/* up Facebook

Apr 21, 2011

நான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா? ஒரு தாய் கேட்கிறார்


தனது கணவரும் உறவினர்களும் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளது தொடர்பாக உள்ளூர் சர்வதேச ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு ஒரு தமிழ் அன்னை எழுதும் கண்ணீர் மடலிலேயே மேலுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மடலின் முழு விபரம் வருமாறு…

நா.அமிர்தமலர் பெர்நாண்டோ
இல : A48/2
அளுத்மாவத்தை வீதி
கொழும்பு – 11.04.2011

சர்வதேச உள்ளூர் ஊடகம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் ஓர் வேண்டுகோல்..

நாகேஸ்வரன் அமிர்தமலர் பெர்னாண்டோ ஆகிய நான் இன்று விதவையா? ஆல்லது சுமங்கலியா? ஏனெனில் இச்சமூகம் என்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் என்னை நானே கேட்கும் கேள்வியிது. நான் இந்நிலைக்கு உள்ளானதற்கு யார் பொறுப்பு? விடைகாண யாரிடம் போய் முறையிடுவேன். இதுவரை என் முயற்சிகள் யாவும் கானல் நீராய் போனதே மிச்சம்.

26.03.2008 இல் என் வாழ்வில் பேரிடி வீழ்ந்த நாள். வழமைபோல் என் கணவர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. இவர் கடத்தப்பட்டாரா? கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதாவது தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா? இதுவரை தெரியவில்லை.

என் கணவரை தேடும் முயற்சியில் என்னால் முடிந்தவரை போராடிக் களைத்துவிட்டேன் பலன் என்னவோ பூச்சியம்தான் இருந்தும் என் முயற்சியைக் கைவிடாமல் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என் கணவர் மட்டுமல்ல எனது குடும்பத்தில் ஏற்பட்ட பயங்கர கொடுமைகளைப் பட்டியலிடுகின்றேன். இதைப் படித்த பின்னாவது இந்த மனித உரிமை அமைப்புகளின் மனச்சாட்சி கண் திறக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.

என் கணவர் காணாமல் போன 26.03.2008 அன்று விடயம் அறிந்ததும் உடனடியாக மோதர பொலிசில் முறையிடச் சென்றேன். ஆனால் அங்கு என் வாக்குமூலம்பெற முடியாதென்று மறுத்துவிட்டார்கள். அதன்பின் 28.03.2008 இல் மீண்டும் மோதர பொலிஸ் நிலையம் சென்று என்முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். முறைப்பாட்டு இல : (ஊ.ஐ.டீ.னு 1997ஃ592) அதன்பின் 5 நாட்கள் கடந்தும் என் கணவர் கடைக்காததனால் மீண்டும் 2008.04.03 இல் மனித உரிமை அமைப்பிற்கு சென்று முறையிட்டேன் அங்கு வழங்கிய முறைப்பாட்டு இல 18421081 ஆகும். அதன்பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் முறையிட்டேன் அவர்கள் வழங்கிய முறைப்பாட்டு இல : 427344 ஆகும்.

என் வேதனைகளை வார்த்தைகளால் வடிக்க முடியாது இதுநாள் வரை நான் படும் துயரத்திற்கு அளவே இல்லை. இத்துடன் என்துயர் நின்றுவிடவில்லை விதியோ சதியோ என்னையும் என் குடும்பத்தையும் விரட்டிக்கொண்டே இருந்தது. 4 மாதங்கள் கடந்தும் என் கணவனின் நிலை தெரியாமல் நான் கலங்கி நின்றபோது 10.08.2008 இல் மேலும் ஓர் பேரிடி என் குடும்பத்தின்மீது விழுந்தது.

எனது உடன் பிறந்த சகோதரரான சிப்புலோன்சோ ஜோச் பெர்னாண்டோ என்ற 48 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையை கந்தானையில் வைத்து இனம் தெரியாத இலக்கத்தகடு அற்ற வாகனத்தில் (பௌ;ளை வான்) வந்தவர்களால் கடத்தப்பட்ட செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததுபோல் எங்கள் மனத்தில் காயத்தை ஏற்படத்தியது. ஏற்கவே என் கணவரைத் தேடும் பணியில் மனித உரிமை ஆணைக்குழுஇ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்இ காணாமல் போனோரைக் கண்டறியும் குழு ஆகிய இடங்களில் நாங்கள் முறையிட்டதன் விளைவாக இனந்தெரியாதவர்களினால் அனாமதேய தொலைபேசி மிரட்டல்களுக்கு உட்பட்டதனால் என் சகோதரரை தேடும் பணியை சுயமாகவேதான் நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் கடத்தப்பட்ட என் சகோதரரின் மனையியான கமகே தீபிகா நில்மணி என்பவரும்தன் தன் கணவர் கடத்தப்பட்ட அதே தினத்தில் இனம் தெரியாத வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்டு பல மணி நேரத்தின்பின் விடுவிக்கப்பட்டிருந்தார். இச்சூழ்நிலை காரணமாக என் சகோதரர் ஜோச் பெர்னாண்டோ கடத்ப்பட்டு 50 நாட்களின் பின்புதான் இது விடயமாக கந்தானைப் பொலிசில் முறையிட்டோம் அவர்கள் வழங்கிய முறைப்பாட்டு இல-ஊடீடீ 1106565 ஆகும் அத்துடன் கணவர் கடத்தப்பட்டது சம்பந்தமாக வேறு எங்குமே முறையிடக்கூடாது மீறினால் உன் குழந்தைகள் மூன்றுடன் நீயும் காணாமல் போவீர்கள் எனவும் என் சகோதரியின் மனைவி தீபிகா நில்மணியிடம் அச்சுறுத்தினார்கள்.

இது தவிர இரண்டு பிள்ளைகளின் தந்தையான என் இளைய சகோதரரான அன்ரனி டொனிசன் பெர்னாண்டோ என்பவரை கடந்த 04.03.2008 இல் பொலிசார் கைதுசெய்தனர் ஆனால் இன்றுவரை இவர் விடுதலை செய்யப்படவில்லை அத்துடன் இவரின் வீட்டுக்கு இரவு நேரங்களில் செல்லும் இனம் தெரியாத குழுவினரால் என் தம்பியின் மனைவி விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றார். அத்துடன் அனாமதேச தொலைபேசி அழைப்பு மூலமும் என் தம்பியின் மனைவி கிறிஸ்தோபர் ஜேந்தினி பெர்னாண்டோ அச்சுறுத்தலுக்குள்ளாகின்றார் இவ்வாறான அச்சுறுத்தல் அடிக்கடி ஏற்படுவதனால் ஜேந்தினி பெர்னாண்டோ அடிக்கடி வாழ்விடத்தை மாற்றி மாற்றி இருப்பதனால் இவரின் குழந்தைகளின் கல்வி சீரழிக்கப்படுவதை யார் அறிவாரோ?

இப்படி நாள் பூராவும் கணவரைத் தேடிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற அமிர்தமலர் தீபிகா நில்மணி போன்றவர்களின் தேடல்களுக்கு எப்போது விடை கிடைக்கும்? இவர்களின் தேடல் பணி எதுவரை நீடிக்கும் இதற்கான பதிலை யார் கொடுப்பார்கள்.

மேலும் பல வருடங்களாய் சிறையில் வாடும் என் தம்பிக்கு எப்போது விடுதலை கிடைக்கும். இப்படியான தொடர் கேளிவிகளுக்கு விடைகாண முடியாமல் அல்லும் பகலும் அனலிடை மெழுகாய் உருகுவதை சம்பந்தப்பட்டவர்களோ சட்டத்தின் காவலர்களோ அறியமாட்டார்கள். எனபது என்உறுதி ஏனெனில் என்னைப்போன்ற எத்தனையோ பெண்கள் விதவையா சுமங்கலியா என்ற நிலையில் இருப்பதை கடந்த சில வருடங்களுக்கு முன் ஐநாவின் மனித உரிமைகளுக்கான சிறப்பு பிரதிநிதி திருமதி லூயிஸ் அம்மையாரிடம் முறையிட வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து தெரிந்துகொண்டேன்.

ஒரு கூட்டத்தில் கூட்டத்தினரின் அழுகுரலையும் சிறுபிள்ளைகளின் கையில் இருந்த அவர்களின் தந்தையின் புகைப்படங்களையும் கண்டுகொண்ட லூயிஸ் அம்மையார் கண்ணீர் விட்டதையும் மறுநாள் பத்திரிகையில் பார்த்த பின்பும் உள்ளூர் பெண்கள் அமைப்பும் சிறுவர் உரிமை பேசும் அமைப்புகளும் பேசா மடந்தையாய் இருப்பதை பார்க்கும்போது நம்தேசமதில் மனிதம் மரணித்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றன.

பேண்கள் இந்நாட்டின் கண்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டால் மட்டும் போதுமா? அது நடைமுறை வாழ்க்கையில் காணும் போதே உண்மையான சமுதாயம் மலரும். என் பார்வையில் இதுவரை நியமிக்கப்பட்ட எந்த ஆணைக்குழுவின் இறுதி முடிவில் குற்றவாளி தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. (கிரிசாந்தி குமாரசாமி படுகொலை தவிர) வேலியே பயிரை மேயும்போது என்னைப்போன்ற பெண்களின் தேடல் தொடர் தேடல்களாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. என் முடும்பத்தின் கடத்தல் கைது பற்றி விரிவாக இங்கு பட்டியலிடுகின்றேன்.

கடத்தப்பட்ட கைதுசெய்யப்பட்டவர்களின் விபரம்

1. என் சகோதரர் டொனிசன் பெர்னாண்டோ
முகவரி : 155 நியுணம் சதுக்கம் கொழும்ப – 13

கைதுசெய்யப்பட்ட திகதி : 04.03.2008
சிறை இல : 1510 I.C.R.C No : 126844
வழக்கு இல : 1197

குடும்ப விபரம்
(அ) கிறிஸ்தோபர் ஜெயந்தினி பெர்னாண்டோ 27 வயது (மனைவி)
(ஆ) ஆகாஸ் பெர்னாண்டோ 7 வயது (மகன்)
(இ) அஸ்வினி பெர்னாண்டோ 4 வயத (மகள்)

2. எனது கணவரின் விபரம்
கணவர் : நாச்சிமுத்து நாகேஸ்வரன் (44 வயது0
காணாமல் போன திகதி : 26.03.2008
முறைப்பாடு செய்த பொலிஸ் : மோதரை
இல : C.I.B.D 147 – 592
H.R.C NO : 18421081 I.C.R.C No : 427344
குடும்ப விபரம்
(அ) அமிர்தமலர் - 41 வயது
(ஆ) கிருஸ்டினா அனுசா – 13 வயது (பெண்)
(இ) மார்டினா மிஸ்ரிகா – 8 வயது

முகவரி யு 18ஃ2இ அளுத்மாவத்தை வீதி கொழும்பு – 15

3. எனது மூத்த சகோதரர் :
அப்பலோன்சோ ஜோர்ச் பெர்னாண்டோ 48 வயது
காணாமல் போன திகதி : 10.07.2008
முறைப்பாடு செய்த பொலிஸ் : கந்தானை
இல : ஊ.டீ.டீ 1106565
முகவரி : நியுணம் சதுக்கம் கொழும்பு

குடும்ப விபரம்
(அ) கமகே தீபிகா நில்மணி 45 வயது (மனைவி)
(ஆ) லக்மினி ஜோர்ச் பெர்னாண்டோ 23 வயது (மகள்)
(இ) மில்மி டில்ராணி 17 வயது (மகள்)
(ஈ) சியான் திலுக்கா 14 வயது (மகள்)

இங்ஙனம்
உண்மையுள்ள
அமிர்தமலர்


நன்றி - தமிழ்வின்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்