/* up Facebook

Mar 12, 2011

தேசிய மட்டத்தில் பெண்களின் நிலை! - ரேணுகா தாஸ்


ஆணாதிக்க தன்மை மேலோங்கியுள்ள நிலையில் பெண்களின் கருத்துக்கள் எந்தளவுக்கு உள்வாங்கப்படுகின்றன என்பதும் சமூக மட்டத்தில் அவர்களது தேவைகள் எந்தளவுக்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பெண்கள் இன்று பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதனை எம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற பல்வேறு மட்டங்களில் பெண்கள் இன்னும் குறிப்பிடத்தக்க எழுச்சி காணவில்லை என்பது கசப்பான உண்மைதான். எனினும் இந்த இலக்குகள் எந்தளவுக்கு அடையப்பட்டிருக்கின்றன என்பதில் ஐயப்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. இந்த வகையில் அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் பெண்களின் குடும்பக் கட்டமைப்பு பெண்கள் அரசியல் துறையில் நுழைவதனை தடுக்கின்ற பிரதான காரணியாக விளங்குகின்றது.

பெண்கள் அமைதியானவர்கள், சமூக செயற்பாடுகளில் ஆண்களே பிரதான சூத்திரதாரிகளாக விளங்க வேண்டும் என்ற பாரம்பரிய சமுதாய கோட்பாடுகள் பெண்களை அரசியல் துறையில் நுழையவிடாது தடுக்கும் பிரதான சக்தியாக இனங்காணப்படுகின்றது. பிரித்தானியாவில் பங்க்ஹேர்ஸ்ட் அன்னையும் புதல்வியரும், அமெரிக்காவில் எலிசபெத் சென்ட்டன், சூசன் அந்தனி மற்றும் இலங்கையில் அக்னஸ் டீ சில்வா, டெய்சி பண்டாரநாயக்கா, நேசம் சரவணமுத்து போன்ற பெண்களும் தமது குடும்பங்களில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் எழுந்த எதிர்ப்புக்களை பொருட்படுத்தாது போராட்டம் மேற்கொண்டனர். காரணம், பெண்களுக்கு சமமானதும் சுயாதீனமானதுமான இருப்பொன்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கேயாகும் என்பதனை நாம் மறந்துவிடலாகாது.

பெண்கள் போராடி சர்வஜன வாக்குரிமையைப் பெற்றுக் கொண்டுள்ளபோதும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. 1931 ஆம் ஆண்டு சட்டசபையில் பெண்கள் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே பிரதிநிதித்துவம் வகித்துள்ளனர். 1994 இலும் இது ஐந்து சதவீதமாகவே இருந்துள்ளதோடு 2003 கால கட்டத்தில் இது நான்கு சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பெண்கள் எவ்வளவுதான் பலம் உள்ளவர்களாக இருப்பினும் தீர்மானம் எடுக்கின்ற செயற்பாடுகளுக்குள் அவர்கள் நுழைவதற்கான இடைவெளி மிகவும் குறைவாகவே இருக்கின்றது. 1931 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த முதலாவது பெண்மணியாக திருமதி எட்வின் மொலமுரே வரலாற்றில் இடம்பிடிக்கின்றார்.

மலையக அரசியல் களத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பொதுவாக குறைவடைந்து காணப்படுகின்றது. இதற்கு மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் ஆணாதிக்க தன்மையினை பேணுவதே காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது.

மலையக அரசியலில்...

இவற்றுக்கு மத்தியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் சந்திரசேகரனின் மறைவையடுத்து தற்போது இமமுன்னணியின் தலைவியாக அவரது பாரியார் சாந்தினி சந்திரசேகரன் பொறுப்பேற்றுள்ளமை மலையக தொழிற்சங்க அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே கூற வேண்டும். அரசியல்துறை ஒரு புறமிருக்க, பொருளாதாரத்துறையை எடுத்துக் கொண்டால் எத்தனையோ குடும்பங்களில் பெண்களின் உழைப்பை, ஆணாதிக்க சமூகம் உறிஞ்சுவதைக் காண முடிகின்றது. மனித உரிமை பிரகடனத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக தெளிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது. எனினும் இவற்றின் நடைமுறை செயற்பாட்டுத் தன்மைகள் எந்தளவுக்கு சாதக பாங்கினை உருவாக்கியுள்ளன என்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதனை மறுப்பதற்கில்லை.

ஆண், பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும். பெண்களும் மனிதர்களே என்ற ரீதியில் அவர் தம் கருத்துக்களும் ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தந்தை வழி சமூக அமைப்பு என்ற கருத்தியல் நிலையில் இருந்து மாறுபட்டு பெண்களின் உரிமைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சமூக அமைப்புகளின் இத்தகைய கோரிக்கைகள் நியாயமானதே. எனினும் இவற்றை அடைவதற்கான வழி வகைகள் குறித்து இவ்வமைப்புகள் அதீத கவனம் செலுத்த வேண்டியமை மிகவும் இன்றியமையாததாகும். கொள்கைகள் அல்லது கோரிக்கைகளின் செயற்பாட்டுத் திறன் மிக்க சமகால நடவடிக்கைகளே பெண்களின் அபிவிருத்திக்கும் எதிர்கால வாழ்வுக்கும் கை கொடுக்கும் என்பதே உண்மை.

நன்றி: வீரகேசரி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்