அளவில் நீர்க் கட்டிகள் ....... போன்ற நோய்கள் ஏற்படக் கூடும். பாலியல் மீதான விருப்பம் பாதிக்கப்படக் கூடும். உடலுறவின்போது வலி ஏற்படலாம். சலக் கடுப்பு ஏற்படலாம், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரலாம். பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படலாம், பிரசவத்தில் தாய் மற்றும் சேய் மரணங்கள் நேரலாம். செப்டிகேமியாகூட ஏற்படலாம்.

...மேலும்

Aug 30, 2011

பெண்களை அடிமைப்படுத்தும் சமூகம் தலைநிமிர முடியாது – சித்தி ஜுனைதா பேகம்


இஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம் என்பவர் யார்? இவரைத் தந்த ஊர் எந்த ஊர்? இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும்? அப்படி என்னதான் செய்தார்? இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழில் பெண் படைப்பாளிகள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றனர். இப்படி இருக்கும் இன்றைய சூழலில் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துப் பணியை தொடங்கிய பெண் படைப்பாளிதான் இந்த சித்தி ஜூனைதா பேகம். 1917-ம் ஆண்டு நாகூரில் பிறந்தவர்.

மூன்றாம் வகுப்பே படித்தவர். 16 வயதிலேயே எழுதத் தொடங்கியவர். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் ‘காதலா கடமையா’ என்ற அபூர்வ புரட்சி நாவலை எழுதியவர். ‘காதலா கடமையா’ நாவலை எழுதியதன் மூலம் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த நாவலைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படக் கதை காதலா கடமையா நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான். இத்துடன் பெண்ணுள்ளம், இஸ்லாமும் பெண்களும் உள்பட பத்து நூல்களை சமுதாய நலனுக்காக எழுதியவர். 1998ம் ஆண்டு 81-ம் வயதில் தம்முடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டார். ஆம், அந்த ஆண்டுதான் அவர் மறைந்தார்.

ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்யும் சதிகாரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரில் இருந்து வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது.

நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்.

நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசனாக நடிப்பவன் மக்களுக்காக போடும் சமுதாய நலத்திட்டங்கள் சிறப்புக்குரியதாக அமைந்தது. இதே திட்டங்கள் நாடோடி மன்னன் படத்திலும் மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது.

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர்கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள் நாடோடி மன்னன் திரைப்படத்தில் இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
4. பயிர்த்தொழில் செய்தல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

‘காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்.

நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.

நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன் சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் நாடோடி மன்னன் திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.

இதைப்போல நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.

‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது.

இனிய தமிழ்நடையில் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா?’ நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்’’ என வரிக்கு வரி வியந்து போற்றுகிறார் தமிழ்த் தாத்தா. இந்த மதிப்புரையே சித்தி ஜூனைதா பேகத்திற்கு கிடைத்த தமிழ்ப் பரிசாகக் கருதலாம்.

இஸ்லாமியப் பெண்கள் எழுத முன்வராத அந்தக் காலத்தில் பெண்ணியச் சிந்தனையை முன்னிறுத்தி ‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ‘காதலா கடமையா?’ நாவலில் துடித்துக் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் பாடல் முதலியவற்றை தம்முடைய நாவலில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்

இவரது படைப்புகள் புரட்சிமிக்க கருத்துக்கும், பெண்ணியச் சிந்தனைக்கும் இனிய தமிழ் நடைக்கும் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும் சான்றாக உள்ளன. இதைப்போல தமிழ்-தமிழின உணர்வும் இவருடைய உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை இவரது நாவலில் காண முடிகிறது.

1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கி விட்ட காலகட்டத்தில் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் தாம் எழுதிய காதலா கட¨மாயா நாவலில் ‘தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய்நாட்டை மீட்பதற்காக உடல், பொருள், ஆவியை தத்தஞ் செய்த பெரியோரைப் பின்பற்றுவேன்’ என்று எழுதி இருப்பது இவரது தமிழ் இனப்பற்றை காட்டுகிறது.

தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா
சித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி!

நன்றி : டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது, தினகரன்

...மேலும்

தோழர் செங்கொடி நினைவு - காணொளி தொகுப்புகள்...மேலும்

Aug 29, 2011

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.

”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

தோழர் செங்கொடி

கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.
தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்
இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.

ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.

சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.

‘தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல்இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன்செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி‘

என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.

ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.

”இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.

ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.

எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.

ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.

கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.

‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…
அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.

காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

ஆற்றாமையில் காஞ்சி மக்கள் மன்றத்தினர்மக்கள் மன்ற குழந்தைகளுடன்
 

”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.

”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.

அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.

இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம்.

ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.

எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.

அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.

இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.

சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.
‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’

இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.

பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’

பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.

பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.

சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட் 29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…”
அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.

”சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.
மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம்.

ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.
அப்பத்தான்…”

தோழர் செங்கொடி சடலமாக
வார்த்தைகள் தடைப்பட, குரல் மேலும் உள்ளிரங்க வெடித்து அழுதார் மகேஷ்.
அவர் விட்ட இடத்திலிருந்து சில நிமிடங்களுக்கு பிறகு மேகலா தொடர்ந்தார். ”அப்பதான் தாலுகா ஆபீஸ்ல ஒரு பொண்ணு தன்னைத்தானே எரிச்சுகிட்டதா ஃபோன் வந்தது. பதறிப் போய் ஜி.எச்.சுக்கு ஓடினோம். அது செங்கொடிதான்னு அடையாளம் தெரிஞ்சதும் அப்படியே நாங்க நொறுங்கிட்டோம்.

தாலுகா ஆபீஸ் இருக்கிற வளாகத்துலயேதான் தீயணைப்பு நிலையமும் இருக்கு. ஆனா, எங்க தன்னோட போராட்டத்தை அணைச்சுடப் போறாங்களோனு மண்ணெண்ணெய்க்கு பதிலா பெட்ரோலை செங்கொடி பயன்படுத்தியிருக்கா. இதுக்காக தாலுகா ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ‘வினாயகா பெட்ரோல் பங்க்’ல பாட்டில்ல வாங்கியிருக்கா.

மக்கள்கிட்டேந்துதான் பாடம் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தவ எதனால இப்படியொரு முடிவு எடுத்தானு தெரியல…” மேகலாவாலும் அதன் பிறகு பேச முடியவில்லை. திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி… என அடுத்தடுத்து தலைவர்கள் மகேஷை பார்ப்பதற்காக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த களேபரத்தில் இன்று காலை 7 மணி அளவில் கலைந்த உடைகளுடன் வந்து சேர்ந்த ஒரு பெரியவர், மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை.

செங்கொடியின் கடிதத்தை நகலெடுத்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பெரியவரின் கரங்களிலும் ஒரு நகலை திணித்துவிட்டு சென்றார்கள். அதில் எழுதப்பட்ட வாசகங்களையே உற்றுப் பார்த்த அந்தப் பெரியவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்:
”உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”

‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.

எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?
அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார்முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.

செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.
மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.

தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!
____________________________________________________________________
- வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து
நன்றி வினவு
...மேலும்

தோழர் செங்கொடி: மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும்!தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் இன்று (28.08.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27) அவர்களுக்கு ஈகவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.

இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்
- இப்படிக்கு தோழர் செங்கொடி"

தோழர் செங்கொடியின் இறுதி வேண்டுகோள் கடிதம்.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர் ஈகி முத்துக்குமாரின் விவரணப்படத்தை இயக்கிய மகேந்திரன் அவர்களின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத் தக்கது. மூவரைக் காப்பாற்றக் கோரி சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண் வக்கீல்களின் போராட்டத்தில் நேற்று சனிக்கிழமை கலந்துவிட்டுச் சென்றுள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரி இந்தப் பெண் தீக்குளித்து மரணமானதாக தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்குமாறு அனுப்பப்பட்ட கருணை மனுவை இந்திய உள்துறை அமைச்சும் ஜனாதிபதியும் நிராகரித்த நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கியஸ்த்தர் செங்கொடி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் இன்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தோழர் செங்கொடி தீக்குளித்து போராடிய நிலையில்...
மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் பெருகிவரும் நிலையில் காஞ்சீபுரத்தில் தமிழச்சி செங்கொடி தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.

செங்கொடி உயிர்துறந்த நிலையில்
முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். என்றார்

ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் இன்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,

இன்று தன் சகோதரன்..., உடன் பிறவா சகோதரன், நம் தமிழ் சகோதரன், பேரறிவாளன், சாந்தன், முருகன்.... “குற்றமற்றவன்” என்பதை மெய்ப்பிக்க வேண்டி காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்கிற ஒரு தமிழ் சகோதரி.

அந்த கன்னகியின் சாபத்திலும் நீதியிருந்தது... இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது.... நீதி வென்றே தீரும், நம் தேசபிதா காந்தியவர்கள் 1931 வருடத்திலேயே தூக்கு தண்டனை கூடாது என்றார்.

தோழர் செங்கொடி தொடர் போராட்ட களத்தில்
பண்டித நேரு அவர்களும், ஒரு மனிதனை தேதி குறித்து வைத்து கொல்லும் கொடுரம் கூடாது என்றார்கள். 1941-ம் வருடத்தில் இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாதத்தில் பேசிய அண்ணல அம்பேத்கார் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றார்கள்.

இன்று உலகில் உள்ள 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்கள். ஆனால் நம் நாட்டில் கூட நீன்ட நாட்களாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.

அன்று திருப்பெரும்புதூரில் நடந்த சம்பவத்திற்கும் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் சம்பந்தமில்லை..... முதலில் இதே வழக்கில் 24 நபர்களுக்கு தூக்கு கொடுத்தார்களே.

பின்னர் எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டதோ அது போலவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது. அதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அன்று பாண்டிய மன்னன் அரண்மனையில் நடந்த கொடூரம் இப்போது தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது.. தமிழக முதல்வர் அவர்களால் இதை தடுக்கும் வாய்ப்புள்ளது... நாடே இப்போது முதல்வரின் முடிவை எதிர்பார்க்கிறது’’என்று பேசினார் வைகோ.

இப்படியான அநியாய உயிர் இழப்புகளைத் தமிழக உறவுகள் தவிர்க்க வேண்டும். இந்த போராட்டத்தின் வெற்றி இந்த மூவரின் விடுதலையோடு மட்டும் சுருங்கி விடக்கூடாது. ஒட்டுமொத்த மரணதண்டனையையும் ஒழிப்பதிலேயே நமது விடுதலை பூரணப்படும் என்பதையும் உறுதியாக நினைவில் கொள்வோம் தோழர்களே!

புகலிடத்தில் இன்னமும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக தேவையான அளவு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.. கண்டனத்துக்குரியது.

பெண்ணியம் சார்பில் செங்கொடிக்கு எங்கள் வீர அஞ்சலிகள்.
...மேலும்

Aug 27, 2011

அன்னாவாக இல்லாமல் இருக்கவே விரும்புகிறேன் - அருந்ததி ராய்அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்விக்கு கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சரியென அவர்கள் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே!

முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.

பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது 'போராடும் உரிமைக்கான‌ போராட்டம்', ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள் அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய திகார் சிறையிலேயே கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, 'அன்னா அணி'யின் உறுப்பினர்கள் திகார் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த வீடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்குமா?)

இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லீலா மைதானத்தில் நாள் முழுக்க வேலை பார்த்து, வார இறுதியில் அரங்கேறப் போகும் மிகப்பெரிய 'ஷோ'வுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று நம்மிடம் சொல்ல‌ ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அ-மத்தியத்துவப்படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத - அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு; அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாக, கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகத்தானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.

இந்த மசோதா பயன் தருமா, தராதா என்பது நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறித்தான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி நியாயமாக இருக்கும்?

இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப்படுத்துவார்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லை என்று முடிவெடுத்துவிட்டன‌.

இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தம் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் AFSPA (Armed Forces [Special Power] ACT) சட்டத்திற்கு எதிராக பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப்பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே இரோம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரக்கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.

அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.

பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”

மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைக‌ள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அன்னா. 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)

இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது இப்பத்திரிகையாளர்கள் மூலமாக அம்பலத்துக்கு வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்விப்படுகிறோம். அங்கு கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலோ அல்லது கூட்டுறவு சொசைட்டி தேர்தலோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு 'சமார்', ஒரு 'சுனார்', ஒரு 'கும்ஹர்' இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைத்தான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?

கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்க‌ளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்க‌ளும், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்க‌ளும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்க‌ளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்க‌ளும் அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?

எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக்ஸ் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமானபோது, பல முக்கியமான நிறுவனங்க‌ளும் மூத்த பத்திரிகையாளர்களும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும், நேச கட்சிகளின் மந்திரிகளும், ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்து கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இத்தனை ஆண்டுகளில் முதன் முறையாக அரசியல் புரோக்கர்கள் பெரும் அவமானப்பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?

அரசு தனது வழக்கமான கடமைகளைக் கை கழுவி, கார்ப்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்ப்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்ப்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.

தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும், அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்து இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டு செல்வதற்காகத்தான். இதன் மூலம் இன்னும் தனியார்மயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கை வளங்களை இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்ப்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்கு 'பரிந்துரைக்கும் கட்டணம்' (Lobbying Fee)என்று பெயர் சூட்டப்படும் நாள் வெகுதூரம் இல்லை.

இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராரிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?

இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடீஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடி ஆட்டுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்க்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)

தமிழில் : சொ.பிரபாகரன்

நன்றி - கீற்று
...மேலும்

தூக்குக்கு எதிர்ப்பு: பெண் வக்கீல்கள் உண்ணாவிரதம்

 கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.

இடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில். (கோயம்பேடு to அண்ணாநகர் வழி).

இந்த பெண் தோழர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் திரளுமாறு. போராடும் தோழர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் அவர்களின் போராட்ட நெருப்பிலிருந்து சிறுதுளிகளை எடுத்து மக்களிடம் பற்ற வைப்போம்.

கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா

பற பெண் ஆளுமை பெருவெளி

பலரும் பெருவாரியாக ஆதரிக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் புகைப்படத் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம் 


...மேலும்

Aug 26, 2011

தொடரும் தவிப்பு! ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை - சாந்தி ரமேஷ் வவுனியன்

'தொடரும் தவிப்பு" -  பூங்குழலி

'தொடரும் தவிப்பு" தூக்குமர நிழலில் நிற்கும் ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை. இல்லை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலையாகாமல் தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்படாமல் சிறையிருக்கும் பேரறிவாளனின் கதை இந்த தொடரும் தவிப்பு. உண்மையை உள்ளபடி ஆவணப்பதிவாக்கியவர் ப.ழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி. 2004யூன் மாதம் வெளிவந்த இந்நூல் பற்றி எழுத வேண்டும் என எண்ணிய கணங்கள் ஒவ்வொன்றும் எதை எழுத என்று குழம்பிவிட்ட தருணங்கள் பல...

நூலைக் கையிலெடுத்து வாசித்து முடியும் வரையும் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை தவிர்க்க முடியாதபடி சிறைக்கம்பிகளும் சித்திரவதைகளுமாக துயரை அப்பிவிட்ட 'தொடரும் தவிப்பு" பேரறிவாளனின் அம்மா போல என்னுள்ளும். 19வயதில் சிறை சென்ற மகன் இன்று வருவான் நாளை வருவான் தங்களது இறுதிக்காலங்களை மகனோடு கழிக்கலாம் என்ற கனவோடிருக்கும் அறிவு அம்மாவின் அழுகையும் அறிவு அப்பாவின் துயரமும் மட்டுமல்ல மரண தண்டனை விதிக்கப்பட்ட 26பேரும் அனுபவித்த கொடுமைகள் யாவும் பதிவாகியிருக்கிறது இந்நூலில். இதுவொரு கதையில்லை ஒரு கொடுமைகளின் ஆவணம்.

உலகத்தில் மனிதவுரிமை பேசியபடி மனிதர்களை வதைக்கும் பட்டியலில் இலங்கையும் இந்தியாவும் அதிகம். சிறைக்கைதிகள் என்றால் அவர்கள் மானிட உலகுக்கே பயனற்றவர்கள் என்ற கணிப்பு இலங்கை இந்தியச் சிறைகளிலும் அங்கு பணியாற்றும் பணியாளர்களின் எண்ணமாகிறது. அந்த வகைக்குள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26பேரும் மனிதப்பிறவிகள் என்ற நினைப்பையே மறந்து வதைத்த அந்த வதைகாரரின் கதை கண்ணுக்குள் ஒரு மாரிகாலத்தை இறக்கிவிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளின் நிறைவில் மகனும் மற்றவர்களும் சிறைமுடிந்து வெளிவருகிறார்கள் என போன அறிவு அம்மாவிற்கு அவன் தூக்குத்தண்டனை மேடையிலிருந்து வரமாட்டானென்ற முடிவுடன் ஆரம்பமாகும் கதை....பேரறிவாளனைத்தேடி சோலையார்பேட்டைக்குள் நுளைந்த பொலிஸ் வாகனம் பேரறிவாளின் வீட்டு வாசலில் 10.06.1991இல் நின்றதும் அதன் பின்னான அற்புதம் அம்மாவின் அலைக்கழிவு என நீழும் கதையில் யுகங்களையும் தாண்டிய துயர் நெஞ்சை அறுக்கிறது.

விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளை. நடுநிசி 12மணிக்கு விசாரணையென்று வந்த பொலிசார். 'நளினி எங்கே ? " சொன்னால் அறிவு வருவான் என்ற போலீசின் வார்த்தையில் ஆவிகலங்கிய அறிவின் அப்பா குயில்தாசனும் அற்புதம் அம்மாவும் அந்தரித்த அந்தரிப்பு ஒரு பிள்ளையின் மீதான கொடுமையான தீர்ப்பை ஏற்க மறுக்காத ஒவ்வொரு பெற்றோரையும் நினைவில் கொண்டுவரும் மனிதர்களாகின்றனர்.

19வயதில் சிறை சென்ற அறிவு இதுவரையும் தூக்குமேடைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படாமல் முருகன் , சாந்தன் ஆகியோருடன் கருணை அடிப்படையில் ஆயுள்தண்டனை பெற்ற நளினியின் நிலை தொடரும் தவிப்பில் கண்களில் இருந்து கண்ணீரையில்லை இரத்தம் வடிய வைக்கும்படியான துயர். கற்பிணியாக சிறை சென்ற நளினியை உலகில் எந்தவொரு சிறைக்கூடமும் செய்திராத வதைகள் அந்தச் சிறையில் செய்யப்பட்டுள்ளன. அந்த வதையாவும் அற்புதம் அம்மாவின் மொழியாகி உயிரை உலுப்பும் உதிரத்தை உறைய வைக்கும் கொடுமைகள் அவை. அந்தப்பக்கங்களை படிக்கப் படிக்க பாரத தேசத்தின் மனிதாபினம் எத்தகையது என்பதை விளக்குகிறது.

சிறையில் சித்திரவதைகள் அனுபவித்து பெற்ற மகளை கடல்கடந்து அனுப்பிவிட்டு அந்தத்தாய் துடிக்கும் துடிப்பு அதுவும் ஒரு இந்திய மகளின் மகளுக்கு இந்தியா செல்லவே இழுபறி ஏற்பட்டதை எங்கே போய் சொல்லியழ ? அகிம்சையும் மனிதமும் போதிக்கப்பட்ட மண்ணில் ஒரு இந்தியப்பிரஜையின் மகளான அரித்திரா இப்போ 15வயதுப்பிள்ளையாகிவிட்ட பின்னும் பெற்றோரின் அரவணைப்போ அன்போ அறியாமல் அரித்திராவின் முகம் நெஞ்சுக்குள்ளும் கண்ணுக்குள்ளும் கனக்கிறது.

யாரால்தான் முடியும் ? தான் பெற்ற பிள்ளையைப் பார்க்கவே வீசா மறுப்பையும் அகிம்சை போதித்த மண்ணில் ஒரு அன்னையின் உணர்வுகள் புரியப்படாமல் போகின்றமையும் ? இதுதான் இந்திய தேசத்தின் இயங்கியல் வளமையோ ?

ராஜீவ் காந்தி என்ற பெரிய மனிதரின் ஆணையில் ஈழம் என்ற சிறிய தேசத்து மனிதர்கள் கொன்றும் கொடுமைப்படுத்தப்பட்டும் டாங்கிகளில் நெரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்ட கொடுமையை மறந்துவிட முடியவில்லை. ஒரு பிரதமரின் உயிருக்கு இத்தனை பெறுமதியா ?

ஒவ்வொரு கைதியும் அந்தச் இசறைக்கம்பிகளுக்குள் பட்ட வேதனைகள்,பொய்ச்சாட்டுதல்களையும் பொறுக்க முடியாத புனைவுகளும் செய்து எத்தனை கீழ் நிலையில் இழிவு செய்யலாமோ அத்தகையதொரு கொடுமை செய்யப்பட்டுள்ளது. இந்திய இலங்கையர்களின் இழிநிலை ஆயுதம் ஒரு தனிமனிதரின் நடத்தையை எவ்வளவு கீழாக கொச்சைப்படுத்தலாமோ அவ்வளவுக்கு கொச்சைப்படுத்தல் நடைபெறும். அதேபோல அந்தச் சிறையிலும் கைதானவர்கள் பற்றி அவர்களது மனைவிமார் கணவன்மார் உறவுகள் என எல்லாருக்கும் பாலியல் ரீதியான பொய்கள் கூட சொல்லப்பட்டு இம்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய இழிவு நடவடிக்கை நளினி பற்றி முருகனுக்கும் முருகன் பற்றி நளினிக்கும் மட்டுமில்லை அனைத்து கைதிகளும் மிகவும் மோசமான முறையில் பாலியல் சாட்டுதல்கள் பொய்களையெல்லாம் சொல்லியிருப்பது கதையின் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

இறுதியாய் 'இனத்துக்காகவும் , மொழிக்காகவும் வாழ்ந்து வாழும் அற்புதம் அம்மா குயில்தாசன் ஐயா இருவரும் தங்களது இறுதிக்காலத்திலாவது மங்கள் மகனுடன் வாழுவோம் என்ற எதிர்பார்ப்பும் அது போல் நளினி முருகன் தங்கள் மகளுடன் சேர்ந்து வாழும் கருணையை இந்திய மத்திய அரசு வழங்குமா ? அம்மா அப்பாவின் மடியில் உறங்க ஆசையோடு காத்திருக்கும் அரித்திராவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசின் மௌனம் உடையுமா ?

காலக்கரைதலில் மாற்றங்களும் மன்னிப்புக்களும் தேவையே. குற்றம் இன்றி சந்தேகத்தின் பெயரில் மரணக்கயிற்றில் நிற்கும் நளினி , முருகன் , பேரறிவாளன், சாந்தன் ஆகியோரும் மன்னிக்கப்பட்டு வெளிவர வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் தொடரும் தவிப்பாகவே தொடர்கிறது. பூங்குழலி சொன்னது போல 'காத்திருப்பு நீழ்கிறது....தவிப்பு தொடர்கிறது.....தொடரும் தவிப்பு ஒரு இலக்கியமல்ல உயிருடன் வதைபடும் உண்மை மனிதர்களின் வாக்குமூலப்பதிவு.

- நிலவரம் - சுவிஸ் -
...மேலும்

Aug 25, 2011

ஆபாசம், புனிதம், பகுப்பாய்வு, கூட்டுணர்வு - ச. விசயலட்சுமி


பெண்ணெழுத்து

நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ
உமது உயிர்க் கூறு
அரசியல் கடந்த காலம் கொண்டது
உமது சருமம்
அரசியல் படிந்தது
உமது விழிகள்
அரசியல் நோக்கு கொண்டது
- விஸ்வாலா சிம்போர்ஸ்க்கா

மானிய மனிதனுக்கு அரசியல் பார்வை இல்லாமலிருக்கலாம் ஆனால் அவனது வாழ்க்கை அரசியலுக்கு உட்பட்டது. அரசியலில் இருந்து தப்ப முடியாதபடி உயிர்மூலங்கள் பிணைக்கப் பட்டிருக்கின்றன. சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், வாழும் மண், காடுகள், சமவெளிகள், இயற்கை, தலைக்கு மேலாக பங்கிடப்படாமல் விரிந்து கிடக்கிற வானம் என எதுவுமே அரசியலில் இருந்து தப்ப முடியாது. அவ்வகையில் மொழியும் அரசி யலைப் பேசுகிறது; அரசியலோடு தொடர்ந்து உறவாடுகிறது; அரசியலை நடத்துகிறது. குறிப் பிட்ட மொழியின் இலக்கியங்கள் அந்நிலத்தின் கருப்பொருள் சார்ந்தவைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ தன் சாட்சியங்களைப் பேசிச் செல் கின்றன. பெண்ணெழுத்தின் வீரியமும் மௌன மும் வெற்றிடமும் பெண்ணின் வாழ்க்கையை ; அவளது வரலாறை; அவள்மீது சுமத்தப்பட்ட அரசியலை ; அவள் எதிர்த்த அரசியலை ; அவளைப் புரட்டிப்போட்ட அரசியலை வெளிப்படுத்தும் சாட்சிகளாக அமைகின்றன.

எழுதப்பட்ட எழுத்துகள் எவற்றை முன் வைக்கின்றனவோ அதற்கு எதிரிடையாக எழுதப் படாத எழுத்துகளின் நிசப்தமும் அரசியலை மொழிக்குள் செலுத்தி வைக்கின்றன. மொழியின் இருமை எதிர்வு குணமானது ஒரு விஷயத்தை ஆதரித்துக் குரல் கொடுக்கும் பொழுதே அதற்கு எதிரான அனைத்தையும் கண்டிக்கும் வன்மையை செலுத்தத் தொடங்கி விடுகிறது. பௌதிகக் காரணிகள் பெண்ணினத்தின் மீதாக வலுவான தாக்கத்தை செலுத்துகின்றன.

உயிர் இயக்கத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிற ஒவ்வொரு உயிரியும் உயிர்த் தொகுப்புகளும் அறிந்தோ அறியாமலோ அரசியலை சுமந்து கொண்டே பயணிக்கிறது. தமிழில் பக்தியிலக்கிய காலத்திற்கு பின்னும் தற்கால இலக்கியத்திற்கு முன்னுமான இடைப் பட்ட காலத்தின் மௌனம் பெண்ணெழுத்தின் மீதான கேள்விகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த மௌனத்தின் உடைப்பை எதிரொளியைத் தற்காலக் கவிதைகளில் காண முடிகிறது. பிற இலக்கிய வகைமையைக் காட்டி லும் மொழியோடு நெருக்கத்தைக் கொண்டு அகத்தோடு ஊடாடுகிற கவிதைக் களம் பெண் அரசியலின் முன்னெடுப்பை உணர்த்துகிறது.

பெண் வாழ்வியல் எதிர்கொள்ளும் பல் வேறு சிக்கல்களை மீறி ஒடுக்கு முறைகளை மீறி அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளங் களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னகர்வை கவனத்தில் கொள்ள வேண்டியிருப் பதைப் போன்றே அத்தளங்களோடு பயணிக்கிற மொழியின் மூலமான சாத்தியங்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.

தமிழ்க் கவிதைகளில் பெண்கவிதை மொழி தொட்டுச் செல்லுகிற இடங்கள் மற்றும் விட்டுச் செல்கிற இடங்கள் குறித்த பிரக்ஞை என்பது பெண்வாழ்வின் மீதான அரசியல் தாக்கத்தைப் புரிந்துணர வைக்கிற இடமாகவும் இருக்கிறது.

ஆணாதிக்கம் ஆணி வேரென்றால் பெண் மீதான பொருளாதார, பண்பாட்டு, மத ஒடுக்கு முறைகள் சல்லிவேர்களாக இருக்கின்றன. பண்பாடு, அரசியல், பொருளாதார முன்னேற்றங் கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டியவை. இவை ஒன்றுக்கொன்று எதிரான வை அல்ல. எனினும் இத்தளங்களில் பெண்களுக் கான முன்னேற்றம் குறித்து பேசத்தொடங்கும் பொழுதே தந்தைவழிப் பண்பாட்டின் அடக்கு முறைகளை ஏற்கவும் நேர்கிறது. கல்வியறிவால் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வரும் பொழுதும் பால்ரீதியான பாகுபாடு மறைந்து விடவில்லை. பெண்களுக்கெதிரான வன்முறை களும் குறைந்து விடுவதில்லை.
உலக சந்தையில்பெண்களின் உழைப்பை சுரண்டுதல், பெண் உழைப்பு மலி வானதாக பயன் படுத்தப்படுதல் என்பது தொடர்கிறது. பெண்ணுக் கான உரிமைகள் மதிக்கப்படாத நிலையைக் காணமுடிகிறது.

இரண்டாம் பால்களாகக் கருதப்படும் விதத்தால் இங்கு நிலவும் அரசியல் காரணிகளால் வன்முறை செலுத்தப்படுபவளாக உதாசீனப் படுத்தப்படுபவளாக காலந்தோறும் நடத்தப்பட்டு வருகிறாள். இத்தகு புறக்கணிப்பை இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் உருவாகாதது, பெண் படைப்பாளிகள் வாழ்ந்திருந்தாலும் அப்படைப்பு கள் ஆவணப் படுத்தப்படாதது, பேசப்படாதது என்கிற கோணத்தில் பார்க்க வேண்டியவையாக இருக்கின்றன. குறிப்பிட்ட மண்சார்ந்த படைப்பு களில் கருப் பொருளாகப் பேசப்படுகிற பெண், பிறகருப்பொருளோடு கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் சுமக்கும். அக்கருப்பொருளின்மீது சுமத்தப்படும் சுமைகள் குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட வேண்டியது அவசியம். கருப் பொருளாக பேசப்படுகிற பெண் படைப்பு சக்தி யாக உயிர் இயக்கத்தில் இருந்தும் மொழியில் ஆளுமையை செலுத்தி விடாதவாறு நிகழ்ந்திருக்கிற புறக்கணிப்பினை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சமகாலப் பெண்கவிஞர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியது குறித்தும், நிலமற்ற நிராதர வான உயிர்வாழ்க்கையின் சவால்கள் குறித்தும், போர் வாழ்க்கை எதிர்கொள்ளச் செய்யும் வன் முறைகள் குறித்தும், உழைப்புச் சுரண்டல் குறித்தும் பேசிவருகின்றன. இவற்றோடு அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் வெளிப் படையாகப் பேசுகின்றன. அவை குடும்பம், பணியிடம், பொருளாதாரம் என விரிந்து செல்கின்றன.

ரேஷன் கார்டு
சோதனைக்குப் போனேன்
மக்கள் தொகைக்
கணக்கெடுப்பு எடுத்தேன்
பணியிடைப் பயிற்சி
நேற்றுதான் முடித்தேன்
இன்றைக்கு நான் லீவு
குடும்ப நிகழ்ச்சி
நாளைக்காவது போக வேண்டும்
பாடம் எடுக்க
– தி. பரமேசுவரி

பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணி யாற்றும் கல்வித்துறையின் பள்ளி ஆசிரியப் பணியில் கற்றல், கற்பித்தல், நிகழ்வுகளோடு தொடர்பற்ற பணிகளையும் செய்ய வற்புறுத்தப் படுகிறது. அரசு இயந்திரங்கள் செய்யவேண்டிய பணிகளை ஆசிரியர்கள் மீது செலுத்தி அவர்களின் கற்பித்தல் பணி முடக்கப்படுகிறது. இவற்றால் பணியையும் கவனிக்க முடியாமல், பணி நேரம் முடிந்து வீட்டிற்குச் செல்ல முடியாமல் உபரி வேலைகளுக்குள் சிக்கிக் கொண்டு உள்ளத்தாலும், உடலாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பதிவு செய்கிறார். அமைப்புசாராப் பணியாளரா யிருக்கும் பெண்களின் நிலையோ விவரிக்க முடியா உழைப்புச் சுரண்டலோடு பெண்களை சக்கை யாகப் பிழிகிறது.

தூங்கிக் கொண்டிருக்கும்
உன் முகத்தில்
தோன்றி மறையும்
புன்னகைக்கான கனவு
அதட்டாத அம்மாவைப் பற்றியும்
பதட்டத்திற்கு மேலே பறந்து செல்லும்
பறவைகள் பற்றியும்
இருக்கலாம்
- இளம்பிறை (முதல்மனுஷி)

குழந்தையின் கள்ளமற்றச் சிரிப்புடனான உறக்கத்தைக் கவிதையாக்கும் கவிஞர் பெண்ணாகத் தன்னை உணரும் தருணத்தை கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

உனக்கு வேலை மட்டுமே வேலை
எனக்கு வேலையும் ஒரு வேலை
- இளம்பிறை (பிறகொருநாள்)

பெண்ணின் உடற்கூறு நீர்மையாய் மாற்ற மடையும். அதற்கு இலகுவாய் பெண்ணின் உளவியலும் பொருந்திவிடுகிறது. எனினும் அரவணைப்பையும் ஆறுதலையும் எதிர்பார்க் கிறது. பெண்ணுக்கான கடமைகளுள் ஒன்றாகத் தாய்மை பார்க்கப்படுகிறது. அதனால் கூடுதல் கவனிப்பினை பெண்மீது செலுத்தத் தவறி விடுகின்றனர். அப் பெண்ணை அரவணைக்கும் கைகள் இல்லாமல் ஏக்கத்தைச் சுமக்கிறாள். மகப்பேறு காலத்தில் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வெண்ணிலாவின் கவிதை பேசுகிறது.

நாளை
உன்னோடு வண்டியில்
முன்நின்று சிரித்துவர
உன் இனிஷியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணி நேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
————————–
கருசுமந்து
குழந்தைத் தவம் இருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை
- வெண்ணிலா (நீரிலலையும் முகம்)
அப்பாவிடம்
சொல்ல வேண்டும்
பெண்
மாநிறமில்லை
நல்ல கருப்பு
என்று சொல்லும்படி
- ஏ. இராஜலட்சுமி (எனக்கான காற்று)

பெண்பார்த்தல் எனும் சடங்கு ஆண்டுகள் மாறினாலும் மாறாதது என்கிற பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது. பெண்ணுக்கான கல்வியறிவு, வேலைவாய்ப்பு, பொருளாதார தற்காப்பு என்பன இருந்தும் போகப் பொருளாக சொத்தாகப் பார்க்கும் பார்வையால் மிகச் சாதாரண உடலியல் காரணிகளை முன்வைத்துப் பெண்களைப் புறக்கணிக்கும்போக்கு குறைய வில்லை.

பேரரசின் சாம்ராஜ்ய சக்ரவர்த்திகள்
மதம் பிடித்தேகி அருவருப்பாய்ப் பிளிற
பலியான ஆத்மாக்கள் பலவும்
தங்களை தேடி அலைகிறது
இன்னும் நிறுத்தப்படாப் போருக்காக
- எஸ். தேன்மொழி (துறவி நண்டு)
உன்னிடம் வரைபடங்கள் உண்டு
சேவகர்களை திரட்டி திசைகாட்டி முட்களையும்
நீயே இரை தேடும் பாதை மட்டும் அறிந்தவள்
எதையும் பதிவு செய்கிறாய்
எனக்கோ சேகரத்தில் சித்தக் குறைவு
உன் மேன்மைக்கான தந்திர விளையாட்டுகளுக்கு
போர் என பெயரிடுவாய்
இறையாண்மை என்ற அழித்தொழித்தலின்
ஆற்றலைத் தகர்ப்பன்
- லீனா மணிமேகலை

இறையாண்மை என்ற பெயரால் நடை பெறும் அழித்தொழித்தல் மட்டுமன்றி இரை தேடுவதை பாதையாகக் கொண்ட பெண் இனத் தால் வழிகாட்டுதலையும் பதிவு செய்தலையும் சரிவர செய்ய முடியாத அவலம் தொடர்வதைக் காட்டுகிறார் லீனா மணிமேகலை. லீனாவின் தூம கிரஹணம் போன்ற கவிதைகள் பெண்ணை இரகசியமற்று வெளிப்படுத்துகின்றன.

ரேவதியின் கவிதைகளும் கவிதைத் தொகுதி யின் (முலைகள்) தலைப்பும் இதழின் தலைப்பும் (பணிக்குடம்) பெண்ணுக்கான அரசியலாக வந் திருக்கின்றன. பெண்களைக் கட்டுப்படுத்தும் பண்பாட்டிற்கு எதிராக வினையாற்ற வேண்டி யிருப்பதன் தொடர்ச்சியாக மொழியின் மூலமாக உடலரசியல் கருத்துகளை முன்வைத்து பெண் இதைத்தான் எழுதவேண்டும் என்று கருதப்பட்ட கருத்தாக்கத்தைத் தகர்த்து எதையும் எழுதலாம் எனும் முன்னெடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பெண்கவிஞர்களின் கவிதைகள் உடலரசியலொடு தேங்கி விட்டதாகக் கருத்துரைகளைக் கேட்க முடிகிறது. இதனைத் தேக்கம் என்று சொல் வதைவிட உடலரசியலைக் கடந்து வெளிவரும் உலகளாவிய, உலகமயமாக்கல் மீதான விமரிசனங் களையும் கவிதைகளில் வைக்கத் தயங்கவில்லை என்பதை முனைவர் ரா. பிரேமா அவர்கள் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வாசித்த கட்டுரையில் நிறுவி யிருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் பெண்ணின் வாழ்க்கை சார்புத் தன்மையோடு காலகாலமாக இருந்துவருகிறது.

பெண் சார்புத்தன்மையுள்ள வாழ்வினின்று மீட்டுக்கொள்ள அவளுக்கான நிலம், பொருளா தார சுதந்திரம் இரண்டும் அடிப்படைத் தேவை யாகிறது. சார்பில் உறைந்திருக்கும் பெண்கள் பண்பாடு, அரசியல் தளங்களில் தனக்கான முக்கியத்துவத்தை ஏட்டளவில் இல்லாது நடை முறைப்படுத்த வேண்டியத் தேவையிருக்கிறது.

ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்கவிஞர்களின் சுயஅனுபம் பொது அனுபவமாக உணரப்படுகிறது. நான் நீ எனத் தொடங் கிய சொல்லாடல்கள் தனிமனுஷியைக் குறித்து மாறி பொதுவில் மாறியது போல பெண் சார்ந்த அனுபவங்களைப் பிறிதொரு பெண்வாசகி படிக் கும் பொழுது தான் உணர்ந்தது இங்கு கவிதை யாகியிருக்கிறதே என்று எண்ணுகிறாள். இது கவிதைக்கான வெற்றி. வாழ்வின் அசல் தன்மை யை அனுபவித்து எழுதி வருவதைப் பிரகடனப் படுத்துகின்றன. கலை நயங்களுக்குள்ளும் இன்பங்களுக்குள்ளும் ஒளிந்துகொள்ளும் வடிவமாக கவிதை தேங்கிவிடாமல் ஆற்றல் பொதியாக மாற்றம் பெறத் தொடங்கியது.

குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதை களில் தாய், குழந்தை, குடும்பம், பணியிடம், உளச்சிக்கல்கள் என்பனவற்றைக் கடந்து, உடலரசியல், இன அரசியல், மொழிப்பற்று, மனிதநேயம், தலித்தியம் என்கிற தளங்களில் ஆழந்த புரிதலோடு எழுதி வருகின்றனர். பெண் களுக்கான சட்டம் இயற்றப்பட்டு பெண் சுதந்திரம் சட்ட நூல்களுக்குள் சிறை தண்டனைக் கைதிபோல சிக்கிக் கிடப்பதனின்று விடுபட வேண்டும்.

அரசியல் சமூக, பண்பாட்டுத் தளத்தில் மாற்றம் ஏற்பட்டால் தான் இயற்றப்பட்ட சட்டங் களுக்கும் சட்டப் புத்தகத்தும் பயன் ஏற்படும் பெண்ணுரிமை, பெண்கவிஞர்கள் என்றால் ஆணுக்கு எதிர் நிலையில் வைத்துப் பார்க்கிற மேலை நாடுகளில் நிலவும் பெண்ணிய வகைமையான தீவிரப் பெண்ணிய செயற்பாட் டாளரைப் போலக் கருதுகிற ஒற்றை நோக்கு திருத்தம் பெற வேண்டும். ஆணாதிக்கத்தை எதிர்ப் பதற்கும் ஆண்பாலினத்தை எதிர்ப்பதற்குமான வேறுபாட்டினை உணர வேண்டும்.

பெண் படைப்பாளர்கள் பலர் தங்கள் புகைப் படம் வருவதையோ, தொகுப்பு வெளியிடு வதையோ கூட அச்சத்தோடு மேற்கொள்ளுதலும் நடைமுறையில் இருக்கிறது. ஏனெனில் கவி தையை படைப்பாகக் கருதாமல் பெண் படைப் பாளியின் நாட் குறிப்பென நோக்குதல், இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இத்தயக்கத்தை உடைத்தால் மேலும் பலநூறு பெண்கவிஞர்களின் இருப்பு வெளிப் படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர் பெண்ணாக உணரும் உருமாறும் நிலையில் அவர்களை மூன்றாம் பாலினப் படைப்பாளிகள் என்ற வரை யறைக்குள் கொண்டுவருவதா பெண்படைப்பாளிகளின் பட்டியலுக்குள் கொண்டுவருவதாவென்று முடிகொடுக்க வேண்டியிருக்கிறது.

தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தப்படி….
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்
- லிவிங் ஸ்மைல் வித்யா (மூன்றாம் பாலினத்தவர்)

சமூகப் பிரச்சனைகளுக்கு ஏற்ப உடனடியாக சட்டம் இயற்றப்படுவது போலவே பெண் படைப்பாளிகள் மொழியின் மூலம் புதுத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சட்டம் சமூகத்தில் நடைமுறைக்கு உடனடியாக வந்து விடுவதில்லை. அது போலவே பெண்படைப்பாளிகளின் குரல் அடக்குமுறைக்கு எதிராக மானுடத்தைக் காக்க குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. சமூகம் மிகப் பின்தங்கி தொடரமுடியாமல் தேங்கிக் கிடக்கிறது. பாதை போடப்பட்டிருக்கிறது வாகனம் இல்லை என்பதான இப்போக்கு மாற அரசியல், சமூகம், பண்பாடு, மதம் சார்ந்த அனைத்துத் தளங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவற்றிலும் பெண்இனத்திற்கு தேவையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் உருவாக வேண்டியிருக்கிறது.

பெண் எழுத்தாளர்கள் உலகளாவிய நிலையில் பார்க்கும் பொழுது உரக்கப் பேச முடி யாதவர்களாக… பேசுவது பரவலாக போய்ச் சேரமுடியாத அளவு ஒலியடைப்பு செய்யப்பட்ட தாக இருக்கிறது. குரலற்றவர்களாகத் தொடராமல் பெண் படைப்பாளிகள் தங்களுக்குள் கூட்டிணை வோடு செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. உதிரிகளாகப் போய் சக்தியை பலனற்று விரயமாக்காமல் ஒருங்கிணைய வேண்டிய தேவை யைப் புரிந்துணர வேண்டும்.

உலகம் முழுவதுமான பண்பாட்டுச் சிதைவு களுக்கிடையில் பெண்ணுக்கான உரிமையை ஓங்கியொலிக்க செய்ய வேண்டியுள்ளது. சூழலியத் தோடு பிணைக்கப்பட்டிருக்கிற பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மனித உரிமைகளோடு பெண்ணுரிமையை இணைத்தே நோக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

நன்றி - பெருவெளிப்பெண்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்