/* up Facebook

Jan 19, 2011

உள்ளூராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் பெண்கள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

இது தொடர்பாக இவ்வமைப்புகள் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் 52 சதவீதமாக இருப்பினும் உள்ளூர் ஆட்சி சபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் 2 சதவீதமாகவேயுள்ளனர். அரசியற் கட்சிகளிடமிருந்து பெண்கள் பெற்றுக்கொண்ட வேட்பாளர் நியமனங்கள் அதி குறைந்தளவில் (ஏறத்தாழ 6 சதவீதம்) உள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகிறது.

தொடர்ச்சியாகப் பெண்களுக்குப் போதியளவு வேட்பாளர் நியமனங்களை வழங்கத் தவறிய பிரதான அரசியற் கட்சிகளே இப்பிரதிநிதித்துவக் குறைபாட்டிற்கு அதிகம் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்களாவர். இக்கட்சிகளே உள்ளூர்த் தேர்தல்களில் ஆசனங்களை வென்றுள்ளன.
தெற்காசியாவில், நாம் வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக உறவுகொண்டுள்ள எமது அண்டை நாடுகளில் உள்ளுர்த் தெரிவான அரசியற் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவக் குறைபாடானது சட்டரீதியாக அமுல்படுத்தப்படும் கோட்டா முறையினாற் சரிசெய்யப்பட்டுள்ளது.

உண்மையில் இலங்கை ஒன்றே உள்ளூர் ஆட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை முன்னெடுக்கும் எதுவித விசேட நடைமுறைகளைக் கொண்டிராத நாடாக உள்ளது. பங்களாதேசில், கூட்டுச்சபைகளிற் (1996 சட்டம்) பெண்களுக்கு அதிகுறைந்நது 25 சதவீத ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன . இந்தியாவில் பஞ்சாயத்துக்கள் அல்லது உள்ளூர்ச் சபைகள் அனைத்திலும் 33 சதவீதத்திலும் குறையாத ஆசனங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்;பட்டோருக்கும் (1992 அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்) ஒதுக்கப்பட்டுள்ளன . நேபாளத்தில் கிராமிய மற்றும் மாநகர சபைகளில் பெண்களுக்கு 20 சதவீத ஆசனங்கள் (1990 அரசியலமைப்புச் சட்டம்) ஒதுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் கூட்டுச்சபை, மாநகரசபை மற்றும் மாவட்ட சபைகளில் பெண்களுக்கு 33 சதவீத ஆசனங்கள் (2000 அதிகாரப்பரவலாக்கல் திட்டம்;) ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நாடுகளனைத்தும் உள்ளூர் ஆட்சி சபைகளில் பெண்களி;ன் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தினை, அபிவிருத்தி மற்றும் அடிப்படை உரிமைகள்சார் காரணிகளாக அங்கீகரித்துள்ளமை தெட்டத் தெளிவாகிறது. மகிந்தச் சிந்தனை மற்றும் 'தேய தினவன் அய' ஆகியவற்றின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமுகமாக இத்தகைய முன்னேற்பாடு அவசியம் என்பதனையும் பெண்வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென்பதையும் இரு பிரதான அரசியற் கட்சிகளுக்கும் நாம் நினைவுறுத்துகிறோம்.
Women's Representation in politics in Sri Lanka from Centre for Policy Alternatives on Vimeo.
Women's Representation in politics in Sri Lanka

உள்ளூராட்சிச் சபைகளுக்குத் தெரிவான உறுப்பினர்களிடையே பெண்களின் பிரதிநிதித்துவக் குறைபாட்டின் தீவிரத்தன்மையானது, போசாக்கின்மை, நீர் மற்றும் பொதுச்சுகாதாரம், மதுப்பாவனை, அத்துடன் பாலியல் அடிப்படையிலான வன்செயல்கள் போன்ற அத்தியாவசியமான விடயங்கள் சார்ந்த கவனத்தினைத் திசைதிருப்புமளவிற்கு இம்முகவர்களின் நிகழ்ச்சித் திட்டங்களைத் திரிபுபடுத்தியுள்ளன.
அரசானது நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சிச் சபைகளையும் கலைத்துள்ளதுடன் 2011 பங்குனி மாதத்தில் தேர்தல்களை நடத்தவுள்ளது.

இத்தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 25 சதவீதமேனும் இருப்பதனை உறுதிசெய்யும்படி நாம் அனைத்து அரசியற்கட்சிகளையும் வற்புறுத்துகிறோம். அரசியற் கட்சிகளினால் பெண் வேட்பாளர் நியமனங்கள் போதியளவு அதிகரிக்கப்படாதவரையில் உள்ளூராட்சிச் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட முடியாத நிலையைத் தோற்றுவிப்பதுடன், இது மேலும் மாகாண சபைகளிலும் தேசிய மட்ட அரசியலிலும் பெண்களின் பங்கேற்பினை மட்டுப்படுத்துமளவிற்குத் தொடரும்.

கைச்சாத்திட்டோர் :
*மனித உரிமைகளுக்கான இல்லம் - கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்
*இனத்துவக் கல்விக்கான சர்வதேச மையம் - கொழும்பு மற்றும் கண்டி
*சட்ட மற்றும் சமூக நம்பிக்கையகம் - கொழும்பு
*ஆராச்சி மற்றும் செயற்பாட்டுக்கான முஸ்லிம் பெண்கள் மன்றம் - கொழும்பு மற்றும் கல்முனை
*சர்வோதய குலகன சமித்திய
*சமூக விஞ்ஞானிகள் அமைப்பு - கொழும்பு
*ஊவா வெல்லஸ கொவி காந்தா சன்விதானய – மொனறாகல
*விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் - கொழும்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம்
*பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு - கொழும்பு
*பெண்களின் அபிவிருத்தி மையம் - பதுளை
*பெண்களின் வள மையம் - குருநாகல்
*பெண்களின் ஆதரவுக் குழுமம் - கொழும்பு
*மன்னார் பெண்கள் அபிவிருத்திச் சம்மேளனம்


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்