/* up Facebook

Jun 30, 2011

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை – கவிதா (நோர்வே)


மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் காலை விடிந்தது.

கவிதை என்பது உணர்வு. கல்விக்கூடங்கள் மூலமோ பயிற்றுவிப்புகள் மூலமோ நாம் கவிதையையோ கவிஞர்களையோ மல்லுக்கட்டி இழுத்துவர முடியாது. வாழ்வின் பெருநிலத்தில் உளவியல் விதைகளாலும் அனுபவ உரத்தினாலும் உழுது பயிரிட்ட உணர்வுகளின் அறுவடை கவிதை.

விரிந்த ஆய்வும் ஆழமான தேடலும் இல்லாமல் மலையக இலக்கியங்களை நாம் இலகுவாகப் பேசிவிடமுடியாது. உலகம் முழுதும் கவிதையின் பிரவாகம் கட்டுடைத்து செல்கின்ற இந்தக் காலத்தில், மலையக மக்களின் கவிதை இலக்கியம் என்பது எம்மத்தியில் பெருமைப்படுமளவு வளரவில்லை என்ற மலையக இலக்கியம் தொடர்பான சில கசப்பான உண்மைகளை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நாட்டார் பாடல் வடிவில் வளர்ச்சி பெற்றுவந்த மலையகக்கவிதைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கவிதை நடைகளில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், இக்கவிதை துறை அதன் ஏற்றத்தை பெரிய அளவில் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இக்கவிதை நூல் என்னிடம் கொண்டு வந்த சேதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட வேறு எந்த நோக்கமும்மில்லாது, என் மீது உட்கார்ந்து கொண்ட மனப்பாரத்தை இதன் மூலம் கொஞ்சமேனும் இறக்கி வைக்கும் முயற்ச்சியாய் சிறு இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன்.

கொளுந்து பறிக்கும் பெண்களின் பிரம்புக்கூடைகளுள் அடங்கமறுத்து எகிறி விழும் தேயிலைக் கொளுந்துகளாகவும், கூடையின் ஊட்டுக்குள் இருந்து அமுக்கம் தாங்காது எட்டிப்பார்க்கும் தேயிலைக் கொளுந்துகளி;ன் நுனிஇலைகளாகவும் விளிம்புநிலை மக்களின் கோபமும், துயரமும் கவிதைகளாகி ”இசையால் பழியப்பட்ட வீணை” கவிதைத் தொகுதியில் எமக்குக் காணக்கிடைக்கின்றன.
………….
பிலிஸ்தியன் இனத்தைச்சேர்ந்த மகாவீரனான கோலியாத்தின் உயிரையும், ஆணவத்தையும் சிறு கவண்களால் அடித்து வீழ்த்தியது மட்டுமன்றி, கோலியாத்தின் உயிரை எடுப்பவர்களுக்கு அரசையும் மகளையும் தருவதாகக் கூறி ஏமாற்றிய அரசனையும் எதிர்த்து, வென்று தனக்கென ஒரு சாம்ராஜியத்தையே அமைத்துகொண்ட தாவீதைத் தொட்டுச்செல்கிறது கீழ்க்காணும் சந்திரலேகாவின் கவிதை வரிகள்.
எனக்கு பாதுகாப்பாய் வாழ
சதுர அடிகூட அதிகம்தான்!
தாவீதுக்கு கவணும் கற்களும்தான்
வீர கவசம்
குறிஞ்சியின் தாவீதுகளுக்கும்!
எனது நிலம் எனது மொழி
எனது இனம் எனது குருதி யாவும்
மாசுபடுகிறதெனில்
மரணம் எனக்கு
மரியாதைக்குரிய வரப்பிரசாதம்!
இன்னும் கற்களைப் பொறுக்கு
கவண்களை உற்பத்தி செய்!
- சந்திரலேகா கிங்ஸ்லி
அமுக்கப்பட்ட ஒரு சிறு சமூத்தின் ஒட்டுமொத்தக் கோபக்குரலாக எழுந்து வருகின்றது சந்திரலேகாவின் இக்கவிதை வரிகள்.
…..
வறுமையே தலையெழுத்தாகிப் போன
மலையகத்திற்கு
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
சவால்களுக்கு மத்தியில் இணைந்து
வாழ்ந்து கொண்டிருக்கும் எமது
வறுமையின் நிறம்
இன்னும்
கடுமையாகிக் கொண்டே இருக்கிறது
- மஞ்சுளா
உலகில் எப்போதும் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கொடூரமானவை. அதிகார அரசினால் தன் பார்வைக்கு எடுபடாத சிறுபான்மையினத்தவரின் வாழ்க்கைத்தரத்தை வெளிச்சத்திற்கு எடுத்துவருதல் என்ற பொறுப்பை இனி ஒவ்வொருவரும் முன்னெடுத்தாலொளிய, மலையகமக்களின் நிறம் மாறுவதற்கில்லை என்பதையும் தனது வாழ்க்கை முறையையும் மஞ்சுளா சிறப்பாகத் தனது முழக் கவிதை வரிகளிலும் வடித்திருக்கின்றார்.
….
மலையக மக்களின் வாழ்நிலையை மட்டுமல்ல உலகமட்டத்திலும் உள்ள பெண்ணியச்சிந்தனைகளும், பெண்நிலைவாதங்களும் இங்கும் பல கவிதைகளில் காணக் கூடியதாகவுள்ளது. பெருமுற்கள் நிறைந்த பாதைகளில் சலிக்காமல் பயணிக்கும் மலையகப்பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது பற்றி யாரும் பெருமளவில் பேசுவதில்லை. பிற மாநிலங்களில் காணப்படும் வசதிவாய்புகளுடனும், கல்வியறிவுடனும் ஒப்பிடும் போது மலையகப் பெண்கள் தமக்குரிய உரிமைகளைக்கூட அறியாமலேயே வாழ்ந்துள்ளனர். சகலநிலையிலும் பின்தங்கிய மலையகப்பெண்களிடம் இப்படிக் கூறுகின்றார் கவிஞர் புனிதகலா.
அடடா…
அது என்ன உன்
சிறகுகளில் புராணப் பிசுபிசுப்பு?
அறிவுச் சுடரொளியில்
உலர்த்திக் கொள் விரைந்து
…………..
அதே பெண்ணியச்சிந்தனையோடு க.கவிதாவின் கவிதையொன்று இப்படிக் கேட்கிறது.
மலைகளேறி
மழையில் நனைந்து, விறைத்து
கொழுந்து சுமந்து, இறக்கி
களைப்போடு வீடு வருகின்றேன்
வழமை போலவே
வழமைக்கு மாறாக
என்றாவது
ஒரு கோப்பைத் தேனீர் தந்து
அதிர்ச்சியின்பத்தால்
சிலிர்ப்பூட்ட
உன்னிடம் ஏனில்லை
என்னைப் பற்றிய சிறு எண்ணம்
- க.கவிதா
வெளியில் வேலை வாய்ப்பென்று பெண்கள் கொளுந்து கிள்ளப் போனாலும் வீட்டிலும் வேலைகளைப் பெண்களே தம் முதுகில் சுமக்கும் பெண்களின் யதார்த்தமான ஒரு கேள்விதான் இவருக்கும் வந்திருக்கிறது. அண்மைக்காலங்களில் மலையகப்பெண்களின் வாழ்வுநிலை சிறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது, தேயிலை பறிப்பதை தவிர்த்து கல்வி தரத்தினை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், பெரும்பான்மையினர் உரிமை, வலிமை, கல்வியனைத்தையும் ஆதிக்க சக்தியிடம் அடகு வைத்திருப்பவர்களாகவே வாழ்கின்றனர்.
…….
தாய்ப்பாசம் என்பது பொதுச் சொத்து. இக்கவிதை நூலின் ஒரு கோடு போல பல இடங்களில் தாய்பாசம் இழையோடுகிறது. சாதரணமாக தன் உயிரை வயிற்றில் சுமப்பவளிடம் ஏற்படும் தாய்ப்பாசம் ஒவ்வொரு உயிருக்கும் உடைய ஒன்று. மலையகத்துத் தாயின் வலியை அறிந்த ஒரு பிள்ளையின் பாசம் சுமந்த வரிகள் மீனால் செல்வனின் கவிதையில் கரைகிறது. தேயிலைக் கொளுந்து பறிக்கும் கூடையைத் தலையில் தினமும் சுமந்து செல்வதால் தாயின் தலையில் ஏற்பட்ட பள்ளத்தை காட்டி எம் மனதில் வடுவை ஏற்றிப் போகிறார் கவிஞர். தம் பிள்ளைகளின் கல்வித் தரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் ஏற்றுவதற்காக வாழ்க்கையோடு போராடும் தாய்மார்களின் வலி ஊறிய வாழ்க்கையோட்டம் பல கவிதைகளில் மனக்குருதியாய் பீறிடுகிறது.
என்னைத் தேடாத பணத்தை
நான் தேடி
ஓய்வில்லாதோடி
கூடுவாரோடு கூடி
பலரிடம் பாசாங்காய் பல்லிளித்து
கழுத்துக்குமெல் மட்டுமே
அதிகமாய் வாழ்ந்து
தலைகீழாய்த் தொங்குகின்ற
வெளவாலின் வாழ்வன்ன போதுகளில்
தசாப்தங்களைக் கடத்திவிட்ட நான்
இன்றிரவில்
உன்னை நினைக்கிறேன் தாயே!
மண்டையோட்டில் மாறாத பள்ளத்தையும்
அடிவயிற்றில் ஆழியாத கோடுகளையும்
போட்டுக்கொண்ட தாயே
- மீனால் செல்வன்
………..
நாமெல்லாம் துணிகளுக்காய்
பிய்த்துக் கொண்டிருக்கையில்
அம்மணமாய் ஒருவன்
அரங்கேறி விடுவான்
- சந்திரலேகா கிங்ஸ்லி
சந்திரலேகாவின் இந்த நான்கு வரிகளில் வலிசுமந்த வாழ்க்கையை ஆயிரம் கோணங்களில் காணமுடிகிறது. துன்பியல் கட்டங்களால் நிரப்பப்பட்ட இம்மக்களின் வாழ்க்கைவட்டம் ஆதிக்க அதிகார சக்தியினால் முடக்கப்பட்டிருப்பதும், வந்தேறு குடிகளென தமிழர்கள் நாமே அவர்களை புறக்கணித்து வருவதும் இன்றும் நடைமுறையில்க்காணும் நாம் வெட்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
…..
அட்டைக்கடி பொறுத்து அந்த
கங்காணி கத்தல் பொறுத்து – உன்
அப்பன் உதை பொறுத்து
பொருளாதார இடி பொறுத்து – கண்ணே
உணவு உடை தந்திடுவேன் – நல்
உயர் கல்வி தந்திடுவேன் – என் சொத்தே
நீ எனக்கு தருவாயோ – நம்
இனத்தின் விடிவுதனை என்றென்றும்
என் கருவறைக் கூலியாய்!
- சு.உஷாநந்தினி

பாகுக்கும் பருப்பிற்குமாய் சங்கத் தமிழைக் கேட்ட ஒளவை போல. தன்பிள்ளையிடம் கருவறையில் சுமந்த கூலி கேட்டுப் தன் குழந்தையிடம் பேரம் பேசும் தாயின் இக்கொடிய யதார்த்தத்தை நாம் எப்போது இல்லாதொழிக்கப் போகின்றோம். கவிஞன் வாழும் சூழ்நிலையே கவிதைகளை வழிநடத்துகின்றன என்பதற்கு இக்கவிதையே ஒரு நற்சான்று.
சமூகத்தினரின் துயரங்களும், பிரச்சனைகளுமே பாடுபொருளாகக் காணப்படும் இத்தொகுதியில் முண்டாசுக் கவிஞன் பாரதியின் பாதிப்பையும் கோபத்தையும் இம்மக்கள் மத்தியில் பெரிதும் உணரக்கூடியதாக உள்ளது. இக்கவிதை நூலைப் படித்துமுடித்த தருணம் இதில் தொகுக்கப்பட்டுள்ள கவிதைகள் மலையகப்பெண்களின் வாழ்வியலை எத்தனை தூரம் எடுத்தியம்பி ஆழமாய்ப் பதித்திருக்கிறது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அதையும் தாண்டி மலையகப் பெண்களின் கவிதைகளை சேகரித்து அதை தொகுத்து, பின்தங்கிய உலகினை முன்னோக்கி நகர்த்தும் ஒருசிறு முயற்சியாக ”இசை பிழியப்பட்ட வீணை” தொகுதியை இச்சமூகத்திற்கு கையளித்த ஊடறு வெளியீட்டிற்கு வாழ்த்துக்களும் மனம் நிறைந்த நன்றிகளும்.

அலங்கரித்து வரும் வெறும் வார்த்தை ஜாலங்களால் பின்னப்பட்டதல்ல இக்கவிதைகள். ஒவ்வருவரின் மனக்குமறல்களும் பிரசவித்துப்போட்ட கோபக்கங்குள் வாசகனின் விரல்களை வழி நெடுகச் சுடுகின்றன. தினசரி தேவைகளுக்கே வாழ்வுக்கும் சாவுக்குமிடையில்ப் போராடும் பின்தங்கிய சமூகத்துப் பெண்களிடம் நாம் எவ்வளவு தூரம் கவியாளுமையை எதிர்பார்க்கமுடியும்? கவித்துவம் நிறைந்ததா, சூழலையும் வலியையும் எத்தனை ஆழமாய்ப் பேசுகிறது, என்ற அளவீடுகளை இத்தருணத்தில் புறந்தள்ள விரும்புகிறேன். இதற்குரிய விடைபோல வரும் ஆர்த்தியின் சில வரிகளோடு இப்பகிர்வை தற்போது நிறுத்துகின்றேன். இன்றை நாளின் மழையும் சிறுதூரல்களோடு தன்னை நிறுத்திக்கொண்டது
இத்தோடு.
மரத்தில் கவிந்த இருளை
கலைக்க முயற்சிக்கும்
மின்மினியாய் என் மனசு
எருமையின் முதுகில்
எண்ணி எண்ணி
உண்ணி பொறுக்கும்
மைனாவாய் சிலநேரம்
கற்பனைப் பையுடன்
தட்டேந்திய கவிஞன்
கவி புனையத் தோன்றவில்லை – என்
பேனை மூடிக்கொண்டது முகத்தை..

நன்றி - இனியொரு
...மேலும்

Jun 29, 2011

"அந்த 6 நாட்கள்" இராணுவத்தின் பிடியில்.. - பிறேமிளா சுகுமார்


அதிகாலையில் சேவல் கூவும் போதே அப்பா எங்களை எழுப்பி விட்டார்.. பிள்ளைகள் எழும்புங்க.. இன்றைக்கு விசேட அடையாள அட்டை எடுக்க மூதூர் போக வேணுமல்லா... கண்ணைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தேன்.. இந்தப் பனிக்குளிரில் போர்த்திக் கொண்டு தூங்க விடாமல் ஏன் எழுப்புகிறார் என எரிச்சலாயும் இருந்தது."இன்றைக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது" என உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது..தங்கையையும் எழுப்பி புறப்படுகிறோம்..யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து 1 வருடத்தின் பின் போன வாரம் தான் எங்கள் சம்பூர் வீட்டுக்கு வந்திருந்தேன்.... ஆமிப் பயம் இந்தப் பக்கம் இப்போதைக்கு வந்து விடாதே என அப்பாவின் கடிதம் அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டிருந்தது... ஆனால் போன வாரம் வந்த அப்பாவின் கடிதத்தில் மகள் திருகோணமலை மாவட்டத்துக்காக விசேட அடையாள அட்டை கொடுக்கப் போகிறார்களாம்.. அதை எடுக்காவிட்டால் நீ ஒருக்காலும் இங்கு வர முடியாமல் போய் விடும்,அதனால் ஒருதரம் வந்து போ,நத்தாருக்கும் நின்று விட்டுப் போகலாம் என எழுதியிருந்தார்.. அம்மாவின் அறிவுறுத்தல் படி சேலையை அணிந்து கொள்கிறேன்.. பெரிய பெண்ணாய்த் தோற்றம் அளிக்கவாம் அந்த ஏற்பாடு...

சைக்கிள்களில் பயணத்தைத் தொடர்ந்தாலும் கட்டைபறிச்சான் பாலத்துக்குப் பக்கத்தில் இருந்த புண்ணியமூர்த்தியரின் சைக்கிள் கடையில்,அவற்றைப் பாரப்படுத்தி விட்டு நடந்து மூதூர் செல்கிறோம்..சைக்கிள் ஓடுபவர்கள்,முழங்கையில் காய்த்துக் கறுத்திருப்பவர்கள் எல்லாம் இயக்கம் என்பது ஆமியின் எண்ணம்..அந்த நாட்களில் அடிக்கடி கண்ணி வெடிகள்..பொம்மர் அடிகள்..சுற்றிவளைப்புக்கள்..மறைந்திருந்து தாக்குதல்கள்...கைதுகள்..கொலைகள்..காட்டிக் கொடுப்புக்கள் என உயிருக்கு எந்த உத்தரவாதமில்லாத நாட்கள் அவை...கைது செய்யப்படுபவர்கள் காணாமல் போவதும் அதுவே பெண்களானால் மானபங்கப் படுத்தப்படுவதும் சித்திரவதைப் படுத்தப் படுவதும் மிகச் சர்வசாதாரணமாய் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம்..

கட்டைபறிச்சான் பாலத்தைக் கடந்து மூதூர் புளியடிச்சந்தியை நோக்கி நடக்கும் போதே எங்களைக் காட்டிக் கொடுக்கப் போகும் யூதாஸ்களும் பின் தொடர்கிறார்கள்..வழியிம் மக்கீன் மாஸ்டர் அப்பாவைக் கண்டதும் சைக்கிளில் இருந்து இறங்கிக் குசலம் விசாரிக்கிறார் பல தெரிந்த முகங்கள் சிரித்த படி கடக்கின்றன..அப்பாவின் காலத்தில் மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப் பட்டதாலும் ஆங்கிலக்கல்வி,மட்டுமல்லாமல் அந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் அப்பாவின் பங்கு கணிசமாய் இருந்ததாலும் அவருக்கு மூதூர் முஸ்லிம்கள் மத்தியில் தனி மரியாதை இருந்தது.

காலை 8 மணி

மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தான் அடையாள அட்டை வினியோகம் நடைபெறுகிறது..அப்பா நேரே அதிபரின் அறைக்குச் செல்கிறார்,அவரின் மாணவர்தான் அப்போதைய அதிபர்..எங்களை யாரோ பின் தொடர்கிறார்கள் என்கிறார் அப்பா..நீங்க ஒண்டுக்கும் பயப்பட வேணாம் சேர்..என்னை மீறி எதும் நடக்காது என்கிறார் அதிபர்..புகைப்படம் எடுத்தல்..பத்திரம் நிரப்புதல் தலையாட்டி முன் நிற்றல் என்ற சடங்குகள் ஒருவழியாய் முடிய..ஆசுவாசத்தோடு வெளியே வருகிறோம்..

காலை 11 மணி
வளவு முழுவதும் பொலிஸ்..ஆமி தலைகள்..ஜீப் வண்டிகள்..ஏன் இந்த ஆர்ப்பாட்டம் யாரைப் பிடிக்க இந்த ஏற்பாடு..மனம் கேள்விகளை அடுக்குகிறது..நன்றாய் தெரிந்த ஆமி கோப்பிரல் ஒருவன் எங்கள் முன் வருகிறான் காலை வணக்கம் தெரிவிக்கிறார் அப்பா.."உங்களுக்கு இது நல்ல காலையில்லை..உங்கள் பிள்ளைகளை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம்" என்கிறான் இறுகிய முகத்தோடு..அதிர்ச்சியில் என் இதயம் ஒருமுறை நின்று..பின் வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது..முகம் வெளிறுகிறது..கைகள் நடுங்குகின்றன..அப்பா அவன் முகத்தை பரிதாபமாய்ப் பார்த்த படி சும்மா தானே என்கிறார்..இல்லையென்று தலையை ஆட்டியபடி எங்களை ஜீப்பில் ஏறும் படி சைகை செய்கிறான்..நான் தங்கையைத் திரும்பிப் பார்க்கிறேன் 14 வயதேயான அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை ஆனால் அவள் வாய் மட்டும்"நெஞ்சமே வீணாய் சோர்ந்து போகாதே..தஞ்சம் யேசிருக்கையில் தளர்ந்து விடாதே.."என முணுமுணுக்கின்றது..துவக்கின் நுனியை என் முதுகில் வைத்து அழுத்திய படி "நகிண்ட"(ஏறு) என உறுமுகிறான் ஒரு ஆமிக்காரன்..நிலத்தோடு ஆணியடித்ததைப் போல் கனத்துக் கிடந்த பாதங்களைக் கஷ்டப்பட்டுப் பெயர்த்து ஜீப்பில் வைக்கிறேன்..என் பின்னால் தங்கையும் ஏறுகிறாள்..அப்பாவின் முகத்தில் கையாலாகாத் தனம்..கண்ணீர்..பயம்..என்று கலவையான உணர்ச்சிகள் தெரிகின்றன..நானும் என் பிள்ளைகளோடு வருவேன்..என் பிள்ளைகளைத் தனியே விட மாட்டேன் என்று அழுத படி ஜீப்பில் ஏறிய அம்மாவை நெட்டித் தள்ளி கீழேதள்ளும் முயற்சியைக் கை விட்டு விட்டு எங்கள் மூவரையும் ஏற்றியபடி கண்ணீருடன் நிற்கும் அப்பாவையும் என் குட்டித்தம்ம்பியையும் ..புதினம் பார்த்தபடி நின்ற அதிபரையும்..பின் தள்ளி விட்டு ஒரு உறுமலோடு புறப்படுகிறது ஜீப்.."கானி கொட்டி..கானி கொட்டி.."(பெண் புலி) என்று கெக்கட்டமிட்டுச் சிரிக்கின்றனர்..ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப்போல என் காதினுள் இறங்குகிறது அவர்கள் சிரிப்புச் சத்தம்..நான் விளையாடித் திரிந்த வீதிகள்..என் மாமன் மச்சான்..விளையாட்டுத் தோழர்..பாடசாலைத் தோழனும்..பல்கலைக்கழக நண்பனுமான நர்சூக்..இப்படிப் பலரின் பரிதாபமான பார்வைகள் எங்களை நோட்டம் விடுகின்றன..ஆனால் யாரும் மறந்தும் கூட ஒரு புன்னகையைச் சிந்த விடவில்லை..எங்களைத் தெரிந்ததாய்க் காட்டிக் கொண்டால் அவர்களுக்குக் கஷ்டம்....

மதியம் 12 மணி.
மூதூர் ஏ.ஜி.ஏ அலுவலகத்தில் அமைந்திருந்த ராணுவ முகாமுக்குள் ஜீப் நுளைகிறது..இறங்கு என உறுமியபடி துவக்கால் நெட்டித் தள்ளி விடுகிறான் ஒருவன்..இளம் இராணுவ கமாண்டர் வருகிறான் என்னைப் பார்த்த மாத்திரத்தில் அவன் முகம் சுருங்கி பின் நிமிர்கிறது .."மகே அக்காகே துவ வாகே" (என் அக்காவின் மகள் போல) என்கிறான்..அதனால் தானோ என்னவோ கதிரைகளில் அமரும் படி சைகை செய்கிறான்..என் முதுகில் துப்பாக்கியின் முனை அழுத்திய படி இருக்க விசாரணை ஆரம்பமாகிறது ஒவ்வோர் கேள்விக்கும் இன்னொருவன் துவக்கில் பொருத்தப் பட்டிருந்த கத்தியால் என் சேலையின் கீழ் விளிம்பை ஓங்கிக் குத்துகிறான்..நடுங்குகிறேன்..வார்த்தைகள் கோர்வையாய் வராமல் அழுகை விம்மலாய் வெடிக்கிறது..எனக்கு ஒன்றும் தெரியாது...இல்லை பயிற்சி எதுவும் எடுக்கவில்லை..எனக்கு யாரையும் தெரியாது..என்று திக்கித் திணறிய படி சொல்கிறேன்..அம்மாவின் முகம் பயத்தில் கறுத்து உறைந்து போயிருக்கிறது..சுண்ணாம்பு பூசியதைப் போல் உதடுகள் வெண்மை படர்ந்திருக்கிறது..பயத்தில் இருக்கிறாளா..அல்லது நடப்பதைப் பற்றிய சரியான தெளிவில்லாமல் இருகிறாளா என்று கண்டு பிடிக்க முடியாத ஒரு பாவத்துடன் தங்கை...கொஞ்சம் பிசகினால் என் பாதங்களை ஊடுருவி விடும் என்பது போல் அவன் குத்துவதும் தொடர்கிறது..

மாலை 3 மணி.
பொய்ச்சாட்சி சொல்ல ஒரு சமையல்காரனைக் கொண்டு வருகிறார்கள்.."இவ தான் கட்டைக்காற்சட்டையுடன் கூலிங் கிளாஸ் போட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி ........காம்புக்கு வந்தவ .."என்று கூசாமல் பொய் சொல்கிறான்..எப்போ எந்த மாதம் என்று கேட்கிறேன் ஏப்பிரல் மாதம்..அவன்..சரி என் துணை வேந்தரிடம் கேளுங்கள் அவர் ஆதாரம் தருவார் அந்த நாட்களில் நான் யாழில் இருந்தேன் என துணிவாய்ச் சொல்கிறேன்..எந்தக் குற்றச் சாட்டையும் நிரூபிக்க முடியாததால் எங்களை மேலதிக விசாரணைக்கு போலீஸிடம் பாரம் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள்..அம்மா அழுகிறா..அங்கிருக்கும் OIC மிக மிக மோசமானவன் என்பதாலோ..அல்லது தன் ஊர்ப் பெண்கள் 12 பேரைப் பிடித்து அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும்..அவர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை மருந்திட்ட கதையையும் வைத்தியர் அந்தோனி மாமா சொன்னதாலோ..கண்ணீர் நிற்காமல் கொட்டுகிறது..

மாலை 4.30
போலீஸில் பாரம் கொடுக்கிறார்கள் அந்த ஓஐசி யைக் காணவில்லை..எங்களை ஓர் அறைக்குள் அனுப்புகின்றனர்....இதற்குள் என் சித்தியம்மாவும் வந்து செர்ந்து கொள்கிறா.போலிஸினால் "பேரக்காய் ஆச்சி"அழைக்கப் படுவதால் (கொய்யாக்காய் ஆச்சி) அவவுக்கும் போலிஸில் உள்நுளைய அனுமதி கொடுத்திருந்தார்கள்..அந்த அறைதான் சித்திரவதை செய்யும் இடம் என உள் நுளைந்த மட்டிலேயே கண்டு கொண்டேன்..இரத்தக் கறைபடிந்த..காயாத பச்சை இரத்தம் வழிந்த சுவர்களும் தரையும்..நகம் பிடுங்கும் கருவிகள்...பல்வேறு தரத்திலும் அளவிலும் பொல்லுகள்..ஆணி..தகரம் சேர்த்த கம்புகள்..இரும்புச் சங்கிலியில் மேசைக்காலிலும்..ஜன்னல் கம்பியிலும் நாயைப் போல் பிணைக்கப் பட்டிருந்த ஆண்கள் நால்வர்..அவர்களை யாரென்று இனங்காண முடியாத படி ஊதிப் பருத்து..காயங்கள் வெடித்து அதனுள்ளிருந்து இரத்தமும் நீரும்..சீழும் கலந்து வடிந்த படி...கண்கள் பயத்தில் பிதுங்கி வெளியே தெறித்து விடுமோ எனப் பயந்தேன்..தங்கையின் முகத்தில் அப்போது தான் முதன் முறையாகப் பயப் பீதி குடியேறுவதைப் பார்த்தேன்..எனக்கு அடி வயிறு கலங்கியது பயத்தில் உறந்து போயிருந்த எங்களை அந்த நால்வரில் ஒருவருக்குத் தெரிந்திருந்தது போல..எங்களையே பரிதாபமாய் தன் மங்கிய கண்களால் உற்றுப் பார்த்து மெல்லிய குரலில் ஐயோ..இந்தப் பிள்ளைகளை என்ன பாடு படுத்தப் போறானோ அந்தப் படுபாவி...இப்படித்தான் ஒவ்வொரு நாளும் அவன் இதுக்குள்ள வைத்து எங்கட கண்ணுக்கு முன்னாலயே செய்யிற கொடும..பாக்க ஏலா....அவன் குரலில் தெரிந்த அந்த விளக்கம் கொடுக்க முடியாத பாவம் என்னை என்னவோ செய்தது..வரப் போகும் பயங்கரத்தை எதிர்நோக்கிய படி உறைந்து போயிருந்தோம்..அவன் பின் உயிர் பிழைத்தானா...அல்லது அங்கேயே அவனுக்கு முடிவு வந்ததா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை...

மாலை 6.30
திடீரென்று ஒரு பரபரப்பு..ஓஐசி வாறார் என ஒருவன் கட்டியம் சொன்னான்....உயர்ந்து கறுத்த முரட்டுத்தனமான ஒரு உருவம் உள் நுளைந்தது..வந்த வேகத்திலேயே ஒரு பொல்லை எடுத்துச் சுழற்றி மேசையில் அடித்த படி ஒரு உறுமலோடு மேசையில் ஏறி உட்கார்ந்தான்....நகம் பிடுங்கும் கருவியைக் கையில் வைத்து உருட்டிய படி விசாரணையைத் தொடங்கினான்....அதே கேள்விகள்..அதே பதில்கள் அழுகையுடனும் விம்மலுடனும்.... தொலைபேசி ஒலிக்கிறது.".மாத்தயா.".என அழைத்து "உங்களுடன் மேலதிகாரி பேச வேண்டும் என்கிறார்" என்கிறான் ஒருவன்.."நான் விசாரணையில் இருக்கிறேன் பின்பு பேசுகிறேன் என்று சொல்லு"என்கிறான்..இல்லை உடனே பேசட்டாம் மிக அவசரமான செய்தியாம் என்கிறான்..எரிச்சலுடன் காலால் கதிரையொன்றை உதைத்து..பொல்லை நிலத்தில் வீசியெறிந்து விட்டு தொலைபேசியில் பேசத் தொடங்குகிறான்..அவனது குரலில் இருந்து அவனுக்கு உடனடியான இடமாற்றம் என்று அறிகிறோம் சற்று ஆசுவசபட்டாலும்..நாளைதான் வரலாம் லோன்ச் இல்லை என்கிறான் இவன்...இவனை உடனடியாக ஏற்றி வர விசேட லோன்ச் ஒன்று திருகோணமலையிலிருந்து வருவதாக சொல்லப்பட்டபோது இவனால் மறுக்க வழியில்லாமல் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய் விட்டதே என்ற சலிப்போடும் ஏமாற்ற்த்தோடும் வாசலில் வந்து நின்ற ஜீப்பில் ஏறுகிறான்..

டிசம்பர் 28
திருகோணமலை கொண்டு வரப்ப்ட்டு துறைமுகப் போலிஸில் 5 நாட்கள் சிறை வைக்கப் பட்டு அங்கு கூண்டிலிருந்த 9 கம்பிகளையும் எண்ணி எண்ணிக் களைத்துப் போன நிலையில்...டொக்யாட் நேவிக் காம்ப்பில் நடக்க இருக்கும் விசாரணைக்காக காத்திருந்தோம்..அங்கும் நடக்க இருக்கும் சித்திரவதைகள் பற்றியும் அதை எங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா என்றெல்லாம் நல்ல போலீஸ்காரர்களான நிலவீரவும் சொய்ஸாவும் பேசிக் கொள்வது எங்கள் காதிலும் விழும்..அந்த நாளும் வந்தது..சித்திரவதை முகாம் போகிறோம் என நினைத்துப் போனவர்களுக்கு முப்படைத் தளபதியின் முன் நிற்கும் போது எப்படியிருந்திருக்கும்..உங்களை யாரோ தப்பாய்க் காட்ட்டிக் கொடுத்திருக்கிறார்கள் இன்னொரு தடவை பிடிபட்டால் ...என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்யப் பட்ட்டோம் ஆனாலும் இன்று வரை..அந்தப் பயமும் நடுக்கமும் அது தந்த வலியும், முற்றாய் நீங்கியதாய்த் தெரியவில்லை....

சர்வதேச துன்புறுத்தப் பட்டோர் நாளுக்காக என் நினைவுகளிலிருந்து
- பிறேமிளா சுகுமார்

நன்றி - மனஓசை
...மேலும்

Jun 28, 2011

21ம் நூற்றாண்டும் ‘அவளது விதிப்படி ஆகட்டும்' (Ainsi soit-elle) கட்டுரைத் தொகுப்பும்... - பெனுவாத் க்ரூல்த்


பெண்ணியம் அதன் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில், 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக ‘அவளது விதிப்படி ஆகட்டும்' வெளிவந்தது. அதன் பின்னர் மறுபடியும் எனக்கு, அப்புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மே 1968(1) போராட்டத்தின் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் ‘இனி, அன்றாட வாழ்க்கையில் தான் ஆணுக்கு நிகரென' நினைத்தாள்; ஆண்களும் தங்கள் முதலிட ஸ்தானத்திற்கு மூடிவு நெருங்கி விட்டதென்று நினைத்த நேரம். இதில் மிகப்பெரியக் கொடுமை என்னவெனில், 89ல்(2) நமது புரட்சியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக ‘மனித உரிமை கோட்பாடுகளை வகுத்து பிரகடனப்படுத்தியிருந்த போதும், அது ஆண் வர்க்கத்திற்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் உரியதென்று சொல்லக்கூடிய ஆபத்துங்கூட 68க்கு பிறகே நேர்ந்தது.

எனினும் 1968ம் ஆண்டுவரை சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த உறக்கத்திற்கிடந்த பெண்ணியம், ஒருநாள் இப்படி விழித்துக் கொள்ளுமென்று எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். பெண்ணியத்தின் பொற்காலத்திற்குப் பிறகு, மாதர் தம் சுதந்திரம் ஏறக்குறைய ஐரோப்பா முழுக்க பதிவு செய்யப்பட்டதும், ஏற்றமிகுந்த இந்தக் காலகட்டத்தில்தான். எல்லா யுத்தங்களையும் போலவே, நடந்து முடிந்த யுத்தம் (இரண்டாம் உலக யுத்தம்) ஆண் பெண் பேதங்களை ஒழுங்கு படுத்திற்று. மகளிர் எப்பணிகளையும் ஆற்ற வல்லவர்கள் என்பதனை நான்காண்டு கால யுத்தம் நிரூபித்தது. யுத்தத்தின் செயல்பாடும், வெற்றியும் பெண்களைச் சார்ந்திருந்தது. விவசாயத்தில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு மாற்றாக பெண்கள் பணி ஆற்றினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து அமைதி திரும்பியவுடன், செய்துவந்த பணிகளை மாத்திரமல்ல அவர்களது சுதந்திரத்தையும் சுய உரிமைகளையுங்கூட இழந்து வீட்டிற்குத் திரும்பினர். ஓட்டுரிமைக்காக இருபத்தைந்து ஆண்டுகாலம் அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று, பிறகு அதற்கெதிராகவும், ஓர் யுத்தமென்றாகிவிட்டது.

அடுத்துவந்த ஆண்டுகள் பெண்களுக்குச் சோதனை மிகுந்த காலங்கள். ஆணினம், பெண்ணினம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு மீண்டும் தலைகாட்டியது. பிரான்செங்கும் உத்தியோகங்களில் பெண்மையை ஆண்மைப் படுத்துவதென்கிற பித்தம் தலைக்கேறி இருந்ததன் விளைவாக, தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடையே அவநம்பிக்கை, பெண்விடுதலைக் குறித்து பிறர் கொண்டிருந்த எதிர்மறையான அபிப்பிராயங்கள் (உ.ம். பெண்விடுதலை பேசும் பெண்கள் தங்களை ஆண்மைப்படுத்திக் கொள்கிறவர்களென்கிற விமர்சனத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட ‘La Garconne’ மாதிரியான நூல்கள்) என பலதரப்பட்ட அச்சத்திற்கும் உள்ளான சமூகம், தமது அடையாளங்களை மீளப் பெறவேண்டு மென்று சொல்லி உரிமைக் குரல்வளையை நெறித்தது.

பண்டைப் பெண்நெறி போற்றப்பட்டது. பெண்கள், தாயாகவும், விசுவாசமுள்ள மனைவியாகவும் இருந்து ஆற்றவேண்டிய பணிகளைக் குறிப்பிட்டு, இயற்கைக்கு மாறாக அவர்கள் நடக்கக் கூடாதென்று அறிவுறுத்தப் பட்டார்கள். அதனை நடைமுறைபடுத்துவதற்கு ‘மகப்பேறு கொள்கை' அடிப்படையில் ஒரு சட்டம், அச்சட்டம் சொல்ல வந்ததென்ன : ஒரு பெண்ணானவள் தனது உயிரியல் அடிப்படையிலான கடமைகளை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும், அதிலிருந்து தப்பிவிடலாமென்கிற கனவுகள் கூடாது, தனது வாழ்வைத் தானே தீர்மானிக்கலாம் என்கிற முனைப் பெல்லாம் கூடாது. 1920ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு கரு கலைப்பு செய்துகொள்கின்ற உரிமை மறுக்கப்பட்டதோடு, அவர்களுக்குக் கருத்தடைக்கான தகவலறிவும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இச்சட்டத்தின் ஐம்பதாண்டுகால அமலாக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் இரகசியமாகக் கரு கலைப்பு செய்துகொண்டதும் உண்மை, அவர்களில் பலர் அதே எண்ணிக்கையில் மாண்டதும் உண்மை. இச்சட்டத்தின் பேரால் ‘பெத்தேன்' (Petain)(3) நிருவாகத்தில் துணி வெளுக்கும் பெண் ஒருத்தி, பெண்கள் பலருக்குக் கருக்கலைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1943ம் ஆண்டு கில்லெட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டதை இங்கே நாம் நினைவு கூறவேண்டும். இந்த வகையில் தண்டிக்கப்பட்டவர்களில் அவள்தான் கடைசி என்றாலும், ஓர் உண்மை புரிகின்றது. அந்த நாட்களில் குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்து கொள்வதைக் காட்டிலும், சம்பந்தப்பட்ட ஆணைக் கொன்றிருந்தால் ஒருவேளை சட்டம் குறைவாக தண்டித்திருக்குமோ என்னவோ.

1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர், தோல்வி, விஷி(Vichy)யில் அமைந்த நிர்வாகம்(3) பிரெஞ்சு குடியரசுக்கு மாத்திரமல்ல பெண்களுக்கும் பாதகத்தை இழைத்தது, இது பெண்ணியத்திற்கு நேர்ந்த இரண்டாவது மரணம். ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது, பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் கணிசமான அளவிற்குப் பங்கெடுத்த பெண்கள் அரிய சாதனைகளுக்குக் காரணமாக இருந்தும், ஜெனரல் தெ கோல் (De Gaulle)(4) 1944ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவென சட்டம் கொண்டு வந்திருந்தும், பிரெஞ்சுப் பெண்களிடையே பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. கிரீஸ் நாட்டைத் தவிர இதர ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.

டச்சு மக்கள் 1915ம் ஆண்டிலிருந்தும், ஸ்வீடன் மக்கள், ஆங்கிலேயர், ஜெர்மானியர் 1918ம் ஆண்டிலிருந்தும் அமெரிக்கர்கள் 1920ம் ஆண்டிலிருந்தும் இவ்வுரிமையை பயன்படுத்தி வந்தனர். இது தவிர பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் (மீண்டும் கிரீஸைத் தவிர்த்து) 15லிருந்து 49 சதவீதத்தியப் பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். பிரான்சு நாட்டில் மட்டுமே அது எட்டமுடியாத குறியீடாக இருந்தது. இருபது ஆண்டுகளாக முயற்சித்து கடைசியில் பிரான்சு, இதர ஐரோப்பிய நாடுகளோடு இசைவுறாத ஒரு குறியீட்டைத் தொட்டது. 1945ம் ஆண்டின்படி பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 5.4 சதவீதப் பெண்களும், 1968ம் ஆண்டில் 1.6 சதவீதப் பெண்களும் இடம் பெற்றனர்.

பிறகு இந்தக் குறியீடு சட்டென்று பலம்பெற்று 11 சதவீதமாக ஜூன் 1997ம் ஆண்டு உயர்ந்தது. ஆக இந்த வேகத்திலே போனாலுங்கூட, ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் பாராளு மன்றத்தில் நுழைவதற்கு நமக்குக் குறைந்தது இன்னும் 390 ஆண்டுகள் தேவைப்படும். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையயன்கிற போதும், நம்மால் ஏதோ கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஜெர்மானியர்களின் ஆக்கிரமிப்பின்போது இதர ஐரோப்பிய நாடுகள் கலகலத்துப் போயிருக்க, நாம் அவர்களுடன் கைகோர்த்ததால் கண்ட பலன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு குறியீட்டினை உயர்த்துவதற்கான பெரிய நடவடிக்கையினை எடுக்கின்ற எண்ணமேதும் அரசுக்கு இல்லை. இவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் உரிய பிரதி நிதித்துவம் பெறாதது அதிர்ச்சிதரும் விஷயமல்ல, மாறாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைபற்றி நாம் பேசினால் அதிர்ச்சி தருகிறது.

தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விழையும் அநேகப் பெண்களுக்குப் 1949ம் ஆண்டு வெளிவந்த ‘பெண்ணென்ற ஓர் இரண்டாமினம்' (Deuxieme sex) ஒரு முன்னுதாரணம் மட்டுமல்ல என்பது, அநேக பேருக்கு விளங்குவதில்லை. இந்நூல் பதிப்பித்து வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே, உலக மகளிருக்கான மறைநூல் என்கிற தகுதியை பெற்றது. அறிவு ஜீவிகளிடையே பெரும் விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், வெகுசனப் பண்பாட்டில் குறிப்பிடும்படியான தாக்கமெதனையும் உண்டாக்கிவிடவில்லை. பெண்களின் நிலையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தி கண்ட பெரிய உண்மையை, ஏற்கிற மனமுதிர்ச்சியும் இங்கில்லை.

நான் முதன் முதலில் வாசித்தபோது, கருத்தியலில் எழுத்தாளர் ‘சிமோன் தெ பொவாரு'க்கிருந்த (Simone de Beauvoir), ஆழமும் கூர்மையும், விரிவான தளத்தினில் மிகுந்த அக்கறையுடன் மானிடவியலை அவர் கையாண்ட விதமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்கிற போதும், உலகில் இனந்தெரியாத ஒரு கூட்டத்தினைப் பற்றிய பதிவென்றே, அதாவது எங்கோவிருக்கும் ஆப்பிரிக்க குள்ளமனிதர்களின் இருப்பினை அவர் ஆய்வுசெய்து எழுதியதைப்போல எடுத்துக் கொண்டேன். இங்கே நமது மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் இன்னுங்கூட தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அச்சிறுகூட்டத்தில் நானும் ஒருத்தியென்பதையும் ஒரேயொரு விநாடியாவது நினைத்துப் பார்த்திருப்பேனா வென்றால், இல்லை.

ஆம், அப்பரிதாபத்திற்குரிய குள்ளர்கள் கூட்டத்தில் நானுமொருத்தி. இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்வது அவசியம். ஐம்பதுகளில் ‘சிமோன்' வரலாற்றாசிரியராகவும், தத்துவவாதியாகவும் அறியப்பட்டிருந்தாரேயன்றி ஒரு பெண்ணியவாதியாக அப்போதைக்கு அறியப்படவில்லை. மகளிரியக்கம், போதிய ஆதரவினைப் பெறமுடியாமற் போனதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். பிறகு ஐம்பதெட்டாம் ஆண்டில் ‘லிட்ரேலுடைய' (Maximilien Paul Emile Litte) அகர முதலியில் ‘பெண்ணியம்' என்ற வார்த்தை விடுபட்டு போனதுங்கூடக் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அப்புத்தகத்திற்கு எதிராக இங்கே பிரான்சில் கட்சி பேதமின்றி, பல்வேறு தரப்பினரும் ‘வரையறையைத் தாண்டிவிட்டதெனக்' குற்றம் சொல்ல ஒன்று திரண்டார்கள். அதில் கண்ட ‘பெண் விடுதலை' சிந்தனையும், ஆணுக்கு நிகர் பெண்ணென்ற குரலும், நமது ஆண்களை அதற்கெதிராக ஒன்று திரட்டிவிட்டது. கடந்த காலங்களால் கட்டியெழுப்பப்பட்டவர்கள் எனது சொந்தக் கதையை மாத்திரமல்ல, நமது கல்விப் பாடத்திட்டங்களிலோ அல்லது நமது வரலாற்று புத்தகங்களிலோ இடம் பெற்றிராத பெண்ணியவாதத்திற்குக் காரணமான ஒலிம்ப் தெ கூர்ழ் (Olympe de Rouge), பொலின் ரொலான் (Pauline Roland), உபெர்த்தின் ஒக்லெர் (Hubertine Auclert), மார்கெரித் த்யுரான் (Margurite Durand) மற்றும் பல புரட்சியாளர்களை அலட்சியம் செய்திருக்கிறேன்.

நவீன பெண்ணியச் சிந்தனைக்கு பெரிதும் காரணமாகவிருந்த மற்றுமொரு கட்டுரைத் தொகுப்பான ‘A Room of One’s Own’(1923), பிரெஞ்சு மொழியில் அப்போது வெளிவரவில்லை. நமது சமூகம் ஆணினத்தை எவ்வாறெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதென்பதை கட்டுரை ஆசிரியர் வெர்ஜீனியா உல்ஃப் (Virginia Woolf) நயத்தோடும், எள்ளளோடும் சொல்லியிருக்க, அப்புத்தகத்தை ஒரு சராசரி நாவலாகத்தான் அப்போது நான் எடுத்துக்கொண்டேன்.

அடிப்படையான ஆதாரங்களோ அதனை வெளிப்படுத்துவதற்கான போதிய வார்த்தைகளோ இன்றி; நம்மைச் சரியாக அடையாளப்படுத்திய பெண்களை முன்னுதாரணமாக கொள்ளாமலோ; நமது துயரங்களையும், நமக்கான வழித்தடங்களை மறுத்து இச்சமுதாயம் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகளையும் எங்கனம் நாம் வெளிப்படுத்த முடியும்?

யுத்தத்திற்கு பிறகுவந்த நெருக்கடியான காலங்களில், குடும்ப அமைப்பு, ஆண் - பெண் உறவுகள் இவைகளைப் பற்றியெல்லாம் கேள்விக் குட்படுத்துவதென்பது இயலாததாக இருந்தது. பெண்களென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், அது இயற்கையின் விதியென ஆண்டாண்டு காலமாக நம்பிக்கொண்டிருக்கிற உலகத்திற்கு எதிராக கொடி பிடிப்பதென்பதும் அப்போதைக்கு அவ்வளது சுலபமல்ல.

உலகப்போரின் போது எனக்கு இருபது வயது. இலத்தீன் மொழி பேராசிரியராக பணியாற்றி வந்தேன், எனினும் எனக்கு வாக்குரிமை இல்லை. பிறர் இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். யுத்தத்திற்குப் பிறகு முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. தவிர நான் அப்போதைய பெரும்பாலான இளம்பெண்களை போலவே அடக்கமாக இருக்க வேண்டுமென விதிக்கப்பட்டவள். அதாவது அக்காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தியாக, மூச்சுமுட்ட ஒழுக்கம் திணிக்கப்பட்டு, சுயசிந்தனைகளுக்கு வாய்ப்பற்ற கிறித்துவப் பள்ளிகளின் வார்ப்பாக இருந்தவள். ‘பண்டைய வழக்குகள்' நுகத்தடியாக எனது கழுத்தில் பூட்டப்பட்டிருந்தது. சிறையில் அடைபட்ட உணர்வு. கழுத்துவரை விலங்குகள். எவரோடு, எப்படி எனது எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்துவதென்கிற மனக்குமுறலுக்கோ பலனேதுமில்லை.

இந்த நிலைமையில்தான் 1968ம் ஆண்டு ஒரு பெரிய அலை வீசியது, அந்த அலைக்கு நமது மக்களின் தீவிரமான விடுதலை உணர்வும், காலாங்காலமாய் நமது சமூக வழக்கிலிருந்த தந்தை வழி சமுதாயத்தின் எதேச்சதிகாரத்தை நிராகரித்த துணிச்சலும் காரணமாயின. எனினும் எழுபதுகளில் இடதுசாரி அரசியல் அலை மீண்டும் வீசும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. எல்லாமே கனவுகள் என்று வெகுசீக்கிரத்தில் புரிந்ததால் மிகப் பெரிய ஏமாற்றம், குறிப்பாக நமது பெண்களுக்கு, நடந்தவை அனைத்தும் நாடகங்களாகவே இருந்தன. இறுதியாக தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பெண்களே வீதியில் இறங்கவேண்டியக் கட்டாயம்.

புரட்சியயன்று சொல்கிறபோது ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. நமது இயக்கத்திற்கும் அப்படியான நாளாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ம் தேதி அமைந்தது. அன்றைய தினம் துணிச்சல் மிக்க பெண்களில் சிலர் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கென்று எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தியது, இறந்துபோன வீரர்களுக்காக அல்ல, அவ்வீரர்களின் பெருமைக்குக் காரணமாக இருந்த மனைவிமார்களுக்காக. அப்பெண்கள் அனைவரும் உடனேயே கைது செய்யப்பட்டனர். மறுநாள் ‘M.L.F.(5) பிறந்தது' என நாளேடுகளில் தலைப்புச் செய்தி. மற்றொரு இதழோ, ‘பெண்கள் சுதந்திரம், ஆண்டு பூஜ்யம்' எனத் தலைப்பிட்டு எழுதியது. 1968ம் ஆண்டு வெடித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இவ்வியக்கத்தின் நோக்கம், 1972ம் ஆண்டில் ‘ஒலிம்ப் தெ கூர்ழ்' (Olympe De Gourage) உரத்து குரல் கொடுத்ததைப் போல, ‘ஒன்றிரண்டு பெண்களுக்காக குறைந்தபட்ச சலுகைகளை யாசித்து பெறவேண்டுமென்பதல்ல, ஒட்டுமொத்த பெண்களுடைய நியாயமான சலுகைகளை உரிமையுடன் கேட்பது', அப்படிப் பேசியதற்காவே கிலெட்டினால் அவர் சிரம் வெட்டப்பட்டது.

அனைத்து தரப்புப் பெண்களுக்கும் முதன் முறையாக பேச்சுரிமை வழங்கியும், கடந்தகால பெண்ணியவாதிகளின் அபிப்பிராயத்தை முற்றிலும் ஒதுக்காமலும், ஒருபக்கம் ஆனந்த களிப்பிற்கும் இன்னொரு பக்கம் அர்த்தமுள்ள விழிப்புணர்வுக்கும் பெரிதும் காரணமாகவிருந்த ‘பொவாருடைய' (Beauvoir) பங்களிப்பை இறுதியில் அங்கீரித்தும், பலமுனைகளிலும் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவது குறித்து, பல்வேறு தரப்பினரும் ஆய்வுகள் மேற் கொண்டனர். ‘உயிர் பிழைத்திருக்கிற மிகப்பெரிய அடிமைகள் கூட்டமென்று' (La plus massive survivance de 1’esclavage) ஜெர்மானிய மானுடவியலாளர் தியோன் (Tillon) அவர்களால் விமர்சிக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சியாக தடைகள் மீறப்படுகின்றன. மொழி மாற்றத்திற்கு உள்ளாகிறது. காலங்காலமாய் இருந்துவந்த குடும்பம் என்கிற கட்டமைப்பு கலகலத்துப் போகிறது, விளைவு கடந்த நாற்பது ஆண்டுகாலமாக நான் பொய்யாய் நடத்திவந்த வாழ்க்கையும் அதன் மீதான எனது கருத்து உருவாக்கமும் நொறுங்கிப்போயின.

பெண்ணுரிமை இயக்கங்கள், ஆண்களை உதாசீனப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. வழக்கம்போல நீயா? நானா? என்பதால் விளைந்த சிந்தனை. ஆணும் பெண்ணுமாய் இருக்கிற பாராளுமன்ற அவையிலும் சரி அல்லது அரசியல்வாதிகளின் கூட்டத்திலும் சரி, ஒரு பெண் உறுப்பினர் (அவர் இடதுசாரியோ அல்லது வலது சாரியோ) என்ன பேசினாலும், நான் அவதானித்த வகையில் ஆண்கள் கூட்டத்திற்கு அது வெறும் குப்பை, அர்த்தமற்ற பேச்சு. ஏதோ இவர்களுக்குப் புரியாத மொழியில் பேசுவதாய் நினைக்கிறார்கள். உரையின் முக்கியத்துவம் குறைகிறது, கேட்கின்ற ஆண்களும் அக்கறையின்றி உட்கார்ந்திருக்க, சம்பந்தப்பட்டப் பெண்களின் பேச்சு காற்றோடு போகிறது.

அதுமாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களிடையே சுதந்திரமாக உரையாடிக் கொள்வதையும், பிறர் கேட்க தங்கள் கருத்தைச் சொல்ல முடிகிற அதிர்ஷ்டத்தையும் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்ததுண்டு. கூச்சம், உறுதியற்ற தன்மை, எனது திறன் குறித்த அவநம்பிக்கை, எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இல்லையேயயன இரவு பகலாய் வருத்தம் என்றிருந்தபோதுதான், இதற்கெல்லாம் தீர்வாக ஒர் அதிசயம் நிகழ்ந்தது. அது ‘இரு பெண்களுக்கிடையேயான ஓர் புதிய வெளிப்பாடு, என்னவென்று அறிந்திராத நாட்டிற்கோ அதுவோர் விநோதமான அதிர்ச்சி'. சட்டென்று அவளுக்கு ஒரு தேஜஸ் கிடைத்தது. அவள் நல்லவளானாள்.

மாற்றம் அரசியலிலும் நேர்ந்தது 74ம் ஆண்டு பெண்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது, பிரான்சுவாஸ் ழிரூ (FRANCOISE GIROUD) அதன் பொறுப்பினை ஏற்றார். பிரச்சினைகளை முறையாக அணுகத் தவறிவிட்டதால் இரண்டு ஆண்டுகள் கழித்து அது கலைக்கப்பட்டது. அதே ஆண்டில் சிமோன் வெய் (SIMONE VEIL) முயற்சியால் விரும்பினால் கருக்கலைப்பு செய்து கொள்ளலாமென சட்டம் (L’INTERUPTION VOLONTAIRE DE GROSSESSE) இயற்றப்பட்டது. கருத்தடைக்கான உரிமையையும், (68லேயே அதற்கான சட்டம் இயற்றபட்டிருந்த போதிலும் முதன் முறையாக அமுலாக்கப்படுகிறது.

‘ELLE’ (அவள்) இதழ் பெண்ணினத்தின் வெற்றி என்பதாக ஒரு சிறப்பிதழினை வெளியிட்டு, அதற்கு காரணமான பெண்ணியவாதிகளாக கிறிஸ்தியன் ரோஷ்போர் (CHRISTIANE ROCHEFORT), மார்கெரித் த்யூரா (MARGUERITE DURAS), பிரான்சுவாஸ் தோபோன் (FRANCOISE D’EAUBONNE), எவ்லின் சுல்லெரோ (EVELYNE SULLEROT), பெனுவாத் மற்றும் ஃப்ளோரா க்ரூல்த் (BENOITE et FLORA GROULTE), மொனிக் விட்திழ் (MONIGUE WITTING), சிமொன் தெ பொவார் (SIMONE DE BEAUVOIR), லூயீஸ் வைஸ் (LOUIS WEISS), அர்லெத் ல கிய்யே (ARLETTE LA GUILLER), ழிஸேல் அலிமி (GISELE HALIMI), டெல்பின் செரிக் (DELPHINE SEYRIG), லிலியானா கவான்னி (LILIANA CAVANNI), யனிக் பெலோன் (YANNICK BELLON) மற்றும் பலரையும் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியது. படைப்பாளினிகள், வழக்காளினிகள், திரைப்பட இயக்குனிகள்(?), தத்துவ ஆசிரியைகள் எனச் செய்யும் தொழில் குறித்த பெண்பாற் சொற்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது பெண்ணியவாதத்தை அங்கீகரிக்க வகைசெய்தென்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பிறகு 1975ம் ஆண்டினை ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் ‘மகளிர் ஆண்டாக' அறிவித்தது. ‘அன்னையர் தினம்' என்று அறிவித்து அன்றைக்கு மாத்திரம் அன்னையருக்கு நல்லது செய்ய முற்படுவதில்லை? அதுபோல அவ்வருடம் பெண்களுக்குச் சாதகமாக சிலவிஷயங்கள் நடந்தேறின. பதிப்பாளர்கள் பெண்ணெழுத்துகளில் ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாள்வரை கேட்பாரற்றிருந்த அவர்களது சிந்தனைகள் அச்சிலேறின. பெண்ணியத்தைப் பேசுவதற்கென்று பல நூல்கள் : HELENE CIXOUS, ANNIE LECLERC, KATE MILLET என்று பலரது எழுத்துக்களும் புத்தக வடிவம் பெற்றன .பெண்ணாக இருப்பதும், ஷந்தால் ஷவாஃப் (CHANTAL CHAWAF) ‘பெண்ணைப்' பற்றியும் லுஸ் இரிகரி (LUCE IRIGARY) ‘திறந்து விரிவது' (Speculum) பற்றியும் ‘தோற்ற பெண்கள்' (FEMMES BATTUES) என்று எரென் பிஸ்ஸேவுல் (ERIEN PIZZEY), ‘சூதக இரத்தம்' (SAING MENSTRUEL) என்று மரி கர்டினல் (MARIE CARDINAL) என்பவரும், மாதவிடாய், பெண்குறியென இதுவரை தீண்டப் பாடாதவை எனக் கருதப்பட்ட, இலக்கியங்கள் நிராகரித்த சொற்களை தலைப்பாகக் கொண்டு படைப்புகள் வெளிவந்தன.

இம்மாதிரியான சூழ்நிலையில்தான் ‘அவள் விதிப்படி ஆகட்டும்' (AINSI SOIT-ELLE) 1975ம் ஆண்டு வெளிவந்தது. பெண்ணியவாதிகளின் புத்தகங்கள், ஏதோ ஒரு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட தென்கிற காலம்போய், ஆண்வர்க்கம் அவற்றை வாசிக்கத் தயங்கியபோதும், ஊடகங்களின் நியாயமான ஆதரவை அவை பெற்றன. சில வேளைகளில் அவற்றின் சாட்சியங்கள் இரைச்சல் மிகுந்ததாகவும், முன்னிறுத்துவதில் தெளிவில்லாமலும், அபத்தமாகவும், அக்கறைகொண்டதாகவும், அசாத்தியமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தபோதிலும் காலங்காலமாக வாய்மூடிக்கிடந்த அவை இன்று வாய் திறக்கிறபோது, நம்மை நெகிழ வைக்கின்றன.

புத்தம்புது இருப்பளித்த சந்தோஷமும், இருபாலரும் சமமென்ற முழக்கமும், ‘அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம்' என்ற எண்ணத்தினை நமக்களித்தது. உண்மையில் வெற்றிபெறும் நிலையில் விசிலூதி நம் ஆட்டத்தை நிறுத்திய கதைதான். நாமெறிந்த ஈட்டியினை நமக்கெதிராகத் திருப்புகின்றனர். ‘பெண் விடுதலை இயக்கம்' இன்றைக்கு சோளக்கொல்லை பொம்மையாக்கப்பட்டிருக்கிறது. பெண்ணியவாதிகளை ஓரினச்சேர்க்கை கூட்டமென்றும், விரைவாங்கிய ஆண்களென்றும், ‘பெண்ணியம்' என்பது ஏதோ தகாத சொல்போலவும் இன்றைக்கு முன்னிறுத்தப்படுகிறது. ஊடகங்கள் போராட்டம் இனி அவசியமில்லையென்றும், இனி அவரவருடைய இடத்திற்கு நல்லப்பிள்ளையாக, (ஆண்கள் எப்போதும்போல தங்கள் முதன்மை ஸ்தானத்திற்கு) திரும்பலாம் என்பதுபோல எழுதுகின்றன.

ஆனால் புரட்சியிலே பங்கு பெறாத பெண்களும் நாட்டில் இருக்கின்றார்களென்பதும், அவர்களுக்கு மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்குத் திரும்புகிற எண்ணமேது மில்லையென்பதும், ஊடகவியலாளருக்கு விளங்குவதில்லை. பெண்ணியம் வெற்றிபெற்று விட்டதென்றும், சமத்தன்மையை அவள் அடைந்துவிட்டதாகவும் ஒருவித பொய்யான வதந்தி இன்று பரப்பப்படுகிறது.

இதுவொரு வகையில் நமது இளம் பெண்களை ஏமாற்றும் தந்திரம், திசைதிருப்பும் செயல். ‘O’வின் கதை (Histoire d’O) என்றொரு திரைப்படம், அதில் அடங்கி நடக்கவும், அடிபடவும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படவும் பெண்களுக்கு பிரியம் அதிகமெனச் சொல்லி சென்ற நூற்றாண்டின் அதர்மத்தை நியாயப்படுத்துகின்றனர். எதிர்க்கும் பெண்ணியவாதிகளை கேலி பேசுகின்றனர். வன்முறை, பாலியல் ரீதியில் பெண்களை உபயோகப்படுத்துவது, ஆணாதிக்கம் இவை மூன்றிற்கும் இடையில் உண்மையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது அவர்களின் வாதம்.

இறுதியாக சிமொன் தெ பொவார் தவறிழைத்து விட்டாரென்றும், பெண்ணாகப் பிறந்தவள் அடங்கிக் கிடந்தே வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்றும், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக்கொண்டிராமல், அவன் தேவையை நிரப்பி வாழ்வின் தாத்பரியத்தையும், காதலின் மேன்மையையும் பெண் பிறப்பின் பலனாக அடைய வேண்டுமென சொல்லி வருகிறார்கள். அப்படி சொல்கிறவர்கள் ‘பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்' (DEUXIEME SEX) மிப்பெரிய புரிதலுக்கு வழிவகுக்கிற ‘உடலியல் மாத்திரமே நமது மேன்மைகளை தீர்மானிப்பதல்ல' என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளை மறந்துவிடுகிறார்கள்.

1972ம் ஆண்டில் எழுதப்பட்டதென்பதை வாசகர்கள் நினைவு கூர்வது அவசியம்.

1. மே - ஜூன் - 1968. மாணவர்கள் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, மெல்லமெல்ல அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைய அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பிரெஞ்சுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது, ஸ்திரத் தன்மையற்ற எதிர்காலங்குறிந்த கவலையும், பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த இரணங்களும் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கக் காரணமாயிற்று.

2. மனிதர் உரிமைச் சாசனப் பிரகடனம் (1789 ஆகஸ்டு 26)

3. REGIME DE VICHY (1940 - 1944). முதல் உலகப்போரில் விஷியை நிர்வாகக் கேந்திரமாகக்கொண்டு ‘பெத்தேன்' (Petain) என்ற ராணுவத் தளபதியின் தலைமையில் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஸிஸ பிரெஞ்சு நிர்வாகம்.

4. Charle De Gaulle (1890 - 1970) -இரண்டாம் உலகப்போரின்போது இலண்டனிலிருந்து கொண்டு நாஸிகளுக்கு எதிராக ழான் மூலன் (Jean Moulin) உதவியுடன் விடுதலை இயக்கமொன்றை நடத்தியவர், 1958-1969 வரை ஆறாவது பிரெஞ்சுக் குடியரசின் முதற் தலைவராகத் திகழ்ந்தவர்.

5. Mouvement de liberation des femmes -பிரான்சு நாட்டில் பெண்கள் விடுதலைக்கான இயக்கமென்பது 1970ல்தான் காலுன்றியது.
தமிழில் - நாகரத்தினம் கிருஷ்ணா

நன்றி - அணங்கு
...மேலும்

Jun 27, 2011

பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா பனி இடங்களில் ..


இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.

15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் இல்லை. பெரும்பாலான துறைகள் ஆண்களால் நடத்தப்படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் உள்ளவர்களால் பலவகை பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை.

இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும். இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது.

அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கூடிய விரைவில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
நன்றி - தினக்ஸ்
...மேலும்

Jun 26, 2011

வயது பத்து, போராடிப் பெற்றது விவாகரத்து- என் பெயர் நுஜூத்யேமனின் கர்த்ஜி யில், தந்தை மொஹமத் அல் அஹ்தெல் ,தாய் ஷோயாவுக்குப் பிறந்த நுஜூத் தனது பத்தாவது வயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, தனியொருத்தியாகப் போராடி விவாகரத்து பெற்றுக் கொண்ட , ஹில்லாரி கிளின்டனால்” நான் பார்த்ததிலேயே மிகவும் மதிக்கத்தக்க பெண்களில் ஒருவர் “என்று பாராட்டப்பட்ட சிறுமி.
16 குழந்தைகளில் ஒருத்தியாக வறுமை மிக்க ஓர் குடும்பத்தில் பிறந்த நுஜூத், பள்ளியில் இரண்டாம் க்ரேட் படித்து வந்த சிறுமி. தெருக்களைப் பெருக்கி சுத்தம் செய்யும் தந்தை மொஹமத் ,திடீரென ஒரு நாள் நுஜூதைத் திருமணம் செய்து கொடுத்து விடத் தான் தீர்மானம் செய்திருப்பதாக அறிவித்த போது யெமென் நாட்டின் வழக்கத்தில் உள்ளது போல் நுஜூதின் தாய் ஷோயா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.” எங்கள் நாட்டில் பெண்களை கருத்து கேட்பதில்லை” என்கிறாள் நுஜூத். வேண்டாம் என்றோ சரியென்றோ கூட கூறத்தெரியாத சிறுமி நுஜூத், 30 வயது நிரம்பிய ஃபாயெஜ் அலி தமெருக்கு மணம் செய்து வைக்கப்படுகின்றாள். 31, 000 ஆயிரம் ரூபாய் மஹருக்கு!
மஹர் என்பது இஸ்லாமிய சமூகத்தில் மணமகன் , மணமகளுக்கு தரும் மணக்கொடை. இஸ்லாத்தில் ஜீவனாம்சம் என்கிற அம்சம் அனுமதிக்கப்படவில்லை என்பதால் பெண்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் வசதி இது. தனக்கான மஹரை ஒரு பெண்ணே தீர்மானிக்கலாம். நுஜூதின் விஷயத்தில், திருமணம் என்றால் என்னவென்றே அறியாத, பருவம் எய்தியிருக்காத பாலகி அவள். தனது குடும்ப வறுமையைப் போக்கிக்கொள்ள நுஜூதின் தந்தை அவளை ஓர் பொருளாக பாவித்து விற்றிருக்கிறார் என்பது தான் உண்மை. திருமண இரவன்றே நுஜூத் அவள் கணவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள், அவளுடைய வார்த்தைகளிலேயே அந்தக் கொடுமை” எத்தனை கதறினாலும் யாரும் என் உதவிக்கு வரவில்லை. ரொம்பவும் வலித்தது. மீண்டும் ஒரு முறை அலறித்துடித்த நான் மயக்கமானேன்”.
“என்னுடைய புது வாழ்கை முறைக்கு நான் விரைவிலேயே தயார் செய்து கொள்ளவேண்டியிருந்தது. எனக்கு வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை. என் மாமியாரின் ஆணைகளை ஏற்று நடந்து, தரையை சுத்தம் செய்வதும், காய்கறிகளை நறுக்குவதும், பாத்திரங்களைக் கழுவுவதுமாக என் நாட்கள் நகர்ந்தன. சிறிது ஓய்வு எடுக்க எண்ணினாலும் என் மாமி என் தலை மயிரைப் பிடித்து இழுத்தார். ஒரு நாள் என் வயதுக் குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாட அனுமதி கோரினேன். ஒரேயடியாகக் கோபப்பட்ட என் மாமியார், குடும்ப கௌரவத்தைக் குலைக்க வேறென்னன்ன செய்யப் போகிறாய் என்று திட்டினார். காலையில் வேலைக்கு செல்லும் என் கணவர் வீடு திரும்பும் சப்ததிலேயே நான் நடுங்கிவிடுவேன்..இரவுகள் துன்பத்திலும் வலியிலும் கழிந்தன. என் உடன் பிறந்தவர்களை, என் பள்ளியை, அம்மாவைக் காணாமல் பரிதவித்தேன். என் கணவரை வெகுவாகக் கெஞ்சி என் பிறந்த வீடு செல்ல சம்மதம் வாங்கிப் புறப்பட்டேன்.
இங்கேயே இருந்து விடுகிறேன் அப்பா என்று எவ்வளவோ கதறியும் ,முடியவே முடியாது..திருமணம் ஆன பெண் கணவனை நீங்கி வருவதா என்று அப்பா ஒரேயடியாக மறுத்து விட்டார். எங்கள் உறவினர் கேலி பேசுவார்கள், அடுத்த பெண்களுக்குத் திருமணம் ஆவதும் தடைபடும் என்றெல்லாம் அப்பா திட்டினார். வேறு வழி தெரியாமல் என் தந்தையின் இரண்டாவது மனைவி தௌலாவைப் பார்க்கச் சென்றேன். தௌலா என் மீது இரக்கம் கொண்டார். உனக்கு விடுதலை வேண்டும் என்றால் நகருக்குச் சென்று ஒரு நீதிபதியைப் பார். நீதிபதிகள் மக்களின் துன்பத்தை நீக்குவார்கள் என்று வழி சொல்லித்தந்தார்.அவர் தந்த சொற்பப் பணத்தை எடுத்துக் கொண்டு பேருந்து ஒன்றில் ஏறி, நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று பயணச்சீட்டு வாங்கினேன்..நீதிமன்றம் அடைந்தேன், யாரோ ஒரு பெண்மணி எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார்..நான் ஒரு நீதிபதியைப் பார்க்க வந்திருக்கிறேன், எனக்கு விவாகரத்து வேண்டும் என்றேன்.”
நீதிபதி அப்தோ தன் ஆச்சர்யத்தை மறைத்துக் கொள்ளத் திணறினார்.
“உனக்கு விவாகரத்து வேண்டுமா? ஆமாம் அப்படியென்றால் நீ திருமணம் ஆன பெண்ணா?
“ஆம்”,
“உன் வயதில் உனக்கு மணம் ஆகிவிட்டதா?”
“ஆம், எனக்கு விவாகரத்து வேண்டும்”.
“ஏன் விவாகரத்து கேட்கிறாய்?”
“என் கணவர் என்னை அடிக்கிறார், துன்புறுத்துகிறார்”.
“நீ கன்னிப் பெண்ணா?”
“இல்லை..நான் ரத்தம் பெருக்கினேன்”.
அதிர்ந்து போனார் நீதிபதி. யெமென் நாட்டு சட்ட திட்டங்களின் படி ஒரு பெண் தன் கணவனையும் தந்தையையும் எதிர்த்து வழக்கு பதிவு செய்வது மிகக் கடினம்..
ஆனாலும் ஷதா என்ற பெண் வழக்கறிஞர் நுஜூதுக்கு உதவ முன் வந்தார்.
மஹரைத் திரும்பத் தந்தால், விவாகரத்து அளிப்பதாக நுஜூதின் கணவன் பேச, ஏற்கனவே பணம் திருப்பித்தரப்பட்டு விட்டது என்று நுஜூதின் தந்தை வாதாட, கடைசியில் நுஜூத் நாடியது அவளுக்குக் கிடைத்தே விட்டது. விபரம் அறியா பால்யத்தில் மணம் என்ற பெயரில் அவளுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதிமன்றம் ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. நுஜூதுக்கு விவாகரத்து கிடைத்தது.
நுஜூதின் வழக்குக்குப் பிறகு யெமென் அரசு பெண்களின் திருமண வயதுக்கு ஒரு வரம்பு கொண்டு வர முயன்றது. ஆனால் பழமைவாதிகளால் அது தடுக்கப்பட்டது. ஆனாலும் பால்யத்தில் பெண் குழந்தைகள் திருமணம் செய்விக்கப்படுவதை எதிர்த்து பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அவற்றுக்கெல்லாம் காரணமான அந்தக் குழந்தை அழகாகப் பள்ளி சென்று படித்துக்கொண்டிருக்கிறாள். தனக்கு உதவிய ஷதா வைப் போல ஒரு வழக்கறிஞராகி சிரமத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்டு.

...மேலும்

Jun 25, 2011

சீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்


தென்னாசியப் பிராந்தியம் முழுவதையும் எடுத்து நோக்கும் போது ஏனைய ஒடுக்குமுறைகள் போன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றது. அதில் ஒன்றே சீதனம் அல்லது வரதட்சனை என்பதாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக இருந்து வருகிறது. திருமண பந்தத்தில் ஈடுபடவுள்ள குறித்தபெண்ணுக்கு அவரது வீட்டில் இருந்து பெற்றோர் சகோதரர்கள் என்போர் சம்பந்தப்படப் போகும் ஆணுக்குப் பணம், தங்க நகைகள், நிலம், பாவனைப் பொருட்கள், வாகனங்கள் என்பனவற்றைத் தொகையளவில் அன்பளிப்பாக வழங்கப்படும் நடைமுறையே சீதனம் என்பதாகும்.

இலங்கையில் இச் சீதன முறையானது பரந்தளவில் பல் வேறு அளவுகளில் காணப்படுகிறது. சிங்கள மக்களிடம் குறைந்தளவிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு அளவுகளிலும் இருந்து வருகிறது. இச் சீதன முறைமையினால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோர் சகோதரர்களாகவும் காணப்படுகின்றனர். திருமண வயதை அடைந்துள்ள நிலையில் சீதனம் கொடுக்க வசதியற்ற குடும்பச் சூழலில் முதிர்கன்னியர் என்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் சமூகத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடியும். திருமண வாழ்வில் ஈடுபடவும் கணவன் குழந்தைகள் குடும்பம் என்பதனுள் தம்மை ஈடுபடுத்த இளம் பெண்கள் விரும்பிய போதும் அவ்வாறு செயற்படுவதற்குச் சீதனம் என்ற அவமானகரமான முறையானது தடையாகவே இருந்து வருகிறது. இதனால் முதிர்கன்னியர்களாகி வரும் இளம் பெண்கள் அனுபவித்து வரும் சமூக வேதனைகளும் சோதனைகளும் சொல்லில் அடங்காதவைகளாகும்.

பெண்களைப் பிள்ளைகளாகப் பெற்ற பெற்றோரும் கூடப்பிறந்த ஆண் சகோதரர்களும் படும் துன்பங்கள் வேதனை மிக்கவையாகும். இதன் காரணமாகவே பெண் பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் உறவினர்களால் வேண்டா வெறுப்புக் காட்டப்படுகிறது. “ஐந்தாறு பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது முதுமொழியாகப் பேசப்படுகிறது. இது சீதனத்தை மையமாக வைத்தே எழுந்த ஒரு கூற்று எனலாம்.

இச் சீதன முறைமை என்பது நிலவுடைமையின் கீழ் ஆணாதிக்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை சாதியம் போன்று தமிழ்ச் சூழலில் மிகவும் கெட்டியானதாக இருந்து வருகின்றது. பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் தமது இளமைக் காலத் திலிருந்தே இச்சீதனம் கொடுப்பதைத் தமது கடமை என மனதில் வைத்துக் கடும் உழைப்பிலும் சேமிப்பிலும் ஈடுபட்டு வருவது மரபாக எழுதா விதியாகப் பின்பற்றப்படுகிறது. தமது அன்றாட உணவைக் கூடக் கட்டுப்படுத்தி தமது பெண்களைக் கரை சேர்க்கவெனப் பாடுபடுகின்றனர். தத் தமது ஆண் பிள்ளைகளுக்குப் பெரும் குடும்பப் பொறுப்பு இருப்பதாகச் சிறுவயதில் இருந்தே மூளையில் பதிய வைத்து அக்கா, தங்கைக்கு சீதனம் வழங்குவது ஆண் சகோதரர்களின் தவிர்க்கவியலாத கடமையென விதிக்கப்படுகிறது. தமது பெண் சகோதரர்களுக்கு சீதனம் கொடுப்பதையே லட்சியமாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணம் தேடுவதற்காகக் கடும் உழைப்பில் ஈடுபடும் ஆண்கள் பலர் நாற்பத்தைந்து ஐம்பது வயதாகியும் திருமணம் செய்யாது இருந்து வருவதையும் பல இடங்களில் காண முடியும்.

சம காலத்தின் புலம் பெயர்ந்து வாழும் சூழலால் சீதன முறைக்கெனப் பணம் சொத்து சேகரிக்க நிர்ப்பந்திக்கும் போக்கும் அதிகரித்துக் காணப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆணும் உள்ள ஒரு இளம் குடும்பம். தந்தைக்கு அளவான வருமானம். அதுவும் போதாதது மட்டுமன்றி நாட்டுச் சூழலாலும் மத்திய கிழக்கு சென்று வந்தவர். அக்குடும்பத்தின் குழந்தைகள் வளர்ந்து பாட சாலை செல்லும் மாணவர்களாக உள்ளனர். பதினேழு வயதான தமது மூத்த ஆண் பிள்ளையின் கல்வியை நிறுத்தி ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமது நெருங்கிய உறவினர் மூலம் அங்கு அனுப்பி வைக்கப் பெற்றோர் முயற்சிக்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களது இரண்டு பெண் பிள்ளைகளை எதிர்காலத்தில் கரை சேர்ப்பதற்கு வேறு வழி இல்லை என்கி ன்றனர். அதாவது இரண்டு தமது பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டி வரும் என்பதால் தமது ஒரே மகனைக் கல்வியை நிறுத்திப் புலம் பெயர வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இது நமது சூழலில் ஒரு சோற்றுப் பதமாகவே காணப்படுகிறது.

ஒரு பெண் கல்வி கற்று அரசாங்கத் தொழில் பெற்று மாதாந்தம் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தும் கூட அப் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் லட்சங்களும் தங்கமும் நிலமும் வழங்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் நமது தமிழ்ச் சூழலில் நிலைத்து நீடித்து வருகின்றது. அவ்வாறு ஆண் வீட்டார் கேட்டும் சீதனத்தை கடன்பட்டுக் கொடுத்து தமது பெண்ணைக் கரைசேர்க்கும் பெற்றோர் அக்கடனுக்குத் தமது ஆண் மகனைப் பொறுப்பாக்குவதுடன் அதே மகனுக்குப் பெண் பார்க்கும் போது தாம் மகளுக்குக் கொடுத்த அளவையும் விடக் கூடுதலாகச் சீதனம் பெற்றுக் கொள்ளவும் முன் நிற்கின்றனர். எனவே சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு சுழல் வட்டத்தில் தொடர்கிறது. இதனால் ஏற்படும் துன்ப துயரங்கள் பாதிப்புக்கள் யாவும் ஒட்டு மொத்த சமூகத் துயரமாகவும் அவமானமாகவும் தொடருவதையிட்டுப் பழமைபேண்வாதிகள் கவலைப்படுவதில்லை. அதனை நியாயப்படுத்தவே முன்நிற்கின்றனர்.


ஏனெனில் தமிழ்த் தேசியத்தை உயர்த்தி நிற்கும் பழைமைவா திகள் சீதனம் விளைவிக்கும் சமூக அநீதியைக் கேள்விக்கு உள்ளாக்கிக் கொள்வதில்லை. அவர்கள் சீதனத்தை உயர் வர்க்க, உயர் சாதிய ‘சமூக அந்தஸ்தாகவே’ கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு யுத்தம் உச்சமாகிக் கொண்டிருந்த 2006ம் ஆண்டின் போது வட புலத்தில் ஒரு உயர் கல்வி அதிகாரி தனது மகளுக்க 35 லட்சம் ரொக் கமாகவும் 35 பவுண் தங்க நகைகளாகவும் வீடு நிலம் போன்றனவும் சீதனமாக வழங்கித் திருமண விழா நடாத்திப் பெருமை கொண்டார். இதனையிட்டு யாரும் கேள்வி எழுப்பவில்லை. பதிலுக்கு அதனை ஒரு பிரமிப்பாகவே நோக்கினர்.

அதன் பாதிப்பு ஒரு சமூகக் கேடாக வசதியற்ற ஏகப் பெரும்பான்மையான பெண்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றிச் சிந்திக்கப்படவே இல்லை. பதிலாக அதே போன்று தாமும் சீதனம் கொடுக்க வேண்டும் என்ற நப்பாசையுடன் புலம் பெயர்ந்து வாழும் தமது உறவுகள் மூலம் பணம் பெற்றுச் சீதனம் வழங்கவே முயலுகின்றனர். இதனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இச் சீதனத்திற்காகப் பனியிலும் குளிரிலும் கடுமையாகவும் அதிகரித்த நேரத்திற்கும் வேலை செய்து விரைவாகவே கடும் நோயாளிகளாகிக் கொண்டவர்களின் எண்ணிக்கை பற்றி யாரும் கணக்கில் கொள்வதில்லை.

தமிழ்த் தேசியம் கால் பதித்து நிற்கும் தமிழர் பழைமைவாதம் சீதனக் கொடுமை பற்றிக் கேள்வி எழுப்புவ தில்லை. அறிவியல் பூர்வமாகவோ அன்றி மனிதநேய மனக் சாட்சி ரீதியாகவோ அதன் சமூகத் தாக்கம் பற்றிப் பேசு வதில்லை. இதற்கு ஒரு உதாரணம் விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் பரந்த பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து ‘ஆட்சி’ செய்த போது இச் சீதனத்தைப் பற்றி உரிய அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. அதன் தீய சமூகத் தாக்கம் பற்றி அறிவியல் பூர்வமாக அணுகப்படவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திச் சீதனத்துள் அடங்கியுள்ள பெண் ஒடுக்குமுறை பற்றி எடுத்துரைக்கவில்லை. பதிலுக்குச் சீதனம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அத் தடையை மீறிச் சீதனம் கொடுக்கப்பட்டால் அதிலிருந்து குறிப்பிட்ட வீதம் தண்டப்பணமாகப் பெறுவதையே புலிகள் நடைமுறையாக்கிக் கொண்டனர். இதனால் சீதனம் மறையவில்லை. அதில் ஒரு பகுதி புலிகளால் வசூலிக்கப்பட்ட நிகழ்வே இடம்பெற்றது.

மேலும் இச் சீதன முறைமையை தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வரும் தேசவழமைச் சட்டம் வலுவாக்கி நிற்கிறது. அத்துடன் மதம், பண்பாடு, மரபு, வழமை, குடும்பக் கௌரவம் என்பனவும் சீதன முறைமையைச் செழுமைப்படுத்தி நிற்கின்றன. ஊடகங்கள் எதுவுமே இச் சமூகப் பிற்போக்குத்தனம் அல்லது பெண்கள் மீதான அநீதி பற்றிக் கேள்வி எழுப்பிக் கொள்வதில்லை. இன்றும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் திருமணப் பந்தம் தேடும் விளம்பரங்களில் சாதி பற்றித் தவறாது குறிப்பிடப் படுவதுடன் சீதனம் பேசித் தீர்க்கப்படும் அல்லது தகுந்த சீதனம் வழங்கப்படும் என்றே வாராந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் மண்ணடிமை, பெண்ணடிமை, சாதிய டிமை போன்ற கசடு கொண்ட ஒடுக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் நீடிக்கும் நிலையில் எவ்வாறு இன விடுதலை என்பதைச் சாத்தியமாக்க முடியும். இதனை எந்தத் தமிழ்த் தேசியவாதிகளாவது காதில் போடத் தயாரா? தமிழ் மொழி தமிழ் இனம் எனச் சிலிர்த்து தமது தொன்மை மேன்மை பற்றி வாய் கிழியப் பேசும் எந்தக் கனவானும் தமிழர் மத்தியிலான இவ் இழிவுகள் பற்றிப் பேசுவதில்லை.

இத்தகைய தமிழர் பழமைவாதிகளான தமிழ்த் தேசியவாதிகள் சீதனம் ஊடான தமது சமூக அந்தஸ்து பேணும் நடைமுறையால் முழு மக்களையும் பின்பற்ற வைக்கின்றனர். அவை மேலிருந்து கீழே புகுத்தப்படுகின்றன. மேலே பார்த்து அவ்வாறே பின்பற்றப்படுவது நிலவுடைமைச் சிந்தனை மரபில் இருந்து பெறப்பட்ட ஒரு நடைமுறையாகும். நடை, உடை, பாவனை, பேசும் தொனி, பார்க்கும் பார்வை, சடங்குகள், கிரிகைகள் யாவும் மேலிருந்தே கீழ் இறக்கம் பெறுகின்றன. அவற்றை நமது பண்பாடு என்றவாறு பரப்பப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியில் சிறு அளவு பொருளாதார வசதி பெறுவோர் தமக்கான மேநிலையாக்கமாகவும் கொள்கின்றனர். அதாவது பார்த்தொழுகுதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றைப் பரப்ப மதமும் சினிமாவும் தொலைக்காட்சி ஊடகங்களும் முன் நிற்கின்றன.

எனவே தமிழ்த் தேசிய இனம் பேரினவாத முதலாளித்துவ இன ஒடுக்குமுறையால் மட்டுமன்றி தமக்குள் தேக்கி வைத்திருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகால நிலவுடைமை வழி வந்த பழைய சுமைகளாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றது. அதில் பெண் ஒடுக்குமுறையின் ஒரு அம்சமாகக் காணப்படுவது சீதனமாகும். இச் சீதன முறையை ஒழிப்பதற்குரிய சமூக விழிப்புணர்வை மாற்றுக் கருத்துப் பிரசாரத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும். சீதனம் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை என்பது நடைமுறையாக்கம் பெறும் வகையில் பரந்து பட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். மேட்டுக்குடி உயர்வர்க்கக் குடும்பங்களில் சீதனம் ஒரு சமூக அந்தஸ்தாகவும் தனிச் சொத்துடமை பேணுதலாகவும் சொத்து விரிவாக்கமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஒருவகையான உடைக்க முடியாத விலங்காக இருந்து வருகின்றது. இதனை உடைக்கப் பெண்கள் மட்டுமன்றி சமூக அக்கறை மிக்க ஆண்களும் மாற்றுக் கருத்துக்களை அறிவியல் பூர்வமாக முன்வைக்க வேண்டும்.

புதியபூமி (மார்ச், 2011)
...மேலும்

Jun 24, 2011

அழைப்பு : எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்..

அன்புடையீர்

எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்..

நெறியாள்கை :
ஸ்ரீஜித் சுந்தரம்

சாதியின் பேராலும் வர்க்கத்தின் பேராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக்குரலாய்..வருகிறோம்.

அனைவரும் வருக!

இடம் :
ஸ்பெசஸ், 1 , எலியட்ஸ் கடற்கரை சாலை பெசன்ட் நகர், சென்னை

நாள் : 25, 26 ஜூன் இரண்டு நாட்களும் மாலை 6 மணி...

அரங்கில்:

அ. அமுதா
ஏஞ்சல் கிளாடி
பிரம்மா
ஜீவா ரகுநாத்
கவின் மலர்
லிவிங் ஸ்மைல் வித்யா
நளினி ஜமீலா
பூங்குழலி
சக்தி சரவணன்
செந்தில் குமார்
சாரதி கிருஷ்ணன்
செந்தில் குமார்
சௌமியா
சுரேந்தர்
தமிழ் அரசன்
தாயம்மா ரம்யா
எஸ்.உஷா

பாடல்கள் : இன்குலாப்

பின்னணி இசை : சித்திரை சேனன்

இசை அமைப்பு : சாரதி கிருஷ்ணன், கவின் மலர்

மேடை பொருட்கள்:
பரணிதரன்
கமலஹாசன்
சோலைராஜ்
ஆனந்த குமார்
ராம்குமார்

ஒளியமைப்பு : விக்டர், அஸ்வினி காசி
உடைகள் : அ.மங்கை, உதவி : செந்தில் குமார்

தயாரிப்பு மேலாண்மை & விளம்பரங்கள் வடிவமைப்பு : சுரேந்தர்

தயாரிப்பில் உதவி : செந்தில் குமார், சோமசுந்தரம்

நெறியாள்கை : ஸ்ரீஜித் சுந்தரம்

உதவி நெறியாள்கை : அற்புதன் விஜய்

பின் அரங்கில் :
அமலா மோகன்
பானு
தர்ஷினி
தினேஷ் குமார்
ஜெனிஃபர் மார்ஷல்
பிரவீன் குமார்
ரூபன் பால்
ஸ்ரீராம்
வைஷ்ணவி
வின்சென்ட் பால்

நன்றி:
அ.மங்கை
சதானந்த் மேனன் (ஸ்பேசஸ்)
பேராசிரியர்.சரஸ்வதி
கொளத்தூர் மணி
பழனிச்சாமி
ஜீவா ரகுநாத்
உமா சத்தியநாரயணா
பிரளயன்
திருமுருகன்
சுதா ஸ்ரீதர்
சிவா
சங்கரி & அனுசுயா சுந்தரம்

”தூரிகையில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி’’ - லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது...மேலும்

Jun 23, 2011

நீதியின் பெண் குரல் அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்ததி ராய் - மாலதி மைத்ரி


1990இல் இந்தியன் பனோரமாவின் மூன்று நாள் திரைப்பட விழா செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்தது. அதில் ஒரு படம் ஆனியும் அவள் நண்பர்களும் (In which Annie gives it those ones) என்று என் நினைவில் பதிந்திருந்தது. தில்லியில் கட்டடக்கலை பயிலும் மாணவர்களைப் பற்றிய கதை. ஒரு பிரெஞ்ச் திரைப் படம் மாதிரியான கதை நிகழ்வும் சம்பவங்களுமாக, படம் இந்தியத் திரைப்படங்களிலிருந்து மிக வித்தியாசமாக இருந்தது. அதில் ஆனியாக நடித்த பெண்ணின் ஆளுமையிலிருந்து நான் விடுபடவே இல்லை. தலை நகரில் மாறிவரும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தனர். மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கார் ஷெட் ஒன்றில் தங்கி வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களின் கனவுகளும்தான் கதை. படம் முடிவில் இந்த நண்பர்கள் யார் யார் என்னவாக ஆகப்போகிறார்கள் என்ற பட்டியல் வரும். இளைஞன் ஒருவன் தான் இந்தியாவில் மிகப் பெரிய நடிகனாவேன் என்பான் (ஷாருக்கான்). ஆனியாக நடித்த பெண் தான் நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுவாள்.

ஏழாண்டுகள் கழித்து 1997இல் பல பத்திரிகைகளில் ஆனியின் புகைப்படத்தைப் புக்கர் விருது பெற்ற நாவலாசிரியர் அருந்ததிராயாகப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சில ஆண்டுகள் கழித்துக் கால்வாசி படத்திலிருந்து படத்தின் பெயர் தெரியாமலே தூர்தர்ஸனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் (மேசே சாகிப்) கேமிராவைப் பார்த்துக் கூச்சத்துடன் நடித்த ஆதிவாசிப் பெண்ணாக அருந்ததி இருந்தார். பிரிட்டிஷ் காலத்தில் மேற்கு வங்காளத்தில் மிகக் கடுமையான மலைப்பகுதியில் சாலை போடும் இந்தியப் பொறியாளரைப் பற்றிய படமது. கட்டடக்கலைஞர், பொறியாளர், நடிகை, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி எனத் தனது பன்முகத் திறன் படைத்த ஆளுமையால் மனித உரிமை ஆர்வலர்களின் நேசத்துக்கு உரியவரானார் அருந்ததி. தன் அறிவாலும் திறமையாலும் புகழாலும் சர்வதேச ஊடகவெளியை மக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சரியான திட்டமிடலால் அறிவுலகத்தினரைத் திகைப்பிலாழ்த்தினார். மக்கள் பிரச்சினைகள் குறித்துக் குரலெழுப்பித் தொல்லை தருபவரென அரசியல்வாதிகளைப் புலம்பவைத்தார்.

பிரேம் 2001இல் பிரான்ஸ் சென்றிருந்தபோது அங்கு பிரெஞ்ச், ஜெர்மன் புத்தகக் கடைகளில் அருந்ததி ராயின் பெரிய புகைப்படங்களின் கீழ் அவரது புத்தகங்கள் விற்கப்படுவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். தில்லியில் 2006 பிப்ரவரியில் ‘தெற்காசியாவில் சுதந்திரமான பேச்சு’க்கான கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது என் அமர்வின் தலைவராக அருந்ததி ராய் வந்தமர்ந்தார். அதுவரை மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் எனக்குத் தெரியாது. அப்போது அவர் ஆற்றிய நீண்ட உரையில் காஷ்மீர் பிரச்சினை முக்கியச் செய்தியாக இருந்தது. அதை முன்வைத்து அந்த வருடம் ஜனவரியில் தனக்களிக்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதை மறுத்ததற்கான விளக்கங்களையும் கொடுத்தார். அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்தும் பிரான்ஸின் அல்ஜீரியர்மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் தனக்களிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்திருந்த ழான் பால் சார்த்தர் என் நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் விருதுக்காகவும் சில அனுகூலங்களுக்காகவும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்யப் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையும் நினைவுக்கு வந்தது.

அருந்ததி தனது காஷ்மீர் கள ஆய்வுகள் குறித்தும் கேரள முத்தங்கா ஆதிவாசிகள் போராட்டம், சர்தார் சரோவர் அணைகட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அந்தக் கருத்தரங்கில் இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் பிரசன்ன வித்தனகே, ஜெயசூர்யாவின் திரைப்படங்களின் திரையிடல்களுக்குப் பிறகு இலங்கை இனப்போர் குறித்து விவாதிக்கப் பட்டாலும் அது அந்நிய நாட்டின் பிரச்சினை என்னும் தளத்திலேயே விவாதங்கள் முடிந்தன. கருத்தரங்கம் முடிந்த கடைசி நாளன்று ஆவணப்பட இயக்குநர் சபா திவான் தனது வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். நானும் பிரேமும் சென்றிருந்தோம். அருந்ததியும் வந்திருந்தார். நடு இரவு கடந்தும் நேரம்போவது தெரியாமல் அவரது நாவல், திரைப்படங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழில் அவரது நாவல் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஏன் வெளிவரவில்லையென விசாரித்தேன். ‘என் தமிழக நண்பர் அந்தப் பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொன்னார், அதனால் நிறுத்தி விட்டேன்’ என்றார். அருந்ததியின் The God of Small Things

நாவல் தமிழைத் தவிர இதுவரை 40க்கும் மேற் பட்ட மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து இந்திய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருந்தார். அவரது புத்தகங்களுக்குக் கிடைத்த ராயல்டியை நர்மதா பச்சா அந்தோலனுக்கு அளித்திருந்தார். இந்தச் சமயத்தில் அருந்ததிமீது குஜராத் அரசியல்வாதிகளும் மலையாள எழுத்தாளர்கள் சிலரும் வதந்தி ஒன்றைப் பரப்பிக்கொண்டிருந்தனர். அருந்ததியின் கணவருக்கு நர்மதா பள்ளத்தாக்கில் பண்ணை வீடு இருப்பதாகவும் அதைப் பாதுகாக்கத் தான் மக்களுக்கான மிகப் பெரிய இந்த வளர்ச்சித் திட்டத்தை எதிர்க்கிறார் என்பதுதான் அது. வதந்திகளுக்கு அவர் ஒருபோதும் பதிலளிப்பதில்லை. அவரின் தீவிரச் செயல்பாடுகளை அதற்கான பதிலாக விட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறார். தனக்குக் கிடைத்த உலகளாவிய அடையாளத்தைச் சரியான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி இந்திய அரசின் மக்கள் விரோத அரசியலை அச்சமில்லாமல் விமர்சித்துக்கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தை விமர்சித்ததற்காக 2002இல் சுப்ரீம் கோர்ட் அருந்ததிக்கு ஒரு நாள் அடையாளச் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது. சிறைக்குச் சென்று வந்த அருந்ததி ‘இந்தியாவில் வெளியில் வாழ்வதைவிடச் சிறை வாழ்க்கையே மேல்’ என்றார்.

இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் விரோத அரசாட்சி முறையையும் கொள்கைகளையும் வன்முறை அரசியல் கலாச்சாரத்தையும் அதன் எதேச்சதிகாரத்தையும் கண்மூடித்தனமான ஏகாதிபத்திய சார்பையும் விமர்சித்து சில இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள், குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்த நிலையில், அந்த மாற்று அரசியல் பேசும் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பும் தலைமையும் வெற்றிடமாக்கப்பட்டுச் சூன்யத்தை நோக்கி உரையாடிக்கொண்டிருந்த நிலையை நாம் அறிவோம். இந்தியாவில் அந்நியக் காலனிய ஆட்சிமாற்றத்திற்குப் பின் ஒரு தலைமுறை அரசியல் வரலாற்றுக் காலத்தில் பேச முடியாத நிலையிலிருந்த பெண்கள் - இந்திய அரசின் கண்மூடித்தனமான தேச வளர்ச்சி என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட பெரிய தொழிற்சாலைகளாலும் மகா திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட - இந்தியாவின் பின்தங்கிய வறுமையில் வாடும் மக்களுக்காக 80களில் தீவிர அரசியல் களத்துக்குள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு மக்கள் தலைமையில் போராட வந்தனர். இந்திய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் குடியுரிமையையும் பாதுகாக்க வேண்டிய இந்திய நாடாளுமன்றமும் மாநிலச் சட்ட மன்றங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முகவர் அலுவலகங்களாகச் செயல்படுவதையும் எழுத்தாளராக இருந்து சமூகப் போராளியாகக் களம் கண்ட மகாஸ்வேதா தேவி, கவிஞராக அறிமுகமாகிச் சமூகப் போராளியான மேதா பட்கர் முதலான இந்தியப் பெண் அரசியல் தலைமைக்கு முன் போராளிகளாகத் தனித்து மக்களுடன் களம் இறங்கினர்.இவர்கள் அருந்ததிக்கு முன்னோடிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அருந்ததி மாதிரியான உலகளவிலான பொது ஊடகத் தளம் இல்லை. அருந்ததி தனக்குக் கிடைத்த புகழை மிகச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களையும் அவற்றின் அரசியலையும் பேசி அரக்கிடப்பட்ட ஊடகங்களின் மௌனத்தை உடைத்தார். உலகமயமான தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களின் காலனியப் படையெடுப்பு, வல்லரசுகளின் போர்வெறி, இயற்கைவளக் கொள்ளை, உள்நாட்டுப் போர், ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டங்கள். மனித உரிமைப் போராட்டங்கள். உள்நாட்டில் காவல் துறையினரும் ராணுவத் தினரும் சட்டம் ஒழுங்கு, தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நடத்தும் கண்மூடித்தன மான படுகொலைகள், வன்முறைகள் என மனித விரோத அரசியலின் அனைத்து வகையான கொள்கைகளையும் செயல்களையும் கண்டித்துப் பேசி உலக சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டும் மிகச் சாதுர்யமான அரசியல் யுத்தியைக் கையாள அவர் பயப்படவில்லை. தற்போது இந்திய மற்றும் உலக வல்லரசுகளின் போர் மேலாதிக்க மக்கள் விரோதச் செயலைத் துணிந்து விமர்சிக்கும் தீவிர அரசியல் போராளியாகவும் போராடும் மக்களுடன் கைகோக்கும் களப்போராளியாகவும் கடந்த பத்தாண்டுகளாக உலகளவில் அடையாளம் பெற்றுள்ளார்.

மாவோயிஸ்டுகளைச் சந்தித்து வந்தபின் அவரின் கருத்துகள் இந்திய அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கின. மாவோயிஸ்டுகளை ‘ஆயுதத்துடன் போராடும் காந்திகள்’ எனச் சொன்னார். ‘ஆதிவாசிகளின் தலைகளில் துப்பாக்கியை வைத்து இடத்தைக் காலி செய் என்று அரசு சொன்னால் அவர்களிடம் உள்ள வில் அம்புகளுடன் மக்கள் அரசை எதிர்த்துப் போரிடத்தான் செய்வார்கள்’ என்றார். தண்டேவாடா நிகழ்வுக்குப் பிறகு அரசு மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதற்கு மாவோயிஸ்டுகள் தரப்பிலிருந்து அருந்ததியைப் பேச அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அருந்ததியே உடன்படவில்லை. தான் பார்வையாளராக வேண்டுமானால் இருப்பதாகவும் மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாக வர விரும்பவில்லை என்றும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் ‘பொது மக்களைப் படுகொலை செய்யும் மாவோயிஸ்டுகளை எப்படி ஆதரிக்கிறீர்கள்?’ என்ற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் எழுப்பியபோது, ‘மாவோயிஸ்டுகளை முழுமையான ஜனநாயகவாதிகளாக நான் பார்க்கவில்லை. சொந்த நாட்டு மக்களையே கொல்லும் இந்தப் பாசிச அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகளுக்காகப் போராடுவதால் ஆதரிக்கிறேன். எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நானே இவர்களின் எதிரியாகக்கூட வாய்ப்புள்ளது’ என்றது இப்போது நினைவு கொள்ளத்தக்கது. இந்த அரசியல் தெளிவு அறிவுஜீவிகளுக்கு விடுதலைப் புலிகள் குறித்து அமையாதது வருத்தமே. தஸ்லீமா நஸ்ரீன் மீதான இஸ்லாமிய அமைப்புகள் விதித்த பாத்வாவையும் ஐதராபாத்தில் தஸ்லீமாமீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்தார். மதச் சிறுபான்மையினர் என்பதற்காக இஸ்லாமியர்களை அருந்ததி கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் என்னும் அரசியல் ஆதாயப் பேச்சுகள் அர்த்தமற்றவை.

மேதா பட்கரின் ‘நர்மதா பட்சா அந்தோலனுடன்’ சேர்ந்து சர்தார் சர்ரோவர் அணைக்கட்டு எதிர்ப்புப் போராட்டம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு, என்ரான் நீர்மின் திட்டம், மணிப்பூரில் சிறப்புப் பாதுகாப்புப் படையைத் திரும்பப்பெறக் கோரும் மணிப்பூர் மக்கள் போராட்டம், மாவோயிஸ்டுகளின் போராட்டம், ஒரிசா கந்தமால் நிகழ்வு, ஆதிவாதிகளின் நில மீட்புப் போராட்டம், கேரளா முத்தாங்காவிலும் செங்காராவிலும் ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டம், காஷ்மீர் மக்கள் போராட்டம், மேற்கு வங்கம் சிங்கூர், நந்திகிராம் படு கொலைகள், உள்நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள், ஈராக் போர், இஸ்ரேல் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, ஆப்கான் யுத்தம், இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்புப் போரென இன்று இந்தியாவில், உலகளவில் நடக்கும் போர்களையும் யுத்தங்களையும் எதிர்த்துக் கருத்துகளைப் பரப்புவது, அனைத்து மனித உரிமைப் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்பது, வேண்டிய இடங்களில் போராட்டங்களில் கலந்துகொள்வது, மேலாதிக்க அரசுகளை விமர் சிக்கத் தயங்காத துணிவுடன் தொடர்ந்து செயல்படுவது, குடிசைப் பகுதி அகற்றப்பட்டு மக்கள் அல்லல்படும்போது அங்கே சென்று நியாயம் கேட்பது, மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது இப்படியாகத் தொடர்பவர்தான் அருந்ததி. தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை ‘யுத்த ஆயுத தளவாடங்கள் விற்க வந்த வியாபாரி ஏன் காஷ்மீர் பற்றி வாய் திறக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்புகிறார். ஒபாமாவின் வருகையைக் கடுமையாக விமர்சிக்கும் அருந்ததி இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து விருந்துண்டு நன்கொடை பெற்றுப் போகும் போர்க் குற்றவாளி, தமிழக மீனவர்களைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமே.

‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருக்க முடியாது’ என்று தில்லி கருத்தரங்கில் பேசிய அருந்ததி, காஷ்மீருக்கு விடுதலை மட்டுமே ஒரே தீர்வெனப் பேசிய ஹுரியத் கட்சித் தலைவர் கிலானி மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோர்மீது தில்லி கோர்ட்டில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த அதித்தியா ராஜ் கவுல் என்பவர் தேச விரோதக் குற்றச்சாட் டின் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கு முதல்நாள் அக்டோபர் 31இல் ஆர். எஸ். எஸ் மகளிர் அமைப்புகளால் அவரது வீடு தாக்கப்பட்டது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் லக்ஷ்மணன் சிங் 124ஏ மேலும் மூன்று பிரிவின் கீழ் அருந்ததி மீது வழக்குத் தொடுக்க 12ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். பாலினச் சகிப்பு, சாதிச் சகிப்பு, மதச் சகிப்பு, கருத்துச் சகிப்பின் தடங்கள் தேய்ந்து அழிந்து காணாமல்போன இந்திய தேசத்தில் இது போன்ற தாக்குதல்களை அருந்ததி எதிர்பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். கருத்துக்கு உயிரை விலைகேட்கும் அரசுகளின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மணிப்பூரில் நிலைகொண்டுள்ள சிறப்புப் பாதுகாப்புப் படையை ஆளும் காந்திய காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இரோம் சர்மிளா காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். காஷ்மீர் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் அறவழியில் போராட அறிவுறுத்தும் மனிதாபிமானிகள் மணிப்பூருக்குப் போய் இரோம் சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு மணிப்பூர் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டு வந்து பிறகு தங்களது அறிவுரை மூட்டைகளை அவிழ்த்துக் கடைபரப்பினால் இடது கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுவங்கி அதிகரிக்கிறதா எனப் பார்க்கலாம்.

உண்மைகளை உரத்தும் தைரியமாகவும் பேசுவதால் வன்முறையைத் தூண்டும் பேச்சாளராகவும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தேச விரோதியாகவும் அரசியல்வாதிகளின் கண்டனத்துக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் அருந்ததி இதையெல்லாம் கண்டு அஞ்சுவதில்லை. தன் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் வன்முறையின் குரூரத்தை வியாபாரமாக்கப் பார்க்கும் ஊடகங்களின் அறம், வணிக நோக்கம், ஊடகங்களுக்கு வன்முறையாளர்களுடனான தொடர்பு ஆகியவற்றைக் கேள்வி கேட்கிறார். டிஆர்பி ரேடிங்கிற்காக வன்முறையின் சாட்சிகளாகவும் வன் முறையைத் தூண்டியும் ஊடகங்கள் செயல்படுவது மிகக் கொடியது. ஊடகங்கள் தங்கள் செய்திகளைப் பரபரப்பாக்கக் கூலிப்பட்டாளங்களை உருவாக்கி நாட்டில் வன்முறையைத் தூண்டுகின்றனவோ என்னும் அச்சமெழுகிறது. குறிப்பாகப் பெண்கள் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தித் தாக்குதல்கள் நடத்த ஊடகங்கள் ஊக்குவிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியப் பெருமை பேசும் பல மதவாத அமைப்புகள் கூலிப்படைகளாக நடந்துகொள்வது சமீபத்தில் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கும் அவமானங்களுக்கும் நடுவில்தான் அருந்ததி ராய் பெண்ணாகவும் எழுத்தாளராகவும் களப்பணியாளராகவும் மனித உரிமைகள், மக்கள் அரசியல் ஆகியவற்றுக்கான மாற்றுக் கருத்துகளைத் தயங்காமல் பரப்பி வருகிறார். அவரும் ஒரு ஊடகவியலாளராக இருந்தபடி, மாற்று ஊடகத்தின் குரலாக ஒலித்தபடி.

நானும் பிரேமும் அருந்ததியுடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘நீங்கள் இன்னொரு நாவல் எழுத வேண்டும், எப்போது’ என்றதற்குத் தலையைக் கலைத்தபடி ‘இனி நாவல் எல்லாம் இல்லை, எனது படைப்புச்செயல் இனி அரசியல் செயல்பாடுதான் (Activism is my creativity) என்றார். இந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நீங்கள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றதற்கு, பார்க்கலாம் என்றார். இனி அவர் நாவல்தான் எழுத வேண்டும் என்று இல்லை, தன் வாழ்க்கையை, நினைவுகளை எழுதினாலே போதும் அது உலக இலக்கியங்களில் ஒன்றாக ஆகிவிடும். ஆம் அருந்ததி, இதுபோல் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.
நன்றி - காலச்சுவடு 
...மேலும்

Jun 22, 2011

அஞ்சலி - அநுத்தமா என்ற அசாதாரண ஜீவன் - வாஸந்தி


“மூச்சுவிடுவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறது” என்றார். கூப்பிட்டவுடன் வந்து விசாரித்த மருத்துவர், “பக்கவாட்டில் படுங்கள்” என்றார். “சரி” என்று ஒருக்களித்துப் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டார். ஏற்றிய சூடம் மலையேறுவதுபோல உயிர் காற்றோடு கலந்துவிட்டது.

அநுத்தமா என்னும் அபூர்வ மனுஷியை மரணம் அவர் வாழ்ந்தது போலவே மிகக் கண்ணியமாக ஆரவாரமில்லாமல் ஹிம்சைப்படுத்தாமல் பூவைச் சுற்றி எடுத்துச் செல்வதுபோல அழைத்துச் சென்றது எனக்கு மிகப் பெரிய அதிசயமாக இருக்கிறது. கடைசி மூச்சுவரை தனக்குள் பூரணமாக அனுபவித்து இலக்கிய ரசனை குன்றாமல் வாழ்ந்த அந்த 87 வயதுப் படைப்பிலக்கிய மூதாட்டியின் முடிவு இதைவிடக் கவித்துவமாக இருந்திருக்க முடியாது. ஒரு சிறுமியின் ஆர்வத்துடன் மரண தேவனின் கையைப் பிடித்து அவர் நடையைக் கட்டியிருக்கலாம். அவரது அகன்ற சாகரக் கண்களில் எப்போதுமே ஆர்வமும் பிரமிப்பும் இருக்கும் - படைப்பின் ரகசியங்களைக் கண்டுகொண்ட ஆனந்தப் பிரமிப்பு. எத்தனை அழகு பாத்தியா? எத்தனை அற்புதமா எழுதறார் பாத்தியா? அந்தப் பேச்சாளர் பேச்சைக் கேட்டியோ, அபாரம்! சின்னப் பெண், என்னமா பாடறாங்கறே? பிரபஞ்ச சிருஷ்டியில் அவருக்கு எல்லாமே அழகு. அதிசயம். மற்றவர்களின் சாதனைகள் எல்லாம் அவருக்கு அசாதாரணம் என்று தோன்றும். அவரே அசாதாரணம் என்று அறியாத பேதமை தொனிக்கும். ஆத்மார்த்தமாகத் தன்னை ஒரு பார்வையாளராகவே, ரசிகையாகவே பாவித்துக்கொண்டவர். தன்னைப் பற்றியே கிண்டலடித்துச் சிரிக்கப் பழகியவர். இறப்பதற்குப் பத்து நாள் முன்பு தொலைபேசியில் அவர் சிரித்தது நினைவுக்கு வருகிறது. ‘எத்தனை புத்திசாலி பாத்தியோ? என் கையைப் பிடிச்சுக்க ஆள் நிக்கும்போதே கீழே விழறேன்.’

ஆனால் அந்தச் சிரிப்பு எனக்குள் ஒரு விநோதமான சூசகமாகத் தோன்றிற்று. அவர் கிளம்பத் தயாராகிவிட்டது போல. நான்தான் அவருடைய மறைவுக்குத் தயாராகாததுபோல இன்று உணர்கிறேன். என் தாயிடம் இருந்திராத உணர்வுபூர்வமான நெருக்கம் எனக்கு அவரிடம் இருந்தது. பத்து வயதில் ஏற்பட்ட உறவு. கோவில்பட்டியில் என் பெற்றோர்கள் இருந்த சமயத்தில் அநுத்தமாவின் கணவர் பத்மனாபன் அங்கு மாநில மின்சார வாரியத்தில் கண்காணிப்புப் பொறியாளராகப் பணியில் இருந்தார். தமிழ்ப் பார்வையும் புன்னகையும் என்னை ஈர்த்தன. இன்றுவரை இடை வெளியே ஏற்படுத்தாத அதிசய ஈர்ப்பு அது .

அநுத்தமா எழுத்துலகில் பிரபலமாகியிருந்த நேரம் அது. ஆனால் புகழின் பந்தா எதுவும் இல்லாமல் மிக எளிமையாக, சரளமாக அவர் பழகியது வியப்பாக இருக்கும். அதைவிட அவரது நகைச்சுவை உணர்வும் அழகாக இடையிடையே பேசிய ஆங்கிலமும் ஆகர்ஷிக்கும். தமிழ் எழுத்தாளர்கள் என்றால் ஆங்கிலம் பேச வராது என்று நான் நினைத்திருந்தேன். அவர் எழுதிய மணல் வீடு நாவலுக்கு அந்த நாட்களில் மிகவும் மதிப்பு மிகுந்த கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது கிடைத்திருந்தது. அவரது நைந்த உள்ளம் தொடராகக் கலைமகளில் வந்துகொண்டிருந்தது.

நான் அநுத்தமா ‘மாமி’யின் கிடைத்த கதைகள் எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்தேன். அவரது ‘வேப்பமரத்துப் பங்களா’ பெரியவரும் ‘ஒரே ஒரு வார்த்தை’யின் அன்பான ஒரு வார்த்தைக்காக ஏங்கிய கதாநாயகியும் நெருக்கமானார்கள். அதன் உளவியல் நுட்பங்கள் அப்போது புரிந்தனவோ இல்லையோ நான் அநுத்தமாவின் தீவிர விசிறியானேன். கோவில்பட்டியில் இருந்த சமயத்தில் கலைமகளில் ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்த ‘தாய் என்பவள் ஒரு ஸ்தாபனம்’ என்ற வரி எனது பதின்வயது மனத்தில் ஆழப்பதிந்தது. பிற்காலத்தில் பெண்ணியச் சிந்தனைகளின் அறிமுகத்தில் அந்த வரியின் பரிமாணம் அகன்று வேறு தளங்களைத் தொட்டபோது எல்லைகள் விரிந்தன. அவரது கேட்ட வரம் நாவலைப் படித்துக் கேட்டவரம் கிராமத்துக்குச் சென்று பஜனை கோஷ்டியுடன் உட்கார ஆசை பிறந்தது. கிராமத்துத் தெருக்களும் அங்கு உலவிய கதாபாத்திரங்களும் மிகத் தத்ரூபமான நிஜமான நபர்கள். எல்லோருமே ஏதேனும் வரத்திற்காகக் காத்திருப்பவர்கள் என்று தோன்றிற்று. நாவலில் பஜனை- ஜால்ரா சத்தம் அதிகம் என்று நான் மாமியிடம் கிண்டல் அடித்தது நினைவுக்குவருகிறது. அதை மீறி அடிநாதமாக நாவலில் நேயமும் காதலும் தென்றலைப் போல வருடும். கதாநாயகி எம். ஏ., படித்தவள். ஆனால் எளிமையாக அப்பாவியைப் போன்ற தோற்றமுடையவள். கிட்டத் தட்ட அநுத்தமாவைப் போல. மாமி எம். ஏ., படிக்கவில்லை. அவரது கான்வென்ட் படிப்பு ஏழு வகுப்புடன் 13 வயதில் திருமணம் நிச்சயமானவுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆங்கிலப் படிப்பின் ஆரம்ப அடித்தளமும் அவரது இயல்பான அறிவு வேட்கையும் சுயமாக வளர்த்துக்கொண்ட திறன்களும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் அவர் கற்றிருக்க முடியாது. திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழித்து மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தவர். பலவித ஆற்றல்கள் அவரிடம் அனாயசமாகப் புகுந்திருந்தன. பெண்மைக்கே உரித்தான கைவேலைகள், பொம்மை செய்தல், கோலம் போடுதல் என்பவை மிகக் கலை அழகுடன் செய்யவரும். அவர் சமையல் செய்து நான் பார்த்ததில்லை, அதைச் செய்ய வீட்டில் எப்பவும் ஆள் இருந்ததால் அவருக்கு அவசியம் இருக்கவில்லை என்றாலும் அவருக்கே அதில் அதிக ஆர்வம் இல்லை என்று எனக்குத் தோன்றும். அதைவிடப் படிப்பதும் எழுதுவதும் அதிக ஆக்கபூர்வமான நேரமாக அவர் நினைத்திருப்பார். அவரது பாரம்பரிய உடையைக் கண்டு அவர் ஒரு கட்டுப்பெட்டி என்று நினைப்பவர்கள் பலருக்கு அந்த ஒன்பது கெஜப் புடவைக்குள் ஒளிந்திருந்த திறமைகள் தெரிந்திராது. அவர் பேசும் ஆங்கிலம் என்னை அசத்தும். கவித்துவ அழகுடன் ஆங்கில வார்த்தைகளை அனாயசமாக உபயோகிப்பார். ஆங்கில உச்சரிப்பு கனக்கச்சிதமாக இருக்கும். Victorian எழுத்தாளர்களின் எல்லா எழுத்தையும் படித்திருந்தார். திட்டம் போட்டுப் படிப்பார். ஜேன் ஆஸ்டின், சார்ல்ஸ் டிக்கன்ஸ், ப்ரான்டே சகோதரிகள், அலெக்சாண்டர் டியூமா... என்று எந்த ஆசிரியரை எடுத்தாலும் அவரது மொத்தப் படைப்புகளையும் வாசித்துவிடும் பழக்கம் சிறுவயதிலேயே ஆரம்பமானதாகச் சொல்வார். எப்போது அவரைச் சந்திக்கச் சென்றாலும் ஏதேனும் ஒரு புத்தகம் அவர் கையில் இருக்கும். அவருக்காகப் பத்மனாபன் வாசகச் சாலைகளிலிருந்து ஆங்கிலப் புத்தகங்களைக் கொண்டுவருவார். மாமாவும் மாமியும் ஒரே புத்தகத்தைப் படித்து ரசித்து அலசுவார்கள். மாமிக்கு சம்ஸ்கிருதத்திலும் புலமை உண்டு. பூர்வீகம் வட ஆற்காடு என்றாலும் நெல்லூரில் பிறந்து வளர்ந்ததால் தெலுங்கும் தெரியும். கம்பனும் வால்மீகியும் நாவின் நுனியில் நிற்பார்கள். ஆழமான ஆன்மிக விசாரம் உண்டு. பண்பாட்டில் தீவிர ஈடுபாடு உண்டு. ஆனால் எதிர்பாராத தருணத்தில் முற்றிலும் வித்தியாசமான முகத்தைக் காண்பிப்பார். அவரது நினைவாற்றலும் உலக வரலாறு பற்றிய பொது அறிவும் சமயத்தில் வியப்பை அளிக்கும். நான் சீனாவுக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னபோது நேரில் கண்டு வந்தவர் போல அதைப் பாரு இதைப் பார்க்காம வராதே என்று ஒரு பட்டியல் அளித்தார். எகிப்துக்குச் செல்கிறேன் என்றபோதும் எனக்குத் தெரிந்திருந்ததைவிட அவருக்கு எகிப்து ஃபாரோ சாம்ராஜ்ய வரலாறு அதிகமாகத் தெரிந்திருந்தது. பத்மனாபனுக்கு மேட்டூரில் பணிமாற்றல் ஏற்பட்டபோது அங்குப் பணியில் இருந்த ருஷ்யர்களின் மனைவிகளுடன் பேசிப் பழகுவதற்காக (பாவம் தனிமையாக உணரமாட்டார்கள்?) மாமி தாமாக ருஷ்ய மொழியைக் கற்று அவர்களுடன் சம்பாஷிக்கும் அளவுக்குத் தேர்ச்சிபெற்றிருந்தார்!

‘என் நாவலை முடிச்சுட்டேன், புத்தகமா வந்தாச்சு’ என்று ஒருமுறை வியப்பிலாழ்த்தினார். அது - ‘நல்லதோர் வீணை’ - ஒருமுறை எழுதி அவருக்குத் திருப்தி இல்லாமல் கிழித்துப்போட்டுவிட்ட நாவல் - இனிமே எனக்கு எழுத வரும்னு தோணல்லே என்ற அவரை நான் கோபித்து வற்புறுத்தி மறுபடி அவர் எழுதியது. சூடாமணியும் அவரை உற் சாகப்படுத்தியதாகப் பிறகு சொன்னார். அவருக்கு அப்போது வயது 84 - 85 மட்டுமே.

தன் எழுத்தாற்றல் தனது சாதனை என்றே அவர் நினைக்கவில்லை. ஆண்டவனின் வரப்பிரசாதமாகவே அவர் கருதுவதாகப் படும். அவரது முதல் கதை (கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது); ‘அங்கயற்கண்ணி’யை எழுதும் உத் வேகம் ஏதோ ஓர் அநுபூதி கிடைத்ததாலேயே எழுத முடிந்ததாக அவர் சொன்னது எனக்குச் சிறுவயதில் ஆச்சரியமாக இருக்கும். அவர் எழுதிய பல சிறுகதைகள் தாமாக எழுதிக்கொண்டவை என்று மாமி சொல்வது அடக்கத்தாலா நம்பிக்கையாலா என்று எனக்குக் குழப்பம் ஏற்படும். எழுதும் காலங்களில் ஓய்வில்லாமல் எழுதுவார், ஆட்கொண்டவர்போல. அவர் எழுதி எழுதிக் கீழே போடும் ஒரு பக்கத் தாளை மாமா அழகாக அடுக்கிப் பக்கம் மாறாமல் சேர்த்துவைப்பார். தன் மனைவியின் ஆற்றலைப் பத்மநாபன் பூரணமாக உணர்ந்திருந்தார். வாயால் வெளிப்படையாகப் பாராட்டா மல் செய்கையில் அவர் செய்த உதவிகள் நெகிழ்ச்சி அளிக்கும். மனைவியின் உலகத்துடன் தம்மை அவர் இணைத்துக்கொண்டது மிக லாவகமான செயலாக இருந்தது. மாமி ஓய்வில்லாமல் எழுதிய தீவிரம் மிகுந்த காலத்தில் அவரது கழுத்து நரம்புகளைப் பாதிக்க ஆரம்பித்தது. அதற்காகச் சென்னை அரசினர் பொதுமருத்துவமனையில் traction சிகிச்சை பெற நேர்ந்தது. அதற்குப் பிறகு அடிக்கடி நரம்புத் தளர்ச்சியால் சிரமப்பட்டார். பத்மநாபனுக்கு அது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

மாமியின் எழுத்துக்கு மிகுந்த ஆதரவளித்த கி. வ. ஜகன்னாதனுடன் தம்பதிகளுக்கு மிக நெருங்கிய நட்பு மலர்ந்தது. மாமியின் எழுத்து வேகத்தை அறிந்திருந்த கி. வ. ஜ., சாத்தியமற்ற காலக்கெடுவுக்குள் நாவலைத் தரும்படி கேட்டாலும் யோசனை இல்லாமல் மாமி ஒப்புக்கொண்டு மாமாவிடம் திட்டு வாங்கி மாய்ந்து மாய்ந்து எழுதி முடித்துக்கொடுத்த சம்பவம் உண்டு.

இத்தனைக்கும் அநுத்தமாவின் பூகோள எல்லைகள் குறுகியவை. அவரது உலகம் வீட்டுக்குள் இருந்தது - அவருடைய ஆதர்ஷ எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினுடையது போல. மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன், எண்ணற்ற வட ஆற்காடு உறவினர்கள், உறவுக்குள் பிணக்குகள், மகிழ்ச்சிகள் எல்லாமே மனித இயல் பின் வரைபடங்களாக இருந்தன. குடும்பம் எனும் ஸ்தாபனம் அவருக்கு முக்கியமானது. அங்கு உலவும் மாந்தர்களின் மன வக்கிரங்களும் விவேகமுமே ஒட்டுமொத்த மனித வாழ்வின் உயர்வையும் தாழ்வையும் நிர்ணயிப்பது என்று உறுதியாக நம்பினார். அசட்டுப் பெண்கள், மன முதிர்ச்சியற்ற பெண்கள், விவேகமற்ற ஆண் அதற்கு நேர் எதிராக விவேகமும் பொறுமையும் மிகுந்த புத்திசாலிப் பெண்கள், முதியவர், சிறியவர் எல்லோரும் அவரது கதாபாத்திரங்கள். அவர் பெண்ணியக் கோஷமெழுப்பவோ அரசியல் பேசவோ முயலவில்லை. அதில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை. சனாதன தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த அவருக்குத் திட்டவட்டமான பண்பாட்டு மதிப்பீடுகள் இருந்தன. அதை ஆரவாரமில்லாமல் வெளிப்படுத்தினார். மாற்றம் தவிர்க்க முடியாதது என்றாலும் பாரம்பரியப் பண்புகளின் தொடர்ச்சி ஆன்மிக பலம் தரும் என்று அவர் நினைப்பது அதில் வெளிப்படும். புரட்சிப் பெண் பூமாவும் அவர் வடித்த கதாபாத்திரம்தான். அவரது மற்ற பெண் பாத்திரங்களிலிருந்து வேறுபட்டவள். ‘அவள் நாளைய பெண். அவளைப் படைக்க வேண்டிய அவசியம் இருந்தது’ என்று ஒருமுறை சொன்னார். பூமாவின் கருத்துகளுடன் அவருக்கு உடன்பாடு இல்லை என்று எனக்குத் தோன்றிற்று.

சக எழுத்தாளர்களின் எழுத்தை மிக ஆர்வத்துடன் படிப்பார். ரசித்தவற்றைத் தயங்காமல் பாராட்டுவார். நானும் எதிர் பாராமல் எழுத்துலகில் காலடி வைக்கத் துணிந்தேன். எனது முதல் இரண்டு கதைகள் (‘62) முத்திரைக்கதைகளாக ஆனந்த விகடனில் வெளியானபோது பெற்ற தாயைப் போல மாமி சந்தோசப்பட்டார். எழுபதுகளில் அதிகமாக எழுத ஆரம்பித்தேன். என் கணவருக்கு அப்போது நேபாளத்தில் வேலை. எனது முதல் நாவல் சிறகுகள் வாரத் தொடராக வெளிவந்தபோது மாமி மிகவும் சந்தோஷப்பட்டார். நான் சென்னைக்கு அவரைக் காணச் சென்றபோது சரியான சமயத்தில் நான் பிரவேசித்திருப்பதாகச் சொன்னார். அதன் விளக்கம் என்ன என்று கேட்க மறந்துபோனேன். புதுமையையும் பழைமையையும் சரியான விகிதத்தில் எனக்குக் கலக்கத் தெரிந்திருப்பதாக அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அதை நான் திட்டமிட்டுச் செய்யவில்லை என்று ரோசத்துடன் பதில் சொன்னதும் நினைவுக்குவருகிறது. என்னை அப்போதுதான் சூடாமணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். எழுத்துலகில் பிரபலமான அவர்கள் இருவருக்கும் முன்னால் மிகச் சிறியவளாக உணர்ந்தது இன்று துல்லியமாக நினைவிருக்கிறது.

என் எழுத்தில் நான் வெளிப்படுத்திய கருத்துகள் பலவற்றுடன் அவர் முரண்பட்டார். ஆரம்பத்தில் என் கருத்தைத் தான் ஏற்கவில்லை என்று சொல்வார். அதில் வருத்தம் இருந்ததாகத் தோன்றும். ஆனால் அவருடன் வாதம் செய்ததில்லை. பின்னால் வந்த எனது பிற எழுத்துக்களில் அவருக்குக் கருத்து வேறுபாடு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் எதுவும் சொன்னதில்லை. நான் இருப்பது மாறுபட்ட உலகம், என் பார்வை வேறு என்று அவர் உணர்ந்திருப்பார்.

இந்தியா டுடே தமிழ்ப் பதிப்புக்கு ஆசிரியையாகச் சென்னைக்கு வந்தபோது அவருக்குத் தவறாமல் ஒரு பிரதியை அனுப்புவேன். அதில் நான் தொடர்ந்து எழுதிய அரசியல் பத்தியைப் படித்துவிட்டுப் பயந்துபோவார். அடிக்கடி ‘ஜாக்கிரதையா இரு’ என்பார். நான் அவரைக் காணச்செல்லும் போதெல்லாம் அவருடைய கண்களில் ஒரு மிரட்சி இருப்பதாகத் தோன்றும். இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறாரோ என்று எனக்குக் குறுகுறுக்கும்.

சொந்த வாழ்வில் இடிபோன்ற பல அனுபவங்களை அவர் கண்டவர். சகோதரி, சகோதரன், சகோதரனின் மனைவி, மாமா எல்லோரும் எதிர்பாராமல் இறந்தது அவருக்குப் பேரிடியாக இருந்திருக்கும். மாமி எல்லாத் துக்கத்தையும் யோகியைப் போல ஜீரணித்துக்கொண்டது அதிசயம். வாய்விட்டு அரற்றியதில்லை. புலம்பியதில்லை. சுயபச்சாதாபமில்லை. யாரைப் பற்றியும் குறை சொன்னதில்லை. குறைபட்டதும் இல்லை. பெற்ற பிள்ளை இல்லாத குறை இல்லாமல் கொழுந்தன் சாமியும் அவருடைய மனைவி கௌரியும் தன்னிடம் காட்டும் அன்பையும் பரிவையும் சொல்லி நெகிழ்ந்துபோவார். ‘எனக்கு எத்தனை அதிர்ஷ்டம் பார்’ என்று சொல்லும்போது கண்களில் அசாதாரண ஒளி இருக்கும். சக எழுத்தாளர்கள் பலர் அவர்களது எழுத்துக்கு விரோதமான குணங்களை வெளிப்படுத்தும்போது, ‘விடு, அந்த எழுத்தைப் பாரு, எப்பேர்ப்பட்ட எழுத்து’ என்பார். கிடைத்த விருதுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றார். கிடைக்காதவற்றைப் பற்றிப் பேசினதே இல்லை. 23 நாவல்கள் 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியவர் 6 சிறுகதைத் தொகுப்புகள் என்ற விவரங்களில் அவருக்குச் சிரத்தை இல்லை. பறவை இனங்களைப் பற்றி ஒரு ஆராய்ச்சியாளரின் ஞானம் அவருக்கு இருந்தது. சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் வந்தன. அவற்றின் ஓவியங்கள் அவரே வரைந்தவை. அவரைச் சந்திக்க வரும் குழந்தைகளுக்குப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுப்பார்.

பாசாங்குத்தனமே இல்லாத, பொய்மை என்பதே அறியாத ஜீவனாக வாழ்ந்த அபூர்வ மனுஷி. அவரது எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் எந்த பேதமும் இல்லை. ஆதர்ஷம் என்று எதை நம்பினாரோ அதன்படி வாழ்ந்தவர். குறைகள் இருந்திருக்காதா? நிறைய இருந்திருக்கும் சாமான்யருக்கு. அவற்றின் நிழலே தன்மீது படியாமல் பார்த்துக்கொண்ட விவேகம் அவராகப் பழகிக்கொண்டதாகப் படுகிறது. பிரபஞ்ச சிருஷ்டி அனைத்தையும் ஆத்மார்த்தமாக நேசித்ததாலேயே அவருக்கு அது சாத்தியமாயிற்று எனத் தோன்றுகிறது. அவரது பரந்த வாசிப்பும் தார்மீகப் பண்புகளில் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் அவரைப் பதப்படுத்தியிருக்கலாம். தாமரை இலை நீர்போல வாழ்வது சுலபமல்ல. எழுத்தாளர்கள் சுலபத்தில் நொறுங்கிவிடும் இயல்புடையவர்களாக அறியப்படுபவர்கள். அதனாலேயே அநுத்தமா அபூர்வப் பிறவியாகத் தெரிகிறார். குருக்ஷேத்திர யுத்தத்தை விலகி நின்று பார்த்த சஞ்சயனைப் போல்.
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்