/* up Facebook

Jun 26, 2011

வயது பத்து, போராடிப் பெற்றது விவாகரத்து- என் பெயர் நுஜூத்யேமனின் கர்த்ஜி யில், தந்தை மொஹமத் அல் அஹ்தெல் ,தாய் ஷோயாவுக்குப் பிறந்த நுஜூத் தனது பத்தாவது வயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, தனியொருத்தியாகப் போராடி விவாகரத்து பெற்றுக் கொண்ட , ஹில்லாரி கிளின்டனால்” நான் பார்த்ததிலேயே மிகவும் மதிக்கத்தக்க பெண்களில் ஒருவர் “என்று பாராட்டப்பட்ட சிறுமி.
16 குழந்தைகளில் ஒருத்தியாக வறுமை மிக்க ஓர் குடும்பத்தில் பிறந்த நுஜூத், பள்ளியில் இரண்டாம் க்ரேட் படித்து வந்த சிறுமி. தெருக்களைப் பெருக்கி சுத்தம் செய்யும் தந்தை மொஹமத் ,திடீரென ஒரு நாள் நுஜூதைத் திருமணம் செய்து கொடுத்து விடத் தான் தீர்மானம் செய்திருப்பதாக அறிவித்த போது யெமென் நாட்டின் வழக்கத்தில் உள்ளது போல் நுஜூதின் தாய் ஷோயா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.” எங்கள் நாட்டில் பெண்களை கருத்து கேட்பதில்லை” என்கிறாள் நுஜூத். வேண்டாம் என்றோ சரியென்றோ கூட கூறத்தெரியாத சிறுமி நுஜூத், 30 வயது நிரம்பிய ஃபாயெஜ் அலி தமெருக்கு மணம் செய்து வைக்கப்படுகின்றாள். 31, 000 ஆயிரம் ரூபாய் மஹருக்கு!
மஹர் என்பது இஸ்லாமிய சமூகத்தில் மணமகன் , மணமகளுக்கு தரும் மணக்கொடை. இஸ்லாத்தில் ஜீவனாம்சம் என்கிற அம்சம் அனுமதிக்கப்படவில்லை என்பதால் பெண்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் வசதி இது. தனக்கான மஹரை ஒரு பெண்ணே தீர்மானிக்கலாம். நுஜூதின் விஷயத்தில், திருமணம் என்றால் என்னவென்றே அறியாத, பருவம் எய்தியிருக்காத பாலகி அவள். தனது குடும்ப வறுமையைப் போக்கிக்கொள்ள நுஜூதின் தந்தை அவளை ஓர் பொருளாக பாவித்து விற்றிருக்கிறார் என்பது தான் உண்மை. திருமண இரவன்றே நுஜூத் அவள் கணவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள், அவளுடைய வார்த்தைகளிலேயே அந்தக் கொடுமை” எத்தனை கதறினாலும் யாரும் என் உதவிக்கு வரவில்லை. ரொம்பவும் வலித்தது. மீண்டும் ஒரு முறை அலறித்துடித்த நான் மயக்கமானேன்”.
“என்னுடைய புது வாழ்கை முறைக்கு நான் விரைவிலேயே தயார் செய்து கொள்ளவேண்டியிருந்தது. எனக்கு வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை. என் மாமியாரின் ஆணைகளை ஏற்று நடந்து, தரையை சுத்தம் செய்வதும், காய்கறிகளை நறுக்குவதும், பாத்திரங்களைக் கழுவுவதுமாக என் நாட்கள் நகர்ந்தன. சிறிது ஓய்வு எடுக்க எண்ணினாலும் என் மாமி என் தலை மயிரைப் பிடித்து இழுத்தார். ஒரு நாள் என் வயதுக் குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாட அனுமதி கோரினேன். ஒரேயடியாகக் கோபப்பட்ட என் மாமியார், குடும்ப கௌரவத்தைக் குலைக்க வேறென்னன்ன செய்யப் போகிறாய் என்று திட்டினார். காலையில் வேலைக்கு செல்லும் என் கணவர் வீடு திரும்பும் சப்ததிலேயே நான் நடுங்கிவிடுவேன்..இரவுகள் துன்பத்திலும் வலியிலும் கழிந்தன. என் உடன் பிறந்தவர்களை, என் பள்ளியை, அம்மாவைக் காணாமல் பரிதவித்தேன். என் கணவரை வெகுவாகக் கெஞ்சி என் பிறந்த வீடு செல்ல சம்மதம் வாங்கிப் புறப்பட்டேன்.
இங்கேயே இருந்து விடுகிறேன் அப்பா என்று எவ்வளவோ கதறியும் ,முடியவே முடியாது..திருமணம் ஆன பெண் கணவனை நீங்கி வருவதா என்று அப்பா ஒரேயடியாக மறுத்து விட்டார். எங்கள் உறவினர் கேலி பேசுவார்கள், அடுத்த பெண்களுக்குத் திருமணம் ஆவதும் தடைபடும் என்றெல்லாம் அப்பா திட்டினார். வேறு வழி தெரியாமல் என் தந்தையின் இரண்டாவது மனைவி தௌலாவைப் பார்க்கச் சென்றேன். தௌலா என் மீது இரக்கம் கொண்டார். உனக்கு விடுதலை வேண்டும் என்றால் நகருக்குச் சென்று ஒரு நீதிபதியைப் பார். நீதிபதிகள் மக்களின் துன்பத்தை நீக்குவார்கள் என்று வழி சொல்லித்தந்தார்.அவர் தந்த சொற்பப் பணத்தை எடுத்துக் கொண்டு பேருந்து ஒன்றில் ஏறி, நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று பயணச்சீட்டு வாங்கினேன்..நீதிமன்றம் அடைந்தேன், யாரோ ஒரு பெண்மணி எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார்..நான் ஒரு நீதிபதியைப் பார்க்க வந்திருக்கிறேன், எனக்கு விவாகரத்து வேண்டும் என்றேன்.”
நீதிபதி அப்தோ தன் ஆச்சர்யத்தை மறைத்துக் கொள்ளத் திணறினார்.
“உனக்கு விவாகரத்து வேண்டுமா? ஆமாம் அப்படியென்றால் நீ திருமணம் ஆன பெண்ணா?
“ஆம்”,
“உன் வயதில் உனக்கு மணம் ஆகிவிட்டதா?”
“ஆம், எனக்கு விவாகரத்து வேண்டும்”.
“ஏன் விவாகரத்து கேட்கிறாய்?”
“என் கணவர் என்னை அடிக்கிறார், துன்புறுத்துகிறார்”.
“நீ கன்னிப் பெண்ணா?”
“இல்லை..நான் ரத்தம் பெருக்கினேன்”.
அதிர்ந்து போனார் நீதிபதி. யெமென் நாட்டு சட்ட திட்டங்களின் படி ஒரு பெண் தன் கணவனையும் தந்தையையும் எதிர்த்து வழக்கு பதிவு செய்வது மிகக் கடினம்..
ஆனாலும் ஷதா என்ற பெண் வழக்கறிஞர் நுஜூதுக்கு உதவ முன் வந்தார்.
மஹரைத் திரும்பத் தந்தால், விவாகரத்து அளிப்பதாக நுஜூதின் கணவன் பேச, ஏற்கனவே பணம் திருப்பித்தரப்பட்டு விட்டது என்று நுஜூதின் தந்தை வாதாட, கடைசியில் நுஜூத் நாடியது அவளுக்குக் கிடைத்தே விட்டது. விபரம் அறியா பால்யத்தில் மணம் என்ற பெயரில் அவளுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதிமன்றம் ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. நுஜூதுக்கு விவாகரத்து கிடைத்தது.
நுஜூதின் வழக்குக்குப் பிறகு யெமென் அரசு பெண்களின் திருமண வயதுக்கு ஒரு வரம்பு கொண்டு வர முயன்றது. ஆனால் பழமைவாதிகளால் அது தடுக்கப்பட்டது. ஆனாலும் பால்யத்தில் பெண் குழந்தைகள் திருமணம் செய்விக்கப்படுவதை எதிர்த்து பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அவற்றுக்கெல்லாம் காரணமான அந்தக் குழந்தை அழகாகப் பள்ளி சென்று படித்துக்கொண்டிருக்கிறாள். தனக்கு உதவிய ஷதா வைப் போல ஒரு வழக்கறிஞராகி சிரமத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்டு.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்