/* up Facebook

Jan 8, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு : உள்ளதை உள்ளபடி - சூரியகுமாரி பஞ்சநாதன்


இலங்கை ஊடகத்துறைக்கு 2002 ஆம் ஆண்டு ஒரு ‘பை’ சொல்லிவிட்டு மத்தியகிழக்கு துபாயில் குடும்பவாழ்வைத்தொடருவதற்காகச்சென்றதில் சுமார் எட்டுவருடங்கள் உருண்டோடிவிட்டன. 2004 இல் ஒரு குழந்தைக்குத்தாயாகி 2006 இல் எனது அன்புத்தந்தையாரை இழந்து தற்போது துபாயில் ‘கார்கோ’ வில் இணைப்பாளராக எனது வாழ்க்கைப்பயணம் ஓடுகிறது. இந்த எட்டுவருட காலத்தில் எனது தாயகம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் வாழ்வாதாரச்சிக்கல்களும் என்னையும் எங்கோ ஒரு மூலையில் வீசி எறிந்துள்ளதாகவே உணருகின்றேன்.

பெண்ணியம் சார்ந்த எனது உணர்வுகளுக்கு தீனிபோடுபவையாக பெண்ணியம், ஊடறு போன்ற இணையத்தளங்கள் இன்று வரையில் என்னை உயிர்ப்புடன் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. இலக்கியம் சம்பந்தமான விடயங்களை லும்பினி, ஷோபாசக்தி இணையத்தளங்களிலும் அரசியல் ரீதியான செய்திகளை குளோபல்தமிழ்நியூஸ், இனி ஒரு… போன்ற இணையத்தளங்களிலும் தாய்நாட்டு நடப்புகளை அறிந்துகொள்கின்றேன்.

2009 மே 17 ஆம் திகதி இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களை இன்னுமொரு சகாப்தத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு வெட்டுப்புள்ளியாக அமைந்தது. இந்த நாள் தமிழ் ஈழ விடுதலைப்போராட்டம் புலம்பெயர் மக்கள் கைக்கு மாறியதாக ஒருசாராரால் பேசப்பட்டது.

இந்த நாள் “இலங்கையில் இனி யுத்தம் இல்லை” என்று பிரகடனப்படுத்தப்பட்ட நாளாக இன்னுமொரு சாராரால் பேசப்பட்டது.

இன்று யுத்தம் இல்லாத இந்நாட்டில் பாதுகாப்பு வலயங்களுக்கு அப்பால் எங்கும் எவரும் செல்லலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் இலங்கை வந்து கடந்த 28 ஆம் திகதி இரவுபேருந்தில் வடமராட்சிக்கு சென்று திரும்பினேன்.இந்த அவசரப்பயணத்தில் அதிகாலையில் ஓமந்தையில் மாத்திரம் தேசிய அடையாள அட்டை பாதுகாப்பு படையினரால் பார்க்கப்பட்டது. புலம்பெயர்ந்து இன அடையாளம் தேடும் எம்போன்றவர்களின் அடையாளம் பரிசீலிக்கப்படும் இடமாக ஓமந்தை மாறிப்போனதும் காலத்தின் கோலம்.

1992 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய நான் சுமார் 18 வருடங்களின் பின்னர் எனது குழந்தையுடன் எனது தாய் மண்ணை தரிசிக்கச்சென்றிருப்பதிலிருந்து… இந்த இடைப்பட்ட காலத்தில் எம் தேசம் இழந்தவை என்ன? பெற்றவை என்ன? என்பதை மனக்கணக்கில் ஆராய்ந்தேன். அந்த இரவுநேரப்பயணத்தில் என் கண்கள் மூடியிருந்தாலும் உள்ளம் மூடாமல் விழித்திருந்து கடந்தகாலங்களை அசைபோட்டது.

இந்தப்பயணத்தின்போது என்னுடன் பேசிய எவருமே அரசியல் பேசவில்லை. பொருட்களின் விலையேற்றமே பேசுபொருளாகின. யுத்தத்தின் வடுக்கள் இன்றும் எவரையும் விட்டுவிலகவில்லை. ஆனாலும் யுத்தம் இல்லாத இந்த அமைதி அவர்களுக்கு மிகுந்த ஆறுதலைத்தந்துகொண்டிருக்கிறது என்பது மாத்திரம் எவராலும் மறுக்கமுடியாத உண்மை.

நீடித்த யுத்தத்தினால் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இளம் விதவைகளையும் தனயனை, தகப்பனை இழந்த பெண்களையும் பெற்றவர்களை பறிகொடுத்த சிறார்களையுமே இந்த கொடிய யுத்தம் வரவாக்கியுள்ளது. இன்று மிகுந்த கவனிப்புக்குள்ளாகவேண்டியவர்களும் இவர்களே. இவர்களுக்கு உளரீதியான ஆறுதலும் நம்பிக்கையும் தரவேண்டியவர்களாக எம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். பெண்ணிய அமைப்புகளுக்கு இதுவிடயத்தில் பொறுப்புகள் அதிகம். யுத்தத்தை காரணமாக்கி அந்நியநாடுகளில் புகலிடம் தேடியவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதநேய ஆதரவு பல்கிப்பெருகவேண்டும்.

மத்திய கிழக்கைப்பொறுத்தவரையில் அங்கு பணிப்பெண்களாக வரும் எமது தாயக சகோதரிகள் தாங்கொணாத துயரங்களை அனுபவித்துவருகிறார்கள். அவர்களை தருவிக்கும் முகவர் அமைப்புகள் கற்பனை உலகை அவர்களுக்கு காண்பித்து நரகத்தில் தள்ளிவிடுகின்றன.

மத்தியகிழக்கு நவீன பெண் அடிமைகளை தருவிக்கும் பாலைவனச்சோலைகளாகிவிட்டன. அடிமைத்தனத்தை எதிர்கொள்ள முடியாத துணிவுள்ள பெண்கள், தாம் முகவர்களினால் தள்ளப்பட்ட வீடுகளிலிருந்து வெளியேறி இலங்கை தூதுவராலயங்களை நாடுகிறார்கள். முகவர்களுக்கு தாரைவார்த்த பணத்தையும் இழந்து தாயகம் திரும்புகிறார்கள். தொழில் அமைச்சில் பதிந்து பயிற்சிகள் பெற்றுச்செல்லும் அவர்களுக்கு நெருக்கடி வரும்போது பாதுகாப்பு தொடர்பில் சரியான வழிகாட்டல்கள் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

இந்தப்பின்னணிகளுடன் இலங்கை தலைநகரில் நடத்தப்படவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை பார்க்கின்றேன். இம்மாநாடு இன்று காலத்தின் தேவை. பாதிப்புற்ற மண்ணில் கலை, இலக்கியவாதிகள் உயிர்ப்புடன் எழுந்து நிற்பதற்கான களம் ஒன்று உருவாகின்றது. எனினும் இணையங்களில் எழுந்த எதிர்வினைகளுக்கெல்லாம் தக்க பதில் சொல்லியவாறு மாநாடு நடைபெறுகிறது.

இச்சந்தர்ப்பத்தில் சுருக்கமாக சில வார்த்தைகள்:

யுத்தம் என்ற பேரால் எமது குழந்தைகளின்…

இளமை அழிந்தது.

கல்வி குன்றியது.

உறவுகள் பிரிந்தன.

செல்வம் அழிந்தது.

தர்மம் குன்றியது.

பெண்மை சூறையாடப்பட்டது.

இறைமை அழிக்கப்பட்டது.

இன்று யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருந்தாலும் தமிழ் பேசும் மக்கள் உட்பட்ட சிறுபான்மை இனத்தவரது அபிலாசைகள் பூர்த்திசெய்யப்படவில்லை. இந்நிலையில் நடைபெறும் சர்வதேச மாநாடு இம்மக்களின் அபிலாசைகளை ஆவணப்படுத்தும் களமாகவும் அமையவேண்டும்.

இலங்கை சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தீர்க்கமான முடிவுகளை தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட தலைவர்கள் எடுக்க முன்வரவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான உந்துதல் மேற்கொள்ளப்படல் வேண்டும். தொடர்ந்தும் அகதி முகாம்களில் வாழும் முள்ளிவாய்க்கால் மக்களுக்கும் புத்தளப் பிரதேசத்தில் தொடர்ந்தும் அகதிகளாக முடக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களும் விரைவில் தமது இயல்பு வாழ்வுக்குத்திரும்ப வேண்டும்.

சிறு சிறு குழுக்களாகப்பிரிந்து மீண்டும் மீண்டும் பழையதையே பேசிப்பேசி எமது மக்களை அதளபாதாளத்திற்குள் மீண்டும் தள்ளிவிடாமல் தன்மானத்துடனும் சுதந்திரமாகவும் அவர்கள் வாழத்தக்க பாதையை உருவாக்குதற்பொருட்டு பல ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்து தீவிரமாக இயங்கவேண்டும்.

கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி விரைவதற்கு நடைபெறும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பான பங்களிப்பை வழங்கவேண்டும்.

நன்றி - தினக்குரல் 05.01.2011

1 comments:

sharthaar said...

///சிறு சிறு குழுக்களாகப்பிரிந்து மீண்டும் மீண்டும் பழையதையே பேசிப்பேசி எமது மக்களை அதளபாதாளத்திற்குள் மீண்டும் தள்ளிவிடாமல் தன்மானத்துடனும் சுதந்திரமாகவும் அவர்கள் வாழத்தக்க பாதையை உருவாக்குதற்பொருட்டு பல ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்து தீவிரமாக இயங்கவேண்டும்.////மிக அருமையான நோக்கு சகோதரி! தங்களைப்போன்றே புலம் பெயர் எழுத்தாளர்கள் அனைவரும் பரந்துபட்டு சிந்திக்க வேண்டுமென்பது தான் தாய்நாட்டிலிருக்கும் நம்மைப்போன்றவர்களது விருப்பமும்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்