/* up Facebook

Jan 20, 2011

அதிர வைத்த `அமைதியின் நறுமணம்’ - கீதா இளங்கோவன்`அமைதியின் நறுமணம்’ என்ற இரோம் ஷர்மிலாவின் கவிதை தொகுப்பை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இரண்டு காரணங்களுக்காக.
1) ஷர்மிலா கவிதை எழுதுவரா? என்ன எழுதியிருக்கிறார் என்று அறியும் ஆவல். 2) எனக்கு பிடித்த எழுத்தாளர் அம்பை ஷர்மிலாவின் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இரோம் ஷர்மிலா நான் மிகவும் மதிக்கும் ஒரு பெண்மணி. அவரது ஆளுமையும், மன உறுதியும், போராட்ட குணமும் பிரமிக்க வைக்கின்றன. மணிப்பூரைச் சேர்ந்த இவர், கடந்த பத்தாண்டுகளாக, நவம்பர் 4 , 2000 - முதல், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு இவரைப் பற்றி வாசித்திருந்தாலும், கவிதா ஜோஷியின் `Tales from the Margins ' என்ற ஷர்மிலாவைப் பற்றிய ஆவணப் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேசப் பெண்கள் திரைப் பட விழாவில் பார்த்ததை மறக்க முடியாது. இந்தப் படமும், கவிதா ஜோஷியுடனான உரையாடலும் ஷர்மிலாவின் முழுப் பரிமாணத்தை உணர்த்தியது.

யாரிந்த ஷர்மிலா? பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் ஏன்?

பதில்களுக்கு போகும் முன், மணிப்பூரில் நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். Armed Forces (Special Powers) Act (AFSPA) 1958 – இந்த சட்டம் அங்குள்ள இராணுவப் படைகளுக்கு, கட்டுப்பாடில்லாத சிறப்பு அதிகாரங்களைத் தருகிறது. (Armed Forces (Special Powers) Act (AFSPA) 1958 – கலவரப் பகுதிகள் என்று கருதப்படும் பகுதிகளிலும், அரசியல் ரீதியாக சற்று கவனமாக நோக்க வேண்டிய பகுதிகளிலும் இராணுவப் படைகளுக்கு, கட்டுப்பாடில்லாத சிறப்பு அதிகாரங்களைத் தரும் சட்டம்.) இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நபர் காணாமல் போனாலும், இறந்து விட்டாலும் அழைத்து சென்ற இராணுவத்தினர் மீது சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இந்தச் சட்டம் அமுலில் இருக்கும் இடங்களில் காவலில் இருப்பவர்கள் இறப்பது, வன்புணர்ச்சி, சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதை நீக்க வேண்டும் என்றும் மணிப்பூர் மக்கள் போராடி வருகின்றனர்.

அப்பாவி மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கொடுமையான சட்டத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஷர்மிலா கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறார். இவரின் கோரிக்கை இன்று வரை அரசால் ஏற்கப் படவில்லை.

2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 -லில் மலோம் என்ற இடத்தில் குடிமக்கள் பத்து பேர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நவம்பர் 4 முதல் ஷர்மிலா உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். மணிப்பூர் அரசு கட்டாயமாக தந்த உணவை மறுத்துப் போராடினார். இதனால் தற்கொலை முயற்சிக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உணவையோ நீரையோ உட்கொள்ள மறுத்து விட்டதால், அவர் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமானது. ஷர்மிலாவை உயிருடன் வைத்திருக்க மணிப்பூர் அரசு, அவர் மூக்கில் வற்புறுத்தி புகுத்தப் பட்ட குழாய் மூலம், வலுக்கட்டாயமாக திரவ உணவைத் தருகிறது. தொடர்ந்து அரசு காவலில் இருக்கும் அவர் 12 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப் பட்டு உடனேயே திரும்பவும் கைது செய்யப் படுகிறார். தற்போதைய சட்டம், 12 மாதங்களுக்கு மேல் ஷர்மிலாவை சிறையில் வைத்திருக்க அனுமதிப்பதில்லை. அதனால் தான் இந்த விடுவிப்பு சடங்கு.

பண்டைய மணிப்பூரின் மைதைலான் மொழியில் ஷர்மிலா எழுதிய 12 கவிதைகளை, லாய்ஃபுங்கம் தேபப்ரத ராய் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட, அதனை அம்பை தமிழாக்கம் செய்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கவிதைகளைப் படித்து முடித்தவுடன் மனம் கனத்துப் போனது.

தனியாகப் போராடும் ஷர்மிலாவின் ஏக்கங்கள், ஆசைகள், உணர்வுகளை கவிதைகள் பிரதிபலிக்கின்றன. நீர் பருகுவதும், பல் துலக்குவதும் நமக்கு சாதாரண விஷயங்கள்….. அவருக்கோ அது பெரிய ஏக்கம். ஷர்மிலாவின் சொல்லாடல்கள் நமக்குள் ஆழமாக ஊடுருவி மனதை கசிய வைக்கின்றன. இதில் அம்பையின் மொழியாக்கத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. (புத்தகக் கண்காட்சியில் அம்பையை நேரில் சந்தித்த போது, மொத்த நூலையும் நான்கு நாட்களில் மொழி பெயர்த்ததாகக் கூறினார்.)

`……மரியாதையுடன்

மானத்துடன்

வாழ விழைகிறேன்

என் விழிகள் நிரந்தரமாக மூடும் போது

என் ஆத்மா வானத்தில் சிறகடிக்கும் போது

எனக்காக காத்திரு

என் அன்பே'`இனிமேல் என்றும் எனக்கு சொந்தமில்லாத

என் அன்பு

கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது

காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது

என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்

ஏக்கம் மூள்கிறது…….."


என்ற கவிதைகளில் காதல் ததும்புகிறது.`சிறை உலகை

என்னால் மறக்க முடியவில்லை

பறவைகள் சிறகடிக்கும் போது

விழிகளில் நீர் பொங்கும்

நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு

என்னும் கேள்வி எழும்

பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை

எனக் கூவத் தோன்றும்'- என்று சிறை வாழ்க்கையின் அவலத்தைக் கூறுகிறார்.`யாரையும் வெறுக்காமல்

யாரையும் உறுத்தாமல்

நாக்கை சரியாக அடக்கி

நான் வாழ்ந்து விடுகிறேனே

குழந்தை போல....

ஆசையில்லாத பூச்சி போல

திருப்தியுடன்

தன்னலமற்று'


- இயல்பாக வாழ விரும்பும் ஷர்மிலாவின் ஆசை வெளிப்படுகிறது.`ஒரு பறவையைப் போல

அகிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து

வாழ்வு சாவை எதிர்கொள்ளும் சந்திப்பை எட்டி

மானுடத்தின் கானத்தைப் பாடவிடுங்கள்’

சுதந்திரத்தின் மீதான தாகம் மேலிடுகிறது இந்தக் கவிதையில்.

இந்த நூலில் பங்கஜ் பூடாலியா ஷர்மிலாவை எடுத்த பேட்டியும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. தன் போராட்டம் குறித்து அவர் கூறுகிறார் “நான் செய்யும் போராட்டம் கடவுளின் விருப்பம் என்ற நினைக்கிறேன். நான் இந்த போராட்டத்தின் பொறுப்பை ஏற்றிருப்பதால் அதை மனமார வரவேற்கிறேன். போராட்டத்தைத் தொடரும் ஆசை, அதற்கு என் சக்தியை அளிப்பது.... என் உயிரைத் தர வேண்டும் என்பது என்னைத் தொடர்ந்து செயல் பட வைக்கிறது”.

மன உறுதி என்றால் என்ன? எது போராட்ட குணம்? இந்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்கள் இரோம் ஷர்மிலாவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி - துளித் துளி 

8 comments:

சொல்லச் சொல்ல said...

கிடைத்தர்க்கறியத் தகவல்களை மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள். பெண் தன்மை எத்தனை வலிமை வாய்ந்தது. கண்களின் ஓரங்களில் ஈரம் வந்தாலும் அவர்களின் துணிச்சல் அதைத் துடைத்து விடுகிறது.

கீதா இளங்கோவன் said...

பின்னூட்டத்திற்கு நன்றி தோழி.

சைக்கிள் said...

போராட்டத்துக்கே உரிய பல்வேறு மன நிலைகளை, அவற்றில் பிரதானமாய் ஒலிக்கும் தார்மீக நியாயத்தை, பெரும்கனவை உள்ளடக்கிய கவிதை வரிகள்.பலரைச் சென்றடைய வேண்டிய புத்தகம். நல்ல பகிர்வும், பதிவும் கீதா.

கீதா இளங்கோவன் said...

நன்றி தோழி. ஷர்மிலா போன்ற போராளிகள் எழுத்து வடிவில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் போது தான் அவர்களின் உணர்வுகளை, உள்ளக் கிடக்கைகளை முழுக்க புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் எழுத்து வரலாற்று ஆவணம்.

INNOVATOR said...
This comment has been removed by the author.
Bhuvanesh said...

உலகிற்கு நல்லவர்களெல்லாம் வாழத் தெரியாதவர்கள் --ஆம்
அதனால் தான் கடவுளும் உயிரோடு உலகில் இல்லையோ

irnewshari said...

Great to find this excellent blog from face book post of Shri.Ilangovan.

I am a great admirer of Sharmila. Thanks to your post, I came to know about her book.

Main stream does not give prominence to such news. Only blogs like this can help in spreading the word.

Friends may be interested in reading the following interview which was published in rediff.

http://www.rediff.com/news/slide-show/slide-show-1-the-iron-lady-of-manipur/20101102.htm

Great work madam, keep writing such thought provoking articles to create more awareness.

A.Hari

கீதா இளங்கோவன் said...

Thank you Bhuvanesh and Mr Hari for your comments

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்