/* up Facebook

Feb 13, 2011

யாழ் மாவட்டத்தில் போரின் பின்னரான பெண்களின் பொருளாதார சமூக மீளுருவாக்கப் பயணம். - திருமதி.சரோஜா சிவசந்திரன்


சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் “யாழ்ப்பாண மாவட்ட வளங்கள், பயன்பாடு, அபிவிருத்தி வழிமுறைகள்” எனும் தலைப்பில் நடத்திய இருநாள் செயலமர்வில் 05.02.2011 அன்று மாலை இடம்பெற்ற இரண்டாவது அமர்வில் திருமதி சரோஜா சிவசந்திரன் அவர்களால் வழங்கப்பட்ட ஆய்வுரை.

இன்று எமது நாடு வரலாற்றிலேயே மிக இக்கட்டான நிலையிலே உள்ளது. வன்முறை மோதலிலிருந்து விடுபட்ட போதிலும் வன்முறை கலாசாரத்தை முற்றாக அழிக்க முடியாத நிலை, உருவாக்கப்படும் திட்டங்கள் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களாக அமையவில்லை. பொருளியலாளர் அமத்தியா சென் அவர்களது கருத்துப்படி “அபிவிருத்திப் பணிகளில் சனநாயக விழுமியங்கள் இணைக்கப்டும் போது அவை மேலும் செழுமை பெற்று சமூகத்தின் அடிப்படைக் கலாசாரமாக மாற்றம் பெறுகின்றன” என்று கூறினார். வளங்களின் அதி உச்ச பயன்பாடு அபிவிருத்தியின் அடிப்படை தேவையாகும். ஆனால் நாட்டின் முழுமையான வளங்களையும் அரசு தன் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரும் போக்கே இன்று காணப்படுகின்றது. அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய நிலை உள்ளது., போரின் வெற்றி தேர்தல் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா? அல்லது நாட்டை உலுக்கும் பொருளாதார பிரச்சினைகட்கு தீர்வு கண்டுள்ளதா? என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

போரின் கோரப்பிடியிலிருந்து தம் சொந்த நிலங்களை விட்டு அகதிகளாக ஓட நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் திரும்பி வரவும் முடியவில்லை. வந்தாலும் தமது சொந்த நிலங்களில் கால் பதிக்கவும் முடியவில்லை. தம் சொந்தக் காணிகளை தம்முடையவை என உறுதிப்படுத்த எண்ணிலடங்கா கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. தகுதியான ஆவணங்கள் இன்றி அலையும் மக்கள் மத்தியில் குறிப்பாக கணவன்மாரை இழந்த பெண்கள் தமது சொந்தக் காணிகளைத் தேடி மீள் குடியேறுவது சிரமமான காரியமாக உள்ளது. இலங்கையின் வளப்பயன்பாடு, காணி விடயங்கள், வரிவிதிப்புப் போன்றன மாகாண சபைகளின் அதிகாரத்தில் நிர்வகிக்கப்பட்ட போதிலும் வடக்கு மாகாணத்தில் மாகாண சபை இதுவரை முறையாக இயங்காத நிலையில் மத்திய அரசாங்கத்தின் மேலதிக தலையீட்டை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடைமைகட்கு ஏற்பட்ட பேரழிவுகளோடு மக்கள் சந்திக்கும் வறுமைச் சுமைகளோடே புனரமைப்பு மீள் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இச் செயற்பாடு நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திக்குச் வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளதா என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

அபிவிருத்திப் பாதையில் பெண்கள் பங்களிப்பை நோக்கும் போது பொருளாதார சமூக துறைகளில் பெண்கள் முன்னரை விட பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க இயலாது. எமது நாட்டில் 90மூ மான பெண்கள் எழுத்தறிவு உடையவராவர். இன்று அரச அதிகாரத்துறை தனியார் துறை, மருத்துவம், சட்டம், ஆசிரியத் தொழில் கலைத்துறை போன்ற பல துறைகள் உள்ளடங்கலாக பொது நிர்வாகங்களில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். மேலும் பால் நிலை பாரபட்சம் தொடர்பான சீர்திருத்தச் சட்டங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு பெண்களின் உரிமைகள் தொடர்பாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளது. ஆயினும், அபிவிருத்தி என்ற பொதுவான பதத்தினுள் பெண்ணின் அபிவிருத்தி என்ற செயற்பாடு இடம் பெறுவதில்லை. அதற்கு அப்பாலும் ஆற்றப்பட வேண்டிய பல தேவைகள் பெண்களுக்கு சிறப்பாக உள்ளன. பெண்கள் அதிகார அரசியலில் புறக்கணிக்கப்படல், சமூக அடக்குமுறைக்கு உள்ளாதல், பெண்களுக்கெதிரான வன்முறை, பெண்கள் தொடர்பான பாரம்பரிய மனப்பாங்கு இவை எமது சமூகத்தில் மாறுவதாக இல்லை. பெண்களுக்கு தொழில் வாய்ப்பு பிரவேசம் அதிகரித்திருந்தும் தொழில் ரீதியான பால்பிரிவு மாறவில்லை. நாம் பெருமைப்படும் சமூக, பொருளாதார அபிவிருத்தியை எல்லாப் பெண்களும் அனுபவிப்பதில்லை. பாரபட்சம் காட்டப்படும்; நிலையில் பெண்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரச் சுரண்டல் தொடர்பான விடயங்களை அணுகுவதற்கு பலத்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இன மோதலின் காரணமாக பெண்கள் ஆண் துணையை இழந்ததோடு 80% மானவர்கள் இடம் பெயரவும் நேரிட்டது. யாழ் மாவட்டத்தில் மட்டும் ஆண் துணையை இழந்த ஏறத்தாழ 29,000 பெண்கள் இளம் வயதினர் உட்பட தாமே தனித்து குடும்பச் சுமையை தாங்க வேண்டியவர்களாகவும், சமூகத்தின் பாதுகாப்பை வேண்டி நிற்பவர்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர கணவர் காணாமற்போனவர்கள் கூட அரை விதவைகளாக வாழ்கின்றனர். இவர்கள் யாவரையும் சமூகமே பாதுகாக்கவேண்டும்.

மேற்கூறப்பட்டவை தவிர வேலை எதிர்பார்த்திருப்போரில் ஆண்களை விட பெண்களே அதிகம். பெண்ணின் அபிவிருத்தி என்பது ஓர் சமனற்ற நிலையினையே காட்டுகின்றது. ஜ.நா பாதுகாப்பு சபை பிரகடன இலக்கம் 1325 இன் அடிப்படையில்;, ஓர் நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு கடந்து செல்லும் காலகட்டத்தில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், மீள் கட்டமைப்பு, மீள்குடியேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பால்நிலை சார் அணுகுமுறை அவசியமானது. தற்போது உள்ள சூழ்நிலைகள் நடைமுறைச்செயற்பாடுகள் யாவும் பெண்கள் அபிவிருத்திப் பணிகளில் பங்கு பற்ற வாய்ப்பளிப்பனவாக தெரியவில்லை. பெண்கள், மீள்கட்டுமானப்பணிகளில் தெரிவுக்குழுக்களில் தீர்மானம் எடுப்பவர்களாக உள்ளெடுக்கப்படல் அவசியம். பெண்கள் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுதலுக்குரிய சாதகமான சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும்.

பொருளாதார வளங்கள் தொடர்பாக பெண்களுக்கு உள்ள உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களது இயலுமை உறுதி செய்யப்படும் போது வளப்பகிர்வு பெண்களுக்கும் ஏற்புடைத்தாகின்றது. இடம் பெயர்ந்த பெண்களுக்கு சொந்தமாக நிலத்துண்டுகள் பிரித்து வழங்கப்படும் போது விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் சீவனோபாய செயற்பாடுகட்கும் அவர்கள் உரித்துடையோராகின்றனர்.

பெண்கள் சுயமாக தொழில் பார்க்க நிதி வழங்கும் நிறுவனங்கள் ஆதரவு வழங்க வேண்டும். பெண்கள் கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதில் பல இடர்ப்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் பெருகிவரும் வங்கிகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடன் வசதிகளை இலகுவாக்குபவையாக காணப்படவில்லை. கிராமியப் பெண்களுக்கு உற்பத்திக் கடன் வழங்கும் ; (production credit to Rural women) நடைமுறை விருத்தியாக்கப்படவில்லை. பெண்கள் நிர்வகிக்கும் கிராமிய வங்கிகள் உருவாக்;குவதன் மூலம் இக்கடன் வழிமுறைகளை இலகுவாக்க முடியும். மேலும் பெண்கள் தம்மை ஒழுங்கமைப்புக்குள் உட்படுத்தி தம் உரிமைகளை காப்பதற்கான நிறுவனங்களை உருவாக்குதல் இன்றியமையாதது. இவை இன்னும் எட்டப்படவில்லை.

வேலை வாய்ப்பு என்பது ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்கள் எல்லோரும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பவில்லையா? என்ற வினாக்களை தொடுப்பின் பெண்களுக்கு தொழில் கட்டாய தேவையாக அமைவதோடு அது அவர்களுக்கு சமூக அந்தஸ்தையும் கொடுக்கும் என்ற விடை கிடைக்கும். பெண்களுக்கு தொழில் கட்டாய தேவை என்பது சமூக மயப்படுத்தப்படவில்லை. பெண் விரும்பினால் தொழில் பார்க்கலாம். தொழில் பார்க்கும் பெண்கள் கூட இடையில் அவற்றை நிறுத்தி விடுவதும் உண்டு. பெண்கள் சார்நிலைப் பொருளாதாரத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் சமூக உருவாக்கத்தில் துணைபுரிபவர்களாக மாற்றப்படல் வேண்டும். வேலை தேடும் பெண்கள் எவ்வகையான தொழிலைத் தேடுகின்றனர என அறிந்து தொழில்சார் கற்கை நெறிகளை வழங்கி பெண்கள் தொழிலைத் தேடிக் கொள்ள வழி காண வேண்டும். இவ்வாறான தொழில் பயிற்சிகளில் பெண்கள் கூடுதலாக உள்வாங்கப்படுவது தேவையாக உள்ளது. சுயதொழில்கள் கூட தற்காலத்திற்கேற்ப நவீன மயப்படுத்தப்பட்ட தொழில்களாக மாற்றப்படும் போது பெண்களின் ஈடுபாடு இவற்றில் அதிகரிக்க வாய்ப்புண்டு. இத் தேவைகட்காக போதிய மனிதவளம், நிதி, என்பன ஒதுக்கப்படல் வேண்டும்.

வலுவூட்டல்; (empowerment) செயற்பாடானது அபிவிருத்திக்கு மிக அவசியமானது. வலுவ+ட்டலை யாரும் எவருக்கும் கொடுக்க முடியாது. தொடர்ச்சியான கல்வி வழிகாட்டல், அதன் மூலம் பெறப்படும் அறிவை மூலாதாரமாக கொண்டதே வலுவூட்டல் ஆகும். பெரும்பாலான அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்து இச்செயற்பாட்டை ஆற்றி வந்த போதிலும் அவற்றின் பயன்பாடு செயற்றிறன் மிக்கதாக அமையவில்லை. இன்றைய நிலையில் குறிப்பாக நாம் மையப்படுத்த வேண்டிய அம்சங்களில் முன்னாள் பெண் போராளிகளின் மீள் சமுதாய இணைப்பு முக்கியம் பெறுகின்றது. அபிவிருத்திப் பணிகளில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள், சமூகதரம் என்பன மேம்படுத்தப்பட வேண்டும்.

துறை சார் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் விவசாயம், மீன்பிடி, உட்கட்டுமான பணிகள், சிறு கைத்தொழில், கணனிச்சேவை, போன்ற துறைகளில் பெண்களை உள்ளடக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதே போல் உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கி அவர்களை மேல் நிலைக்கு இட்டுச்செல்வதோடு; தொழில் வாய்ப்புகளையும் வழங்குதல் வேண்டும். இவ்வாறு ஆளுமை உள்ளவர்களாக பெண்கள் மேலோங்கும் போது அவர்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதோடு தீர்மானம் எடுக்கும் வலுவுள்ளவர்களாகவும் மாற்றமுறுவார்கள். இதனால் பெண்கள் எதிர்கொள்ளும் பல இடர்பாடுகளை அவர்கள் தாங்களாகவே நீக்கக்கூடிய வாய்ப்;புகள் பெருக இடமுண்டு. அரசியல் தளங்களில் கூட பல பெண்கள் ஈடுபடும் போது, பெண்களுக்காக பாராளுமன்றலும் உள்ளுராட்சி அமைப்புக்களிலும் தமது உரிமைக்காக குரல் கொடுக்க முடிகிறது. இவ்வாறான அபிவிருத்திப் பணிகளில் பெண்கள் ஈடுபடும் போது ஆண்களிற்கு சரிநிகர் சமானமாக பெண்கள் எழுச்சி பெற்று எமது பொருளாதார சமூக கலாசார மேம்பாட்டை விரைவில் மேலோங்க செய்யமுடியும்.

சரோஜா சிவசந்திரன் எம்.ஏ
பணிப்பாளர், மகளிர் அபிவிருத்தி நிலையம், யாழ்ப்பாணம்.
தேசிய மகளிர் குழு அங்கத்தவர்,
மகளிர் விவகார அமைச்சு,
நன்றி தேனி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்