/* up Facebook

Jan 10, 2011

பெண்கள் மனிதர்களா? -பேரா. ஆர். சந்திரா


“பெண்கள் வானத்தின் பாதியை தாங்கிக் கொண்டிருக்கின்றனர்” என்றார் மாவோ.

“பெண் இன்றி சூரியன் இல்லை. சந்திரன் இல்லை. விவசாயமில்லை. நெருப்புமில்லை” என்பது அரபு பழமொழி. தாயாய் ஆண் கருவை சுமந்து, ஆண் மகவை பெற்றெடுக்கிறாள். சகோதரியாய், மனைவியாய், மகளாய், தோழியாய் ஆணோடு, பிறந்து, வளர்ந்து, ஆணுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டாலும், ஆணுக்கு சமமாக பெண் ஏன் பார்க்கப்படுவதில்லை. ஆண்களுக்கென்றே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பணிகளில் பெண்கள் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். ‘கண்ணாடி கூரைகளை’ உடைத்து, வெளியேறி முன்னேறி வருகின்றனர் பெண்கள் என்கின்றோம். இருப்பினும், இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு நிறைவுற்ற இத்தருணத்தில் உலகில் பெண்களின் அந்தஸ்து எவ்வாறு உள்ளது என ஆராயும் பொழுது, பல தடைகளை தாண்டிய போதும், போக வேண்டிய தூரம் மிகவும் அதிகம் என்று அறிய முடிகிறது. பெண்கள் இன்னும் சக ‘மனுஷிகளாக’ பார்க்கப் படாத நிலை தொடர்கிறது.

“பெண்கள் மனிதர்களா?” என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, “ஆம், பெண்களும் மனிதர்கள் தான்” என 1929ம் ஆண்டு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் தீர்ப்பு வழங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. விநோதமான இந்த வழக்கின் பின்னணி சுவாரசியமானது. 1867ம் ஆண்டு இயற்றப்பட்ட பிரிட்டிஷ் வட அமெரிக்கச் சட்டத்தின்கீழ் ‘மனிதர்கள்’ என்ற சொல் ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதனையும், ‘மனிதன்’ (நபர்) என்ற சொல் ‘ஆணை’ மட்டும் குறிக்கிறது. 1876ல் இயற்றப்பட்ட பிரிட்டிஷ் பொதுச் சட்டத்தை பொறுத்தவரை பெண்கள் ‘மனிதர்களாக’ கருதப்படமாட்டார்கள். ஆனால் வலி, தண்டனை ஆகியவை தொடர்பான விஷயங்களில் மனிதர்கள் எனக் கருதப்படுவார்கள் எனச் சுட்டிக்காட்டுகிறது.

1916ம் ஆண்டு ஆல்பர்டாவில் (கனடா) எமிலி மர்பி என்ற பெண் முதல் போலீஸ் மாஜிஸ்ட்ரேட்டாக பதவியேற்றார். ஆனால் பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டி, அவரது நியமனம் செல்லாது என வாதிடப்பட்டது. பிரிட்டிஷ் காமன் வெல்த்தின் முதல் பெண் நீதிபதியாக 1.1.1916 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட எமிலி தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்தார். அவர் நீதிமன்றத்தில், முதல்நாள் எதிர்கொண்ட வழக்கு, ஒருசாராய வியாபாரியின் வழக்கு. எமிலி அவனுக்கு கடுமையான தண்டனை வழங்கினார். அப்பொழுது, சாராய வியாபாரியின் வக்கீல், எமிலி ஒரு பெண் என்றும், பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டி, அவர் ‘நபர்’ என்ற வரையறைக்குவராததால், அவர் அளித்த தீர்ப்பை ஏற்க இயலாது என மேல் முறையீடு செய்ய விரும்புவதாக வாதிட்டார். அவரது எதிர்ப்பை குறித்துக்கொண்ட எமிலி அமைதியாக இருந்தார். விசாரணையை தொடர்ந்தார். இதே போன்று 1917ம் ஆண்டு, இளம் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்ட ஆலிஸ் ஜேமியன்சன் அளித்த தீர்ப்பையும் வக்கீல்கள் ஏற்க மறுத்தனர்.

1917ல் ஆல்பர்டா நீதிமன்றம் ‘பெண்களும் மனிதர்களே’ என தீர்ப்பளித்தது. எமிலி மர்பி கனடா நாட்டு செனட்டர் பதவிக்கு போட்டியிட விரும்பி, தனது பெயரை பதிவு செய்து கொண்டார். ஆனால், அன்றைய கனடா பிரதமர் சர். ராபர்ட் போர்டென், அதை ஏற்க மறுத்து விட்டார். பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், எமிலி செனட்டர் பதவிக்கு போட்டியிட முடியாதென தெரிவித்துவிட்டார். இதையடுத்து, கனடா நாட்டு பெண்கள் குழுக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி, கனடா நாட்டு செனட் பெண்களை உறுப்பினர்களாக ஏற்க மனு அளித்தனர்.

1927ல் எமிலி மர்பி கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு வழக்கு தொடுத்தார். ‘பெண்கள் மனிதர்களா? என்பதே வழக்கின் மையக் கேள்வி. எமிலியுடன் சேர்ந்து ஹென் ரீட்டா எட்வர்ட்ஸ்’ நெல்லி மெக்க்ளங், லூயி மெக்கின்னே மற்றும் ஐரீன் பார்பை ஆகிய நால்வரும் அந்த வழக்கை தொடுத்தனர். ‘பிரபல ஐவர்’, ‘வீரமான ஐவர்’, ‘நபர்/மனிதர் வழக்கு’ என பல பெயர்களில் இந்த வழக்கு பிரபலமடைந்தது. 1928, ஏப்ரல் 4ம் தேதி, கனடா நாட்டு உச்ச நீதிமன்றம் “பெண்கள் மனிதர்கள் என்ற விளக்கத்திற்குள் வர வில்லை” என்று தீர்ப்பளித்தது. பி.என்.ஏ. சட்டம் உருவாகியபோது பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகாரிகளாக செயல்பட வில்லை. சட்டத்தில் ‘ஆண்’ என்றே அனைத்து பிரிவுகளிலும் குறிப்பிட்டிருந்தது. பிரிட்டனின் மேல் சபையான ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் ஒரு பெண் கூட அன்று இல்லை. எனவே கனடாவில் அச்சட்டத்தை மாற்றக்கூடாதென வாதிட்டனர். ஐந்து நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து விட்டு, ‘தகுதியான நபர்கள்’ என்பதில் பெண்கள் இடம் பெறவில்லை என்று தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை தீர்ப்பு என்பதை பிரான்சிஸ் அலெக்சாண்டர் ஆங்லின் எழுதினார். அதை நீதிபதிகள் லமோல் மற்றும் ஸ்மித் ஏற்றுக் கொண்டனர். ஐந்து வாரம் நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது பெண்கள் மனிதர்கள் அல்ல என்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனம் தளராத அந்த ஐந்து பெண்களும் அன்றைய கனடா நாட்டு பிரதமரான மெக்கின்சி கிங் என்பவரின் உதவியுடன் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலில் முறையிட்டனர். 18, அக்டோபர், 1929 அன்று லார்டு சான்கீ “ஆம் பெண்கள் மனிதர்களே” என தீர்ப்பளித்தார். அத்துடன் கனடாவின் செனட்டர் பதவிக்கு அவர்கள் போட்டியிடலாமென்றும் அறிவித்தார். அவருடைய தீர்ப்பில், “பொது இடங்கள் பொது வாழ்க்கையிலிருந்து பெண்களை ஒதுக்கி வைப்பதென்பது காட்டுமிராண்டித்தனமான செயல். பெண்கள் மனிதர்களா என்று கேள்வி எழுப்புகின்றவர்களே, பெண்கள் மனிதர்கள் இல்லையா என்று நான் கேட்கிறேன்” என்று லார்டு சான்கீ எழுதியுள்ளார்.

1930ம் ஆண்டு, கனடா பிரதமராக இருந்த மெக்கின்சிகிங், கெய்ரினி வில்சன் என்ற பெண்ணை செனட்டராக நியமித்தார். எமிலிக்கு அந்த பதவி கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. (எமிலி கன்சர் வேடிவ் கட்சி, கெய்ரினி லிபரல் கட்சி). 1918ம் ஆண்டில் கனடாவில் சில பெண்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. “மனிதர்கள் வழக்கு” கனடாவில் பெண்களின் வாக்குரிமை இயக்கத்திற்கு உத்வேகமளித்தது. 1960ம் ஆண்டில்தான் கனடாவில் அனைத்து பெண்களுக்கும் வாக்குரிமை கிடைத்தது.

1979ம் ஆண்டில் (1929 தீர்ப்பின் 50வது நிறைவு ஆண்டு) ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும், ஆண்-பெண் சமத்துவம் மற்றும் பெண்ணுரிமை போராளிகளாக 5 பேரை தேர்ந்தெடுத்து கவர்னர் ஜெனரல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், இந்த ‘வீரமிக்க ஐவர் விருது வழங்கப்படுவது தொடர்கிறது. அதுமட்டுமின்றி 2009ம் ஆண்டில், (80 ஆண்டு நிறைவு விழா) அந்த 5 பெண்களையும் கனடாவின் “முதல் கௌரவ செனட்டர்கள்” என்று கனடா செனட் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் சட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால், பொறிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, உலகெங்கிலுமுள்ள பெண்ணுரிமை போராளிகளை வெகுண்டெழச் செய்யும் என்பதில் ஐயமில்லை. உடலமைப்பில் உள்ள வித்தியாசத்தை மட்டுமே வைத்து, பெண்களை பலவீனமானவர்கள் என சித்தரித்து, சார்பு நிலைக்கு தள்ளி, பெண்களை வார்த்தெடுப்பதை தடுப்போம்.

“பெண்ணடிமைத்தன வேர்களைத் தேடி, பூச்சியரித்து, அழுகிய வேர்களை வெட்டி எரிந்து, சமுதாயம் என்ற மரம் ஆரோக்கியமாக வளர, சமத்துவம் என்ற வேர்கள் ஆழமாக வேரூன்ற முயலுவோம். கல்வி, வேலை, சுயசிந்தனை என்கின்ற உரத்தை இடுவோம்”. 2011 புதிய ஆண்டில் புதியதொரு உயரத்தைத் தொட புறப்படுவோம்.

நன்றி: தீக்கதிர்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்