/* up Facebook

Mar 31, 2011

இந்துத்துவம் : தலித்கள் பெண்கள் - மஞ்சுளா நவநீதன்இந்துத்துவ சக்திகள் எப்படி பெண்களையும் , தலித்களையும் நசுக்க முற்படுகின்றன என்பது பற்றிய மார்க்ஸின் பார்வைகள் - பூச்சாண்டிகள் என்பது சரியான வார்த்தையாய் இருக்கும் - இந்த அத்தியாயத்தில். எப்படி இந்துத்துவ சக்திகள் மனுதர்மத்தைத் திரும்பக் கொண்டுவரப் போகின்றன என்பது பற்றியும், அது எப்படி தலித்களுக்கும் பெண்களுக்கும் எதிரி என்பதை மிக விரிவாகச் சொல்கிறார். ஆனால் அதே சமயம் 'பா ஜ க போன்ற தேர்தல் களத்தில் செயல்படக் கூடிய கட்சிகள் எல்லாச் சமயங்களிலும் மனுவை நிலைநாட்டுவது தான் தங்களின் நோக்கம் என்று சொல்லிவிடமுடியாது. எனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் தார்மிக வாழ்வு , ஸ்வதர்மம், தருமம், படிநிலையாய் ஒழுங்கமைக்கப்பட்ட 'சன்ஸார ' ஆகியவற்றை விதந்தோதுவதைக் காணலாம். ' என்றும் சொல்கிறார். அதாவது மனுதர்மத்தினை இந்தியாவில் நிலைநாட்டுவது தான் பா ஜ க-வின் மறைமுக நோக்கம் என்று குற்றம் சாட்டுகிறார்.

பாஜக-வின் நோக்கம் என்னவாய் இருக்கலாம் என்பதற்கு , மனுவை ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் புகழும் ஒரு நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். மனுவிற்கு கோயிலைப் புதுப்பித்ததையும் சுட்டிக் காட்டுகிறார். மனுவின் விதிகள் கல்லில் எழுதப்பட்டவையல்ல. அந்தக் காலத்தின் வரம்புகளுக்குள் ஏற்பட்ட ஒரு சமூக ஏற்பாடு. எல்லா யுகங்களுக்கும் இது பொருந்தி வரும் என்றோ, கடவுள் கையளித்த நியதிகள் என்றோ ஒரு வரி கூட மனுதர்மம் புத்தகத்தில் கிடையாது. அன்றைய மன்னராட்சிக்குத் தக்க சமூக அமைப்பினைக் கட்டிக் காட்ட ஏற்பட்ட ஒரு 'ஸ்மிருதி ' இது. 'ஸ்மிருதி ' என்பதன் பொருளே இது நினைவிலிருந்து எழுதப்பட்ட ஒரு ஆவணம் என்பதாகும். மனுவிற்குக் கோயிலைப் புதுப்பித்ததை, ராஜ ராஜசோழனுக்கு கருணாநிதி சிலை எழுப்பியதுடன் ஒப்பிடலாம். பழம்பெருமை பேசும் மனநிலையில் எழுந்த ஒரு செய்கை இது. நவீன உலகில் இதற்கு எதுவும் அர்த்தமில்லை என்பது, கருணாநிதிக்கும் தெரியும். ராஜராஜ சோழனின் மன்னராட்சியைக் கருணாநிதி கொண்டுவரப்போகிறாரா ? 10000 விலைமாதர்களைக் குடியேற்றப் போகிறாரா என்று கேட்பது எப்படி அர்த்தமற்ற ஒரு கேள்வியோ அதே போன்ற அர்த்தமற்ற கேள்விதான், மனுவிற்குக் கோயில் புதுப்பித்ததன் பின்னால் இல்லாத அர்த்தங்களைக் கற்பிப்பதும். தென்னாட்டில் மனு நீதிஎன்பது , வெறுமே சுயச்சார்பற்ற நீதிஎன்ற அர்த்தத்தில் தான் புழங்கி வருகிறதே தவிர பிராமணிய ஆவணமாக அல்ல. இது சமூகவியல் நோக்கில் சமகால ஆய்வு மேற்கொள்ளும் யாருக்கும் எளிதில் புலப்படும் விஷயம். ஆனால் மார்க்சுக்குத் தான் இது விளங்கவில்லை.

ஆண் பெண் வேறுபாடு பற்றி , இந்துத்துவ அமைப்புகள் சொல்வதாய் மார்க்ஸ் கூறும் விஷயங்களும் கூட எல்லா மதங்களின் கீழும் உள்ளவை தான். கத்தோலிக்கர்கள் இன்னமும், அதிகார மேல்நிலையில் உள்ள பாதிரியார்கள் பதவிக்கு பெண்கள் வருவதை அங்கீகரிக்கவில்லை. முஸ்லீம் பெண்களுக்கு ஆண்களுடன் சேர்ந்து தொழும் உரிமையும் இல்லை. இவற்றைப் பார்க்கில் கடந்த 100 வருடங்களில் இந்து சமூகம் பாரதூரமான மாற்றங்களைப் பெண்களைப் பொறுத்தவரையில் நடைமுறைப் படுத்தி வருகிறது. பங்காரு அடிகளின் இயக்கத்தில் பெண்கள் முன்னணியில் இருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம். விடுதலைப் போராட்டத்தில் இந்துப் பெண்கள் பங்கும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்று. ஆனால் மார்க்ஸின் குருட்டுப் பார்வையில் இதெல்லாம் படுவதே இல்லை.

'நைரோபியில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெண்களது வீட்டு வேலைக்கு ஊதியம் தரவேண்டும் என்ற கோரிக்கையும், லெஸ்பியனிசத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ' இந்துத்துவ சக்திகள் தீவிரமாய் எதிர்த்ததாய்ச் சொல்கிறார் மார்க்ஸ். அவர் சொல்லாமல் விடுவது, நைரோபியிலும் சரி , சீனாவிலும் சரி பெண் உரிமைகளுக்கு எதிராக அமைப்பு ரீதியாய் மிகமிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது கத்தோலிக்கத் திருச்சபையும், இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளூம் தான்.

'இப்போது தலித் பிரசினைக்கு வருவோம் ' என்கிறார் மார்க்ஸ். தலித் பிரசினையை இந்து எதிர்ப்புப் பிரசினையாய் ஆக்குவதற்கான முயற்சிகள் அம்பேத்கர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விமர்சனம் இந்து சமூகத்தில் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அதிகாரப் பீடங்களில் தலித்கள் இடம் பெறுவது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து வருகிறது. முழுமையான அங்கீகாரம் இன்னமும் கிட்டவில்லை என்றாலும், 100 வருடங்களில் இந்து சமூகம் அடைந்திருக்கும் மாறுதல், நிச்சயமாய் இந்தியாவிற்கும், இந்து சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பது தான்.

அம்பேத்கரின் விமர்சனத்தை மையப் படுத்தி, இந்து மதத்தை விமர்சிக்கப் பயன் படுத்திக் கொள்ளும் மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாம் பற்றி அறிவுபூர்வமாய் அம்பேத்கர் சொன்ன விமர்சனங்களைப் பூசி மெழுகுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

'தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடாய் விளங்கும் அம்பேத்கர் , பூலே போன்றோரை இந்துத்துவச் சொல்லாடலுக்குள் அடக்க முனைதல் ' என்பது ஒரு குற்றச் சாட்டய் மார்க்ஸ் முன்வைக்கிறார். அம்பேத்கரை இந்துவாய்ச் சித்தரிப்பதில் உள்ள முரண்பாட்டைப் புரிந்துகொள்ளலாம், ஆனால் பூலே தன்னை இந்துவாய் இனம் கண்டவர் தான். அம்பேத்கர் போன்று மதமாற்றம் பற்றிப் பேசியவர் அல்ல பூலே.

முஸ்லிம்களுக்கும் தலித்களுக்குமான ஒற்றுமை இயல்பானது என்பதற்கு மார்க்ஸ் சொல்லும் ஒரு காரணம் : 'கிராமப் புறங்களில் தலித்களுக்குத் தேவையான மாட்டுக் கறியை இஸ்லாமியக் கசாப்புக் கடைக் காரர்களே தொடர்ந்து அளித்து வருகின்றனர். ' இது பற்றி என்ன சர்வே எடுத்தார் என்று தெரியவில்லை. பன்றிக்கறியை உண்கிறார்கள் என்று தலித்கள் மீது வெறுப்பை உமிழும் இஸ்லாமியர்களும் உண்டு. இது போன்ற பொறுப்பற்ற பொதுமைப் படுத்தல்கள், ஒற்றுமையை வளர்க்க உதவாது.

இந்த அத்தியாயத்தில் கடைசியில் அவர் தரும் ஒரு கருத்து இது: 'இந்துத்துவத்தின் ஆதாரமாக விளங்கும் பார்ப்பனியத்தை 'ஒதுக்குதலும் ஒதுங்குதலும் ' என வரையறுத்ததால், அதற்கெதிரான செயல்பாடு ஐக்கியமாதலும் அத்து மீறலுமாகவே இருக்க முடியும். தலித்கள் முதலில் தங்களுக்குள்ளும் பிறகு சிறுபான்மையினருடனும் பிறகு இதர ஒடுக்கப்பட்ட சக்திகளுடனும் இந்துத்துவத்திற்கு எதிராக ஐக்கியமாதல் , இந்து தரும அடிப்படையில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வெளிகளிலிருந்து அத்து மீறுதல் (எ கா: சுடுகாடு, கோயில் கருவறை) என்பதாக இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும். மதத்தாலும் ஆணாதிக்கத்தாலும் , சாதீயத்தாலும் கறைபட்டுப் போன நமது மொழி, பாரம்பரியம் , கலாச்சாரம் என எல்லாவற்றிலும் இந்த அத்துமீறல்கள் மேற்கொள்ளப் பட வேண்டும். ஒழுக்கம், சுத்தம், தீட்டு, அழகு போன்ற கறைபட்டுப் போன கருத்தாக்கங்கள் கவிழ்க்கப்பட வேண்டும். அரசியல் , பொருளாதாரம், கலாச்சாரம், கருத்தியல் எனப்பல தளங்களில் மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி என்ற கருத்தாக்கங்களுக்காக நடைபெறும் போராட்டங்களில் தங்களுக்கான அர்த்தங்களை நிலை நாட்டுவதில் தலித்கள்+பெண்கள்+சிறுபான்மையினர் முன்னணியில் நிற்கவேண்டும். இதர ஒடுக்கப்பட்ட மற்றும் சனநாயக சக்திகள் அவர்களோடு இணைந்து நிற்கவேண்டும். '

Pompous hyperbole - மிகப் பெரிதான ஒரு ஊதிப் போன சுய முக்கியத்துவத்தில் எழும் இந்த அறிவுரை , சமகால நிதர்சனங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒரு வெற்று வாசகம். பார்ப்பனீயம் இந்து மதத்தின் ஆதாரம் என்ற ஒரு பொய். அதைத் தொடர்ந்து, தீட்டு, ஒழுக்கம் என்ற கருத்தாக்கங்கள் கவிழ்க்கப் படுமானால், இஸ்லாமியர்கள் இந்தக் கவிழ்த்தலுக்கு தலித்களுடன் துணை நிற்பார்களா ? 'மதத்தாலும் ,சாதீயத்தாலும் கறைபட்டுப் போன நம் மொழி ' என்பதற்கு ஏதாவது பொருள் இருக்கிறதா ? எல்லா மொழிகளும் இப்படிப் பார்க்கப் போனால் , இனவாதத்தினாலும், 'மற்றவர் ' மீதுள்ள வெறுப்பினாலும் கறைபட்டவையே. இந்தக் கறையல்ல ஒரு மொழியின் அடையாளம். ஒரு மொழியின் ஒரு மூலையில் கிடக்கும் கறையினால் மொழி முழுதுமே கறைபட்டதாய்ச் சொல்ல முடியுமா ? 'சாதி இரண்டொழியெ வேறில்லை ' என்பதும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர் ' கூடத் தமிழ் தான்.

இந்தக் கறையைப் போக்குவது என்பது, படைப்பு மற்றும் மொழி ஆக்கத்தினால் ஆகும் , சமூக இயக்கங்களினால் தான் ஆகும். அது இணைப்பிற்கான போராட்டம், தனிப்பிற்கான போராட்டம் அல்ல. 'தன்னை தலித்தாக உணர்வது ' என்பதும் கேட்கக் கவித்துவமாய் இருக்கலாம். ஆனால் நடைமுறை சாத்தியமா ?

தங்களுக்கான வெளிகளிலிருந்து அத்து மீறுதல் என்பதை நான் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்கிறேன். சுடுகாடு, கக்கூஸிலிருந்து தலித்கள் வெளியேறத்தான் வேண்டும். கருவறை நுழைவுப் போராட்டம் என்று முரசறைந்து கொண்டு புரட்சிகரமாய்த் தன்னைக் காண்பித்துக் கொண்ட இயக்கம் கூட, கக்கூஸையும் , சுடுகாட்டையும் விட்டு வெளியேறுங்கள் என்று போராட்டம் நடத்தவில்லை. மார்க்ஸ் சொல்லும் முற்போக்கு இயக்கங்கள் இது பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை என்பது, இந்த வேலைப் பகிர்வை மட்டும் பாதுகாப்பதில் தான் மும்முரமாய் இருக்கின்றன என்பதும் மார்க்ஸ் சொல்வதில்லை. இந்துத்துவ இயக்கங்களின் மீது வீசும் சவுக்கைக் கொஞ்சம் நிறுத்தி தன்னைச் சுற்றிலும் அவர் பார்த்திருக்கலாம். அப்போது நிஜமான எதிரிகள், நண்பர்கள் போன்று பாவனை செய்யும் எதிரிகள் யார் என்று தெரிந்திருக்கும்.தலித்கள் ஏற்கனவே ஒதுக்கிட்டின் கீழ் பயன் பெற்றால் , இது வரை பயன் பெறாத தலித்களைக் கருத்தில் கொண்டு ஒதுக்கீட்டு விதி சீர்செய்யப் படவேண்டும் என்பது கூட இங்கு இன்னும் பின்பற்றப் படாமல் இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட / மிகப் பிற்படுத்தப் பட்ட சாதியினர் என்று ஒதுக்கீடு கேட்கும் சாதியினர் தான் இன்று தலித்கள் மீது கொடூரத்தினை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் மார்க்ஸ் பார்ப்பனீயத்தை மட்டும் சாடி விட்டு பொதுவான பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை என தலித்களிடம் பொய்ப்பிரசாரம் செய்வார்கள். இன்று தலித்களின் எதிரிகள் பிராமணர்கள் அல்ல.

நன்றி - திண்ணை
...மேலும்

Mar 30, 2011

சீன மரபு காட்டும் ஒருபால் உறவு - ஜெயந்தி சங்கர்


மிஜி ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி, பாதி கடித்த அந்தக் கனியை அரசருக்குக் கொடுக்க, அவர் அதை வாங்கிச் சுவைத்தபடியே, “ஆஹா ! பழத்தை நான் ருசிக்க வேண்டும் என்பதில் உனக்குத்தான் எத்தனை அக்கறை ! உனது பசியை விட என் மீதான காதலே உனக்குப் பெரிதாக இருக்கிறதென்றறிந்து யாம் மிக மகிழ்ந்தோம்” என்று கசிந்துருகுவார்.

பிற்கால எழுத்தாளர்களில் பலர் ஓரினச்சேர்க்கை குறித்தெழுதும்போது ‘பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்’ என்ற குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்விருவரிடையே நிலவிய ஒருபாலுறவு குறித்து வரலாற்று வல்லுனர் ஹான் ஃபெய் பதிந்திருக்கிறார். பெற்றவள் உடல் நலமில்லாமல் இருந்தாள் என்றறிந்ததும், மிஜி ஸியா அரசரின் ரதத்தை அனுமதி பெறாமல் உரிமையோடு எடுத்துக்கொண்டு பறந்து சென்று பார்த்ததை அவனது தாய்ப் பாசம், அன்னை மீதான பக்தி என்றெல்லாம் பாராட்டுவார். பின்னாளில் காதலனுடைய அழகனைத்தும் மங்க ஆரம்பித்ததும் அவனைப் பிடிக்காமல் போய் அவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தும்போது அச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, தன் ரதத்தை அவன் திருடியதாகச் சொல்வார். பாதி கடித்த பழத்தைக் கொடுத்ததையும் குற்றமாகவே சொல்வார். அவன் அவரிடம் முன்பு போலவே பிரியமாக இருந்தாலும் அவன்மீதான அரசரது ஈர்ப்பு மறைந்துவிடும். இதேபோல தொடக்கத்தில் அழகன்களுடைய வசீகரமும் புத்திசாலித்தனமும் மன்னர்களாலும் பிரபுக்களாலும் போற்றப்பட்டு பின்னாளில் அவர்களால் தூற்றவும் பட்டன.

சீனப் பெருந்தேசத்தில் முற்காலம் தொட்டே தன்பால் ஈர்ப்பும் உறவும் நிலவி வந்தற்கான வரலாற்றுப் பதிவுகள் நிறையவே இருக்கின்றன. ஹான் முடியாட்சிக்கு முன்னரே வாரிங் ஆட்சியில் எண்ணற்ற அரசியல் அறிவுரைகள் மற்றும் கதைகளின் தொகுப்புகள் கிடைத்துள்ளன. ஓரின நாட்டமுடைய ஆண்கள் பற்றிய பதிவுகளை ஒப்புநோக்க பெண் மீது ஆசைப்படும் பெண்கள் பற்றிய பதிவுகள் அரிதாகவே கிடைக்கின்றன. அதுவும் இலைமறை காய் மறையாகச் சொல்லப்பட்டுள்ளன.

பொதுவாகவே, மன்னர்களின் பாலுறவு குறித்து பதியப்பட்டவற்றிலிருந்து சீன வரலாற்று நிபுணர்கள் ஒரு பொதுப் புரிதலைக் கொடுக்கிறார்கள். அதாவது, ஓர் அரசனின் ஒருபாலீர்ப்பு பற்றி எழுதப்பட்டிருந்தால் அவனில் எதிர்பார்ப்பு குறைவு என்றே கொள்ள வேண்டும். நேர்பால், எதிர்பால் ஆகிய இருவித பாலுறவும் கொண்டவர்கள்தான் முற்காலத்தில் பரவலாக இருந்திருக்கிறார்கள். மன்னனின் விருப்பம் ஆண் துணை மீதிருக்கும் சூழலில் அரண்மனை அந்தப்புரங்களில் தனிமையில் தவிக்கும் பெண்களிடையே ஓரினச்சேர்க்கைகள் தோன்றிய நிகழ்வுகளும் யிங் ஷாவ் (கி.பி 140-206) போன்றவர்களின் சில பதிவுகளில் கிடைக்கின்றன.

வாரிங் காலத்தில் (கி.மு 841 - 221) மோ ட்ஸு அன்றைய அரசர்களைப் பற்றி மிக விரிவாகத் தனது கண்டனத்தைப் பதிகிறார். தமது உறவினர்களைத் தவிர தமக்கு மிகப் பிடித்த அழகிய ஆண்களை அரசதிகாரிகளாக நியமிப்பதால் நிர்வாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதே இவரது முக்கிய குற்றச்சாட்டு. குறிப்பிட்ட ஓர் அரசரையோ சிற்றரசரையோ மட்டும் சொல்லாமல் ‘இன்றைய அரசர்களும் பிரபுக்களும்’ என்பது போன்ற சொற்றொடர்களின் மூலம் பொதுவாகவே பேசுகிறார். இவர் ஓரின ஈர்ப்புக்கு எதிரானவரில்லை. வேறுபாடுகள் காட்டும் அரசர்களின் போக்கைத்தான் கண்டிக்கிறார். ஒருவர் மீது அரசர் கொள்ளும் கண்மூடித்தனமான பற்றையும் அது கொணரும் கூடுதல் சலுகைகளையுமே இவர் விமரிசிக்கிறார். இவரது எழுத்துக்களிலிருந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருபால் காதல் இருந்திருக்கிறது என்பதையும் அதை அச்சமூகம் மிக இயல்பாக எடுத்துக் கொண்டிருந்தது என்பதையும் அறிய முடிகிறது. வாரிசைப் பெற்றெடுக்க மட்டும் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஆண்களுடன் பாலுறவு கொண்டு வாழ்ந்த, பெண்கள் மீது ஈடுபாடே இல்லாத அரசர்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள்.

வேய் அரசரும் லோங் யாங் பிரபுவும் மீன் பிடிக்கவென்று படகோட்டிச் சென்றனர். திடீரென்று பிரபு அழ ஆரம்பித்தார். அரசர் ஏனென்று கேட்டதும் பெரியமீன் ஒன்றைப் பிடித்தேனென்றுரைத்தார். அதற்கெதற்காக அழுகிறாய் என்று மீண்டும் வினவியதும், “முதலில் ஒரு மீனைப் பிடித்தபோது மகிழ்ந்தேன். ஆனால், அடுத்ததாய் மேலும் இன்னொரு பெரிய மீனைப் பிடித்ததுமே முதலில் பிடித்த சிறுமீனை நீரில் விட நினைத்தேன். அப்படி நினைத்த தவறுக்காக உங்களுடைய படுக்கையிலிருந்து விரட்டப்படுவேனென்று நினைத்ததுமே எனக்கு அழுகை வந்து விட்டது. ஏற்கனவே நாட்டிலுள்ள எண்ணற்ற அழகிகள் நான் உங்களோடு நெருக்கமாக இருப்பதைக் கண்டு என்மேல் பொறாமை கொண்டிருக்கிறார்கள். பிடித்த மீனை நான் விட்டது போல ஒருவேளை என்னையும் தாங்கள் விட்டுவிடுவீர்கள் என்றால் நான் எப்படி அழாமல் இருப்பது?” காதலனைத் திருப்திப்படுத்தி மகிழ்விக்க, மற்ற அழகிய இளம்பெண்களைப் பற்றி இனி தன்னிடம் வந்து பேச முற்படுவோருக்கு மரண தண்டனை நிச்சயம் என்று அரசவையில் ஆணையிட்டார்.

சீனத்தில் நிலவும், ‘நிலத்தில் எத்தனைதான் மாடு போல உழைத்தாலும் சரியான வானிலை போன்ற மாயம் வேறொன்றில்லை. எத்தனை ஊழியம் செய்தாலும் நாடாள்வோனின் பிரியத்தைப் பெறுவதில் கிடைக்கும் லாபமே வேறு’ என்ற முதுமொழிக்கு மிக உறுதியான பின்னணியுண்டு. வரலாறெங்கும் பெண்கள் மட்டுமே நாடாண்டோரை வசீகரித்து மயக்கியதில்லை. அரசதிகாரிகள், அரண்மனைச் சேவகர்கள் உள்ளிட்ட ஆண்களும் தமது அழகாலும் ஆற்றலாலும் நாடாண்டோரின் சிந்தையை நிறைத்து அவர்களிடமிருந்து சலுகைகளையும் பிரியத்தையும் பெற்று மேலும் நெருங்கினர். இச்சையால் நெருங்கியவர்களைக் காட்டிலும் இச்சையைத் தூண்டி அதிகாரத்தைப் பெற்றவர்களே அதிகம். வெறும் வசீகரத் தோற்றத்தையும் அதிகாரத்தையும் மட்டுமே நம்பி இவர்கள் இவ்வாறு காய் நகர்த்தியதில்லை. ஒவ்வொருவரிடமும் பாடுவது, இசைப்பது, நடனமாடுவது, நடிப்பது, இயற்றுவது, தீட்டுவது போன்ற ஏதோவொரு தனித்துவ கலையாற்றல் இருந்தது.

பான் ஜாங் மிக அழகிய தோற்றம் கொண்டவன். எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். ச்சூ மாநிலத்தின் வாங் ஜோங்ஸியான், அவனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனைச் சந்திக்க வந்தார். அவனது எழுத்தாற்றலை நேரில் காண்பதே அவரது வருகையின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதன் பிறகு, அவனுடன் சேர்ந்து கல்வி பயில விரும்பினார். முதல் பார்வையிலேயே இருவரிடையே காதல் அரும்பியதென்பதே வரலாறு. அளவற்ற நெருக்கத்துடன் கணவன்- மனைவி போல ஒரே படுக்கையையும் ஒரே தலையணையையும் உபயோகித்தனர். இருவரும் சேர்ந்தே இறந்தனர். லோஃபூ மலையில் அவர்களைச் சேர்த்துப் புதைத்த இடத்தில் நீண்ட கிளைகளும் பசிய இலைகளுமாய் ஒரு மரம் உடனே தோன்றியது. ‘ஒற்றைத் தலையணை மரம்’ என்று அழைக்கப்பட்டது.

ஸிமா ச்சியான் என்பவர் ஹான் முடியாட்சியின் (கி.மு206 - கி.பி220) வரலாற்றைப் பதிந்த முதல் நபர். இவர் தொடங்கி வைத்த வடிவ முறையில்தான் எல்லா வரலாற்றுப் பதிவுகளும் பிற்காலங்களில் பதியப் பெற்றன. இவரது பதிவுகளில் அரசர்களிடையேயான ஓரினச்சேர்க்கை பற்றிய ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஹான்னின் 25 அரசர்களில் 10 பேர் பாலுறவுத் தோழர்களாக அழகிய ஆண்களைக் கூடவே வைத்திருந்தனர். மாமன்னர்கள் காவ் (கி.மு 206-195) மற்றும் ஜிரு, ஹ்யூ (கி.மு 194-188) மற்றும் ஹோங்ரூ, வென் (கி.மு 179-141) மற்றும் டெங் டோங் & ஜாவ் டான் & பேய்கோங் போஜி, ஜிங் (கி.மு 156-141) மற்றும் ஜோ ரென், வூ (கி.மு 140-87) மற்றும் ஹான் யான் & ஹான் இயூ, லீ யான்னியான், ஜோவ் (கி.மு 86-74) மற்றும் ஜின் ஷாங், ஸுவான் (கி.மு 73-49) மற்றும் ஜாங் பெங்ஜூ, ஜுவான் (கி.மு 48-33) மற்றும் ஹோங் கோங் & ஷி ஸியான், ச்செங் (கி.மு 32-7) மற்றும் ஜாங் ஃபாங் & சுன்யூ ஜாங், ஆய் (கி.மு 6-கி.பி 1) மற்றும் தோங் ஸியான் ஆகியோர் அதிக தன்பாலீர்ப்பும் குறைந்த எதிர்பாலீர்ப்பும் தம்மில் ஒருங்கே கொண்டிருந்த முக்கிய அரசர்கள்.

மாமன்னர்களில் மிகப் பிரபலமான ஹான் வூடி ‘பட்டுச் சாலை’யை நிறுவியவர். சீனப்புத்தாண்டின் தொடக்க நாளை வகுத்தளித்த இவர் 16வயதில் அரியணையேறி 70வயதில் இறக்கும் வரை அரசாண்டவர். வாரிங் காலத்தின் அனைத்துப் பகுதிகளின் நாணய முறையையும் இணைத்து முறைப்படுத்தி ஒற்றை அரசாங்கக் களஞ்சியத்தை நிறுவியவர். அடுத்த 2000 ஆண்டுகளுக்குப் பின்பற்றப்பட்ட அரசாங்கப் பொதுத்தேர்வு முறையை அறிமுகப்படுத்திய இவருக்கு ஹான் யான் என்ற காதலன் இருந்தான். இருவரும் சேர்ந்து கல்வி பயின்று காதலையும் வளர்த்தனர். இவ்விருவரிடையேயான காதலை அடிப்படையாகக் கொண்ட ‘நீர் விளிம்பு’ போன்ற பல்வேறு ஆக்கங்கள் தோன்றின. ஹான் யான் எட்டடி ஐந்தங்குலம் உயரமிருந்தான். சீனத்தில் இந்த உயரம் மிகமிக அரியது. அரண்மனைக்குள் விரும்பியபோது வரவும் போகவும் பல இரவுகள் அரசரின் அறையிலேயே தங்கிச் செல்லவும் அனுமதிக்கப்பட்ட ஒரே ஆணான இவனிடமிருந்த போர்த் தந்திரங்கள் அரசருக்கு விருப்பமாகவும் சாதகமாகவும் இருந்தன. நாளடைவில், அரசரின் சலுகையும் அணுக்கமும் ஹான் யானுக்குள் தேவைக்கதிக கர்வத்தை ஏற்படுத்தியது. அரசியின் வெறுப்பையும் விரோதத்தையும் இயல்பாகவே பெற்றிருந்தவன் அரசரின் ஆசை நாயகிகளுடன் ரகசியப் பாலுறவு கொண்டிருந்தான். திட்டம் போட்டு இளவரசர்களின் உதவியுடன் கையுங்களவுமாகப் பிடித்த அரசி அதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினாள். தனக்குப் பிறந்த மகனா இல்லை, ஹான் யானுக்குப் பிறந்த மகனா என்றே தெரியாமல் அரியணைக்கான தனது வாரிசை எப்படி அறிவிப்பதென்ற இக்கட்டும் குழப்பமும் அவருக்கு ஏற்பட்டது. ஹான்யான்னை மரணதண்டனைக்கு உட்படுத்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவருக்கு. அவனது மரணத்துக்குப் பிறகு அவனைப் போலவே அழகிய தோற்றங்கொண்ட அவனது தம்பியை அரசர் தன் படுக்கைத் துணையாக்கிக் கொண்டு விட்டார்.

பேய் காய் (கி.மு 237-291), யூ ஸின் & வாங் ஷாவ் (கி.மு 513-581), ஜாங் ஹான்பியேன் & ஜோவ் ஸியாவ்ஷி (கி.பி 265-420) தவிர மாமன்னர்கள் ஸிஜோங் & ஜாங் லாங்கோவ் (கி.பி 874-889), வூஜோங் (கி.பி 1506-1522), ஷென்ஜோங் (கி.பி 1573-1620), ஸிஜோங் (கி.பி 1621-1628), ச்சிங் முடியாட்சியின் மாமன்னர் பூ யீ ஆகியோர் தமது ஓரினப் பாலுறவு குறித்து வெளிப்படையாக இருந்தவர்கள்.

தன் பாலுறவுகளில் நிலவும் பெரும் சிக்கல்கள்தான் உளச்சிக்கல்களை என்றென்றைக்கும் வரலாற்றில் நிலைபெறச் செய்யும் அரிய கவிதைகளைத் தோற்றுவித்தன. மூன்று அரசுகளும் ஆறு முடியாட்சிகளும் நிலவிய காலகட்டத்தில் ருவான் ஜி (கி.பி 210-263) ஸி காங்கின் காதலன். பிரபலமான கவிஞனான இவன் தன் கவிதையில் மிக அற்புத ஓவியம் போல ஓரினச்சேர்க்கையைச் சித்தரித்திருப்பான். அன்றைய கால கட்டத்தில் ஓர் ஆணுக்கு இன்னொரு ஆண்மீது இருக்கும் மையலையும் இச்சையையும் அழகுறச் சொல்லும் பல ஓரினக் காதல் கவிதைகள் அவரது ‘ஜேட் மாடம்’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கும். குட்டைக் கையின் காமம் என்ற பொருளில் ‘துவான்ஸ்யூ ஜி பி’ மற்றும் கடிபட்ட பீச் என்ற பொருளில் ‘ஃபெந்தாவ்’ போன்ற தன்பாலீர்ப்புடையோரைக் குறிக்கும் பதங்கள் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ல்யூ ஸியாவ் ஜோவ்வின் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன.

‘மிச்சமிருக்கும் கடிபட்ட பீச் பழத்தோடு/ தன்னை ஒப்பிடுவானோ என்ற பயத்தில்/ தயங்கித் தயங்கி மெதுவாய் நகர்ந்தாள்.’ஜின் ஆட்சியின் ஸ்யியன் பிரபு தனது எதிரியின் அவைக்கு மிக அழகிய வாலிபனை அனுப்பி தவறான அறிவுரை கொடுத்துக் குழப்பி தன் நோக்கத்தைச் சாதித்துக் கொண்டார். லோங் யாங் பிரபு மற்றும் வேய் அரசர் இருவரிடையே இருந்த தன்பாலுறவு இன்னொரு முக்கிய உதாரணம். மூன்றாம் நூற்றாண்டில் ஓரினச்சேர்க்கை மட்டும் அல்லது ஓரினச்சேர்க்கையும் எதிர்பாலுறவும் ஒருங்கே கடைபிடிக்கப்பட்டு வந்ததற்கான ஆதாரப்பூர்வ பதிவுகள் நிறையவுண்டு. பொருளாதார வல்லமை மிகுந்த அரச குடும்பத்தினர், அரசதிகாரிகள், பிரபுக்கள், மேட்டுக் குடியினர் என்று அனைத்து ஆண்களும் இதில் அடங்குவர். இதுவே பல்வேறு அரசியல்கள் உருவாகவும் மணமாகாத பெண்களுக்குத் திருமணத்தில் தயக்கங்கள் வருவதற்குக் காரணமானதுண்டு. கணவன்-மனைவியரிடையே பிளவுகளும் பிரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.

150களில் ஹான் சீனத்தின் அரசாங்கத்தில் ஒரு தளபதி இருந்தார். அவர் பெயர் லியாங் ஜீ. அவர் இருவிதமான பாலுறவு வைத்திருந்தவர். ஹுவோ குவாங் இவரது ஆண் காதலர். ஹுவோ குவாங்கிற்கோ ஃபெங் ஜிடு என்ற இன்னொரு அடிமை வியாபாரியின்மீது மோகம். இதெல்லாம் குடிமக்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை. ஹுவோ குவாங் இறந்த பிறகு அவரது மனைவி அடிமை வியாபாரியுடன் வாழப்போனதுதான் மக்களிடையே மிகுந்த பரபரப்புக்குள்ளாகிய விஷயம். சமூகக் கட்டமைப்பின்படி அந்த வியாபாரி ஓர் இரண்டாம் நிலையிலிருக்கும் பிரஜை. எந்தப் பெண்ணுமே இரண்டாம் பிரஜைதான். ஆகவே, இரண்டு இரண்டாம் பிரஜைகளும் இவ்வாறு வாழ்வில் இணைவதைத்தான் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஸோங் முடியாட்சியில் மேட்டுக்குடியினர் மற்றும் வணிகர்கள்தான் பெரும்பாலும் வரலாற்றுக் கோப்புகளைப் பதிந்தனர். அதனால்தான், இந்தப் பிரிவினரிடையே நிலவிய ஓரினச்சேர்க்கை குறித்து அதிகமாகக் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட எல்லோருமே வாரிசுகள் பெற்றெடுக்க மனைவிகளையும் பாலிச்சைகளுக்கு ஆண் துணைகளையும் கொண்டிருந்தனர். அவைகளில் பாடுவதற்கென்று அழகிய இளம் வாலிபர்களும், விருந்தினர்களில் தன் ஆண்மையைக் காட்ட விரும்புவோருக்கு அழகிய பாடகிகளும் இருந்தனர்.

டாங் முடியாட்சியைச் சேர்ந்த ‘உயரிய பரவசம் குறித்த செய்யுளுரைகள்’ என்பதே சீனத்தின் பாலுறவு குறித்தும் உடலுறுப்புகள் குறித்தும் அவற்றின் செயலியக்கங்கள் அளிக்கும் இன்பங்கள் குறித்தும் பேசிய முக்கிய இலக்கியம். உடலுறவில் உச்சப் பேரின்பம் பெறுவது குறித்து படைப்பாளி அறிந்த அனைத்து நிலைகளும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. எதிர்பாலீர்ப்பும் உறவும் பற்றி நிறையவே பேசுகிற இந்தப் பதிவுகளில் ஒரு பகுதி முழுக்கவே பௌத்த மடாலயங்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையுறவு கொண்ட விவசாயிகள் பற்றியும் அதிகமாக எழுதப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் அழியாமல் கிடைக்கக் கூடிய ஒரு பாலுறவு குறித்துப் பேசியவற்றில் ஆகப் பழைய ஆவணம் இதுவாகவே இருக்கும். ஆனால், எதையுமே நேரடியாகக் குறிப்பிடுவதில்லை. எல்லாமே, ‘ஒரே போன்ற இரண்டு ஜேட்’, ‘குட்டைக் கையின் காமம்’, ‘கடிபட்ட பீச் பழம்’ போன்ற சொற்றொடர்களால் சூசகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. பழம் இலக்கியங்களில் பரிச்சயமில்லாதவர்களுக்கு தலையும் புரியாது, வாலும் புரியாது என்பதால் பொருளுரைகளும் பொழிப்புரைகளும் உதவலாம்.

அந்நாட்டுச் செவ்விலக்கியத்தில் முக்கியமானதொரு சிக்கல் நிலவி வந்துள்ளது. வரலாற்றுப் பதிவுகளில் இருக்கும் பெயர்சொற்களிலிருந்து பால் வேறுபாட்டைப் பிரித்தறிவது கடினமாகவே இருக்கிறது. ஏனெனில், மற்ற மொழிகளில் இருப்பதுபோல சீனச் செம்மொழியில் ஆண்பால் பெண்பாலுக்குரிய விகுதிவேறுபாடுகள் இல்லை. டாங் முடியாட்சி கவிதைகளிலும் மற்ற கவிதைகளிலும் இதே நிலைதான். வாசிப்பவரின் மனம்போல எதிர்பாலுறவென்றோ நேர்பாலுறவென்றோ எடுத்துக் கொள்ள இடமளிக்கும்படி தான் அதிக ஆக்கங்கள் உள்ளன. முற்காலக் கவிதைகளில் கணிசமானவை பெண் குரலில் ஆண்களால் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, பதின்பருவத்து உறவுகள் திருமணம் என்ற பெயரில் பிரிக்கப்படும்போது ஆண்கள் பெண் குரலில் பிரிவின் சோகத்தையும் தாபத்தையும் எழுதினர்.

முற்காலத்தில், தேசத்தின் முக்கிய மதங்கள் எதுவும் தன்பாலுறவை பாவம் என்றுரைத்ததில்லை. ஓர் ஆண் தன் கடமைகளை நிறைவேற்றி, ஆண் சந்ததிகளை உருவாக்கி விட்டால் அவனது ஓரின நாட்டம் அவனது சொந்த அந்தரங்கமாகி விடுகிறது என்பதே கஃப்யூஷியப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சொல்வது. குல வாரிசாக ஓர் ஆண்வாரிசை உருவாக்காதவன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டானென்றால், அதைத்தான் பாவம் என்று அக்கால சமூகம் விமர்சித்தது. எதிர்பால் ஈர்ப்புடன் தன்பாலீர்ப்பும் ஒருங்கே கொண்ட மாமன்னர்கள் வரலாற்றேடுகள் நெடுகக் காணக் கிடைக்கின்றனர்.

யாங் என்ற ஆண்தன்மையை உடையவன் ஆண் என்றாலும் சிறியளவில் யின் எனும் பெண் தன்மையையும் கொண்டிருக்கிறான் என்பதே தாவோ மதத்திலுள்ளது. சில ஆண்களில் இந்த யின் மிகுந்து விடுவதுண்டு. அதனால் அவர்களில் பெண் தன்மையுடனான மெய்ப்பாடுகள் இருப்பது இயல்பு. அதொன்றும் இயற்கைக்குப் புறம்பானதல்ல. இந்த நோக்கில் தன்பாலுறவும்கூட இயற்கைக்குட்பட்டதாகவே தாவோவில் கருதுகிறார்கள். தாவோ மிக முக்கியமாக வலியுறுத்தும் யின் மற்றும் யாங்கின் சமச்சீர் எந்த அளவிற்கு இருக்கிறதென்பதைப் பொறுத்தே இதெல்லாம் அமைகிறது. இரண்டு ஆண்கள் உறவு கொள்ளும்போதும் இரண்டு பெண்கள் உறவு கொள்ளும்போதும் யாங்-யாங்- மற்றும் யின்-யின் கூட்டாகி விடுகிறது. இவ்விரண்டையும் சமச்சீரைக் குலைக்கும் அழிவுச் சக்தியாகவே காண்கிறது தாவோ.

இருந்தும், தாவோ மத தெய்வங்கள் எல்லாமே தனிமையிலோ தன்பால் தெய்வங்களுடனோ இருப்பதையே ஆலயங்களில் காணலாம் என்பது நகைமுரணாகத் தோன்றக்கூடியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மலைத் தெய்வமான ஷான்ஷென் மற்றும் பூமியைப் பராமரிக்கும் தெய்வமான துடிகோங் போன்றவற்றைச் சொல்ல முடியும். ஒவ்வொரு வட்டாரத்து ஆலயங்களிலும் இவ்விரு தெய்வங்களைக் காணலாம். பெரும்பாலும் இவ்விரு தெய்வங்களும் ஆண்பாலாகவே ஓரிடத்தில் சேர்ந்திருக்கும். மிக அரிதாகவே துடிகோங் பெண்பாலாக இருக்கும். வெவ்வேறு பாலின தெய்வங்களாக இருக்குமிடங்களில் இரண்டும் முதிய ஆணாகவும் முதிய பெண்ணாகவுமே சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ‘அசாதாரணமானது’ எனக் கருதப்படும் அனைத்துமே ‘சாதாரணம்’தான் என்று ஜுவாங்ஜி என்ற சீனத் தத்துவ ஞானி குறிப்பிடுவார். ஏனெனில், அவரது கோட்பாடுகள் முழு விடுதலை மற்றும் கட்டற்ற சுதந்திரத் தன்மைக்கே முக்கியத்துவமளிக்கின்றன. ஓரினச்சேர்க்கையாளர்கள் சுகித்த செயல் மற்றும் நிலைகளைச் சொல்லிக் குறிப்பிடுவதும் அல்லது வரலாற்றிலிருந்த ஓர் உதாரணத்தைச் சொல்லிக் குறிப்பிடுவதும் வழக்கில் இருந்திருக்கிறது.

வூ ட்ஸாவ் 1800ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்தார். இவர் பிறந்த, இறந்த தேதிகள் துல்லியமாகத் தெரியவில்லை. வணிகரின் மகளான இவர் தானும் ஒரு வணிகரையே மணந்தார். தன் வாழ்வில் வந்த இவ்விரு ஆண்களிடம் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகக் கசப்பானவை. ஆணினத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பினால், நண்பர்களாகவும் பாலுறவு இணைகளாகவும் வூ ட்ஸாவ் மற்ற பெண்களின் துணையையே எப்போதும் விரும்பி நாடினார். தன் வாழ்வின் பிற்பகுதியைத் தனிமையில் கழித்த வூ ட்ஸாவ், தாவோ மதப் புரோகிதரானார். முற்பகுதியில் ஏக்க உணர்வுகள் தூக்கலாக இருந்த காமவுணர்வு சொட்டிய ஏராளமான கவிதைகள் எழுதியிருக்கிறார். மற்ற பெண் கவிஞர்களைப்போல இல்லாமல் இவரது கவிதைகள் பல்வேறு பாடுபொருள்களைக் கொண்டிருந்தன. எளிய மொழி, அந்தரங்க தொனி போன்றவற்றுடன் பன்முகத் தன்மை கொண்டிருந்தன. தான் வாழ்ந்த காலத்திலேயே பிராபல்யமும் புகழும் அங்கீகாரமும் பெற்ற இவரது கவிதைகள் சீனமெங்கும் பாடப்பட்டும் ரசிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. தன்பாலீர்ப்பு கொண்ட சீனத்தின் மிகப் பெரும் கவிஞராகக் கருதப்படுகிற இவர் மேலை நாடுகளில் பெண்களிடையேயான ஒருபாலுறவு கருத்தரங்கங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகிறார். (Kenneth Rexroth and Ling Chung - ஆங்கில மொழியாக்கம் செய்த) வூ ட்ஸாவ் எழுதிய ‘விலை மகள் ச்சிங் லின்னுக்கு’ என்ற கவிதை-

சொர்க்கத்தின் பச்சைப் பவள நகரிலிருந்து கீழிறங்கி வந்த / தேவலோக மங்கை போல்/ உனது மென்னுடல் மீது / பச்சை சிவப்பு பவள ஆபரணங்கள் கிணுகிணுக்கும். / நாம் சந்திக்கும் கணத்தில் உனது ஒற்றைப் புன்னகை / ஒவ்வொரு சொல்லையும் மறந்து பேசாமல் நிற்கச் செய்து விடும் /மூங்கில்கள் மீது சாய்ந்து / எத்தனை நேரம்தான் மலர் சேகரிப்பாய்?/ தனிமையில் உறையும் சமவெளியென/உனது பச்சை வண்ண ஆடை குளிரேறுகிறது/ விநோத எண்ணங்கள் வளர்த்தபடி தனியே நிற்கும்/ உன்னைக் கற்பனை செய்ய முடிகிறது/ சேர்ந்து குவியும் நிழல்களூடே / நறுமணம் பரப்பும் விளக்கு போல் ஒளிர்கிறாய்/ மது விளையாட்டுகள் விளையாடுகிறோம்/ ஒருவருக்கொருவர் கவிதைகள் பரிமாறியவாறே/ இதயத்தை உடைக்கும் ‘தெற்காற்றை நினைவுகூறல்’ / வரிகளைப் பாடுகிறாய்.

பிறகு,

ஒருவர் மற்றவரது அழகிய புருவங்களை வருடுகிறோம். /உன்னை முழுக்க ஆட்கொள்ள விழைகிறேன் / உனது வெண்ணை உடலையும்/ விசுவாசமிகு இதயத்தையும் சேர்த்து. /வசந்தம்!/ ஐந்து ஏரிகளை மூடுபனி மறைக்கிறது / அன்பே, செம்பட கொன்றை வாங்கி/ அழைத்துச் செல்வேன் தூர /உன்னைஇரண்டு பெண்களுக்கிடையில் இருக்கும் பாலுறவு பற்றி ‘சிவப்புப் படுக்கையின் கனவு’ என்ற பிரபல சீன நாவல் பேசுகிறது. இதை ‘கல் பற்றிய கதை’ என்றும் அழைப்பதுண்டு. கதையின்படி இரண்டு பெண்கள் மேடையில் இருவேறு எதிர்பால் பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தனர். படிப்படியாக இரண்டு பெண்களுக்கிடையே பாலுறவேற்படுகிறது. ஒருத்தி இறந்ததும் மற்றவள் அழுது அழுது மருகி தொடர்ந்து அவள் நினைவிலேயே காலங்கழித்தாள். முக்கிய தினங்களில் அவளுக்குப் படையலிட்டாள். இறந்தவள் நடித்து வந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க இன்னொரு பெண் வந்தாள். இவளை அடிக்கடி கடிந்து பேசினாள். இவளோ அவளிடம் அன்பு கொண்டாள். வந்தவள் வினயமாக, பழைய காதலியை மறந்து போனாயா என்று கேட்டபோது, “இதுவும் கணவன் மனைவி அன்பு போலத்தான். மனைவி இறந்து இன்னொருத்தியை மணந்து கொண்டாலும் முதல் மனைவியிடமும் தொடர்ந்து பிரியமும் காதலும் கொண்டிருக்க முடியும்” என்று பதிலளிக்கிறாள். வாசகருக்கு இந்த நடிகையின் மேல் இரக்கம் பிறப்பது போல எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் இன்பம், பரவசம், சோகம், ஒருவர் மேல் இன்னொருவருக்கு இருக்கும் அளவற்ற ரசனை என்று ஏராளமான உணர்ச்சிகள் கலை நுட்பத்துடன் சொல்லப்பட்டுள்ளன.

அறிஞர் பீ யுவான் மற்றும் ஸுச் சோவ் நடிகர் லீ க்யூகுவானுக்கும் இடையில் திருமணம் போன்ற பந்தம் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. பகிரங்கமாகத் தமது உறவைச் சொல்லி சபதமெடுத்த பிறகு, ‘பீ யுவானின் மனைவி’ என்றே லீ க்யூகுவான் அழைக்கப்பட்டார். அந்தத் திருமணத்தை அடியொற்றி சென் ஸென் எழுதிய ‘படிநிலைப் பூக்களைப் பிரதிபலிக்கும் அரிய கண்ணாடி’ என்ற படைப்பினால் 200 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திருமணம் சீன மக்களின் நினைவில் இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் ஓரினச்சேர்க்கை வெளிப்படையாகவே நடைமுறையிலிருந்த போதிலும் ஃபூஜியன் மாநிலத்தில் 17ஆம் நூற்றாண்டில் ஒரு விநோத திருமண முறை இருந்திருக்கிறது. இது பற்றி அறிஞர் ஷென் ஃபூ மற்றும் எழுத்தாளர் லீ யூ ஆகிய இருவரால் பதியப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் நாடோடிக்கதை பாணியில் ‘முயல் குட்டியின் ஆன்மா’ என்றவொரு நாடகமும் தோன்றியுள்ளது. வயது கூடியவர் ‘தத்தெடுக்கப்பட்ட அண்ணன்’ ‘தத்தெடுக்கப்பட்ட தம்பி’யான இளைஞனின் குடும்பத்துக்கு வரதட்சணை கொடுப்பான். பாலுறவு அறியாத கன்னித்தன்மை கொண்ட ஆண் பிள்ளைக்குத்தான் அதிக வரதட்சணை கிடைக்கும். “மூன்று கோப்பைத் தேநீர் பரிமாறுவது, ஆறு திருமணச் சடங்குகள் என்று எந்தத் திருமணத்திலும் முறையாக நடக்கக்கூடிய அனைத்துச் சடங்குகளும் இதில் நடக்கும்” என்று லீ யூ இந்தச் சடங்கை விவரிப்பார். இளையவன் பெரியவனுடைய வீட்டுக்குப் போய் விடுவான். அங்கே இருக்கும் பெற்றோர்தான் அவனுக்கு மாமியாரும் மாமனாரும். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுடன், இன்னொரு பெண் மூலம் அண்ணனுக்கு ஏற்கனவே பிறந்திருக்கக்கூடிய பிள்ளைகளை வளர்த்தெடுக்கவும் உதவுவான். வாரிசு பெற்றெடுக்கச் சொல்லி தம்பியின் குடும்பம் வலியுறுத்தும் வரை அவன் அங்கிருப்பான். ஒரே அண்ணனுக்கு ஒரே சமயத்தில் இதுபோல பல தம்பிகள் கூட இருப்பார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேலை நாட்டினர் முதன்முதலில் சீனாவுக்குப் போனபோது அங்கே மிக இயல்பாக சமூகத்தில் இருந்த ஓரினச்சேர்க்கை முறைகளைக் கண்டு அதிர்ந்து போயினர். அது குறித்து நிறையபேர் பதிந்து வந்தனர். மன உடல் விகாரங்கள் என்று வகைப்படுத்தித்தான் வெள்ளையர்களால் அப்போது அதை அணுக முடிந்தது. அவர்கள் பதிந்தவையெல்லாம், “இதுபோன்ற கேவலமான வெறுக்கத்தக்க இயல்பல்லாத செயல்களை எந்த வெட்கமுமில்லாமல் கூச்சநாச்சமுமில்லாமல் செய்கிறார்கள் சீனத்தில் அரசுயர் அதிகாரிகள். அதைப் பற்றி வெளிப்படையாகப் பொதுவில் சொல்லவும் இவர்கள் தயங்குவதில்லை. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல்லக்குடன் சேவகப்படை போகிறது. அதில் கண்டிப்பாக கண்ணைப் பறிக்கும் அழகுடன் ஓர் இளம் வாலிபன் போவான். பதினான்கு முதல் பதினெட்டு வயதில் இருக்கும் அவன் உயரிய வசீகர ஆடைகள் அணிந்திருப்பான்” என்பது போல இருந்தன.

பௌத்தத்துக்குப் பிறகு, மேலை விஞ்ஞானம்தான் சீனக் கலாசாரத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வெளி விஷயம். சமீபகாலம் வரை ஓரினச்சேர்க்கையை விநோதமென்றும் பாவம் என்றும் சொன்ன மேற்குக் கோட்பாடுகளை சீனத்தில் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அதனால், இன்றைய காலகட்டத்தில் மேலை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் ஓரினச் சேர்க்கை நவீன சீனத்தில் இழிவாகவும் அவமானமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், தனிமனித அடித்தளத்தில் அமையப்பெறும் மேலை நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களை இன்று அணுகும் விதத்தில் சீனச் சமூகத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இன்றைய காலகட்டத்திலும் சீனச் சமூகக் கட்டடம் குடும்பச் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விழுமியங்களை சீனக் கலாசாரம் ஏற்க ஆரம்பித்தபிறகுதான் தம் மொழியில் எதிர் பாலுறவையும் தன்பாலுறவையும் தனித்தனியே குறிக்க சொற்கள் இல்லாததையே உணர்ந்தனர். சமீப நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த குழப்பங்கள் உருவாகும்வரை சீனதேசத்தின் கலை இலக்கியங்களில் ஓரினச்சேர்க்கை கொண்டாடப்பட்டே வந்துள்ளது. கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் நடந்தேறிய அராஜகங்களில் நூல்கள், கவிதைகள், ஓவியங்கள் என்று எண்ணற்ற ஆக்கங்கள் தீயில் தொலைந்தழிந்தன. தப்பிப் பிழைத்த படைப்புக்கள் மிகச் சில மட்டும்தான் கிடைத்துள்ளன. பல நவீன ஆக்கங்களில் பாடுபொருள் உணர்த்துவது தன்பாலுறவா, எதிர்பாலுறவா என்று அறிவதே கடினமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், மேலைநாட்டுக் கோட்பாடுகளின் வருகைக்குப் பிறகு இலக்கிய ஆக்கங்கள் செய்த கற்றவர்களைக் கொண்ட மேட்டுக்குடியினர், பொதுவாக பாலுறவுகளைக் குறித்துப் பேசுவதே ஒருவிதத்தில் ஆபாசமென்று கருத ஆரம்பித்திருந்தனர்.

மிங் முடியாட்சி முடிந்து ச்சிங் முடியாட்சி தொடங்கிய காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சமூகக் குழப்பங்களின் காரணமாக அரசாங்கம் உறவு முறைகளைத் தனது நேரடிக் கண்காணிப்புக்குட்படுத்தியது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக அரசாங்கமே தண்டனைகளையும் அறிவித்தது. ஒரு மாதச் சிறை அல்லது 100 பிரம்படி என்பது குறைந்தபட்ச தண்டனையாக இருந்தது.

ச்சிங் அதிகாரி ஒருவர் தானிய வரி விதிக்கவென்று 1765ல் ஃபூச்சியான் மாநிலத்துக்குப் போனபோது தான் கண்டு அதிர்ந்ததை, “அதைச் சிறு கோவில் என்கிறார்கள். அங்கே இருந்த பிரதிமையில் இரண்டு ஆண்கள் இறுகத் தழுவிய காட்சி. ஒரு முகம் வயதேறி சற்றே கரடு முரடானது. இன்னொன்று பிஞ்சு முகம். சட்டவிரோத ஓரினச்சேர்க்கையில் நாட்டம் கொண்ட சில ராஸ்கல்கள் அங்கே வந்து தமக்கு அருளுமாறு வேண்டுகின்றனர். பிறகு, தமது இச்சைகள் நிறைவேற வழிபாடுகளும் செய்கின்றனர். அதற்குப் பெயர் ஹூ தியான்பாவ்வின் உதவி. வேண்டுதல் நிறைவேறிய பிறகு அங்கே மீண்டும் வந்து நேர்த்திக்கடனாக சிலையின் வாயில் பன்றிக் குடலையும் சர்க்கரையையும் தீற்றுகிறார்கள்” என்றுரைத்ததாகப் பதிவுகள் உண்டு. அந்தக் குழுவின் பெயர் ஹூ தியான்பாவ். மிரண்டு போயிருந்த அதிகாரி தன் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதி மக்களின் ஒழுக்கக் கோட்பாடுகளில் ஏதும் சிதைவுகள் உருவாகுமோ என்று மிக அஞ்சினார். சிறுமதங்களாக உருவாகக்கூடிய அவற்றைத் தடுக்க உடனடி நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தார்.எதிர் பாலீர்ப்பு கொண்டவர்கள் போல சமூகத்தில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவென்று குடும்பம் குழந்தை குட்டிகள் என்று வாழும் தன்பாலீர்ப்பும் உறவும் கொண்ட எண்ணற்ற ஆண்கள் இன்றைய காலகட்டத்திலும் இருக்கிறார்கள். தமது அந்தரங்க வாழ்க்கையில் ஓரின இச்சைகளைத் தீர்த்துக் கொள்வது இவர்கள் வழக்கம். இதற்கு முக்கிய காரணமாகச் சமூகத்தில் சொல்லப்படுவது பெற்றோர் மீதான பக்தியும் ஆண்வாரிசு பெற்றெடுக்கும் கடமையும். பெற்றோர் அவமானமாக உணர்கிறார்கள் என்பதால்தான் தமது தன்பால் நாட்டத்தை ரகசியமாக வைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான இவ்வகை ஆண்கள் தமது வாழ்வு முறையைப் போலியென்றும் பொய்யானதென்றும் நினைப்பதாகச் சொல்கிறார்கள். மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உற்றார் எல்லோரையும் ஏமாற்றுவதாக குற்றவுணர்வில் புழுங்குகிறார்கள். இவ்வாறாக குற்ற உணர்வுகளைத் தவிர்க்க சிலர் சாமர்த்தியமாக வெளிநாட்டுக்குப் போய்விடுவதுண்டு. மனைவியுடனான பாலுறவு ரசிக்காத இவர்களுக்குக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளப் பிடிக்கவே செய்கிறது. இவ்வாறான 400 ஆண்களிடம் கணக்கெடுத்ததில் 85% மணமுடித்தவர்கள். அதே போன்ற இன்னொரு கணக்கெடுப்பில் 28% பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் பாலுறவு கொண்டிருந்தனர்.

பெண்களில் தன்பாலீர்ப்பு கொண்டவர்கள் தம்மை லாஜி என்றோ லாலா என்றோ அழைத்துக் கொள்கின்றனர். சீனத்தில் இன்று சாதாரணமாகப் பயன்படும் இந்தச் சொல்லை ஆங்கிலப் பதத்தின் நேரடியான மொழியாக்கமாகக் கருதுகிறார்கள். பெண்களை விரும்பும் பெண்களும் கிட்டத்தட்ட அதேபோன்ற பிரச்சினைகளையே சந்திக்கின்றனர். என்றாலும், மணம் முடித்து ஆண்வாரிசைப் பெற்றுவிட்டால் ஆண் என்ன மாதிரி நடந்தாலும் குடும்பமும் சமூகமும் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் முக்கிய வேறுபாடு. பெண்கள் எனும்போது குடும்பமும் சமூகமும் கருணையை முற்றிலும் மறந்து விடுகின்றன. பகிரங்கமாக வெளியிடத் துணியும் பெண்கள் இப்போதெல்லாம் அதிகரித்துள்ளனர்.

தன் மகளோ மகனோ ஓரினச்சேர்க்கையாளர் என்ற விஷயத்தை அறியவரும் போது தற்கொலை வரை போகும் தமது பெற்றோர்களுக்குத்தான் உளவியல் உதவி வேண்டியிருக்கிறதென்று சொல்லும் இவர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளைச் சமாளிப்பதொன்றும் அத்தனை பெரிய சவால் இல்லை என்றே நினைக்கிறார்கள். தமது நட்பு வட்டத்தில் தம்மை யார் என்ன நினைப்பார்களோ என்ற அச்சத்திலும் தயக்கத்திலும் இன்னமும் நண்பர்களும் உறவினர்களும் சமூக ஒன்றுகூடல்களில் இவர்களைச் சேர்த்துக் கொள்ளத் தயங்கினாலும் அவர்களுடைய உள்ளார்ந்த ஆதரவு இல்லாமல் இல்லை.

பெருநகரங்களில் இருந்த ஓரினச்சேர்க்கையாளர்களில் பாதிப் பேர் திருமணம் முடித்ததோடு ஒன்றுக்கும் மேற்பட்ட பாலுறவுத் துணைகளைக் கொண்டிருந்தனர். அவ்வப்போது ஊருக்குப் போய் வரும் இவர்கள் பெருநகர மக்கள் வெள்ளத்தில் சுலபமாக இவ்வகை வாழ்க்கையை மேற்கொள்ள முடிகிறது. சொந்த ஊரில் குடும்பத்தை விட்டு விட்டு பெருநகரத்துக்குப் போய் பொருளீட்டும் நெடிய மரபு பெருஞ்சீனத்திலுண்டு. ஷென்ஜென் நகரில் வாழும் 1,50,000 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இதுபோன்ற வாழ்க்கை முறையையே கொண்டிருக்கின்றனர்.

பெற்றோர் திருமணத்திற்குப் பெண் பார்க்கவென்று கிளம்பும்போதே படிக்கிறேன், வேலைக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு வெளிநாடு கிளம்பிப் போய்விட முயல்வதே இவ்வாண்களின் வழக்கம். சொல்ல முடியாமல் தவிக்கும் பெரும்பாலோரிடையே துணிந்து சொல்பவர்களும் சிலருண்டு. அவ்விளைஞர்களுக்குப் பெற்றோரைச் சமாளிப்பது மிகவும் சிரமமாகி விடுகிறது. முந்தைய தலைமுறையால் அதைப் புரிந்துகொள்வது கடினமென்று கருதி தயங்கித் தயங்கிச் சொல்வோரும் உண்டு. சொல்லாமலே சாமர்த்தியமாகப் பெற்றோரைத் திருப்திப்படுத்தவென்று பெண்களிடம் நாட்டம் கொண்ட பெண்ணாகத் தேடிப் பார்த்து மணம் முடிக்க நினைப்போர் இப்போதெல்லாம் அதிகமாகி வருகிறார்கள். ஆனால், விவாகம் குறித்துப் பேசும் கட்டத்திலேயே பொருளாதாரம் போன்ற வேறுபல காரணிகளால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களால் அவ்வகை ஏற்பாடும் எளிதானதாக இருப்பதில்லை. சில சமயங்களில், ஓரினச்சேர்க்கையாளர் சாதாரண எதிர்பாலுறவுக்காரர் மீது மோகமோ காதலோ கொண்டு விடுவதும் உண்டு. அது போன்ற சூழல்கள் மிக அரிதென்ற போதிலும் பெரிய சிக்கல்களில் முடிகின்றன.

தொண்ணூறு சதவிகித ஓரினச்சேர்க்கையாளர்கள் முப்பது வயதாகும்போது பெரும்பாலும் பெற்றோருக்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற திருமணங்கள் பெருகியபடியேதான் உள்ளன. வேறு எதில் இருமனம் ஒத்துப் போகிறதோ இல்லையோ, இதில் இரு மனங்கள் தெளிவாகவே ஒத்துப் போகின்றன. இதுபோன்ற தன்பால் நாட்டம் கொண்ட ஆண்களும் பெண்களும் இன்றைய கணினி யுகத்தில் தேடலைப் பரவலாக்கிக் கொள்கின்றனர். பெற்றோரைத் திருப்திப்படுத்தவென்று இவ்வாறு தேடி மணம் புரியும் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்; சமூகத்தையும் ஏமாற்றிவிடுகிறார்கள். ஒருவரை மற்றவர் குற்றம் குறை சொல்லாமல் குடும்பத்தில் எந்தக் குழப்பமோ பிரச்சினையோ இல்லாமல் சாமர்த்தியமாகச் சமாளிக்கிறார்கள். பரஸ்பரப் புரிதல் ஆரம்பத்திலிருந்து இருந்து விடுவதால், அவரவர் வழியில் தம் இணைகளுடன் அந்தரங்க வாழ்க்கையையும் தொடர்கிறார்கள். விவாகரத்து, மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்வது போன்றவற்றையே ஏற்றுக்கொள்ள மனதிடம் இல்லாத பெரும்பாலோர் இன்னும் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் வாழ்கின்றனர். அதனால், தமது பால்நாட்டம் குறித்து எதையுமே வெளியிடாமல் இம்முறையில் மணம் முடிப்போர் அதிகரித்து வருகின்றனர்.தொலைத் தொடர்பு வழிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில், நேரில் பார்க்கும் முன்னரே இருவரும் பேசி விவாதித்து முடிவெடுக்கிறார்கள். தம்முடைய முழுத்தகவலையும் கொடுக்காமலே பேசிக்கொள்ள இவர்களுக்கு இணையப் பெருவெளி மிக உதவுகிறது. காதலிப்பது போலவோ, திருமணம் புரிய முடிவெடுத்திருப்பது போலவோ பெற்றோருக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். கூட்டம் கூடி நடக்கும் திருமணக் கோலாகலத்தில் பொம்மைகளாக நிற்கும் இவர்கள் பெண் பார்ப்பது, பெற்றோர் பார்த்துப் பேசுவது என்று தொடக்கத்திலிருந்தே நடிக்கிறார்கள். சமூகத்தில் முகமூடியணிந்து பொய்யாகவும் அந்தரங்கத்தில் தமது பாலுறவுத் தேர்வுகளுக்கு உண்மையாகவும் வாழ்கிறார்கள்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான மேலும் பல சட்டச் சலுகைகள் உருவாவதையும் இத்திருமணங்கள் தள்ளிப்போடும் என்பது இது போன்ற திருமணம் செய்யாத ஓரினச்சேர்க்கையாளர்களின் அக்கறை. ஓரினச்சேர்க்கையாளர்களிடையே முறையாகவும் வெளிப்படையாகவும் சட்டப்படி செல்லும் திருமணங்கள் நடக்கும் சாத்தியங்கள் உருவாக இது தடையாக இருக்கும் என்பது இவர்கள் வாதம். சாதாரணப் பெண்ணை மணம் முடிப்பதும், பெண்பாலீர்ப்புடைய பெண்ணை மணம் முடிப்பதும் சட்டப்பார்வையில் ஒன்றுதான் என்கிறார்கள் இவர்கள். இவ்வகைத் திருமணங்கள் சமூகத்துடனும் சட்டத்துடனும் சமரசம் செய்யும் செயல் என்ற நோக்கில் வாதங்களை முன்வைப்போர் எப்போதுமே ஓரின நாட்டமுடைய தாமே தழைந்து போக வேண்டுமா என்று கேட்கிறார்கள். இதுபோன்ற போலித்தனங்கள் முற்றிலும் மறைந்து சமூகம் உள்ளது உள்ளபடியே ஏற்க முன்வரவேண்டும் என்பதே இவர்களது விருப்பம். அதற்கு இவ்வகைத் திருமணங்கள் இடையூறாகவே இருக்கும்.

இன்றைய நிலையில் இவர்களுக்குப் பெரிய சமூக அங்கீகரிப்பும் இல்லை, பெரிய விலக்கலும் இல்லை. என்றாலும், அவர்களுக்கான சட்டச் சலுகைகள் அங்கீகாரமில்லாமல், அங்கீகாரத்துக்கான எந்தச் சின்ன இசைவுமில்லாமல் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கி விட்டிருக்கிறது. முயற்சிகள் பரவலாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெரியளவில் வருடாந்திர மாநாடுகள் கூடுகின்றன.

2003ல், திருமணச் சட்டத்தை மாற்றியமைத்தபோது ஓரினச்சேர்க்கையாளர்களிடையே திருமணம் பற்றியதே முதலில் இடம் பெற்ற விவாதம். பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. இதுதான் முதன் முதலில் தன்பாலுறவு கொள்வோருக்கிடையே திருமணம் குறித்துப் பொதுவில் பேசப்பட்டது. புதிய திருமணச் சட்டம் அமலுக்கு வந்தும் சட்டத்தில் ஒருபால் ஜோடிகளுக்குத் திருமணம் அனுமதிக்கப்படவில்லை. சமூகவியலாளரும் பாலுறவு நிபுணருமான லி டின்ஹே பல முறை முயன்றார். 2000 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் தேசிய காங்கிரஸ் கூட்டத்தின்போது இந்த விவகாரத்தை முன்வைத்தார். சீனச் சட்டத்தின்படி 35 முக்கிய பிரமுகர்களின் கையொப்பம் இல்லாமல் எந்தவொரு சட்டப்பரிந்துரையும் நடைமுறைக்கு வராது. பிரமுகர்களின் ஆதரவும் கையொப்பமும் கிடைக்கவில்லை. இதனாலேயே அந்தப் பெண்மணியின் அனைத்து முயற்சிகளும் வீணாகின. இணையத்தில் பல்வேறு வழிகளில் பல்லாயிரம் பேருடைய விண்ணப்பங்களையும், பரிந்துரைகளையும் திரட்டியபிறகும் 2006 மற்றும் 2007 கூட்டங்களில் அவர் விவாதத்தை எடுத்தபோது மீண்டும் மறுக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஏற்கப்படுவதும் அமலாவதும் இனி மிகக் கஷ்டம் என்றே ஓரினச்சேர்க்கையாளர்களும் அறிஞர் பெருமக்களும் சொல்கிறார்கள். மேலைநாடுகளில் தம்மைப் போன்றவர்களுக்காக ஊடகங்கள் உரக்க குரல் எழுப்புவது போல கீழை தேசத்தில், குறிப்பாக சீனத்தில் எழுப்புவதில்லை என்ற ஆதங்கம் பரவலாக இருந்து வருகிறது. இதனால், தம் பாலுறவு முறைகளை ரகசியமாகவே வைத்துக்கொள்ள வேண்டிய நிலை என்கிறார்கள். 1980 வரையிலும் கூட, அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளைச் சகிக்க முடியாமல் ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் வெளிநாடுகளுக்குப் போகத் தீர்மானித்ததுண்டு. தைவானில் கல்வி அமைச்சகம் பகிரங்கமாகவே ஓரினச்சேர்க்கையாளர்களை இழிவாகப் பேசியும் அறிவித்துமுள்ளது.

சுமார் 30 மில்லியன் பேர் தன் பாலுறவுடையோர், அதாவது மக்கள் தொகையில் 2.3%. பால்வினை நோய்கள் பரவுவது குறித்த அக்கறை அதிகரித்து வருகிறது. பால்வினை நோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் அறிவும் இருக்கும் நிறையபேர் நோய் வந்தால் வரட்டுமென்று பாலுறவுத் துணைகளை மாற்றியபடியேதான் இருக்கிறார்கள். முன்பைவிட ஓரினச்சேர்க்கையாளர்களின் மீதான சமூகத்தின் சகிப்புத்தன்மை கூடி வருகிறதென்கிறது கணக்கெடுப்புகள். காவல் துறையினரின் கெடுபிடிகள் மற்றும் தொந்தரவுகள் இவர்களுக்கு இருந்து வருகிறது. காவலரிடம் அடிவாங்குவோரும் உளர். பணம், பொருள் பறிகொடுப்போரும் தொடர்ந்து அச்சுறுத்தலைச் சந்திப்பதும் உண்டு.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் தமக்கான சமூக அடையாளத்தை விரித்தபடியேதான் இருந்து வருகிறார்கள். தம்மின நண்பர்களைச் சந்திக்க அறிவுரைகள், பரிந்துரைகள், சிபாரிசுகள் தரும் சேவை மையங்களும் பெருநகரங்களில் பெருகி வருகின்றன. நகரங்களில் பெரியளவில் இவர்கள் ஒன்றுகூடும் பார், உணவகம், பூங்கா போன்ற இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. பேய்ஜிங்கின் தோங்தன் பூங்காவில் ‘எயிட்ஸ்’ விழிப்புணர்வு அச்சிட்ட தாள்களைத் தொண்டூழியர்கள் விநியோகிப்பார்கள். நைட்பேன் டிஸ்கோ என்ற இடத்தில் சாதாரண மக்களுடன் ஓரினச்சேர்க்கை ஆண்களும் கூடுவதுண்டு. அவ்வாண்கள் கூடி ஆடுவதும் அவ்வப்போது நடக்கும். பேய்ஜிங்கின் பல்லடுக்கு வணிகவளாகத்தில் சனிக்கிழமைகளில் தவறாமல் ஒன்றுகூடும் ஓரின நாட்டம் கொண்ட பெண்களும் சமீப காலங்களில் எண்ணிக்கையில் கூடி வருகின்றனர். கூடிக் கூடியிருந்து தத்தமது பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் இளைப்பாறவுமே இவர்கள் இங்கு வருவது வழக்கம். அதேவேளையில், ஜோடி ஜோடியாக இறுகக் கட்டித் தழுவி நீண்ட ஆவேச முத்தமிடுவோரையும் இங்கே அவ்வப்போது காணமுடியும். சிச்சுவானின் ச்செங்டூவில் லூ ஸுன் பூங்காவின் மாலை நேரங்களில் கூடுவார்கள். குவாங்ஜோவ்வில் மேலைநாகரிக மோஸ்தரில் பார்கள் உண்டு. ஷாங்காயிலோ இவர்கள் கூடும் சொகுசுக் கப்பல் கூடங்கள் கடலில் மிதக்கும்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய திரைப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தைவான், ஹாங்காங் போன்ற நாடுகளில் சின்னத்திரையில் காட்டப்படும் படங்களைக்கூட பெருஞ்சீனம் வெறுத்தொதுக்குகிறது. சில ஒருபாலுறவுக் காட்சிகள் கொண்டிருக்கும் காரணத்திற்காக ‘Farewell To My Concubine’ போன்ற விருதுகள் பெற்ற பல நல்ல திரைப்படங்கள்கூட அங்கே தடைசெய்யப்படுகின்றன.

நன்றி - உயிர்மை
...மேலும்

Mar 29, 2011

பெண்களின் உலகம் - கவின் மலர்


'பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு... கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு!’ என்று ஆண்களுக்கு... பெண்களைக் கண்டால் பசியும் கவலையும் மறந்துபோவது, அவளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பதால்தான்!

சாலையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!

ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

சுலபமாக ஒரு பெண்ணைக் குறித்து 'மொக்கை ஃபிகர்’, 'சுமார் ஃபிகர்’, 'சூப்பர் ஃபிகர்’ என்று மதிப்பெண் அளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை... நெருங்கி, பேசி, பழகி உணர்ந்த பிறகு, 'மொக்கை ஃபிகர்’ என்று முன்னர் பட்டமளிக்கப்பட்ட பெண், உங்களுக்குப் பேரழகியாகத் தோன்றும் அதிசயம் அனுபவித்தது உண்டா? அவளது ஒரு புன்சிரிப்புக்காக, 'சாப்டியா?’ என்ற ஒற்றை விசாரிப்புக்காக ஏங்கித் தவித்த அனுபவம் உண்டா? இறுக்கம் தவிர்த்து உருக இலகுவாக இருங்கள்... உணர்வீர்கள்!

யார் கண்டது? நீங்கள் தினமும் பார்க்கும் பெண்களில் ஒருத்தி கள்ளிப் பாலுக்குத் தப்பியவளாக இருக்கக்கூடும். அல்லது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொன்றில் சுண்ணாம்பு கதையாக, வீட்டில் சகோதரனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவோ, கணவனால் துரத்தப்பட்டவளாகவோ, சுதந்திரம் வேண்டி கணவனை விவாகரத்து செய்தவளாகவோ, குடும்ப நிர்பந்தம் காரணமாக உயிருக்கு உயிராகக் காதலித்தவனை மறந்து, வீட்டில் பார்த்தவனை மணம் முடித்து, துயரத்தைச் சுமந்து வாழ்பவளாகவோ இருக்கக்கூடும். ஏழ்மை நசுக்க வாழ்வின் ரணங்களை அனுபவித்தவளாகவோ, அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் வருவதுபோலத் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான தோசைகளைச் சுட்ட அனுபவம் உள்ளவளாகவோ... இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்!

பொதுவாகவே, பெண்கள் 'வேண்டாம்’ என்றால், 'வேண்டும்’ என்று சொல்வதாக அர்த்தம் என ஒரு கருத்து நிலவுகிறது. எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்துமா? நிச்சயம் இல்லை. தன்னம்பிக்கை உள்ள பெண்களிடத்தில் எது கேட்டாலும், மனதில் உள்ளதைப் பட் படாரென்று உடைத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால், கட்டுப்பெட்டியாக, 'வாய்ப் பூட்டு’ சட்டம் இயற்றப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர்களால் நினைத்ததை அத்தனை சீக்கிரம் வெளியில் சொல்லிவிட முடிவது இல்லை. அதனாலேயே மென்று விழுங்கி, மனம் 'ஆம்’ என்று சொல்ல, உதடுகள் 'இல்லை’ என்று சொல்லும் விபத்து நேர்கிறது.
என் நெருங்கிய தோழி செல்விக்கு செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் விரைவாக நடக்காது என்கிற பயத்தில் இருந்தனர் பெற்றோர். செவ்வாய் தோஷம் உள்ள மாப்பிள்ளை ஒருவர் வர, அவள் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவசரமாக மணம் முடித்தனர். அவளோ நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவள். பாட்டு, நடனம் என்று எல்லா திறமைகளும் கொண்டவள். ஆளுமைத் திறன் வாய்க்கப்பெற்ற அவள் மட்டும் படிப்பை முடித்திருந்தால், ஒரு திறமையான அதிகாரியாக வலம் வந்திருப்பாள். ஆனால், எல்லாம் இருந்தும் அவளால் அவள் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியவில்லை. திருமணமாகிச் சில நாட்கள் கழித்து நான் அவளைப் பார்க்கச் சென்றபோது, வீட்டுக் கொல்லைப்புறத்தில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருந்தாள். அப்படி அவளைக் காண நேர்ந்த அந்த துரதிஷ்ட கணம் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம்.
'சிந்து பைரவி’ படத்தில் பாட்டு கற்றுக்கொள்ளும்போதும் சுலக்‌ஷனா மாடியில் காயப்போட்ட வடாம்பற்றி கவலைப்படுவதுபோல, பணியிடத்திலும் வீட்டைப் பற்றிய நினைவுகளிலேயே நீந்திக்கொண்டு இருப்பார்கள் பெண்கள். மெகா சீரியல்கள் என்ற போர்வையில் வரும் நிகழ்ச்சிகளும்கூட, பெண்களை ஒரு வட்டத்துக்குள்ளேயே இழுக்கின்றன. ஆனாலும், பொழுதுபோக்க வேறு வழி இல்லாத நிலையில், பெண்களும் சீரியல்களையே பார்க்கத் தலைப்படுகின்றனர். எப்படி வீட்டுக்கு வெளியே ஓர் உலகம் உண்டு என்பதைப் பெண் மனது நம்ப மறுக்கிறதோ, அப்படியே சீரியல்களைத் தாண்டிய நிகழ்ச்சிகளைத் தர நம் ஊடகங்களும் மறுக்கின்றன. அப்படியே வந்தாலும், சமையல், அழகுக் குறிப்புகள் என்று மீண்டும் மீண்டும் ஆணுக்காக ஒரு பெண்ணைத் தயார் செய்வதை மட்டுமே மீண்டும் வலியுறுத்துகிறார்கள். என்ன செய்ய... 'ஆணுக்கு உலகம் எல்லாம் வீடு... பெண்ணுக்கு வீடுதான் உலகம்’ என்று பெண்களையே நம்பவைத்த உலகம்!

சேலை, சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று சாலைகளில், கோயில்களில், அலுவலகங்களில் எதிர்ப்படும் பெண்கள் விதவிதமானவர்கள். பெண்கள் அணியும் உடைகளை வைத்து அவளை எடை போடுவது இன்னமும் சமூக வழக்கமாக இருக்கிறது. பெண்கள் அணியும் உடையே ஈவ் டீஸிங்குக்குக் காரணம் என்று கருதி, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு மட்டும் டிரெஸ் கோட் கெடுபிடிகள் அரங்கேறும். ஈவ் டீஸிங்குக்குப் பலியான சரிகா ஷா அணிந்திருந்தது துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ்தானே?

பணி நிமித்தம் சொந்த ஊரில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களின் உலகம் பிறர் அறியாதது. இப்படியான ஊர்க் குருவிகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும், அதிகாலையில் எழ வேண்டும். இல்லையென்றால், குளிக்க பாத்ரூம் கிடைப்பதில் துவங்கும் அன்றைய சிக்கல். ஒரு சிறிய அறையில் நான்கைந்து கட்டில்கள் ஒட்டி ஒட்டி கிடத்தப்பட்டு இருக்கும். சில ஹாஸ்டல்களில் ரயில் பெர்த்போல படுக்கைகள் மேலும் கீழுமான அடுக்கடுக்காக இருக்கும். தூக்கக் கலக்கத்தில் எழுந்து தலையில் நச்சென்று மோதிக்கொள்வதில் புலரும் பலரின் பொழுதுகள். ஒரு சின்ன ஷெல்ஃபில் அத்தனை பேரின் பொருட்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கே வாடகை நான்காயிரத்துச் சொச்சமாக இருக்கும். குருவிக் கூடு அறையில், நான்கைந்து பெண்கள் அவரவர் கனவுகள் அனுமதித்த எல்லைக்குள் உலவிக்கொண்டு இருப்பார்கள்.

விடுதி அறைத் தோழி ஒருத்தியின் அப்பா பல வியாதிகளோடு போராடிக்கொண்டு இருக்கிறார். அம்மாவும் அத்தனை சுகம் இல்லை. இவளுடைய சம்பளம்தான் அந்தக் குடும்பத்தின் ஜீவ நாடி. பெற்றோர் மேல் அத்தனை பாசம் இருந்தாலும், மாதம் ஒரு முறைகூட ஊருக்குச் சென்று அவர்களைப் பார்த்து வர மாட்டாள். விடுதித் தோழிகள் அவளைத் திட்டித் தீர்க்கவும் அதற்கான காரணத்தைக் கம்மல் குரலில் சொன்னாள் ஒருநாள், 'ஒரு தடவை நான் ஊருக்குப் போயிட்டு வந்தா, குறைஞ்சது ஆயிரம் ரூபா ஆகும். அந்தக் காசு மிச்சப்பட்டா, அது அப்பாவுக்கு ஒரு வாரம் மருந்துக்கு ஆகும்ல. நான் அங்கே போய் என்ன அவங்களுக்கு மருத்துவமா பார்க்கப் போறேன்?’

இன்னொரு தோழிக்கு காலை 4 முதல் 9 மணி வரை கால் டாக்ஸி அலுவலகத்தில் பகுதி நேர வேலை. அது முடிந்து அரக்கப் பறக்க ஹாஸ்டலுக்கு வந்து குளித்து அலுவலகம் செல்வாள். மாலை 6 மணிக்குத் திரும்பியதும் மீண்டும் கால் டாக்ஸி அலுவலகத்துக்கு ஓட்டம். இரவு 11 மணிக்கு நிதானமாகச் சாப்பிட்டு, எங்களோடு பேசி நாட்டு நிலவரம் அறிந்துகொண்டு, 12 மணிக்கு படுக்கையில் சாய்வாள். அடுத்த நாள் மீண்டும் 4 மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்னரே துடித்தெழுந்து ஓடிக்கொண்டு இருப்பாள். ஒரு முறை, மாதக் கடைசியில் ஹாஸ்டல் வார்டனிடம் விடுதிக் கட்டணத்தை எண்ணிக்கொடுத்துவிட்டு, கையில் மிச்சம் இருந்த பணத்தை வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள். தோள் தொட்டு உலுக்கியதும், ''இந்த ரூவா நோட்டு அத்தனையும் என் வேர்வைப்பா!'' என்றவளின் குரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

நட்பும் காதலும்தான் பெரும்பாலான பெண்களை உற்சாகமுடன் இயக்கிக்கொண்டு இருக்கிறது. சாலையில் நடந்துகொண்டே இயர்போனில் பேசியபடி செல்லும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். சிலர் திட்டியும் இருப்பீர்கள். கொஞ்சம் அவர்கள் அருகில் சென்று கேட்டுப் பாருங்கள். எவ்வளவுதான் நெருங்கிச் சென்று கேட்டாலும், அவர்கள் பேசுவது உங்கள் காதில் விழாது. அவ்வளவு மெல்லிய குரலில் பேசுவார்கள். பெற்றோருடன் வாழும் பெண்ணாக இருந்தாலும், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்ணாக இருந்தாலும், தனியாகப் பேசுவதற்கென பெண்களுக்கு சுதந்திரப் பிரதேசமே கிடையாது. ஆகவே, பலர் அருகில் இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்களை யாரும் அறியாதவாறு பேச நிர்பந்திக்கப்பட்டு, பரிணாம வளர்ச்சியாக அந்த மென் குரல் உரையாடல் கலையைக் கற்றுக்கொண்டது பெண்ணினம்.

ஓர் ஆண், பலர் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு போனில் 'ஐ லவ் யூ’ சொல்வது இங்கே ஃபேஷன். ஆனால், தன் நெருங்கிய தோழியாக இருந்தாலும்கூட, அவள் முன்னே அந்த மூன்று வார்த்தைகளை ஒரு பெண் சொல்ல முடியாத சூழல்!

நெருங்கிய தோழிகளாய் இருந்த எத்தனையோ பெண்கள் திருமணம் முடித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பறுந்து புகுந்த வீட்டில் ஒரு மெஷினாக இயங்கிக்கொண்டு இருக்கும் வாழ்க்கைச் சூழலின் வேதனையை ஒரு நாளேனும் உணர்ந்து இருக்கிறீர்களா? என்றேனும், எங்கேனும், உருவம் மாறி பருமனாகி, கையில் குழந்தையுடன், கவலை ரேகைகள் படர்ந்த முகத்துடன் சந்திக்க நேரும்போது, தோழியைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியைவிட, அவள் உருவம் அளிக்கும் உணர்வு மனதைப் பிசையும். 'எப்படி இருக்கே?’ என்ற கேள்விக்கு, 'நல்லா இருக்கேன்!’ என்று சம்பிரதாயமாக உதடுகள் சொன்னாலும், காட்டிக்கொடுக்கும் கண்களை என்ன செய்ய முடியும்?

கிண்டி தொழிற்பேட்டை அருகே, ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை, மாலைகளில் சென்னையில் எங்குமே காணக் கிடைக்காத தாவணி அணிந்த பெண்களைக் காண முடியும். எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பலர் 9 மணிக்குள் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும். 10 நிமிடங்கள் தாமதமானாலும்கூட அரை நாள் விடுமுறையாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அற்ப சொற்ப சம்பளத்தில் அதுவும் பிடித்தம் செய்யப்படும். அந்த அயோக்கியத்தனத்துக்குப் பயந்து, அந்தப் பெண்கள் காலையில் பேருந்து ஒவ்வொரு ஸ்டேஜைக் கடக்கும்போதும் மணி பார்த்துப் பார்த்து நகத்தைக் கடிக்கும் தவிப்பு நமக்கே பதற்றத்தை உண்டாக்கும். ஸ்டேஜ் க்ளோஸிங் என்று பேருந்து ஓரங்கட்டி நிற்க, அழாக்குறையாக அந்தப் பெண்கள், 'அண்ணே... அண்ணே வண்டிய எடுங்கண்ணே! வெளில நிக்க வச்சுருவாங்கண்ணே!’ என்று கெஞ்சிய முகங்களைப் பார்த்தால் எவருக்கும் மனம் கலங்கும். தங்களுக்கு பவுடர், பொட்டு வாங்குவதற்கோ... ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற நவநாகரிக ஆடைகள் வாங்குவதற்கோ அந்தப் பெண்கள் தங்கள் ஆயுளைத் தேய்த்துத் தீய்த்து உழைப்பதில்லை. குடும்பத்தினரின் மூன்று வேளை உணவுக்காகத்தான் இந்தப் பாடு!

பெண்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் இல்லாத பணியிடங்கள் வாய்ப்பது இல்லை. பேருந்தில் உரசும் வக்கிரத்தில் இருந்து அலுவலக ஃபைலுக்கு அடியில் விரல் தடவும் எதேச்சதிகாரம் வரை அனைத்தையும் கடந்துதான் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள் பெண்.

ஓர் ஆண் தன் பணியில் முன்னேறி மேலே சென்றால், அவனது திறமை காரணம் என்று புகழும் உலகம், அதையே ஒரு பெண் சாதித்தால், 'வேறு வழி’யில் சாதித்தாள் என்று புறம் பேசும். தன் உழைப்பில் தன்னைச் சார்ந்தவர்களை வாழவைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற, ஒரு பெண் கடக்க வேண்டிய பாடுகள் சொல்லி மாளாது.

எது எப்படியோ, பெண்களின் வியர்வையும் கண்ணீரும் சமமாகக் கலந்திருக்கும் சமுத்திரத்தின் நீர்தான் ஆவியாகி ஆண்களின் உலகில் மழையாய்ப் பெய்து வளமாக்குகிறது!

நன்றி : ஆனந்த விகடன்
ஓவியங்கள் : ஷ்யாம்

நன்றி - கவின்மலர்
...மேலும்

Mar 28, 2011

தஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்... வெளி ரங்கராஜன்


சங்க காலம் தொடங்கி நம்முடைய வரலாறெங்கும் குடும்ப அமைப்பைத் தாண்டி பொது வெளிக்கு வந்த பரத்தையர், விறலியர், ஆடல் பெண்கள், தேவதாசியர் ஆகியோரின் வாழ்வியலும், ஒழுக்கமும் ஆண் மைய ஒழுக்கவியல் பார்வைகளால் கடும் விவாதத்துக்கும், சிக்கலுக்கும் உள்ளாகி இருப்பதை நாம் பார்க்க முடியும். கல்வி, கலைத்தேர்ச்சி, புலமை ஆகிய வாழ்வியல் செறிவுக்கான தகுதிகள் இருந்த நிலையிலும், அவர்கள் தொடர்ந்து இழிவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையே நம்முடைய கலாச்சார மரபாக உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் இத்தகைய மனஇயலை நாம் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் இது ஆண், பெண் உறவுநிலைகள் குறித்த சமூகத்தின் நுண்ணுணர்வு சார்ந்த விஷயமாக இன்று உள்ளது.

தலித்துகள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்த கவனங்களும் பதிவுகளும் பெருகி வரும் நிலையில் ஆணியச் சமூகத்தின் சுரண்டல் கருவிகளாக ஆக்கப்பட்டிருந்த பரிதாபத்திற்குரிய தேவதாசியரின் சுயவாழ்க்கை குறித்த பதிவுகளும் நிலைப்பாடுகளும் அவர்களுடைய வாழ்வியல் பற்றிய மேலான புரிதலுக்கு உதவ முடியும். தேவதாசி மரபில் வந்தவரும், கலைத்திறமையும், புலமையும் கொண்டவருமான பெங்களூர் நாகரத்தினம்மா தன்னுடைய சுயசரிதையை கன்னடத்தில் எழுதியிருக்கிறார். அண்மையில் அரவாணித் தோழியரான லிவிங் ஸ்மைல் வித்யா ‘என் பெயர் வித்யா’ என்று எழுதிய சுயசரிதை சில கல்லூரிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தின் ஒழுக்கவியல் கண்ணோட்டத்தை தேவதாசியர் பார்வையிலிருந்து பரிசீலனை செய்யும் போதே கற்பொழுக்கம் குறித்த ஆணிய இரட்டை அளவுகோல்கள் புலப்படும்.

களவொழுக்கம், பரத்தமை போன்ற பண்புகள் நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக இருந்தும் கற்பின் மறு பக்கமாக விளங்கிய இந்தப் பிற ஒழுக்கங்களுக்கு வழங்கப்பட்ட தகுதி பரிசீலனைக்குரியதாக உள்ளது. குடும்ப அமைப்புக்கு வெளியே ஆணின் சமூக, கலாச்சார மற்றும் பாலியல் தேவைகளுக்காக பெண்ணின் இருப்பு கொண்டாடப்பட்ட நிலையிலும் அதற்கான மதிப்பு வழங்கப்படாமல் அவள் இழித்துரைக்கப்படுவது ஒரு நோய்க்கூறான பார்வையே ஆகும். ஒரு வகையில் கலைகள் கைவரப் பெற்றவர்களையும், குடும்ப நிறுவனத்தைச் சார்ந்திராதவர்களையும் ஆணினம் அச்சத்துடன் நோக்கியதையே இது காட்டுகிறது.

தமிழ் இலக்கிய மரபில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், காளிமுத்து, முத்துப்பழனி போன்ற பதியை உதறியவர்களே அறிவுவெளியில் சுதந்திரமாய் இயங்கி பெண் குரல்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். காளமேகப் புலவர் காலத்தில் வாழ்ந்த கணிகை காளிமுத்துவின் வருண குலாதித்தன் மடல் நூலில் பெண்ணுடல் மொழி தைரியமாக முன் வைக்கப்படுறது. அதேபோல், தஞ்சை ஆண்ட பிரதாபசிம்மன் அவையில் புலவராகவும், கணிகையாகவும் இருந்த முத்துப்பழனி எழுதிய ராதா சாந்தவனம் என்ற காதல் பிரபந்தத்தை யாரும் பதிப்பிக்க முன் வராத நிலையில் பெங்களூர் நாகரத்தினம்மா அதைத் தானே பதிப்பித்து முன்னுரையும் எழுதினார். அது நாவலாசிரியரும், சீர்திருத்தவாதியுமான வீரேச லிங்கத்தின் எதிர்ப்பால் தடை செய்யப்பட்டது. மரபை மீறிய பெரியாரின் வழி வந்த திருவாரூர் தங்கராசுகூட ரத்தக் கண்ணீரில் மரபு வழிக் கண்ணோட்டத்துடனேயே வேசையை இழிவு செய்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் நாவல் இன்னொரு உதாரணம். அண்மையில் நவீனப் பெண் கவிஞர்களின் உடல் மொழி சார்ந்த கவிதைகளை திராவிட இயக்கக் கவிஞர்களும், அப்துல் ரஹ்மான் போன்ற முற்போக்கு என்றுகூறி கொள்பவர்களும் வன்முறையுடன் எதிர்கொண்டதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும். மரபான ஆணியல் ஒழுக்கவாதப் பார்வையிலிருந்து இவர்களும் தப்பவில்லை.

ஆனால் அவைதீக இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் ஆடற் கணிகையர் குறித்த அனுதாபம் உள்ளது. அவர்களுடைய கலைத்திறமை போற்றப்படுகிறது. மாதவி, மணிமேகலை, அம்ரபாலி போன்றவர்கள் பிக்குணிகளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். நம்முடைய பாணர் மரபிலும் வைதீகம் சாராத ஆடல், பாடல் சார்ந்த இயற்கை நெறிமரபு இருந்தது. விழாக்களும், கொண்டாட்டங்களும் அவைகளுக்கு அடிப்படைகளாக இருந்தன. இந்திர விழா கொண்டாட்டங்களில் மாதவியும், மணிமேகலையும் ஆடுவது வழக்கமாக இருந்தது. பேரிலக்கியங்கள் வலியுறுத்திய ஆண் மைய கற்பு நெறிக் கோட்பாடுகளுக்கு மாறாக நம்முடைய நாட்டுப்புற இலக்கியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் வாழ்வியல் சார்ந்த நெகிழ்வான பாலியல் நிலைப்பாடுகளை நாம் பார்க்க முடியும்.

நாட்டார் புராணமான அல்லி அரசாணி மாலையில் செவ்வியல் சம்பிரதாயத்துக்கு மாற்றான ஒரு ஆணாதிக்க எதிர்ப்புக்குரல் தீவிரமாக ஒலிக்கிறது. மகாபாரத காவியத்தின் கதைக்கூறுகள் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு தமிழ் நாட்டுப்புறக் கதையாடல் பின்புலத்தில் பெண்ணின் ஒரு மாறுபட்ட கட்டுமானம் முன்நிறுத்தப்படுகிறது. சநாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன் மிக்க ஒரு பாலியல் பெண் படிமம் இக்கதைப் பாடலில் முன் வைக்கப்படுகிறது. ஆண்மை பெண்மை தொடர்பான மாறாத கருத்தாக்கங்களை மறுவடிவாக்கம் செய்து அதுவரை பிரபலமாக இருந்த ஆண் மையக் கோட்பாடுகளை நாட்டார் கதைப் பாடலான அல்லி அரசாணி மாலை துணிச்சலாகக் கட்டுடைப்பு செய்தது. மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வில்லுப்பாட்டு வடிவில் இது போன்ற பல பெண் மையப் புராணங்கள் வெளிப்பட்டுள்ளன.

பெண்ணடிமையை வலியுறுத்தும் பல செவ்வியல் பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக நம்முடைய பல நாட்டுப்புற இலக்கியங்களில் பெண் குரல் என்பது உரிய மதிப்புடனும், கௌரவத்துடனும் எதிரொலிக்கிறது.

தற்கால நவீன இலக்கியங்களில் தேவதாசிகளை அனுதாபத்துடன் பார்க்கும் போக்கு உள்ளது. தி.ஜானகிராமனின் மோகமுள், ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு மற்றும் நாளை மற்றுமொரு நாளே நாவல்களில் போலி மதிப்பீடுகள் இன்றி அவர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. கோபி கிருஷ்ணனின் அவலம் சிறுகதையில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் ஆழ்ந்த பிணைப்பும் பாதுகாப்பும் பெறும் ஒரு ஆணின் மனநிலை சித்தரிக்கப்படுகிறது. பிரெஞ்சு எழுத்தாளர் ஜெனேயின் பால்கனி நாடகத்தில் ஒரு பாசிச அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட ஆலோசனை ஒரு பாலியல் தொழிலாளியின் வீட்டிலேயே பாதுகாப்பாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஆணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த பொது வெளியில் இப்பெண்களே இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் மனிதாபிமானமற்று போலி ஒழுக்க வரையறைகளுடன் அவர்களுடைய பங்களிப்புகளைப் புறம் தள்ளி இழிவு செய்கிறது நம் சமூகம். இப்போது கூட தமிழ் ஊடகங்களும் வணிகப்பத்திரிகைகளும் நடிகைகளைப் பற்றிய செய்திகளை வைத்தே வியாபாரம் செய்கின்றன. ஆனால் அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி இழிவாக விமர்சிக்க அவை தயங்குவதில்லை.

தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரிகள் என்று சொல்லிய போது தமிழ்ச் சூழலில் பெரிய எதிர்ப்பு உருவாகவில்லை. ஆனால் குஷ்பூ பாதுகாப்பான பாலியல் உறவு பற்றிப் பேசியபோது கலாச்சாரம் கெட்டு விட்டதாக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. சமூக ஒழுக்கம் என்பது குறித்த அக்கறையில்லாமல் பெண்ணின் கற்பு குறித்த மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல்களே கலாச்சாரம் என்பதாக இந்தக் கலாச்சாரக் காவலர்களால் முன் வைக்கப்படுகின்றன. பெண்ணின் சமூக வெளியை மறுத்து அநீதிக்கு எதிராகப்பெண் கிளர்ந்தெழாதபடி அவளைப் பழமைக் கருத்துகளால் முடக்கும் வேலையையே நம்முடைய ஊடகங்கள் அன்றாடம் செய்து வருகின்றன.

ராஜாராஜன் சோழன் காலத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட தேவதாசி முறை மற்றும் அதன் வீழ்ச்சியின் விளைவுகளாகவே இதுபோன்ற பெண் இழிவுக் கருத்துகள் சமூகத்தில் வேரூன்ற ஆரம்பித்தன. ஆனால் தேவதாசி எதிர்ப்பு என்பது அப் பெண்ணின் ஒழுக்கப் பிறழ்வைத்தான் குறி வைத்துத் தாக்கியதே தவிர, அத்தகைய ஒழுக்கக் கேட்டுக்கு ஆதாரமான சமூக பொருளாதார ஏற்பாடுகளை அல்ல. தேவதாசி முறை என்பது விபச்சாரம் என்ற நிலைக்குத் தாழ்ந்ததின் காரணம் அவர்களது சமூக வாழ்வியல் கண்ட மாற்றங்கள் தான் என்பதை அங்கீகரித்து அம்மாற்றங்கள் அவர்களை மேலும் சேதப் படுத்தாமல் இருக்க அவர்கள் ஜீவனத்துக்கு வேண்டியதை அவர்களுக்குப் பெற்றுத்தர முனைந்தார் முத்துலட்சுமி ரெட்டி. ஆனால் அதில் அவர் முழுவெற்றி பெறமுடிய வில்லை.

கோவில்களில் சோழர்களால் நிலை பெற்ற தேவதாசி முறையை ஆராய்வதற்கு முன்னால் நம்முடைய கலாச்சார வாழ்வில் கோவில்கள் வகித்த இடம் குறித்த உணர்வு அவசியமானது. கோவில்கள் நம்முடைய கலாச்சாரத்தில் வெறும் வழிபாட்டு உணர்வுக்கான இடங்களாக மட்டும் இல்லை. நம்முடைய பல்வேறு அழகியல் உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான வடிகால் களாக கோவில் சூழல் பயன்பட்டது. சிற்பம் மற்றும் ஓவியக்கலை வெளிப்பாட்டிற்கான இடங் களாகவும் அவை இருந்தன. நம்முடைய வழி பாட்டு மரபின் ஒரு அங்கமாக இசையும், நடன மும் பல காலங்களாக இருந்து வருகின்றன. நடனப் பெண் வடிவம் என்பது கோவில் கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத அடையாளமாகவே உள்ளது. நீண்ட கோவில் பிரகாரங்கள் இத்தகைய படிமங்களைத் தாங்கி ஒரு பிரத்யேகமான அழகியல் பயணத்தைச் சாத்தியப்படுத்தி இருக்கின்றன.

உண்மையில் தேவதாசி மரபின் தோற்றம் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. வேத இலக்கியம் அதிகாலை தெய்வமாகிய உஷையைக் குறிப்பிடும் போது பூ வேலைப்பாடுகளுடைய ஆடையை அணிந்த ஒரு நாட்டியப் பெண்ணாக வர்ணிக்கிறது. ஆகமங்களில் கணிகையர் என்று அழைக்கப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகம வழிப்பட்ட கோவில்களின் பெருக்கம் ஏற்பட்ட 5 -6ம் நூற்றாண்டிலேயே இம் மரபு உறுதியடைந்த நிலை உள்ளது. சோழர்களுக்கு முந்தைய பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே கோவில்கள் கலைக்கூடங்களாகத் திகழ்ந்தன. ருத்ர கணிகையர் என்ற பெயரில் தேவதாசியர் பணியாற்ற அமர்த்தப்பட்டனர் என தேவராம் கூறுகிறது. “காரிகையார் பண்பாட சேயிழையார் நடமாடுந் திருவையாறே” என்று சம்பந்தர் பதிகம் பாடுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோவிலில் நடனமாடிய பரவையார் என்ற நாட்டியப் பெண்ணை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். பெரிய கோவில்களில் எல்லாம் அவர்கள் பணியாற்றி இசையையும், நடனத்தையும் வளர்த்தனர். கும்பகோணம், திருவையாறு, திருவொற்றியூர், காஞ்சிபுரம் ஆகிய கோவில்களில் தேவதாசியர் நடனமாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்களின் ஓவியக் களஞ்சியமான சித்தன்னவாசலில் உள்ள நடனமாதர் ஓவியங்கள் தேவரடியார் பற்றிய வடிவமே.

ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தேவதாசி முறை நிறுவனப்படுத்தப்பட்டு தேவதாசிகள் கோவில் ஊழியர்களாக்கப்பட்டனர். ஒருவிதமான அடிமை முறை அவர்கள் மேல் திணிக்கப்பட்டது. இவர்கள் காலத்தில் பெரும் போர்கள் நடைபெற்ற நிலையில் போர் நடைபெற்ற இடங்களிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் அரசுப் பணிக்கெனவும், கோவில் பணிக்கெனவும் நியமிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள் கோவில் பணிக்கென போர் நடைபெற்ற இடங்களிலிருந்து வெவ்வேறு இடங்களில் குடியமர்த்தப் பட்டனர். தேவரடியாராக நியமிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் நாட்டியமாடும் பெண்களாக இல்லை. அத்திறமை இல்லாதவர்களும் வயது வந்தவர்களும் கவரி வீசவும் திருப்பதியம் பாட வும், கோவிலைத் தூய்மை செய்யவும் நெல் குத்தும் தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்டனர். ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்த காலத்தில் இக்கோவிலில் பணிபுரிவதற்காக வெவ்வேறு கோவில்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 400 தளிச்சேரிப் பெண்களைக் கொண்டு வந்து நியமித்தான். அவர்களுக்கு இரண்டாம் முறை பொட்டுக்கட்டப்பட்டது. இந்தத் தளிச்சேரிப் பெண்கள் வசிப்பதற்கென்று கோவிலை ஒட்டி மூன்று தளிச்சேரிகளை நியமித்தான். ராஜராஜனின் 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் பணியாற்றிய தளிச்சேரிப் பெண்களைப் பற்றிய செய்திகளைத் தருகிறது.

கோவிலில் பணிபுரிந்த தேவதாசியர் அனைவரும் போர்க் கைதிகளாகவோ அல்லது பரத்தையராயிருந்து வந்தவராக மட்டும் இல்லை. குடும்பப் பெண்களும் வறுமை காரணமாகவும், நேர்த்தி காரணமாகவும் கோவில்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். ராஜராஜன் காலத்தில் ஒருவன் நான்கு பெண்களை 700 காசுகளுக்கு வாங்கி திருவாலங்காட்டு இறைவனுக்கு தேவரடியாராக அர்ப்பணித்த செய்தி அவ்வூர் கல்வெட்டில் காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிலவிய கொடிய பஞ்சம் காரணமாக வறுமைக்கு ஆளான சில குடும்பங்கள் தங்களை குடும்பத்தோடு கோவிலுக்கு விற்றுக் கொண்டனர். திருவாலங்காடு கோவிலுக்கு பெண்களுடன் சிறுவர் சிறுமிகள் விற்கப்பட்ட செய்திகளும் உண்டு. இப்படி சோழர் காலத்தில் தேவதாசியர் அடிமைமுறை, விற்பனை முறை நடைமுறையில் இருந்ததை கோவில்கள் தோறும் உள்ள கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

கிரேக்க ரோமானிய நாடுகளில் அடிமை களுக்கு முத்திரை இடுவதைப் போல சோழர் காலத்தில் தேவதாசிகளுக்கு இலக்கினை இடும் பழக்கம் இருந்தது. சைவக் கோவில் தேவதாசிகளுக்கு சூல இலக்கினையும் வைணவக் கோவில் தேவதாசிகளுக்கு சக்கர இலக்கினையும் இடப்பட்டன. முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் காளகஸ்தி கோவில் தேவரடியார்கள் அரசு இலக்கினை இடப்பட்டு அரண்மனைக்கு அனுப்பப்பட்டனர். மக்கள் எதிர்ப்பு மற்றும் முறையீட்டின் பேரில் அவர்கள் மீண்டும் இலக்கினை மாற்றப்பட்டு கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி உள்ளது. இவ்வாறு அயல்நாட்டுப் படையெடுப்பின் போது சிறைப்பிடித்து வந்த அந்தப்புர மகளிர், இறைத் தொண்டுக்காக பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்கள், வறுமை காரணமாக விற்கப்பட்ட பெண்கள் என பல திறத்தாரும் கோவிலில் இசை, நாட்டியம் மற்றும் இதர பணிகள் செய்ய பணிக்கப்பட்டனர். தேவதாசிகளுக்கு வரி ஒன்று விதிக்கப்பட்டது விஜய நகர ஆட்சிக் கால கல்வெட்டில் புலப்படுகிறது.

சோழப் பேரரசு தன்னுடைய அதிகார பலத்தால் தேவதாசியர் நிலையும் கோவில் கலைகளும் மேம்பாடு அடைந்த தோற்றத்தை உருவாக்கியது. அதன் பின்புலத்தில் நிகழ்ந்த வன்முறையும், மனித உழைப்புச் சுரண்டலும் வரலாற்றின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டன. சோழர் காலத்துப் பிறகான பாண்டியர் ஆட்சியில் பூசல்களும், கலகங்களும், கொள்ளைகளும் மிகுந்து கோவில் வழிபாட்டுச் சூழல் சிதைவடைந்தது. தேவதாசியர் வாழ்வியலும் நசிந்து துன்பங்களுக்குள்ளானது.

சிதம்பரம் வைப்பி மற்றும் ஸ்ரீரங்கம் அம்சலேகா ஆகிய தேவதாசிகள் அந்நியப் படையெடுப்பின் போது தங்கள் உயிரைக் கொடுத்து கோவில் விக்ரகங்களைக் காப்பாற்றினர். சோழர், பாண்டியர் அவர்களுக்கு வழங்கிய நிலங்களும் பின்னர் பறிபோயின. நாயக்கர் ஆட்சியிலும் மராட்டியர் ஆட்சியிலும் கலைகள் மீண்டும் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சிக்கான சூழல் சில காலம் நிலவியது. கம்பர் தன்னுடைய ராமாயண அரங்கேற்றத்துக்கு அஞ்சனாட்சி என்ற தேவதாசியிடம் சாற்றுக் கவி பெற்றார். ஆங்கில ஆட்சியின் தொடக்கத்தில் ஊர்ப் பெரிய மனிதர்கள் கையில் கோவில் நிர்வாகம் சென்று அவர்களுடைய விருப்பு வெறுப்புப்படி தேவதாசிகளுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கப்பட்டன. காலம் காலமாக கோவில் வழிபாட்டின் அம்சமாக இருந்த நடனச் சடங்கும் தேவதாசியருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளும் காலப்போக்கில் சிதைவுற்றன.

அதிகார வழிபாடு கொண்ட வரலாற்றாசிரியர்கள் மன்னர்களின் பிரதாபங்களைப் பாடுவதையே வரலாறாக முன் நிறுத்தினர். வரலாற்றுச் சாதனைகளுக்குப் பின்புலத்தில் உள்ள வாழ்க்கை அவலத்தையும், மனித உழைப்புச் சுரண்டலையும் அவர்கள் முன்னிலைப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இதனால் ஒரு பக்க சார்புப் பார்வைகள் உருவாகிவிடும் சோகம் நேர்ந்து விடுகிறது. வரலாறுகள் மீண்டும் மீண்டும் மீள் வாசிப்பு செய்யப்பட்டு இருண்ட பகுதிகள் வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும். தங்களுடைய அவலமான வாழ்க்கைச் சூழலுக்கு இடையிலும், தேவதாசிகள் கலைகளுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த கணிப்புகளும், அவர்களுக்கு கிடைத்த சமூக அவமதிப்பு குறித்த பரிசீலனைகளும் தமிழ்ச் சமூகத்தின் பாலியல் உறவுநிலைகள் குறித்த கண்ணோட்டங்களை மேம்படுத்த உதவும். தான் கற்ற இசையை நாட்டியத்தை, ஓவியத்தை மற்றும் பிற நுண்கலைகளை சமூகத்துக்கு அர்ப்பணித்து தம் வாழ்நாளைக் கழித்தவர்கள் இன்று அவைகளுக்கு உரிமையில்லாத நிலையில் வெறும் அவப்பெயரை சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேவதாசி நடனத்துடன் இணைந்த சமூக அவப் பெயரை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பரத நாட்டியமாகி இசை, நடனம் போன்ற நுண்கலை களைப் பரவலாக்க உதவியிருந்தாலும்,வாழ்வு சிதைவுற்ற நிலையிலும், வீணை தனம்மாள். பால சரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற அர்ப் பணிப்பு மிகுந்த கலைப்படைப்பாளிகள் உருவாக் கிய ஒரு மரபு சரியாக உள்வாங்கப்படாத நிலையே இன்று உள்ளது. இப்பிரச்சனையில் தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளின் போலிப் பண்பாட்டு வாதத்தைக் கடந்து பாரம்பரியம் குறித்த புரிதல், நுண்கலைகளின் சமகால இயக்கம், பெண் சுதந்திரத்துக்கான வெளி ஆகிய கூறுகளின் பின் புலத்தில் இம்மரபுகள் அணுகப்பட வேண்டும். பரதநாட்டியம் இன்று மேல்தட்டு வர்க்கத்தின் அந்தஸ்து அடையாளமாகி வர்த்தகப் பொருளாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் தேவதாசிகள் உருவாக்கிய நாட்டிய மரபுகளின் செழுமையைப் பாதுகாக்க வேண்டும் என்று தபஸ்யா என்கிற ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. “வாழ்ந்து வரும் மரபுகள்” என்ற பெயரில் தஞ்சை நால்வரின் நாட்டியப் பங்களிப்பை அது ஒரு ஆவணப்படமாகத் தயாரித்துள்ளது. தமிழர் கலைகள் என்று போலிப் பெருமை பேசும் திராவிடக்கட்சிகள் நம்முடைய மரபு நடனக் கலையை சுலபமாக நிறுவனப்படுத்தி பரவலாக்கியிருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.

நான் ஒரு நாடகக்காரன், இசையையும் நடனத்தையும் நாடகத்தின் அங்கமாக நினைப்பவன் சிறுவயதில் கோவில்களில் நான் கேட்ட இசையும், நான் உலவிய பிரகாரங்களும், நான் சந்தித்த நடனப் படைப்பாளிகளும் வாசித்த இலக்கியங்களும்தான் எனக்குள் நாடகத்தை விதைத்திருக்கின்றன.

கவனத்தைக் கோரி நிற்கும் எண்ணற்ற மௌனக் குரல்களிலிருந்தே நான் நாடகங்களுக்கான உத்வேகங்களைப் பெறுகிறேன்.

அவ்வகையில் புதிர்களும் அவலங்களும் அழகுகளும் நிறைந்த சமூகத்தின் அவமதிப்புக்கு உள்ளான தேவதாசி மரபின் சிக்கலான இழைகள், சமூகத்தின் மேலான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் உரியவை என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இவற்றுடன் தமிழ்ச் சமூகத்தின் அழகியல் உறவு நிலைகள் குறித்த கண்ணோட்டங்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. தேவதாசி தடைச்சட்டம் வந்தபோது தேவதாசிகளில் ஒரு பிரிவினர் முக்கியமாக பெங்களூர் நாகரத்தினம்மா, வீணை தனம்மாள், மைலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற முன்னணி தேவதாசிக் கலைஞர்கள் தடையை எதிர்த்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி உள்ளது. நிச்சயம் பொருளாதாரக் காரணங்களுக்காக அந்த எதிர்ப்பு இருந்திருக்க முடியாது. அந்தத் தடையை ஏற்றுக் கொண்டால் அந்த அவப்பெயரையும் ஏற்றுக் கொண்டதாகி விடும் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். இன்று சர்வ சாதாரணமாக பெண் இழிவு மற்றும் ஆணாதிக்கத்துக்கான சொல்லாடலாக அது மாறிவிட்டது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப் படும் சொல்லாடல்களே அக்காலக்கட்ட சூழலின் மனநிலை, கற்பனை, படைப்பு சக்தி இவற்றுக்கான அடையாளங்களாக இருக்கின்றன. இன்று குடும்பம், சமூகம் ஆகிய கட்டமைப்புகள் பெரிதும் மாற்றமடைந்து கொண்டு வரும் சூழலில் ஆண், பெண் உ றவு நிலைகளின் இறுக்கங்கள் தளர்ந்து நட்புணர்வு, தோழமை உணர்வுகளும் பெருகிக் கொண்டு வருகிற காலகட்டம் இது. முன்னெப்போதையும் விட இன்று கல்விக் கூடங்களிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் கலைப் பயிற்சிகளிலும் விளையாட்டுகளிலும் சமூக இயக்கங்களிலும் ஆணும் பெண்ணும் இணைந்து பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. ஆண், பெண் உறவுநிலைகள் சார்ந்த கலாச்சாரத்தின் நுண் உணர்வுகள் போலித்தனமான கற்பிதங்களுடன் கொச்சைப்படுத்தப்படுவது சமூகத்தின் தோழமை உணர்வுகளையும் படைப்புணர்வையும் பாதிக்கக்கூடியது. முக்கிய மாக பெண் இன்று எல்லாவிதமான அவமதிப்பு களுக்கும், அங்கீகார மறுப்புகளுக்கும் எதிராக வீறு கொண்டு எழக்கூடிய காலகட்டமாக இருக்கிறது. அதற்கான உத்வேகங்கள் காலத்தின் ஏடெங்கும் சிதறிக்கிடக்கின்றன.

நன்றி - கீற்று
...மேலும்

Mar 27, 2011

ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும் - ஆசாரகீனன்


இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் பணிபுரிந்தவர். பாகிஸ்தானில், யூதர்களை வெறுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் டேனியல் பெர்ல் இவருடன் பணிபுரிந்தவர்.

பெட்ரோ-டாலர்களின் துணையுடன் சவுதி அரேபியா உலகெங்கும் பரப்பி வரும் - இந்திய மற்றும் உலக இடதுசாரிகளின் அபிமான புரட்சி சக்தியான - வஹாபிசத்தின் காரணமாக மசூதிகளில் மேலெழுந்துள்ள பால் சமத்துவமின்மையை, பெண்களை ஓரம் கட்டும் போக்கைத் தீவிரமாக எதிர்ப்பவர் ஆஸ்ரா நொமானி. இது சம்மந்தமாக இவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிய எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன் என்ற கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்திருந்தேன்.

ஆஸ்ரா நொமானி தந்த்ரிகா (Tantrika) என்ற புத்தகத்தை ஏற்கனவே எழுதியுள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இவரை வெறுக்க இது ஒன்றே போதாதா ? மற்ற மதங்களைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாகவும், அவற்றை ஒழித்துக் கட்டுவதைத் தவிர வேறெந்த குறிக்கோளும் இல்லாதவர்களாகவும் பிற முஸ்லிம்களை மூளைச்சலவை செய்வதுதானே இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் - குறிப்பாக வஹாபிஸ்டுகளின் ஒரே நோக்கம். உலகை அடியோடு புரட்டி மாற்ற முயலும் இந்த வகை சைக்ளோப்பியன் பார்வைதானே இடதுசாரிகளுக்கு மிகவும் பிடித்தமான வழிமுறை ?

இவர் 2003-ஆம் ஆண்டு தம் மகன் ஷிப்லியுடன் ஹஜ் யாத்திரை சென்றார். ஹஜ் யாத்திரை அனுபவங்கள் பற்றியும், அமெரிக்க மசூதிகளில் நிலவும் பால் சமத்துவமின்மையை எதிர்க்கும் தம் போராட்டம் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை தற்போது எழுதியுள்ளார். Standing Alone in Mecca : An American Woman 's Struggle for the Soul of Islam என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இது சற்றொப்ப 320 பக்கங்களைக் கொண்டுள்ள கடின-அட்டை (hardcover) பதிப்பு. அமெரிக்காவின் HarperSanFrancisco பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தின் தொடக்கப் பக்கங்களைப் படிக்க ஆஸ்ரா நொமானியின் இணைய தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க எவாஞ்சலிக்க-கிறிஸ்தவ ஏகாதிபத்தியத்தின் மொழியான ஆங்கிலத்தில் படிக்க விரும்பாத பிற அடிப்படைவாதிகள் மற்றும் இடதுசாரி பல-பண்பாட்டியப் போராளிகளின் வசதிக்காக, இர்ஷத் மஞ்ஜியின் 'Trouble with Islam ' புத்தகத்தைப் போலவே இந்தப் புத்தகமும் விரைவில் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்படும் என்று நம்புவோமாக!

இந்தப் புத்தகத்தை தமிழிலும், பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: letters@asranomani.com

முஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பு மற்றும் தெற்காசிய பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நியூயார்க் நகரில் மார்ச் 16, 2005 அன்று நடந்த புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தப் புத்தகத்தின் சில பக்கங்களை ஆஸ்ரா நொமானி படித்துக் காட்டியிருந்தார்.

இந்தப் புத்தக வெளியீட்டை ஒட்டி நியூயார்க் நகரப் பகுதியில் ஆஸ்ரா நொமானி பங்கு பெறும் மற்றொரு முக்கிய நிகழ்வு - முஸ்லிம் பெண்கள் தலைமையில் நடக்க உள்ள தொழுகை ஆகும். மார்ச் 18 2005 வெள்ளிக் கிழமை, நியூயார்க் நகர மசூதி ஒன்றின் பின் பகுதியிலிருந்து அதன் முன் பகுதிக்கு பெண்கள் அணிவகுத்துச் சென்றார்.

ஆண்களும், பெண்களும் கூட்டாகக் கலந்து கொள்ளும் வெள்ளிக் கிழமை தொழுகைக்கு விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய துறைப் பேராசிரியர் முனைவர் அமினா வதூத் (Dr. Amina Wadud) தலைமை வகித்து வெள்ளி சிறப்புச் செய்தியையும் வழங்கினார். இவர் Quran and Woman: Rereading the Sacred Text from a Woman 's Perspective என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். பெண்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கலாம் என்பதை இந்தப் புத்தகத்தில் இவர் அழுத்தமாக நிரூபித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் மூலம் முஸ்லிம் பெண்கள், இஸ்லாத்தில் எஞ்சியுள்ள ஆணாதிக்கப் பார்வையால் வரலாற்றுப் போக்கில் தாம் இழந்த உரிமையை, இருபாலரும் தொழும் மசூதிகளில் தொழுகைக்குத் தலைமை தாங்கும் தங்கள் உரிமையை மீட்டெடுக்க உள்ளனர். மசூதிகளில் பெண்கள் பின் வரிசைகளில் மட்டுமே இருந்து தொழு வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையை உடைத்து முன் வரிசைகளுக்கு அணிவகுத்துச் செல்கின்றனர்.


நன்றி - திண்ணை
...மேலும்

Mar 26, 2011

வெள்ளிவீதியார் பாடல்கள் பெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளிவீதியார்பாடல்கள்

(முனைவர் மு. பழனியப்பன் - இணைப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை)

சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் பெண்கள் குறிக்கத்தக்க இடத்தை வகித்துள்ளனர். சங்ககாலப் பெண்களில் அகப்பாடல்களை மட்டும் பாடியவர் என்ற பெருமைக்கும், பிற பெண்பால் புலவராலும் அறியப்பெற்றவர் என்ற பெருமைக்கும் உரியவராக விளங்குபவர் வெள்ளிவீதியார் ஆவார். இவர் பாடியனவாகப் பதிமுன்று பாடல்கள் சங்க இலக்கியப் பகுதியில் கிடைக்கின்றன. அகநானூற்றில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் எட்டு பாடல்களும், நற்றிணையில் முன்று பாடல்களும் ஆக பதிமுன்று பாடல்கள் இவர் பாடியனவாகக் கிடைக்கின்றன.

இவற்றில் நான்கு பாடல்கள் பாலைத்திணை சார்ந்தவை. முன்று பாடல்கள் குறிஞ்சித் திணை சார்ந்தவை. மருதத்திணை, நெய்தல் திணை ஆகியவற்றுக்கு இரண்டு பாடல்கள் வீதம் பாடப் பெற்றுள்ளன. இவர் பாடாத திணை முல்லைத் திணை மட்டுமே ஆகும். இதற்கும் அடிப்படையான காரணம் உண்டு. முல்லைத்திணை பெரும்பாலும் கற்பு வாழ்க்கை சார்ந்தது. இக்கற்பு வாழ்வினைப் பெறாதவர் வெள்ளிவீதியார் என்பதன் காரணமாக இத்திணை விடுக்கப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

இவர் பாடிய பாடல்களில் பலவற்றைக் காமம் மிக்க கழிபடர் கிளவி என்று துறைக் குறிப்பாளர்கள் துறை வகுத்துள்ளனர். இவர் பாடிய நற்றிணையின் முன்று பாடல்களும் காமம் மிக்கக் கழிபடர் கிளவித் துறை சார்ந்தனவாக உள்ளன. இவரின் காதல் நிறைவேறாமையின் வெளிப்பாடு இவரின் பல பாடல்களிலும் இவர் பற்றி பிறர் பாடிய பாடல் குறிப்புகள் வாயிலாகவும் தெரிய வருகிறது.

இவ்வகைப்பட்ட பாடல்களைப் பாடியுள்ள வெள்ளிவீதியாரின் பாடல்கள் பெண்ணிய உளவியல்படி சிந்திக்கத் தக்கனவாக உள்ளன. இவ்வழியில் சித்திக்கின்றபோது இதுவரை வெள்ளிவீதியார் பாடல்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெற வேண்டியனவாக உள்ளன.


பெண்ணிய உளவியல் ஓர் அறிமுகம்
பெண்ணிய உளவியல் என்பது பெண் மனதை மையமாக வைத்து, அவளின் நடத்தைகளை எடுத்தறிவிப்பது ஆகும். பெண்களாலேயே உணரப்படும் பெண் மன இயல்புகள் பற்றிய கூறுகளை உட்கொண்டிருப்பது பெண்ணிய உளவியல் ஆகும். இது பற்றிய மேரை நாட்டார் விளக்கங்கள் பின்வருமாறு.

"பெண்ணிய உளவியல் என்பது சமுகக்கட்டமைப்பினையும், பால் வேறுபாட்டினையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயும் உளவியல் அமைப்பாகும். வரலாற்று அடிப்படையில் ஆண்பால் சார்புடைய உளவியலில் பிறந்ததாக இது இருந்தாலும், இந்தக் கூறு ஆண்களின் உளவியல் சிந்தனைகளில் இருந்தும், அவர்கள் உருவாக்கிய உருக்களில் இருந்தும் தனிப்பட்டு பெண்கள் பற்றிய உளவியல் ஆய்வுகளைத் தொடங்குவதாக உள்ளது.

பெண்ணிய உளவில் என்பது பெண்களுக்கான சரிசமமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான தனித்த அழுத்தத்தைத் ஏற்படுத்தித் தருகின்றது

மேற்காட்டிய இரண்டு கருத்துக்களும் பெண்ணிய உளவியலின் நோக்கங்கள் பற்றி விளங்கிக் கொள்ள உதவுகின்றன. ஆண் சிந்தனை வயப்பட்ட உளவியல் பகுதியைப் பெண் வழிப்பட்டதாக மாற்ற எழுந்ததுவே பெண்ணிய உளவியல் ஆகும்.

இதனை முதன் முதலாக உருவாக்கிய உளவியலாளர் பிராய்டின் உளவியல் பள்ளியின் வழிவந்த நியோ பிராய்டியன் எனப்படும் காரென் ஹார்னி என்ற பெண்ணியலாளர் ஆவார். இவரே பிராய்டு பெண் உளவியல் பற்றிக் கூறிய அடிப்படைக் கருத்தான ஆண் குறி இழப்புப் பொறாமை என்பதற்கு மாற்றாக வோப் என்வி எனப்படும் கருப்பை இழப்புப் பொறாமை(றடிஅ நஎல) என்பதனைக் கொண்டு வந்தவர்.

அதாவது பெண் குழந்தையானது இளவயதில் தனக்கு ஆண்குறி இல்லையே என்ற எண்ணத்தின் காரணமாகப் பொறாமைப்பட்டு அதன் காரணமாக உளவியல் அடிப்படையில் தயக்கம் பெறுவதாக பிராய்டு கருதினார். ஆனால் பெண்ணியல் உளவியல் அறிஞர்கள் ஆணுக்கும் இழப்பு, பொறமை ஆகியன இருக்கின்றன. அந்தப் பொறாமையின் காரணமாகவே பெண்களை ஆண்கள் அடிமையாக்க முற்படுகிறார்கள் என்று கருத்துரைத்தனர்.

குறிப்பாக ஆணுக்கு மார்பக இழப்புப் பொறாமை, கருப்பை இழப்புப் பொறாமை, பெண்குறி இன்மைப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை போன்ற பல பொறாமைகள் இருப்பதன் காரணமாக அவர்களுக்குள் பாதிப்பு ஏற்படுகின்றது என்று பெண்ணியலாளர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாகப் பெண்களை அவர்கள் அடக்கி வைக்க முற்படுகின்றனர் என்பது இவர்கள் கண்டறிந்த முடிவாகும்.

ஹார்னி கரென் இது பற்றிக் கூடுதல் விளக்கம் தருகிறார். கருப்பை பொறாமை, பெண்குறிப் பொறாமை ஆகிய சொற்கள் பெண்ணிய உளவியல் சார்புடையனவாகும். இயற்கையாக ஆணுக்குப் பெண் மீது வெளிப்படுத்தமுடியாத அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக அவளது உயிரியல் இயக்கங்களான மகப்பேறு, மகப்பேற்றுக்கான தயாரிப்பு முயற்சிகள், பாலூட்டல் போன்றன குறித்த அச்சங்கள் ஆண்களிடம் ஏற்படாமை கருதி ஒரு புதிர்த்தன்மையை அவை ஆண்களுக்குள் ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக பெண்களை அடக்கி வைக்கவும், ஆண்கள் தங்களின் இருப்பை, தங்களின் பெயர்களை முன்வைக்கவும் ஆன செயல்பாடுகளில் கவனம் செலுத்துகின்றனர். என்ற இக்குறிப்பின் வழியாக பெண்கள் அடக்கப்பட்டதற்கான முக்கியக் கூற்றினைப் பெண்ணிய உளவியல் அறிந்து சொன்னது.

குறிப்பாகப் படைத்தல் என்ற தொழில் உயிரியல் அடிப்படையில் பெண்களின் தனித்த இயல்பாக உள்ளது. இந்த உயிர்ப் படைப்பாற்றல் அவர்களின் இலக்கியப் படைப்பாக்கத் திறனிற்கும் முல காரணியாக உள்ளது.

ஆனால் உயிரியல் அடிப்படையில் வெளித் தோன்றும் வகையில் படைப்புத் தொழிலைச் செய்யும் பெண்களை இலக்கியப் படைப்பாக்கத்தில் ஆண்கள் பின்தள்ளி விடுகின்றனர். ஆண்கள் அதிக அளவில் இலக்கியப் படைப்பாக்கத்தில் ஈடுபடுவதும், ஈடுபட்டதும், பெண்களைப் படைப்பாக்கத்தில் இறங்கவிடாமல் புறவேலைகளை அதிகப்படுத்துவதுமான முயற்சிகளும் இப்பின்தள்ளுதலின் அடையாளங்கள் ஆகும்.

மேலும் பெண்கள் உயிர்ப் படைப்பாக்கத்திற்கான தனி வாய்ப்பைப் பெற்றிருப்பதாலும் அவர்களின் படைப்பாக்க முயற்சி அதனுடன் சமப்படுத்தப்பட்டு விடுகிறது. இவ்வகையில் பெண்களின் படைப்பாக்க முயற்சிகளை புரிந்து கொள்ள பெண்ணிய உளவியல் உதவி செய்கின்றனது.

குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் உயிர்ப்படைப்பாக்கத்தினை எட்டாத பெண்களே இலக்கியப் படைப்பாக்கங்களை அதிகம் புனைய முன்வந்துள்ளனர். ஔவையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தி, பெருங்கோழியூர் நாய்கன் மகள் நக்கண்ணையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்ற பெண்களின் வாழ்வில் குழந்தைப் பிறப்பு என்பது அறவே இல்லாமல் இருப்பதையும் எண்ணிப் பார்க்கையில் இக்கருத்துச் சரியென மெய்ப்படும்.

வெள்ளிவீதியார் அகவாழ்வில் காதல் தோல்வியைச் சந்தித்தவர் என்பது அவர் குறித்த ஔவையாரின் பதிவு வாயிலாகவும், வெள்ளிவீதியாரின் பதிவு வாயிலாகவும் அறியப் பெறுகின்றன.

நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே (அகநானூறு : 147:8)

என்ற ஔவையாரின் அகநானூற்றுப் பாடலின் வாயிலாக வெள்ளிவீதியார் காதலனைத் தேடி அலைந்தமை தெரிய வருகின்றது.

மேலும் வெள்ளிவீதியாரின் பின்வரும் பாடலில் அவர் ஆதிமந்தியைப் போலக் காதலனைத் தேடி அலைந்ததாக ஒரு குறிப்பு காணப்படுகிறது.

ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்லோ
(அகநானூறு 5: 1415)

மேலும் இவரது குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இச்சாயலில் உள்ளது.

நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலில் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே( குறுந்தொகை 30)

என்ற இப்பாடலின் வாயிலாக வெள்ளிவீதியாரின் அகவாழ்க்கை பற்றிய செய்திகள் தெரியவருகின்றன.

வெள்ளிவீதியார் தன் அகவாழ்வில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இதற்கு அடிப்படைக் காரணம் தலைவனைச் சேராமையே ஆகும். தலைவன் ஏன் வெள்ளிவீதியாரைச் சந்திக்க மறுத்தான். அவரைத் திருமணம் செய்ய ஏன் மறுத்தான் இதுபோன்ற பல கேள்விகள் இப்பாடல்களின் பின்னணியில் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பெண்ணிய உளவியல் அடிப்படையில் பதிலைத் தரவேண்டியுள்ளது. வெள்ளிவீதியார் என்ற பெண் உயிர்ப் படைப்பாக்க இயல்புகளையும், இலக்கியப் படைப்பாக்க இயல்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக அவரிடம் இருக்கும் கூடுதல் தகுதிகள் வெள்ளிவீதியாரால் விரும்பப்பட்ட தலைவனுக்கு ஒரு விதமான ஐயத்தை, அச்சத்தை, அதாவது தனக்கு இப்பெண் அடங்கி நடப்பாளா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதன் காரணமாக அத்தலைவன் இவரை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று முடிய முடிகின்றது. இதற்குப் பல சான்றுகளும் இவர்தம் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. அவை பற்றிச் சிந்திக்கும் களமாக அடுத்த பகுதிகள் அமைகின்றன.

காதலின் முதல் நிலை
தலைவனைக் கண்ட தலைவி ஒருத்தி புன்னகைக்கிறாள். இந்தக் காதல் குறிப்பினை உணர்ந்த தலைவனும் அவளுடன் காதல் கனிகின்றான். சிறிது நாளில் தலைவியின் காதலைப் புறக்கணித்து விடுகிறான். இதன் காரணமாகத் தலைவி வருத்தமடைகிறாள்.

அவள் தலைவனுக்குக் காதல் குறிப்புரைத்த பற்களைப் பார்த்து பற்களே நீங்கள் பாலை நிலத்தின் வழியில் செல்லும் யானையின் தந்தங்கள் கல்லில் பட்டு முனை மழுங்கி அழகொழிந்து காணப்படுவதைப் போல ஆவீர்கள் என்று கூறுகிறாள். மேலும் தலைவனின் காதல் தலைவியின் உள்ளத்துள் பாணர்கள் பச்சை மீன்களைப் பிடித்துச் சுமந்து செல்லும் மண்டை எனப்படும் பாத்திரத்தில் நீங்காது மீன் வாசனை இருப்பதுபோல நீடித்து இருக்கிறது. இது எமக்குப் புலவியைத் தருகிறது. மேலும் தலைவனையும் பெற இயலவில்லை. எம் உயிரும் அழிந்து போகப்போகிறது என்று இப்பாடல் பொருளுணர்த்துகிறது.

இந்த உவமைக் குறிப்பு சற்று நினைக்கத்தக்கதாகும். பெண்களின் உணவறிவை இப்பாடல் எடுத்துரைப்பதாக உள்ளது. இப்பாடல் வழியாக வெள்ளிவீதியாரின் மனநிலையையும் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

எமக்கும் பெரும்புலவாகி, எம்உயிர் என்பன போன்ற தன்மைப் பன்மைச் சொற்கள் படைப்பாளரையும் உளப்படுத்துவனவாகும். எனவே இங்குக் காட்டப்படும் தலைவி நாடகப் பாங்கில் கற்பனையாகவும், உலகியல் வழக்கில் வெள்ளிவீதியாரைக் குறிப்பதாகவும் உள்ளதை உணரமுடிகின்றது. இப்பாடல் பின்வருமாறு.

சுரம்செல் யானைக் கல்லுறு கோட்டின்
தெற்றென இரீஇயரோ ஐய மற்று யாம்
நும்மொடு நக்க வால்வெள் எயிறே
பாணர் பசுமீன் செறிந்த மண்டைபோல
எமக்கும் பெரும் புலவு ஆகி
நும்மும் பெற்றேஎம் இறீஇயர் எம்உயிரே (குறுந்தொகை 169)

காதலின் வளர்ச்சி
சிரிப்பில் மலர்ந்த காதல் இரவுக் குறிச் சந்திப்பில் வளர்ச்சி பெறுகிறது. தலைவன் பல இடர்களைக் கடந்துத் தலைவியைச் சந்திக்க வருகிறான். ஆனால் நிலவு வெளிப்பாடு காரணமாக தலைவியும் தலைவனும் சந்திக்க இயலவில்லை. தலைவி வருத்தம் மிகக் கொள்கிறாள்.

ஆறுகள் மழைநீராலும், தேன் பொழிவாலும் நிறைந்து ஓடுகின்றன. இவற்றில் பாம்புகளும் இழையும். மலைக் குகை ஒன்றில் யானையால் தாக்கப் பெற்ற ஆண்புலி ஒன்று கிடக்க அதனைக் காக்கும் வண்ணமாகப் பெண்புலி குகையின் வாயிலில் தங்கிக் கிடக்கும் வழியாக அந்த வழி உள்ளது. இம்மலை வழியில் தலைவன் வேல் ஒன்றேந்தித் தலைவியைச் சந்திக்க வருகிறான். அவனின் சந்திப்பு நிகழாவிட்டால் நான் வாழமாட்டேன். நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்று இப்பொழுது யான் வாழலேனே:(அகநானூறு 362 : 910) என்ற இப்பாடலடியில் உள்ள யான் என்ற தன்மைக் குறிப்பு கருதத்தக்கது. இது படைப்பாளரின் உளத்தையும் சுட்டுவது என்பது முன்னரே சுட்டப் பெற்றதாகும்.

இச்சூழலில் தலைவனின் காதல் வளம் பெற்றது. என்றபோதும் அது நிறைவடையவில்லை.

தலைவன் இல்லாப் பொழுதுகளில் வருத்த மிகுதி
தலைவனின் அன்பு வயப்பட்ட தலைவி அவனின் அருகாமை வேண்டி நிற்கிறாள். அது கிடைத்த பாடில்லை. அவனுடன் இருந்த மாலைப் பொழுதையும், அவனுடன் இல்லாத மாலைப் பொழுதையும் அவள் எண்ணிப் பார்க்கிறாள். அணிகூட்டும் மாலையோ அறிவேன், மன்னே மாலை நிலம்பரந்தன்ன புண்கணோடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே ( குறுந்தொகை 386: 46) மகிழ்வான மாலையை அறிந்தவள் தனிமைத் துயரால் வருத்தப்படும் மாலைப் பொழுதை வெறுக்கிறாள்.

இதுபோன்று இரவில் தலைவன் துணையின்றி தலைவி அழுகிறாள். தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டிப் பொருள் தேடிப்பிரிகின்றான். அவன் சென்றதன் காரணமாக அலர் எழுந்தது. இது ஆதிமந்தியின் அல்லலுற்ற நிலையை ஒத்திருந்தது. வானவரம்பனின் படையினர் வரவால் தூங்காது உள்ள ஊர் மக்களைப் போல நானும் உறங்காமல் உள்ளேன் என்று தலைவி கலங்குகிறாள். (அகநானூறு 45)

இவ்வாறு தலைவனின் பிரிவு தலைவியாகிய வெள்ளிவீதியாருக்குத் துன்பத்தைத் தந்துள்ளது. பிரிந்த தலைவன் கடைசிவரை வராது ஒழிந்தான்.

காமவேகம்
வாராது ஒழிந்த தலைவன் தந்த காதல் நோய் தலைவிக்கு காமத்தை விளைவித்தது. இதனைத் தாங்க இயலாது அவள் தவிக்கின்றாள். இந்த அடிப்படையில் வெள்ளிவீதியாரின் பல பாடல்கள் அமைந்துள்ளன. காம வேகத்தை வெளிப்படுத்தும் தன்மை பெண்களுக்குப் பெரும்பாலும் இல்லை என்ற பொதுக் குறிப்பை இப்பாடல்கள் பொய்யாக்குகின்றன.

வெள்ளிவீதியார் பாடல்களில் கூற்று நிலையில் பல தடுமாற்றங்கள் நிலவுகின்றன. பின்வரும் பாடல் தலைவன் கூற்றாகப் பெரும்பாலும் பல உரையாளர்களால் இனம் காணப்பட்டது. அது பிறழ உணரப்பட்டதாகும்.

இடிக்கும் கேளீர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமண் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல்போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே
( குறுந்தொகை 58)

இப்பாடல் தலைவன் கூற்றாகப் பலரால் இனம் காணப் பெற்றது. இப்பாடலைத் தலைவன் கூற்றாகக் கொள்ளுதலைவிட தலைவி கூற்றாகக் கொள்ளுதல் பொருத்தமாகவும் வெள்ளிவீதியார் தம் ஏனைய பாடல்களோடு இசைந்தும் அமையும் என்று கருதுகிறார் தாயம்மாள் அறவாணனர். அவரின் கருத்தே கட்டுரையாளருக்கும் ஏற்புடையதாகும்.

இப்பாடலில் தலைவியின் காம வேகம் அதிகரிக்க அதனை இடித்துரைக்கின்றனர் உறவினர்கள். இருப்பினும் அவள் காம வேதனைப்படுகிறாள். காய்ந்த கல் பரப்பில் வைக்கப் பெற்ற வெண்ணெய் வெப்பத்தால் உருகி ஓடும்போது கையில்லாத ஊமண் ஒருவனால் எப்படித் தடுக்க முடியாதோ அதுபோல் காமத்தைத் தலைவியால் தடுக்க இயலவில்லையாம். இவ்வுவமைப் பகுதியில் கையாளப் பெற்றுள்ள வெண்ணெய் உவமை பல வகை ஒப்புமை உடையதாகும்.

பெண்ணின் காமத்தைத் தடுத்து நிறுத்துவதாக நாணம் விளங்குகின்றது. இருப்பினும் அந்நாணமும் தோற்றுப் போய்விடும் அளவிற்குத் தலைவியின் காதல் பெருகுகிறது.

அளிதோ தானே நாணம் நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே இனியே
வான்புங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறைத்
தீம்புனல் நெரிதர வீந்து உக்கா அங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதர கைநில்லாதே (குறுந்தொகை 149)

என்ற பாடலில் வெள்ளத்தினைக் கட்டுப் படுத்தும் கரையில் உள்ள கரும்புகளும் மிகு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுபோல காமமானது நாணத்தையும் புறந்தள்ளிக் கொண்டு போய்விடுமோ என்று கலங்குகிறாள் தலைவி. காமத்தின் அளவு கைநில்லாத அளவிற்கு உள்ளதாக இத்தலைவி கருதுகிறாள். ஏறக்குறைய வெள்ளிவீதியாரின் நிலையும் இதுவேயாகும்.

யாமம் உய்யாமை நின்றன்று
காமம் பெரிதே களைஞரோ இலரே
(நற்றிணை 335, 1011)

என்ற பாடலடிகள் யாமப் பொழுதில் பெருகும் காமத்தைப் பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது. பெண் காமம் பெரிது. அதனை முற்றாகக் களைபவர் யாரும் இல்லை என்பதைக் குறிப்பதாக இப்பாடலடிகள் விளங்குகின்றன.

அன்றில் பறவைகளின் கூச்சல், யாழ் ஒலி போன்றன காம வேதனையை மிகுவிப்பனவாக இப்பாடலில் சுட்டப் படுகின்றன. இப்பாடலிலும் என்புறம் நரலும் என்ற நிலையில் தன்மைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இதுவும் வெள்ளிவீதியாரின் அகவாழ்வு வெளிப்பாடு என்பதற்கு இக்குறிப்பு சான்று நல்கும்.

உலகினர் இரவில் நிலவின்பம் தூய்க்கின்றனர். பிரிவால் வாடும் தலைவி மட்டும் அழுது கொண்டு நிற்கிறாள்.

யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு
கனைஇருங் கங்குலும் கண்படை இலனே
அதனால் என்னொடு பொரும்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொரும்கொல் என்அவலம் உறு நெஞ்சே
(நற்றிணை 348:710)

என்ற இப்பாடலில் வளையிழந்து அவலமுறும் தலைவியின் காட்சி இடம் பெறுகிறது. தன்னோடு உலகு பொருந்தாமையையும், உலகோடு தான் பொருந்தாமையையும் தலைவி இப்பாடலில் எடுத்துரைக்கிறாள்.

பெண்ணிய நிலையில் ஆண்மைய உலகிற்கும், பெண்ணுக்கும் உள்ள முரண்பாட்டைத் தெற்றெனக் காட்டுவதாக மேற்கண்ட பாடலின் அடிகள் விளங்குகின்றன.

குருகின் தூது
காதலால் அதன் தோல்வியால் தலைவனை அடையமுடியாத தலைவி தன் துயரத்தைச் சொல்லிடக் குருகினைத் தூதாக அனுப்புகிறாள். உலகத்தோடு பகை வந்துவிட்டபின் அஃறிணைப் பொருள்களை மட்டுமே நம்ப இயலும். அந்த அளவில் இந்தப் பாடல் முக்கியமானதாகும்.

என் ஊருக்கு வந்துபோகும் சிறு வெள்ளாங்குருகே! என்நிலையை என்தலைவனிடம் கூறுக என்பதே இப்பாடலின் பொருள். கழனி நல்ஊர் மகிழ்நர்க்குஎன் இழைநெகிழ் பருவரல் செப்பாதோயே (நற்றிணை 70) என்று விளிக்கிறாள் தலைவி.

இவ்வகையில் பல நிலைகளில் துயருற்ற வெள்ளிவீதியாரால் படைக்கப் பெற்ற தலைவியின் பாடல்கள், அல்லது வெள்ளிவீதியார் தம் தன்னனுவப் பாடல்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன.

  1. தலைவி காதல் வயப்பட்டுப் பின் காமத்தின் அளவைத் தாங்க முடியாதவளாக உள்ளாள்
  2. அவளை மணக்கப் பொருள் தேடிப் போனத் தலைவன் திரும்ப தலைவியை நோக்கி வந்தானில்லை.
  3. தலைவியைக் கண்டும், இரவுக் குறியில் தன் காதலை வளப்படுத்தியும் வந்த அவனின் அன்பு இல்லாமையால் தலைவி பெரிதும் வருத்தமுற்றுள்ளாள். உடல் அளவிலும், மனஅளவிலும் அவளின் வருத்தம் அதிகரித்துள்ளது.
  4. ஊரும் இதனை அலராக உணர்த்தியது. இதன் காரணமாக ஊரின் மீது தலைவி பகை கொண்டாள். ஊரும் அவள் மீது பகை கொண்டது.
  5. இதனைத் தீர்க்க இயலாமல் தலைவி அஃறிணைப் பொருள்களைத் தூதாக விட்டுள்ளாள்
  6. வெள்ளிவீதியார் பாடல்களில் பல தன்மைக் குறிப்புகள் காணப்படுவதால் அவை படைப்பாளரின் சொந்த அனுபவ வெளிப்பாடு எனக் கொள்வதில் தவறில்லை.


இவை இப்பாடல்கள் தரும் பொதுக் கருத்துக்கள் ஆகும். இக்கருத்துக்கள் வழியாகத் தலைவன் தலைவியின் காம இயல்பு கண்டும், கேளீர் கண்டும் இது போன்ற பல இடர்பாடுகள் கண்டும் அவளை மணக்க முன்வரவில்லை என்பது தெரியவருகிறது. இதன் காரணமாக வெள்ளிவீதியாரின் தலைவி அல்லது வெள்ளிவீதியார் பெரிதும் பாதிக்கப் பெற்றுள்ளாள்/ர். அவன் வராமைக்குக் காரணம் என்ன என்பது தெளிவிக்கப் பட வேண்டும்.

இதற்கு வெள்ளிவீதியார் தரும் பதில் பின்வரும் பாடலாகும். இப்பாடல் பெண்ணிய உளவியல்படியான பெண்குறிப் பொறாமை சார்ந்த பாடலாகும். ஆணுக்குப் பெண்ணின் குறி மீதான சில புதிர்களும், அச்சமும் நிலவின என்பது ஒரு புறம். பெண்களுக்குத் தங்களின் புற அடையாளங்கள் மீதான பெருமைத்தன்மை இருந்துள்ளது என்பது மறுபுறம். இந்த மறுபுறத்தை இப்பாடல் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என்மாமைக் கவினே. 
( குறுந்தொகை, 27)

பசு மாடு பால்தரத் தக்கது. அப்பசுமாட்டின் பால் கலத்திலும் சேர்க்கப்படாது, கன்றுக் குட்டியாலும் உண்ணப்படாது வீணே நிலத்திற்கு செல்வதாகக் கொண்டால் அதனால் யாருக்கும் பயன் விளையாது. அது போல வரிகள் கொண்டு விளங்குகின்ற, மாந்தளிர் போன்ற பரப்பினையும் அழகினையும் உடைய அல்குல் பசலை நோயால் அதன் கவினை அழிந்தது என்பது பாடலின் பொருளாகும்.

பெண்ணிய உளவியல் கருதும் பெண்குறிப் பொறாமை என்பது இதனுள் விளங்குகிறது. பெண்களின் குறி பற்றிய தெளிவான வெளிப்பாடாக இது அமைகிறது. இதனின் அழகு குலைவது பற்றியதான விவரங்கள் இப்பாடலில் அமைந்துள்ளன. பெண்ணுக்குத் தன் உடல் கூற்றின் மேல் ஏற்பட வேண்டிய அழகுணர்ச்சியை இது காட்டுகின்றது.

மேலும் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் புகட்டல் குறித்தும் ஆண்களுக்குப் புதிர் ஏற்பட்டுள்ளது. இப்புதிர்த் தன்மை இப்பாடலில் பால் என்னும் உவமையாக வெளிப்பட்டுள்ளதை உணரவேண்டும். பால் தருவது பசுமாடு. அது பெண் வகைப்பட்டது. அதே சூழல் வாய்ந்த பெண்ணின் வளமையையும் இது குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே பெண்ணியலாளர்கள் கருதும் கருப்பை பொறாமை, தாய்ப்பால் அளிக்கும் பொறாமை, பெண்குறிப் பொறாமை ஆகியனவற்றைச் சுமந்ததாக இந்தப் பாடல் விளங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

பெரும்பாலும் தற்கால தமிழ்ச் சொல் வழக்குகளில் ஒரு ஆண் மற்றொரு ஆணைத் திட்ட முற்படும்போது தேவையில்லாமல் பெண் அவயங்களைப் பற்றி, குறிப்பாக அவளின் குறி பற்றிய இழி சொற்கள் இடம் பெறுகின்றன. இவை ஆணுக்கு உள்ள பெண் குறி பற்றிய பயத்தைப் புதிரை வெளிப்படுத்துவதே ஆகும்.

இதுபோன்றதொரு அச்சம், அதன் வகையில் தோன்றிய பெண் அடங்குவாளா மாட்டாளா என்ற ஐயம் வெள்ளிவீதியாரைக் காதலித்த தலைவனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். குழந்தையைப் படைக்கும் வல்லமையைப் பெற்ற பெண், இலக்கியத்தைப் படைக்கும் வல்லமையைப் பெற்ற பெண், அலரால் உலகால் புறக்கணிக்கப்பட்ட பெண் ஆகிய சூழல்களைக் கொண்டவளைத் தனக்குக் கீழ் இருக்கச் செய்வது இயலாத செயல் என்று கருதியே அத்தலைவன் வெள்ளிவீதியாரின் காதலைப் புறக்கணித்திருக்க வேண்டும்.

குறிப்பாக காதல் தோல்வி பெற்ற ஆண்கள் அது பற்றிய சிந்தனையைப் பெரும்பாலும் பலரறிய வெளிப்படுத்துவர். பெண்கள் அப்படிச் செய்வது இல்லை. ஆனால் இங்குக் காதல் தோல்வி ஏற்பட்ட பெண் ஒருத்தி தன்னைப் பற்றி வெளிப்படுத்தியிருப்பது தமிழ்க் களத்தில் புதுமை வாய்ந்ததே ஆகும்.

வெள்ளிவீதியாரின் பாடல்களை பெண்ணிய உளவியல் கண்ணோட்டத்துடன் காணுகையில் இத்தகைய புதிய செய்திகளுக்கு அவை இடம் தருகின்றன என்பது வியப்பளிக்கின்றது.

முடிவுகள்
1. பெண்ணிய உளவியல் நிலையில் ஆண்களுக்குச் சில பொறாமைகள் இயற்கையாகப் பெண்கள் குறித்து அமைந்துள்ளன. பெண்களின் உடல் வெளிப்பாடுகளான, உயிரியல் தோற்றங்களான தாய்மைப்பேறு, பால்கொடுத்தல் போன்றன ஆண்களுக்குப் புரியாத தன்மையை ஏற்படுத்தி நிற்கின்றன.
2. பெண்கள் தன் உடல் பற்றி அவற்றின் இயல்புகள் பற்றிப் பெருமைப் பட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு வெள்ளிவீதியார் பாடல்கள் சான்று பகர்கின்றன.
3. தலைவன் ஒருவன் காதலித்த காதலியைப் புறக்கணிப்பதற்கு அவளின் உடல் குறித்தான புரிதல் இன்மையும், அவளின் அகம் பற்றிய புரிதல் இல்லாமையும், இவை கருதித் தோற்றமும் அச்சமும் காரணமாக அமையலாம்.

பயன் கொண்ட நூல்கள்
1. ஔவை நடராசன், புலமைச் செவ்வியர், தி பார்க்கர் சென்னை 14.
2. சுப்பிரமணியன். ச.வே., சங்கஇலக்கியம், முன்று தொகுதிகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010
3. தாயம்மாள் அறவாணன், மகடுஉ முன்னிலை, பச்சைப் பசேல், சென்னை, 29 2004
4. நாகராசன். வி. (உரையாசிரியர்), குறுந்தொகை, என்சிபிஎச், சென்னை, 2004
5. இணைய தளம்: விக்கிப்பீடியா தகவல் களஞ்சியம்.
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்