/* up Facebook

Feb 18, 2011

பறவைகளும் விழிக்காத அதிகாலையில்.... - தி.பரமேசுவரி


நிறை சூலியாய் மலை மீது ஏறிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண். தான் வளர்க்கும் ஆடுகளுக்குப் புல் வெட்டுவதற்காக அவள் ஏறுகிறாள். துணைக்காகவும், தன் குழந்தைகளுக்குக்காகவும் அவள் உழைத்தே ஆகவேண்டும். மலை மீது வலி எடுத்துக் கதறும் அவள், தன்னைச் சமாளித்தபடி தன்னுடன் வந்த பெண்களின் துணையுடன் குழந்தை பெற்று, தான் சேகரித்த புல்லுக்கட்டின் மீதே குழந்தையைப் போட்டு இரட்டைச் சுமையுடன் மலையிலிருந்து இறங்குகிறாள். பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்று அதில் ஐந்து குழந்தைகளை இழந்தவள். குடிகாரக் கணவனிடம் அடி, உதை பட்டு கசந்த வாழ்வோடு முப்பத்திரண்டு வயதிலேயே கைம்பெண் ஆனாலும் மனந்தளராமல் குடும்பத்தை நடத்தினாள். அவள்தான் நாகம்மாள்.

இன்று மாற்று நோபல் பரிசு பெற்று, இந்தியாவைப் பெருமையுடன் நெஞ்சு நிமிரச் செய்திருக்கும் கிருஷ்ணம்மாளின் தாய் தமிழ் நாட்டின் தென் கோடிக் கிராமமான அய்யங்கோட்டையில் 1926இல் தலித் சமூகத்தில் பிறந்தவர். தாயிடமிருந்து தான் பெற்ற துணிவையே சொத்தாகக் கொண்டு, தன் முயற்சியால் கல்லூரிக் கல்வியை முடித்தார். தன் தாயைப் போலவே துன்பப்படும் தலித் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும், சமூக அக்கிரமத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்பவற்றைத் தன் இலக்குகளாகக் கொண்டார். காந்தியடிகளின் சர்வோதயா இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வினோபா பாவேவுடன் களப்பணி புரிந்தார். அங்குதான் அவர் தன் வருங்காலக் கணவர் ஜெகந்நாதனைச் சந்தித்தார். பெரும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த ஜெகந்நாதன், காந்தியடிகளின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தம் கல்லூரிக் கல்வியை இடையிலேயே துறந்தார். சட்ட மறுப்பு இயக்கம் , வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றிலும் பங்கு கொண்டார். இந்தியா விடுதலை பெற்ற பிறகே தம் திருமணம் என்று ஒரு மனதாய்த் தீர்மானித்திருந்த இருவரும் 1950 இல் தம்பதிகளாயினர்.

காந்தியடிகளுடன் ஒரே மேடையில் பேசவும், 1954 இல் மார்ட்டின் லூதர் கிங்கைச் சந்திக்கவுமான அரிய வாய்ப்புகளைப் பெற்ற கிருஷ்ணம்மாள், இந்திய விடுதலைக்குப் பிறகு தம் கடமை முடிந்ததென ஒதுங்கி இராமல், சுதந்திர இந்தியாவின் சீரான கட்டமைப்பிற்கும் தன்னாலியன்றதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் செயலாற்றத் தொடங்கினார். சென்னையில் அவர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பைப் முடித்து வந்த சமயத்தில் ஜெகநாதன், 1950 முதல் 1952 வரை வினோபாவுடன் பூமிதான இயக்கத்துக்காக வட நாடு முழுதும பயணித்தார். நிலமற்றவர்களுக்கு நிலங்களைப் பங்கிட்டு அளித்து அவர்களையும் உயர்த்துவதன் மூலமே சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே அவர்தம் நம்பிக்கை. சென்னை திரும்பிய ஜெகநாதனுடன் கரங் கோர்த்து 1953 முதல் 1967 வரை தமிழ்நாடு முழுதும் பயணித்து பூமிதானத் திட்டத்திற்கும் கிருஷ்ணம்மாள் அயராது பாடுபட்டார். உச்ச வரம்புச் சட்டத்தற்குப் புறம்பாக, தன் உறவினர் மீதும் பினாமிகள் பேரிலும் பதியப்பட்டிருந்த நிலங்களை, பெருநில உடைமையாளர்களிடம் இருந்து சுமார் நான்கு மில்லியன் ஏக்கர்களைச் சத்தியாக்கிரக முறையில் போராடிப் பெற்ற இவ்விருவரும் அதனை நிலமற்ற விவசாயிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். இதற்காகச் சுதந்திர இந்தியாவிலும் இவர்கள் சிறை செல்ல நேர்ந்தது.

தமிழகம் முழுவதும் சுற்றி வந்த இத்தம்பதியினர் ஓரிடத்தில் நிலை கொள்ளக் காணமாயிருந்தது, 1968 இல் நடைபெற்ற கீழ் வெண்மணிப் படுகொலை. கூலியை உயர்த்திக் கேட்டதற்காக நாற்பத்து நான்கு தலித் மக்கள், பெண்கள், குழந்தை உட்பட தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த கிருஷ்ணம்மாள் தான் உடனடியாகக் கீழ்வெண் மணிக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்த போது சற்றும் தயங்காமல், 'நீ போய்ப் பணியாற்று. நான் உடன் சேர்ந்து கொள்கிறேன்' என்று ஊக்குவித்தார்.

கீழ்வெண்மணிக்குச் சென்றவரின் முதல் பணி, அப்படுகொலைக்குக் காரணமான தீண்டாமைக் கொடுமையின் அடிவேரை அசைப்பதாக இருந்தது. 1970 களில் - தீண்டாமை மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட நேரம் அது – தலித் மக்கள் செருப்பணியவும், பொதுக் கிணறுகளில் நீரெடுக்கவும் தடை இருந்தது. கோயிலினுள் சென்று வழிபடும் உரிமைய (தலித் மக்கள்) கனவிலும் நினைக்க முடியாது. இதற்கெல்லாம் எதிராக அவர்களின் சிறு முனகலையும் கூட உயர்சாதியினரால் தாங்க முடியாத நிலையில், எதிர்த்தவர்களை மரத்தில் கட்டி வைத்து மாட்டுச் சாணம் கரைத்த நீரைக் கட்டாயப் படுத்தி புகட்டினர். இருபதாம் நூற்றாண்டில் கூட இறுக்கமாய் இருந்த சாதிய வன்கட்டமைப்புகளுக்கு எதிராகவும் நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தைச் சொந்தமாக்கவும் 'உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்' என்ற இயக்கத்தை 1981 இல் தொடங்கினர் (Land for tiller’s freedom – Lafti). வங்கிகளில் கடன் பெற்று அதன் மூலம் நிலமற்றோர்க்கு நிலங்களை வாங்கித் தருதல், அவர்கள் மூலமாகவே கடனை அடைத்தல், சுற்றுச் சூழலைப் பாதிக்காத வீடுகளைக் கட்டித் தருதல், உழவுப் பணி நடைபெறாத காலங்களில் விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு, அவரவர் ஆர்வத்திற்கேற்ப தையல், தச்சு, நெசவு, கொத்து வேலை, கணிணிப் பயிற்சி, இயந்திரங்களைப் பழுது பார்த்தல் போன்ற தொழில்களைப் பயிற்றுவிப்பதே இவ்வியக்கத்தின் பணிகள். ஓரிரு வரிகளில் நம்மால் எழுதப்படும் இப்பணிகளைச் செய்து முடிக்க இவர்கள் பட்ட பாடு மிக அதிகம். தலித்கள், நில உடைமையாளர்களாக மாற்றம் பெறுவதை விரும்பாத பெருநில உடைமையாளர்கள் மற்றும் உயர்சாதியினர், இவர்களால் கடனைத் திரும்பக் கட்ட முடியமா என்று சந்தேகப்பட்ட வங்கி அதிகாரிகள், தங்கள் நிலை குறித்து உணர்வற்ற தலித் மக்கள் ஆகியோருடன் மிகக் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. 1975 இல் ஜெயப் பிரகாச நாராயணன் அழைப்பின் பேரில் புத்தர் ஞானமடைந்த பெருமை உடைய புனித கயாவுக்குச் சென்றனர். அங்கு ஒரு கோயில் பூசாரி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்து வைத்திருந்ததுடன் தலித் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வூர் மக்களைத் திரட்டி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியதன் மூலம் இப்பிரச்சனையை முக்கியமானவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்த கிருஷ்ணம்மாள், சுமார் 20,000 ஏக்கர் வரை அப்பூசாரியிடமிருந்து மீட்டு முப்பது கிராமங்களில் இருந்த நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். வட நாட்டுக்குச் சென்று அவர்கள் மொழியறியாமலே அவர்களுக்காகப் போராடிய அனுபவம் பற்றி 'அந்த மக்களுடன் பேசுவதற்கு அவர்களுடைய மொழியைக் கற்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாங்கள் எங்கள் இதயத்தின் வழியே பேசினோம்' என்று பதிவு செய்துள்ளார்.

எந்த விதமான ஆரவாரமுமின்றிச் செயல்பட்டு வரும் இவர்கள், தங்கள் இயக்கத்தின் மூலமாகத் தமிழ் நாட்டில் மட்டும் 13,000 ஏக்கர் நிலத்தை 13,000 குடும்பங்களுக்குப் பங்கிட்டுள்ளனர். நிலமற்ற விவசாயிகளுக்குப் பாடுபட்டு வந்த தருணத்தில் இவர்களது கவனம் பெற்ற மற்றொரு விஷயம், சாகுபடி செய்யப் கூடிய நல்ல நிலங்களைப் பாழாக்கிய இறால் வளர்ப்புப் பண்ணைகள். 1992 இல் இப்பண்ணைகளுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர் . இம்முறை இவர்கள் போராடியது, சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகர முதலாளிகளிடமும் தொழில் முதலைகளுடனும். இறால் பண்ணைகள் கூலி விவசாயிகளின் வேலை வாய்ப்புகளைப் பறித்ததோடு நிலங்களையும் பாலையாக்கியது . குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்தது போல் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி எதற்கும் பயனற்றதாக்கியது. கடல் நீர் நிலத்தில் நுழைந்த பிறகு எதற்கும் பயனற்றதாகும் நிலத்தை வேறு வழியின்றி இந்த முதலாளிகளுக்கே குறைந்த விலைக்கு விற்கும் அவலமும் நிகழ்ந்தது. இந்த அராஜகத்தை எதிர்த்த கிருஷ்ணம்மாள், தம் இயக்கம் மூலம் மக்கள் சக்தியை ஒருங்கே திரட்டி உண்ணாநிலை ஊர்வலம் போன்ற அற வழிகளில் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். காந்தீய வழியில் போராடிய அவருக்கும் அவர்தம் இயக்கத்தாருக்கும் குண்டர்களிடம் அடிபட்டதே பரிசானது. அவரை உயிரோடு கொளுத்தவும் முயற்சிகள் நடந்தன. வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. திருட்டு போன்ற பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனாலெல்லாம் மனம் தளராமல், பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் பதிவித்தனர். நீதி மன்றம், இந்திய தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் நிறுவனத்திடம் (National Environmental Engineering Institute of India – NEERI) இது பற்றி ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டது. இந்நிறுவனததின் ஆய்வறிக்கை, இறால் பண்ணைகள் நன்னிலங்களை நஞ்சாக்கும் கொடுமையை அம்பலப்படுத்தியது . இந்த அறிக்கையின் அடிப்படையில் 1996 இல் உச்ச நீதி மன்றம் நன்னிலங்களை இறால் வளர்ப்புக்காக ஆக்கிரமிப்பதைக் கண்டித்தும் கடலோரப் பகுதிகளில் 500 மீட்டருக்கு உள்ளிட்டே பண்ணைகள் அமைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. ஆனால் அரசியல் ஆதரவோடு இன்றும் கூடப் பல இடங்களில் நீதிமன்ற ஆணை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் தம்பதியரின் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இடைவிடாது செயல்பட்டபடி இருக்கும் கிருஷ்ணம்மாள் , காந்திகிராம அறக்கட்டளையிலும் மதுரைப் பல்கலைக்கழகத்திலும் செனட் உறுப்பினராக இருந்துள்ளார். கல்வி, நிலச்சீர்திருத்தம் ஆகியவற்றின் தேசிய அளவிலான குழுக்களிலும் திட்டக் குழுவிலும் (National Planning Committee) பங்கு பெற்றுள்ளார். சீரிய இத்தகு செயல்பாடுகள் காரணமாக இவர்களுக்கு விருது கொடுத்துத் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டவர்கள் பலர். அமைத்திக்கான சுவாமி பிரணவானந்தா விருது (1987), ஜம்னாலால் பஜாஜ் விருது (1996), சம்மிட் பவுண்டேஷன் விருது (1999, சுவிட்சர்லாந்து), சிறந்த பெண்மணி விருது (2004), இந்திரா ரத்னா விருது (2005), சியாட்டில் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் ஓபஸ் பரிசு (opus Prize – 2008), மாற்று நோபல் பரிசு (Right Livelihood -2008) போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. 82 வயதாகும் கிருஷ்ணம்மாளிடம மாற்று நோபல் பரிசுப் பணத்தை எப்படிச் செலவிடப் போகிறார் என்று வினவிய போது அவர் அளித்த பதில் நெஞ்சை நெகிழச் செய்யும், 'அது கோயில் உண்டியலில் இருக்கும் பணம் போன்றது. நாங்கள் அதைத் தொட மாட்டோம். அது ஏழைகளின் நலனுக்கே செலவிடப்படும்' என்று குறிப்பிட்டார். இவ்விருது அவரது கணவர் உட்பட நான்கு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1930 இல் இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகம் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதனைப் போற்றும் வகையிலும் இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையிலும் அதே நாளில் மீண்டும் உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. அவ்வூர்வலத்தில் வந்தே மாதரம், ரகுபதி ராகவ ராஜா ராம் போன்ற பாடல்களை மாணவர்கள் பாட, வேதாரண்யத்தின் முக்கியமான அன்பர்கள் உடன்வர தன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று அகஸ்தியம்பள்ளியில் நிறுவப் பெற்றுள்ள உப்புச் சத்தியாக்கிரக நினைவுத்தூண் அருகில் மீண்டும் உப்பெடுத்ததை மிகுந்த நெகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அவர் நினைவு கடர்ந்தார். தன் குழந்தைகள் பூமி, சத்யா இருவருக்கும் பெரும் சொத்து எதையும் சேர்க்கவில்லை எனினும் உலகம் முழுவதும் விரிந்திருக்கும் தம் இயக்க உறுப்பினர்கள் அடங்கிய பெரும் குடும்பத்தையே சொத்தாக்கியிருப்பதாகக் கூறும் இவரை இயக்க உறுப்பினர்களும் அப்பகுதி மக்களும் உள்ளன்புடன் 'அம்மா ' என்றே அழைக்கின்றனர். இராமலிங்க அடிகளாரைத் தம் வழிகாட்டியாகவம் குருவாகவும் கருதும் இவர் அதிகாலை நான்கு மணிக்குத் துயிலெழுந்து தம் கடமைகளைச் செய்யத் தொடங்குகிறார். பறவைகளும் விழிக்காத அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு நாளும் தான் காணும் விடிவெள்ளியே, அன்றைய பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கத் தேவையான சக்தியை அளிப்பதாகக் கூறுகிறார். உண்மையொளி பொழியும் முகத்துடனும் மென்புன்னகையுடனும் இராமலிங்கர் பாடல்களை மென்மையாய்ப் பாடுகிறார்.

'அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை'
'எல்லாம் கை கூடும் என் ஆணை அம்பலத்தே'.......

நன்றி : தடாகம்.காம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்