/* up Facebook

Jun 3, 2011

பரத்தமை : ஆதிக்கச் சமூகத்தினர் கட்டமைத்த ஒடுக்குமுறை வடிவம் - குட்டி ரேவதிசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ‘சங்க கால மகளிர்’ எனும் பொருளில் மூன்று நாள் (கடந்த மே 20 – 22) கருத்தரங்கை சென்னையில் நிகழ்த்தியது. பல தரப்பிலிருந்து வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவை, விளிம்பு நிலை மக்கள், பெண்பாற் புலவர்கள், ஆளுமைத் திறன், பெண்ணியம், பெண்மொழி, பாலின நோக்கு, இலக்கிய மாந்தர்கள், மகளிர் மாட்சி, கைம்மை, சமூகவியல் நோக்கு, பன்முக நோக்கு என்பவையாக இருந்தன. தொடக்கநாள் விழாவில், எழுத்தாளர் பாமா ஆற்றிய உரையை, இலக்கியப் பங்கேற்பாளர்கள் மிகச் சிறந்த உரை என்று சிலாகித்தனர். தவறவிட்டுவிட்டோமே என்ற வருத்தம் மேலிட்டது.

நான் பாலின நோக்கு எனும் அமர்வில், ‘பரத்தமையும் உடலரசியலும்: சங்க கால மகளிரின் உடல் பற்றிய கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ளல்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தேன். இதற்கு ஒரு வார உழைப்பு தேவைப்பட்டது என்றாலும், நிறைய மறைபொருள்களைக் கண்டறிய முடிந்தது. சங்ககால இலக்கியங்களில் புலமை வாய்ந்த, அதை நுணுகி ஆராயத்தக்க பல நூறு பேராசிரியப்பெருமக்களையும் அற்புதமான சான்றோர்களையும் நாம் கொண்டிருக்கிறோம். அதன் விவரங்களையும், எத்தனை நூறு பாடல்களையும் மனனமாகச் சொல்லி, விளக்கக்கூடிய விரிவுரையாளர்களையும் நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், விவர அறிவையும் பொது அறிவையும் ஒரு செயல்திறமிக்க விஷயமாகவோ, படைப்பாற்றலாகவோ கருதமுடியாது இல்லையா? என் தரப்பு விவாதப் புள்ளிகள் கீழ்க்கண்டவையாக இருந்தன.

‘சங்ககாலப் பெண்கள்’ என்பவர்கள் எப்பொழுதுமே வியக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட புகழுடைய பெண்டிராக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மக்கள் மீது ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தும் வாய்ப்பு கொண்ட அரசின் கைகளில் தான் கலையும், படைப்பிலக்கியங்களும் இருந்திருக்கின்றன. அத்தகைய அரசு ஆவணப்படுத்திய இலக்கியங்கள் தாம் நம் கைகளில் கொடுக்கப்படுகின்றன. அவற்றைத் தான் நாம் இலக்கியம் என்று கொண்டாட வேண்டியிருக்கிறது.

ஆண் என்பவன் தலைவனாகவோ அரசனாகவோ இருக்க, பெண்கள் குலமகளிர், தோழியர், பரத்தையர் என தன் காம நுகர்ச்சியை ஆணுக்கு வழங்கும் விதம் கொண்டு பல பிரிவினராக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதில், பரத்தையரும் பல பிரிவினராகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.

குலமகளிர், தோழியர், பரத்தையர், கைம்பெண்கள் இவர்கள் எல்லோருமே பெண்ணடிமைத்தனத்தின் குறியீடுகளாக ஆக்கப்பட்டிருப்பதன் விளக்கங்களைத்தாம் நாம் சங்கப்பாடல்கள் என்று கொண்டாடி வருகிறோம். மேற்கண்ட எல்லா வகைப்பெண்டிருமே, ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டை கொஞ்சமும் விழிப்பிலாது நுகர்பவர்களாய் இருக்கின்றனர்.

பரத்தையர்கள், ‘காம இன்பத்தை நுகரும் காமுகர்களாகிய பன்றிகள் உண்பதற்குரியதாய் விளங்கும் இரண்டு இதழ் அமைந்த வாய்க்குத் தொட்டியைக் கொண்டவளே’ என்று பிற பெண்டிரால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறாள். என்றாலும், கற்புடைப்பெண்டிரும், தோழியரும் எந்த தனியுரிமையும் அற்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தற்காலத்திலும் பாலியல் அரசியல் என்னும் நடவடிக்கையாக, பரத்தமை முன்வைக்கப்படுகிறது. இது தன் மீதான ஆணின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதே அன்றி வேறு இல்லை. கற்பைப் போன்றே அதற்கு நிகரானதொரு ஒடுக்குமுறை வடிவம், பரத்தமை. ஆதிக்கச் சமூகத்தினரால் முன் மொழியப்பட்டதும், வழிமொழியப்பட்டதும், ஆண்களின் நுகர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டதுமான வடிவம் பரத்தமை. இதிலிருந்து, திருநங்கைகளை மீட்டு, அவர்கள் சம உரிமை பெறவும், நிலைநாட்டவும் போராடி வருகிறோம் என்பதை இங்கு நினைவில் கொள்வோம்.

அத்தகைய பரத்தமை மற்றும் பிற ஒடுக்குமுறைகளின் நீட்சியைத் தான் நாம் இன்றும் பின்பற்ற, வற்புறுத்தப்படுகிறோம். இது, சங்ககாலப் பெண்டிரின் நிலையை நினைவூட்டிக் கொள்வதாலும், விதந்தோதப்படுவதாலும் நமது உளவியலுக்கு அதிகார நிறுவனங்களால் திணிக்கப்படுகிறது. சங்க காலப் பாடல்களில், ‘பரத்தமை’ என்பது ஆணாதிக்கச் சமூகத்தின் புத்துருவாக்க வடிவமாகவும், ஒரு சமூக மதிப்பாகவும் இருந்திருக்கிறது.

தொல்குடியின் பண்பாக இருந்த இனக்குழுச்சமூகம் உடைந்து நிலவுடைமைச் சமூகம் கட்டியமைக்கப் பட்டபோதும், அது சமூகத்தில் உறுதிப்பட்ட போதும், பெண் ஒடுக்குமுறையை கட்டமைக்கப் பெண்ணுடல் தேவைப்பட்டது. அதற்கு, ‘பரத்தமை’ எனும் தன் உடலை எதற்கும் வாய்ப்பாக அனுமதிக்கும் பெண்ணின் மனோநிலை தேவைப்பட்டிருக்கிறது.

சங்ககாலப் பரத்தையரின் யோனிகள், ஆண்களின் காம நுகர்ச்சிக்கென இருந்தனவே தவிர, தாய்மை, குழந்தைப்பேற்றை அனுபவிக்கும் உரிமையை, வாய்ப்பை பெறவில்லை. இதில், பெண்களின் பாலியல் ஆற்றல் முழுமையடையாமல் முற்றுமுழுதுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

தோழியர் எனும் பெண் பிரிவிற்கு, உடலே இல்லை என்பது போல, அவர்கள் வெறும் தலைவி, தலைவன், பரத்தையர் எனும் உறவுகளுக்கு இடையேயான ஊடகமாகவே சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர்.

பரத்தையருக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ வழங்கப்படாததால் அவர்கள் ஒடுக்கப்பட்ட இனக்குழுவைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும். ‘பரத்தமை’ எனும் வடிவத்தை தற்காலத்திலும் நாம் அங்கீகரிப்பதன் வழி, ஒடுக்கப்பட்டவர் மீதான ஆதிக்கத்தை அங்கீகரிக்கிறோம் என்றே பொருள்படும்.
இந்தக் கடைசிக் கூற்றிற்குத் தேவையானதோர் விவரமாகக் கீழ்க்கண்ட தகவலைக் குறிப்பிடுகிறேன்.

325 கி.மு.வில் பார்ப்பனர்கள் விவசாயிகளாகின்றனர். அப்பொழுது அவர்கள் படைகளில் சேர்ந்து பணிபுரிதலிலும் ஈடுபடுகின்றனர்.

269 கி.மு.வில், அரசனையும் சட்டத்தின் ஆளுகையின் கீழ்க்கொண்டு வரும் திட்டம் உருவாக்கப்படுகிறது.

563 கி.மு.வில், கெளதம புத்தன் செய்த மிகப்பெரிய சமூக மாற்றத்தையும் நாம் இங்கு நினைவில் கொள்வோம்.

185 கி.மு.வில் அசோகனின் அடுத்த தலைமுறையினர் தீவிரமாகப் பெளத்த கருத்தைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்த போது, புஷ்யமித்ர சுங்க என்பவன், புராண ராமனின் மறு உருவாக்கமாகக் கருதப்படுபவன், அசோகனின் பேரன் பிருஹதத்தனைக் கொன்று ஆட்சிக்கு வருகிறான். பெளத்தர்களையும் விகாரைகளையும் அழித்து, வருணவிவஸ்தாவை, சாதிய அமைப்பாக, அதன் அதிகாரப் படிநிலைகளுடன் நிலைநிறுத்துகிறான்.

மேற்குறிப்பிட்ட கால அமைப்பு, சங்க கால இலக்கியங்களுக்குச் சமமான காலக்கட்டமாக இருந்திருப்பதால், அதன் தாக்கத்தை சங்க காலப் பாடல்களில் எவ்வாறு கண்டறிவது என்பதும், சங்க இலக்கியத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்விற்கு, அது ஆதிக்கத்தில் இருந்தவர்களின் படைப்புகளாக இருந்தமை தான் காரணமா என்பதும் நீண்ட ஆய்வுக்கட்டுரைக்கான விவாதமாகும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்