/* up Facebook

Jun 22, 2011

அஞ்சலி - அநுத்தமா என்ற அசாதாரண ஜீவன் - வாஸந்தி


“மூச்சுவிடுவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறது” என்றார். கூப்பிட்டவுடன் வந்து விசாரித்த மருத்துவர், “பக்கவாட்டில் படுங்கள்” என்றார். “சரி” என்று ஒருக்களித்துப் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டார். ஏற்றிய சூடம் மலையேறுவதுபோல உயிர் காற்றோடு கலந்துவிட்டது.

அநுத்தமா என்னும் அபூர்வ மனுஷியை மரணம் அவர் வாழ்ந்தது போலவே மிகக் கண்ணியமாக ஆரவாரமில்லாமல் ஹிம்சைப்படுத்தாமல் பூவைச் சுற்றி எடுத்துச் செல்வதுபோல அழைத்துச் சென்றது எனக்கு மிகப் பெரிய அதிசயமாக இருக்கிறது. கடைசி மூச்சுவரை தனக்குள் பூரணமாக அனுபவித்து இலக்கிய ரசனை குன்றாமல் வாழ்ந்த அந்த 87 வயதுப் படைப்பிலக்கிய மூதாட்டியின் முடிவு இதைவிடக் கவித்துவமாக இருந்திருக்க முடியாது. ஒரு சிறுமியின் ஆர்வத்துடன் மரண தேவனின் கையைப் பிடித்து அவர் நடையைக் கட்டியிருக்கலாம். அவரது அகன்ற சாகரக் கண்களில் எப்போதுமே ஆர்வமும் பிரமிப்பும் இருக்கும் - படைப்பின் ரகசியங்களைக் கண்டுகொண்ட ஆனந்தப் பிரமிப்பு. எத்தனை அழகு பாத்தியா? எத்தனை அற்புதமா எழுதறார் பாத்தியா? அந்தப் பேச்சாளர் பேச்சைக் கேட்டியோ, அபாரம்! சின்னப் பெண், என்னமா பாடறாங்கறே? பிரபஞ்ச சிருஷ்டியில் அவருக்கு எல்லாமே அழகு. அதிசயம். மற்றவர்களின் சாதனைகள் எல்லாம் அவருக்கு அசாதாரணம் என்று தோன்றும். அவரே அசாதாரணம் என்று அறியாத பேதமை தொனிக்கும். ஆத்மார்த்தமாகத் தன்னை ஒரு பார்வையாளராகவே, ரசிகையாகவே பாவித்துக்கொண்டவர். தன்னைப் பற்றியே கிண்டலடித்துச் சிரிக்கப் பழகியவர். இறப்பதற்குப் பத்து நாள் முன்பு தொலைபேசியில் அவர் சிரித்தது நினைவுக்கு வருகிறது. ‘எத்தனை புத்திசாலி பாத்தியோ? என் கையைப் பிடிச்சுக்க ஆள் நிக்கும்போதே கீழே விழறேன்.’

ஆனால் அந்தச் சிரிப்பு எனக்குள் ஒரு விநோதமான சூசகமாகத் தோன்றிற்று. அவர் கிளம்பத் தயாராகிவிட்டது போல. நான்தான் அவருடைய மறைவுக்குத் தயாராகாததுபோல இன்று உணர்கிறேன். என் தாயிடம் இருந்திராத உணர்வுபூர்வமான நெருக்கம் எனக்கு அவரிடம் இருந்தது. பத்து வயதில் ஏற்பட்ட உறவு. கோவில்பட்டியில் என் பெற்றோர்கள் இருந்த சமயத்தில் அநுத்தமாவின் கணவர் பத்மனாபன் அங்கு மாநில மின்சார வாரியத்தில் கண்காணிப்புப் பொறியாளராகப் பணியில் இருந்தார். தமிழ்ப் பார்வையும் புன்னகையும் என்னை ஈர்த்தன. இன்றுவரை இடை வெளியே ஏற்படுத்தாத அதிசய ஈர்ப்பு அது .

அநுத்தமா எழுத்துலகில் பிரபலமாகியிருந்த நேரம் அது. ஆனால் புகழின் பந்தா எதுவும் இல்லாமல் மிக எளிமையாக, சரளமாக அவர் பழகியது வியப்பாக இருக்கும். அதைவிட அவரது நகைச்சுவை உணர்வும் அழகாக இடையிடையே பேசிய ஆங்கிலமும் ஆகர்ஷிக்கும். தமிழ் எழுத்தாளர்கள் என்றால் ஆங்கிலம் பேச வராது என்று நான் நினைத்திருந்தேன். அவர் எழுதிய மணல் வீடு நாவலுக்கு அந்த நாட்களில் மிகவும் மதிப்பு மிகுந்த கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது கிடைத்திருந்தது. அவரது நைந்த உள்ளம் தொடராகக் கலைமகளில் வந்துகொண்டிருந்தது.

நான் அநுத்தமா ‘மாமி’யின் கிடைத்த கதைகள் எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்தேன். அவரது ‘வேப்பமரத்துப் பங்களா’ பெரியவரும் ‘ஒரே ஒரு வார்த்தை’யின் அன்பான ஒரு வார்த்தைக்காக ஏங்கிய கதாநாயகியும் நெருக்கமானார்கள். அதன் உளவியல் நுட்பங்கள் அப்போது புரிந்தனவோ இல்லையோ நான் அநுத்தமாவின் தீவிர விசிறியானேன். கோவில்பட்டியில் இருந்த சமயத்தில் கலைமகளில் ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்த ‘தாய் என்பவள் ஒரு ஸ்தாபனம்’ என்ற வரி எனது பதின்வயது மனத்தில் ஆழப்பதிந்தது. பிற்காலத்தில் பெண்ணியச் சிந்தனைகளின் அறிமுகத்தில் அந்த வரியின் பரிமாணம் அகன்று வேறு தளங்களைத் தொட்டபோது எல்லைகள் விரிந்தன. அவரது கேட்ட வரம் நாவலைப் படித்துக் கேட்டவரம் கிராமத்துக்குச் சென்று பஜனை கோஷ்டியுடன் உட்கார ஆசை பிறந்தது. கிராமத்துத் தெருக்களும் அங்கு உலவிய கதாபாத்திரங்களும் மிகத் தத்ரூபமான நிஜமான நபர்கள். எல்லோருமே ஏதேனும் வரத்திற்காகக் காத்திருப்பவர்கள் என்று தோன்றிற்று. நாவலில் பஜனை- ஜால்ரா சத்தம் அதிகம் என்று நான் மாமியிடம் கிண்டல் அடித்தது நினைவுக்குவருகிறது. அதை மீறி அடிநாதமாக நாவலில் நேயமும் காதலும் தென்றலைப் போல வருடும். கதாநாயகி எம். ஏ., படித்தவள். ஆனால் எளிமையாக அப்பாவியைப் போன்ற தோற்றமுடையவள். கிட்டத் தட்ட அநுத்தமாவைப் போல. மாமி எம். ஏ., படிக்கவில்லை. அவரது கான்வென்ட் படிப்பு ஏழு வகுப்புடன் 13 வயதில் திருமணம் நிச்சயமானவுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆங்கிலப் படிப்பின் ஆரம்ப அடித்தளமும் அவரது இயல்பான அறிவு வேட்கையும் சுயமாக வளர்த்துக்கொண்ட திறன்களும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் அவர் கற்றிருக்க முடியாது. திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழித்து மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தவர். பலவித ஆற்றல்கள் அவரிடம் அனாயசமாகப் புகுந்திருந்தன. பெண்மைக்கே உரித்தான கைவேலைகள், பொம்மை செய்தல், கோலம் போடுதல் என்பவை மிகக் கலை அழகுடன் செய்யவரும். அவர் சமையல் செய்து நான் பார்த்ததில்லை, அதைச் செய்ய வீட்டில் எப்பவும் ஆள் இருந்ததால் அவருக்கு அவசியம் இருக்கவில்லை என்றாலும் அவருக்கே அதில் அதிக ஆர்வம் இல்லை என்று எனக்குத் தோன்றும். அதைவிடப் படிப்பதும் எழுதுவதும் அதிக ஆக்கபூர்வமான நேரமாக அவர் நினைத்திருப்பார். அவரது பாரம்பரிய உடையைக் கண்டு அவர் ஒரு கட்டுப்பெட்டி என்று நினைப்பவர்கள் பலருக்கு அந்த ஒன்பது கெஜப் புடவைக்குள் ஒளிந்திருந்த திறமைகள் தெரிந்திராது. அவர் பேசும் ஆங்கிலம் என்னை அசத்தும். கவித்துவ அழகுடன் ஆங்கில வார்த்தைகளை அனாயசமாக உபயோகிப்பார். ஆங்கில உச்சரிப்பு கனக்கச்சிதமாக இருக்கும். Victorian எழுத்தாளர்களின் எல்லா எழுத்தையும் படித்திருந்தார். திட்டம் போட்டுப் படிப்பார். ஜேன் ஆஸ்டின், சார்ல்ஸ் டிக்கன்ஸ், ப்ரான்டே சகோதரிகள், அலெக்சாண்டர் டியூமா... என்று எந்த ஆசிரியரை எடுத்தாலும் அவரது மொத்தப் படைப்புகளையும் வாசித்துவிடும் பழக்கம் சிறுவயதிலேயே ஆரம்பமானதாகச் சொல்வார். எப்போது அவரைச் சந்திக்கச் சென்றாலும் ஏதேனும் ஒரு புத்தகம் அவர் கையில் இருக்கும். அவருக்காகப் பத்மனாபன் வாசகச் சாலைகளிலிருந்து ஆங்கிலப் புத்தகங்களைக் கொண்டுவருவார். மாமாவும் மாமியும் ஒரே புத்தகத்தைப் படித்து ரசித்து அலசுவார்கள். மாமிக்கு சம்ஸ்கிருதத்திலும் புலமை உண்டு. பூர்வீகம் வட ஆற்காடு என்றாலும் நெல்லூரில் பிறந்து வளர்ந்ததால் தெலுங்கும் தெரியும். கம்பனும் வால்மீகியும் நாவின் நுனியில் நிற்பார்கள். ஆழமான ஆன்மிக விசாரம் உண்டு. பண்பாட்டில் தீவிர ஈடுபாடு உண்டு. ஆனால் எதிர்பாராத தருணத்தில் முற்றிலும் வித்தியாசமான முகத்தைக் காண்பிப்பார். அவரது நினைவாற்றலும் உலக வரலாறு பற்றிய பொது அறிவும் சமயத்தில் வியப்பை அளிக்கும். நான் சீனாவுக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னபோது நேரில் கண்டு வந்தவர் போல அதைப் பாரு இதைப் பார்க்காம வராதே என்று ஒரு பட்டியல் அளித்தார். எகிப்துக்குச் செல்கிறேன் என்றபோதும் எனக்குத் தெரிந்திருந்ததைவிட அவருக்கு எகிப்து ஃபாரோ சாம்ராஜ்ய வரலாறு அதிகமாகத் தெரிந்திருந்தது. பத்மனாபனுக்கு மேட்டூரில் பணிமாற்றல் ஏற்பட்டபோது அங்குப் பணியில் இருந்த ருஷ்யர்களின் மனைவிகளுடன் பேசிப் பழகுவதற்காக (பாவம் தனிமையாக உணரமாட்டார்கள்?) மாமி தாமாக ருஷ்ய மொழியைக் கற்று அவர்களுடன் சம்பாஷிக்கும் அளவுக்குத் தேர்ச்சிபெற்றிருந்தார்!

‘என் நாவலை முடிச்சுட்டேன், புத்தகமா வந்தாச்சு’ என்று ஒருமுறை வியப்பிலாழ்த்தினார். அது - ‘நல்லதோர் வீணை’ - ஒருமுறை எழுதி அவருக்குத் திருப்தி இல்லாமல் கிழித்துப்போட்டுவிட்ட நாவல் - இனிமே எனக்கு எழுத வரும்னு தோணல்லே என்ற அவரை நான் கோபித்து வற்புறுத்தி மறுபடி அவர் எழுதியது. சூடாமணியும் அவரை உற் சாகப்படுத்தியதாகப் பிறகு சொன்னார். அவருக்கு அப்போது வயது 84 - 85 மட்டுமே.

தன் எழுத்தாற்றல் தனது சாதனை என்றே அவர் நினைக்கவில்லை. ஆண்டவனின் வரப்பிரசாதமாகவே அவர் கருதுவதாகப் படும். அவரது முதல் கதை (கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது); ‘அங்கயற்கண்ணி’யை எழுதும் உத் வேகம் ஏதோ ஓர் அநுபூதி கிடைத்ததாலேயே எழுத முடிந்ததாக அவர் சொன்னது எனக்குச் சிறுவயதில் ஆச்சரியமாக இருக்கும். அவர் எழுதிய பல சிறுகதைகள் தாமாக எழுதிக்கொண்டவை என்று மாமி சொல்வது அடக்கத்தாலா நம்பிக்கையாலா என்று எனக்குக் குழப்பம் ஏற்படும். எழுதும் காலங்களில் ஓய்வில்லாமல் எழுதுவார், ஆட்கொண்டவர்போல. அவர் எழுதி எழுதிக் கீழே போடும் ஒரு பக்கத் தாளை மாமா அழகாக அடுக்கிப் பக்கம் மாறாமல் சேர்த்துவைப்பார். தன் மனைவியின் ஆற்றலைப் பத்மநாபன் பூரணமாக உணர்ந்திருந்தார். வாயால் வெளிப்படையாகப் பாராட்டா மல் செய்கையில் அவர் செய்த உதவிகள் நெகிழ்ச்சி அளிக்கும். மனைவியின் உலகத்துடன் தம்மை அவர் இணைத்துக்கொண்டது மிக லாவகமான செயலாக இருந்தது. மாமி ஓய்வில்லாமல் எழுதிய தீவிரம் மிகுந்த காலத்தில் அவரது கழுத்து நரம்புகளைப் பாதிக்க ஆரம்பித்தது. அதற்காகச் சென்னை அரசினர் பொதுமருத்துவமனையில் traction சிகிச்சை பெற நேர்ந்தது. அதற்குப் பிறகு அடிக்கடி நரம்புத் தளர்ச்சியால் சிரமப்பட்டார். பத்மநாபனுக்கு அது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

மாமியின் எழுத்துக்கு மிகுந்த ஆதரவளித்த கி. வ. ஜகன்னாதனுடன் தம்பதிகளுக்கு மிக நெருங்கிய நட்பு மலர்ந்தது. மாமியின் எழுத்து வேகத்தை அறிந்திருந்த கி. வ. ஜ., சாத்தியமற்ற காலக்கெடுவுக்குள் நாவலைத் தரும்படி கேட்டாலும் யோசனை இல்லாமல் மாமி ஒப்புக்கொண்டு மாமாவிடம் திட்டு வாங்கி மாய்ந்து மாய்ந்து எழுதி முடித்துக்கொடுத்த சம்பவம் உண்டு.

இத்தனைக்கும் அநுத்தமாவின் பூகோள எல்லைகள் குறுகியவை. அவரது உலகம் வீட்டுக்குள் இருந்தது - அவருடைய ஆதர்ஷ எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினுடையது போல. மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன், எண்ணற்ற வட ஆற்காடு உறவினர்கள், உறவுக்குள் பிணக்குகள், மகிழ்ச்சிகள் எல்லாமே மனித இயல் பின் வரைபடங்களாக இருந்தன. குடும்பம் எனும் ஸ்தாபனம் அவருக்கு முக்கியமானது. அங்கு உலவும் மாந்தர்களின் மன வக்கிரங்களும் விவேகமுமே ஒட்டுமொத்த மனித வாழ்வின் உயர்வையும் தாழ்வையும் நிர்ணயிப்பது என்று உறுதியாக நம்பினார். அசட்டுப் பெண்கள், மன முதிர்ச்சியற்ற பெண்கள், விவேகமற்ற ஆண் அதற்கு நேர் எதிராக விவேகமும் பொறுமையும் மிகுந்த புத்திசாலிப் பெண்கள், முதியவர், சிறியவர் எல்லோரும் அவரது கதாபாத்திரங்கள். அவர் பெண்ணியக் கோஷமெழுப்பவோ அரசியல் பேசவோ முயலவில்லை. அதில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை. சனாதன தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த அவருக்குத் திட்டவட்டமான பண்பாட்டு மதிப்பீடுகள் இருந்தன. அதை ஆரவாரமில்லாமல் வெளிப்படுத்தினார். மாற்றம் தவிர்க்க முடியாதது என்றாலும் பாரம்பரியப் பண்புகளின் தொடர்ச்சி ஆன்மிக பலம் தரும் என்று அவர் நினைப்பது அதில் வெளிப்படும். புரட்சிப் பெண் பூமாவும் அவர் வடித்த கதாபாத்திரம்தான். அவரது மற்ற பெண் பாத்திரங்களிலிருந்து வேறுபட்டவள். ‘அவள் நாளைய பெண். அவளைப் படைக்க வேண்டிய அவசியம் இருந்தது’ என்று ஒருமுறை சொன்னார். பூமாவின் கருத்துகளுடன் அவருக்கு உடன்பாடு இல்லை என்று எனக்குத் தோன்றிற்று.

சக எழுத்தாளர்களின் எழுத்தை மிக ஆர்வத்துடன் படிப்பார். ரசித்தவற்றைத் தயங்காமல் பாராட்டுவார். நானும் எதிர் பாராமல் எழுத்துலகில் காலடி வைக்கத் துணிந்தேன். எனது முதல் இரண்டு கதைகள் (‘62) முத்திரைக்கதைகளாக ஆனந்த விகடனில் வெளியானபோது பெற்ற தாயைப் போல மாமி சந்தோசப்பட்டார். எழுபதுகளில் அதிகமாக எழுத ஆரம்பித்தேன். என் கணவருக்கு அப்போது நேபாளத்தில் வேலை. எனது முதல் நாவல் சிறகுகள் வாரத் தொடராக வெளிவந்தபோது மாமி மிகவும் சந்தோஷப்பட்டார். நான் சென்னைக்கு அவரைக் காணச் சென்றபோது சரியான சமயத்தில் நான் பிரவேசித்திருப்பதாகச் சொன்னார். அதன் விளக்கம் என்ன என்று கேட்க மறந்துபோனேன். புதுமையையும் பழைமையையும் சரியான விகிதத்தில் எனக்குக் கலக்கத் தெரிந்திருப்பதாக அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அதை நான் திட்டமிட்டுச் செய்யவில்லை என்று ரோசத்துடன் பதில் சொன்னதும் நினைவுக்குவருகிறது. என்னை அப்போதுதான் சூடாமணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். எழுத்துலகில் பிரபலமான அவர்கள் இருவருக்கும் முன்னால் மிகச் சிறியவளாக உணர்ந்தது இன்று துல்லியமாக நினைவிருக்கிறது.

என் எழுத்தில் நான் வெளிப்படுத்திய கருத்துகள் பலவற்றுடன் அவர் முரண்பட்டார். ஆரம்பத்தில் என் கருத்தைத் தான் ஏற்கவில்லை என்று சொல்வார். அதில் வருத்தம் இருந்ததாகத் தோன்றும். ஆனால் அவருடன் வாதம் செய்ததில்லை. பின்னால் வந்த எனது பிற எழுத்துக்களில் அவருக்குக் கருத்து வேறுபாடு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் எதுவும் சொன்னதில்லை. நான் இருப்பது மாறுபட்ட உலகம், என் பார்வை வேறு என்று அவர் உணர்ந்திருப்பார்.

இந்தியா டுடே தமிழ்ப் பதிப்புக்கு ஆசிரியையாகச் சென்னைக்கு வந்தபோது அவருக்குத் தவறாமல் ஒரு பிரதியை அனுப்புவேன். அதில் நான் தொடர்ந்து எழுதிய அரசியல் பத்தியைப் படித்துவிட்டுப் பயந்துபோவார். அடிக்கடி ‘ஜாக்கிரதையா இரு’ என்பார். நான் அவரைக் காணச்செல்லும் போதெல்லாம் அவருடைய கண்களில் ஒரு மிரட்சி இருப்பதாகத் தோன்றும். இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறாரோ என்று எனக்குக் குறுகுறுக்கும்.

சொந்த வாழ்வில் இடிபோன்ற பல அனுபவங்களை அவர் கண்டவர். சகோதரி, சகோதரன், சகோதரனின் மனைவி, மாமா எல்லோரும் எதிர்பாராமல் இறந்தது அவருக்குப் பேரிடியாக இருந்திருக்கும். மாமி எல்லாத் துக்கத்தையும் யோகியைப் போல ஜீரணித்துக்கொண்டது அதிசயம். வாய்விட்டு அரற்றியதில்லை. புலம்பியதில்லை. சுயபச்சாதாபமில்லை. யாரைப் பற்றியும் குறை சொன்னதில்லை. குறைபட்டதும் இல்லை. பெற்ற பிள்ளை இல்லாத குறை இல்லாமல் கொழுந்தன் சாமியும் அவருடைய மனைவி கௌரியும் தன்னிடம் காட்டும் அன்பையும் பரிவையும் சொல்லி நெகிழ்ந்துபோவார். ‘எனக்கு எத்தனை அதிர்ஷ்டம் பார்’ என்று சொல்லும்போது கண்களில் அசாதாரண ஒளி இருக்கும். சக எழுத்தாளர்கள் பலர் அவர்களது எழுத்துக்கு விரோதமான குணங்களை வெளிப்படுத்தும்போது, ‘விடு, அந்த எழுத்தைப் பாரு, எப்பேர்ப்பட்ட எழுத்து’ என்பார். கிடைத்த விருதுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றார். கிடைக்காதவற்றைப் பற்றிப் பேசினதே இல்லை. 23 நாவல்கள் 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியவர் 6 சிறுகதைத் தொகுப்புகள் என்ற விவரங்களில் அவருக்குச் சிரத்தை இல்லை. பறவை இனங்களைப் பற்றி ஒரு ஆராய்ச்சியாளரின் ஞானம் அவருக்கு இருந்தது. சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் வந்தன. அவற்றின் ஓவியங்கள் அவரே வரைந்தவை. அவரைச் சந்திக்க வரும் குழந்தைகளுக்குப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுப்பார்.

பாசாங்குத்தனமே இல்லாத, பொய்மை என்பதே அறியாத ஜீவனாக வாழ்ந்த அபூர்வ மனுஷி. அவரது எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் எந்த பேதமும் இல்லை. ஆதர்ஷம் என்று எதை நம்பினாரோ அதன்படி வாழ்ந்தவர். குறைகள் இருந்திருக்காதா? நிறைய இருந்திருக்கும் சாமான்யருக்கு. அவற்றின் நிழலே தன்மீது படியாமல் பார்த்துக்கொண்ட விவேகம் அவராகப் பழகிக்கொண்டதாகப் படுகிறது. பிரபஞ்ச சிருஷ்டி அனைத்தையும் ஆத்மார்த்தமாக நேசித்ததாலேயே அவருக்கு அது சாத்தியமாயிற்று எனத் தோன்றுகிறது. அவரது பரந்த வாசிப்பும் தார்மீகப் பண்புகளில் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் அவரைப் பதப்படுத்தியிருக்கலாம். தாமரை இலை நீர்போல வாழ்வது சுலபமல்ல. எழுத்தாளர்கள் சுலபத்தில் நொறுங்கிவிடும் இயல்புடையவர்களாக அறியப்படுபவர்கள். அதனாலேயே அநுத்தமா அபூர்வப் பிறவியாகத் தெரிகிறார். குருக்ஷேத்திர யுத்தத்தை விலகி நின்று பார்த்த சஞ்சயனைப் போல்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்