/* up Facebook

Apr 2, 2011

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?' -லீனா மணிமேகலை (பாகம் 2)10. உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று உங்கள் ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி வந்துள்ளீர்கள்அது குறித்தான அனுபவங்களைக் கூற இயலுமா?

ஐரோப்பிய ஒன்றிய ஃபெலோஷிப்பில் இந்தோ ஜெர்மன் கலாசாரப் பகிர்வின்பால் ஆவணப்படப் பயிற்சிப் பட்டறையில் கார்டிஃப்பின் தாம்சன் மீடியா பவுண்டேஷனிலும், திரைப்படங்களின் மூலம் சமூக சிக்கல்களை அணுகுவது பற்றிய ஃபின்லேண்டில் உள்ள டாம்பரே பல்கலைகழகத்திலும், புதுதில்லி இன்ஸ்டிடூயூட்டின் தயாரிப்பு மேற்பார்வையில் பங்கேற்று கனெக்டிங் லைன்ஸ் என்ற மாணவ்ர் அரசியலைக் குறித்த  ஆவணப்படத்தை என் ஜெர்மானிய இயக்குனர் தோழி மிக்கேலாவுடன் எடுத்தது என்னை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த ஃபெலோஷிப்பில் ஐரோப்பா வந்திருந்த தருணத்தில் தான் லண்டனில்,ஃபிரான்ஸில், ஜெர்மனியில், சுவிஸ்ஸில் ஈழத்து நண்பர்களின் அழைப்பில் என் ஆரம்ப கால ஆவணப் படங்களைத் திரையிட்டேன். ஒற்றையிலையென கவிதை நூலைப் பற்றிய விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

சிகாகோ சர்வதேச பெண் இயக்குநர்கள் திரைப்பட விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க தமிழ்ச் சங்க தோழமைகள் பல்வேறு திரையிடல்களையும், விவாதங்களையும் , சந்திப்புகளையும் ஒழுங்குபடுத்தினார்கள். சங்கரபாண்டி, விஸ்வநாதன் போன்ற சிறந்த தோழர்களையும், பல்வேறு பல்கலைகழக இந்திய அமெரிக்க நண்பர்களையும், செயல்பாட்டாளரகளையும், ஃபிரண்ட்ஸ் ஆஃப் சவுத் ஆசியா தோழர்களையும் அமெரிக்கப் பயணம் பரிசளித்தது.

சர்வதேச பெண் ஊடகவியலாளர்களின் அமைப்பில் செயலாற்றியதால் அமெரிக்காவிற்கு சர்வதேச மாநாட்டு வேலைகளுக்கு சென்ற தருணங்களில் மீண்டும் தமிழ்ச்சங்க நண்பர்கள மூலம் என்னுடைய அப்போதைய புதிய படங்களின் திரையிடல்களும், சந்திப்புகளும் நடந்தன. அந்த சமயம் கனடாவிலும் ஈழத் தோழமைகள் சேரன், சுமதி ரூபன் உதவியால் படங்களைத் திரையிடும் வாய்ப்பு கிடைத்தது.மலேசியாவிற்கு ஆசியத் திரைப்பட விழாவிற்கு நடுவராக வந்த அனுபவமும் வாய்த்தது. மலேசிய தமிழ் நண்பர்களின் முயற்சியில் மலேசியத் தமிழ்ச் சங்கத்திலும் , சிங்கை தமிழ் நண்பர்களின் அன்பின் பேரில் சிங்கப்பூர் நூலகத்திலும் ஆவணப்படங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பும் பெற்றேன்.

அகில உலக சோஷலிஸ்ட் இளைஞர்கள் மாநாட்டிற்காக வெனிசுவலா சென்றது மிக அரிய அனுபவம். மிலிட்டரி மேன்ஷனில் தங்கியதும், பொருட்களைத் திருடு கொடுத்ததும், வேளைக்கு ஒரு பிரட்டும், கால் கோழியும், அரை வாழைப்பழமும் ரேஷனில் சாப்பிட்டதும், லத்தீன் அமரிக்கா பற்றிய என் படிமங்களை மாற்றிப் போட்ட பயணமது. சேவெசின் 11 மணி நேர உரையையும் ஒரு எழுத்து ஸ்பானிஷ் கூட தெரியாமல், புல் தரையில் அமர்ந்து கேட்டது பசுமரத்தாணி போல நினைவிலாடுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஊடகச் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் வாசித்ததும், ஆவணப்படங்களை திரையிட்டதும், பார்த்ததும், இன்னும் மாநாட்டின் இறுதி தீர்மானங்களின் போது இடதுசாரி தோழர்களோடு ஈழம் குறித்த பலத்த உரையாடல்களை மேற்கொண்டதும், இலங்கை ஜே.வி.பி,மற்றும் இந்திய மார்க்ஸிஸ்டுகளோடு கடுமையாக வேறுபட்டு சர்வதேச அரங்கில் ஈழம் குறித்த சரியான சித்திரத்தை வழங்கப் போராடியதுமாய் மிகத்துடிப்பான நாட்கள் அவை.

தேவதைகள் என் ஆவணப்பட முயற்சியில், சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநராக என்னை நிலைநிறுத்தியது. பெர்லின் திரைப்பட விழா, கென்யாவின் சர்வதேச பெண் திரைப்பட விழா, முனிச் சர்வதேச திரைப்பட விழாவில் ஹாரிசான் விருதுக்காக போட்டியிட்டது, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சங்கு விருது வாங்கியது, ரோம் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது, இன்னும் பெல்போர்ன், பெல்கிரேட், சவுத் ஆப்பிரிக்கா என்று சர்வதேசத்தில் பரந்துபட்டு என்னை திரைப்படைப்பாளியாய் கொண்டு சென்றது தேவதைகள் தான்.

காமன்வெல்த் ஃபெலொஷிப்பில் லண்டன் வந்திருந்தபோது தான் ஷோபா சக்தியோடு நட்பு வலுத்தது. ஃபிரான்ஸிலும், இந்தியாவிலும் சம்பிரதாயமாக சந்தித்திருந்தாலும், லண்டன் சந்திப்பு இடைவெளிகளை அன்பால், உரையாடலால், புரிதலால் நிரப்பி, சேர்ந்து பணி செய்யும் இடத்திற்கு நகர்த்தியது.

11. உங்கள் குறும்படங்கள் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர காரணியாக இருந்துள்ளதா?

ஒரு திரைப்படத்தால் சமூகத்தில் மாற்றம் வந்துவிடும் என்பது அதீத நம்பிக்கை. ஆனால் உறுதியாக ஒரு வலுவான உரையாடலை நிகழ்த்த முடியும். இடையீட்டைக் கோர முடியும். ஒரு துண்டு வீடியோ, மக்களிடம் தீயாய் பற்றி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மாத்தம்மா, பறை, பலிபீடம் போன்ற என் முயற்சிகள் அத்தகையவையே! அரசாங்கத்தின் இடையீட்டைக் கோரிப் பெற்றதில், இப்படங்கள் வெற்றி பெற்றன.

ஆரம்ப கட்டங்களில் அரிய திரைப்படைப்புகளை தந்துவிட வேண்டும் என்ற உந்துதலெல்லாம் எனக்கில்லை. எனக்கு தொழில்நுட்பம் கைவருகிறது, என் மக்கள பிரச்சினையை ஏதாவதொரு வகையில் வெளிக் கொண்டு வர வேண்டும், சரி, படமெடுப்போம் என்ற வகையிலேயே நான் இயங்கத் தொடங்கினேன். ஒரு மீடியா ஆக்டிவிஸ்டாகத் தான் என்னை வரித்துக் கொண்டேன்.கிராமங்கள தோறும் தெருமுனைகளில், பள்ளிக்கூடங்களில், கல்யாண மகால்களில், தேரடியில், நூலகங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், மாட்டுக் கொட்டில்களில் கூட படங்களைத் திரையிட்டிருக்கிறேன். நிழல் திரைப்பட இயக்கம், அமுதனின் மறுபக்கம் திரைப்பட இயக்கம், இடதுசாரிகளின் இளைஞர்-பெண்கள்-பண்பாட்டு இயக்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்,ஜி,ஓக்கள், பல்கலைகழகங்கள என்று என் படங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்வதற்குப் பின் ஒரு பெரிய படை இருக்கின்றது. ஒவ்வொரு திரையாக்கமும், ஒவ்வொரு திரையிடலும் எனக்கு சமூகம் பற்றிய புதிய பாடங்களை கற்றுத் தந்தன.
என்.ஜி.ஓக்களோடு இணைந்து வேலை செய்வதை என் மீதான் விமர்சனமாக வைக்கிறார்கள். என்னுடைய ஒன்பது ப்டங்களில் என்.ஜி.ஓக்களின் நேரடி தயாரிப்பில் இரண்டே படங்களைத் தான் செய்திருக்கிறேன். ஒரு சில படங்களுக்கு ம்க்களை அணுகி வேலை செய்வதற்கான ஊட்கமாக அவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். அதற்கான கிரடிட்டை படத்தில் தந்திருப்பேன். அப்படி ஒட்டுமொத்தமாக என்.ஜி.ஓக்களை பொதுமைப்படுத்திப் பார்த்து, அவர்களைத் தவிர்ப்பது தேவையற்றதும் கூட என்றே நான் நம்புகிறேன். அவ்ர்கள் மூலமாக இன்னொரு நூறு மக்களுக்கு நான் என் படங்களைக் காட்ட முடியுமென்றால் எனக்கு ஒப்புக் கொள்வதில் எந்த சிரமமுமில்லை. ரூத் மனோரமா, பெர்னார்ட் பாத்திமா, யேசு மரியான், கிருஸ்துராஜ், நீலவள்ளி போன்ற மிகச் சிறந்த நண்பர்களை என்.ஜீ.ஒ தொடர்பினூடே நான் அடைந்தேன்.

என் படங்கள் சில கேள்விகளை, எளிய நம்பிக்கைகளை, சுய விமர்சனங்களை, இடையீடுகளை, உறுதிமொழிகளை ஒரு கூட்டு மனசாட்சியின் நடவடிக்கையாக ஓரளவு நிகழ்த்தியுள்ளன என்று நான் நிச்சயமாக கூற முடியும்

12. பெரியாரியம் பற்றி பேசினீர்கள்திருமணம் பற்றியும் குடும்ப அமைப்பு பற்றியும் உங்க பார்வை என்ன?

திருமணம், குடும்ப அமைப்பு நிச்சயம் பெண்ணை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளுபவை தான். இன்று போரினால் கொல்லப்படும் மக்களை விட, வறுமையால் இறக்கும் மக்களைவிட, குடும்ப வன்முறையால் சாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிபரங்கள சொல்கின்றன.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் பெருவாரியாக படிக்கிறார்கள், வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெண்களுக்கு இரட்டைச் சுமை தான் எஞ்சியுள்ளது. குடும்பங்களில் ஆண் பெண் வேலைப்பகிர்வு  என்பது எல்லாவகையிலும் சனநாயகப்படுத்தப் படவில்லையென்றால், பெண்கள் அழுத்தத்தில் தற்கொலை செய்துக் கொளவதையும், மனப்பிறழ்வடைவதையும், வெளியேறுவதையும் தடுக்க முடியாது. குடும்பங்களில் பெண்கள் செய்யும் சமையல், துப்பரவு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஊதிய மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் புரியும், குடும்பம் எத்தகைய சுரண்டல் அமைப்பென்று!
மாடுபிடிக்கும் வேலைபோல சொந்த சாதியில் பெண்களை விலைபேசி விற்கும் இழிவு இந்த நூற்றாண்டிலும் நம் சமூகத்தில் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. கேவலம் பிடித்த மேட்ரிமோனியல் அறிவிப்புகள் நம் சமூகத்தின் அவமானச் சின்னம். பெண்ணிற்கு சுய தேர்வை மறுக்கும் கெளரவக் கொலைகள் குடும்பம் மற்றும் சாதியின் கொடூர வன் முகங்கள்.

ஜெரால்டு என்ற என் தோழனை நான் கைப்பற்றியபோது, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்கள் அனுமதிக்கவில்லை. என் குடும்ப வரலாற்றிலேயே, முதன் முதலாக சாதி-மத-சடங்கு மறுப்பு திருமணத்திற்காக வெளியேறியவள் நான். ஏன் தாலியில்லை என்ற கேள்விக்கு பதில் சொன்ன காலம் கடந்து, இன்று விவாக மறுப்பு காலம் வரை வந்துவிட்டேன். வலி நிறைந்த வாழ்க்கைப் போராட்டம். நம்பும் கொள்கைகளை சொந்த வாழ்க்கையிலாவது கடைப்பிடிக்க வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற என் பிடிவாதத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம். என் அன்புக்குரியவர்களை கொடூரமாக மனக்காயப் படுத்தியிருக்கிறேன் என்று எண்ணி இரவிரவாக சில சமயங்களில் அழ நேர்ந்தாலும், வேறு வழி தெரியவில்லை. சொந்த சாதியில் சீர் செனத்தி, நில பாகங்களோடு திருமணம் செய்திருந்தால் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்துதல், பெண்ணின் சுயதேர்வு, ஆண்-பெண் வேலை பகிர்வு, வரதட்சணை ஒழிப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை, சாதி மறுப்பு திருமணங்கள், காதல் வாழ்வில் சேர்ந்திருப்பது, குடும்பமின்மையைத் தேர்வு செய்வது, மண விலக்கிற்கான பூரண சுதந்திரம் என்று பல புள்ளிகளில் சீரமைப்பு தேவையாய் இருக்கின்றது.

வர்ஜீனியா வுல்ஃப் சொன்னது போல் Room of my own முப்பத்திரண்டு வயதில் தான் எனக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஒரு பெண் தனக்கென்று ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொள்வது, வாழ்வது என்பதை இன்னும் இந்த குடும்ப அமைப்பு அடாத செயலாக, ஒழுங்கு மீறலாக, நடத்தை கெட்ட தனமாகத் தான் பார்க்கிறது. எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்ற இந்த சமூகத்தின் கேள்விக்கு என் காதுகள் செவிடாகக் கடவதாக!

13.தமிழகத்தின் தற்போதைய இலக்கிய சூழலில் சிற்றிதழ்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்பவை உண்மையில் இலக்கியம் வளக்க செயல்படுகின்றன என நம்புகிறீர்களா?

புது எழுத்து, மணல் வீடு, கல்குதிரை, புதுவிசை, உன்னதம், நிழல், தக்கை, கருக்கல், தாமரை, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், சஞ்சாரம், செம்மலர், பவளக்கொடி, தலித் முரசு, அணி, அகநாழிகை என்று இன்றும் சிறுபத்திரிகைகள் மாத இதழ்களாக, இருமாத இதழ்களாக, காலாண்டிதழ்களாக, தம்மளவில் சாத்தியமான கால அலகுகளில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இடையறாமலும் வெளிவந்தபடி இயக்கம் பெற்றிருக்கின்றன. காலச்சுவடு, உயிர்மை போன்ற மடாலயங்களில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளாமல், அவர்களின் நிலைய வித்துவான்களின் வரிசாக்கிரமங்களில் இடம்பெறாத என்னைப் போன்ற தவிட்டுக் குழந்தைகளுக்கு சிறுபத்திரிகைகள் மட்டுமே நம்பிக்கைவெளி. ஒவ்வொரு தீவிர இலக்கிய வாசகரும் இவற்றைத் தேடிப் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றளவும் கலாசாரப் பெரும்போக்குகளில் உடைவுகளை ஏற்படுத்திய படைப்புகள் சிறுபத்திரிகைகளிலேயே வெளிவந்துள்ளன.

போர்ஹேமார்க்வெஸ்வில்லியம் பர்ரோஸ்லோசாநபகோவ், போன்றோரது நேர்காணல்களையும் கதைகளையும் மொழிபெயர்த்து மிகுந்த சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறது உன்னதம். ரோலன்பார்த்தின் 'ஆசிரியன் என்பவன் யார்?', மிஸல்பூக்கோவின்'ஆசிரியனின் மரணம்என மிக முக்கியமான பின் நவீனத்துவக் கட்டுரைகளை ஒரு ஆரம்ப நிலைப் படைப்பாளியாக எனக்கு வாசிக்க தந்ததும் உன்னதமே.

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளைக் கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தள்ளும் இலக்கிய விசாரங்களுக்கு மத்தியில் காத்திரமான அரசியல் விவாதங்களையும், சமூக முரண்களை அலசும் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் சமரசமின்றி முன்வைக்கின்றது புதுவிசை. புதுவிசையின் ஒவ்வொரு இதழையும் அழுக்கேறி, பக்கங்கள் கசங்க கசங்க வாசிக்க தீவிர இலக்கிய மனம் பித்தம் கொள்ளும்.

தமிழ்க்கவிதை மீதான கனவுகளுக்கும், கவிதை பாய்ச்சலெடுக்கும் பாதைகளின் மீதான கட்டியம் கூறுதலுக்கும் புது எழுத்து சளைக்காமல் உழைக்கிறது. கடும் சவால்களைக் கடந்தும் இதழை உயிர்ப்போடும் உயிரோடும் வைத்திருக்கும் மனோன்மணி அவர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்குமான அங்கீகாரமாக சிறந்த சிறுபத்திரிக்கைக்கான தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் விருதைப் புது எழுத்து சமீபத்தில் பெற்றது.

மானாட மயிலாட ஊடக வன்முறைகளுக்கு மத்தியில் எது கலை, எதற்கு கலை, யாருக்கு கலை என்ற கேள்விகளை சதா எழுப்பிக்கொண்டு, காலம் தின்று வாழும் மண்ணின் கலைகளை,  கலைஞர்களை, அவர்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து பதிவு செய்வதோடு, அவர்களை மரியாதை செய்யும் பணியாக கலை இலக்கிய விழாக்களையும் வருடந்தோறும் நிகழ்த்தி வரும் மணல் வீடு, இலக்கிய அரசியல் குறித்து வைக்கும் விவாதங்கள்  இலக்கியப் பீடங்களை கூசச் செய்பவை.

தரமான சினிமாவையும்,  கலைப்படங்களையும்,  குறும்படங்களையும்விவரணப் படங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நிழல் மாற்று சினிமாவுக்கான ஆற்றலுள்ள களம். என்னைப் போன்ற மாற்று சினிமா முயற்சியாளர்களை அடையாளப்படுத்தியதில் நிழல் பத்திரிகை, திரைப்பட இயக்கம் இரண்டிற்கும் தவிர்க்க முடியாத பங்குண்டு., சினிமாவை கருணாநிதி குடும்ப மாஃபியாக்கள் ஆக்கிரமித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில், சுவாதீன முயற்சிகளை கற்பனையில் கூட நினைத்து பார்த்து விட முடியாத வன்சூழலில் நிழல் போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து வருவதும் கூட பண்பாட்டுச் சூழலில் மிக முக்கியமான சலனம்.

இப்படி, ஒவ்வொரு சிறு பத்திரிகையும், தனிநபர்களை மையமாகக் கொண்ட இலக்கிய அரசியலின் வன்முறைகளுக்கு மத்தியில் தன்னிச்சையாகவும், பிரஞ்யாபூர்வமாகவும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. கார்பரேட் குருக்களாகவும், அதிகாரத்தின் கைக்கூலிகளாகவும், வணிக சினிமாவின் பஞ்ச் டயலாக் வசனக் கர்த்தாக்களாகவும், இணைய ஃபாஸ்ட் புட் பிளாக் எழுத்தாள காளான் பண்ணைக்காரர்களாகவும் இருக்கும் எழுத்தாள பீடங்களின் மேல் பூச்சிக் கொல்லி மருந்தை அடிக்கும் புகை மண்டிய வண்டிகளின் ஓட்டுநர்கள் நமது சிறுபத்திரிகை காரர்கள். அவ்வண்டிகளின் பின்னே தொற்றிக் கொண்டு ஆராவாரித்துக் கொண்டே செல்லும் சாலை சிறுவர்களாய் என்னைப் போன்ற தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள்.

என்னளவில் திரைப்பட ஆர்வலர்களாக நானும் ஜெரால்டும் திரை பத்திரிகை என்ற சிறு முயற்சியை செய்து, ஏழு இதழ்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி மற்றும் விநியோகம்-சந்தை குறித்த போதாமைகளால் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டோம்.

ஒரு இலக்கிய வாசகியாக, லும்பினி தோழமையோடு இணைந்து நிறப்பிரிகையின் பதின்மூன்று இதழ்களையும் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்த முயற்சி மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம். நிறப்பிரிகை தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு அழியா சுனை.


நன்றி வல்லினம் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்