/* up Facebook

Jul 31, 2011

புன்னகையை விற்பவளின் கதை - திலினி தயானந்த


பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய 'வணக்கம்' சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

அதனை விருப்பத்துடன்தான் செய்கிறேனா என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அழகாகப் புன்னகைத்தபடியே இருந்த போதிலும் அப் புன்னகைக்குள் கண்ணீரும் வெளியே குதித்திடவென அலைபாய்கிறது. இச் சமூகத்தில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் ஒரு தொழிலை நான் செய்கிறேன். எனினும் சிலர் இதனை மோசமான கோணத்தில் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்குள் பிரவேசிக்கும் தலைவாசலிலிருந்து புன்னகையை விற்பது உண்மைதான். உங்களை எமது நிறுவனம் பக்கம் ஈர்க்க நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் எனது தொழில். இலகுவானதும் நிம்மதி தரக்கூடியதுமான தொழிலென நீங்கள் எண்ணிய போதிலும், இது உண்மையில் இலகுவானதா என்ன? புன்னகைக்கக் காசு செலவழியாது என ஒரு பேச்சுக்குச் சொல்வார்கள். எனினும் நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது. வாழ்க்கையை வாழ்ந்து செல்லவே இன்று நான் புன்னகைக்கிறேன்.

சில மாதர்கள், தங்களது காரியங்களை ஆற்றிக் கொள்ளவென கனவான்களின் கைகளில் தொங்கிப் புன்னகைக்கிறார்கள். எனினும் எனக்குக் கவலையில்லை. நான் எனது தொழிலைச் செய்கிறேன். பொருளாதாரத்தை வளம் மிக்கதாக்கும் செயன்முறை இது. யார் எவ்விதத்தில் அதனை நோக்கிய போதும், மாதக் கடைசியில் கிடைக்கப் போகும் ஊதியத்தைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். அதற்காகத்தான் நான் புன்னகைக்கிறேன்.

- திலினி தயானந்த

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை
...மேலும்

Jul 30, 2011

தீவிரவாத பெண்ணியமும் பெண் உடல் அரசியலும் - யுகாயினி


பெண்ணின் விடுதலையை பெண்ணின் மொழியில் பேசும் பெண்ணியச் சிந்தனை கடந்த நூற்றாண்டிலேயே தமிழில் தடம் பதித்ததாகக் கூறப்பட்டாலும் ஆண்டாள் பாசுர காலத்திலிருந்தே பெண் மொழிப் பிரயோகம் தமிழில் நுழைந்து விட்டது. எனினும் பெண்ணியத்தை சித்தாந்தப் புரிதலோடு ஓர் அரசியல் சொல்லாடலாக முன்வைக்கப்பட்டது கடந்த நூற்றாண்டில் தான்.

பெண் உரிமைகள், பாலின வேறுபாடு, பெண் சமத்துவம் முதலியவற்றை விவாதப் பொருளாக்கி பெண் விடுதலைப் பயணம் துரிதமாக முன்னெடுக்கப் ;பட்ட கடந்த நூற்றாண்டிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்திலும் பெண்ணியம் பேசு பொருளாகியது. பெண்ணியம் என்ற சொல்லாடலைத் தொடர்ந்து பெண்மொழி, பெண்உடல், பெண் அரசியல் என்ற பதப் பிரயோகங்களும் நடைமுறைக்கு வந்தன. பெண்ணின் விடுதலை பற்றி பெண்ணின் மொழியில் பேசும் காலம் வந்த பின்னர் கூடவே அதனை மறுத்துரைக்க தீவிரவாத பெண்ணியம் என்ற பதமும் புழக்கத்திற்கு வந்தது. வர்க்க ரீதியில், இனரீதியில் ஒடுக்கப்பட்ட வர்களைப் போலவே பெண்களும் ஒடுக்கப்பட்டவர்களே என்ற பார்வை புட்டு வைக்கப்பட்டது பெண் மொழியால் தான்.

பெண் தனது இருப்பையும் நிலையையும் உணர்ந்து தனது விடுதலைக்காகவும், சமத்துவத்திற் காகவும் தனது மொழியில் குரல் கொடுக்கும் இன்றைய காலகட்டத்தில், பெண்ணிய முன்னெடுப்புகளை அடக்கி ஒடுக்கிடவே தீவிரவாத பெண்ணியம் என்ற கூப்பாடு ஆணாதிக்க வாதிகளிடமிருந்து எழுந்தமை அப்படியொன்றும் ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. உரிமை இழந்த சிறுபான்மை இனத்தவர்கள் தமது உரிமைக்காக போர்க்குரல் எழுப்பிய வேளை அவர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தப்பட்டமை போன்றதே இதுவும். ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் தமது உரிமைக்காக கிளர்ந்தெழுந்தபோது அதை அடக்க அவர்களுக்கு பூசப்பட்ட முலாம் போலத்தான் இதுவும்.

ஆரம்பத்தில் பெண்ணியவாதிகள் தமது இருப்பின் நிலையை உணர்ந்து அதைப் பெண்ணினத்திற்கு உணர்த்துவதில் முக்கிய பங்காற்றினர். அடுத்த கட்டமாகவே பெண்ணுரிமைக்கான போராட்டமாக பெண்ணியம் முகிழ்ந்தெழுந்தது. இதன் ஓர் அங்கமாகவே இலக்கியத்திலும் பெண்ணியம் பேசு பொருளானது. பெண் விடுதலை நோக்கிய நகர்வு, பெண்ணின் சமூக பண்பாட்டு அடிப்படையிலான சமத்துவமின்மையையும் பாலின வேறுபாட்டையும் முதன்மைப்படுத்தி பால் சமத்துவத்தை வலியுறுத்தியது. பெண்ணியவாதிகள் முன்வைத்த வாதங்கள் உடல் அரசியல் எனும் கருத்தியலாக உருப்பெற்றது.

இதனை அடுத்து பெண்கள், சிறுமிகள் மீதும் அவர்களது உடல் மீதும் அதனால் உளரீதியிலும் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் பற்றியும், அதற்கு எதிரான போராட்டம் பற்றியும் தீவிரமாக சிந்திக்கப் பட்டது. பொது வாழ்வில் சம உரிமைகள் வழங்கப்படும் அதே வேளையில் வீட்டிலும் பாலியல் உறவுகளிலும் சம உரிமைகள் இருக்க வேண்டுமென்ற கருத்து முனைப்புப் பெற்றது. பெண், தனது உடல் மீது அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துபவளாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. எங்கள் உடல்கள் எங்களுக்கே என்ற முழக்கம் முன்வைக்கப் பட்டது. சமூகக் கட்டமைப்பின் நிறுவனங்களாலும், தனிப்பட்ட உறவு உடையவர்களாலும் பெண்ணுடல் அடக்கி ஒடுக்கப்படுகின்றன என்பதே உடல் அரசியலின் தெளிவுபடுத்தலாக மிளிர்ந்தது.

உடல் ஆதிக்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் தொட்டே தொடங்கியதால் அதை மறுத்துரைப்பதில் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்வது இயல்பே. பெண் உடல் என்பதற்கு அப்பால் இன்னொரு படி மேலாக சாதிய உடலாக நோக்கப்படும் போக்கினால் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் மேலதிக வன்முறைகளுக்கு உள்ளானார்கள். பெண்ணுடல் அடக்கப்படுவதற்கு மதங்களும் துணை போயின. பெண்ணுக்குப் பாதகமான, பெண் உடலின் உரிமையை மறுக்கம் கலாசார பண்பாட்டு அம்சங்களும் உருவாக்கப்பட்டு பாரம்பரியமாகத் தொடரும் மரபு உருவானது. இன்று இதற்காகக் குரல் கொடுக்கும் பெண்கள் ஆணாதிக்கத் தினால் புறம் தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்ற அவல நிலையை அவதானிக்க முடிகிறது.

பெண் தன் உடலை எழுதல், தன் காமத்தை வெளிப்படுத்தல் என்பன தமிழுக்குப் புதிதல்ல. எனினும், இன்று பெண் அரசியலாக, விடுதலைக்கான ஆயுதமாக அது வெளிப்படும் போது ஆணாதிக்கத் தினால் அதை ஜீரணிக்க முடியவில்லை என்பதே யதார்த்தம். இதற்காக அவர்கள் முன்வைக்கும் அபத்தங்களும் ஆணாதிக்கப் பார்வையிலேயே வெளிப்படுகிறது.

சமையல் அறை வீட்டு வேலை ‘ரோபோ’வாக இருந்த பெண் இன்னொரு புறம் ஆணுக்கு இன்பம் அளிப்பவளாகவும் இருந்த நிலையில் இன்று ஏற்பட்டு வரும் தளர்வினை, சுகமனுபவித்த ஆணாதிக்கம் ஏற்க தயங்கி நிற்கிறது. இதனாலேயே பெண்ணைத் தம்மை ஒத்த சக மனிதப் பிறவியாக சமத்துவம் உடையவளாக ஏற்றுக் கொள்ளத் தயங்கி நிற்கிறது. பெண் பற்றிய பழைய மதிப்பீடுகள் உடைந்து வரும் இன்றைய நவயுகத்தில் பெண் உடல் சார்ந்து போகப் பொருள் சார்ந்து பார்க்கும் பிம்பம் உரத்த கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

அந்தரங்கத்தைப் பகிரங்கமாக்குகின்ற பெண்ணின் காமத்தின் இயல்புத் தன்மைகளை எடுத்தியம்புகின்ற புனைவுகளை ஆபாசமாகக் கூச்சலிடும் ஆணாதிக்கம், இன்னொரு புறம் பெண்ணின் உடலை ஆபாசப்படுத்தி வியாபார விளம்பரம் செய்கின்ற யுக்தியைக் கண்டு கொள்வதேயில்லை. உடல் அரசியல் சார்ந்த, உடலையே விடுதலைக்கான ஆயுதமாக்குகின்ற பெண்ணின் எழுச்சியின் உக்கிரம் ஆணாதிக்கத்தை எரிக்கக் கூடியது. (ஆணை அல்ல)

இவ்வாறான பெண் உடலின் மொழியானது விடுதலை மொழியாக, விடுதலைக்கான ஆயுதமாக பெண்ணின் உள்ளத்தைப் புட்டுக்காட்டி சமத்துவத்தைக் கோரி நிற்கிறது. கருவறையில் தொடங்கி கல்லறை வரை தொடரும் பெண் அடக்கு முறையை விரட்டிட, சமத்துவத்தை ஈட்டிய பெண்மொழி உதவும் என நம்பப்படுகிறது.

பெண்ணின் உடலை காதல் போர்வையில் வர்ணித்து எழுதிய ஆண்வர்க்கம் அதை ஆபாசமாகக் கண்டு கொள்ளாமல், பெண்கள் பெண்ணுடலை விடுதலைக்கான ஓர் ஆயுதமாக்கி எழுதும்போது மட்டும் பண்பாடு, கலாசாரம், ஒழுக்கநெறி என்று கூச்சல் போடுகிறது. ஒழுக்க நெறிக்கு நானொன்றம் மாறானவளல்ல. அது இருபாலருக்கும் சமமானதாகவே இருக்க வேண்டும். பெண்ணுக்கு ஒரு நீதி ஆணுக்கு வேறு நீதி என்ற நோக்கு சமூகத்தில் இருப்பதால் தான் ஆண்களால் சேறு கண்ட இடத்தில் மிதித்து, தண்ணீர் கண்ட இடத்தில் கழுவிக் கொண்டு இயல்பாக இருக்க முடிகிறது. ஆனால் பெண் பாலியல் ரீதியில் தும்மினால் கூட குற்றமாக இச்சமூகம் நோக்குகிறது. பாரபட்சமான நோக்கினை மாற்றவே பெண்பொழியிலான படைப்புக்களை பெண் எழுத்தாளர்கள், வெளிக் கொண்டு வருகிறார்கள். பெண்களின் இதயத்தின் அந்தரங்க அறைகள் மௌனத்தால் நிரம்பியிருந்தன. அவளின் இயல்பான காமத்தைப் பற்றி மூச்சு விட
முடியாத நிலை. ஆனால் ஆண்கள் தமது உணர்வுகளை பகிரங்கமாகப் பகிர்ந்து உரையாட சமூகம் அனுமதித்திருந்தது. இயல்பான காமத்திற்கு நேர்வழியில் தீனி கிடைக்காத போது ஆணால் மாற்று வழிகளைத் தேட சமூகம் இடமளித்துள்ளது. இரண்டாவது திருமணத்தைக் கூட ஆண்களால் செய்ய முடிகின்ற அதே வேளையில் விதவைகளான பெண்கள் வெள்ளைப் புடவைக்குள் தமது இயல்பான உணர்வுகளை அடக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஏன் இந்தப் பாரபட்சம்?

சீதனம், சாதியம் எனப் பல தடைகள் பெண்களின் திருமணத்திற்கு தடைக் கற்களாக உறுத்துகின்றன. வாழாத குமர்களாக பல முதிர் கன்னிகள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதப் பெண்ணியம் எனப் புறம் தள்ளப்பட்ட பெண்ணியவாதிகள், பெண்ணின் சகல விதமான உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கி றார்கள். பெண்ணின் அடக்கு முறைக்கு எதிரான ஆயுதமாக பெண்ணுடலை பெண்மொழியில் எழுதும் இவர்களை தீவிரவாதப் பெண்ணியவாதிகள் என ஒதுக்குவது முறையல்ல. இவர்களது படைப்பை ஆபாசம் என கூச்சலிடுவதை விடுத்து, அனுதாபத்துடன் பெண்ணின் மனதை நியாயமான அபிலாசைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி - ஞானம் இதழ் - ஓகஸ்ட் 2011
...மேலும்

Jul 29, 2011

பாலாவின் குரூர அழகியல் - எம்.ஏ.சுசீலா


’’வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.’’


முதல் படமான சேதுவிலேயே தனது தனித் தன்மையை நிறுவிக் காட்டியவர் இயக்குநர் பாலா.

தொடர்ந்த தன் படங்களிலும் - தான் தேர்ந்தெடுக்கும் வேறுபட்ட களங்கள்,நடிகர்களின் தேர்வு,அவர்களிடமிருந்து வருவிக்கும் கடுமையான உழைப்பு எனப் பல கூறுகளால் வித்தியாசமான சுவடுகள் சிலவற்றை அழுத்தமாகத் தமிழ்த் திரையில் வரைந்திருப்பவர்.

ஒரு சில படங்களிலேயே தேசிய விருது என்னும் உயரத்தை எட்டும் அளவுக்கு வளர்ந்தவர்.

இந்த உண்மைகளை மறுக்க முடியாத - அவரது பலங்களை மறுதலிக்க முடியாத அதே வேளையில்......
அவரது சமீபத்திய படமாகிய அவன் - இவன் பற்றி மட்டுமன்றி
அவர் தன் படங்களில் முன் வைக்கும் சில குரூரங்களை-
அவற்றையே திரை அழகியலாக்கும் அவரது போக்கை ஒட்டிய சில விமரிசனங்களை முன் வைப்பதும் தேவையாகவே இருக்கிறது.

சமூக யதார்த்ததில் பல குரூரங்களும்,கொடூரங்களும் அன்றாட நிகழ்வாகவே நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ,
அவற்றைக் கண்டு கண் பொத்தி விலகிச் செல்ல வேண்டியதில்லை என்பதும் உண்மைதான்..
ஆனால் வித விதமான குரூரங்களைக் கற்பனை செய்வதிலேயே பாலாவின் ஆக்கத் திறன் அனைத்தும் விரயமாகிக் கொண்டிருக்கிறதோ என எண்ணுமளவுக்கு அவர் படங்களில் அவையே பெரிதும் மலிந்து கிடக்கின்றன.

விளிம்புநிலை மனிதர்கள் குறித்த வாழ்க்கைப் பார்வை - அவர்களது வாழ்முறை (பழக்கவழக்கங்கள்,சொல்லாடல்கள்) ஆகியவற்றைப் பதிவு செய்வது தேவைதான் என்றபோதும் - அவர்களது வாழ்வில் விஞ்சி நிற்கும் வக்கிரங்களும் ,கொடூர மன நிலைகளுமே பெரிதும் காட்சிப்படுத்தப்படுகையில் அவர்களைப் பாத்திரங்களாக முன் வைப்பதன் வழி பாலா நிகழ்த்திக் கொண்டிருப்பதும் ஒரு சுரண்டல்தானோ என்று கூடத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது.
(ஈழப் பிரச்சினையின் ஆழம்-அடிவேர் புரியாமல் அதை இலக்கியம்-திரைப்படம் வழி ஊறுகாய் ஆக்குவது போன்ற செயல்தான் இதுவும்)

நந்தாவில் தாய் மகனுக்கு ஊட்டும் நஞ்சு,
பிதாமகனில் குரல்வளை குதறும் கொடூரம்,
நான் கடவுளில் ஆரியாவின் சம்ஹாரம்...

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது அவன் - இவனில் வில்லன் செய்யும் வக்கிர நிர்வாணச்சித்திரவதை ஒரு புறம் என்றால்..

அதற்குப் பழி வாங்கும் வகையில், இறந்தவரின் தேர்ப் பாடையில் உயிரோடு வில்லனைக் கட்டி ‘உடன்சிதை’ஏற்றும் கொடூரம்.

வக்கிரத் துன்புறுத்தல்களை வித விதமாகக் காட்சிப்படுத்தினால் மட்டுமே தேசிய விருது கிடைக்கும் என்றோ அல்லது அது தங்கள் படைப்புச் சுதந்திரம் என்றோ பாலாவும்,‘பருத்தி வீரன்’ அமீரும் நினைக்கலாம்.

ஆனால் அத்தகைய ஆக்கங்களின் எதிர்மறைத் தாக்கங்கள் குறித்த பொறுப்புணர்வு - ஒரு பரவலான சமூக ஊடகமான திரைப்படத்தைக் கையாளும் இயக்குநர்களுக்கு ஓரளவேனும் இருந்தாக வேண்டும்,இல்லையென்றால் இந்தச் சமூகம் சீழ் பிடித்த சமூகமாக மாறி விடும் என்பதே நடுநிலைப் பார்வையும்,ஆரோக்கியமான திரைப்பட ரசனையும் கொண்டோரின் கருத்தாக இருக்க முடியும்.

(’படத்தைப் பார்த்துதான் சமூகம் கெட வேண்டுமா’.போன்ற சப்பையான வாதங்களில் உண்மையில்லை என்பதும் குற்றங்களின் உத்திகள் பலவற்றைப் பல படங்கள் கற்றுத் தந்திருக்கின்றன என்பதும் நம் நெஞ்சறியும் உண்மைகள்)

அவன் இவனைப் பற்றிய விமரிசனத்தை இங்கே செய்யப்போவதில்லை.அது குறித்த நல்ல விமரிசன இணைப்பு ஒன்றைக் கீழே தந்திருக்கிறேன்.

ஆனாலும் ..இறுதியாக அந்தப்படத்தைப் பற்றிய என் கணிப்பு ஒன்றை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன்.
தன் படைப்புக்களைத் தானே பிரதி(அல்லது ‘காப்பி’என்றும் வைத்துக் கொள்ளலாம்) எடுக்கத் தொடங்கி விடும்போதே அந்தப் படைப்பாளியின் படைப்பூக்கம் வற்றிப் போய்விட ஆரம்பித்து விடுகிறது.

இலக்கியவாதி முதல் ஒளி ஓவியர் வரை புனைவு சார்ந்த படைப்புச் செயல்பாட்டில் முனைந்திருக்கும் அனவருக்குமே இது பொருந்தக் கூடிய சூத்திரம்தான்.
அவன் இவனில் பாலா அதைத்தான் தொடங்கியிருக்கிறார்..
நந்தாவை நினைவூட்டும் வாழ்ந்து கெட்ட நிலக் கிழார்....

அவருக்கு ஊழியம் செய்யும் நாயகன்(அவன் இவனில் அதே வேலையை இரண்டு பேர் சற்றுத் தமாஷாகச் செய்கிறார்கள்,அவ்வளவுதான்!)
பிதாமகனில் சிம்ரன் வருவது போல இங்கு சூரியா..
பிதாமகனின் ‘இளம் காத்து வீசுது’பாடலைப் போல ஜமீன்தாருடன் மக்கள் கொண்டிருக்கும் பாசத்தின் நெருக்கத்துக்கு ஒரு பாடல்..

இவ்வாறு ஒரு கூட்டுக்குள் மட்டுமே முடங்கிப் போய்ச் சொன்னதையே வெவ்வேறு வகையாகச் சொல்லும் கிளிப்பிள்ளையாக பாலா போன்ற நல்ல இயக்குநர்களும் மாறிவிட்டால்...தமிழில் நல்ல படங்களின் எண்ணிக்கை இன்னும் கூடக் குறைந்துதான் போகும்.

இவ்வளவு விமரிசனங்களையும் மீறி பாலாவின் படைப்புக்கள் மீதும் இயல்பான காட்சிப்படுத்தல் மீதும் இன்னும் மதிப்பிருக்கிறது.
வறுமையின் கொடுமையிலும் பாசம் என்னும் உணர்வின் ஊற்று வற்றாமலிருப்பதைத் தன் படங்களில் பாலா அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதை மறக்க முடியுமா?
பிதாமகனில் விக்ரம்-சூர்யா நட்பு,

அவன் இவனில் மக்களுக்கும் நிலக்கிழாருக்குமான எதிர்பார்ப்பில்லாத நேசம்,
நந்தாவில் நெருப்பின் மீது நிற்பது போன்ற சூழ்நிலையிலும் பிறக்கும் சூர்யா-லைலா காதல்,
நான் கடவுளில் பிச்சைக்கார முதலாளியின் துணையாள் மறைமுகமாக அந்தப் பாவப்பட்ட ஜீவன்கள் மீது காட்டும் பரிவு
என்று பாலா காட்டும் நல்லுணர்வுகள் அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்க வைக்கின்றன.
வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.


...மேலும்

Jul 28, 2011

பாலியல் சார் சொற்களஞ்சியம் - அனிருத்தன் வாசுதேவன்


கடந்த பல வருடங்களாக "மாற்று பாலியல்" (alternate sexuality) என்பது குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. "மாற்று" என்று சொல்லும் பொழுது பல கேள்விகள் எழுகின்றன. உதாரணத் திற்கு, எதற்கு மாற்றாக? "இயல்புப்" பாலியல் ஒன்றிருப்பதாகவும் அதற்கு "மாற்றாக" option-ஆக ஒன்று இருப்பதாக அர்த்தமா? Option என்றால் தேர்வு செய்துகொள்ள முடியுமா? - போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் மாற்றுப் பாலியல் என்று நாம் இப்பொழுது கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, உண்மைகள் வழங்கப்பட்ட ஆண்-பெண் பாலியல் உறவுகள் அல்லாதவை என்ற பொருளில் அடங்கும். பல்வேறு காரணங் களுக்காக, இது பின்வரும் பாலியல் மற்றும் பாலின அடையாளங் களாகப் புரிந்து கொள்ளப்படுகிறது: இரு ஆண்கள் (homosexuality) அல்லது இரு பெண்களுக்கு (lesbian)இடையிலான பாலியல் விழைவு, இச்சை, காதல், காமம், உறவு; இரு பாலினத்தவரிடமும் ஈர்ப்பும், விழைவும், காதலும், உறவும் கொள்ளக்கூடிய நிலை (bisexuality); பிறப்பாலான பாலடையாளத்தை கடக்கும் நிலை (transgender/transsexual): அதாவது பிறப்பால் ஆணாக இருந்து பின் பெண் அடையாளம் ஏற்போர் (அரவானிகள்/ திருநங்கைகள்), பிறப்பால் பெண்ணாக இருந்து பின் ஆண் பாலடையாளம் ஏற்போர்.

பொதுவாக சமூக அங்கீகாரம் பெறாத பாலியல் நிலைகள் என்பதாலும், இப்பொழுது தான் இவை குறித்த புரிதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன என்பதாலும் இவற்றைப் பற்றிய விளக்கங்கள் அவசியமாகின்றன. மேலும், இந்தப் பாலியல் மற்றும் பாலியல் வெளிப்பாடுகள் மற்றும் அடையாளங்களை இலக்காக்கும் அவதூறுச் சொற்கள் நம் சமூகத்தில் வழங்குவதால், இவை குறித்த ஆழ்ந்த புரிதல் ஏற்படுவதற்கு முன் சரியான பெயர்களையும் சொற்களையும் வித்தியாசங்களையும் அறிந்துகொள்வது அவசியம்.

அது தவிர, பொதுவாக பால், பாலியல், பாலினம், அடையாளம், வெளிப்பாடு ஆகியவை குறித்த தெளிவும் இன்றளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் விளக்கங்கள் மற்றும் வேறுபாடுகளை அறிந்திருத்தலும் அவசியம்.

பாலியல் சொற்களஞ்சியம்

அக்வா கோத்தி - பெண் உடையிலோ அல்லது ஆண் உடையிலோ இருக்கும் கோத்தி நபர்கள். இவர்கள் தமது ஆணுறுப்பை இது வரை நீக்கம் செய்யாதவர்களாகவோ பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் எண்ணம் இல்லாத வர்களாகவோ இருக்கலாம்.

பாலுணர்வு இல்லாதவர்கள்/ asexuals - எவரிடத்தும் பாலியல் ரீதியான ஈர்ப்பு இல்லாதவர்களும் உண்டு

பைரூபி, பைரூபியா - வட இந்தியாவில் சில ஆண்கள் பெண்களின் உடை அணிந்து அரவானிகள்/ ஹிஜ்ரா சமூகத்தினர் போல தோற்றமளிப்பர். இவர்கள் பொதுவிடங்களில் கைத்தட்டி பணம் சம்பாதிப்பதும் உண்டு. இவர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டு தங்களுடைய சமூகத்தின் பெயரைக் குலைப்பதாக ஹிஜ்ரா சமூகத்தினர் கருதுகின்றனர்.

இருபாலீர்ப்பு கொண்டவர்கள்: ஆண் பெண் என்ற இரு பாலினத்தவரிடமும் குறிப்பிடத்தக்க பாலீர்ப்பு கொண்டவர்கள்.

Double Decker/ டி டி : இவர்கள் உடலுறவின் பொழுது தனது ஆணுறுப்பை மற்றவரது ஆசனவாயில் புகுத்துபவராகவும், மற்றவரது ஆணுறுப்பைத் தனது ஆசனவாயில் பெறுபவராகவும் இருப்பர். இவர்கள் பெண்களோடு உடலுறவு கொள்பவராகவும் இருக்கலாம். இவர்கள் செலுத்துவது/ பெறுவது என்ற இரு செயல்பாட்டிலும் ஈடுபடுவதால் கோத்திகள் இவர்களை Double Decker என்று அழைக்கின்றன்ர்.

யூனக்/ அலி: ஹிஜ்ரா/ அரவானி சமூகத்திற்கு எதிரான அவதூறுச் சொல்லாய் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. முன் காலங் களில், சுய விருப்பமின்றி பலவந்தமாகவும் தண்டனையாகவும் ஆணுறுப்பு நீக்கப்படும் ஆண்களைக் குறிக்க இச்சொல் பயன் படுத்தப்பட்டது. உதாரணம்: அரசாட்சி காலங்களில் அந்தப் புரங்களில் காவல் பணிபுரிவதற்கென பல ஆண்கள் பிறப்புறுப்பு நீக்கம் செய்யப்பட்டனர்.

பெண்மை: இது உறுதியான வரையறை இல்லாத ஒரு சொல். இது உடல் ரீதியாக பெண்ணாக இருக்கும் ஒரு நபரின் சுய வெளிப்பாட்டையும் நடந்துகொள்ளும் விதத்தையும் செயல்களை யும் உடைகளையும் பேசும் விதத்தையும் குறிக்கின்றது. ஆனால் எந்த பாலினத்தவரும் தன்னை பெண்மை உடையவர்களாக அடையாளப் படுத்திக் கொள்ளலாம்.

ஒருபாலீர்ப்பு அல்லது ஓர்பாலின ஈர்ப்பு கொண்ட ஆண்கள்/ Gay men - ஆண்களிடமே குறிப்பிடத்தக்க பாலீர்ப்பு கொண்ட ஆண்கள். இத்தகைய ஒருவர், ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் சமூகத்தின் அங்கத்தினராய்த் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லாது எந்த சமூகத்தினரையும் சேராது தன்னுடைய தனி மனித அடையாளமாகவும் இதைக் கொண்டிருக்கலாம். ஆண்களிடம் மட்டுமே பாலீர்ப்பு கொண்டிருந்தாலும் இவர்களுள் சிலர் பல காரணங்களுக்காகப் பெண்களுடனும் உடலுறவு கொள்பவர்களாக இருக்கலாம்.

பாலினம் (Gender): தனி நபராகவோ, சமூகத்திலோ, சட்ட ரீதியாகவோ ஒருவருக்குள்ள ஆண் அல்லது பெண் அடையாளம். ஆண்மை பெண்மை போன்ற வித்தியாசங்களைக் குறிக்கும் சொற்கள்.

பாலின செயல்பாடு: ஆணாகவோ பெண்ணாகவோ ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சமூக, பண்பாட்டு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்தச் சூழலில் ஒருவர் எவ்வளவு ஆண்மையுடனும் பெண்மையுடனும் நடந்துகொள்கிறார் என்ற செயல்பாடுகளை இது குறிக்கின்றது. ஆண்களும் பெண்களும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தெந்தப் பணிகளைச் செய்ய வேண்டும், எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும் என்று பல எதிர்பார்ப்புகள் உண்டு.

பாலின வெளிப்பாடு: பொதுச் சமூகத்தில் ஒருவர் தன்னுடைய பாலினத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பது குறித்தது. தன்னுடைய நடை உடை பேச்சு மற்றும் இதர செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் ஆண்மை என்றும் பெண்மை என்றும் கூறப்படும் தன்மைகளை ஒருவர் வெளிபடுத்தும் விதம்.

பாலின மாறுபாடு: தன்னுடைய பிறப்பால் அடையாளத்திற்கு உரியது என்று சமூகத்தால் வரையறுக்கப்பட்ட பாலின வெளிப்பாடு அல்லாது எதிர் பாலினத்திற்கு உரிய வெளிப்பாடுகளைக் கொண் டிருப்பது. உதாரணத்திற்கு, பெண்மையை மிகையாக வெளிப் படுத்தும் ஆண்கள், ஆண்மை அதிகமாக வெளிப்படும் பெண்கள்.

பாலின அடையாளம்: ஒருவர் உள்ளூரத் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ உணர்வது. இந்த உள்ளுணர்வு ஒருவரது பிறப்புறுப் பிற்கும் அதனால் வரையறுக்கப்பட்ட பாலின எதிர்பார்ப்புகளையும் சார்ந்து இருக்க வேண்டும் என்பது இல்லை. ஒருவர் பிறப்பால் ஆணாக இருந்து தன் மனரீதியாகத் தன்னை பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

எதிர்பாலீர்ப்பு: ஆண்-பெண் பாலீர்ப்பு. தன்னுடைய பாலடை யாளத்திற்கு எதிரான பாலடையாளம் கொண்டவர்கள் மீதான பாலியல் ஈர்ப்பு.

ஹிஜ்ரா/ அரவானி/ திருநங்கை: இவர்கள் உடல் ரீதியாக ஆண்களாகப் பிறப்பவர்கள். எனினும் மனரீதியாகத் தங்களைப் பெண்களாகவே உணர்பவர்கள். பின் தங்களது வாழ்வில் ஒரு சமயத்தில் அந்த ஆண் பாலடையாளத்தை நிராகரித்து பெண் ணாகவோ, அல்லது மூன்றாம் பாலினமாகவோ தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஹிஜ்ரா என்ற சொல் வட இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரவானி மற்றும் திருநங்கை என்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒருபாலீர்ப்பு மீதான காழ்ப்புணர்ச்சி (Homophobia): ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள் மீதான ஒருவித வெறுப்பும் பயமும். இது சமூகத்தில் ஒதுக்குதலாகவும், வன்முறையாகவும், காழ்ப்புணர்ச்சியாகவும் வெளிப்படுகிறது.

ஒருபாலீர்ப்பு கொண்டவர் (Homosexual) - தன்னுடையதே ஆன பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொண்டவர்கள். இவர்கள் ஆண்களா கவோ அல்லது பெண்களாகவோ இருக்கலாம். ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களைப் பெரும்பாலும் "கே" (Gay) என்றும் ஒருபாலீர்ப்பு கொண்ட பெண்களை "லெஸ்பியன்" (lesbian) என்றும் அழைப்பதுண்டு. உண்மையான விழைவுகளைக் குறிக்காமல் இச்சொல் மருத்துவ ரீதியான விளக்கத்தை மட்டும் தர முயல்வதாக மாற்றுப் பாலியல் கொண்டவர்கள் இதனை நிராகரிப்பதும் உண்டு.

இடைநிலை பாலடையாளம் (Intersexed persions): உயிரியல்/ பிறப்புறுப்பு ரீதியாக ஆண் பெண் என்ற இரு தன்மைகளையும் பிறப்பிலிருந்தே கொண்டவர்கள்.

கோத்தி: வெளிப்படையாக பெண்மை உடையவர்களாகவும் மற்றும்/ அல்லது மற்றொரு ஆணுடனான உடலுறவில் தனது ஆசனவாயிலோ வாயிலோ மற்றவரது ஆணுறுப்பைப் பெறுபவராகவும் உள்ள ஆண்கள். கோத்திகள் பல்வேறு நிலைகளில் பெண்மை தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சமயங்களில் பெண்களின் ஆடை அணிகலங்களை அணிவதும் உண்டு.

லெஸ்பியன்/ லெஸ்பியன் பெண்: பெண்கள் மீதே குறிப்பிடத் தக்க பாலீர்ப்பையும் காதலையும் கொண்ட பெண்.

LesBiGay: Lesbian, Bisesexual, Gay மக்களைக் குறிப்பதற்கான சுருக்கம்.

LGBT சமூகத்தினர்: ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களும் பெண்களும், இருபாலீர்ப்பு கொண்ட ஆண்களும் பெண்களும், எதிர்பாலடையாளம் ஏற்கும் ஆண்களும் பெண்களும் (Transgender men and women) ஆகியோரது கூட்டுச் சமூகங்களைக் குறிக்கிறது. தங்களுடைய பாலீர்ப்புகளும், பாலின வெளிப்பாடுகளும் அடையாளங்களும் வேறுபட்டு இருப்பினும், இவை காரணமாக தாங்கள் அனைவரும் ஒதுக்கப்படுவதையும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதையும் இந்தச் சமூகத்தினர் ஒன்று கூடி எதிர்த்துப் போராடுகின்றனர். தங்கள் பாலியல் காரணமாக சிறுபான்மைப் படுத்தப்படும் சமூகத்தினர்.

ஆண்மை: பெண்மை என்ற சொல்லைப் போலவே இதுவும் உறுதியான பொருளும் வரையறையும் இல்லாத ஒன்று. உடல் ரீதியாக ஆணாக இருப்பவர் ஒருவரின் சுய வெளிப்பாட்டையும் நடந்துகொள்ளும் விதத்தையும் செயல்களையும், உடைகளையும், பேசும் விதத்தையும் குறிக்கின்றது. ஆனால் எந்த பாலினத்தவரும் தன்னை ஆண்மை உடையவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

சமூகத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப ஆண்மை குறித்த பலவித நிலைப்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பதால் "ஆண்மைகள்" என்ற பன்மைச் சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

ஆண் - உடல்/ உயிரியல் ரீதியாக ஆணாக இருப்பது. ஒருவரது பிறப்புறுப்பின் தன்மையைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் ஒன்று.

ஆங்கிலத்தில் Male என்ற சொல்லுக்கும் Man என்ற சொல்லுக்கும் முக்கியமான வேறுபாடுகள் அறியப்படுகின்றன. தமிழில் இவ்விரண்டு சொற்களுக்குமே "ஆண்" என்ற சொல் பயன்படுத்தப் படுவதால் இந்த வேறுபாடுகள் வெளிப்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விளக்கம்: Male என்பது ஒருவரது பிறப்புறுப்பு, உடல், உயிரியல் சார்ந்த அடையாளம். ஓருவரது பால் நிலையைக் (sex) குறிக்கின்றது. ஆனால் Man என்ற சொல் ஒருவரது பாலின வெளிப்பாட்டை (Gender) குறிக்கின்றது. உடல் ரீதியாக ஆணாக (னீணீறீமீ) இருக்கும் ஒருவர் தனது பாலின வெளிப்பாடுகளிலோ உள்மனதின் புரிதலிலோ ஆணாக (Man) இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த வேறுபாடு திமீனீணீறீமீ/ கீஷீனீமீஸீ என்ற சொற்களின் பயன்பாடுகளுக்கும் பொருந்தும். இவற்றிற்குத் தமிழில் "பெண்" என்ற ஒற்றைச் சொல்லையே பயன்படுத்துகிறோம்.

ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள்: உயிரியல்/ உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒருவர் உடல்/ உயிரியல் ரீதியாக ஆணாக இருப்பவர்களிடம் உடலுறவு கொள்வது. Male என்ற உடல்கூறு குறித்த சொல் பயன்படுத்துவதால் இச்சொல் பிறப்பால் ஆணாக இருந்த திருநங்கைகளையும் குறிப்பதாக இன்று வழங்குகிறது.

Men who have sex with men என்ற சொற்றொடரில் "ஆண்" என்பது உடல் ரீதியான அடையாளத்தைக் குறிக்காமல் தன்னை ஆண் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எவரையும் குறிக்கும். இந்நிலையில் இது தம்மைத் திருநங்கைகளாக சுய அடையாளப் படுத்திக் கொள்ளும் நபர்களைக் குறிக்காது. மேலும் இது ஒருவருடைய உடலுறவுச் செயல்பாட்டை மட்டும் குறிக்கிறது. ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் தம்மை ஒருபாலீர் ப்புள்ளவராகவோ, இருபாலீர்ப்பு உள்ளவராகவோ, அல்லது எதிர்பாலீர்ப்பு உள்ளவராகவோ இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. எச் ஐ வி/ எய்ட்ஸ் மற்றும் இதர பால்வினை நோய்களின் தடுப்புப் பணியில் ஈடுபடும் பொழுது பாலியல் அடையாளத் திற்கும் பழக்க வழக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிவது அவசியம்.

MSM சமூகம்/ மக்கள்: Gay, bisexual (ஒருபாலீர்ப்பு, இருபாலீர்ப்பு) என்று தம்மை சுய அடையாளப்படுத்திக் கொள்ளாமல் ஆனால் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள். இத்தகையோர் ஒரு சமூகமாக இணையாது இருக்கும் பொழுதும் இவர்களுக்குள்ள பாலியல் செயல்பாட்டின் ஒற்றுமை காரணமாக சமூகம் என்றழைக்கப்படுகின்றனர்.

நிர்வாண் கோத்தி: தங்களது ஆணுறுப்பின் விதைகளையும் ஆண்குறியையும் தன்னிச்சையயாகவே நீக்கம் செய்து பெண் உடை அணியும் கோத்திகள் நிர்வாண் கோத்திகள் என்றழைக்கப் படுகிறார்கள்.

பந்தி: கோத்திகளும் ஹிஜ்ரா மற்றும் அரவானிகளும் பயன் படுத்தும் ஒரு சொல். நிறைந்த ஆண்மை தன்மையுள்ளவர்களாகத் தாங்கள் கருதும் ஆண்களையும் உடலுறவில் ஆண்குறியை உட்செலுத்தும் ஆண்களையும் இப்பெயரால் குறிக்கின்றனர். இத்தகைய ஆண்கள் பெண்களுடனும் உடலுறவு கொள்பவராக இருக்கிறார்கள். தங்களுடைய நெடு நாள் ஆண் துணைகளையும் "பந்தி" என்ற பொதுப்பெயரிலேயே கோத்திகளும் அரவானிகளும் குறிக்கின்றனர்

Queer/க்யர்: ஆண்-பெண் உறவு தான் நியதி என்ற நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் எவரும். இவர்கள் ஒருபாலீர்ப்பு கொண்டவர்களாகவோ, இருபாலீர்ப்பு கொண்டவர் களாகவோ, பால் மாற்றம் விரும்பி ஏற்பவர்களாகவோ இருக்கலாம். இந்தச் சொல் முதலில் ஒருபாலீர்ப்பு கொண்டவர்களை வெறுத்து ஒதுக்குபவர்களால் ஒரு அவதூறுச் சொல்லாகப் பயன்படுத்தப் பட்டது. ஆனால் இந்த மொழிப் பயன்பாட்டை மாற்றி அவமானச் சொற்களாய்த் திரும்பப் பெறும் அரசியல் செயல்பாட்டின் காரணமாக "க்வீயர்" (Queer) என்ற இச்சொல் சுய அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் எதிர்பாலீர்ப்புள்ளவர்களும் ஆண்-பெண் உறவு நியதியைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதன் அடையாளமாகத் தங்களை "க்வீயர்" என்று அடையாளப்படுத்திக்கொள்வதுண்டு.

பால் (sex): (1) ஆண், பெண், இடை பால் நிலை என்று மரபணு, உயிரியல், மற்றும் உடல் ரீதியான பிரிவினைக்கென மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுவது; (2) ஆண், பெண், இடைப்பட்ட பால் நிலை என்று ஒருவரது உடல் ரீதியான அடையாளம். (3) மற்றவர்களுடன் தனது ஈர்ப்பை வெளிப்படுத்தவோ உடலின்பம் பகிர்ந்து கொள்வதற்காவகவோ மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்.

பாலியல்பு: இச்சொல் பல கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. மனிதர்களின் பாலியல் என்பது தனி நபர்களின் பாலியல் குறித்த அறிவு, நம்பிக்கைகள், கருத்துக்கள், மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்தையும் குறிக்கும். உடல் மற்றும் உயிரியல்-வேதியியல் காரணிகளும், சுய அடையாளம், வெளிப்பாடு, உணர்வுகள், எண்ணங்கள் உறவுகள் ஆகியவையும் இதனுள் அடங்கும். ஒருவருடைய பாலியல் சார்ந்த வெளிப்பாடு பல விஷயங்களைச் சார்ந்திருக்கிறது. ஒருவரது ஆன்மீகம், மத நம்பிக்கைகள், பண்பாடு குறித்த கேள்விகள், நீதி பற்றிய புரிதல்கள் ஆகியவை அவரது பாலியல் வெளிப்பாட்டின் மீது குறிப்பிட்டத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாலியல் அடையாளம்: இதன் முதல் நிலை பாலுணர்வு கொண்ட ஒருவராகத் தன்னை அறிவது. ஒருவருடைய பாலியல் வெளிப்பாடும் பாலின அடையாளமும் கூட இதில் அடங்கும். ஒருவருடைய பாலியல் அடையாளம் வெளியிலிருந்து வழங்கப் படவோ நிர்ணயிக்கப்படவோ கூடாது என்று அவருடைய சுயத்தின் வெளிப்பாடாய், சுய அறிவித்தல் மூலம் அறியப்பட வேண்டும் என்று பலர் நம்புகின்றனர்.

பாலியல் சிறுபான்மையினர்/ பாலியல் சிறுபான்மையினர் சமூகம்: ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள், இருபாலீர்ப்பு கொண்ட வர்கள், பால் மாற்றம் விரும்பி ஏற்பவர்கள் ஆகியோரைக் குறிக்கிறது. பெரும்பான்மை ஆண்-பெண் ஈர்ப்புடையவர்கள் இருக்கும் சமூகத்தில் பாலியல் ரீதியாக சிறுபான்மையாக இருப்பவர்கள்.

பாலியல் நிலைப்பாடு: ஒருவருடைய மன ரீதியான ஈர்ப்புகள், உடல் சார்ந்த விழைவுகள், காதல் போன்றவை. இவை அதே பாலினத்தவரிடமோ, எதிர் பாலினத்தவரிடமோ, இரு பாலினத்த வரிடமோ இருக்கலாம்.

ஃ எதிர்பாலீர்ப்பு: தன் பாலடையாளத்திற்கு எதிர் பாலடையாளத்தில் இருப்பவர்களுடனான ஈர்ப்பு, காதல், காமம் (ஆண்-பெண், பெண்-ஆண் உறவுகள்)

ஃ இருபாலீர்ப்பு: இரு பாலினத்தவருடனுமான ஈர்ப்பு, காதல், காமம் ஆகியவை

ஃ ஒருபாலீர்ப்பு: அதே பாலடையாளத்தில் இருப்பவர்க ளுடனான ஈர்ப்பு, காதல், காமம் ஆகியவை (ஆண்-ஆண், பெண்-பெண் உறவுகள்)

1890-ற்கு முன்னர் "எதிர்பாலீர்ப்பு" என்ற சொல்லோ, "ஒருபாலீர்ப்பு" என்ற சொல்லோ வழக்கத்தில் இல்லை.

பாலினம் கடப்பவர்கள் (Transgender(ed) persons): சமூகத்தில் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலின நியதிகளைத் தாண்டு பவர்கள். ஆண்/ பெண் என்ற குறுகிய ஈரிணை அமைப்பிலிருந்து தம்மை விலக்கி வழக்கத்திற்கு மாறான பாலின வெளிப்பாட்டினைக் கொண்டவர்கள். இவர்கள் அவ்வப்பொழுதோ அல்லது எப்பொழுதும் எதிர் பாலினத்தவரின் நடை, உடை, பழக்க வழக்கங்களை ஏற்றுச் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். எனினும் இவர்கள் பால் மாற்று சிகிச்சை செய்வதற்கு முந்தைய நிலையிலோ, செய்து கொண்டவர்களாகவோ, செய்துகொள்ளும் எண்ணம் இல்லாதவர்களாகவோ இருக்கலாம்.

Transsexual: இவர்களுடைய பாலின அடையாளம் முழுமையாக எதிர் பாலினத்தவருடையதாக இருக்கிறது. இவர்கள் ஆண்களாக இருந்து பெண் பாலடையாளத்திற்கு மாறுபவர்களாகவும் ஆண் பாலடையாளம் ஏற்கும் பெண்களாகவும் இருக்கலாம். இவர்கள் பால் மாற்று சிகிச்சை செய்வதற்கு முந்தைய நிலையிலோ, செய்து கொண்டவர்களாகவோ, செய்துகொள்ளும் எண்ணம் இல்லாதவர்களாகவோ இருக்கலாம்.

Transvestite - ட்ரான்ஸ்வெஸ்டைட் - பாலியல் கிளர்ச்சிக் காகவும், திருப்திக்காகவும் எதிர் பாலினத்தவரின் ஆடைகளை அணிபவர்கள். இவர்கள் வழக்கமாக பெண்களுடைய ஆடைகளை விரும்பி அணியும் ஆண்களாக இருக்கின்றனர். இவர்கள் Crossdressers என்றும் அழைக்கப்படுகின்றனர்.

(வெங்கடேசன் சக்ரபாணி, அஷோக் ராவ் கவி, எல். ராம்கி ராமகிருஷ்ணன், ராஜன் குப்தா, க்லேய்ர் ராபோபோர்ட், சாய் சுபஸ்ரீ ராகவன் ஆகியோர் எழுதிய HIV Prevention among Men who have Sex with Men (MSM) in India: Review of Current Scenario and Recommendations. Background paper prepared by Solidarity and Action Against The HIV Infection In India (SAATHII) working group on 'HIV prevention and care among Indian GLBT/Sexuality Minority communities', Revised Draft, April 2002. என்ற கட்டுரையைத் தழுவித் தமிழாக்கம் செய்யப்பட்டது. இதனை தமிழாக்கம் செய்தவர்: அனிருத் வாசுதேவன்)

நன்றி - மாற்றுவெளி
...மேலும்

Jul 27, 2011

பாலியல்பின் அரசியல் - திறந்த உரையாடலை நோக்கி... - அனிருத்தன் வாசுதேவன், அ.பொன்னி


‘பாலியல்பு’ என்கிற சொல்லைக் கேட்டதும் சட்டென்று நமக்கு நினைவிற்கு வருவது, பாலியல் படங்களும் இச்சையைத் தூண்டும் இன்னும் பல பிம்பங்களே. இவ்வகைப் பிம்பங்கள் தவறானவை என்று கூறுவதல்ல நமது நோக்கம். அவை அவதூறாக அமைக்கப் படுவதும் உடல், பாலினம், மற்றும் பாலியல்பு சார்ந்த பல தவறான தகவல்களை நமக்களிப்பதுமே இதிலுள்ள சிக்கல்.

இந்தியச் சுழலில் இப்பொழுது பாலியல்பு பற்றிய கருத்தாக்கங் களில் முக்கியமாக நாம் காண்பது இச்சை, வன்முறை, சட்டத்தால் குற்றமாக்கப்படுவது ஆகியவை. தமிழ்ச்சூழலில் இவ்வரலாறு பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டிருக்கிறது என்பதைப் பற்றிய விவரங்கள் பல இவ்விதழில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாலியல்பு, மாற்றுப்பாலியல் இச்சை ஆகியவை ஏதோ கடந்த பத்து இருபது வருடங்களாகவே பேசப்படுகின்றன என்று பலர் நினைப்பதுண்டு. இத்தகைய நம்பிக்கையைச் சார்ந்த சொல்லாடலி லும் கருத்தாக்கத்தில் ஈடுபடுவதும் எழுதுவதும் வழக்கம். இவ்வகையான தவறான அபிப்பிராயங்களை மாற்றியமைப்பது இச்சிறப்பிதழின் ஒரு நோக்கமாகும். மேலும் தமிழ்ச்சூழலில் இவ்வரலாற்றைப் பெண்ணிய வரலாறு எழுதுதலின் ஒரு அங்கமாகப் பார்க்கும் முயற்சியும் இவ்விதழில் மேற்கொள்ளப்பட் டுள்ளது. உரிமை, உரிமைசார்/ அடையாளம்/ அடையாளக் குழுக்கள் சார் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது மட்டுமே இக்கருத்தாக்கம் மற்றும் போராட்டத்தை முழுதாக விளக்கவும் புரிந்துகொள்ளவும் போதுமானதல்ல என்பது இவ்விதழில் விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்வனைத்தையும் புரிந்துகொள்வதற்கான ஒரு பின்புலமாக உலகளாவிய அளவில் உள்ள கருத்தாக்கங்களை நினைவுகூர்தல் அவசியம். இவ்வரலாற்றைப் பல விதங்களில் எழுதலாம். இங்கு எளிமையான, புரிதலுக்கான, ஒரு சுருக்கமான வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தாக்கங்களின் அடிப்படையில் முதலில் தெரியவருவது, பாலியல்பு என்பது உடலுறவு அல்லது ஓர்பாலினச் சேர்க்கை பற்றியது மட்டும் அல்ல. பாலியல்பு என்பதன் தாக்கம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் செல்வாக்குச் செலுத்துகிறது.

கிரேக்க-ரோமானிய கருத்தாடல்களில் பல வகையான உடல் உறவுகளும் பாலின வகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வகைகளுக்கு இடையிலான வித்தியாசங்கள் தெளிவுபடுத்தப் படவில்லை. அடையாளம் சார் மொழி எங்கும் காணப்படவில்லை.

இதையடுத்து மனவியல் கருத்தாக்கங்களில் பாலியல் சார்ந்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. இவ்வரிசையில் ஃப்ராயிட் முதல் சிந்தனையாளர் இல்லையெனினும் மிக முக்கியமான சிந்தனையாள ராவார். ஒருவித பகுத்தறிவற்ற, இன்றியமையாச் சிந்தனையான இது, இன்று ஆணாதிக்கச் சிந்தனையின் அங்கமாகவும் கருதப்படுகிறது. பல தலைமுறை பெண்ணிய சிந்தனையின் கோபத்திற்கும் நியாயமாக ஆளாகியுள்ள சிந்தனை ஃப்ராயிடி னுடையது. இருந்தாலும் பாலியல்பு சார்ந்த சொல்லாடல்களின் வரலாற்றில், ஒரு முக்கிய புள்ளியாக ப்ராய்டிசம் கருதப்படுகிறது. பாலியல்பை அலசிப்பார்ப்பதற்கான வரைமுறைகளை அமைத்துத் தந்தது. அவ்வரைமுறைகளை நாம் இன்று ஏற்றுக்கொள்ளா விட்டாலும் பாலியல்பு சார்ந்த கருத்தாக்கங்கள் பற்றிய விவாதங்களில் இவை இடம் பெற வேண்டியது அவசியம்.

லக்கான் (Lacan) இன்னொரு முக்கிய சிந்தனையாளரவார். இவர் தமது கருத்தாக்கத்தில், கருவில் ‘மனித பாலியல் தற்சார்பு’ (sexual subject) பற்றிய சிந்தனையை மேற்கொள்ள முயன்றார். உதாரணமாக ‘ஆண்’, ‘பெண்’ ஆகியவை என்ன என்றறிய லக்கான் முயன்றார். இதில் அவர் முழு தெளிவு அடையாவிட்டாலும் இந்தத் தேடலை அவர் தொடங்கி வைத்தார். இந்தத் தேடல் பிந்தைய தலைமுறைகளில், பல்வேறு நிலைகளில், பல பெயர்களால் அழைக்கப்பட்டுத் தொடர்ந்து வருகிறது. லக்கானின் மிக முக்கிய பங்கு ஃப்ராய்டின் இன்றியமையாவாதத்தை உடைத்தெறிய உதவியது.

இவ்வாறு தனக்கு முன் வந்த பல சிந்தனையாளர்களின் தோள்களில் நிற்கிறார் ஃபூகோ என்னும் சிந்தனையாளர். பாலியல் தொடர்பான இவரது சிந்தனைகள் பற்றி ஒரு தனி இதழே வெளியிடலாம். அடிப்படையில் ஃபூகோ ‘பாலியல்பின் வரலாறு’ என்ற புத்தகத்தில், மூன்று பாகங்களில், அவரது மூல சிந்தனையான ‘அதிகாரம்’ பற்றிய கருத்தாடலை முன்வைக்கிறார். மனித சமுதாயத்தின் மற்ற அனைத்து அங்கங்கள் போல பாலியல்பிலும் அதிகாரம் சார்ந்த கட்டுப்பாடுகளும் உறவாடல்களுமே மையக் கருவாக இருக்கின்றன என்று வாதாடுகிறார். இவ்வதிகாரத்தை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆராய்ந்து விளக்குகிறார். இந்த அதிகாரம் அரசின் அங்கங்களான மருத்துவமனைகளிலோ அல்லது சிறைகளிலோ வெளிப்படலாம், வீட்டை அரசாளும் குடும்ப வரைமுறைகளாகலாம்.

உலகளாவிய அளவிலான பெண்ணிய கருத்தாக்கங்களில், பாலியல்பும் ஒரு பாகமாகும். அவையனைத்தையும் இம்முன்னுரை யில் விவரிப்பது சாத்தியமன்று. அதன் ஒரு அடிப்படை சாராம்சம் கீழ்வருமாறு:

காத்தெரின் மெக் கின்னன் என்னும் சிந்தனையாளர் இதைத் தெளிவாக விளக்கியுள்ளார்:

“மார்க்சீயத்துக்கு வர்க்கம் போல பெண்ணியத்திற்கு பாலியல்பு” என்கிறார்.

இப்பெண்ணிய கருத்தாக்கங்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை பற்றி அமைந்துள்ளன. அவற்றுள் வன்முறை, உடலுறவு இச்சை ஊட்டும் படங்கள் பற்றிய விவாதம், பாலியல் தொழில் பற்றிய விவாதம், உடல்நிலை சார் உரிமைகள், கர்ப்ப ஆட்சி பற்றிய விவாதங்கள் ஆகியவை அடங்கும். இதனுள் தனி நபரின் உரிமை பற்றிப் பேசுபவரும் உண்டு, பெண்களை ஒரு குழுவாகக் கொண்டு பேசுபவரும் உண்டு. அக்குழுவின் இடையிலான பாரபட்சங்களை விவரித்தவருமுண்டு. இவையனைத்தும் ‘சுரண்டல்’ அல்லது ‘செயலாளுமை’ (agency) ஆகிய வரையறைகளுக்குள் அடங்கு வதுண்டு. கம்யூனிஸ்ட் ரஷியாவில் இதற்குச் சற்று மாறாக அலெசாந்த்ரா கோலாந்தாய் போன்ற விளிம்பு நிலை சிந்தனை யாளர்கள் மற்றும் இன்னும் சிலர் வேலை, பாலினம் மற்றும் பாலியல்பு ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பும் இவ்வனுபவங்கள், புரட்சிசார் அரசியலில் கொண்டுவரும் தாக்கம் பற்றியும் எழுதினர். இது பின்பு இந்தியா போன்ற நாடுகளில் நாம் விரும்பத்தக்க அளவில் இல்லையெனினும் பெண்ணிய சிந்தனையில் ஓரளவு பயன்படுத்தப்பட்டது.

ஓர்பாலினச்சேர்க்கை சமூகங்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இவ்வகைக் கருத்தாக்கங்களை முன்னெடுத்தும் சென்றனர்; விமர்சனமும் செய்தனர். பாலியல் அடையாளம் மற்றும் அனுபவம், வேற்றுப்பாலின ஈர்ப்பிற்கு உள்ளே அடக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினர். இவ்வடையாளங்களை முன்னிறுத்தி வேற்றுப் பாலியல்புசார் கட்டமைப்புகளைச் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உடைத்தெறிய அறைகூவல் விடுத்தனர். ஒருசிலர் அடையாளத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கட்டமைப்பு சார் விமர்சனங்களை முன்வைத்தனர். இன்னும் சிலர், அடையாளம்சார் உரிமைகளுக்காக மட்டும் வாதாடி, கட்டமைப்புகளை அப்படியே விட்டுவிட்டனர். இவ்வகை கருத்தாக்கத்தில் பாலியல் தொழிலாளர் களின் போராட்டங்களும் அதிலிருந்து எழும்பிய கருத்துக்களும் அடங்கும்.

பெண்ணியத்தில் உடல் மற்றும் பாலினம் என்று புரிந்து கொள்ளப்படுபவை ஆணாதிக்கக் கட்டமைப்பால் உருவாக்கப் படுகிறது என்னும் கருத்தை மாற்றுப்பாலின மக்கள் முன்னெடுத்துச் சென்றனர். இவை கட்டமைப்புகளாக மட்டு மில்லாமல் போராட்டக் களங்களாகவும் விளங்குவதுண்டு என்று எடுத்துக் காட்டியுள்ளனர்.

இவ்வகைக் கருத்தாடல்களின் மூலக்கருவைப் புரிந்துகொள்ள, கெயில் ரூபினின் கருத்துக்கள் உதவும். அவர் பாலியல்பு ஏற்றத்தாழ்வு அல்லது உடலுறவு ஏற்றத்தாழ்வு (sex hierarchy) சமூகத்தில் நிலவி வருகிறது என்று கூறுகிறார். ஒற்றை மணவாழ்வில், வேற்றுப்பாலினத்தவராகவும் பிள்ளை பெற்றவ ராகவும் இருப்பவர், படிக்கட்டு போன்ற இந்தக் கட்டமைப்பில் மேல் தட்டில் அமர்கிறார். அதன் அடித்தட்டில் மணமாகாத, ஓர்பாலின இச்சை கொண்ட, மாற்றுப்பாலின, பிள்ளை பெறாத, வரம்புகளை மீறும் இச்சைகள் கொண்ட நபர்கள் இருப்பர். இவ்வகையான அமைப்பினால் எவ்வகைப் பாலினம், பாலியல், உடலுறவு மற்றும் இச்சை ‘இயற்கையானவை’, எவை ‘இயற்கைக்குப் புறம்பானவை’ ஆகிய ஆதாரமற்ற, அடிப்படையற்ற வரைமுறைகள் ஆக்கப்பட்டு நம்மேல் திணிக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறார். ‘இயற்கையின்’ வரைமுறைகளும் நம்மால்தான் இயற்றப்பட்டு இயக்கப்படுகின்றன என்பதைத் தெள்ளத் தெளிவாக்குகிறார்.

இவ்வகையான சமத்துவமற்ற அமைப்பின் ஒடுக்குமுறையை உணருவது மட்டுமல்லாமல், பல வகைப் பாலியல்புகள், பாலினங்கள், இச்சைகள் ஆகியவற்றின் இருப்பும் அவற்றின் சமூக நிலையும் வெளிக்கொணரப்படுகின்றன. அதே சமயம் அவை போராட்டக்களங்கள் என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன.

கெயில் ரூபனின் இவ்வாதத்தைச் சற்று முன்னெடுத்துச்சென்றால் அதில் சாதி, மதம், இனம், வர்க்கம் ஆகியவற்றையும் புகுத்திப் பார்க்கலாம். நமது சூழலில் இத்தகைய அமைப்பின் மேல்தட்டில் ஒற்றைமணவாழ்வு கொண்ட, வேற்றுப்பாலின, பிள்ளைபெற்ற, மேல் வர்க்கத்தைச் சேர்ந்த, மேல் சாதியவராக இருப்பர். அதன் அடித்தட்டில் மணமாகாத, ஓர்பாலின இச்சை கொண்ட, மாற்றுப் பாலின, பிள்ளை பெறாத, வரம்புகளை மீறும் இச்சைகள் கொண்ட, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருப்பர்.

இவ்வகை சொல்லாடல்கள் பலவற்றை நாம் படித்து அறிந்து கொள்வதால், பாலியல்பு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்குள்ள பல அலகுகளுள் ஒன்றாக நம்முன் நிற்கும்.

தெற்காசியச் சூழலில் பாலியல்பு பற்றிய சொல்லாடல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் முறையாகப் பெண்கள் குறித்த விவாதங்கள் பொது வெளியில் பேசப்பட்டன. இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறும் ‘சதி’ சம்பிரதாயத்தை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்தன. அதே போல நாடெங்கும் விதவை மறுமணம், பெண்களுக்கான திருமண வயது ஆகியவை பற்றிய விவாதங்களில் பாலியல்பும் ஒரு அங்கமாக இருந்தது. அக்காலத்தில் பாலினமும் பாலியல்பும் இன்றுள்ள மொழியில் பேசப்படாவிட்டாலும் வரலாற்று ரீதியாக இவ்விவாதங் களின் கருத்துக்கள் இன்று நமக்கு முக்கியமானவையாக அமைகின்றன.

காலனித்துவ வரலாற்றை இன்று நன்கறிந்திருக்கும் நாம், அதிலிருந்து எழும் ‘இந்தியா’ என்னும் பிம்பம் துல்லியமானது அல்ல என்பதை அறிவோம். இன்று இந்தியா என்று நாம் கருதுவதின் பல பகுதிகள் ஆங்கிலேயர் காலத்திலும் அதற்கு முன்பும் ஒரு நாடாக என்றும் இருந்தது கிடையாது. ஒவ்வொரு இடத்திற்கும் பிரதேசத்திற்கும் அதற்கான வரலாறு உண்டு. பாலியல்பு என்பதும் ஒரு சமூகத்தின், அதன் மக்கள் வாழ்க்கையின் மிக முக்கியப் பண்பு என்பதால் இடத்திற்கு இடம் தனித்துவம் மிக்க வரலாறுகளைப் பெறுகிறது. தமிழகத்தின் வரலாறு ஒரளவிற்கு இவ்விதழில் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் பல புதிய போராட்டங்கள் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் அடையாளம்சார் உரிமைகள் கோரும் இப்போராட்டங்கள், பல கருத்தாக்கப் புதுமைகளையும் உருவாக்கியுள்ளன. உலகளாவிய அளவிலான போராட்டங்கள் போல இந்தியாவிலும் மாற்றுப்பாலியல்புள்ளவர், மாற்றுப்பாலின முள்ளவர், பாலியல் தொழிலாளிகள் ஆகியோர் பாலியல்பு, பாலினம் பற்றிய வரைமுறைகளை கேள்விக்குள்ளாக்கினர்.

இவ்வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளின் பட்டியல் இவ்விதழில் வழங்கப்பட்டுள்ளது. போராட்டக் களத்தில் இன்னும் பலவகைப் பணிகள் செய்யவேண்டியுள்ளன. பலருடைய தினசரி வாழ்க்கையின் அடிப்படைப் புரிதல் கூட நமக்குக் கிடையாது. பிறப்பிலோ, வாழ்வின் ஒரு கட்டத்திலோ, பால் நிர்ணயிக்க முடியாத நிலையில் இருப்போரும் (intersex) இவர்களுள் அடங்குவர். நீதிமன்றம் போன்ற இடங்களில் ஒரு சில வெற்றிகள் பெற்றிருந்தாலும் பலரின் வாழ்வில் அவை எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல் போகலாம். கடந்த சில ஆண்டுகளாகப் பாலியல்பு பற்றிய சர்ச்சைகள் பொது வெளியில் ஓரளவு பேசப்பட்டு வருகின்றன. மற்ற போராட்டங்கள் போல இப்போராட்டத்திலும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் நீட்சியும் பாதிப்பும் காட்சியளிப்பதுண்டு. இவ்வனைத்து சவால்களையும் மேற்கொள்ள, இப்போராட்டத்தின் தினசரி வேலைகளுடன் சேர்த்து விமர்சனப்பூர்வமான கோட்பாடுகளையும் வளர்த்து விவாதிப்பது அவசியம். இப்படியான நிகழ்முறையை முற்றிலும் மேற்கொள்ளாத பல இயக்கங்கள், தம்மைத் தாமே அழித்துக்கொண்டு தம்மை எதிர்க்க முயன்ற கட்டுமானங்களையே உறுதிப்படுத்திய கதைகள் பல.

இப்போராட்டங்களிலிருந்து வெளிவரும் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள நாம் அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, அடையாளம், அடையாளம் சார்ந்த குழுக்கள், அவர்களுக்கான சம உரிமை சார்ந்த ஒரு கோட்பாடு. இது பல சமயங்களில் சமூகம், குடும்பம், திருமணம் ஆகிய கட்டுமானங்களைக் கேள்விக்குள்ளாக் காமல் அப்படியே விட்டுவிடுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது இன்னும் வலிமைப்படுத்துபவையாக அமைந்துவிடுவதும் உண்டு. இருந்தாலும் புதியதொரு மொழியின்றி, பிம்பங்களின்றி, முன்னர் இருந்த பிம்பங்களும் அழுத்தமாக அமுக்கப்பட்டிருக்கும் சூழலில், அடையாளங்களின் வலிமையைக் குறைத்து எடைபோட முடியாது. இவ்வடையாளப் பெயர்களும் குழுக்களும் தனிநபர்களுக்குக் கொடுக்கும் சக்தியை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அடையாள அரசியல் குறித்த கோட்பாடுகள் ஒருசில போராட்டங் களில் முக்கியக் கருவிகள் என்பதை மறுக்கமுடியாது. அதே சமயம் விமர்சன மனப்பான்மையின்றி இதனை உபயோகிப்பதன் மூலம், காலப்போக்கில் நாம் எந்த கட்டுமானங்களை உடைக்க முயன்றோமோ அவற்றையே மீண்டும் உறுதிப்படுத்துவதில் ஈடுபட்டுவிடுவோம். பாலியல் அடையாளங்களையும் அவற்றின் அரசியலையும் பல ஆண்டுகளாகக் கண்டு வரும் மேற்கத்திய நாடுகளில் இத்தகைய வரலாறு உண்டு. இவ்வரலாற்றின் தொடக்கத் தில் இருக்கும் நாம், இப்பொழுதே இவ்விமர்சனங்களை முன் வைப்பதும் சுயவிமர்சனம் செய்யப் பழகிக்கொள்வதும் அவசியம்.

இது தவிர, பாலியல்பு சார்ந்த அரசியல், அடையாளம் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்று வாதாடும் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடும் உண்டு. இது ஒரு குழுவிற்கான உரிமை பற்றி மட்டுமில்லாமல் சமுதாய வரைமுறைகளை மறுபரிசீலனை செய்யும் ஒரு நிலைப்பாடாகும். இதில் பாலியல்பும் ஒரு அங்கமாகும். சமூகத்திலுள்ள பாலியல்/பாலினம் சார்ந்த அனுபவங் களின் மூலம் ‘இயற்கையானது’ எனப் பேசப்படும் குடும்பம், மணம், பிள்ளைப் பேறு, இச்சையின்றிப் பிள்ளை பெறுதலுக்கு மட்டுமே என்றாகும் உடலுறவு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாரபட்ச ஒழுக்க நீதி ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் கருத்தியலாகப் பெண்ணியத்தால் இருக்க முடியும். இக்கோட்பாடு கெயில் ரூபனின் கருத்துபோல சாதி, மதம், இனம், வர்க்கம் ஆகியவை பற்றிய வரைமுறைகளையும் ஒரே சமயத்தில் பிரச்சனைக்குள்ளாக்கும் ஒன்றாக இருக்கும். இவ்வனைத்து உண்மைகளும் தினசரி வாழ்க்கையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பது தானே உண்மை!

இப்படியெல்லாம் பலவாண்டுகளாகப் பேசப்பட்டு வரும் பாலியல்பு என்பது என்னவென்று கேட்டால், அதற்கானப் பதிலைச் சுலபமாக அளிக்கமுடியாது. நாம் பிறந்த நிமிடத்திலிருந்து பாலினமும் பாலியல்பும் நம்முடனேயே வருகின்றன. அவை நம் உடல், உணர்வுகள், ஆசை, இச்சை, வலி, வன்முறை, வாழ்க்கையில் மேற்கொள்ளும் முடிவுகள், கனங்கள் ஆகியவற்றில் பொதிந் துள்ளன. அது அரசு, குடும்பம், தேசம், சாதி, மதம், இனம், நிறம் ஆகியவற்றின் வரலாறுகளில் உள்ளது. முற்போக்கு சிந்தனையுள்ள எந்த நபரும் பாலியல் பற்றி கூச்சமோ, பயமோ, பாலியல் சார்ந்த பாகுபாடோ அல்லது ஆர்வமின்மையோ காட்டினால் அது அரசியல் ரீதியாகப் பிற்போக்கானது மட்டுமல்லாமல் அர்த்தமற்ற வெகுளித் தனமாகவும் அமையும். பாலியல் சார்ந்த கோட்பாடுகள் நாம் மேற்கொண்டு வரும் மற்ற பல இயக்கங்களைத் தனது பங்களிப்பு மற்றும் விமர்சனம் மூலம் உறுதிப்படுத்தும். அதே சமயம், பாலியல்பு பற்றிப் பேசிவருபவர் பல முற்போக்கு இயக்கங்களி லிருந்து கற்கவேண்டியவை நிறைய உண்டு. அடையாளம், குழு, உரிமை என்று சமூக மாற்றுச் சிந்தனையை கூறுபோட்டு விற்கும் இக்காலத்தில், இத்தகைய ஒருங்கிணைந்த அரசியல் உரை யாடல்களே ஒட்டுமொத்த மாற்றத்தையும் அதற்கான திட்டத்தையும் முன்வைக்க உதவும். மனிதர்களையும் சாதி, மதம், தேசம், என்று கூறுபோடும் இவ்வுலகில், ஒட்டுமொத்த சமூகமாற்றுச் சிந்தனையை நாம் மேற்கொள்ளாவிட்டால், ஆதிக்கச் சக்கரம் நிற்காமல் சுழன்றுகொண்டெ இருக்கும்.

தமிழகத்திலும் தேசிய அளவிலும் கடந்த சில ஆண்டுகளாக இது பற்றிய சர்ச்சை மெற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வரலாறு, கடந்த சில ஆண்டுகளின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்பு, விமர்சனப் பூர்வமான கருத்தாக்கம், இவையனைத்தும் பற்றிப் பல கோணங்களி லிருந்து இவ்விதழில் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் முழுமையான தொகுப்பல்ல. பொதுவெளி யில் நடந்துவரும் சர்ச்சையைப் புரிந்துகொள்ளவும் பங்குபெறவும் ஒரு சிறு ஆவணமாக இது பயன்படுத்தப்படலாம். இன்னும் பல இதழ்கள், சர்ச்சைகள், மாற்றங்கள் தமிழ்ச் சூழலில் நிகழும் என்ற நம்பிக்கையுடனும் வரலாறு சார்ந்த அறிதலுடன் இந்த இதழைத் திறந்த பாணியில், நிகழ்முறையின் ஒரு கனமாக உங்கள் முன் வைக்கிறோம்.

சற்று அச்சத்துடனும் புரிதலின்மையுடனும் இன்றும் சிறிதளவே பேசப்படும் பாலியல்பு மற்றும் மாற்றுப்பாலியல்பு பற்றி ஒரு சிறப்பிதழ் வெளியிட வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்த மாற்றுவெளி இதழாசிரியர் குழுவிற்கு நன்றி கூற விரும்புகிறோம். இவ்விதழின் இன்றைய சூழல் மற்றும் நாளைய வரலாற்றில் இச்சிறப்பிதழும் ஒரு அங்கமாகும். தமிழில் பாலியல்சார் கருத்தாக்க உருவாக்கத்தின் ஒரு செயலாக மட்டுமல்லாமல், மாற்றுவெளி இதழின் காலத்திற்கு உகந்தத் தன்மையை மெருகேற்றுவதில் ஒரு சிறு முயற்சியாக இவ்விதழை வெளியிட்டிருப்பதற்கு, நாங்கள், ஆசிரியர் குழுவை யும் வாசகர்களையும் வாழ்த்துகிறோம்.

- அ. பொன்னி, அனிருத்தன் வாசுதேவன்

...மேலும்

Jul 26, 2011

உடல், பால்மை, பால் ஈர்ப்பு / வேட்கை - அளிக்கைமை சார் குறியீடுகள் - அ.மங்கைதமிழக நிகழ்த்து கலைகள் சார்ந்த உரையாடல்

உடல் ஒரு உயிரியல் சார் அலகு என்ற வகையில், அதனை அறிவியல் சார்ந்த முன் நிர்ணயிப்புகளோடு புரிந்து கொள்ளுதல் எந்த வித கேள்வியும் இன்றிப் புழக்கத்தில் உள்ளது. அதனை அப்படியே இயங்க வைப்பது தந்தைமை ஆதிக்க/ சாதியப் படிநிலைகளைத் தக்க வைப்பதற்கான அடிப்படையாகிறது. பல கூறுகளில் கரடு தட்டிப்போன இறுக்கத்தோடு உடல் கட்டமைக் கப்படுகிறது. பால்மை குறித்த புரிதலில், பால் - பால்மை (sex/gender) எதிர்வு உயிரியல் / சமூகவியல் அலகுகளாக விளக்கப்பட்ட போது, பால்மை கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது புலனாயிற்று. ஆனால், உடல் கூறுகளால் தீர்மானிக்கப்படும் பால், திரிபற்ற அலகாகத் தொடர்ந்தது. பால் தன்மைகளும் பல்வேறு முனைகளில் கேள்விக்காளாக்கப்படும் சூழலில் சிக்கல் மேலும் ஆழமான தாகிறது. இந்தப் பின்னணியில் பால் எதிர்வுகளால் கட்டமைக்கப் பட்ட உடல்கள் அவற்றை மீறுவது அவசியமானதாகவும் தவிர்க்கமுடியாததாகவும் ஆகிறது.

பால் எதிர்வுகளைத் தீர்மானிப்பதில் அளிக்கைமை (performativity) வகிக்கும் பங்கு குறித்து பட்லர் விளக்கியுள்ளார். அடிப்படையில், குறியீடுகளே அரங்கேறுகின்றன என்பது அவரது வாதம். அதாவது, ஆண் உயிரியல் கூறுகளோடு பிறந்தோர் ஆண்மைக் குறியீடுகளை அளிக்கைமை செய்கின்றனர்; பெண் உயிரியல் கூறுகளோடு பிறந்தோர் பெண்மைக் குறியீடுகளை அளிக்கைமை செய்கின்றனர். கூடுதலாக, சமூக ரீதியிலான அதிகாரப் படிநிலையும் இதில் தொழிற்படுகின்றன. ஆண்மை/பெண்மை அளிக்கைமைகள், சாதி, வர்க்க, மதக் குறியீடுகளையும் இணைத்தே வெளிப்படுத்துகின்றன. உடல் நடத்தை, புழங்கு வெளி, அசைவுகள் ஆகிய அனைத்தும் அளிக்கைமை விதிகளுக்கு உட்பட்டே ஒழுங்கமைக்கப்படுகின்றன.

வசதி கருதி, நிகழ்கலைத் துறையில் பால் எதிர்வு சித்திரிக்கப் படும் தன்மையை மட்டும் விவாதிப்பதன் மூலம், பால்மை, பால் ஈர்ப்பு / பால் இயல்பு அரசியலின் முக்கியத்துவத்தை வலியுறுத் துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

உடல் அரசியல் பால்மைக் கூறுகளோடு உடல் மொழியைத் தீர்மானிப்பது நாம் அறிந்ததே. பெண்ணுக்கு விதிக்கப்பட்ட உடல்மொழி பெண்மை பற்றிய பிம்பத்திற்கு ஏற்றதாக அமைக்கப் பட்டுள்ளது. அதன்படி பெண் கைவீசி நடத்தலும் நிமிர்ந்து நிற்றலும் நேராகப் பார்த்தலும் அதிர்ந்து பேசுதலும் உரக்கச் சிரித்தலும் உணர்வுகளை வெளிப்படுத்தலும் அங்கீகரிக்கப்படுவ தில்லை. அதேபோல, ஆண் வாய் விட்டு அழுவதும் தயங்குவதும் மயங்குவதும் அனுமதிக்கப்படுவதில்லை. தந்தைமை ஆதிக்க சமூகத்தை நிலைநிறுத்தத் தேவையான எதிர் பாலின ஈர்ப்பை உறுதி செய்யவும் இந்த எதிர்வு அதீதமாக்கப்படுகிறது. அதாவது, ஆண் ஈர்க்கபடுவது அதீத பெண்மை காட்டும் பெண்ணை; பெண் விழைவது அதீத ஆண்மை கொண்ட ஆணை என்பது எழுதப்படாத விதியாகக் கருதப்படுகிறது. எதிர் பாலின உறவு மறு உற்பத்திக்கு அவசியம் என்பதால், அது இயற்கையானது; இயல்பானது என்றும் புனைவு செய்யப்படுகிறது. நிகழ் கலைகள் இம்மதிப்பீடுகளை ஆணித்தரமாகத் திணிக்கும் துறைகளாக செயல்படுகின்றன.

பெண் உடல் போகத்துக்குரியதாக பின்னப்பட்ட புனைவுகள் செல்வாக்கு செலுத்துவதால், பெண் இருப்பு பொது வெளியில் சிக்கலான உளவியலை வெளிப்படுத்துகிறது. அவையில் பெண் தோன்றுவது, உடலை அசைப்பது ஆகியவை பாலியல் கடந்து இயங்காது என்ற ஊகத்தின் பேரில், பெண் பொது வெளியில் இயங்குவது கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பார்வையாளரை ஈர்க்கும் நிகழ் கலைகளில், பெண் மறுப்பு மிகச் சாதாரணமாக ஏற்கப் படுகிறது. பெண்கள் வெளிப்பாடு வீடு, குடும்பம் சார்ந்த சடங்கு, திருவிழாக்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. வளமைச் சடங்குகள், வாழ்வியல் சடங்குகள் ஆகியவற்றில் பெண்கள் பாடி, ஆடிப் பங்கேற்றனர். தமிழில் தாலாட்டு, ஒப்பாரி, குளிர்த்தி, பூப்புச் சடங்கு, வளைகாப்பு போன்றவற்றை இதற்கான எடுத்துக்காட்டு களாகச் சொல்லலாம். இவை பார்வையாளர்களுக்கெனச் செய்யப் படும் நிகழ்கலைகள் அல்ல. எந்த விதமான இலக்கண விதிகளும் இவற்றுக்குக் கிடையாது. வர்த்தகமயமாக்கும் கூறுகளும் இல்லை. நாட்டார் இயல் இவற்றை மனைசார் கலைகள் என வகைப்படுத்து கிறது.

இதற்கு மாறாக, பொது வெளியில் புழங்கும் கலைகள் ஓய்வு நேரத்துக்கான கேளிக்கையை முதன்மைப்படுத்துவன. ஒட்டு மொத்த சமூகத்துக்கான கதையாடல்களைத் தருபவை. காலத்துக் கேற்ப மாற்றங்களை உள்ளடக்கி மாறி வளர்ந்து வந்துள்ளவை. இவற்றுள் பெரும்பாலானவற்றில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. தப்பித் தவறி பெண்கள் இடம் பெற்றால், அப்பெண்கள் பிற பெண்களிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். செவ்வியல் கலைகளில் ஈடுபட்ட தேவதாசிகள் முதல், சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துவிடப்படும் மாத்தம்மா, எல்லம்மாக்கள் வரை இப் பெண்கள் வழமையான குடும்ப வாழ்க்கையில் இருந்து விலக்கப் பட்டவர்களே. படைப்புலகம் சார்ந்த நிகழ் கலைகளில் பெண் சித்திரிப்பு தேவை என்பதால், ஆண்கள் - குறிப்பாக இளம் ஆண்கள் - பெண் வேடம் இட்டு நடித்தல் கலை உணர்வின் உச்சகட்ட வெளிப்பாடாக உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டது. கிரேக்க நாடகம் தொட்டு, ஷேக்ஸ்பியர், இன்றைய கூத்து, கதகளி மற்றும் பல்வேறு இனக்குழு வெளிப்பாடுகளில் ஆண்கள் பெண் வேடம் இட்டதை / இடுவதை, கட்டமைக்கப்படும் பால்மைக் கூறுகளைக் காட்டும் குறியீடுகளாகக் கருதலாம்.

தந்தைமை ஆதிக்க வெளிப்பாடாகப் பெண்ணுக்கு மேடை ஏற அனுமதி மறுத்த மரபு தொடர்ந்தாலும் ஆண்கள் பெண்வேடம் தரிக்கும் முறை, நிலவும் பால்மை அரசியலைக் காட்டும் வெளியாகா தொழிற்படுகிறது. அழகியல் அடிப்படையில், பெண் / ஆண் இலக்கணத்தை வரை செய்கிறது. மெலட்டூர் பாகவதமேளா போன்ற செவ்வியல் வடிவங்கள் முதல், கூத்து போன்ற முழு அரங்க வடிவங்கள் வரை இம்மரபு தொடர்கிறது. தேசிய மட்டத்தில், பால கந்தர்வா, ஜெய்சங்கர் சுந்தரி போன்ற பார்சி நாடக வடிவ பெண் வேடக் கலைஞர்கள் பெரும் தொன்மங்களாக இருபதாம் நூற்றாண்டுக் கற்பனையில் ஆட்சி செலுத்தினர். ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து “சுந்தரி: ஒரு நடிகர் தயாராகிறார்” என்ற நாடகத்தை அனுராதா கபூர் தயாரித்துள்ளார். பெண்ணாக வடிவம் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அதன் தயாரிப்புக் கட்டத்தில் இருந்து காட்டும் முயற்சியாக இது அமைந்தது.

தமிழகத்தில், பம்மல் சம்பந்த முதலியார் குழுவில் ஸ்திரீ பார்ட் ஏற்ற நடிகர் மீது அவர் கொண்டிருந்த அலாதியான அபிமானம் பிரபலமானது. கே.பி. சுந்தராம்பாள் ஆண் வேடம் ஏற்று, கிட்டப்பா பெண் வேடம் செய்த வள்ளி திருமணம் நாடகம் பிரசித்தி. காஞ்சிபுரம் அடுத்த புஞ்சரசந்தாங்கல் கிராமத்தில் உள்ள கட்டைக் கூத்துப் பள்ளியில் சிறுவர், சிறுமியர் இருபாலரும் கூத்து பயில் கின்றனர். முழுதும் சிறுமியரே பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் தயாரித்துள்ளனர். 1997இல், பெருங்கட்டூர் இராசகோபால் அவர்கள் முதன் முதலாக பெண்கள் மட்டும் பங்கேற்ற வில் வளைப்புக் கூத்தைத் தயாரித்தார். நாவல்ஸ், இசைநாடக வடிவங்களில் தொழில் முறைக் கலைஞர்களாக பணியாற்றும் பெண்கள் பனிரெண்டு பேர் இதில் பங்கெடுத்தனர். அடுத்த இரு ஆண்டுகள் அவர், பெண் வேடம் / ஆண் வேடம் குறித்த பல சோதனைகளை மேடையில் மேற்கொண்டார். ‘மௌனக் குரல்’ அப்பெண்களோடு தொடர்ந்து நான்காண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மேடையேற்றிய பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு மேடைக்குப் பின் உள்ள வாழ்வையும் மேடை வாழ்வையும் அடுத்தடுத்துக் காட்டியது. அர்ஜுனனின் ஆறு மனைவியர் ஒருவருக் கொருவர் அவனை சொந்தம் கொண்டாடி, தமக்குள் போட்டி போட்டுக் கொள்ளும் காட்சி கூச்சநாச்சம் இன்றி மேடையேறிய சக்களத்தி சண்டைக் காட்சியாயிற்று. அவர்கள் மணிமேகலையை மேடையேற்றியபோது உதயகுமாரன் பாத்திரம் மட்டுமே ஆண் பாத்திரமாக அமைந்தது. அதில் கட்டியக்காரன் வேடம் ஏற்ற செண்பகவள்ளி வழக்கமான கட்டியத்தை ஆண்வேடத்தில் செய்தபோது கிடைத்த எள்ளல் வித்தியாசமான அனுபவம். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயலதா தன்னோடு ராஜபார்ட் போட நடிகர்கள் தயங்கத்தொடங்கியதும் ஆண் வேடங்களைத் தானே செய்யத் தொடங்கி புது வரலாறு தொடங்கினார்.

மேற்கூறிய முயற்சிகளின் பலனாக, உஷாராணியை நடிகராகக் கொண்டு ‘பனித் தீ’ நாடகத்தை 2003இல் தயாரிக்க முடிந்தது. மகாபாரதக் கதையில் வரும் அம்பை - சிகண்டி கதையைக் கொண்டு பெண்மை - ஆண்மை குறித்த விவாதத்தைக் கிளப்பிய நாடகமாக இது அமைந்தது. பெண், ஆண் வேடம் ஏற்றல், தெருக்கூத்தில் பெண் நடித்தல் ஆகிய வடிவம் சார்ந்த மீறல்கள் மட்டுமின்றி, ‘பனித் தீ’ ஆண்மை - பெண்மை எதிர்வுகள் கட்டமைக்கப்படும் தன்மை களை விவரித்தது. சிகண்டி துருபதன் மகளாகப் பிறந்ததும் மகன் என்று அறிவிக்கப்படுகிறான். இக்குழந்தை பின்னர் ஆணாக மாறும் எனக் கூறப்பட்ட வரத்தை நம்பி துருபதன் மனைவி செய்த முடிவு அது. ஆணாக வளர்க்கப்படும்போது உணரும் சிரமங்களையும் ஆண் உடல் கிடைத்ததும் போர் வீரனாக மாற எடுத்த முயற்சிகளையும் சிகண்டி போர்க் களத்தில் நினைவு கூர்கிறான்.

“பெண்ணாய் பிறந்தும் ஆணாய் மாற - நான்

பெற்ற பயிற்சிகள் கற்ற வித்தைகள்

ஈரேழு உலகத்திலும் - எவருக்கும் சாத்தியமில்லை”!

என்கிறான். பனுவல் களத்தில் மகாபாரதம் மூலப் பனுவல் அம்பை - சிகண்டிக்கு சுயக் கூற்று எதையும் வழங்காதது இப்பிரதியின் தொடக்கப் புள்ளியாயிற்று. அளிக்கை முறையில், பெண் கூத்து வேடம் கட்டுவதோடு நிற்காமல், மேடையிலேயே, தனது ஒப்பனையை மாற்றுவது விதிகளை மீறுவதாயிற்று. அதிலும் அம்பை போன்ற பாத்திரம் ஆகப் பெரிய பிதாமகனை அடா, போடா என்று மரியாதை இன்றி விளிப்பது பண்பாட்டில் ஏற்கப்படாத தாகும். புரிசை கிராமத்தில் திரௌபதி கோவில் முன் இந்நாடகம் நிகழ்த்தப் பட்டபோது, உஷாராணி உணர்ந்த அச்சம் பண்பாட்டுக் கனத்தைக் காட்டுவதாக அமைந்தது. சமகால பாலியல்பு குறித்த விவாதத்தில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அரவானிகள் குறித்த உரையாடல் மேலெழும்பிய அளவு பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறும்/உணரும் மாந்தர் பற்றிய உரையாடல் நிகழ்த்தப்படு வதில்லை என்பதை கணக்கில் கொண்டால், இந்நாடகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

திட்டமிடப்படாத வகையில், ‘பனித் தீ’ அரவானிகளுடன் மேற்கொண்ட அரங்க முயற்சிகளுக்கு கட்டியமாக அமைந்தது. கடந்த பத்தாண்டுகளாகத் தமிழகத்தில் பெரும் இயக்கமாக வளர்ந்து வரும் அரவானிகள் - மாற்றுப் பாலினர் ஒருங்கிணைப்பு முயற்சி களில் அரங்கம், இலக்கியம் ஆகியவை கணிசமான பங்கு வகித்துள்ளன. ‘சுடர்’ அமைப்பின் சார்பாகக் ‘கண்ணாடி கலைக் குழு’ உருவாக்கப்பட்டு அதன் மூலம் ‘மனசின் அழைப்பு’, ‘உறையாத நினைவுகள்’ ஆகிய நாடகங்கள் உருவாகின. மனசின் அழைப்பு குடிமக்கள் என்ற உரிமையைப் பெறுவதற்கான குரலைப் பதிவு செய்தது. ஆண் பெயரில் பிறப்புச் சான்றிதழ் இருக்க, பெண்ணாக மாறிய பின், இருப்புக்கான எந்த அத்தாட்சியும் இன்றி ஏதிலிகளாய் அலையும் வாழ்வைப் பேசியது. வேறெந்தப் பணியும் செய்வதற்கான தேர்ச்சியின்றி, பாதுகாப்பான சுழலுக்காகவும், உறவுகளுக்காகவும் ஜமாத்தில் உறுப்பினராகும் அரவானிகள் பிச்சை, நடனம் அல்லது பாலியல் தொழில் செய்வதற்குத் தள்ளப்படும் நிலைமையைக் காட்டியது. குடியிருக்க வீடு தர அரவானிகளுக்கென உருவாக்கப்படும் தனி விதிகளைச் சொல்லியது. இறுதியாக, ஆண் - பெண் எதிர்வுகளுக்குப் பழகிப் போன சமூகம் பொது வெளியில் அரவானிகளை அவமானப் படுத்தித் தனது கட்டமைப்பை உறுதி செய்வதைக் காட்டியது. இன்குலாபின் வரிகள்,

“உறுப்பால் வளர்ந்ததே உங்கள் பண்பாடெனில் / நிர்வாணமாய் அதன் நெஞ்சில் நடக்கிறோம்” என்று அரவானிகள் குரலைப் பதிவு செய்தது.

“உறையாத நினைவுகள்” குடும்ப அமைப்பு சாதகமாக அமைந்தால் அரவானிகளின் நிலை சற்றே எளிமையாக அமையலாம் என்ற அவர்களின் ஆதங்கத்தைப் பேசியது. அந்த நப்பாசை ஒரு ஓரமாக இருந்தாலும், குடும்பம் என்ற கட்டமைப்பின் இறுக்கமும், வன்முறையும் இத்தகைய மீறல்களை ஏற்பது சிரமம் என்பதை ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர். என்னை நானாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையோடு நாடகம் நிறைவுற்றது. குடும்பச் சட்டகத்தின் இறுகிய தன்மை புகைப்படச் சட்டம் மூலம் காட்டப்பட்டது.

இந்நாடகத்தில் சொல்லப்படும் கதைகள் அனைத்தும் பங்கேற்ற வர்களின் வாழ்வனுபவங்கள். இரணமாகக் கசியும் அனுபவங் களைப் பகிர்வதில் உள்ள சிரமம் காரணமாகக் கதைகளைப் பிறர் நடித்துக் காட்டினர். ஆனால், குழுவில் இருந்த ஒரே ஒரு ஆணாக உணரும் பெண்ணின் கதையை வேரு எவரும் சொல்ல முடியாத லால், அவரே செய்ய வேண்டியதாயிற்று. ஆண்டுகள் பல கடந்தும், இன்றும் அவரால் அதனை நாடகமாக நிகழ்த்துவது எளிதாக இல்லை. அக்குழு தொடர்ந்து இயங்குவதில் பல நடை முறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நாடகம் மூலம் தம்மை வெளிப் படுத்துவது குறித்த அக்கறையின் வீச்சு மாறியுள்ளது. இருப்பினும், இந்நாடகத் தயாரிப்புகள் ஆத்மார்த்தமான நெருக்கத் தைச் சாத்தியமாக்கின. தமது பால் அடையாளம் காரணமாக அனுபவித்த கொடுமைகள், நம் நாகரீக முகத்தில் கீறல்களாகக் கசிகின்றன.

அரவானிகள் போல் பால் அடையாளத்தை உடலால் சுமக்காமல், ஆனால் அதே போன்ற கனத்தைச் சுமந்து திரியும் வாழ்வே ஓரினப் புணர்ச்சியாளர் அனுபவமாக உள்ளது. ஆங்கிலத்தில், இவர்களைக் கேலி பேசப் பயன்படுத்தப்படும், கோணலானவர் என்ற தொடர் உண்மையில் எதிர்ப்பின் குறியீடாகிறது. நெடும் மரமாய் விறைத்து நிற்கும் தந்தைமை அமைப்பை வளைக்கும் / முறிக்கும் வேகம் இதில் தொழிற்படுகின்றது. ஓரினப் புணர்ச்சி அல்லது ஈர்ப்பாளர்கள் மத்தியிலும் ஓரினப் பெண் புணர்ச்சியாளர்கள் குறித்த அழுத்தம் குறைவாகவே உள்ளதைக் காணமுடிகிறது. எல்லா துறைகளிலும் உள்ள ஆண் மையச் சிந்தனை இங்கும் துரத்துகிறது. நாள்தோறும் செய்தித்தாள்கள் பட்டியலிடும் இளம் பெண்கள் தற்கொலைகள் இத்தன்மைகளுக்கானச் சான்றாகத் தொடர்ந்து நிகழ்கின்றன.

ஆண்மை, கற்பாபிமானம், குடும்பம் போன்ற கருத்தாக்கங்களை அழித்தொழிக்காமல் சுய மரியாதை சாத்தியமில்லை. பெண் விடுதலை நிச்சயம் சாத்தியமில்லை. பெண்ணுக்கென ஒரு மனம் உண்டு, அதில் விருப்பு- வெறுப்பு உண்டு என்பதைக் கணக்கில் கொள்ளாத அமைப்பில் மட்டுமே பெண்ணைக் காலம் காலமாகச் சார்பாளராக வைக்க முடியும். பெண்ணுக்கான விருப்பத்தை ஏற்றால்தான், பெண்ணுக்கான வேட்கையை அங்கீகரிக்கமுடியும். இல்லையென்றால், அவள் முனியாகவும், காட்டேரியாகவும், மோகினியாகவும், சூலியாகவும் மிரட்டத்தான் செய்வாள். ஆண் உரிமை என்ற கோட்டை கட்டப்பட்டிருப்பது, பெண் அச்சத்தின் மேல்தான்!

...மேலும்

Jul 25, 2011

“க்வியர்” பெண்களும் இந்தியச் சட்டமும் - பிரியா தங்கராஜா, அ.பொன்னி


இக்கட்டுரை இரண்டு காரணங்களுக்காக எழுதப்பட்டுள்ளது. முதலாவதாக, இன்று இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரு குறிப்பிட்ட அடையாளக் குழுவின் வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கம். இவ்வடையாளக்குழு எளிதாய் வர்ணிக்கக் கூடியதல்ல. இக்கட்டுரையின் தேவைக்கான வர்ணனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இவ்வரலாற்றின் மூலம் அடையாளம்சார் சமூக இயக்கங்கள் மற்றும் சட்ட மாற்றத்திற்கான போராட்டங்கள் பற்றிய ஒரு விமர்சனப்பூர்வமான கருத்து முன்வைக்கப்படும்.

இந்தியச் சூழலில் மாற்றுப் பாலினம் பற்றிப் பேசுகையில் முதலில் நினைவிற்கு வருவது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 377 ஆகும். ஆனால் இக்குழுவினரின் வாழ்வில் சட்டரீதியான விளைவுகள் 377 ஐ தாண்டியும் உள்ளன.

‘க்வியர்’ பெண்கள் என்று நாம் குறிப்பிடுபவர் யார் என இக்கட்டுரையின் தொடக்கத்தில் தெளிவுபடுத்துதல் அவசியம். இயக்கசார் அரசியலில் “க்வியர்” என்னும் சொல் பல தோழர்களால் “பால் மற்றும் பாலியல் சார்ந்த நெறிமுறைகளைக் கேள்வி கேட்கும் எந்த நபரும் க்வியர் ஆவர்” என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய பரந்த பொருளின் நற்பயன்களைக் கணக்கில் கொண்டாலும் குறிப்பிட்ட அடையாளப் பெயர்களின் சக்தியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதுவும் இக்கட்டுரையின் தேவைக்கு இக்குறிப்பிட்ட அடையாள முறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் “க்வியர்” பெண்கள் என்பவருள் சமூகத்தால் பெண்ணாகக் காணப்படும் யோனியுடன் பிறந்தோருள் மற்ற யோனியுடன் பிறந்து ‘பெண்’ எனக் காணப்படுபவரின் மேல் இச்சை கொள்பவர் அடங்குவர். சமூக நெறிமுறைகளை மீறி இவர் தம்மைத் தாமே கூப்பிட்டுக்கொள்ளும் பெயர்கள் பலவாகவுள்ளன. அதே சமயம் சட்டரீதியாக முன்பு குறிப்பிட்ட பரந்த அர்த்தத்துடனான “க்வியர்க்கும்” ஒரு தேவையுள்ளது. அதிகபட்சம் சட்டம் மற்றும் சமுதாயத்தில் ஓர்பாலினச் சேர்க்கைக்காகச் செயல்களைவிட அச்செயல்களைச் சார்ந்த அடையாளக் குறிப்புகளே சமூக நெறிகளை உடைத்தெறிபவையாகக் காணப்படுகின்றன.

ஓர்பாலின உடலுறவு அமைதியாக, மறைத்து மறைத்துச் செய்யப்பட்டால் அது சகித்துக் கொள்ளப்படும். அதுவும் சமூகக் கோட்பாடுகளை மீறாமல் திருமணம், குழந்தைபெறல் ஆகிய அமைப்புகள் உடைபடாமல் அதனிடையில் செய்யப்படும் ஓர்பாலின உடலுறவு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் பொதுவெளியில் அரசியலாகக் கூறப்படும் இவ்வடையாளக்குறிகள், அதுவும் பெண்களால் கூறப்படுபவை சமூக நெறிமுறையை எதிர்த்துத் திடமாய் நிற்பவையாய் அமைந் துள்ளன. அதே சமயம் உடலுறவு மட்டுமே குறிப்பிடும் அடையாளப் பெயர்கள் அப்பெண்களின் பற்பல அனுபவங்களைச் சுட்டிக்காட்டுபவையாய் அமைவது கடினம். இவ்வனைத்துக் காரணங்களால் யோனியுடன் பிறந்து பற்பல பாலினம் மற்றும் பாலியல் கொண்டவர், ஓர்பாலின ஈர்ப்புள்ளவர் ஆகியோரைச் சேர்ந்து இக்கட்டுரையில் க்வியர் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இப்பெண்கள் க்வியர் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடம், மதம், சாதி, வர்க்கம் ஆகியவற்றை சார்ந்தவர். அவரது வாழ்க்கைப் போராட்டத்தில் இவ்வடையாளங்களும் முக்கிய பங்கு வகிப்பவையாகும். இவ்வனைத்து அடையாளங் களும் ஒன்றியே ஒரு மனிதரின் வாழ்க்கை மற்றும் வாழ்வுரிமைக் கான போராட்டத்தை வடிவமைக்கின்றன.

சமூகத்தில் ஆணாகக் காணப்படும் க்வியர் நபர்களின் அனுபவம் மிகவும் வேறுபட்டதாகும். ஆண்கள் என்ற காரணத்தால் சமூகத்தி லுள்ள உரிமை மற்றும் ஆதிக்கம் க்வியர் ஆண்களுக்கும் உண்டு. பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் வேலை பார்க்கும் உரிமை ஆகியவை எளிதாக உள்ளவை. இதனால் வரும் சுதந்திரம் அவ்வாண்களுக்கு ஒருசில கணங்களில், நேரங்களில் இடம் கொடுக்கிறது. இந்தச் சுதந்திரம் ஒருசில நேரம் அழுத்த மாகவும் மாறலாம். அதே சமயம் க்வியர் ஆண்களின் அனுபவங் களை ஒரே நேர்கோடாக இடமுடியாது. இதிலும் சாதி, மதம், இடம், வர்க்கம், உடல்நலம் ஆகியவை சார்ந்தவையாக பெண்கள் மத்தியில் உடல்சார்ந்த அறிதல், மற்றும் இச்சை மற்றும் வலி பற்றிய அறிதல் ஆகியவை மிகக்குறைவு. இவ்வகை அறிதல் அனுமதிக்கப்படு வதில்லை. ஆண்கள் மத்தியில் உடல் மற்றும் உடலுறவு சார்ந்த அறிதல் தவறானதாகவும் தூய்மைக் கேடு புரிவதாகக் கருதப்பட்டா லும் ஓரளவு அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தன் சொந்த உடலையே அறிய அனுமதியில்லாமல் இன்னொரு பெண்ணின் உடலை அறிதல் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய காரணங்களால் பெண்கள் மத்தியிலான ஓர்பாலின உடலுறவு சமூக நெறிகளுக்கு முழுதும் புறம்பானதாய்க் கருதப்பட்டுக் கண்டிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில் ஓர்பாலினச் சேர்க்கை பெண்களின் வாழ்க்கை சமூக நெறிமுறை மீறி வாழும் பல பெண்களின் வாழ்விலிருந்து அவ்வளவு மாறுபட்டதல்ல. இதையும் தாண்டி க்வியர் பெண்களின் அனுபவம் மாறுபட்டதாகும். இதற்கான காரணங்கள் கீழ்வருமாறு. முதலில் வேற்றுப் பாலியலின் நெறிமுறையான ஆணுக்கான தேவை ஆணின் மேல் கட்டாய சார்பு ஆகியவை க்வியர் பெண்களினால் தகர்த்தெறியப்படுகிறது. இரண்டாவதாக ‘குடும்பம்’ என்பதற்கான நெறிமுறைகள் உடைக்கப்படுகின்றன. குழந்தைபெறல் இல்லாததால் குடும்ப வரைமுறை தகர்க்கப்படுகிறது. மூன்றாவதாக இப்பெண்கள் இச்சையுடன் இன்பம் அளிக்கும் உடலுறவில் ஈடுபட்டுப் பெண்களுக்கு அனுமதிக்கப்படாத இன்பம் சார்ந்து வாழ்வதால் அவர் பல நெறிமுறைகளை உடைத்தெறிகின்றார்.

சட்டம்சார் அனுபவங்கள்

சட்டப்படி ஒருபெண் பிறந்த வீட்டிற்கு வெளியே இன்னொரு ஆணின் கீழ் வாழாதது ஒரு பெரிய நெறிமுறை மீறல் ஆகும். அதற்குமேல் இன்னொரு பெண்ணுடன் வாழ முனைவது எரியும் விளக்கில் எண்ணை ஊற்றுவதாக அமைகிறது.

சட்டரீதியாக க்வியர் ஆண்கள் மற்றும் பெண்களின் அனுபவங் களில் ஒருசில பொதுவானதாகவும், ஒருசில வேறுபட்டவையாக வும் உள்ளன. ஐ.பி.சி. பிரிவு 377 க்வியர் ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கிறது. காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றாலும் அடிக்கடி அச்சுறுத்தல் செய்வது வழக்கம். அதிலும் பொது இடங்களில் அடிக்கடி காணப்படும் க்வியர் ஆண்கள் குறிப்பிட்ட வகையில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாண்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக உள்ளனர். வாழ்விடம், வேலையிடம், பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் சட்டப்படி குற்றம் என்பது தொடர்ந்து பயமுறுத்துவதாக உள்ளது. பிரிவு 377 இல்லாமல் இன்னும் பல சட்டங்கள் இப்பெண்களின் மீது தாக்கமுள்ளவையாக அமைந்துள்ளன.

மற்ற சட்டப்பிரிவுகள்

பிரிவு 377 இல்லாமல் இன்றும் பல ஐ.பி.சி பிரிவுகள் க்வியர் பெண்கள் மீது தாக்கமுள்ளவையாக அமைந்துள்ளன. அவை கீழ்வருமாறு: பிரிவு 340 முறையின்றி சிறைப்படுத்துதல், பிரிவு 361 ஆள்கடத்தல், பிரிவு 362 கடத்தல், பிரிவு 366 கட்டாய கல்யாணம் செய்யவைத்தல், பிரிவு 368 ஆள்கடத்தப்பட்டவரைச் சிறையி லடைத்தல் மற்றும் ஆட்கொணர்வு ஆணை (லீணீதீமீணீs நீஷீக்ஷீஜீணீs ஷ்க்ஷீவீt) ஆகியவை அடங்கும்.

2006இல் தில்லி நீதிமன்றத்தில் ஓர் அபூர்வமான வழக்கு தொடரப்பட்டது. ஓர் ஓர்பாலினச் சேர்க்கை பெண், தன் காதலியுடன் இருக்க அனுமதிக்கப்படாததால் வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்டார். அவரது பெற்றோர் அவர் காதலிக்கு எதிராக ஆள்கடத்தல் வழக்கைப் பதிவு செய்தனர். வீட்டைவிட்டு வந்த பெண் நீதிமன்றத்தில் தாம் கடத்தப்படவில்லை தன்னிச்சையாகவே வெளியேறினேன் என வாக்குமூலம் அளித்ததுடன் வழக்கு நிறைவு பெற்றது. இது இயக்கத்தவர் மத்தியில் ஒரு வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவை நாங்கள் நீதிமன்றத்தில் மறைத்தோம். அவர் சட்டப்படி வயது வந்தவர் என்ற கூற்றை மட்டுமே அழுத்தமாகக் கூறினோம். இயக்கத்தின் மூலம் நாங்கள் எழுத விழையும் வரலாறு மறைக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலைமையில் நொடி ஈடுபாடு உள்ள வழக்குகள் மற்றும் இயக்க நண்பர்கள் அறிந்த கதைகள் மட்டுமே பதிவு செய்யப்படுபவை. இதனிடையில் பல கதைகள் நிகழ்ந்ததறியாமல் தொலைந்து போய்விடுகின்றன.

கேரளத்தில் நடந்த ஒரு வழக்கில் ஒரு பெண்ணின் பெற்றோர் இன்னொரு பெண்ணுக்கு எதிராகக் கடத்தல் வழக்குத் தொடர்ந்த னர். அதே சமயம் காவல் நிலையத்தில் காணாமற்போனவர் வழக்கும் பதிவு செய்தனர். இவ்வழக்கில் நீதிமன்றம் சட்டப்படி 18 வயதிற்கு மேலான இவ்விரு பெண்களை அவர் இஷ்டத்திற்கு மாறாக அவரவர் பெற்றோருடன் அனுப்பிவைத்தது. இவ்விரு பெண்களுக்கும் மிக்க வன்முறையுடனான மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதே சமயம் கேரளத்தில் இன்னொரு வழக்கில் ஒரு பெண்ணின் காதலியைக் கண்டுபிடிக்க ஆட்கொணர்வு ஆணை கோரி வழக்குத் தொடர்ந்தது. தம் பெற்றோரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். நீதிமன்றம் அவ்விரு பெண்கள் எங்கு வேண்டு மானாலும் சேர்ந்தோ தனியாகவோ வாழலாம் எனத் தீர்ப்பளித்தது. இதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனும் வாதம் எல்லா நேரமும் இப்பெண்களுக்குச் சாதகமாக அமைவதில்லை.

வழக்கமாக ஆட்கொணர்வு ஆணை சட்டத்தை மீறி சிறைப் படுத்தப்பட்டவரைக் கண்டறிய பயன்படுத்தப்படும் சட்டமாகும். இது அரசு நிறுவனங்களான காவல்துறை மற்றும் சிறையில் உள்ளவருக்காகப் பெரும்பாலும் சிறைப்படுத்தப்பட்டவரையும் இச்சட்டத்தின்படி கண்டறிய வழக்குகள் தொடரப்படலாம். சிறையில் அமைக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஆண்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் இச்சட்டம், உரிமைசார் கோட்பாடுகளுக்குச் சாதகமாக அமைகிறது. ஆனால் சமுதாய வரைமுறையை மீறிவாழும் பெண்கள், அவர் வேற்றுச் சாதிய ஆணைக் காதலிப்பவரோ அல்லது இன்னொரு பெண்ணைக் காதலிப்பவரோ எங்குள்ளவர் என்று கண்டறிய பெற்றோரால் பயன்படுத்தப்படும் போது அதே உரிமைசார் கோட்பாட்டிற்கு எதிராக அமைகிறது. பல நேரங்களில் இச்சட்டம் 18வயதிற்கு மேலான பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாகப் பெற்றோ ருடன் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் நீதிமன்றமே அவரைப் பாதுகாப்பிடங்களுக்கு அனுப்புகின்றன. இதிலும் வரைமுறையைத் தாண்டினாலும் வேற்றுப்பாலின தம்பதியினரின் இச்சட்டத்தைத் தமக்கு சாதகமாக அவ்வப்போது பயன்படுத்த முடிகிறது. சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாததால் இச்சட்டத்தையோ, வேறு எந்த சட்டத்தையோ தமக்குச் சாதகமாய் பயன்படுத்தல் முடியாது.

கேரளத்தில் இன்றும் இரண்டு பெண்களுக்குச் சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. ஆனால் அதனை அவரது பெற்றோர் முன்னிலையில் செயல்படுத்துமாறு கூறியது. பெற்றோர் தீர்ப்பிற்கு முரணாக அவர்களைப் பிரித்து உடல் மற்றும் மனரீதியாக அவர்களை அச்சுறுத்தினர். தம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுப் பெற்றோரால் சிறைவைக்கப்பட்டடுள்ள காதலியைக் காப்பாற்ற ஒருவர் ஆட்கொணர்வு ஆணை கோரி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு இரு பெண்களுக்கிடையில் எந்த ‘தொடர்பு’ அதாவது குடும்பம் அல்லது விவாகம் சார்ந்த தொடர்பில்லாததால் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படவில்லை. எந்தவித சட்டரீதியான தெளிவான காரணம் இல்லாவிடினும் ‘தொடர்பு’ என்பதற்கான அர்த்தத்தைச் சுருங்கிப் புரிந்துகொண்டு நீதிமன்றம் இவ்வழக்கை ரத்து செய்தது. சட்டம் மற்றும் நீதிமன்றத்தில பெண்கள் தனியாகவோ அல்லது காதலிகளாகவோ வந்து சாதகமான சேவைகள் பெற இயலாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதே கேரளத்தில் இன்னொரு வழக்கில் இரு பெண்கள் திறந்த வெளியில் தம்மிடையே உள்ள காதல் உறவை வெளிப்படுத்தினர். இதில் ஒரு பெண்ணின் உருவத்தைச் சார்ந்து அவர் ஆணா, பெண்ணா எனும் கேள்வி எழுப்பப்பட்டது. எவ்வாறிருந்தாலும், இவர் இருவரும் 18வயதிற்கு மேலானோர் என்ற காரணத்தால் அவர் இஷ்டப்படி வாழ உரிமையுள்ளவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதே மாதிரியான ஒரு வழக்கில் பாகிஸ்தானில் ஷகசீனா மற்றும் ஷமாயில் ஈடுபட்டிருந்தனர். பெண்ணாய் பிறந்து ஆணாய் வாழும் ஷமாயில் நீதிமன்றத்தில் தாம் ஆண் என கூறியது பொய் எனக் கொண்டு நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை அளித்தது. இவரிருவரும் ஒன்றாய் வாழ அதே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இரு பெண்களும் சுதந்திரமாய் வாழ வழிவகுத்தது. ஆனால் இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. கீழ்வருமாறு: ஆணாக வாழும் ஷமாயில் அறுவை சிகிச்சை மருந்துகள் மூலம் ஆணாக மாறிக் கொண்டிருந்தாலும் அதனை நீதிமன்றம் அங்கீகரிக்க மறுத்தது. வழக்கு அவரது தொடர்பு குறித்ததே ஒழிய அவரது பாலினம் பற்றித் தொடுக்க படவில்லை யென்றாலும் நீதிமன்றம் தன்னிச்சையாக அவரது பாலினம் பற்றித் தீர்ப்பளித்தது அவசியம் என்று கருதியது. ஒரு பெண், ஆணாக வாழ்ந்தாலும் அவர் மீதுள்ள அழுத்தத்தை நாம் இங்கு காணலாம்.

நீதிமன்றங்களின் ஓரினச்சேர்க்கை பெண்கள் பற்றியான பெரும் குழப்பம், இவ்வனைத்து வழக்குகளில் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் உள்ளனர் என்பதே பலரால் யோசிக்க முடியாத விஷயம். அதிலும் அவர் தம் காதல், இச்சை மற்றும் வாழ்க்கைக்காகச் சமூகத்தை எதிர்த்து போராடுகின்றனர் என்பது நீதிமன்றத்திலும் பிற இடங்களிலும் அதிர்ச்சியுடன் கண்டு, வேறு வழியில்லாமல் போனதாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இத்தகையான பெரும் குழப்பத்திற்கான ஒரு நல்ல உதாரணம் கீழ்வருமாறு:

மும்பையில் உள்ள ஜல்காவ் என்ற இடத்தில் இரு பெண்கள் பல்லாண்டுகளாகக் காதலர்களாக இருந்துவந்தனர். இவர்களது வீடுகள் அருகருகில் இருந்தன. கல்யாணம் செய்து குழந்தை பெற்ற இப்பெண்கள் தம் கணவருடன் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இவ்விரு பெண்களும் ஏதோ சினிமாவில் நடப்பதுபோல் நடக்கும் என எண்ணி அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று அவரிருவர் இடையில் மணமுடித்து வைக்குமாறு கூறினர். காவல்துறையினர் அவரை விசாரணை செய்து இருவரையும் சிறையிலடைத்தனர். ஒருவர் ஒருவரைத் தேடிவந்த அவர் கணவரையும் சிறையி லடைத்தனர். இதுமட்டுமல்லாமல் இவ்விரு பெண்களும் ஒருவருடன் ஒருவர் உடலுறவு வைத்துள்ளனரா என காண அவர் யோனியில் இரண்டு விரல்கள் நுழைத்துச் ‘சோதனை’ செய்யப் பட்டது. இது மிகப்பெரிய சட்டம் மற்றும் உரிமை மீறலாகும். இவ்விரு பெண்கள் பல நேரங்களில் காவல்நிலையங்களில் சாதி விட்டு, மதம் விட்டு மணம்புரியும் வேற்றுப் பாலின தம்பதியருக் குள்ள உரிமை, தம் காதலின் பெயரால் தமக்கும் உண்டு என தவறாக நம்பினர். இக்காதலை கண்டு திக்கு முக்காடிப்போன காவல்துறை யினர் தமக்குத் தெரிந்த கொடும் விசாரணையும் சோதனையும் சட்டத்தை மீறி மனசாட்சியின்றி மேற்கொண்டனர்.

பெண்கள் ஒரு தனிமனிதர் என்பதை அங்கீகரிப்பதே சட்டத்தில் குழப்பம் உண்டாக்கும். அதிலும் அவர் தாய், மனைவி அல்லது மகளாக வராமல் இன்னொரு பெண்ணின் காதலியாக வந்து நிற்கும்பொழுது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி நீதிமன்றத்திலோ காவல்துறையிலோ கிடையாது.

இறுதிச் சுருக்கம்

இந்தியச் சூழலில் பாலியல்புகள் கேள்விகளை எழுப்பவும் அதைப் பற்றிப் பொது வெளியில் பெரும் பிரிவு 377ஐ மாற்ற மேற்கொள்ளப்பட்ட இயக்கம் மிகவும் முக்கியமானது. தனிநபரின் தினசரி வாழ்க்கையில் இவ்வியக்கத்தின் தாக்கம் சிக்கலானது. சட்டத்திலான மாற்றங்களும் அதன் தாக்கமும் எல்லோர் மீதும் ஒன்றுபோல இருப்பதல்ல. ஆக்கப்பூர்வமாக உரிமை அளிக்கும் சட்ட மாற்றங்கள் பெண்களுக்கு வன்முறையை எதிர்க்கவும் கல்யாணம், வேலையிடம் போன்ற சூழல்களில் உதவியாய் அமைகின்றன. பாகுபாடுகளை அகற்றும் சட்ட மாற்றங்கள் பெண்களுக்கு அதே வகையில் பயன்படுவதில்லை. பிரிவு 377 இன் மாற்றம் இரண்டாம் வகையாகும். அது மட்டுமல்லாமல் பிரிவு 377இன் வரலாறு என்றும் ஆண்களுடன் சேர்ந்தே காணப்பட் டுள்ளது. இதில் பெண்களின் இடம் தெளிவானதல்ல. அதேபோல இப்பிரிவிற்கெதிரான போராட்டத்திலும் பெண்களின் இடத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வகையான பகுப்பாய்வின் மூலம் சமூக போராட்டங்களில் சட்டமாற்றத் திற்கான போராட்டங்கள் பற்றியும் நாம் கூர்ந்து யோசிக்க முடிகிறது. இதனைப் பலவகையில் மேற்கொள்ளலாம்.

முதலாவதாக சமூகமாற்ற இயக்கங்களில் சட்டமாற்றத்திற்கு அளிக்கப்படும் முக்கிய இடம் குறித்து யோசித்தல் அவசியம். இரண்டாவதாக இத்தகைய சிறப்பிடத்தால் இந்த சட்டமாற்றத்துள் சரிவர அடங்கா பல அடையாளக்குழுக்கள் விடுபடுகின்றனர் என்பதையும் அங்கீகரித்தல் அவசியம். பொதுவெளியில் புழங்கும் சட்டமானது சமூக இயக்கங்களின் ஒரு அங்கமாக மட்டுமில்லாமல் அவைகளை வரையறை செய்வதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உதாரணமாக இயக்கங்களில் உள்ள சொல்லாடல் மற்றும் அடையாளம் சார்ந்து உரிமை கோரல் ஆகியவைச் சட்டத்திலிருந்து வரும் கோட்பாடுகளே ஆகும். இக்காரணங்களால் 377ஐ மாற்றுவதை மையமாக கொண்ட சமூக இயக்கத்தில் ஆண்களே முக்கிய அடையாள குழுவாகி யுள்ளனர். க்வியர் சமூகங்களிலுள்ள பெண்கள் இக்காரணத்தாலும் ஆணாதிக்க அழுத்தங்களாலும் அவ்வளவாக பொதுவெளியில் தென்படுவதில்லை. ஆனால் இவ்வாதம், பெண்களை அப்படியே சேர்த்துக்கொண்டு, அடையாளக்குழுவை விரிவுபடுத்தும் நோக்கத் துடன் முன்வைக்கப்படுவதல்ல. நமது சமூக இயக்கங்கள் பல சமயம் தாம் எதிர்க்கும் நிறுவனங்களின் உட்படுத்தல்கள், தவிர்ப்புகளைத் தமது மொழியிலும், போராட்ட வரையறையிலும் பயன்படுத்துவது சகஜம். இதனை குறித்து ஒரு விமர்சன கோணம் அவசியம் என்று கூறுவதே இவ்வாதத்தின் நோக்கம்.

மேலும் பலவகையான க்வியர் இயக்கங்கள் இந்தியச் சூழலில் உள்ளன. இதனுள் பல பெண்களுடன் பணிபுரிபவை. இவ் விமர்சனம் க்வியர் இயக்கத்தை முழுதாக அல்ல மாறாக அவ்வியக்கம் பொதுவெளியில் காணப்படும் முறை பற்றியதாகும். மேலும் சமூக மாற்றச் செயல்களில் சட்டமாற்றம் ஒரு சிறு துளியே ஆகும் என்பதை என்றும் நினைவு கூறல் அவசியம்.

இந்தியச் சூழலில் மட்டுமல்லாமல் தெற்காசியச் சூழலில் பலவகையான க்வியர் போராட்டங்கள் இருப்பதை நாம் என்றும் கொண்டாடுதல் அவசியம். சில இயக்கங்கள் ஒன்று சேர்ந்தும் மற்றவை தனித்தனியாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனிப்பட்ட அடையாளக்குழு, ஓரினச்சேர்க்கை ஆண்கள், அரவாணிகள், ஓரினச்சேர்க்கை பெண்கள், பெண்ணாய்ப் பிறந்து ஆணாய் வாழ்பவள் ஆகியோருக்கு அவரவருக்கான தனிப்பட்ட சந்திப்புக்குழுக்கள் அவசியம். இங்கு அவர்கள் மனம் திறந்து பேச முடியும். ஆனால் இத்தகைய குழுக்களையும் விமர்சன மனப்பான்மையுடன் காணுதல் அவசியம். அவ்வப்போது இணைந்து மேற்கொள்ளும் போராட்டங்கள் ஒரு யுக்தியாக அமையலாம். இன்றும் சில நேரங்களில் இவ்விணைப்புகள் ஒரு பகிர்ந்த அரசியல் புரிதலின் காரணத்தால் அமையலாம். இவ் வரசியல் புரிதல் ஒரு பரந்த அளவிலான ‘க்வியரை’ மேற்கொண்டு செல்வதாகும்.

இவ்வர்த்தகத்தில் அனைவரும் பாலினம் மற்றும் பாலியல்பு பற்றிய வரைமுறைகளை கேள்வி கேட்கும் உரிமையுள்ளவராய் அமைவர். மேலும் தம் வாழ்வில் தமது இச்சைக்கேற்ப, மற்றொருவரைத் துன்புறுத்தாது வாழும் உரிமையுள்ளவராயிருப்பர். இவ்வரசியலில் அடையாளக் கூறுகள் குறிப்பிட்ட நேரங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பயன்படும். அடையாளக் குழுக்களும் அவர்களுக்கான குறிப்பிட்ட உரிமைகளுக்கான போராட்டங்களை மீறி இது அனைவரும் சுயமரியாதை, சுதந்திரம் மற்றும் ஒருவரையருவர் மதிக்கும் ஒரு வேறு உலகம் உருவாக்கும் இயக்க அரசியலாகும். ஒரு சிலரின் ஒரு சில உரிமைகள் வழங்கப்படுவதால் உலகம் மாறுவதில்லை என்பதை நினைவில் கொள்ளல் அவசியம். தில்லி உயர்நீதிமன்றத்தில் 2009, ஜூலை 2ஆம் தேதி அன்று கொடுக்கப்பட்ட தீர்ப்பினால் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன. இது க்வியர் இயக்கங்களில் மாற்றம் கொணர்ந்துள்ளன. கூடிய சீக்கிரம் ஒரு சட்டம், அதை மாற்றுதல், அதற்காக அடையாளக்குழு அமைத்தல் ஆகியவற்றை மீறி உலகம் பரந்த அரசியலும் அதைத் தழுவிய சமூக இயக்கமும் தொடரும் என்றும் நம்பிக்கை எமக்குள்ளது.

(ப்ரியா தங்கராஜா, இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் இந்தியாவில், பெங்களூரில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் படித்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். அவர் இந்தியாவில் இருந்த பல வருடங்களில் பாலியல்பு பற்றிய ஆராய்ச்சியும், மற்ற வேலைகளும் மேற்கொண்டார்.

பொன்னி அரசு, பெண்ணியலாளரும், ஆராய்ச்சியாளருமான இவர், தில்லி, பெங்களூரு, சென்னை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பல்வகை சமூக மாற்ற இயக்கங்களுடன் பணிபுரிந்துள்ளார். நிரந்தரமாகத் தமிழகத்தில் வாழ்வும் பணியும் அமைக்கும் கனவை நினைவாக்க முனைகிறார்.)

...மேலும்

Jul 24, 2011

பாலியல்பு, திருமணம், குடும்பம் - சில குறிப்புகள் - மீனா கோபால்


அறிமுகம்

எனது எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் இவ் வேளையில் என்னைப் பற்றியும் நான் சார்ந்துள்ள அரசியல், அமைப்புகள் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். 45 வயதைக் கடந்த நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்கள் இயக்கங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். கூடுதலாக, ஒருபால் உறவில் உள்ளவர்கள், மாற்றுப் பாலினத்தவர், அரவானிகள், நடுவண் பாலினத்தவர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவ ரோடும் அவர்கள் சார்ந்து இயங்கும் அமைப்புகளோடும் செயல்பட்டு வருகிறேன். இவ்வனுபவங்களையும் எனது எண்ண ஓட்டத்தையும் இணைத்துச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த பாதைகளில் காலூன்றியும் சகதோழிகளின் அரசியல் முயற்சிகள் சாதித்தவற்றைப் பற்றிக் கொண்டே இவ்விவாதத்தை முன் எடுத்துச் செல்கிறேன்.

பெண்ணிய இயக்கங்களின், பெண்ணியத்தின் தனித்தன்மையை கோடிட்டுக் காட்டியே எனது வாதங்களை முன் வைக்க விரும்பு கிறேன் (பெண்ணியலாளர்கள், இயக்கங்கள் என்று நான் குறிப்பிடும் போது வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு உடையவர் களை குறிப்பிடுவதாகவே கொள்ள வேண்டும். மார்க்சிய பெண்ணியம், தலித் பெண்ணியம், சோசலிச பெண்ணியம், வெறும் பெண்ணியம் என்று பல்வேறு அரசியல் நிலைகளில் நிற்கும் பெண்களை, இயக்கங்களை இச்சொற்கள் கொண்டு சுட்டுகிறேன்.) பாலினம், சாதி, சமயம், வர்க்கம், இனம் ஆகியன இணைந்தும் ஒன்றை மற்றொன்று சார்ந்தும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் நம்மை, நமது சுயங்களை கட்டியமைகின்றன என்ற போதிலும், இவை அனைத்தும் சந்திக்கும் முரண்படும் புள்ளிகளையும் தருவாய்களையும் இனங்காணவும் ஆராயவும் எல்லா அரசியல், சமுதாய இயக்கங்களும் முன்வருவதில்லை. எடுத்துக் காட்டாக, தொழிலார் இயக்கங்கள், சாதி-எதிர்ப்பு இயக்கங்கள் போன்றவை சமூக இயக்கங்களாக செயல்படுன்றன என்றாலும் அவை தங்களுக்கான குறிப்பிட்ட பிரச்சனைகளாக சிலவற்றை அடையாளபடுத்தி, அவற்றின் ஒரு பகுதியாகவே பெண்கள் பிரச்சனையை அணுகுகின்றன. மாறாகப் பெண்ணிய அரசியலோ, இந்தப் பல்வேறு விதமான அடையாளங்கள் இணையும் மாறுபடும், முரண்படும் இடங்களையும் தருணங்களையும் புரிந்துணர்ந்து செயல்பட விழைகிறது.

பெண்ணிய இயக்கங்களின் இவ்விழைவு, எல்லா நேரங்களிலும் செயலாக, அரசியல் நிலைப்பாடாக வெளிப்பாடு காண்பதில்லை தான். மேலும், பாலினம், பாலியல்பு தொடர்பான இவ்வியக்கங் களின் நுண்மையான அரசியல், சாதி-எதிர்ப்பு, வர்க்க முரண்பாடுகள் ஆகியனவற்றுக்குப் போதுமான முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற விமர்சனமும் உண்டு. இவ்விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அதாவது, பாலினம், பாலினப் பாகுபாடு ஆகியவற்றுக் கும் மற்ற சமுதாய அடையாளங்களுக்கும் இடையிலான உறவுகளை ஆராய, அறிய, விமர்சிக்க பெண்ணியலாளர்கள் தயாராகவே உள்ளனர். ஒடுக்கப்பட்டப் பெண்களின் பிரத்யேக பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் தேவையை பெண்ணியலாளர்கள் முக்கி முனகி, காலதாமதமாகவேனும் ஏற்றுக் கொண்டு செயல்பட முயற்சித்து வருகின்றனர் என்பதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இது போலவே, நிர்பந்திக்கப்பட்ட பாலுறவுகளை கடந்த உறவுகளில் வாழ்பவர்கள், ஆண், பெண் அடையாளங்களை தவிர்த்த வேறு பாலின அடையாளங்களை ஏற்றுள்ளவர்கள் ஆகியோரின் தேர்வுகளில் பொதிந்துள்ள அரசியலின் நியாயத்தைப் பெண்ணிய லாளர்கள் படிப்படியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால்தான், பெண்ணிய அறிவு மரபுகள், அரசியல் ஆகியன, பாலியல் தொடர்பான அரசியல் செயல்பாடுகளில் இறங்கியுள்ளோருக்கு ஆதர்சமானவையாக உள்ளன என்கிறார் பெண்ணிய சிந்தனையாளர் சயானிகா ஷா.

இன்றைய கலந்துரையாடலுக்கு பாலியல்பை நாம் விவாதப் பொருளாக எடுத்துள்ளோம். நம்முடைய புரிதலில் பாலியல்பு என்பதற்கு விரிந்த பொருள் உண்டு. பாலியல்பு என்பதை, இச்சை (நாம் விரும்பி ஏற்கும் ஒன்று), அந்நியோன்னியம் (நமது அந்தரங்கத்துக்குரியது), கூட்டுணர்வு (கூட்டுவாழ்க்கைக்கு ஆதராமாக இருக்கக்கூடியது)ஆகியவற்றுடன் தொடர்புடையதாக விளங்கிக் கொள்ளலாம். அதே சமயம், பாலியல்பு என்பது அதிகாரம் என்பதுடனும் தொடர்புடையதாகும் - வர்க்கம், ஜாதி, பாலின பாகுபாடு, இனம், குலம், சலுகை ஆகியவற்றைப் பொறுத்தே பாலியல்புக்கான இலக்கணம் கற்பிக்கப்படுகிறது. இங்கு சலுகை என்பதை குறித்து சில விளக்கங்களை முன்வைக்க விரும்புகிறேன். அதிகாரம் தரும் சலுகையைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதிகாரத்தில் இருப்போரின் எதேச்சதிகாரத்தை நியாயப்படுத்துவதாகவும் அதை இயல்பான தாகக் காட்டவும் அவர்களுக்கு வாய்த்துள்ள சலுகை - அது பிறப்புபாற்பட்டதாக இருக்கலாம், உடைமை தரும் மிடுக்காகவும் இருக்கலாம். பாலியல்பை பொறுத்த வரையில், சலுகை என்பது குறிப்பிட்ட வகையிலான உறவைப் பொறுத்தே அமைகிறது. இவ்வகையில், சமுதாயத்தில் "இயல்பான"தாக அறியப்படும் பாலுறவுகளுக்குக் குறிப்பாக ஆண்-பெண் உறவு, மணஉறவு என்பன போன்ற உறவுகளுக்கு - சில சலுகைகள் உண்டு. இத்தகைய உறவுகள் தான் "முறை"யானவையாக அறியப்படுகின்றன. அவையல்லாத உறவுகள் "முறையற்ற"வையாக ஒதுக்கப்படுகின்றன. "முறை"யான உறவுகளுக்கு எந்தளவு மதிப்பும் மரியாதையும் வழங்கப்படு கின்றதோ அந்தளவுக்கு அந்த இயல்புக்குள் வராத உறவுகள் தூற்றப்படுகின்றன, ஒடுக்கப்படுகின்றன. இது குறித்து நாம் அதிகம் பேசுவது கிடையாது. பெண் மீதான வன்முறை பற்றி பேசியுள்ள அளவுக்கு, ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் கையறு நிலை குறித்து வாதம் புரிந்த அளவுக்கு "இயல்பற்ற"வையாகவும் "முறையற்ற"வையாகவும் அறியப்படும் உறவுகளில் இருப்போரின் நிலைமை குறித்து நாம் பேசுவது கிடையாது. ஆனால் அவ்வாறு பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.

வட இந்திய கிராம சமுதாயங்களில் வழங்கும் திருமண வாழ்க்கைக் குறித்து ப்ரேம் சௌத்திரி என்பவர் ஆராய்ந்துள்ளார் - குடும்பம், குடும்ப உறவுகள், குறிப்பாக கொள்வினை கொடுப்பினை உறவுகள், சாதி, சமுதாயம் ஆகியவற்றின் பின்னணியில் இவ்வாய்வினை அவர் மேற்கொண்டுள்ளார். திருமண உறவுக்குள்ள வரம்புகள், கட்டுப்பாடுகள், விதிகள், இவை மூலம் நிலைநிறுத்தப்படும் பாலினப் பாகுபாடு, சாதிய ஏற்றத்தாழ்வு, ஆதிக்க சாதிகளின் அதிகாரம் முதலியவற்றை குறித்தும் அவர் விரிவாகவும் விளக்கமாகவும், தக்க ஆதாரங்க ளோடும் எழுதியுள்ளார். அவர் கையாண்டுள்ள முறைமையை பின்பற்றி, சாதி, குடும்பம், சமுதாயம் ஆகியவற்றின் பின்னணியில் பாலியல்பை வைத்து ஆராயும் போது, "முறை"யான உறவுகளை உயர்த்திப் பிடிப்பதன் பெயரில், "முறையற்ற"வையாக கருதப்படும் உறவுகள் எவ்வாறு புறந்தள்ளப்படுகின்றன, இல்லாமல் போய் விடுகின்றன, உரிமைகள் இழந்தவையாக ஆக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்ட முடியும். மேலும் "முறை"யானவையாகக் கருதப்படும் உறவுகள் எவ்வாறு, எதன் பொருட்டு நிர்பந்திக்கப்படு கின்றன, எவ்வாறு வன்முறையால் நிலைநிறுத்தப்படுகின்றன, அவற்றை பெண்கள் ஏற்று வாழ்வதற்குத் தோதாக எத்தகைய கட்டுக்கதைகள் உருவாக்கப்படுகின்றன, "முறை"யான வாழ்க்கைக்கு ஒப்புதல் தெரிவித்து வாழும் பெண்களின் அவஸ்தைகள் எவ்வாறு அவர்களை தியாகிகளாக, முன்மாதிரிகளாக உருமாற்றுகின்றன என்பதையும் இத்தகைய ஆய்வுகளைக் கொண்டு நிறுவ முடியும்.

இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, திருமணம், குடும்பம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு பற்றி மாறுபட்ட புரிதல்களை நாம் பெறுவோம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக திருமணம் என்பதன் தவிர்க்க முடியாத நீட்சிதான் குடும்பம், அது திருமணத்திலிருந்து இயற்கையாகவே உருவெடுத்தது என்பன போன்ற கருத்துகளை நாம் கேள்விக்கு உட்படுத்துவோம். அதாவது, குடும்பம் என்பதன் வேறு பரிமாணங்களையும் - சாதி, பாலியல்பு ஆகியவற்றைச் சார்ந்த பரிமாணங்களையும் - இத்தகைய ஆய்வுகள் அம்பலப்படுத்தும்.

இனி இக்கட்டுரையில் நான் மேற்கொண்டு வாதிட விரும்புவதாவது - பெண்களின் வாழ்க்கை, அவர்களுக்கு வாய்க்கும் வேலைகள், தொழில்கள் ஆகியன எவ்வாறு அவர்களது பாலியல்புபாற்பட்டதாகவே அமைகின்றன, பாலியல்பு பற்றிய கட்டுக்கதைகளை, அரசாங்கம், சட்டம், மதம் ஆகியன எவ்வாறு கற்பிக்கின்றன, இவற்றின் கனத்தை பெண்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர், இவை விதிக்கும் அறக் கோட்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்கின்றனர், தங்களது வேட்கைகளை, விருப்புவெறுப்புகளை எவ்வாறு வெளிபடுத்துகின்றனர், அந்நியோன்யம், ஆசை, தங்களுக்கான சமுதாயம் என்பனவற்றை எவ்வாறு உருவாக்கிக் கொள்கின்றனர் ஆகியவை குறித்தும் இக்கட்டுரை ஆராய முற்படும்.

பெண் உழைப்பும் பாலியல்பும்

மார்ச் 2005இல் மஹாராஷ்டிர அரசாங்கம், மாநிலம்தோறும் உள்ள மதுபான கூடங்களில் - பார்களில் - பெண்கள் நடனமாடும் பழக்கத்தைத் தடை செய்தது. இத்தடை மும்பை நகரத்திலும் அமுல்படுத்தப்பட்டது. இதற்கான காரணத்தை விளக்கிய உள்துறை அமைச்சர் கூறியதாவது - "இளைஞர்கள் கெட்டுப் போக இந்த நடனங்கள் காரணமாகவுள்ளன. பார்களில் ஆடப்படும் கேளிக்கை நடனங்களால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்கள், தந்தையர் கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைச் செலவழிப்பதுடன், குற்றங்களில் ஈடுபடவும் துணிகின்றனர்." மாநில அரசாங்கம் அமுல்படுத்திய தடையின் விளைவாக 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பெண்களின் வாழ்க்கைப் பாதிப்பிற்குள்ளாகியது. பார்களில் நடனமாடும் பெண்கள், அவர்கள் செய்த தொழிலின் மூலம் பெற்ற வருமானத்தைக் கொண்டு தங்களது குடும்பத்தை நடத்தி வந்தனர். குழந்தைகளைப் படிக்க வைத்தனர். வயதான பெற்றோரைப் பராமரித்தனர். குடும்பத்தில் யாரேனும் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுக்கு மருத்துவம் பார்த்தனர். இந்த அனைத்து நடவடிக்கைகளும் தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டன.

இத்தடையைச் சில பெண்ணிய அமைப்புகள் எதிர்த்தனர். "பெண்களின் வாழ்வாதாரத்தைத் திருப்பிக் கொடு, வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வரும் ஒரு காலக்கட்டத்தில் பெண்களின் தொழிலுரிமையில் குறுக்கிடாதே" என்ற ரீதியில் கோரிக்கைளை முன்வைத்தனர். இவ்வாறு முழக்கமிட்டவர்கள், பார்களில் நடனமாடும் பெண்களின் வாழ்க்கைப் பற்றி அநேக செய்திகள் அறியப்படாததை உணர்ந்து, அவர்களது வாழ்நிலைமை களைப் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். பாரில் நடனமாடும் பெண்களுக்கான தொழிற்சங்கம் ஒன்று, சில பெண்ணிய அமைப்புகளை அணுகி, இத்தகைய ஆய்வை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதன் பெயரில் அவர்கள் இத்தகைய முயற்சியில் இறங்கினர்.

இந்த ஆய்வில் வெளிபட்ட முக்கியமான தகவல்கள் இவைதான். பெரும்பாலான நடனமாடும் பெண்களின் குடும்பங்களில் அவர்கள் மட்டுமே சம்பாதிப்பவர்கள். அவர்களை யாரும் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முனையவில்லை. இப்பெண்களில் 40%திற்கும் மேலானவர்கள் ஆடிப்பாடி சம்பாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். தங்களது சாதித்தொழிலின் இழிவிலிருந் தும், அது கோரும் பாலியல் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபடுவதற் காகவே தமது ஊர்களை விட்டு மும்பைக்கு வேலை தேடி வந்தவர்கள். தேவைக்கு ஏற்றார் போல, இவர்கள் ஒரு மதுபான கடையிலிருந்து மற்றொரு மதுபான அரங்கத்திற்குப் பணி மாறிச் செல்வது வழக்கம். அதாவது, அவர்கள் பார்த்த வேலையில் ஏதோவொரு சௌகரியம் அவர்களுக்கு வாய்த்திருந்தது - வேலையை மாற்றி கொள்ள, பிடிக்காத இடத்திலிருந்து நீங்கி வேறொரு இடத்துக்குச் செல்ல .... ஆணை மகிழ்விப்பதற்காக, ஆண் நோக்கின் இச்சைகளுக்கு ஏற்ப இயங்க வேண்டிய சூழலில், அதையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல, தங்களது மதிப்பைக் கூட்டி சம்பாதிக்கும் ஆற்றல் அவர்களிடம் இருந்ததும் ஆய்வினூடாக வெளிப்பட்டது. மதுபானக் கடைகளில் நடனமாட தடை விதிக்கப்பட்டதால் தமது வாழ்வாதாரத்தை இழக்க நேர்ந்ததை, தாம் நிற்கதிக்குத் தள்ளப்பட்டுள்ளதைப் பல பெண்கள் சுட்டிக்காட்டினர்.

பாரில் நடனமாடுவதற்கு எதிரான தடையைச் சில பெண்ணிய அமைப்புகள் ஆதரிக்கவும் செய்தன. பார் உரிமையாளர்களும் பார் நடனங்களைக் காண வருபவர்களும் நடனமாடும் பெண்களின் உழைப்பைச் சுரண்டுவதாக இவர்கள் குற்றஞ்சாட்டினர். பார்களில் பணி புரிய வரும் பெண்கள் தாங்களாகவேதான் இத்தகைய வேலைத் தேர்வை மேற்கொண்டுள்ளனர் என்பதை இவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. தங்களுக்கு வாய்த்திருந்த சூழ்நிலைமைகளை இந்த பெண்கள் எவ்வாறு திறம்பட எதிர்கொள்கின்றனர், அச்சூழல் விடுக்கும் சவால்களை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பன போன்றவற்றைக் குறித்து விவாதிக்க, யோசிக்க இந்த பெண்ணிய அமைப்புகள் தயாராக இல்லை.

மற்றொரு சாரார், வேறு விதமான ஆட்சேபணைகளை தெரிவித்தனர். பார்களில் நடனமாடுவோரின் பிரச்சனை வேலை உரிமை, பாலியல்பு,அப்பாலியல்பை சார்ந்த தொழில் ஆகியனவற்றுடன் மாத்திரம் தொடர்புடையதன்று, அது சாதி பிரச்சனையும் கூட. எனவே, இப்பெண்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பது என்பது அவர்களை இழிவான சாதித் தொழிலில் நீடிக்கச் செய்வதுக்கு ஒப்பாகும் என்றும் வாதிட்டனர். இவ்வாதங்களும் எதிர்வாதங்களும் சாதி, பாலியல், உழைப்பு ஆகியன ஒன்றை மற்றொன்று பிண்ணிப் பிணைந்திருப்பதை உணர்த்தின.

"பார் நடனப் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள் அல்லர், விபச்சாரத்தில் ஈடுபடுகிறவர்கள் அல்லர்!" என்று அப்பெண்கள் கோபத்தோடு வாதிட்டாலும் இத்தடை உத்தரவு அவர்களைப் பாலியல் தொழில் செய்ய நிர்பந்திக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினர். பிரச்சனை என்னவெனில், பாலியல் தொழில் என்பதைப் பெண்களின் மீதான வன்முறை என்கிற ரீதியில் மட்டுமே நாம் புரிந்து வைத்திருப்பதுதான். தமது பாலியல்பை வாழ்வாதாரமாகக் கொண்டு செயல்படுவோரை நாம் விபச்சாரிகள் என்று சொல்வது வழக்கம். தமது உடலை விற்று வயிறு வளர்ப்போர் என்று இவர்களை நாம் சாடுவதும் உண்டு. ஆனால், பாலியல்பைப் பரிமாற்றுப் பண்டமாக பாவித்து அதற்கான பொருளாதார மதிப்பை பெறுவோர், உண்மையில் பலதரப்பட்டவர்கள் - பார் நடனக் கலைஞர்கள், விளம்பர மாடலிங்க் செய்வோர், சினிமாவில் நடிப்போர் என்று இந்தப் பட்டியல் விரியும்.

பாலியல் தொழில் குறித்து பெண்ணியவாதிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இனி ஆராய்வோம். பல சமயங்களில் பாலியல் தொழில் என்பதன் அனைத்து பரிமாணங்களையும் நாம் கருத்தில் கொள்வதில்லை. பாலியல் தொழிலாளிகளின் வாழ்வனுபவங்களை யும் அவர்கள், தாங்கள் செய்யும் தொழிலைப் பற்றி கொண்டுள்ள பார்வையையும் இன்னும் நாம் சரிவர புரிந்துணரவில்லை. ராஜேஸ்வரி சுந்தர்ராஜன் என்ற ஆராய்ச்சியாளர், பெண்ணிய வாதிகளின் நிலைபாடுகளில் உள்ள சிக்கல்களைப் பின்வருமாறு விளக்குகிறார். பெண்ணியலாளர்கள் தங்களை இரட்சகர்களாகவும் பாலியல் தொழிலாளிகளை தமது கருணையை எதிர்பார்த்து வாழும் பாதிக்கப்பட்டவர்களாகவும் அடையாளப்படுத்துவது பிரச்சனைக் குரியதாகும். இரண்டாவதாக, பாலியல் தொழில்புரிவோரின் மன ஓட்டம், தேர்வு செய்யும் ஆற்றல் என்னவாக உள்ளன, அவர்களால் எந்தளவுக்குச் சுயாதீனமாக செயல்பட முடிகிறது என்பன தொடர்பாகப் பெண்ணியலாளர் எழுப்பும் கேள்விகளுக்கான பதில்களிலும் போதிய தெளிவு இல்லை என்பது மற்றொரு பிரச்சனையாகும். மூன்றாவதாக, பெண் உழைப்பு, பாலியல்பு, இவை இரண்டும் இயங்கும் பொது வெளி ஆகியவற்றுக் கிடையிலான உறவுகள் குறித்து பெண்ணியவாதிகள் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. இவ்விஷயங்களிலும் நாம் இன்னும் வேண்டிய கருத்துத் தெளிவு பெறவில்லை என்பதுதான் உண்மை.

ராஜேஸ்வரி சுந்தர்ராஜன் விபச்சாரம் குறித்து மூன்று வேறுபட்ட பார்வைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். முதல்சாரார், விபச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப் பட வேண்டும் என்பர். இவர்கள் பாலுறவு பற்றிய விவாதங்களில் பங்கேற்பதில்லை. திருமண உறவைக் கடப்பதன் தேவையையும் கடந்து செல்வதன் நியாயத்தையும் பெண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலுறவு கொள்வதும் குறித்தும் இவர்கள் விவாதிப்பதில்லை. இவ்விஷயங்களில் மௌனம் காப்பவர்களாகவே உள்ளனர்.

இரண்டாம்சாரார், பாலியல் தொழில் என்பதை விபச்சாரமாக, குற்றமாகப் பார்ப்பதில்லை. அது தொழிலாக இருப்பது அவர்களுக்கு பிரச்சனையில்லை. பாலியல் தொழிலுக்கும் திருமண உறவுக்குமிடையே அப்படி என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது. பெரும்பாலான பெண்கள், தமது வயிற்றுப்பாட்டுக்காகவே திருமணஞ் செய்து கொள்கின்றனர். பாலியல் தொழில் புரிவோரும் இதைத்தான் செய்கின்றனர் என்பது இவர்களது தர்க்கம். திருமணம் ஏன் மரியாதைக்குரியதாய் உள்ளது, பாலியல் தொழில் கேடுகெட்டதாய் அறியப்படுகிறது என்பன போன்ற கேள்விகளை இவர்கள் எழுப்புவது வழக்கம்.

மூன்றாம்சாரார், விபச்சாரம் என்பது சாதியை அடிப்படையாகக் கொண்ட சுரண்டல்முறை. பார்ப்பனீய இந்து மதத்தின் மூலம் இது நியாயப்படுத்தப்படுகிறது. தேவதாசி, ஜோகினி, மாத்தம்மா என்ற பெயர்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் அடிமைகளாக ஆக்கப்படுகின்றனர் என்று இவர்கள் வாதிடுகின்றனர். இந்த மூன்றாம் சாரார், விபச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது தொழிலாகப் பாவிக்கப்பட வேண்டும் என்ற வாதங்களுக்குள் அதிகம் போவதில்லை. மாறாக, பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களின் கதைகளினூடாகவும் வரலாற்றினூடாகவும் பயணித்து, அவர்களது அனுபவங்களைப் பொதுவில் வைத்து பேச முற்படு பவர்களாக உள்ளனர். முந்தைய இருசாராரது விவாதங்களைப் போல் இவர்களது கருத்துகள் அதிகம் விவாதிக்கப் படுவதில்லை.

பாலியல்பு, பெண்களின் உழைப்பு ஆகியனவற்றுக்கு நாம் தரும் மதிப்பு, சன்மானம், அவற்றை நாம் புரிந்து கொள்ளும் விதம் ஆகியன, சம்பந்தப்பட்டவர்களின் சாதி, வர்க்க நிலைகளால் தீர்மானிக்கப்படுவதைப் பார்களில் நடனமாடும் பெண்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பாரில் நடனமாடும் பெண்ணாக வருகிறார். அவர் தனது பாலியல்பைப் பயன்படுத்தி சம்பாதிப்பதை அரசால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதை சமுதாயமும் ஆமோதிக்கிறது. ஆனால்,அவளைப் போல, ஆனால் சினிமாவிலல்லாமல், நிஜ வாழ்வில், நாங்கள் ஆடும் போது, அதுவும் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடும்போது அதை யாராலும் ஏற்றுகொள்ள முடிவதில்லை என்ற கேள்வியைப் பார்களில் ஆடும் பெண்கள் எழுப்பியுள்ளனர். ஆக, பாலியல் சார்ந்த பெண்களின் உடல்கள் பொதுவில் இயங்குவது என்பது பிரச்சனையல்ல. இவ்வாறு பொதுவில் இயங்கும் உடல்களின் சாதி, நிறம், சமுதாய அந்தஸ்து, மணத் தகுதி ஆகியவற்றைக் கொண்டே அவை பிரச்சனைக்குரிய உடல்களா, அல்லது ரசனைக்கும் போற்றுதலுக்கும் உரிய உடல்களா என்பது தீர்மானிக்கப்படு கின்றன.

இங்கு வேறொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மணவாழ்வில் துலங்கும் பாலியல்பு, பாலுறவு ஆகியனவற்றுக்குள்ள மதிப்பைக் கொண்டுதான் மணவாழ்வுக்குள் வராதவர்களின் பாலியல்புக்கான மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. பார்களில் நடனமாடும் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ஒரு சோசலிச பெண்ணியலாளர் கூறியதாவது - "பார் டான்ஸ் செய்யும் பெண்களின் ஆட்டத்தில் மயங்கி, அதற்காக பணம் செலவழிக்கும் ஆண்கள் தங்கள் மனைவிகளுக்காக எதையும் செய்வதில்லை." அதாவது, குடும்பத்தைப் பேணுதல், மனைவியின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பன போன்ற செயல்பாடுகளின் பெயரில், ஆயிரமாயிரம் ஏழைப் பெண்களின் தொழில் உரிமை பறிக்கப்படுவது நியாயமானதே என்று இவர் சொல்லாமல் சொல்கிறார்.

ஆண்களின் நடவடிக்கைகள் அவர்களைச் சார்ந்து வாழும் பெண்களைப் பாதிக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் அத்தகைய பாதிப்பு மட்டுமே இங்கு முக்கியமானதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதுவும், இல்லற பெண்ணைக் குறித்த கவலையாகவே பரிணமிக்கிறதே அன்றி, ஆண்களைக் கட்டுப்படுத்தும் செயல்பாடாக அல்ல. அரசு, நடுத்தர வர்க்கத்தினர், ஆதிக்க சாதியினர் ஆகியோரின் அக்கறைக்குப் பாத்திரமான இந்த ஆண் மையப்பட்ட இல்லறமானது, இல்லறத்துக்கு உட்படாத வர்களை மனிதர்களாகவே கருதுவதில்லை. மேலும், அவர்களை அடக்கி ஆள, இல்லறம் சார்ந்த சொல்லாடல்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு வர்க்கமும் சாதியும் அரசும் கை கோர்த்துக் கொண்டு இல்லற வாழ்வு வாழாத பெண்களின் மீது அதிகாரம் செலுத்துகின்றன. கூடவே, எது தொழில், எது தொழில் அல்ல, எது சேவை, எது மரபு, எது கலை, எது ரசனை என்ற ரீதியில் பாலியல்பு, பாலுறவுகள் குறித்த வாதங்களை இவை தரம் பிரிக்கின்றன.

தாம்பத்தியம், காதல், உரிமை, இன்பம்

பாலியல் தொழில் குறித்த பெண்ணிய புரிதல்கள் ஒருபுறமிருக்க, அந்நியோன்யம், பாலியல்பு, வன்முறை ஆகியன ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்துள்ளதன் நுணுக்கங்களும் பெண்ணியவாதிகளின் கவலையார்ந்த கவனத்தை ஈர்த்துள்ளன. குடும்பங்களில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள பெண்களைக் குறித்த தனது கட்டுரையில் வ. கீதா பின்வருமாறு குறிப்பிடுகிறார். நெருக்கமான உறவுகளில் தொழிற்படும் வன்முறை குறித்து கூட்டுக் கலந்தாய்வுகளைப் பெண்ணியவாதிகள் மேற்கொண்டுள்ளனர். வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட, பழகிவிட்ட பெண்கள் வன்முறையார்ந்த உறவுகளிலிருந்து விடுபட, அத்தகைய வன்முறையை எதிர்கொள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்கள் பொருட்டுக் கூட்டுச் செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர். என்றாலும், நெருக்கம், காதல், அந்நியோன்யம் ஆகியனவற்றைச் சார்ந்த அனுபவங்களைக் குறித்த தமது புரிதல்களைப் பொதுவில் வைத்துப் பேச அவர்கள் முற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், குறிப்பிட்ட பிரச்சனைக்குத் தீர்வு காணுதல், அதை அரசியல்படுத்துதல், இவற்றைச் செய்து முடிக்க சட்டத்தை நாடுதல் என்றரீதியில்தான் பெண்ணியவாதிகள் சிந்தித்துச் செயல்பட்டு வந்துள்ளனர்.

இத்தனைக்கும், பெண்ணிய வட்டாரங்களில் காதல், காமம், நெருக்கம் குறித்து நாம் பேசாமல் இல்லை என்பதையும் கீதா சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு நமக்கான இடத்தில், நம்மால் பேசப்பட்டவற்றைப் பொது உரையாடலாக நாம் வளர்த்திருந்தால், நெருக்கம், அந்நியோன்யம், குறிப்பாக பெண்ணியமும் பெண்ணிய செயல்பாடுகளும் சாதித்துள்ள தோழமை, சிநேக இன்பம் ஆகியவற்றைப் பற்றிய பார்வையைப் பொது புத்தியில் பதியச் செய்திருக்கலாம். இத்தகைய விஷயங்களைப் பற்றிய புதிய சொல்லாடல்களை உருவாக்கியிருக்கலாம். நாம் இவ்வாறு செய்யாததால், ஆண்கள், பெண்கள் மீது செலுத்தும் வன்முறையி னூடாக வெளிப்படும் காதல், ஆசை, வேட்கை ஆகியனவற்றுக்கு, இல்லாத நியாயங்கள் சொல்லப்படுகின்றன. "அடிக்கிற கைதான் அணைக்கும், அடிச்சாலும் உதைச்சாலும் அவன் புருஷன்தான், வலி இல்லாத காதல் கிடையாது, இன்னிக்கு அடிப்பேன் நாளைக்கு அணைப்பேன், உரிமை இருக்கு அடிக்கிறாரு, அக்கறை உள்ள இடத்துலதான் ஆக்கிரோஷமும்" இருக்கும் என்பன போன்ற வசனங்கள் ஆண்களின் வன்முறையார்ந்த செயல்பாடுகளுக்கு நியாயம் சேர்க்கின்றன. மேலும், பெண்ணிய சமூகவியலாளர் கல்பனா கண்ணபிரான் குறிப்பிடுவது போல, ஆண்களின் இந்த நடத்தைமுறைச் சரியானதே, நியாயமானதே என்பதை அரசு, சமயம், சாதி , பொது அறம் ஆகிய அனைத்துமே தத்தம் அளவில், தமக்கேயுரிய வகையில் பொதுவில் வைத்துத் தொடர்ந்து உறுதி செய்கின்றன.

இங்கு இன்னொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது. நெருக்கமான குடும்ப உறவுகளில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை இன்று வெகுசிலர் மறுப்பர். ஆனால் திருமண உறவு குறித்து வேறு விதமான கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டும். ஆணும் பெண்ணும் பாலுறவு கொண்டு வாழும் திருமண வாழ்க்கையில், அவர்களால் சுயேச்சையாக, சுதந்திரமாக தமது பாலியல் விருப்பங்களை, காதலை, தேவையை வெளிபடுத்த முடிகிறதா? திருமணம் என்று வரும் போது, தமது ஆசையை, பாலியல் தேவையை எவ்வாறு, எந்த அளவுக்கு மக்கள் வெளிப்படுத்துகின்றனர்? அவர்களுடைய விருப்பங்கள் குறுகிய, விதிமுறை சார்ந்த வலியுறுத்தல்களுக்குள் முடக்கப்படுகின்றனவா? இக்கேள்விகளில் நாம் இன்னும் தெளிவு பெறவில்லை. இவை குறித்த ஆய்வுகளைப் போதுமான அளவுக்கு மேற்கொள்ளவில்லை.

நம் நாட்டில் இளம் ஆண்களும் பெண்களும் ஓடிப்போய் திருமணஞ் செய்து கொள்ளும் போது கொல்லப்படுகின்றனர். சாதி, மதம் என்பவற்றின் பெருமையைக் காப்பாற்ற அவர்கள் கட்டாயத் திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கபடுகின்றனர். பொருந்தா மணம் செய்து கொண்டதால் மூர்க்கமாக கொலை செய்யப்படு கின்றனர். இத்தகைய கொலைகள் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படுகின்றன. அப்படியானால், இங்கு எதனை முன்னிட்டு, யாருடைய கௌரவம் பங்கப்படுகின்றது, அல்லது காப்பாற்றப்படுகின்றது? கௌரவம் என்பது ஒரு புறமிருக்க, நமது சமுதாயத்தில், இளம் பெண்கள் வலுக்கட்டாயமாக மணஞ்செய்து கொடுக்கப்படுவதைக் குறித்துச் சமுதாயம் சாதிக்கும் நாசகார மௌனத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? திருமணம் என்பது குறித்து நமக்கு இத்தனைக் கேள்விகள் இருக்க, ஒரு பால் உறவாளர்கள் தாமும் திருமணஞ் செய்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் போது அதை நாம் எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம்? அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைக்கான கோரிக்கையாக பார்க்கப் போகிறோமா? அல்லது அவர்களுமே ஏதோ ஒரு முறைமைக்குள் வர விரும்புவதன் அறிகுறியாக இதை கொள்ளப் போகிறோமா?

நமது கேள்விகளும் மௌனங்களும் எப்படியானதாக இருந்தாலும் திருமணம் பற்றி அரசு கொண்டுள்ள கருத்தையும் நாம் அறிய வேண்டியவராகிறோம். 2006இல் வெளியிடப்பட்ட தனது 217 ஆம் அறிக்கையில், இந்திய சட்ட ஆணையம் ஏற்கனவே 1978இல் செய்த பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியது. பொதுவாக, திருமண முறிவு அல்லது விவாகரத்து என்று வரும்போது, மணமுறிவுக்கு யார் காரணம், அவரது எந்த செய்கை, முறிவுக்கு வழிவகுத்தது என்பதை இனங்கண்ட பிறகே, தீர்ப்பு வழங்கப் படுவது வழக்கம். அதாவது, ஏதோவொரு தவறு நிகழ்ந்து விட்டதால்தான் மணவாழ்க்கை முறிந்து விட்டது என்ற புரிதலின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்படும். ஆனால், 1978இல் செய்யப்பட்ட பரிந்துரையின்படி, மணவாழ்க்கையை இனி எந்த வகையிலும் தொடர முடியாது, முறிந்து போனது முறிந்து போனதுதான், அதை சரி செய்யவே முடியாது என்று சம்பந்தப் பட்டவர்கள் எண்ணினால், அதுவே மணமுறிவுக்கான நியாயமான காரணமாகக் கொள்ளப்படலாம்.

இந்தக் கருத்தை ஆதரித்து ஏற்கனவே பல பெண்கள் குழுக்கள் குரல் கொடுத்துள்ளன. சரி செய்யவே முடியாதபடிக்குத் திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டுவிட்டது என்பதன் அடிப்படையில் விவாகரத்துக் கோரலாம்; இத்தகைய காரணத்தின் பெயரில் விவாகரத்து வழங்கப்பட வேண்டும் என்று இக்குழுக்கள் கூறிவருகின்றன. பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருப்பதாலும் புகுந்த வீட்டை விட்டால் வேறு புகலிடம் இல்லை என்ற காரணத்தி னாலும், புகுந்த வீட்டில் தொடர்ந்து வாழ தனக்கு உரிமையுள்ளது என்று சிலர் எண்ணுவதாலும் சாரமற்ற, சீர்குலைந்த வாழ்க்கையில் பல பெண்கள் தொடர்கின்றனர். இவர்களுக்கு 1978இல் பரிந்துரைக் கப்பட்ட விஷயம் பயனுள்ளதாக இருக்கும் என்பது கண்கூடு.

ஆனால், சில பெண்கள் குழுக்கள் மணமுறிவு குறித்த இந்த புதிய பார்வைக்கு ஆட்சேபணை தெரிவித்து வருகின்றனர். மனைவி, குழந்தைகள் ஆகியோரின் சொத்துரிமையையும் திருமணத்துக்குப் பிறகு வாழும் வீட்டில் தொடர்ந்து வாழ மனைவிக்குரிய உரிமையை யும் பத்திரப்படுத்திக் கொடுக்கக் கூடிய சட்ட மாற்றங்களைப் புதிய மணமுறிவு சட்ட திருத்தத்துடன் இணைக்க இவர்கள் விரும்பு கின்றனர். மேலும், திருமண வாழ்க்கை, குடும்பம் ஆகியவற்றைக் கட்டிக் காக்க மனைவி செலுத்தும் உழைப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர். இந்த விவாதங்களில் துலங்கும் உண்மை இதுதான் - பெண்ணைப் பொறுத்த வரை, திருமணம் செய்து கொள்வதன் மூலமே அவள் தனக்கான பொருளாதார பாதுகாப்பைப் பெறுகிறாள். அதாவது, அவளுக்கு மணம் முடித்து வைப்பவர்கள் அவளை "ஒருத்தன் கையில பிடித்துக் கொடுப்பதன்" மூலம் இத்தகைய பாதுகாப்பை ஏற்படுத்தித் தர முடியும் என்று எண்ணுகின்றனர். திருமணம் என்ற பந்தம் அடிப்படையில் அவளைச் சரிநிகர் சமானமாக வாழ அனுமதிப்பதில்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆணைச் சார்ந்து, அவனுடைய பொருளாதார அதிகாரத்தை அண்டி வாழ வேண்டிய சூழலில், பெண்ணுடைய பாலியல்பு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

இன்றைக்குத் திருமணஉறவு என்பது ஆழமான மாற்றத்துக்கு ஆளாகியிருக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. சமுதாயத்தின் ஏனைய பிரிவினரும் தம்மை உயர்த்திக் கொள்ள விழையும் இந்தக் காலகட்டத்தில், அனைவருடைய ஆசை அபிலாஷைகள் கூரையை எட்டும் தருணத்தில், "நுகர்தல்" என்ற செயல்பாடு மட்டுமே அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக உள்ள உலகில், புதுவிதமான "இலட்சிய" பெண் முன்மாதிரியாக நிறுத்தப் படுகிறாள். அவள் படித்தவள். முற்போக்கு சிந்தனையுடையவள். ஆனால், காதலைப் புறக்கணிக்கக்கூடியவள் அல்ல. இன்னும் சொல்லப் போனாள், காதலையும் இச்சையையும் பகிரங்கமாக வெளிபடுத்தக் கூடியவளாக அவள் இருக்கிறாள். என்றாலும் அவள் அத்து மீறி நடப்பவள் அல்ல. அவள், மணவாழ்க்கையின் வரம்புகளை, நியாயத்தை ஏற்பவள். அதாவது, அவளது காதலானது மணவாழ்க்கைக்கான காதல்தான். ஆணை நோக்கி செலுத்தப்படும் "முறை"யான காதல்தான். அவனை மகிழ்விக்கக்கூடிய, அவனுக்கான கனவுக்காதல்தான். ஏன், தொலைக்காட்சிகளில் அரங்கேறும் டாக்-ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்பன போன்ற நிகழ்ச்சிகளும் கூட மணவாழ்வில் துலங்கும் காதலையும் தாம்பத்தியத்தையும் கொண்டாடுவதைக் காணலாம்.

பெண்களைக் காதலிகளாகவும் மனைவிகளாகவும் சிலாகித்துக் கொண்டாடும் இந்தப் போக்கானது, அன்றாட வாழ்வு, குடும்பம் ஆகியனவற்றில் தொழிற்படும் அசதியையும் சலிப்பையும் நயமான வகையில் மூடி மறைத்து, மனைமாட்சியை, அது காட்டும் "முறையான" காதலை ரசனைக்குரியவையாக காட்டுகின்றன.

ஆண்-பெண் பாலுறவிற்கான நியாயம் இவ்வாறு கட்டமைக்கப் படும் சூழலில், பெண்களின் ஆசை, விருப்பம் என்பன குறித்து வேறுவகைகளில் பேச முடியாததோடு, அவர்கள் திருமண உறவுக்குள் பாலியல்ரீதியாகவும் பிற வகையிலும் தொடர்ந்து ஒடுக்கப்படும், அவதியுறும் அனுபவங்களைச் சொல்லும் கதைகளி லிருந்து மட்டுமே அவர்களது சொல்லப்படாத வேட்கைகளை நாம் உய்த்துணர வேண்டியுள்ளது.

அன்றாட தாம்பத்தியம் ஏற்படுத்தும் சலிப்பு, எரிச்சல் ஆகியவற்றை வித்தியாசமாக எதிர்கொண்டுள்ள இரு முக்கிய நூல்களைக் குறித்து இங்குப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மலையாளக் கவிஞர் கமலா தாசின் சுயசரிதையையும் கேரளாவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலாவின் சுயசரிதையை யும் ஒப்பிட்டுப் பெண்ணிய வரலாற்றாசிரியர் ஜே. தேவிகா எழுதியுள்ளதை இங்கு கவனப்படுத்த விரும்புகிறேன். தேவிகா கூறுவதாவது; நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கமலா தாஸ், உடல்சார் அனுபவங்களை, குறிப்பாக உடலை வாட்டும் ஆசை, வேட்கை, காதல், உடலின் அழகு ஆகியவற்றைக் கவித்துவமான, கற்பனை யார்ந்த வகையில் தனது எழுத்தில் வெளிபடுத்தியுள்ளார். அவ்வாறு செய்ததன் மூலம் அழகியலை முன்நிறுத்தி அழகற்ற, சுவையற்ற தாம்பத்தியத்தைச் சவாலுக்கழைத்துள்ளார், வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார்.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நளினி ஜமீலாவோ அவர் சார்ந்திருக்கும் பாலியல் தொழிலை "வெறும் வேலை"யாக, பிற தொழில்களைப் போல, அன்றாடம் பார்க்க வேண்டிய தொழில் என்ற ரீதியில் விவரித்துள்ளார். பாலியல் தொழிலின் "அன்றாட"த் தன்மையைச் சர்வ சாதாரணமாக விவரிப்பதன் மூலம், அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வக்கிரங்களையும் மாயைகளையும் சாரமற்றவையாக ஆக்கிவிடுகிறார். அதே சமயம் பாலியல் தொழிலுக்கு நேர்எதிரானதாக, அதன் எதிர் நிலையாக நிறுத்தப்படும் இல்லறத்துக்குரிய ஒளிவட்டத்தையும் மங்கச் செய்து விடுகிறார். இல்லத்தரசிக்குரியதாக போற்றப்படும் பெருமிதத்தையும் விபச்சாரிக்கு என்று ஒதுக்கப்படும் வசைகளையும் ஒரு சேர புறந்தள்ளிவிடுகிறார். இல்லறம் உன்னதமானது, விபச்சாரம் பாவப்பட்டது என்ற வாதத்தைத் தவிடுபொடியாக்கி விடுகிறார். மேலும், பாலியல் தொழிலாளி என்ற தனது அடையாளத்தை மீள்வரையறை செய்கிறார். உடல், மன வேதனைகளை ஆற்று படுத்தக்கூடிய தனது ஆற்றலை, திறன்களை முன்நிறுத்துகிறார். பாலியல் தொழில் அனுபவங்களினூடாக தான் பெற்றுள்ள பிரத்யேக அறிவைச் சிலாகிக்கிறார். ஆணாதிக்க, பெண்-விரோத கருத்தியலும் பார்வையும் மேலோங்கியிருக்கும் சமுதாயத்தில், சுயாதீனமான அடையாளம், சுதந்திரமான காதல், ஆசை ஆகியவற்றை நோக்கிய தேடல்களாக இந்த இரு பெண்களின் பதிவுகளையும் கொள்ளலாம்.

தாம்பத்தியக் காதலைக் கொண்டாடும் இன்றைய வரலாற்றுக் சூழலில், மணவுறவை உள்ளடக்கிய ஆதிக்க சமுதாய உறவுகளிலிருந்து பெண்ணின் பாலியல்பை மீட்டெடுத்து, மானுட விடுதலைக்கான ஆற்றலாக அதை மடைமாற்றம் செய்த பெண்ணிய முயற்சிகளை நினைவுகூர்வது அவசியம். ஆரம்பகால சோசலிஸ்டுகள், பெண்ணிய இயக்கங்கள் சாதிக்க நினைத்த இந்த விடுதலைப் பற்றிய கூட்டுநினைவு அற்றுப் போய்விட்ட சூழலில் இதை நாம் செய்ய வேண்டியுள்ளது.

ஆரம்பகால சோசலிச இயக்கங்கள், குறிப்பாக 1820களிலும் அதற்குப் பிறகும் இங்கிலாந்தில் செயல்பட்ட இயக்கங்கள், முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடிய அதே வேளையில், முதலாளித்துவ சமுதாயத்தில் ஆண்-பெண் உறவு எத்தகையதாக உள்ளது, சோசலிச சமுதாயத்தில் அது எவ்வாறு மாறி அமைய வேண்டும் என்பன குறித்தும் பேசின. இவற்றைச் சாதிக்க வல்ல போராட்டங்களைப் பற்றிச் சிந்தித்தன. பெண் விடுதலை, குறிப்பாக பாலுறவில் பெண் பேண வேண்டிய சுயாதீனம், வர்க்கப் போராட்டத்துக்கும் பாலியல் விடுதலைக்கும் இடையிலான தொடர்புகள் என்பன போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அக்கறை செலுத்தின. 20ஆம் நூற்றாண்டில் சோசலிச கருத்துகளை ஏற்று செயல்பட்ட மார்க்கரெட் சாங்கர், எம்மா கோல்டுமான் ஆகியோர், பெண்கள், தமது கருவுரும் ஆற்றலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் அவசியத்தைக் குறித்துப் பேசினார்கள். கர்ப்ப ஆட்சி என்பதன் நுணுக்கங்களை விளக்கினர், பரப்புரை செய்தனர்.

சோசலிச, பெண்ணிய கருத்துகளை முதன்படுத்திய சுய-மரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள், காதல், அழகு, கற்பு, தாய்மை ஆகியவற்றை விமர்சனம் செய்தனர். ஆண்மையைச் சாடினர். தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களின் மண வயதை உயர்த்திய சட்டம் ஆகியன குறித்து நடந்த விவாதங்களில் முழுமூச்சுடன் பங்கேற்றுப் பெண்களின் காதல் உரிமை, பாலுறவில் அவர்களுக்குரிய இடம், அவ்வுறவில் அவர்கள் பேண விரும்பும் மாண்பு ஆகியன குறித்து விரிவாகப் பேசினர். பெரியாரும் இவை குறித்து நிறைய எழுதினார், பேசினார். காதல், தாம்பத்தியம், மணமுறிவு ஆகியன குறித்து வித்தியாசமான புரட்சிகர கருத்துகளை வெளியிட்டார்.

ஆனால் இத்தகைய மாறுபட்ட, புரட்சிகரமான மரபுகளைத் தாங்கிய வரலாறுகள் நமக்கு வாய்த்திருந்தாலும் பிற்போக்கான, ஆணாதிக்க அரசியலும் அறவியலும்தான் நமக்கு இன்று எஞ்சி இருக்கின்றன. "பையர்" திரைப்படம் வெளிவந்த போது அது "நமது பண்பாட்டு"க்கு பொருந்தாத, இன்னும் சொல்லப் போனால் நமது பண்பாட்டுக்கு இழுக்கைக் கற்பிக்கக்கூடிய, லெஸ்பியன் உறவைப் பிரதானப்படுத்துகிறது என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர். அந்த படம் திரையிடப்படக்கூடாது என்று கோஷமிட்டு ரகளை செய்தனர். தமிழ்நாட்டில் நடிகை குஷ்பூ தற்கால தமிழ் சமுதாயத்தில், திருமணத்துக்கு முன்னமே பெண்கள் பாலுறவு கொள்கின்றனர் என்று கூறிய போது, அவர் தமிழ்க் கற்பைக் களங்கப்படுத்தி விட்டதாகக் கூறி களம் இறங்கியவர்கள், அவருக்கு எதிராக பல வழக்குகளைத் தொடுத்தனர். இப்படி எத்தனையோ கதைகளைச் சொல்லலாம். அறம், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் உரிமை மீறல்கள், வலதுசாரி அறங்காவலர்களின் தலைமையின் கீழ்தான் அரங்கேறுகின்றன. கலை, புத்தகங்கள், நடத்தை நெறிகள் ஆகிய அனைத்தையும் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவே இவர்கள் விரும்புகின்றனர்.

பாலியல் உரிமைகள், அரசியல் சட்டம், பொது அறம்

இப்பகுதி, நமது விவாதத்தின் கடைசிப் பகுதி. 2009 ஜூலை 2ஆம் தேதி தலைமை நீதிபதிகள் ஏ. பி. ஷா, முரளீதர் ஆகியோர் இ.பி.கோ 377 சட்டப்பிரிவு தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. இவ்வழக்கு (எண் 7455/ 2001) நாஸ் ஃபௌண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் அரசின் மீது தொடரப்பட்டதாகும். இ.பி.கோ 377 பிரிவின்படி, ஒருபால் உறவு, குறிப்பாக ஆணும் ஆணும் கொள்ளும் பாலுறவு என்பது தண்டிக்கத்தக்க கிரிமினல் குற்றமாகும். சம்பந்தப்பட்ட நபர்கள் வயது வந்தவர்களாக இருப்பினும் அவர்கள் சுய விருப்பத்தின் பெயரில் இத்தகைய உறவில் ஈடுபட்டாலும் இந்த சட்டப் பிரிவின்படி அது குற்றமாகும். இந்த சட்டப்பிரிவை நீக்கக் கோரி 2001 முதற்கொண்டே பலர் கோரினர். இந்த கோரிக்கை எழும்பியதற்கான உடனடி வரலாறு இதுதான். 2001 இல், உத்தர பிரசேத்தில் எய்ட்ஸ் கட்டுபாடு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வக் குழுவினர் சிலர், இ.பி.கோ 377இன் கீழ்க் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொது வெளியில் ஆணுறைகளை விநியோகம் செய்து கொண்டிருந்த போது இது நடந்தது. அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் "இயற்கைக்கு மாறான" உறவுகளை ஊக்குவிக்கும்படியான செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ் சாட்டி கைது செய்தனர். இந்தியாவிலிருந்து ஒருபாலுறவை தாம் ஒழிக்கப் போவதாகவும் அறிவித்தனர். இந்த கைதைத் தொடர்ந்து தான் மேற்கண்ட வழக்கு தொடரப்பட்டது. அது தில்லி உயர் நீதி மன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது, மீண்டும் தில்லி உயர் நீதி மன்றத்துக்கே திரும்ப வந்தது.

முடிவில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஷாவும் முரளிதரனும் ஒருபாலுறவு கொள்ள விழையும் வயதுக்கு வந்தவர்கள், பரஸ்பர ஒப்புதலுடன் தமக்கான அந்தரங்க வெளியில் அத்தகைய உறவில் ஈடுபட்டால் அது குற்றமாகாது என்று தீர்ப்புரைத்தனர். இந்த தீர்ப்பு இ.பி.கோ 377 பிரிவை நீக்கவில்லை என்றாலும், "இயற்கைக்கு மாறானதாக" அந்த பிரிவு அடையாளப்படுத்திய பாலுறவை குற்றமற்றதாக்கியது. இந்த வழக்கு தொடரப்பட்ட காலக்கட்டத்தில் தான், ஒரு பாலுறவில் உள்ளவர்கள் எப்படி வாழ்கின்றனர், அவர்கள் ஒளிந்தும் மறைந்தும் வாழ்வது ஏன், அவர்களுக்கு எதிராக புரியப்படும் வன்முறைகள் யாவை என்பன போன்ற விஷயங்கள் பொதுவில் வைத்துப் பேசப்பட்டன.

வயதுக்கு வந்தவர்கள் பரஸ்பர ஒப்புதலுடன் மேற்கொள்ளும் பாலுறவை மையமிட்டு அமைந்த இந்த தீர்ப்பு, அனைவரும் சமத்துவமாகவும் மாண்புடனும் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் வாழ, தமக்கான அந்தரங்க வாழ்க்கையை பின்பற்ற உரிமை உடையவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்தியது. அதே சமயம் எல்லோருக்கும் பொதுவான, நாம் அனைவரும் பேணத்தக்க பாலியல் அறம் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த உள்துறை அமைச்சகம், இத்தகைய பாலியல் அறம் என்ற ஒன்றை முன்நிறுத்தி, அதன் அடிப்படையியே தனது வாதங்களைத் தொடர்ந்தது. ஒருபாலுறவு என்பது இந்திய சமுதாயத்துக்கு ஒத்து வராது, பொருந்தாது, அதை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள், ஏன் வெறுக்கவும் செய்வார்கள், பெரும்பான்மை மக்களுக்கு உவப்பற்றதாக உள்ள ஒன்றை அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, ஒருபாலுறவினர் தமக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். அவற்றை உள்ளவாறே கோர முடியாது. பொது நன்மையை முன்னிட்டு இவர்களது உரிமைகள், குறிப்பாக சமத்துவம் கோரும் உரிமை யானது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற வாதங்களை உள்துறை அமைச்சகம் முன்வைத்தது. தில்லி உயர் நீதி மன்றத் தீர்ப்பு பொது நன்மை, பொது அறம் குறித்த அமைச்சகத்தின் வாதங்களை ஏற்கவில்லை -

“பொதுவான ஒழுக்க நெறி விதிகள் என்பது, அரசியலமைப்புச் சட்ட ஒழுக்க நெறிகளினின்றும் வேறுபட்டது. இந்த நெறிகள், சூழ்நிலைகள் சார்ந்து மாறக்கூடியவை. நாட்டின் நலன் என்பது பற்றி முடிவு செய்ய, ஆய்வுக்குள்ளாகும் ஒழுக்க நெறியானது, அரசியலமைப்புச் சட்டத்தினுடயதாக இருக்க வேண்டுமே தவிர, பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒழுக்க நெறி விதிகளாக இருக்க முடியாது.”

அரசியல் சட்டம் கோரும் அறத்தைக் குறித்து அம்பேத்கர் மேலும் கூறியதாவது; அரசியல் சட்டத்தின் வடிவத்துக்கு ஏற்றார் போல் நிர்வாகத்தின் வடிவமும் அமைய வேண்டும். இரண்டும் தொடர் புடையனவாய், ஒத்திசைவோடு செயல்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நாம் சரிவர நிர்வாகம் செய்யாமல் போனால், நிர்வாக அமைப்புக்குரிய வடிவத்தை நாம் மாற்ற, கெடுக்க எத்தனித்தால், அரசியல் சட்டத்தின் உள்ளுரைக்கு, உள்ளார்ந்த பண்புக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு, அதற்கு ஏற்ப நடக்காமல் அதை சிதைப்பவராகி விடுகிறோம்.

அரசியல் சட்டம் வகுத்துள்ள உன்னத அறங்கள் தாமாகவே என்றுமே மக்களைச் சென்று அடையப் போவதில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். அவ்வறங்களை மக்கள் தாமாக ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அந்த அறங்களை ஏற்க, அவற்றின்படி நடக்க மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவ்வகையில் அரசியல் சட்டம் கண்டுள்ள அறங்களை நாம் கவனத்துடன் வளர்த்தெடுக்க வேண்டும். காரணம், இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை, சனநாயகமற்ற சமூக வாழ்வை அறிவிக்கும் அரசியல் மேல்பூச்சுதான் சனநாயகமே தவிர, அது நமது சமூக வாழ்வில் ஆழ வேரூன்றிய பண்பல்ல.

தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு நமது அரசியல் சட்டத்தில் உறைந்துள்ள சாத்தியப்பாடுகளை இனங்காட்டுவதாக அமைந் துள்ளது. அரசும் சமுதாயமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செலுத்தம் வன்முறை, கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து அனைத்து குடிமக்களையும் மீளச் செய்து, அனைவரும் சரிநிகர் சமானமாக, சமத்துவமாக வாழ நமது அரசியல் சட்டம் வழிவகுத்துள்ளது. விடுதலை என்பது சலுகையுற்ற ஒரு சிலருக்கு மாத்திரம் உரித்தானது என்பது போய் அது அனைவருக்குமானது என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் நமது அரசியல் சட்டம் வேறுபாடுகளை அங்கீகரிக்கிறது, கொண்டாடுகிறது, மாறுபட்ட கருத்துடையவர் களைப் பாதுகாக்க கூடியதாக உள்ளது. பாலியல் விருப்பம் என்ற ஒரு விஷயத்தின் காரணமாக ஒருபாலுறவாளர்களை அவதூறுக் குள்ளாக்குவது அல்லது குற்றவாளிகளாக ஆக்குவது அரசியல் சட்ட நீதிக்கு, அறத்துக்கு எதிரானதாகும்.

தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின் இந்த வரிகளைக் கொண்டே இந்த கட்டுரையை முடிக்க விரும்புகிறேன் ,

”ஒழுக்கநெறி சார்ந்த மனக்கொதிப்புகள் எவ்வளவுதான் பரவியிருந்தாலும், அவை, தனிப்பட்ட நபர்களின் அடிப்படை உரிமைகளான சுய கௌரவம் மற்றும் தனிச்செயல்பாடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ போதுமான அடிப்படைக் காரணமாக இருக்க முடியாது. சரியான முறைமை களின் படி அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதாக இருந்தாலும் அரசிய லமைப்புச் சட்டம் சார்ந்த ஒழுக்க நெறி விதிகள் தாம் கூடுதலாக மதிக்கப்பட வேண்டும். ”

நமது போராட்டங்களின் எல்லைகள் விரிவடையட்டும். நாம் தொடர்ந்து போராடுவோம்.

References

Prem Chowdhry, Contentious Marriages, Eloping Couples: Gender, Caste, and Patriarchy in North India, OUP, Delhi: 2007.

J Devika, ‘Housewife, Sexworker, Reformer: Controversies over Women Writing their Lives in Kerala,’ Economic and Political Weekly, April 29, 2006, pp. 1675-1683.

V Geetha, ‘Sexuality and violence: some thoughts on a worrisome subject’,Inter-Asia Cultural Studies, vol 3 no 3, 2002, pp. 407-417

Kalpana Kannabiran, ‘Gender, Sexual Violence, and the Idea of Intimacy, presentation at the Plenary 1 - Violence in Intimacy, ISA 17th World Congress of Sociology, Goteborg, Sweden, 11-17 July 2010.

Chayanika Shah, ‘The Roads that (E)Merged: Feminist Activism and Queer Understanding’, in A. Narrain & G. Bhan (eds.) Because I have a Voice: Queer Politics in India, Yoda Press, New Delhi: 2005, pp.143-154.

Rajeswari Sunder Rajan, ‘The Prostitution Question(s): Female Agency, Sexuality, and Work’ in The Scandal of the State: Women, Law, and Citizenship in Postcolonial India, Permanent Black, Delhi: 2003.

(மீனா கோபால் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையை வ.கீதா மற்றும் சாலை செல்வம் ஆகியோர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளனர்)

நன்றி -  மாற்றுவெளி

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்