/* up Facebook

May 31, 2011

அறிவியல் உலகில் பெண்கள் – அன்னா


பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது.

“The great gain would be freedom of thought. Women, more than men, are bound by tradition and authority. What the father, the brother, the doctor and the minister have said has been received undoubtingly. Until women throw off this reverence for authority they will not develop. When they do this, when they come to the truth through their investigations, when doubt leads them to discover, the truth which they get will be theirs and their minds will work on and on, unfettered.”

“இதனால் வரும் அபாரமான நன்மை சிந்திக்கும் சுதந்திரம். பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அப்பாவாலும் சகோதரனாலும் மருத்துவராலும் போதகர்களாலும் சொல்லப்படும் எல்லாம் ஒரு சந்தேகமும் இன்றி பெண்களால் உள்வாங்கப்படுகிறது. அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது. இதைச் செய்யின் அவர்கள் தமது கண்டுபிடிப்பிகளினூடாக உண்மையை அறிவர். சந்தேகம் அவர்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும். அவர்கள் கண்டுபிடித்தவை அவர்களுடையதாகும். அவர்களின் மனதுகள் தொடர்ந்து ஒரு தடையுமின்றி வேலை செய்துகொண்டிருக்கும்.”

http://en.wikipedia.org/wiki/Maria_Mitchell - Maria Mitchell – first woman member of the American Association for the Advancement of Science and first professor of astronomy at Vassar College (1818-1889)நம்மைச் சுற்றியுள்ள சூழலை, தொலைவிலிருக்கும் நட்சத்திரங்களை, கோள்களை, பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனைகளும் கணிப்புகளும் நாம் மனிதராக இவ்வுலகத்தில் வாழத் தொடங்கியதிலிருந்தே தொடங்கிவிட்டோம். ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இதைச் செய்தனர். ஆனாலும் மற்றைய இடங்களில் எல்லாம் எப்படி பெண்களின் சாதனைகள் மறக்கப்பட்டனவோ இங்கும் அவ்வாறே herstory பலருக்குத் தெரியாது. போன வருடம் Royal Society of London 350 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடியது. உலகின் முதலில் உருவாக்கப்பட்ட அறிவியல் ஸ்தாபனங்களில் ஒன்று. இதில் எத்தனையோ பிர‌ப‌ல‌மான‌ விஞ்ஞானிக‌ள் உறுப்பின‌ராக‌ இருந்தாலும் பெண்க‌ளுக்கு உறுப்பின‌ராகும் அனும‌தி 1945 ஆம் ஆண்டே வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

மேரி கியூரி, அநேக‌மான‌வ‌ர்க‌ளுக்குத் தெரிந்த‌ அறிவிய‌லாள‌ர். க‌திரிய‌க்க‌த்திற்கான‌ ஆய்வுக்காக‌ முத‌லில் அவ‌ர‌து துணைவ‌ரோடு சேர்ந்தும் பின் இரேடிய‌த்தைப் பிரித்தெடுத்த‌த‌ற்காக‌ தனியாக‌வும் நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர். இவ‌ருக்கே முத‌ன் முத‌லில் இரு நோப‌ல் ப‌ரிசுக‌ள் கிடைத்த‌ன‌. அதோடு இன்ற‌ள‌வில் இவ‌ர் ஒருவ‌ரே இரு வேறு அறியிய‌ல் த‌ள‌ங்க‌ளில் (பெள‌தீக‌விய‌ல், இர‌சாய‌ன‌விய‌ல்) நோப‌ல் ப‌ரிசு பெற்றுள்ளார். இவ்வ‌ள‌வு திற‌மைமிக்க‌வ‌ரை அவ‌ர‌து இர‌ண்டாவ‌து ப‌ரிசு பெற்ற‌ ஆண்டு கூட‌ பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான‌ ஸ்தாப‌ன‌ம் அவர் பெண் என்ற ஒரே காரணத்திற்காக உறுப்பின‌ராக‌ இணைக்க‌ ம‌றுத்த‌து.

இவ‌ருக்கும் முந்திய‌ கால‌த்தில் பெண்க‌ளின் மூளைக்கு அறிவிய‌ல் நோக்கில் சிந்திக்க‌ ச‌க்தியே இல்லை என்ப‌தே க‌ணிப்பீடாக‌ இருந்த‌து. பெண்க‌ள் எவ்வ‌ள‌வு திற‌மையான சிந்த‌னையாள‌ர்க‌ளாக‌ இருந்தார்கள் என்பதற்கும் அவர்களின் கணவர்களோடும் சகோதரர்களோடும் இணைந்து எத்தனையோ ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் செய்தார்கள் என்ப‌த‌ற்கும் நிறைய‌ சான்றுக‌ள் இருந்த‌ போதும் அந்நாட்க‌ளில் அவ‌ர்க‌ள் ஆய்வாளர்களின் மனைவிமாராகவும் சகோதரிகளாகவுமே அங்கீகரிக்கப்பட்டார்கள். ஆய்வுகளில் மட்டுமல்ல அறிவியல் எழுத்துகளிலும் அறிவியலை பொது சனத்திற்கும் சிறுவருக்கும் விளக்குவதிலும் அறிவியலைப் பிரபலப்படுத்துவதிலும் அக்காலப் பெண்கள் மிக‌ முக்கிய‌ ப‌ங்காற்றின‌ர்.

அறிவிய‌ல் ச‌மூக‌த்தில் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌தாலோ என்ன‌வோ ப‌ர‌ந்த‌ ச‌மூக‌த்தில் அறிவிய‌லின் ப‌ங்கு, க‌டமைக‌ள் பொறுப்புக‌ள் என்ப‌வ‌ற்றைப் ப‌ற்றி நாம் இப்போ யோசிக்கும‌ள‌வு அன்று அறிவிய‌ல் வ‌ட்ட‌த்திற்குள் இருந்த ஆண்களைவிடப் பெண்க‌ள் யோசித்தார்க‌ள். ம‌னித‌ ச‌முதாய‌த்தில் ம‌ற்றைய‌ வில‌ங்குக‌ளின் உரிமையைப் ப‌ற்றி முத‌லில் சிந்தித்த‌து அன்னா பர்போல்ட் (Anna) எனும் பெண் விஞ்ஞானியே. அவ‌ரின் ஒக்ஸிச‌னைக் கண்டுபிடித்த மேல‌திகாரி யோச‌ப் பிறீஸ்லி எனும் இர‌சாய‌ன‌விய‌லாள‌ர் சுண்டெலிக‌ளில் ப‌ரிசோத‌னை செய்வார். ஒருமுறை சுண்டெலிகளை ஒரு வெற்றுக் கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்து காற்றை கொஞ்சம் கொஞ்சமாக அப்பாத்திரத்திலிருந்து வெளியேற்றும் போது சுண்டெலிகள் படும் அவஸ்தையைக் கண்ட அன்னா, அன்றிர‌வு சுண்டெலியே எழுதுவது போல் “கலாநிதி பிறீஸ்லிக்கு சுண்டெலியின் வேண்டுகோள்” எனத் தலைப்பிட்டு ஒரு கவிதை எழுதி அந்த எலிகளின் கூட்டில் ஒட்டி விட்டாராம்.

இக்காலத்தில் அறிவியலுக்கு பங்களிப்புச் செய்த என்னைக் கவர்ந்த இன்னொரு பெண் http://en.wikipedia.org/wiki/Mary_Somerville மேரி சொமவில் (Mary Somerville). 1780 இல் பிறந்தவர். தனுக்குத்தானே கணிதத்தை கற்பித்துக் கொண்டவர். வானியலும் படித்தவர். ஒரு ஓவியரும் கூட. அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில் “ஏதாவதொன்றில் சாதிக்க வேண்டுமென்ற இலட்சியமுள்ளவள். உலகில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டதை விட உயர்ந்த நிலைக்குச் செல்லும் சக்தி பெண்களுக்கு உண்டென நம்புபவள்” என்றுள்ளார்.

மிகவும் திறமையான எழுத்தாளர். இவரின் அறிவியல் தொடர்பான எழுத்துக்களும் மொழிபெயர்ப்புகளும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. பொது மக்களிடையே அறிவியல் புரிதலுக்கும் இவரின் எழுத்துக்கள் மிகவும் உதவின. இவரின் சொந்தப் புத்தகமான “On the Connection of the Physical Sciences (1834), பல அறிவியல் துறைகளுக்குப் பொதுவான அடிப்படைத் தத்துவங்களையும் செய்முறைகளையும் அழகாக விளக்கியது. அது பற்றி ஒரு பெளதீகவியளாலர் இவ்வாறு கூறியிருந்தார், “இப்புத்தகம் பல விஞ்ஞானத்தின் ஆண்களின் மனதில் வேலைசெய்யும் எண்ணங்களை மிகவும் ஒருங்கிணைத்து இலகுவாக வழிகாட்டக்கூடியவாறு கூறியுள்ளதால் அவர்களின் பல கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும்.”

இவரின் எழுத்துக்களால் இவரின் பின்னால் வந்த பல இளம் பெண்களுக்கு ரோல் மொடலாக இருந்தவர். பதிவின் தொடக்கத்தில் கொடுத்த கூற்றைச் சொன்னவரும் இவரைப் பின்பற்றி அறிவியலுக்கு வந்தவரே. தனியே அறிவியலுடன் மட்டும் நின்று விடாமல் பெண்களுக்கு வாக்களிப்பு உரிமை கிடைப்பதற்கும் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் போராடியவர். அக்காலத்தில் விஞ்ஞானத்தின் அரசியாகக் கருதப்பட்ட இவருக்கு, பெண்ணிற்கு ஆய்வு செய்யச் சக்தியில்லை என்ற பொதுவான கருத்தால் அசலான எந்தவித ஆய்வும் செய்ய வாய்ப்புக் கிடைக்கவில்லை. முதலில் மிக நம்பிக்கையுடன் அறிவியல் பாதையில் கால் வைத்தவர், பின் “நான் ஒரு கண்டுபிடிப்பையும் செய்யவில்லை என உணர்கின்றேன். I had no originality. எனக்கு பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தும் நான் ஒரு மேதையல்ல. அதை சொர்க்கத்திலிருந்து என் பாலினத்திற்கு வழங்கவில்லை. உயர்ந்த சக்திகள் வேறொரு இருப்பு நிலையில் (another state of existence) எமக்கு வழங்கப்படுமா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.” என்கிறார்.

இப்படி எத்தனையோ கஷ்டப்பட்டு சாதித்தவர்களின் சாதனைகளின் மேல் நின்று ஆய்வுகளில் ஈடுபடும் இன்றைய பல பெண்களிற்கு நிலைமை குறிப்பிடத்தக்களவு முன்னேறி இருப்பினும், மேரி சொமவில்லின் ஆரம்ப காலக் கூற்றையும் இறுதிக்காலக் கூற்றையும் வாசிக்கும் போது அதன் நிகழ்காலத்திற்கிணையான தன்மையை நினைக்க ஆச்சரியமாகவுள்ளது.

மிக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளியியல் விபரப்படி உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிலேயே கணித/விஞ்ஞானத்துறைகளில் பெண்கள் 20% பதவிகளில் மட்டுமே இருக்கிறார்கள். மேற்சொல்லப்பட்டது போல் அறிவியலின் herstory ஜக் கொஞ்சம் ஆராய்ந்தாலே தெளிவாகத் தெரியும், இது பெண்களுக்கு இயற்கையாகவே அறிவியல் ஞானம் இல்லாததால் அல்ல என்று. ஆனாலும் 2005 ஆம் ஆண்டு பிரபல ஹவேட் பல்கலைக்கழகத்தின் அந்நாள் president, Larry Summers கூட பெண்கள் பல்கலைக் கழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது சமுக்கத்தில் அவர்களுக்கெதிராகக் காட்டப்படும் பாகுபாடல்லாமல், இயற்கையிலேயே பெண்ணுக்கு அறிவியலில் நாட்டமோ திறனோ இல்லாமல் கூட இருக்கலாம் என்றார். அதன் பின்னே இப்பிரச்சனையைப் பற்றி ஓரளவிற்கு பலர் ஆராயத்தொடங்கினார்கள்.

கணித அறிவியல் பரீட்சைகளிலும் செய்முறைகளிலும் முன்னைய காலடட்டத்தில் இருந்த பால் வேறுபாடுகள் இப்போ மிகக் குறைந்துள்ள போதும், அறிவியல்/கணிதவியலில் அடிப்படைப் பட்டங்கள் எடுப்பதில் கூட 2000-ஆம் ஆண்டிலிருந்து ஆண்களை விடப் பெண்கள் கொஞ்சம் கூடுதலாக எண்ணிக்கையில் இருந்தும் அதன் பின் அறிவியல் துறையில் வேலை செய்யத் தயங்குவது ஏன்?

ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கும் பாலியல் பாகுபாடுகள் எத்தனையோ பல்கூட்டமான உளவியல் மாற்றங்களையும் சிக்கலான‌ எதிர் விளைவுகளையும் கொடுக்கக்கூடியதென்று இதுவரைக்கும் செய்யப்பட்ட எத்தனையோ ஆய்வுகள் கூறுகின்றன. சில உதாரணங்களை நான் http://annatheanalyst.blogspot.com/2011/02/blog-post.html இப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்விளைவுகளை எத்தனையோ வடிவத்தில் பார்க்கலாம். ஒரு கணிதப் பரீட்சை அறையில் ஆண்கள் எண்ணிக்கையில் மிகக் கூடுதலாகவும் பெண்கள் மிகக் குறைந்தும் காணப்பட்டால் அந்தப் பரீட்சையில் பெண்கள் ஆண்களைவிட மிகக் குறைவாகவே மதிப்பெண் வாங்குவார்கள். அதேநேரம் இருபாலினரும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பின் மதிப்பெண்களில் குறிப்பிட்டளவு வித்தியாசங்கள் இருக்காது. பரீட்சைத் தாளில் எழுதுபவர் என்ன பாலினம் என்று கேட்டிருப்பது கூட பரீட்சை செய்யும் திறனை குறிப்பிட்டளவு பாதிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன. இதிலிருந்து அடிமனதில் நாம் உணராமலே சமூகத்தின் கருதுகோள்கள் எம்மை எந்தளவிற்குப் பாதிக்கின்றன என அனுமானிக்கலாம்.

http://arts.uwaterloo.ca/~sspencer/spencerlab/articles/2002-Davies-Spencer-Quinn-Gerhardstein.pdf” இன்னொரு ஆய்வில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் சில ஆண்களையும் பெண்களையும் இரு கலப்புக் குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினருக்கு பாலியல் பாகுபாடுகளை முன்னிறுத்தும் விளம்பரங்களைக் (மிகவும் மெலிந்த பெண் diet soda வின் ருசியைச் சொல்வது, ஒரு குறிப்பிட்ட தோல் cream ஆல் தோலில் ஏற்படும் நன்மைகளை ஒரு பெண் சொல்வது போன்றவை)காட்டினர். மற்றைய குழுவிற்கு நடுநிலையான/ இருபாலாரும் கலந்து கொள்ளும் விளம்பரங்களைக் (insurance company/ கையடக்கத் தொலைபேசி பற்றிய விளம்பரங்கள்)காட்டினர். பின் இரு குழுக்களிடமும் எதிர்காலத்தில் வேலை செய்ய ஆர்வமான தொழில் துறைகள் பற்றிக் கேட்ட போது, முதல் குழுவிலிருந்த பெண்களை விட இரண்டாவது குழுவிலிருந்த பெண்கள் கூடுதலாக அறிவியல்/கணிதத்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இந்த மாற்றத்திற்குத் தேவையானதெல்லாம் சில குறிப்பிட்ட stereotypes ஜ மறைத்தது மட்டும் தான். அநேகமான தமிழ்ப் படங்களையும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் நித்தம் பார்க்கும் எம்மவர்களில் இதனால் ஏற்படும் வெளியில் தெரியாத எதிர் விளைவுகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

இந்த stereotype http://thesituationist.wordpress.com/2011/01/03/the-gendered-situation-of-recommendation-letters அறிவியல் துறையைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல பெண்களின் பதவியுயர்வுக்கு மேலதிகாரிகள் எழுதும் கடிதங்களின் மொழிகளையும் வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதையும் கூட‌ பாதிக்கின்றன. இதுமட்டுமல்ல‌, அப்படியே அடிபட்டு மேலே வந்து பெரிய பதவிகளில் இருக்கும் அநேகமான பெண்கள் திருமணமாகாதவர்கள் அல்லது பிள்ளைகள் இல்லாதவர்கள். எல்லாப் பெண்களும் திருமணம் செய்து பிள்ளை பெறத்தான் வேண்டுமென நிச்சயமாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் ஏன் திருமணமான, தாயான பெண்கள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாமலுள்ளது?

இந்த stereotypes இன் விளைவுகள் தனியே அறிவியல் தெரிவையோ பெண்களையோ மட்டும் பாதிப்பவை அல்ல. எந்த ஒடுக்கப்படும் குழுவிற்கும் எதிர் மறையான stereotype க்கும் பொருந்தும். உதாரணத்திற்கு எம் மகனுக்கு மொண்டோசொரி வகுப்பு தேர்ந்தெடுக்கும் போது பல இடங்களுக்கு சென்று வகுப்புகளைப் பார்வையிட்டு பிள்ளைகளை ஊக்குவிக்கும் தரத்தை அவதானிக்கச் சென்ற போது ஒன்று மிகத் தெளிவாகத் தெரிந்தது. நான் சென்ற ஒரு இடத்திலும் ஆண் ஆசிரியர்கள் இல்லாதது. இருபாலினரும் படிப்பித்தால் கூடிய நன்மை தரும் என்ற கருத்துக்கொண்டவள் நான், அத்தோடு மகனுக்கும் ஒரு balanced perspective வரும் என்பது என் கருத்து. விசாரித்துப் பார்த்ததில் ஒரேயொரு இடம் தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் ஆண்கள் மொண்டொசொரி சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் கதைத்த போது, இதே stereotype இன் தாக்கங்களையே பொறிந்து தள்ளினர். இதைப் பற்றி எம்மவர் சிலரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்னது “அப்பிடியே எங்காவது ஆண்கள் மொண்டொசொரி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பதை நிச்சயித்து அனுப்புங்கோ”. I was completely taken back. நம்பவே முடியவில்லை.

எப்படி இப்படியெல்லம் சிந்திக்கத் தோன்றுகிறது? ஏன் எம்மால் மனிதரை எம் வேறுபாடுகளையும் தாண்டி மனிதராக மதிக்க முடிவதில்லை. இந்தப் பாகுபாடுகளை ஒரு சமூகமாக முன்வந்து எப்போது மாற்றுவோம்?

- அன்னா

நன்றி - வினவு
...மேலும்

May 30, 2011

புத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடியவர் – VI அம்பேத்கர்

புத்த ஜயந்தி 2600வது ஆண்டு நினைவாக...

பிக்குணிகளை (பெண் துறவி) பிக்குகளின் (ஆண் துறவி) அதிகாரத்தின் கீழ் வைத்ததை – ஒரு சமூகத் தவறு என்று கருதுபவர்கள், பெண்கள் துறவறம் பூணுவதை புத்தர் அனுமதித்தது எந்தளவுக்குப் புரட்சிகரமான நடவடிக்கை என்பதை உணர்வதில்லை. பார்ப்பனியத் தத்துவத்தின் கீழ், பெண்கள் அறிவு பெறும் உரிமை ஏற்கனவே மறுக்கப்பட்டு விட்டது. துறவறம் ஏற்கும் பிரச்சினை வந்தபோது, அவர்கள் இந்தியப் பெண்களுக்கு மற்றொரு அநீதியை இழைத்தனர்.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, வேதங்களைத் தொழும் பார்ப்பனர்களுக்கு துறவறம் ஒரு லட்சியமல்ல; அவர்கள் உபநிடதங்களைப் புனித இலக்கியம் என்று அங்கீகரிப்பதற்கு நீண்ட காலமாக மறுத்து வந்தனர். துறவறம் கொள்வது உபநிடதங்களின் லட்சியமாகும். துறவறத்தின் முடிவு ஆத்ம பிரம்மம் என்ற உபநிடதத் தத்துவத்தை எய்துவதாகும். பார்ப்பனர்கள் துறவற வாழ்க்கையைக் கடுமையாக எதிர்த்தனர். இறுதியாக, அவர்கள் சில நிபந்தனைகளின் பேரில் இறங்கி வந்தனர். அந்த நிபந்தனைகளில் ஒன்று, பெண்களும் (சூத்திரர்களும்) துறவறத்திற்கு தகுதியுள்ளவர்கள் அல்லர் என்பதாகும்.

பெண்கள் துறவறம் மேற்கொள்வதை பார்ப்பனர்கள் ஏன் தடை செய்தார்கள் என்பதன் காரணத்தைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். ஏனெனில், அது பெண்களின்பாலான பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இது, புத்தரின் கண்ணோட்டத்திற்கு நேர் எதிரானதாகும். இதற்கான காரணத்தை மநு இவ்வாறு கூறுகிறார் :

IX 18 : வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை. அதனால்தான் அவர்களின் சடங்குகள் வேத மந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன. மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த அறிவும் கிடையாது, ஏனெனில், வேதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேத மந்திரங்களை உச்சரிக்க முடியாததால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள்.

மநு, புத்தருக்குப் பின்னர் தோன்றியவராக இருந்தபோதிலும், அவர் பழைய தர்ம சூத்திரங்களில் கூறப்பட்டுள்ள பழைய கருத்தை விளம்பியுள்ளார். பெண்களைப் பற்றிய இக்கருத்து இந்தியப் பெண்களை அவமானப்படுத்துவதாகும். ஏனெனில், ஒவ்வொரு மனிதப் பிறவியின் பிறப்புரிமையான அறிவு பெறும் உரிமை, எவ்வித நியாயமுமின்றி பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. அது ஓர் அவமானமாகும். ஏனெனில், அறிவு பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்ட பின்னர், அறிவு இல்லாத காரணத்தால் ஒரு பெண் பொய்யைப் போன்று அசுத்தமானவள் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், பிரம்மத்தை அடைவதற்கான ஒரு பாதையாகக் கருதப்பட்ட துறவறத்தை ஏற்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தனது ஆன்மீக உள்ளாற்றலை எய்துவதற்குள்ள உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது மட்டுமின்றி, பெண் எத்தகைய ஆன்மீக உள்ளாற்றலும் அற்றவர் என்று பார்ப்பனர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.

இது, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையான ஓர் அநீதியாகும். இதற்கு ஈடிணையே இல்லை. பேராசிரியர் மாக்ஸ் முல்லர் கூறியது போன்று, “மனிதப் பிறவி தெய்வத் தன்மையிலிருந்து எவ்வளவு தொலைவிலிருந்தபோதிலும், இந்த உலகில் மனிதனை விட வேறு எதுவும் கடவுளுக்கு சமீபமாக இல்லை. உலகில் மனிதனைத் தவிர வேறு எதுவும் கூடுதல் தெய்வத் தன்மை வாய்ந்ததாக இல்லை.'' இது மனிதன் (ஆண்) விஷயத்தில் உண்மையெனில், பெண் விஷயத்தில் இது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது? இதற்கு பார்ப்பனர்களிடமிருந்து பதில் இல்லை.

துறவற வாழ்க்கையில் பெண்களை அனுமதித்ததன் மூலம் புத்தர், ஒரே அடியில் இவ்விரு அநீதிகளையும் அகற்றினார். அவர் பெண்களுக்கு அறிவு பெறும் உரிமையை வழங்கியதோடு, ஆண்களோடு கூடவே ஆன்மீக உள்ளாற்றல்களை எய்துவதற்கான உரிமையையும் பெண்களுக்கு அளித்தார். இந்தியாவில் இது ஒரு புரட்சி மட்டும் அல்ல; பெண்களின் விடுதலையுமாகும். இது குறித்து பேராசிரியர் மாக்ஸ் முல்லர் இவ்வாறு கூறுகிறார் :

“பழைய பார்ப்பனிய சட்டத்தின் சிறுமைப்படுத்தும் விலங்குகள் கடைசியாக உடைக்கப்பட்டன என்று இந்தியாவின் வரலாறு நமக்கு கூறுகிறது. ஏனெனில், புத்த மதத்தில் தனிநபர் சுதந்திரம், குறிப்பாக, சமூகத்தின் தடைகளை உடைத்துக் கொண்டு எழும் உரிமை, விரும்பும்போது காட்டுக்குள் சென்று ஒரு செம்மையான ஆன்மீக சுதந்திர வாழ்க்கையை வாழ்வது ஆகிய உரிமைகள் அறுதியிட்டுக் கூறப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை.''

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 118

நன்றி - கீற்று 
...மேலும்

May 29, 2011

கருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2 கோடி சிசுக்கள் அழிப்பு


பெண்களை தெய்வமாக வணக்கும் இந்தியாவில்தான் பெண் குழந்தைகைளை பெற்றுக்கொள்ள அநேகம் பேர் தயக்கம் காட்டுகின்றனர். ஆண் குழந்தைகளை மட்டுமே பலரும் விரும்புவதால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித்தகவல் தெரியவந்துள்ளது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படித்த பெண்களே இந்த பாதகச் செயலை செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆண், பெண் விகிதாச்சாரத்தில் அதிக வேறுபாடு எழுந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம்

இந்தியாவில் ஆண் குழந்தைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாகவே முதலில் உருவாகும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்து விடுகின்றனர்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி வந்தபின்னர் படித்த பெண்கள் பலரும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு பெண் என்றால் தயங்காமல் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். இப்படி கருவிலேயே கொல்லப்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் 12 மில்லியனை எட்டியுள்ளதாக கனடா நாட்டின் டொராண்டாவில் உள்ள உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கருவில் முதலில் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையை எதுவும் செய்யாமல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் அதுவே பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதற்கு தயங்குவதில்லை.

இந்தியார்களின் சமூக வாழ்க்கையில் ஆண் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்ல காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனப்பான்மை படித்த மற்றும் பணக்காரர்களை மட்டுமல்லாது பாமரர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது.

ஒரு குழந்தை பாலிசி

அண்டை நாடான சீனாவில் ஒரு குழந்தை கொள்கை கடைபிடிக்கப்படுவதால் முதலில் உருவாகும் பெண் குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த கட்டுப்பாடு கிடையாது. இருப்பினும் நகரத்தில் வசிக்கும் பெண்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் அவர்கள் ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்கேன் செய்து பார்த்து பெண்குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். இதனால் கடந்த 30 ஆண்டுகளில் ஆண், பெண் பாலினத்திற்கு இடையேயான விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.

1990 முதல் 2005 வரை எடுத்த கணக்கெடுப்பின்படி பார்க்கும் போது 1990 ஆம் ஆண்டில் 1000 ஆண்குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறப்பு இருந்தது. அதுவே 2005 ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகளே பிறந்துள்ளன என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தெரியவந்துள்ளது.

1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான கடைசி 30 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 1.2 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதே இந்த விகிதாச்சார மாறுபாட்டிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2 : 1 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து விடும். பெண் குழந்தைகளை திருமணம் செய்வதற்காக ஆண்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும்.

கேள்விக்குறியான ஸ்கேன் தடைச்சட்டம்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா , பெண்ணா என்பதை ஸ்கேன் பரிசோதனை செய்து பெண்குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதை தடை செய்வதற்காக இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்வதை எதன் மூலமும் தடுக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் வருங்கால தலைமுறை ஆண்கள் திருமணத்திற்கு பெண் தேடி வேற்றுகிரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்
...மேலும்

May 28, 2011

தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் நூல் வெளியீடு

யோகரட்ணம் அவர்களின்
தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் 

நூல் வெளியீடு
03 யூலை 2011 அன்று பாரிசில் இடம் பெறுகிறது.


...மேலும்

தினந்தோறும் அழகம்மா நீ.....

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியான ஒரு அருமையான வீடியோ...


...மேலும்

May 27, 2011

அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா? - சந்தனமுல்லை

மாக்சிம் கார்க்கியின் “தாய்” 
உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது…

உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் அம்மா வசதியாக சல்வார் அணிந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்களா? ‘எதுக்கு இவ்ளோ கஷ்டபடறீங்க இந்த நீளமுடிய வைச்சுக்கிட்டு, கட் பண்ணுங்க‌’ என்று சொல்லியிருக்கிறீர்களா? ‘யாராவது ஏதாவது சொல்வார்கள்’ என்பதற்காக சிரமம் கொடுத்தாலும் தலைமுடியை குறைக்காமல் இருப்பவரா உங்கள் அம்மா?

அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது.

பெரியம்மாவும், அம்மாவும் மாடர்னாக இருக்கவேண்டும் என்று நானும் ஆசைப்பட்டிருக்கிறேன். பெரியம்மா பொட்டு வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன். நான் சைக்கிள் ஓட்டும் வயதில், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டவேண்டுமென்றும், ஸ்கூட்டி ஓட்டியபோது அவர்களும் ஸ்கூட்டி ஓட்டவேண்டுமென்றும் சண்டை போட்டிருக்கிறேன். எட்டாவது படிக்கும்போது ‘சைக்கிள் ஓட்டுங்க’ என்று அம்மாவை நானும் குட்டியும் விழ வைத்து முழங்கையில் காயம் வர வைத்திருக்கிறோம்.

‘டீச்சர்னா கொண்டைதான் போடணுமா, குட்டி முடிலே கூட க்ரோக்கடைல் க்ளிப் வைச்சு கொண்டை போடலாம்’ என்றெல்லாம் முடியை வெட்ட ஐடியா செய்திருக்கிறேன். ‘ரிடையர் ஆகிட்டு என்கூடதானே இருப்பீங்க, அப்போ நான் சொல்றதைதான் கேக்கணும்’ என்று அதிகாரம் செய்திருக்கிறேன்.

பெரியம்மா, எண்ணத்தில் எனது நண்பர்களின் அம்மாக்களைவிட, முற்போக்காக இருந்தாலும், தோற்றத்தில் பழமையானவரே. எந்த சமூகக் கட்டுபாடுகளையும், அதன் நிழல் கூட என்மேல் படாமல் வளர்த்த பெரியம்மா , நான் கல்லூரி முடிக்கும் தருவாயில்தான் பொட்டிடவும், தலைமுடியை சிறிதாவது வெட்டவும் முன்வந்தார். ஏனெனில், அப்போது அவர் 45 வயதை தாண்டியிருந்தார். ‘வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு, இந்த அம்மா இப்படி ட்ரெஸ் பண்ணிக்குது’ என்று அந்த வயசுக்கு, இதற்கு மேல் எந்த சமூகமும் எதுவும் சொல்லவிட முடியாதில்லையா!

தோற்றத்திற்கே, அதுவும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு பெண்மணிக்கே இவ்வளவு குழப்பங்கள் என்றால்….கடந்த நூற்றாண்டின் பெலகேயா நீலவ்னாவுக்கு எவ்வளவு உள்மனப் போராட்ட்ங்கள், குழப்பங்கள் இருந்திருக்கவேண்டும்? ஒரு புரட்சியாளரின் தாயாக அவர் தன்னை எத்தனை மாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்ள எவ்வளவு கடந்து வந்திருக்க வேண்டும்? அந்த வலிநிறைந்த… இல்லை, பழமையை உதறிய வலிமை நிறைந்த போராட்டத் தருணங்களை, உணர்ச்சி ததும்பும் கதை சொல்லல் மூலம் நம்மையும் அந்த காலத்திற்குள் கொண்டு செல்கிறது மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவல்.


மக்சிம் கார்க்கி
கல்லூரி காலத்தில் ரயில் பயணத்திற்கு வழித்துணையாக வீட்டிலிருந்த ‘தி மதர்’ நாவலை எடுத்து வாசித்திருந்தாலும் முதல் ஒன்பது அத்தியாயங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்போது தாய் நாவலை என்னால் முழுமையாக ஏன் வாசிக்க முடியவில்லை என்று யோசித்து பார்க்கிறேன். அன்றைய இரசிய சமூகத்தின் கொந்தளிப்பான காலத்தைப் போன்றது இல்லை நம் சூழல். கட்டுப் பெட்டியாக மட்டுமே வாழ சபிக்கப்பட்டிருக்கும் தமிழ் சமூகத்தில் ஒரு இளம்பெண் தாய் நாவல் படிப்பதற்கான மன எழுச்சி இங்கே இருக்காதோ?

தற்போது, ‘தாயை’தமிழில் வாசித்தேன். அநேகமாக நாவல் முழுவதும் உண்மையாக நடந்தவையாகவே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அல்லது அந்த காலத்தின் வரலாற்றுணர்வை மாக்சிக் கார்க்கி தனது கலைப் பார்வையின் மூலம் மிகவும் நெருங்கியிருக்கலாமென்றும் தோன்றுகிறது.

பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.

ஒரு ஆலைகுடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கிறது பெலகேயா நீலவ்னாவின் கதை. புகைபோக்கிகளுடனும், தொழிலாளிகளை குறித்த நேரத்தில் வர ஆணையிடும் சங்குடனும் கம்பீரமாக நிற்கும் அத்தொழிற்சாலை அப்பகுதி மக்களை நாள்முழுதும் சக்கையாக உறிஞ்சியெடுக்கிறது. அவர்களது வாழ்க்கையில் குறிப்பாக ஆண்களது சந்தோஷம் என்பது குடிப்பதும் சண்டையிடுவதுமே. நீலவ்னாவின் கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டதட்ட இருபது வருடங்கள் கணவனிடம் அடியும் உதையும் வாங்கியே அவளது இளமைக்காலம் கழிந்துவிடுகிறது. அவளது கணவன் இறந்துவிட, நீலவ்னாவின் மகன் பாவெலும் அதே ஆலையில் வேலைக்குச் சேர்கிறான்.

பாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவனுக்குள் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான். நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அவனோடு இன்னும் பல தோழர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஒன்றாக வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.

பெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்புக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமைய மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.

சிறிது சிறிதாக பாவெலின் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக் கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிக்க முடிந்தால்…..பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.
மாக்சிம் கார்க்கி

இதன் நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலின் நண்பரை கைது செய்து கொண்டு செல்கிறார்கள். இது தாயை அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளிர்களிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்கிறது. தாய்க்கு கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை.

தாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால் செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் அவள் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.

ஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவி செய்பவராக தொழிற்சாலைக்குள் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன.

இதில் தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. தனது மகனிடம் இதைப் பற்றி உடனே சொல்லவேண்டும் என்றும் அவன் இதை அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவான் என்றும் எண்ணுகிறாள். இரவுகளில் உறங்கப் போகும் முன் இயேசுவிடம் இந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாய் தனது மகனின் புதிய மார்க்கத்திலிருக்கும் உண்மையை அறிந்துக்கொள்கிறாள். அதுவே சத்தியம் என்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். பாவெலும் சிறையிலிருந்து வந்துவிடுகிறான்.

மேநாள் நெருங்குகிறது.


'தாய்' திரைப்படத்திலிருந்து
மேநாள் பேரணிக்கான வேலைகள் நடக்கின்றன. மகனின் மேலுள்ள பாசத்தினால் தாய்க்கு அழுகை முட்டுகிறது. ஏனெனில், பேரணியை தலைமை தாங்கி நடத்தப் போவது பாவெல். போலிஸ் சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பலாம். தாயால் சிலநேரங்களில் ஒரு தாயாக நடந்துக்கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், தாங்கிக் கொள்கிறாள்.

பெரும் எழுச்சியுடன் மேநாள் பேரணி நடக்கிறது. பெரும் கூட்டம் திரள்கிறது. தாயால் பாவெல் அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆனால், பாவெல் தனது மகன் என்று தாயின் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. பேரணியில் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு முதல் பாகம் முடிகிறது.

இரண்டாவது பாகத்தில், தாய் ஒரு புரட்சியாளராக பரிணமிப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று பிரசுரங்களை சேர்ப்பிப்பதும், தனது மகனைப் போல பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும் உணர்வுமிக்க வகையில் விவரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும்,விவசாயிகளும் ஒன்று சேர்ந்தால்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் என்றும் அதில்தான் மக்களின் விடுதலை இருக்கிறது என்றும் தாய் உண்ர்ந்துக்கொள்கிறாள். புதிது புதிதாக மனிதர்களைச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் தயக்கங்களும், அவர்களுடன் நட்பு கொள்வதும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.

வாசிக்கும் நமக்கு, அநேக இடங்களில் உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்த அநேக இளைஞர்கள்……புதிய உலகை கனவு கண்ட இளைஞர்கள்….

வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கணத்தில், நானும் அந்தத் தாயைப் போல இருக்க மாட்டோமா என்ற ஆசை தோன்றியது. ஏனெனில், இதுநாள் வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையின் பிழைப்புவாதம் பின்னோக்கி இழுக்க, முற்றிலும் புதுமையான சத்தியமான கருத்துகள் நம்மை முன்னோக்கிச் இழுக்க நமக்குள் நடைபெறும் ஒரு சிறு போராட்டத்தைத்தான் தாயும் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அந்த போராட்டத்தை வாழாமல் நாமும் தாயின் உணர்வை அடைய முடியாது என்றே தோன்றுகிறது.

இவை நடுவில், அந்தத் தோழர்களுக்கிடையிலான வாழ்க்கை முறை, அவர்களுக்கிடையிலான காதல், இசை எல்லாம் வெகு இயல்பாக வந்து செல்கிறது. உடல்நிலை சரியில்லாத ஒரு தோழரின் மரணம், அதன் பாதிப்புகள், உழைத்து ஓடாய் தேய்ந்த மனிதனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், தாய் ட்ரங்கு பெட்டியில் பிரசுரங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று முஜீக்குகளிடம் சேர்ப்பது, தாயை அவர்கள் இனம் கண்டுக்கொள்வது என்று இரண்டாம் பாகம் முழுக்க தாயின் புரட்சிக்கான பயணம் கண்முன் விரிகிறது. இவை நிச்சயம் உண்மை நிகழ்ச்சிகளாகத்தான் நடந்தேறியிருக்க வேண்டும்.

ஆச்சரியப்படுத்தியதென்னவெனில், மக்களனைவரும் பிரசுரங்களை வாசிக்க ஆர்வமாக இருப்பதும், பிரசுரங்கள் கிடைக்காதாவென்று ஏங்குவதும் படிப்பறிவில்லாதவர்களும் கூட தங்களின் அவல நிலைக்கான உண்மைக் காரணத்தை அறிந்துக்கொள்ள விரும்புவதும், புரட்சிதான் தீர்வென்று நம்புவதும்தான்.

இன்று நாம் அந்நூற்றாண்டு மக்களைப் போல இல்லை. பலவகைகளில் முன்னே வந்துவிட்டோம். ஆனாலும், அவர்களை போன்ற சிந்தனைகளோ அல்லது சமூகமயமான தீர்வுகளை நோக்கியோ செல்லாமல் போராட்டக் குணத்தை இழந்து நிற்கிறோம்.

ஒருவேளை பாவெலும்,அவனது நண்பர்களும், தாயும் சேர்ந்து கஷ்டபடுபவர்களுக்கு உணவு கொடுத்தோ அல்லது செருப்பில்லாமல் கஷ்டபடுபவர்க்ளுக்கு செருப்பு வாங்கித் தந்தோ, வேலை வாங்கித்தந்தோ தங்கள் தொண்டுள்ளத்தை நிரூபித்திருக்கலாம். ஒன்றிரண்டு மாதங்களிலோ வருடங்களிலோ அந்த தொண்டும் அணைந்து போயிருக்கும். ஆனால், எதற்கும் சமரசப்படுத்திக்கொள்ளாமல் மனிதகுல விடுதலைதான் சமூகமயமான தீர்வு என்று ஏன் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க‌ வேண்டும்?எத்தனையோ ஆபத்துகள் இருப்பது தெரிந்தாலும் அச்செயல்களில் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?

இன்றும் கூட, எண்ணற்ற தோழர்கள் கொள்கை மீது கொண்ட பற்றால் மனிதகுல விடுதலைக்காக வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறார்கள். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் கூட, சற்றும் அஞ்சாமல், சாதிய அடக்குமுறையை எதிர்த்து, அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாம் வசதி என்று கருதும் அனைத்தையும் அற்பமாக எண்ணி உதறி தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் ஹார்வார்டுகளிலும், ஆக்ஸ்போர்டுகளிலும் படித்து வந்த டாக்டரேட் மேதைகளோ நம்மை சுரண்டுகிறார்கள். நமது உயிரை பணயம் வைக்கிறார்கள். பள்ளியை/கல்லூரியைத் தாண்டாத தோழர்கள், அல்லது அப்படி படித்திருந்தும் அதை தூக்கியெறிந்துதானே சமூகத்திற்காக/நமக்காகக் குரல் கொடுக்கிறார்கள்?

ஆனால், நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்? ஒன்றிரண்டு பேர்களுக்கு நம்மாலானதை பிச்சையிடுவதைப் போல செய்துவிட்டு தானப்பிரபு பட்டம் கட்டிக்கொள்கிறோம். புரட்சி செய்துவிட்டதைப் போல இறுமாந்து போகிறோம். நாம் சுயநலவாதிகளாக இருந்து கொண்டு, அந்த சுயநலத்திற்கும் காரணம் காட்டிக்கொண்டு தோழர்களை பிழைக்கத் தெரியாதவர்களென்றும், ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லையென்றும் அவர்களை இழிவுபடுத்தியத்தைத் தவிர வேறு என்ன?

தாயின் உலகில் ஊக்கத்துடன் பயணம் செல்லுங்கள். புதிய மனிதானாகவும், வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவராகவும் திரும்புவீர்கள்.

புத்தகம் : தாய், ஆசிரியர்- மாக்சிம் கார்க்கி, NCBH வெளியீடு, விலை : ரூ 200

நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம்,10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044-2841 2367

நன்றி - வினவு 
...மேலும்

May 26, 2011

உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்! - ஜெயதி கோஷ்

தலித் மக்கள் 73 % கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது, 70% கிராமங்களில் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது, 64% கிராமங்களில் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36% கிராமங்களில் கடைகளில் நுழைய கூடாது.

ஒரு தலைப்பட்சமே அடிப்படையாக –

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் நடிவடிக்கைகள் யாவும் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகத்தான் என பெரும்பாலான மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள். அதற்கு வைக்கப்படும் வாதம் யாதெனில் சந்தையின் சக்தியென்பது காலம் காலமாக இருந்து வரும் சமூக கட்டுப்பாடுகளையும், உடைத்தெறிந்து குறிப்பாக பாலின வேறுபாட்டினால் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட வாய்ப்புக்களை பெற்று தருகிறது என்பதாகும்.

துரதிருஷ்டவசமாக இந்தியாவில் யதார்த்தம் என்பது அது போலன்றி மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது. தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக சொல்லப்படும் பெரிய அளவிலான முதலீடுகள், அதனுடைய சக்தியினால் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புக்கள் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், இருக்கும் போக்கிலிருந்து மாறவில்லை என்பதுடன், பிடிவாதமாக முதலாளித்துவ நலன் சார்ந்தே உள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தவரை முறைசார்ந்த, அல்லது முறைசாராத அனைத்து பணிகைளயும் குறைந்த கூலிக்கு வெளியில் கொடுத்து வாங்குவது என்ற முறை கடைபிடிக்கப் படுவதை சொல்லலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும் அத்தகைய நடவடிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளின் உற்பத்தி செலவினம் பெருமளவில் குறைகிறது என்பதோடு, உற்பத்தியில் இருக்கிற அபாயங்களை பல சாதாரண தொழிலாளர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிற சிறிய பிரிவுகளிடம் தள்ளிவிடுவதற்கும் அது உதவியாக உள்ளது.

இந்தியாவில் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைகள் என்பது, பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத, முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைக்கக் கூடிய மறைமுக உதவிகளைச் சார்ந்தே இருக்கிறது. அதிகமான பணிகளை வெளியில் கொடுத்து வாங்குவதால் நிர்ணயிக்கப்பட்ட செலவினம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெருமளவில் குறைகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் கணினி மென்பொருள் தொழிலில் சர்வதேசங்களோடு ஒப்பிடுகையில் மலிவான கூலிக்கு திறமையானவர்கள் கிடைப்பதால், அதன் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

மேலும் குறிப்பிடத்தக்கவாறு செலவின குறைப்பு என்பது ஒவ்வொரு அலுவலகத்திலும் சுத்தப்படுத்துவது, அலுவலகப் பராமரிப்பு, போக்குவரத்து, காவல்/பாதுகாப்பு பணிகள், அலுவல் முடிந்தபின் நடைபெறும் இதர பணிகள், உணவு சமைத்தல், வழங்கல் போன்ற அனைத்து பணிகளும் வெளியில் சிறு சிறு குழுக்களிடம் கொடுப்பதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இவை மிகக் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணிவாங்கும் சிறிய நிறுவனங்களில் கொடுக்கப்படுகிறது. இதில் தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பும் இல்லை. இத்தகைய குறைந்த சம்பள பணியாளர்கள் மூலமான செலவின குறைவு இல்லாதிருந்தால் சிறிய கணினி மென்பொருள் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மிகுந்த சிரமப்பட நேரிடும். இதே நிலை உற்பத்தியில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும் உண்மையாகும்.

கார்ப்பரேட் பிரிவில் இத்தகைய நேரடி மற்றும் மறைமுக செலவின குறைப்பு என்பதில் குறைந்த சம்பளத்திற்கு சில சமூக தன்மைகளை வைத்து தொழிலாளர்களை தீர்மானித்து திறம்பட கையாள்வதில் இந்திய முதலாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதி மற்றும் இனத்தின் வழியான பாகுபாடு காட்டும் தன்மை என்பது இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய சமூகத்தில் உள்ள இந்த பிரத்யேக சாதி ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மலிவான தொழிலாளர்களை முடிவு செய்கின்றனர்.

பல்வேறு ஆய்வுகளிலிலிருந்து சமூக பிரிவினை என்பது வறுமையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதும், அதன் காரணமாக பணியும், சம்பளமும் சமூக பிரிவுகளில் மிகவும் ஏற்றத் தாழ்வாக அமைகிறது என்பதும் தெரியவருகிறது. தேசிய மாதிரி ஆய்விலிருந்து குறைவான கூலிக்கு வேலையாட்கள் என்பது பொதுவான சாதி இந்து மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் பெரும்பாலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட இனத்தவர், இஸ்லாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இந்த வரிசையில்) ஆகியோரே அதிகமாக உள்ளனர் என்பது தெரியவருகிறது. இது பெரும்பாலும் கல்வியறிவு குறைவினாலும், திறமையின் அளவுகோலாலும் தீர்மானிக்கப் படுகிறது என்பதுடன், கல்வியறிவு பெறுவதிலும் சமூகத்தில் மிகுந்த பாகுபாடுகள் உள்ளது.

அத்தகைய சாதிவாரியான வேறுபாடுகள் என்பது ஊரக மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு சந்தைகளில் நிலவுகிறது. உதாரணத்திற்கு டெல்லி போன்ற பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி பெற்ற மாநகராட்சியில் கூட தலித் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதுடன், அவர்கள் தான் பெரும்பாலும், மீள முடியாத குறைந்த கூலி பணிகளில் நியமிக்கப் படுகின்றனர். உற்பத்தியில் கூட இவையெல்லாம் அத்தியாவசிய பணிகள் அதாவது குப்பை பெருக்குபவர்கள், சுமைப்பணியாளர்கள், கட்டிட பணியாளர்கள், கடைகளில் விற்பனை உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்பவர்கள் ஆகிய தொழிலாளர்கள். தொடர்புகளின் மூலம் இத்தகைய குறைந்த திறனுள்ள வேலைகளுக்கான ஆட்கள் தேர்வில் வெகு காலமாக இருந்துவரும் சாதிய பாகுபாடு என்பது பிரதான பங்கு வகிப்பதுடன், அவர்களிடம் இருக்கும் ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கான ஆட்கள் தேர்வு என்பது மேற்கொள்ளப்படுகிறது. இந்த சமூக அமைப்பில் அவர்களுக்கான வருமானம் ஈட்டல் என்பதில் உள்ள அவசியத்தினால் அவர்கள் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

அதேபோல் ஊரக இந்தியாவில் சாதிய நடைமுறை வழக்கங்களினால் உள்ளூரில் மிகக் குறைந்த கூலிக்கு அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு முதலாளிகளிடம் அமர்த்தும் பழக்கம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. திரு கன்ஷ்யாம் ஷா என்பவர் எழுதியுள்ள ஊரக இந்தியாவில் தீண்டாமை என்ற புத்தகத்தில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட) ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் தீண்டாமை அதிக அளவில் இருந்து வருகிறது என்பதும், இங்குள்ள பெரிய அளவிலான சமூக பழக்க வழக்கங்களினால் தாழ்ந்த சாதியினர் மற்றும் தலி்த் பிரிவினரின் பொருளாதார முன்னேற்றம் என்பது கட்டுப்படுத்தப் பட்டு அதன் காரணமாக அவர்கள் கடுமையான நிபந்தனைகளுடனான மிகக் குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்க வேண்டி நேருகிறது.

இந்த ஆய்வில் 73 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது என்பது தெரியவருகிறது. 70 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது. 64 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் கடைகளில் நுழைய கூடாது. ஏறக்குறைய இந்த ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் 3ல் ஒரு பங்கு கிராமங்களில் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுவாக பயன்படுத்தும் பொருட்களை விற்கும் பணியில் தலித்துக்கள் வியாபாரிகளாக செயல்படுவதை அனுமதிப்பதில்லை என தெரியவருகிறது. இத்தகைய பழக்க முறைகளினால் தலித்துக்கள் தங்களின் விருப்பப்படி சம்பாதிக்கும் முறையை தேர்வு செய்து கொள்ள முடிவதில்லை என்பதால் கூலி உயரும் காலங்களில் கூட மலிவான கூலி வேலைக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது. இந்தியாவில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் சூழலிலும் இத்தகைய வழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.


ஆனால் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் அத்தகைய பழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், பொருளாதாரம் ஓரிடத்தில் குவியும் நடவடிக்கைக்கு அடிப்படையாகவும் அது இருக்கிறது என்பதுதான். மற்றொரு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியாவில் முதலாளித்துவம் என்பது, குறிப்பாக உலகளாவிய சமீபத்திய சூழலில், ஏற்கனவே இருந்து வந்த தற்போதும் இருக்கிற சாதிய பாகுபாடுகளை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களை தமது சொந்த நலனுக்காக தள்ளி வைப்பதும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மிகக் குறைந்த கூலிக்கு அழைப்பதுமான போக்கில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

எனவே சமூக பிரிவினைகள் என்பது பொருளீட்டும் நடவடிக்கையில் சுதந்திரமாக இல்லை. மாறாக கூடுதலாக பணி வாங்குவதும், குறைந்த கூலிக்கு அதிக ஆட்கள் கிடைக்கும் வண்ணம் வழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் உள்ளது.

இதேமாதிரியான பாகுபாடு பார்க்கும் பழக்கம் என்பது பாலினத்திற்கேற்பவும் வேறுபடுவது கண்கூடான ஒன்று. பெண்களிடம் வேலை வாங்குவது என்பதில் வெளிப்படையாக இந்த நான்கு முரண்பாடுகள் தென்படுகிறது. கூலி வழங்கப்படும் தொழிலாளி, குறைந்த கூலி வழங்கப்படும் தொழிலாளி, கூலி மறுக்கப்படும் தொழிலாளி மற்றும் வேலை மறுக்கப்படும் தொழிலாளி என்பதாகும். வேலைவாய்ப்பு அதிகரித்து, வேலையின்மை என்பது குறையும் போது, அல்லது கூலி பெறுபவர் எண்ணிக்கை அதிகரித்து கூலி பெறாதவர்கள் எண்ணிக்கை குறையும் போது ஏற்படுகிற இது ஒரு முரண் நிலையாகும்.

ஊரக பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் வழக்கமான வேலை என்பது அதிகரித்து வருவதுடன் குறிப்பாக வீட்டு வேலைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் முக்கியமாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலை என்பது ஏற்படுகிறது. உற்பத்தி என்பதைப் பொறுத்தமட்டில் சமீபத்திய பல பெரிய நிறுவனங்கள் தமது உற்பத்தி சங்கிலியில் அது சார்ந்த பணிகளை சிறிது சிறிதாக வெளியில் கொடுத்து வாங்கும் தன்மையினால், வீட்டிலிருந்து கொண்டே குறைந்த கூலிக்கு வேலை செய்வது என்பது பெண்களிடம் அதிகரித்திருக்கிறது.

ஆனால் ஏற்றுமதி சார்ந்த வேலைகளில், சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மண்டலங்களில் கூட ஊரக இந்தியாவில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது என்பது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதன் நடுவில் ஊரக இந்தியாவில் சம்பளத்திற்கு வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பெண்களிடம் விவசாயம் சாராத சுய வேலை வாய்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது.

இந்த பொருளாதார வளர்ச்சி காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது 1993-94-லிருந்து 2004-05-க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் சிறிது கூடியிருக்கிறது. ஆனால் அதே சமயம் தேசிய தனிநபா் வருவாய் என்பது பெண்களை விட மிக அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது (ஊரக பட்டதாரிகள் மற்றும் கிராமத்து படிக்காத பெண்கள்), உண்மையான சம்பளம் என்பது குறைந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சம்பள வித்தியாசம் என்பது அதிகரித்துள்ளதுடன், உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது.

பொதுப் பணிகள் என்பது மிகுதியாக குறைந்த கூலி வாங்கும் பெண்களை சார்ந்து இருக்கிறது. மாதிரி நிர்வாகி என்று செயல்பட வேண்டிய அரசுத் துறை பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது இன்னும் குறைவாகத்தான் உள்ளது. அத்தியாவசிய பொதுப்பணிகள் என்பது நிச்சயமற்ற ஒப்பந்த முறையில் குறைந்த கூலி மற்றும் பயன்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தும் போக்குதான் நீடிக்கிறது.

இது பள்ளிக் கல்வி போன்ற அரசுப் பணியில் அப்பட்டமாக தெரிகிறது. (அதாவது பகுதிநேர ஆசிரியர்கள் நியமனத்தினால்) அதே போல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (அங்கன்வாடி மற்றும் சமூக நலப்பணிகள்) சார்ந்த பணிகளில் பெண்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் என்பது ஒன்று வந்தபின் தான் இத்தகைய பாலின வேறுபாடுகள் என்பது குறைந்துள்ளது ஊரகப் பணிகளில் இந்த திட்டம் செயல்படுவதை பார்க்கும் போது தெரிகிறது. சுய வேலைவாய்ப்பில் பெண்களுக்கான நிபந்தனைகள் என்பது, சம்பளத்திற்கான பணியில் உள்ள நடத்தைப் பாங்கினை சிரமப்படுத்தும் விதமாக உள்ளது. வருமானம் தொடர்பான குறைந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் பெண்களின் விவசாயம் சாராத சுய வேலைவாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற போதிலும் அந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பினை கூட பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாக உள்ளது. தொழில்துறையிலும், சிறு வணிகத்துறையிலும் உயர் வருவாய் என்பது ஏற்பட்டுள்ள போதிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் போதிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு என்பது குறைவாக இருப்பதால், சுயவேலை வாய்ப்பு என்பது சிரமத்துடன் கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேலோங்கியிருந்தாலும், வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளில், அது பெருவாரியாக ஒரு வேலைக்கு ஒரு கூலி என்று இருப்பதால், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி இத்தகையதே என்பதால், அந்த தொழிலிலும், அதனால் வரும் இந்த கூலியும், பெரிய நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு எடுத்த ஆய்வும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிப்படுத்துகிறது.

அது போல் பெண் தொழிலாளர்களின் பணிக்கு கூலியே கொடுப்பதில்லை என்பதும் அதிகமாகி வருகிறது.ஏனென்றால் பெண்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் குறைக்கப்படுவதும், அல்லது தனியார் மயமாக்கப்படல், அல்லது வலுவிழந்த பொது சொத்துக்கான கட்டுமானம், மனைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் கிடைப்பதற்கான கால நீடிப்பு ஆகும் வகையில் உள்ள பற்றாக்குறை கட்டுமான வசதியும், அல்லது தெளிவாக சொல்லப் போனால், நல்ல நோக்கமுள்ள பல திட்டங்கள் கூட (உதாரணம்- வன அழிப்பு) பாலினம் சார்ந்ததாக உள்ளது என்பதுமே ஆகும்.

மீண்டும் இந்த பாலின வேற்றுமை தற்போதும் இருந்து கொண்டு இருக்கிறது என்பது அச்சாரமான குறிப்பு என்பதோடு மட்டுமின்றி, (இந்தியாவில் இந்த நிலைப்பாடு மேல்மட்டத்திலும் எடுக்கப்படுகிறது) இது மூலதன குவிப்பிற்கான வழிமுறையில் பிணைந்துள்ளது. எனவே, தற்போதைய வளர்ச்சி, நிலவி வரும் சமூக வேற்றுமையை உடைப்பதற்கு பதில் அதனை சார்ந்திருந்தே வளர்ச்சி பற்றிய கருத்தை முன்னெடுத்து செல்லப்படுகிறது.

_________________________________________________________________

- நன்றி: ஃபிரண்ட்லைன், கட்டுரையாளர் – ஜெயதி கோஷ்

-தமிழில் – சித்ரகுப்தன்
நன்றி - வினவு 
...மேலும்

May 25, 2011

வைரமுத்து - நகரத்துப் பெண்கள் இழந்தது என்ன? - சந்தனமுல்லை


சென்ற வாரம் முழுக்க ஒரு வீடியோ எனது ஃபேஸ்புக் வாலில் வந்து வந்து விழுந்துக் கொண்டிருந்தது. வைரமுத்து என்பவர் நீயாநானாவில் பேசியதுதான் அது. அதி நவீன இந்திய இளைஞர்கள், அயல்நாட்டில் வாழும் தமிழர்களெல்லாம் கூட வைரமுத்துவை ரசித்து ரீஷேர் செய்திருந்தார்கள். நகரத்து பெண்களிடம் இல்லாத ஒன்று கிராமத்து பெண்களிடம் இருக்கிறது, கிராமத்து பெண்களிடம் இருக்கும் வெகுளித்தனம், வெட்கம், இன்னொசன்ஸ், வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் அந்த வீடியோ லேபிள் குத்தப்பட்டு வலம் வந்ததைப் பார்த்தபோது எனக்கு மயக்கம் வராத குறை!

அட, வைரமுத்துவை ரசிக்கும் தமிழ்நாட்டில் எப்படி தமன்னாவும் அனுஷ்காவும் வெற்றி பெறுகிறார்கள்?

இப்படி மண்ணின் மணத்தை ரசிப்பவர்களுக்காகவா இந்த தமிழ் சினிமா இயக்குநர்கள் கேரளாவிலிருந்தும் மும்பையிலிருந்தும் கதாநாயகிகளை இழுத்து பிடித்து வருகிறார்கள்? மக்கள் விரும்புவதைத்தான் நாங்கள் தருகிறோம் என்றுவேறு இந்த சினிமாக்காரர்கள் சொல்லிக்கொள்கிறார்களே, அப்படியெனில், சினிமாக்காரர்கள்தான் நிஜமாகவே தமிழ்மக்களைப் பற்றி புரிந்துக்கொள்ளவில்லையா இல்லை தமிழ்மக்கள்தான் சினிமாக்காரர்களை ஏமாற்றுகிறார்களா?

சரி, அதை விடுங்கள்....கிராமத்து பெண்ணின் வெகுளித்தனம், இன்னொசன்ஸ் என்று இவ்வளவு ரசிப்பவர்கள் சராசரி கிராமத்து பெண்ணை அவளது இன்னொசன்சுக்காகவே (அல்லது வெட்கம்/வெகுளி etc) திருமணம் செய்துக்கொள்வார்களா?

”பெண் கலராக இருக்கணும்” என்பதுதானே சராசரி மணமகன் வைக்கும் முதல் கண்டிஷன்?!

கருப்பு நிறம் கண்ணை மறைக்கும் அளவுக்கு சீர் செனத்தியோடு நில புலன்களோடு வந்தால்தான் சாதாரணமாகத் தோற்றம் கொண்ட ஒருவன் கிடைப்பான் என்பது இன்றும் யதார்த்தம். ”சாதாரண தோற்றம் கொண்ட ஒருவன்” என்று சொல்லிவிட்டதற்காக சண்டைக்கு வராதீர்கள். தாத்தாவானாலும் உலக அழகியோடு ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று வைராக்கியம் கொண்டவர்கள் தான் நமது ஹீரோக்கள். ஹீரோ கருப்பாக குண்டாக இருந்தாலும் பெண் ஒல்லியாக சிவப்பாக இருக்கவேண்டும் என்பதுதானே நமது தமிழ்சினிமா மரபு...கலாச்சாரம்...இலக்கணம்!!

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான ingredients - இன்னொசன்ஸ், வெட்கம்! அதைத்தான் இந்த நகரத்துப் பெண்கள் தொலைத்துவிட்டார்கள் என்று ஒரே கூச்சல்! இன்னொசன்ஸ் என்பதை பொதுவாக குழந்தைகளுக்குத்தான் சொல்வோம். பெண்கள் குழந்தைகள் போல இருப்பதைத்தான் விரும்புகிறார்களா? இல்லை, பெண்கள் ”குழந்தையின் குணங்கள் - குமரியின் வளங்களோடு” இருக்கவேண்டுமென்று அல்லவா வலியுறுத்துகிறார்கள்! நம் சினிமா கதாநாயகிகளையே பாருங்களேன் - அவர்கள் லூசுப்பெண்களாக இருக்கவேண்டுமென்பது எழுதப்படாத சட்டம். (மறுப்பீர்களானால் தமிழ்சினிமாவை பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். )

வளர்ந்தபிறகும் அப்படி இருந்தால் மூளை வளர்ச்சியில் பிரச்சினை என்கிறது அறிவியல். ஒரு வளர்ந்த பெண்ணைப்பார்த்து ‘இன்னொசன்டா இரு’ என்று சொன்னால்.என்ன அர்த்தம்? அதாவது, ”ஆண்களுக்கு உலகம் தெரியும், இது ஆண்களுக்கான உலகம், இதைப் புரிந்துக்கொள்ள உனக்கு விவரம் பத்தாது” என்பதுதானே! பெண்களுக்கு அறிவுண்டு என்பதை இன்றும் ஏற்க மறுக்கும் உலகில்தான் நாம் வாழ்கிறோம். ”கவிதை எழுது போ, உனக்கெதுக்கு அரசியல்” என்றும் சொல்லும் இணையத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இப்படி இன்னொசன்சை ரசிப்பவர்களது நட்பு வட்டத்தில் ஒரு கிராமத்து ஆள் மாட்டினால் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அந்த கிராமத்து இன்னொசன்ஸ் ஒரு ஆணிடம் இருந்தால் எப்படி எள்ளி நகையாடுவார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறீர்களா? அப்படி எள்ளி நகையாடுபவர்கள்தான் கிராமத்து இன்னொசன்சை ரசிப்பதாக பிதற்றுகிறார்கள்.

என் சிறு வயதில் நடந்தது இது: கீழ்வீட்டு அங்கிளின் அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்தார். அந்த அங்கிள் கேட்டாரென்று முட்டை தோசை செய்துதந்திருக்கிறார். தோசையைப் பார்த்துவிட்டு “முட்டை எங்கேம்மா” என்றாராம் அங்கிள். “போட்டிருக்கேனே” என்ற அவர் சொன்னதும் அங்கிளுக்கு சந்தேகம் வந்து பார்த்தால் அவரது அம்மா முட்டையை மாவில் கரைத்து ஊற்றிக்கொடுத்திருக்கிறாராம். இன்றும் கூட இதை வைத்து அங்கிளை கேலிக்குள்ளாக்குவார்கள். இந்த கிராமத்து இன்னொசன்ஸ் யாருடைய ரசனைக்குரியதாக இருக்கிறது? அந்த ஆயாவுக்கா அல்லது பார்த்து சிரிப்பவர்களுக்கா? இவர்கள் ரசிக்கும் இன்னொசன்சின் லட்சணம் இதுதான்!

அடுத்தது வெட்கம் - ”இப்போ இருக்கிற பெண்களுக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாது” என்பதை பெண்கள் அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் நிச்சயமாக எதிர்கொண்டிருப்போம். ஏதோ வெட்கம், வெகுளித்தனமெல்லாம் பெண்களுக்கே உரித்தானவை என்பது போல... இந்த இன்னொசன்ஸ்,வெகுளி என்பதை யெல்லாம் சிறிது நெருக்கமாக பார்த்தால் பெண்களுக்கு வெட்கம்,அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு -ஆண்களுக்கு வீரம் என்ற இலக்கணத்திலிருந்துதான் வருகிறது.

பெண்கள் முதலில் எதற்கு வெட்கப்படவேண்டும்? பெண் என்பதற்காகவா? இந்த வாதமே feudalism ஆகத் தெரியவில்லையா?

ஒருமுறை பப்பு எனது துப்பட்டாவை புடைவைபோல சுற்றிக்கொண்டதை படமெடுத்து பேஸ்புக்கில் பதிந்திருந்தேன். அதற்கு ஒருவர், அவளது முகத்தில் வெட்கம் தெரிகிறதென்றார்.ஐந்து வயதுக்குழந்தை புடைவையை சுற்றிக்கொண்டு சிரித்தால் கண்களில் வெட்கம் தெரிகிறது என்பது ஆபாசமாக இல்லையா?

ஏதோ பெண்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டியது, இது இல்லாவிட்டால் பெண்ணே இல்லை, பெண்களின் இலக்கணம் என்றெல்லாம் மியூசியத்தில் வைக்க வேண்டிய ஒன்றை மிகைப்படுத்திக் காட்டுவது ஊடகங்களும் சினிமாவும்தான். அதை நகரத்துப் பெண்களாவது தொலைத்தது நல்லதுதானே!! பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாத இழிவான செயல்கள் செய்தால்மட்டும் வெட்கி நாண வேண்டுமே தவிர பெண்ணாக இருப்பதற்கு அல்ல. மற்றபடி, வெட்கத்துக்கும் ஈஸ்ட்ரோஜனுக்கும் சம்பந்தம் இருப்பதாக அறிவியல் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததாக நினைவில்லை. ஆமாம், கிராம X நகரத்து ஆண்களும்தானே மாறியிருக்கிறார்கள். அதை ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள்?

இவர்கள் சொல்லும் வெட்கம், இன்னொசன்ஸ் போன்றவைதான் பெண் தன்மை என்ற எண்ணத்தின் சீரழிவுதான் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் சிறு குழந்தைகள் கூட கதாநாயகிகளின் விரகதாபங்களை டீவி மேடைகளில் அபிநயித்துக்கொண்டிருக்கிறார்கள். மானாட மயிலாட போன்ற தெலுங்கு வெர்சன் நிகழ்ச்சி ஒன்றில் 4 வயதுடைய குழந்தையொன்று இடுப்பை வளைத்து நெளித்து முகத்தில் கையை வைத்து எடுத்து வெட்கத்தை காட்ட வேண்டி ஆடப்பாடி வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் பெண்களுக்கு இலக்கணம் என்று சொல்லும் எல்லாம் நடுத்தர வர்க்கத்துக்கு உரித்தானதாக இருக்கிறது. பெண்மையின் மென்மை எல்லாம் அடித்தட்டு மக்களிடம் செல்லாது.

வேண்டுமானால், சித்தாள் வேலை செய்யும் பெண்ணிடம் அறை வாங்கிய அனுபவம் இருப்பவர்களிடம் கேட்டுப்பார்க்கலாம். மற்றபடி, இந்த கிராமத்து இன்னொசனஸ், பெண்மை, மலரினும் மென்மை எல்லாம் கவிதைக்கு அல்லது நீயாநானாவுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாமே தவிர சுயமரியாதையுடைய பெண்களுக்கு அல்ல!

பொதுவாக, ஆண்கள், பெண்களைப் பற்றி சொல்லுவதைக் கேட்டிருக்கிறீர்களா? பெண்கள் தாவணி போட்டு தலை நிறைய பூ வைத்து வளையல் போட்டு கொலுசணிந்து வந்தால் பிடிக்கும் என்பார்கள். அதோடு, எங்கள் விருப்பமான உடைகளை அவர்கள்தான் தூக்கிப்போட்டு விட்டார்களே என்றும் அங்கலாய்த்துக்கொள்வார்கள்! ( ஷகீலாவின் படங்களை அல்லது மல்லு ஆண்ட்டி ஃபர்ஸ்ட் நைட் என்று யூ டியூபில் தேடிக்கொண்டிருப்பார்கள். அதைக்கண்டுக்கொள்ளக்கூடாது!! ) காணாமல் போன கலாச்சாரத்தை வேட்டியில் தேடுவதுதானே! ஆனால், வசதியாக பேண்ட் சர்ட்டுக்கு மாறிவிட்டு பெண்கள் மட்டும் கலாச்சாரத்தை காப்பாற்ற தாவணி, புடவை அணிந்துக்கொள்ளவேண்டுமென்பது என்ன நியாயமென்று புரிந்தவர்கள் சொல்லுங்கள்.

சரி, வைரமுத்து சொன்னது என்ன? மாடு மேய்க்கப்பிடிக்கும், அப்புறம் கணவன் ஆபிசுக்கு செல்ல வேண்டும், கணவனைச்சார்ந்து இருப்பது என்பதெல்லாம் இதெல்லாம் ஒரு சராசரி நடுத்தர வர்க்க பெண்ணுக்கு விதிக்கப்பட்டது.

ஆண்களுக்கோ, நடைஉடை பாவனைகளில் நகரத்தவர்களாக இருக்கவேண்டும், ஆனால், மனத்தளவில் அத்தானின் காலை அமுக்கி விட்டு அல்லது ”பத்திரமா ஆபீசுக்கு போயிட்டு வாங்க அத்தான்” என்று டிபன்பாக்சை கையில் கொடுத்துவிடும் சராசரி பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும். இதுதான் இவர்களது உள்ளார்ந்த மனோபாவம்.

இவை இரண்டும் இணையும் புள்ளிதான் இந்த வீடியோவை மடலிலும்,ரீஷேரிலும் பகிர்கிறது. அதாவது, வைரமுத்து, இவர்கள் சொல்லும் தமிழ்பண்பாடு தமிழ்கலாச்சாரம் என்று சொல்லும் விழுமியங்களை கொண்டவராக இருக்கிறார். அதை நமது ”சின்னகவுண்டர்” மனம் கொண்டாடுகிறது.

வைரமுத்து ஒரு சராசரி கிராமத்து பெண். ஒரு பெண் எப்படி நமது சமூகத்தின் விழுமியங்களோடு வளர்த்தெடுக்கப்படுகிறாள் என்பதற்கு சாட்சி. அவ்வளவே.!! அதைத்தாண்டி, வியந்தோதுவதற்கும், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சொல்வதற்கும் அல்லது ’நீங்கள் இழந்துவிட்டதை வைரமுத்துவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்வதற்கும் அந்த வீடியோவில் எதுவும் இல்லை.

...மேலும்

May 24, 2011

ஒரு கல் , ஒரு மழை - லீனா மணிமேகலை


விண்ணில் என் தோழிகளோடு முயங்கி கொண்டிருந்த காலம்
நிலா மரத்தின் நிழலில் எங்கள் புணர்குறிகளை வரைந்திருந்தோம்
விதைக்கவும் இல்லை அறுக்கவும் இல்லை
மண்ணில் இருந்த அவனுக்கு பொறாமை.
இரண்டு வாய்களாலும் உண்டு களித்திருந்த
அவள்களை அவனால் சகிக்க முடியவில்லை
கல் கொண்டு எறிந்தான்
அதை அன்பென்று கற்பனை செய்துக் கொண்ட நான் பருவம் எய்தினேன்.
மாதம் மழை பொழிந்தேன்
தன் உறுப்பைக் கீறிப் பார்த்தும்
நிலா அவனுக்கு கருணை காட்ட வில்லை.
சூரியனின் புத்திரனாயினும்
அவனால் பருகவே முடியாத வெள்ளத்தை
வாய்க்கால் கட்டி தன் நிலத்தில் பாய்ச்சினான்
காதல் என்றான்
நம்பினேன்
என் தோழிகள் தர முடியாதது என்று சவால் செய்து விந்துறைந்தான்
அவன் விதைகளின் பழுப்பு மணம் ஒரு போதும்
அவளின் நாக்கு தரும் ஆம்பல் பூக்களை ஈடு செய்யவில்லை
சூல் கொண்டேன்
அவனால் கருத்தரிக்க முடியவில்லை என்ற பயம்
மீண்டும் கல் எறிந்தான்
சிசுவை ரத்தப் பெருக்கினேன், அவன் பெயரையும்


முடிவில்லாமல் அதைக் கழுவத் தொடங்கினான் அவன்


(மணிமொழிக்கு')

(புதிய இலக்கியக் காலாண்டிதழ் 361 டிகிரியில் வெளிவந்த கவிதை)

...மேலும்

May 23, 2011

எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாக்குவது எளிதல்ல – சல்மா

சல்மா

அடக்குமுறைக்குள் புழுங்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகத்தின் பெண்களது அவல நிலையை விவரிப்பதுடன், யதார்த்தத்தில் வார்த்தெடுத்த சித்திரங்களுடன் வாசகரின் கவனத்தை உலுக்கியெடுக்கிறது. சுயானுபவத்திலிருந்து வெடித்துக் கிளம்பியவைதான் சல்மாவின் படைப்புகளில் வெளிப்படும் கேள்விகளும், நசுக்கப்பட்ட கனவுகளுக்கான புலம்பல்களும். எழுதத் தடைவிதித்த கணவருக்கும், புகுந்த வீட்டுக்கும் தெரியாமல் படைப்பைத் தொடர்வதற்கான முகமூடிதான் தனது புனைபெயர் என்று பல நேர்முகங்களில் சொல்லியிருக்கிறார். 2001-இல் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட அவர் கணவர் மூலமே வாய்ப்பு வந்தது. மனைவியைக் கைபொம்மையாக்கி, அதிகாரத்தைத் தானே தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்துடன் அவரது கணவர் இருக்க, சல்மாவுக்கோ அந்த வெற்றி பல கதவுகளைத் திறந்துவிட்டது. அவரது நம்பிக்கையும், வைராக்கியமும் பதவி பலத்தில் வளர, அரசியலில் பரவலான கவனத்தைப் பெற்றார். கடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க சார்பில் மருகாபுரியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். அதில் தோற்றாலும், கலைஞரின் வேண்டுகோளின் பேரில், சமூகநல வாரியத் துறைக்குத் தலைவியாகத் தொண்டாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் தற்போது இயங்கிவரும் படைப்பாளிகளின் பட்டியல் சல்மாவைச் சேர்க்காமல் நிறைவடையாது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறை, நார்மன் கட்லர் நினைவாக ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டு, அமெரிக்கா வந்த சல்மாவுடன் ஒரு சிறு உரையாடல்…

கே: வட அமெரிக்கப் பயண அனுபவம் எப்படி இருந்தது?

ப: வட அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்னை இந்தியாவிலிருந்து வரவழைத்து என் படைப்புக்களைப் பற்றி இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கருத்தரங்கம் முடிந்து நியுயார்க், வாஷிங்டன் டி.சி., பாஸ்டன், கனெக்டிகட், சான் ஹோஸே, சான் ·பிரான்ஸிஸ்கோ எனப் பல நகரங்களைப் பார்த்ததும் இங்குள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்புகளில் பங்கேற்றதும் இனிய அனுபவங்களே. நான் குறுகிய காலத்தில் சந்தித்த மிகக் குறைந்த மனிதர்களில் சிலருக்குத் தீவிர இலக்கிய வாசிப்பும், ஆர்வமும் குறைவு என்று தோன்றியது. அதற்குத் தொலை தூரத்தில் வாழ்வது காரணமாக இருக்கலாம். தீவிர இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருக்கலாம். தமிழ்நாட்டிலேயே தீவிர இலக்கிய வாசிப்பு என்பது குறைந்த அளவிலேயே இருக்கும் போது இங்கிருக்கும் நிலையைக் குற்றமாகச் சொல்லமுடியாது. ஓர் அவதானிப்பாகச் சொல்கிறேன். மற்றபடி தமிழ்நாட்டிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருக்கிறார் என்றால், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எல்லாரிடமும் பார்த்தேன். அந்த வரவேற்பும், விருந்தோம்பலும் மகிழ்ச்சியைத் தருகின்றன.

கே: ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற உங்களது நாவல் பற்றிச் சொல்லுங்கள்.

ப: என்னுடைய இஸ்லாமிய சமூகம் சார்ந்த பெண்களுடைய உலகத்தை எழுத்தில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் என் முதல் நோக்கமாக இருந்தது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களைப் பற்றி பேசாமல், நான் பிறந்த வளர்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெண்கள் நிலையைச் சொல்லவும், அவர்களது வாழ்க்கை, கனவுகள், துயரங்கள், காதல் இவற்றை வெளிக்கொண்டுவரவும் முயன்றிருக்கிறேன். பொதுவாகவே பெண்களது வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. நான் பார்க்கும் பெண்களின் வாழ்வையே இதில் பதிவு செய்திருந்தாலும் பல விஷயங்கள் எல்லா சமூகத்துப் பெண் களுக்கும் பொருந்தும் என்றே சொல்வேன். இதன்மூலம் என் சமூகத்தில் ஒரு விவாதத்தை உருவாக்கி, என்ன மாதிரி வாழ்க்கை இங்கே இருக்கிறது, என்ன மாற்றம் தேவை, அதை எப்படிக் கொண்டு வருவது எனப் பல கேள்விகளை இந்த நாவல் வாயிலாக எழுப்பவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.

கே: இஸ்லாமிய சமூகம் இந்த நாவலை எப்படி எதிர்கொண்டது? நீங்கள் உருவாக்க எண்ணிய விவாதம் நடந்ததா?

ப: நாவலை முழுமையாக வாசித்து, இந்தப் படைப்பு அடிப்படையில் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ, விவாதிக்கவோ என் சமூகத்தில் யாரும் தயாராக இல்லை. மாறாக, அங்கங்கே சில பக்கங்களைப் படித்துவிட்டு, பல விஷயங்களை மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேன் என்று சிலருக்கு என்மீது வருத்தமும் கோபமும் உருவானதாகத்தான் தெரிகிறது. எந்த நோக்கத்தில் பதிவு செய்தேனோ, அந்த நோக்கத்தை அவர்கள் உள்வாங்கவும், எதிர் கொள்ளவும் இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.

ஆனால், தமிழ் இலக்கிய உலகத்தில் இந்தப் படைப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதுவரை விவரமாகச் சொல்லப்படாத புதியதொரு வாழ்க்கை முறையை இந்த நாவல் பேசுவதால் பரவலாக நல்ல கவனமும் இதற்குக் கிடைத்தது.

கே: தமிழிலக்கியத்தில் கடந்த பத்து வருடங்களில் பெண்களின் பங்களிப்பு எப்படி முன்னேறியிருக்கிறது?

ப: கடந்து பத்து வருடங்களில் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் ஆறேழு பேர் (மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தாராணி மற்றும் சிலர்) எழுதிக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களை எடுத்துக்கொண்டால் பெண்கள் கவிதை என்ற வடிவத்துக்குள் பெரிதாக இயங்கவேயில்லை. அதைப்போல் தற்காலத்தில் எங்களுக்குப் பின் கவிதைகள் எழுதும் ஒரு பெண் தலைமுறை உருவாகவில்லை. அது அச்சமும் வருத்தமும் தருவதாக இருக்கிறது.

எங்கள் கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. தொடர்ந்து பிரசுரமாகின்றன. கவனம் பெறுகின்றன. இருந்தும் எங்களைத் தவிர்த்து வேறு புதிதாய் இன்னும் பெண்கள் ஏன் கிளம்பவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. கே: உங்கள் கவிதைகளில் பல, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான குரலாய் ஒலிக்கின்றன. இதைத் தாண்டி வேறு தளங்களுக்கு உங்கள் கவிதைகள் போக வேண்டும் என்ற விருப்பமிருக்கிறதா?

ப: ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’ தொகுப்பில் இருக்கும் பல கவிதைகள் நீங்கள் சொல்வது போல் ஒரு குறுகிய உலகத்துக்குள் இருப்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் மட்டுமல்ல, தற்காலப் பெண் படைப்பாளிகள் சிலரும் இந்தக் குறுகிய உலகத்தைப் பற்றித்தான் எழுதிவருகிறார்கள். இது மாறி, ஒரு பரவலான தளத்துக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களும் விரும்புகிறார்கள் என்றே நம்புகிறேன். பல்வேறு தளங்களில், பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கவிதைகள் பிறக்கவேண்டும்.

கே: எழுத்து வாழ்க்கையில் தொடங்கிப் பொது வாழ்க்கைக்கு வந்திருக்கிறீர்கள். என்ன விதமான மாற்றமாக இதை உணருகிறீர்கள்?

ப: எழுத்துச் சார்ந்த உலகம் சிறியது. இப்பொழுது நான் ஈடுபட்டிருக்கும் பொது வாழ்க்கையில் நிறைய மக்களைச் சந்திக்கும், அவர்களது வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கின்றன. இதன் மூலம் என் எழுத்தும் பலவித மக்களின் பதிவாக விரியும் என்றே தோன்றுகிறது. எழுத்தின் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் அது எளிதில் நடக்கக்கூடியதல்ல. நம் உணர்வுகளையும், கருத்துக்களையும் பதிவு செய்யும்போது, காலப்போக்கில் ஒரு சமூக மாற்றத்துக்கு என்றாவது அவை உதவிகரமாக இருக்கலாம். ஆனால், அதே சமயத்தில் அரசியல் களத்தில் இறங்கி மாற்றங்களுக்காக உழைக்கும்போது அது உடனடியாகப் பலன்களைத் தர வாய்ப்பு அதிகம்.

கே: உங்கள் கவிதைகள் காட்டும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா?

ப : நிச்சயமாக. நான் தற்போது தலைமை வகிக்கும் சமூக நலவாரியம் பெண்கள் குழைந்தைகள் நலன் சார்ந்த ஓர் அமைப்பு. இதன் மூலம் சில அரசு சாராத் தொண்டு நிறுவனங்களோடும், அனாதை இல்லங்களோடும், பெண்கள் அமைப்புகளோடும் சேர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னால் முடிந்ததைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். தொடர்ந்து செய்வேன்.

உரையாடல்: மனுபாரதி

...மேலும்

May 22, 2011

கனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும் - குட்டி ரேவதி


கனிமொழி கைது செய்யப்பட்டது, அவர் இழைத்த குற்றத்திற்கானதாக ஒரு புறம் இருந்தாலும், எனக்கு அதனுடன் பிணைந்த வேறு பல விஷய முடிச்சுகளையும் உடன் இழுத்து வருகிறது.

அரசியல் நோக்கிய நகர்வைப் பெண்கள் எளிதாக எடுத்து வைக்கமுடிவதில்லை. குடும்பம், தான் சார்ந்துள்ள சமூகம் போன்ற வெளிகளைத் தாண்டி, அல்லது அந்த வெளிகளைத் தனக்கான அளவில் சமாதானப்படுத்திவிட்டு, நிறைவு பெறச் செய்து விட்டுத்தான் அரசியல் என்ற ஆண்களுக்கு மட்டுமே என இருந்த வெளியை எட்டிப் பிடிக்க முடிந்தது. இன்று அது, தன் தந்தை, சகோதரர், கணவர் என்று யார் மூலமாகத் தனக்குச் சாத்தியப்பட்டாலும், அது இன்னும் ஆண்களின் வெளியாகவே இருப்பதைத்தான் உணர்த்துகிறது.

அந்த இடத்தின் மையம் வரை செல்ல முடிந்த பெண்கள், தங்கள் அணுகுமுறைகளிலும் செயல்பாடுகளிலும் ஆண்களைப் போலவே நடந்து கொள்வது சமூகத்தில் தன்னிருப்பு அல்லது தன்னையொத்த பெண்களின் நிலைமை குறித்த அவர்களின் அறியாமையையும் மடமையையும் தான் உணர்த்துகிறது.

சமூகத்தில், அரசியல் என்னும் மனித உரிமைகளைச் சட்டப்பூர்வமாகச் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடிய இடத்திற்கு சென்று சேரும் வாய்ப்புக் கிட்டிய பெண்கள் இப்படி தங்களின் செயல்களுக்கே இரையாகிப்போவது மற்ற பெண்களுக்குச் சோர்வையும், அவர்களின் நடத்தைகளில் இடர்ப்பாட்டையும் தரும். தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக் கொண்டது போல.

ஒரு பெண்ணியலாளர் இவ்வாறு கூறினார். “அரசியலுக்குச் செல்ல முடிந்த பெண்கள், இரு மடங்கு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒன்று, தனக்கான ஆளுமையைக் கட்டியெழுப்பிப் பேணுவதன் வழியாக, தன் சுயமரியாதையை நிலைநாட்டிக் கொள்வது. இன்னொன்று, தன்னையொத்த பெண்களின் உரிமைகளுக்கான பிரதிநிதியாகி நின்று போராடுவது”.

கனிமொழி, மற்ற பெண்களுக்கான பிரதிநிதியாகத் தன்னை நியாயப்படுத்தவும் இல்லை. தன் சுயமரியாதையையும் திடப்படுத்திக் கொள்ளவும் இல்லை. இது, பிற ஆணாதிக்க அரசியல்வாதிகள் விரித்த வலையாகவும் இருக்கலாம். அதில், கனிமொழி இரையாக மாட்டிக்கொண்டார் என்றும் சொல்லலாம். என்றாலும் அத்தகையதோர் அறியாமையைத் தனக்குள்ளே ஊட்டமளித்து வளர்த்து வந்தது யார் குற்றம்?

கனிமொழி, பெண்களின் வரலாற்றில் ஒரு தவறான அரசியல் குறியீடு ஆகிறார். அவர் ஏற்படுத்திய அலை, அரசியலை நோக்கி நகர முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் தாக்கும், வீழ்த்தும். ஆதிக்க சாதியல்லாத ஒரு சமூகத்திலிருந்து அரசியல் பிரதிநிதியாக விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் இனி முதல் அடியிலிருந்து தான் தன் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்தை அளிக்கும். இது பொது மனித உளவியலை ஒரு நோயைப்போல தொடர்ந்து ஆட்கொள்ளும்.

அரசியலின் நீதி மன்றத்தில், “அவர் பெண்!” என்றாலும், “அவர் ஒரு குழந்தைக்குத் தாய்!” என்றாலும் அச்சொற்கள் அர்த்தம் பெறாது. எதிரொலிக்காது. ஏனெனில், ஏற்கெனவே, தன் குடும்பம், சமூகம் இரண்டையும் கடந்து தான், அதன் ஆழிகளைக் கடக்க முடிந்ததால் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி, அவர் எல்லா வகையிலும் ஒரு தனி மனுஷி!

“படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான்! ஐயோவென்று போவான்”. கவிஞன் பாரதி சொன்னது. கனிமொழியின் இந்நிலைமை வேதனையை அளிக்கிறது!

...மேலும்

May 21, 2011

'கண்ணீர் வரைந்த கோடுகள்' கவிதைத் தொகுப்பு மீதான ஒரு விமர்சனப் பார்வை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார் எழுதியிருக்கும் 'கண்ணீர் வரைந்த கோடுகள்' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது கன்னித் தொகுப்பாகும். கஹட்டோவிட்ட மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. வேகம் பதிப்பகத்தின் வெளியீடாக, 62 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 24 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சாயம் போகும் நினைவுகள், இது அங்குல இடைவெளி, நெஞ்சத்திடம் ஒரு கேள்வி, தாகிக்கும் இதயம், போதும் என்னை விட்டுவிடு, விழியால் தொட்டுக்கொள், உரிக்கப்படும் உரிமைகள், அந்த இரவுக்கு மட்டும், காத்திருப்பு, முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள், கிராமத்து விருந்து, வையத் தலைமை கொள்வோம், அக்கரைச் சீமையில் எம்மவர் கண்ணீர், தளிர்விடும் துயரும் ஒற்றை நினைப்பும், என் மீதான சதிகள், இப்படிக்கு கனவு, இது தான் உலகம், பெண்ணாய்ப் பிறந்திட்டோம், நிலாப் பொழுதில், காதல் வந்தது, எனக்கொரு குழந்தை வேண்டும், இனியொரு துன்பம் இல்லை, பணிக்கட்டி நினைவுகள், பொய் வேஷம் என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'பொதுவாக இளைய கவிஞர்களின் தொகுதி என்றால் அதில் காதல் கவிதைகள் அதிகம் இருக்கும். அல்லது பள்ளி வாழ்க்கையின் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்தக் கருத்துருவத்தை மாற்றுகிறது கஹட்டோவிட்ட நிஹாஸாவின் கண்ணீர் வரைந்த கோடுகள். .... உள்ளே பல புதுமையான கவிதைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அநேகமான கவிதைகள் பெண்ணின் சுதந்திர வாழ்க்கைக்கான ஆசைகளை, எதிர்பார்ப்புக்களைச் சுட்டி நிற்கின்றன. ஏனையவற்றுள் இயற்கை, தொழிலாளர் ஒற்றுமை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரச்சினை, அரசியல் உரிமைகள், நாட்டின் சமாதானம், தாய்மை என்று பல விடயங்கள் பேசப்படுகின்றன. இதில் மிகக் குறைவாக காதலும், காதல் தோல்வியும் பேசப்படுவது சிறப்பம்சமாகும். இன்னொரு சிறப்பம்சம்... இவர் இதுவரை பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர் அல்ல என்பது. அனாவசியமான படிமங்கள், குறியீடுகள் என்பவற்றைக் களைந்து மிக இயல்பான கவிதை மிடுக்கோடு இவரது கவிதைகள் வெளிக்கிளம்பியுள்ளன' என்று கெகிராவ சஹானா தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முன்னால் பணிப்பாளரான அல்ஹாஜ். எம். இஸட். அஹ்மத் முனவ்வர், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எஸ்.வை. ஸ்ரீPதர், கவிஞர் காவூர் ஜமால் ஆகியோர் இக்கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துரைகளை வழங்கியுள்ளார்கள். பதிப்புரை வழங்கியிருக்கும் வேகம் பதிப்பகத்தின் ஆசிரியர் பஹமுன அஸாம் தனது பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்....

'புது யுகம் காணும் வெற்றியின் பயணத்தில், வேகம் பதிப்பகமானது மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. அந்த விதத்தில் பத்திரிகைத் துறையில் ஒரு புதுத் தடம்பதித்துள்ள வேகம் பத்திரிகையானது புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், சமூகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் உற்சாகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். ... நிஹாஸா நிஸாரின் ஆக்கங்களைப் பார்க்கும் போது ஒருவிதக் கவலைதான் குடிகொண்டது. காரணம் அழகான தமிழ் வளமும், சொற்கள் வசனங்கள் என்பவற்றை தனது ஆக்கங்களில் கையாளப்பட்டிருந்த அமைப்பும் சிறப்பாகவே இருந்தன. இருந்தும் இத்தனை காலமாக அவை தூசு தட்டப்படாது இருந்ததை நினைக்கும் போதுதான் கவலையாக இருந்தது. ஆரம்பக் காலத்திலேயே இவரை இனங்கண்டு, அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பட்டை தீட்டப்பட்டிருந்தால், இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரு காத்திரமான எழுத்தாளராக இருந்திருப்பார்'.

நிஹாஸா நிஸார் தனது முன்னுரையில் 'தெவிட்டாத தேன் சொரிக்கும் இக்கவிதா வனத்தில் சிறகசைக்க வந்ததொரு சிட்டுக்குருவி போல இச்சின்னத்தொகுதி உங்கள் கரங்களில் இன்று தவன்று கொண்டிருப்பது வெறும் கனவென்றே எண்ணத்தோன்றும். கவிதையின் ஆரம்ப நாதம் அடிமனதில் அலாரம் அடித்தது. மனதில் முகாமிடும் ரணங்களை மொழிபெயர்க்கத் தெரியாத கணங்களில் மனதை ஆற்றுப்படுத்தும் முயற்சியில் எனது யௌவனத் தேடல்களின் கண்களில் ஆங்காங்கே தட்டுப்படும் வரிகளில் மனம் லயிக்கும். அவ்வரிகளை என் டயரிக்குள் எழுதிப் பத்திரப்படுத்துவேன். இரவுகளின் ஏகாந்தத்தில் உள்ளம் வாசித்து அமைதி பெறும். கவிரசனையின் ஆரம்பச் சுவையை இருதயம் கொஞ்சம் கொஞ்சம் சுவைப்பது புரிந்தது. ... முதன் முதலில் பூமியில் கால் பதிக்கும் குழந்தையின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் குறை காணாது தப்புக்களைத் தண்டனைக்கு அப்பாற்படுத்தி கை தூக்கி விடுவது நற்பண்புகளின் உச்சம். அந்த எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் எனது முதல் பாதச் சுவடான இக்கன்னித் தொகுப்பை உங்கள் கரங்களில் தவழவிடுகிறேன்' என்கிறார்.

சாயம் போகும் நினைவுகள் என்ற கவிதையில்

ஆயிரம் முறை நீட்டும் மனப்புயலின்
தலை நீட்டலுக்கிடையில்
த்ரீஜீ போனுக்கு ரீலோட் ஏத்த
மாதம் தோறும் பணம் கேட்கையில்
அம்மாக்களின் இருதயங்களில்
ஆலமரம் சரியும் அரவம்....

என்று குறிப்பிடுகிறார். கையடக்கத் தொலைபேசி இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் சிறியோர், பெரியோர் அனைவரிடமும் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. எனினும் அதனால் ஏற்படும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அவசர யுகத்தில் அவசியமாகிப் போன கைத்தொலைபேசிகள் ரீலோட் என்ற பெயரில் காசை அழித்து விடுகின்றது. அந்த கருத்தைத் தான் மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கிறது.

இது அங்குல இடைவெளி என்ற கவிதையில் வெறுமை நிலை வெளிப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணின் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி விடும்போது ஏற்படும் மனவருத்தம் இந்த வரிகளில் இவ்வாறு எடுத்தாளப்பட்டிருக்கிறது.

அன்புகாட்டாத நேசங்கள்
முளைக்கப் பார்க்கும்
பெண்மையின் அபிலாஷைகள்
கண் முன்னே
கலையப்படும் போது - அது
தருகிற வழியும்... ரணமும்...
வேதனையாகி விரக்தியாகிறது...

மன உறுதிகள் குழைந்து
வீரம் தளர்ச்சியுற்று
உடம்பைக் கூறுபோடுகிறது...

இது என்ன தான் நவீன யுகம் என்றாலும் இன்றும் கூட பெண்களை அடக்கியாள எண்ணும் ஆண்கள் கிருமிகளாக ஆங்காங்கே காணப்படுகின்றமை துரதிருஷ்ட நிலையாகும். ஒடுக்கப்பட்டு அடுப்பங்கரைக்குள் அடைப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வு 'தாகிக்கும் இதயம்' என்ற கவிதையில் இவ்வாறு சோகமிசைக்கிறது.

வாழ்வில்
அறியாத பக்கங்களை
தெரியாதென விட்டுவிட்டேன்...
அன்று அறியப்படாத - சில
பக்கங்களை அனுபவிக்கிறேன்
இன்று
அடுப்பங்கரையினுள்ளே
அடைபட்டுக்கொண்டு...

உரிக்கப்படும் உரிமைகள் என்ற கவிதையில் மானிட நேயம் வெளிப்படுகின்றது. செத்த பிணங்களாய் அனைத்து பிரச்சனைகளை சகித்த காலங்களும், இனவெறி அரக்கனின் அட்டகாச ஆட்சியின் அவலங்களும் போதும் என்று ஆவேசப்படும் நிஹாஸா அந்தக் கவிதையின் வரிகளை இவ்வாறு வடித்திருக்கிறார்.

பாழ்பட்ட மண்ணில்
கால்பதித்த மக்கள்
சீர்கெட்ட சனத்தால்
சீரழிந்தது போதும்...

வாள்பட்டு நித்தம்
சீர்கெட்ட மக்கள்
சிதைந்தொழிந்தது போதும்...

நூலின் 32வது பக்கத்தில் அமைந்திருக்கும் காத்திருப்பு என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை நாட்டார் பாடலின் சாயலில் அமைந்திருக்கிறது. சந்த ஒழுங்கு பேணப்பட்டு கவித்துவத்துடன் புனையப்பட்டிருக்கும் அந்தக்கவிதை கீழ்வருமாறு....

நெஞ்சில கைய வச்சா
சத்தமும் இல்ல
ஆனா நான்
சாகவும் இல்ல!

ஓடுதில்ல ஒருவேல
நெனப்பெல்லாம் உங்கமேல
நொந்து கிடக்கிறேன் நான்
நொடிப்பொழுதில் வாங்க..
தேய்ந்து போற என்ன
தேற்றிவிட்டுப் போங்க

அடுத்து முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத்தில் சீதனம் கேட்டு திருமணம் செய்யும் ஆண்வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைகிறது. அதற்கு உதாரணமாக பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம்.

பெண்களை
வாழ வைக்க
வக்கில்லாதவன்
பெற்றுக் கொள்ளும்
பிச்சைக் காசு...

மஹர் கொடுத்து
மணம் முடிக்கத் துணியாத
நீங்களெல்லாம் - ஏன்
காற்சட்டை அணிந்த
ஆண்கள் என்று
சொல்லிக் கொள்கிறீர்

எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக நிஹாஸா நிஸார் மிளிர வேண்டும். இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களைத் தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்