/* up Facebook

Mar 13, 2011

சர்வதேசப் பெண்கள் தினம்-2011 இன் போது ‘மிசெல் பாஷெலே’ ஆற்றிய உரை தமிழாக்கம் - விஜி


ஐக்கியநாடுகள் சபை பெண்களின் பாலியல் சமத்துவம், கல்வி, தொழிற்பயிற்சி, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றில் சமவாய்ப்பு அளிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு 2- யூலை - 2010 அன்று வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து “ஐக்கியநாடுகள் சபையின் பெண்களுக்கான அமைப்பு” என்கின்ற புதிய கிளையை உருவாக்கியுள்ளது. இந்த கினை 1-ஜனவரி-2011 இல் இருந்து இயங்கத் தொடங்கியுள்ளது இதன் முதலாவது பணிப்பாளராக “சிலி” நாட்டின் பழைய ஜனாதிபதி மிசெல் பாஷெலே (Michelle Bachelet`) (லத்தீன் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி) நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேசப் பெண்கள் தினம்-2011
சமத்துவம் என்பது ஒரு யதார்த்தம், உறுதிப+ணுவதற்கான நேரம் வந்துவிட்டது .

உலகத்தில் உள்ள அனைத்துப்பெண்களும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த 100 வருட நீண்டகால சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்றடியை எடுத்துவைத்துள்ளனர்.

முதலாவது சர்வதேசப் பெண்கள் தினமானது, உலகெங்கிலும் உள்ள பெண்கள் வேலைசெய்கின்ற தொழிற்சாலைகளில் அடிப்படை தேவைகளோ, வசதிகளோ எதுவுமற்றதையும், அதன் ஆபத்துக்களையும் கவனத்திற்கு கொண்டுவருவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலங்களில் இந்த சர்வதேச பெண்கள் தினமானது சில நாடுகளால் மட்டுமே கொண்டாடப்பட்டபோதும், தொடர்ச்சியாக இவ்வகை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் குதிக்கும் பெண்களின் எண்ணிக்கையை ஒரு மில்லியனாக அதிகரித்தது. பின்னர் இது தொழிலாளி பெண்களின் தேவைகள் மட்டுமன்றி பெண்களின் வாக்குரிமை, அரசியலில் பங்குபற்றும் உரிமை, குடும்ப உறவில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சமத்துவம் என்பதாக அதிகரித்தது.

இன்றைய இந்த உலகை அந்த துணிகரமான எமது முன்னோடிகள் பார்ப்பார்களேயானால், அவர்களுக்கு ஒரு பெருமை கலந்த ஏமாற்றமே கிடைக்கும் என நான் உணர்கிறேன். நிச்சயமாக குறிப்பிடும்படியான பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம். அதுவும் கடந்த இறுதி நூற்றாண்டில் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு பெண்களின் உரிமை, முன்னேற்றம் என்பவற்றில் பரந்த வளர்ச்சியைக் காணலாம். பெண்களின் உரிமை சம்பந்தமாக நாம் அடைந்த முன்னேற்றமானது உலகம் முன்னர் ஒருபோதும் கண்டிராத ஒரு ஆழமான சமூக புரட்சிகளில் ஒன்றாக நாம் கருதமுடியும்.

100 வருடங்களுக்கு முன்னர் உலகத்தில் இரண்டு நாடுகள் மட்டுமே பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கியிருந்தது. இன்று கிட்டத்தட்ட உலகளாவிய ரீதியில் பெண்கள் வாக்குரிமையை பெற்றிருப்பதுடன் பெண்கள் அரசியலிலும், அரசாங்கத்திலும் தலைமை பதவியை வகிப்பதும் எல்லாக்கண்டங்களிலும் நடைபெற்றுவருகின்றது. மேலும் முன்னர் பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்ட உத்தியோகங்கள் எல்லாவற்றிலும் தற்போது பெண்கள் முக்கிய இடங்களை வகித்து வருகிறார்கள்.

மிக அண்மைக்காலங்கள் வரை நீதிமன்றங்கள், பொலி| நிலயங்கள், மற்றும் அயலவர்கள் போன்றவற்றால் குடும்ப வன்முறைகளை என்பது அவர்களது தனிப்பட்ட குடும்பபிரச்சனையாகவே கருதிவந்தன. ஆனால் இன்று, மூன்றில் இரண்டுபங்கு நாடுகளில் இந்த வீடுகளுக்குள் நடைபெறும் வன்முறைக்கெதிரான பிரத்தியேக சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாலியல் பலாத்காரம் இன்று ஒரு யுத்த தந்திரமாக பயன்படுத்தப்படுவதைக்கூட ஐக்கியநாடுகளின் பாதுகாப்பு ஆலோசனைச் சபை கவனத்தில் கொண்டுள்ளது.
இந்த இறுதி நூற்றாண்டில் நாம் அடைந்த பலவிதமான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், முதலாவது சர்வதேசப் பெண்கள் தினத்தன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிலைநாட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. உலகில் இன்னும் 3இல் 2 பங்கு பெண்கள் ஆரம்பக்கல்வியறிவு அற்றவர்களாகவே இருக்கிறார்கள். இளைஞர்களுள் ஆண்களை விட இளம்பெண்களின் உயர்கல்வி வீதம் ஆறு (6) மடங்குக்கும் குறைவானதாகவே காணப்படுகிறது. மேலும், எம்மிடம் ஆபத்துக்களை தவிர்த்து குழந்தை பேற்றை நடைபெறச்செய்வதற்கான எல்லாவிதமான கண்டுபிடிப்புகளும், அதற்கான மூலதனங்களும் இருந்தபோதும், ஒவ்வொரு நாளும் கர்ப்பம் காரணமாகவோ அல்லது குழந்தைப் பேறில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாகவோ ஒவ்வொரு 90 வினாடிகளுக்கும் ஒரு பெண் இறந்துகொண்டிருக்கிறாள்.

உலகத்தின் எந்த முனையை எடுத்துக்கொண்டாலும், ஆண்களை விட குறைவான சம்பளத்தையே பெண்கள் பெறுகின்றார்கள். ஆண்களுக்கு நிகரான கல்வியறிவு, தொழில்திறன் மற்றும் ஆற்றலைக் கொண்டிருந்த பேதிலும் வேளையிலும் ஆண்களைப் போன்றே ஒரேதொழிலை, சமபதவியை வகிக்கின்ற போதிலும் கூட இன்னிலையே காணப்படுகின்றது. அதிகமான நாடுகளில் நிலவுரிமை, சொத்துரிமையிலும் சமத்துவமின்மையே காணப்படுகின்றது. பெண்ணுரிமைப் போராட்டங்கள் மூலம் நாம் மறுக்கமுடியாத முன்னேற்றங்களை அடைந்திருந்தபோதும், இன்று உலகில் பாராளுமன்ற தேர்தல்களில் 19 வீதமான பெண்களும், அமைதிக்கான பேச்சுவார்த்தைக் குழுக்களில் 8 வீதமான பெண்களும், அரச அதிபர்களாக அல்லது அரசாங்கத்தின் தலைமைப்பீடத்தில் 28 பெண்கள் மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

மனிதகுலத்தின் அரைபங்கினரான பெண்களது திறமையும், சக்தியையும் பயன்படுத்த முடியாதவாறு ஒடுக்குமுறைகள் இருக்கின்றது. இதனால் பெண்ணினம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமுமே இந்த பாதிப்பிற்குள்ளாகின்றது. அந்த வகையில் நமது ஜனநாயக விழுமியங்களையும், பொருளாதார வளங்களையும், எமது சமூக நலன்களையும், சமாதானத்திற்கான நமது கடின உழைப்பையும் நாம் பலவீனப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்தவருட சர்வதேச பெண்கள் தினத்தினூடாக கல்வி, தொழிற்பயிற்சி, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றில் சமவாய்ப்பு அளிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாட்டையும் பிரதானமாகக் கொண்டுள்ளது.

பாலியல் சமத்துவம், பெண்களின் உரிமையை அடையச் செய்தல் என்கின்ற இரண்டுமே உலகத்தின் இரு பெரிய கடப்பாடுகளாகும். வடக்கானாலும் சரி, கிழக்கானாலும் சரி, ஏழை நாடானாலும் சரி, பணக்கார நாடானாலும் சரி இது ஒவ்வொரு நாட்டினதும் பெரும்கடமையாகும். “ஐக்கியநாடுகள் சபையின் பெண்களுக்கான அமைப்பு” என்கின்ற புதிய கிளையை உருவாக்கியதன் மூலம், இந்த பிரச்சனையை ஐக்கியநாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதற்கான தீர்வுகளுக்கும் தன்னுடைய சேவையை செய்ய முனைந்துள்ளது. இந்த அமைப்பானது, ஏற்கனவே இந்தவகையான தேவைகளுக்காக ஐக்கியநாடுகள் சபையினால் அமைக்கப்பட்ட நான்கு அமைப்புக்களின் கூட்டே இந்த புதிய அமைப்பாகும்.

இந்த புதிய அமைப்பின் நோக்கம், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே சமத்துவத்தைக் கொண்டுவருவதுதான். அதற்காக ஐக்கியநாடுகள் சபையின் அனைத்துவகையான கிளைகளும் ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்போது, ஒரு நாள் ஐக்கியநாடுகள் சபையின் யாப்பில் புதிதாக எழுதப்பட்ட இந்த “ஆண்கள் பெண்களுக்கான சமத்துவம்” என்கின்ற உறுதிமொழிக்காக நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். ஆகவேதான் இந்த அமைப்பைக் கொண்டு நடாத்தும் பொறுப்புமிக்க பதவி எனக்கு கிடைத்தமை பெரும் வரப்பிரசாசம் ஆகும். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதற்காக போராடுவேன்.

ஒரு இளம் தாயாகவும், குழந்தை மருத்துவராகவும் இருந்தபோது, நாளாந்தம் பெண்கள் குடும்பவாழ்க்கைக்கும், அவர்களது தொழிலுக்குமிடையில் ஒரு சமநிலையைப் பேணுவதற்கான போராட்டத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். ஒரு பெண் சம்பளத்திற்கு வேலைக்கு செல்வதற்கு இந்த குழந்தைப் பராமரிப்பு என்பது எவ்வளவு தடையாக இருக்கின்றது என்பதை நானறிவேன். பெண்களினுடைய இவ்வாறான பிரச்சனைகளுக்கு எதையாவது செய்யவேண்டும் என்கின்ற எனது விருப்பமே நான் அரசியலில் நுழைவதற்கும் ஒரு காரணமாகும். சமூகநலச் சேவைகளை விரிவாக்குவதற்கும் குழந்தைகளின் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியலை நான் ஆதரித்தேன்;. அதனால்தான் நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கான சமூக பாதுகாப்பு சேவைக்கு முன்னுரிமை கொடுத்தேன்.

பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையேயான சமத்துவத்திற்காக ஒரு ஜனாதிபதியாக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். அவர்கள் தங்களுடைய தகுதி, அனுபவம் என்பவற்றை ஒரு சமாந்தரமான முறையில் பயன்படுத்தியதனால்தான் என்னுடைய நாடு எதிர்கொண்ட சவால்களுக்கு எங்களால் முகம்கொடுக்க முடிந்தது. அதனால்தான் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கை கொண்டதான ஒரு அரசாங்கத்தை நான் கட்டியமைத்தேன்.
ஐக்கியநாடுகள் சபையின் பெண்களுக்கான அமைப்பின் பணிப்பாளராக எனக்குக் கிடைத்த இந்த ஆணையை என்னுடைய அறிவு, என்னுடைய குழுவினரின் அனுபவம் என்பவற்றுடன், உலகத்தை உண்மையான பாலியல் சமத்துவத்தை நோக்கி முன்னேறுவதற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த சீரிய நோக்கத்தை அடைவதற்காக நாம் ஆண்கள், பெண்கள், தலைவர்கள், குடிமக்கள், சிவில் சமூகம், தனியார் நிறுவனங்கள், மற்றும் ஒரு நாட்டின் முன்னேற்றம், சமாதானம் கருதி, ஐக்கிய நாடுகள் சபையின் சமூக, அரசியல், நிதி போன்ற அனைத்துவகை செயற்பாடுகளுடனும் நாம் மிக நெருக்கமாக இணைந்து செயலாற்றவேண்டும்.

பெண்கள், அவர்களுக்கு தருணம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் மிக சிக்கலான பிரச்சனைகளையும் கூட மிக லாவகமாக கையாண்டுள்ளனர். பெண்களுக்குள் இருக்கின்ற சக்தி, விவேகம், பொறுமை என்பன இன்னும் பயன்படுத்தப்படாத உயர்ந்த மனிதவளங்களாகும்.
பெண்களுக்கேயுரிய இவ்வளங்களை வெளிக்கொண்டுவருவதற்கும், பயன்படுத்துவதற்கும் நாம் இன்னும் 100 வருடங்கள் காத்திருக்க முடியாது.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்