/* up Facebook

Jan 23, 2011

இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும் - அம்பை


பாபரி மசூதி தீர்ப்பு வரப்போகிறது என்றதும் மும்பை முழுவதும் கவலைகூடிய ஒருவித இறுக்கம் உண்டாகியது. வந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. அப்போதும் இது பற்றிப் பேசிய சாதாரண முஸ்லிம் குடிமக்கள் ‘அங்குக் கோவில் கட்ட வேண்டுமானால் நாங்கள் தோள் கொடுக்கிறோம். போதும் இந்த பிரச்சினையும் அதை ஒட்டிய சச்சரவும்’ என்றனர். 1992 பாபரி மசூதி இடிப்பு நிகழ்வை எப்போதோ நடந்த வெறும் தகவலாக மட்டுமே அறிந்த 1992க்குப் பின் வந்த இளைய தலைமுறையினர் தீர்ப்பும் அதை ஒட்டி நேரிட்ட கவலையும் மன இறுக்கமும் வழக்கம் போல் கடந்த காலம் என்னும் புதைகுழியில் காலைப் புதைத்துக்கொண்டு மீள முடியாமல் தவிக்கும் மூத்த தலைமுறையினரின் வழக்கமான மாரடிப்பு என்றே நினைத்தனர். அயோத்யாவில் அந்த இடத்தில் என்ன கட்டலாம் போன்ற கேள்விகள் வந்தபோது முஸ்லிம் அல்லது இந்து என்ற நிலையிலிருந்து பதில்கள் வரவில்லை இளைய தலைமுறையிடமிருந்து. பிரச்சினையின் தன்மை மாற வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாக இருந்தது. பள்ளி மாணவிகள் சிலர் என்னிடம் வசதியுடன் கூடிய கட்டணக் கழிப்பிடங்கள் அங்கே கட்டலாம் எல்லோரும் உபயோகிக்க என்றனர். வேடிக்கையாக அவர்கள் கூறினாலும் கோவில் மசூதி பிரச்சினைகள் எவ்வளவு தூரம் அவர்களைப் பாதிக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.

மதச்சார்பற்று வாழ நினைக்கும் இந்தத் தலைமுறை இளைய குடிமக்களிடமிருந்து எதையும் கற்காமல் வைஷ்ணோதேவி பயணத்துக்கு, ஹஜ் பயணம்போல் இன்னும் எத்தனை பேரை அனுப்ப முயலலாம், எத்தனை வியாபார நிறுவனங்களை இந்தப் பயணத்தை ஆதரிக்க முன்வரச் செய்யலாம், அமர்நாத்ஜி கோவில் குழுமத்தை எவ்வாறு இந்துக்களின் குரலாக மாற்றலாம் என்று இந்தியா முழுவதையும் இந்துவாக மாற்றும் முயற்சியில் உள்ள இந்துத்துவவாதிகள் காஷ்மீர் பிரச்சினையில் தங்கள் இந்து மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால் பிரச்சினையின் தன்மை மாறியிருக்கும். காஷ்மீரில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக இது வெறும் முஸ்லிம்-இந்து பிரச்சினை என்ற தளத்திலிருந்தே இயங்கிவரும்போது அதே தளத்தில் நின்று அதை எதிர்கொள்வது அதை நியாயமாக்குவதாகிவிடும். ஆரம்பகாலச் சரித்திரத்தைப் புறக்கணிக்கும் செயல் இது. பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பலர் வாழ்ந்த நிலம் அது. ஏசு கிறிஸ்து மரித்ததாகவும் மோசஸ் அங்கே தன் மக்களைத் தேடிவந்ததாகவும் நம்பப்படுகிறது.

இனம், மதம் என்னும் நிலையிலிருந்தும் உயர்ந்து எழும்பிய லால் தேத் போன்ற ஞானிகள் வாழ்ந்த நிலம் காஷ்மீரம். அக்கமகாதேவியைப் போல் உடைகளைக் களைந்து ஞானப் பாடல்களை இசைத்த சிவ பக்தை லால் தேத். பல வகைகளில் இன்றும் அவர் வாழ்க்கையும் பாடல்களும் நமக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கின்றன. எல்லோருமே லால் தேதைத் தங்களுடையவர் என்று உரிமை கொண்டாடுகின்றனர். லால் தேதை மதமாற்றம் செய்து அவர் ஸூஃபி கருத்துகளால் கவரப்பட்டார் என்றெல்லாம் கூறப்படுவதன் காரணம் எழுநூறு ஆண்டுகளுக்குப் பின் இன்றும் நம் வாழ்க்கையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் எழுப்பும் கேள்விகள் பொருத்தமானவையாகவும் அவர் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகவும் இருப்பதால்தான். மனித நிலையைப் பற்றித் தான் கொண்ட ஆழமான ஆதங்கங்களிலிருந்து பாடிய லால் தேத் தற்கால வாழ்க்கையின் தன்னுணர்வுத் தேடலை அப்போதே தனதாக்கிக்கொண்டு சடங்குகள், சம்பிரதாயங்கள், பெண்களைப் பற்றிய நோக்குகள் ஆகியவற்றைக் அந்தக் காலத்திலேயே கேள்விக்குள்ளாக்கி, எல்லாவித வாழ்க்கையும் இணைந்திருப்பதையும் பலவித வித்தியாசமான நோக்குகளைக் கருணையுடன் நோக்கிப் பொறுத்துப்போகும் அவசியம் இருப்பதையும் பற்றிக் கூறி அவற்றைத் தன் பாடல்களின் பாடுபொருளாக்கினார். அவர் உபயோகித்த சொற்களும் உவமைகளும் போலிகளையும் முகமூடிகளையும் அவர் வெறுத்தொதுக்கியதும்தான் உண்மை என்று உணர்ந்ததை எந்தவிதப் பயமுமின்றிக் கூறியதும் அவருடைய ஆதங்கங்கள் பொருந்திய பாடல்களை உலகளாவியவையாக்கின. காஷ்மீர நிலத்தின் முற்றும் நவீனக் கவிஞர் அவர். இன்றைய காஷ்மீரி யார் என்னும் கேள்வி எழுந்தால் லால் தேதின் பாடல்களால் பாதிக்கப்பட்ட நபர் என்றுதான் கூற முடியும். லால் தேதை மனக்கண் தோற்றமாகப் பார்க்காமல் சரித்திர உண்மையாகப் பார்த்தால் தான் காஷ்மீர நிலத்தின் உண்மையான தன்மை வெளிப்படும். அதன் பல சரித்திரத் தடங்களும் அதில் ஓடும் வாழ்க்கை ரேகைகளும் தெரியும்.

பிரிவினைக்குப் பின் வந்த இனக் கலவரத்தின்போது முஸ்லிம், இந்து, சீக்கியர் இவர்கள் இருந்த காஷ்மீரப் படை ஒன்று இந்தியப் படைகளுடன் இணைந்து பாகிஸ்தான் அனுப்பிய பட்டாணியப் பழங்குடியினரை விரட்டி அடித்துக் காஷ்மீர் நிலத்தில் சட்ட ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தது. நாட்டு மக்களுக்கான உரையில் நேரு இதைக் குறிப்பிட்டு இனக்கலவரம் எனும் விஷத்தால் தாக்கப்பட்டிருக்கும் நாடு இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தன் பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நாட்டுக்கு காஷ்மீர் ஒரு கலங்கரை விளக்கமாக அமைய வேண்டும் என்பதே என் ஒரே நம்பிக்கையும் பிரார்த்தனையும் என்றார். 1952 ஆகஸ்டு மாதம் ஏழாம் தேதி மக்களவையில் பேசிய நேரு கூறியதையும் இப்போது நினைவுகூர்வது அவசியம். காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் பத்திரங்கள் சட்டப்படி முழுமையடைந்திருந்தாலும், காஷ்மீர மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதி இன்னும் இருக்கிறது. இது காஷ்மீர மக்களால் உறுதிசெய்யப்பட வேண்டிய அல்லது நிராகரிக்கப்பட வேண்டிய விஷயம். மக்களின் விருப்பத்தை மீறிப் படைபலத்தால் அவர்களை நாம் வெற்றிகொள்ள முடியாது. காஷ்மீரத்து மக்களுக்கு நம்முடன் இருக்க விருப்பமில்லை என்றால் அவர்கள் அவர்களுக்கான வழியில் போகட்டும்; நாம் நம் வழியில் போகலாம். பலவந்தத் திருமணமோ பலவந்த இணைப்போ தேவையில்லை எனக் கூறினார் நேரு.

இந்தப் பின்புலத்தோடுதான் இப்போதைய காஷ்மீரப் பிரச்சினையை அணுக வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு ஜனநாயகம் பற்றிய கருத்தரங்குக்காக டாக்கா (பங்களாதேஷ்) போயிருந்தபோது, அங்கு வந்திருந்த சில பாகிஸ்தானிய அறிவுஜீவிகள் சிலர் இரு தீர்மானங்களை நிறைவேற்ற விரும்பினர். ஒன்று பங்களாதேஷுக்குப் பாகிஸ்தான் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோருவது, இரண்டாவது காஷ்மீரின் விதியைக் காஷ்மீர மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பது. அப்போது காஷ்மீரத்து மக்கள் யார் என்னும் கேள்வி எழுந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரப் பகுதியிலுள்ள மக்களும் அவர்கள் விதியைத் தீர்மானம் செய்வதில் பங்குகொள்வார்களா, காஷ்மீரத்தை ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் வெளியேறி அமைதியான முறையில் காஷ்மீரத்தின் விதி நிர்ணயிக்கப்படுமா, இந்தக் காலகட்டத்தில் சார்பின்றி இயங்கும் நிலையில் காஷ்மீரம் உள்ளதா என்ற விவாதங்கள் எழுந்தன.

இந்தக் கேள்விகள் இன்றும் உள்ளன. இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் அருந்ததி ராய் காஷ்மீரத்துக்கு இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும் இந்தியாவுக்கும் காஷ்மீரத்திடமிருந்து விடுதலை வேண்டு மெனப் பேசியிருக்கிறார். அருந்ததி ராய் நாட்டு அரசியலின் அணு ஆராய்ச்சியிலிருந்து, அணைக்கட்டுகள்வரை பல விஷயங்களில் தன் கருத்துகளை ஆணித்தரமாக முன்வைத்திருப்பவர். பலவீனப்பட்டிருந்த நர்மதா பள்ளத்தாக்கைக் காப்பாற்றும் இயக்கத்துக்கு உலகறிந்த தன் முகத்தை அளித்து எல்லோர் கவனத்தையும் அதன் ஆதாரப் பிரச்சினைகளின் பால் கொண்டுவந்தவர். போராளியாக இயங்குபவர். அவர் மனச்சாட்சிக்குச் சரியெனப் பட்டதைத் தயக்கமின்றி, பயமுமின்றி, வெளிப்படையாகப் பேசுபவர். அவர் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசி அதை அவர் போராட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கும் பிரச்சினையாக்கும்போது அதன் பின் வரும் விவாதங்கள் அனைத்துமே அருந்ததி ராயை மையமாக்கி வரும் விவாதங்களாகிவிடுகின்றன என்பது வேறு விஷயம். சபர்மதி ஆசிரமத்தில் மேதா பாட்கர் தாக்கப்பட்டு, அவர் கூந்தல் இழுபட்டு, அடிபட்டபோது அருந்ததி ராயை உலகம் கொண்டாடிக்கொண்டிருந்தது. நவீன ஏசு கிறிஸ்து என்று கூடச் சில வெளிநாட்டுப் பத்திரிகைகள் அவரைக் குறிப்பிட்டன. இந்தப் புகழுரைகளை அவர் நம்பிவிட்டாரோ என்று நினைக்கும்படி இருக்கிறது அவர் தற்சமயம் பேசியிருப்பது.

எந்தவொரு பிரச்சினையானாலும் அதன் உணர்ச்சி நாடியைப் பிடித்து அதன் மேல் தன் வாதங்களை எழுப்பும் மொழிப் புலமை உடையவர் அருந்ததி ராய். அவர் இந்தியப் படைகளின் வன்முறை நடவடிக்கையைப் பற்றிக் கூறியிருப்பது பொய் எனச் சொல்ல முடியாது. வடகிழக்குப் பகுதியிலோ எந்தப் பகுதியிலோ பாதுகாப்புப் படை என்று போய் சுதந்திரமாக இயங்கும் அதிக உரிமைகள் உள்ள இந்தியப் படையோ அல்லது உலகின் எந்தப் படையோ முன்னுதாரணமாகக் கொள்ளும்படி செயல்பட்டதாகச் சரித்திரமில்லை. காஷ்மீரில் புகுந்திருக்கும் தீவிரவாதிகளும் அன்பு கனியச் செயல்படுகிறார்கள் எனக் கூற முடியாது. இந்தியப் படையினரை நோக்கி மட்டுமல்ல அங்கே உள்ள மக்கள் மீதும் அவர்கள் வன்முறை செயல்படுகிறது. 4,00,000 காஷ்மீரி பண்டிட்களும் வேறு பலரும் காஷ்மீரத்திலிருந்து சையது ஷா கிலானியின் தலைமையில் இயங்கிய கூட்டத்தாரால் காஷ்மீரை விட்டுத் துரத்தப்பட்டனர். பலர் கொடூரமான முறையில் வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். இதைப் பற்றிக் காந்திக்குப் பின் இந்தியா புத்தகத்தில் எழுதும் ராமச்சந்திர குஹா பெண்கள் ஒரே சமயத்தில் பலரால் வன்புணர்ச்சிக்கு ஆளானதையும் பெண் ஒருவரின் உடல் தொழிற்சாலைகளில் பயன்படும் ரம்பத்தால் துண்டாடப்பட்டிருந்ததையும் ஆண்களின் உடல்களில் வதைபட்ட அடையாளங்கள் இருந்ததையும் சொல்கிறார். கழுத்தை நெறித்துக் கொல்வது, தூக்கிலிடுவது, உடல் பகுதிகள் வெட்டப்படுவது, கண்கள் தோண்டி எடுக்கப்படுவது முதலான எந்த வன்முறையையும் விட்டுவைக்கவில்லை. அந்த உடல்கள் தொடப்படக் கூடாது, மீறித் தொடுபவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற எச்சரிக்கைகள் தாங்கிய காகிதங்களுடன் உடல்கள் கிடந்தன. மும்பையில் ஷபனா ஆஸ்மி போன்றவர்கள் காஷ்மீரி பண்டிட்கள் உரிமைகள் பற்றிப் பேசிவருகின்றனர். இதை அறியாதவர் அல்ல அருந்ததி ராய். இருந்தும் அக்டோபர் 21ஆம் தேதி காஷ்மீர் பற்றி நடந்த கூட்டத்தில் அவர் கிலானி மற்றும் பலருடன் பேச அமர்ந்திருந்தபோது அதை எதிர்த்து காஷ்மீர் பண்டிட்கள் பலர் அங்குக் கூடி, அவர்களைப் போலீஸார் கைதுசெய்து விரட்டியபோது அருந்ததி எதுவும் கூறவில்லை.

ஆகஸ்டு 16ஆம் தேதி காஷ்மீரில் நடந்த மாபெரும் எதிர்ப்புக் கூட்டத்தில் கூடிய மக்கள் அன்றும் அதற்குப் பின் வந்த நாள்களிலும் போட்ட கோஷங்கள் ‘தன்னிச்சையாக எழுந்த மக்களின் குரல்’ என்கிறார் அருந்ததி. பச்சை நிறப் பாகிஸ்தானியக் கொடிகளைத் தாங்கியபடி திரண்டெழுந்த கூட்டத்தினர் கைகளிலும் மரங்கள், கட்டடங்கள், படகுகள், சுவர்கள் என்று எங்கெங்கிலும் இருந்த சுவ ரொட்டிகளும் அட்டைகளும் தாங்கிய வரிகள்:

ஹம் க்யா சாஹதே? ஆஸாதி. (எங்களுக்கு என்ன வேண்டும்? சுதந்திரம் வேண்டும்.)

ஜியே ஜியே பாகிஸ்தான் (வாழ்க வாழ்க பாகிஸ்தான்.)

பாகிஸ்தான் ஸே ரிஷ்தா க்யா? லா இலாஹா இல்லல்லாஹ். ஆஸாதி கா மத்லப் க்யா? லா இலாஹா இல்லல்லாஹ். (பாகிஸ்தானுடன் என்ன உறவு? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை. சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை.)

Indian dog go away. (இந்திய நாயே வெளியேறு.)

கூனீ லகீர் தோட் தோ. ஆர் பார் ஜோட் தோ. (ரத்தம் தோய்ந்த எல்லைக் கோடு போகட்டும். காஷ்மீரம் இணையட்டும்)

காஷ்மீர் கி மண்டி, ராவல்பிண்டி (காஷ்மீரின் சந்தை ராவல்பிண்டி)

நங்கா பூக்கா ஹிந்துஸ்தான், ஜான் ஸே ப்யாரா பாகிஸ்தான். (அம்மணமும் பசியுமான ஹிந்துஸ்தான், உயிரிலும் மேலான பாகிஸ்தான்.)

அத்தனை மக்கள் கூட்டமும் அவர்கள் எழுப்பிய கோஷங்களும் தன்னிச்சையாக எழுந்தவை என்று அருந்ததி ராயால் நம்ப முடிகிறதா? அவர்கள் பச்சைக் கொடிகளைத் தாங்கியதுகூடப் பாகிஸ்தானுக்குச் செலுத்தும் நன்றி என்றும் காஷ்மீரம் பாகிஸ்தானுடன் எதிர் காலத்தில் இணைந்துவிடும் என்பதற்குச் சாட்சி இல்லை என்றும் கூறுகிறார் அருந்ததி ராய்.

அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் யாருக்கும் எதிர்காலச் சுதந்திரமான இயக்கம் பற்றி எந்தக் கருத்தும் இருக்கவில்லை. அவர்கள் பச்சைக் கொடிகளுடன் அலை அலையாய் எழுந்து வந்தபோது பாகிஸ்தானைச் சார்ந்து இருப்பதைத் தவிர அல்லது அதன் உற்ற தோழமையாக மத அடிப்படையில் இயங்கப்போகும் ஒரு நாடாக இருப்பதைத் தவிர வேறு எண்ணங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் காஷ்மீரத்தின் குரல் என்று எதை வைத்து அருந்ததி நம்புகிறார் எனத் தெரியவில்லை. இரண்டு பெரும் நாடுகளுக்கிடையே உள்ள சிறு நிலப் பகுதி எவ்வாறு சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்னும் கேள்வியுடன் அதன் மதச்சார்பற்ற பழைய சரித்திரம் துறக்கப்பட வேண்டியதுதானா என்னும் கேள்வியும் எழுகிறது. பின்னாலேயே சீனாவும் இருக்கிறது என்பது அருந்ததி அறியாததுதானா?

இந்திய அரசு செய்த தவறுகளுக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது. அதன் வழவழா கொழகொழா முறைகள் யாரையும் கோபமூட்டக்கூடியவை. மேம்பாட்டுத் திட்டங்கள் அடிமட்டம்வரை கொண்டுபோக முயலாமல் படைகளால் சாதிக்கலாம் என்று நினைத்தது பெரும் தவறுதான். அருந்ததிக்குக் கோபம் வந்ததில் தவறே இல்லை. ஆனால் அவர் தோளைத் தொட்டுத் தோழமை பூண இரானியத் தலைவர் அயொதுல்லா அலி கமெனி போன்றவர்கள் வருவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

தன்னை இந்தியாவிலிருந்து பிரிந்து செயல்படும் நடமாடும் சுதந்திர நாடு எனச் சொல்லிக்கொள்கிறார் அருந்ததி. கொல்லப்பட்ட நிலோஃபர் என்ற பெண்ணின் வயதான தந்தை காஷ்மீரில் அருந்ததி செல்லும் காரை வழிமறித்து ஆப்பிள் பழங்கள் அடங்கிய இரு பெரிய பெட்டிகளை அவர் காரில் ஏற்றிவிட்டு, தன் பழைய பழுப்பு மேற்சட்டையிலிருந்து சூடான இரு அவித்த முட்டைகளை எடுத்து அருந்ததியின் இரு உள்ளங்கைகளிலும் வைத்து மூடி, ‘கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்’ என்று கூறி விடைபெறுகிறார். மனத்தைத் தொடும் நிகழ்வு. ஆனால் அவர் போன்றவர்களை ஆதரித்து அருந்ததி பேசியது அவர் தனிநாடாக நடமாடும் இந்தியாவில் தான். இதையே அவர் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீருக்குப் போய்ப் பாகிஸ்தானிலிருந்து வேண்டும் விடுதலை என்று கூறியிருந்தாலோ அல்லது காஷ்மீரிலேயே இந்தியாவுடன் இணைவது நல்லது என்று பேசியிருந்தாலோ அவர் உள்ளங்கைகளில் இரண்டு சூடு மாறாத அவித்த முட்டைகள் அல்ல வேறு எதுவோ இருந்திருக்கும்.

அருந்ததிரோயின் மூலக்கட்டுரை இந்த இணைப்பில் உள்ளது
'Indian nationalists and government don't understand subversive strength of warm, boiled eggs'

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்