/* up Facebook

Jan 29, 2011

சங்ககாலப் பெண் கவிஞர்களின் அழகியல் நிலைகள் - வெளி ரங்கராஜன்


அண்மையில் சங்ககாலப் பெண் கவிஞர்கள் என்று அறியப்படும் 41 பெண் கவிஞர்களின் கிட்டத்தட்ட 180 கவிதைகள் அடங்கிய ந. முருகேசபாண்டியனின் தொகுப்பொன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் சங்ககாலம் பற்றி உருவாக்கப்பட்டுள்ள பல புனைவுகளை ஒரு மறுபார்வை பார்க்கக்கூடிய வாய்ப்பாக அது இருந்தது. சங்ககாலம் பற்றி வெறும்போலிப் பெருமை பேசும் அலங்காரமான உணர்ச்சி சார்ந்த திராவிட இயக்க ஆய்வுகளும், சமூகவியல் காரணிகளையே அதிகம் முன்நிறுத்தம் ஒருவிதமான வறண்ட அறிவுவாதம் சார்ந்த மார்க்சிய ஆய்வுகளுமே அதிகமாக நம்மிடம் உள்ளன. இந்நிலையில் வாழ்வியல் சார்ந்தும், அழகியல் சார்ந்தும் அக்காலக் கவிதை மொழியின் பல்வேறு கூறுகளை நாம் இனங்காண வேண்டிய அவசியம் உள்ளது. உண்மையில் வரலாறு என்பதே மொழியின் மூலமாக உருவாக்கப்படும் புனைவுகளால் கட்டமைக்கப்படுவது தானே. சங்ககாலக் கவிதைமொழியின் ஊடாக வெளிப்படும் அழகியல் கூறுகளையும், வாழ்வியல் மதிப்பீடுகளையும் நாம் பரிசீலனை செய்வதன் மூலம் இன்றைய பின் நவீனச் சூழலில் நாம் தமிழ் இலக்கிய வரலாற்றை மீண்டும் மறுவாசிப்பு செய்யவும், அதன் விளக்கப்படாத பல பகுதிகளை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியங்களும் உருவாகின்றன.

முக்கியமாக சங்க காலம் என்று வரையறுக்கப்படும் கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால கட்டத்தில் கிட்டத்தட்ட 41 பெண் கவிஞர்கள் சிறப்பான அழகியல் கூறுகளும், வாழ்வியல் உணர்வுகளும் கொண்ட கவிதைகளை உருவாக்கியுள்ளனர் என்பது வாழ்வியல் குறித்தும் கலை வெளிப்பாடு குறித்தும், பெண் கவிதை மொழி குறித்தும் அப்போதுநிலவிய செறிவான பல மதிப்பீடுகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அத்தகைய உணர்வுகளும், வெளிப்பாடுகளும் புரிதல்களும் பின்வரும் காலகட்டங்களில் ஏன் மேலெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை ஆராயும்போதே பிற்காலங்களில் பெண் மீது செலுத்தப்பட்ட தொடர்ந்த ஆதிக்கத்தின் தாக்கத்தை நாம் உணர முடியும். அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு இயல்பான வாழ்வியல் சார்ந்த உணர்ச்சிப் பெருக்குடன் இவ்வளவு சுதந்திரமாக வடிவம் கொண்ட பெண் வெளிப்பாடுகள் தொடர இயலாமல் போனதை பிற்காலத் தமிழ் இலக்கியத்தின் ஒரு இருண்ட நிலைப்பாடாகவே நாம் கொள்ள முடியும். இவ்வாறு பெண் வெளி குறுக்கப்பட்டு பெண் முடக்கப்பட்டதற்கு பிற்காலத்தில் தமிழ்ச் சூழலில் விரிவு கொண்ட மதவாத இயக்கங்களும் அவை உருவாக்கிய பாலியல் இருப்பு குறித்த வைதீக சனாதனப் பார்வையும் தான் காரணம் என்பதை உறுதியாகக் கூற முடியும். ஒருபுறம் சைவ, வைணவ பக்தி இயக்கங்கள் பெரும்பான்மையான மக்களை ஒருங்கிணைத்து ஒருவிதமான பாலியல் தன்மையை அங்கீகரித்தாலும் அவை பெண்ணின் சமூக இருப்பைப் புறக்கணிக்கவே செய்தன.

பல நூற்றாண்டுகள் கடந்து பெண் கவிஞர்கள் எழுச்சியும் வெளிப்பாடும் கொண்டுள்ள இன்றைய கால கட்டத்திலும்கூட பெண் கவிஞர்களின் கவிதைச் சொல்லாடல்கள் குறித்த சனாதனப் பார்வைகளே வெளிப்படுவதை அத்தகைய ஒரு வைதீக மனத்தின் தொடர்ச்சி என்றே கொள்ள வேண்டும். சங்ககாலத்தைப் பொற்காலமாக வர்ணித்து சங்கக் கவிதைகளின் காதல் உணர்வுகளை அரசியல் மேடைகளில்கூட போற்றிப் புகழ் பாடிய திராவிட இயக்கக் கவிஞர்கள்கூட இன்றைய பெண் கவிஞர்களின் சொல்லாடல்கள் குறித்த அறியாமைகளை வெளிப்படுத்துவது சங்கக் கவிதைகளை பிரசார நோக்கில் அன்றி அழகியல் நோக்கில் அவர்கள் மதிப்பீடு செய்வதில்லை என்பதையே காட்டுகின்றன. இத்தகைய ஒரு சூழலில் இக்கவிதைகள் வழி வெளிப்படும் சங்கப் பெண் கவிஞர்களின் செறிவான மொழிப் பயன்பாட்டையும், சொல்லாடல்களையும் எழுச்சி பெற்ற வாழ்வியல் உணர்வுகளால் அவர்கள் கவிதையில் கண்டு மேற்கொண்ட சுதந்திரத்தையும் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

முக்கியமாக ஔவையார், அஞ்சில் அஞ்சியார், அள்ளுர் நன்முல்லையார், ஆதிமந்தியார், காக்கைப் பாடினியார், காவற்பெண்டு, தாயங்கண்ணியார், பாரி மகளிர், பேய்மகள் இளவெயினி, பொன்முடியார், வருமுலையாரித்தி, வெண்பூதியார், வெள்ளிவீதியார், வெறிபாடிய காமக்கண்ணியார், ஒக்கூர் மசாத்தியார், நெடும்பல்லியத்தை போன்ற குறிப்பிடத்தகுந்த பெண் கவிஞர்களின் தனித்துவம் வாய்ந்த பல கவிதைகள் பல சிறப்பான உணர்வுகளைத் தாங்கி நிற்கின்றன. சங்ககால சமூக அமைப்பில் குறுநில மன்னர்களிடையே நிலவி வந்த போர்ச்சூழல் ஒரு தொடர்ச்சியான ஆழ்ந்த மனபாதிப்பை ஏற்படுத்தியதும் சிறு இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் போருக்காக இடம் பெயர்தலும் அந்நிய இனக்குழுக்களை எதிர்கொண்டு உறவுகொள்ள நேர்வதுமான நிர்ப்பந்தங்களும் ஏற்பட்ட நிலையில் மாறிவரும் வாழ்க்கை நிலைமைகள் குறித்தும், நிலவெளிகள் குறித்தும், ஆண் பெண் ஈர்ப்பு நிலைகள், பிரிவு, அகால மரணம் என வாழ்வு அலைவுறுவது குறித்தும் அவர்களுடைய எண்ணற்ற மனப்பதிவுகள் இக்கவிதைகளில் பதிவாகியுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை மரபுகள் சார்ந்து அத்திணைச் கூறுகளின் பின்புலத்தில் இக்கவிதைகள் உருவானாலும் சூழல் தாண்டிய ஒரு பிரபஞ்ச உணர்வை இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, மேடாக இருந்தால் என்ன, பள்ளமாக இருந்தால் என்ன எந்த இடத்தில் ஆள்பவர் நல்லவராக உள்ளனரோ அங்கு நிலமே நீ நல்லமுறையில் விளங்குவாய் என்று பொருள்படும்.

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்ற ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் ஒரு சூழல் கடந்த பேருணர்வைப் புலப்படுத்துகிறது. இக்கவிதை வெளிப்பாட்டின் நேரடித்தன்மையும் கூர்மையும், மொழி கையாளப்பட்டுள்ள விதமும் ஒரு சிறப்பான அழகியல் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கிறது.

ஔவையாரைப் பற்றிய புனைவுகளையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ஒரு இளம் பெண்ணின் மன நிலையுடன்இயல்பான பாலியல் உணர்வுகளின் வெளிப்படாக பின்வரும் கவிதை அமைந்துள்ளது. தென்றல் காற்று காதல் நோயின் கொடுமையை அறிந்து கொள்ளாமல் என்னைஅலைக்கழிக்கின்றது. அதனை அறியாமல் ஊரும் உறங்குகிறது. இவ்வாறு உறங்கும் ஊரார்க்கு எனது நிலைமையை எவ்வாறு கூறுவேன் என்று பொருள்படி அமைந்த

முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும் ஓர் பெற்றி மேலிட்டு
'ஆ அ ஒல்' எனக் கூவுவேன் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சம் ஊர்க்கே

என்ற குறுந்தொகைப் பாடல் ஒரு இயல்பான பாலியல் மனதின் பரவசான கட்டற்ற உணர்ச்சிப் பெருக்காக உள்ளது. மேற்பூச்சற்று உணர்வுககு நெருக்கான ஒரு மொழி இங்கே கையாளப்பட்டுள்ளது.

அதேபோல் தோழியின் காதலை வெளிப்படுத்த அவள் மனம் கவர்ந்த தலைவனின் ஊர்ச்சிறப்பை இன்னும் பாடு என்று குறிசொல்பவளாகிய அகவன் மகளை விளித்துப் பாடுவதாக அமைந்த

அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்னநல் நெடுங்கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே
இன்னும் பாடுக, பாட்டே அவர்
நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே

என்ற குறுந்தொகைப் பாடல் ஒரு நுட்பமான குறியீட்டு உணர்வைப் புலப்படுத்தும், தலைவியின் காதலை தலைவியின் தாய்க்கு மறைமுகமாகத் தெரிவிக்கும் விதமாக குறிசொல்பவளை அழைத்து தலைவன் தன்னுடைய உயர்ந்த மலையைப் பற்றிப் பாடிய பாட்டை இன்னும் பாடு என்று இன்னும் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் தலைவியின் உணர்வைப் புலப்படுத்தும் விதம் நுட்பமும், இலக்கியச் செறிவும் கொண்டதாக உள்ளது.

அதியமான் அஞ்சியுடன் ஔவையார் தான் கொண்ட நட்பை வெளிப்படுத்தும் விதமாக சிறிதளவு கள் பெற்றால் அதை எனக்கே அளிப்பான். பெரிதளவு கள் பெற்றால் நான் பாட அவன் உண்டு மகிழ்வான் என்ற பொருள்படி அமைந்த

சிறிய கட்பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கட்பெறினே
யாம் பாட தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே

என்ற புறநானூற்றுப் பாடலில் ஒளிவு மறைவற்ற நட்பின் இழைகள் நெகிழ்வுடன் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இதுபோல பல சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒளிவு மறைவற்ற தங்கள் இயல்பான உள்ளக் கிடக்கைகளைச் சுருக்கமான வார்த்தைகளில் ஆழ்ந்த உணர்வுடனும் நெகிழ்ச்சியுடனும் பல இடங்களில் வெளிப்படுத்துவதைக் காண முடியும்.

உதாரணாக வருமுலையாரித்தியின் இக்குறுந்தொகைப் பாடல் - தலைவன் நினைவில் உள்ள தலைவி அவனைக் குறித்து பின்வருமாறு சொல்கிறாள் - அவன் ஒருநாள் வந்தவனல்ல. இரண்டு நாட்கள் வந்தவன் அல்ல. பல நாட்கள் வந்து பணிவுடன் பேசி என் மனதை மகிழ்வித்தவன. பின்பு மலையில் முதிர்ந்து எவர்க்கும் பயனளிக்காததும் வீழ்ந்து வழிவதுமான தேனடையைப் போல போனவன். அத்தலைவன் இப்போது எங்கு இருக்கின்றானோ? காட்டில் பெய்த இடியோசையுடன் கூடிய மழை கலங்கி நம்முடன் வருவதுபோல எனது மனதும் அமைதியற்று அவன் நினைவில் கலங்குகின்றது. இதுதான் அப்பாடல் -

ஒருநாள் வாரலன், இரு நாள் வாரலன்
பல் நாள் வந்து பணி மொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆக ஆகு எந்தை யாண்ணாடு ஊன் கொல்லோ?
வேறு புலன் நல்நாட்டுப் பெய்த
எறுடை மழையின் கவிழும் என் நெஞ்சே

இப்பாடல் மிக மிக நுட்பமான வார்த்தைகளில் மனதின் நெகிழ்ச்சியைப் புலப்படுத்துவதைப் பார்க்கலாம். இங்கு பயன்படுத்தப்படும் மொழியின் நெகிழ்ச்சியின் மூலமாகவே நாம் அந்த மனநிலைகளின் செறிவை ஆழ்ந்து உணரமுடிகிறது. இத்தகைய ஒரு மொழிச் செறிவு ஒரு நாகரிக மனத்தின் அடையாளமாகவும் அத்தகைய நுட்பம் கைவரப் பெற்ற ஒரு சூழல் கலாச்சார செறிவு கொண்டிருக்கும் பல்வேறு சாத்தியங்களையே உணர்த்துகிறது.

மனநிலை விவரிப்புக்கான சூழலை வடிவமைப்பதில் இக்கவிதைகள் எண்ணற்ற பல நுண்ணிய விவரணைகளுக்குள் செல்கின்றன. அஞ்சில் அஞ்சியார் என்ற பெண் கவிஞரின் பின்வரும் கவிதையில் வெளிப்படும் சூழல் இது. கூத்தாட்டம் நடந்தவாறிருக்கும் பழமையான ஒரு ஊர் - வறுமையோ அயற்சியோ வாழ்வில் காணாத துணி வெளுக்கும் ஒருத்தி - இரவு உணவில் எஞ்சிய கஞ்சியிட்டு உலர்த்திய மெல்லிய ஆடையும் பொன்மாலையும் அணிந்தவள். பெரிய கயிறால் கட்டப்பட்ட ஊஞ்சலருகே நிற்கிறாள். தோழியர் கூட்டம் ஊஞ்சலை ஆட்டிட அவள் ஆடாதவளாய் கலங்கி நிற்கிறாள். காதல் கொண்ட தலைவன் வந்து ஊஞ்சலை அசைத்து மகிழும் நிலை வாய்க்கவில்லையே என வருந்துகிறாள். இதுதான் அந்த நற்றிணைப் பாடல்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையின் பெருங்கை தூவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடாமாலை துயல்வர ஓடி
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க, ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில் ஓதி,
நல்கூர் பெண்டின், சில வளைக் குறுமகள்
ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா
நயன்இல் மாக்களோடு கெழீஇ
பயன் இன்று அம்ம இவ் வேந்துடை அவையே -

என்ற இப்பாடல் சிறுசிறு விவரணைகளுக்குள் சென்று மனநிலையைக் கட்டமைக்கிறது.

அள்ளூர் நன்முல்லையாரின்

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்று இப்
பொழுது இடைதெரியின் பொய்யே காமம்

என்ற குறுந்தொகைப் பாடல் மடலேறித் தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்த எண்ணும் ஒரு தலைவனின் மனநிலையிலிருந்து நண்பகல், மாலை, நள்ளிரவு, வைகறை என்றெல்லாம் காலப்பொழுதுகளைக் கணக்கில் கொண்டால் காமம் என்பது பொய்யாகிவிடும் என்று உணர்வின் பின்புலத்தில் தோன்றும் காலமயக்கம் குறித்த கவனத்தை வேண்டுகிறது.

சிறப்புக்குரிய என் தலைவனை துணங்கைக் கூத்து நடக்கும் இடமெல்லாம் சென்று தேடுவதால் நானும் ஒரு ஆடுகள மகளாகவே தோன்றுகின்றேன். என் கையின்

'துடி ஒலிப்பவளே, பாணனே,
விறலியே இனிமேல் நீங்கள்
என்ன ஆவீர்கள்? இங்கு வாழ்தல்
அரிது, மயிர் மழித்து, அல்லியரிசி
உண்டு வாழும் கைம்மை மகளிர்
போல முடிவை நோக்கியிருத்தல்
எனக்கும் அரிதானதே...'

சங்கு வளைகளை நெகிழ வைத்து என்னையும் மெலிய வைத்த என் தலைவனும் ஒரு ஆடுகள மகனாகவே மாறி விட்டான் என்று பொருள்படும் ஆதிமந்தியாரின்

மன்னர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மான்மதக் கோனை
யானும்ஓர் ஆடுகள மகளே, என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே

என்ற குறுந்தொகைப் பாடல் தங்கள் நிலைமாறி தாங்களும் கூத்தர்களாகிவிட்டது போன்ற ஒரு விநோத உணர்வைத் தங்களிடம் தோற்றுவித்திருப்பதாக அவள் உணர்வது ஒரு நுண்ணிய மனதின் பிரதிபலிப்பாக உள்ளது. திடீரெனத் தங்கள் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் கூத்தாகவும், தாங்கள் ஆட்டுவிக்கப்படும் கூத்துப் பாத்திரங்களாகவு¢மாறிவிட்டது போன்ற உணர்வை வெளிப்படுத்தும் இக்கவிதை வாழ்வு மற்றும் புனைவின் வேறுபாடற்ற தோற்றநிலையை நெகிழ்வுடன் புலப்படுத்துகிறது.

பாணர் வாழ்வின் அவலத்தையும் நம்பிக்கையையும் புலப்படுத்தி நிற்கும் காக்கைப் பாடினியாரின் பின்வரும் பதிற்றுப்பத்துப் பாடல் அச்சூழலை இவ்வாறு விளக்குகிறது - பகற் பொழுதானது நீளாமல் இரவுப்பொழுது நீண்டு விளங்கும் விலங்குகள் குளிர் மிகுதலால் வருந்தும். மாசித் திங்களில் பனி பொருந்திய அரிய வழிகளில் கடந்து செல்ல நினைக்கும் பாணண் வருந்தும் வருத்தம் அகன்று போக சூரியன் கிழக்கில் கதிர்களைப் பரப்பும். அதைப்போன்று இரப்பதைத் தொழிலாக உடைய பரிசில் மக்களின் சிறுமை அடைந்த குடிகள் சிறுமை நீங்கி பெருக்கம் அடைய உலக உயிர்களைத் தாங்கி இனிது காப்பாய் என்ற பொருள்பட வரும்.

பகல்நீடு ஆகாது இரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மாகூர் திங்கள்
பனிச்சரம் படரும் பாண்மகன் உவப்ப
புல் இருள் விடிய புலம்புசேன் அகல
பாய் இருள் நீங்க பல்கதிர் பரப்பி
ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்கு
இரவள் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம் மறை -

என்று பாடல் செல்கிறது விறலியரை ஆடவும் பாணரும் பொருநகருமான பரிசில் மக்களைப் பாடவும் அழைக்கும் ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் என்பனவும் இவருடைய கவிதை வரிகளே.

என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான் என்று பெருமிதத்துடன் கூறும் தாயின் குரலாக ஒலிக்கும் காவற் பெண்டுவின் பின்வரும் புறநானூற்றுப் பாடல் தீர்க்கமும் உறுதியும் கொண்ட பெண்ணின் குரலாக வெளிப்படுகிறது.

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ என வினவுதி என் கன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன். ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ. போர்க்களத்தானே

என்னும் வரிகள் பெருமிதமும், இனிமையும் நிரம்பியதாக உள்ளன.

போர், மரணம் இழப்பு என அவல உணர்வுகளால் வாழ்க்கை அலைவுறுகின்றது. புரவலனை இழந்து பொலிவிழந்து காட்சிதரும் நகரின் தோற்றத்தை தாயங்கண்ணியார் தன்னுடைய புறநானூற்றுப் பாடலில் இவ்வாறு விவரிக்கிறார்.

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியோடு, இனியே
புல்லென்றனையால் வளம்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

என்ற பாடலில் தலைமயிர் குறைத்து, வளையல் களைந்து அல்லி அரிசியுணவு கொள்ளும் மனைவியைப் போலவும், தந்தை தனியே சென்ற பெருங்காட்டிற்கு பால் வேண்டியழும் சிறுவர் வான்சோற்றுடன் சென்றது போலவும் பொலிவிழந்து மனை என கவிஞர் விவரிக்கும் சித்திரம் அவலமும், நெகிழ்வும் நிறைந்ததாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்கள் தலைமயிரைக் குறைத்து வளையல்களைக் களைந்து அல்லியரிசி உணவு உண்டு வாழும் கைம்மை நிலை குறித்த உணர்வையும் பாடல் வெளிப்படுத்துகிறது.

மாற்றோக்கத்து நப்பசலையாரின் பின்வரும் புறநானூற்றுப் பாடலிலும் கைம்மை மகளிரின் அவலம் வெளிப்படுகிறது. மார்பில் பட்ட காயத்தால் சாவை நெருங்கிக்கொண்டிருக்கும் தலைவனின் நிலை குறித்த புலம்பலாக இப்பாடல் உள்ளது - துடி ஒலிப்பவளே, பாணனே, விறலியே இனிமேல் நீங்கள் என்ன ஆவீர்கள்? இங்கு வாழ்தல் அரிது, மயிர் மழித்து, அல்லியரிசி உண்டு வாழும் கைம்மை மகளிர் போல முடிவை நோக்கியிருத்தல் எனக்கும் அரிதானதே. அவன் இறுதி நெருங்குகின்றது. நீங்கள் வேற்றிடம் செல்க எனப்பாடல் விரிகின்றது.

துடிய ! பாண ! பாடுவல் விறலி!
என் ஆ குவிர்கொல்! அளியிர், நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும்
மண்ணுறு மதித்தலைத் தெண்நீர் வார
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியற்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே -

என்னும் இப்பாடலில் ஒரு ஆழ்ந்த அவல உணர்வு வெளிப்படுகிறது.

இத்தகைய ஓர் அவலச் சுவையின் உச்சமாக பாரி மகளிரின் பின்வரும் புறநானூற்றுப் பாடல் உள்ளது. பாரியையும், பறம்பு மலையையும் இழந்த பாரி மகளிரின் துயரம் இப்பாடலில் மிகவும் நுட்பமான வார்த்தைகளில் வெளிப்படுகிறது - அன்றைய திங்களில் வந்த வெண்ணிலவுக் காலத்தில் எங்கள் தந்தையையும் உடையவராக இருந்தோம். எங்கள் பறம்பு மலையையும் பிறர் கைப்பற்றிக் கொள்ளவில்லை. இன்றைய திங்களில் இந்த நிலவுக் காலத்தில் வெற்றி முரசுடைய வேந்தர் எமது மலையையும் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையும் இல்லாதவராய் ஆனோம் என்ற பொருளில் வரும்

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்று எறிமுரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே -

என்ற பாடல்இழப்பின் ஆழ்ந்த துயரை உணர்ச்சிப்படுதல் இன்றி வெளிப்படுத்தும் ஒரு நுண்ணிய வெளிப்பாடாகும்.

இவ்வாறாக பிரிவுத் துயரின் வலிகள் வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டுள்ளன. நெடும்பல்லியத்தை என்ற பெண் கவிஞரின்

மலை இடை யிட்ட நாட்டாரும் அல்லர்
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணில் காண நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஓரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரிய லென்மன் யான், பண்டு ஒரு காலே - என்ற குறுந்தொகைப் பாடலில் பிரிவின் துயரம் இவ்வாறு வெளிப்பாடு கொள்கிறது. நம் தலைவர் மலைகள் இடைப்பட்ட குறிஞ்சியாகிய பகுதியைச் சேர்ந்தவரும் அல்லர். மரங்களின் உச்சிகள் மறைப்பதால் தோன்றாமல் விளங்குகின்ற முல்லையாகிய பகுதியைச் சேர்ந்தவரும் அல்லர். கண்ணால் காணும் அளவில் வருவதற்குரிய அண்மையில் இருந்தாலும் இறைத் தொடர்புடைய சான்றோர்போல நம்மைப் பிரிந்தே வாழ்கிறார். முன்பு நானும் அன்புடையவளாக இருந்தேன். இன்று அந்நிலை இல்லை என்று அன்பும் விலகலுமான ஒரு மனநிலையைப் பாடல் விவரிக்கிறது. எந்த நிலத்தைச் சேர்ந்தவர் என்றுதெரியவில்லை. ஆனால் அருகில் இருந்தும் தொலைவில் இருக்கிறார். மெதுவாக என் அன்பும் விலகிக்கொண்டிருக்கிறது என்று இனம் புரியாத ஒரு வினோதமான மனநிலையைக் கவிதை வெளிப்படுத்துகிறது.

குறைவான வார்த்தைகளில் தன்னுடைய காதல்வயப் பட்ட மனத்தையும், வலியையும், வேதனையையும் நுட்பமாக வெளிப்படுத்தும் இக்கவிதைகள் மிகுந்த இலக்கியச் சுவையுடன் காதல் உணர்வு கடந்த ஒரு பேருணர்வைப் புலப்படுத்தி நிற்கின்றன. தனிமை பற்றிய வெண்பூதியாரின் பின்வரும் குறுந்தொகைப் பாடல் தலைவியின் நிலையை இவ்வாறு விவரிக்கிறது. தலைவன் தந்த ஆறாத துன்பத்துடன் இங்கு தனித்துள்ளேன். அவனை என்னிடம் தந்த எனது நலன் அவனைத் தேடியவாறு கானலிடத்தே உள்ளது. துறைவனாகிய அவனோ பெற்றோருடன் தனது ஊரில் இருக்கிறான். என்னிடம் நிகழ்ந்த களவு உறவோ பலரறிய வெளிப்பட்டு ஊரலராகிப் பொதுவிடத்தும் ஆனது என்றவாறு பாடல் உள்ளது.

யானே ஈண்டை யேனே, என் நலனே
ஆனா நோயோடு கானலயஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் - ஆகி மன்றத் தஃதே

என்ற இப்பாடல் தனிமை, விலகல், உதவியற்ற நிலை என்று பல்வேறு னநிலைகளின் தொகுப்பாக உள்ளது.

அதேபோல நாணத்தையும் விடமுடியாமல் அந்தரங்கத்தையும் வெளிப்படுத்த இயலாமல் தவிக்கும் தவிப்பைப் புலப்படுத்தும் பல பாடல்கள் உண்டு. வெள்ளிவீதியாரின் குறுந்தொகைப் பாடல் இது.

அரிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே, இனியே
வான் பூங்கரும்பின் ஓங்கு மணற் சிறுசிறை
தீப்புனல் நெரிதா வீந்து உக்கா அங்கு
தாங்கும் அளவைத் தாங்கி
காமம் நெரிதரக் கைந் நில்லாதே -

அதாவது நாணம் நம்மை விட்டுப் பிரியாம ல் பல காலம் வருத்துகிறது. கரும்பின் உயர்ந்த சிறுகரையில் அருவிப்புனல் விரைந்து பாய்வதால் அக்கரைதான் அழிவதுபோல காமம் மிகுந்து தாக்குவதால் நாணம் என்னிடம் இல்லாமலேயே அழிந்து நீங்கிவிடும் என்று தலைவி தன்னுடைய கையறு நிலையைத் தோழிக்கு விளக்குகிறாள். செறிவான சொல்லாடல்கள் மூலம் கட்டுண்டும் கட்டற்றும் விரியும் எண்ணற்ற நெகிழ்வுணர்வுகளைப் பாடல் புலப்படுத்துகிறது.

இன்னும் நிலவெளி மற்றும் உயிரினங்களின் இயக்கங்கள் குறித்த பல செறிவான பார்வைகளும், சுற்றுப்புற மனிதர்களின் வாழ்வியல் குறித்த கூரிய கவனமும் அவர்களுடைய பல பாடல்களில், சிறப்பாக வெளிப்படுகின்றன. வெண் பூதியாரின் பின்வரும் குறுந்தொகைப் பாடலில் வரும் விவரணைகள் இவ்வாறு உள்ளன - பாலை நிலத்தில் கிளைவிட்டு வளர்ந்துள்ள சுவையும் முடமும் உடைய கள்ளியின் காய் பெய்யும் மழையின்றித் துயருறுகிறது. அக்காய் வெடிக்கையில் பேரொலிஎழும். அவ்வொலியானது மெல்லிய சிறகுகளைக் கொண்ட ஆணும் பெண்ணுமாகிய புறாக்களை அங்கிருந்து அகல வைக்கும். அத்தகைய அரிய வழிகள் செல்லற்கரியன என்றும் கருதாமல் நம்மைப் பிரிந்து பொருள்தேடச் செல்வார் என்பாய். அவ்வாறு சென்றால் உலகில் பொருட்செல்வம் ஒன்றே மெய்யான உறுதிப்பொருள். அருட்செல்வம் தன்னை ஏற்பார் யாருமின்றி மறைந்து போவதாம் என்று தலைவி தோழிக்குச் சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.

பெயல் மழை துறந்த பலம்புஉறு கடத்துக்
கவைமூடக்கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவி துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின் இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே,
அருளே மன்ற ஆரும் இல்லதுவே

என்ற இப்பாடல் தன்னைச் சுற்றியுள்ள நிலவெளியின் உயிர்ப்பிலும் இயக்கத்திலும் தன்னுடைய உணர்வையும் இணைத்துப் பார்த்து தனக்கான செய்திகளை உணரும் ஒரு அரிய பார்வையைப் புலப்படுத்துகிறது.

சூழல் குறித்த விவரிப்பில் பல சிறப்பான கற்பனைகள் அவர்களுடைய பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. அள்ளூர் நன்முல்லையாரின் பின்வரும் அகநானூற்றுப் பாடல் ஒரு தலைவி தன்னுடைய தலைவனுடைய ஊரை இவ்வாறு வர்ணிப்பதாக உள்ளது. சேற்றுத் தரையில்நிற்பதைப் பொறுக்காத சிவந்த கண்களை உடைய எருமை ஊரார் உறங்கும் நள்ளிரவில் வலிய கயிற்றை அறுத்துக்கொண்டு புறப்பட்டுப்போய் கூர்மையான முள்ளை உடைய வேலியைத் தன் கொம்பால் அகற்றிவிட்டு நீர் மிகுந்த வயலில் மீன்கள் எல்லாம் அஞசி ஓடுமாறு இறங்கி அங்குள்ள வள்ளைக் கொடிகளைநிலைகுலையச் செய்து வண்டுகள் உள்ளிருந்து ஊதும் தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்னும் வளான ஊர் என்று தலைவன் ஊரை வர்ணிக்கிறாள்.

சேற்று நிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலில், நோன்தனை பரிந்து
கூர்ள் வேலிகோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன் உடல் இரிய,
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனிமலர் ஆரும் ஊர!

என்று தொடங்கும் இப்பாடல் சுற்றியுள்ள உயிரினங்களின் இயக்கங்கள் குறித்த செறிவான படிமங்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால் அவை வெறும் கற்பனைப் படிமங்களாக நின்றுவிடாமல் அத்தகைய உயிர்ப்பின் ஓட்டத்துடன் தங்கள் மனநிலைகளை இணைத்துப் பார்க்கும் உருவகங்களாகவும் தோற்றம் கொள்கின்றன.

முக்கியமாக இப்பெண் கவிஞர்களின் கவிதைகளில் தென்படும் செறிவான கற்பனைகளும், ஒலிநயம் மிகுந்த சொற்சேர்க்கைகளும் ஒரு சிறப்பான மொழி ஆளுமையையும் புரிதலையும் புலப்படுத்துபவை. ஒக்கூர் மாசாத்தியாரின் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் ஒரு முல்லை நிலக் காட்சியின் பின்புலத்தில் தலைவனின் தேர் செல்லும் வழி இவ்வாறு விவரிக்கப்படுகிறது - தளிர் போன்ற தன்மையுடைய கிளி இனிதாய் வளர்ந்த இளைய குஞ்சின் சிறகைப்போல மழை வளர்த்த பசுமையான பயிரை உடைய காடு. அக்காட்டில் பறையின் கண்ணைப் போன்று விளங்கும் நீரால் நிறைந்த சுனைகளில் மழைபெய்வதால் உண்டான குமிழிகள் தாமரை மொட்டுகள் போலத் தோன்றி மறையும். கிளையினின்றும் காற்று உதிர்வதால் நீரின் மேல் கிடந்து அழகு செய்த வண்டுகள் தேனுண்ட அழகிய மலர்களைத் தேரின் ஆழி அறுத்துச் செல்லும். அந்த ஆழி குளிர்ந்த நிலத்தில் பிளந்துபோன சுவட்டில் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய்ப் போகும் பாம்பைப் போல் நீர் விரைந்து செல்லும். முல்லை மலரும் மாலை நேரத்தில் நகரில் புகுவதை ஆராய்ந்து உணர்ந்து தலைவனின் தேர் செல்லும் என அக்காட்சி விரிகிறது.

தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளரா ப்பிள்ளைத் தூவி அன்ன
உளர்பெயல் வளர்த்த, பைம்பயிர்ப் புறவில்
பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சால
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய்
சிறற்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
வண்டுண் நறு வீறமித்த நேமி
தண்நில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரைசெல் பாம்பின் விரைபு நீர் முடுக
செல்லும், நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே

என நுண்ணிய குறிப்புகளும் ஓசைகளுமாக நீரோட்டம் போல் கவிதை செல்கிறது.

இதேபோல் நாரையை அழைத்துப் பாடும் வெள்ளிவீதியாரின் பின்வரும் நற்றிணைப் பாடலில் நுட்பமான குறிப்புகள் இடம்பெறுகின்றன. தலைவி நாரையைப் பார்த்து இவ்வாறு கூறுகிறாள். ’நீ எம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய். பிறகு அவர் ஊருக்குத் திரும்பிப் போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும் வயல்களைக் கொண்ட நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் சொல்லாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா அல்லது பெரிய மறதியுடைய பறவையா? எனக்கு விளங்கவில்லை’ என்று தலைவி கூறுகிறாள்.

எம் ஊர் வந்து, எம் உண் துறைத் துழைஇ,
சினைக் கொளிற் ஆரின் கையை அவர் ஊர்ப்பெயர்தி,
அனைய அனபினையோ, பெரு மறவியையோ
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பா தோயே? என்ற இப்பாடலின் குறிப்பு சுவையும், செறிவும் கொண்டு ஒரு சிறப்பான மனநிலை வெளிப்பாடாக உள்ளது.

சங்கப் பெண் கவிஞர்களின் இக்கவிதைகள் ஒரு இயல்பான உணர்ச்சிப் பெருக்குடன் தீவிரமான உணர்வுநிலைகளின் வெளிப்பாடாக விளங்கினாலும் அக்கால கட்டத்தில் நிலவிய பல்வேறு மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களையும் கொண்டுள்ளன. பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி அக்காலக் கவிதை மரபுகளை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தனர் என்பதற்குப் பல கவிதைகள் அடையாளமாக உள்ளன. அவர்களுடைய பல அகப்பாடல்கள் ஐந்திணை மரபுகள் சார்ந்து இயங்குவது போன்ற தோற்றம் கெண்டிருந்தாலும் அவை வாழ்வியல் தன்மைகளுக்கே அதிகம் கட்டுப்பட்டவையாக இருந்ததைப் பார்க்க முடியும். அதனாலேயே ஆற்றொழுக்கு போன்ற கவிதை நடை அவர்களுக்கு வசப்பட்டிருந்தது. எங்கும் உயர்வு நவிற்சியோ இயற்கைக்கு மாறான செயற்கைப் பொலிவோ அப்பாடல்களில் இல்லை. வெறும் கவிதை மரபு குறித்த அறிவால் மட்டும் இது சாத்தியப்பட்டிருக்க முடியாது. அனைத்து உயிரினங்களின் தன்மைகளையும் அழகுகளையும் கண்டு மக்கள் யாவரையும் ஒரு குடும்பமெனக் கருதி ஒரு அன்பு நீரோட்டத்துடன் அணுகிய நிலையிலேயே அக்கவிதைகள் இத்தகைய செறிவையும், சொல்வளத்தையும் பெற்றிருந்தன. நம்பத் தகுந்த உண்மைகளை ஏற்கும் வகையில் கூறும் நடுநிலையும் உண்மையை அறிவுறுத்தும் உறுதியும் ஒரு அறிவார்ந்த தெளிவினாலேயே அவர்களுக்கு கவிதைகளில் சாத்தியப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய மனப்பாங்கையும், வாழ்க்கைப் புரிதலையுமே இக்கவிதை மொழி புலப்படுத்தி அக்காலகட்ட பண்பாட்டுத் தடங்களின் பல்வேறு கூறுகளை நாம் அறிய வகை செய்கிறது.

இன்னும் கிளி, நாரை முதலிய பறவைகளை விளித்துரைத்தல், மகளிர் விளையாட்டு வகைகளை புகழ்மாலை கருவியாகக் கொள்தல், குறக்குடிசிறார் குறி சொல்லுதல், சிறு பிள்ளைகள் சிறு தேர் உருட்டி விளையாடுதல், பெண்கள் துணங்கைக் கூத்தாடுதல், வண்ணாத்தி கஞ்சிப்பசை போடுதல், விளையாட்டு மகளிர் மணல் வீடு கட்டுதல், நுளைச்சியர் நெல் பெற்று உப்பு தருதல் போன்ற பல பண்டைய வழக்கங்கள் இக்கவிதைகளில் அறியக்கிடக்கின்றன. காதலி சுவரிலே கோடிட்டு பிரிந்த தலைவன் வருநாளை எண்ணுவதும், தினைப்புனத்தில் கிளியோட்டும் வழக்கமும், காதலர் வரவை பல்லி கூறுவதாகக் கருதுவதும் காலால் பந்து விளையாடுதலும் ஆகிய பல செய்திகளும் இப்பாடல்களில் உண்டு. இளவேனிற் காலத்தில் ஆற்றில் தண்ணீர் குறைந்து ஒடுங்கிச் செல்வது பாம்பு நெளியும்போது அதன் முதுகு நெளிவதுபோன்றிருப்பது, பேயின்கைவிரல் முள்முருக்கின் உலர்ந்த துணரைப் போன்றிருப்பது, பெண் யானை தன் கன்றைப் புலியிடந்து பாதுகாத்தலும் என இயற்கையின் அரிய தருணங்களை அவர்கள் கவிதைகளில் வெளிப்படுத்தி மகிழ்வது அவர்கள் சூழலுடன் கொண் எண்ணற்ற உறவுநிலைகளைப் புலப்படுத்தும்.

தங்களுடைய பாலியல் உணர்வுகளையும், பாலியல் உறுப்புகள் சார்ந்த சொல்லாடல்களையும் குற்ற உணர்வின்றி இயல்பான உணர்ச்சிப்பெருக்குடன் இக்கவிதைகளில் அவர்கள் கையாண்டது அந்த உணர்வுகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பையும் அங்கீகாரத்தையும் அச்சூழலில் நிலவிய ஒளிவுமறைவற்ற தன்மையையுமே புலப்படுத்தும், அத்தகைய உணர்வுகள்இலக்கியத் தன்மையுடன் வெளிப்பாடுகொள்ளும் எண்ணற்ற வழிகளையும் சாத்தியங்களையும் இக்கவிதைகள் அவர்களுக்கு உருவாக்கின. இவ்வாறு செறிவான வாழ்வியல் உணர்வுகளும் சூழல் சார்ந்த அழகியல் உணர்வுகளும் கொண்ட எண்ணற்ற பண்பாட்டுக் கூறுகளை அவர்கள் வெளிப்படுத்திய மொழியின் நுட்பத்தால் அறிய முடிகிறது. உண்மையில் வரலாறு என்பது மொழியின் மீது கட்டமைக்கப்படும் புனைவு என்பதையும் மொழி தான் சிந்தனை என்ற நிலைப்பாட்டையும்தான் இன்றைய அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவ காலகட்டங்கள் வலியுறுத்துகின்றன.

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதை நிலைப்பாடுகளிலிருந்து நாம் இன்றைய காலகட்டத்துக்கு எடுத்துக் கொள்ள பல செய்திகள் உள்ளன. மொழியின் நுண்மையையும் வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்ட சங்ககால இலக்கிய மதிப்பீடுகள் பிற்காலத்தில் ஆதிக்கம் பெற்ற மதவாதத்தால் நீர்த்துப்போய் திசை மாறிப்போனதையே தமிழ் இலக்கிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. பரவலான மக்களைச் சென்றடைதல் மற்றும் ஜனநாயகப் படுத்துதல் ஆகிய மத இயக்கங்களின் அடிப்படைச் செயல்பாடுகள் இலக்கியத்தின் ஆதாரமான உணர்வுகளை உள்வாங்கினாலும் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட அறவியல் சட்டகங்களுக்குள் மனித எழுச்சிகளின் உணர்ச்சிப் பெருக்குகளைப் புறந்தள்ளின. அதனாலேயே பின்வரும் காலகட்டங்களில் இயல்பான மன எழுச்சிகளின் இலக்கிய அங்கீகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வரையறுக்கப்பட்ட சூத்திரம் சார்ந்த நிலைப்பாடுகள் முன்னிலை பெற்றன. அச்சூழலிலேயே பெண்ணின் சமூக வெளி குறுக்கப்பட்டு எழுச்சி பெற்ற சங்கப் பெண் கவிஞர்களின் பெண் குரலின் தொடர்ச்சியைப் பின்வரும் காலகட்டங்களில் நாம் காண இயலாமல் போனது.

இன்றைய நவீன காலகட்டத்தில் வரையறுக்கப்பட்ட சட்டகங்களைக் கடந்து வாழ்க்கை உணர்வுகளின் அடிப்படையில் மீண்டும் இலக்கிய நிலைப்பாடுகள்உறுதி கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. பெண் உடல் குறித்து உருவாக்கப்பட்டுள்ள போலி கட்டுமானங்களை உடைத்து உடலின் பரவசங்களையும் உடலின்கொண்டாட்டத்தையும் முன் நிறுத்தும் இன்றைய பல நவீனப் பெண் கவிஞர்களின் குரலில் சங்கப் பெண் கவிஞர்கள் அதிக எண்ணிக்கையில் தங்களுக்கான இடத்தையும் அங்கீகாரத்தையும் கோரும் விதமாக தங்கள் குரல்களைப் பதிவு செய்யும் நிலை உள்ளது. இன்று ஆதிக்கங்கள்இடம்பெயர்ந்துள்ள நிலையிலும் பெண் குறித்த மரபுரீதியான பார்வையிலிருந்தும் சொல்லாடல்களிலிருந்தும் தமிழ்ச் சமூகம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. வைதீக சனாதனப் பார்வை கொண்ட பெண் ஆதிக்கக் குரல்கள் வேறு வடிவங்களில் இன்றும் தொடர்ந்தவாறே உள்ளன. இத்தகைய ஒரு சூழலில் சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த கவனங்கள் தீவிரப்படுவது அங்கு ஒலிக்கும் பல்வேறு குரல்களின் பின்புலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை மீண்டும் மறுவாசிப்பு செய்யவும் மறுபரிசீலனை செய்வதற்குமான பல சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

நன்றி - கூடு

3 comments:

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம். பெண்ணியம் இணையப் பக்கத்தினை அடிக்கடி வாசிக்கும் பழக்கம் உண்டு. சங்க கால பெண் கவிஞர்கள் குறித்த ஆய்வு பல செய்யப்பட்டிருப்பினும், அப்பெண்மொழிகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இன்றுள்ளது. அந்நிலையில் இவரின் கட்டுரை வேறு தளத்தித்திற்கு இட்டுச் செல்கின்றது.
நன்றி.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

பெண் தளங்களில் தமிழச்சியின் தளம் இடம்பெறவில்லையே.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இக் கட்டுரையின் செரிவு பலரை சென்றடைய பெண் கவிஞர்கள் எனும் விக்கிப்பீடியா கட்டுரையில் இணைத்துள்ளேன்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்