/* up Facebook

Mar 17, 2011

பழைமைவாதக் கருத்துக்களினால் மலையகத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் பெண் பிள்ளைகளின் கல்வி - செல்வி இராமலிங்கம் ஜெயமே ஜெயம்


அனைவருக்கும் தரமான கல்வி- சிறுவர்கள் கல்வியில் இருந்து வெளியேறுவதை தடுப்போம்" என்ற தொனிப் பொருளுடன் கொண்டாடப்படும் உலகக் கல்விப் பிரசார வாரத்தில் பிரிடோ நிறுவனம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி இது தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வருகிறது.

சிறுவர்கள் கல்வியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான முக்கிய 5 காரணிகள் இம்முறை கல்விப் பிரசாரத்திலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவை வறுமை, பால் நிலை பாகுபாடு, ஊனம், சிறுவரை வேலைக்கு அமர்த்துதல், அகதிகளாகுதல் என்பவையாகும். இவற்றில் பால் நிலை பாகுபாடு என்ற விடயம் மலையக கல்வியில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்ற விடயம் பல அமர்வுகளில் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

1999 ஆம் ஆண்டில் பெண் பிள்ளைகளுக்கு கல்வியில் சமத்துவம் வழங்குவதில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த வங்காளதேசம் 2007 ஆம் ஆண்டில் ஆரம்ப தரத்தில் ஆண், பெண் நுழைவு விகிதத்தில் சமனான நிலையை அடைந்துவிட்டது. இலங்கையோடு ஒப்பிடுகையில் எழுத்தறிவு விகிதத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள வங்காளதேசம் இவ்வளவு விரைவாக இந்த இலக்கை எட்டியிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம் ஆகும். இலங்கையில் கல்வியில் ஆண், பெண் சமத்துவ நிலைமை பொதுவாகவே திருப்திகரமான நிலையில் உள்ளது. மலையக பெருந்தோட்ட பகுதிகளிலும் பெண் கல்வி முன்னைய நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண, உயர்தரம் போன்ற பரீட்சைகளில் சித்தி அடைபவர்களில் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக நிச்சயமான புள்ளி விபரங்கள் இல்லாவிட்டாலும் இக்கூற்று சரியானதெனவே தோன்றுகிறது. இது உண்மையில் உற்சாகம் தரும் செய்தியாகும். ஒரு புறம் நிலைமை இவ்வாறிருக்க பெருந்தோட்ட பகுதிகளில் கல்வியில் பெண் பிள்ளைகளுக்கு சமத்துவமான நிலைமை கிடைத்துவிட்டதாக எவரும் திருப்திப்பட முடியாது.

பெருந்தோட்ட குடும்பங்களில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் போது ஆண் பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் பெண் பிள்ளைகளின் கல்வியே பாதிக்கப்படுகிறது. மேலும், வீடுகளில் மற்றவர்களின் சுகவீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, கோவில் திருவிழாக்கள் என்பவற்றின் போது சம்பந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பெண் பிள்ளைகள் பாடசாலை செல்வதிலிருந்து தடுக்கப்படுதல், வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்துகொள்ளுமாறு பெண் பிள்ளைகள் வற்புறுத்தப்படுவதால் வீடுகளில் பாடங்களை படிக்க நேரம் கிடைக்காமை, விசேடமாக பெண் பிள்ளைகள் பருவமடையும்போது கலாசார சடங்கு முறைகள் என்ற பெயரில் 3 மாதம் தொடங்கி 5 மாதங்கள் வரையும் கூட பெண் பிள்ளைகளை வீட்டில் நிறுத்தி வைத்தல் என்பவை பெருந்தோட்ட பெண் பிள்ளைகளின் கல்வியை பாதிக்கின்ற விடயங்களாக இருந்து வந்துள்ளன.

மேற்கூறப்பட்ட காரணங்களில் பலவற்றில் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆயினும், விசேடமாக பெண் பிள்ளைகள் பருவமடையும் போது 3 மாதங்களுக்கும் அதிகமாக அவர்களை வீட்டில் நிறுத்தி வைத்தல் அவர்களுடைய கல்வியில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது விடயமாக பெற்றோர்களை விழிப்புணர்வூட்டுவதற்காக தொடர்ச்சியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக சிறுவர் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

சிறுவர் கழகங்களுக்கு வரும் பல பெண் பிள்ளைகள் தங்கள் பெற்றோர் பாரம்பரியமான சடங்குகளை பின்னர் வசதியான நேரத்தில் செய்வதற்கு ஒத்துக்கொண்டு தாங்கள் பருவமடைந்து 10 நாட்களுக்குள் அல்லது இரு கிழமைகளுக்குள் தங்களை பாடசாலைக்கு அனுப்பிவிட்டதாகவும் தங்களை அதிக நாட்கள் பாடசாலை செல்லவிடாமல் தடுப்பது தங்களுடைய கல்வி பாதிப்படையும் என்பதை பெற்றோரிடம் எடுத்துக்கூறி பெற்றோரின் பழைமைவாத கருத்துகளை மாற்றுவதில் வெற்றி கண்டதாக கூறுகிறார்கள். இதேவேளையில், பெற்றோர் கூட்டங்கள், பல்வேறு விதமான வைபவங்கள் என்பவற்றின் போது பெண்பிள்ளைகள் தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் அர்த்தமற்ற பாரம்பரிய சடங்குகள் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்துகள் பெற்றோர்கள் முன் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவதால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும், நிலைமை பொதுவாக பெரிதும் மாற்றமடைந்து விட்டதாக கூற முடியவில்லை. விசேடமாக விழிப்புணர்வூட்டப்படாத பெற்றோர் வாழும் பெரும்பாலான பகுதிகளில் இவ்விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அரச பாடசாலைகளில் அதிபர்களும் ஆசிரியர்களும் இக்கலாசார முறையை மாற்றுவது கடினம் என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி பருவமடையும் பெண் பிள்ளைகளை விரைவாக பாடசாலைக்கு மீண்டும் வருவதை தூண்டும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். பெண் பிள்ளைகள் பருவமடையும்போது பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி பிள்ளைகளை விரைவாக அனுப்புமாறு விளக்கமளித்தல், பெற்றோர்களுக்கு கடிதங்கள் மூலம் இச்செய்தியை அறிவித்தல், பிள்ளைகளை நீண்ட நாட்களுக்கு பாடசாலைக்கு அனுப்பாவிட்டால் அவர்களுடைய பெயர்கள் பாடசாலை வரவுப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டு விடும் என அச்சுறுத்தல் விடுத்தல் மூலம் பிள்ளைகளை விரைவாக அனுப்புமாறு பெற்றோரை தூண்டுதல் ஆகிய பல நல்ல முயற்சிகளை செய்து வருகின்றனர். இது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆயினும் இது விடயம் தொடர்பாக பிரிடோவின் கல்வி பிரசார நிகழ்வின்போது பல அதிபர்கள், ஆசிரியர்களிடத்தில் கருத்துக் கேட்டபோது தங்களுடைய முயற்சிகள் மிக சிறிய அளவிலேயே வெற்றி அளித்துள்ளதாகவும் பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியைவிட கலாசாரம் என்ற பெயரில் மூடத்தனமான கொள்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கவலை வெளியிட்டனர். இந்தப் பின்னணியில் பெண் பிள்ளைகள் பருவமடையும் போது அவர்களை 3 மாதத்திற்கும் அதிக காலம் வீட்டில் தடுத்துவைத்திருப்பதால் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் விடயம் தொடர்ந்தும் பிரச்சினைக்குரிய விடயமாகவே உள்ளது. மலையக பகுதிகளில் கல்வியில் பால் நிலை சமத்துவம் பேணப்பட இந்த விடயத்தில் விரைவாக மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். ஒருவேளை இது விடயத்தில் மாற்றுக் கருத்துகள் இருக்கக்கூடும். நிலைமையில் பெருமளவு முன்னேற்றம் உள்ளது என கருதும் மலையக பெருந்தோட்ட பகுதி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பத்திரிகைகள் வாயிலாக பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். இவ்வாறான கருத்துகள், வெற்றிகரமான அனுபவங்கள் மற்றைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும்.

எவ்வாறாயினும் மலையக பெருந்தோட்ட பகுதி பெண்களின் கல்வி இன்னும் முழுமையாக சாதாரண தடைகளை கூட தாண்டவில்லை என்ற உண்மையை எவரும் இலகுவாக மறுக்க முடியாது. பழைமைவாத கலாசார பண்பாடுகளில் மூழ்கி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் பிள்ளைகளின் கல்வியை பாழாக்குவது அல்லது அவர்களின் கல்வி முன்னேற்றத்தை தாமதப்படுத்துவது என்பது பெண்பிள்ளைகளுக்கு செய்யப்படும் ஒரு பாரிய சமூக அநீதியாகும் என்ற கருத்து வலியுறுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் பாடசாலைகள் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக நிச்சயமாக வேறு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இவ்விடயத்தில் பாடசாலையிலுள்ள பெண் ஆசிரியர்கள் தங்கள் பாடசாலை அதிபர்களின் வழிகாட்டுதலின் கீழ் சில காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கலாம். பொதுவாக பருவமடையும் வயதிலுள்ள பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் தரங்களிலுள்ள பெண்பிள்ளைகளின் பெற்றோர்களை பொதுவான கூட்டங்களுக்கு அழைத்து அவர்களுக்கு இது தொடர்பான விளக்கங்கள் தரலாம். அதேவேளை, அத்தரங்களிலுள்ள மாணவிகளுக்கு இவ்விடயங்களை எடுத்துக்கூறி தங்களை விரைந்து பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு வலியுறுத்துமாறு எடுத்துக்கூறலாம். பாடசாலை அபிவிருத்தி சபையினர், சமய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகிவற்றின் உதவியோடு சாதாரண பெற்றோருக்கு விளங்கக் கூடிய சிறிய பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை பிள்ளைகள் வழியாக பெற்றோருக்கு அனுப்பி அவர்களை உணர்வடையச் செய்யலாம். இவற்றை விட பல்வேறு எளிய வழிமுறைகள் உள்ளன.

மக்கள் மத்தியிலுள்ள பழைமைவாத கருத்துகள் மாற்றப்பட முடியாதவை அல்ல. அவை நிச்சயமாக மாற்றப்படலாம். இதற்கு வேண்டியதெல்லாம் சமுதாயம் தொடர்பான அர்ப்பண உணர்வும் புதிய பரப்புரை உத்திகளுமாகும். மலையகத்தில் பெண் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்குள்ள தடைகளை நீக்க முயற்சிப்பது அனைவரின் கடமையாகும்.

நன்றி -  தினக்குரல்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்