/* up Facebook

Apr 29, 2011

சீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்


தென்னாசியப் பிராந்தியம் முழுவதையும் எடுத்து நோக்கும் போது ஏனைய ஒடுக்குமுறைகள் போன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றது. அதில் ஒன்றே சீதனம் அல்லது வரதட்சனை என்பதாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக இருந்து வருகிறது. திருமண பந்தத்தில் ஈடுபடவுள்ள குறித்தபெண்ணுக்கு அவரது வீட்டில் இருந்து பெற்றோர் சகோதரர்கள் என்போர் சம்பந்தப்படப் போகும் ஆணுக்குப் பணம், தங்க நகைகள், நிலம், பாவனைப் பொருட்கள், வாகனங்கள் என்பனவற்றைத் தொகையளவில் அன்பளிப்பாக வழங்கப்படும் நடைமுறையே சீதனம் என்பதாகும்.

இலங்கையில் இச் சீதன முறையானது பரந்தளவில் பல் வேறு அளவுகளில் காணப்படுகிறது. சிங்கள மக்களிடம் குறைந்தளவிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு அளவுகளிலும் இருந்து வருகிறது. இச் சீதன முறைமையினால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோர் சகோதரர்களாகவும் காணப்படுகின்றனர். திருமண வயதை அடைந்துள்ள நிலையில் சீதனம் கொடுக்க வசதியற்ற குடும்பச் சூழலில் முதிர்கன்னியர் என்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் சமூகத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடியும். திருமண வாழ்வில் ஈடுபடவும் கணவன் குழந்தைகள் குடும்பம் என்பதனுள் தம்மை ஈடுபடுத்த இளம் பெண்கள் விரும்பிய போதும் அவ்வாறு செயற்படுவதற்குச் சீதனம் என்ற அவமானகரமான முறையானது தடையாகவே இருந்து வருகிறது. இதனால் முதிர்கன்னியர்களாகி வரும் இளம் பெண்கள் அனுபவித்து வரும் சமூக வேதனைகளும் சோதனைகளும் சொல்லில் அடங்காதவைகளாகும்.

பெண்களைப் பிள்ளைகளாகப் பெற்ற பெற்றோரும் கூடப்பிறந்த ஆண் சகோதரர்களும் படும் துன்பங்கள் வேதனை மிக்கவையாகும். இதன் காரணமாகவே பெண் பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் உறவினர்களால் வேண்டா வெறுப்புக் காட்டப்படுகிறது. “ஐந்தாறு பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது முதுமொழியாகப் பேசப்படுகிறது. இது சீதனத்தை மையமாக வைத்தே எழுந்த ஒரு கூற்று எனலாம்.

இச் சீதன முறைமை என்பது நிலவுடைமையின் கீழ் ஆணாதிக்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை சாதியம் போன்று தமிழ்ச் சூழலில் மிகவும் கெட்டியானதாக இருந்து வருகின்றது. பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் தமது இளமைக் காலத் திலிருந்தே இச்சீதனம் கொடுப்பதைத் தமது கடமை என மனதில் வைத்துக் கடும் உழைப்பிலும் சேமிப்பிலும் ஈடுபட்டு வருவது மரபாக எழுதா விதியாகப் பின்பற்றப்படுகிறது. தமது அன்றாட உணவைக் கூடக் கட்டுப்படுத்தி தமது பெண்களைக் கரை சேர்க்கவெனப் பாடுபடுகின்றனர். தத் தமது ஆண் பிள்ளைகளுக்குப் பெரும் குடும்பப் பொறுப்பு இருப்பதாகச் சிறுவயதில் இருந்தே மூளையில் பதிய வைத்து அக்கா, தங்கைக்கு சீதனம் வழங்குவது ஆண் சகோதரர்களின் தவிர்க்கவியலாத கடமையென விதிக்கப்படுகிறது. தமது பெண் சகோதரர்களுக்கு சீதனம் கொடுப்பதையே லட்சியமாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணம் தேடுவதற்காகக் கடும் உழைப்பில் ஈடுபடும் ஆண்கள் பலர் நாற்பத்தைந்து ஐம்பது வயதாகியும் திருமணம் செய்யாது இருந்து வருவதையும் பல இடங்களில் காண முடியும்.

சம காலத்தின் புலம் பெயர்ந்து வாழும் சூழலால் சீதன முறைக்கெனப் பணம் சொத்து சேகரிக்க நிர்ப்பந்திக்கும் போக்கும் அதிகரித்துக் காணப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆணும் உள்ள ஒரு இளம் குடும்பம். தந்தைக்கு அளவான வருமானம். அதுவும் போதாதது மட்டுமன்றி நாட்டுச் சூழலாலும் மத்திய கிழக்கு சென்று வந்தவர். அக்குடும்பத்தின் குழந்தைகள் வளர்ந்து பாட சாலை செல்லும் மாணவர்களாக உள்ளனர். பதினேழு வயதான தமது மூத்த ஆண் பிள்ளையின் கல்வியை நிறுத்தி ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமது நெருங்கிய உறவினர் மூலம் அங்கு அனுப்பி வைக்கப் பெற்றோர் முயற்சிக்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களது இரண்டு பெண் பிள்ளைகளை எதிர்காலத்தில் கரை சேர்ப்பதற்கு வேறு வழி இல்லை என்கி ன்றனர். அதாவது இரண்டு தமது பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டி வரும் என்பதால் தமது ஒரே மகனைக் கல்வியை நிறுத்திப் புலம் பெயர வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இது நமது சூழலில் ஒரு சோற்றுப் பதமாகவே காணப்படுகிறது.

ஒரு பெண் கல்வி கற்று அரசாங்கத் தொழில் பெற்று மாதாந்தம் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தும் கூட அப் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் லட்சங்களும் தங்கமும் நிலமும் வழங்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் நமது தமிழ்ச் சூழலில் நிலைத்து நீடித்து வருகின்றது. அவ்வாறு ஆண் வீட்டார் கேட்டும் சீதனத்தை கடன்பட்டுக் கொடுத்து தமது பெண்ணைக் கரைசேர்க்கும் பெற்றோர் அக்கடனுக்குத் தமது ஆண் மகனைப் பொறுப்பாக்குவதுடன் அதே மகனுக்குப் பெண் பார்க்கும் போது தாம் மகளுக்குக் கொடுத்த அளவையும் விடக் கூடுதலாகச் சீதனம் பெற்றுக் கொள்ளவும் முன் நிற்கின்றனர். எனவே சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு சுழல் வட்டத்தில் தொடர்கிறது. இதனால் ஏற்படும் துன்ப துயரங்கள் பாதிப்புக்கள் யாவும் ஒட்டு மொத்த சமூகத் துயரமாகவும் அவமானமாகவும் தொடருவதையிட்டுப் பழமைபேண்வாதிகள் கவலைப்படுவதில்லை. அதனை நியாயப்படுத்தவே முன்நிற்கின்றனர்.


ஏனெனில் தமிழ்த் தேசியத்தை உயர்த்தி நிற்கும் பழைமைவா திகள் சீதனம் விளைவிக்கும் சமூக அநீதியைக் கேள்விக்கு உள்ளாக்கிக் கொள்வதில்லை. அவர்கள் சீதனத்தை உயர் வர்க்க, உயர் சாதிய ‘சமூக அந்தஸ்தாகவே’ கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு யுத்தம் உச்சமாகிக் கொண்டிருந்த 2006ம் ஆண்டின் போது வட புலத்தில் ஒரு உயர் கல்வி அதிகாரி தனது மகளுக்க 35 லட்சம் ரொக் கமாகவும் 35 பவுண் தங்க நகைகளாகவும் வீடு நிலம் போன்றனவும் சீதனமாக வழங்கித் திருமண விழா நடாத்திப் பெருமை கொண்டார். இதனையிட்டு யாரும் கேள்வி எழுப்பவில்லை. பதிலுக்கு அதனை ஒரு பிரமிப்பாகவே நோக்கினர்.

அதன் பாதிப்பு ஒரு சமூகக் கேடாக வசதியற்ற ஏகப் பெரும்பான்மையான பெண்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றிச் சிந்திக்கப்படவே இல்லை. பதிலாக அதே போன்று தாமும் சீதனம் கொடுக்க வேண்டும் என்ற நப்பாசையுடன் புலம் பெயர்ந்து வாழும் தமது உறவுகள் மூலம் பணம் பெற்றுச் சீதனம் வழங்கவே முயலுகின்றனர். இதனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இச் சீதனத்திற்காகப் பனியிலும் குளிரிலும் கடுமையாகவும் அதிகரித்த நேரத்திற்கும் வேலை செய்து விரைவாகவே கடும் நோயாளிகளாகிக் கொண்டவர்களின் எண்ணிக்கை பற்றி யாரும் கணக்கில் கொள்வதில்லை.

தமிழ்த் தேசியம் கால் பதித்து நிற்கும் தமிழர் பழைமைவாதம் சீதனக் கொடுமை பற்றிக் கேள்வி எழுப்புவ தில்லை. அறிவியல் பூர்வமாகவோ அன்றி மனிதநேய மனக் சாட்சி ரீதியாகவோ அதன் சமூகத் தாக்கம் பற்றிப் பேசு வதில்லை. இதற்கு ஒரு உதாரணம் விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் பரந்த பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து ‘ஆட்சி’ செய்த போது இச் சீதனத்தைப் பற்றி உரிய அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. அதன் தீய சமூகத் தாக்கம் பற்றி அறிவியல் பூர்வமாக அணுகப்படவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திச் சீதனத்துள் அடங்கியுள்ள பெண் ஒடுக்குமுறை பற்றி எடுத்துரைக்கவில்லை. பதிலுக்குச் சீதனம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அத் தடையை மீறிச் சீதனம் கொடுக்கப்பட்டால் அதிலிருந்து குறிப்பிட்ட வீதம் தண்டப்பணமாகப் பெறுவதையே புலிகள் நடைமுறையாக்கிக் கொண்டனர். இதனால் சீதனம் மறையவில்லை. அதில் ஒரு பகுதி புலிகளால் வசூலிக்கப்பட்ட நிகழ்வே இடம்பெற்றது.

மேலும் இச் சீதன முறைமையை தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வரும் தேசவழமைச் சட்டம் வலுவாக்கி நிற்கிறது. அத்துடன் மதம், பண்பாடு, மரபு, வழமை, குடும்பக் கௌரவம் என்பனவும் சீதன முறைமையைச் செழுமைப்படுத்தி நிற்கின்றன. ஊடகங்கள் எதுவுமே இச் சமூகப் பிற்போக்குத்தனம் அல்லது பெண்கள் மீதான அநீதி பற்றிக் கேள்வி எழுப்பிக் கொள்வதில்லை. இன்றும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் திருமணப் பந்தம் தேடும் விளம்பரங்களில் சாதி பற்றித் தவறாது குறிப்பிடப் படுவதுடன் சீதனம் பேசித் தீர்க்கப்படும் அல்லது தகுந்த சீதனம் வழங்கப்படும் என்றே வாராந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் மண்ணடிமை, பெண்ணடிமை, சாதிய டிமை போன்ற கசடு கொண்ட ஒடுக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் நீடிக்கும் நிலையில் எவ்வாறு இன விடுதலை என்பதைச் சாத்தியமாக்க முடியும். இதனை எந்தத் தமிழ்த் தேசியவாதிகளாவது காதில் போடத் தயாரா? தமிழ் மொழி தமிழ் இனம் எனச் சிலிர்த்து தமது தொன்மை மேன்மை பற்றி வாய் கிழியப் பேசும் எந்தக் கனவானும் தமிழர் மத்தியிலான இவ் இழிவுகள் பற்றிப் பேசுவதில்லை.

இத்தகைய தமிழர் பழமைவாதிகளான தமிழ்த் தேசியவாதிகள் சீதனம் ஊடான தமது சமூக அந்தஸ்து பேணும் நடைமுறையால் முழு மக்களையும் பின்பற்ற வைக்கின்றனர். அவை மேலிருந்து கீழே புகுத்தப்படுகின்றன. மேலே பார்த்து அவ்வாறே பின்பற்றப்படுவது நிலவுடைமைச் சிந்தனை மரபில் இருந்து பெறப்பட்ட ஒரு நடைமுறையாகும். நடை, உடை, பாவனை, பேசும் தொனி, பார்க்கும் பார்வை, சடங்குகள், கிரிகைகள் யாவும் மேலிருந்தே கீழ் இறக்கம் பெறுகின்றன. அவற்றை நமது பண்பாடு என்றவாறு பரப்பப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியில் சிறு அளவு பொருளாதார வசதி பெறுவோர் தமக்கான மேநிலையாக்கமாகவும் கொள்கின்றனர். அதாவது பார்த்தொழுகுதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றைப் பரப்ப மதமும் சினிமாவும் தொலைக்காட்சி ஊடகங்களும் முன் நிற்கின்றன.

எனவே தமிழ்த் தேசிய இனம் பேரினவாத முதலாளித்துவ இன ஒடுக்குமுறையால் மட்டுமன்றி தமக்குள் தேக்கி வைத்திருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகால நிலவுடைமை வழி வந்த பழைய சுமைகளாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றது. அதில் பெண் ஒடுக்குமுறையின் ஒரு அம்சமாகக் காணப்படுவது சீதனமாகும். இச் சீதன முறையை ஒழிப்பதற்குரிய சமூக விழிப்புணர்வை மாற்றுக் கருத்துப் பிரசாரத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும். சீதனம் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை என்பது நடைமுறையாக்கம் பெறும் வகையில் பரந்து பட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். மேட்டுக்குடி உயர்வர்க்கக் குடும்பங்களில் சீதனம் ஒரு சமூக அந்தஸ்தாகவும் தனிச் சொத்துடமை பேணுதலாகவும் சொத்து விரிவாக்கமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஒருவகையான உடைக்க முடியாத விலங்காக இருந்து வருகின்றது. இதனை உடைக்கப் பெண்கள் மட்டுமன்றி சமூக அக்கறை மிக்க ஆண்களும் மாற்றுக் கருத்துக்களை அறிவியல் பூர்வமாக முன்வைக்க வேண்டும்.

நன்றி - புதியபூமி (மார்ச், 2011)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்