/* up Facebook

Jun 4, 2011

மிருகங்களிடம் இருந்து தப்புவதற்காக சினமா ஆசையை துறந்தேன்


சினமா நடிகை ஜெயகெளரி
இலங்கை தமிழ்ச் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் ஜெயகெளரி. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமான ‘சமுதாயம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இலங்கை தமிழ்ச் சினிமாவின் முதல் கதாநாயகி என்ற முத்திரைக்குச் சொந்தக்காரி இவர். ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் பல தரப்பட்ட வேடங்களில் நடித்து நடிப்பில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்ற ஜெயகெளரியின் கலைப் பயணம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இவரை கொழும்பு கொம்பனிவீதியில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் வைத்து ஒரு அதிகாலைப் பொழுதில் சந்தித்தோம்

‘மனம் விட்டு பேச எவ்வளவோ இருக்குங்க... தென்னிந்திய சினிமாகாரர்களின் வாழ்க்கை சம்பவங்களை கேட்டு எழுதிவரும் பத்திரிகையாளர்களின் மத்தியில் நீங்கள் நமது கலைஞர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை கேட்டு எழுதி வருவது பாராட்டுக்குரியது என்றவர், தமது இனிக்கும் சம்பவங்களை மீட்டிப் பார்க்க ஐம்பதாண்டுகளுக்கு பின்னோக்கி பயணித்தார்.

‘எனது பூர்வீகம் கேரளா, திருவனந்தபுரம். அப்பா பெயர் அப்புக்குட்டி. அம்மா கல்யாணி. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கொழும்பு தெமட்டகொடை தான்.

தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் படித்தது, பேசியது எல்லாம் தமிழ்தான்.

படைப்பாளர்களில் அதிகமானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் என்னவோ எனக்குள்ளும் நடிப்புக்கலை ஊறிக் கிடந்திருக்கிறது. (சிங்க மாராட்டியரின் கவிதைகளை வாங்கிக் கொண்டு அதற்கு உபகாரமாக கேரளத்து யானை தந்தங்களை பரிசளிப்போம் என்றானே பாரதி! காரணமில்லாமல் பாரதி அப்படிச் சொல்லியிருப்பானா!

அந்த மண்ணை பூர்வீகமாக கொண்ட ஜெயகெளரிக்குள் கலை ஊற்றெடுத்தது. அதிசயமல்ல.

தெமட்டகொடை மாளிகாகந்த கலவன் பாடசாலையில்தான் நான் ஆரம்ப கல்வியை கற்றேன். அந்த நாட்கள் எனக்கு அவ்வளவாக ஞாபகத்தில் இல்லை.

ஒருமுறை கலைஞர் ஆர். கே. புஹாரி என்னை சந்தித்து? நானும் நீங்கள் படித்த பாடசாலையில்தான் படித்தேன் என்றார். அதன்பிறகு எனது படிப்பை கப்பிகாவத்தை தொண்டர் வித்தியாலயத்தில் தொடர்ந்தேன்.

அந்த பாடசாலைதான் எனது நடிப்புக்கு முதல் மேடை போட்டது.

பாடசாலையில் அண்ணாவியார் மாஸ்டர்தான் எங்களுக்கு நாடகம் பயிற்றுவிப்பார். எனக்கு அப்போது எட்டு வயதிருக்கும். ராமாயணம் நாடகத்தில் எனக்கு ராமர் வேடம் கிடைத்தது. அதில் சிறப்பாக நடித்ததால் எல்லோரும் என்னை பாராட்டினார்கள்.

குறிப்பாக கனகம்மா டீச்சர், பொன்னம்பலம் மாஸ்டர் ஆகியோரின் ஆலோசனைகள் எனக்கு நிறையவே கிடைத்தன.

அதன் பிறகு 1957ல் பஞ்சிகாவத்தையில் முகம்மது நபியவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கவின்கலை மன்றத்தின் வெளியீடாக ஜே. பி. ரொபட், ஜோன் சாமிநாதன் ஆகியோரின் ‘நூதன லஞ்சம்’ நாடகத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானேன்.

கெளரி, அக்காள் பாக்கியவதி,
தங்கை ப்ரியா ஜெயந்தி
அந்த நாடகத்தைத் தொடர்ந்து எனது நடிப்பாற்றலுக்கு நிறையவே வளர்ப்புக்கள் கிடைத்தன. தினக்குரல் அதிபர் எஸ். பி. சாமியோடு சங்கிலியன் நாடகத்தில் நடித்தேன். அந்த நாடகத்தை வரணியூரான் எழுதியிருந்தார். அதில் சாமி, சங்கிலியனாகவும், நான் சங்கிலி தேவியாகவும் நடித்திருந்தோம்.

எனது அப்பா அப்புக்குட்டியும் ஒரு நாடக நடிகர்தான். நாடகங்களில் அவர் பெண் வேடம்தான் அதிகமாக போட்டாராம்.

ஒருமுறை பத்திரிகையில் வெளிவந்த சமுதாயம் படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விட்டுதான் நானும் அப்பாவும் ஜயந்தி வீரசேகர மாவத்தையில் இருந்த ஹென்றி சந்திரவன்சவின் அலுவலகத்திற்குச் சென்றோம்.

அவர் அப்பாவின் உறவுக்காரராம். அவரும் ஒரு மலையாளிதான். இங்கே ஒரு சிங்களப் பெண்ணை மணந்து தனது பெயரையும் மாற்றிக்கொண்டிருக்கிறார்.

பிறகென்ன சமுதாயம் படத்தில் நான் நாயகி. தனரெத்தினம் கதாநாயகன். பாடசாலை விடுமுறை நாட்களில் படப்பிடிப்புக்கு செல்வேன். அந்த நேரத்தில் தோட்டக்காரி படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.

ஆனாலும் சமுதாயம் தான் முதலில் வெளியாகியது. தெமட்டகொடை மானில் தியேட்டரில் சமுதாயம் படத்தின் சிறப்புக் காட்சிக்காக எனது குடும்பத்தினருடன் சென்றேன். திரையில் எனது முகம் வந்ததும் வார்த்தையால் விபரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சி! எனது வாழ்க்கையில் நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். எனது குடும்பத்தினர் அனைவரும் என்னை பாராட்டினார்கள்.

எனது முதல் ரசிகர் என்று சொன்னால் அவர் வி. கே. டி. பாலன்தான். ‘நான் உங்கள் ரசிகர்’ என்று என்னிடம் நேரிடையாகவே சொல்லி இருக்கிறார்.

ஆனால் எனது பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்த எனது வகுப்பாசிரியை திருமதி கனகரட்ணம் ‘படிக்கிற வயசில உங்கப் பிள்ளையை கூத்தாட விட்டுட்டீங்களே’ என்று திட்டினார். தமிழகத்தில் இன்று பிரபலமாக விளங்கும் பலருடன் நான் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

இன்று சென்னையில் மதுரா டிரவல்ஸ் நடத்திவரும் வீ. கே. டியுடன் ‘பேசும் விழிகள்’, எஸ். எஸ். சந்திரனுடன் ‘தீச்சுடர்’ என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம். என்று தமது கலைப் பிரவேசம் பற்றி சொல்லிமுடித்த ஜெயகெளரியிடம் நினைவில் நிற்கும் பாடசாலை குறும்பு பற்றி கேட்டோம்.

‘கப்பிகாவத்தை தொண்டர் பாடசாலையில் நான் படித்தபோது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும். எனது பின் சீட்டில் அமர்ந்திருந்த இஸ்மாயில் என்ற பையன் என் முதுகை பிளேட்டால் கிழித்துவிட்டான்.

என்ன காரணத்திற்காக என் முதுகைக் கீறினான் என்பது எனக்குத் தெரியாது. என் சட்டையெல்லாம் ரத்தம் வழிந்தோடியது.
ஈஸ்வரன், ராஜம், வி.கே.டி.பாலன், கெளரி மற்றும் எம்.வி.எட்வர்ட்

அந்தப் பையனுக்கு செமத்தையாக அடிவிழுந்தது. இது அவன் செய்த குறும்பு. எனினும் நான் குறும்பு செய்ததாக ஞாபகம் இல்லை.

அண்மையில் ஒரு விழாவில் ஒருவர் என்னைச் சந்தித்து உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா என்று கேட்டார். நான் ஒன்றும் பேசாமல் இருக்கவே, ‘நான் தான் உங்கள பிளேட்டால முதுகைக் கிழித்தவன்.

நான்தான் இஸ்மாயில்’ என்றார் அவர். அப்போதுதான் எனக்கு அந்த சம்பவமே ஞாபகம் வந்தது.

வயதான காலத்தில் பழையதை மறந்தால் மனதுக்கு நிம்மதி. என் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ கசப்பான சம்பவங்களை நான் மறந்துவிட்டேன்.

அது எனக்கு நன்மையாகவும் இருக்கிறது என்று பெருமூச்சு விட்டபடியே தமது பேச்சை தொடர்ந்தார் ஜெயகெளரி.

சமுதாயம் படத்தில் நடித்து படம் வெளியாகியதும் எனக்கு பாடசாலையில் செல்வாக்கு எகிறிவிட்டது. என்னை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். நான் நடித்த காட்சிகளை நடிக்கச் சொல்லி கேட்பார்கள்.

பாடசாலையில் நானும் நடித்து காட்டுவேன். எனது நண்பிகளான பத்மாவதி, ரங்கநாயகி, ரட்ணம், சரோஜினி முத்தையா, தனபாக்கியம் ஆகியோரே என்னுடன் எப்போதும் இருப்பவர்கள்.

இவர்களில் தனபாக்கியம் தான் நான் ராமர் வேடம் போட்டு பாடசாலை நாடகத்தில் நடித்த போது இராவணனாக நடித்தவர்.

இவர் தற்போது கொழும்பில் தான் இருக்கிறார். ஒருமுறை கிங்ஸ்லி பட மாளிகையில் காத்தவராயன் படத்தை பார்ப்பதற்காக நான் எனது குடும்பத்தினருடன் சென்றேன். எனக்கு நல்ல நீளமான கூந்தல். ஒற்றை ஜடை போட்டிருந்தேன். படம் முடிந்து வெளியே வந்த போது என் கூந்தலில் ஒரு பேப்பர் துண்டு செருகி இருந்தது. அதைப் பிரித்து பார்த்தேன்.

அதில் ராஜன் என்ற பெயர் குறிப்பிட்டு வீட்டு இலக்கத்துடன் சினமன் கார்டன் கொழும்பு – 07 என்ற விலாசமும் இருந்தது அவன் யாரென்றே தெரியவில்லை.

படம் பார்க்கும் போது எனது ஜடை கதிரையின் மறுபக்கத்தில் விழுந்திருக்க வேண்டும். அந்த சமயத்தில்தான் அவன் என் ஜடைக்குள் அந்த பேப்பர் துண்டை செருகி இருக்கிறான். அதற்கு பிறகு படம் பார்க்க சென்றால் ஜடையை முன் பக்கத்திலேயே போட்டுக்கொள்வேன்.

காதல் அனுபவம் பற்றிக் கேட்டோம்.

“எனக்கும் காதலுக்கு ராசி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்னைக் காதலித்த சந்திரசேகர் காதல் கைகூடாமல் போகவே என் முன்னாலயே விஷம் குடித்து இறந்ததை சொல்லவா...? என்னை ஒரு தலையாகக் காதலித்த சக நடிகர் தன் காதலை என்னிடம் சொல்லத் தெரியாமல் யாரையோ திருமணம் முடித்து விட்டு பின்னர் ஒரு நாள் என்னிடம் வந்து ‘கெளரி நான் உங்களை விரும்பினேன்.
இராமநாராயணன், கலைச்செல்வன், எஸ்.எஸ்.சந்திரன், கெளரி, நெய்னார் மற்றும் நடிகர் மோகன்

ஆனா அதை உங்களிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது என்று குளறியதைச் சொல்லவா... எந்த கதையைச் சொல்ல? என்று தன் காதல் பக்கத்தை எம்மிடம் கொட்டினார் ஜெயகெளரி.

சமுதாயம் படத்துக்குப் பின் உங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையா? என்று எமது அடுத்த கேள்வியை முன் வைத்தோம்.

“எனக்கு நிறைய சான்ஸ் கிடைத்தது. ஆனால் நான் தான் சினிமா வாய்ப்பை உதறித் தள்ளினேன். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ‘சமுதாயம்’ படம் செய்த கையோடு எனக்கு ‘குத்து விளக்கு’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

படிப்பிடிப்பிற்காக பருத்தித்துறைக்கு சென்றிருந்தேன். அன்றிரவு ஒரு நடிகர் காமத்துடன் என்னை அணுகி இரையாக்க முயற்சித்தார். நான் ஒரு வழியாக தப்பி ஒடி வந்தேன்.

அன்றோடு எனது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது. சினிமாவில் ஒரு நடிகை உச்சத்தை தொட வேண்டுமென்றால் இயக்குநர், நாயகர்களின் ஆசையை தீர்த்தாக வேண்டும் என்ற மோசமான சூழல் தமிழகத்தில் மட்டுமல்ல, இங்கே தமிழ் சினிமாவிலும் இருந்தது. எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவர் அப்போது இலங்கையில் உச்சத்தில் இருந்த நடிகர்.

அவரது ஆசைக்கு நான் சம்மதிக்காத காரணத்தினால் அவர் எனது பட வாய்ப்புகளை நிறுத்திவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் சினிமாவில் நடிப்பதை எனது குடும்பத்தினரும் விரும்பவில்லை. நாடகங்கள் என்றால் பரவாயில்லை. ஒரே நாளில் முடிந்து விடும் என்று நாடகத்தில் நடிக்கச் சொன்னார்கள்.

ஒரு நாடகத்தில் நடிக்க ஐநூறு ரூபாய் வரை கொடுப்பார்கள். சில தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் பணத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். பாக்கிப் பணத்தை அப்புறம் தருகிறேன் என்பார்கள்.

அத்தோடு அந்த கதை முடிந்து விடும்.. இப்படி நிறைய பேர் இருந்தார்கள். நாடக உலகிலும் எத்தனையோ சதிக்காரர்கள் இருந்தார்கள். பெண் என்றாலே காமம் பாலியல் சில்மிஷத்துக்கான ஒரு பொருள் என்பதாகவே பார்த்தார்கள்.
‘விளக்கேற்றி வைத்தவள்’ நாடகத்தில் கம்பளை தாசனுடன்

“ஒரு முறை ஜிந்துபிட்டி மோடிஹோலில் லடிஸ் வீரமணியின் ‘வண்டரித்த மலர்’ நாடகம் அதில் கதாநாயகனாக இலேரியன் நடித்தார். நான் நாயகி. மேக்அப்ரூம் மேடைக்குக் கீழே அமைந்திருந்தது. அதற்கு செல்ல ஏனி வழியாக இறங்க வேண்டும்.

நான் மேக்கப் போடுவதற்காக ஏனியால் இறங்கினேன். அவ்வளவுதான்! அடுத்த செக்கனில் ஏணியோடு மறுபக்கம் போய் விழுந்தேன். எல்லோரும் என்னை வந்து தூக்கினார்கள் உயிர் போகிற வலி. நாடகத்தை நிறுத்தலாம் என்று தயாரிப்பாளர் கூற நான் வேண்டாம் நடிக்கிறேன் என்று சொல்லி நடித்தேன். பார்வையாளர்கள் யாருக்கும் எனக்கு கால் முறித்த சம்பவம் தெரியாது. கொஞ்ச நேரத்தில் கால் வீங்கி விட நாடகம் முடிந்து விட்டது.

பிறகுதான் விடயம் பார்வையாளர்களுக்கு தெரியவர பாராட்டும் ஆறுதலும் எனக்குக் குவியத் தொடங்கியது. இந்த சம்பவத்தால் ஒருவருடம் நடக்கமுடியாமல் வீட்டிலேயே இருந்தேன்.

ஏணியில் நான் விழுந்தது யதார்த்தமாக நடந்தது என்றுதான் நினைத்தேன். ஆனால் அது சதி என்பது பின்னர் தெரியவந்த போது அதிர்ந்து போனேன்.

என்னை அடைவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த அந்த நடிகர்தான் தன் எண்ணம் ஈடேறாமல் போனதால் ஏணியில் பொருத்தியிருந்த அணியை கழற்றி விட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. எவ்வளவு குரூரமான மனிதர் அவர்!

அவரின் பெயரை சொல்ல முடியாது. அவரும் திறமையான கலைஞர்தான். ஆனால் பெண்கள் விசயத்தில் மோசமான பேர்வழி” என்று தாம் கலையுலகில் சந்தித்த கசப்பான அனுபவங்களை சொல்லி மாய்ந்துபோனார் கெளரி.

மறக்க முடியாத நபர்கள் பற்றி கேட்டோம்

“நிறையபேர்.. அவர்களில் வி.கே.டி.பாலன், கலைச்செல்வன், மோகன்குமார், இலேரியன் பெர்னாண்டோ, டைரக்டர் சுவைர்ஹமீத் ஆகியோரை குறிப்பிடலாம். நான் ஆசைப்படுகிற விசயம் சொந்த வீட்டில் வாழ வேணும் என்பதுதான். இன்னமும் வாடகை வீட்டில்தான் கிடந்து கஷ்டப்படுகிறேன்”

வாழ்க்கையில் நீங்கள் தவறவிட்டதாக எதை நினைத்து இன்னும் வருந்துகிaர்கள்?

“நல்லா படிச்சிருக்கலாம், தவறவிட்டுட்டேன். அப்புறம் இந்திய சினிமாவில் கிடைத்த வாய்ப்பு எமது குடும்பத்தாரின் பயத்தின் காரணமாக கை நழுவிப் போனது. இந்த இரண்டு விடயங்களையும் இன்று நினைத்தாலுப் துக்கம் தொண்டையை அடைக்கிறது என்றுதான் சொல்வேன்.

நீங்கள் கடந்து வந்த வாழ்க்கையை நின்று திரும்பிப் பார்க்கும் போது உங்கள் மனதில் ஏற்படும் உணர்வுகள் பற்றி சொல்ல முடியுமா?

“சே! சே! என்ன வாழ்க்கையடா இது! வேணாம்னு போயிருச்சி!” என்பதுதான் என் அனுபவம் என்று அவர் பதில் சொன்னபோது திரும்பவும் அதிர்ந்து போனோம்.

ஏனெனில் இதுவரை நாம் சந்தித்த நபர்கள் அனைவருமே வாழ்க்கை இனிப்பென்றும் நிறைவென்றும் தான் சொல்லியிருக்கிறார்கள் இவரின் பதிலில்தான் இப்படி ஒரு விரக்தியைக் கண்டோம். மற்றவர்களை மகிழ்விக்கும் ஒரு கலைத் தொழிலில் ஈடுபட்ட இப்பெண்மணி, கலைஞரின் வசனத்தில் சொல்வதானால் எத்தனை தீயாறுகளைக் கடந்து வந்திருப்பாள் என்பதை இந்த விரக்திப் பார்வை உங்களுக்குச் சொல்கிறது அல்லவா!

அடுத்த வாரம்
நாடக ஆசிரியர்

எம்.அ~;ரப் கான்


இன்று தமது ஒரே மகளையும் பிரிந்து குடும்பத்தினராலும் கைவிடப்பட்ட நிலையில் கிறிஸ்தவமே ஒரே ஆறுதல் என்று தமது சோகத்தையெல்லாம் கர்த்தரிடம் ஒப்படைத்து ஆறுதல் அடைந்திருக்கிறார் கெளரி.

தனது தங்கையான ப்ரியா ஜெயந்தியுடன் வாடகை வீட்டில் கஷ்டப்படுகிறார்.

நம் நாட்டு கலையுலக பிரமுகர்கள் இவருக்கு முடிந்த உதவிகளை செய்து இவருக்கு கை கொடுக்கலாமே!

நன்றி - தினகரன் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்