/* up Facebook

Apr 9, 2011

கொடுத்துவிடுங்கள் பெண்களுக்கான உரிமைகளை - (மொழி பெயர்ப்பு கொற்றவை)


மனோபாவம் மாறவேண்டும்.

புதிய எகிப்தில்கூட, பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள் என்று செய்திகள் சொல்கிறது...

ஃப்ரிதா கிடிஸ்

மேற்காசியாவில் நிறைய மாற்றங்கள் நேரவேண்டும். அது எப்போதும் காலம் சார்ந்ததே. அதற்கு முன்பாக மக்கள் கிளந்தெழுந்து விடுதலைக் கோரவேண்டும். கிளர்ச்சியை வழிநடத்திய தலைவர்கள்கூட, பிராந்தியத்தின் முக்கியப் பிரச்சனைகளான வழக்கமான கொடுமைகளை, பெண்களுக்கெதிரான வன்முறைகளை, துன்புறுத்தல்களை களைவதற்கான சக்தி வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை.

முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக்கின் விழ்ச்சியைத் தொடர்ந்த கொண்டாடங்களைப் பதிவு செய்துக் கொண்டிருந்த சி.பி.எஸ் செய்தியாளர் லாரா லோகன் ”நீடித்த பாலியல் தாக்குதல் மற்றும் அடித்து துன்புறுத்தல்” காரணங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு இவ்விசயம் கவனம் பெற்றது. பாதிக்கப்பட்டவர்களை விமர்சித்து குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் கூட்டமானது, பெண்கள் இது போன்ற நிகழ்வுகளைப் பதிவு செய்யும் வேலைகளுக்கு வரக்கூடாது என்றது, அதில் சிலர், லோகன் ஒழுக்கமான உடை அணிய தவறியிருப்பார் என்றது.

இந்த சம்பவம், கெய்ரோவில் நான் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சுவையான உரையாடலை நிணைவுப் படுத்தியது. என் சகபணியாளர் ஒருவர், முற்போக்கு சிந்தனையாளராக தன்னைக் காட்டிகொள்பவர் ஒருமுறை என்னிடம் ”ஒழுக்கமாக உடை அணியாத பெண்கள், வல்லுறவுக்குட்பட்டால, அதற்கு அவர்களே பொறுப்பு” என்று வலியுறுத்தினார். இப்படி ஒரு மட்டுமீறிய கூற்றை நான இந்த நூற்றாண்டில் கேட்டதில்லை. ஒருவேளை என் நண்பர், எதுவேண்டுமானாலும் வல்லுறவுக்கான சாக்குப்போக்காக இருக்கலாம் என்பதை கேட்டதில்லை போலும். ஒருவழியாக கடைசியில் இது குறித்தான விழிப்புணர்வு பிரசாரங்களே மக்களின் மனோபாவங்களை மாற்றும் என்று ஒப்புக்கொண்டார், குறைந்த பட்சம் ஒரு பகுதி மக்களையாவது மாற்றும்.

தற்போதைக்கு, சீர்திருத்தவாதிகள் பெண்களின் உரிமைகளை முதன்மைப் படுத்தி எவ்வித உரிமைக்கோரலையும் முன்வைக்கவில்லை, ஏனென்றால் ஆட்சிமுறையில் மட்டும் குறைபாடு இல்லை, மக்களின் மனோபாவத்தில் கொடிய தொற்றுநோய் பரவிக்கிடக்கிறது. ஆனால் முன்னேற்றத்தை விரும்பும் தலைவர்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பினால், அவர்கள் பெண்களின் உரிமைகளை தங்கள் செயல்திட்டத்தின் முதன்மை வரைவாக வைக்கவேண்டும். பெண்களின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆர்வத்துடன் பிராந்தியம் நெடுக சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் உடை என்பது பிரச்சனைக்களுக்கான காரணமாக இருப்பதில்லை. துன்புறுத்தப்பட்ட பேரளவிலான பெண்கள் துன்புறுத்துல்களின்போது இஸ்லாமிய தலைச்சால்வைகளை (head scarves) அணிந்திருந்தவர்களே என்று எகிப்தில் நடந்த ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் பாலியல் துன்புறுத்தல்கள் அவற்றில் சொற்ப அளவானதே.

தற்போதைய புதிய எகிப்தில் கூட, பெண்கள் கைது செய்யப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் அறிக்கைகள் வருகின்றன. இவர்கள் படைவீரர்களை முன்னிட்டு “கன்னித்தன்மை பரிசோதனைகளுக்கு” உட்படுத்தப்படுகிறார்கள். பிராந்தியம் முழுக்க பாலியல் குற்றங்களுக்கான கௌரவக் கொலைகள் அபரிதமாக நடைபெறுகிறது. பாலுறுப்புக்களை அங்கவீனம் செய்தல் தொடர்கிறது மேலும் பெண்களுக்கெதிரான பல்வேறு அளவிலான ஏற்றத்தாழ்வுகள் அரபு நாடுகளில் தினந்தோறும் செயல்படுகிறது.

ஒவ்வொரு சூழலிலும் பெண்கள் ‘சிறப்பு’ கவனிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள். நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஒரு குழுவாக லிபியாவில் பணையமாக பிடித்துவைக்கப்பட்டபோது, பிடித்து வைத்தக் குழுவால், பெண் புகைப்படக் கலைஞர் பலமுறை கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டார். கடுமையான பாதுகாப்புகளைத் தாண்டி, அவரது பர்தாவை இழுத்து பாதுகாவலர்கள் தள்ளிய நிலையிலும் கூட இமான் – அல் – ஒபெய்தி எனும் அந்த லிபியப் பெண்மணி, தன்னை 15 ஆண்கள் வன்புணர்ச்சி செய்ததாக அந்நியச் செய்தியளர்களிடம், சொல்லத்துணிந்தார். அவரது நிலைமை என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இன்றும் கூட சவுதி அரேபியால், வரவிருக்கும் முனிசிபல் தேர்தலில் பெண்களுக்கு வோட்டுரிமையில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் விந்தைக்குரியதல்ல. இன்றைக்கும் பெண்கள் ஆண்களின் அனுமதியில்லாமல் வாகனம் ஓட்டவோ, வேலை செய்யவோ, பயணிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விதிகளை, மற்ற நாடுகளுக்கும் பரிந்துரை செய்யலாம் என்ற பேச்சே மற்ற நாடுகளில் புரட்சியைத் தூண்டுவதாக இருக்கும்.

இந்த பாலைவன அரசாட்சியில், அஞ்சாநெஞ்சுடையப் பெண்கள் அண்டை நாட்டுப் பெண்களின் புரட்சி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு தற்போது சவுதி பெண்கள் புரட்சி என்ற இயக்கத்தை துவக்கியுள்ளனர். அதற்கு மற்ற நாடுகளின் ஆதரவையும் கோறுகின்றனர்.

மேற்காசியா மற்றும் குறிப்பாக எகிப்து இதர இசுலாமிய நாடுகளுக்கு இசுலாமிய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து வழிகாட்டியாக செயல்படுகிறது. இங்கு தவறான கையாளுதல்கள் திகிலூட்டக்கூடிய, சினமூட்டக்கூடிய ஆழங்களுக்கு இட்டுச் செல்கிறது.

சமீபத்தில், பங்களாதேசத்தில், 14 வயது பெண்ணான ஹெனா அடித்து துன்புறுத்தப்பட்டு, வன்புணர்ச்சி செய்யப்பட்டாள். இதன் முடிவில், கிராம மதகுருவால் (imam) அவள் விபச்சார குற்றிவாளியாக முத்திரை குத்தப்பட்டு, அதன்படி வரம்பு மீரிய செயலுக்காக அவளுக்கு 100 கசையடிகள் ஃபத்வா (சமய விதி) அறிவிக்கப்பட்டது.

ஹெனா வலுவிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக, 70 கசையடிகள் வரை தாக்குப் பிடித்தாள். காயங்களால் உயிரிழந்தாள். அவளுடைய பிரேதப்பரிசோதனை, நம்பமுடியாத வகையில் அதை தற்கொலை என்று அறிவித்தது.

பெண்களின் மீதான மனோபாவம் சமூக மற்றும் அரசியல் தேக்கத்தினால் நச்சுபட்டுவிட்டது, அதை இப்போது துறக்கும் அவசியம் வந்துவிட்டது. தற்போதைய சூழலில், பெண்கள் உரிமைகள் குறித்தான விளக்க ஒளியானது, இசுலாமிய நாடுகள் அணைத்திலும் சக்திவாய்ந்த தாக்கத்தைப் பெற உதவும்.

எகிப்து மற்றும் துனிசிய அரசை கவிழ்க்கும் புரட்சிகளில் பெண்களும் பங்குவகித்துள்ளனர். நிறைய புரட்சிகர-ஆண்-தோழர்கள், இந்நிலமைகளின் அவசர கவன ஈர்ப்பு குறித்து பகிர்கின்றனர். ஜனநாயகத்திற்கான உரிமைக் குரல்கள் எழுப்படுவதோடு, பெண்கள் சுதந்திரத்திற்கான சீர்திருத்தங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜனநாயகவாதிகள், மிதவாத இசுலாமியர்களின் துணையோடு செயல்பட்டால் பல நூறு லட்சம் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, பெண்களின் உரிமைகளை முழுவதுமாக வலியுறுத்தி தங்கள் நாட்டை முன்னெடுத்துச் செல்லும் அத்தருணம் வெகு தூரத்தில் இல்லை.

© McClatchy-Tribune
நன்றி – இந்தியன் எக்ஸ்ப்ரஸ், April 6,2001
- பெண்ணியத்திற்காக மொழி பெயர்ப்பு கொற்றவை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்