/* up Facebook

Jun 8, 2011

மே -9 குஜராத் நிகழ்வைப் பற்றிய ஒரு நினைவு கூறல் அல்லது இறைமை, இலக்கியம், கலை – இத்துப்போன பாசிஸம் - மோனிகா


2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதியன்று பரோடாவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பிரிவில் நடந்த ஒரு நிகழ்வு. மாணவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட படைப்புகளை ஆண்டின் இறுதியில் காட்சிக்கு வைக்கின்றனர். சக மாணவர்களும் பெற்றோரும் மாணவர்களின் கலைப்படைப்புகளைக் கண்டு களிக்கும் வகையில் இக்காட்சியை நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. நான் முதுகலைப் படிப்பின் முடிவில் நடைபெறும் கடைசிப் பரீட்சையான வாய்வழித் தேர்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

திடீரென ஒரு கும்பல் வளாகத்தில் நுழைகிறது. பா.ஜ.க வைச் சார்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் பத்திரிக்கையாளர்கள் துணையுடன் ஒரு மாணவனைப் பிடித்து அடித்து இழுத்துச் செல்கிறார். கல்லூரி முதல்வருக்கோ மாணவர்களுக்கோ எந்த ஒரு யூகமும் இல்லாத நிலையில் வளாகத்தில் குழப்பம். போலீஸ் சூழ அந்த மாணவரைக் கைது செய்து சென்றுவிட்டனர். ஒரு சில மணி நேரங்களுக்குப் பிறகே தெரிகிறது சந்திரமோகன் என்னும் பதிப்புக் கலை இரண்டாம் ஆண்டு மாணவர் துர்க்கையின் கருவிலிருந்து தான் வெளிவருகிற மாதிரி செய்திருந்த ஒரு பிரும்மாண்ட அளவிலான ஒரு ப்ளெக்ஸ் பிரிண்டைக் குறித்த சர்ச்சைதான் அது என்று. அதே மாணவர் சிலுவைக்கடியில் ஒரு சிறுநீர்த்தொட்டி அமைத்திருந்ததும் கூடுதல் பிரச்சினை. அம்மாணவர் கிறித்துவர்களின், இந்துக்களின் மனது புண்படுமாறு வரைந்துவிட்டார் என்று கூறி ஒரு கிறித்துவப் பாதிரியாரையும் முன்னெச்சரிக்கையுடன் கூட்டி வந்திருந்தனர் இந்து முன்னணியினர்.

மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்று திரண்டு வளாகத்தின் உள்ளே அரசியல்வாதிகளும், போலீஸும் முன் அனுமதியின்றி நுழைந்ததைக் கண்டித்து “ட்ரெஸ் பாஸிங்” வழக்குப் பதிவு செய்வதற்கான எப்.ஐ.ஆர் போடுவதற்காக இரவு முழுவதும் உட்கார்ந்திருந்தும் காவல் நிலையத்தில் அது பதிவு செய்யப்படவில்லை. அதனை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் கலைக்கும், நிர்வாணத்திற்கும் பண்டுபட்டு வந்த தொடர்புகளைக் குறித்து பல விளக்கங்கள் கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலிருந்தும் கலைப்பிரிவு மாணவர்கள் தரப்பிலிருந்தும் கொடுக்கப்பட்டன. கஜுரஹோ, சூரியனார் கோயில் போன்ற நமது சரித்திரப் புகழ் வாய்ந்த கோயில்களில் காணப்படும் நிர்வாண/ ஆண் பெண் உறவைக் குறிக்கக் கூடிய சிற்பங்களின் புகைப்படங்கள் கொண்ட ஒரு புகைப்படக் கண்காட்சிக்கும் வழிவகை செய்யப்பட்டது. அதனையடுத்துக் கல்லூரி முதல்வர் சிவாஜி பணிக்கர் வேலையிலிருந்து தற்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் அவர் அக்கண்காட்சிக்கு மன்னிப்புக் கேட்கும் வரை கல்லூரி வளாகத்திற்கு உள்வரக் கூட அனுமதி மறுக்கப்பட்டார். இன்றுவரை அவரும் அவரைச் சார்ந்த ஆசிரியர்களும் தற்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களது பாஸ்போர்டுகளுக்கும் தடை விதித்துள்ளது குஜராத் அரசாங்கம்.

  1. சந்திரமோகன் ஒரு இந்து. இந்து மதத்தின் உணர்வுகளின்படி பெண் கடவுளைத் தாயின் ஸ்தானத்திலிருந்தே வைத்துப் பார்த்தமையால் அதில் வக்கிரமான எண்ணங்கள் எதுவும் இல்லை.
  2. கலைஞன் என்பவன் மிகவும் மென்னுணர்வுகளைக் கொண்டவன் தன்னுடைய கலைப்படைப்புகளின் மூலம் அவற்றை வெளிப்படுத்துவதற்கான உரிமை அவனுக்கு இருக்கிறது. முக்காடிட்டுத் தொழுகை செய்யும் ஒரு பெண்ணின் அங்கியினூடே நிர்வாணத்தைக் காட்டியதற்காக வான்கா எனப்படும் குறும்பட இயக்குனர் இசுலாமிய அடிப்படை வாதிகளால் தாக்கப்பட்டார். Fire, water போன்ற படங்களுக்காக Deepa Mehtaவையும் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தமைக்காக, எம்.எப்.ஹுசைனும் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
  3. இறைமை எனப்படுவது யாது? சிறு சிறு குழுக்களாக சடங்கு சார் சமூகமாக இருந்த நம்மை சிறுதெய்வ / பெருந்தெய்வ வழிபாட்டாளர்களாக வர்க்கப்பாகுபாடு செய்து இந்துக்களென்று ஒரு பெரும் அடையாளத்தினுள் நம்மை சிறைப்படுத்திய வெள்ளையன் (காலனீயத்து) இன்றும் நம்முள் சீவித்திருக்கிறான். தனி மனிதனுக்கான ஒரு நம்பிக்கை/ அவன் வாழ்வின் மீது பற்றுகொள்வதற்கான ஓர் வழிகோலாக ‘கடவுள்’ என்ற ஒரு அவதானிப்பு இருப்பது இயல்பு. [இராஜன் குறை அதனை கட(கடக்கும்)-உள்(உள்ளுறை) என்று குறிப்பிடுகிறார்]. அத்தகைய கடவுளை குழுவாக சேர்ந்து வழிபடுவதும், குழுக்களின் அடையாளப்படுத்துதலுக்காக கடவுளின் இயல்புகளை வரித்தலும், அன்றாட வாழ்வின் சுவாரஸியத்திற்காகவும், அர்த்தப் படுத்தலுக்காகவுமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிர்ணயித்துக் கொள்வது மனிதனின் இயல்பாகிறது. இவற்றை தேசிய/மொழி அடையாளங்கள் சார்ந்த பெருங்குழுவாக்கி இந்தியா இந்துக்களின் தேசம், இந்துப் பெண்கள், இந்துக்கடவுள்கள் என்று ஒருபான்மையில் அழைத்து அதில் பெண்களுக்கு மட்டும் (கவனிக்க அது ஆண்களுக்கல்ல) கற்பு என்ற கவசத்தை அணிவித்துப் பாலியம், பாலியல் குறித்த தவறான புரிதல்களை விக்டோரிய நெறிமுறைமைகள் மூலம் இறக்குமதி செய்த இச்சமூகம் இறைமையையும் அதன் வழியில் நடத்துகிறது.


மரபு வழியாகவே நமது சமூகங்கள் பாலியல் கூறுகளைத் கோயிற் சிற்பங்களின் ஒரு பகுதியாகக் கொண்டவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மனித வாழ்க்கையையும் இறை-நம்பிக்கை, வழிபாடு போன்ற முயற்சிகளையும் எவ்வாறு பிரித்துப் பார்க்க முடியாதோ அதே போல்தான் மனித வாழ்க்கையினுள் ஊடாடி இருக்கும் பாலியல் உணர்வுகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. நமது கோயில்கள் இந்துக் கோயில்களாகட்டும், சமண, பெளத்த மதக் கோயில்களாகட்டும் ஒவ்வொன்றிலும் அங்குள்ள சமூகத்தின் அன்றாட வாழ்வு சார்ந்த சிற்பங்களை (sociological panels) கோயிலின் வெளிச்சுற்றுச் சுவர்களிலும் கர்ப்பக்கிரகத்து நுழைவாயிலைச் சுற்றியும் காணலாம். கஜுரஹோ, ஒரிசா சூரியனார் கோயில் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். பரோடா பல்கலைக்கழகத்தின் முரண்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேராசிரியர் சிவாஜி பணிக்கரின் தலையில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது கல்லூரியின் ஆசிரியர் குழு. அதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த இந்துத்துவ அரசாங்கத்தைச் சார்ந்த கல்லூரி மேலிடம் அக்கண்காட்சி நடத்தியமைக்காக மன்னிப்பு கேட்டாலே ஒழிய ஆசிரியர்களையும் பணிக்கரையும் திரும்ப வேலையிலமர்த்த முடியாது எனக்கூறி குஜராத்தின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சம்பவம் நடந்து இந்த மே 9ம் தேதியியுடன் மூன்றாண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் அவர்கள் வேலையின்றித் தொடரும் அவலம் தொடர்கிறது.

கோத்ராவில் நடந்தவற்றையும், அகமதாபாத்தில் நடந்தவற்றையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம். எனினும், ஒரு கலைக் கல்லூரியின் இந்த அவல வரலாறு அவற்றுடன் கூடி நினைவு கூற வேண்டிய ஒன்று. அடித்தள உழைக்கும் மக்களின் பொது அறிவையும், உழைப்பையும் (இன்றுவரை ஒப்பந்தக் கூலிமுறையும் விளிம்பு நிலைப் பெண்களின் கற்பழிப்பும் அதிக அளவில் நடப்பது குஜராத்தில்தான்) ஒருங்கே சேர்த்து தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு மிடுக்கு நடைபோடும் மோடியின் ஆட்சியை கண்டு ஏனைய இந்தியர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள் மே-9.

இந்த கட்டுரை கடந்த ஆண்டு மே-9க்காக எழுதப்பட்டது. இந்த ஆண்டு காந்தியின் மறுஅவதாரமாக தன்னை பறை சாற்றிக் கொள்ளும் அன்னா ஹசாரே மோடியின் ஆட்சியை பொற்காலம் என்கிறார். எரிக்கப்பட்ட இளம்பெண்களின் முகங்களும் கருவிலேயே கொய்து தீக்கு இரையாக்கப்பட்ட இசுலாமிய சிசுக்களும் அவரது அறிவைக்கண்டு வியக்கத்தான் செய்யும்.

இவற்றிற்கு நடுவே சென்ற மாதம் சிவாஜி பணிக்கரின் ராஜினாமாவை பல்கலைக்கழக மேலாண்மை அங்கீகரித்துவிட்டது என்பது கூடுதல் செய்தி.

நன்றி - தூமை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்