/* up Facebook

May 3, 2011

பலமுறை மரித்துப்போன சாய்பாபா! -குட்டி ரேவதி


ஒரு வழியாக சத்ய சாய் பாபா இறந்த செய்தி இன்று எல்லோருக்கும் உறுதி செய்யப்பட்டது. கடவுளின் அவதாரமான ஒருவர் இறப்பது எனக்கும் வேதனையும் கவலையும் தரும் செய்தியாகத் தான் இருக்கிறது. அதற்குக் காரணம், என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தோழியான ஸ்ரீதேவி தனது அடுத்த கடவுளை, தன் மெலிந்த உடலுக்கு உறுதுணையாக இருக்கும் இன்னொரு கடவுள் அவதாரத்தை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதே. அனுதினமும் விரதங்களும் சாய்பாபாவின் நாமத்தை பல இலட்சம் முறைகள் உச்சரிப்பதுமே போதுமானவை, தனது கவலைகள் தீர என்ற நம்பிக்கை உடைய அந்தப் பெண், பெண்களின் நவீனப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்!

பகுத்தறிவுச் சிந்தனை மரபில் ஊறிய நம் மனத்தில் ஏன் இம்மாதிரியான நம்பிக்கைகள் உறைந்திருக்கின்றன என்ற கேள்விக்குப் பதிலை, இது போன்ற உதாரணங்களால் மட்டுமே முழுமையாக நாம் புரிந்து கொள்ள முடியாது. சாய்பாபா, நோய்வாய்ப்பாட்டு படுக்கையில் கிடந்த நொடி முதல் அவரது பக்தர்கள் தொடர்ந்து அவர் நலனுக்காகப் பிரார்த்தித்தனர். யாரிடம்? கடவுளிடம் எனில் எந்தக் கடவுளிடம்? எனில், சாய்பாபா கடவுளா, இல்லையா? கடவுளின் அவதாரம் என்றால், அவருக்குத் தன்னை நோய்வாய்ப்படாமல் காத்துக் கொள்ளும் ஞானம் வாய்க்கவில்லையா? மானிடப் பிறப்பில் வந்த கடவுளின் அவதாரம் என்றால், மற்ற மனிதரைப்போல நோய்வாய்ப்பட்டு மரித்துத்தானே ஆகவேண்டும்? லிங்கத்தை வரவழைக்கும் மந்திர தந்திரங்கள் மனித உடலைக் காப்பாற்ற உதவவில்லையா? தன் உடலுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை என்ற கூறியவரின் உடலுக்கு இன்று என்னவாயிற்று? பொய்யும் புரட்டும் பொதிந்த தனிமனிதப் பிரசங்க வாழ்க்கையும் அதை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நிறுவனக்கட்டிடங்களும் அடுக்கடுக்கான கேள்விகளைக் கிளப்புகின்றன.

சாய்பாபா நல்லவேளை இறந்துவிட்டார். என் கவலையெல்லாம், அவரை நம்பித் தம் பொழுதுகளையும் சொத்துகளையும் ஆற்றல்களையும் விரயம் செய்யும் கோடானு கோடி மூடர்கள் இனி, எந்த மந்தையாக மாறுவார்கள் என்பதே. அதற்குள், எங்கேயோ அடுத்த அவதாரம் பிறக்கவில்லையா, என்ன? அவர் ஸ்படிக லிங்கத்தைப் போல, வேறு உருவப்படிமங்களை தன் தொண்டையிலிருந்தோ வேறு பள்ளங்களிலிருந்தோ எடுத்துக் கொடுத்தால், இம்மந்தை தலையாட்டி, கைகளைக் கொட்டி, அங்கே திசை திரும்பிவிடும்தானே?

அரசியலும் மதமும் ஒருங்கிணையும் போதெல்லாம், ஒன்றோடொன்று கைகோர்த்துக் கொண்டு குடிமக்கள் நலனைப் புறக்கணிக்கிறது. எல்லா மாநில முதல்வர்களும் குடியாட்சி புரியத் தேவையான அருளாட்சி செய்த சாய்பாபா இன்று இல்லாமல் போனதை ஓர் அரசியல் விவகாரமாகவும் நாம் நோக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில், அரசியல் மதக் கூட்டணிகள், மக்களை மந்தையாக்கித் தன் ஆதாயங்களை நிதியாகவும் அதிகாரமாகவும் திரட்டியிருக்கிறது. காலந்தோறும், பகுத்தறிவுக்கெதிரான பாதைகள் கிளைப்பதும், அதைக் களையெடுக்கத் தீவிர பகுத்தறிவு இயக்கங்கள் முளைப்பதும், அரசு என்ற பெயரால் மதத்தின் போர்வையைப் போர்த்திக்கொண்டு, அவ்வியக்கங்கள் முறிக்கப்படுவதும் எனத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது இந்த நூற்றாண்டில் மட்டுமே நிகழும் அவலம் அன்று. வரலாறு, சாய்பாபா இறந்ததை எழுதிவைத்துக் கொள்ளும். இயங்கும், பகுத்தறிவு விவாதங்களைக் கருத்திலோ, கணக்கிலோ அதன் பக்கங்கள் எழுதிக்கொள்ளாது. ஏனெனில், அரசின் கைகளில் தான் வரலாற்றை எழுதும் விரல்கள் இருக்கின்றன.

பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற சொற்களின் பொருட்களும் அர்த்தங்களும் அவற்றிற்கான நடைமுறைப்பழக்கங்களும் இன்றைய தலைமுறையிடையே சமூக வடிவங்களில் மீண்டும் புணரமைக்கப்பட வேண்டும் அவசியத்தைத் தான் இம்மாதிரியான நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. நம் சிந்தனை மரபைச் செழுமையாக்க மேற்குறிப்பிட்ட, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற இரண்டு வார்த்தைகளை மையமாக்கிய அர்த்த விவாதமே போதுமானவை. தமிழ்ச் சிந்தனையென்று ஒன்றை வடிவமைக்க வேண்டுமென்றால், இவ்விரண்டு வார்த்தைகளை மட்டுமே மூலங்களாகவும் அளவுகோல்களாகவும் கொள்ளலாம். இந்தியப் புவியியல் பரப்பிலும், இந்தியத் தத்துவச்சிந்தனை என்ற கட்டமைப்பு இவ்விரண்டு வார்த்தைகளுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுத் தான் பொது மக்களுக்கு ஆன்மீகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் சத்ய சாய்பாபாவும்! எனக்கென்னவோ, இம்மாதிரியான மனிதர்கள் தன் மரணம் உறுதியாக்கப்படும் முன்னே பலமுறை செத்துப்போனவர்கள் தான். பகுத்தறிவும், சுயமரியாதை உணர்வும் அற்ற ஒரு தனிமனிதன் வாழ்ந்தாலும் செத்துப் பிழைப்பவன் தான். அத்தகைய ஒருவனின் வேடம், முடிவுக்கு வந்தது. இனி, அதன் தொடர்ச்சியான அரசியல், நிறுவனக்காட்சிகளின் வேடங்கள் அரங்கேறுவதை வேறு வடிவில் பொதுமக்கள் தரிசிக்கலாம்!

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்