/* up Facebook

Jan 3, 2011

Pfui! Pfui! புனித விழாயாழ்ப்பாணத்தில் ஒரு கிராமம் - 1983.
"எனக்கும் ரண்டாவது அக்காவுக்கும் ஆறுமாதம்தான் வித்தியாசம். இப்பிடித்தான் நான் சொல்ல கேட்கிற ஆக்கள் சிரிப்பினம். அப்பவெல்லாம் அவை ஏன் சிரிக்கினம் எண்டோ ஆறுமாத இடைவெளியில பிள்ளைபிறக்கமுடியாது எண்டொ எனக்குத் தெரியாது. பத்து அல்லது பதினொரு வயது.

நாங்கள் மூண்டு பொம்பிளையள். மூத்த அக்கா சாமத்தியப்பட்டு அந்த விழா பெரிசாக் கொண்டாடினனாங்கள்.

அக்காவப்போலத்தான் எனக்கும் சாமத்தியச் சடங்கு செய்யவேணும் எண்டு மனதுக்குள்ள பெரிய நினைப்பு.

என்னிலும் எனது ஒரு வருசமும் ஆறுமாதமும் மூப்பான அக்காள் கொஞ்சம் சின்னதாக இருந்தாள். ஒல்லியாக இருந்தாள். குறைவாகக் கதைத்தாள்.

எங்கள் ரண்டுபேரையும் பாத்துவிட்டு எனது மூத்தக்காவின்ர கினேகிதிகள் சிலர் "இவள் சின்னவள்தான் முதல்ல டும்மடிப்பாள் பாருங்கோ." எண்டு சொல்லீட்டு ஏதொ குற்றவாளியைப் பாக்கிறதுபோல என்னைப் பாப்பினம். பிறகு சிரிப்பினம்.

எனக்கும் சாமத்தியப்படவேணும் சடங்குசெய்யவேணும் எண்டெல்லாம் கனவு இருந்தாலும் அவயள் சொல்லுற மாதிரி முதலிலையே சாமத்தியப்பட்டிடுவேனோ எண்டு பயமாயிருக்கும். அழுகை அழுகையா வரும். "பயப்பிடாத வெளியால வா. எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுபோச்சு".

ஒரு நாள் பின்னேரம் நான் எப்பவும்போல யங்கியக் களட்டி வீட்டில ஒரு மூலேக்குள்ள எறிஞ்சுபோட்டுக் கக்கூசுக்குப் போனன். அந்த நேரத்திலதான் இப்பிடி அம்மா அக்கா எல்லாரும் கக்கூசுக்கு முன்னால வந்துநிண்டுகொண்டு கூட்பிட்டினம். அக்காவின்ர கையில இருந்த என்ர யங்கியில ரத்தம். எனக்கு அப்பதான் தெரியும். தம்பிதான் கண்டுபிடிச்சவனாம்.

நான் பயந்தது நடந்திட்டிது. மற்ரவையளை பாக்க எனக்கு பயமா இருந்திது. அவையள் என்னக் குற்றவாளியைப் போல பாக்கினம்.

முப்பதுநாளும் ஒரு மூலைக்குள்ளதான் இருந்தனான். காலையில வேப்பம் உருண்டை. நான் எறிங்சுபோட்டாலும் எண்டு பக்கத்தில சாப்பிட்டுமுடிக்கும்வரை நிப்பினம். எணணைக் கத்தரிக்கா அடிக்கடி தருவினம். ஒருநாளைக்கு மூண்டு தரம் அரை ரம்பிளர் தண்ணி தருவினம். தண்ணிவிடா தாங்கேலாமல் களவா கக்கூசுக்கு கொண்டுபோற தண்ணியை எடுத்துக் குடிப்பன். நிறையத்தண்ணி குடிச்சா பிறகு வண்டி வைக்குமெண்டு மற்றவைசொன்னது பயமா இருந்தாலும் தண்ணிவிடாச்சா என்னசெய்யிறது?

வீட்டில ஒரு மூலையும் கக்கூசும்தான் உலகம். செவ்வாய் வெள்ளியில சாணிதெளிச்சு முத்தம் துப்பரவா இருக்கேக்க மிதிச்சா நல்லபேச்சுத்தான் நடக்கும். பூக்கண்டுகளில தொடவேகூடாது. அது தீட்டு. நான் தொட்டு அதுகள் பட்டுப்போனதாவோ அல்லது எரிஞ்சு சாம்பலானதாகவோ எனக்கு இதுவரையில ஞாபகம் இல்ல. கிணத்தடியில தண்ணி அள்ளிறது மட்டுமில்ல அந்தப்பக்கம் போறதே துடக்குத்தான். ஒரு நாள் கக்கூசுக்குப் போறத்துக்கு தண்ணி இல்ல. வீட்டில துடக்கில்லாமல் அந்தநேரம் இருந்தது ஆச்சி ஒரு ஆள்தான். எழுபத்தி மூண்டு வயதில நடக்கிறத்திக்கே அவா கஸ்ரப்படுறவா.
மூத்தக்காவுக்கு எப்பிடியெல்லாம் செய்தவை? வடிவான சாறி நிறைய நகையள் நிறையச் சனங்கள் வந்து போட்டோவெல்லாம் பிடிச்சு நல்ல நல்ல பிறசென்ருகளும் கொண்டுவந்து குடுத்தவை. எனக்கும் இப்பிடியெல்லாம் செய்வினம்தானே எண்டு எவ்வளவு ஆசையா இருந்தனான் நான் ரண்டாவது அக்காவுக்கு முதல்லையே சாமத்தியப்பட்டிட்டதால கொண்டாடிற நோக்கம் வீட்டுக்காறருக்கு இல்லப்பொல. அதுதான் எனக்குச் சரியான கவலையா இருந்திது.

பிறகு சின்னதாச் செய்யிறது எண்டு அவையள் முடிவுசெய்தபிறகு புதுச்சாறிதான் வேண்டவேணுமெண்டு அடம்பிடிச்சு உள்ச்சட்டைக்குள்ள கடுதாசியைவைச்சு மார்பைப் பெரிசாக்கி படம் எடுத்து சின்னதா எண்டாலும் கொண்டாடினது சந்தோசம்தான்.

ஒரு மாதத்துக்குப் பிறகு றோட்டில நடக்கேக்க எல்லாரும் முக்கியமா எங்கட வயதுப் பெடியள் எல்லாம் என்னையே பாக்கிறமாதிரியும் சில நெரங்களில நிர்வாணமாய் நடக்கிற மாதிரியும் இருந்தாலும் நான் பெரிய மனிசி ஆகிட்டன்தானே எண்டு நினைச்சு வெக்கப்படாம நடப்பன்.

அதவிட பேச்சந்தோசம் என்னவெண்டா மாதத்தில மூண்டு நாள் பள்ளிக்கூடம் போகத்தேவயில்லை. ஏன் வரேல்ல எண்டு மாஸ்ற்ரர் கேட்க வயித்துக்குத்து எண்டு சொன்னாக் காணும். பிறகு மாஸ்ரர் ஒண்டும் சொல்லமாட்டார்.

அந்தப்படங்களை ஐர்மனிக்கு வரேக்குள்ளையும் கொண்டுவந்து பள்ளிக்கூடத்தில ஜேர்மன் பெட்டையளுக்கும் காட்டினனான். ரத்தம் வாறதுக்கு கொண்டாட்டம் செய்யிறனியளோ? எண்டு அவையள் கேட்டுவிட்டுச் சிரிக்க முதலில கோபமாய் இருந்தாலும் அவயளின்ர கலாச்சாரம் வேற எங்கட வேறதானே. அவயளுக்கு இதுகள் விளங்காது எண்டு நினைச்சுப்போட்டு பேசாமல் இருந்திடுவன்.

மாதத்தில மூண்டு நாலு நாளுகள் வயித்துக்குத்து தாங்கேலாமல் இருக்கும். அடிவயிறு மட்டுமில்ல துடை முதுகு எல்லாம் நோகும்.

அந்த மூண்டு நாளிலைதான் பிரச்சினையே வந்திது. ஸ்போட்ஸ் பாடநேரத்தில ரத்தம் வந்துகொண்டிருக்கிற நாளென்றால் போகாமல் விட்டிடுவன். ரீச்சர் ஏன் வரேல்ல எண்டு கேட்டா அடி வயிறு நோ என்று காரணம் சொல்லுவன். ரீச்சர் இந்தக் காரணங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளேல்ல. அடிவயிறு நோகிற நேரத்தில உடம்பை அசைச்சுப் பயிற்சி செய்தா நோவெல்லாம் போயிடும் எண்டும் வராட்டி மாக்ஸ் குறைவாத் தருவதாவும் சொல்ல போகவேண்டியதாப்போச்சு. ரீச்சர் சொன்னமாதிரியே வயித்துக்குத்தும் குறைவாத்தான் இருந்திது.

ரண்டு மூண்டு வருசத்தக்குப் பிறகு எனக்கு பதினாறு அல்லது பதினேழு வயதிருக்குமெண்டு நினைக்கிறன். புகலிட இலக்கியத்தில ஈடுபாடு வந்த காலம். 'ராதா பெரிசான பின்" எண்ட ஒரு சிறுகதை(பார்த்திபன் எழுதியது) வாசிச்சு அதிர்ந்துபோனன். பொம்பிளையளுக்கு முதல் முதல் ரத்தம் வாறது பற்றியும் அதை நாங்கள் பெருமையா கொண்டாடிறத கேள்விகேட்டும் எழுதப்பட்டிருந்த கதை அது. இந்தக் கதை பற்றிக் கதைக்கேக்க ரத்தம் வாறது எண்டு பொம்பிள பிறன்ஸ்சோட கதைக்கிறதே வெக்கமா இருந்திது.

எண்டாலும் இந்தக் கதைதான் என்னைப் பிறகு சாமத்தியம் சடங்கு எண்டது பற்றியெல்லம் கேள்விகேக்க வைச்சிது. கேள்விகளுக்குள்ளால பதில்களெல்லாம் கிடைக்கேக்கதான் எனக்கு வெக்கமா இருந்திது. நான் ஒற்றைக் காலில நிண்டு சாமத்தியச் சடங்கு செய்விச்சது எள்வளவு கேவலமெண்டு. அதுக்குப் பிறகெல்லாம் இப்பிடிப்பட்ட கொண்டாட்டங்களுக்குப் போறேல்லயெண்டு யோசிச்சு போறதையும் நிப்பாட்டீற்றன்."

ஏன் சிறுமிகளுக்குமட்டும்?

தமது குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போதும் அவர்கள் முதலாவது வயதினைப் முழுமைபெற்றவுடனும் சந்தோசப் படும் பெற்றோர்கள் பலருடன் தமது சந்தோசத்தினைப் பகிர்ந்துகொள்கின்றனர். கூடிக் கொண்டாடுகின்றனர்.
குழந்தைப் பருவம் அடுத்தபடியாக ஏற்படுத்தக் கூடி வளர்சி ஆண்/பெண் இருபாலாரிலும் உளவியற் தளத்திலும் உடலியலிலும் பல மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. பெண் பிள்ளைகளுக்கு இந்த மாற்றமானது மாதம் மாதம் ஏற்படும் இரத்தோட்டமாக அமைந்துள்ளது. இந்த இயற்கை மாற்றத்தினையும் தமிழ்ப் பெற்றோர்கள் இன்று வரையிலும் கொண்டாடியே வருகின்றனர். தமிழீழம்ää இலங்கைää இந்தியா மட்டுமல்ல எங்கு தமிழர்கள் பெண்பிள்ளைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் மாபெரும் கொண்டாட்டங்களாக சாமத்தியச் சடங்கு பூப்புனித விழா என்கின்ற பெயர்களில் கொண்டாடப்பட்டுவருகின்றது.

சாமத்தியச் சடங்கு கொண்டாடப்படுவது தவறானது என்று கருதும் நாம் அக் கொண்டாட்டங்களை நிராகரித்து வருகின்றோம். இந்தக் கொண்டாட்டங்கள் ஏன் நிராகரிக்கப்படவேண்டியவை?

சம்பந்தப்பட்ட பெற்றோருடன் இதுபற்றி வாதங்கள் எழுப்புமிடத்து அவர்கள் பின்வரும் விளக்கங்களைத் தருகின்றனர்:

1. சாமதுதியச் சடங்கு செய்யிறதில என்ன பிழை? இதுவொரு சந்தோசமான விசயம்தானே.
2. பதினஞ்சு பதினாறு வயது தாண்டியும் சில பிள்ளையள் சாமத்தியப்படாம இருக்கேக்க தாய் தேப்பனுக்கு எவ்வளவு வேதனையா இருக்கிது? எங்கட பிள்ளையள் நேரத்தோட பெரிசானதும் எவ்வளவு சந்தோசம். அதக் கொண்டாடிறதில என்ன பிழை?
3. சாமத்தியப் படுறது சும்மா ரத்தம் வாற விசயம் இல்ல. எங்கட பொம்பிளப்பிள்ள சரியான வளர்சி அடைஞ்சிருக்கு எண்டு அர்த்தம்.

மேற்குறிப்பிட்ட வாதங்களைக் கேட்கும்போது நிஞாயமானதாகத் தெரிந்தாலும் விரிவாகப் பார்ப்போமானால் பெண்குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் பிரதானமாக முதன் முதலில் ஏற்படும் மாதவிடாயின்போது அக்கறைகொள்ளும் பெற்றோர்கள் உறவினர்கள் அதேபிள்ளைகளின் வளர்ச்சிக் காலங்களில் ஏற்படும் பிரதானமான உளவியல் மாற்றங்களிலோ கருத்தியல் ரீதியான மாற்றங்களிலோ அக்கறைசெலுத்தாததுதான் ஏன் என்கின்ற கேள்வியே எழும்பும்? குறைந்தபட்சம் மாதவிடாய் பற்றிய உயிரியல் விளக்கங்;களைக்கொடுத்து பெண்குழந்தைகளை அதற்காகத் தயார்செய்கின்றனரா என்றால் இல்லை அல்லது மிகக் குறைவு என்று ஏமாற்றத்துடன் கூறவேண்டியுள்ளது.

உடல், உள மாற்றங்கள் பெண்பிள்ளைகளுக்கு மட்டும்தான் ஏற்படுகின்றதா? ஆண்பிள்ளைகளுக்கு இல்லையா? ஏன் அவர்களுக்குக் கொண்டாடப்படுவதில்லை? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமானால் மேலும் பிரதானமான சில கேள்விகளை இங்கு எழுப்புவது அவசியமானது.

தமிழ்ச்சமூகத்தில் பெண்பிள்ளைகளின் சாமத்தியம் கொண்டாடுமளவிற்கு முக்கியத்துவப்படுத்தப்படுவது ஏன்? இதற்கும் எமது சமூகத்தில் பெண்கள் பற்றிய நிலவும் கருத்துக்களுக்கும் பெண்கள் இருக்கும் நிலைமைக்கும் தொடர்புகள் உள்ளனவா? தஞ்சமடைந்த நாடுகளில் வாழும் எம்மவர்களின் நிலைப்பாடுகள் எவ்வாறுள்ளன?

ஒரு சமூகத்தின் மனித மறுஉற்பத்தி பெண்களின் தாய்மையில் தங்கியுள்ளது.
பெண்கள் தமது உரிமைகளை முழுமையாக அனுபவித்த பெண்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சமூகம் தாய்வழிச் சமூகம் என்று இன்று நாம் கூறிக்கொள்கிறோம். பெண்கள் ஆண்களுக்கு சமத்துவமாக அல்ல மேலும் உயர்வாகவே அங்கு மதிக்கப்பட்டார்கள். அதற்கு பல காரணங்கள் இருந்தன. பெண்கள் வேட்டையாடுதலில் தலைமை வகித்தார்கள். அன்றய காலத்தில வளங்கள் பெண்கள் பொறுப்பிலேயே இருந்தன. குழந்தைகள் தாய் வழியே கணிக்கப்பட்டார்கள். விஞ்ஞான அறிவு மிகவும் குன்றியிருந்த காலமது. பெண்களின் மாதவிடாயை ஆச்சரியமாக ஆண்கள் நோக்கினார்கள். மூன்று நான்கு நாட்கள் இரத்தோட்டம் இருப்பதுவும். பின்னர் அது இயல்பாகவே நின்று பெண்கள் தொடர்ந்தும் உற்சாகமுடன் வாழ்வதும் மீண்டும் மீண்டும் இது நிகழ்வதும் பிள்ளைகளைப் பெற்று சமூக பெருக்கத்தில் பெண்கள் முக்கிய பங்கேற்பதுவும் அவர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாது பெண்களை விசேட இடத்தில் வைத்திருக்கவும் வழிவகுத்தது.

மனிதர்கள் சந்தோசமடையக்கூடிய அனைத்து முக்கியமான விடயங்களுக்கும் பிள்ளைபேறு பெயர்வைப்பு சாமத்தியம் காலப்போக்கில் கொண்டாட்டங்களாக்கப்பட்டன. தாய்மைக்கான முதலாவது படியைத் திறந்துவிடும் பெண்பிள்ளைகளின் மாதவிடாயானது பெண் உடல்வளர்சியின் முக்கிமானதாக அமைந்துள்ளதால் இதற்கான விழா எடுப்பும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு இதுவும் கொண்டாட்டமாக்கப்பட்டது.

அன்று கொண்டாட்டங்கள் அமைந்த அர்த்தங்களுக்கும் இன்றய நிலைமைக்கும் அர்தங்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றனவா? ஆம் என்றால் ஏன்?

இதனை தாய் வழிச் சமூகத்தின் மாற்றமடைதலிலிருந்து வரலாற்று ரீதியாக விளங்கிக்கொள்ளமுடியும்.

தாய் வழிச் சமூகம் மாற்றமடைந்தது பெண்களை இரண்டாவது பிரஜையாக்கியது மட்டுமல்லாது ஆண்களில் தங்கியிருப்பவர்களாக்கியது.
சமூக மறுஉற்பத்தி காரணமாக பெண்கள் வேட்டைக்குச் செல்லுதல் குறைக்கப்பட்டுப் பின் நிறுத்தப்பட்டது.

குழுக்களுடன் சண்டை செய்வதில் ஆண்களே தலைமைதாங்கலாகினர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட பெண்களை தமது விருப்பப்படி உறவுகொண்டனர் (இதற்கு முன்னர் பெண்கள் ஆண் உறவுகளைத் தெரிவுசெய்தல் சுதந்திரமாக இருந்தது. ஆண்களே பெண்களை நம்பியிருத்தல் நிலை இருந்தது.)

ஏனைய குழுக்களிடம் பறிக்கப்பட்ட பொருட்கள் ஆண்களிடம் குவியத் தொடங்கியது.
ஆண்கள் வளங்களுக்கு உரிமையாளர்களானார்கள். தமது சொத்துக்கள் தம்மிடமே தங்கியிருக்க தமது பெயர்சொல்லும் பிள்ளைகள் தேவைப்பட்டார்கள்.

ஒருதாரமணமுறை உருவாக்கப்பட்டு தந்தைவழியில் பிள்ளைகளின் பெயர்கள் கணிக்கப்பட்டன.

சொத்துக்கள் ஆண்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. குடும்பத்தலைவர்களாக ஆண்கள் ஆகிக்கொண்டனர். பெண்களின் உரிமைகள் அனைத்துத் தளங்களிலும் பறிக்கப்பட்டது மட்டுமல்லாது அவர்கள் இணர்டாவது பிரஜை ஆக்கப்பட்டனர்.

பெண்களில் பெரும்பாலானவர்கள் வீட்டிற்குள் தள்ளப்பட்ட நிலையில் பிள்ளைகளைப் பெறுதல் பராமரித்தல் பெண்களின் கடமைகளாகவும் உழைத்தல் வெளிவேலைகளைக் கவனித்தல் அரசியல் சார்ந்த முக்கிய பொறுப்புக்கள் ஆண்களுக்குமாக மாற்றப்பட்டது. நீண்டகாலப்போக்கில் பெண் ஆண்களிலும் குறைந்த பெறுமதியைக் கொண்டவர்களாக பொருளாதார ரீதியில் ஆண்களில் தங்கியிருப்பவர்களாக மட்டுமன்றி கருத்தியல்  ரீதியாவும் உளவியற் தளங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

எமது தமிழ்ச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் பொருளாதாரம் உட்பட்டு பல விடயங்களில் பெரும்பாலும் பெண்கள் இங்கு புகலிடங்களிலும் ஆண்நபர்களை நம்பியிருக்கும் நிலைமையே காணப்படுகிறது. பெண்களை இந்த நிலைமையிலேயே தொடர்ந்தும் வைத்துக்கொள்ளக்கூடிய கருத்துக்களிலும் பெரிதான மாற்றங்கள் நிகழாதபட்சத்தில் தமிழ்ச்சமூகத்தில் பெரும்பான்மையாக குறிப்பாக சாமத்தியச் சடங்குகளை கொண்டாடுபவர்கள் ஆதரிப்பவர்கள் தமிழ்ப் பெண்கள்

1. குடும்பத்திற்குப் பிள்ளை பெற்றுக்கொடுப்பவர்
2. இல்லாதபட்சத்தில் மலடி என்கின்ற பெயருடன் வேதனையை அனுபவிக்கவேண்டும்
3. குடும்பத்தில் ஆண்நபர்கள் முதலாவது வரிசையிலும் பெண்கள் இணர்டாவதாகவும்
இருப்பதனை சாதாரணம் என்று கருதுகிறார்கள்

புகலிடத்தில் புதிதாக திருமணமான இளம் பெண்களுடன் கதைக்கும்போது 'கொஞ்சக் காலம் தனிய ரண்டுபேரும் சந்தோசமா இருப்பமெண்டா சனக்கள் விடுகிதில்ல. கொஞ்ச நாளைக்கு பிள்ளை வேண்டாமெண்டு நாங்கள் தீர்மனிச்சிட்டம் ஆனா சனம் கொண்டுபோய் டொக்ரரிட்டக் காட்டுங்கோ எண்டு சொல்லினம்“ என்று எரிச்சலுடன் கூறுவதனைக் கேட்கலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரைசாமத்தியச் சடங்கு ஒரு முக்கியமான சடங்காகும். தமது மகள் திருமணமாவதற்குத தயார் நிலை என்பதனை மற்றவர்களுக்குக் கூறிக்கொள்வதில் தயக்கமோ வெட்கமோ இன்றி மிகவும் சாதாரணமாக இக்கொண்டாட்டங்களை நிகழ்த்திவருகின்றனர்

புகலிடம்
தமிழர்கள் வாழும் புகலிடங்களில் சாமத்தியச் சடங்கு உட்பட அனைத்துக் கொண்டாட்டங்களும் பிரதானப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டுவருவதனைப் பார்க்கிறோம்..

இந்தக் கொண்டாட்டங்களில் முதன்மை வகிப்பவர்கள்(இவற்றினை ஒழுங்குசெய்பவர்கள்) பெரும்பாலும் புகலிடங்களில் பிறந்து வளராதவர்கள் அதாவது பெரும்பாலும் தமது முக்கிய காலங்களை இலங்கையில் கழித்தவர்களாவர்கள். இங்கு அனைத்துக் கொண்டாட்டங்களும் ஏன் முதன்மைப்படுத்தப்படுகின்றன?

1.பெரும்பாலானவர்கள் தாம் வாழும் நாட்டுமொழியைக் கற்றிராதவர்கள்.

2.ஏனைய புகலிடத்தில் குடியேறிய சமூகங்களைப்போல் தமது கலாச்சாரங்களை கட்டிக் காப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அந்நிய நாட்டில் வாழும்போது தமிழ்க்கலாச்சாரம் தனது தன்மையை இழந்தவிடலாம் அன்நிய கலாச்சாரத்துடன் ஒன்றுகலந்து பழுதாகிப்போகலாம் என்கின்ற அச்சத்தில் மேலும் இறுக்கமாக(தாயகத்தில் இருந்ததைவிடவும் இறுக்கமாக இது தமிழழர்கள் மட்டுமல்ல ஏனைய சமூகத்தினரும் இப்படித்தான் வாழ்கின்றனர்) புகலிடங்களில் கடைப்பிடித்தல்.

3.மொழி; தெரியாமை மற்றும் புகலிடத்தில் வாழும் ஏனை கலாச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் கொண்ட மக்கள்மீதான(Nஐர்மனியைப் பொறுத்தவரையில் துருக்கிää ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்கள்) தப்பவிப்பிராயம் எமது கலாச்சாரம் பழக்கவழக்கங்களே உயர்ந்ததென்று எண்ணுதல் ஏனைய அந்தந்த நாடுகளில் வதியும் மக்களுடன் தொடர்புகளின்றி தனித்த சமூகமாக வாழும்போது எற்படும் தனிமையைப் போக்க ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் கொண்டாட்டமாக்குதல்.

4. யுத்த சூழலின்றி ஓரளவு அமைதியான சூழலில் வாழுதல் பெரும்பாலும் தமிழீழ அரசியலைத்தவிர வேறு எந்தப் பொதுப்பிரச்சினைகளில் ஈடுபடாமை

5.பொருளாதார மற்றும் தொடர்புசாதனங்கள் உட்பட்ட பல வசதிகளைக் கொண்டிருத்தல்

6.போட்டி பொறான்மை சாதித் திமிர்கொண்ட மனப்பான்கு(தமிழர்கள் தமக்குள் உரையாடும்போது "அங்க ஊரில மண்ணேத்தின சனம் விறகுபொறுக்கினவன்கள் எல்லாம் இங்கவந்து பென்ஸ் வச்சிருக்கிறான்கள் பெரிசா எல்லாம் கொண்டாடுகிறான்கள். இவயளுக்கு நாங்கள் செய்து காட்டவேணும்)

7. தாயகத்தில் வசதி குறைவானவர்களாகää ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்தவர்கள் இங்கு சமத்துவமாக கூலிபெறல்ää அங்கு ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து இங்கு விடுபடும் சந்தர்ப்பம் அமையும்போது தாமும் சமனான நிகழ்வுகளைக் காட்ட முற்படுதல்.

இப்படியான தமக்குள் தாயகத்திலிருந்து கொண்டுவந்த மற்றும் புகலிடங்களில் ஏற்படுத்திக்கொண்ட புதியமுரண்பாடுகளுடனும் வாழும் சமூகம் பெண்களின் நிலைமைகளில் கருத்துக்களில் பெரும்பாலும் கருத்துமாற்றங்களின்றி வாழும் சமூகம் ப10ப்பனித நீராட்டு விழாவை தொடர்ந்தும் கேள்விகளின்றி கொண்டாடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

ஆனால் காலம் அப்படியே நின்றுவிடுவதில்லை. கருத்துக்களுக்கு எத்தனைகாலமென்று வேலிபோடுவது? வேலிதாண்டி வெளிவரத்தானே இருக்கின்றனர் இளையோர்கள்.
ஒரு காலத்தில் புகலிடங்களில் தனித்த தமிழ் ஆண்களே பெரும்பாலும் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அவர்களின் துணைவிமார் வரவழைக்கப்பட்டார்கள் குடும்பங்களாக தஞ்சமடையும் நிலைவந்தது. புகலிடங்களிலும் புதிய குடும்பங்கள் உருவாகின. இன்று புகலிடங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அல்லது தமது பெரும்பான்மையான காலங்களை இங்கு கழித்துவருபவர்களான மூன்றாவது பரம்பரையொன்று உருவாகியுள்ளது மட்டுமின்று இது புதிய முரண்பாடுகளையும் தாங்கிநிற்கின்றது

இந்தப் பிள்ளைகள்

எமது கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் கொண்டாட்டங்களை கேள்வி கேற்கிறார்கள். நிஞாயமான பதில் கூறாதவிடத்து பெசாமல் இருக்கமாட்டார்கள்.
தமக்கு விரும்பாதவற்றை கடைப்பிடிப்பதற்கு மறுப்பவர்கள்.(முடிந்தளவு குடும்பங்களுக்குள் போராடுபவர்களாக இருக்கிறார்கள்)
பொது விடயங்களில் பரந்த அறிவினை உடையவர்களாக உள்ளனர்.
தொழில் வளர்ச்சியடைந்த சமூகம் ஒன்றில் வாழும் பாடசாலைகளுக்குச் செல்லும் பல சமூகங்களிலிருந்தும் நண்பர்களைக் கொண்டிருக்கும் புகலிட நாட்டு மொழி அறிவுகொண்டுள்ள இவர்கள் பயனுள்ள கருத்துக்களையும் விரைவில் உள்வாங்கிக் கொள்கின்றனர்.

இங்கு பாலியற் கல்வி ஊட்டப்படுகின்றது மாதவிடாய் கருஉருவாதல் போன்ற விடயங்கள் சிறுவயதிலேயே பாடசாலைகளில் கற்கப்படுகின்றது.
(நாங்கள ஊரில் சாமத்தியப் பட்ட காலங்களில் உயிரியல் ரீதியாக அதுபற்றிய விளக்கங்கள் அறிந்திருக்கவில்லை.)

மேலும்

மாதவிடாய் காலங்களில் பாவிக்கப்படும் பஞ்சு குறைந்த விலையில் தாராளமாக கிடைக்கிறது. (ஊரில் தற்போது நிலமை மாற்றமடைந்திருந்தாலும் ஏழைப் பெண்களும் அகதிமுகாம்களில் வாழும் பெண்களும் துணியே பாவிக்கும் நிலை. தண்ணீர் தட்டுப்பபாடான இடங்களில் துணிகளைத் தோய்த்துப் பாவிப்பதற்கு பல பெண்கள் கஸ்ரப்படுகின்றனர்.


மூன்று பரம்பரைகளுக்குமிடையிலான முரண்பாடு

புகலிடங்களில் இன்று மூன்று தலைமுறையைச் சார்ந்த தமிழர்கள் வாழ்கின்றார்கள்.
1. வயது முதிர்ந்தவர்கள் (ஐம்பது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள்-பெரும்பாலான காலங்களை இலங்கையில் கழித்தவர்கள்)
2. இளம் பிராயத்தைத் தாண்டியவர்கள்(முப்பது முப்பத்தைந்து வயதுடையவர்கள்(அரைவாசிக் காலங்களை தாயகத்தில் கழித்தவர்கள்)
3. இளையவர்கள் சிறுவர்கள்(புகலிடங்களில் பெரும்பான்மையான காலங்;களைக் கழித்தவர்கள் இங்கு பிறந்து வளர்பவர்கள்).

முதலாவது தலைமுறையினர் தமது கருத்துக்களில் மிக இறுக்கமாக இருக்கின்றனர்.
சாமத்தியச் சடங்குபற்றி எந்த ஒரு கேள்வியையும் எழுப்ப மறுப்பவர்கள். புகலிடங்களில் நடைபெறும் சடங்குகளில் முன்நின்று நடத்துபவர்கள். தமது பிள்ளைகள்(இரண்டாவது பரம்பரை) பின்னிற்கும் அல்லது மறுக்கும் பட்சத்தில் போராடி எவ்வாறேனும் நடாத்திமுடிப்பவர்கள். இதனை ஒரு கௌரவப் பிரச்சனையாக கருதுபவர்கள்.

மூன்றாவது பரம்பரையினரும் தமது கருத்துக்களில் தெளிவாக உள்ளனர். விஞ்ஞான விளக்கங்கள் அதிகமாக உள்ளவர்கள். கொண்டாடுதல் கேவலமானதாகக் கருதுபவர்கள். கொண்டாட்டத்தை நடாத்தவிடாமல் தடுப்பதில் தமதளவில்(குறைந்தபட்சம் தமது கருத்துக்களையேனும் தெரிவிப்பவர்கள்) தமது தாய் தந்தையினருடன் போராடுபவர்கள். இவர்களுடைய போராட்டம் வெற்றியளிப்பது மிகக் குறைவு. இவர்கள் குடும்பங்களில் பலங்குறைந்தவர்களாக இருப்பது(சிறுமிகளாக இருப்பது) தோல்விக்கான முக்கிய காரணமாகும்.

இருபரம்பரைக்கும் இடைப்பட்டவர்களான இரண்டாவது பரம்பரை இரண்டுக்குமிடையில் திண்டாடுபவர்கள் நடைமுறையிலும் ஊசலாட்டமுடையவர்கள். பேரும்பாலானவர்கள் முதலாவது பரம்பரையினரினது கருத்துடையவர்களாயினும் புகலிட புதிய கருத்துக்களை அரைகுறையாக உள்வாங்கினவர்களாக அல்லது இல்லாமலும் இரண்டு பரம்பரையையும் சமாழித்துப் போகவேண்டியவர்களாகவும் உள்ளனர்.(முன்னோரு காலத்தில் முற்போக்குப் பேசும்போது சாமத்தியச் சடங்குகளை நிராகரிக்கக்கோரியவர்கள் பின் தமது பிள்ளைகளுக்கு கொண்டாடிவருபவர்களும் இந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்களாவார்கள்.)

முதலாவதும் மூன்றாவது பரப்பரையைச் சேர்ந்தவர்கள் பிள்ளைகளின் உளவியற் தளத்தில் செலுத்தும் செல்வாக்கு சிலவிடயங்களில் வெற்றியும் சில சமயங்களில் தோல்வியையும் தருகிறது.

சாமத்தியம் என்பது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு. இதற்குக் கொண்டாட்டம் அவசியமில்லாதது. மட்டுமல்ல ஊரைக்கூட்டிக் கொண்டாடுவது கேவலமானது என்று கருதும் பிள்ளைகளை சோடினை வீடியோபிடித்தல் பரிசுப்பொருட்கள் போன்ற விடயங்களால் இலகுவில் கவர்ந்துவிடுகிறார்கள்.

பொதுவாகவே பெண்பிள்ளைகள் சோடினைக்குரியவர்களாக சிறுவயதிலிருந்தே தயார்படுத்தப்பட்ட நிலையில் புகலிடங்களிலும் அதிமிகுந்த சோடினைகளால் பெண்பிள்ளைகள் பெணகள் கவரப்பட்ட நிலையில் இச்சிறுமிகளை இவ்வகையில் கவர்ந்திழுப்பது இலகுவானதாகவுள்ளது.

அடுத்ததாக இரண்டு கலாச்சாரங்களுக்கிடையில் திண்டாடும் நிலை இப்பிள்ளைகளுக்கு இருக்கிறது. “இது எங்கடை கலாச்சாரம். நாங்கள் அதைக்கடைப்பிடிக்கவேணும்“ இப்படி உளரீதியான நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு சில வேளைகளில் மறுப்புக் கூறமுடியாது ஏற்றுக்கொள்ளவைக்கப்படுகின்றது.


ஏற்கனவே நிகழும் சாமத்தியச் சடங்குகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உனக்கும் இப்பிடித்தான் செய்வம் என்று அடிக்கடி கூறப்பட்டுவருகின்றது.


சூதகம் தீட்டு வெளியாலைää சுகமில்லை என்று அழைக்கப்படும் இரத்தோட்டம் உடலில் ஏற்படும் வருத்தமாகவும் மூன்று நாட்கள் சுத்தமற்ற நாட்களாகவும் உளவியலில் ஊட்டமுனையும் கருத்துக்கள் இந்தப் பிள்ளைகளிடம் (ஊரில் எமக்கு இலகுவாக இவ்வுணர்வுகளை ஏற்படுத்தியதுபோல்) சென்றடைவதில்லை. மேற்குறிப்பிட்ட சொற்பதங்கள் இப்பிள்ளைகளுக்கு அன்னிய விளங்காத பதங்களாகவே இருந்துவருகின்றன.

ஜேர்மனியில் ஒரு நகரம் - 2000.

'இவள் வேளைக்குச் சாமத்தியப் படப்போறாள்" இப்பிடித்தான் அம்மம்மா நெடுகலும் சொல்லுறா. எனக்கு விசராக்கிடக்கு. Ich hasse es. சித்தி அம்மம்மாவை இப்பிடி எந்தநேரமும் கதைக்கவேண்டாமெண்டு சொல்லுங்கோ.


எனக்கு எல்லாம் தெரியும். நாங்கள் எப்பவோ படிச்சிட்டம். Periode வாறது பிள்ளை பிறக்கிறது எப்பிடியெண்டு எனக்குத் தெரியும். நாலாம் வகுப்பில நாங்கள் படிக்கேக்க அம்மாட்ட வந்து சொன்னனான். "ஐயோ உங்களுக்கு இப்வே இதெல்லாம் சொல்லித் தரீனமே? ஆறு ஏழாம் வகுபிலயெல்லோ படிப்பிப்பினம் எண்டு நினைச்சன்" எண்டு சொல்லி அம்மா கத்தத் தொடங்கீற்றா. என்ன படிச்சாலும் தன்னட்ட வந்து எல்லாத்தையும் சொல்லச்சொல்லி அம்மா சொல்லுறவா. எல்லாத்தையும் அவாட்ட கதைக்கேலாது. என்ர டொச் Freundin தன்ர அம்மாட்டத்தான் எல்லாம் சொல்லுறவவாம்..

எனக்குச் தமிழாக்கள் செய்யிற சாமத்தியச் சடங்கு செய்ய விருப்பமில்ல. கையில வெட்டுப்பட்டா ரத்தம் வருகிது. அத ஏன் கொண்டாடுறேல்ல. சாமத்தியப்பட்டா மட்டும் கொண்டாடினம். ரண்டும் இயற்கதானே? இப்பிடித்தான் அம்மம்மாவக் கேட்டன். "சும்மா விதண்டாதமோ என்னவோ செய்யாத எண்டு சொன்னா. அம்மாட்ட எனக்கு சாமத்திச் சடங்கு செய்ய வேண்டாமெண்டு சொல்லிப்போட்டன். அம்மா o.k. எண்டு சொல்லீற்ரா. எனக்கு அதுவே காணும். ஏற்கனவே தெரியும் எண்டாலும் Binde எப்பிடிப் பாவிக்கிறது எண்டு அம்மா சொன்னவா.


எனக்கு முதல் முதலில Blutung வந்திட்டிது. அம்மம்மாவுக்கு உடன சொல்லேல்ல. நான் அடுத்த நாள் பள்ளிக்கூடம்போக வெளிக்கிட அம்மா முதல் ஓமெண்டிட்டு பிறகு மூண்டு நாளால போகச் சொல்லுறா. அம்மம்மாதான் சொல்லியிருக்கிறா. ஒரு மாதம் வீட்டில நிக்கட்டாம். விசர்தான். மூண்டுநாள் காணுமெண்டு அம்மா சொல்லீட்டா. எனக்கு வீட்டில நிக்க விருப்பமே இல்ல. ரெஸ்ற் வரிது. Blutung க்காக வீட்ட நிண்டனெண்டா ரீச்சர் சரியெண்டு சொல்லமாட்டா.


மூண்டு நாளுக்குப் பிறகு நான் பள்ளிக்கூடம் நோமலாப் போவன்தானே. என்னக் காரில கொண்டுபோய் விடப்போயினமாம். விசர்தான்."


எனக்கு வந்த ஆத்திரமெண்டா. எவ்வளவு நேரம் நிக்கிறது. கால் எல்லாம் உளையிது. நெடுகலும் செய்யிறேல்ல எண்டு சொல்லீட்டு அம்மம்மாவோட சேந்து செய்திட்டினம். மூண்டு நாளிலையே அம்மம்மாவந்து கட்டாயம் தண்ணிவாக்கவேணும் ஏதோவெண்டு சொல்லி தொட்டீக்க இருத்தி வாத்திச்சினம். Ich hasse so was. பிறகு நாங்கள் எங்கட குடும்பம் மட்டும் செய்வம் எண்டு சொல்லிச்சினம். ஊருக்கு அப்பம்மாவுக்கு அனுப்பிறத்துக்கெண்டு வீடியோ பிடிச்சினம். ஆர் வெளிக்கிடுத்தினது சரியெண்டு ரண்டு பொம்பிளையள் அடிபடவும் துடங்கீற்றினம். எனக்கு விசரா இருந்திது. ஒவ்வோரு பமிலியாச் சொல்லி நிறையச் சனம் வந்திட்டிது. பள்ளிக்கூடத்தில நான் ஒருத்தருக்கும் இந்த விசயம் ஒண்டும் சொல்லேல்ல. அவயள் சிரிப்பினம்."

Pfui Pfui- வேண்டாதவற்றை துரத்தப் பாவிக்கும் பதம்
Ich hasse es- எனக்கு அது வெறுப்புத்தருகிது
Periode- மாதவிடாய்
Freundin- நண்பி
Binde- இரத்தத்தை உறிஞ்சிக்கொள்ளும் பஞ்சு. மாதவிடாயின்போது பாவிப்பது
Blutung- இரத்தம் வருதல்
Ich hasse so was- எனக்கு இப்பிடியானதுகளில வெறுப்பு.

"ஊடறு" பெண்களின் தொகுப்பிலிருந்து மறுபிரசுரம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்