/* up Facebook

Apr 30, 2011

பெண் விடுதலை குறித்து - அலெக்சாண்டிரா கொலென்ரெய்பெண் விடுதலை குறித்து லெனின் அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சர் அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சர் அலெக்சாண்டிரா கொலென்ரெய்    
83 ஆண்டுகளுக்கு முன் கூறிய கருத்துக்கள்!  
  
அலெக்சாண்டிரா கொலென்ரெய் ((lexandera Kollontai - 1872 – 1952) புரட்சிக்கு முந்தைய ரஸ்யாவில் ஒரு இராணுவ ஜெனரலின் மகளாகப் பிறந்தார். அவர் தனது இளமைக்காலத்தில,சூரிச் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்று நாடு திரும்பிய பின், ரஸ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்தார். பின்னர் லெனின் தலைமையிலான போல்ஸ்விக் கட்சியில் இணைந்து, மகத்தான சோவியத் புரட்சியில் பங்கேற்றார். 

1917ல் புரட்சி வெற்றி பெற்ற பின்னர், லெனின் தலைமையில் அமைக்கப்பட்ட முதலாவது சோவியத் அமைச்சரவையில், சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரே உலகில் முக்கியமான ஒரு நாட்டில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அமைச்சராவார். 

அவர் அமைச்சராக இருந்த காலத்தில், சோவியத் பெண்கள் அதுவரை அனுபவித்திராதது மட்டுமின்றி, கண்டு கேட்டுமிராத எட்டுமணி நேர வேலை, சம சம்பளம், பிரசவ விடுமுறை, சுகாதார வசதி போன்ற பல உரிமைகளை ஏற்படுத்தினார்.  அவர் அமைச்சராக மட்டுமின்றி ராஜதந்திரத்துறையிலும் பிரகாசித்து, நோர்வே, மெக்சிக்கோ, சுவீடன் ஆகிய நாடுகளில் சோவியத் தூதராகவும் பணியாற்றி, உலகின் முதலாவது பெண் தூதுவர் என்ற புகழையும் பெற்றார். 

சுமார் 15 வரையிலான பெறுமதிமிக்க நூல்களை எழுதியுள்ள அவர்,  தனது பிரசித்தி பெற்ற ‘சிவப்பு காதல்’ என்ற நாவலின் ஆங்கில மொழிப் பதிப்புக்கு, மெக்சிக்கோ சிற்றியிலிருந்து 1927 மார்ச்10ம் திகதி எழுதிய முன்னுரை அதன் முக்கியத்துவம் கருதி இங்கே தரப்படுகிறது. சர்வதேச ரீ தியாகவும், தமிழ் சூழலிலும் ‘பெண்ணியம்’பற்றி பல்வேறு கோணங்களில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வரும் இன்றைய சூழலில், அலெக்சாண்டிரா கொலேன்ரெய் சுமார் 83 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய பெண்களின் நிலை பற்றியும், பெண்கள் உரிமை சம்பந்தமாக முற்போக்காளர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்தும் எழுதிய இவ்வாசகங்கள், இன்றும் உயிர்த்துடிப்புடன் இருப்பதை, இந்த முன்னுரையை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். 

-வானவில் ஆசிரியர் குழு 

அந்த முன்னுரை வருமாறு: 
இந்நாவல் அடிப்படையில் அறிவியல் குறித்த ஒரு ஆய்வோ அல்லது சோவியத் ரஸ்யாவில் உள்ள வாழ்வின் தரம் குறித்த ஒரு உரைச் சித்திரமோ அல்ல. இது போருக்கு பிந்தைய காலகட்டத்தில், உலக சமூகத்தில் நிலவிய பாலியல் குறித்த ஒரு மனவியல் ரீதியான ஆய்வு மட்டுமே. 

இந்த ஆய்வுக்கு, எனது நாட்டைச் சூழலாகவும், எனது மக்களை கதாபாத்திரமாகவும் எடுத்துக்கொண்டுள்ளேன். ஏனெனில் எனக்கு அவர்களைப் பற்றித்தான் நன்றாகத் தெரியும். அவர்களது ஆத்மார்த்த வாழ்வு மற்றும் உணர்வுகளைக் குறித்து என்னால் உயிரோட்டத்துடன் பேச முடியும்.  7 வானவில், சித்திரை 2011 இந்நாவலில் வந்துள்ள பெரும்பான்மையான பிரச்சினைகளை, வெறுமனே சோவியத் ரஸ்யாவிற்கு மட்டுமே உரியனவாகப் பார்க்க முடியாது. இது உலகளாவிய பிரச்சினை. இந்த மாதிரியான பிரச்சினைகளை ஒருவர் எந்த நாட்டில் வேண்டுமானாலும், எதிர் கொள்ளலாம். இந்த அமைதியான, மனவியல் ரீதியான உணர்வுப்பெருக்கு, தற்போதைய மாறிய பாலியல் உறவுகள் காரணமாக எழுந்துள்ளது. இதன் பரிமாணத்தை, குறிப்பாக பெண்களின் உணர்வு நிலை குறித்த மாறிய பரிமாணத்தை, தற்போதைய ஐரோப்பாவின் இளைய தலைமுறையினரிடம் தெளிவாகக் காண முடிகிறது.

நாம் யாராவது ஒரு ஆணை, அவனது காதல் விவகாரத்தை வைத்து, எடை போடுகிறோமா? பொதுவாய் அவன் தனது பாலியல் உறவில், குறிப்பிட்ட நெகிழ்வான எல்லையைத் தாண்டாத வரைக்கும், அவனது பாலியல் வாழ்க்கையை அவனது ‘தனிப்பட்ட விவகாரம்’ எனச் சொல்லி, நாம் கண்டும் காணாமலும் விட்டு விடுகிறோம். ஆணின் குணாம்சங்கள், தனது குடும்ப அறவியலை அவன் எப்படி போற்றிப் பாதுகாக்கிறான் என்பதை வைத்து எடை போடப்படுவதில்லை. மாறாய் பணிபுரிவதில், அவனுக்கு உள்ள திறமை, அவனது அறிவு, அவனது திடம், சமூகத்திற்கும் அரசுக்கும் அவனது பயன்பாடு போன்றவற்றை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை, சமூகத்திற்கும் அரசுக்கும் பெண்கள் செய்ய வேண்டிய நேரடியான கடமை என்று எதுவும் இல்லை. அவர்களது ஒட்டுமொத்த செயல்பாடும், குடும்ப எல்லைக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாகரீகம் அடைந்த நாடுகளில் கூட, குடும்ப மற்றும் பாலியல் உறவுகளில் பெண் தான் ஆற்ற வேண்டிய சிறந்த அறவியலை வெளிப்படுத்தினால் போதும் என எதிர்பார்க்கிறது. 

இன்று பெரும்பான்மையான நாடுகளில் உள்ள பெண்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களைப் போலவே உழைக்கிறார்கள், போராடுகிறார்கள். சமூகமும் அப்படிப்பட்ட பெண்களிடமிருந்து பல தேவைகளைக் கோரி நிற்கின்றது. பொதுவாகவே தற்போதைய சமூகத்தில், ஒரு நாட்டின் குடிமக்கள், குடும்ப அறவியலில் கறை படியாமல் சிறந்தவராய் விளங்குதல் என்பதைக் காட்டிலும், தங்கள் சமூகக் கடமைக்கு ஈடுகொடுத்து நின்று விளங்குதல் என்பதுதான் முக்கியம் எனக் கருதப்பட்டு, அதற்குத்தான் அதிக மரியாதையும், முக்கியத்துவமும் தரப்படுகிறது. இன்றைய பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கை மட்டுமே செயல்பாட்டுக்கான தளம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும், அவளது சமூகக் கடமையின் காரணமாகவும், வீட்டை விட்டு வெளியே வந்து அவள் செய்யும் பணியின் காரணமாயும், அவள் தனது குடும்பப் பொறுப்புகளை ஒருங்கே நிறைவேற்றுவதில், பெரும் துயரை எதிர்கொள்கிறாள் என்பதுதான் உண்மை. ஆகவே ஒரு பெண்ணை எப்படி எடைபோடுவது என்பதில், நாம் தாத்தாக்கள் பாட்டிகள் காலத்தில் உள்ளது போல் இல்லாமல், தற்போது வேறுபாட்டுடன் இருக்கிறோம். 

ஒரு பெண் தற்போதைய முதலாளித்துவ அமைப்பு நிர்ணயித்துள்ள குடும்ப அறவியலைச் சரியாக நிறைவேற்றி, சிறந்தவள் என மதிக்கப்படுகிறாள் என வைத்துக் கொள்வோம். அதற்காக அவளுக்குச் சமூகத்தில் இருந்து உண்மையான பாராட்டுதலோ, அல்லது அரசிடம் இருந்து தகுந்த மரியாதையோ கிடைப்பது கிடையாது. உண்மையில் அனைவரும் அவளை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் அதற்கு மாறாய், வேறொரு பெண் அரசியலிலோ, கலை மற்றும் அறிவியல் போன்ற எது ஒன்றிலோ வித்தகராய் இருந்தால், தற்போதைய முதலாளித்துவ பாலியல் அறவியல்படி, அவளை ‘கணக்கில் எடுத்;துக் கொள்ள முடியாதவளாய்’ இருந்தாலும், அவளை அவ்வளவு எளிதில் உதறி விட முடியாது. சொல்லப் போனால், யாருக்கும் அந்த மாதிரி பெண்ணின் முதுகுப்புறத்தில் இருந்து முணுமுணுக்கக் கூட தைரியம் இருக்காது. 

இந்த இரண்டுவகையான பெண்களையும் எப்படி நாம் சமன்படுத்துவது? முதல் பெண் நாட்டுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ எந்த உருப்படியான பங்களிப்பைச் செய்யாவிட்டாலும், குடும்ப அறவியலை பேணிக்காப்பவள். அடுத்தவளது நடத்தை கண்டனத்திற்கு உள்ளானது என்றாலும், அவள் மிகச்சிறந்த சமூக ஊழியை. நிச்சயமாக இரண்டாவது பெண்ணே சமூக மரியாதையைப பெறுகிறாள். 

பாலியல் அறவியல் சம்பந்தமான நமது கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. அக்கருத்து எப்போதும் தேங்கிப்போய், அப்படியே கிடப்பது கிடையாது. மனித வரலாற்றில் அறவியல் சம்பந்தமான பரிணாமம் துரிதமாக முன்னேறிச் சென்ற காலம்தான் அதிகம். எப்போதாவது அபூர்வமாகத்தான், எல்லாத் துறைகளிலும் உள்ளது போல, அறவியல் சம்பந்தமான விடயங்கள் தேங்கிக் கிடந்திருக்கிறது. 8 வானவில், சித்திரை 2011 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான், துமாஸ்-பில்ஸ் என்பவர் ‘மணமுறிவு’ என்பது ஒரு வீழ்த்தப்பட்ட உயிரி என்று எழுதினார். ஆனால் அதற்குள் இன்றைய பிரான்சில், திருமணம் செய்து கொள்ளாது தாயானவளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று விவாதிக்கப்படுகிறது. பாலியல் அறவியல்கள் குறித்து தீர்மானிப்பதிலும் யோசிப்பதிலும், பழைய முதலாளித்துவ புனைவுகளின் வீச்சு, தற்பொழுது சிறிது சிறிதாகத் தளர்ந்து வருகிறது. 

அறவியல் சம்பந்தமான பழைய பிற்போக்குத்தனமான முதலாளித்துவ சிந்தனைகளை எதிர்த்துப் போராட இப்புத்தகம் உதவும். கூடவே பெண் எப்படி தனது குடும்ப அறவியலை நிறைவேற்றினாள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவள் தனது வர்க்கத்திற்காகவும், நாட்டிற்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் ஆற்றும் புத்திசாலித்தனமான பணி மற்றும் திறமை ஆகியவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு மதிக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டவும், இந்தப் புத்தகம் உதவும் என நம்புகிறேன்.

நன்றி - வானவில் சஞ்சிகை இதழ் 2011
...மேலும்

Apr 29, 2011

சீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்


தென்னாசியப் பிராந்தியம் முழுவதையும் எடுத்து நோக்கும் போது ஏனைய ஒடுக்குமுறைகள் போன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றது. அதில் ஒன்றே சீதனம் அல்லது வரதட்சனை என்பதாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக இருந்து வருகிறது. திருமண பந்தத்தில் ஈடுபடவுள்ள குறித்தபெண்ணுக்கு அவரது வீட்டில் இருந்து பெற்றோர் சகோதரர்கள் என்போர் சம்பந்தப்படப் போகும் ஆணுக்குப் பணம், தங்க நகைகள், நிலம், பாவனைப் பொருட்கள், வாகனங்கள் என்பனவற்றைத் தொகையளவில் அன்பளிப்பாக வழங்கப்படும் நடைமுறையே சீதனம் என்பதாகும்.

இலங்கையில் இச் சீதன முறையானது பரந்தளவில் பல் வேறு அளவுகளில் காணப்படுகிறது. சிங்கள மக்களிடம் குறைந்தளவிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு அளவுகளிலும் இருந்து வருகிறது. இச் சீதன முறைமையினால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோர் சகோதரர்களாகவும் காணப்படுகின்றனர். திருமண வயதை அடைந்துள்ள நிலையில் சீதனம் கொடுக்க வசதியற்ற குடும்பச் சூழலில் முதிர்கன்னியர் என்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் சமூகத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடியும். திருமண வாழ்வில் ஈடுபடவும் கணவன் குழந்தைகள் குடும்பம் என்பதனுள் தம்மை ஈடுபடுத்த இளம் பெண்கள் விரும்பிய போதும் அவ்வாறு செயற்படுவதற்குச் சீதனம் என்ற அவமானகரமான முறையானது தடையாகவே இருந்து வருகிறது. இதனால் முதிர்கன்னியர்களாகி வரும் இளம் பெண்கள் அனுபவித்து வரும் சமூக வேதனைகளும் சோதனைகளும் சொல்லில் அடங்காதவைகளாகும்.

பெண்களைப் பிள்ளைகளாகப் பெற்ற பெற்றோரும் கூடப்பிறந்த ஆண் சகோதரர்களும் படும் துன்பங்கள் வேதனை மிக்கவையாகும். இதன் காரணமாகவே பெண் பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் உறவினர்களால் வேண்டா வெறுப்புக் காட்டப்படுகிறது. “ஐந்தாறு பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது முதுமொழியாகப் பேசப்படுகிறது. இது சீதனத்தை மையமாக வைத்தே எழுந்த ஒரு கூற்று எனலாம்.

இச் சீதன முறைமை என்பது நிலவுடைமையின் கீழ் ஆணாதிக்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை சாதியம் போன்று தமிழ்ச் சூழலில் மிகவும் கெட்டியானதாக இருந்து வருகின்றது. பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் தமது இளமைக் காலத் திலிருந்தே இச்சீதனம் கொடுப்பதைத் தமது கடமை என மனதில் வைத்துக் கடும் உழைப்பிலும் சேமிப்பிலும் ஈடுபட்டு வருவது மரபாக எழுதா விதியாகப் பின்பற்றப்படுகிறது. தமது அன்றாட உணவைக் கூடக் கட்டுப்படுத்தி தமது பெண்களைக் கரை சேர்க்கவெனப் பாடுபடுகின்றனர். தத் தமது ஆண் பிள்ளைகளுக்குப் பெரும் குடும்பப் பொறுப்பு இருப்பதாகச் சிறுவயதில் இருந்தே மூளையில் பதிய வைத்து அக்கா, தங்கைக்கு சீதனம் வழங்குவது ஆண் சகோதரர்களின் தவிர்க்கவியலாத கடமையென விதிக்கப்படுகிறது. தமது பெண் சகோதரர்களுக்கு சீதனம் கொடுப்பதையே லட்சியமாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணம் தேடுவதற்காகக் கடும் உழைப்பில் ஈடுபடும் ஆண்கள் பலர் நாற்பத்தைந்து ஐம்பது வயதாகியும் திருமணம் செய்யாது இருந்து வருவதையும் பல இடங்களில் காண முடியும்.

சம காலத்தின் புலம் பெயர்ந்து வாழும் சூழலால் சீதன முறைக்கெனப் பணம் சொத்து சேகரிக்க நிர்ப்பந்திக்கும் போக்கும் அதிகரித்துக் காணப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆணும் உள்ள ஒரு இளம் குடும்பம். தந்தைக்கு அளவான வருமானம். அதுவும் போதாதது மட்டுமன்றி நாட்டுச் சூழலாலும் மத்திய கிழக்கு சென்று வந்தவர். அக்குடும்பத்தின் குழந்தைகள் வளர்ந்து பாட சாலை செல்லும் மாணவர்களாக உள்ளனர். பதினேழு வயதான தமது மூத்த ஆண் பிள்ளையின் கல்வியை நிறுத்தி ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமது நெருங்கிய உறவினர் மூலம் அங்கு அனுப்பி வைக்கப் பெற்றோர் முயற்சிக்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களது இரண்டு பெண் பிள்ளைகளை எதிர்காலத்தில் கரை சேர்ப்பதற்கு வேறு வழி இல்லை என்கி ன்றனர். அதாவது இரண்டு தமது பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டி வரும் என்பதால் தமது ஒரே மகனைக் கல்வியை நிறுத்திப் புலம் பெயர வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இது நமது சூழலில் ஒரு சோற்றுப் பதமாகவே காணப்படுகிறது.

ஒரு பெண் கல்வி கற்று அரசாங்கத் தொழில் பெற்று மாதாந்தம் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தும் கூட அப் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் லட்சங்களும் தங்கமும் நிலமும் வழங்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் நமது தமிழ்ச் சூழலில் நிலைத்து நீடித்து வருகின்றது. அவ்வாறு ஆண் வீட்டார் கேட்டும் சீதனத்தை கடன்பட்டுக் கொடுத்து தமது பெண்ணைக் கரைசேர்க்கும் பெற்றோர் அக்கடனுக்குத் தமது ஆண் மகனைப் பொறுப்பாக்குவதுடன் அதே மகனுக்குப் பெண் பார்க்கும் போது தாம் மகளுக்குக் கொடுத்த அளவையும் விடக் கூடுதலாகச் சீதனம் பெற்றுக் கொள்ளவும் முன் நிற்கின்றனர். எனவே சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு சுழல் வட்டத்தில் தொடர்கிறது. இதனால் ஏற்படும் துன்ப துயரங்கள் பாதிப்புக்கள் யாவும் ஒட்டு மொத்த சமூகத் துயரமாகவும் அவமானமாகவும் தொடருவதையிட்டுப் பழமைபேண்வாதிகள் கவலைப்படுவதில்லை. அதனை நியாயப்படுத்தவே முன்நிற்கின்றனர்.


ஏனெனில் தமிழ்த் தேசியத்தை உயர்த்தி நிற்கும் பழைமைவா திகள் சீதனம் விளைவிக்கும் சமூக அநீதியைக் கேள்விக்கு உள்ளாக்கிக் கொள்வதில்லை. அவர்கள் சீதனத்தை உயர் வர்க்க, உயர் சாதிய ‘சமூக அந்தஸ்தாகவே’ கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு யுத்தம் உச்சமாகிக் கொண்டிருந்த 2006ம் ஆண்டின் போது வட புலத்தில் ஒரு உயர் கல்வி அதிகாரி தனது மகளுக்க 35 லட்சம் ரொக் கமாகவும் 35 பவுண் தங்க நகைகளாகவும் வீடு நிலம் போன்றனவும் சீதனமாக வழங்கித் திருமண விழா நடாத்திப் பெருமை கொண்டார். இதனையிட்டு யாரும் கேள்வி எழுப்பவில்லை. பதிலுக்கு அதனை ஒரு பிரமிப்பாகவே நோக்கினர்.

அதன் பாதிப்பு ஒரு சமூகக் கேடாக வசதியற்ற ஏகப் பெரும்பான்மையான பெண்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றிச் சிந்திக்கப்படவே இல்லை. பதிலாக அதே போன்று தாமும் சீதனம் கொடுக்க வேண்டும் என்ற நப்பாசையுடன் புலம் பெயர்ந்து வாழும் தமது உறவுகள் மூலம் பணம் பெற்றுச் சீதனம் வழங்கவே முயலுகின்றனர். இதனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இச் சீதனத்திற்காகப் பனியிலும் குளிரிலும் கடுமையாகவும் அதிகரித்த நேரத்திற்கும் வேலை செய்து விரைவாகவே கடும் நோயாளிகளாகிக் கொண்டவர்களின் எண்ணிக்கை பற்றி யாரும் கணக்கில் கொள்வதில்லை.

தமிழ்த் தேசியம் கால் பதித்து நிற்கும் தமிழர் பழைமைவாதம் சீதனக் கொடுமை பற்றிக் கேள்வி எழுப்புவ தில்லை. அறிவியல் பூர்வமாகவோ அன்றி மனிதநேய மனக் சாட்சி ரீதியாகவோ அதன் சமூகத் தாக்கம் பற்றிப் பேசு வதில்லை. இதற்கு ஒரு உதாரணம் விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் பரந்த பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து ‘ஆட்சி’ செய்த போது இச் சீதனத்தைப் பற்றி உரிய அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. அதன் தீய சமூகத் தாக்கம் பற்றி அறிவியல் பூர்வமாக அணுகப்படவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திச் சீதனத்துள் அடங்கியுள்ள பெண் ஒடுக்குமுறை பற்றி எடுத்துரைக்கவில்லை. பதிலுக்குச் சீதனம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அத் தடையை மீறிச் சீதனம் கொடுக்கப்பட்டால் அதிலிருந்து குறிப்பிட்ட வீதம் தண்டப்பணமாகப் பெறுவதையே புலிகள் நடைமுறையாக்கிக் கொண்டனர். இதனால் சீதனம் மறையவில்லை. அதில் ஒரு பகுதி புலிகளால் வசூலிக்கப்பட்ட நிகழ்வே இடம்பெற்றது.

மேலும் இச் சீதன முறைமையை தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வரும் தேசவழமைச் சட்டம் வலுவாக்கி நிற்கிறது. அத்துடன் மதம், பண்பாடு, மரபு, வழமை, குடும்பக் கௌரவம் என்பனவும் சீதன முறைமையைச் செழுமைப்படுத்தி நிற்கின்றன. ஊடகங்கள் எதுவுமே இச் சமூகப் பிற்போக்குத்தனம் அல்லது பெண்கள் மீதான அநீதி பற்றிக் கேள்வி எழுப்பிக் கொள்வதில்லை. இன்றும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் திருமணப் பந்தம் தேடும் விளம்பரங்களில் சாதி பற்றித் தவறாது குறிப்பிடப் படுவதுடன் சீதனம் பேசித் தீர்க்கப்படும் அல்லது தகுந்த சீதனம் வழங்கப்படும் என்றே வாராந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் மண்ணடிமை, பெண்ணடிமை, சாதிய டிமை போன்ற கசடு கொண்ட ஒடுக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் நீடிக்கும் நிலையில் எவ்வாறு இன விடுதலை என்பதைச் சாத்தியமாக்க முடியும். இதனை எந்தத் தமிழ்த் தேசியவாதிகளாவது காதில் போடத் தயாரா? தமிழ் மொழி தமிழ் இனம் எனச் சிலிர்த்து தமது தொன்மை மேன்மை பற்றி வாய் கிழியப் பேசும் எந்தக் கனவானும் தமிழர் மத்தியிலான இவ் இழிவுகள் பற்றிப் பேசுவதில்லை.

இத்தகைய தமிழர் பழமைவாதிகளான தமிழ்த் தேசியவாதிகள் சீதனம் ஊடான தமது சமூக அந்தஸ்து பேணும் நடைமுறையால் முழு மக்களையும் பின்பற்ற வைக்கின்றனர். அவை மேலிருந்து கீழே புகுத்தப்படுகின்றன. மேலே பார்த்து அவ்வாறே பின்பற்றப்படுவது நிலவுடைமைச் சிந்தனை மரபில் இருந்து பெறப்பட்ட ஒரு நடைமுறையாகும். நடை, உடை, பாவனை, பேசும் தொனி, பார்க்கும் பார்வை, சடங்குகள், கிரிகைகள் யாவும் மேலிருந்தே கீழ் இறக்கம் பெறுகின்றன. அவற்றை நமது பண்பாடு என்றவாறு பரப்பப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியில் சிறு அளவு பொருளாதார வசதி பெறுவோர் தமக்கான மேநிலையாக்கமாகவும் கொள்கின்றனர். அதாவது பார்த்தொழுகுதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றைப் பரப்ப மதமும் சினிமாவும் தொலைக்காட்சி ஊடகங்களும் முன் நிற்கின்றன.

எனவே தமிழ்த் தேசிய இனம் பேரினவாத முதலாளித்துவ இன ஒடுக்குமுறையால் மட்டுமன்றி தமக்குள் தேக்கி வைத்திருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகால நிலவுடைமை வழி வந்த பழைய சுமைகளாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றது. அதில் பெண் ஒடுக்குமுறையின் ஒரு அம்சமாகக் காணப்படுவது சீதனமாகும். இச் சீதன முறையை ஒழிப்பதற்குரிய சமூக விழிப்புணர்வை மாற்றுக் கருத்துப் பிரசாரத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும். சீதனம் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை என்பது நடைமுறையாக்கம் பெறும் வகையில் பரந்து பட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். மேட்டுக்குடி உயர்வர்க்கக் குடும்பங்களில் சீதனம் ஒரு சமூக அந்தஸ்தாகவும் தனிச் சொத்துடமை பேணுதலாகவும் சொத்து விரிவாக்கமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஒருவகையான உடைக்க முடியாத விலங்காக இருந்து வருகின்றது. இதனை உடைக்கப் பெண்கள் மட்டுமன்றி சமூக அக்கறை மிக்க ஆண்களும் மாற்றுக் கருத்துக்களை அறிவியல் பூர்வமாக முன்வைக்க வேண்டும்.

நன்றி - புதியபூமி (மார்ச், 2011)
...மேலும்

Apr 28, 2011

தடுப்புக் காவல் கைதி - தஸ்லிமா நஸ்ரின்


எப்போதேனும் தடுப்புக் காவல் கைதியாக
நீங்கள் இருந்திருந்தால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

எப்போதேனும் உங்களது கால்கள்
விலங்குகளால் பிணைக்கப்பட்டிருந்தால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

எவரேனும் அறையை விட்டு வெளியில் போகும்போது
நீங்கள் இருக்கிற அறை உள்ளிருந்து அல்லாமல்
வெளியிலிருந்து தாழிடப்படுமானால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

சுற்றிலுமுள்ளவர்கள் எங்கிருந்தாலும்
எவராலும் எனது குரலைக் கேட்க முடியாது
உங்களது வாய் இறுகக் காட்டப்பட்டிருக்கும்
உங்கள் உதடுகள் தைக்கப்பட்டிருக்கும்
நீங்கள் பேச விரும்பினால் அது உங்களால் முடியாது
நீங்கள் பேசினாலும் எவரும் கேட்க முடியாது
எவரேனும் அதனைக் கேட்க நேர்ந்தாலும்
அதனைப் புறக்கணிப்பர்.

என்னைப் பற்றி யோசித்துப் பாருங்கள்
எவரேனும் கதவைத் திறப்பார்கள்
எவரேனும் விலங்குகளிலிருந்து விடுவிப்பார்கள்
எவரேனும் தைக்கப்பட்ட உதடுகளைப் பிரிப்பார்கள் என
நீங்கள் அவாவுற்றிருபது போலவேதான்
நானும் வேட்கையுருகிறேன்

மாதமொன்று போய்விட்டது
எவரும் இந்த வழியால் வரவில்லை
இந்தக் கதவு திறக்கப்படுமானால்
என்ன நடந்திருக்கும் என எவர் தான் அறிவார்
என அவர்கள் நினைத்திருக்கக் கூடும்

என்னைப் பற்றி யோசித்துப் பாருங்கள்
கடுமையாக உங்களுக்கு வலிக்கும்போது
நான் இதை எப்படி இதனை அனுபவித்திருப்பேன் என்பதை
நினைத்துப் பாருங்கள்


ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் வைக்க வேண்டும்
காரணமில்லாமல் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டவர்
எவராக இருக்கலாம்
அது நீங்களாகவும் இருக்கலாம் எனில்
நானும் நீங்களும் எல்லோரும் ஒன்று தான்
கொஞ்ச நஞ்சமான வித்யாசமும் இல்லை

நீங்கள் என்னைப் போன்றவர்தான்
ஒரு மனிதனுக் காகக்காத்திருப்பவர்
இருள் மண்டிக்கொண்டிருக்கிறது
எந்த மனிதனும் வரவில்லை.


தஸ்லிமா நஸ்ரின் -
மொழியாக்கம் யமுனா ராஜேந்திரன்
...மேலும்

Apr 27, 2011

இது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்என்னுடையது என ஒரு போதும் நான் சொல்லிக் கொண்ட
மாதிரியிலான நகரம் இல்லை இது.
குள்ளநரித் தனமான அரசியல்வதிகளுடையது இந்த நகரம்
பழி பாவங்களுக்கு அஞ்சாத வியாபாரிகளின்
சதை வியாபாரிகளின் கூட்டிக் கொடுப்பவர்களின்
பொறுக்கிகளின்,வன்புனர்வாளர்களின் நகரமேயல்லாது
இது எனது நகரமாக இருக்க முடியாது

வன்புணர்வுகளுக்கும் கொலைகளுக்கும் ஊமை
சாட்சிகளாயிருப்பவர்களுக்கனது இந்நகரம்
எனக்கானது இல்லை

அயோகியர்களுக்குச் சொந்தமானது இந்நகரம்
அனாதரவனவர்கள் குறித்த உணர்ச்சியற்று
பாசாங்குகள் நிறைந்தது இந்நகரம்.

சேரிகளிலும் பணக்காரர்களது மரங்களடர்ந்த சாலைகளிலும்
பிச்சைகாரர்கள் மடிகிறார்கள்.
தப்பித்தல்வாதிகளுடைய இந்த நகரம்
குறைந்தபட்ச இன்னல் என்றாலும்
அதீதத் தயக்கத்துடன் பின்வாங்குபவர்களின் நகரம் இது.
அநீதிகளின் குவியலின் மீது அமைதியாக அமர்ந்திருக்கும்
பேய்களின் நகரம் இது.

வாழ்வும் மரணமும் குறித்த கேள்விகள் பற்றி
வீராவேசமாக இங்கு வாயடித்துக்கொண்டிருப்பார்கள்
முகத்துதிக்காரர்களின் நகரம் இது
தற்புகழ்ச்சியாளர்களின் பிரதிநிதிகளினதும்
சந்தர்ப்பவாதிகளினதும் நகரம் இது
இதனை ஒரு போதும்
எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்
இனி ஒரு போதும்

பொய்யர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்
மதவெறி அயோக்கியர்கள்
இங்கு கூடாரம் போட்டிருக்கிறார்கள்


விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய
ஆண்களும் பெண்களும்தான்
இங்கு தர்க்கமெனும் ஆயுதத்துடன்,
சுதந்திர சிந்தனைகளுடன்,
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு
இதயம் துடிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது எனது நகரம் இல்லை தொகுப்பு

தஸ்லிமா நஸ்ரின் -இது எனது நகரம் இல்லை தொகுப்பு
மொழியாக்கம் யமுனா ராஜேந்திரன்
...மேலும்

Apr 26, 2011

பெண் திரை மொழி : -சாந்தால் அகர்மான் (கட்டுரை - ஹவி)


நானொரு பெண்ணிய இயக்குநரா என்று
மற்றவர்கள் என்னிடம் கேட்கும்பொழுது:
‘நான் ஒரு பெண். நான் சினிமாக்களும் எடுக்கிறேன்;’

-சாந்தால் அகர்மான்-

1950-ல் பிரஸ்ஸல் நகரில் ஒரு போலந்து யூத மரபு குடும்பத்தில் பிறந்த சந்தால் அகர்மான் திரைப்பரப்பு வெளியில் பெண்ணிய பிரச்சினைகளையும் பார்வைகளையும் ஏற்படுத்தி ஆண் திரைக்கதையாடலின் மீதும், மரபான சினிமா உருவாக்கங்களின் மீதும் தனது தனித்துவமிக்க ஆளுமையின் வழியாக தாக்கத்தையும் விமர்சனங்களையும் எழுப்பினார். பெண்களை மையமாக கொண்டு உணர்வுபூர்வமாகவோ, அறிவுபூர்வமாகவோ படங்கள் உருவாக்க முடியாமல் வழி திணறிக் கொண்டிருந்த 70களில், மோதி உடைத்துக் கொண்டு தனது தெளிவான படைப்புகளோடு அரங்கினுள் வந்தார். கோட்பாட்டு விவகாரங்களில் தலையிட்டுக்கொண்டாலும், யூத மரபோ நிலை நின்று போன பட உருவாக்க சம்பிரதாயங்களோ அகர்மானின் படைப்பாக்க ரீதியான உணர்வெழுச்சிக்கு விலங்கு போட முடியவில்லை.

1956 தனக்கு வெறும் 15 வயது மட்டும் இருக்கும் பொழுது பிரஸ்ஸல்ஸில் ஒரு தியேட்டரில், பிரஞ்சு புதிய அலை இயக்குநரும், உலக முழுவதிலும் புத்திஜீவி என்று அறியப்படுகிறவருமான ழான்லுக் கோடார்டின் ‘மண்டன் பியரோ’ பார்ததிலிருந்து துவங்குகிறது அவரது கலைப் பயணம். அதற்கு முன்பு வரை கோடார்ட் பற்றியோ அவரது திரைப்படங்கள் பற்றியோ கேள்விப்பட்டதும் இல்லை. சினிமா குறித்து அதிகம் சிந்தித்ததும் இல்லை. இப்படம் ஒரு முடிவுற்ற கனவையும் திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஒரு தீராத வேட்கையையும் அவருள் உண்டாக்கிற்று.

அகர்மானின் கனவு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது. எனவே பிரஸ்ஸல்ஸில் உள்ள பெல்ஜியன் திரைப்பள்ளியில் சேர்ந்தவருக்கு அங்கு கிடைத்ததோ வெறும் அச்சடிக்கப்பட்ட பாட திட்டங்களும், தொழி;ல்நுட்ப ரீதியான கோட்பாடுகள் மட்டுமே. தனது தீராத படைப்பு வேட்கையை சுருக்கிக் கொண்டு ஒரு சாதாரண மாணவியாய் இருக்க முடியாமல் படைப்பு உருவாக்க அனுபவம் எதையும் தராத அந்த திரைப்பள்ளியிலிருந்து வெளியேறினார். 1968ல் தனது முதல் சுய படைப்பான Saute Ma Ville யை எடுக்கிறார். வெறும் 13 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய அப்படத்தை எடுக்கும் பொழுது அவருக்கு வயது 18. அலுப்பூட்டக் கூடிய பள்ளியில் படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய அகர்மான் ஷோத்மாவில் உள்ள ஒரு ரெஸ்டாரொண்டில் சர்வராக பணிபுரிந்தும், நண்பர்களிடமிருந்து திரட்டிய சொற்ப பணத்தைக் கொண்டும் அப்படத்தை தயாரித்தார். முதல் படைப்பு அனுபவம் பற்றி அகர்மான் கூறும் பொழுது.

ஒரு நாள் எனக்கும் என்னைப்பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. அது தான் Saute Ma Ville என்ற படம். எனக்கு காமிராவும், கொஞ்சம் பணமும், ஏதாவது விளக்குகளும், காமிராவை இயக்கித் தரக் கூடிய ஒருவரும் தேவையாயிருந்தது. எனக்கே தெரிந்த ஒருவரிடம் உதவியை நாடினேன். மற்றொருவர் ஒரு காமிரா கடன் தந்தார். கொஞ்சம் திரைச் சுருள் வாங்கினோம். இப்படியாக ஒரே இரவில் இந்த சினிமாவை செய்தோம். பிறகு நான் தான் அதை படத்தொகுப்பு செய்தேன்.

கோடார்ட் படங்களில் உள்ளது போல ஒருவர் மற்றொருவரோடு பேசுகின்ற அறிவார்ந்த காரணபூர்வமான உறவுகளின் உள் வயத்தன்மையை காட்சி பூர்வமாக காட்ட கூடிய ஒரு படமாய் இருக்க வேண்டும் என்பது அவருடைய லட்சியம். அதே நேரம் அவ் வயதில் ஒரு படத்தை உருவாக்குவதற்காக பணமோ, மற்ற வேறெந்த திறமையோ அவருக்கு அப்பொழுது இல்லாதிருந்தது.

பேசுபவர் யார்? என்ற கேள்வியை முதன் முதலில் எழுப்பியவர் ஜெர்மனிய தத்துவஞானி நீட்சே. 60களிலும், 70 களிலும் அமைப்பியல்வாத சிந்தனைகளில் இந்த கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டதை பார்க்க முடியும். ஒரு படைப்பில் பேசுபவர் யார்? என்ற கேள்வியின் மீது பெண்ணியம் சார்ந்த அர்த்த குறுக்கீடு உண்டானது. ஒரு திரைப்படைப்பில் பெண் பேசுகிற பொழுது யதார்த்தத்தில் பேசுவது யார்? Sight & Sound என்ற ஒரு பிரசித்த பெற்ற ஒரு சினிமா இதழில் ஜானட் பர்க்ஸ்ட் ரோம் எழுதிய ஒரு கடிதத்தில் : ‘அகர்மானின் திரைப்படங்களில் பெண்களை குறித்த கதைகளல்ல. அவைகளில் குறுக்கீடு செய்து அதன் அடிப்படையை விசாரிப்பது தான் பிரதானமானது. இக் கேள்வியை வாழ்வின் இயல்பான அனுபவங்களுடன் எதிர்கொண்ட அகர்மான் தனித்துவம் வாய்ந்த நுட்பமான செயல் தீவிரத்துடன் அதனை உள்வாங்கிக் கொண்டு, தனது படைப்புகளின் ஊடே தீர்வுக்கான பாதைகளை செதுக்கினார். சோந்த அம்மாவுடன் கொண்டிருந்த அன்பார்ந்த பிணைப்பு, தனது யூத வம்ச பாரம்பரிய லெஸ்பியன் உறவின் முக்கியத்துவம் சலிப்பூட்டக் கூடிய பெண்ணின் தினசரி நடவடிக்கைகள் இவற்றின் மீதான அவரது விமர்சனபூர்வமான பார்வை அவருடைய படைப்புகளில் பிரதான அங்கம் வகித்தன. பெண்ணிய பார்வையுடன் புதிய யுகத்தின் தனியான திரைப்படைப்பாளி என்ற நிலையில்,Jeanne dielman, Je Duli Elle (நான், நீ, அது, அவள்) News From Home போன்ற அவரது ஆரம்ப காலப் படங்கள் அனைத்தும் பெண்ணிய பார்வையிலான சினிமா சித்தாந்தங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படைப்புகள் என்று கருதப்படுகின்றன.

1975 ல் Jeanne dielman படம் வெளிவந்த பொழுது, திரைப்பட வரலாற்றில் பெண் சாதனையின் முதல் ‘மாஸ்டர் பீஸ்’ என்றார் லேமண்ட். பட உருவாக்கத்திலும் படத் தொகுப்பிலும் அசாதாரண சிறப்புத் தன்மையுடன் கூடிய புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியது இப்படம். Jeanne dielman ஒரு பெண்ணிய திரைப்படம் என்று சொல்வதற்கு அகர்மான் தயங்கவில்லை. ஒரு பெல்ஜிய விதைவித்தாயை பற்றியது இப்படம். புற உலகில் உள்ள இடையூறுகள் மூலம் சுயம் நசுக்கப்படுவதையும் மிகவும் ஆற்றலுடன் தனது அடையாளத்தையும் அடிப்படை உணர்வுகளையும் மீட்டெடுக்க வேண்டியதன் தேவையாகத் தான் Jeanne dielman ஒரு கொலையும் செய்ய வேண்டிய நிலை வருகின்றது. மிகவும் கவனத்துடன் படைப்புருவாக்க உத்திகளை அகர்மான் இப்படத்தில் கையாள்கிறார். உதாரணமாக நெடிய கதாபாத்திரத்தை சித்தரிக்கும் பொழுது அவளுடைய தினசரி நடவடிக்கைகளை அதிக பூடகத் தன்மையோடு தொடர்ந்து சித்தரிக்கிறார். ஒவ்வொரு நடவடிக்கையின் அசாதாரண தன்மைக்குள்ளும் அவர் ஆழ்ந்து செல்கிறார். தனது சுய வெளிப்பாட்டுக்காக அதி முக்கியத்துவம் வாய்ந்த காமிராவின் தன்மையையே மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் என்பதனை இப் படைப்பின் மூலம் பிரகடனப்படுத்தினார். ஒரு குடும்பத் தலைவி என்ற நிலையில் ஒரு பெண்ணினுடைய மனம் தினசரி பணிகளின் மீதும், விவகாரங்களின் மீதும் அந்நியமான நிலையைப் பற்றி மிகவும் நுட்பமான முறையில் அவர் திரைப்படம் செய்த பொழுது பெண்ணிய வாதத்தினுடைய உலகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உள்ள கடந்து வரவேண்டிய அந்த 18 ஆண்டுகளில் மிகவும் விவாதிக்கப்படக் கூடிய படைப்பாளியாகிவிட்டார்.Jeanne Dielman படம் மிகவும் இளவயது பெண்களின் சித்திரங்களின் வரலாற்றில் ஒரு மைல் கல்.

1972ல் நியூயோர்க் சென்ற அகர்மான் நவீன சினிமா படைப்பாளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். கோடார்டினுடைய மற்றும் பிரெஞ்சு புதிய கலைப் படங்களைப் போல நியூயோர்க் நகரமும் அவருள் செலுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல. அது குறித்து அகர்மான் பியரோ ல ஹூ விற்கு இணையாக என்னுடைய நிலையை நிர்ணயம் செய்ததில் நியூயோர்க் நகரம் மிகப் பெரிய பங்கு வகித்தது. நான் பிராஷினுடைய படங்களை பார்த்தது அங்கே தான். அவரை விடவும் மைக்கோல் ஸ்நோவினுடைய படங்கள் (இவரது அபிமான இயக்குநர் மைக்கோல் ஸ்நோ) சினிமா மொழியினூடாக நிலைத்து நிற்கக் கூடியவை. அவருடைய படங்கள் – கதையோ, கதையாடலோ எதுவும் இல்லாத …. அதன் மொழி அது மட்டும் தான். வேறு எந்த ஒன்றையும் அடக்காத பிரித்து அறிய முடியாது…

தன்னுடைய முதல் படத்தை எடுப்பதற்காக தனிமையில் ஒரு நீண்ட காலத்தை அவர் அவஸ்தையுடன் கடக்க வேண்டியிருந்தது. தீராத ஆர்வம் 

நனறி- நிழல்
...மேலும்

Apr 25, 2011

மகளிர் இட ஒதுக்கீடு - உயர்சாதிப் பெண்டிருக்கு ஓர் அறைகூவல் - இராமியா


மகராஷ்ட்ர மாநிலத்தின் தொழில் அமைச்சர் திரு.நாராயண் ராணே, மும்பை நகரில் 23-2-2011 அன்று நடந்த மகளிர் உரிமைக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, பெண்கள் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அது தான் அவர்களுடைய முதன்மையான "பண்பாட்டுக் கடமை" என்றும், எப்பொழுதும் கணவன்மார்கள் தங்கள் சதந்திரத்திற்குக் குறுக்கே நிற்பதாகப் புகார் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.

எடுத்த எடுப்பில் பார்த்தால் இது ஒட்டு மொத்தப் பெண்ணினத்திற்கு எதிரான தாக்குதல் தான். ஆனால் இக்கருத்து மேலும் வலுப்பெறும் பொழுது முதற்பலியாகப் போவது உயர்சாதிப் பெண்டிர் தான்

பெரியார், அம்பேத்கர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுடைய தலைவர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு முன்னால் அரசதிகாரம் அனைத்தும் உயர்சாதிக் கும்பலிடம் தான் இருந்தது. பழைய மன்னராட்சி காலத்திலும் சரி; இடையில் வந்த முஸ்லீம்களின் ஆட்சியிலும் சரி; அதன் பின்பு வந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் சரி; தலைமைப் பீடம் மட்டும் தான் மன்னர்களிடமும், முஸ்லீம் அரசர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் இருந்ததே ஒழிய, அரசதிகாரத்தைக் கையாண்டவர்கள் உயர்சாதிக் கும்பலினரே. அப்பொழுதெல்லாம் பெண்களின் நிலை (உயர்சாதிப் பெண்களின் நிலையும் கூடத் தான்) மிகவும் மோசமாக இருந்தது.

பெரியார், அம்பேத்கரின் பணிக்குப் பின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையில் சிறிது உயர்வு ஏற்பட்டது. பெரியாரும் அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டும் போராடவில்லை; ஒட்டு மொத்தப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் போராடினார்கள். * ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது போல் பெண்களின் வாழ்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இம்முன்னேற்றத்தில் பயன் அடைந்திருப்பவர்கள் மிகப் பெரும்பாலோர் உயர்சாதிப் பெண்டிரே. பெரியார், அம்பேத்கர் காலத்திற்கு முன்னால் இருந்த அவர்களுடைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், உயர்சாதிப் பெண்களிடம் எற்பட்டிருக்கும் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்து இருக்கும் முன்னேற்றங்களைக் காவு கொடுத்து விட்டு, அதன் பின் ஒட்டு மொத்தப் பெண்களை அடிமைப்படுத்தவும் உயர்சாதிக் கும்பலினர் திட்டமிடுகின்றனர்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, பீகார், உத்தரப்பிரதேசம் முதலிய வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் வளர்ந்து வலுப் பெற்ற உடன், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற ஞானோதயம் உயர்சாதிக் கும்பலினருக்குத் திடீரென்று வெடித்துக் கிளம்பிவிட்டது. சூட்சுமம் இது தான். ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஆண்களிடம் ஏற்பட்ட அளவிற்குப் பெண்களிடம் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெண்கள் முன்னேற்றம் பெரிதும் உயர் சாதியிலேயே நிகழ்ந்துள்ளது. இது ஒடுக்கப்பட்ட வகுப்புப் பெண்களை அடைய சிறிது காலம் ஆகலாம். ஆனால் அதற்குள் பெண்கள் ஒதுக்கீட்டை அமல்படுத்தினால், 33 சதவிகிதம் முழுவதையும் உயர்சாதிக் கும்பலே சுருட்டிக் கொள்ளலாம். மீதம் 67 சதவிகிதத்தில் உயர்சாதி ஆண்கள் தாராளமாக 17 சதவிகிதத்திற்கு மேல் பெறலாம். மொத்தத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல், ஏன் 75 சதவிகிதத்திற்கு மேல் கூடப் பெறலாம். அந்நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, கடைசியில் குழி தோண்டிப் புதைத்து விட்டு, பழைய வர்ணாசிரம தர்மத்திற்குப் பக்கத்தில் போய்விடலாம் என்ற பேராசையுடன் திட்டமிடுகிறார்கள். ஆகவே தான் பெண்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கூடாது என்று முழு மூச்சுடன் எதிர்க்கிறார்கள். **

அது சரி! இதில் உயர்சாதிப் பெண்கள் அச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? நின்று நிதானித்து யோசித்தால், உயர் சாதிப் பெண்கள் முதற்பலியாவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரியும்.

பெண்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வட நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் வலுவாக இருந்த வரையில், நாராயண் ராணே போன்றோர் பெண்களின் "பண்பாட்டுக் கடமை" பற்றிப் பேசவில்லை. இன்று அரசியல் அரங்கில் அவர்களை ஓரளவிற்கு ஓரங்கட்டி இருக்கிறார்கள். தமிழ் நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்களை உள் ஒதுக்கீடடை வற்புறுத்தாதபடி மிரட்டியோ சோரம் போக வைத்தோ பணிய வைத்து இருக்கிறார்கள். உள் ஒதுக்கீடு இல்லாமல் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. அப்படி நடந்து விட்டால், ஒடுக்கப்பட்ட மக்களைப் பழைய வர்ணாசிரம நிலைமைக்குப் பக்கத்தில் கொண்டு செல்லும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். அதிலும் வெற்றி பெற்று விட்டால் ........, அதற்கடுத்த திட்டத்திற்கான சிந்தனையைத் தான் நாராயண் ராணே விதைக்க முற்பட்டு இருக்கிறார்.

பெண்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் பெண்கள், தங்கள் எதிர்காலத் தலைமுறைப் பெண்களை முடமாக்கும் செயலைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல; உயர் சாதிப் பெண்களின் முன்னேற்றமே ஒடுக்கப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்தில் வேர் கொண்டுள்ள பக்க விளைவு தான். ஆகவே உயர் சாதிப் பெண்கள் தங்களுடைய மகள்களுக்கும், பேத்திகளுக்கும், அதற்குப் பிந்தைய தலைமுறைப் பெண்களுக்கும், தாங்கள் அடைந்திருக்கும் முன்னேற்றம் போய்ச் சேர வேண்டும் என நினைத்தால், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்; முன்னெடுத்தும் செல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு உடனடி இறக்கம் இருக்கவே செய்யும். இருந்தாலும் நீண்ட காலப் பயனை மனதில கொண்டு, அப்படிச் செய்யத் தான் வேண்டும். அப்படியின்றி, உயர் சாதியின் ஆதிக்கம் தான் முக்கியம்; பெண் விடுதலை அல்ல என நினைத்தால் இக்கட்டுரையைப் புறக்கணித்து விடலாம்.

*(உயர் சாதித் தலைவர்களிலும் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர்கள் இருக்கவே செய்தனர். அவர்களின் எண்ணம் எல்லாம் சீர்திருத்தமாக இருந்ததேயொழிய பெண்களின் முழுவிடுதலையை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பெண்கள் வேலைக்குப் போய், பொருளாதார சுதந்திரம் அடைவதை பாரதியார் விரும்பவில்லை. இராஜாஜியோ பெண்களுக்கெனத் தனிப்பட்ட ஒரு சிக்கல் இல்லை என்று கூறிவிட்டார். காந்தியாரோ ஆணோடு பெண் போட்டியிட்டால் உலக வளர்ச்சிக்காக ஒன்றுமே செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தார்.)

**(காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் மூன்று கட்சியினரும் ஒரு திட்டத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ ஓரணியில் இருக்கிறார்கள் என்றால், உயர் சாதிக் கும்பல் பெரும் நெருக்கடியில் இருக்கிறது என்றும் அதிலிருந்து மீள, கூச்சத்தை விட்டு ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்றும் பொருள். மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்தை எதிர்த்து ஒன்று சேர்ந்தார்கள்; இப்பொழுது உள் ஒதுக்கீடு இல்லாத மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.)

நன்றி - கீற்று 
...மேலும்

Apr 24, 2011

செல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள் - இராமியா


மும்பை நகரில் 4-4-2011 அன்று குழந்தைத் திருமணங்கள் எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணையத்த்தின் தலைவர் (Chairperson, National Commission for Women) கிரிஜா வியாஸ் அம்மையார், நாட்டின் பல பகுதிகளில் இன்னமும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடக்கும் திருமணங்களில் 73% குழந்தைத் திருமணங்களே என்றும் இந்தியாவிலேயே அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடக்கும் மாநிலம் இது தான் என்றும் அவர் கூறினார். இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து பீகார், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்கள் உள்ளன என்றும் மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் குழந்தைத் திருமணங்கள் கணிசமான அளவில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால் இச்செய்தியை அமாவசை அலைக்கு ஒப்பிட்டால் சுனாமி அலையைப் போன்று அதிர்ச்சி தரக் கூடிய இன்னொரு செய்தியையும் அவர் கூறினார். அது தான் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகின்றன எனும் செய்தி.

பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் சட்டம் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகிறது என்றால் அது எப்படி?

இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம், அண்ணல் அம்பேத்கரின் சுதந்திரமான படைப்பு அல்ல என்பதையும், அண்ணலின் கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டன என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளாத பல அம்சங்கள் திணிக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடப்பில் உள்ள எல்லாச் சட்டங்களும், இந்தச் சட்டம் (இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம்) நடப்புக்கு வந்த பிறகு செல்லுபடியாக மாட்டா என்று அண்ணல் முன்மொழிந்தார். ஆனால் இராஜேந்திரப் பிரசாதும், நேருவும், மற்ற பார்ப்பனர்களும், பழமைவாதிகளும் அதை நிராகரித்து விட்டனர். இது போன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியில் தான் "இந்த அரசமைப்புச் சட்டத்தை நான் எழுதியதாக நண்பர்கள் கூறினார்கள். இதை எரித்துச் சாம்பலாக்கிடவும் நான் முதலாவது ஆளாக இருப்பேன்" என்று 2-9-1953 அன்று மனம் வெதும்பியும் துணிவுடனும் கூறினார்.

இப்பொழுது நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் "இப்போது நடப்பில் உள்ள சட்டத்தை இந்த விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது" (Nothing in this article shall affect the operation of any existing law) என்றும் "இப்போது நடப்பில் உள்ள சட்டங்கள் இனிமேலும் தொடர்ந்து செல்லுபடியாகும்... (continuance in force of existing laws...) என்றும் விதிகள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் "இந்த விதியில் இப்போது நடப்பில் உள்ள சட்டம் என்பது எதைக் குறிக்கிறது என்றால் - இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர், அதிகாரம் வாய்ந்த ஒரு சட்ட மன்றத்தாலோ, வேறு அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்டு இருந்து அப்படிப்பட்ட சட்டம் ஏற்கனவே நீக்கப்படாமல் இருந்தால், அது இன்றும் செல்லும்" என்று விளக்கம் வேறு தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. இவற்றிற்கு எல்லாம் என்ன பொருள்?

இந்தப் பின்னணியோடு குழந்தைத் திருமணப் பிரச்சினைக்கு வருவோம். இப்போதைய திருமணச் சட்டம் பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் திருமண வயது 21 என்றும் வரையறுத்து இருக்கலாம். ஆனால் 1929 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சாரதா சட்டத்தில் பெண்ணின் குறைந்த பட்ச திருமண வயது 14 என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆகவே 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் யாரும் இது வரைக்கும் சாரதா சட்டத்தை எந்த சட்ட மன்றமோ நாடாளுமன்றமோ செல்லாது என்று நீக்கவில்லையே; ஆகவே அது இன்றும் நடைமுறையில் இருக்கிறது; அதன்படி 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தது இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்படி செல்லும் என்று வாதிட்டால் நீதிமன்றம் ஒப்பக் கொள்ளும். (எனக்குத் தெரிந்து சாரதா சட்டத்தை மேற்கோள் காட்டி இருக்கிறேன். இத்துறை நிபுணர்கள் இன்னும் எத்தனை/எத்தகைய சட்டங்களை எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறார்களோ; தெரியவில்லை)

இதே விதிகளின்படி தான் பாபர் மசூதி வழக்கில் இந்திய மக்கள் - ஏன் உலக மக்களே - அதிர்ச்சியடையும்படியான தீர்ப்பு வந்தது. கோவில்களில் சாதி வேற்றுமை பார்க்காமல் அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பை வாங்கி வருவதும் இவ்விதிகளின் படிதான். உடன்கட்டை ஏற்றிவிடும் "மகா புண்ணியவான்களை" இவ்விதிகளின் படி தான் மேலும் புண்ணியத்தைச் சேர்க்க விடுதலை செய்து அனுப்பி வைக்கிறார்கள். மொத்தத்தில் பழைய மனு (அ)நீதியை நம் மீது திணித்து நம்மை அடிமைகளாக வைத்திருப்பது இவ்விதிகளின் மூலமாகத் தான்.

ஆனால், பழைய சட்டங்களைச் செல்லாததாக்குவதற்கு அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எந்த அரசியல்வாதியும் அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. பொது மக்கள் ஓட்டுக்காகத் தங்களை நாடி வரும் அரசியல்வாதிகளிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு அறிவு ஜீவிகள் இதைப் பற்றிய விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும். இப்பணி நிறைவேறாத வரையில் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை.

நன்றி - கீற்று 
...மேலும்

Apr 23, 2011

எப்படி சூத்திரர் பஞ்சமன் பட்டங்கள் ஒழிய வேண்டுமோ, அதுபோல்தான் திருமதி பட்டமும் ஒழிய வேண்டும்... - ஓவியா


என்னதான் செல்வம் சேர்த்தாலும் படித்து முடித்து அய். ஏ. எஸ் ஆனாலும் நீ யார் சூத்திரன்தானே? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்தானே? அப்படித்தானே இந்த நாட்டின் சாத்திரம் சொல்கிறது! அப்படித்தானே இந்த நாட்டின் கோவில்கள் சொல்கின்றன! நீ கட்டிய கோவிலின் கருவறைக்கு வெளியில்தானே நீ நிற்கிறாய்? இந்த மதத்தை அழிக்காமல், இந்தக் கோவில்களை அழிக்காமல் நீ எப்படி இந்த நாட்டின் மானமுள்ள குடிமகனாக உன்னை கருதிக் கொள்ள முடியும்? உன்னை இரண்டாந்தரமாக்கும் எதுவும் உன்னுடையதல்ல. அது உனது தேசமாக இருந்தாலும் சரி, ஏன் மொழியாகவே இருந்தாலும் சரி. உன்னை மானமுள்ள மனிதாக நடத்துவதற்கு தடையாக எது இருந்தாலும் தகர்த்தெறிவதே உனது கடமையாகும். இதுதான் தலைவர் பெரியார் தன் இறுதி மூச்சுள்ள வரையில் தமிழருக்கு தந்து சென்ற செய்தியும் பணியுமாகும். தன்மானம்தான் வாழ்வின் சாரம் என்று சிந்தித்தவர் பெரியார். தன்மானத்துடன் மனிதன் வாழும் வாழ்க்கையும் அதற்கான போராட்டமுமே மனிதர்களை மிகச் சிறந்த பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும் என்று சிந்தித்தார் பெரியார். அவருடைய மூச்சுக் காற்றும் அவ்விதமே இயங்கியது.

உண்மையில் அனைத்து பேதங்களையும் கருவறுக்கும் அடிப்படைச் சூத்திரத்தை உள்ளடக்கிய வாழ்க்கை வாய்ப்பாடாகும் இத்தத்துவம். தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகின் எந்த பிரிவினரின் விடுதலைக்கும் பொருந்துகின்ற தத்துவம்தான் இது. பெண்விடுதலையையும் இதே வாய்ப்பாட்டை பயன்படுத்தியே புரிந்து கொள்ள வேண்டும். படிப்பு வேலைவாய்ப்பு சொத்துரிமை இவையெல்லாம் பெண் விடுதலைச் சமூகத்தைப் படைக்கும் பாதையின் படிக்கட்டுகள்தானே தவிர எல்லைக் கற்களல்ல. இன்று இந்த மண்ணில் பெண்ணின் வாழ்க்கை என்பது என்னவாக இருக்கிறது? பெண்ணைக் கருவிலேயே வெறுக்கும் நிலை இன்னும் தொடர்கிறது என்ற போதிலும் இந்தக் கட்டுரையில் அந்த நிலையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ‘பெண்ணுக்கு என்ன இல்லை இப்போது?’ என்று நம்மை கேள்வி கேட்கும் சமூகத்தையே நமது களமாக எடுத்துக் கொள்வோம்.

இன்று பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். உண்மைதான். வேலைக்கு அனுப்புகிறார்கள். சரி. ஆனால் இந்தக் கல்வி, வேலைவாய்ப்பு இவற்றை பயன்படுத்தி பெண் தன் வாழ்க்கையை தான் வாழ அனுமதிக்கப்படுகிறாளா? திருமணம் வரை தந்தையின் பாதுகாப்பில் அதன்பின் கணவனின் கட்டுப்பாட்டில் இறுதியாக மகனின் தயவில் என்று வாழ்கின்ற விதியை இன்று வரை இந்த சமுதாயம் ஏதாவதொரு வகையிலாவது திருத்தி எழுதியிருக்கிறதா? என்ன படித்திருந்தால் என்ன? சமூகத்தில் என்ன நிலை வந்தால்தான் என்ன? இந்த வாழ்க்கை சட்டகத்திற்குள் என்ன தன்மானம் வாழ்கிறது பெண்ணுக்கு? எப்படி சூத்திரப் பட்டமும் பஞ்சமன் பட்டமும் ஒழியாமல் இந்த நாட்டின் வெகுமக்களுக்கு விடுதலை இல்லை என்று நினைக்கிறோமோ அப்படித்தானே இந்தத் திருமதிகள் பட்டம் ஒழியாமல் பெண்களுக்கு விடுதலை கிடையாது என்பதும்!

‘திருமதி’ பட்டங்கள் ஒழியாமல் ‘தேவடியாள்’ பட்டமும் ‘விதவைப் பட்டமும்’ ஒழியுமா? ஒரு நாளும் அது சாத்தியமில்லை. இந்த வார்த்தைகள் சாகாத வரையில் பெண் வாழ்க்கை என்பது விடுதலை வாழ்க்கையுமில்லை. பெண் விடுதலை என்பது ஒட்டுமொத்த இந்த மானுட வாழ்வின் மறு சீரமைப்புடன் தொடர்புடைய கருத்தியல் என்பதை புரிந்து கொள்ளாத வரையில் பெண் விடுதலை என்பதை ‘பெண் கல்வி’யாகவும் ‘பெண்ணின் வேலை வாய்ப்பாக’வும் ஏன் ‘பெண்ணின் உடை’யாகவும் கூட ஓர் எல்லைக்குள் சுருக்கிதான் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

ஏன் கல்வி கற்ற பின்னும் பொருளாதார வாய்ப்பு கிடைத்த பின்னரும் பாதுகாப்புக்கு ஓர் ஆண் துணை வேண்டும் என்று பெண் நினைக்க வேண்டியிருக்கிறது?

ஏன் இன்னும் இந்த மண்ணில் திருமணத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறிது கூட குறையாமல் இருக்கிறது?

பிறக்கப் போகும் பிள்ளை தனது பெயரைச் சொல்லப் போவதில்லை தனது பெயரை அதன் முதலெழுத்தாய் போடப் போவதில்லை என்று தெரிந்த பின்னரும் எதற்காக உயிரைப் பணயம் வைத்து பெண் பிள்ளை பெறுகிறாள்?

கடைசி காலத்தில் மகன் வீட்டில் ஒரு காவல் நாயைப் போல் வாழும் வாழ்க்கை நிதர்சன உண்மையாகக் கண் முன்னே விரிந்து கிடக்க இன்னும் ஏன் தாய்மை புனிதமானது என்ற பொய்யை அவள் நம்பிக் கொண்டிருக்கிறாள்?

மனிதப் பிறவியாக வாழ்வது என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் மனைவியாகவும் தாயாகவும் மாமியாராகவும் வாழ்வதிலேயே ஏன் இன்னும் முடங்கிக் கிடக்கிறாள்?

பெண் விடுதலைக்ககாக சிந்திப்பவர்கள் இந்த சவால் மிக்க கேள்விகளை எழுப்ப வேண்டிய காலகட்டத்தில் இன்று இருக்கிறார்கள். இந்தக் கேள்விகளை எழுப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் நம்முடைய தோழர்களே அதிர்ந்து போவதை நாம் பார்க்கிறோம். இந்த கேள்விகள் பொறுப்பில்லாமல் ஏதோ கையில் கிடைத்த கல்லை எறிவது போன்றது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக பெண்ணின் வலி என்பது பெண்களாலேயே புரிந்து கொள்ளப் படாமல் இருக்கும் ஓர் சமூகத்தில் ஆண்கள் அதை புரிந்து கொள்வார்களா? அது சாத்தியமில்லை. மேலும் இந்தக் கேள்விகள் மற்றும் இதற்கான பதில்கள் இன்று சமுகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் ஓர் அடிப்படை ஒழுங்கை கலைத்து விடுமென்றும் அதற்கான மாற்று என்ன என்பதை ஒரு கறாரான வரைபடம் போல் எழுதிக் காட்ட முடியாத பட்சத்தில் இந்தக் கேள்விகள் தங்களின் தார்மீக அடிப்படையை இழந்து விடுவதாகவும் உணரப்படுகிறது. அவர்களுடைய அந்த சமூக அக்கறை குறித்து நாம் பரிசீலிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

‘பெண்ணின் சுதந்திரம்’ குடும்ப அமைப்பை புறக்கணித்து வாழ அவர்களுக்கு வழங்கப்படும் உரிமை என்பது ‘குழந்தை வளர்ப்பு’ ‘முதியோர் பாதுகாப்பு’ என்பவற்றை கேள்விக்குள்ளாக்கி விடும் என்ற அச்சம் நிலவுகிறது, பெண்ணுக்கு இப்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் சுதந்திர வெளியை பயன்படுத்தி அவர்கள் முதலில் எடுத்த நடவடிக்கையே கூட்டு குடும்பத்தை விட்டு வெளியேறி தனிக் குடும்பங்களை நிறுவியதுதான். இன்று தனிக்குடும்ப கலாச்சாரம் என்பது நிலைநிறுத்தப்பட்டு விட்டது. இந்த மாற்றம் என்பது பெரும்பாலும் பெண்கள் தரப்பிலான நடவடிக்கையாக அமைந்திருப்பதும் உண்மைதான். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகளும் முதியோர்களும் என்ற விளைவினை இன்று பலரும் முன்னெடுத்து விவாதிக்கிறார்கள். இப்போது புதிய தலைமுறை திரைப்பட இயக்குனர்களின் சிறப்பு கவனத்தையும் இந்த பிரச்சனை பெற்றிருக்கிறது. இதில் இவர்கள் யாரும் பார்க்க மறுக்கிற சில விசயங்களை நாம் முன்வைத்தாக வேண்டியிருக்கிறது.

பெற்றவர்களை வளர்த்தவர்களைப் பிரிவது அவர்கள் தனிமையிலும் இயலாமையிலும் இல்லாமையிலும் வாடும் போது பாராமுகம் காட்டுவது குற்றம் என்ற பொதுப் புத்தியை ஆணுக்கும் பெண்ணுக்கும் நாம் கட்டமைக்க வேண்டியிருக்கும்போது வளர்த்தவர்களை விட்டுப் பிரிந்து போவதுதான் வாழ்க்கை என்ற நியதியை பெண்ணுக்கு மட்டும் ஏன் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்? தனது தாய் தகப்பனை பிரிய வேண்டியது பெண்ணுக்கு தர்மம். ஆனால் அதே செயற்பாடு ஆணுக்கு மட்டும் அதர்மம் என்ற விதியை எழுதியது யார்? இந்த அடிப்படையான அதர்மத்தை இன்னும் மறைத்துக் கொண்டே கூட்டுக் குடும்பத்தின் பெருமையைப் பேசும் யாருக்கும் ஏன் குற்றவுணர்வு எழுவதில்லை என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது. கூட்டு வாழ்க்கை என்பது வேறு கூட்டுக் குடும்பம் என்பது வேறு. கூட்டு வாழ்க்கையை நாமும் பேணவே விரும்புகிறோம். ஆனால் ஆணின் தலைமையிலான கூட்டுக் குடும்பம் கூட்டு வாழ்க்கைக்கான அமைப்பே அல்ல என்பதுதான் நாம் வலியுறுத்தும் உண்மையாகும்.

ஒரு தலைமையின் கீழ் உள்ள அடிமைகளின் கட்டமைப்பே குடும்பம், பறவைகளின் சராணாலயமும், மிருகக் காட்சி சாலைகளும் ஒரே அமைப்பல்ல அல்லவா? குடும்பத்தைக் காப்பாற்ற நினைப்பதும் கூட்டு வாழ்க்கையை காப்பாற்ற நினைப்பதும் ஒன்றல்ல என்பதற்கு நிறைய உதராணங்களைக் கூற முடியும். உதாரணமாக, இப்போது ஒரு புதிய சட்டத்தை முன்மொழிய இருக்கிறார்களாம். அது என்னவெனில் வயதான தாய் தந்தையரை புறக்கணிக்கும் மகன்களுக்கு சிறைத் தண்டனை தர இருக்கிறார்களாம். அது சரி. ஆனால் முன்பாவது பெண்ணை படிக்க வைக்கும் செலவு இல்லை. இப்போது படிக்கவும் வைத்து வரதட்சணையும் கொடுத்து திருமணம் முடித்து வைக்கும் பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமை பெண்ணுக்கு இல்லை என்று விதி செய்து வைத்திருக்கும் பண்பாட்டையும் அந்த பண்பாட்டை இன்றும் பராமரிக்கும் இந்த சட்டங்களையும் நீதித் துறை அமைப்பையும் எப்படி தண்டிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை.

இது ஒரு புறமிருக்கட்டும். இந்த சட்டத்தின் நோக்கம்தான் என்ன? முதியோர்களை பாதுகாப்பதா இல்லை குடும்ப அமைப்பை பாதுகாப்பதா? முதியோர் பாதுகாப்புதான் நோக்கம் என்றால் இந்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதியோர் இல்லங்களை நிறுவி அந்த பாராமரிப்புக்கான செலவுத் தொகையை மகன் ஊதியத்திலிருந்து அரசே வசூலித்துத் தர வேண்டும். அப்போதுதான் முதியோர் பாதுகாப்பு என்ற நோக்கம் நிறைவேறும். அதை விடுத்து எவன் வெறுத்து ஒதுக்கினானோ மறுபடியும் அவன் நிழலிலேயே மீண்டும் அந்த முதியோர்களை வாழ விடுவதா அவர்களுக்கான பாதுகாப்பைப் பெற்றுத் தரும்? அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு என்ன தன்மானம் இருக்கும்? இங்குதான் இந்தக் கட்டுரையின் துவக்கத்தியில் கூறியிருக்கும் வார்த்தைகளை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம். தன்மானமுள்ள வாழ்க்கையை இந்த குடும்ப அமைப்பு பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்குமே தொடர்ந்து தருவதில்லை. ஆக இந்த சட்டங்கள் மூலமாக இந்த அமைப்பு மீண்டும் தன்னை காப்பாற்றிக் கொள்ள எத்தனிக்கிறதேயல்லாமல் மனிதர்களுக்கான பாதுகாப்பான தன்மானம் நிரப்பிய வாழ்க்கை குறித்த சிந்தனை இன்னும் மலராமல்தானிருக்கிறது. இது ஒருபுறமிருக்க இப்படி சட்டம் போட்டுதான் இந்த அமைப்பை காப்பாற்ற வேண்டுமென்றால் வாழ்வதற்கான ஒரே வழி இதுதான் என மயங்குவதில் என்ன இருக்கிறது?

அடுத்து குழந்தை வளர்ப்பை எடுத்துக் கொள்வோம். காட்டுமிராண்டி நிலையிருந்த போது மனிதனின் வாழ்க்கை விலங்குகளோடு போராடுவதில் கழிந்தது. இன்று மனிதன் இருக்கும் திசையிலேயே விலங்குகள் இல்லை. இன்றும் மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான். யாருடன்? சக மனிதர்களுடன்தான். இனத்தினால் பிரிந்திருப்பது ஒருபுறமிருக்கட்டும். ஓர் இனமாகக் கூட ஒன்றுபட முடியாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு விரோதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு என்ன அடிப்படைக் காரணம்? தனி உடமையை பேணும் பொருட்டு தோன்றிய அடிமை அமைப்பான குடும்ப அமைப்பில் சுய நலமிக்கவர்களாக குழந்தைகள் வளர்க்கப்படுவது இதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்றுதான் நமக்கு தோன்றுகிறது. இங்கு குழந்தைகளுக்கான பொதுப்புத்தியே ‘தான்’ ‘தனது’ என்பதாக அமைந்து போவது தவிர்க்க இயலாதாக இருக்கிறது.

குழந்தைகள் பொது சமூகக் கூடங்களில்தான் வளர்க்கப்பட வேண்டும். தனி நபர்களாகிய தாய் தந்தையர் பொறுப்பில் குழந்தைகள் வளரும் வரையிலும், பொது உடமை சிந்தனை வேர்களை நாம் குழந்தைகளிடம் ஏற்படுத்தவே முடியாது. நாம் என்னதான் ‘சனநாயகப் படுத்துகிறோம்’ ‘ஆண்களைத் திருத்துகிறோம்’ என்றாலும் குடும்பம் என்பது அடிப்படையில் தனி உடமைக்கான ஓர் அமைப்புதான். பொது வெளியை அங்கீகரிக்காது எனவே முதியோர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் வளர்ப்பு இரண்டு முகாமையான நோக்கங்களுக்குமே இந்த குடும்ப அமைப்பு தகுதி வாய்ந்த பொருத்தப்பாடுடையது அல்ல. மாறுபட்ட வடிவங்களில் மனித வாழ்க்கையை அங்கீரிக்கிற பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகம் என்பதை பலமானவர்கள் பலமில்லாவர்கள் என்று புரிந்து கொள்ளாமல் வேறுபட்ட திறன்களும் வல்லமைகளும் உடையவர்கள் என்ற புரிதலை வளர்ப்பது குறித்தும் எல்லோரும் அவரவர் வழியில் வாழ்வதற்கான பொதுத்தளமாக சமூக வாழ்க்கையை மறு கட்டமைப்பு செய்வதை நோக்கியும் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இயல்பாகவே உருவாகி வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிற இயக்கங்களை உருவாக்கினாலே சிறந்த செயல்பாடாகும். அந்த அடிப்படையில் நமது தோழர்கள் தங்கள் வாழ்க்கையில் அமைப்புகளில் கீழ்க்காணும் செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு பணி யாற்ற வேண்டியதை தங்கள் இயக்க செயல்பாடுகளில் ஒன்றாகவே கருத வேண்டும்.

குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பில் ஆக்க பூர்வமாகக் கவனம் செலுத்துவது

அதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது அல்லது அம்மாதிரியான அமைப்புகளுக்கு உதவுவது

அந்த இல்லங்களை அனாதை இல்லங்கள் என்று கொச்சைப்படுத்தாமல் சிறந்த வாழ்விடங்கள் என்ற சமூக மரியாதையை ஏற்படுத்தித் தருவது.

“வீட்டுக்கு ஓர் அடுப்பங்கரை என்பதும் ஒவ்வொரு ஆம்பிளைக்கும் ஒரு பொம்பிளை என்பதும் அடியோடு ஒழிந்து போக வேண்டும்” என்றார் பெரியார். அந்த வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திப்பதே நமக்கு பல உண்மைகளை விளக்கும்.

...மேலும்

Apr 22, 2011

ஆண் – பெண் துறவியர்களுக்காக தனி அமைப்பை புத்தர் ஏன் உருவாக்கினார்? – அம்பேத்கர்


புத்தர் பெண்களை அனுமதிக்க மறுத்ததற்கு காரணம், அவர் அவர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதினார் என்றும், அவர்களால் சங்கத்தின் மதிப்பு குறைந்து விடும் என்று அஞ்சினார் என்றும் கூறும் வாதம் – குறிப்பிடப்படுவதற்கு அருகதை உள்ளதே அல்ல. ஏனெனில், அதுதான் அவருடைய உணர்வு எனில், அவர் பெண்களை அனுமதித்திருக்கவே மாட்டார்.

பிக்குணி (பெண் துறவியர்) சங்கத்தை பிக்கு (ஆண் துறவியர்) சங்கத்தின் கீழ் புத்தர் கொண்டு வந்தார் என்ற வாதம் தவறானது. இத்தகைய ஏற்பாட்டின் பின்னே உள்ள காரணம், முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்டதேயாகும். பெண் துறவிகளை அனுமதிப்பதில், புத்தர் இரண்டு கேள்விகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சங்கம் வைத்துக் கொள்வதா? இரண்டு தனித்தனி சங்கங்களை வைத்துக் கொள்வதென்று புத்தர் முடிவு செய்தார். ஆண்களையும் பெண்களையும் ஒருசேர வைத்துக் கொண்டால், பிரம்மச்சரியம் என்ற விதி முழுமையாகத் தொலைந்து போய்விடும் என்று அவர் அஞ்சினார்.

எனவே, பெண்களை அனுமதிக்கும்போது, அவருடைய சொந்த சொற்களையே பயன்படுத்துவதெனில் – இரு தனித்தனி அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு இடையில் ஓர் தடுப்பை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் எண்ணினார். இரு தனித்தனி அமைப்புகளை உருவாக்குவதென்று முடிவு செய்து விட்ட பிறகு, மற்றொரு கேள்வி அவரை எதிர்கொண்டது. ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் இரு தனித்தனி சங்கங்கள் இருக்க வேண்டுமெனில், அவை முற்றிலும் சுதந்திரமான தனி அமைப்புகளாக இருப்பதா அல்லது அவற்றுக்கு இடையில் ஏதாவது ஒருவகை தொடர்பு இருக்க வேண்டுமா?

முதலாவது பிரச்சினையைப் பொருத்தவரை, பெண்களின் சங்கம் ஆண்களின் சங்கத்திலிருந்து தனியாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எந்த முடிவும் சாத்தியமல்ல. இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தும் பிரம்மச்சரிய விதியிலிருந்து எழுகின்ற இது, தவிர்க்க முடியாத விளைவாகும். ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பாலியல் உணர்வு எவ்வளவு வலுவான ஆற்றலுடையது என்பதை புத்தர் அறிந்திருந்தார். புத்தரின் சொந்த சொற்களிலேயே கூறுவதெனில், இந்த உணர்வுதான் ஓர் ஆணைப் பெண்ணின் பிணைப்புக்குள்ளும், ஒரு பெண்ணை ஆணின் பிணைப்புக்குள்ளும் செல்வதற்கு உந்தித் தள்ளுகிறது. இது, தன் முழு ஆற்றலையும் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால், பிரம்மச்சரிய விதி ஒரு நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாது. பிரம்மச்சரிய விதியைப் பாதுகாப்பதற்கு, அவர் இரு தனித்தனி சங்கங்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

இரண்டாவது பிரச்சினையை எடுத்துக் கொண்டால், புத்தர் மேற்கொண்ட முடிவைத் தவிர வேறு எந்த முடிவும் சாத்தியமா? அவருடைய சமயத்தில் சேர்ந்த பெண்கள் (பயிற்சி பெறாத) திருமணமாகாத பெண்களாவர். அதிலும் அவருடைய தத்துவத்தில் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது. அவருடைய கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டியிருந்தது. இந்தப் பணியை வேறு யாரிடத்தில் அவரால் ஒப்படைத்திருக்க முடியும்? அவருடைய சங்கத்தைச் சேர்ந்த ஆண் பிக்குகளைத் தவிர, வேறு யாரிடமும் ஒப்படைத்திருக்க முடியாது. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே அவருடைய தத்துவத்தில் பயிற்சி பெற்றிருந்தனர். அவருடைய ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் பயிற்சி பெற்றிருந்தனர். இதைத்தான் புத்தர் செய்தார்.

முன்னவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியைப் பின்னவர்களிடம் ஒப்படைத்ததன் மூலம், பிக்குகளுக்கும் பிக்குணிகளுக்கும் இடையில் எத்தகைய உறவு ஏற்படுத்தப்பட்டது? இது, எழுப்பப்பட வேண்டிய ஓர் அவசியமான கேள்வியே. இது இல்லாமல், பிக்குகள் சங்கத்திடம் பிக்குணி சங்கம் பணிந்து போகாதது பற்றிய விளக்கம் தெளிவாகவில்லை. இந்தக் கேள்விக்கான வெளிப்படையான பதில், பிக்குணிகளைப் பயிற்றுவிக்கும் பணியை பிக்குகளிடம் ஒப்படைத்ததன் மூலம் –அவர்களிடையிலான உறவு, ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவாயிற்று. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு, மாணவரின் மீது ஆசிரியருக்கு ஒரு வகை அதிகாரம் கொண்டதாகவும், மாணவர்கள் ஆசிரியருக்குப் பணிந்து போக வேண்டும் அல்லது அடங்கிப் போக வேண்டும் என்பதைக் கொண்டதாகவோ இல்லையா? புத்தர் வேறு என்ன செய்தார்?

இது தொடர்பாக, கிறித்துவ மதத்தில் ஆண் துறவியர் மடங்களுக்கும், பெண் துறவியர் மடங்களுக்கும் உள்ள உறவு முறையை ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். பெண் துறவியர் மடம், ஆண் துறவியர் மடத்திற்கு கீழ்ப்பட்டதல்லவா? ஆம், அவை அவ்வாறுதான் இருக்கிறது. எனவே, இதிலிருந்து, கிறித்துவ மதம் பெண்களை ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகக் கருதுகிறது என்று எவராவது கூற முடியுமா? அப்படியெனில், பிக்குகளுக்கும் பிக்குணிகளுக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்துவதற்கு – புத்தர் செய்த ஏற்பாடு தொடர்பாக வேறு எவ்வாறு விவாதம் செய்ய முடியும்? சுத்த பிடாகத்தைப் பொருத்தவரை, பெண்களுக்கு எதிராக புத்தர் தப்பெண்ணம் கொண்டிருந்தார் என்றும், பெண்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி ஆண்களை எச்சரித்தார் என்றும் கூறக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 115

நன்றி - தலித் முரசு
...மேலும்

Apr 21, 2011

யாழ்பாணத்தில் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்தால் 1 மாத சிறையும் 1500 ரூபா அபராதமும்


யாழ். மட்டுவில் வடக்குப் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பளித்தார்.
அத்துடன், 1,500 ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறும் அவ்வாறு செலுத்தத் தவறின் ஒரு மாதகால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமெனவும் சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை காலை எடுத்துகொள்ளப்பட்டபோதே, நீதிவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.
மேற்படி நபர், கடந்த 2008ஆம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் திகதி யாழ். மட்டுவில் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக 27 வயதுடைய யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
முக்கிய குறிப்பு :- இங்கு ஒத்தி வைக்கப்பட்ட 5 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை என்பது குறிப்பிடட நபர் 5 வருடகாலத்திற்கு வேறு பாலியல் வல்லுறவு செய்யாது இருப்பதே ஆகும். அவ்வாறு செய்தால்தான் இந்த சிறைத் தண்டனை அனுபவிக்க முடியும்.
நன்றி . New Jaffna
...மேலும்

நான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா? ஒரு தாய் கேட்கிறார்


தனது கணவரும் உறவினர்களும் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளது தொடர்பாக உள்ளூர் சர்வதேச ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு ஒரு தமிழ் அன்னை எழுதும் கண்ணீர் மடலிலேயே மேலுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மடலின் முழு விபரம் வருமாறு…

நா.அமிர்தமலர் பெர்நாண்டோ
இல : A48/2
அளுத்மாவத்தை வீதி
கொழும்பு – 11.04.2011

சர்வதேச உள்ளூர் ஊடகம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் ஓர் வேண்டுகோல்..

நாகேஸ்வரன் அமிர்தமலர் பெர்னாண்டோ ஆகிய நான் இன்று விதவையா? ஆல்லது சுமங்கலியா? ஏனெனில் இச்சமூகம் என்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் என்னை நானே கேட்கும் கேள்வியிது. நான் இந்நிலைக்கு உள்ளானதற்கு யார் பொறுப்பு? விடைகாண யாரிடம் போய் முறையிடுவேன். இதுவரை என் முயற்சிகள் யாவும் கானல் நீராய் போனதே மிச்சம்.

26.03.2008 இல் என் வாழ்வில் பேரிடி வீழ்ந்த நாள். வழமைபோல் என் கணவர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. இவர் கடத்தப்பட்டாரா? கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதாவது தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா? இதுவரை தெரியவில்லை.

என் கணவரை தேடும் முயற்சியில் என்னால் முடிந்தவரை போராடிக் களைத்துவிட்டேன் பலன் என்னவோ பூச்சியம்தான் இருந்தும் என் முயற்சியைக் கைவிடாமல் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என் கணவர் மட்டுமல்ல எனது குடும்பத்தில் ஏற்பட்ட பயங்கர கொடுமைகளைப் பட்டியலிடுகின்றேன். இதைப் படித்த பின்னாவது இந்த மனித உரிமை அமைப்புகளின் மனச்சாட்சி கண் திறக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.

என் கணவர் காணாமல் போன 26.03.2008 அன்று விடயம் அறிந்ததும் உடனடியாக மோதர பொலிசில் முறையிடச் சென்றேன். ஆனால் அங்கு என் வாக்குமூலம்பெற முடியாதென்று மறுத்துவிட்டார்கள். அதன்பின் 28.03.2008 இல் மீண்டும் மோதர பொலிஸ் நிலையம் சென்று என்முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். முறைப்பாட்டு இல : (ஊ.ஐ.டீ.னு 1997ஃ592) அதன்பின் 5 நாட்கள் கடந்தும் என் கணவர் கடைக்காததனால் மீண்டும் 2008.04.03 இல் மனித உரிமை அமைப்பிற்கு சென்று முறையிட்டேன் அங்கு வழங்கிய முறைப்பாட்டு இல 18421081 ஆகும். அதன்பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் முறையிட்டேன் அவர்கள் வழங்கிய முறைப்பாட்டு இல : 427344 ஆகும்.

என் வேதனைகளை வார்த்தைகளால் வடிக்க முடியாது இதுநாள் வரை நான் படும் துயரத்திற்கு அளவே இல்லை. இத்துடன் என்துயர் நின்றுவிடவில்லை விதியோ சதியோ என்னையும் என் குடும்பத்தையும் விரட்டிக்கொண்டே இருந்தது. 4 மாதங்கள் கடந்தும் என் கணவனின் நிலை தெரியாமல் நான் கலங்கி நின்றபோது 10.08.2008 இல் மேலும் ஓர் பேரிடி என் குடும்பத்தின்மீது விழுந்தது.

எனது உடன் பிறந்த சகோதரரான சிப்புலோன்சோ ஜோச் பெர்னாண்டோ என்ற 48 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையை கந்தானையில் வைத்து இனம் தெரியாத இலக்கத்தகடு அற்ற வாகனத்தில் (பௌ;ளை வான்) வந்தவர்களால் கடத்தப்பட்ட செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததுபோல் எங்கள் மனத்தில் காயத்தை ஏற்படத்தியது. ஏற்கவே என் கணவரைத் தேடும் பணியில் மனித உரிமை ஆணைக்குழுஇ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்இ காணாமல் போனோரைக் கண்டறியும் குழு ஆகிய இடங்களில் நாங்கள் முறையிட்டதன் விளைவாக இனந்தெரியாதவர்களினால் அனாமதேய தொலைபேசி மிரட்டல்களுக்கு உட்பட்டதனால் என் சகோதரரை தேடும் பணியை சுயமாகவேதான் நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் கடத்தப்பட்ட என் சகோதரரின் மனையியான கமகே தீபிகா நில்மணி என்பவரும்தன் தன் கணவர் கடத்தப்பட்ட அதே தினத்தில் இனம் தெரியாத வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்டு பல மணி நேரத்தின்பின் விடுவிக்கப்பட்டிருந்தார். இச்சூழ்நிலை காரணமாக என் சகோதரர் ஜோச் பெர்னாண்டோ கடத்ப்பட்டு 50 நாட்களின் பின்புதான் இது விடயமாக கந்தானைப் பொலிசில் முறையிட்டோம் அவர்கள் வழங்கிய முறைப்பாட்டு இல-ஊடீடீ 1106565 ஆகும் அத்துடன் கணவர் கடத்தப்பட்டது சம்பந்தமாக வேறு எங்குமே முறையிடக்கூடாது மீறினால் உன் குழந்தைகள் மூன்றுடன் நீயும் காணாமல் போவீர்கள் எனவும் என் சகோதரியின் மனைவி தீபிகா நில்மணியிடம் அச்சுறுத்தினார்கள்.

இது தவிர இரண்டு பிள்ளைகளின் தந்தையான என் இளைய சகோதரரான அன்ரனி டொனிசன் பெர்னாண்டோ என்பவரை கடந்த 04.03.2008 இல் பொலிசார் கைதுசெய்தனர் ஆனால் இன்றுவரை இவர் விடுதலை செய்யப்படவில்லை அத்துடன் இவரின் வீட்டுக்கு இரவு நேரங்களில் செல்லும் இனம் தெரியாத குழுவினரால் என் தம்பியின் மனைவி விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றார். அத்துடன் அனாமதேச தொலைபேசி அழைப்பு மூலமும் என் தம்பியின் மனைவி கிறிஸ்தோபர் ஜேந்தினி பெர்னாண்டோ அச்சுறுத்தலுக்குள்ளாகின்றார் இவ்வாறான அச்சுறுத்தல் அடிக்கடி ஏற்படுவதனால் ஜேந்தினி பெர்னாண்டோ அடிக்கடி வாழ்விடத்தை மாற்றி மாற்றி இருப்பதனால் இவரின் குழந்தைகளின் கல்வி சீரழிக்கப்படுவதை யார் அறிவாரோ?

இப்படி நாள் பூராவும் கணவரைத் தேடிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற அமிர்தமலர் தீபிகா நில்மணி போன்றவர்களின் தேடல்களுக்கு எப்போது விடை கிடைக்கும்? இவர்களின் தேடல் பணி எதுவரை நீடிக்கும் இதற்கான பதிலை யார் கொடுப்பார்கள்.

மேலும் பல வருடங்களாய் சிறையில் வாடும் என் தம்பிக்கு எப்போது விடுதலை கிடைக்கும். இப்படியான தொடர் கேளிவிகளுக்கு விடைகாண முடியாமல் அல்லும் பகலும் அனலிடை மெழுகாய் உருகுவதை சம்பந்தப்பட்டவர்களோ சட்டத்தின் காவலர்களோ அறியமாட்டார்கள். எனபது என்உறுதி ஏனெனில் என்னைப்போன்ற எத்தனையோ பெண்கள் விதவையா சுமங்கலியா என்ற நிலையில் இருப்பதை கடந்த சில வருடங்களுக்கு முன் ஐநாவின் மனித உரிமைகளுக்கான சிறப்பு பிரதிநிதி திருமதி லூயிஸ் அம்மையாரிடம் முறையிட வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து தெரிந்துகொண்டேன்.

ஒரு கூட்டத்தில் கூட்டத்தினரின் அழுகுரலையும் சிறுபிள்ளைகளின் கையில் இருந்த அவர்களின் தந்தையின் புகைப்படங்களையும் கண்டுகொண்ட லூயிஸ் அம்மையார் கண்ணீர் விட்டதையும் மறுநாள் பத்திரிகையில் பார்த்த பின்பும் உள்ளூர் பெண்கள் அமைப்பும் சிறுவர் உரிமை பேசும் அமைப்புகளும் பேசா மடந்தையாய் இருப்பதை பார்க்கும்போது நம்தேசமதில் மனிதம் மரணித்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றன.

பேண்கள் இந்நாட்டின் கண்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டால் மட்டும் போதுமா? அது நடைமுறை வாழ்க்கையில் காணும் போதே உண்மையான சமுதாயம் மலரும். என் பார்வையில் இதுவரை நியமிக்கப்பட்ட எந்த ஆணைக்குழுவின் இறுதி முடிவில் குற்றவாளி தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. (கிரிசாந்தி குமாரசாமி படுகொலை தவிர) வேலியே பயிரை மேயும்போது என்னைப்போன்ற பெண்களின் தேடல் தொடர் தேடல்களாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. என் முடும்பத்தின் கடத்தல் கைது பற்றி விரிவாக இங்கு பட்டியலிடுகின்றேன்.

கடத்தப்பட்ட கைதுசெய்யப்பட்டவர்களின் விபரம்

1. என் சகோதரர் டொனிசன் பெர்னாண்டோ
முகவரி : 155 நியுணம் சதுக்கம் கொழும்ப – 13

கைதுசெய்யப்பட்ட திகதி : 04.03.2008
சிறை இல : 1510 I.C.R.C No : 126844
வழக்கு இல : 1197

குடும்ப விபரம்
(அ) கிறிஸ்தோபர் ஜெயந்தினி பெர்னாண்டோ 27 வயது (மனைவி)
(ஆ) ஆகாஸ் பெர்னாண்டோ 7 வயது (மகன்)
(இ) அஸ்வினி பெர்னாண்டோ 4 வயத (மகள்)

2. எனது கணவரின் விபரம்
கணவர் : நாச்சிமுத்து நாகேஸ்வரன் (44 வயது0
காணாமல் போன திகதி : 26.03.2008
முறைப்பாடு செய்த பொலிஸ் : மோதரை
இல : C.I.B.D 147 – 592
H.R.C NO : 18421081 I.C.R.C No : 427344
குடும்ப விபரம்
(அ) அமிர்தமலர் - 41 வயது
(ஆ) கிருஸ்டினா அனுசா – 13 வயது (பெண்)
(இ) மார்டினா மிஸ்ரிகா – 8 வயது

முகவரி யு 18ஃ2இ அளுத்மாவத்தை வீதி கொழும்பு – 15

3. எனது மூத்த சகோதரர் :
அப்பலோன்சோ ஜோர்ச் பெர்னாண்டோ 48 வயது
காணாமல் போன திகதி : 10.07.2008
முறைப்பாடு செய்த பொலிஸ் : கந்தானை
இல : ஊ.டீ.டீ 1106565
முகவரி : நியுணம் சதுக்கம் கொழும்பு

குடும்ப விபரம்
(அ) கமகே தீபிகா நில்மணி 45 வயது (மனைவி)
(ஆ) லக்மினி ஜோர்ச் பெர்னாண்டோ 23 வயது (மகள்)
(இ) மில்மி டில்ராணி 17 வயது (மகள்)
(ஈ) சியான் திலுக்கா 14 வயது (மகள்)

இங்ஙனம்
உண்மையுள்ள
அமிர்தமலர்


நன்றி - தமிழ்வின்
...மேலும்

Apr 20, 2011

திருநங்கைகளின் உலகம் - லிவிங் ஸ்மைல் வித்யா
ன்றைய 'கோடான கோழி கூவுற வேளை...’ முதல் இன்றைய 'ஊரோரம் புளிய மரம்...’ வரை தமிழ் சினிமாவுக்கும் அதன் கோடானு கோடி ரசிகக் கண்மணிகளுக்கும் திருநங்கைகள் என்றால், அரை குறையாகச் சேலை கட்டி, கரகரக் குரலில் 'மாமா... மாமா...’ என்று பாலியல் இச்சையோடு கும்மி அடிக்கும் கோமாளிகள்!
திருநங்கைகள் / திருநம்பிகள் யார் என்றும், அடிப்படையில் அவர்கள் ஏன் இப்படி மாறினர் என்பதன் காரணம் பலருக்குத் தெரியாது என்பதுதான் நாங்கள் கேலியாகப் பார்க்கப்படுவதன் காரணம். 'கருவறையில் ஓர் உயிர் ஜனிக்கும்போது முதலில் அது பெண் குழந்தையாகவே உருவாகிறது. ஆறு வாரங்கள் கழித்தே, அதன் நிரந்தரப் பாலின அடையாளத்தை இயற்கை தீர்மானிக்கிறது. அந்தக் குழந்தை நிரந்தரமாகப் பெண்ணாகவே இருக்கும்பட்சத்தில், அதன் உடற்கூறுகளும் மனக்கூறுகளும் அப்படியே எந்த மாற்றமும் இன்றித் தொடரும். அந்தக் குழந்தையும் பெண்ணாகப் பிறக்கும். அதன் உடற்கூறும் மனக்கூறும் ஆணாக மாற்றம் அடையும் பட்சத்தில், அது ஆண் குழந்தை ஆகிறது. எதிர்காலத்தில் ஆண் தன் குழந்தைக்குப் பாலூட்டப்போவது இல்லை என்றாலும், அவனுக்குப் பயன்படாத, முதிர்ச்சியடையாத மார்புக் காம்புகள் இருப்பதே அவன் ஒரு காலத்தில் பெண்ணாகவே இருந்தான் என்பதற்கு ஆதாரம்.
பெண்ணில் இருந்து ஆணாக உடற்கூறு மாற்றம்கொள்ளும் வேளையில், மனக்கூறும் அதேபோல ஆணாக மாற வேண்டும். பெரும்பான்மையான ஆண் குழந்தைகளுக்கு இப்படியான மாற்றம் நிகழ்ந்துவிடும். ஆனால்,இயற்கையின் விளையாட்டை யார் அறிவார்? ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு மட்டும் மனரீதியான மாற்றம் நிகழாமல், உடல் மட்டுமே மாற்றம் அடைந்துவிடுவது உண்டு. முறையான மாற்றம் இன்றிப் பிறக்கும் குழந்தை, உடலால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவுமே பிறக்கிறது. உலகம் இவர்களின் தோற்றத்தை வைத்து ஆணாகப் பார்க்க, இந்தக் குழந்தை களோ, தங்களைப் பெண்ணாகவே உணர்வார் கள். இவர்களே... திருநங்கைகள். இதன் நேர் எதிர்த் தன்மையோடு பிறக்கும் குழந்தைகள்... திருநம்பிகள். (நன்றி: டாக்டர் ஷாலினி)
தான் யார், என்ன என்பதை நிதானித்து உணர்ந்துகொள்ளும் வயதில், அந்தக் குழந்தையின் மனதில் தோன்றும் குழப்பங்களையும், சக மனிதர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் வசைமொழிகள் தரும் வலியையும் உங்களால் உணரவே முடியாது.
வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த திருநங்கையை ஒருமுறை வகுப்பில் உலோகம், அலோகம் பற்றி பாடம் நடத்திய ஆசிரியர், 'இவனைப் பாருங்க, இவன் உலோகமும் இல்ல... அலோகமும் இல்ல. ரெண்டும் கெட்டான்!’ என்று கிண்டலடிக்க, அதைத் தொடர்ந்து சக மாணவர்களின் கேலிப் பேச்சு கூடியதில், பத்தாம் வகுப்போடு அன்று அந்தத் திருநங்கையின் கல்வி முடிந்துபோன துயரத்தை உங்களில் எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடியும்?
இப்படி வெவ்வேறு கசப்பான அனுபவங்களால் பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்க்கையில் இருந்து கல்வி தூர எறியப்பட்டதை எந்த சினிமா வித்தகர்களும் உங்களுக்குக் காட்டப்போவது இல்லை.
வீதிகளைப்போலவே, சொந்த வீட்டுக்குள்ளும் தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும்... திருநங்கைகள் வேண்டாத பிள்ளையாக, குடும்பத்துக்கு அவமானச் சின்னமாக வெறுத்து ஒதுக்கப் படுகிறார்கள். படிப்பு இல்லை என்றான பிறகு, வேலைக்குச் செல்லும் இடத்தில் முதலாளி முதல் வாடிக்கையாளர் வரை பலரது வசைக்கும் கேலிக்கும் ஆளாகிறார்கள். அதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கும் பலியாகிறார்கள். நாளடைவில் இறுகிப் போகும் மனது, இனி வேலைக்குப்போய் சம்பாதிக்க நினைப் பது முட்டாள்தனம் என்ற முடிவுக்கு வருகிறது.
வீட்டில், பள்ளியில், பணியிடத்தில் எனத் தான் புழங்கும் இடங்கள் எங்கும், அன்பு, மனிதம், மாண்பு என்ற பதங்கள் மறந்துபோன உலகத்தையே எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த உலகில் கேலி, வசை, வன்முறை போன்ற கொடூரங்களே இருக்கின்றன. அவளை அரவணைக்கும் ஒரே இடமாக இருப்பது மற்ற திருநங்கைகள் கூட்டமாக வாழும் பகுதி மட்டுமே. அவர் களோடு இந்த வெயில் தேசத்தில் நாசூக்காக மறைக்கப்பட்ட பனித் திரையில் அவள் மறைந்து கொள்கிறாள். குறைந்தபட்சம் திருநங்கைகளுக்குக் கிடைக்கும் இந்தக் கூடாரமும் திருநம்பிகளுக்கு வாய்ப்பது இல்லை!
இனி, இந்த உலகத்தில் உயிர் பிழைக்க நாகரிகமான வழிமுறை ஏதும் திருநங்கைகளுக்குக் கிடையாது. ஓர் ஆண் அல்லது பெண்... மருத்துவராகவோ, இன்ஜினீயராகவோ, ஆசிரியராகவோ, மாவட்ட ஆட்சித் தலைவராகவோ அல்லது குமாஸ்தாவாகவோ, அலுவலக உதவியாளராகவோ வாழ விரும்பினால்... அதற்கான அடிப்படை வாய்ப்புகள் இங்கு அனைவருக்கும் உண்டு. ஆனால், தன் வயிற்றைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு சராசரி குடிமகனுக்கு உள்ள அத்தனை நிகழ்தகவுச் சாத்தியங்களும் திருநங்கைகளுக்கு, அவர்களின் பாலியல் அடையாளத்தால் முழுவதுமாக மறுக்கப்படுவது என்ன நியாயம்?
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடவும், பிச்சையெடுக்கவும் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இந்தச் சமூகமும் மறைமுகமாக அதையேதான் விரும்புகிறது என்பதுதான் கசப்பான நிதர்சனம்.
எனக்குத் தெரிந்த திருநங்கை ஒருவர், தினமும் ரயிலில் பிச்சையெடுத்து வந்தார். பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு நாமும் கௌரவமாக வாழலாம் என்று நினைத்து, கீ செயின், மொபைல் கவர், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையில் இறங்கினார். அவர் பிச்சையெடுத்தபோது, பலரது ஏச்சுக்கும் சிரிப் புக்கும் மத்தியில், பயந்தோ, பரிதாபப்பட்டோ சிலர் பிச்சையிட்ட அதே ரயிலில்... 'குடுத்தா வெச்சிருக்கே? நீ கேட்டதும் எடுத்து நீட்டுறதுக்கு!’ எனப் பலர் சலித்துக்கொண்ட அதே ரயிலில்... 'கை கால் நல்லாத்தானே இருக்கு. உழைச்சுத் திங்க வேண்டியதுதானே!’ என எத்தனையோ முறை 'திடீர்’ மகான்களின் பொன்மொழிகள் உதிர்க்கப் பட்ட அதே ரயிலில்தான்... அன்று அவர்வியாபாரம் செய்தார். பிச்சையெடுத்தபோது கேலி கிண்டல்கள் கடந்து குறைந்தபட்சம் வருமானமாவது கிடைத்த அவருக்கு... நாள் முழுக்க வியாபாரம் செய்தபோது மிஞ்சியது வெறும் அருவருப்பான கேலிச் சிரிப்பு கள் மட்டுமே. ஒருவரும் அவரிடம் இருந்து சின்ன கீ செயின் வாங்கக்கூட முன்வரவில்லை.
ஆண் உடையில் வளைய வரும்போது அவளை மீறி எழும் பெண் தன்மையால் பலரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய சூழலில் அது முடியாதபோது, வெளிப்படையாகத் தன்னைத் திருநங்கை என்றே அறிவித்துப் பணியாற்ற விரும்பினாலும்... யாரும் வேலை தர முன்வருவது இல்லை. ஒரு சிலர், 'உங்களுக்கு வேலை தருவதில் எங்க ளுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், உடன் வேலை செய்யும் மத்த ஸ்டாஃப் எப்பிடி எடுத்துக்குவாங்கன்னு தெரியலை... ஸாரி!’ என்று மழுப்பி நழுவுவது உண்டு.
முதுகலை படிப்பு முடித்த திருநங்கை ஒருவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆரம்பத்தில் ஆண் அடையாளத்தில் பணியாற்றிய அவர், பின்னர் தன்னைத் திருநங்கை என்று வெளிப்படையாகக் கூறி, பால் மாற்று சிகிச்சையும் மேற்கொண்டார். ஆனால், பெண்ணாக மாறிய பின், அதே நிறுவனத்தில் அவரால் பணியாற்ற முடியவில்லை. தனது வீட்டில் இருந்து பெண் உடையில் வெளிவரும் அவர், பேருந்தில் பயணித்து அலுவலக நிறுத்தம் வரை பெண்ணாகச் சென்று, அங்கே இருக்கும் கோயில் ஒன்றில் கைப்பையில் மறைத்துவைத்து இருக்கும் ஆண் உடைக்கு மாறி, ஆண் அடையாளத்துடன்தான் அலுவலகத்துக்குள் நுழைய முடியும். இதனால் ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல் களுக்குப் பிறகு, அவர் வேலையைவிட்டு விலக வேண்டிவந்தது!
ஆனால், அவர் அளவுக்குப் பொறுப்புடன் பணியாற்ற வேறு நபர் கிடைக்காத நிலையில், சில மாதங்களில் அவரையே மீண்டும் அங்கு பணியமர்த்தினர். அதன் பின் அவர் பெண்ணாக, பெண் அடையாளத்துடன் அலுவலகம் சென்று வருகிறார் இன்று வரை. ஆண், பெண்ணுக்கு உரிய அதே திறமையும் வல்லமையும் இருந்தாலும், திருநங்கைகளின் திறமையைக் கவனத்தில்கொள்ளாமல், அவர் திருநங்கை என்பதற்காகவே அவர்களை விலக்கிவைப்பது ஜனநாயக நாட்டில் நிலவும் இன்னொரு தீண்டாமைக் கொடுமை அல்லவா?
ஆனால், உங்களுக்கு அந்தக் கவலை எதுவும் கிடையாது. உங்களை நோக்கிக் கை தட்டி, சற்றுக் களேபரத்துடன் கை நீட்டி வரும் திருநங்கைகள் மட்டும் தான் அவமானமாகத் தெரிகிறார்கள். திருநங்கைகளைத் தவிர, இந்த நாடு முழுவதும் உள்ள எல்லா ஆணும் பெண்ணும்... புத்தன், இயேசு, காந்தி, அன்னை தெரசா என்று உங்களால் கூற முடியுமா? நல்ல படிப்பும், குடும்பச் சூழலும் இன்ன பிற சகல அங்கீகாரங்களும் கிடைத்தபோதும், ஊழல், லஞ்சம், கொள்ளை, கொலை, கற்பழிப்பு, தீண்டாமை, ஆள் கடத்தல் என சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் இவர்கள் எல்லாம் யார்?
என்றோ ஒருநாள் எதிர்ப்படும்போது, கை நீட்டி யாசகம் கேட்கும் திருநங்கைகளை நீங்கள் இவ்வளவு வெறுக்கிறீர்கள். ஆனால், அநீதியான இந்தச் சமூகம் புறக்கணித்ததன் விளைவால், காலந்தோறும் கை ஏந்தி நிற்க வேண்டிய அவலத்துக்காக, இந்தச் சமூகத்தை அவர்கள் எவ்வளவு வெறுக்க வேண்டும்?
சில நண்பர்கள் என்னிடம், 'திருநங்கைகள் பாவம்தான். அவர்கள் பிச்சையெடுப்பது இருக்கட்டும். ஆனால், அதைக் கொஞ்சம் கண்ணியமாகவாவது கேட்கலாமே! கலவரமூட்டும் தொனியில், அநாகரிகமான முறையில் பொது இடங்களில் அவர்கள் நடந்துகொள்வது அருவருப்பாக உள்ளதே!’ என்று ஆதங் கப்படுவது உண்டு. இது ஒரு பக்கம் இருக்கட்டும்... நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள்,பொது இடத்தில் நிஜமாகவே நாகரிகமாகத்தான் நடந்துகொள்கிறீர்களா? சாலை நெரிசலில் பொறுமையின்றி விதிகளை மீறுவதும், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும், ஓவர் டேக் செய்வதும் எப்படி நாகரிகமாக முடியும்? பொது இடத்தில், பொதுச் சொத்துக்கு மதிப்பு தரும் பக்குவம் இல்லாத ஒரு சமூகம், அந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களிடம் மட்டும் நாகரிகம் எதிர்பார்ப்பது எவ்வளவு சுயநலமானது? இதற்காக, அவர்கள் அநாகரிகமாக நடக்கட்டுமே என்று நான் கூறவில்லை. ஏனெனில், இந்த அநாகரிகம்தான் ஒரு வகையில் அவர்களுக்குப் பொது இடத்தில் பாதுகாப்பு தருகிறது. பொதுப் புத்தியில் உறைந்துபோயுள்ள நாகரிக மதிப்பீடுகளுடன் உள்ளவர்கள் ஏவிவிடும் சொல் வன்முறையைக்கூட ஒரு திருநங்கையால் தாங்கிக்கொள்ள முடியும். உடல் வன்முறையைத் தாங்க முடியாது!
யாராலும் இப்படி வன்முறைக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு திருநங்கைகளுக்கு இங்கு மிக அதிகம். அப்படி வன்முறைக்கு ஆளாகும்போது, யாரும் வேடிக்கை பார்ப்பார்களேயன்றி, தடுத்து நிறுத்தப்போவது இல்லை. ஆனால், அந்தத் திருநங்கையோ சற்று மிரட்டலான தொனியில் மற்றவருக்குப் பீதி ஏற்படும் வகையில் இருந்தால்தான், அவளுக்குப் பாதுகாப்பு! திருநங்கைகளை ஏதோ சமூகப் பொறுப்பற்ற விட்டேத்திகளாகவே சமூகம் புரிந்துகொண்டு இருக்கிறது. ஆனால், பெரும்பாலான திருநங்கைகள் சம்பாதிப்பதே தங்கள் குடும்பத்துக்காகத்தான் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தான் பிச்சையெடுத்த வருமானத்தில், பாலியல் தொழில் செய்த வருமானத்தில், தன் குடும்பத்துக்கு வீடு கட்டித் தந்த, கடன் அடைத்த, தன் சகோதர - சகோதரி களுக்குத் திருமணம் செய்துவைத்த திருநங்கைகளை நீங்கள் அறிவீர்களா? தன் சகோதர-சகோதரிகளால் கை விடப்பட்ட தாய், தந்தையரை தன்னுடன் வைத்துப் பாதுகாக்கும் பல திருநங்கைகளை நான் அறிவேன்!
ஆரம்பத்தில் குடும்பம், திருநங்கைகளை ஏற்க மறுத்தாலும்... ஒரு கட்டத்துக்கு மேல் மனதளவில் அவர்களை ஏற்றுக்கொள்ளவே செய்கிறது. அதில் சிலர் அவ்வப்போது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்று வருவது உண்டு. சிலர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதும் உண்டு. எப்போதாவது குடும்பத்துடன் தங்கும் திருநங்கைகள், மாதா மாதம் தவறாமல் பெருந் தொகையை வீட்டுக்கு அளிக்கிறார்கள். மற்ற விசேஷ காலங்களில் ஏற்படும் பெரும் செலவையும் அவர்களே ஏற்கிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து வாழும் திருநங்கைகளின் குடும்பம் பெரும்பாலும் 80-களில் வெளியான பாலசந்தர் படக் குடும்பங்களைப்போலவே இருக்கும். திருநங்கைகள், அந்தப் பட நாயகிகளைப்போல குடும்பத்தையே தாங்கும் தூண்களாக இருப்பர்.
அப்படி ஒரு நாயகியிடம் ஒருமுறை, 'எப்படி உன் அம்மா நீ பாலியல் தொழில் செய்வதை ஏற்றுக் கொள்கிறார்?’ என்று கேட்டபோது, 'நீ இப்படிக் கேட்கிறாய். ஆனால், என் அம்மாவோ தினம் இவ்வளவு ரூபா கொடுத்துத்தான் ஆகணும் என்கிறார்’ என்றாள் வெற்றுக் குரலில்! இன்று இப்படி ஒரு தாயை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. தனக்கென ஒரு குடும்பமோ, வாரிசோ இல்லாத திருநங்கைகளுக்குக் குறைந்த பட்சம் தன் தாய் வீட்டு உறவுகள் தேவைப்படுகிறது. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை... பணம்!
இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட, தமிழகம் திருநங்கைகளிடம் சற்று கரிசனத்துடன் செயல்படுவது நிஜம். திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, இலவச பால் மாற்று அறுவை சிகிச்சை, இவற்றோடு தனி நல வாரியம் அமைத்தது எனப் பல முதல் கட்ட மாற்றங்கள் இங்கு நிகழ்ந்து உள்ளன.
ஆனால், கண்ணியமான முறையில் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத வரை, அவர்களால் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இயல்பான சக மனிதர்களாக வாழ முடியாது. கணினியில் இளங்கலைப் பட்டமும் கூடுதல் பணித் தகுதியும்கொண்ட திருநங்கை ஒருவர், திருநங்கை நல வாரியத்தில் வேலைவாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. 'வேலைக்குப் பதிலாக, ஒரு கணினி வேண்டும் என விண்ணப்பித்தால், அதனை நல வாரியம் பரிசீலிக்கும்’ என்றாராம் ஓர் அதிகாரி. தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஏழு மாதங்கள் அவர் காத்திருந்தார். ஆனால், 'அப்படி எல்லாம் தனி நபர்களுக்கு உதவ முடியாது’ என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுதான் மிச்சம். அவர் களைப் பொறுத்த வரை, தையல் கலை தெரியாத 10 திருநங்கைகளுக்கு தையல் மெஷின்கள் கொடுத்துப் பத்திரிகைகளில் செய்தி வருவதோடு, நல வாரியத் தின் பணி முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆக்கபூர்வமான நலத் திட்டங்கள் எதுவும் இன்றி, வெறும் கண் துடைப்புக்காகச் செய்யப்படும் எதுவும் திருநங்கைகளின் வாழ்க்கையை மாற்றாது.
திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம், சமூகப் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்காத வரை... திருநங்கைகளை அச்சத்துடனும் அந்நியமாகவும் கண்ணில் விழுந்த துரும்புகளாகவுமே இந்தச் சமூகம் எதிர்கொள்ளும்! உங்கள் பக்கத்து இருக்கையில், ஓர் ஆணோ, பெண்ணோ அமர்ந்து இருந்தால், எப்படி உங்களுக்கு எந்தச் சலனத்தையும் பாதிப்பையும் அது ஏற்படுத்தாதோ, அப்படி ஒரு சக பயணியாக வாழ்க்கைப் பயணத்தில் திருநங்கைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தையேனும் இப்போதைக்குச் சமூகம் வளர்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது!
நன்றி - ஆனந்த விகடன்
ஏப்ரல் 20, 2011
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்